துருப்பிடிக்கற உடம்பு

வியாழன், அக்டோபர் 06, 2005


Image hosted by Photobucket.com

ரு நாளைக்கு 10மணிநேரம் நாங்க உழைக்கற கடின உழைப்பை(!?) பாராட்டி ஊக்குவிக்கற(ம்ம்ம்.. இந்த பொழப்புக்கு ஊக்கு விக்கறதே மேல்..) வகையிலும் மனசுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கனும்கற நல்லெண்ண அடிப்படையிலும் எங்க ஆபீசுல எங்களையெல்லாம் ஒருநாள் இன்பச்சுற்றுலாவுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க போனவாரம்! ஒரே தமாசுதான் போங்க அன்னைக்கு முழுசும்! வருசம் முழுசும் ஒரே எடத்துல ஆடாம அசங்காம ஒக்கார்ந்து பென்ச்சு தேச்சிட்டு அது எப்படி ஒரே நாள்ள ஒடம்பும் மனசும் சீரான நெலைக்கு வரும்னு யாரும் கோயிஞ்சாமித்தனமா(அப்பாடா! நாமளும் சொல்லியாச்சு..! ) கேக்கப்படாது! HR ஏதாவது குடுத்தா அனுபவிக்கனும். ஆராய்ஞ்சா அப்பறம் வருத்தமாயிரும்! :)

நியாயமா பார்க்கப்போனா நாம இங்க தமிழ்மணத்துல ஆபீசு நேரத்துல கொட்டற உழைப்புக்கு காசி அண்ணன்தான் நம்பளை இப்படி எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுபோகனும். நாம அத்தனைபேரும் ஒன்னுசேர்ந்தா சார் தாங்குவாரான்னு தெரியலை... சரி பொழச்சுப்போறார் விடுங்க. ஆரம்பத்துல சென்னை ECRதான் இதுக்கெல்லாம் சரியான இடம். இங்க பெங்களூருல போய் என்னத்த ரிலாக்ஸ் ஆகறது அப்படின்னு ஒரு சங்கடமாத்தான் கெளம்புனேன். எல்லாரும் 4 காருல இப்போதான் காலேஜ் சேர்ந்த பசங்கமாதிரி சத்தமா இங்கிலீசு பாட்டை வச்சிகிட்டு(Freek-out டாமாம்...! ) ஊருக்கு வெளிய இருக்கற அந்த ரிசார்ட்டுக்கு போய் சேர்றவரைக்கும்கூட ஒன்னும் ஒட்டலை. ஆனா போய் இறங்குன ஒடனே குடுத்தாங்க பாருங்க ஒரு வெல்கம் டிரிங்க்கு! அங்க ஆரம்பிச்சது அலப்பரை! சுத்தமான அக்மார்க் பழரசம் அது. அதை ஆளுக்கு ரெண்டு டம்ளரு ஊத்திக்கிட்டு "மாப்ள.. மப்பு ஏறிடிச்சு.. என்ன புடிச்சிக்கடா.."ன்னு அவனவன் வரவேற்பரைல உருண்டுகிட்டு தொணத்த ஆரம்பிக்க, இந்த வானரங்களை இன்னைக்கு முழுசும் எப்படி தாட்டறதுன்னு அங்க இருந்த மேளாலருக்கு உள்ளுக்குள்ள கவலைன்னாலும் மேலால "உங்களை மாதிரி எத்தனை பேர பார்த்திருப்பேன்"னு ஒரு கெத்துலயே லுக்கு உட்டுகிட்டு இருந்தாரு... நாங்களும் இங்க வந்ததே "சிவியரு ரெஸ்ட்டு" எடுக்கத்தான்னு மனசுல நெனச்சிக்கிட்டு களத்துல இறங்கிட்டோம்!

