ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை!
அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்!
இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது!
பதிவினை படிப்பவர்களுக்கு,
படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு தினம் ஒரு பதிவிடும் புண்ணியநிலை கிட்டும்! எப்பொழுதும் பதிவு மறுமொழி அளித்தவர் பட்டியலில் இருக்கும். பின்னூட்டம் வரவில்லையெனிலும் அதுவாகவே ஒரு 'test' பின்னூட்டம் இட்டு பட்டியலில் வரவைக்கும்! சைட்டு கவுண்ட்டர் ஒவ்வொரு வருகைக்கும் 100 என உயரும்! 5க்கு குறைவாக பின்னூட்டங்கள் இடுபவர்களது இடுகைகள் தாமாகவே அழியாது! பின்னூட்டமே இடாது படித்துமட்டும் செல்பவர்களுக்கு அவர்களது பெயரில் 'டோண்டுசாரி'ன் பதிவில் ஒரு பின்னூட்டம் இடப்படும்! இது எச்சரிக்கை! விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! உங்கள் அனைவருக்கும் ஏழுமலையான் அருள் கிட்டுவதாக!!!
மீண்டும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை!
* * *
விளையாட்டு போதுங்க!
தருமிசார் மற்றும் ராகவனுக்கு... என்னை 'டேஃக்'கியதற்கு நன்றி! தலைப்பு கொஞ்சம் மரியதைக்குறைவாக இருப்பதன் முழுப்பொறுப்பும் கைப்புள்ளையே சாரும்! எடுத்துக் கையாண்ட என்னை மன்னிக்க! மத்தவங்க சொல்லாதது எதையாவது சொல்லனும்னா எனக்கு தோணுனது இதுதான்!
வாழ்க்கையில்...
தவற விட்ட நான்கு தருணங்கள்:
1. என் அப்பாவை ஒரு முறையாவது கோவையில் இருந்து நான் வேலைசெய்யும் ஊருக்கு ஆகாயவிமானத்தில் கூட்டிச்சென்று என் அலுவலகத்தை(நான் தேய்க்கும் பெஞ்சைத்தவிர... ) சுற்றிக்காட்டியிருக்கலாம்! ஒரு தீபாவளிக்கு நான் வாங்கித்தந்த சட்டையை மூன்று நாளைக்கு மடிப்புகலையாமல் போட்டுத்திரிந்த என் அப்பாவுக்கு நான் சற்றேனும் வாழ்க்கையில் உருப்பட்டேன் என்ற என் பீத்தலை கேட்பதைவிட வேறு எதில் அதிகமான பெருமிதம் இருக்கக்கூடும்?!
2. என் முதல் சம்பளத்தில் என் அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்திருக்கலாம்! நண்பர்களுடன் பீரு குடித்த சொகத்தில் சுத்தமாய் மறந்துபோன விசயமாக இருந்தாலும் இப்போது என்ன வருந்தின்னாலும் அந்த வாய்ப்பு வரவா போகிறது?
3. வயதாகி உடலுக்கு முடியாமல் வயிற்றை எக்கி விக்கிக்கொண்டு இருந்த ஜிம்மிக்கு ஒரு செல்ல உதைவிட்டுவிட்டு கிரிக்கெட் மேட்சுக்கு போகாமல் இருந்திருக்கலாம்! திரும்ப வருவதற்குள் இறந்துபோன ஜிம்மியுடன் கடைசி நேரத்தில் இல்லாமல் போனது இன்னொரு வருத்தம்.
4. என்னோடு என் கல்லூரி வாழ்க்கையில் எல்லா அலப்பரையிலும் பங்குபெற்ற இப்பொழுது ரிட்டையர்டாகி வீட்டின் ஓரத்தில் திறக்கப்பட காத்திருக்கும் தலைவர் சிலை மாதிரி கவர்போட்டு மூடி வைத்திருக்கும் என் அருமை புல்லட்டை எப்பொழுதும் என்னோடவே வைத்திருந்திருகலாம்!
