வியாழன், மே 31, 2007

தமிழ்மண வைரஸ் ஆவது எப்படி?!
நீங்கள் ஓராண்டுக்கு மேலாக வலைப்பதிபவரா?

ஆமாம்.

100 பதிவுகளைக் கடந்தவரா?

ஆமாம்.

சமீபத்தில் 2007ல் வேறு வழியில்லாமல் புதுபிளாகருக்கு மாற்றப்பட்டவரா?

ஆமாய்யா ஆமாம்!

அப்படிங்கறீங்களா?! அப்ப சரி!

உங்க ப்ளாகருக்குள் லாகின் செய்யுங்கள்! Edit Post பகுதிக்குள் செல்லுங்கள். அனைத்து பதிவுகளையும் தேர்வு செய்யுங்கள். அனைத்திற்கும் சேர்த்து "New Label..."லை தட்டி ஏதேனும் ஒரு புது குறிச்சொல்லை சேருங்கள்( என்னது "உப்புமா" வா?! ). முடிந்தவுடன் அதே போல "Remove label.."லை தட்டி குறிச்சொல்லை நீக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான். நேராக தமிழ்மணத்திற்கு வாருங்கள். "இடுகைகளைப் புதுப்பிக்க " பகுதிக்குச் சென்று உங்க பக்கத்தின் சுட்டியை கொடுங்கள். அவ்வளவுதான் மேட்டர்... புதுபிளாகருக்கு மாறின பிறகு விடுபட்டிருந்த அத்தனை பதிவுகளும் புதிதாக தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விடும்! தமிழ்மணம் "இடுகைகள்" பகுதி முழுக்க உங்க பதிவுகளாக நிரப்பி ஒருநாள் வைரஸாக மாறிடலாம்.

இப்படிச் செய்வதால் இரண்டு வசதிகள்! ஒன்று, நமது பழைய பன்னாட்டுகளையெல்லாம் கிளறி மேலே கொண்டு வரலாம். இன்னொன்று இனிமேல் அந்த பதிவுகளுக்கு யாரேனும் பின்னூட்டங்கள் இட்டால் அது தமிழ்மணத்தில் வரும்.

பாதகம் என்று பார்த்தால், "இவனெல்லாம் அந்தக் காலத்துல இவ்வளவு கேவலமாகவா எழுதிக்கிட்டு இருந்தான்?!" அப்படின்னு புதிதாக நான்குபேர் துப்ப வாய்ப்புகள் உண்டு! :)

முக்கியக்குறிப்பு: தமிழ்மணத்தால் ஏற்கனவே நீக்கப்பட்ட பழைய பதிவுகளின் சுட்டிகளை அனைத்து பதிவுகளுக்கும் குறிச்சொல் சேர்க்கும் பொழுது தேர்வு செய்யாதீர்கள். அவைகள் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புகள் உண்டு.

இதனால் வரும் தீமை: தமிழ்மணம் மீண்டும் அதனை கவனித்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும். வீணாக அவர்களுக்கு மீண்டும் தொந்தரவு கொடுப்பானேன்?
நன்மை: திரும்பவும் அதே பதிவுகளை வைத்து சில நாட்கள் அலப்பரை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்! :)

இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா? எந்த புண்ணியவானோ புதுபிளாகருக்கு மாறிவிட்டதால் இணைக்கப்படாமல் விட்ட என் பதிவினை வகைப்படுத்தி இணைக்க, அதை ஏன் நாமளே செய்யக்கூடாதுங்கற ஆராய்ச்சியில் விளைந்ததுதான் நேற்றைய என் பழைய பதிவுகளின் வைரஸ் அட்டாக்கு! :)

அதெல்லாம் சரியப்பு! இது ஏன் இந்தமாதிரி நடக்குது? இந்த மாதிரி செய்தால் RSS Feeder என்ன மாற்றங்கள் நடக்குது? அதை எப்படி தமிழ்மணம் கண்டறிகின்றது என்று யாராவது கேட்டீர்கள் என்றால்..


ஹிஹி... நம்மூருல மழைங்களா?!(ஒத்துக்கறேன். இது ஒரு மொக்கைப் பதிவுதான். அதுக்காக மொக்கையவே இப்படி மொக்கையாக போட்டு மொக்கைப் பதிவுகளின் மானத்தை வாங்கிட்டதா சிபியாரும், செந்தழலாரும் சண்டைக்கு வர வாய்ப்புள்ளதால் கொஞ்சம் நல்ல மொக்கையாக இருக்க ஒரு படத்தை சேர்த்துக்கறேன்! :) Edinburgh Panaromic view. படம் கொஞ்சம் பெரியது. 2MB. மெதுவா இறக்கிப்பாருங்க... )

செவ்வாய், மே 22, 2007

காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்...

ன்றோடு 19 நாட்கள் ஆகின்றன மேடலின் மெக்கேன் ( Madeleine McCann ) என்ற 4 வயது சிறுமி காணமல் போய்! போர்ச்சுகல் நாட்டிற்கு விடுமுறையைக் கழிக்க சென்ற இடத்தில் மே 3ம் தேதி மாலை வேளையில் பெற்றோர் இரவு உணவுக்காக சென்றிருந்த வேளையில் தங்கியிருந்த இடத்தில் இருந்து மாயமாய் மறைந்து விட்டாள். போன வாரம் தான் அவளுடைய நான்காவது பிறந்தநாள்!


Closeupபத்திரிக்கைகள், தொலைக்காட்சி, ரேடியோ என அனைத்து மீடியாக்களும் காணாமல் போன நாளிலிருந்து அலருகின்றன. 15 நிமிடங்களுக்கு ஒரு முறை BBC, Sky போன்ற முதன்மை தொலைக்காட்சிகளின் செய்திகளில் லேட்டஸ்ட் தகவல்கள் ஒளிபரப்பப்படுகிறது.
http://www.findmadeleine.com/ எனற இனையதளம் மேடலினை தேடுவதற்காகவே அவளது சொந்த ஊரில் இருக்கும் டீனேஜ் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 150 மில்லியன் ஹிட்டுக்கள் அடைந்துள்ளது. 76,000 பேர் தனது பிரார்த்தனைகளையும் அவளது பெற்றோருக்கான ஊக்கங்களையும் குறுந்தகவல்களாக விட்டுச் சென்றுள்ளனர். இதுவரை 180,000 பவுண்டுகள் தேடுதலுக்கான நிதியாக பொதுமக்களின் பங்களிப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது. தடயங்களையும் தகவல்களையும் சொல்வதற்கான வழியும் இதில் உண்டு. மெடலினைக் கண்டுபிடிக்க சரியான தகவல் தருவோருக்கு 2.5 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Plan of Praia da Luz

