ஞாயிறு, அக்டோபர் 27, 2019

நினைவுகளைத் தொடுதல்...


ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது.. அடுத்த வருசம் எல்லோரும் சிங்கைக்கு சம்மர் டூருக்கு குடும்பமா வரனும்..”னு கேட்டுக்கிட்டு எல்லோரையும் ஹஃகிட்டு எமிரேட்ஸ் ஏறிட்டேன்.

துபாய் வரைக்கும் 14 மணிநேர பயணம். வைச்சிருக்கான் நூத்துக்கணக்குல படம். தேடுதனுல மாட்டுச்சு 96. கிடைச்ச ஐட்டங்களை எல்லாம் தின்னுக்கிட்டே மூனுமுறை முழு படத்தையும் அழுதமானிக்கு சிரிச்சமேனிக்கு வழிஞ்சபடிக்கு பார்த்தேன். அப்பறம் பாட்டுகளை மட்டும் திரும்ப பலமுறை ஓட விட்டேன். அப்பறம் இறங்கறதுக்கு ஒரு மணி முன்ன க்ளைமாக்ஸை மட்டும் ஒரு டஜனுக்கு மேல ஃப்ரேம் ஃப்ரேமா பார்த்து மண்டைல ஏத்திக்கிட்டேன். இருட்டுல வேர்த்துக்கின கண்களை தொடச்சிக்கினே திரும்பத் திரும்ப பேசுற நீ ரேஞ்சுக்கு திரும்பத் திரும்ப தேய்ச்சு 96ஐ JO ஆக்கிட்டு துபாய்ல இறங்கி கண்கள் எரிய சென்னை வண்டி புடிச்சு அசதி தாக்க தூங்கி எந்திருச்சா மீனம்பாக்கம். விட்டு வெளிய வருகையில் பாடி அப்படியே ப்ரேம் புடிச்சுவைச்ச கேமராக்காரன் ராமாட்டம் ஆகியிருக்க அது கோவிந்த் வசந்தாங்கற ஜீரால ஊறி நாஸ்டால்ஜியா நவதுவாரங்களிலும் வழிய மண்டைக்குமேல கொசுவத்தி சுத்த படிச்ச காலேஜு இருக்கும் கோவைக்கு பயணம்.

இருந்தது ஏழே நாட்கள் தான். வந்ததும் 25 வருச சில்வர்ஜூப்ளிக்கு மட்டும்தான். கிடைச்ச நேரத்துக்குள் மத்த ஏற்பாட்டாளார்களுடன் சேர்ந்து காலேஜ் விசிட்டு, பழைய டீச்சருங்களுக்கு பத்திரிக்கை, திருப்பூருக்கு டிசர்ட் அடிக்க, பங்கேற்பாளர்களுக்கு கேடயம் வாங்க, சாயந்தர நிகழ்வுக்கு அட்வான்ஸ் கொடுக்க, மைக்செட்டு ஆளைப் புடிக்க, விருந்துக்கு மெனுபோடன்னு மரண ஓட்டம். உடம்பு ப்ளைட்டுல தேத்துன எனர்ஜிக்கும் பழைய மக்களைக் கண்ட குதூகலத்துக்கும் சேர்த்துவைச்சு ஓரவராட்டம்! அந்தக்காலத்துல எங்கூட ஓரியாடுனவனுங்க எல்லாம் வந்து வந்து கட்டிக்க வயசாவறாதுல மறதிங்கறதுதான் இருக்கறதுலயே பெஸ்ட்டுலேன்னு நாங்களே சிலாகிச்சுக்கிட்டம்.

விழா அன்னிக்கு 96 பேரு பல நாடுக பல ஊர்கள்ல இருந்து சேர்ந்திருந்தோம். எங்க காலேஜ் பஸ்சையே இன்னத்த ப்ரிண்சி கிட்ட கேட்டு அதுலயே அன்னைக்கு போலவே ஆட்டம் பாட்டம்னு சவுண்டு கெளப்பிக்கிட்டு போய்ச் சேர்ந்தோம். ஒரு கிலோமிட்டரு முன்னாடி இருந்தே வெடிகள போட்டுக்கிட்டு பேண்டு செட்டும் தாரைதப்பட்டைகளும் அடிச்சுக்கிளப்ப குத்தாட்டமா ஆடிக்கிட்டு கல்லூரிக்குள்ள எண்ட்ரி. பின்ன அன்னைக்கு படிக்கற பசங்களா இருந்திருந்தா ரீஜண்ட்டா போகலாம். ஆட்டமா ஆடி சீப்பட்ட இடத்துக்கு குத்தாட்டம் இல்லாம எப்படி? இங்கன படிச்சு உய்ந்ததில் எப்படியோ வாழ்க்கைல நின்னுட்டம்லேன்னு பின்ன எப்படி இதை விட சிறப்பா வெளிப்படுத்த? ரெண்டு பக்கமும் இன்னைக்கித்த மாணாக்கர் நின்று வரவேற்க.. ”டியர் தம்பி தங்கைகளா.. நாங்க இந்த இடத்தை விட்டு வெளிய போனப்ப நீங்கெல்லாம் பொறக்கவே இல்லை...”ங்கற பிட்டைப்போட்டு அவங்க முகத்துல ”அங்கிள்ஸ்... அப்படின்னா இன்னுமாடா நீங்க திருந்தல...”ங்கற பீதிய கெளப்பி அப்பறம் சம்பிரதாய க்ரூப்பு போட்டோ, பழைய ஆசிரியர்களோடு அளவளாவுதல், அன்னிக்கு பிட்டடிக்க ஸ்மித்திங் செஞ்சுக்கொடுத்த லேப் அட்டெண்டர்களுக்கு நினைவுப் பரிசளித்தல், தாளாளரோடு ஒரு மணி நேர மீட்டிங் ( ”சமூகத்துக்கு ஏதாச்சு நல்லது செய்ங்கய்யா..” ) கடைசியா நாங்கெல்லாம் இன்னைக்கு என்ன ஆணி பிடுங்கறம்னு சொல்லிங்னு முடிச்சு சாயந்தர விழா ஹோட்டலுக்கு வர நாலாயிருச்சு பாத்துக்கங்க.

நாந்தான் மைக்மோகன் அன்னிக்கு. அஞ்சுமணி நேரம் நிகழ்சி காம்ப்பயரிங். எங்களை விட்டுட்டு போன 7 பேருக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு ( வைரமுத்துவின் ”ஜென்மம் நிறைந்தது..” பாடல்.. மனச புழிஞ்சிருச்சு ) பிறகு ச்சும்மா எல்லாத்தையும் பழைய நினைவுகள்ல புழிஞ்செடுத்தது நல்ல அனுபவம். என் ட்ரங்குப்பொட்டில சேர்த்து வைத்திருந்த அனைத்து பொக்கிசங்களையும் எடுத்துட்டு போயிருந்தேன். அந்தக்கால புகைப்படங்கள், நெகட்டிவ் ரோல்கள், கடிதங்கள், கல்லூரி அனுப்பிய அப்பனைக்கூட்டியா நோட்டிசுகள், டீச்சர்ஸ் அனுப்பிய ஆப்செண்டு லெட்டர்கள், அரியர் எக்சாம் ரசீதுகள், நண்பர்களின் ஹால்டிக்கெட்டு புகைப்படங்கள்னு... நிகழ்ச்சிகளுக்கு நடுவில் நண்பர்களுக்கு அவர்களது அந்தக்கால பாஸ்போர்ட் சைஸ் படங்களை கொடுத்து மகிழ்வித்தேன். எனக்கு மிகப்பிடிச்ச ஜஸ்ட் எனக்கு அஞ்சுவருச சீனியர் டீச்சருக்கு 27 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதி அனுப்பிய மார்க்லிஸ்ட்டு போஸ்ட்கார்டை நீங்க எனக்கனுப்பிய லவ்லெட்டருன்னு அவருக்கே கொடுத்து ஷாக்களித்தேன். 25 ஆண்டுகளுக்குப்பின் அவரை இன்னும் இன்னும் பிடித்துப்போனது. அன்னைக்குப் புடிச்ச க்ரஷ் பெண்ணோடு திரும்பவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே போஸில் படியில் நின்றபடிக்கு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இதுபோக எத்தனையெத்தனை நண்பர்களின் கட்டியணைப்புகள் இந்த நாட்களில்?

கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு ஒரு மாதிரியான உள்ளொடுங்கி ஆகிப்போனவன் நான். இரட்டை முகம். எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்கள் மட்டுமே வாழ்வென்று ஆடினேனோ அவ்வளவுக்கு எல்லாத்தையும் ஒதுக்கிவிட்டு தனிமையில் இருப்பதும் குருட்டாம்பட்டை சிந்தனையும் என ஆகிப்போனது வாழ்வு. என்னை கலைகூத்தாடியாக பார்த்த யாருக்கும் என் உள்ளொடுங்கித்தனத்தை புரிந்துகொள்ள ஏலாது. என்னை ஒரு அமுக்கானாக பார்த்தவர்களுக்கு நான் இப்படியெல்லாம் ஆடியிருப்பேனு சொன்னாலும் நம்பிக்கை வராது. வாழ்க்கையின் கசப்புகள் சிலரை புடம் போட்டு அதற்கு பரிசாக மனிதரை கையாளும் திறனை அளிக்கிறது. சிலரை உறவுகளில் இருந்து விடுபட்ட விட்டேத்தியாக மாற்றி மனிதரை கையாளத் தெரியாத உள்ளொடுங்கியாக அழுத்திவிடுகிறது.

தினம் அலுவலக ரீதியாக பலரிடம் கை குலுக்குபவன் தான். அவைகளில் பல நம்பிக்கைக்கு உரியவையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு கொடுக்கல் வாங்கல் உண்டு. குடும்பத்தார் தவிர கடைசியாக எப்பொழுது யார் என்னை கட்டி உச்சி முகர்ந்தார்கள் என நினைவில்லை. ஆனால் சந்தித்த ஓவ்வொரு பயலும் தொந்தி இடிக்க வேர்வை கசகசக்க சொட்டை டாலடிக்க அழுகை பீறிட இறுக்க கட்டிக்கொண்டார்கள். 25 வருடத்தில் வந்த தோற்ற மயக்கங்களை வென்ற பழைய நினைவுகளின் வீச்சு. பொம்பளையாளுகளும் கூட கொடுத்த ஹஃக்கில் எந்த தயக்கமும் இல்லை. அவளுக எல்லோருக்கும் பயபுள்ளைக கல்லூரிக்கே போயிவிட்ட வயசு. அன்னைக்கே மெச்சூரிட்டியான ஆளுங்க இன்னைக்கு மட்டும் இல்லாமல் எப்படி? எந்த தீண்டலிலும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை, நேசத்தைத்தவிர.

ஆனால் எனக்கு இந்த பயணத்தில் வேறொரு ஆசை இருந்தது. வேலை ரீதியாக வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களது பெற்றோர்களோடு இந்த நாட்களில் முடிந்தவரை தங்கி இருப்பது. ஏறக்குறைய 6 நாட்களும் நண்பர்களது வீட்டில்தான் தங்கினேன். கொள்ளை மகிழ்ச்சி அவர்களுக்கு. எங்களுக்கே 46 ஆகிவிட்ட நிலையில் அவர்களெல்லாம் எழுபது எண்பதுகளில். சிலருக்கு ஒத்தைப்புள்ளை. அன்றைக்கு அவர்கள் பிழைப்பு நிமித்தமாக கிராமத்தை விட்டு டவுனுக்கு வந்தவர்கள். இன்றைக்கு நாங்கள் பிழைப்பு நிமித்தமாக அதையே அவர்களுக்கு செய்திருக்கிறோம். திரைகடலோட்டத்தில் என்றைக்கும் தீர்க்க இயலாத பிரச்சனை. ஆதங்கங்களை சொன்னால் புள்ளை சுணங்கிருவானோங்கற நிலையில் அதைக்காட்ட இயலாத வாழ்வு. ஒரு பெற்றோர் வீட்டில் அவர்கள் மகிழ்வுடன் ஆக்கிப்போட்ட உணவை அவர்களோடு சிலவேளைகள் சேர்ந்துண்டேன். ஒரு மாலையில் கோவிலுக்கு அழைத்துச்சென்றேன். கோவிலுக்கே வராத அந்தப்பா வெளிப்பிரகாரத்தில் அமர்ந்திருக்க பிரசாதத்துக்கு மட்டுமே படியேரும் நான் பின்னே வர அந்தம்மா அத்தனை மகிழ்வோடு சுற்றிவந்தது ஆனந்தம். ஒன்றாக அமர்ந்து ஆஞ்சநேய பக்தர் கொடுத்த சக்கரைப்பொங்கல் உண்டோம். இன்னொரு அப்பாம்மாவை சென்னை சில்க்ஸ்க்கு கூட்டிப்போய் புடவையும் சட்டையும் வாங்கிக்கொடுத்தேன். அடுத்து ஹரிபவனில் நல்ல பிரியாணியும் கொத்துபரோட்டாவும். இன்னொரு அம்மாவுக்கு கான்சர் ஆரம்ப நிலை ட்ரீட்மெண்ட் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்த நொடியில் உள்ளங்கைகளுக்குள் என் கைகளை பொதிந்தபடி சில நிமிடங்கள் ஏதும்பேசாமல் அழுதார். அமைதியாக அமர்ந்திருந்தேன் என்ன பேசவென தெரியாமல். கடைசியில் எனக்கும் வெடித்து விட்டது. நாங்கள் வேண்டியதை வென்றெடுக்கும் திறனில்லாமல் கிடைத்ததில் ஒட்டிப்பிழைப்பதை நேர்மையாக அழுகையினூடே ஒப்புக்கொண்டேன். இன்னொரு அப்பா அந்திமக்காலத்தில். அவரது கைகளை பிடித்தபடிக்கு அமர்ந்திருந்தேன். பழுத்த இலை. வலிகள் போதுமெனவும் மேலும் மேலும் மருத்துவ துயரின்றி உதிரவும் மனதுள் நம்பாத கடவுளிடம் வேண்டுகோள் வைத்தேன். இவர்களுடன் இருக்கையில் ஒருநாள் கூட அந்த நண்பர்களோடு பேசவில்லை. எதற்கு? இவர்கள் அனைவரும் தான் பெத்ததுக்கும் அவன் கூட்டாளிக்கும் பாகுபாடின்றி பலநேரங்கள் சோறிட்டவர்கள். எந்த சங்கோஜமும் இன்றி நான் அந்த நாட்களில் வளைய வந்த வீடுகள். இந்த அம்மாக்களின் ஒவ்வொரு அணைப்பும்,விரல்கள் கோர்த்தலும், முகம் நெருங்கிய பேச்சுக்களும், உள்ளங்கைகளின் கதகதப்பும் எனக்கான இழப்பை ஈடு செய்யவே முயன்றன. பெற்றோர்களை 15 வருடங்கள் முன்பாகவே இழந்தவனுக்கு இந்த சந்திப்புகளின் ஆசை ஒரு ரகசிய Bucketlist item இல்லாமல் வேறென்ன? கரை வந்த பிறகே புரியுது கடலை.


