முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸொஉர்செ: http://www.gilroygarlicfestival.com/AandC/images/Miller.jpg

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை!

அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்!

இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது!

பதிவினை படிப்பவர்களுக்கு,

படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு தினம் ஒரு பதிவிடும் புண்ணியநிலை கிட்டும்! எப்பொழுதும் பதிவு மறுமொழி அளித்தவர் பட்டியலில் இருக்கும். பின்னூட்டம் வரவில்லையெனிலும் அதுவாகவே ஒரு 'test' பின்னூட்டம் இட்டு பட்டியலில் வரவைக்கும்! சைட்டு கவுண்ட்டர் ஒவ்வொரு வருகைக்கும் 100 என உயரும்! 5க்கு குறைவாக பின்னூட்டங்கள் இடுபவர்களது இடுகைகள் தாமாகவே அழியாது! பின்னூட்டமே இடாது படித்துமட்டும் செல்பவர்களுக்கு அவர்களது பெயரில் 'டோண்டுசாரி'ன் பதிவில் ஒரு பின்னூட்டம் இடப்படும்! இது எச்சரிக்கை! விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! உங்கள் அனைவருக்கும் ஏழுமலையான் அருள் கிட்டுவதாக!!!

மீண்டும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை!

* * *

விளையாட்டு போதுங்க!

தருமிசார் மற்றும் ராகவனுக்கு... என்னை 'டேஃக்'கியதற்கு நன்றி! தலைப்பு கொஞ்சம் மரியதைக்குறைவாக இருப்பதன் முழுப்பொறுப்பும் கைப்புள்ளையே சாரும்! எடுத்துக் கையாண்ட என்னை மன்னிக்க! மத்தவங்க சொல்லாதது எதையாவது சொல்லனும்னா எனக்கு தோணுனது இதுதான்!

வாழ்க்கையில்...
தவற விட்ட நான்கு தருணங்கள்:
1. என் அப்பாவை ஒரு முறையாவது கோவையில் இருந்து நான் வேலைசெய்யும் ஊருக்கு ஆகாயவிமானத்தில் கூட்டிச்சென்று என் அலுவலகத்தை(நான் தேய்க்கும் பெஞ்சைத்தவிர... ) சுற்றிக்காட்டியிருக்கலாம்! ஒரு தீபாவளிக்கு நான் வாங்கித்தந்த சட்டையை மூன்று நாளைக்கு மடிப்புகலையாமல் போட்டுத்திரிந்த என் அப்பாவுக்கு நான் சற்றேனும் வாழ்க்கையில் உருப்பட்டேன் என்ற என் பீத்தலை கேட்பதைவிட வேறு எதில் அதிகமான பெருமிதம் இருக்கக்கூடும்?!

2. என் முதல் சம்பளத்தில் என் அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்திருக்கலாம்! நண்பர்களுடன் பீரு குடித்த சொகத்தில் சுத்தமாய் மறந்துபோன விசயமாக இருந்தாலும் இப்போது என்ன வருந்தின்னாலும் அந்த வாய்ப்பு வரவா போகிறது?

3. வயதாகி உடலுக்கு முடியாமல் வயிற்றை எக்கி விக்கிக்கொண்டு இருந்த ஜிம்மிக்கு ஒரு செல்ல உதைவிட்டுவிட்டு கிரிக்கெட் மேட்சுக்கு போகாமல் இருந்திருக்கலாம்! திரும்ப வருவதற்குள் இறந்துபோன ஜிம்மியுடன் கடைசி நேரத்தில் இல்லாமல் போனது இன்னொரு வருத்தம்.

4. என்னோடு என் கல்லூரி வாழ்க்கையில் எல்லா அலப்பரையிலும் பங்குபெற்ற இப்பொழுது ரிட்டையர்டாகி வீட்டின் ஓரத்தில் திறக்கப்பட காத்திருக்கும் தலைவர் சிலை மாதிரி கவர்போட்டு மூடி வைத்திருக்கும் என் அருமை புல்லட்டை எப்பொழுதும் என்னோடவே வைத்திருந்திருகலாம்!

தவிர்த்திருக்கக் கூடிய நான்கு செயல்கள்:
1. எட்டாப்பு படிக்கையில என் ஊரில் இருந்த போலியோ பாதிப்படைந்த என் சொந்தக்கார அண்ணன் உட்பட கூட்டளிக நான்கு பேருடன் டவுனுக்கு சினிமா சென்று திரும்பி வருகையில் பஸ்ஸிக்கு வைத்திருந்த காசில் வம்படியாக தீனிவாங்கி தின்றுவிட்டு 12கிமி நடந்தே ஊருக்கு வந்து சேராமல் இருந்திருக்கலாம்! எந்த படிப்பறிவும் இல்லாமல் சுயமாய் ரேடியோ அசெம்பிள் செய்யும் அளவுக்கு பட்டறிவை வைத்திருந்த அந்த அண்ணன் அதன்பிறகு அவ்வளவு தூரம் நடந்து வந்ததால் காய்ச்சல் வந்து அதன்பிறகு எழுந்திருக்கவே முடியாமல் உடல் நலம் குன்றி மற்றவருக்கு கொடுக்கும் கஷ்டங்களை தாங்க முடியாமல் ஒரு நாள் நன்பகலில் வயரில் தொங்கியதை நிகழ்வு நெஞ்சில் ஏற்படுத்திய ஆழமான வடுவை தவிர்த்திருக்கலாம்