இங்கிலாந்தின் கால்பந்து நாயகன் டேவிட் பெக்காம் தொலைக்காட்சியில் தோன்றி தேடலுக்கான வேண்டுகோளை அனைவருக்கும் விடுத்துள்ளார். புதிய விம்பெர்ளி ஸ்டேடியத்தில் போன வாரம் நடந்த FA கோப்பை இறுதிப்போட்டியின் முன்னால் 90,000 பார்வையாளர்களுக்கு தேடலுக்கான வேண்டுகோள் வீடியோ படமாக காட்டப்பட்டது. போர்ச்சுகல் காவல்துறையும் இங்கிலாந்து காவல்துறையும் மிகத்தீவிரமான தேடுதல் வேட்டையில் உள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் அந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேகரித்து அதில் பின்புலத்தில் இருக்கும் சந்தேகத்திற்கு உரிய முகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஏற்கனவே கிரைம் டேட்டாபேசில் உள்ள ஃபீடோபைல் என சந்தேகத்திற்கு உள்ளானவர்களும் ஓப்பிடும் அளவுக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

அவளது சொந்த ஊரான லீஸ்டெர்ஷைன் காவல்துறை http://www.leics.police.uk இந்த தேடலுக்காக மட்டுமென 0800 096 1233 என்ற எண்ணை பொதுமக்கள் தகவல் அளிக்க வெளியிட்டுள்ளது. மேடலினது தேடல் கோரிக்கைபோஸ்டராக மாற்றப்பட்டு ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கண்டம் முழுதும் விநியோகிக்கப்படுகிறது. அவளது சொந்த ஊரில் தினமும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அவளது புகைப்படம் அச்சிட்ட டீ-சர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டு மராத்தான் ஓட்டம் நடத்தி அதன்மூலம் அவளது உருவத்தினை மக்களது மனதில் பதிக்கும் முயற்சியும் நடக்கிறது. பிரிட்டனின் வருங்கால பிரதமர் கோர்டன் பிரவுன் இந்த தேடலுக்கான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யுமென அறிவித்துள்ளார்.

இவ்வளவுக்குப்பிறகும் அவளது பெற்றோர்கள் மன உறுதியுடன் போர்ச்சுகலிலேயே தங்கி தங்களது மூத்தமகளுக்கான தேடலை இன்னனும் விட்டுக்கொடுக்காமல் தொடருகின்றனர். மேடலின் தொலைந்த துயரம் தனது மற்ற இரட்டைக்குழந்தைகளை பாதிக்காமல் இருக்க இயல்பாய் இருக்க மிகவும் கடினப்பட்டு முயற்சிக்கின்றனர்.


தேடல் இதுவரை எந்தவிதமான முக்கிய தடயங்களும் கிடைக்கவில்லை என்பது வருந்தமான செய்தி. ஒரு மிடில்க்ளாஸ் தம்பதியினரது தேடல் பொதுமக்களின் ஆதரவோடும், மீடியாக்களின் கவனம் சிதறாத முயற்சிகளோடும் முழுவீச்சில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

Banner2

30/05/2007:

மேடலின் பெற்றோர்கள் போப்பாண்டவரை வாடிகன் சென்று சந்தித்து பிரார்த்தனைகளையும் ஆசிகளையும் பெற்றனர்.http://news.sky.com/skynews/article/0,,91210-1267684,00.html?f=rss

http://news.bbc.co.uk/1/hi/uk/6696497.stm


* * * * *

சென்ற வருடம் டிசம்பர் மாதக்கடைசியில் புறநகர் டெல்லியான நோய்டாவில் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்து சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தைகளின் சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர். அதன் மீதாக இருவரை கைதும் செய்தனர். அதில் ஒருவர் தான் குழந்தைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கும் உடையவன் என்றும் அந்தப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மிட்டாய்களும் பிஸ்கட்டுகளும் கொடுத்து ஆசைகாட்டி கூட்டிச்சென்று கற்பழித்து பின் கொலை செய்ததாகவும், இதுவரை ஏழு குழந்தைகளை கொன்றுள்ளதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து அந்த பகுதி மக்கள் பொங்கி எழுந்தனர். இதுவரை 38 குழந்தைகள் அந்த பகுதியில் கடந்த 21 மாதங்களில் காணாமல் போயிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீதான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் போராட்டம் நடத்தினர். அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் தகவல் அறியும் முயற்சியாக காவல்நிலையம் சென்று கேட்ட நேரங்களில் போலிசார் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். புகார்கள் வந்த ஆரம்பக்கட்டத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு குழந்தைகள் காணாமல் போயிருக்க மாட்டர்கள் எனவும் தாங்கள் ஏழை கூலித்தொழிலாளிகள் என்பதாலேயே காவலர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பகுதிக்கான 5 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

http://www.ezilon.com/information/article_17428.shtml

http://news.independent.co.uk/world/asia/article2112546.ece

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 44,476 குழந்தைகள் ( ஒரு நாளைக்கு 122 ) காணாமல் போவதாகவும் இதில் 15,407 குழந்தைகள் ஆறு பெரிய நகரங்களில் இருந்துமட்டும் எனவும் அதிலும் 11,008 குழந்தைகள் திரும்பக்கிடைக்காதவர்கள் எனவும் இந்த செய்தி சொல்கிறது.

நோய்டா செய்தியில் கைதான சுரேந்திரா என்பவரது இன்றைய ஒப்புதல் வாக்குமூலத்துடன் விசாரணை தொடருகிறது.

30/05/2007:

இந்த வழக்கைப்பற்றிய முழுமையான செய்திகளுக்கு...

http://en.wikipedia.org/wiki/Noida_Serial_Killings

புதன், மே 16, 2007

பீளமேடு - 641004
ன்னாங்க இது இப்படி ஒரு அநியாயம் நடக்குது நாட்டுல! கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்கலாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க? ( மனசாட்சி: டேய்... டேய் இந்தியா முழுசும் சின்னப்பசங்க ஒரே மாதிரிதான் கிரிக்கெட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா கூவாத.. )

சரி போனாப்போகுது. கிளைமாக்சு கூடவா? நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும்? 4 ரவுண்டு மேட்சுல மூணாவதே செமீஸ் மேட்ச்னா பார்த்துக்கிடுங்க... ரெண்டு டீமும் எதுத்தெதுத்தாப்புல நின்னு கையெல்லாம் குடுத்து ஜோராத்தான் ஆரம்பிச்சது மேட்சு. அப்பவெல்லாம் சைடுக்கு 20 ஓவரு மேச்சுதான். அவங்க 88ம் நாங்க கடைசி விக்கெட்டுக்கு 84ம். வாழ்க்கைல நான் மொதலும் கடைசியுமா அடிச்ச ( பாரதி காலனி வினாயகரால் அடிக்க வைக்கப்பட்ட.. ) 6 அதுதான். அடிச்சு முடிச்சு ஆரவாரமெல்லாம் முடிஞ்சும் அரை மணி வரைக்கும் கையெல்லாம் நடுங்கிட்டு இருந்தது இன்னும் ஞாபகமிருக்கு!

