
என்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...!
ஆக மொத்தம் வீட்டு பெருசுங்க எல்லாம் சேர்ந்து உனக்கான ஒருத்தி இவதான்னு முடிவு பண்ணிட்டாங்க! நமக்காக ஒரு ஜீவன் காத்திருக்கிறது அப்படிங்கற நெனைப்பே சும்மா குளுகுளுன்னு கிளுகிளுன்னு இருக்குமே! SCV ல வர பாட்டெல்லாம் உங்களை பத்தி பாடறமாதிரியே இருக்குமே! அவங்க மொதமொதல உங்களைப்பார்த்த அந்த மிரண்ட (சரி.. சரி.. மருண்ட )பார்வையை ரீவைண்டு செஞ்சு செஞ்சு ஓட்டறதுக்குன்னே ஒரு தனி ப்ராசெஸ் த்ரெட் உங்க மண்டைக்குள்ள ஓரமா ஓடிக்கிட்டே இருக்குமே? உங்க பர்சுக்குள்ள யார் கண்ணுக்கும் ஈசியா படாத ஒரு எடத்துல "With love" அப்படின்னு எழுதி கையெழுத்து போட்டு ஒரு இச்சு வைச்ச மார்க்கு (என்னது கோல்கேட் வாசம் அடிக்குதா? ) தெரிய ஒரு குட்டி போட்டோ ஒளிஞ்சுக்கிட்டு இருக்குமே! உங்க க்ரெடிட் கார்டுல ஒரு அல்ட்ராமாடல் போன் வாங்குனதுக்கான ஒரு ட்ரான்ஸாக்சன் ஆகியிருக்குமே! இப்பவெல்லாம் வேலைய ரிசைன் செஞ்சுட்டு கால்சென்டர்ல வேலைக்கு சேந்தாப்படி செல்போன் ஹேண்ஸ்ஃப்ரி உங்க காதுல பரமசிவன் கழுத்து பாம்புமாதிரி தொங்கிக்கிட்டே இருக்குமே? உங்க ஆபீசுக்கு உள்ளயும் சுத்தியும் யாரும் அடிக்கடி வராத தொந்தரவில்லாத எடங்க எல்லாம் இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பீங்களே!

இத்தனை நாள் கூட வேலை செய்யறவளுக "How nice! Chooo Sweet!" அப்படின்னு கீச்சுக்குரல்ல சொல்லும் போதெல்லாம் மனசுக்குள்ள குபுக்குன்னு கெளம்பற எரிச்சல் எல்லாம் இப்போ அதையே அவுக சொல்லிக் கேக்கறப்ப எப்படி இனிமையா மாறுச்சுன்னு ஆச்சரியமா இருக்குமே?! சிஸ்டம் பாஸ்வேர்டெல்லாம் அவுகளை நீங்க மட்டுமே கூப்பிடற செல்லப்பேருக்கு மாறியிருக்குமே? "டெட்டிபியர் இவ்வளவு விலையா" அப்படின்னு திகைச்சிருப்பீங்களே! அவுக வீட்டுல யார் யாரு எத்தனை மணிக்கு தூங்குவாங்கன்னு கண்டுபுடிச்சிருப்பீங்களே! ஒரு தடவை சார்ஜ் செஞ்சா செல்போன்ல எவ்வளவு நேரம் பேசலாம்கற டெக்னிக்கல் ஸ்பெசிபிகேசனெல்லாம் தெரிஞ்சிருக்குமே! ஆபீஸ்ல ப்ரோக்ராம் எழுதச்சொன்னா ஒரு மணிநேரத்துக்கு 4 லைனுக்கு மேல எழுதமுடியாத கைக்கு எப்படி SMS மட்டும் நிமிசத்துக்கு 20 அடிக்க முடியுதுன்னு மலைப்பா இருக்குமே! ஒரு நாளைக்கு 10 தம்மு அடிக்கறதெல்லாம் ஒடம்புக்கு எவ்வளவு கெடுதல் தெரியுமா அப்படின்னு திடீர்னு அன்புமணிக்கு உங்கள் மேலான ஆதரவை அளிக்கத் தோணுமே?