2. +2 ல நல்ல மார்க்கு வாங்கிய மிதப்பில் என்ட்ரன்சு எக்சாமுக்கு படிக்காக கிரிக்கெட், கேரம்னு முழுநேர தொழிலாக திரிந்து அப்பறம் சீட்டு கிடைச்ச காலேஜுல படிச்சி கெடைச்ச வேலையை பார்த்துன்னு ஒரு குறிக்கோளே இல்லாமல் இருந்திருக்க வேண்டாம்! (ம்ம்ம்.. இன்னைக்கு என்ட்ரன்சு எக்சாம தூக்குன அம்மா அன்னைக்கு இருந்திருந்தா!! )

3. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு பஸ் பயணத்தில் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அருகில் நின்றிருந்த ஒரு கிராமத்துப்பெண்ணின் கால்களை முதலில் மெதுவாக உரசி பின்பு எதிர்ப்பு வராமல்போகவே தொடர்ந்து 5 நிமிடம் எதற்கென்றே தெரியாமல் உரசியிருக்க வேண்டாம்! அவள் இறங்கிச்செல்லும் போது கண்களில் நீர் முட்ட ஆயிரம் சாட்டைகளால் அடித்த வலியினைக்கொடுத்த எந்தவித எதிர்ப்புகளுமற்ற அந்த கையறுநிலை பார்வையினை வீசிச்செல்ல, நான் ஒரு வாளி நிறைய மலத்தை என்மீது கரைத்து ஊற்றினாற்போல கூனிக்குறுகி அன்றைக்கு முழுதும் விக்கித்துத் திரிந்திருக்க வேண்டாம்!

4. காதலை காமமென்றும், காமத்தை காதலென்றும் குழ்ப்(ம்)பிந்திரிந்த காலங்களில் என் காதலை ஒரு வறட்சியான மதியத்தில் புழுதி பறக்கும் பேருந்து நிறுத்தத்தில் அவள் வெய்யிலின் கசகசப்பிலும் நான் என் உணர்வுகளின் கசங்கள்களிலும் இருவருமே ஏதோ ஒரு அவஸ்தையின் பிடியில் இருந்த வேளையில் அவளுக்கு சொல்லியிருக்க வேண்டாம்! அதை அவள் ஒரு சிறு புன்னகையில் புறந்தள்ளி "என்னோட பஸ் வந்துருச்சி!" என திரும்பிப்பார்க்காமல் செல்ல நான் துருப்பிடித்த கம்பத்தில் கிறுக்குப்பிடித்தபடி சாயங்காலம் வரை சாய்ந்திருந்திருக்க வேண்டாம்!

மனசுக்கு திருப்தியாய் நடந்த நாலு விடயங்கள்:
1. என் தந்தைக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகம் அளித்தது. காவல் துறை அதிகாரியாக பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்த அவர் மரணத்தின் விளிம்பில் போராடிய வேதனையை தவிர்த்து கடைசி ஆறுமாதங்கள் நிம்மதியாக இருந்து போனதில் எனக்கொரு திருப்தி

2. என் படிப்பிற்கும் பதவிசுக்கும் மற்றும் மேலே சொன்ன காரணத்துக்காகவும் கல்யாணம் கட்டிக்க பெண்ணே கிடைக்காமல் அலைந்த நேரத்தில் நான் என் தந்தைக்கு செய்த அந்த ஒரே காரியத்திற்காக "நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்லவன்ன்ன்ன்!"னு என்னை நம்பி விரும்பிக் கட்டிக்கிட்ட என் மனைவி!

3. 30 வருடங்களில் நான் கற்றுக்கொள்ளாத வாழ்வின் அர்த்தங்களை சின்னதொரு மயக்கும் மந்திரப் புன்னகையுடன் ஒவ்வொரு அசைவிலும், மழலையிலும் எனக்கு சொல்லித்தரும் என் பெண்!

4. தோள் கொடுக்க, சண்டை போட, எந்த நேரத்திலும் பொங்கல் போட, அணைக்க, அடிக்க, கோவிச்சுக்க அப்பறம் பழம் விட்டுக்க எனக்கு இருக்கும் நண்பர்கள்.

பிடித்த உணவு வகைகள்:
மனைவி: பஜ்ஜி, போண்டான்னா லபக்கு லபக்குன்னு முழுங்குங்க. கீரை கொழம்பும் பீன்சு பொறியலும் அப்படியே இருக்கு! என்ன நாக்கோ?!

அம்மா: ஒரு 5 நிமிசம் அமைதியா ஒரு இடத்துல ஒக்கார்ந்து நிம்மதியா சாப்புட்டா என்னடா? என்னவோ ஜில்லா கலெட்டரு மாதிரி பறக்கர?! வெட்டியா சுத்தறத சோறு தின்னுட்டு சுத்துனா என்னவாம்?

நண்பர்கள்: நீயெல்லாம் மனுசனா? மசால் தோசை வாங்குனா மசாலை தூக்கி ஓரமா வைக்கற?! வெங்காய ஊத்தப்பத்துல வெங்காயத்த தனியா பொறுக்கற? சும்மா தொட்டுப்பாக்கறதுக்கு 8 ஐட்டத்த ஆர்டரு பண்ணற? சும்மா நக்கிப்பாக்கறதுக்கு ஏண்டா காசை வேஸ்ட் பண்ணற?

நண்பர்கள் (During Water Sports): இங்க பாருடா! தண்ணீ அடிக்கறதுன்னா அடி! இல்லையா அப்படி போய் சும்மா ஒக்காரு! அதைவிட்டுட்டு வாங்கி வைச்சிருக்கற சைடு டிஷ்சையெல்லாம் பன்னி மாதிரி மொச்சுக்கு மொச்சுக்கு தின்னுகிட்டு இருந்தன்னா அடிபடுவ மவனே..!