நல்லா 4 ஏக்கரு சைசுல புல்லு வளர்ந்திருந்த இடத்துல கிரிக்கெட் வெளையாடலாம்னு சொன்னாங்களோ இல்லையோ ஸ்டம்பு அடிக்கறதுக்குள்ள டீம் பிரிச்சு டாஸ் போட்டச்சி. டென்னிஸ் பால்ல 3 மேட்ச்சு நடந்தது. பெட்டு மேச்சுதான். வேற என்ன? பீரு தான்! நானெல்லாம் ஒரு காலத்துல அதுல கரைகண்டவங்கறதால சரி சின்னப்பசங்க அனுபவிக்கட்டும்னு விட்டுட்டுட்டேன். (அப்பறம் தொட்டுட்டு வீட்டுக்கு போயிற முடியுமா என்ன!? நானெல்லாம் இந்த விசயத்துல நெம்ப கண்ட்ரோலுங்க.. ஹிஹி) ஒரு மேட்சுக்கு 10 ஓவரு. மூனு மேச்சுலையும் 10 வருசத்துக்கு முன்னாடி இருந்த நம்ப பேட்டிங் திறமை இப்பவும் அப்படியே இருந்ததுங்கறது எனக்கே ஒரு ஆச்சரியமான விசயம்(அதே தாங்க.. க்ளீன் போல்டு ஆவறது..! ) அன்னைக்கு 3, 4, 1 ன்னு மொத்தமா 8 ரன்னு எடுத்ததுல, என் ட்ராக் ரெக்கார்டை பார்த்து வந்த கான்பிடன்டுல உடனே சேப்பலுக்கு போன் போட்டு கங்கூலிக்கும் எனக்குன் ஒரே ரன் ரேட்டுங்கறதை எடுத்துச்சொல்லி காப்டன் பதவியைக்கேக்கலாமான்னு வந்த எண்ணத்தை பசங்கதான் தடுத்து நிறுத்து இந்திய அணியை காப்பாத்துனாங்க..

கிரவுண்டுக்கு பக்கத்துலயே தந்தூரி அடுப்பை வச்சு சிக்கனா சுட்டு தள்ளிக்கிட்டு இருந்தாங்க. நல்ல தோல், கொழுப்பு நீக்கிய சிக்கனை எழும்புகளை எடுத்துட்டு சின்ன சின்ன பீசா வெட்டி லைட்டா எண்ணையும் மஞ்சளும் போட்டு ஒரு அரை மணிநேரம் ஊறவச்சு அப்பறம் மசாலால ஒரு 2 மணி நேரம் புரட்டிப்போட்டு வச்சிருந்து அப்பறம் அதை ஒரு நீள கம்பில ஒவ்வொன்னா சொருகி தந்தூரி அடுப்பல 5 நிமிசம் தணல்ல வச்சி எடுத்தா லைட்டான செந்நிறத்துல வரும். அடடா... பார்த்தாலே பசி தீரும். அதுக்காக விட்டுட முடியுமா என்ன? நாங்களும் ஆளுக்கு அரை கிலோவான்னு உள்ள தள்ளிக்கிட்டே இருந்தோம். ஒரு கட்டத்துல "உங்களுக்கு இங்க லன்ச்சும் உண்டு"ன்னு சிக்கன் சுடறவரு சொல்லற அளவுக்கு ஆகிருச்சு.

சரி தின்ன வரைக்கும் போதும் மதியத்துக்கு கொஞ்சம் வயித்துல இடம் வேணும்னுட்டு கோல்ப் விளையாடற எடத்துக்கு போனோம். ஒரு சின்ன பந்தை ஒரு நீள இரும்புக்கம்பிய வச்சி அடிச்சு தள்ளி ஒரு குழில போடனுமாம்ல! அட.. இது எங்கனயோ கேள்விப்பட்டாப்புல இருக்கேன்னு பார்த்தா.. நம்ப கோலி, கில்லி கான்சப்டு! இது என்ன பிரமாதம்னு டிரை பண்ணதுல ரெண்டுதடவை புல்லு கத்தையா பேந்துகிட்டு பறந்துச்சு. மூணாவது தடவை கையில வச்சிருந்த குச்சி பறந்துபோயிருச்சு. அந்த துக்கிளியூண்டு பந்து என்ன பார்த்து கேவலமா இளிக்கற மாதிரி இருந்தது. போங்கடா நீங்களும் உங்க டுபாக்கூர் ஆட்டமும்னு அதோட விட்டுட்டேன்! எங்க ஆபீசுல எனக்கு அடுத்த லெவல்ல இருந்து கோல்ப் கட்டாய ட்ரெய்னிங் போகனும். ஏன்னா இந்த விளையாட்டு நிதானத்தையும், கவனக்குவிப்பையும், கட்டுப்பாட்டையும், ஆளுமைத்திறத்தையும் சொல்லித்தருதாம்! அதுபோக வெளிநாட்டு க்ளையண்டுககூட நெருங்கிப்பழக இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துமாம்!! அட போங்கப்பு! ஒரு நாளைக்கு அவங்கெல்லாம் இங்க வந்து இதே காரணத்துக்காக கில்லி தாண்டலு வெளையாடற காலம் வராமலா போயிரும்னு நினைச்சுக்கிட்டேன்!