என்னது? ஓவரா சொல்லறனா? சரி விடுங்க! நீங்க வெளில சொல்லக்கூடாதுன்னா நானும் சொல்லலை! :) ஆகவே மக்களே! உங்கள் வாழ்க்கையில் இதுவே உங்களுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு! ஆகவே, காதலியுங்கள்! இந்த வாய்ப்பை தவர விட்டால் இனி கிடைக்கவே கிடைக்காது! இந்த நேரத்துல மட்டும் உங்க கல்யாணமாகி ரெண்டு வருசமான கூட்டாளிகளையெல்லாம் பக்கத்துல சேர்த்துக்காதீக! "இதெல்லாம் மாயைடா மச்சி!", "எல்லாம் கல்யாணமானா மூணு மாசத்துல தெளிஞ்சுரும்", "உன்னையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு!", "உலக உண்மை தெரியாம இருக்கியேயப்பு!" இப்படி விதவிதமான பிட்டுகளையெல்லாம் எடுத்துவிட்டு, அவிங்க கல்யாணத்துக்கு முன்னாடி உருண்டு புரண்டு காதலிச்சதையெல்லாம் மறந்து, பின்னாடி வரப்போற நிதர்சண வாழ்க்கைய அப்பட்டமா எடுத்துவிட்டு உங்க மனசை கெடுக்கப் பார்ப்பானுவ.. பொகைப்பிடிச்சவனுக! அதையெல்லாம் காதுலயே போட்டுக்காதீக! என்னது? இப்பவும் காதுல ஹேண்ஸ்ப்ரீதான் இருக்கா? போட்டுத்தாக்குங்க! :)
சரியப்பு! மனம் விட்டு காதலிக்கனுங்கற! ஆனா எந்த அளவுக்கு நம்ப மேட்டரை எல்லாம் அவங்களுக்கு சொல்லலாம் அப்படின்னு கேட்டீங்கன்னா கட்ரைட்டான பதிலெல்லாம் இதுக்கு கிடையாது! "வரபோறவ கிட்ட எதையுமே மறக்கக்கூடாது! அத்தனையும் சொல்லிறனும்!" அப்படிங்கற ஓபன்புக் ஒருவகை! "நம்மைப்பத்தி ஒன்னுமே நெகடிவா சொல்லக்கூடாது! பிரச்சனையாகிரும்!" அப்படிங்கற ஃப்ளாக்பாக்ஸ் ஒருவகை! என்னதான் சுயநினைவோட இல்லாம காதல் தேன்குடிச்ச கருவண்டாட்டம் கிர்ரடிச்சுக்கிடந்தாலும் உள்ளுணர்வு சொல்லறதுக்கேப்ப ஆங்காங்கே அப்டி அப்டி, இன்னின்னிக்கு இப்டி இப்டி அப்படின்னு ஒரு லெவலா, ஒரு சைசா, ஒரு தினுசா, ஒரு குன்சாவா உண்மைகளை சொல்லியும் சொல்லாம சொல்லறது ஒருவகை! என்னைக்கேட்டா கடைசியா சொன்னது தான் பெஸ்ட்டு! இது உண்மைகளை அப்படியே சட்டி சட்டியா எடுத்துப்போட்டு ஒடைக்கறது இல்லை! மொத்தமா திரைபோட்டு உங்க இருண்ட பக்கங்களை மூடிமறைக்கறது இல்லை! என்னதான் இரண்டு பேரும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் என்றாலும் அவரவருக்கு ஒரு அந்தரங்கம் உண்டு! அதை மதிப்பது என்பதுதான் இது! "படிக்கும்போது ஒரு புள்ளைய டாவடிச்சேன்! ஆனா அது சரிவராது அப்படின்னு அதன்பிறகு உணர்ந்துட்டேன்!" அப்படின்னு சொல்லி நிறுத்தாம "நாங்க எப்படியெல்லாம் காதலிச்சோம் தெரியுமா? நான் எப்பேர்ப்பட்ட காதலன் தெரியுமா?"ன்னு லெவல் தெரியாம அள்ளி விட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா அப்பறம் சொல்லறதுக்கு ஒன்னுமில்லை! நல்லா கவனமா இருங்கப்பு! இப்ப நீங்க எடுத்துவிடற ஒவ்வொன்னும் நாளைக்கு ஒரு பிரச்சனைன்னா அஸ்திரமா மாறி உங்க மார்ல பாயக்கூடிய அபாயம் இருக்குங்கோவ்! அப்பட்டமா மறைக்கசொல்லலை! அளவா அவசியமானதை சொல்லுங்கன்னு சொல்லறேன்! அஙகிட்டு இருந்து கதை கேக்கறதும் அளவா கேளுங்க.. தேவையில்லாத விசயங்களை நோண்டி நோண்டி விசாரணை கமிசனெல்லாம் போடாதீக! இந்தக்கட்டமானது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றி ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து "சத்தியசோதனை" எழுதுவதற்கானது அல்ல!