ம்ம்ம்... அதுக்கப்பறம் பைனல்சு மேட்சுக்கு விதவிதமா பிராக்டீசுன்னு எடுத்து, டைவிங் கேச்செல்லாம் பழகி, தொட்டுவிட்டு ஓடி சிங்கிள்ஸ் எடுக்கறதெல்லாம் நடத்திப் பார்த்து, வெள்ளை வெளேர்னு வைட் அண்ட் வைட்டுமா போயி, பைனல்சுல மொதல்ல பேட்டிங் எடுத்ததும், போன மேட்ச்சு சிக்ஸ்சரை வைச்சே டீமுக்குள்ள அரசியல் செஞ்சு நான் ஓபனிங் எறங்குனதும், மூனாவது பந்துல லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது "ஸ்லிப்பு"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும் (யோசிச்சுப்பாருங்க என் திறமையை! ஒலகத்துல எவனுமே இந்த மாதிரி அவுட்டு ஆனதா வரலாறு கிடையாது! ), அப்பறமா நாங்க 12 ஓவருக்கு மேல கையில, காலுல, மூஞ்சியில எல்லாம் அடிவாங்கி நின்னும் தாக்குப் புடிக்க முடியாம 36க்கு ஆல் அவுட்டு ஆனதும், அந்த பிக்காரிப்பயக வெரல் நகத்துல கூட அழுக்குப்படாம அஞ்சாவது ஓவருல மேச்சை முடிச்சு கோப்பையை தூக்கிக்கிட்டு போனதுபின்னான துக்கம் இப்ப நினைச்சாலும் தொண்டைய அடைக்குது. எனக்கு என்ன தோணுதுனா.. எங்க டீமுல இருந்த எவனோ ஒரு அல்லக்கை மொத்தக் கதையையும் ஜஸ்ட் ஒரு சிங்கிள் தேங்கா பன்னுக்கு ஆசைப்பட்டு எழுதிக் குடுத்திருந்தாதான் இது சாத்தியம்!

உணர்ச்சி வசப்பட்டு காபிரைட்டு கேசு போடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான தகவல்களை திரட்டும்போதுதான் நம்ப P.வாசுவும் சந்திரமுகி கதை அவரோடதுன்னும் அதை ஹிந்தில அவரைக் கேக்காம எடுக்கக் கூடாதுன்னும் கேசு போட்டிருக்கறதா தெரியவந்துச்சு. சரி இது தெரிஞ்சப்பறமும் நாம காப்பிரைட்டு வழக்குன்னு போனா இருக்கற கொஞ்ச நஞ்ச மானமும் மிஞ்சாதுங்கறதாலயும், புது டைரக்டரு வெங்கட்டு நல்லா படமெடுத்திருக்கறதாலயும் மறப்போம்... மன்னிப்போம்!

என்னாதான் அவரு விலாவரியா புட்டுபுட்டு வைச்சிருந்தாலும் எங்க டீமு சட்டதிட்டங்களை அவரால திரைக்கு கொண்டுவர முடியல! ( பின்ன.. அதையெல்லாம் எங்க டீமுக்குள்ள கொண்டு வர்றதுக்கே நாங்க தலையால தண்ணி குடிச்ச காலமது ) ஆகவே, எங்க மட்டையடி சட்ட திட்டங்க போனாப்போடுதுன்னு உங்களே உங்க பார்வைக்கு மட்டும்...

* 23 தப்படிகளுக்கு பிட்ச்சும் ஒன்னரை பேட்டுக்கு கிரீசும் இருக்குமாறு அம்பயரின் முன்னினையில் மட்டுமே அளக்க வேண்டும்.

* செகப்பு விக்கி கார்க் பால் தான் அப்ரூவ்டு அபிசியல் பிராண்ட். பாதி மேச்சுல பந்து விரிசல் விட்டாலும் அதுலயே வெளையாடலாம். சில நேரம் கால்வாசி பேர்ந்துபோனாக்கூட வைச்சு சமாளிக்கலாம். ஆனா பாதியா ஒடைஞ்ச பந்து நிச்சயமா அனுமதிக்கபட மாட்டாது.

* டாஸ் போடறதுக்கு படம் போட்ட காசு கூடாது. ஹெட்டா டெயில்ஸா ன்னு இங்கிலீசுல கேக்கற வாய்ப்பு இருக்கறதால குழப்பமாகி ஆரம்பமே சண்டையில் ஆரம்பிக்காம இருக்க கண்டிப்பா ஒரு சைடு நம்பரும் அடுத்த சைடு சிங்கத்தலையும் இருக்கனும்.

* டாஸ் போடற எடத்துல காப்டனுக்கு மட்டுமே அனுமதி. டாஸ் ஜெயிச்சப்பறம் ஒடனே பேட்டிங்கா பவுலிங்கான்னு முடிவு சொல்லிறக் கூடாது. திரும்ப வந்து டீம் மக்களோட ரெண்டு நிமிசம் விவாதிச்சுத்தான் முடிவை சொல்லனும். அப்பத்தான் ஒரு கெத்தா இருக்கும். கூடவே, நம்மகிட்ட ஏதோ ஒரு சதித்திட்டம் இருக்குன்னும் எதிரணி மெரளும்.

* கையிலோ காலிலோ அடிபட்டா பிச்சுலயே அழுது டீம் மானத்த வாங்கக்கூடாது. அட்ரிட்டெய்டு கேட்டு வாங்கிட்டு வெளிய வந்து வெச்சுக்கலாம் ஒப்பாரிய...


* ஓவருக்கு 3 வைடுதான் போட அனுமதி. மூணு பாலுக்குள்ளயே மூணு வைடும் போட்டுட்டம்னா அது பேபி ஓவராக மாற்றப்படும். இல்லைன்னா அடுத்த ஸ்பெல்லு கிடையாது. பந்து பயங்கறமா ஸ்விங்கு ஆகறதாலதான் வைடு போகுதுங்கற கதையெல்லாம் எடுபடாது! ( எங்க கேப்டனு முரளி கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை! ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய்! )

* ஒரு வாரத்துல ஒரு தடவைதான் அவுட்டு ஏமாத்த அலவ்டு. அதுக்கு மேல என்ன சண்டை போட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது! ( From History: க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது.)