ஏழு நாட்களில் எத்தனையோ உணர்வுகளின் தாக்கங்கள் மற்றும் அழைக்கழிப்புகள். திரும்புகையில் மீண்டும் சென்னையில் துபாய் விமானத்திற்காக சிலமணிநேரம் காத்திருந்தேன். ராமும் ஜானுவும் கடைசியாய் நின்ற இடமொத்த ஒரு இடத்தில் சுற்றிலும் பயணிகள் கசகசக்க மனம் துண்டித்த தனியனாக கிளம்பும் விமானங்களை பார்த்தபடி நெடுநேரம் நின்றிருந்தேன். என் இந்த பகுதி வாழ்வில் உடல்களின் தீண்டல்கள் தான் எத்தனை? நண்பர்களின் அழுகையினூடான இறுக்கம், அம்மாக்களின் உள்ளங்கைச்சூடு தீரக்கூடாதெனும் கைப்பதுக்கம், அப்பாக்களின் எங்கன்னாலும் நல்லா இருங்கடாவெனும் சின்ன முதுகுதட்டல், பொம்பளையாளுகளின் வாடாவுடன் கிடைக்கும் மெல்லிய அணைப்பு.

ஜானுகூட ராமை சிறுவயதில் ஒருமுறை நெஞ்சில் கைவைத்து தீண்டுகிறாள். பிறகான மறு சந்திப்பில் கூட தீண்டல் விளையாட்டுகள் உண்டு. வென்றெடுக்கவல்லாமல் இயல்பான தீண்டல் முயல்வுகளும் தவிப்புடன் கூடிய தவிர்ப்புகளுமாய் தான் பயணிக்கிறார்கள். கடைசியில் பிரிவுத்துயர் அழுத்த கைகளை காரினுள் சேர்த்துத்தான் விமானநிலையத்தை அடைகிறார்கள். கடைசியில் பிரிந்தே ஆகவேண்டிய நிலையில் தன் நம்பிக்கைக்கு உரியவனை, அன்பை கொட்டித்தீர்த்தவனை, இதற்கு மேல் எதுவுமே கொடுக்க இயலாதவனை, எதையுமே எடுத்துக்கொள்ளும்படி வேண்டாதவனை ஜானு முதன் முறையாக தொடுகிறாள். அது நல்லாயிரு என்ற ஆசியென தோன்றவில்லை. இதற்குமேல் உன்னை பார்க்கக்கூடாதென்பதன் வெளிப்பாடுமில்லை. தாங்கவே முடியாத வாழ்வின் இழப்பின் இறுதியில்லை. உணர்ந்த ஆணை ஒரு பெண் அங்கீகரிப்பதும் இல்லை. அந்த தொடுதல் தன்னில் நிறைந்த ஆணின் ஆண்மையின் விடுபட்ட இடங்களை பெண்மையால் நிரப்புதல். இப்பிரபஞ்சத்தின் பெண்மையை வழங்குதல். அதன்மூலம் ஆண்மையை பூரணமாக்குதல்.

இந்த தொடுதல் முன்னாள் காதலியிடம் இருந்து மட்டுமல்ல. வாழ்வில் ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு பெண்ணிடம், கட்டிய மனைவியோ, சுட்டி மகளோ, நண்பனின் அம்மாவோ, வகுப்புத்தோழியோ, வளர்த்தெத்த பாட்டியோ, அலுவலக கூட்டாளியோ, சக பயணியோ யாரோ ஒரு பெண் ஒரு ஆணை தன் உலகின் இருப்பில் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் கணத்தில் வழங்கும் இந்த பெண்மை ஒரு ஆணை முழுமையடையச் செய்கிறது. அந்த ஆணே தன் வாழ்வில் பேராண்மை நிறைந்தவனாகிறான் என்றே தோன்றுகிறது.

என் மிச்சமிருக்கும் வாழ்வில் விடுபட்ட இடங்களை கண்டடைய எஞ்சிய நினைவுகள் போதும். இட்டு நிரப்பிக்கொள்ளத்தான் நான் சரியான ஆண்மையுடன் வாழவேண்டும் போல. அதற்கான என்னை நானே தகுதிப்படுத்திக்கொளல் மிச்ச வாழ்வில் நிகழ்ந்துவிடாதா என்ன?


வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன்

வெள்ளி, நவம்பர் 09, 2018

சமூகநீதி


நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு.
எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க...
அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு இருப்பவர்களுக்குக் கைகொடுக்கும் தைரியமும் அவங்களுக்கு வழிவிடும் துணிவும் எங்களுக்கு இருக்குன்னு அர்த்தம்.
ஆமாய்யா... மானியத்துல கிடைச்ச அரிசில புழுவை அலசிட்டு கல்லுபொறுக்கி சோறுவைச்சுத் தின்னுதான் வளர்ந்தோம். இப்ப என்னா அதுக்கு?  பசிச்சவனுக்கு கிடைச்ச மீனுதான். அதுகொடுத்த தெம்புலதான் எங்க தூண்டிலை நாங்களே செஞ்சுக்கிட்டோம். நீங்க இன்னமும் நூறாண்டுகள் அலசி ஆராய்ந்து எங்களில் சிலருக்கு கொடுக்கப்போகும் ”10 நாளில் மீன் பிடிப்பது எப்படி?”ங்கற புத்தகம் எங்களுக்கு எதுக்குயா வேணும்?
பல்பொடி, கரண்டு மான்யம், புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப்பு, பொங்கலுக்கு வேட்டி சேலை, திருமண உதவித்தொகை, அம்மா உணவகம் இதெல்லாம் மானியம் இலவசம் தான். அதைக் கொடுப்பது மக்களால் மக்களுக்குக்காக தேர்ந்தெடுக்கப்பட மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியமைத்து அதில் எடுக்கும் முடிவில் கொடுக்கப்படுபவை தான். அதையெல்லாம் பிச்சை கேவலம்னு ஒருத்தன் சொல்லறான்னா அவனுக்கு அவனைத்தவிர யாரைப்பத்தியும் அக்கறையில்லைன்னு அர்த்தம். இந்துமதத்துல ஆயிரம் ஓட்டைகள் இருக்கு ஆகவே பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட மதத்தில் இந்த ஓட்டைகளைச் சரிசெய்து முன்னேத்தனுமே தவிர மதமே கூடாதுன்னு வாதிடறது முட்டள்தனம்னு சொல்லற அதே ஜொமோக்கள் தான் இலவச திட்டத்துல ஊழல் ஏமாத்து ஆகவே அனைத்தையும் ஒழிங்கன்னு வசனம் எழுதுகிறார்கள்.
ஒரு அரசாங்கம் கொடுக்கும் ஒன்றை பெறுவது அதைத்தேர்ந்தெடுத்த ஒரு குடிமகனின் உரிமை. அது தேவையில்லையெனில் பெறாமலிருப்பது ஜனநாயகம். எனக்குத் தேவையில்லை ஆகவே பெறுபவர் அனைவரும் இலவசத்துக்கு அலையும் பிச்சைக்காரர்கள் என அருள்முத்து உதிர்ப்பாயேயானால் நீ உன் தெருவையே அறியாதவன்.
எலைட்டுகளின் இன்னொரு உத்தி இதில் நேர்மை மற்றும் ஒழுக்கத்தைத் திணித்து இலவச திட்டங்களைக் கேவலங்கள் என பெறுபவர்களை நம்பச்செய்வது. ஊழல் நடக்குதுன்னா அதைத்தடுக்க என்ன செய்யனும்னு சொல்லாம பயனாளிகளைக் கேவலப்படுத்துவது. ஒரு அரசு எனக்குக் கொடுக்கும் பொருளை நான் பெறுவதற்கு நானெதுக்குயா என் ஒழுக்கத்தை உனக்கு நிரூபிக்கனும்? நீங்க என்ன அப்படியாப்பட்ட தங்கங்களா உங்களுக்கு முன்னால் எங்களை உரசி உரசி நிரூபிச்சுக்கிட்டே இருக்கனுங்கறதுக்கு?
நேர்மையின் மொத்த உருவன் அன்னா அசாரே இன்னைக்கு எங்க உட்கார்ந்து யார் ஊழலை எதிர்கிறார்னு பாருங்க. அங்கே எல்லையில் ராணுவவீரர்கள்னு சொன்னவங்க எல்லாம் வங்கிக்குத் திரும்பவந்த பணக்கணக்கை பத்தி எப்படிக் கமுக்கமா பேசாம இருக்காங்கன்னு பாருங்க. இவங்களுக்கு இல்லாத நிரூபிக்கத் தேவையில்லாத ஒழுக்கமும் நேர்மையும் இலவசங்களால் பலனடையும் நமக்கு எதுக்குன்னேன்? அதுக்கு எதுக்கு நம்மை நாமே அசிங்கமா உணரனுங்கறேன்?
கலைஞர் இறக்கையில் இலக்கியப் பிரம்மாக்கள் மூனுபேரு ஏதுவுமே சொல்லலைன்னு இணைய உபிக்கள் வருத்தப்படாங்க. அந்தக் கள்ளமவுனத்துல அவங்க சாதிச்சது நீங்க வாய்விட்டுக் கேட்டாலும் எழுதமாட்டேனேங்கற அதுப்புதான். அதன்மூலம் பெற்றது செத்தாலும் நல்லது ரெண்டு நடந்திருக்குன்னு என்வாயால சொல்லமாட்டேங்கற அரிப்புதான். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? தமிழகத்தின் சோத்தனங்கள் பலகாலமாய் திராவிடக் கட்சிகளின் மீது போர்த்தி வந்த நகைச்சுவை கலந்த நேர்மை, நாகரீகமின்மை, ஒழுக்கமின்னைன்ற திரைகளையெல்லாம் மனசுல கிழிச்செறிஞ்சுட்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான சாமானியர்களின் குரல்கள். அவர்கள் கொடுத்த அரசின் இலவச திட்டங்களால் எப்படிப் பயனடைந்து என்னை என் குடும்பத்தை நிமிர்த்தினேன் அப்படிங்கற வாக்குமூலங்கள். இதெல்லாம் ஓராளு செத்தவுடன் சொல்லும் சடங்கு நல்ல வார்த்தைகள் இல்லை. மனதில் வாழ்வில் உணர்ந்த பலனடைந்த சாமானியர்களின் துக்கம். இந்தத் தட்டுத்தடுமாறிய ஆயிரக்கணக்கான குரல்களுக்கு முன்னால் அந்த வெளிவராத 100 பக்கம் இசங்களை அரைச்ச கட்டுரைகள் ஹைகோர்ட்டுக்கு சமானமில்லையா?
இதுல ஒரு ஐரணி உண்டு. அந்த மூன்று இலக்கியபிதாக்களும் ஒருகாலத்தில் நாடுமுழுக்க ஊரூராய் சோறிண்றி போட்டுக்கத் துணியின்றி அலைந்து அனுபவங்களைப் பெற்றெடுத்த நாடோடிகள். பயணங்களே கண் திறப்புகள்னு நமக்குப் புத்தகங்கள் எழுதி உணரவைத்த ஆசான்கள். ரயிலில் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியதில் இருந்து டெல்லி எல்லைவரைக்குத் தெரியவரும் சாமானியர்களின் வாழ்க்கை அவலங்களைக் கண்டு உணர்ந்த பிறகும் தமிழக மக்கள் ஏன் எப்படி இந்த 60 வருடங்களில் அவலத்தில் இருந்து சமூக மரியாதை கூடிய இடத்துக்கு நகர்ந்துள்ளார்கள் என்பதைப் பற்றி ரெண்டுவரி எழுத மனமில்லைன்னா அவர்களுக்கு கடைசில க்கன்னா கூடச் சரியாக வைக்காத சர்கார் எழுதத்தான் விதி வாய்ச்சுவிடும்!
சரி ஆமாய்யா... இலவசத்துலதான் பலனடைஞ்சோம். சத்துணவு சாப்புடதான் பள்ளிக்கு போனோம். இலவச சைக்கிள்லதான் படிக்கபோனோம். இலவச வேட்டி புடவைதான் எங்காத்தாளுக்கு. முதல் பட்டதாரி க்ரேஸ் மார்க்குதான் என்னை இஞ்சினியரு ஆக்குச்சு. ரிசர்வேஷன்லதான் சீட்டு வாங்குனோம். இன்னும் ரெண்டு தலைமுறைக்குக் கூட ரிஷர்வேசன்ல வாங்குவோம். நீங்கெல்லாம் உங்க சாதிசட்டிபிகேட்டுகள கிழிச்சுட்டு முன்ன போகனும்னா போங்கய்யா. அந்த நேர்மை ஊழல் ஒழிப்பு மேம்போக்கு மேட்டிமைத்தன தடிச்ச போங்கை எங்ககிட்ட காட்டாம கமல் ரஜினி கட்சில சேர்ந்து ஸ்ரெய்ட்டா ரப்பர் வச்சி அழிங்க.
நாங்க கலைஞர், ஜெ, ராமதாஸ், திருமா ஏன் டாக்டர் கிருஷ்ணசாமியாகவே இருந்தாலும் களத்தில் எங்க சமூகத்துக்குப் போராடும் அதன்மூலம் பலன் கொடுக்கும் தலைவர்களை ஆதரிக்கறோம். ச்சேச்சே இதெல்லாம் ஜாதிக்கட்சின்னா எல்லா ஜாதிக்கட்சிகளும் தேர்தல்முறைக்கு வருகையில் ஓட்டரசியலுக்கு ஜனநாயக மாண்மை பின்பற்றித்தான் ஓட்டுகள் தேத்துங்கற உண்மை அறியாதவங்க நீங்கன்னு நினைச்சுக்கறோம்.
ஆக, அரசு இலவசங்கள் கொடுப்பதும் பெறுவதும் கேவலம்னு நினைப்பது தான் படு கேவலம் சென்றாயன்! உன்னைய உன்னையவைச்சே கேவலப்படுத்தி பேச எந்த புண்ணாக்குகளையும் அனுமதித்து விடாதே!
* இலவசங்கள் நாட்டைக்கெடுக்குதுங்கறவன் தன் முன்னோர் வரலாறு அறியாத மேட்டிமைத்தனத்தில் தளும்பும் கிணற்றுத்தவளை
* இலவசங்களைக் கேவலம் என்பவன் சொந்த மக்களின் வாழ்க்கை மாற்றங்களை எதிர்ப்பவன்
* இலவசங்களை ஊழல் நிறைந்த அயோக்கியதனம் என்பவன் சொந்த மக்களின் ஏற்றங்களை அழிக்கப்பார்க்கும் காட்டுமிராண்டி
* இலவசங்கள் நாட்டை அழிக்கும்னு ஷோல்டர் இறக்காம பொங்கறவன் தான் பெற்ற சமூகநீதி என்பதையே ஏன் பெற்றோம் என்று அறியாத மூடன்

வெள்ளி, ஜனவரி 27, 2017

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ஒத்துமையின் உச்சக்கட்டமாக சட்டமே கிடைச்ச பின்னாடியும் ஃபினிசிங் சரியில்லப்பாங்கற மாதிரி எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டமே :( நடந்ததைக்கண்ட வெறுப்புல மீண்டும் மனம் சுனங்கியது தான் மிச்சம்.

