சனி, ஏப்ரல் 15, 2006

பீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்...


"டேய் மச்சி! இந்த மடோனாங்கறது ஆம்பளையா பொம்பளையா!?" என்ற இந்த அதியற்புதமான கேள்வியினை கேட்ட என்னை தி.நகர் பாஸ்ட்புட் கடையின் ஓனர் ஓரத்தில் மிச்சத்திற்காக படுத்திருக்கும் ஜிம்மியை பார்க்கும் பார்வையைனை ஒத்த ஒரு லுக்கை விட்டு "மாங்கா மாதிரி வந்த இடத்துல மானத்தை வாங்காதடா!" என்ற என் நண்பன் சக்கரையின் பதிலின் மூலமாகத்தான் முதன்முதலாக மேல்நாட்டு இசையெனும் இன்பக்கடலில் என் கால்நனைப்பு நடந்தது! அவன் கோவைல GRG மெட்ரிகுலேசன். நான் கோபால் நாயுடு தமிழ்மீடியம் 11ஆவது! சாயந்தரம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தவிர வேறு எதற்கும் எங்களுடன் சேராத இந்த புண்ணியாத்துமா சக்கரை ஒரு முறை லட்சுமி காம்ப்ளெக்ஸ் முதல்மாடியில் இருக்கும் 'சிங்'ங்கான் கடைக்கு கேசட்டு ரெக்கார்ட் செய்ய என்னையும் கூட்டிச்செல்ல அங்கு வைத்து நான் கேட்ட கேள்வி தான் அது! அந்த நாள் வரைக்கும் எனக்கெல்லாம் தெரிஞ்ச இங்கிலீசி பாட்டுன்னா அது "சாலிடெர் ஃபார் ஸ்போர்ட்ஸ்.. சாலிடெர் ஃபார் சண்டே மூவீஸ்.. சாலிடெர்ர்ர்... சாலிடெர்ர்ர்ர்.." தான்! இந்த பாட்டுல ( ஹிஹி.. விளம்பரத்துல..) எல்லா வார்த்தைகளும் தெரிஞ்சதுங்கறதால மனசுல அப்படியே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு! எங்க கும்பல்லையும் சில பேரு இங்கிலீசு மீடியம் இருந்தானுங்க. அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்னா நாங்க இங்கிலீசு பரிச்சையை மட்டும் இங்கிலீசுல எழுதுவோம்! அவனுங்க எல்லா பரிச்சையையும் இங்கிலீசுல எழுதுவானுங்க.. தமிழை தவிர.. மத்தபடி வாங்கற மார்க்குல இருந்து வாத்தியாருகிட்ட வாங்கற உதைவரை எல்லாருமே ஒரே ரேஞ்சுதான். ஆனா இந்த சக்கரை ரேஞ்சே தனி! இஙகிலீசு புக்கு படிக்கறதும் இங்கிலீசு ப்டம் புரிஞ்சு பாக்கறதும் அவன் ஃபிரண்சுகளோட இங்கிலீசுலயே பேசறதுன்னும் ஒரு லெவல்லயே இருப்பான்! இவன் கூட இருக்கும்போது நாங்க பார்த்த இங்கிலீசு படத்தோட கதையைப்பத்தி பேசிக்கவே மாட்டோம்! அது ஜாக்கிஜான் படமா இருந்தாக்கூட! அவன் இல்லைன்னா "ஏண்டா.. டெமிமூர் ரோஜர்மூரோட தங்கசியாமே?! உனக்கு தெரியுமா"ங்கற ரேஞ்சுலதான் எங்க பொங்கல் இருக்கும்! இந்த ரேஞ்சுல இருந்த அவனை எங்க பொகையால ஒன்னும் செய்யமுடியாம ஆளு பார்க்க "ஆவாரம்பூ" படத்துல வர்ற வினீத் போல இருக்கவே இவனுக்கு நாங்க சக்கரைக்கு பேரு வைச்சு அதன் மூலமா அவனை தரவிறக்கம் செஞ்சு அதன்மூலமாக அவன் அடைந்த தகுதியை கணக்கில் கொண்டு மொத்தமா அவனை எங்க சங்கதுல சேர்த்துக்கிட்டோம் என்பதில் முடிஞ்சுபோனது அவனோட "ரேஞ்சு".