* மேட்சுக்கு ரெண்டு பேரு வீட்டுல இருந்து ஒரு கொடம் தண்ணியும் டம்ளரும் கொண்டுவர்ற வேலைய ஏத்துக்கனும். பயக காட்டுத்தனமா கண்டமேனிக்கு கொடத்துகுள்ள கைய விட்டு தண்ணி அழுக்காச்சுன்னா அதுக்கும் அவங்களே பொறுப்பு.

* ரெண்டு சைடுலயும் ஒரு ஓவருக்கு ஒரு தடவைதான் ஸ்கோர் கேட்க (ஸ்கோர் ப்ளீஸ்ஸ்... )அலவுடு. சும்மாச்சும்மா ஓவ்வொரு பந்துக்கும் ஸ்கோர் கேட்டு எழுதறவனை கொழப்பக்கூடாது.

* டீமுக்கு 11 பேரு வேணுங்கறதெல்லாம் கட்டாயம் கிடையாது. மேச்சுக்கான பேச்சுவார்த்தையின் போது ஏழு பேருக்கு ஏழுன்னு ஒத்துக்கிட்டம்னா அதுக்கப்பறம் மேச்ட் ஆரம்பிச்ச பெறகு ரெண்டு பேரு சொல்லாம கொள்ளாம அப்பீட்டு ஆயிட்டானுங்கன்னா அது அவுங்க பாடு. ஏழுக்கு அஞ்சுபேருன்னே மேட்சு தொடரும். ஒன்மேன் காஜி வேண்டுமா இல்லாங்கறதும் இதைப்பொறுத்தே முடிவெடுக்கப்படும்.

* டீமில் பொதுவிலிருக்கும் கொட்டைகார்டை கண்டிப்பாக அண்ராயருக்கு மேல்வைத்துதான் உபயோகப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அண்ராயருக்கு உள்ளே வைச்சு உபயோகப்படுத்தக் கூடாது!

* ரன் அவுட்டுகளில் கனெக்சன் அவுட்டு உண்டா என்பதனை மேட்சுக்கு முன்னதாகவே பேசி முடிவு செய்துக்க வேண்டும். அதே போல கிரீசுக்கு உள்ளே ரீச்சானமா இல்லையா என்பதை பேட்டு செம்மண்ணில் கிழித்த கோட்டைக்கொண்டு நிரூபிக்கும் பொறுப்பு பேட்ஸ்மேனுக்கே உண்டு. இல்லையெனில் பேட்டு Airல் இருந்ததாகவே கருதப்பட்டு அவுட்டு கொடுக்கப்படும்.

* பேட்டுக்கு கிரிப்பாக சைக்கிள் ட்யூப்பு வாங்கி மாட்டுவதும், ஆயில் சீசன் செய்து வைப்பதும் ஓபனிங் பேட்ஸ்மேன்களது பொறுப்பு. மேட்சில் அரைபிளேடுகளுக்கு மேல் ஒடைஞ்ச பேட்டுக நாட் அலவுடு.

* எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் அம்பயரை கெட்ட வார்த்தைகளில் திட்டாமல் கண்ணியம் காக்க வேண்டும். ஏனெனில், அம்பயரும் இதே காட்டுக்கும்பலில் இருந்த வந்த ஆளாகையால் அவரால் அதிகப்பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் நடுவுநிலமையா இருக்கமாதிரி நடிக்க முடியாது. ( ஒரு முறை பாதி மேட்சில் LBW கொடுக்க மறுத்த அம்பயர் ஆவரம்பாளையம் வெல்டிங் பட்டரை ஓனர் அன்பர் காத்தமுத்துவைப் பார்த்து "நீயெல்லாம் எப்படியா அம்பயரான? LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்! )

* தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே கிரவுண்டில் ஒரே நேரத்தில் 5 மேட்சுகள் நடக்கும்படி அமையும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் பிச்சுக்கு குறுக்காக ஓடிவந்து பவுலிங் போடும்படி தமது பிச்சுகளை அமைத்துக்கொள்ள கூடாது.

* மேட்சு முடிவில டீம் காசுல எல்லாத்துக்கும் ஒரு டீ அல்லது ரஸ்னா பாக்கெட்டும் கூட தேங்கா பன்னு அல்லது முட்டை பப்ஸ் மட்டுமே அலவ்டு. அதுக்குமேல தீனிக்கு ஆட்டைய போட்டா அது தட் தட் மேன் தட் தட் மணியின் கீழ் வரும்.

* * * *

இதுபோக என் கடந்த கால மட்டையடி விளையாட்டின் வரலாற்றை கொசுவத்திச்சுருளாக பதிந்துவைத்திருக்கும் மற்ற இடங்கள் பின்வருமாறு:

1. மனசுக்கு நேர்மையாய்...

2. எனக்கு வராத காதல் கடிதம்

( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா? எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்! )