இந்த நிகழ்வு சரியான தலைமையில்லாமல் தோற்றிருக்கலாம். உள்ளடி குழப்பங்களால் முடிவு சிதைந்திருக்கலாம். கடைசிக்கட்ட வன்முறை சம்பந்தமில்லாத ஒரு மக்களுக்கு திருப்பி விடப்பட்டிருக்கலாம். ஆனால் கூடிய கூட்டத்தின் அந்த உணர்வு உண்மை. அந்த உணர்வு இன்றைக்கு போஸ்ட்மார்டம் அனாலிசிஸ் ஆக “அதான் அன்னைக்கே சொன்னமே” கோஷ்டிகளாலும் “அரசியல் தெரியாத கத்துக்குட்டிக” எனும் வாய்ப்புக் கிடைத்தற்காக அரசியல் வகுப்பெடுக்கும் ஆட்களாலும், ”மொதல்ல தமிழை ஒழுங்கா எழுதுங்கடே”ன்னு சிரிச்ச குபீர் தமிழ்வாத்தியார்களாலும், வீதிக்கு வாங்க மக்களேன்னு காலங்காலமாய் அநியாயத்தை எதிர்த்த பத்தி எழுத்தாளர்கள் இதென்ன கூத்துன்னு தாம் வழக்கமாய் செய்யும் எதிர்நிலை கட்டுரைகளால் அடித்ததும், ஏன்... மெரினால ஆணுறைகள் வழக்கத்தைவிட கூடுதல் என எண்ணி அறிவித்த ஆராய்ச்சி மன அரசியல் அல்லக்கைகளை கூட ஆல்வேஸ் மாற்றுக்கருத்து மகான்கள் என்கிற அளவில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அடித்தட்டு மக்களின் குரலாக ஒலித்த பல இணைய புரட்சியாளர்கள் ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்வை மிடில்க்ளாஸ் கொண்டாட்ட காமெடின்னு சுருக்கியதுதான் மிக வருத்தம். அந்த உணர்வினை கொச்சைப்படுத்துவதுதான் ஆராத்துயரம் தரும் செயல் :(

போகட்டும் மக்களே. மூனுநாளைக்கு மேல ஒன்னா சேர்ந்திருக்க துப்பில்லாத தமிழன் ஏழுநாளைக்கு ஒன்னா நின்னதே சாதனை. அதுவரை மகிழ்ச்சி.

வேற ஊர்க்காரன் கதையொன்னு... கேட்டா நம்ப ஏழுநாள் கதைமாதிரியே இருக்கும். ஆனா அங்க 93 நாள் ஏகப்பட்ட உயிரிழப்போட நடந்து முடிஞ்ச நிகழ்வு.

உக்ரைன்னு ஒரு நாடு. 1991லதான் விடுதலை அடைஞ்சது USSRல் இருந்து. அந்தக்காலத்துல ஜிவில வந்த பெரஸ்த்ராய்கா கட்டுரைகள் நியாபகம் வந்தால் நல்லது. கூட்டு ரஷ்யா சிதறிய பிறகும் அரசியல் குழப்பங்களிலேயே இருந்த நாடு. அங்க மக்கள் 93 நாட்கள் ஒத்துமையா இருந்து ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்காங்க. 2013ல் அதன் அதிபர் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கறதா செய்தி பரவுது. அது கிழக்கால இருக்கற ரஷ்யாவுடன் மீண்டும் சேர்ந்துக்கறது. மக்களுக்கு மேற்கால இருக்கற யூரோபியன் யூனியனுடன் கூட்டு வைச்சுக்கனும்னு ஆசை. திரும்பவும் புடினின் ரஷ்யாகூட இயைந்தால் வருங்காலம் மொத்தமாக காணாமப் போயிரும்னு பயம்.

அதிபரை எதிர்த்து குரல் கொடுக்கலாம்னு ஒரு நபர் பேஸ்புக்கில் தலைநகரின் மையத்தில் இருக்கும் மைதான் எனும் இடத்தில் கூடச்சொல்லி மெசேஜ் விடறார். கூடச்சொல்லிய தினத்தில் முதலில் 200 பேர் இருக்கிறார்கள். அடடா இவ்வளவுதானான்னு ஏமாத்தமடைய நேரமாக ஆக மக்கள் எல்லா வழிகளிலும் வந்து சேர ஆரம்பிக்கிறார்கள் ஆயிரம் பத்தாயிரமாகி கூடும் மக்களின் எண்ணிக்கை உயந்துகொண்டே போகிறது. எல்லோருக்கும் ஒரே குரல் ரஷ்யாவோடு சேராதே ஐயோப்பிய யூனியனோடு இணை என்று. இந்த கூட்டம் 9 நாட்களுக்கு கலையவேயில்லை. வெளியிலோ பனிப்பொழிவுடன் கூடிய கடுங்குளிர். மக்கள் அரசியல்வாதிகளின் ஆதரவை நிராகரிக்கிறார்கள். இந்த போராட்டத்தில் எந்த அரசியல் மத மொழி பிரிவுகளுக்கும் இடமில்லை என அறிவிக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழுக்கள் அமைத்து உணவு, தகவல் தொடர்பு, போக்குவரத்து என பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். உக்ரைனின் கலாச்சார கலைகளை நிகழ்த்தி ஆட்டம் பாட்டமாக கொட்டும் பனியில் ஒரு குரலாக நிற்கிறார்கள். கொண்டாட்டமான போராட்டம். இதுவரை உலகம் காணாத ஒரு போராட்ட வடிவம். மக்கள் கூடுகையில் கிடைக்கும் எதிர்மறை அழிவு சக்திக்கு மிகமாறானதாக பொங்கிவழியும் நேர்மறை எண்ணங்கள். யூதர், கிருத்துவர், முஸ்லிம் என பல மதங்களை மொழிகளை கொண்ட உக்ரைன் மக்கள். ஒரே இடத்தில் ஒரு குரலில் ஒரே கோரிக்கைக்காக. அனைவரையும் இணைத்தது இணையம்.


ஒன்பதாவது நாளில் அதிபர் அவரது அஜண்டாவுக்காக எடுத்த ரஷ்யாவோடு சேரும் முடிவை கூட்டம் அறியவருகிறது. மக்களின் எதிர்ப்புக்குரல் வலுக்கிறது. இந்தக் கூட்டத்தை கலைக்கச்செய்ய அரசு போலிசை களமிருக்கிறது. இதுவரைக்கும் கூடநின்று வேடிக்கை பார்த்த அதே போலிஸ் கூட்டம். ப்ளாஸ்டிக் தடிகளுக்கு பதிலாக இரும்புக்கழிகள். கூட்டத்தில் புகுந்து கிடைத்த மக்களையெல்லாம் சவட்டியெடுக்கிறது. இரும்பில் அடிவாங்கி மண்டை உடைந்து கண்கள் பிதுங்கி முகமெல்லாம் ரத்தமாக மக்கள். பெண்கள், வயதானவர், குழந்தைகள் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. குழம்பிய மக்களின் ஓலக்குரல் “உங்களுக்கும் சேர்த்துத்தானே நம் நாட்டுக்காக போராடறோம். ஏன் அடிக்கிறீர்கள்?” சாலைகளெல்லாம் ரத்தம்.

கூட்டம் பின்வாங்கவில்லை. மருத்துவர்களும் ரெட்க்ராசும் ஓய்வுபெற்ற ராணுவ ஆட்களும் இதை எதிர்கொள்ள களமிறங்குகிறார்கள். நாளாக ஆக போராட்டத்துக்கு ஆதரவு நாட்டின் எல்லாத்தரப்பில் இருந்து வலுத்துக்கொண்டே போகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஜஸ்ட் அரசியல் பஞ்சாயத்து என நிராகரிக்கப்படுகின்றன. மைதானின் பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தை மருத்துவ முகாமாக மாற்றுகிறார்கள். பார்லிமெண்ட் செல்லும் வழியை அடைத்து தடையேற்படுத்துகிறார்கள். கற்களால் இருபுறமும் தாக்கிக்கொள்கிறார்கள். பாட்டிலில் பெட்ரோல் குண்டுகள் செய்து வீசுகிறார்கள். அரசுதரப்பில் இருந்து போலீசுடன் சேர்ந்து நிற்க கூலிப்படையை இறக்குகிறது. தலைநகர் ரத்தக்களறி. அடிபட்ட பொதுமக்கள் மருத்துவ உதவி பெறும் கட்டிடத்துக்கு காவல்துறை தீவைக்கிறது. உள்ளிருக்கும் மக்கள் கருகி சாகிறார்கள். கைக்குக் கிடைத்த தனியாக மாட்டிய போலிஸ்களை பொதுமக்கள் புரட்டியெடுக்கிறார்கள். துப்பாக்கியில் ரப்பர் தோட்டாக்களுக்கு பதிலாக நிஜதோட்டாக்கள் அளிக்கப்படுகிறது. பொதுமக்களை சுட்டுத்தள்ளும் போலிஸ்!

93 வது நாளின் கடைசிபோராட்டம். இறந்த மக்களை அடக்கம் செய்ய எடுத்துச்செல்வதில் இருந்து காயப்பட்டவர்களை உயிரைப்பணயம் வைத்து இரத்தம் ஒழுக இழுத்துவருவது வரை எல்லாமும் மக்களால் அவர்களுக்குள் அமைத்துக்கொண்ட குழுக்களால். மக்களின் ”இங்கு வந்திருப்பதே சாகத் தயாராகத்தான் எனவே உயிர்பயமில்லை” எனும் அறிவிப்பு. உண்மையான உணர்வுகள் கொடுக்கும் புரிதல். இந்த கடைசிக்கட்ட துப்பாக்கிச்சூட்டின் இரவில் எதிர்க்கட்சித்தலைவர் போராட்டத்தின் வெற்றியாக வரும் டிசம்பரில் தேர்தல் என அறிவிக்கிறார். இந்த ஏமாற்றை ஏற்காத மக்கள் கூச்சலிடுகிறார்கள். ஒரு பொதுஜன நபர் மேடையேறி மைக்கைப்பிடுங்கி நாளை காலை 10மணிக்குள் அதிபர் ராஜினாமா அதுமட்டுமே கோரிக்கை என கூக்குரல் இடுகிறார். அன்றைய இரவு அதிபர் ரஷ்யாவுக்குள் தஞ்சம் புக ஹெலிகாப்டரில் தப்பியோடுகிறார். அடுத்தநாள் உக்ரைனின் அதிபரின் பதவியிழப்பு அறிவிக்கப்படுகிறது. மக்களின் ஐரோப்பிய யூனியனில் சேரும் முடிவு பார்லிமெண்டில் ஏகமனதாக ஏற்கப்படுகிறது. தீயினால் கருகி சிதிலடமைந்திருக்கும் மைதானில் போராடிய மக்கள் ஒருவரை ஒருவர் மகிழ்வில் வாழ்த்திக்கொள்கிறார்கள்.

இந்த 93 நாட்கள் போராட்டத்தில் 125 பொதுமக்கள் இறப்பு. 65 பேரை காணவில்லை. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம். இந்த மக்கள் போராட்டம் ரொம்ப காலத்துக்கு முன்னாடியெல்லாம் நடக்கவில்லை. ஜஸ்ட் 3 வருடங்களுக்கு முன்! நாம் இணையத்தில் உழண்டுகொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் தான். எகித்தைப்போலவேதான்.

* நடந்த நிகழ்வுகள் அனைத்தும் செய்தியாளர்களின் விடியோவிலும் பொதுமக்களின் வீடியோவிலும் பதிவு செய்ததை கோர்த்து Netflix Original documentary "Winter on fire" என 2015ல் வெளியிட்டது. இதில் இருக்கும் அனைத்துக்காட்சிகளும் களத்தில் உண்மையில் நிகழ்ந்தவை. நிஜமக்கள்!

* இது ஒரு சார்பானது எனவும் பொதுமக்களின் அராஜகத்தை சரியான முறையில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. உக்ரைனில் போர் இந்த நிகழ்வுக்கு பிறகும் ஓயவில்லை. ரஷ்ய ஆதரவு படைக்கும் உக்ரைனின் அரசுக்கும் இடையே இன்னமும் நடைபெறும் உள்நாட்டு கலவரத்தில் 2015 வரை 6000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் :(

டாகுமெண்டரியின் ட்ரைலரை இணைத்துள்ளேன். முழுபடமும் இந்த நிகழ்வை ஆதரிக்கும் எதிர்க்கும் மாற்றுக்கருத்து கட்டுரைகளும் இணையம் முழுக்க உண்டு. தேடிக்கண்டடையுங்கள். நீங்கள் எந்த சார்புநிலையில் இருந்தாலும் உலகில் இன்றைக்கும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் நிஜ உலகில் நடக்கிறது என்கிற உண்மையை உணர உதவும்.

நான் அரசியல் கட்டுரையாளன் இல்லை. இருபக்க ஆழ்ந்த அரசியல் ஆய்வுகளையும் புரிந்துகொள்ளும் அளவுக்கெல்லாம் எனக்கு அறிவும் பத்தாது. ஆனால் ஒரு மாற்றம் வேண்டும் என்கிற ஒருமித்த குரலில் சேர்ந்த எல்லாத்தரப்பு மக்களுடைய உணர்வு போலித்தனமானதில்லை என ஆழமாக நம்புகிறேன். தமிழர்களின் 7 நாள் போராட்ட உணர்வு உக்ரைனின் 93 நாள் புரட்சிக்கு கொஞ்சமும் குறைவுபட்டதில்லை என்பது என் உறுதியான எண்ணம்.

வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அந்த உணர்வுகளை தத்தம் சார்புநிலைக்காகவும் அரசியல் விளையாட்டுகளுக்காகவும் கேவலப்படுத்தி பேசிக்கொள்வது உலகின் ஏனையோர் முன் நம்மைநாமே சிறுமைப்படுத்திக்கொள்ளும் செயல் :(

சனி, டிசம்பர் 31, 2016

பெரீயம்மா

பெரீயம்மா என்னை முதன்முதலில் கிணத்துக்குள் தூக்கிப்போட்டபோது  எனக்கு பதினோரு வயது. திரும்பி நில்லுடா சுரபுட்டையை முதுகுல கட்டிவிடறேன்னு சொன்னதை நம்பி வாயெல்லாம் பல்லாக தண்ணீரில் இருந்து பத்தடிக்கு மேலிருக்கும் பம்ப்பு செட்டு மேடையில் நின்றிருந்தேன். எல்லா பயகளும் ஏற்கனவே உள்ளே குதித்து கும்மாளமிட ஆரம்பிச்சிருந்ததும் முந்தின நாள் இதே சுரபுட்டையை கட்டிக்கொண்டு நாளெல்லாம் கடைசிப்படியை இறுகப் பிடித்துக்கொண்டு காலை உதைத்து பழகிக்கொண்டிருந்ததும் சேர்த்து உடம்பில் ஒரு கிளுகிளுப்பு கூடிய விரைப்பு ஏறி எப்படா தண்ணியை தொடுவோம்னு எனக்கும் உந்திக்கொண்டே இருந்தது. அப்படியே கிணற்றின் கடைசி படிவரைக்கும் போய் தண்ணில கால் விட்டாப்ல ஒக்காந்துக்கிடலாங்கற நினைப்பில் தான் இருந்தேன். ஆனால் ஒரே ஒரு நொடி காற்றில் கைகால்களை துளாவியது நினைவிருக்கிறது. அப்பறம் யம்மேன்னு தொண்டை கமற கத்தியது. கத்தி முடிக்குமுன்னே பப்பரப்பேனு விழுந்தது, வெயிலின் கதிர்கள் பாய்ச்சிய கிணற்றின் அடர்பாசி கொடுத்த கரும்பச்சை வெளுப்பு வெளிச்சத்தில் மூக்கில் வாயில் தண்ணீரேற உள்ளாக்க அஞ்சடி போய் மேல வந்தது, கண்களுக்கு முன் கலங்கிய உருவமாய் கிணறும் வானமும் தெரிந்தது,  அய்யோம்மா அய்யோம்மான்னு கத்திக்கிட்டே பெரீம்மாவும் மித்த பயகளும் பார்க்கப்பார்க்க திரும்பவும் உள்ளே போனது, தத்தளிச்சு திரும்பவும் மேல வந்து வாயில் இருந்த தண்ணீரை துப்பி விழுங்கி கையைக்காலை எல்லாப்பக்கமும் வீசியது, முடியாமல் வீச்சமேறிய தண்ணீரை எக்களித்து மூக்கில் ஏற்றி ஒழுகலாக திணறியது, சில நிமிட போராட்டத்தில் தண்ணிக்குள் போகாமல் காலால் அடித்துக்கொண்டே மிதந்து கைகளை படிக்கட்டு நோக்கி துழாவியது, படியைத்தொட்ட நொடியில் ஆங்காரமாய் மீண்டும் யம்மான்னு கத்திக்கொண்டே உடும்புப்பிடியாய் பிடித்தது, கீழ்படி வயிற்றில் ரத்தம்வர  சிராய்க்க முட்டியை தேய்த்து படிமேல் வந்தமர்ந்தது, அங்கனயே கிணற்றின் சுவரோடு ஒட்டிக்கொண்டு நடுங்கிக்கொண்டே அரைமணி அழுது தீர்த்தது என்று அத்தனையும் இதுவரைக்கும் மறக்கவில்லை. பயக அத்தனை பேரும் யேய்ய்ய் பயந்தாங்கொள்ளினு கொக்காணிகாட்டி சிரிக்க நான் மறுபடியும் பெரீயம்மா தூக்கிப்போட்டுடுமோன்னு பயந்துபயந்து மூக்கில் அழுகைச்சள்ளை ஒழுக மேலே வந்தால் பம்ப்புசெட்டு மேட்டினை ஒட்டிப்போகும் தண்ணீர்த்தொட்டியில் துணிகளை அலசி அடித்துக்கொண்டிருந்த பெரீம்மா ஒருமுறை என்னை  தன் வழக்கமான முறைப்பில் பார்த்து "அம்புட்டுதான் நீச்சலு... இனி ஒனக்கு ஆயிசுக்கும் மறக்காது போடா..."ன்னுச்சு. 

அழுகையெல்லாம் ஓய்ந்துபோய் கொஞ்சங்கொஞ்சமாய் மறுபடியும் படியை பிடிச்சு நீந்தி, அப்பறம் படியைவிட்டு நகர்ந்து, அப்பறம் ரெண்டு படில இருந்து குதிச்சு, அப்பறம் இருவத்தஞ்சு எண்ணறவரைக்கும் முங்குநீச்சலில் மூச்சுப்பிடிக்கவெல்லாம் பழகி முடிக்கையில் அந்த முழாண்டு லீவு முடிஞ்சே போச்சு. ஆனால் எல்லா நாளும் கிணத்துக்கு போனாலும் திரும்பவும் பெரீயம்மா கைலமட்டும் மாட்டிறக்கூடாதுன்னு ஜாக்கிரதையா வளைய வந்தது நிஜம். நானாய் பம்ப்புசெட்டு மேட்டில் இருந்து குதித்த ஒரு நன்னாளில் "சுரபுட்டையும் கெழவம்புடுக்கும் ஒன்னு... தொங்குமேகண்டி ஒன்னுத்துக்கும் வேலைக்காவது பார்த்துக்க..."ன்னு சொல்லிவிட்டு அதும்பாட்டுக்கு பாத்தி மடைமாத்த போனது அந்த உடம்புசதை இறுகிய கைகால்களில் வெய்யக்கறுப்பு ஏறிய சுருட்டைமுடியை ஒத்தைகோடாலியாய் இறுக்கிக்கட்டிய பெரீயம்மா.

பெரீயம்மாவுக்கு கூடப்பொறந்தவங்க நாலு பேரு. ரெண்டாவது எங்கம்மா. மூனாவதும் நாலாவதும் என் சித்திங்க. அஞ்சாவது எங்க மாமா. எங்க பெரீம்மாவும் சின்ன சித்தியும் எங்க தாத்தா சாடை. மித்தவிங்கலெல்லாம் எந்த தாத்தாமாதிரி இல்லாததால எங்க பாட்டிமாதிரின்னு நானே நினைச்சுக்கிட்டது உண்டு. எம்பாட்டியை நான் பார்த்ததில்லை. ஏன் என் அம்மாவுக்கே அவங்கம்மா பத்தின மங்கலான நினைவு தான். ஆறாவது பிரசவத்துல பையனுக்கு அப்பறம் எதுக்கு இன்னொன்னுன்னு யாரோ பேச்சுவாக்குல கொளப்பிவிட்டதை நம்பி அஞ்சாவது மாசத்துல குச்சியவிட்டு கலைச்சதுல கலைஞ்சது அந்த குஞ்சுசுரு மட்டுமல்ல. எங்க பாட்டியுங்கூட. ரத்தமா ரெண்டுநாளைக்கு வழிஞ்சு வழிஞ்சு செத்துப்போச்சு எங்க பாட்டி. தாத்தாக்கு பாட்டின்னா அவ்வளவு உசிரு. பாட்டிய இப்படி மனுசம்பொறப்புல விளையாடப்போயி கையவிட்டுட்டமேன்னு மனுசன் தீராத குற்றவுணர்ச்சிக்கு ஆளாய்ட்டாப்ல. சொல்லிச்சொல்லி மருவிட்டே இருக்கும் தாத்தா. அதும் நினைவில் வைச்சுக்க பாட்டிக்குன்னு போட்டோல்லாம் கூட கிடையாது.  பாட்டி திருப்பதிக்கு காசு சேர்க்கும் பித்தளை சொம்புதான் அப்பறம் வீட்டு சாமியாகிருச்சு. வருசத்துக்கு ஒருக்கா புரட்டாசிக்கு அதை வெளியிலெடுத்து சுத்தி மூனு நாமம் போட்டு குங்குமத்துல நடுக்கோடு இழுத்து சொம்பு வாயில வெத்தலைக சுத்தி மேல முடிபிக்காத தேங்கா வைச்சு பூரணகும்பமாட்டம் ஆக்கி கும்பிட்டு அதுக்குள்ள ஏழுமலையான் பயணப்படி காசைப்போட்டு காவித்துணிய இறுக்கிக்கட்டி திரும்ப அதை எடுத்து பொட்டில பூட்டறது தாத்தாவின் வருடாந்திர சாங்கியம். அந்த சொம்பு பாட்டி கொண்டு வந்ததால யாரையும் இந்த வேலைய செய்ய விடமாட்டாப்ல.

இதுமட்டும் வைச்சுத்தான் தாத்தா பாட்டி நினைப்புல இருந்தாருன்னு சொல்லிட முடியாது. கட்டிவைச்சதும் கட்டுனதும்னு ஒரே நேரத்துல ரெண்டு சம்சாரங்ககூட வாழறது எல்லாம் அன்னிக்கு சாதாரணம். ஏன் கூட்டிக்கறதுங்கூட உண்டு. ஊருக்கு பெரிய மனுசன்னா பேச்சே கிடையாது. ஆனா தாத்தாவுக்கு எது ஆறா ரணமாக மனசுல உழுந்துச்சுன்னு யாருக்கும் தெரியலை. அதுபத்தியும் பேசமாட்டாப்ல. அதுக்கப்பறம் அவரு வேற கல்யாணம் செஞ்சுக்கலை. அஞ்சு புள்ளைங்களை வைச்சுக்கிட்டு எப்படியா சமாளிப்ப ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு ஊட்டை நிமுத்தற வழியப்பாருன்னு நிறையப்பேரு கெஞ்சிப்பார்த்தும் தாத்தா மசியல. எங்களை எங்களுக்கு பார்த்துக்கத்தெரியும் போங்கடேன்னு எல்லாத்தையும் ஒதுக்கிட்டாரு.

தன் அம்மாவை இழக்கையில் பெரீயம்மாவுக்கு வயசு பதிமூன்று. வீட்டுக்கு பெரிய பொம்பளை. தாத்தா எதுவும் இப்படி இருக்கனும்னு சொல்லிக்கொடுக்கல. ஆனால் அம்மா சொல்லிக்கொடுத்ததுன்னு பெரீம்மாவே பொறுப்பை எடுத்துக்கிச்சு. சோறு பொங்கும். கொழம்பு வைக்கும். பால் பீச்சி சொசைட்டிக்கு ஊத்தும். களத்து மேட்டு வேலைக்கு தாத்தனோட சேர்ந்துக்கும். மாட்டை பத்திக்கிட்டு புல்லுவெட்ட போகும். அவரக்கொட்டையும் கத்தரிக்காயும் வெள்ளாமை வந்தா பறிக்கும். தேங்கா லோடு எண்ணும். என்னென்ன வேலை வீட்டைச்சார்ந்து இருந்துச்சோ எல்லாம் செய்யும் அந்த வயசுல. என்ன பள்ளிக்கூடம் போறதை அன்னைக்கு ஆறாப்போட நிறுத்திடுச்சு. எங்கம்மா நாலாப்பு. வீட்டு ஒத்தாசைக்கு எங்கம்மாவும் நாலாப்போட ஹால்ட்டு. பெரிமாவுக்காவது வாசிக்கத்தெரியும். எங்கம்மாக்கு தமிழ்ல தன் பெயரை ஓவியமாட்டம் எழுதத்தான் தெரியும். நூறுவரைக்கும் எண்ணுவாங்க. இது தெரிஞ்சுதான் பெரீயம்மாவே அம்மாவை வீட்டுவேலைக்குன்னு நிறுத்தியிருக்கனும். மத்த ரெண்டு சித்திகளும் எட்டாவது பத்தாவது வரைக்கும் தக்கிமுக்கி வந்தாங்க. கடைசி தாய்மாமன் பியூசியோட கும்பிடு. அப்பறமென்ன செய்யும் விவசாய பெருங்குடிக?
எனக்கு விவரம் வந்த வயதில் பெரீயம்மாவின் செயல்களையும் உடல்மொழியைம் பார்த்து அதிசயப்பதும் ஆச்சரியப்படுவதும் தினப்படி வேலையில்  ஒன்றாயிருந்தது. பெரீம்மா சிரிச்சு நான் பார்த்ததில்லை. முகம் இறுகிப்போய்  கடுகடுவென இருக்கும். ஒரு நொடியில் மொத்தக்கோவத்தையும் மேல கொட்டிடறாப்ல. சாதா பேச்சையே கத்தித்தான் பேசும். ஒரு சிறுமி வீட்டைச் சுமக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்கையில் அதுவாகவே இப்படி இருந்தாத்தான் எல்லாம் கட்டுக்குள்ள பேச்சுக்குள்ள இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இப்படி ஆயிருச்சு பெரீம்மான்னு நான் நினைச்சுக்குவேன். அதும் பேச்சுக்கு மறுபேச்சு தாத்தாக்கிட்டு இருந்து ஒரு வார்த்தை வராது. தாம் பெத்த பொண்ணை தாரத்தை இழந்ததுக்கப்பறம் வீட்டைக்காக்க வந்த தாயாக நினைத்திருக்க வேண்டும். அதிகார நிலை அல்ல. பொறுப்பை சுமப்பதில் வரும் கந்தாயங்கள், அலுப்புகள், அம்மா இல்லாத வீட்டுலன்னு ஒரு பயலும் பேசிடக்கூடாதுங்கற தற்காப்பு, தனக்குப்பின்னால் இருக்கும் நாலு பசங்க சிதறிடக்கூடாதுன்னு இருக்கும் பயம் எல்லாம் சேர்ந்து தினந்தினம் அந்த சிறுமியை கடுமை நிறைந்த பெரிய மனுசியாக  மாற்றியிருக்கக்கூடும். கண்டிப்புன்னா காட்டுத்தனமான முரட்டுத்தனமான வெளிப்பாடல்ல. பொறுப்புத்தனம் நிறைந்த கட்டன்ரைட்டு பேச்சு. ஒரு முறை தான் சொல்லிப்பார்க்கும். கேக்கலைன்னா கரண்டிய எடுத்துரும் அடி பின்ன. அழிச்சாட்டியம் செய்யறது அடம்புடிக்கறது எல்லாமும் நாங்க செய்யாமலில்லை. ஆனா வீம்பாக மாறும் அந்த நொடியில் அந்த பொளேர் முதுகுல விழ ஆரம்பிச்சிருக்கும்.

பெரீயம்மா பேரு சொல்லவேல்ல பாருங்க. மாரி. மாரியம்மாதான் சுருக்க கூப்டுக்கூப்டு மாரியோட நின்னுருச்சு. மாரி கைல திங்கறதுக்கு கோயில்ல உண்டக்கட்டி வாங்கலாம்யா,  அவரக்கொட்டைய கூட இலைக்கு இத்தனின்னு எண்ணியெண்ணி வைக்கும் மகராசின்னு வந்துபோகும் சொந்தங்க விளையாட்டா நொடிச்சுக்குவதுண்டு. அதென்னன்னா பெருசுகளோ சிறுசுகளோ பத்துப்பேரு சாப்புட உக்கார்ந்தா இலைக்கு இவ்வளவுன்னு அளந்து வைக்கும். குறைச்ச அளவில்லை. எல்லா இலைக்கும் சமமா. பெருசுகளுக்கு ஒரு களியுருண்டை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் காயோ மாம்பழ கீத்தோ எல்லா இலைக்கும் ஈக்கோல் தான். குறைச்சல் கூட்டி பேச்சே வரக்கூடாது. பாவம்யா இது. அந்த வயசுல பொம்பளையில்லாத வீட்டுல தானே சமைச்சு நாலு பசங்களுக்கும் அப்பனுக்கும் பரிமாறி மேலவந்த ஆளு. அன்னிக்கு இருக்கறதை வழிச்சுப்போட்டாலும் எல்லாத்துக்கும் ஒரே அளவுதான் இருக்கறனும்னு பழகிப்பழகி இன்னைக்கு வரைக்கும் சட்டிய வழிச்சு கொட்டுவதி அம்புட்டுப்பேருக்கும் அளவு சரியா இருக்காங்கற கண்ணு நின்னுக்கிச்சுன்னு பொரணியா பேசிக்குவாங்க. நாங்கெல்லாம் வந்த பிறகு ரெண்டு வயசு தமிழுல இருந்து பெரியவ செல்லிக்கா வரைக்கும் பதினஞ்சு உருப்படிகளாச்சும் தேறுவோம். பெரீயம்மா வீட்டுல இருந்தம்னா இந்த கம்மூனிஸ்ட்டு பகிர்தலில் கிடைக்கும் அப்பளமோ ஒப்போட்டோ மாப்பழமோ நிப்போட்டலோ தவிர்க்கவே முடியாது. புத்தில நின்னுருச்சு மாரிக்கு.