அன்னைக்கு வீட்டுக்கு வந்தவுடனே அவன்கிட்ட கெஞ்சிக்கூத்தாடி "ஒரே ஒரு கேசட்டு குடுடா"ன்னு கெஞ்சிக் கேட்க அவன் பொழச்சுப்போன்னு ஒன்னுக்கு ரெண்டா மடோனாவோட "Like a Prayer"ம் MJவோட "Bad"ம் குடுத்தான்! கொடுக்கும்போதே தெளிவா மாடோனாங்கறது பொம்பளைன்னும் மைக்கேல் ஜாக்சன்ங்கறது ஆம்பளைன்னும் சொல்லித்தான் கொடுத்தான்! அதுல ரெண்டாவது மட்டும் இன்னைக்கும் சந்தேகமா இருக்கு! :) அந்த ரெண்டு கேசட்டுகளையும் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்குள்ள எனக்கு புல்லரிப்பு தாங்கலை! மனசுக்குள்ள ஓரமா Solomon Grundyக்கு சித்தப்பா பையன் ஆகிட்டமாதிரியே ஒரு குஜாலு! வீட்டுக்கு வந்தவுடனே, எங்க அப்பா வீடுன்னா ஒரு டேப்ரிக்கார்டரு இருக்கனும் என்பதை தவிர வேறு எந்தவிதமான குறிக்கோளுமற்று எந்தக் காலத்திலோ வாங்கி வைத்திருந்த தீப்பெட்டிக்கும் சற்று பெரிய சைசிலிருக்கும் அந்த செவப்பு கலர் Sanyo செட்டை எடுத்துக்கொண்டு என் டேபிளுக்கு போய் ரெண்டு கேசட்டையும் போட்டு கேட்க கேட்க.. ஆஹா! மலபார் பீடியின் இழுக்க இழுக்க இன்பம் மாதிரி கேட்க கேட்க இன்பம்! அன்னைக்கு முழுக்க கேசட்டு கவருலு இருக்கற பாட்டு பேரையும் அதுதான் பாடுதாங்கற ஆராய்ச்சிலையுமே பொழுது போயிருச்சு! எங்க வீட்டு செட்டு "என் புருசந்தான்.. எனக்குமட்டும்தான்" பாட்டு போட்டாலே ஆயிரத்தெட்டு நடுக்கங்களோட 95 வயசு கெழவி பாடற எழவூட்டு அவுட்புட்டுதான் கொடுக்கும்! இதுல மடோனாவை நான் எப்படி கேட்டிருப்பேன்னு நினைச்சுப்பாருங்க!

