வெள்ளி, ஜூன் 30, 2006

தேன்கூடு-தமிழோவியம் போட்டி: ஜீலை' 06 தலைப்பு

ஜீலை' 06 மாத போட்டிக்கான தலைப்பினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கிய தேன்கூடு - தமிழோவியத்திற்கு என் நன்றிகள்.

போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php

படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூலை 20, 2006

ஜூலை 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் ஜூலை 26 அறிவிக்கப்படும்.

- - = = 0 0 O 0 0 = = - -


தேன்கூடு - தமிழோவியம் July 2006 போட்டியின் தலைப்பு
மரணம்!

Source: http://www.tropicalisland.de/travel_varanasi_benares.htmlஇந்த உலகத்தில் இருப்பவருக்கு இதுதான் முற்றுப்புள்ளி. அடுத்து என்னவென்று எவரும் அறிந்ததில்லை. அறிந்தவர் இருப்பதில்லை.

மரணம் ஏற்படுத்தும் விளைவுகள் அலாதியானவை. நெருங்கிய சொந்தங்களின் இழப்பு வாழ்க்கையை புரட்டிப் போடத்தான் செய்கிறது. எவ்வளவு கெட்டவனாக சமூகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவன் இறப்பில் சில நல்லவைகளை பேசத்தான் செய்கிறோம். அருகாமை மரணங்கள் சில மணித்துளிகளுக்காவது நம்மை நாமே எடைபோட்டுப் பார்க்க உதவத்தான் செய்கின்றன. சுயநலக் கணக்குகள் அழுத முகங்களின் ஊடே அவரவர் அடிமனதில் ஓடத்தான் செய்கிறது. சற்றே துணிந்த மனமிருப்பின் அப்பழுக்கில்லா அங்கதங்கள் காணக்கிடைக்கும் அற்புதச் சுரங்கம் இழவு வீடுகள்.

மரணம் அறிதல் ஒரு விசித்திர உணர்வு! நூற்றுக்கணக்கில் மக்கள் செத்த துயரமிருப்பினும் "சுனாமி மட்டும் இன்னும் ஒரு கிலோமீட்டரு உள்ள வந்திருந்தா இன்னும் எத்தன பேரு செத்திருப்பாங்க?!" என நினைத்து அது தரும் த்ரிலுக்கு மயங்கும் மனம். அமெரிக்கா 9/11? "நல்லா வேணும்... வலின்னா என்னன்னு தெரியனும் அவனுங்களுக்கு!", இலங்கையில் வெடிகுண்டால 100 பேரு சாவா? "நமது அரசியல் நிலைப்பாட்டின் படி இது..." எனும் அவரவர் கற்பிதங்கள் மற்றும் நியாயங்கள். அன்னிய மரணங்கள் பல நேரங்களில் நமக்கு பொதுஅறிவுத் தகவல்கள். நம் நாட்டு வீரர்கள் அடைவது வீரமரணம். எதிர்த்துப் போரிட்டவர் சாவு எண்ணிக்கை வெற்றிக்கான அளவுகோள். மரணச்சேதிகளில் குறிப்பிடுவதுபோல ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற ஒன்று இருக்கிறதா? நிஜமாகவே ஒவ்வொரு மரணமும் ஒரு செய்தியை விட்டுச் செல்கிறதா? உடலில் இருந்து நின்றுபோகும் மூச்சுக்குத்தான் இடம், பொருள், ஏவல் பொறுத்து எத்தனை எத்தனை அர்த்தங்கள்!

ஆனாலும், இதுதான் நிரந்தரம் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிந்தே இருப்பினும்... எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டிராத மறதி இருப்பதால்தான் வெற்றி, அன்பு, காதல், செல்வம், புகழ், கல்வி, நட்பு, குடும்பம் போன்றவைகள் செத்தவனுக்கு அர்த்தமிழந்து போனாலும் நமக்கு அதே மையப்புள்ளையை நோக்கி ஓட கிரியாஊக்கிகளாக இருக்கின்றன.

மரணம் உண்டாக்கும் இழப்புகளையும், மாற்றங்களையும், சிக்கல்களையும், விளைவுகளையும், உணர்த்தும் செய்திகளையும் இந்த மாதம் அலசிப் பார்ப்போமா? நவரசம் கொண்ட மரணத்தின் முழூவீச்சை கண்டறிய முயல்வோமா?

அவ்வளவுதான் மேட்டரு! புகுந்து வெளையாடுங்கப்பு!! :)

திங்கள், ஜூன் 26, 2006

முதன்முதலாய் முதல் பரிசு! :)

Photobucket - Video and Image Hostingக்களே!

ரெண்டரைக்கழுத வயசுல என்னைக்கும் எதுலயும் எனக்கு முதலிடம் கெடைச்சதே கிடையாது! ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்பு வரைக்கும் சசிகலாவும், சுமதியும் மொத ரெண்டு ரேங்க்கு எடுத்ததால எனக்கு எப்பவும் மூணாவது இடம்தான்! ( அன்னைக்கும் பொம்பளையாளுங்க தான் நமக்குப் போட்டி! :) )அதுக்கப்பறம் வாழ்க்கைல கொஞ்சம் வெவரமாயிட்டதால கடைசி மூணு ரேங்க்குக்கு போட்டிக்குப் போயிட்டேன்! வெளையாட்டுலக்கூட மொதலிடத்துக்கு என்னைக்கும் முயற்சி செஞ்சது கிடையாது. கிரிக்கெட்டுன்னா பேட்ஸ்மேன் மூஞ்சிக்கு நேரா ரெண்டு பவுண்சரு போட்டுட்டா திருப்தியாகிருவேன். டிடி, ஷட்டில்ல கூட பளிச்சுன்னு ஒரு ஸ்மேஷ் அடிச்சிட்டா கோப்பை வாங்குன திருப்த்தி வந்துரும். கல்லூரி கூத்துக் கட்டறதுலக்கூட நமக்கு நடுவுல கலாய்க்கற போஸ்ட்டுத்தான் ரொம்பப் பிடிக்கும்! ஸ்டேஜ் ஏறி வாங்குன துப்புக்களை விட கீழ நின்னு விட்ட சலம்பல்களுக்கு கிடைச்ச விழுப்புண்கள்தான் அதிகம்! :) இதைவிட மகிழ்ச்சி மொத ஆளாய் நிக்கறப்ப கெடைக்குங்கறது இன்னைக்கு தெரியுது. நான் ஒரு Short term heppiness disorder person :)

ப்ரகாஷ் பதிவுல மதி நான்கூட எழுதலாம்னு சொன்னப்ப அக்கா வெளையாட்டுக்குச் சொல்லறாங்கன்னு சீரியசா எடுத்துக்கலை! கடந்த வார நட்சத்திரமான $ல்வன் பதிவுல எங்க கல்லூரி பக்கத்துல இருந்த காவல்நிலையத்தைப் பத்தி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு, உஷாவோட பதிவுல நிலா போட்டிக்கான பெனாத்தலாரின் வரையறை எனச்சொன்ன

இத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal நிகழ்வு
என்பதைப்படித்த போது தோன்றியதுதான் விட்டில் பூச்சிகள்!

உங்க புண்ணியத்துல இன்னைக்கு தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்) போட்டிக்காக எழுதப்பட்ட "விட்டில் பூச்சிகள்" சிறுகதைக்கு மொதல் பரிசு!

June 06 Thenkoodu TamilOviam Contest First Prize Winnerபோட்டி முடிவுகள் இங்கே!

இன்றைய வலைப்பதிவராக தேன்கூட்டில் இன்றைக்கு நான்! இதுவும் சந்தோசமா இருக்குங்க! ( அண்ணாத்த சுஜாதா சொன்ன 15 நிமிச லைம்லைட்டு இதுதானா!? ;) )

இன்றைய வலைப்பதிவர்

இலக்கியம், கட்டுரைகள், கதைகள், நையாண்டி, மலரும் நினைவுகள் என்று பலவாறாக எழுதி கலக்கி வரும் இளவஞ்சி், கோவையைச் சேர்ந்தவர். பெங்களூரிலிருந்து வலை பதிந்து வருகிறார். நீளமான வாக்கியங்களுக்குப் பிரபலமானவர்! :-)


கவிதைகள் புனைபவர். கவிதைகளாகட்டும் கதைகள் கட்டுரைகளாகட்டும் ரசனையுடன் படைப்பவர். நெஞ்சில் ஆழமாகத் தைக்கும் வண்ணம், ஆத்மார்த்தமாக எழுதுவதோடு, ஒவ்வொரு இடுகையுடன் தொடர்புடைய புகைப்படங்களையோ ஓவியங்களையோ இணைப்பது இவரது சிறப்பு.