தவிர்த்திருக்கக் கூடிய நான்கு செயல்கள்:
1. எட்டாப்பு படிக்கையில என் ஊரில் இருந்த போலியோ பாதிப்படைந்த என் சொந்தக்கார அண்ணன் உட்பட கூட்டளிக நான்கு பேருடன் டவுனுக்கு சினிமா சென்று திரும்பி வருகையில் பஸ்ஸிக்கு வைத்திருந்த காசில் வம்படியாக தீனிவாங்கி தின்றுவிட்டு 12கிமி நடந்தே ஊருக்கு வந்து சேராமல் இருந்திருக்கலாம்! எந்த படிப்பறிவும் இல்லாமல் சுயமாய் ரேடியோ அசெம்பிள் செய்யும் அளவுக்கு பட்டறிவை வைத்திருந்த அந்த அண்ணன் அதன்பிறகு அவ்வளவு தூரம் நடந்து வந்ததால் காய்ச்சல் வந்து அதன்பிறகு எழுந்திருக்கவே முடியாமல் உடல் நலம் குன்றி மற்றவருக்கு கொடுக்கும் கஷ்டங்களை தாங்க முடியாமல் ஒரு நாள் நன்பகலில் வயரில் தொங்கியதை நிகழ்வு நெஞ்சில் ஏற்படுத்திய ஆழமான வடுவை தவிர்த்திருக்கலாம்
2. +2 ல நல்ல மார்க்கு வாங்கிய மிதப்பில் என்ட்ரன்சு எக்சாமுக்கு படிக்காக கிரிக்கெட், கேரம்னு முழுநேர தொழிலாக திரிந்து அப்பறம் சீட்டு கிடைச்ச காலேஜுல படிச்சி கெடைச்ச வேலையை பார்த்துன்னு ஒரு குறிக்கோளே இல்லாமல் இருந்திருக்க வேண்டாம்! (ம்ம்ம்.. இன்னைக்கு என்ட்ரன்சு எக்சாம தூக்குன அம்மா அன்னைக்கு இருந்திருந்தா!! )
3. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு பஸ் பயணத்தில் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அருகில் நின்றிருந்த ஒரு கிராமத்துப்பெண்ணின் கால்களை முதலில் மெதுவாக உரசி பின்பு எதிர்ப்பு வராமல்போகவே தொடர்ந்து 5 நிமிடம் எதற்கென்றே தெரியாமல் உரசியிருக்க வேண்டாம்! அவள் இறங்கிச்செல்லும் போது கண்களில் நீர் முட்ட ஆயிரம் சாட்டைகளால் அடித்த வலியினைக்கொடுத்த எந்தவித எதிர்ப்புகளுமற்ற அந்த கையறுநிலை பார்வையினை வீசிச்செல்ல, நான் ஒரு வாளி நிறைய மலத்தை என்மீது கரைத்து ஊற்றினாற்போல கூனிக்குறுகி அன்றைக்கு முழுதும் விக்கித்துத் திரிந்திருக்க வேண்டாம்!
4. காதலை காமமென்றும், காமத்தை காதலென்றும் குழ்ப்(ம்)பிந்திரிந்த காலங்களில் என் காதலை ஒரு வறட்சியான மதியத்தில் புழுதி பறக்கும் பேருந்து நிறுத்தத்தில் அவள் வெய்யிலின் கசகசப்பிலும் நான் என் உணர்வுகளின் கசங்கள்களிலும் இருவருமே ஏதோ ஒரு அவஸ்தையின் பிடியில் இருந்த வேளையில் அவளுக்கு சொல்லியிருக்க வேண்டாம்! அதை அவள் ஒரு சிறு புன்னகையில் புறந்தள்ளி "என்னோட பஸ் வந்துருச்சி!" என திரும்பிப்பார்க்காமல் செல்ல நான் துருப்பிடித்த கம்பத்தில் கிறுக்குப்பிடித்தபடி சாயங்காலம் வரை சாய்ந்திருந்திருக்க வேண்டாம்!
மனசுக்கு திருப்தியாய் நடந்த நாலு விடயங்கள்:
1. என் தந்தைக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகம் அளித்தது. காவல் துறை அதிகாரியாக பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்த அவர் மரணத்தின் விளிம்பில் போராடிய வேதனையை தவிர்த்து கடைசி ஆறுமாதங்கள் நிம்மதியாக இருந்து போனதில் எனக்கொரு திருப்தி
2. என் படிப்பிற்கும் பதவிசுக்கும் மற்றும் மேலே சொன்ன காரணத்துக்காகவும் கல்யாணம் கட்டிக்க பெண்ணே கிடைக்காமல் அலைந்த நேரத்தில் நான் என் தந்தைக்கு செய்த அந்த ஒரே காரியத்திற்காக "நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்லவன்ன்ன்ன்!"னு என்னை நம்பி விரும்பிக் கட்டிக்கிட்ட என் மனைவி!
3. 30 வருடங்களில் நான் கற்றுக்கொள்ளாத வாழ்வின் அர்த்தங்களை சின்னதொரு மயக்கும் மந்திரப் புன்னகையுடன் ஒவ்வொரு அசைவிலும், மழலையிலும் எனக்கு சொல்லித்தரும் என் பெண்!
4. தோள் கொடுக்க, சண்டை போட, எந்த நேரத்திலும் பொங்கல் போட, அணைக்க, அடிக்க, கோவிச்சுக்க அப்பறம் பழம் விட்டுக்க எனக்கு இருக்கும் நண்பர்கள்.
பிடித்த உணவு வகைகள்:
மனைவி: பஜ்ஜி, போண்டான்னா லபக்கு லபக்குன்னு முழுங்குங்க. கீரை கொழம்பும் பீன்சு பொறியலும் அப்படியே இருக்கு! என்ன நாக்கோ?!
அம்மா: ஒரு 5 நிமிசம் அமைதியா ஒரு இடத்துல ஒக்கார்ந்து நிம்மதியா சாப்புட்டா என்னடா? என்னவோ ஜில்லா கலெட்டரு மாதிரி பறக்கர?! வெட்டியா சுத்தறத சோறு தின்னுட்டு சுத்துனா என்னவாம்?