ஆனா ஆரம்பம் தாங்க இப்படி! அதுக்கப்பறம் சக்கரை ஒருநாள் "Smooth Criminal" டான்சை வீடியோல காட்ட கொஞ்சநாளைக்கு அந்த பைத்தியமாகவே ஓடுச்சு! கொஞ்சம் கொஞ்சமா MJல இருந்து George Michael, ABBA, BoneyM, Phil Collins, Elton john, Sting, Bruse Springston, Eagles, Prince னு கொஞ்சம் கொஞ்சமா ஞாலெட்ஜு விரிவாக ஆரம்பிச்சது! பாட்டெல்லாம் புரியுதோ இல்லையோ மெட்டு பீட்டு ரிதம் நல்லா இருந்தா போதும்! அது கூட குரலும் நல்லா இருந்துட்டா கேக்கவே வேணாம்! கொஞ்ச நாள்ல நாங்களே சொந்தமா சிங்கான் கடைக்கு போக ஆரம்பிச்சுட்டம்னா பாருங்களேன்! அப்போ சோனி கேசட்டு 40ரூபாய்! 5ஸ்டார் கேசட்டுன்னு ஒன்னு 25 ரூபாய்க்கு கிடைக்கும்! அதுல ரெண்டு வாங்கிக்கிட்டு சிங்கான் கடைல இருக்கற ஆல்பம் லிஸ்ட்டை எல்லாம் எடுத்து எங்களுக்கு தெரிஞ்ச பாட்டு, தெரியாத ஆளு, நல்லாயிருக்கும்னு நம்பற பாட்டு, சிங்கானையே கேட்டு தெரிஞ்சுக்கறதுன்னு 2 மணிநேரம் கடைலயே பழியாக்கெடந்து 20 பாட்டுக்கு லிஸ்ட்டை தயார்செஞ்சு கொடுத்துட்டா சரியா மொத்தம் 200ரூபாய் குனீஸாயிருக்கும்! அது ரெக்கார்ட் ஆகி வர்ற வரைக்கும் நாலுநாளைக்கு மனசுக்குள்ள குறுகுறுன்னே இருக்கும்! அன்னைக்கு சாயந்தரம் கும்பலா காந்திபுரம் போய் கடைல கேசட்டை சிங்கானை ரெண்டு நிமிசம் போட்டுக்காட்ட சொல்லிட்டு அந்த மொத பாட்டை கும்கும்னு அவரு Kenwood செட்டுலயும் Bose ஸ்பீட்டர்லையும் (ரொம்ப நாளைக்கு போஸ் ஸ்பீக்கரு டூப்ளிகேட்டுன்னு எங்களுக்குள்ள வாக்குவாதம்! )கேட்டு வாங்கிக்கிட்டு அந்த எபெஃக்ட்டை பத்தி பொகையோட பேசிக்கிட்டே கிராஸ்கட் ரோட்ல சேட்டு கடைல பேல்பூரி சாப்டுட்டு வீடுவந்து சேருவோம்!

அன்னைக்கு எங்களுக்கு இருந்த குறைஞ்சபட்ச கனவெல்லாம் ஒரு நல்ல ஆயில் சீசன் செஞ்ச SG bat! ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம்! பைக் ஆசையெல்லாம் கூட பின்னாடிதான் வந்தது! ஒரு நாள் ராஜா Philips Powerhouse வாங்கியிருக்கான்னு தெரிஞ்சு மொத்தமா அவன் வீட்டுக்கு படையெடுத்து ஆசைஆசையா அந்த கருப்புகலர் பெரிய ஸ்பீக்கர்ல 800W PMPO எழுத்துக்களை தடவியபடியே அதுல பாட்டுக்கேட்டது இன்னும் நினைவிருக்கு! ம்ம்ம்.. அது ஒரு கனாக்காலம்! அதுக்குள்ள காலேஜு வந்துட்டோம்! என் காலேஜுல அவ்வளவா பீட்டரு பார்ட்டிங்க இல்லைன்னாலும் என் செட்டு பசங்க படிச்ச மெடிக்கல் காலேஜ் மூலமா அவனுங்களுக்கு நிறைய நார்த் மக்கள் ஃபிரண்ட்சிப் கிடைச்சது! அவனுங்க மூலமா கேட்க ஆரம்பிச்சதுதான் ஹெவிமெட்டல் , பவர்மெட்டல், டெத், டார்க், ஃக்ரேப்ட்ஒர்க் எல்லாம்! சும்மா ஜொய்ங்..ஜொயிங்னு பாஸ் கிட்டாரு இழுக்க டிரம்சு சும்மா பின்னி பெடலெடுக்க பாடல் வரியெல்லாம் யாருக்கு வேணும்? சும்மா உடம்புல் ரத்தம் ஜிவுஜிவுன்னு சூடேரும்! அதுக்கப்பறம் எந்த காலேஜ் விழாவுல எங்க இங்கிலீசு பாட்டு பாடற போட்டி நடந்தாலும் ஜரூரா போய் கும்பலா ஐய்க்கியாமாருவோம்! அதுவரைக்கும் மத்த பாட்டுக்குபாட்டு, Addsapp, quiz னு எல்லா போட்டிலையும் கீழ நின்னுக்கிட்டு ஒப்பாரி வைக்கறது, பெல்ட்டுல அடிச்சிக்கறது, சேர் மேல ஏறி பெல்டுலயே தூக்குல தொங்கறமாதிரி அல்லாடறதுன்னு அத்தனை பேரையும் காலாச்சுட்டு இருந்துட்டு RockShow வர்றப்ப மட்டும் சக்கரையோட சேர்ந்துக்கிட்டு Goodboyயா போய் அங்க பாடற ஹெவிமெண்ட்டல் பாட்டுக்கெல்லாம் முன்வரிசைல கைல விர்ட்சுவல் கிடாரை பிடிச்சுக்கிட்டு மாரியாத்தா மொத்தமா வந்து மேல ஏறிட்டாப்புல சாமியாடுவோம்! அதுவும் தெரிஞ்ச பாட்டா பாடிட்டானுங்கன்னா அவ்வளவுதான்! சிலநேரம் Axl Roseஆக்கூட மாறிடுவோம்!