கல்யாணம் ஆகப்போகிற ஆண்களுக்கு என்ற இவரது தொடர் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. இந்தத் தொடரில் இதுவரை ஆறு பதிவுகள் வந்திருக்கின்றன. கல்யாணம் ஆனவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள விடயங்கள் நிறைய.


இளவஞ்சியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள.. இந்த இடுகை கட்டாயம் உதவும்!


தேன்கூடு தமிழோவியம் ஜூன் மாத வலைப்பதிவுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள இளவஞ்சி, ஒராண்டுக்கும் மேலாகத் தமிழ்ப் பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருபவர். வலைப்பதிவர்களிடையே பிரபலமானவர். தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. படிக்க:
தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :)


நன்றி: #வாசகர் பரிந்துரை (26/06/06)வெற்றி பெற்ற உஷாவுக்கும் , நிலாவுக்கும் , ராசாவுக்கும் மற்றும் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

போட்டிக்கான விமர்சனங்களை முன்வைத்த பெனாத்தலாருக்கும் , மூண்றாவதுகண் நண்பர்களுக்கும் உங்கள் அனைவரின் சார்பில் பாராட்டுகள் உரித்தாகுக!

நிறை குறைகளை எடுத்துச்சொல்லியும், வாக்களித்தும் ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும், என் நன்றிகள்!

(மேலே உள்ள படம்: மணப்பாறை - குரும்பட்டி சிறார்கள் :) )

ஞாயிறு, ஜூன் 25, 2006

மணப்பாறையும் என் ஒளிப்படப் பொட்டியும்

போன வாரம் எங்கூட்டம்மாவோட தாத்தா ஊரான மணப்பாறை பக்கத்துல இருக்கற குரும்பட்டில விசேசங்க! 27 வருசம் கழிச்சு ஊர்ப்பண்டிகை கொண்டாடுனாங்க. இத்தனை வருசமா ஊருக்குள்ள யாராச்சும் டிக்கெட்டு வாங்கிட்டா அந்த வருசம் பண்டிகை கேன்சல் ஆகிருமாம்! இப்படியே போனா பண்டிகையே நடத்தமுடியாதுன்னு வருத்தமாகி பெருசுங்க எல்லாம் குறிகேட்டதுல "இந்த வருசம் நடத்துங்கப்பு"ன்னு சாமி வாக்கு கொடுத்தாப்புல. இதுக்குத்தான் என்னை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தாங்க. யாருங்க அங்க புர்ர்ருன்னு சிரிக்கறது? சும்மா மாப்ளை கெத்து காட்டலாம்னா நம்பமாட்டீங்களே?!

மக்கா பண்டிகைய 5 நாளு கோலாகலமா நடத்தி கலக்கிட்டாங்க. தெனம் நைட்டு சினிமா, கூத்து, ஆடல் பாடல்னு அசத்தல்தான். அங்க நான் எடுத்த படங்கள்ல நல்லதா நாலு இங்க போடலாம்னு எண்ணம். கடைசி வரைக்கும் போராடியும் ப்ளாகருசாமி படங்களை ஏத்த அருள் பாலிக்கலை! எனவே, பிடிச்ச படங்களை லோக்கலா சேமிச்சி இன்னும் தெளிவா பெருசா பாருங்கப்பு!!


கேமரா Sony DSC-H1. மத்தபடி ஏதாவது அதிகப்படி தகவலா ஷட்டரு ஸ்பீடு என்னா வைச்ச? அபெர்ச்சரு எவ்வளவு? ஃபில்டரு போட்டயான்னு யாராவது கேட்டிங்கன்னா... ஹிஹி...


1. 250 வருச பழமையான வீடுங்க. பண்டிகைக்கு சும்மா மேலாக்க வெள்ள காட்டியிருக்காங்க. 40 வருசமா வாடகைக்குத்தான் விட்டிருக்காங்க. குடியிருக்கற ஆளுங்க ராத்தங்கறதே இல்லை. பகல்லயாச்சும் கேக்கலாம்னு போனா நூத்துக்கணக்கா தலைகீழா தொங்கறானுங்களே தவிர வாடகையப் பத்தி மூச்சு விடமாட்டேங்கறானுங்க!

Photobucket - Video and Image Hosting2. அல்ப ஆசைக்கு ஒரே ஒரு இயற்கைக்காட்சி!

Photobucket - Video and Image Hosting3. விடிய விடியக் கூத்து! கரகாட்டம், ஒயிலாட்டம்னுதான் சொன்னாய்ங்க. நேரமாக ஆக எல்லாம் மாறிடிச்சு. டபுள் மீனிங் எல்லாம் கிடையாது. முறுக்குக்கம்பி, தேங்காமூடி, ஓட்டைவடை, பஞ்சருன்னு டைரக்டு அட்டாக்குத்தான். காலத்தின் கோலம்! இந்த ஐட்டங்க எல்லாம் இல்லைன்னா யாரும் கூப்பிடறது இல்லையாம்!

Photobucket - Video and Image Hosting4. "மணப்பாறை மடோனா" தஞ்சை உஷா...

Photobucket - Video and Image Hosting5. சாமிக்கெணத்தடில கட்டுன தேரு ஊரைச்சுத்தி கோவிலுக்கு வர்றதுக்கு முன்னாடி 20,000 ரூவாய்க்கு நாட்டு வேட்டு போட்டதுல காதுரெண்டும் கொய்ங்ங்...

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting6. பூக்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்ட மாரியாத்தா...

Photobucket - Video and Image Hosting7. திருவிழாக்குன்னு மொளைச்சதுல இந்த வளையக்கடையும் ஒன்னு!

Photobucket - Video and Image Hosting8. திராவிட ராஸ்கோலுங்க அணிவகுப்பு! ( ஹிஹி... கோச்சுக்காதீங்க! படம் எடுக்கறப்ப உங்களைத்தான் நெனைச்சேன்! )

Photobucket - Video and Image Hosting9. அமெச்சூரு காமெராமேனா இருந்துக்கிட்டு உள்ளூரு கெழவிய படம் புடிக்கலைன்னா எப்படி? ஆகவே, எங்கூரு முருகாத்தா!

Photobucket - Video and Image Hosting10. மாமன் பொண்னுமேல மஞ்சத்தண்ணி ஊத்தயில... சிறுசுங்க படம் பெருசுங்களைவிட அம்சமா இல்ல?

Photobucket - Video and Image Hosting11. மொறைப்பொண்னு வருவதெப்போ? மஞ்சத்தண்ணீ உத்துவதெப்போ? இந்த வருசமாச்சும் நெனைச்சதுல ஒன்னு செட்டாவுமா?

Photobucket - Video and Image Hosting12. சாமிவந்த பூசாரி... ஓங்குன அருவா...தெரியுதா?! குலுக்குன ஆட்டை வெட்டுன போட்டோ இங்க வேணாங்...

Photobucket - Video and Image Hosting13. குலவைச் சத்தத்தோடு கூடிக் கும்மியடிக்கும் உள்ளூரு மயிலுங்க...

Photobucket - Video and Image Hosting14. எங்கூரு ரொனால்டோ! கோல்லெல்லாம் போடலைங்க... மஞ்சத்தண்ணி வெளையாட்டு!

Photobucket - Video and Image Hosting15. அஞ்சாநாளு... சாமிய கெணத்துல எறக்கியாச்சு! பண்டிக சந்தோசம் முடிஞ்சாச்சு! அடுத்த பண்டிக வாரவரைக்கும் நடந்ததை மனசுல ஊறவைச்சி அப்பப்ப பிழிஞ்சுக்கனும்...

Photobucket - Video and Image Hosting

புதன், ஜூன் 14, 2006

விட்டில் பூச்சிகள்


"அய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..."


இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம்.

"வேற ஏதாவது பிரச்சனை இதுல இருக்கா?" ன்னு கேட்கறார் அப்பா.

"இல்லங்கய்யா.. FIR கூட போடலை. பிரின்ஸ்பாலே சும்மா மெரட்டி மட்டும் விட்டுடுங்கன்னு சொன்னாதால கூட்டிக்கிட்டு வந்தோம். தம்பி எதுவும் வாயத்தொறந்து சொல்லாததால ஏட்டையா லைட்டா தட்டிட்டாரு... தயவு செஞ்சு மன்னிச்சுக்கங்கய்யா!" ங்கறாரு இன்ஸ்பெக்டரு. இவ்வளவு நேரம் என்னைப்போட்டு மெதிச்சவரு இப்போ மொகமெல்லாம் வெளிறிப்போய் கெஞ்சறாரு. ம்ம்ம்.. ஆளுக்கேத்த அதிகாரம். இவனுங்க செஞ்சா சரி! நாம செஞ்சா தப்பு!