இந்த மேட்டரு மட்டும் இல்லை! நம் வீட்டாரை பற்றி சொல்லும் எதுவும் கூட நல்லதாகவே சொல்லி பில்டப்பு கொடுக்கனும்னு அவசியமில்லை! சொல்வதனால் எந்த பயனும் இல்லை என்பது மாதிரியான விசயங்களை அப்பட்டமாக புட்டுப்புட்டு வைப்பதற்கும் அவசியமில்லை! எக்காரணம் கொண்டும் உங்கள் வீட்டாரைப்பற்றிய உயர்வான எண்ணங்களை அவுக மனதில் வ்லுக்கட்டாயமாக திணிக்காதீர்கள்! உண்மைகளைச் சொல்லுங்கள்! அவுக நம்மை விட வெவரமாத்தான் இருப்பாக! நீங்கள் சொல்வதைவிடவும் அதிகமாக புரிந்து கொள்வார்கள்! மேலாக உணர்துகொள்வார்கள்! உறவுகள் என்பது இவர்கள் இப்படி என தியரி படித்து வருவதில்லை! அடுத்தவர் இருப்பின் மேண்மையை உணர்ந்து, உடனிருந்து பழகி, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதிலும், அன்பை உணர்ந்து கொள்வதிலும் மெல்ல மெல்ல உருவாகும் பிணைப்பு அது! பகிர்ந்து கொள்ளப்படும் விடயங்களைப் பற்றிய நிஜமான அக்கறையோடும், பரிவோடும், நேர்மையாகவும் இருங்கள்! அவ்வளவுதான்!
காதலிக்கற இந்த நேரத்துல நெஜமாகவே சில ஹீரோத்தனம் எல்லாம் செய்யுங்க! இன்ப அதிர்ச்சிகளை அள்ளி விடுங்க! இந்த இனிமையான நேரங்கள் தான் பின்னால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட்டோம் என உணர்ந்து கொள்ளும் காலங்களில் ஒரு சின்ன புன்முறுவலை முகத்தில் கொண்டுவரும்! அந்தக் காலத்துல என்னோட வீட்டம்மா வடநாட்டுல வேலையா இருந்தாங்க! எனக்கு சென்னை! போனைப்புடிச்சிக்கிட்டு தொங்கறதுதான் ஒரே வேலை! கல்யாணத்துக்கு இன்னும் 5 மாசம்! ஒரு நாளு பேச்சுவாக்குல காச்சலடிக்குதுன்னு சொல்லி "என்ன செய்ய? அவ்வளவு தூரத்துல இருக்கற! நீ வந்து பார்க்கவா முடியும்?" அப்படின்னு சோகமா சொல்ல நானும் "ரெண்டு க்ரோசினை ஒன்னா போட்டுக்கிட்டு படுத்து தூங்குனா சரியாப்போயிரும்" அப்படின்னு என்னோட மருத்துவ அறிவை எடுத்து இயம்பிட்டு போனை வைச்சுட்டேன்! அப்போ மணி இரவு 10! போட்டுக்கிட்டு இருந்த பேண்டு சட்டையோட நேரா கெளம்பி மீனம்பாக்கம் போய் பைக்க நிறுத்திட்டு அன்னைக்கு நைட்டு ஃப்ளைட் 1:30க்கு பிடிச்சு 3 மணிக்கு அவுக ஊர்ல எறங்கி விடியறவரைக்கும் ஏர்போர்ட்லயே தூங்கிட்டு அப்பறம் ஒரு வண்டியபிடிச்சு 6 மணிக்கா அவுக வீட்டுக்குப்போய் "கடவுளே! கடவுளே! அவதான் கதவைதிறக்கனும்"னு வேண்டிக்கிட்டே காலிங்பெல்லை அடிக்க சொல்லிவைச்சாப்புல பால்காரன் வந்துட்டான்னு அவுக வந்து கதவைத்திறக்க.. ஆஹா! அந்த 5 நொடிகள் இனி