ஒரு தடவை இப்படித்தான் குமரகுரு காலேஜுல ஒரு மல்லு ட்ரூப் நல்லா பாடறாங்கன்னு கேள்விப்பட்டு அவங்களை கோவை மெடிக்கல் காலேஜ் ஆண்டுவிழாவுக்கு போய்பேசி கூட்டிக்கிட்டு வந்தானுவ.. விசயம் கேள்விப்பட்டு மெடிக்கல் நார்த்தீஸ்க்கெல்லாம் ஒரே சந்தோசம். அந்த பேண்ட்க்கு இதுதான் முதல்தடவை ஃப்ரொபசனலா ஸ்டேஜ் ஏறுவது! நாங்களும் எங்களுக்கு புடிச்ச பாட்டுகளா ஒரு 30 பாட்டுங்க செலக்ட்செய்து கொடுக்க.. மக்கா அன்னைக்கு நைட்டு பின்னிட்டானுவ! கடைசி நாள் கடைசி நிகழ்ச்சியா தமிழ்பாட்டுக ஆர்கெஸ்ட்ரா 9 மணிக்கு முடிய 10 மணிக்கு பசங்க எல்லாம் சரியான 'சுதி'யோட வந்து இறங்க ஆரம்பிச்சதுய்யா மொதபாட்டு! Judas Priest டோட Painkiller! சும்மா கிட்டாரையும் ட்ரம்ஸ்சையும் பிச்சு மேஞ்சுட்டானுவ... இதுக்கப்பறம்தாம் நம்ப பீட்டரு மக்களுக்கே அன்னைக்கு நைட்டு வாழ்க்கைல ஒரு நம்பிக்கையும் பிடிப்பும் வந்தது! கோவைல அவனுங்க லெவலுக்கு எதுவும் கிடைக்காம காஞ்சு கெடந்தவுங்களுக்கு அன்னைக்கு நைட்டு ஒரு வரம்தான்! நைட்டு மூனு மணி வரைக்கும் 25 பாட்டாவது பாடியிருப்பனுங்க.. ஆடி ஆடி ஓய்ஞ்சுபோயி கைகாலெல்லாம் வலிக்குது! "காது... வலிக்குது.. வேணாம்..விட்டுரு!"ன்னு சொன்னாக்கூட அவனுங்க கேக்கறமாதிரியில்லை! வந்த சான்ஸ்சையும் கிடைச்ச ஆடியன்ஸையும் விடக்கூடாதுன்னு பாடிக்கிட்டே இருக்கானுவ! கடைசி வரைக்கும் ஒரு 50 பேரு தாக்குப்பிடிச்சோம்! அன்னைக்கு ஹைலைட்டே என்ன பாட்டுன்னு கேக்கறீங்களா? ட்ரூப்பு 10 பாட்டுக்கப்பறம் கொஞ்ச நேரம் கேப் விட, ஓல்டு மங்க் கொடுத்த நல்ல சுதில ஸ்டேஜ் முன்னாலயே கிர்ர்ரடித்துக்கிடந்த பழனியப்பன் "என்னடா? பாடறதை நிறுத்திட்டானுவ?"ன்னு திடீர்னு எழுந்து மைக்க பிடிச்சு "Sunday Sunday Holiday.. Monday Monday Working Day.. Friday Friday ****ing Day!" அவன் சொந்த சரக்கை எடுத்துவிட்டதுதான்! அப்படியே அப்ளாசை அள்ளிட்டான்! பாட வந்தவுங்களுக்கே சிரிப்பு தாங்கலை!