சடசடன்னு ஏட்டையா முன்னாடி ஓடி வராரு. "அய்யா.. மன்னிச்சிருங்கய்யா. தம்பி யாருன்னு தெரியாததால செஞ்சுட்டேன்.. நைட்டுக்கு டிபன் டீயெல்லாம் வாங்கிக் குடுத்தனுங்க. நல்லா சாப்டாப்புல..." இது ஏட்டு! லத்தில போட்டுப் பின்னிட்டு ரெண்டு பரோட்டா வாங்கிக் கொடுத்ததை சொல்லி தப்பிச்சிக்கறாராம்! ஆனா காலைல சாப்புட்டது. ஏட்டு புண்ணியத்துல புரோட்டா அமிர்தமாத்தான் இருந்தது.

"தேவசகாயம்.. அவனை கூட்டிக்கிட்டு போங்க.. நான் பேசிட்டு வரேன்..." ங்கறாரு அப்பா! என்னத்த பேசறாங்களோ!? சகாயம் அண்ணன்தான் அப்பாவுக்கு புதுசா வந்த போலீஸு டிரைவரு. ரெண்டு மாசம்தான் ஆச்சு! 45 வயசுலயே மூஞ்சில இருக்கற கொத்துமீசையும் நரைச்சுப்போய், பெரிய லாடுலபக்குதாசு மாதிரி அதை நீவிக்கிட்டே இருப்பாரு! ஆனா, நொடிக்கு நூறுதரம் "அய்யா.. அய்யா.. " பாட்டுதான். ஐஜி ல இருந்து ஆர்டர்லி வரைக்கும் படிப்படியா இந்த "அய்யா..." த்வனி ஏறிக்கிட்டே போகும். மதுரக்கார ஆளு. "என்னய்யா இப்பிடி பண்ணீட்டீக.."ன்னு பொலம்பிக்கிட்டே என்னயத் தூக்கிப்பிடிச்சி நிக்கவைச்சு வண்டிக்கு கூட்டிக்கிட்டுப் போனாரு. பாரா நிக்கற போலீஸுக்கு ஒரே ஆச்சரியம்! நாயி மாதிரி பொடனியில அடி வாங்கிக்கிட்டே போலீஸ் வேன்ல மத்தியானம் வந்தவன் இப்போ மரியாதையா ஜிப்ஸி ஜீப்புல போறானேன்னு! அப்பாவை பார்த்ததும் அவருக்கும் புரிஞ்சிருக்கனும். ஆனா பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வர்றப்ப இருந்த கேவலமான பார்வை இப்போ ஆச்சரியம் கலந்த எள்ளலான பார்வையா மாறியிருந்தது. அவ்வளவுதான்.

ஜட்டியோடு நிக்கவைச்சி அடிவாங்குன அவமானம் உள்ளுக்குள்ள புடிங்கித்திங்குது. ரெண்டு அடிக்கு ஒன்னும் தெரியல... அதுக்கப்பறம் ஒவ்வொரு அடிக்கும் புட்டம் தோலோடுப் புடுங்கறமாதிரி வலிக்க "அய்யோ.. அம்மா..."ன்னு வாய்விட்டு கதறுனதை நினைச்சா, அந்த அசிங்கம் வேற அழுகையா முட்டிக்கிட்டு நிக்குது. சகாயம் கைத்தாங்கலா கொண்டுபோய் ஜீப்பு பின்சீட்டுல படுக்க வைச்சாரு. சண்டைல கிழிஞ்சுபோன சட்டைய ஒரு போலீஸ்காரரு ஓடிவந்து கொடுத்துட்டு போனாரு. கணேசும், தங்கராசும் 10 மணிக்கே போயிட்டானுங்க. அவங்க அப்பாம்மா தலதலையா அடிச்சுக்கிட்டு வந்து அழுது மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. நெனைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு. மத்தியானம் வரைக்கும் இருந்த கெத்து என்ன? இப்போ இருக்கற கேவலம் என்ன? சங்கரு குரூப்பை கெமிஸ்ட்ரி லேபுல இருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் தொரத்தி தொரச்சி அடிக்கறப்ப வலின்னா என்னன்னு தெரியலை! இப்போ இவனுங்க ரவுண்டு கட்டி அடிக்கறப்ப வலில அவனுங்களைப் பத்தி நினைக்கக்கூட முடியலை! என்னது? எதுக்கு அடிச்சமா? ஒம்மாள.. அவனுங்களுக்கு இருக்கற திமிருக்கு போட்டுத் தள்ளியிருனும். ஒதடு கிழிஞ்சதோட தப்பிச்சிட்டானுங்க. எல்லாம் அந்த ஓடுகாலி அனிதாவால வந்தது. இத்தன நாள் எங்கூட சுத்திட்டு, இப்போ திடீர்னு வந்து என்ன விட்டுடுன்னா?! நான் என்ன கேனயனா? லவ் பண்ண ஆரம்பிக்கறப்ப நான் கேவலங்கறதெல்லாம் தெரியலையா? 14 அரியரு வைச்சிருந்தா அவனெல்லாம் கிரிமினலா? அந்த நாயி சங்கரு கூட சேர்ந்தவொடனே நானெல்லாம் உருப்படாத பொறுக்கின்னு கண்டு புடிச்சிட்டா அந்த மேரிக்யூரி! சொல்லும்போதே பளார்னு ஒன்னு அப்பியிருக்கனும். கேண்டீன்ல அத்தனபேரு முன்னாடியும் செய்யமுடியல...

இதெல்லாங்கூட சரிங்க.. போன வருசம் வீட்டுல இம்சை தாங்காம 10 ரூவாய தூக்கிட்டுக் கெளம்பிப்போக, இந்த வெளங்காத வால்டரு.. அதாங்க எங்க அப்பா... சேலத்துல வைச்சு அமுக்கி ஒரே நாள்ல வீட்டுக்கு கொண்டு வந்துட்டாரு. இந்த கதை வேற அவனுங்க குரூப்புக்கு தெரியும். ரெண்டு தடவை ஒதை வாங்கியும் கும்பல் சேர்ந்துக்கிட்டு போறப்ப வர்றப்ப எல்லாம் அவன் "விட்டில் பூச்சியின் வாழ்வுக்காலம் எவ்வளவு?"ன்னு கொரல் கொடுக்க, கூட இருக்கற அள்ளக்கைங்க "ஒரு நாள்"ன்னு சவுண்டு விடுங்க. இருங்கடா ஒருநாள் உங்களுக்கெல்லாம் பூஜைன்னு நெனைச்சுக்கே இருப்பேன். இன்னைக்கும் அந்த அனிதா என்னை கழட்டி விட்டுட்டு அவனுங்ககூட சேர்ந்தப்புறம், காலைல இதையே சொல்லி என்னைக் கிண்டுனப்ப முடிவு செஞ்சுட்டேன். அவனுங்களுக்கு இன்னைக்கு வைக்கறதுன்னு... நாங்க 12 பேரு. அவனுங்க 8 பேரு. அந்தப் பொட்டநாயி பார்க்கப்பார்க்க இந்தச் சொறிநாயி எங்கையால அடிவாங்கனும்னுதான் மத்தியானமா அவ லேப் முடிச்சதும் இவனுங்க வழியறதுக்குப் போவானுங்கன்னு கணக்குப்பண்ணி வளைச்சது! ஸ்டம்பை என் கையிலப் பார்த்ததுமே மக்கா தப்பிச்சி ஓடுனானுங்க. லேபுல இருந்து தொரத்துனதுல வாகாக் கெடைச்சான் பஸ்ஸ்டாப்புல. அப்படியே சட்டையப் புடிச்சிக் கவுத்து ரெண்டு மிதி நெஞ்சுல! ஸ்டம்புல மூஞ்சிலயே ரெண்டு போடு. அதுக்குள்ளத் தகவல் போய் வேனோட வந்துட்டானுங்க நம்ம கடமை வீரனுங்க... அவனவன் தப்பிச்சு ஓடிட்டதுல மாட்டுனது நாங்க மூனுபேருதான். காலேஜ்ல இருந்து 2 கிலோமீட்டருதான் போலீஸ் ஸ்டேசன். அடிக்கடி NH47னை ப்ளாக் செஞ்சு ஸ்ட்ரைக் செய்வோங்கறதால பசங்க எங்க ஓடுனா எங்க மடக்கலாம்னு அத்துப்படி அவனுங்களுக்கு. போன தடவை "போலீஸ் மாமா ஒழிக!"ன்னு சவுண்டு உட்டதெல்லாம் மனசுல வைச்சிருந்திருக்கனும்! இந்தமுறை அடிதடிங்கறதால சென்னியப்பன் கோயிலை தாண்டி ஓடறப்பவே அமுக்கி இழுத்துக்கிட்டு வந்துட்டானுங்க! ம்ம்ம்.. மாட்டுனது நாங்க மூனே பேரு! விடுவானுங்களா? தொவைச்சுட்டானுங்க.