ஞாயிறு, மே 13, 2007

ரிசர்வேஷன்


காலங்கார்த்தால ஏழரை மணிக்கெல்லாம் இப்படி வந்து ரயில்வே ஸ்டேசன் க்யுல நிக்கனுங்கற தலைவிதியை நினைச்சாலே கடுப்பாத்தான் இருக்கு. 15 நாள் லீவுல ஊருக்கு வரலாம்னு ப்ளான் எல்லாம் பக்காவா ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிருந்தேன். கடைசி நேரத்துல ஆபீஸ்ல பிராஜெக்ட் டெலிவரி டேட்ல வைச்ச ஆப்புல வாங்கி வைச்ச வரமான லீவு ஒரு வாரம் தள்ளிப் போனதுல எல்லா ப்ளானும் மொத்தமா ஊத்தி மூடிக்கிச்சு. வாங்கி வைச்ச உள்ளூரு ரயில் டிக்கெட்டுகளையெல்லாம் கேன்சல் செஞ்சிட்டு வேற டிக்கெட்டு எடுக்கலாம்னா எல்லா ட்ரெய்னும் ஒரு வாரத்துக்கு டிக்கெட்டு கெடையாதுன்னு துண்டை விரிச்சிட்டானுங்க. தட்கால் டிக்கெட்டுதான் இப்போதைக்கு ஒரே வழி. வந்து எறங்குன கையோட பொண்டாட்டி புள்ளைங்களை சென்னைல மாமியாரு வீட்டுல விட்டுட்டு அங்க ரெண்டு நாளு சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் தலையைக் காட்டிட்டு மொத்தமா சேல்ல வாங்கிட்டுப் போன ஃபோஸ்டர் சாக்லேட்டுகளை விநியோகம் செஞ்சுட்டு கோவைக்கு தனியாத்தான் வந்தேன். ஃபாரின் ரிட்டர்ன்னு தெரிஞ்சப்பறமும் இந்தியா எங்களை சும்மா விட்டுருமா என்ன? அதே தான். தண்ணி ஒத்துக்காம பொண்டாட்டி புள்ளைங்களுக்கு 4 நாளா காய்ச்சல். இதனாலயே வேண்டிக்கிட்டபடிக்கு திருப்பதிக்கும் போக முடியலை. நாக்கை அடக்க முடியாம அந்தக்கால நியாபகத்துல கிராஸ்கட் ரோட்டுல சேட்டுக் கடைல பானிபூரியை ஒன்னுக்கு ரெண்டா சாப்பிடப்போக அது ரெண்டுக்கே ஒன்னுக்குப் போற மாதிரி நிக்காம ரெண்டு நாளைக்கு கலக்கி அடிச்சிருச்சு. 7 நாளு ஓடிப்போச்சு. ஹிம். இப்ப எல்லாம் ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வர்றதே பெரும்பாடா இருக்கு.

வந்து இறங்குனதுல இருந்து ஆரம்பிச்ச இம்சைக இன்னும் கொறைய மாட்டேங்குது. கஸ்டம்ஸ்லயே மொத இடி. "என்னா சார்? டாலர்ல சம்பாதிக்கறீங்க...எங்களையும் கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க சார்... இல்லைன்னா ஆபீசர் புல் அமவுண்ட்டு கட்டச் சொல்லுவாரு"ன்னு கூசாம கேக்கறானுங்க. நாசமாப் போறவனுங்க. கஷ்டப்பட்டு நாம சம்பாதிக்கறதுக்கு இவனுங்களுக்கு அழனுமாம். கேட்ட பத்தாயிரத்துக்கு பேரம் பேசி அஞ்சாயிரம் அழுது வெளிய வர்றதுக்குள்ளயே டென்சன் பீக்குல ஏறிக்கிச்சு. என்ன சிஸ்டம் வைச்சிருக்கானுங்களோ? ச்சே... கஸ்டம்ஸே இப்படி இருந்தா நாடு உருப்படுமா? இவனுங்க இப்படி கொள்ளையடிக்கறதாலதான் இண்டியா இன்னும் இப்படியே இருக்கு. நல்ல ரோடு இருக்கா? படிப்பு வசதி இருக்கா? ஒன்னுத்துலயும் முன்னேறாம அப்படியே சாணி பிடிச்சு வைச்சா மாதிரி இருக்கு. இவ்வளவு கொள்ளையடிக்கறாங்களே? ஏர்போர்ட்டாவது நல்லா இருக்கா? இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டாம். சந்தக்கடை மாதிரி இருக்கு! வர்ற பாரீனர்ஸ் நம்ப கண்ட்ரிய பத்தி என்ன நினைப்பாங்க? ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷனே இப்படி இருந்தா அப்பறம் நாடு எப்படி உருப்படும்?


இப்ப எல்லாம் ஏண்டா இப்படி கஷ்டப்பட்டு ஊருக்கு வரணும்னு இருக்கு. மொத தடவை திரும்ப வந்தப்ப இருந்த சந்தோசத்துல துளிகூட இப்பவெல்லாம் இருக்க மாட்டேங்குது. பழைய பாரின் ரிட்டர்ன்னு கெத்தெல்லாம் இப்போ வேலைக்கே ஆவாது போல. வீட்டுக்கு ஒரு மரம் நடறாங்களோ இல்லையோ வீட்டுக்கு ஒரு பையனோ பொண்னோ தனது பாஸ்டன் வீட்டையோ டெக்சாஸ் ஆபீஸ் பில்டிங்கையோ கூகிள் மேப்புல தெளிவா காட்டி வைச்சிருக்காங்க. இண்டியன் வெஜிடபிள்ஸ்சை எப்படி தேடி வாங்கறோங்கறதையும், தீவாளி கொண்டாட்டக் கதைகளையும் கேக்க யாருக்குமே இன்ரஸ்ட்டு வர்றதில்லை. அவங்களைச் சொல்லி என்ன? எங்க வீட்டுலயே அதே கதைதான். வத்தக்கொழம்பை தீச்சதுல இருந்து பொண்ணை ஸ்கூல்ல சேர்த்துனது வரைக்கும் போன்ல கதையா சொல்லி முடிச்சாச்சு. இப்போ வீட்டுக்கு வந்தப்பறம் அப்பாம்மா கிட்டயே ஒரு மணி நேரத்துக்கு மேல பேச விசயம் இருக்க மாட்டேங்குது. ஒரு நாளைக்கு வர்றப்போற நாலு பேரு கிட்டயாவது "சவுக்கியமா இருக்கீங்களா?, அண்ணன் பையன் என்ன படிக்கறான்? உங்க கொழந்தையா இது? இப்படி வளந்துட்டா!" ன்னு பல்லை இளிச்சிக்கிட்டு செயற்கையா பேசற கொடுமை இருக்கே... Such a Bullshit!

ஒரு காலத்துல ஜமா போட்டு திரிஞ்ச பசங்களைக்கூட இப்பவெல்லாம் பார்த்துப்பழக முடியறதில்லை. அவனவனுக்கு அவனவன் வேலையாம்! ரெண்டு வருசம் கழிச்சு வர்றமே வந்து பார்க்கலாம்னு இல்லை. "மாமே! சவுக்கியமா.. எப்படி இருக்க? வேல ஜாஸ்திடா.. வேணா வீக்கெண்டு ல பார்க்கலாம்'னு தண்ணிப் பார்ட்டிக்கு மட்டும் தெளிவா அடியப் போடறனுங்க. வாங்கிட்டு வர்ற பாடிஸ்ப்ரேக்கு இது பேசறதே அதிகம்னு நினைப்பு போல! எப்படியும் ஊருக்கு வந்தா இவனுங்க கூட ஒரு தடவை தண்ணியடிக்கனும். ரெசிடென்சிக்கு போனா ரெண்டு ரூவாய்க்கு குறையாம பழுத்துரும். 50 டாலரு! போதாதா என்ன? வேற என்னத்த செய்ய முடியும்?