ம்ம்ம்.. இன்னைக்கும் நான் இங்கிலீசு பாட்டுகளை கேக்கறன்னா அது அந்த மெட்டு , பீட்டு, ரிதம் மற்றும் குரல்வளம்தான். எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டையும் இதுவரை முழுசா வரிக்குவரி புரிஞ்சு கேட்டது இல்லை! அதுநாளதான் மீனாக்ஸ்சோட பதிவுல நம்ப அண்ணாத்தே Pink Floyd பாட்டோட மொழிபெயர்ப்பை படிக்கச்சொல்ல நாம இத்தனை நாள் கேட்ட பாட்டுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கான்னு ஒரே ஆச்சரியமா போயிருச்சு! சரி விடுங்க! அர்த்தம் புரிஞ்சா ஒரு வேளை இந்த பாட்டுக எல்லாம் பிடிக்காம போயிருமோன்னு ஒரு பயம் இருக்கறதுனால இதுக்கு மேலையும் இப்படியே கேட்டுக்கறேன்! :)

மேல உள்ள போட்டோவை பார்த்து பயந்துடாதிங்க! அது அந்தக்காலத்து இளவஞ்சி CIT Harmony போகறதுக்காக ஹாஸ்டல்ல ரெடியாகறப்ப எடுத்தது! பின்னாடி பார்த்தீங்களா? காவித்துண்டு! அன்னைக்கு அகாசி கேப்போட உபாயத்துல அந்த ஹேர்ஸ்டைல்ல இருந்தேன்! இன்னைக்கு எதுவுமே இல்லாம அகாசியோட ஒரிஜினல் ஸ்டைல்ல இருக்கேன்! ஆட்டம் அதிகமானா அப்பறம் அடங்கறப்ப இதுதான் கதின்னு ஆண்டவன் அன்னைக்கே மெசேஜு சொல்லியிருக்காரு! நாந்தேன் கவனிக்கலை போல! :)

இத்தனையும் சொல்லிட்டு எனக்கு பிடிச்ச பாட்டுக சிலதை சொல்லலைன்னா எப்படி? அப்பத்திக்கு மூடுக்கு ஏத்தாப்புலதான் நம்ப பாட்டு லிஸ்ட்டு! இப்போ எங்காதுல பாடிக்கிட்டு இருக்கற ப்ளே-லிஸ்ட்டு இங்கே...

Nirvana - Smells like a teen sprit, Come As You Are
MLTR - Paint My Love
Paul Young - Living in the love of Common people
Ping Floyd - Dogs of War, Us and Them, Another Brick in the Wall
REM - Loosing my religion
Metallica - Unforgiven, fuel, I Dissapier
Guns'n'roses - November Rain, Please Dont Cry, Sweet Child of mine
Enigma - Child in Us, Push the Limits, I love you I kill you
MegaDeath - Symphony of Destruction
Aerosmith - Living on the Edge
Bryan Adams - Have You Ever Really Loved A Woman, Summer of '69
Eminem - Lose Yourself, 8 mile
Queen - Radio gaga, We'll rock you
Def Leppard-Have You Ever Needed Someone So Bad
Dr Alban - It's My Life
Europe - The Final Countdown
Scorpions - Still Loving You, Under the same sun
UB40 - CANT HELP FALLING IN LOVE
MICHAEL JACKSON - I Just Can't Stop Loving You
John Bon Jovi - Bed of Roses, Blaze of Glory
Savage Garden - To the Moon and Back, I want you
Lionel riche - Hello
Roxette - Shes Gotta Look
Chris Deburgh - Lady in Red , Last night
Modern Talking - brother Louie
Modonna - Frozen
George Michael - Father Figure
No Mercy - Please don't go
Cutting Crew -I Just Died In Your Arms
Mr. Mister - Broken Wings
Cher - All Or Nothing
White Lion - When The Children Cry
Backstreet Boys - Show Me the Meaning of Being Lonely
enrique - rythm divine
Police - Every breath you take
MC Hammer - U Can't Touch This