ஏன்னே தெரியல! இந்த அப்பாவை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது.
அந்தாளு மூஞ்சியவே பார்க்கப் பிடிக்கலை. தொட்டது அத்தனைக்கும் ஒரு கேள்வி! இல்லைன்னா அறிவுரை! ஏதோ நாமெல்லாம் இன்னும் பால்குடிக்கற பப்பா மாதிரி. அரியரு வைச்சா லைப்பே அவ்வளவுதானா? அடுத்தமுறை ஒண்டே விளையாண்டா முடிஞ்சது. இதுக்கெல்லாம் திட்டு. எல்லாத்தையும் தாங்கிக்கலாம். ஆனா எப்பப்பாரு "நீ இப்போ என்ன செஞ்சிட்டு வர்றங்கறது எனக்கு தெரியும்!"ங்கற அந்த பார்வையைத்தான் தாங்கவே முடியாது. பேச்சுவார்த்தை நின்னுபோய் 2 வருசத்துக்கு மேல ஆகுது. இன்ஸ்பெக்டரு ரூம்ல பெரிய தேவரகசியங்களை எல்லாம் பேசி முடிச்சிட்டு, இப்பவும் அந்த இறுகிப்போன மொகத்தோட ஜீப்புல வந்து முன்னாடி ஏறிக்கிட்டாரு. முன்னாடி இருக்கற வயர்லெஸ்சை எடுக்கும் போதுதான் பார்த்தேன். கைகள் நடுங்குது அவருக்கு. இதுக்கு முன்னாடி ஒரு தடவை வீட்டுல அவரு எதையோ தேடப்போய், என் கப்போர்டுல இருந்து அந்த வீடியோ கேசட்டை எடுத்தபோதும் இதே மாதிரி எதுவும் கேக்கமுடியாம உணர்ச்சிகளற்ற முகத்துடன் கைகள் நடுங்க என்னை பார்த்தது நெனைவுக்கு வருது. அவருக்கும் அவமானமாய்த்தான் இருந்திருக்க வேண்டும். தனக்குக்கீழே உள்ள அதிகாரியிடம் தலைகுனிந்து பெத்த மகனுக்காக நிக்கனும்னா எந்த அப்பனுக்கும் அவமானமாய்த்தான் இருக்கும். இவரு என்ன பெரிய ஸ்பெஷலா?!

"சகாயம்... வண்டிய வீட்டுக்கு விடுங்க"ன்றாரு அப்பா! எனக்குக் கோபம் தலைக்கேறிடுச்சு. இவ்வளவு நேரம் விழுந்த அடிகளால் பயந்துபோய் அடக்கிவைக்கப்பட்டிருந்த என் கோவம், எதிர்ப்புகள் வராத தகுந்த இடம் கிடைத்ததும் குபுக்குன்னு கெளம்புது. "அந்த நாசமாப்போன வீட்டுக்கெல்லாம் வரமுடியாது! வண்டி அங்க போறதா இருந்தா இப்பவே குதிச்சிடுவேன்"ன்னு கத்தறேன்! அடிபட்டவராக சடாரெனத் திரும்பி என்னை பார்க்கிறார் அப்பா. நான் பார்த்துவிட்ட ஒரு செகண்டில் முகத்தினைத் திருப்பி ரோட்டைப் பார்க்க்கிறார். சகாயம் அண்ணனுக்கு புரிந்திருக்க வேண்டும். எதுவும் சொல்லாமல் ஏறக்கட்டியப் பார்வையில் என்னை ரியர்வியூ கண்ணாடியில் பார்க்கிறார்.

வண்டி மெல்லத் திரும்பி ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்தது. டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆபீசுக்கு முன்னாடி வழக்கமாக ரோந்துக்கு 10 நிமிடம் நிறுத்தும் இடத்தில் நிற்கிறது. அப்பா வயர்லெஸ்சில் ஏதோ அழைப்பு வர சுரத்தற்ற குரலில் என்னவோ சொல்கிறார். சகாயம் அண்ணன் "தம்பி, இறங்கி வாங்க.. அப்படி போய் கொஞ்ச நேரம் காத்தாட ஒக்காருவோம்"ங்கறாரு... அப்பா சரின்னு தலையாட்ட அண்ணன் என்னை கைத்தாங்கலாப் பிடிச்சு இறக்கிவிடறாரு. எனக்கும் அவரு இருக்கற இடத்துல இருக்கப் பிடிக்காததால சகாயத்துடன் இறங்கி நொண்டிக்கொண்டே, கிழிந்த சட்டையை தடவிக்கொண்டே நடக்கிறேன். ரேஸ்கோர்ஸ் நடைபாதை ஓரமா ஒரு சிமெண்ட்டு பெஞ்சுல அப்பா திரும்பிப் பார்த்தா முதுகுமட்டும் தெரியறமாதிரி உக்கார்ந்தோம். நான் பேசற ஒவ்வொரு பேச்சுக்கும் திட்டலோ இல்லை வெறுத்து ஒதுக்கற பதிலோ கிடைச்சுத்தான் எனக்குப் பழக்கம். ஆனா இந்த டிரைவரு அண்ணன் நான் செஞ்சதுக்குக் கோவிச்சுக்காம பதமா பேசறதே இப்போதைக்கு என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. முன்னயெல்லாம் அம்மா கிட்ட போனாலும் இதே மாதிரி பேசுவாங்க. ஆனா இப்பவெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னா அந்த ஒப்பாரி தாங்கமுடியலை. இந்த பொம்பளைங்க ஒப்பாரி வைச்சா நல்லா வாயோட சேர்த்து ஒன்னு இழுத்து விடனும்.

பெஞ்ச்சுக்கு முன்னாடி ஒரு லைட்டுக்கம்பம். அந்த ட்யூப்லைட்டைச் சுத்தி ஒரே பூச்சிங்க. வாழ்கிற வாழ்க்கையின் ஆதாரம் அந்த லைட்டு கொடுக்கற வெளிச்சத்தைக் குடிச்சு முடிக்கறதுதான்னு ஓயாம சுத்திச்சுத்தி வருதுங்க! விடியற வரைக்கும் அந்த லைட்டை முட்டிமுட்டி பைசாவுக்கு பிரயோஜனமில்லாம சாகறதுதான் ஒரே குறிக்கோள் போல! இதுங்க பேரும் விட்டில் பூச்சிங்கதான் நினனக்கறபோது அந்த பண்ணாடை சங்கரு முகம் நினைவுல வந்து வெறுப்படிக்குது. சகாயம் திரும்பி ஜீப்பை பார்த்தாப்புல. அப்பா அங்கிருந்து பார்த்தா தெரியாதுன்னு தெரிஞ்சதும் சிகரெட்டு பாக்கெட்டை எடுத்தாரு. ஒன்னை பத்தவைச்சிக்கிட்டு "எடுத்துக்குங்க தம்பி.."ன்னு நீட்டுனாரு. எனக்கு இன்னும் அடங்கலை. எப்ப வேணா அழுகறதுக்குன்னு ரெடியா இருக்கறேன். இந்த நிலைல வார்த்தைக எல்லாம் கட்டுக்குள்ளயா இருக்கும்? "ஒரு மசுரும் வேணாம்"ங்கறேன். "சும்மா எடுங்க... நீங்க தம்மடிப்பீங்கன்றது எனக்குத் தெரியும்"கறாரு. "எனக்கு சார்மினார் புடிக்காது" மறுபடியும் வேகமா கத்தறேன். "அடடா! அதான் மேட்டரா"ன்னு சிரிச்சுக்கிட்டாரு.

நான் யாருமில்லாத ரோட்டை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கறேன். அவரு அனுபவிச்சு தம்மை இழுத்து முடிச்சாரு. அதுக்கப்பறமும் 10 நிமிசம் எதுவும் பேசாமலேயே போகுது. என்னோட மூச்சு இழுத்து விடுகிற சத்தத்தோட மெல்ல மெல்ல ஒரு கேவலும் சேர்ந்துக்கொண்டிருப்பதை அவரும் கேட்டிருக்கனும்போல. ஆதரவா என் கைகளைப் பிடிச்சுக்கிட்டு "ஏந்தம்பி.. ரொம்ப வலிக்குதா?"ங்கறாரு. நான் தலையை மட்டும் அசைத்து "ம்ம்ம்" என்கிறேன். கெண்டைக்காலில் வலி பின்னியெடுக்கிறது. மெல்ல அதை தொடுகிறேன். சகாயம் அதைப்பார்த்துட்டு சட்டுன்னு குனிந்து என் பேண்ட்டை மடிச்சு மேல தூக்கறாரு. பட்டை பட்டையா அழுத்தமில்லாத வரிகள். இப்போத்தான் வீங்க ஆரம்பிச்சிருக்கு.