கோல்ப்புல கிடைச்ச பல்ப்புல மத்தியான சோத்தை விட்டுறக்கூடாதுன்னு ஆற அமற இருந்த எல்லா ஐட்டங்க மேலயும் உருண்டு பொறண்டு கடைசியா நம்ப தேவாமிர்தமான தயிர்சாசத்துல முடிச்சு ஒரு கால் கிலோ ஐஸ்கிரீமோட ஒக்காரும்போதுதான் அடுத்து டென்னீசு வெளையாடலாம்னு பசங்க கூப்புட்டாங்க! சரி அதை மட்டும் ஏன் விட்டுவைக்கனும்னு அங்கயும் போயாச்சு! சும்மா பந்தை முன்னாடியும் பின்னாடியும் அடிக்கறதுதான.. நாம பார்க்காத டென்னிஸ் பாலா?! அப்படின்னு நினைச்சா.. நினைப்புல சுத்தமா மண்ணு! ஓடி ஓடி பந்து பொறுக்கறதுலயே பாதிநேரம் ஓடிப்போச்சு! ஒழுங்கா சர்வீசு போடறதுக்கே அரை மணி நேரம்! அதுக்கு அப்பறம் கேம் கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருந்தது. ரொம்பக்க்க்க்க்க்கேவலமா 2 மணி நேரம் ஆடி ஒரு செட்டு முடிச்சோம். அதுலயும் நாங்கதான் ஜெயிச்சோம்னு வச்சிக்கங்க. இந்த டென்னீசு கேவலத்தை மட்டும் படமா போட்டிருக்கேன்! இந்த நிக்கற ஸ்டைலை வச்சே சொல்லுங்க? நான் ஒரு ஃப்ரொபசனல் ப்ளேயரு மாதிரி இல்லை?? இது போதாதா என்ன? நான் சானியா கூட மிக்சட் டபுள்ஸ் ஆடறதுக்கு?! (கனவுலதாங்க... ஹிஹி..) அந்த காலத்துல ஸ்டெப்பிகிராப்பு மேல ஒரு தலைக்காதலா அஞ்சாரு வருசம் நூலு விட்டும் ஒன்னும் வேலைக்காகல! இத்தனை வருசத்துல நம்ப ஹேர்ஸ்டைலு அகாசி மாதிரி ஆனதுதான் மிச்சம்!! சரி... நம்ம அம்மணி அச்சு அசலா நம்மள மாதிரி இருக்கற ஒரு ஆளைத்தான் கல்யாணம் கட்டியிருக்குங்கற ஒரே ஒரு திருப்திதான் அந்த காதல் கதைல எனக்கு மிஞ்சுன எச்சம்!!