ஞாயிறு, ஏப்ரல் 09, 2006

Assertiveness...

மிழ்ப்பதிவுகளில் எங்கேயோ எதனையோ மேய்ந்து கொண்டிருந்தபோது படிக்கக் கிடைத்தது இது!

கடந்த ஒரு வருடமாக எனக்கு இந்த தமிழ்ப்பதிவுகளுடன் பரிச்சயம். வந்ததில் இருந்து இன்று வரை பலவகையான வாதங்களை படித்திருக்கிறேன். சிலவற்றில் பல விடயங்களை கற்றிருக்கிறேன். பலவற்றில் படித்துவிட்டு சலிப்புடன் நகர்ந்து சென்றிருக்கிறேன்! இணைய விவாதப் பதிவுகளைப் பொருத்தவகையில் நான் ஒரு வாசகன் மட்டுமே! விருப்பமில்லை என்பதைவிட எனக்கு அதில் சுத்தமாய் திறமையில்லை என்பதே முதற்காரணம்!

இங்கே அனைவரும் "எழுத்தாளர்கள்" என்றவகையில் ஒவ்வொரு வாதத்திற்கும் பின்னுள்ள நோக்கங்களையும் அதன்மூலம் நிறுவ முயலும் அவரவர் நம்பிக்கைகளையும் யாரும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையில் எந்தவித வெறுப்பும், கருத்துக்களை திணிக்க முயலும் வேகமும், அடுத்தவர் உணர்வுகளை காயப்படுத்தும் வார்த்தைகளும் எதுவுமின்றி அடுத்தவர் வார்த்தைகளால் சீண்டப்பட்டாலும் அதனை தன்மையாய் எதிர்கொள்ளும் விவேகமும், அழுத்தந்திருத்தமாக சொல்லவந்த கருத்தை தெளிவாக எடுத்துவைக்கும் பாங்குமாக இப்படியும் ஒரு பின்னுட்டம் இடமுடியுமா என்ற ஆச்சரியக்குறி இன்னும் எனக்குள் இருக்கிறது! இங்கு சொல்லப்பட்ட கருத்துக்களில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.. இருக்கும்!! நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவது கருத்துக்கள் சொல்லப்பட்ட முறையைப் பற்றி மட்டுமே! இதே பதிவில் நானும் ரோசாவசந்த் அவர்களின் ஒரு வார்த்தையால் தூண்டப்பட்டு அதற்கு எதிவினையாகவும் எதிரொலியாகவும்தான் என் கருத்தை உள்ளிட்டிருக்கிறேனே தவிர அவருக்கு என் நிலையை கருத்துக்களை தெளிவாக சொல்லவேண்டுமென்ற குறிக்கோளோ அறிவுமுதிர்ச்சியோ இருக்கவில்லை! தங்கமணி அவர்களது பின்னூட்டம் இன்றைக்குத்தான் இது எனக்கு படிக்க கிடைத்திருக்கிறது! என் உணர்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கே!

ம்ம்ம்.. வலைப்பதிவுகளின் மூலமாகவும் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! :)

ரோசாவசந்த் அவர்களின் சட்டி சுட்டதடா! (http://rozavasanth.blogspot.com/2005/12/blog-post.html) என்ற பதிவில் குழலி அவர்களது ஒரு முயற்சியைப் பற்றிய விவாதத்தில் தங்கமணி அவர்களது ஒரு பின்னூட்டம்!