வாழ்க்கையில் கிடைக்காது! நாம அப்படியே கமல் மாதிரி ஒரு மார்க்கமா செவுத்துல சாஞ்சுக்கிட்டு ஒரு லுக்கோட "காச்ச இப்ப எப்படி இருக்கு?" அப்படிங்கற உணர்வுபூர்வமான ஒரு டயலாகை எடுத்து விட.. இன்ப அதிர்சியில் அவுக பேச்சு மூச்சில்லாம மொகத்தை பொத்தி அழ ஆரம்பிக்க... ம்ம்ம்.. அப்பிடி போச்சுது கதை! இன்னைக்கும் இங்கிட்டு கரண்டி வளையற நிகழ்வு ஏதாச்சும் ஆரம்பிச்சா சன்னமா இந்த பிட்டை ஃப்ளாஸ்பேக்குன்னு எடுத்துவிட்டு கொஞ்சமா அடிவாங்கி தப்பிச்சுக்கறதுதான்! :)
கல்யாணத்துக்கு இன்னும் நாளிருக்கு... ஆகவே, உள்ளூருல இருக்கற அல்லது சந்திச்சுக்க வாய்ப்பிருக்கற மக்களுகளுக்கு எல்லாம் இன்னேரம் வாரத்துக்கு ரெண்டுதடவையாவது வீட்டு பெருசுகளுக்கு தெரியாம ரகசிய சந்திப்பெல்லாம் நடந்துக்கிட்டு இருக்குமே! அப்படி இப்படி சில சில்மிசங்க எல்லாம் பர்மிட்டடு! இதெல்லாம் நாள் முச்சூடும் அவிங்க நெனப்பாவே இருக்கறது ஒதவும்! அதனால கொஞ்சம் இந்த விசயத்துல கொஞ்சம் கட்டுப்பெட்டியா இருந்து கமுக்கமா செய்யுங்க! என்னது நீங்க குஷ்பு கட்சியா? அது சரி! நமக்கு இந்த விசயத்துல இருக்கற கெடைச்ச பட்டறிவுக்கு தலைவாழை இலை போட்டு, எட்டு வகை பொரியல் வைச்சு, நெய் பருப்புல ஆரம்பிச்சு, மோருல கைகழுவற விருந்து போட்டாவே ஒழுங்கா சாப்பிடத்தெரியாது! இதுல எதுக்குங்க அவதி அவதியா வறட்டு பாஸ்ட்புட்டை சாப்டுட்டு தொண்டைல மாட்டி விக்கிக்கிட்டு கஷ்டப்படனும்? ரசனையோடு, நுணுக்கமாக, இயல்பாக, அன்பு கலந்து, புரிதல் கொண்டு, பிரிக்க முடியாத பந்தத்துடன் அவசரமில்லாமல் பிரிக்க வேண்டிய வாழ்க்கை முடிச்சுகளை அவசரப்பட்டு அவிழ்க்கிறேன் என்று மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாதல்லவா? ஏதாவது தவறாகபோய் சரியா வராமப்போனா "இவனால முடியலையோ?" அல்லது "இவளுக்கு ஒன்னுமே தெரியலையோ?!" அப்படிங்கற சின்னக்கீறல் மனசுல விழுந்துருச்சுன்னா அப்பறம அது நல்லவிதமா முடியாது! எனக்குத்தெரிஞ்ச ஒரு கேசுல ரெண்டுபேருமே வெளிநாட்டுலதான் இருந்தாங்க! இங்க பெரியவுக எல்லாம் பேசி முடிச்சதும், ரொம்ப முற்போக்குன்னு அவங்க இப்படி அப்படி இருக்கப்போக, கொஞ்ச நாள்ல அந்த பொண்ணு "He is not a Man" அப்படின்னு சிம்பிளா சொல்லி கல்யாணத்தையே நிறுத்திருச்சு! :( இப்போ அவிங்க ரெண்டுபேரும் வேற கல்யாணம் செஞ்சு புள்ள குட்டிகளோடதான் இருக்காக! பொறுங்கப்பு! கெணத்து தண்ணிய ஆத்துவெள்ளமா அடிச்சுக்கிட்டு போயிற போகுது?!