"அடடா.. பலமாத்தான் போட்டிருக்கானுங்க"ன்றாரு. சலனமே இல்லாம அவரைப் பார்க்கறேன்.

"ஏந்தம்பி. ஒரு பொண்ணுக்காக இந்த அடி வாங்கறீங்களே.. அவளைத்தான் கட்டிக்கிடப் போறிங்களா?"ங்கறரு. இந்தாளுக்கு யாருக்கு சொன்னா அப்படின்னு எனக்கு சுருக்குங்குது.

"எந்த நாய்க்காகவும் இல்லை. இது வேற மேட்டரு!" என்கிறேன் எரிச்சலாக.

"தம்பி.. என்ன இருந்தாலும் அவங்க உங்ககூட படிக்கறவங்க.. தப்பா பேசக்கூடாது.. இன்ஸ்பெக்டரு சொன்னதுன்னு அங்க அரசல் புரசலா ஸ்டேசன்ல பேசிக்கிட்டாங்க"ன்னு சொல்லிக்கிட்டு மீசைய நீவிக்கிட்டாரு.

எனக்கு மனசுக்குள்ள என்னவோ செய்யுது. ம்ம்ம் யோசிச்சா அவளுக்குத்தான் அடி வாங்கியிருக்கேன். அவ வேணுங்கறதுக்குத்தான் இந்த வேலைய செஞ்சிருக்கறேன். அவ என்னை திரும்பிப்பார்க்கனும்னுதான் சங்கரை போட்டுப்பார்த்திருக்கேன்.

"பொண்னுகளை மெரட்டி மடக்க முடியாது தம்பி... நம்மளை கொடுத்து அவங்களை வாங்கனும்"னு சொல்லிட்டு சிரிக்கறாரு சகாயம். அவரு என்ன சொல்லறாருன்னு புரியலை! அவரு பேண்ட்டை மேலே தூக்கி காலைக் காட்டுனாரு. முட்டிக்குக் கீழே ஒரு ஜானுக்கு குதறிய தழும்பு. பார்க்கவே அருவருப்பா இருக்கு. சதை இருக்க வேண்டிய எடத்துல ஒரு பள்ளம் மாதிரி இருக்கு. அந்த குரூரம் தாங்க முடியாம பட்டுன்னு கண்ணை மூடிக்கிட்டேன்!

"பயப்படாதீங்க தம்பி.. நானும் உங்களை மாதிரிதான்.. இது எம்பொண்டாட்டிக்காக வாங்குனது. ஒரே ஊருதான். அவ வேற கேஸ்ட்டு. ஓடிப்போன ரெண்டாவது நாளே மாட்டிக்கிட்டோம். இழுத்துட்டு போய் பிரிச்சுட்டானுவ. கட்டிவைச்சி குஞ்சுக்குழுவானுல இருந்து பெருசுக வரைக்கும் என்னை சாதிய சொல்லிச்சொல்லி அடிச்சானுவ. ஊரே சாணியக் கரைச்சு மேல ஊத்துச்சு. இந்தக் காலுலயாடா எங்க பொண்ணை கூட்டிக்கிட்டு ஓடுனன்னு கடப்பாரைல ஒரு குத்து என் கால்ல.. சதைய தோண்டிட்டானுங்க.. ஆறுமாசம் ஆச்சு ஒடம்பு தேற்றதுக்கு மட்டும்!" ரோட்டை வெறிச்சபடி சொல்லிட்டு மீசைய தடவிக்கறாரு ஒரு தடவை. எனக்கு ஒரு நிமிசம் என் வலியெல்லாம் மறந்துட்டது.

"அடி வாங்கனும் தம்பி! வாழ்க்கைல அடிவாங்கித்தான் மனசுக்கு ஒரம்போட முடியும். அத்தன அடி வாங்கனதுக்கப்பறமும் அவளை மறுபடியும் கட்டிக்கிட்டே தீரனும்னு ஒரு உறுதியா ஊரை விட்டு ஓடிவந்து எங்க மாமா ஹெல்ப்புல போலீஸுக்கு விண்ணப்பிச்சு இன்னைக்கு 20 வருச சர்வீசு போட்டுட்டேன். வேலை கெடைச்சு ட்ரெய்னிங் முடிஞ்சு போஸ்டிங் கெடைச்ச அடுத்த மாசமே அப்பத்தின எங்க அய்யாக்கிட்டக் கெஞ்சி ஜீப்பை எடுத்துக்கினு அவரையும் கூட்டிக்கிட்டு ஊருக்குப்போய் கெத்தா அந்த புள்ளையக் கூப்பிட்டு விசாரிக்க வைச்சேன். அவ திரும்பவும் என்னைப் பார்த்ததும் கதறிக்கிட்டு வர, வயசுக்கு வந்தவங்களை விருப்பத்துக்கு மாறா கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு மெரட்டி எங்காளு கிட்ட ஒப்புமை வாங்கிட்டு, ஸ்டேசன்லயே அய்யா முன்னாடி தாலி கட்டுனேன்" பேசிக்கிட்டே இன்னொரு சார்மினாரை எடுத்து பத்தவைக்கறாரு.

"எதப்புடிச்சா எதை அடையலாங்கறதெல்லாம் ஒரு கணக்கு தம்பி... என்னை சாதிப் பார்த்து தொரத்துனவுங்க என் யூனிபாரத்தைப் பார்த்து வாயத் தொறக்கலை. அதுக்குத்தான் போராடுனேன். இன்னைக்கு 3 புள்ளைங்க பொறந்ததுக்கு அப்பறம் ஊட்டுக்காரிய ஊடு சேர்த்துனானுங்களே தவிர என்னைச் சேர்க்கறதுமில்லை. வெலக்க முடியறதுமில்லை. போங்கடா மசுராச்சுன்னு நானும் கண்டுக்கறதில்லை. ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்.. அது எட்டுக்கு எட்டா இருந்தாலும் சரி... 1000 ஏக்கரா இருந்தாலும் சரி.." சகாயம் பேசிக்கிட்டே போறாரு. பில்டரு வரைக்கும் இழுத்துட்டு பெஞ்சு கைப்பிடில நசுக்கித் தூக்கி வீசறாரு. எனக்கு ஒன்னும் புரியலை. நாமளே நொந்துகெடந்தா இந்த ஆளு வெந்து கெடக்கறாரோன்னு மனசுல ஓரமா தோணுது.

"நா முன்னாடி இருந்த அய்யா வீட்டுல கேட்டுள்ளயே சேர்த்த மாட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க டீ குடிக்கறதுக்குன்னே தனியா ஒரு டம்ளரு தட்டு கார்ஷெட்டு மாட்டுல இருக்கும். இது புடிக்காமயே நான் டீகாபி குடிக்கற வழக்கமில்லைன்னு சொல்லி கடைசிவரைக்கும் அங்க வாய் நனைச்சதில்லை. ஆனா உங்கப்பாரு எல்லாம் நல்ல மனுசங்க தம்பி. உங்க வீடு மாதிரி உள்ள கூப்பிட்டு வைச்சு சாப்பாடு போடறதெல்லாம் நான் என் சர்வீசுல பார்த்ததேயில்ல.."ங்கறாரு. எங்கப்பா பேச்சு வந்ததும் எனக்கு சுர்ருங்குது...

"ஆமா! ஊருக்கெல்லாம் நல்லது செய்வாரு.. பெத்தவனுக்குன்னா மட்டும் செய்ய வராது! எல்லாம் ஊருல நல்ல மனுசன்னு பேரு வாங்கறதுக்கு செய்யற வேலை"ன்னு வெறுப்பைக் கொட்டறேன்.

கடகடன்னு வாய்விட்டு சகாயம் சிரிச்சதைப் பார்த்ததும் எனக்கு திரும்பவும் கோவம் வருது. எரிச்சலா அவரைப் பார்க்கறேன். "உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா தம்பி? காந்தியோட பையனுக்கும் இதே பிரச்சனை இருந்ததாம். அவருக்கு அவங்கப்பா எதுவுமே செய்யலைன்னு.." சொல்லிட்டு மறுபடியும் சிரிக்கறாரு.. எனக்கு பொசுக்குன்னு போயிருச்சு.