நேத்து நைட்டு அவனுங்களோடதான் பார்ட்டி. அதே கும்பல். அதே ரெசிடென்சி. பழைய காலத்து பிகருங்க கதையெல்லாம் பேசி சிரிச்சு, வீட்டு கஷ்ட நஷ்டங்களை மேலாக்க அக்கறையுடன் கேட்டுக்கிட்டு, நடுநடுவுல புதுசா வந்த சினிமாக்களை தொட்டுக்கிட்டு பேச்சு 12 மணி வரைக்கும் போனது. சேட்டுக்கடை பேதி மேட்டரை சொன்னா சிரிக்கறானுங்க.

"மாப்ள... இதே பீளமேட்டு முக்குல வாரத்துக்கு ரெண்டு தடவ முட்டை போண்டாவும் மொளகா பஜ்ஜியும் தின்னவன் நீ! இப்ப என்னா பாரீனர் மாதிரி படம் போடறே?"ங்கறானுங்க. நான்சென்ஸ். அந்தக் காலத்துல அப்படி இருந்தா இப்பவும் அப்படியே இருக்கனுமா என்ன? முன்னேறாத நாட்டுல இருந்துக்கிட்டு நார்மல் ஆவரேஜ் லைப்னா என்னன்னு கூட இவனுங்களுக்கு தெரியலை. இதே என்னோட ஊரா இருந்தா இன்னேரம் கடைய மூடி ஸீல் வைச்சிருப்பானுங்க. ஜனங்க ஹெல்த் மேல கூட கொஞ்சமாவது அக்கறை இல்லாத நாடாத்தான் இன்னும் இருக்கு! ஒரு சிஸ்டம்? ஏதாவது ஒரே ஒரு சிஸ்டம் ஒழுங்கா ஒர்க்காவுதா? எல்லாத்துலயும் பிராடுத்தனம். ப்ரைபரி. ஒருத்தனுக்கும் பேட்ரியாட்டிசமே இல்லை. இருந்தா இந்த நாடு இப்படி இருக்குமா? ஒரு 15 நாளு சந்தோசமா வந்து போக முடியலை! இதெல்லாம் ஒரு என்னைக்கு உருப்பட்டு என்னத்த செய்ய?

வீட்டம்மாவும் புள்ளைங்களும் இன்னைக்கு காத்தால இங்க வர்றாங்க. சேரனும் கிடைக்கலை. நீல்கிரீஸ்லயும் டிக்கெட்டு இல்லை. வேற ஏதோ ஒரு வண்டி. 9 மணிக்கு வந்து சேரும்போல. நான் அதுக்குள்ள ரெண்டு நாள் கழிச்சி திரும்ப போறதுக்கு சேரன்ல தட்கால்ல டிக்கெட் எடுக்கலாம்னு இப்ப இங்க வெயிட்டிங். 8 மணிக்கு கவுண்ட்டரு திறந்து அஞ்சே நிமிசத்துல எல்லா டிக்கெட்டும் முடிஞ்சிருமாம். ஏழுமணிக்கு மப்பு இன்னும் முழுசா தெளியாம தலைவலியோட வந்தா திறக்கவே ஆரம்பிக்காத கவுண்ட்டருக்கு க்யு கட்டி நிக்கறானுங்க. 7.50க்கு டோக்கன் குடுப்பாங்களாம். அந்த நம்பரை வாங்கிக்கிட்டு நின்னா 8.05க்குள்ள டிக்கெட்டு கெடைச்சா உண்டு. இல்லைன்னா, KPNக்குதான் போகனும். புள்ளைங்களை வைச்சுக்கிட்டு பஸ்ல சென்னை வரைக்கும் போறத நினைச்சாலே இன்னும் எரிச்சலா இருக்கு. எப்படியாவது இந்த டிக்கெட்டை வாங்கிட்டம்னா ஒரு தலைவலி மிச்சம்.

காருக்கு 5 ரூவா பார்க்கிங் டிக்கெட்டாம். பழைய டோக்கனை வைச்சுக்கங்கன்னு ஏற்கனவே குடுத்து வாங்குனதுல பழைய வண்டி நம்பரை அடிச்சுட்டு என்னுதை எழுதிக்கிட்டு 3 ரூவா மட்டும் வாங்கிக்கிட்டான். என்ன பிராடுத்தனம் பாருங்க. காலங்கார்தாலயே ஆரம்பிச்சிட்டானுங்க. ஒரு சிஸ்டம் கூட இங்க ஃபூல்ப்ரூப் இல்லை. மிச்சமான ரெண்டு ரூபாய்க்கு பிளாட்பாரம் டிக்கெட்டை வாங்கிக்கிட்டு ஏழரைதானே ஆகுது. எவன் இருக்க்கப் போறான்னு நினைச்சுக்கிட்டு ரிசர்வேவன் செய்யற இடத்துக்கு வந்தா எனக்கு முன்னாடியே மக்கா வந்துட்டானுங்க.

எரிச்சலோடு முன்னாடி எத்தனை பேரு இருக்கானுங்கன்னு எட்டிப் பார்த்தேன். சரியா 12 பேரு! போச்சுடா! நான் 13வது ஆளா? இன்னைக்கு வெளங்குனாப்புலத்தான். வந்து வரிசைல நிக்கறதே மறுபடியும் எரியுது. இம்மாம் பெரீயா ரயில்வேஸ்னு சொல்லிக்கறானுங்க. Demand Vs supply யக் கூடவா சரியா மேனேஜ் பண்ண மாட்டானுங்க? அதுசரி! லல்லு மாதிரி காட்டானுங்களையெல்லாம் மினிஸ்டரா போட்டா அப்பறம் இந்த லச்சணத்துல இருக்காம வேற எப்படி இருக்கும்? ஒலகத்துல அங்கங்க 500KM வேகத்துல ரயில் ஓடுது. இங்க ரயில்வே ஆரம்பிச்சு 100 வருவம் ஆச்சு. 50KMக்கு ஓட்டறதுக்கு கூட துப்பில்லை. என்னத்த டெவலப் ஆகி என்னத்த உருப்பட்டு?

வரிசைல ஒருத்தன் நாலாவதா காக்கி பேண்ட்டு போட்டுக்கிட்டு சாயம்போன பனியனோட கையில நாலு பார்ம் வைச்சுக்கிட்டு நிக்கறான். ஒரு ஆளுக்கு ஒரு பார்ம்தான் அலவ்டு. இவன் மட்டும் எப்படி நாலு பாரம் வைச்சிருக்கறான்னு தெரியலை. ஆளைப் பார்த்தா சென்னைக்கு வித்தவுட்ல போற மாதிரி இருக்கறான். இவனா இத்தன டிக்கெட்டு வாங்கப் போறான்? எனக்குள்ள இருந்த அன்னியன் சிலிர்த்துக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.