நீங்களே முடிவு செஞ்சுக்கங்க...!

பார்க்க / போக விரும்பும் இடங்கள்:
1. தாஜ்மஹால். மீண்டும் ஒரு முறை. வாழ்வில் எத்தனை முறை வேண்டுமானாலும்! அசரவைக்கும் அழகுக்காக...

2. தென்னாப்ரிக்கா காடுகள்: அடந்த ஏகாந்த காட்டுக்குள்ள செல்லு, டிவி, நெட்டு, மீட்டிங்குன்னு எந்த மினி இம்சைகளும் இல்லாம கையில நாலு புத்தங்களோடயும்(எதுவா வேணா இருக்கலாம்! டெலிபோன் டைரெக்டரி தவிர...) ஒரு கேமராவோடவும் ஒரு பெரிய மரத்துமேல பட்டரைய போட்டுக்கிட்டு ஒரு மாசம் இருக்கனும்! அதுக்கும் மேல சக மனுசங்களை நோண்டலைனா எனக்கு முடியாது! அதனால ஒரே மாசம் போதும்

3. வடசென்னை: இங்கனயும் ஒரு மாசம். அந்த மக்களோட கையில எந்த பொருளும் இல்லாம கேரம்போர்டு விளையாடிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கனும்!

4. கீழ்பாக்கம் மருத்துவமனை: ஒரு 6 மாசத்துக்காவது நோயாளிங்க கூட இருக்கற மாதிரி வேலை பார்க்கனும்னு ஆசை! (இதான் சாக்குன்னு அண்ணனுக்கு அங்க அட்மிசன் போட்டுறாதிகப்பு!!! )

மனசுக்கு பிடிச்சு செய்யற நாலு வேலைகள்:
1. பதிவுக போடறது/படிக்கறது

2. தனிமையில ஒக்கார்ந்துக்கிட்டு ஓடாத பாடாவதி படங்களை ஆழ்ந்த யோசனையோட அதன் காமிரா, காட்சியமைப்பு, வசனம், பின்னணி இசைன்னு மனசுக்குள்ள பிரிச்சு மேய்ஞ்சபடி பார்க்கறது

3. மத்தியான வேளையில ஃபுல் மீல்ஸுக்கப்பறம் ஹைலி-கான்வர்சேசனல் இங்கிலீசு படங்களை புரிஞ்சும் புரியாதபடி அரைதூக்கத்தில் பார்ப்பது

4. வாய்ப்பு கிடைச்சா இப்பவும் TT/Cricket/Badmittonன்னு விளையாடறது (Cricket Match பார்க்க பிடிக்கவே பிடிக்காது!)

போதுங்க! சுயபுராணம் ஓவரா இருக்கு! இந்த TAG வெளையாட்டே அறிஞ்சுக்க விரும்பற ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு வழிங்கறதால என்னோட விருப்பம் என்னன்னா( கட்டாயம் இல்லைங்ங்.... விருப்பப்பட்டா எழுதுங்கப்பு...)

1. தங்கமணி ( அவரு பதிவுகளை பட்டிக்கும் போதெல்லாம் நான் நனவுலகுக்கு மீண்டுவர ரொம்பநேரம் ஆகறதால... இந்த பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தாப்புல தான் நான் அவர் பதிவுகளை, மிக நளினமான அவரது தமிழ்நடையை படிக்கறதே!! )

2. வசந்தன் - புலம் பெயர்ந்து வாழும் ஒரு தமிழனைப்பற்றி அறிந்துகொள்ள

3. அப்டிபோடு மரம் - அக்கா கையில வீச்சருவா ஒன்னுதான் இருக்காது! எழுத்துல அம்புட்டு தில்லு! அது அரசியல்னாலும் சரி! ஊரு பக்க கொசுவத்தி பதிவுகன்னாலுஞ்சேரி... மண் மணக்கும்!

4. சுதர்சன் கோபால் - நேரில் சந்தித்ததாலும் இந்தக்கால இளவட்ட பயக வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளவும்! :)

கருத்துகள்

  1. வந்ததுக்கும் ஏழுமலையான் சாபத்திலிருந்து தப்பிக்கவும் ஒரு பின்னூட்டம். சுவையாக இருந்தது உங்க நாலும், அதப் பத்தின பதிவும்.

    ---
    பிகு:தனிமயில் உடனேபார்க்கவும்!

    பதிலளிநீக்கு
  2. என்னங்க இவ்வளவு உணர்ச்சிவசப் படற விஷயமா எழுதிட்டீங்க. மனச என்னவோ பண்ணிருச்சு போங்க.

    பதிலளிநீக்கு
  3. சொல்லவிட்டது.

    படம் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  4. மேலே உள்ள ம்யிலை நான் முழுசா வழி மொழியிறேன்.
    வந்திருக்கப்பு;
    போட்டுருங்கப்பு.

    பதிலளிநீக்கு
  5. ஆங்கில வலைப்பதிவுகளில் இதுபோலவே 'நல்ல ஜோக்கு' என ஒரு லின்க் கொடுத்து சுத்தவைக்கும் வேலை நடக்கிறது.

    :))

    பதிலளிநீக்கு
  6. தெளிவா,உணர்வு பூர்வமா,நெகிழ்விலும் நகைச்சுவை உணர்வு கலந்து.