"புள்ளைங்களைப் பெத்துட்டா வளர்த்தறது அவ்வளவு சுலபமில்ல தம்பி.. நம்ப ஆசை, கனவுக எல்லாத்தையும் ஒதுக்கி வைச்சுட்டு எதைச் செஞ்சா புள்ளைங்க நல்லா வளரும்.. குடும்பம் தெம்பா நிக்கும்னு தேடிப்போகற பாதை! மனசார இந்த பாதைல போறப்ப அவங்க கனவு, ஆசை இதையெல்லாம் தெரிஞ்சே தொலைக்கறதை கண்டும் காணாம இருக்கறதுக்காக நெருப்புகோழி மண்னுல தலைய விட்டுக்கிட்டாப்புல வேல வேலைன்னு அலைஞ்சு திருப்தியடையறதுதான் தகப்பனுங்க புத்தி... உங்க அப்பாருக்கு என்ன கனவுகன்னு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா" ன்னு கேக்கறாரு! அவரு பேசப்பேச எனக்கு வாயடைச்சுப் போகுது.

வீட்டுக்கு சம்பாதிச்சுப்போடறதை விட அவருக்கு வேற கனவுக எதாவது இருக்குமா என்ன? காலேஜ் படிக்கறப்ப நீச்சல் சாம்பியன்! நாடகம் நடிச்சி வருசத்துக்கு நாலைஞ்சி மெடலு, ஷீல்டெல்லாம் கூட வாங்கியிருக்காரு! ஒருவேளை... இதெல்லாம் கூட அவரது லட்சியக்கனவாக இருந்திருக்குமோ?! இப்போ கால்வலியோட தலைவலியும் சேருது. இந்த ஆளுகூட பேசுனா மொத்தமா கவுத்துருவாருன்னு மனசுக்குள்ள ஒரு எச்சரிக்கை உணர்வும் வருது!

"தம்பி.. உங்க வயசுக்கெல்லாம் ஆடணும்... பாடணும்.. சந்தோசமா இருக்கனும்.. அதப்பார்த்து பெத்தவங்க உட்பட மத்தவங்களும் சந்தோசமா இருக்கனும்.. உங்க சந்தோசத்துக்கு நாலுபேர்த்த அழவைக்கக்கூடாது. அடி வாங்கறது பெரிசில்லை! வாங்கற ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கனும். அப்பத்தான் அதை நாளைக்கு நீங்க நல்ல நெலமைக்கு வந்தா நெனைச்சுப் பெருமைப்பட்டுக்க முடியும்... இல்லைன்னா அது என்னைக்கும் உறுத்திக்கிட்டே இருக்கும். அன்னைக்கு நான் வாங்குன அடில பொடம்போட்டு இன்னைக்கு எங்க ஊருல நான் தலைநிமிர்ந்து நிக்கறேன். அந்த மரியாதியும் பயமும் எனக்கில்ல... என் யூனிபாரத்துக்குன்னும் எனக்கு நல்லா தெரியும். உங்களுக்கெல்லாம் உங்கப்பாரு இத்தன வசதி குடுத்திருக்காரு தம்பி. எங்கப்பாரு எனக்கு கொடுத்த ஒரே வசதி என் சாதி மட்டுந்தான்.. அதைக் காட்டிதான் சாப்பாடு, படிப்புன்னு உபகாரமா கெடைச்சே PUC தாண்டுனேன். உங்களுக்கு கெடைச்சிருக்கதுக்கெல்லாம் நீங்க எங்கயோ போகனும்... தடம் பொறண்டுறாதீக தம்பி..." ன்னு சொல்லும்போதே அவருக்கு கண்ணுல தண்ணி பொங்க ஆரம்பிச்சிட்டது. அங்கதான் மொத்தமா கவுந்துட்டேன். வெறித்த கண்களோடு தன் வலிகளை வென்ற வெற்றிகளுக்கு பரிசாகக்கிடைத்த நிதர்சனக்களை ஏற்றுக்கொண்ட மனத்தோடு சகாயம் சொல்லிய அந்த வார்த்தைகள் என் வலிகளோடு சேர்த்து என் மனக்கசடுகளையும் அடித்துக் கழுவுகிறது.

அதற்குப்பிறகு நிறைய நேரம் நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை. அதிகாலையில் நடைப் பயில்பவர்கள் மெல்ல வர ஆரம்பிக்கிறார்கள். கையையும் காலையும் வீசியபடி விடிவிடுவென வயதானவர்களும், கான்வாஸோடு ஓடும் பசங்களும்னு இவ்வளவு நேரம் சலமற்று இருந்த இடம் தன் மவுனம் கலைக்கத் தொடங்குகிறது. "வாங்கண்ணே வீட்டுக்குப் போகலாம்"னு அவரைக் கெளப்பறேன். வண்டியின் பின்சீட்டில் பூட்சுகளை கழற்றி வைத்து, கால்களை மடக்கி, உடலைக் குறுக்கி மெல்லிய குறட்டையோடு தூங்கிக்கொண்டிருக்கிறார் என் அப்பா!

"வேண்டாண்ணே! எழுப்பாதீங்க... பாவம் தூங்கட்டும்.. வண்டிய மெதுவா எடுங்க"ன்னு சொல்கிறேன் நான். வண்டி நகரும்போதே முழிச்சுக்கிட்டாரு... "அப்பா, வீட்டுக்கு போகலாம்பா" ங்கறேன் நான், அவர் முகம் பார்க்கத் திராணியற்று ரோட்டைப் பார்த்தபடி. இப்போதும் அவர் ஒன்றும் பேசவில்லை.

அதிகாலைக் காற்று முகத்தில் மோதி என் உடல் சிலிர்க்க, இரு கைகளையும் இறுக்கிக் கட்டியபடி விடியும் பொழுதை ரசிக்க ஆரம்பிக்கிறேன் நான்.


****

June 06 Thenkoodu TamilOviam Contest First Prize Winner

தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்) போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை

வியாழன், ஜூன் 08, 2006

க.க: 6 - கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா...?


ன்னது? ஓடிப் போலாமாங்கறதை மாத்தி தப்பா பாடறனா? கட்டிக்கிட்டதுக்கு அப்பறம் எங்கங்க ஓடறது? சம்சார சாகரத்தில் கெடந்துழல வேண்டியதுதான்! கட்டுனவ கிட்ட இருந்து ஓடிப்போயிடலாமாங்கற எண்ணம்கூட சிலநாள் வர வாய்ப்புண்டு! ஆனா கட்டுனவ கூட ஓடிப்போயிடலாம்னு ஒரு நாளும் நினைக்கத் தோணாது! ஆகவே, சிறப்பான இந்த பொருட்குற்றத்தோடு இன்னைக்கு பொங்கலை ஆரம்பிக்கலாம்.