நண்பர்கள்: நீயெல்லாம் மனுசனா? மசால் தோசை வாங்குனா மசாலை தூக்கி ஓரமா வைக்கற?! வெங்காய ஊத்தப்பத்துல வெங்காயத்த தனியா பொறுக்கற? சும்மா தொட்டுப்பாக்கறதுக்கு 8 ஐட்டத்த ஆர்டரு பண்ணற? சும்மா நக்கிப்பாக்கறதுக்கு ஏண்டா காசை வேஸ்ட் பண்ணற?
நண்பர்கள் (During Water Sports): இங்க பாருடா! தண்ணீ அடிக்கறதுன்னா அடி! இல்லையா அப்படி போய் சும்மா ஒக்காரு! அதைவிட்டுட்டு வாங்கி வைச்சிருக்கற சைடு டிஷ்சையெல்லாம் பன்னி மாதிரி மொச்சுக்கு மொச்சுக்கு தின்னுகிட்டு இருந்தன்னா அடிபடுவ மவனே..!
நீங்களே முடிவு செஞ்சுக்கங்க...!
பார்க்க / போக விரும்பும் இடங்கள்:
1. தாஜ்மஹால். மீண்டும் ஒரு முறை. வாழ்வில் எத்தனை முறை வேண்டுமானாலும்! அசரவைக்கும் அழகுக்காக...
2. தென்னாப்ரிக்கா காடுகள்: அடந்த ஏகாந்த காட்டுக்குள்ள செல்லு, டிவி, நெட்டு, மீட்டிங்குன்னு எந்த மினி இம்சைகளும் இல்லாம கையில நாலு புத்தங்களோடயும்(எதுவா வேணா இருக்கலாம்! டெலிபோன் டைரெக்டரி தவிர...) ஒரு கேமராவோடவும் ஒரு பெரிய மரத்துமேல பட்டரைய போட்டுக்கிட்டு ஒரு மாசம் இருக்கனும்! அதுக்கும் மேல சக மனுசங்களை நோண்டலைனா எனக்கு முடியாது! அதனால ஒரே மாசம் போதும்
3. வடசென்னை: இங்கனயும் ஒரு மாசம். அந்த மக்களோட கையில எந்த பொருளும் இல்லாம கேரம்போர்டு விளையாடிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கனும்!
4. கீழ்பாக்கம் மருத்துவமனை: ஒரு 6 மாசத்துக்காவது நோயாளிங்க கூட இருக்கற மாதிரி வேலை பார்க்கனும்னு ஆசை! (இதான் சாக்குன்னு அண்ணனுக்கு அங்க அட்மிசன் போட்டுறாதிகப்பு!!! )
மனசுக்கு பிடிச்சு செய்யற நாலு வேலைகள்:
1. பதிவுக போடறது/படிக்கறது
2. தனிமையில ஒக்கார்ந்துக்கிட்டு ஓடாத பாடாவதி படங்களை ஆழ்ந்த யோசனையோட அதன் காமிரா, காட்சியமைப்பு, வசனம், பின்னணி இசைன்னு மனசுக்குள்ள பிரிச்சு மேய்ஞ்சபடி பார்க்கறது
3. மத்தியான வேளையில ஃபுல் மீல்ஸுக்கப்பறம் ஹைலி-கான்வர்சேசனல் இங்கிலீசு படங்களை புரிஞ்சும் புரியாதபடி அரைதூக்கத்தில் பார்ப்பது
4. வாய்ப்பு கிடைச்சா இப்பவும் TT/Cricket/Badmittonன்னு விளையாடறது (Cricket Match பார்க்க பிடிக்கவே பிடிக்காது!)
போதுங்க! சுயபுராணம் ஓவரா இருக்கு! இந்த TAG வெளையாட்டே அறிஞ்சுக்க விரும்பற ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு வழிங்கறதால என்னோட விருப்பம் என்னன்னா( கட்டாயம் இல்லைங்ங்.... விருப்பப்பட்டா எழுதுங்கப்பு...)
1. தங்கமணி ( அவரு பதிவுகளை பட்டிக்கும் போதெல்லாம் நான் நனவுலகுக்கு மீண்டுவர ரொம்பநேரம் ஆகறதால... இந்த பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தாப்புல தான் நான் அவர் பதிவுகளை, மிக நளினமான அவரது தமிழ்நடையை படிக்கறதே!! )
2. வசந்தன் - புலம் பெயர்ந்து வாழும் ஒரு தமிழனைப்பற்றி அறிந்துகொள்ள
3. அப்டிபோடு மரம் - அக்கா கையில வீச்சருவா ஒன்னுதான் இருக்காது! எழுத்துல அம்புட்டு தில்லு! அது அரசியல்னாலும் சரி! ஊரு பக்க கொசுவத்தி பதிவுகன்னாலுஞ்சேரி... மண் மணக்கும்!
4. சுதர்சன் கோபால் - நேரில் சந்தித்ததாலும் இந்தக்கால இளவட்ட பயக வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளவும்! :)