    ம் இதுக்கு மேலே ஒண்ணும் சொல்ல முடியல வார்த்தைங்க வரல
    இளவஞ்சி

    நல்லா இருங்க

    பதிலளிநீக்கு
  7. அருமையான அழுத்தமான ஒரு பதிவு இளவஞ்சி. ஆனால் விளையாட்டாய் ஒரு முன்னுரை எழுதி இதன் தீவிரத்தைக் குறைச்சுட்டீங்க! அது தான் உங்கள் நோக்கம் என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. கலக்கிட்டீங்கப்பு...தொடர் பதிவையும் சிரிக்கற மாதிரியும் சிந்திக்கற மாதிரியும் அருமையா எழுதியிருக்கீங்க...எனக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாபா!

    பதிலளிநீக்கு
  9. என்ன சொல்றதுன்னே தெரியல. இவ்வளவு பெரிய விஷயங்களை இவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.

    Your wife is really great.

    -ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  10. இளவஞ்சி ஒங்களக் கூப்புட்டது நல்லதாப் போச்சு. பல நல்ல பதிவுகளுக்கான விஷயங்கள இந்த ஒரு பதிவுல சொல்லீருக்கீங்க. மனசு ஒரு மாதிரி இருக்கு. வாழ்க்கைக்கு ரொம்பப் பக்கத்துலன்னு சொல்வாங்களே....அந்த மாதிரி பதிவு.....

    (ஏழுமலையான் புண்ணியம் நிச்சயம்.)

    பதிலளிநீக்கு
  11. // (ம்ம்ம்.. இன்னைக்கு என்ட்ரன்சு எக்சாம தூக்குன அம்மா அன்னைக்கு இருந்திருந்தா!! ) //

    ஐயா இளவஞ்சி...அன்னைக்கு வேணா....அந்தம்மா இல்லாம இருந்திரூக்கலாம். ஆனால் இன்னைக்குக் குறுக்க நிக்குற கோர்ட்டு அன்னைக்கு இருந்துச்சு....தெரியுமா!

    பதிலளிநீக்கு
  12. பதிவு பார்த்தேன்.
    'புலம் பெயர்ந்த' வகைக்குள் நான் வருகிறேனா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
    அதைவிடுத்து சாதாரணமாகவே அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உடனேயெல்லாம் எழுத முடியாது. ஏற்கெனவே இருவரிடமிருந்து வந்த புத்தக அழைப்பு அப்படியே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அட எத்தச்சொன்னாலும் ரொம்ப சென்டியா டச் பண்றீங்களே !!!!

    பதிலளிநீக்கு
  14. ஹும்..ஆயிரம் பேர் சங்கிலிப் பதிவு போட்டாலும் இளவஞ்சி பதிவு மாதிரி வருமா!

    பதிலளிநீக்கு
  15. 3. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு பஸ் பயணத்தில் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அருகில் நின்றிருந்த ஒரு கிராமத்துப்பெண்ணின் கால்களை முதலில் மெதுவாக உரசி பின்பு எதிர்ப்பு வராமல்போகவே தொடர்ந்து 5 நிமிடம் எதற்கென்றே தெரியாமல் உரசியிருக்க வேண்டாம்! அவள் இறங்கிச்செல்லும் போது கண்களில் நீர் முட்ட ஆயிரம் சாட்டைகளால் அடித்த வலியினைக்கொடுத்த எந்தவித எதிர்ப்புகளுமற்ற அந்த கையறுநிலை பார்வையினை வீசிச்செல்ல, நான் ஒரு வாளி நிறைய மலத்தை என்மீது கரைத்து ஊற்றினாற்போல கூனிக்குறுகி அன்றைக்கு முழுதும் விக்கித்துத் திரிந்திருக்க வேண்டாம்!

    //seythathais sollavum oru thairiyam vENdum//

    4. காதலை காமமென்றும், காமத்தை காதலென்றும் குழ்ப்(ம்)பிந்திரிந்த காலங்களில் என் காதலை ஒரு வறட்சியான மதியத்தில் புழுதி பறக்கும் பேருந்து நிறுத்தத்தில் அவள் வெய்யிலின் கசகசப்பிலும் நான் என் உணர்வுகளின் கசங்கள்களிலும் இருவருமே ஏதோ ஒரு அவஸ்தையின் பிடியில் இருந்த வேளையில் அவளுக்கு சொல்லியிருக்க வேண்டாம்! அதை அவள் ஒரு சிறு புன்னகையில் புறந்தள்ளி "என்னோட பஸ் வந்துருச்சி!" என திரும்பிப்பார்க்காமல் செல்ல நான் துருப்பிடித்த கம்பத்தில் கிறுக்குப்பிடித்தபடி சாயங்காலம் வரை சாய்ந்திருந்திருக்க வேண்டாம்!

    //nadanthathai jIranikkavum oru thairiyam vENdum//

    en varuththam ungalukku jollyyaannu kEtkathInga.
    AnAlum ellathtulayum oru kavithai irukku!

    பதிலளிநீக்கு
  16. செல்வன், தருமிசார்! போட்டாச்சு! போட்டாச்சு!1 அடடா எத்தன ஓட்டு?!

    ராம்ஸ்..குமரன்.. கவலைய விடுங்க.. உங்களுக்குன்னு தனியா 10 ஒட்டு வைச்சிருக்கேன்! இதெல்லாம் பப்ளிக்கா வேணாம்!! :)

    பதிலளிநீக்கு
  17. // அருமையான அழுத்தமான ஒரு பதிவு இளவஞ்சி. //
    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. எனக்கு நானே முதுகில ஒரு தட்டு தட்டிக்கிட்டேன்.
    மனச -
    வழக்கம்போல - தொட்ட பதிவு.இளவஞ்சிக்கு இது புதுசா என்ன? நிறையதான் எழுதறதில்ல.