கல்யாணங்கறது நெசமாவே ஒரு திருவிழாதாங்க! பார்க்கப்போனா நம்மை மையப்படுத்திதான் எல்லாமே நடக்கற மாதிரி ஒரு தோரணை இருக்கும்! ஆனா, நம்ம பேரை வைச்சு மக்கா கொண்டாடிருவாக! அய்யனாரு கோயில் திருவிழா என்னவோ அய்யனாரு பேருலதான் நடக்கும். ஆனா மொடமொடன்னு புதுத்துணி போட்டுக்கறது, சிறுசுக சேமியா ஐஸ், கடிகார ஜவ்வுமுட்டாய், கலர்கண்ணாடின்னு ஜமாய்க்கறது, வயசுப்பயக தோதான புள்ளைங்ககூட கண்ஜாடைலயே காவியம் படிக்கறது, பொம்பளையாளுக ஒத்துமையா ஒன்னுமண்ணா பொங்க வைக்கறது, ஆம்பளையாளுக மரத்துக்கு பின்னாடி கமுக்கமா பட்டைய ஊத்திக்கறது, கறிசோறு வேகறவரைக்கும் சீட்டுக்கட்டுல காச விடறது, பங்காளிககூட நின்னு போன பேச்சுவார்த்தைகளை புதுப்பிச்சுக்கறது, இல்லைனா புதுசா பஞ்சாயத்து ஆரம்பிக்கறதுன்னு பட்டரைய போட்டு கொண்டாடிருவாக! ஆனா அய்யனாருக்கு ஒரு புது துண்டும், ஒரு இலை படையலும், ஒரு பாட்டிலு சரக்கும் பீடிக்கட்டும் தான் மிச்சம்! ஆகவே மக்களே! கல்யாணத்தன்னிக்கு நீங்க ஹீரோ மாதிரி! ஹீரோ இல்லை!
எதெல்லாம் செய்தால் அன்றைய நாள் மறக்க முடியாததாக ( முக்கியமாக நமக்கு )இருக்குமோ அந்தமாதிரி திட்டமிட்டு இதனை செய்யலாம்! நம் சொந்தங்க எல்லாரும் சந்தோசப்படறமாதிரி செய்யனும்னு ஆசைப்பட்டா அது நடக்கற காரியமில்லை! எல்லாருக்கும் நல்லவங்கற கதையாகிரும். உங்கள் இருவீட்டாரது விருப்பமே முக்கியமாக இருக்கட்டும். சுத்தியுள்ள சொந்தங்க நம் ஆசைப்படி நடக்கும் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தவேண்டும் என்பது பிரதாணமாக இருக்கவேண்டுமே தவிர, மத்தவங்க ஆசைப்படி திட்டமிட்டா நம்ம சந்தோசம் பறிபோயிருமப்பு! என்னது கொழப்பறனா? பொண்ணு வீட்டுலயும் நம்ம வீட்டுலையும் நமக்கு வசதியா மண்டபமோ, கோவிலோ பார்த்து கல்யாணம் வைக்கலான்னு ஒரு ஐடியா வைச்சிருப்போம்! இதைப்போய் உங்க ஜனங்க 50 பேர்த்தக்கூட்டி என்ன செய்யலாம்னு கேட்டுப்பாருங்க! சட்டசபை தோத்துரும்! "நம்ம குல வழக்கப்படி..", "நம்ம கொள்ளுத்தாத்தா காலத்துல இருந்து..." "இப்படிதான் நம்ப ஒன்னுவிட்ட சித்தப்பாவோட ரெண்டுவிட்ட சித்திபையன் செய்யபோக..." எடுத்து விட்டுக்கிட்டே இருப்பாங்க! நம்மாளுக விருப்பமெல்லாம் பொண்ணு வீட்டாரு ஒத்துக மாட்டாக! அவிங்க சொல்லறதெல்லாம் "அதென்ன நாம கேக்கறது?!"ன்னு கெத்து காட்டற மேட்டரா மாறிடும்! எனவே மக்களே! முடிவுகளை இருவீட்டாரும் எடுங்கள். எடுத்த முடிவுகளை சுற்றத்துக்கு அறிவியுங்கள்! முடிவெடுப்பதை பரவலாக்காதீர்கள்.

என்னைக்கு கல்யாணத்துக்கு மனதளவில் தயாரானமோ அன்னைக்கு இருந்து சக்திக்கேத்தமாதிரி சேர்த்த ஆரம்பிச்சோமில்ல? அது இப்போதைக்கு ஒரு பெரிய ஒன்னோ ரெண்டோ ஆகியிருந்தா சந்தோசம்! கல்யாணம்னா எல்லாம் பொண்ணு வீட்டுலயே செய்வாக.. நாமபோய் தாலி கட்டுனா போதுங்கற காலமெல்லாம் போயிருச்சப்பு! இன்னைக்கெல்லாம் செலவுகளை கணக்கெழுதி சரிபாதியா பிரிச்சுக்கற காலம்! என்னதான் உங்களுக்கு எல்லாம் செய்யற மாமனாரு கெடைச்சாலும், பத்திரிக்கை, துணிமணி, வரப்போறவளுக்கு போடற நகை அப்படி இப்படின்னு ஒரு பெரிய ரூவாய்க்கு கொறையாம பழுத்துரும்! கல்யாணம் செஞ்சுக்கற வயசாகியும் இதை நம்ம பெத்தவுக கிட்ட இருந்து வாங்குனா நாமெல்லாம் சுயமா நிக்கறதுக்கு அர்த்தமில்லாம போயிரும்! நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்!

நிதிமந்திரி மாதிரி பைசா சுத்தமா திட்டம் போட்டெல்லாம் கல்யாணம் நடத்துனா வேலைக்காவாது! தொட்டதுக்கெல்லாம் காசு பறக்கற நேரமது! அதுக்காக திட்டமிடாமலும் இருக்கக்கூடாது! உங்க திட்டத்துல 60% அதுபடி நடந்தாவே ப்ராஜெட்டு சக்சஸ்தான்! இந்த பொம்பளையாளுக செய்யற செலவையெல்லாம் கணக்குல எடுத்துக்கனுமே தவிர கணக்கு கேக்கப்படாது! அதெல்லாம் உணர்வுகள் வகைப்படும்! நமது பகுத்தறிவை காட்டறதா நெனைச்சுக்கிட்டு "ஒரே ஒரு நாளு கட்டிக்கறதுக்கு 20 ஆயிர ரூவா பட்டுப்புடவையா?!" "ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா?"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது! "ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு!"ங்கற மொனகலோடு கூட முடியாது! நாளப்பின்ன அந்த பொடவைல ஒரு சின்ன காபிக்கறை பட்டாக்கூட "அன்னைக்கே உங்க நொள்ளைக்கண்ணு பட்டதாலதான் இப்படி"ன்னு கொமட்டுல குத்தறதுல போய் முடியக்கூடும்!


ஆமாங்க! கல்யாணங்கறது ஒரு நாள் கூத்துதான்! ஆனா கெடைச்ச இந்த ஒரு சான்சுலையாவது ஒழுங்கா கூத்து கட்டனுமில்ல? ஆகவே, எல்லா விதத்திலும் ஜமாய்ச்சிருங்க! 10000 கலர் புடவையா? டிசைனர் ஷெர்வானியா? மத்தியானத்துக்கு ரெண்டு ஸ்வீட்டா? சாயந்தரம் ஆர்கெஸ்ட்ராவா? வந்தவுகளுக்கெல்லாம் தாம்பூலப்பையோட திருக்குறள் புத்தகமா? எதுவாக இருந்தாலும் உங்கள் சக்திக்கும் கொள்கைளுக்கும் உட்பட்ட உச்ச அளவெனில் அனைவருக்குமே ஆனந்தம் தான்! தயவு செய்து கல்யாணத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரேமாதிரி செய்யுங்கள்! சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து தனியா ஜாக்கெட் பிட்டோ இல்லைனா குங்குமச்சிமிழோ கொடுக்காதீர்கள்! பந்தில பணக்கார பிரபலங்களை பட்டும் விழுந்து விழுந்து கவனிக்காதீர்கள்! நம் அழைப்பை ஏற்றுவரும் அனைவருமே ஒரே தரம்தான். அப்படி கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயமெனில் தயவு செய்து இந்த இடத்தை தவிருங்கள்! எல்லாருமே மனுசங்கதான்! சிலர் மட்டும் மற்றவர்களை விட உசத்தி எனக்காட்டும் இந்த செய்கை உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களை விட காழ்ப்புணர்ச்சியை அதிகம் பெற்றுத் தரக்கூடும்!


ரெண்டுநாள் கல்யாணம், மூணுவேளை விருந்து என இருக்கப்போகிற இந்த நேரத்தில் முடிஞ்சா சில நல்ல காரியங்களும் செய்யுங்க! மண்டபத்திற்கு பக்கத்துல இருக்கற ஒரு முதியோர் இல்லமோ அல்லது குழந்தைகள் காப்பகமோ கண்டுபிடித்து அவர்களுக்கும் அதே விருந்து போடுங்க! மொதபந்தி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவங்களுக்கு அனுப்பி வைச்சிருங்க! சொந்தபந்தங்களின் ஆயிரத்தெட்டு விருப்பு வெறுப்புகளுடன் நடக்கும் கல்யாணத்தில் முகம் தெரியாத அந்த மனுசங்களுக்கு வயிறார சாப்பிடும் அந்த உணவு கொடுக்கும் சந்தோசம், நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல! ஒரு 100 டிபன், சாப்பாடு எந்த விதத்திலும் நமக்கு அதிக செலவை வைத்துவிடப்போவதில்லை! இது சமூகசேவை இல்லைங்க! நாலுபேரு அந்த சாப்பாடுனால சந்தோசப்பட்ட அது நமக்கு நன்மையா முடியுங்கற சுயநலமாவும் கூட இருக்கலாம்னு எடுத்துக்கங்க.