இதுக்கே நாலு மணி ஆகிடிச்சுங்க. இதுக்கு அப்பறம்தான் நீச்சலு! அங்க நாளு வெள்ளைக்கார ஜோடிங்க நீச்சல்குளத்துக்கு பக்கத்துல நீள பென்ச்சுல படுத்துக்கிட்டு எந்த சரக்கையோ அடிக்கடி உறிஞ்சிக்கிட்டு அப்பப்ப போய் ஒடம்ப நனைச்சுக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இதெல்லாம் ஆகுமா? நாமெல்லாம் சொரபுட்டை(சுரைக்காயை நல்லா 2 மாசம் வெயிலுல காயவச்சி எடுத்தா உள்ள காத்தை தவிர ஒன்னும் இல்லாம ஆயிரும். அதை ஒரு கயித்துல சுத்து முதுகோட கட்டிக்கிட்டா கிணத்துல ஆள முழுக விடாது! )யை முதுகுல கட்டிக்கிட்டு கிணத்துல கடப்பாரை நீச்சலு போட்டு பழகுன ஆளுக! அளுங்காம குளுங்காம பதவிசா குறுக்கையும் நெடுக்கையும் நீஞ்ச்சறதுக்கு பேரு நீச்சலா? நீச்சல்குளத்துக்கு போறதே குளிக்கத்தான்! ஆனா அதுக்கு முன்னாடி வெளீல குளிக்கனுமாம்! சரின்னு லைட்டா ஒடம்ப நனைச்சுட்டு ஓடிப்போய் தடால் தடால் குதிச்சதுல ஒரு வெள்ளைக்கார ஜோடி கடுப்பாகி எழுந்திருச்சு அந்தப்பக்கம் போயிருச்சு. அப்பவும் அந்த வெள்ளைகார பொண்னு எங்களைப்பார்த்து "You.. crazy guys.." னு ஒரு சினேகமா சிரிப்போடதான் போச்சு! நெட்டுக்குத்தல் டைவு, ரெவர்சு டைவு, கையைக்கால இறுக்கமா கட்டிக்கிட்டு பொதேர்னு விழுகற அணுகுண்டுன்னு அனைத்துவகை கொரங்கு சேஷ்டைகளையும் 2 மணி நேரம் பண்ணதுல அங்கன ஒரே களீபரம்! ரொம்ப நேரம் யாரு தண்ணிக்குள்ள மூச்சுப்புடிக்கறதுங்கற வெளையாட்டுலயும் நாந்தான் ஜெயிச்சேன்! என்னா நான் தம்ம நிறுத்தி 3 வருசம் ஆகுதுல்ல! அன்புமணி சொல்லியெல்லாம் இல்லைங்க! எல்லாம் என் அன்புமனைவி சொல்லித்தான்! :) ( நம்ப ஆளு இப்பெல்லாம் வலைப்பக்கம் அடிக்கடி வர்றாங்கன்ற உறுதிப்படுத்தப்படாத வதந்தியை அடுத்து அடிக்கடி இப்படியெல்லாம் எழுதவேண்டியிருக்குங்க...)

நெஜமாவே அன்னைக்கு ரொம்ப உற்சாகமா இருந்துச்சுங்க! HR பண்ணறதுலயும் ஒரு விசயம் இருக்கு போல. என்ன? அதுக்கு அடுத்த ரெண்டு நாளு ஒடம்பை இப்படி அப்படி அசைக்கமுடியலை! அங்கங்க புடிச்சுக்கிட்டு ஒரே வலி! இந்த IT வாழ்க்கைல ஓடியாடி ஏதாவது செய்யாம ஒடம்ப இப்படியே வச்சிருந்தா சீக்கிரம் துருப்பிடிச்சுரும்னு(அப்பாடா.. தலைப்பைப் பிடிச்சாச்சு...!) தோணுது. இனியாவது ஏதாவது உடற்பயிற்சிய கட்டாயமா தெனமும் செய்யனும்கற ஒரு உறுதிய மனசுக்குள்ள எடுத்துட்டு அதை இதுவரை நான் முடிவெடுத்து நிறைவேற்றாத மத்த 184 உறுதிகளோட சேர்த்துக்கிட்டேன்!

விரும்பக்கூடியவை...

14 comments

 1. On Native Ground Journalism Should not Be an Exclusive Club
  DUMMERSTON, Vt. -- Who is a journalist? That is the central question in the weblogs versus journalism debate.
  Hi, I was just blog surfing and found you! If you are interested, go see my Technology News related site. It isnt anything special but you may still find something of interest on Technology News.

  பதிலளிநீக்கு
 2. /என் ட்ராக் ரெக்கார்டை பார்த்து வந்த கான்பிடன்டுல உடனே சேப்பலுக்கு போன் போட்டு கங்கூலிக்கும் எனக்குன் ஒரே ரன் ரேட்டுங்கறதை எடுத்துச்சொல்லி காப்டன் பதவியைக்கேக்கலாமான்னு வந்த எண்ணத்தை பசங்கதான் தடுத்து நிறுத்து இந்திய அணியை காப்பாத்துனாங்க../

  :-)))))))))))))))))) Enjoy ELA.

  THYAG

  பதிலளிநீக்கு
 3. வழக்கம் போல செம கலக்கலா எழுதியிருக்கீங்க. இதை படிச்ச நானே ரிலாக்ஸாயிட்டேன். ;-)

  பதிலளிநீக்கு
 4. படத்தில பார்வையாளரையும் சேத்து எடுத்துப் போட்டிருக்கலாமே?

  பதிவு படிச்சு எங்களுக்கும் வேர்த்திட்டுது.