    வர வர எனக்கு இந்த ஜோ எழுதறத ditto போடறதே பொழப்பா போச்சுப்பா!
    "Joe said...
    ஹும்..ஆயிரம் பேர் சங்கிலிப் பதிவு போட்டாலும் இளவஞ்சி பதிவு மாதிரி வருமா!

    பதிலளிநீக்கு
  19. செல்வராஜ், படிச்சிட்டு எனக்கே ரொம்ப ஃபீலிங் காட்டறமாதிரி தோணுச்சு.. அதான்! :)

    வசந்தன், 'புலம் பெயர்ந்த' என்ற தவறான தவகலுக்கு மன்னிக்க! என்னைக்கு வேனா எழுதுங்க.. காத்திருந்து படிக்க நான் இருக்கேன்! :)

    ராகவன், //// (ம்ம்ம்.. இன்னைக்கு என்ட்ரன்சு எக்சாம தூக்குன அம்மா அன்னைக்கு இருந்திருந்தா!! ) //
    இதெல்லாம் படிக்காதற்கு ஒரு சாக்கு! கண்டுக்காதீக!! :)

    ஜோ, கொத்ஸ், செந்தில், சேரல், மதுமிதா, ஞானசேகர், தியாக், கைப்புள்ள ஊக்கங்களுக்கு நன்றி!!

    மற்றபடி, அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. இலவஞ்சி, ஆழமான உணர்ச்சிகளை அந்தரங்க நிகழ்வுகளை அழகாகவும் நகைச்சுவையோடும் கொணர்ந்திருக்கிறீர்கள்.
    உங்களுக்கு ஜே போடத் தொன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  21. இளவஞ்சி,

    எழுத்து, கவிதை இதெல்லாம் தன்னைப் பார்ப்பது என்பதில் இருந்து தொடங்க வேண்டும்; அப்படியான எழுத்துக்களே மற்றவரை பாதிக்கும் வலிமையை இயல்பாகப் பெறுகின்றன என்று நான் நினைக்கிறேன்.

    அப்படியான எழுத்தாக உங்கள் எழுத்து இருக்கிறது. சுய அனுபவங்களில் இருந்து கர்வம் கொள்ளாமல் கடக்கும் புத்திசாலித்தனம் இருப்பதால் அது அழகாகவும், உள்ளத்தைத் தொடுவதாகவும் இருக்கிறது.

    என்னை எழுத அழைத்தமைக்கு நன்றி! என்னால் இப்பொழுது முடியுமா என்று தெரியவில்லை. வார இறுதியில் முயல்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
  22. அப்பு எங்கியோ போயிட்டப்பு. நிறைய எழுதனும், இப்ப முடியல. அப்புறம் வரேன்.
    :-)

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. இளவஞ்சி ,

    நல்லா இருந்துச்சின்னு சொன்னா ஃபார்மலா இருக்கும்..ஆனா வேற எதுவும் எழுத தோணலை....

    YOU ARE A COMPLETE MAN...KEEP IT UP

    பதிலளிநீக்கு
  25. இளவஞ்சி,

    ரொம்ப சந்தோஷமாக இருக்கு உங்க இடுகையைப்படிச்சபிறகு. எல்லாம் அடையாளம் காட்டின கர்வம்தான்..

    நீங்க இடுகையில் எழுதின விதயங்கள், மனதில் ரொம்ம்ம்ம்ப நாளைக்கு நிக்கும்!!!

    நன்றி நண்பரே.

    -மதி

    பதிலளிநீக்கு
  26. Dharumi said:
    //வர வர எனக்கு இந்த ஜோ எழுதறத ditto போடறதே பொழப்பா போச்சுப்பா!//

    எனக்குந்தான்!!!

    ;)



    "Joe said...
    ஹும்..ஆயிரம் பேர் சங்கிலிப் பதிவு போட்டாலும் இளவஞ்சி பதிவு மாதிரி வருமா!
    //


    -மதி

    பதிலளிநீக்கு
  27. Just felt onething after reading this post. You are great!! Cheers

    பதிலளிநீக்கு
  28. //அருமையான அழுத்தமான ஒரு பதிவு இளவஞ்சி. //

    Same here. Nice post iLavanji!

    பதிலளிநீக்கு
  29. மனதை விட்டு நீங்காத இந்த பதிவு ! ஏதோ நாலு நாலுன்னு படிக்க வந்தா ரொம்பவும் பாதிக்க வைத்ததே.ஓர் நாள் இரவு குழலியும் ஜோ வும் சொன்னார்கள் இந்த வலை பதிவரை பற்றி . இன்று உணர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  30. அது எப்படி எந்த பதிவு போட்டாலும் இப்படி எழுதமுடியுதுங்க.

    இத தவிர எது சொன்னாலும் Formal ல இருக்கும்.

    Hats off to you ilavanji sir

    பதிலளிநீக்கு
  31. //பின்னூட்டமே இடாது படித்துமட்டும் செல்பவர்களுக்கு //

    அய்யோ பயமா இருக்கே! இந்தாங்க பின்னூட்டம்.. நான் தப்பிச்சேன் இல்லையா?

    காமடியா எழுதறவங்க ஒரு ரகம்.. எழுதறதே காமடின்றது இன்னொரு ரகம் (என்னாட்டம்). நீங்க காமடியா ஆரம்பிச்சு சீரியஸா எழுதற தனி ரகம். கலக்குங்க தலை!