"குழலியின் பதிவில் என்னுடைய பின்னூட்டம் குறித்து சில விளக்கங்களை அளிக்கவிரும்புகிறேன். முதலில் அப்படியொரு முயற்சியைக் குழலி செய்ய முனைவது எந்த வகையிலும் வரவேற்கத்தக்கது என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். பொதுவாக இராமதாஸ்-பாமக ஆகட்டும் திருமாவளவன் - விசி ஆகட்டும் ஒரு கேலிக்குரியதான பார்வையாலேயே மேட்டுக்குடி நடைமுறைகளை, பண்பாட்டை, விழுமியங்களை தங்கள் அடையாளங்களாகக் கொண்ட ஊடகங்களால் பார்க்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணங்களாக இக்கட்சிகளின் போராட்ட முறைகள், தலைவர்களின் நிறம் தொடங்கி, அவர்களது மொழி, உடை, சாதி, பழக்கவழக்கங்கள் இவைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டப்படுகின்றன. இவ்வாறு ஒரு பொதுவான உருவத்தை வெகுஜன ஊடகங்கள் மிக நுட்பமாக உருவாக்கும் வேளையில், தீவிர அரசியல் நோக்கங்கள் கொண்ட மேட்டுக்குடி இன்னொரு வழியாக இவர்களின் அரசியல் பங்குபெறலை எதிர்கொள்கிறது. இவர்களிடம் இருக்கும் சில போலித்தனங்கள், பொது அரங்கில் பேசக்கூடாததாக சித்தரிக்கப்படும் மொழியை பேசுவது (politically incorrect useage of language), சுயமுரண்கள், இவைகளை இவர்களுக்கு எதிராக திறம்படத் திருப்புவது அதன்மூலம் இவர்களைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உண்டாக்குவதும் ஒரு உத்தி. இதை நான் 'சோ' உத்தி என்றழைப்பேன். இதைப்பற்றிய விரிவாக எனது பொய்மை இகழ் (http://bhaarathi.net/ntmani/?p=91) என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த வகை நக்கலின் மூலம் இவர்களை எதிர்கொள்வதால் இன்னொரு நன்மையும் இருக்கிறது. மிக மோசமான இந்த இழிந்த கீழ்நிலைப்படுத்தும் விமர்சனத்தை நீங்கள் சட்ட ரீதியாகவோ, வன்முறையாலோ எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் அதன் மூலம் இந்த எதிர்ப்பு சக்திகள் மேலும் பலமும் பயனும் பெறவே அது உதவும். இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இவர்களுக்கு என்று எந்த அரசியல் தளமும் இல்லை. பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள். இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால் தி.மு.க கூட இதே மாதிரியான எதிர்ப்புகளை, நவீன தீண்டாமையைக் கடந்து வந்ததுதான். இன்று மரம்வெட்டி கட்சி என்று பமக கேலி செய்யப்படுவதைப் போல திமுக கூத்தாடிகள் கட்சி என்றே நக்கலடிக்கப்பட்டது. கூத்தாடிகள் எந்த வகையில் குறைந்தவர்கள் என்பது ஒருபுறமிருக்க, கூத்தாடிகளை முதலில் அரசியலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ் இயக்கம் தான். தியாகி விஸ்வநாத தாஸ் தொடங்கி எம்.எஸ் வரை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டது. பி.கே.சுந்தராம்பாள் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் காங்கிரஸ் இந்த வகையான கேலியைச் சந்திக்காமல் திமுக சந்திப்பது எந்தவகை அளவு கோலால் எனபது நீங்கள் அறிந்ததுதான். அப்படியே தலைவெட்டிக்கட்சிகளும் தலைப்பாகை தலை வெட்டிக்கட்சிகளும், கற்பழிப்பு சேனைகளும், கருக்குழந்தை கொல்லும் தளங்களும் அவ்வாறு விமர்சிக்கப்படாமல் மரம்வெட்டிக்கட்சி உருவாவது வேடிக்கையும் விபரீதமுமல்லவா?