  பதிலளிநீக்கு
 5. //நிறைவேற்றாத மத்த 184 உறுதிகளோட //

  avvlothaana? innum chinnapullayaa irukkiyeppu!

  பதிலளிநீக்கு
 6. // வெளிநாட்டு க்ளையண்டுககூட நெருங்கிப்பழக இது ஒரு வாய்ப்பை // இந்த ரோசனைய எந்த மவராசன் கண்டுபிடிச்சானோ தெரியல... என்னமோ வெளிநாட்டுல அல்லாம் கோல்ப் விளையாடி கிடைக்கிற கேப்புலதான் பிஸினஸு பண்றாப்புல..

  அப்புறம் இளவஞ்சியின் வழக்கமான பதிவு ;-))

  பதிலளிநீக்கு
 7. THYAG , Sudharsan, கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  வசந்தன், //படத்தில பார்வையாளரையும் // இந்த லொல்லுதானே வேனாங்கறது? அப்படி யாராவது இருந்திருந்தா போட்டிருக்கமாட்டனா?

  பாண்டி,

  நிறைவேற்றாத உறுதிகளை மறக்காம நியாபகம் வச்சிக்கனும்கறதும் அதுல ஒன்னு. அதுனால அப்பப்ப மறந்ததுபோக மிச்சமிருக்கறது இது.. ஹிஹி..

  பதிலளிநீக்கு
 8. முகமூடி,

  Engagement Manager அப்படின்னு ஒரு போஸ்ட்டு இங்க இருக்கு. அவங்க எல்லாம் ஊருஊருக்கு பறந்துபோய் க்ளையண்டுககூட கூடிப்பேசி தண்ணியடிச்சு கோல்ப் விளையாண்டு பிசினெஸ்ச வளர்க்கறதா கேள்வி!

  பதிலளிநீக்கு
 9. அசப்பில அகாஸி மாதிரிதான் தெரியுது...!

  உங்க ஸ்டெஃபி-ஜொள்ளுபத்தி நாலு பேத்துக்கு சொல்லிட்டேன்ல..

  பதிலளிநீக்கு
 10. இளவஞ்சி,

  //அந்த காலத்துல ஸ்டெப்பிகிராப்பு மேல ஒரு தலைக்காதலா அஞ்சாரு வருசம் நூலு விட்டும் ஒன்னும் வேலைக்காகல! இத்தனை வருசத்துல நம்ப ஹேர்ஸ்டைலு அகாசி மாதிரி ஆனதுதான் மிச்சம்!! //
  நான் சிரிச்ச சிரிப்புல இங்க பக்கதுல எல்லோரும் திரும்பிப் பாத்துட்டாங்க!


  கிரிக்கெட் மட்டையை பிடித்த புகைபடத்தை போட்டிருந்தா கண்டிப்பா 'அட! நம்ம ஜெயசூர்யா!" -ன்னு சொல்லியிருப்பேன் .எனக்கென்னவோ நீங்க ஜெயசூர்யா மாதிரி இருக்கதா தோணுது.

  பதிலளிநீக்கு
 11. //கிரிக்கெட் மட்டையை பிடித்த புகைபடத்தை போட்டிருந்தா கண்டிப்பா 'அட! நம்ம ஜெயசூர்யா!" -ன்னு சொல்லியிருப்பேன் .எனக்கென்னவோ நீங்க ஜெயசூர்யா மாதிரி இருக்கதா தோணுது.//

  அதேதான். கொஞ்சம் உயரத்தையும் குறைச்சிட்டீங்களெண்டா அந்த மாதிரி.

  பதிலளிநீக்கு
 12. தருமி,

  போனாபோகுது விடுங்க... இப்படியாவது என் கதை ஸ்டெப்பிக்கு தெரிஞ்சா சரி! :)

  ஜோ, வசந்தன்,

  ஆனாலும் இது அநியாயம்.. நான் இடதுகைல விளையாடறதால சொல்லறீங்களா? நான் கொஞ்சம் கலருங்க.. மானிட்டருல வெளிச்சம் வச்சி பாருங்கப்பு... :)

  பதிலளிநீக்கு
 13. தங்கம் எப்டி சாமி துருப்புடிக்கும்; சும்மா water service பண்ணினா போதாதா! தெளிவா ஆயிடுமே!!
  ;-)

  பதிலளிநீக்கு

Like us on Facebook

Flickr Images