    பதிலளிநீக்கு
  32. //பின்னூட்டமே இடாது படித்துமட்டும் செல்பவர்களுக்கு //

    அய்யோ பயமா இருக்கே! இந்தாங்க பின்னூட்டம்.. நான் தப்பிச்சேன் இல்லையா?

    காமடியா எழுதறவங்க ஒரு ரகம்.. எழுதறதே காமடின்றது இன்னொரு ரகம் (என்னாட்டம்). நீங்க காமடியா ஆரம்பிச்சு சீரியஸா எழுதற தனி ரகம். கலக்குங்க தலை!

    பதிலளிநீக்கு
  33. தங்கமணி, ஊக்கங்களுக்கு நன்றி! உங்களால் முடியும்போது எழுதுங்கள்..

    ப்ரேமலதா, சுட்டிக்கு நன்றி!

    சுதர்சன், கண்ணன் ,மணியன், சதயன், முத்து, டுபுக்கு, கார்த்திக்ராம்ஸ், சிங்ஜி, ஜெயந்த், மதி... அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  34. இளவஞ்சியாரே,
    காலைல விட்ட hotmail ID, தனி மயிலு கிடைச்சுதா?
    இப்படிக்கு,
    உம்ம பிரண்டு.

    பதிலளிநீக்கு
  35. நண்பரே! இத படிச்சதில் இருந்து உம்ம மூஞ்ச பாக்கணும் போல இருக்கு (போட்டா போட்டா தான் என்னவாம்?). எவ்வளவு பெரிய விசயத்தை இப்படி எளிதா சொல்லிட்டீங்க. உங்களை மாதிரி ஆளுங்களை பார்க்கவே சந்தோசமா இருக்கு. நல்லா இருய்யா.

    அன்புடன்,
    சிவா

    பதிலளிநீக்கு
  36. 3. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு பஸ் பயணத்தில் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அருகில் நின்றிருந்த ஒரு கிராமத்துப்பெண்ணின் கால்களை முதலில் மெதுவாக உரசி பின்பு எதிர்ப்பு வராமல்போகவே தொடர்ந்து 5 நிமிடம் எதற்கென்றே தெரியாமல் உரசியிருக்க வேண்டாம்! அவள் இறங்கிச்செல்லும் போது கண்களில் நீர் முட்ட ஆயிரம் சாட்டைகளால் அடித்த வலியினைக்கொடுத்த எந்தவித எதிர்ப்புகளுமற்ற அந்த கையறுநிலை பார்வையினை வீசிச்செல்ல, நான் ஒரு வாளி நிறைய மலத்தை என்மீது கரைத்து ஊற்றினாற்போல கூனிக்குறுகி அன்றைக்கு முழுதும் விக்கித்துத் திரிந்திருக்க வேண்டாம்


    My applause was for the above point only. I am sure you know that.

    I can go on about several levels, on how men (would) behave in and after such a situation. I am planning to write that in your comment section at some other time.

    at this this time, I would like to request you to write a short story/narration about this incident, for Blank noise project, and add your entry (in your name ofcourse).
    http://premalathakombai.blogspot.com/2006/02/blog-thon-2006-stop-street-harassment.html

    http://blanknoiseproject.blogspot.com/

    http://mathy.kandasamy.net/musings/2006/02/27/327

    As you are brave enough to admit this in public, your post will be more powerful than any other attempts we might try. I will be really thankful to you if you would accept my invitation to participate in Blank-noise porject.

    Thanks,
    Premalatha

    பதிலளிநீக்கு
  37. Hi,

    Most men would have gone not-noticing her helplessness, but believing that she "approved" the act, or some would even go on to say that she "enjoyed". well, instead of doing a post-mortem, I should leave it.

    You noticed it. you admitted it (that she didn't want it). you didn't like what you did. wow, you even admitted it in public. what can I say, you are a hero. A model man.

    All other points are very good as well. but this one overrides everythingelse. it overpowers my thoughts. It blinds me, I can't read other points.

    Well done.
    :-)

    பதிலளிநீக்கு
  38. Please remove my previous link. it got deleted accidentally, but I have posted it again, so it is there
    http://premalathakombai.blogspot.com/2006/03/i-love-ilavanji_02.html

    also here,

    http://premalathakombai.blogspot.com/2006/02/blog-thon-2006-stop-street-harassment.html

    let me know if you do not want to be linked the way I have linked you. I will remove it immediately.

    பதிலளிநீக்கு
  39. இந்த மாதிரியெல்லாம் எப்படிதான் எழுதுராங்களோ. உக்காந்து யோசிப்பாங்கலோ "-))

    பதிலளிநீக்கு
  40. சில தவிர்த்திருக்கலாம்.. ஹ்ம்ம்ம்... எத்தனையோ விஷயங்கள் நெஞ்சை நெருடும்.. எதை எதை தவிர்த்திருக்கலாம் என்று அனைவரையும் யோசிக்க வைத்து விட்டீர்கள்...

    புன்னகையுடன் சோகம் பரப்புவது போன்று.. சர்க்கரை நிலவே பெண் நிலவே பாடலை கேட்டிருக்கிறீர்களா ??... இசை என்னமோ சோகத்துக்கு இருக்காது... ஆனால் வரிகளுடன் சேர்ந்து கேட்கும் போது.. சாதாரண பாடலாக தோன்றி மெல்ல மெல்ல சோகத்தை மனதில் சொருகும்..