வாரத்துக்கு ஒரு முறையாகவாவது அவுக வீட்டாருக்கு ஒரு போன் போட்டு பேசிருங்க.. (எல்லாத்தையும் நலம் விசாரிச்சிட்டு "உங்க பொண்ணுகூட கொஞ்சம் பேசலாமா?" அப்படிங்கற அப்பாவி பிட்டை எடுத்துவிட்டால் இன்னும் விசேசம்!) "கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேலைக்கு போகனும்", "கல்யாணத்துக்கு பிறகும் நான் என் வீட்டாருக்கு சப்போர்ட்டா இருக்கனும்" என்பது போன்ற கோரிக்கைகள் அவுக கிட்ட இருந்து வந்தால் உங்களுக்கு அதில் ஒப்புமை இல்லாத பட்சத்தில் இதயம் மூடி காதுகளை மட்டும் திறந்து கேட்காமல், இப்போதைக்கு சரின்னு சொல்லிட்டு கல்யாணத்துக்கு பெறகு சமாளிச்சுக்கலாம் என்ற எண்ணங்களை கைவிட்டு, உண்மையான அக்கறையோடு உங்கள் நிலையையும் முடிவையும் எடுத்துகூற முடியுமானால் அதனைச்செய்யுங்கள்! இல்லையெனில் "அன்னைக்கு சொல்லறப்ப தலையை தலையை ஆட்டூனீங்க!", "உங்களை நல்லவுகன்னு நினைச்சேன்", "ம்ம்ம்.. எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிதான்!", "எனக்கு வந்து வாச்சிருக்கீங்க பாருங்க" என்பது போன்ற ஏவாள் ஆதாமுக்குச் சொன்ன வசனங்களை சிறிதும் மாறாமல் இன்றும் நீங்கள் கேட்கக்கூடிய சிரமதசையில் இருந்து தப்பிக்க முடியாதெனினும் மனதளவில் பெரிய பாதிப்பின்றி தனக்குதானே சிரிச்சுக்க உதவும்!
ஆகவே...
மனமுவந்து காதல் செய்வீர்!
ஓடிஓடி காதல் செய்வீர்!
விடியவிடிய காதல் செய்வீர்!
தொலைபேசியில் காதல் செய்வீர்!
பெத்தவுகளுக்கு தொல்லைதராமல் காதல் செய்வீர்!
உளரிக்கொட்டி காதல் செய்வீர்!
வருங்கால வாழ்க்கை பேசி காதல் செய்வீர்!
சண்டைபோட்டு காதல் செய்வீர்!
பரிசு கொடுத்து காதல் செய்வீர்!
பைத்தியமாக காதல் செய்வீர்!
காதல் மட்டுமே வாழ்க்கையென காதல் செய்வீர்!
வானமே எல்லையென காதல் செய்வீர்!
'எல்லைமீறாமல்' காதல் செய்வீர்!
"சொல்லீட்டல்ல! அப்ப கெளம்பறது?!" அப்படிங்கறீங்களா? அதுவும் சரிதான்! சிவபூஜைல நானெதுக்கு கரடிபோல! அப்போ வர்றங்ங்...
--------