"ஹலோ! ஒரு ஆளுக்கு ஒரு பார்ம்தான். நீயே நாலு வைச்சிருந்தா எங்களுக்கெல்லாம் டிக்கெட்டு கிடைக்கறதா.. வேண்டாமா?" சரியான நியாயத்துடன் தான் கேட்டேன். அவன் சொன்னதை கேக்காத மாதிரி அந்தப் பக்கம் திரும்பிக்கிட்டான்.

"எல்லாம் டிராவலர்ஸ் ஏஜண்டுங்க குடுக்கறது சார். வரிசைல நிக்கறதுக்காக இந்த மாதிரி ஆளுங்களை ஏற்பாடு செஞ்சி நிக்க வைச்சிருப்பானுங்க. டிக்கெட்டுக்கு அஞ்சோ பத்தோ கெடைக்கும் போல... அவசரமா டிக்கெட்டு வாங்கறதுக்குத்தான் தட்கால் ஆரம்பிச்சாங்க... இவனுங்க அதுலயும் சம்பாதிங்கறானுங்க" ன்னாரு எனக்கு முன்னாடி நின்ன ஆளு.

"அதெப்படி சார். கவுண்ட்டர்ல கேக்க மாட்டாங்களா?"

"நீங்க வேற... உள்ள இருக்கறவங்களுக்கும் காசு போனாலும் போகும். இவனே இங்க எதானா வேல செய்யற ஆளாத்தான் இருப்பான். எல்லாம் உள்ளுக்குள்ள டீலிங்கா இருக்கும் பார்த்துக்கிடுங்க..."

எனக்கு திரும்பவும் டென்சனாக ஆரம்பித்தது.

'யோவ். இத்தனை பேரு நிக்கறமில்லை. நீ மட்டும் நாலு பார்ம் வைச்சிருக்கற?"

"சாரே! எல்லா ஃபாரத்துக்கும் ஆளுங்க வருது. நானும் ஒனுக்கு மின்னாடியே வந்து வரிசைல தானே நிக்கறேன். அப்பறம் என்னாத்துக்கு சவுண்டு விடற?" ன்னான் என்னை திரும்பிப் பார்த்து.

"சும்மா சொல்லறானுங்க சார். கடைசி வரைக்கும் இவனேதான் நின்னு டிக்கெட்டு வாங்குவான் பாருங்க..." இது முன்னாடி நின்னவரு.

இது போதாதா எனக்கு? "யோவ். மரியாதையா பின்னாடி போய் நில்லு.. நீயே அத்தன டிக்கெட்டு வாங்குனா நாங்க என்ன இளிச்ச வாயங்களா?"ன்னு ஒரு கொரலு விட்டேன். "அதானே! போய் பின்னாடி நில்லப்பா..."ன்னு என்கூட இன்னும் ரெண்டுபேரு சேர்ந்துக்கிட்டாங்க.

அதுக்குள்ள ஒருத்தன் வந்து எல்லோரும் பார்க்கவே இன்னொரு ஃபார்மை அவன்கிட்ட குடுத்துட்டு போனான். எனக்கு கோவம் தலைக்கு ஏறிடுச்சு.

"டேய்... என்ன வெளையாடறயா? இப்ப இன்னொருன்னு வேற வாங்கி வைச்சிருக்கற? ஒழுங்கா பின்னாடி போய் நில்லு.. இல்லைன்னா ரயில்வே போலீசை கூப்பிடுவேன்"

"உன் வேலையப்பாருங்க சாரே! நானும் லைனுல தானே நின்னு வாங்கறேன். அப்பறது என்னாத்துக்கு கூவற? நான் வாங்குறதுல உனக்கு என்னாத்துக்கு எரியுது?"ன்னான்.

இது போதாதா எனக்கு? கண்ணுக்கு முன்னாடி எனக்கு கிடைக்கப்போற டிக்கெட்டை ஒருத்தன் சிஸ்டத்தை ஏமாத்தி வாங்கப் பார்க்கறான். பார்த்துக்கிட்டு சும்மா இருக்கனுமா? இதுக்குள்ள என்னோட இன்னும் நாலு பேரு சேர்ந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு அவங்க டிக்கெட்டு கெடைக்காதோன்னு எரிச்சல்.

"போடா.. போய் பின்னாடி நில்லு"ன்னு வரிசைல இருந்து தள்ளி விட்டோம். அவனும் சும்மா இல்லை. "என்னய்யா மேல கைய வைக்கறீங்க? நீ யாரு என்னக் கேக்கறதுக்கு?"ன்னு திரும்பத் திரும்ப லைனுக்குள்ள வந்தான். இந்த தள்ளுமுள்ளுலயும் சத்தத்துலயும் நெஜமாவே ஒரு ரயில்வே போலீசு கையில குச்சியோட வந்துட்டாரு.

"தள்ளுங்கய்யா.. என்னாங்க இங்க தகறாறு?"

'சார்... தட்கால் டிக்கெட்டுக்கு அஞ்சாரு ஃபாரம் வச்சுக்கிட்டு நிக்கறான். கேட்டா நம்பளையே என்னாங்கறான். என்னான்னு கேளுங்க"

"சார், நானும் லைன்லதான் நிக்கறேன்..' இது அவன்.

"இல்ல சார்... இப்பக்கூட அந்த டிராவல் ஏஜண்டுக்கிட்ட இன்னொரு பாரம் வாங்குனான். இவனுங்களுக்கெல்லாம் இதே பொழப்பு. நாங்க எல்லாம் டிக்கெட்டு எடுக்கறதா வேண்டாமா?"... இது முன்னாடி நிக்கறவரு.

"அட விடுங்கப்பா.. ஏதோ கொஞ்சம் சில்லறை வரும்போல.. சம்பாதிச்சிட்டு போறான்.." இது போலீசு.

"அதெப்படி சார்.. எங்களுக்கு டிக்கெட்டு கிடைக்க வேண்டாமா? பிராடுத்தனம் பண்ணறான். பார்த்துட்டு சும்மா இருங்கறீங்க" இது கோரஸ்...

'டேய்.. வாடா.. வெளில வாடா... இத்தன பாரமாடா வைச்சிருக்க... சும்மா விடுவாங்களா?" - இது போலீசு..