பெரீயம்மாவுக்கு சத்தாமாத்தான் பேசத்தெரியும் மூஞ்சி எப்பப்பாரு கடுகலாகவே இருக்கும்னு இருந்தாலும் அதைக்கொண்டு பெரீம்மா முசுடுன்னு மட்டும் சொல்லிற முடியாது. அதுவிடும் ராவுடிக எல்லாம் மொத்தமுழுசா வெளிப்படும் இடம் கிணத்தடிதான். கோடை விடுமுறையில் ஒரு ஊருல ஒரு மாசமெல்லாம் நாங்க டேரா போடறது சர்வ சகஜம். இன்னைக்கு மாதிரியெல்லாம் நாசூக்கா போயிட்டு நேக்கா சொல்லிட்டு வர்ற ஒறம்பரை ஜனமல்ல அன்னைக்கு. முழாண்டு லீவுல எப்படியும் பெரீயம்மா வீட்டுல ஒரு மாசமாச்சும் தங்கமாட்டோம், வாழ்வோம். பெரீயம்மா ஊடுண்ணா வேற வீடல்ல . தாத்தா வீடேதான். எங்கம்மாவும் சித்திகளும் பக்கத்து பக்கத்து சொந்தங்களுக்கு கல்யாணங்கட்டி போக பெரீம்மா மட்டும் எப்படி உள்ளூருலயே ஆளைப்புடிச்சதுன்னு ஆச்சரியம். எங்க பெரீப்பாரு ரெண்டு தெரு தள்ளித்தான். முறைதான். எப்படித்தான் எங்க சிரிக்காமூஞ்சி பெரீயம்மாவை அவருக்கு புடிச்சதோ கட்டுனா இவதான்னுட்டாப்பல. எங்கம்மாக்கு முன்ன பலபேரு கேட்டுவந்தும் பெரீம்மா எதுக்கும் ஒத்துக்கல. ஊரையும் கூடப்பொறந்ததுங்களையும் விட்டு வரமாட்டேன்னு அடம். வீட்டுக்கு பொறுப்பான பெரிய பொம்பளையாச்சா. தாத்தாவும் எப்படிடா இந்த மூத்தவளை தாட்டிடுடறதுன்னு போராடி ஓய்ஞ்சிட்டாப்ல. கடைசியா சிக்குனவருதான் எங்க உள்ளூரு பெரீப்பாரு. மாரி போட்டது ஒரே கண்டீசன். கல்யாணத்துக்கு அப்பறமும் எங்கூட்டுல தான் குடித்தனம் செய்வேன். எனக்கு பொறுப்பு இருக்கு. ஒத்துக்கிட்டு சம்சாரிக்க தன் வீட்டுக்கு வந்துறனும்னு. தாத்தாக்கே கோவம். எந்தக் குடியானவ ஆம்பளை இதுக்கு ஒத்துக்குவான்னு. ஆனா ஆசைல நின்ன பெரீப்பா ஒத்துக்கிட்டு கட்டிக்கிட்டாப்ல. அப்பறம் பெரீயம்மா அஞ்சாளோட ஆறாவது ஆளா பெரீப்பாவுக்கும் பொங்கிப்போட்டு ஆளாக்கி தானும் மூனு புள்ளை பெத்து குடும்பம் நிமித்துனது தனிக்கதை. 

பெரீயம்மாவுக்கு மூத்தது பொண்ணு. அப்பறம் எட்டு வருசங்கழிச்சு ரெண்டாவது பையன். அடுத்தது பொண்ணு. பையன் எனக்கு அண்ணன். சண்முகம். சவலைப்பையன். ஆறு வயசுக்கும் நல்லா இருந்தவனுக்கு மேல போலியோ வந்து இடது கால் சுணங்கிருச்சு. ஆளு வளர வளர சூம்பிப்போயி ஒரு காலு மட்டுக்கும் நேரா நின்னான்னாக்க தனியா காத்துல ஆடும். ஆளு மூளைல கெட்டி. டைலர் கடையிலயும் ரேடியோ கடையிலயும் ஒக்காந்து ஒக்காந்து பொழுதை ஓட்டி தனியா ரேடியோ ஸ்பீக்கரு ரிப்பேரு ஒயரு பூட்டறது வரைக்கும் கத்துக்கும் ஆர்வம் இருந்துச்சு. தனிமைக்கு அதான் பொழுதுபோக்குன்னு இதை பரப்பி ஏதையாச்சும் நோண்டிக்கிட்டே இருப்பான்.


வெளையாட்டுலயும் ஒரு காலை தேக்கிக்கிட்டே மசபந்து ஆடுவான். பாறைமேல பேலறதுக்கும் ஏறி வருவான். ஒத்தைக்காலுல சைக்கிள் மிதிப்பான். கில்லிதாண்டல் அப்பீட்டு ஏமாத்தும் சண்டைல சட்டை கிழிய புரண்டு எழுவான். எந்த இடத்துலயும் தன்  குறையை அவன் விட்டுக்கொடுத்ததில்லை. விட்டுக் கொடுக்கச்சொல்லி பெரீம்மாவும் அவனை வளர்த்தலை. ஓப்போட்டு கூப்போட்டு ஒக்காள கெட்டசெயலில் திட்டும் சிறார்களின் விளையாட்டுகளுக்கு இடையில் வரும் வசவுகளுக்கு கூட பெரீம்மா  ஒன்னும் பெருசா கண்டுக்காது. ஆனா எவனாவது சம்முகத்தை கோவத்துல போடா மொண்டின்னு மட்டும் சொல்லிட்டான்னா செத்தான் சீதகாதி. ஒரு முறை கில்லிதாண்டலை பிடிங்கிக்கொண்டு மேலவீட்டு செந்திலை வீதிவீதியாக தொரத்திப்பிடுச்சு அவன் வீட்டு வாசல்லயே வைச்சு முட்டிய பேத்துடுச்சு. பெருஞ்சண்டை. எஞ்சாண்டக்கூடிக்கக்கூட வக்கில்லாத நாயிங்களா.. எம்புள்ளைய எவனாவது மொண்டின்னீங்க மொகர இருக்காதுன்னு... ரெண்டு நாளாச்சு பஞ்சாயத்து அமுங்க. அதுக்கப்பறம் ஒரு பயலுக்கும் வாயத்திறந்து சம்முவத்தை சொல்லறதுக்கு தில்லு கட்டலை. அந்தப்பய என்னதான் கில்லி அளக்கறதுல அழும்பு செஞ்சாலும். அம்மாக்காரி அடிக்கு மூடிக்கிட்டு இருந்துக்கலாம்னு ஏமாத்துமொண்டின்னு வாயிக்குள்ளயே மொனவிக்குவானுக. 

காலை இழுத்துக்கிட்டேதான் எட்டாவது வரைக்கும் படிச்சான் எங்கண்ணன். மேல முடியல. முடியாமப்போனதுக்கு நாங்க செஞ்ச ஒரு பாவச்செயலும் ஒரு காரணம்.  பயக எல்லாம் கூட்டா சேர்ந்துக்கிட்டு கிடைச்ச காசை பெறக்கிக்கிட்டு மதியக்காட்சி சினிமாக்கு போலாம்னு பதினோரு மணி டிகேஸ் பஸ்சு புடிச்சு மாரண்டள்ளி போயிட்டம். விஜயகாந்து கூலிக்காரன் படம். டிக்கெட்டு காசெல்லாம் போக மிச்சக்காசு பஸ்ஸுக்கு கரெட்டாத்தான் இருந்துச்சு. ஆனா தீனி திங்கற ஆசைல கொடலும் பன்னும் போண்டாவுமா இடைவேளைல தின்னுட்டு காசைக் கரைச்சுட்டம். படம் முடிஞ்சு எப்படியாச்சும் ஊரு போயிறலாம்னு. க்ளைமாக்ஸ்ல வில்லன் தங்கமெல்லாம் உருகி மேல கொட்டி வெந்து சாவற சீனை சிலாகிச்சு வாயப் பொளந்தபடிக்கு பேசிக்கிட்டே ஊருக்கு பத்துமைலு நடையக்கட்டிடலாம்னா சம்முகத்தை என்ன செய்யறதுன்னு கொழப்பம். இருக்கற ரூவாய்க்கு நீ மட்டும் பஸ்ஸை புடிச்சு போடான்னா முடியவே முடியாதுன்னுட்டான். அப்பறம் என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்த காசுக்கு நாலு மாங்கா கீத்து போட்டு மொளகப்பொடி ரொப்பி உலுக்கி வாங்கிக்கிட்டு ஆளுக்கு நாலு கீத்துன்னு கடிச்சுக்கிட்டே ஊரைப்பார்த்து நடந்தோம். 

எவனுக்கு தெம்பு சம்முவத்தை முழுசா உப்புமூட்டை தூக்கிவர? ஆளுக்கு கொஞ்ச தூரம்னு தாட்டுனாலும் பத்துமைலு நடந்தா நட போயிக்கிட்டே இருக்கு. சாயந்தர இருட்டல் வேற. ரோட்டுமேல சுத்துன்னு ஊருக்குள்ள ஊரா தோப்புக்குள்ள தோப்பான்னு குத்துமதிப்பு வழிக்கு ராயக்குட்டு மலைமுகட்டு மேல்பாறைதான் வழின்னு நடந்தோம். தூக்காத நேரத்துல சம்முவமே காலை தேக்கித்தேக்கி வந்துட்டுதான் இருந்தான். வீடு வர முழுசா இருட்டிருச்சு. சினிமாக்கு வந்த பசங்க ரிடர்ன் டிக்கேஸ்ல ஏறலைன்னு டிரைவரு சொன்னதும் பெரீம்மாவுக்கு கோவம் மலைக்கேறிடுச்சு. வீடு வந்து சேர்ந்தோடன செம்ம ஏத்து எல்லாத்துக்கும். ஆளாளுக்கு சொல்வெம்ம தாங்க செதறிட்டானுக. ரசஞ்சோறை தின்னுப்போட்டு கமுக்கமா பார்த்த படத்தை மறுக்கா குசுகுசுத்தமேனிக்கு நடுச்சாமம் வரைக்கும் அடி விழுமாங்கற பயத்துலயே தூங்கிட்டம். அன்னைக்கு வரைக்கும் தான் நான் சம்முகத்தை நல்ல உடல்நிலையில் பார்த்தது. இந்த நடையில் காச்சல் வந்து விழுந்தவன்தான். ரெண்டு மாசம் அடிச்செடுத்ததுல ஆளு பாதிக்குப் பாதி காலி. ஒரு காலை தேக்கிட்டு நடந்தவனுக்கு அதுக்கப்பறம் ஒரு நிமிசத்துக்கு மேல நிக்க முடியாம போயிடுச்சு. காலுல தேக்கி நடந்தவன் இடுப்புல தேக்கி நகர ஆரம்பிச்சான். பெரீம்மா அதைச்சொல்லி யாரையும் திட்டலை. விதின்னு எடுத்துக்கிச்சோ இல்ல பாவம் வயசுப்பசங்க வெளையாட்டுல வந்த வெனைன்னு விட்டுடுச்சோ தெரியல. சம்முவம் எல்லா வெளிவேலைகளும் குறைஞ்சு போய் தாழ்வாரமே கதின்னு ஆயிட்டான் ஏதாச்சும் பழைய ரேடியோவை நோண்டுன படிக்கு. எங்களுக்கெல்லாம் குத்தவுணர்ச்சி கொன்னு தள்ளுனாலும் என்ன செய்யறதுன்னு தெரியல. அவனை ஒரு இடத்துல ஒக்காரவைச்சுக்கிட்டே கில்லிதாண்டலையும் பம்பரத்தையும் மசபந்தையும் வெளையாடத்தான் செஞ்சோம். கெட்டவார்த்த சண்டைகளை குறைச்சுக்கிட்ட மேனிக்கு.

பெரீயம்மா கிணத்தடி ராவுடிக சொன்னேன் இல்லீங்களா... முழுசா முடிக்கல பாருங்க. அன்னைக்கு எல்லா வெளையாட்டுக்கும் பெரிய வெளையாட்டு நீச்சல்தான் எங்களுக்கு. தாத்தாவின் கிணறு அகலம். பத்தாளு ஒசரம் ஆழமும் கூட. சுத்திலயும் கல்லுவைச்சு கட்டுனது. நீட்டுன கல்லுகளே படிங்க. வட்டமா ஒரு சுத்துல தண்ணிய தொடும். நடுமட்டத்துல மோட்டர்மேடை. கல்லுசெவுரு மேல சிமிட்டி போட்ட மோட்டரு ரூம்தான். மரக்கதவு இரும்படிச்சு பூட்டுவைச்சு தாள் தொங்கும். பின்ன இருக்கறதுலயே வெல ஒசந்தது அன்னைக்கு விவசாயிக்கு மோட்டருதானே? அஞ்சாஸ்பவரு மூனுபேஸ் கரண்டு மோட்டரு வர்றதுக்கு முன்னாடில்லாம் டீசலு மோட்டர் தான். ஓராளு தம்கட்டி கம்பிக் கைப்பிடிய சொருகி நாலுசுத்து சுத்தனும். புடுக்புடுக்குன்னு பொகைகெளம்பி மோட்டரு ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடி பைப்புல நாலுகொடம் தண்ணி ஊத்தனும் செல்ப்பு எடுக்க. வாரத்துக்கு ரெண்டுமுறை இரைக்கனும் பாசனத்துக்கு. பஞ்சாயத்துபோர்டு பிரசிடெண்டு ரைஸ்மில் கணேசர் கிணறு தான் இருக்கறதுல அழகானது. குதியாட்டம் போட வாகானது. ஆனால் அதுல அடிக்கடி இப்படி ஆட்டம்போட விடமாட்டாப்ல. குடிக்கற தண்ணில என்னங்கடா குதிக்கறீங்கன்னு. ஆனா தாத்தா வேறமாதிரி. பசங்க நீஞ்சறதை தடுக்கமாட்டாப்ல. பாம்பும் நண்டும் நீஞ்சற கெணத்துல மனுசப்பய அழுக்குத்தான் வெசமாகிருமா.. எல்லாம் மீனு தின்னுரும் போடாங்க திக்கிலான்றுவாப்ல. பெரீம்மாவும் ஒன்னும் சொல்லாது. கிணற்றுமேட்டில் இருக்கும் மேல் தொட்டி பம்புசெட்டு தண்ணி விழுகற இடம் குடிதண்ணி எடுக்க. கீழாக்க வாய்க்காலை ஒட்டி இருக்கும் கல்லுக துணி தொவைக்க. கால்வாய் நேராப்போய் வலக்கைபக்கம் மடைதிரும்பற  இடத்துல புதரை ஒட்டி ஒரு குழித்தொட்டியும் ரெண்டு ஓட்டைப்பானைகளும் கால் கழுவிக்க இருக்கும். 