இப்படியான ஒரு 'சோ' தனமான அணுகுமுறையே வலைபதிவிலும் பமக-விசி குறித்து வைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை எதிர்கொள்ளும் சில நபர்களும் அந்த சக்திகளை இன்னும் வலுப்படுத்தியும், இன்னும் சில இடங்களில் அவ்வணுகுமுறை இருத்தலுக்கான ஒரே சக்தியாகவும் மாறிப்போயினர். இந்த நையாண்டிக்காரர்களின் பலமே அதை எதிர்த்து வாதிடுபவர்களிடமிருந்துதான் பிறக்கிறது. இவர்களோடு வாதிடுவதன் மூலம் அவர்களுக்கென்று ஒரு தரப்பும் (நியாயமும்) இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை பெறுவதில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர். இந்த ஒரு விஷச்சுழலில் சிக்கி சுழன்றுகொண்டிருந்தவர்களில் குழலியும் ஒருவர் என்று நான் நினைத்தேன். அவரது அரசியல் கருத்துக்களில் ஒரு சாய்வு, சார்பு இருக்கலாம்; ஆனால் அதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்டவர்களது முன்னேற்றத்தைப் பற்றியது. அது கண்டிப்பாக விமர்சனத்துக்கு உரியதாய் இருக்கலாம். ஆனால் அது எந்த மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளாத, அடக்குமுறை அமைப்பை காப்பாற்ற கேளிக்கை சாமரம் வீசுவோரின் போலியான நச்சு விமர்சனத்தின் பக்கம் பக்கமாக வைத்து பார்க்கமுடியாதது. குழலி போன்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் உள்ள குறைகள், போதாமைகள், சார்புகள் அவர்களையும் விட வெகுமக்கள் அரசியலை முன்னெடுப்பவர்களாலேயே விமர்சிக்கப்படவேண்டும். ஏனெனில் அப்போது அதன் நோக்கம் இவ்வகையான அடித்தட்டு மக்களின் அரசியல்பார்வையைக் கூர்மைப்படுத்துவதாகவும், கோதுகளை அகற்றுவதாகவும் இருக்குமே அன்றி வெறும் காற்றில் கத்திவீசச்செய்து களைத்து ஓயவைப்பதாக இருக்காது.

இந்நிலையில் குழலி அம்மக்களைப் பற்றி எழுத முனைந்தது இந்த விஷச்சுழலில் இருந்து வெளியேறி வந்த ஒரு பெரிய நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். அவர் எழுதப்போவதை எப்படி விமர்சனத்துடன் வரவேற்கமுடியும்? அவர் எதையாவது எழுதட்டும்! அது சார்புடையதாகவே இருக்கட்டும். அது நியாயக்குறைவானதாக இருந்தால் அதன்மூலம் மக்களை நெருங்கமுடியாது என்பதை அவர் அறிவார். எச்சரிக்கைகளுடன் அவரை வரவேற்க என்ன அவசியம் இருக்கிறது! அவர் எழுதுவதை நிபந்தனையின்றி வரவேற்பது என்பது அவர் சொல்வதனைத்தையும் நிபந்தனையின்றி ஒத்துக்கொள்வதாகாது. இப்படியான வெறும் காற்றில் கத்தி வீசச்செய்யும் தூண்டுதல்களில் இருந்து தப்பி வந்ததே மிகவும் அபாயம் விளைவிப்பதாகும். ஏனெனில் அதன் மூலம் அவர் நக்கல் சக்திகளுக்கு இரையளிப்பதை நிறுத்தியிருக்கிறார். இதுவே நான் அவரை எழுதுமாறு வரவேற்றதின் பின்னுள்ள காரணமாகும். இதை விமர்சனத்தோடு செய்யவேண்டும் என்பதில் எதுவும் அர்த்தமிருப்பதாக் எனக்குத்தெரியவில்லை. "