இந்த ஒரு நாள் கூத்தை கடைசிவரைக்கும் நினைவுல வைச்சிருந்து சந்தோசப்படவோ, மனசுக்குள்ள ஏக்கப்படவோ வைக்கப்போறது நல்ல வீடியோகாரரோட கைங்கர்யம்தான்! அதுவும் தாலிகட்டறதுக்கு முந்தினநாள் பொண்ணுமாப்ளைக்கு மட்டும் நலங்கோ, ரிசப்சனோ முடிஞ்ச அன்னைக்கு நைட்டு ஒரு போட்டோசெஷன் வைப்பாங்க! இது ஆரம்பிக்கறதுக்கே நைட்டு 12 மணிக்கு மேல ஆகிறும்! மண்டபத்தை சுத்தி செடிகொடி இருக்கற எடமாப்பார்த்து கூட்டிக்கிட்டு போய் லைட்டைபோட்டு நிக்கவைச்சி, ஒக்காரவைச்சி, பக்கம்பக்கமா ஒட்டிக்கிட்டு இருக்கறமாதிரி சிரிக்கவைச்சி, ஸ்லோமோசன்ல நடக்கவைச்சி... சும்மா சிவாஜி ஷூட்டிங் தோக்கற அளவுக்கு நம்மை வைச்சி சுட்டுத்தள்ளுவாங்க! அதையெல்லாம் க்ராபிக்ஸ் வேற சேர்த்து, ஸ்விட்சர்லாந்து புல்வெளில ஒக்கார்ந்துகிட்டு இருக்கறமாதிரியோ இல்லைனா நைனிடால் ஏரில கையில ரோசாப்பூவோட ஒரு மெதப்புல மெதக்கறமாதிரியோ விதவிதமா மாத்தி கலக்குவாங்க! அவங்க சொல்லற மாதிரியெல்லாம் வெக்கப்படாம போஸ் கொடுங்க! நமக்கெல்லாம் இந்த ஷீட்டிங்ல நடிச்சாத்தான் உண்டு! ஒரு வேலையை தொழில்னு நினைச்சு செய்யறதுக்கும் மனசுக்குப்பிடிச்ச கலை அப்படின்னு நினைச்சி செய்யறதுக்கும் நிறைய வேறுபாடு உண்டு! நீங்க நல்லா உற்சாகமா இருந்து ஒத்துழைச்சு விதவிதமா போஸ் கொடுக்க ஒத்துழைச்சாத்தான் போட்டோ புடிக்கறவரும் உற்சாகமாகி அம்சமா படமெடுத்துக் கொடுப்பாரு! ஆல்பம் பார்க்கறப்ப நமக்கும் அதே சந்தோசம் மறுபடியும் தொத்திக்கும்! நினைச்சுப்பாருங்க! அரைத்தூக்க கலக்கத்துல உர்ர்ருன்னு மூஞ்சை வைச்சுக்கிட்டு இருந்தா நாளப்பின்ன அதை நமக்கே பார்க்கதோணுமா என்ன? இன்னொன்னும் மனசுல வைச்சுக்கங்க! நம் காதலியுடன் காதலுடன் இருக்கும் கடைசிக்கட்ட தருணங்களின் எவிடெண்சு இது! ஆகவே...கல்யாணத்துக்கு வரப்போகிற கூட்டாளிக தங்கி கூடிக்கும்மியடிக்க ரூம் போடறதுல இருந்து அவங்களுக்கு சரக்கு தேத்தறதுவரை உங்களுக்கெல்லாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை! பேட்சுலர் பார்ட்டியெல்லாம் இன்னனக்கு நேத்தா போறீங்க?! அதைத்தானே அஞ்சாரு வருசமா எவன் கல்யாணம்னாலும் செஞ்சுக்கிட்டு இருக்கோம்! ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க! முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல! எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல! ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது! இந்த விசயத்தை ஒரு கல்யாணத்துல கோட்டைவிட மக்கா எல்லாரும் விடியவிடிய ஆட்டங்கட்டி 7 மணி முகூர்தத்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ!


கெட்டிமேளம் கொட்ட, தாலிய எப்படி எப்ப கையில எடுத்தோங்கறது வெளங்காம, நாலாப்பக்கமும் இருந்து அரிசிக தலைலையும் கண்ணுலையும் விழ, எப்படி அந்த மூணு முடிச்சை போட்டோம்கறது புரியாம தாலி கட்டீட்டிங்களா? கலக்கீட்டிங்க! அம்புட்டுத்தேன்! "WELCOME TO THE REAL WORLD!" என்னது? இது "The Matrix"ல Morpheus, Neoக்கு சொன்னதா? இதெல்லாம் ஆண்டாண்டு காலமா நம்ப பெருசுங்க சொல்லிக்கிட்டு வர்றதுங்க!!! ஆண்கள் உலகம் என்ற ஒரு மாயை உலகிலிருந்து இருபாலர் உலகம் என்ற நிதர்சன உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! :))) இனிமேல் உங்களது இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, இலட்சியம், சாதனை, சோதனை, கொள்கை, புண்ணாக்கு, வாழைமட்டை என எதுவுமே உங்களுடையது மட்டுமல்ல! உங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவுமே உங்களது முடிவுகளுக்கு மட்டுமே உட்பட்டதல்ல! உங்களுடைய Personal Area என்பது உங்களுக்கானது மட்டுமல்ல! உங்களுடைய நடை, உடை, பாவனை, பழக்கவழக்கம், ரசனைகள், புரிதல்கள் என அனைத்திலும் மாறுபட்ட ஒரு ஜீவனுடன் ஆரம்பிக்கிறது உங்கள் வாழ்க்கைப்பயணம்! உங்களுடைய வாழ்க்கை, அனுபவம், சகிப்புத்தன்மை, காதல், பொறுமை, நட்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நேர்மை, பெண்ணீயம் போன்ற அத்தனை நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்களுக்கே தெரியாத உங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் புரியவைக்கப்போகும் பிரிக்கமுடியாத பிணைப்பில் விரும்பி கைநாட்டு வைத்த உங்கள் தில்லுக்கு முன்னால் பேச்சுலர் வாழ்க்கையில் கிடைத்த சிற்றின்பங்கள் என்பது ஒன்றுமேயில்லை!கல்யாணம் முடிஞ்ச உடன மாப்ளை அப்படியே பூரிப்புடன் மண்டபத்துல வளைய வருவதும், பொண்ணு சொந்தங்களை பிரியறனேன்னு அவங்களை தனித்தனியா பார்த்து கண்ணை கசக்கறதும் இயல்பான நிகழ்வு! இருவருக்குமே இதுதான் இந்த செயலை செய்வதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதால் அனுபவித்து செய்யுங்கள்! :) நாமெல்லாம் அவதி அவதியா 15நாள் லீவுல கல்யாணத்துக்குன்னு நம்ப வீட்டுக்கு வந்திருப்போம்! அவுக எல்லாம் வீட்டிலிருந்து நம்பிக்கட்டியவனுடன் விடுதலை என கெளம்பி வர்றவுக! நமக்கு வீட்டுலையே நிம்மதியா இருக்கனும்னு தோணும். அவங்களுக்கு புது இடம்கறதால வெளில காதலுடன் சிறகடிக்கத்தோணும்! ஆகவே மக்களே! இந்த தேனிலவு என்பதை தாலி கட்டிய 10 நாட்களுக்குள் நிறைவேற்றிவிடுங்கள்! அது கொடையோ, கோவாவோ இல்லை மொரீசியஸோ மறக்காம கொஞ்சம் சிரமம் பார்க்காம போயிருங்க! இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது! கெடைச்சாலும் முக்கியமா அந்த காதல்மயக்கமும் கெரக்கமும் கண்டிப்பா இருக்காது! "வீட்டுல கேஸ் மூடிவைச்சமா?", "ஆபீசுல லேட்டஸ்ட் பாலிடிக்ஸ் நெலவரம் என்ன?" ங்கற நெனப்புதான் மனசுல இருக்குமே ஒழிய இயற்கை அழகையும், இறைவன் நமக்காக எனவே அளித்த பரிசின் அழகையும் ரசிக்கற மனநிலை இருக்காதப்போவ்! தேனிலவு என்பது நமக்கு இல்லறத்தின் ஆரம்ப எஞ்ஜாய்மெண்டு... அவிங்களுக்கு ஒருபக்க விடுதலையின் அறிவிப்பு சாசனத்தின் முதல்பத்தி... சுருக்கமா சொன்னா தேனிலவை தவற விட்டவன் வாழ்க்கை, சொர்க்கத்தை பைபாசுல தாண்டி வண்டிய நரகத்தில் ஹால்ட் அடிச்சதுக்கு சமம்!

ஆகக்கூடி, நடந்துக்கறமோ இல்லையோ, அய்யன் சொன்ன இந்த குறளை மனசுல ஒரு ஓரமா பதியம் போடுங்க! அது செடியா மரமா நாம நடந்துக்கறதை பொறுத்து அதுவாகவே வளர்ந்துரும்...

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

என்னது?! உங்க அய்யன் இதெல்லாம் சொன்னதில்லையா? இது அய்யன் வள்ளுவரப்பு! என்னது? வள்ளுவர் யாரா? ம்ஹீம்! இதெல்லாம் ஆவறதில்லப்பா! (என்னதான் இன்னைக்கு வைகைப்புயல் வந்துட்டாலும் நமக்கு அய்யன் என்னைக்குமே கவுண்டபெல்தான்! :) )

--------