"சார்... வரிசைலதான் சார் இருக்கறேன்.... பாரத்துக்கெல்லாம் ஆளுங்க வருது சார்..." அவன் சொல்லச் சொல்ல "வாடா வெளீல.. காலங்காத்தால கழுத்தறுத்துக்கிட்டு.."ன்னு அவனை கழுத்துமேல கையாவைச்சு தள்ளிக்கிட்டு போனாரு போலீஸ்.

"விடுங்க சார்... கைய வுடுங்க சார்.."னு சொல்லிக்கிட்டே போனவன் சடார்னு திரும்பினான்.

'ஒம்மாள...ஓ.... பு...... சு..... ஓ..... எம்பொழப்புல எதுக்குடா மண்ணைப் போடற.."ன்னு ஆரம்பிச்சவன் இன்னும் கேவல கேவலமாய் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே போலீஸ்காரரு தள்ளத்தள்ள வெளியே சென்றான்.

எனக்கு தாங்கமுடியாத ஆத்திரமாயிருச்சு. ரத்தம் கொதிக்குது. அத்தனை பேரும் என்னையே பாக்காறாங்க

"விடுங்க சார்... படிக்காத ஆளுங்க வேற எப்படி பேசுவானுங்க... இவனுங்க கூட எல்லாம் வைச்சுக்கவே கூடாது" ங்கறாரு பின்னாடி நிக்கறவரு.

"பாஸ்ட்டர்ட்... என்ன பேச்சு பேசறான் பாருங்க... பாக்கறது ஏஜெண்டு வேலை.. இதுல நம்பளைத் திட்டறான் நாயி.." எனக்கு கையெல்லாம் டென்ஷன்ல நடுங்குது. அத்தனபேரு முன்னாடியும் எவன்னே தெரியாத ஒரு ஜந்துவிடம் திட்டு வாங்கியது பயங்கற அவமானமாப் போயிருச்சு.

அதுக்கப்பறமென்ன? அதே டென்ஷன்ல நின்னு டோக்கனை வாங்கிக்கிட்டு அதுக்கப்பறம் டிக்கெட்டும் கிடைச்சு வெளில வரவரைக்கும் அத்தனைபேரும் என்னையே பரிதாபமா பாக்கற மாதிரியே இருந்தது.

மெதுவா ரிசர்வேசன் ஆபீசைவிட்டு பிளாட்பாரத்துக்கு வந்தேன். நீல்கிரீஸ் சேரன் எல்லாம் வந்து போயிருச்சு. பொண்டாட்டி வர்ற ட்ரெயினு 9 மணிக்குத்தான் வந்து சேரும் போல. மணி எட்டரைதான் ஆகுது. தூக்கக் கலக்கத்தோடும், கண்ணுல பீளையுடனும், பல்லு வேளக்காம ஊத்த வாய்களுடனும் மொத்தமா ஒரு பெரிய கும்பலை இறக்கி விட்டுட்டு கெளம்புச்சு ஒரு வண்டி. எனக்கு இன்னும் ஆறலை. அந்த நாதாரிப்பய திட்டுனதுல இருந்து ஹார்ட்பீட்டே சரியில்லை. ரத்தம் கொதிச்சுக்கிட்டே இருக்கு. என்ன நாடுயா இது? ஒரு சிஸ்டம் ஒழுங்கா இருக்கா? எல்லாத்துலயும் ஏமாத்து... பிராடுத்தனம்.. நாடே பித்தலாட்டக் கண்ட்ரியா மாறீட்டு வருது. எவனுக்காவது அக்கறை இருக்கா? லேசாக தலை வலிக்க ஒரு காபி குடிச்சா நல்லா இருக்குமேன்னு ஸ்டாலை நோக்கி நடந்தேன். காபி வாங்கி திரும்புவதற்குள் குபுக்குன்னு கிளம்பியது நாத்தம்! 10 நிமிசம் நின்ன வண்டி கிளம்பறதுக்குள்ள காட்டுப்பயக காலைக்கடனை முடிச்சுட்டானுங்க போல! ச்சை... நிக்கற வண்டில டாய்லெட் போகக்கூடாதுங்கற காமன்சென்ஸ்சாவது இருக்கா? வீச்சம் தாங்காமல் வாங்கிய காபியை பாதிக்கு மேல் குடிக்க முடியாமல் வெறுப்பாக கப்போடு தூக்கியெறிந்தேன்.

ம்ம்ம்... உலகத்துலயே பெரீரீரீய ரயில்வேன்னு பேரு. ஒரு சுத்த பத்தமா இருக்கா? கேண்டீன்ல இருந்து கக்கூசு வரைக்கும் நாறுது. 10 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ அதுக்குக் கொஞ்சமும் குறையாம...

அந்த சண்டையையே நினைத்துக் கொண்டிருந்தால் தலைவலி அதிகமாகும் போல தோன்றியது. ஹிக்கின்பாதம்ஸில் ஒரு ஹிண்டுவை வாங்கிக் கொண்டு பென்ச்சில் வந்து அமரும் போதுதான் கவனித்தேன். இரண்டு பெண்கள் கூடையும் முறமுமாக காலையில் இருந்து வந்துசென்ற வண்டிகளில் இறக்குமதியான நரகலை அள்ள இரண்டு ஆண்கள் தண்ணீர் குழாயைக் கொண்டு பீய்ச்சியடித்தபடி நரகல் அள்ளிய இடத்தை கழுவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அவனைக் கவனித்தேன். மடித்துவிட்ட காக்கி பேண்ட்டும் சாயம்போன பனியனுமாய் அவன் தான். அவனே தான்! மீண்டும் எனக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.

நான் அவனைப்பார்த்து விட்ட ஒரு நொடியில் அவனும் என்னைப் பார்த்தான். என் முகத்தில் படர்ந்திருந்த குரூர புன்னகையை அவனும் கவனித்திருக்க வேண்டும். முகத்தில் சிறிய அதிர்ச்சிக்குப் பிறகு குனித்து கழுவ ஆரம்பித்தான்.

"அடச்சே! வெறும் பீயள்ளற ஆளா நீ? இந்த ரேஞ்சுல இருந்துக்கிட்டா என்னை கெட்ட வார்த்தைல திட்டின? பாஸ்ட்டர்ட்... இப்ப எனக்கு தெரிஞ்சிருச்சுடா... உன்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் எங்க வைச்சு அடிக்கனும்னு" என மனதில் கருவியபடியே...

..விடுவிடுவென நடந்து அடுத்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறி கழிவரையினுள் நுழைந்து பேண்ட்டை கழற்றி அமர்ந்து முக்க ஆரம்பித்தேன்.

* * * * *

Story inspired by the news http://in.rediff.com/news/2006/apr/27look.htm