    " உனக்கும் உனக்கும் பிடிக்கும் என்றாய்
    என்னை ஏன் பிடிக்காதென்றாய்... "


    அன்புடன்
    ஜீவா

    பதிலளிநீக்கு
  41. Is this Vijay song? I know it is a very religeous song for some people. I find the song too silly. May be it is my old age. (anthak kaalathula sivaji paadara maathiri varumaa? lol)

    பதிலளிநீக்கு
  42. பிரண்டு, உங்க தனிமயிலு கிடைச்சது.. நன்றி!! :)

    சிவா, போட்டோதானே.. அப்படியே மேலால போயி ரைட்சைடு கார்னருல்ல பாருங்க! :) அதுவும் புடிக்கலையா? துளசியக்கா பதிவுல வரும்.. வெயிட் பண்ணுங்க!

    பிரேமலதா, உங்கள் சுட்டிக்கும் அழைப்புக்கும் என் நன்றிகள்! எனக்கு ஏற்பட்ட நான் தவிர்த்திருக்கலாமே என நினைக்கும் ஒரு நிகழ்வு அது! அது நான் திருந்தினேன்/யோக்கியம் என்பதற்காகவோ இல்லை "இதனால் அறியப்படும் நீதி யாதெனில்" என்பதற்காகவோ எழுதவில்லை!எனவே, நீங்கள் கேட்டபடி இதனை ஒரு புனைவாகவோ இல்லை சம்பவத்தின் விளக்கமாகவோ என்னால் எழுதமுடியும் என தோன்றவில்லை! தவறெனில் மன்னிக்க!

    நான் செய்தது தவறு என்பது தெரிந்தாலும் அந்த செயலுக்கு இம்மியளவுக்கூட அவளால் எதிர்ப்புக்காட்ட முடியவில்லை என்பதே என்னை மிகவும் பாதித்து என்செயலின் கேவலத்தை எனக்கு உணர்த்தியது. ஒரு சகஜீவியின் மீதான அதிகபட்ச வன்முறை இதுவாகத்தான் இருக்கக்கூடும் என உணரவைத்தது!

    நானும் ஒரு சராசரி தாங்க... என் மனதினை பாதித்த நிகழ்வுகளை என்னால் உங்களைப்போன்றவர்கள் பாராட்டும்படி எழுத முடிகிறது என்பதாலேயே நான் ஒரு மாடல்மேனாகவோ இல்லை ரோல்மாடலாகவோ ஆகிவிடமுடியாது என்று நினைக்கிறேன்!

    ராசா, இதெல்லாம் யோசிக்காம எழுதறது! யோசிச்சா வராது! வாந்தியெல்லாம் யோசிச்சா வருது? :)

    ஜீவா,
    //" உனக்கும் உனக்கும் பிடிக்கும் என்றாய்
    என்னை ஏன் பிடிக்காதென்றாய்... "// இந்த பாட்டு தினம் ஒருமுறையாவது SCVல் வரும்! என் நண்பன் ஒருவன் சரியாக இந்த வரிகளுக்காக காத்திருந்து பார்த்துவிட்டு பிறகு ஃபுல்பீலிங்சுல ஆபீசுக்கு போவான்! சரி விடுங்க..அது ஒரு தனிக்கதை.. :)

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  43. சொல்ல மறந்தது... வெளியூர் பயணத்தின் காரணமாக உடனடியாக பின்னூட்டமிட முடியவில்லை! தாமதமத்திற்கு மன்னிக்க...

    பதிலளிநீக்கு
  44. Hi Ilavanji,

    It is your call. I leave it to you.

    But, whatever you have said in your post and in this comment is good enough to be written. you don't have to do anything more than that.

    ஒரு சகஜீவியின் மீதான அதிகபட்ச வன்முறை இதுவாகத்தான் இருக்கக்கூடும் என உணரவைத்தது!
    Very important feelings. this is what I want people to hear.

    அது நான் திருந்தினேன்/யோக்கியம் என்பதற்காகவோ இல்லை "இதனால் அறியப்படும் நீதி யாதெனில்" என்பதற்காகவோ எழுதவில்லை!

    Do you know the above sentence does make you a model man and you do say some நீதி in this?

    anyway,

    It is your call. I leave it to you.

    Thanks for dropping by. I have a blog too, and I post some interesting stuff too. if you like, please do read them and come back if they interested you to come back.

    Thanks.

    பதிலளிநீக்கு
  45. It is not an attempt to demean you or anything like that. it will make people to think and stop doing. it will for a good cause. it is a better cause than feeding the poor.

    but, It is your call. I leave it to you.

    பதிலளிநீக்கு
  46. நேராக பேசி தெரிந்து கொள்வது போல இருந்தது. இதில் பெண்ணைப்பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறீர்கல் என நினைக்கிறேன். அபோது படிக்கும் போதே மனசை தொட்ட எழுத்து.
    மூன்றாவது முறையாக முயன்று பின்னூட்டம் இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  47. கண்களில் நீர் முட்டிக் கொண்டு விட்டது. அப்புறம் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  48. படித்ததிலேயே டாப் 'நாலு' பதிவு இது தான் இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  49. இளவஞ்சி, படிக்க வேண்டும் என நீண்டநாள் கழித்து திறந்த உங்கள் பதிவில் இதுதான் மணி மகுடம்! தவறுகளை அறியா பருவத்தில் செய்து, அறிந்த பருவத்தில் நேரடியாக வெளியிட்டு விமோசனம் தேடிக்கொள்ளும் தைரியம் சிலருக்குத் தான் வரும். அந்த சிலருள் நீர் ஒருவர்! நல்ல பதிவு. இனி முடிந்த பொழுது உமது பதிவுகளை படிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  50. இளவஞ்சி.. இந்தப் பதிவ நான் ஏற்கனவே படிச்சி ரொம்ப பீல் பண்ணிட்டு அப்படியே போய்ட்டேங்க(அப்போ நமக்குப் பதிவும் இல்ல, பின்னூட்டம் போட அக்கௌண்டும் இல்ல)... ஜெயச்சந்திரன் சொன்னா மாதிரி, இதெல்லாம் சொல்லவும் ஒரு துணிவும் மனசும் வேணும்... நல்லா எழுதி இருக்கீங்க..