பெரீயம்மா தான் சந்தோசமாக இருக்கும் வீட்டின் ஒரு பகுதியாக கிணத்தை நினைச்சுக்குதுனு எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன். ஏனெனில் கிணற்றோடு அதன் உறவு அலாதியானது. அவங்கம்மாவோடு வந்து குளித்ததில் துவைத்ததில் குடிக்க நீர் எடுத்ததில் இருந்து அதை ஒரு சொந்தமாகவே நினைச்சு வளர்ந்திருக்கும் போல. தினத்துக்கும் ஒருக்கா எப்படியாச்சும் எதுக்காச்சும் கிணத்துக்கு வந்துரும். தொலைச்சுப்போட்ட அம்மாவின் அருகாமைய தேடக்கூட இப்படி கிணற்றோடு படு அன்னியோனியமாக இருக்கோன்னு சொல்லிக்குவேன். கெணத்துக்கு போலாம் வாங்கடான்னு ஒரு மெரட்டலில்தான் தான் எங்களை கூப்பிடும். என்னவோ அது சொல்லித்தான் நாங்கெல்லாம் கெணத்துக்கு போறாப்ல காட்டிக்குவோம், அதுக்கு முன்னமேயே ரெண்டு மணிநேரம் அதில் ஊறிவந்து களிய மதியத்துக்கு மொச்சக்கொட்டை கொழம்போட தின்னிருந்தாலும். மதியத்துக்கு மேல சமையலெல்லாம் ஏறக்கட்டுனதுக்கு அப்பறம் துணிகளை எடுத்துக்கிட்டு கிளம்பும். நாங்கெல்லாம் குதிக்க ஆரம்பிச்சு முங்குநீச்சல் வெளையாட்டுல முசுவா இருக்கயில மெதுவா துணிகளை கிணத்துமேட்டுல துவைச்சு காயப்போட்டுட்டு ஊய்ன்னு ஒரு சவுண்டு விடும். அந்த சவுண்டு கேக்கையில நாங்க வெளையாட்டை ஓரங்கட்டிட்டு படியாண்ட ஒதுங்கிருவோம். எங்க முகமெல்லாம் சிரிப்பு பரவும். 

அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு எங்க எல்லாருக்குமே அத்துப்படி. இருந்தாலும் புதுசாப்பாக்கற வித்தைங்கற மாதிரிக்கு புல்லரிக்க தயாராகிருவோம். மயில் கத்தும் அகவைச்சத்தம் நினைவில் இருக்கா உங்களுக்கு? அந்த சவுண்டை கொடுத்தபடிக்கு மேலிருந்து திபுன்னு ஓடியாந்து கிணத்து மேட்டுல இருந்து அம்பதடி உசரத்துக்கு புடவைய காலுக்கு வாரிச்சுருட்டுனமேனிக்கு பப்பரன்னு பறந்து வந்து கிணத்துல விழும் பெரீம்மா. அதுக்கு பாம் டைவுன்னே பேரு வைச்சிருந்தோம். மொத்த கிணத்துக்கும் தண்ணி இரைபடும். ரெண்டுபடிக்கு தண்ணி அலையா கெளம்பும். படியிடுக்கில் ஒதுங்கி மறைஞ்சிருக்கும் தண்ணிப்பாம்பு தவளையெல்லாம் அலறியடிச்சுக்கிட்டு மேலும் உள்ளாக்க பம்பிக்கும்னு சிரிப்போம். அலையடங்க ரெண்டு நிமிசம் ஆகும். ஆனா குதிச்ச பெரீம்மா ஆளைக்காணாது, ஆளு வருமா அடிலயே தங்கிருச்சான்னு தண்ணியவே உத்துப்பார்த்துக்கிட்டு இருக்கையில  அடிவரைக்கும் போய் சேத்தை அள்ளிக்கிட்டு பேபேன்னு கத்திக்கிட்டு மேலவந்து எங்க மேல வீசும். குடுகுடுன்னு படில ஏறி மேல ஓடும். குறுக்கால படில ஒதுங்கி நிக்கறவன் பறந்து தண்ணில விழுகறதை ஆண்டவனாலும் தடுக்க ஏலாது, தலைகீழ் டைவு, சம்மர்சால்ட்டு, நெட்டுக்குத்தலுன்னு கத்திக்கிட்டு நாலஞ்சு குதில மொத்தக்கெணத்தையும் கலக்கி விட்டுட்டுதான் மேல போகும். பத்துபைசா தூக்கிப்போட்டு இருவத்தியஞ்சு எண்ணிட்டு உள்ள குதிச்சு அந்த காசைப் புடிச்சு மேலவர ஜித்தனுங்களுக்கே பெரீம்மாவின் இந்த பேயாட்ட குதியலை கண்டு சித்தம் கலங்கிரும். அதென்னவோ உள்ளக்கெடக்கற சந்தோசத்தை கெணத்துக்கு மட்டும் அள்ளியள்ளி பிரியமா கொடுத்துட்டுப்போகும் அந்த கடுமூஞ்சு பெரீம்மா.

சம்முவத்தின் அக்காளுக்கு மாப்ளைபார்த்து வந்தாங்க நல்லாம்பட்டில இருந்து. எங்க தாத்தனோட தோஸ்துதான் பையனோன தாத்தா. பெரிய குழப்படி பேச்செல்லாம் இல்லை, ரெண்டு சைடும் ஒன்னுக்கொண்டு அறிஞ்சு தெரிஞ்சு பண்டிகைகளும் விசேசங்களும் நடத்துன சொந்தங்க தான். ஒன்னுவிட்ட சொந்தம் மாதிரி. எங்க அக்காளுக்கும் மாப்ளை புடிச்சுத்தான் இருந்துச்சு. விவசாயம் இருந்தாலும் பேங்க் லோனுல ஒரு மாசே பர்கூசன் ட்ராக்டரு வாங்கி சுத்துவட்டார காடுகளுக்கு நடை அடிச்சுக்கிட்டு இருந்தாப்ல மாப்ள. இதுக்கு முன்ன சில விசேசங்களுக்கு அந்த ட்ராக்டர் கட்டுன ட்ரைலருல ராயக்கோட்டை வரைக்குமெல்லாம் போய்வந்திருக்கோம். மாமன் வண்டியோட்டி பேமஸ் ஆனதுல அக்காளுக்கும் ரொம்ப பிடிச்சுத்தான் இருந்துச்சு. அவங்களும் பெரீம்மாவின் குணம் தெரிஞ்ச மக்கா தான். கிண்டலா பேசிக்கிட்டாலும் அந்த தாத்தனுக்கு நின்னுகாட்டுன பெரீம்மா மேல பெரிய மரியாதை இருந்தது. கோவக்காரின்னாலும் வேலக்காரிப்பா எஞ்சேக்காளி பொண்ணும்பாப்ல சபைல. 

நிச்சயம் நடந்தது எங்க பெரீம்மா ஊட்டுலதான். ஏழுமலையான் துணை பேரு நாலாப்பறமும் பட்டைல நெய்த பெரிய ஜமுக்காளத்தை விரிச்சு எல்லாப்பெருசுங்களும் உங்காந்துதான் பேசுனாங்க. ஏதோ கேலி எதைப்பத்தியோ பேசப்போக மாப்ளசைடு சொந்தம் சேகரு கொஞ்சம் ஓவரா வாய விட்டாப்ல.  கல்யாணத்துக்கு அப்பறம் வயசான காலத்துல யாரு யாரைவைச்சு பாக்கறதுங்கற மொகணைப்பேச்சுல பேச்சோட எச்சா இந்த மொண்டிய வைச்சு கஞ்சித்தண்ணி கடைசிவரைக்கும் ஊத்தறதுக்கா எங்க மாப்ள இப்படி ஊருவிட்டு ஊருவந்து பட்டுச்சட்டைல ஒக்காந்திருக்காப்டின்னாப்ல. ஓரமாத்தான் திண்ணைல களஞ்சியங்க பக்கத்துல நல்ல சட்டைபோட்டு ஓக்கார்த்தி வைச்சிருந்தாங்க சம்முவத்தை.  வெள்ளாட்டுப்பேச்சுதான். எங்கன தைச்சதோ சம்முவத்துக்கு. எகிறிட்டான்.  ஒம்மாளக்கூதியானாகழுதை ஓக்கா.. நாம்பொழப்பண்டா எட்டூரு சனத்துக்கு.. நீ யாருடா எம்பொழப்பக்கேன்னான்னு பேசப்போக எல்லா மொகமும் சுருங்கிட்டு. சிரிச்சவாக்குல சொல்லுல வெசம் வைச்சு மொண்டின்னவன் நல்லவனாகிட்டான். சுயமரியாதைய காப்பாத்திக்க வார்த்தைய விட்ட விடலைப்பயல் கெட்டவனாகிட்டான். என்னக்கய்யா இது மருவாத தெரியாத  கூட்டமாட்டிருக்குன்னு ரெண்டு பெருசுக கெளப்ப எங்க மொத பையங்கல்யாணம் அபசகுணமா வேணாம் இன்னொரு நல்ல நாளைக்கு நிச்சயத்தை வைச்சிக்கலாம்னு கெளம்பிட்டாங்க ஜனம். எங்க பெரீம்மா போற யாரையும் தடுக்கலை. எதுத்து எதுவும் பேசவும் இல்லை.


வந்த மாப்ளைவூடு இப்படி கோவிச்சுக்கிட்டு போச்சுதேன்னு எங்க சைடு எல்லாருக்கும் வருத்தம்தான். சம்முவம் முன்னாடி பேசலைன்னாலும் இந்தப்பய கொஞ்சம் மானரோசம் பாக்காம சும்மா இருந்திருந்தா நல்லது நடந்திருக்கும்னு குத்தலா இல்லைன்னாலும் தாங்கலில்லாம பேசிக்கிட்டு இருந்தோம். அக்காளுக்கு முகமே செத்துப்போச்சு. ஊட்டுவேலை எல்லாமும் வழக்கம்போல செஞ்சுக்கிட்டு வளைய வந்தாலும் செத்துவெளுத்த ஒடம்பாட்டம் திரிஞ்சது எங்களுக்கே பாவமா போச்சு. நாங்களே இப்படி மருகிமருகி நின்னது சம்முத்துக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரியலை. போனாப்போறானுங்க மசுராண்டிங்கன்னு பேசி தனக்குத்தானே சமாதானம் பேசிக்கிட்டு இருந்தவன் நாளாக ஆக வீட்டின் இருண்மையை நினைத்து புழுங்கியிருக்கவேண்டும். எப்படி சரிப்படுத்தறதுன்னு தெரியாம தனிமையில் குமைஞ்சிருக்கனும். இந்தக்காலை வைச்சுக்கிட்டா எட்டூருக்கு சோறுபோடப்போறம்னு வதங்கிப்போயிருக்கனும். வீட்டில் எல்லோரும் வெளிவேலையில் இருந்த ஒரு நன்பகலில் காப்பர் ஒயரை இரண்டு மடிப்பாக்கி திண்ணையில் இருந்து கைக்கெட்டும் தொலைவில் விட்டத்தில் வீசி முடிச்சிட்டு கழுத்தை நுழைத்து திண்ணையில் இருந்து காலை மடித்த எக்கிய வாகில் தொண்டை அறுபட  தொங்கிக்கொண்டிருந்தான். கால்கள் மட்டும் மடங்கிய வாகுல உடலின் எடையில் ஒரு சதமும் தாளாமல் தொங்கியபடிக்கு.

அன்னைக்கு உறைஞ்சதுதான் எங்க பெரீம்மா. பேச்சை சுத்தமா வழிச்சுப்போட்டுடுச்சு. இமைகளை விரிச்ச உத்துப்பாக்கும் பார்வைக்கு கண்கள் மாறிடுச்சு. இழவுக்கு வந்த மாப்ளையின் தாத்தன் மாலையோடு கழுவி கோடிபோட்டு நாற்காலியில் அமர்த்திவைத்திருந்த சம்முகத்திடம் வருகையில் விடுக்குன்னு எழுந்திருச்சு முன்னாடி ஓடுச்சு பெரீயம்மா. பயங்கர பெருசா சண்டைபோட்டு நியாயங்கேக்கப்போகுதுன்னு எல்லோரும் பதறிட்டோம். அந்த தாத்தனுக்கு இப்படி ஒரு இழிசெயலுக்கு தன்னூரு ஆளாகி இழவுவரைக்கும் போயிருச்சேன்னு வாயைப்பொத்திக்கிட்டு அழறார். அவருக்கு முன்னாடி நிக்குது பெரீம்மா. வாய் கோணிக்கொண்டு ஏதோ கேக்கப்பாக்குது. ஆனா வார்த்தை வரலை. ரெண்டு கையவும் யாசகமாட்டம் விரிச்சுக்கிட்டு வார்த்தைகள் இல்லாத கேவலில் ஏ...ஏ...ங்குது. அந்த தாத்தனுக்கு உள்ள ஒடைச்சிருச்சு. மன்னிச்சுக்க தாயேன்னு தப்பு செஞ்சுட்டம்னு பெரீம்மா கையப்புடிச்சுக்கிட்டு கதற்றாப்ல. பெரிம்மா கைய உதறிட்டு அஞ்சுவெரலையும் விரிச்சமானிக்கு கோணின வாயோட ஏ...ஏ...ங்குது பாவம். என்ன இருந்தாகும் இந்த சவலை மேல இவ்வளவு பாசம் ஆவாதுன்னு பேசிக்கிட்டு போய் பொதைச்சுட்டு கலைஞ்சது சனம். உள்ளாக்க ஆடிப்போன அந்த தாத்தன் இழவுகேட்டு திரும்புன அதே நாள்ல ஊர்லவைச்சு அந்த சேகரை வாழைமட்டையில் விளாரியெடுத்ததாக கேள்வி.


பெரிய மனுசன். முன்ன ஏதோ அசட்டை பேச்சுக்கோளாருன்னு விட்டவரை பெரீம்மாவின் கேக்காத அந்த  உன்ன நம்புனனேப்பாங்கற கேள்வி குடைந்தெடுத்திருக்க வேண்டும். கெட்டது நடந்த மூனு மாசத்துக்குள்ள நல்லது நடந்தா தீட்டு கழிஞ்சிரும்னு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு கூட்டமெல்லாம் கூட்டாம எங்க தாத்தனையும் மாமனையும் கொண்டு ஏழுகுண்டு மலைக்கு கீழ முனியப்பன் சாட்சியா கல்யாணத்தை முடிச்சுட்டாரு. அக்காளை கேட்டா எல்லாம் நடக்குது? ஆனால் அக்காளுக்கு நல்லதுங்கறது எல்லாம் நடந்துச்சு அன்னைக்கு அந்த பெரிய மனுசனால.

மொத்தமா தன்னை சுருக்கிக்கிச்சு பெரீயம்மா. உள்ள இருக்கற அழுத்தம் எல்லாம் சேர்த்து வெளிவேலைல காட்டிக்கிச்சு மாரி. ஒரே நாள்ல முப்பது மூட்டை நெல்லு களத்துல இருந்து வீட்டுக்கு தூக்கிட்டுவரும். இருவது கூடை தக்காளி அறுக்கும். ஆளுக்கும் வண்டிக்கும் நிக்காம தாமாவே நாலுகூடைய ஒன்னுமேல ஒன்னு அடுக்கி ராயக்கோட்டை தக்காளி மண்டிக்கு பதினஞ்சுமைலு போயிட்டுவரும். கிடைச்ச காசுல எதையும் திங்காம ஒரே ஒரு வெத்தலை தரித்தலில் ஊருவந்து சேரும். நாலுருண்டை களி ஒரு ராவுக்கு திங்கும். பேயாட்டம் கொரட்டைல உடல் அசதில அடிச்சுப்போட்டு தூங்கும். யாருக்கும் ஒன்னும் புரியலை. எதுக்காக பெரீம்மா இப்படி விடியலுக்கு முன்ன  இருந்து  கருக்கல் தாண்டியும் ஓட்டமா ஓடுதுன்னு. ஏதோ மனத்திருப்திக்கு இப்படிக்கு செஞ்சுக்கிதுன்னும், அந்த சவலைக்கா இவ்வளவு சோகம் காக்குதுன்னும், இருந்தாலும் இவ்வளவு அழுத்தம் இந்த பொம்பளைக்கு ஆவாதுன்னும், அழுது தீத்தாலாவது வடிஞ்சிரும் இதெங்க சொட்டுத்தண்ணி விடாம அமுக்கிக்கிட்டு சுத்துதுன்னும் பேசிக்கிட்டாங்க மக்கா. எங்கம்மா மாமா யாரு கேட்டும் வாயைத்திறக்கலை பெரீயம்மா. கிணத்துமேட்டுல ஒக்காந்து பாயற தண்ணிய பார்த்தபடிக்கு வெத்தலைபோடறது ஒன்னுதான் அது இயல்பாய் செஞ்ச காரியம்.

அக்காள் மாசமாய் இருக்காங்கன்னு சேதிவந்த நாளில் எங்களுக்கு அப்படியொரு சந்தோசம். பெரீயம்மா முகத்துல வெளிச்சம். பத்தரை டிகேஸ் புடிச்சு ஒரு எட்டு அக்காவை பார்த்துட்டு வந்துரலாங்கற  முடிவுல இருந்தோம். கூப்பிட்டதுக்கு பெரீம்மா வரமாட்டேனுடுச்சு. உள்ளறைக்குப்போய் பெட்டிய திறந்து ஏழுமலையான் சொம்பை திறந்து இருந்த சில்லரையும் பணத்தையும் சுத்துன காவித்துணில முடிஞ்சுக்கிச்சு. மலையான் காசை எடுக்கக்கூடாது, மொத்தமா திருப்பதி போகையில உண்டியல்ல போட்டுக்கலான்னாப்ல மாமா, பெரீம்மா கேக்கலை. எங்களுக்கு எதுக்குன்னும் புரியலை. ஒருவேளை நல்லசேதிக்கு பெரீம்மா கோயிலுக்கு கெளம்பத்தான் ரெடியாகிடுச்சுன்னு நினைச்சோம். மாமாவும் சித்தி பசங்களும் ஒரு எட்டு அக்காவை ஊருக்கு போய் பார்த்து வந்தாங்க. 

அன்னைக்கு சாயந்தரமாகியும் பெரீயம்மா களத்துல இருந்து வீட்டுக்கு வரலை. எங்க போச்சுன்னும் யாருக்கும் தெரியலை. எந்த ரூட்டு வண்டியையும் புடிச்சாப்ல டிரைவருங்களை விசாரிச்சதுல தெரியலை. ஒருவேளை உண்டியல் காசை எடுத்துக்கிட்டு நடையாகவே ஒகேனக்கல் கோவிலுக்கோ ஏழுகுண்டு மலையடிக்கோ போயிருச்சான்னோ ஒரே சந்தேகம். ஏழுகுண்டுக்கு ஆள் அனுப்பினோம். ஒகேனக்கல் ஈபி ஆபீஸ் போர்மேனுக்கு போன்போட்டு விசாரிக்கச்சொன்னோம். எங்கத்தான் உண்டிக்காசை எடுத்துக்கிட்டு போயிருக்கும்னு குழப்பத்துல சுத்துல ஆள்விட்டும் போயும் தேடாத இடமில்லை. ஒரு தகவலும் சுகமில்லை. நேரா திருப்பதிக்குத்தான் கெளம்பிருச்சா கிறுக்குப்பொம்பளைன்னு மாமா திட்டிக்கிட்டு கிடந்தாப்ல. யாரை அனுப்பி திருப்பதில விசாரிக்கறதுன்னும் தெரில.

பெரீயம்மா வீட்டைவிட்டு கிளம்பிப்போன மூனாவது நாள்ல மூனாவது பேஸ் மதியக் கரண்ட்டுக்கு மோட்டர்போட களத்துக்குப்போன மாமா கதறிக்கொண்டு ஓடி வந்தார். எல்லாரும் முண்டிக்கொண்டு களத்து கிணத்துமேட்டுக்கு ஓடினோம்.

வயிற்றில் கட்டுன பாறாங்கல் உடல் உப்பி இழுத்ததில் புரள கட்டின கயிற்றைத் திமிறிக்கொண்டு மேலே வந்து மிதந்துகொண்டிருந்தது பெரீயம்மா.

வியாழன், அக்டோபர் 20, 2016

உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்

இந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்டியானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க? :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :) 

இந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர்? ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்சிருவார் :) ) 

உயிர்தலம் கைல கிடைச்சிருச்சா. அதை ஒரே மூச்சில் எல்லாம் படிக்கலை. மெதுவா ஆற அமற ஒவ்வொரு கதையா படிச்சு அசைபோடறதுக்கு ஒரு மாசத்துக்கும் கிட்ட ஆச்சு. அப்படியொன்னும் வாசிக்கச் சிரமப்படுத்தும் வட்டாரமொழி அல்ல. உள்ளீடுகள் படிமங்கள் நான்லீனியர்னு ஒரு எளிய வாசகனை கதறடிப்பவை அல்ல. இருந்தாலும் ஒவ்வொரு கதை முடிவிலும் கிளம்பும் நினவுகள் அலாதியானவை. அதில் கொஞ்சசநாளைக்கு வம்படியாய் ஊறியிருப்பது ஒரு வேண்டுதல் :) 

சமீபத்தில் தான் சிறுகதையின் இலக்கணக்கள்னு ஆசான் விட்ட ஒரு பதிவு படித்திருந்தேன். ஆனால் இதில் எந்தக்கதையும் அந்தக்கட்டுக்குள் அடங்காது. ஒவ்வொன்றும் அதுபாட்டுக்கு ஆடிக்காற்றில் அலையும் பட்டம் மாதிரி சுற்றித்திரிகிறது. ஆனால் மாஞ்சா நூலென்னவோ ஆபிதின் கையில்தான். இஸ்டப்பட்டா நூறு அடிக்கும்மேல மொத்த நூல்கண்டையும் விட்டு பறக்க விடறார். இல்லைன்னா தாழாக்க டீல்போட்டு நம் மனசை அறுக்கிறார். கதை இப்படித்தான்னு ஆரம்பிக்கறதில்லை. ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. தன் மதம், அது சார்ந்த செயல்கள், அதன்மீதான சுயவிமர்சனம், பிரிவு, பொருள்தேடல், சுற்றம், உறவுகள் மீதான அரசியல், காமம், வசைகள், பகை, நட்பு, அம்மா, அஸ்மா, பெண்கள், பெண்கள், பெண்கள், வேலை, பாலைவன காய்ப்பு, பிரிவுத்துயர்னு எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு பத்திகூடச் சுணக்கமாகவோ வலியப்பட்டதாகவோ இல்லாமைக்கு ஒரே காரணம் அந்தச் சுய எள்ளல். 

ஒரு நாளைக்கு எத்தனை வகை நகைச்சுவைகளை அவதானிக்கிறோம்? கவுண்டமகான் அடிக்கறதுல இருந்து வடிவேலு அடிவாங்கறது வரைக்கும் இன்னைக்கும் சிரிக்கறோம் தான். விவேக் சந்தானம் காமெடி அடுத்தவங்களை ஓட்டுவது. அது கனநேரச்சிரிப்பு. அதுக்கப்பறம் நினைவில் இருப்பதில்லை எடுபடுவதில்லை. வடிவேலுவின் பல காமெடி டிராக்குகள் இன்னமும் நினைவில் இருப்பதற்குக் காரணம் சுய எள்ளல். தன்மீதான நகைச்சுவைப்பார்வை. இவ்வளவுதான் நம் பெரும்பாண்மைமை தினப்படி நகைச்சுவை கோட்டா. 

எழுத்துக்களிலும் இவ்வகைச் சுயபகடி நகைச்சுவை பல உண்டு. சாரு தான் பட்ட கஸ்டங்களை வலியோடு சொல்லி நடுவில் ஒரு வெடிவைப்பார். குபீர் சிரிப்பு உத்திரவாதமென்றாலும் அதில் வலியைச்சொல்லும் ஒரு அப்பாவி பிரதான முயற்சி இருக்கும். ஜெமோவுக்கு நாரோலில் நடையில் இந்தச் சுயபகடி அல்வா சாப்பிடறது மாதிரி. தன்னை முன்னிருத்தி எழுதிய சில கட்டுரைகள் இன்னைக்குப் படிக்கக்கிடைச்சாலும் வெடிச்ரிப்பு காரெண்டி. ஆனால் இதில் ஒரு சிரிப்பு சொல்லும் முனைப்பு தெரியும். சொல்லும் இடத்தையோ காலத்தையோ செயலையோ சற்றே தூக்கிவைக்கவோ சொல்லும் சேதியை உருவாக்கவோ உதவும் எழுத்து நடை. அந்த நடைதான் இந்த நகைச்சுவைக்குப் பிரதானம். அந்த நடை புரிந்த மகிழ்ச்சி புரிதலுக்கும் சேர்த்து இரட்டிப்பாகிறது. 

ஆபிதீனண்ணனின் அங்கதம் வேறு வகை. தனி டிராக்கில் ஓடுவதில்லை. எழுதும் முறையால் அந்தச் செய்நேர்த்தித் தன்னை முன்னிருத்திக்கறது இல்லை. அவலங்களைத் தாமசாகக்காட்டும் நண்பன் பட ஜீவாவீட்டு சப்பாத்தி சீன் மாதிரியான ப்ளாக் ஹியூமர் இல்லை. காட்சிகளுக்கு ஒரு படி வெயிட் ஏத்த வார்த்தைகளால் பூச்சுவேலை செய்வதில்லை. அது தானும் ஒரு கதாபாத்திரமாகவும் கதைகளூடே உலாவுவதிலை. அந்த இடத்தில் அந்தக் கணத்தில் நடக்கும் நிகழ்வுகளில் வெளிப்படும் ஒரு உணர்வாக மட்டுமே இருப்பது கதைகளின் மிகப்பெரிய பலம். அதைப் பிராக்கெட்டு போட்டு சொன்னாலும். எல்லாக்கதைகளும் ஏறக்குறைய தன்னிலை கூறல்தாதான். வண்ணதாசனின் கதைகளில் அவர் கையிப்பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்போம். வழியெங்கும் அவர் வண்ணங்களையும் மேகங்களையும் பொன்வண்டுகளையும் நிலவொளியையும் காட்டிடிக்கொண்டே போவார். நாம் இதுவரை உணர்ந்திராத அந்தப் பார்வைகளை அள்ளிப்போட்டுக்கொண்டே ஆச்சரியம் மேலிட பிடித்த கையை விடாமல் ரம்மியமாய்க் கூடச் சென்றுகொண்டே இருப்போம். வழியில் கானும் எந்தக் கெட்டதுகள் மேலும் வெறுப்புக்கூட வராது. அந்த மோனநிலை வாசிப்பும் உணர்வும் ஒரு உன்னதம். 

ஆபிதீன் கையைப்பிடித்தெல்லாம் கூட்டிப்போவதில்லை. அவர் முதுகுக்குப் பின்னாடியே ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சிரிப்பை அடக்கிக்கொகொண்டு கதைகேக்கும் ஆர்வத்தில் ஓடுகிறோம். அவர் பச்சையாய் பேசிவைப்பதையும் ( தாயோளி நாளைக்கு நாலுதரம் வாயில சொல்லலாம். எழுத்துல எழுதிட்டா அது நமக்குப் பச்சைதானே? :) ) வேலையில் படுவதையும், பால்டின்னுக்கு வழிக்காகாமல் அம்மா வீட்டிலேயே தனித்தலைவதும், பீயும் மூத்திரமுமாய் நாறிக்கிடக்கும் தொட்டியில் சலிக்கையிலும், பாட்டியாவின் முகத்தில் விழுந்து ரத்தம் கொட்டிய கதையின் முடிவும், அந்த நாங்கோரி என்னென்ன செய்தான்னு விலாவரியாகப் புலம்புகையிலும், தன் மதவேலைகளின் பின்னால் இருக்கும் சலிப்புகளும் அவர் பார்வையிலேயே பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம். எந்தக் கட்டுமானத்துக்குள்ளும் வராமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு எழுத்தாளரின் இந்தக் கதை கட்டமைக்கும் டெம்ப்ளேட் தொடர்ச்சியாகப் படித்துவந்தால் ஒரு கணத்தில் பிடிபட்டு விடும். அந்தக் கட்டுமானத்தில் மனம் ஆராய முனைந்து விட்டால் கதை பின்னுக்குப் போகும் ஆபாயமுண்டு. நூறாவது கதையிலும் ஒருவர் கதையை மட்டுமே முன்னிருத்தி எழுதுவதற்கு மிகத்தேர்ந்த செய்நேர்த்தி வேண்டும். அறம் புறப்படிலேயே இந்தச் செய்நேர்த்தியை சில முறை நாம் உணரக்கூடும். ஆபிதீன் அதற்கெல்லாம் நமக்கு வேலை வைப்பதில்லை. எங்கே மாஞ்சா நூலை சுண்டி எப்படிப் பட்டத்தைத் தலைகீழாகப் பறக்கவிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு வேளை அடுத்துத் தொகுப்பில் பிடிபடலாம் :) 

புத்தகத்தில் இருக்கும் ஒரே ஒரு குறியீடு அட்டைப்பட ஒட்டகம் மட்டும்தான் போல. வெய்யில் காயும் நிலப்பரப்பில் சுற்றும் தலை தொங்கிப்போன ஒட்டகம். அவர் மொழியிலேயே சொன்னால் புடுக்கும் வத்தி ஒட்டிப்போன ஒரு தனித்துலவும் உயிர். வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுத்திக்கொள்ளும் இந்தியப்பயணக்கள் நிரப்பும் நீர்தான் அடுத்தச் சில காலத்துக்கு. ஒட்டகத்துக்கு. எந்தக் கொக்கரிப்பும் இல்லை, யார்மீதும் குற்றச்சாட்டுகளும் இல்லை. பொருள் தேடும் வாழ்வின் மீதான வலிகள் யார் மீதும் சாபங்களாகவும் மாறுவதில்லை. தன் பயணங்களின் மீதான பார்வையை மட்டுமே நமக்களிக்கும் ஒரு உயிர். அதைக்கொண்டு உணர்வதும் உதாசீனப்படுத்துவதும் கொண்டாடுவதும் நம்பபாடு. 

எல்லோரையும் போல எனக்கும் வாழைப்பழம் தான் மிகப்பிடித்தது. கதையின் ஆரம்ப இரண்டு பக்ககங்கள் கொண்டு பெருமாள் முருகனின் மாதொரு பாகத்தை எரித்துக்கொண்டாடியது போல மதத் தூய்மைமையாளர்கள் ஆபிதீனுக்கும் செய்து அவரை "பேமஸ்" ஆக்கும் வாய்ப்புப் பிரகாசமாக இருக்கு. வழக்கம் போல நம் குபீர் போராளிகள் படிக்கும் அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுத்து போராட துணியமாட்டார்கள் என்பதால் நாம் மேற்கொண்டு போவோம். எளிய உறவுகளின் சண்டை. அதிலிருக்கும் வீராப்பு, கோவம், தணிந்த கோவமானபின்பும் அனுகாமல் இருப்பதில் இருக்கும் வீம்பு விலகல். ஒரு பார்வையில் "ரெண்டு பேயன்" என முடியும் இரண்டு வார்த்தைகளில் அந்தக் கண்ணாடிச்சுவர் உடைந்து நொறுங்குவது கதைக்கு ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால் அந்தச் சின்னத்தாதாவின் சந்தோசம் அப்படியே நம் முகம் முழுக்க அப்பிக்கொள்கிறது. மனம் நெகிழ்ந்தால் கண்ணு கட்டிக்கும்தான். ஆனால் மனசு முழுக்கச் சந்தோசம் ரொம்புனாலும் அழுகை சிலருக்கு பிச்சுக்கும். எனக்குப் பிச்சுக்கிச்சு :) 

ஒரு காட்சி வருகிறது அய்யா கதையில். பெரியாப்பா நூர்ஷா மரைக்காயரை சந்தையில் வைத்து உதைக்கக் காலோங்கும் படலம்! அதைப் படித்துவிட்டு ஒருவன் சிரிப்பு வராமல் உம்மென இருக்கிறான் என்றால் அவன் உண்மையிலேயே செத்த பிணம்தான். செத்தபிணங்கள் சேர்ந்து சிரிக்கும் ப்ளசுகாரன் நான் சொல்லறேன். அதுபோல ஒரு உன்னத நகைச்சுவையைப் படித்து அகம்மலர சிரிச்சு எவ்வளவோ வருசமாச்சு :))) 

எப்பேர்ப்பட்ட எழுத்துக்காரர் அய்யா நீங்கள்? உங்கள் அருமை நீங்கள் எங்களை நண்பர்களாக வைத்திருக்கும் இணைய உலகில் இப்போதைக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு புத்தி வரும்போது வரட்டும். 

அதுவரைக்கும் உங்களோடே அதப்பியம் பேசி மகிழ்வாய் இருப்போம் ஆபிதீனண்ணே! :))) 


வியாழன், டிசம்பர் 17, 2015

திருடன் போலீஸ்


வாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல!


கான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு!


அதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம இருக்க கூட்டத்துல மறைஞ்சு மறைஞ்சு வளையவரனும். தீபாவளிக்கு அண்ணந்தம்பிக எல்லோரும் ஒரே பிட்டுதுணில அடிச்ச ஒரே மாதிரி பேண்ட்டுசட்டை போடனும். பொழைக்கதெரியாதவங்கன்னு பிழைப்புவழி கண்டவங்க சொல்லக்கேட்கையில ப்ச்சுன்னு மொனவிகிட்டு அமைதியாய் தலைகுனிஞ்சுக்கனும். இதெல்லாம் அப்பப்ப சிரமமா இருந்தாலும் செய்யற ஆளுமேல ஒரு பாசமும் பிடிமானமும் இருந்தால் பெருசாதோணாது. ஆனால் அதுக்கு பதின்ம அழுத்தங்களை கடந்துவரவரைக்கும் காத்திருக்கனும்.

டைரக்டர் போலீஸ் காலனில வாழ்ந்திருப்பாரு போல. முடிஞ்சவரை திரைல கொண்டுவந்துட்டாப்ல. குச்சானுக என காவலர்களின் வாழ்க்கையை வெளில எந்தவித சமரத்துக்கும் லஞ்சலாவனியங்களுக்கும் இடம்கொடாத சீரியசிந்தனை காந்திமகான்கள் எவர் ஒருவரும் சிரிப்பாக அவமானகரமாக நக்கலாக உன்னத கருத்துக்களை உதிர்த்துவிட்டு செல்லலாம் தான். ஆனால் நாட்டில் போலீஸ் டாக்டர் வக்கீல் அரசியல்வாதிகள் எல்லோரும் நேர்மைத்திலகங்களாக இருக்கவேண்டும்னு கட்டாயப்படுத்தும் நாம்தான் இவர்கள் எல்லாம் நம்முள் நம்மிடம் இருந்து வருபவர்களே என்பதையும் நம்முடைய சமரச அளவுகோல்கள் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்வதில்லை. எப்பொழுதும் உயர்வாக பேசி நெஞ்சை நிமிர்த்திக்கனும்னு சொல்லலை. உள்ளது உள்ளபடிக்கு தெரிஞ்சுக்க என்ன தடை இருக்கமுடியும்?


மூக்கு நரேனின் சீன் யூடூபில் சிக்கலை. கிடைத்தால் பகிர்கிறேன். (மேல ) பகிர்ந்துட்டேன் :) ) அதுவரை "வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன்" முரளிகண்ணனின் காவலர்கள் பற்றிய அருமையான கட்டுரையை ( http://muralikkannan.blogspot.com/2013/04/blog-post.html ) படித்துவைங்க. அடுத்த முறை அவர்களை சுட்டெரிக்கும் வெயிலில் காய்வதை காணும்வேளையில் ஒரு கரும்புஜீஸ் வாங்கிக்கொடுத்து சினேகமாய் குடிங்கசார்னு கேட்டுக்கலைன்னாலும் அவங்க பெருசா ஒன்னும் நினைக்கப்போறதில்லை. ஆனால் நம்மைபோலவே எல்லா வாழ்க்கை அழுத்த மாய்மாலங்களும் கொண்ட சம சகஜீவி ஒருத்தர்னு நினைச்சுக்கறதில் ஒன்னும் பெருசா நமக்கு நட்டமில்லை. :)

நேர்மை என்பது ஒரு உண்மையில் எல்லா உயரிய உணர்வுகளையும் போலவே தோலுரித்துப்பார்த்தால் ஒரு நொய்மை. அவரவர் வரையரைக்குள் அளவும் வீச்சும் மாறும் ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. கட்டாயம், கவுரவம், மரியாதை, பழக்கவழக்கம் வளர்ப்பு, பிடிவாதம், பிடிமானம், கண்மூடித்தனமான நம்பிக்கை, சுயவருத்திக்கொளல் என எல்லாம் கலந்துகட்டிய ஒரு பிம்பம் அது. இயல்பாய் மூக்குநோண்டி சுண்டிவிடறாப்ல அது அந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு படு இயல்பான காரியம். இதை இயல்பாக செய்யாட்டித்தான் அவர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். மற்றவர் நினைப்போ கஷ்டமோ வருத்தமோ எதுவும் அவர்கள் இந்த நொய்மையில் இருப்பதை மாற்றாது.:)

நிம்போமேனியாக் ( Nymphomaniac )நிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை.ஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கருவிக்கு பெயர்தெரியுமா என வசனங்கள் வருகையில் அதிர்வுக்காட்சியில் கிடைத்த உலுக்கல் வெறும் மிகைமதிப்பாக பார்க்கவும் வாய்ப்புண்டு என போகும் படம். சுருங்கச்சொன்னால் சிறுபத்திரிக்கை எழுத்துமொழியில் நம் விமர்சகர்கள் பக்கம்பக்கமாக ஆயிரத்தெட்டு நேம்டிராபிக்கோடு பிரித்துமேய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் திரைக்காவியம். எனனசெய்ய... எல்லா அறிவாளி விமர்சகர்களுக்கும் மசாலாபடங்களை பிச்செரியத்தான் சமீபத்தில் ஆர்வம். பின்ன சுபா ராஜேஷ்குமாரெல்லாம் தொடர்ந்து திரைவாய்ப்பு பெறுகையில் எவ்வளவு காலம்தான் அம்பதுபேர்களுக்கு ஆராய்ச்சிகட்டுரைகளை படைத்துக்கொண்டிருப்பது?


சொல்லவந்த மேட்டரு அதுவல்ல. முதல் பாகத்தில் Mrs. H என்றொரு பகுதி வருகிறது. பலகாதலர்களோடு... சரிசரி.. பல கள்ளக்காதலர்களோடு வாழும் காலத்தில் ஒரு காதலன் காமத்தை தாண்டி உணர்வுவயப்பட்ட காதலில் இப்பெண்ணோடு விழுகிறான். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பன். பதின்மத்தில் எட்டாக்காதல் நாற்பதில் கிட்டியதில் தடம் புரளும் கட்டம். அவளோ உன்னோடு முழுக்க வாழமுடியாது. உன் குடும்பம் இருக்குன்னு துரத்தி விடுகிறாள். காதலை குடும்ப அமைப்பில் தொலைத்து மீட்டெடுக்க வழியில்லாமல் மூச்சுத்திணறலில் இருக்கும் அந்த அம்மாஞ்சி குடும்பத்தை பிரிந்து இவளோடு வாழலாம் என பெட்டியோடு கிளம்பி வருகிறான். அடுத்துவரும் பதினைந்து நிமிடங்கள் அதகளம். மெத்தர்ட் ஆக்டிங்னா இதுவான்னு தெரியலை. ஆனா உமா தர்மன் திறமையில் பேயாட்டம் ஆடியிருக்கும் காட்சி.
அந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள். மாடிப்படிக்கட்டின் சைடில் ஒளிந்துகொண்டு குசுகுசுப்பாய் உங்கப்பா உள்ளபோயிட்டாரா பாருன்னு ஆரம்பிக்கும் காட்சி. குழந்தைகளின் குரல்கேட்டு இவள் அவர்களை வீட்டினுள் அழைக்க அவள் வாழ்வில் ஏமாற்றப்பட்ட கணவனால் இல்வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கி வீட்டினுள் வந்து அமர்கிறாள். அறிமுகம் செய்துகொள்கிறாள். வீட்டினை பார்க்க விரும்புகிறாள். அவர்கள் வீட்டில் தோற்றுப்போன படுக்கையறையை இந்த வீட்டில் வெற்றிபெற்ற படுக்கையறையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறாள். இந்த அறையில் தான் உங்க அப்பாவை நாம் இழந்தோம்னு குழந்தைகளுக்கு சொல்கிறாள். இனிமே அப்பாவை பார்க்க முடியாது அப்பாவிடம் எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு தேற்றுகிறாள். அந்த நேரம் பார்த்து இவளின் இன்னொரு காதலன் பூங்கொத்தோடு வர நிலமை சூடுபிடிக்கிறது. எனக்கும் இதுமாதிரி தகுதியான ஆளை தேர்ந்தெடுக்கும் அறிவில்லாம போயொருச்சேன்னு குத்துகிறாள். அப்பான்னு அழுதுகொண்டு ஓடும் பையனை அடித்து பிரித்திழுக்கிறாள். கணவனை அறைந்துவிட்டு கார்சாவியை வீசிவிட்டு குழந்தைகளை இழுத்துக்கொண்டு ஆற்றாமையின் வலியின் அனைத்துக்குமாக சேர்ந்து வீட்டிவிட்டு பெரிய அகவலோடு போகிறாள்.


எனக்கு இதைக்கண்டு முடிக்கையில் ஈரக்குலையெல்லாம் அறுந்துவிட்டது. அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் சொல்லும் குடும்ப அரசியலை அல்லது குடும்ப அமைப்புக்கு தேவைப்படும் காய்நகர்த்தல்களை முன்னிருத்தும் செய்கைகள் தான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக குழந்தைகளுக்காக வாழ்வை அம்மா ஸ்தானத்தில் மட்டுமே வாழ்ந்து மனைவியின் ரோலை கைதவறவிட்ட பேதையாகத்தான் தன்னை காட்சிப்படுதுகிறாள். ஆனால் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதிலுமே சம்பந்தமில்லாமல் மலங்க மலங்க பாசமான அப்பாவை பிரிய இயலாமல் கதறும் குழந்தைகளைப்பார்க்கையில் வாழ்வில் ஒருகட்டத்தில் ஆண்கள் சுயத்தை முன்னிருத்தாமல் மனைவி அம்மாவானதைப்போல கணவனும் அப்பாவாக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவிடுதல் மிகநலம் என்று தோன்றியது. மிடில்க்ளாஸ் மோரானாக இருப்பதுதானே தவறு. மிடில்க்ளாஸ் மாதவனாக வாழ்ந்து தீர்வதில் நம்மைத்தவிர நம்மை நம்பிச்சாரும் எத்தனை உயிர்களுக்கு எத்தனை நன்மை?


பிரட்சனை அள்ள அள்ளத்தீராத குறையாத ஆண்களின் கடும்புனல் காமம்தானே? ஊரெல்லாம் சுற்றிவந்தாலும் தீர்ந்து தேய்ந்து அழிந்து தொலையாத அறுத்தெறிய இயலாத அந்த காமக்காதல் உடலுக்குள்ளேயே அப்பாவேடத்தின்கீழ் அமுங்கி நாறி சீப்பிடித்து மனமுள் வாழ்ந்து களித்துதீரும் வக்கிரம் ( உண்மையில் உக்கிரம் ) வாழ்வின் பகுதியாக மாறித்தொலையட்டுமே. குழந்தைகள் பாதிப்பின்றி வாழ்ந்து மலரட்டும்.


ஆகவே நாற்பதில் இல்லறத்திலும் பொருளாதாரத்திலும் "செட்டிலா"கிவிட்டதாய் வரும் நினைப்பில் கிடைக்கும் அதிகாரத்தில் மீண்டும் பதின்மத்தில் ஏமாந்த இழந்த காதல்களை செய்துபார்க்க வரும் துளிர்ப்பினை அறுத்தெறிந்து தன்கையே தனக்குதவின்னு மனதினுள் வாழ்ந்து கடத்தல் உத்தமம் என்கிற தெளிவினைக்கொடுத்த உமா தர்மனுக்கு நன்றி :)கீதப்ப்ரியனின் அருமையான பதிவு -