    இப்போ பின்னூட்டம் போட்டுட்டேன்.. ஏழு மலையான் கிட்ட சொல்லிடுங்க.. ஆமாம் சொல்லிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  51. ஆன்ந்த விகடனில் இயக்குனர் சேரன் எழுதும் ஆட்டோகிராப் மாதிரி இருக்குது.
    இம்புட்டயும் வெளிபபடயா சொல்லனும்னா
    நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவங்கலால்தான முடியும்.
    நல்லாருங்க.

    பதிலளிநீக்கு
  52. யாரோ ஒருத்தரோட அந்தரங்க டைரியை....தெரி யாமல் படித்த உணர்வுக்கு தள்ளிவிட்டுட்டீரே!!!! என்னமோ போங்க....ஒருமாதியா ஆகிப்போச்சு!!

    பதிலளிநீக்கு
  53. தேன்துளி, பாரதி, ராம்ஸ், Sheila Campos(எந்த நாட்டு வெள்ளைக்கார அக்காவோ நீங்க.. பாடம் மட்டும் புரிஞ்சிருக்கு! ), ஜெய. சந்திரசேகரன் , பொன்ஸ், பாலாஜி, நாகு...

    உங்கள் அனைவரின் வருகைக்கும், ஊக்கங்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி!

    மக்களே! என்ன விளையாட்டு இது?! நான் முன்பே சொன்னதுபோல //நானும் ஒரு சராசரி தாங்க... என் மனதினை பாதித்த நிகழ்வுகளை என்னால் உங்களைப்போன்றவர்கள் பாராட்டும்படி எழுத முடிகிறது என்பதாலேயே நான் ஒரு மாடல்மேனாகவோ இல்லை ரோல்மாடலாகவோ ஆகிவிடமுடியாது என்று நினைக்கிறேன்! // என்று தான் திரும்பவும் சொல்லறேன்!!!

    ஆகவே! என்னை நல்லவன்னு நம்பி ஏமாந்துடாதீகப்பூ!!! :)

    மற்றபடி, அடிக்கடி வாங்க!

    அப்பத்தான் நானும் அடிக்கடி இங்க வருவேன் போலிருக்கு!!
    (இளவஞ்சி உன் மொடைக்கு ஒரு அளவே இல்லையா?? :) )

    பதிலளிநீக்கு
  54. குமரன், உங்களை விட்டுட்டேன் பாருங்க! உங்க பேரைச்சொல்லி இன்னொரு பின்னூட்டம்! (உங்க பின்னூட்டக்கலையை எப்படி வளர்க்கிறேன் பாருங்க!! :) )

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  55. இளவஞ்சி,

    எல்லாம் சரி. ஆனா இன்னும் இந்த பின்னூட்டக் கலையில் நீங்க இன்னும் தேறலை. முந்தைய பின்னூட்டத்துல இப்படியா எல்லாரையும் ஒரேயடியா சொல்றது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பின்னூட்டம் வேணாம்? என்னமோ போங்க. எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும் கத்துக்கமாட்டேன்னு அடம்புடிச்சா என்ன செய்றது?

    பதிலளிநீக்கு
  56. //குமரன், உங்களை விட்டுட்டேன் பாருங்க! உங்க பேரைச்சொல்லி இன்னொரு பின்னூட்டம்! (உங்க பின்னூட்டக்கலையை எப்படி வளர்க்கிறேன் பாருங்க!! :) )//

    என்ன பிரயோஜனம்? என்னை விட்டுட்டீங்களே:-))

    பதிலளிநீக்கு
  57. சுரேஷ்,

    குமரன் சொல்வதைப்போல நான் இன்னும் தேறனும் போல! இந்த ஒருதடவை விட்ருங்னா! அடுத்த முறை அசத்திடறேன்!

    இருந்தாலும் கடைசியா ஒன்றை இங்கே சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!

    என் மனதில் உங்களுக்கு எப்போதும் நிரந்தர இடம் உண்டு! :)

    பதிலளிநீக்கு
  58. Hello Elavanji

    Ennoda per Vaneetha. Enakku tamil fontla ezhudura alavukku thiramai innum illae. Adhanalae ippadi ezhuduren. Ennoda friend oruthar ungaloda followera irukaaru. Avar solli unga blog padika arambichen. Neriya paarattu vaangi irupeenga , followers irupaanga ippo varaikkum. Ippo ennayum serthukonga. Almost ella articlesum padichi iruken. Emily endroru thozhi romba pidichi irundhadhu. Appuram kalyanam, honeymoon pathi ezhudhi irundhadhu romba pidichi irundhadhu. Ennoda kalyanathukku munnadi en husbandku anupichen. Avarkum padikiradhukkum koncham distance jaasthi. But indha article enjoy pannar. Ungaloda pazhaya blog ellam padichitu irundhen, indha article "nalla beedhiya kilapuraanga" romba pidichi irundhadhu. Padikum bodhae kannula thanni. Romba nalla ezhudureenga. But ippo koncha naala pudhu articles edhuvum ezhudalayae en? Time irukum bodhu kandippa ezhudunga. Unga blog paarthu inspire aagi naanum start panni iruken.

    Best regards

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல