வியாழன், டிசம்பர் 29, 2005

சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்...

Image hosted by Photobucket.com


சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்!
கொரங்குபெடல் சைக்கிளிலும்
ரைட்டாதப்பா கட்டங்களிலும்
படிக்கட்டு சறுக்கலிலும்

கோணமூக்கனின் காக்காகடிக்கும்
தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும்
அம்மாப்பா விளையாட்டுக்கும்
இதுக்குமுன்னால
யாருமே திட்டுனதில்ல

தம்மு தும்முன்னு நடக்காதே...
அடக்க ஒடுக்கமா ஒக்காருடி..
எப்பப்பாரு என்னடி இளிப்பு?
அத்தனை அசைவுகளுக்கும்
திருத்தம் சொல்லறாங்க
நாங்க
இதுவரை பறந்ததை ரசிச்சவங்க

டீவிசானலை திடீரென மாத்தறதும்
நான் தலைகுனிந்து
விரல்நகம் கடிப்பதும்
எங்க வீட்டின் புதுப்பழக்கம்

ச்சே! அம்மாதான் இப்படின்னா
இந்த அண்ணனுக்கென்ன?
முன்னமாதிரி விளையாடவராம
தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு...

பசங்ககூட சேரக்கூடாது சரி..
அப்பாவின் கழுத்தையுமா
பிடிச்சு தொங்கக்கூடாது?

இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம்
சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள
சில பார்வைகளை தாண்டிவரும்போது

யாரு கேட்டா இந்த சனியனை
இப்போ வரலேன்னு?

அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்...
அம்மா சொல்லியிருக்காங்க
I should not talk to Strangers!

திங்கள், டிசம்பர் 19, 2005

ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!

Image: http://www.1000plus.com/Cataract/fifty.gifபழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க?!

ஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு! போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது! ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன்! ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை!

எனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க! அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான்! :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி! அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க! அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் "தமிழ்மணம்" ஒரு பட்டனு! ஒரு வாரத்துக்கு அது என்னான்னே தோணலை. போனாப்போதுன்னு ஒருதடவை தட்டுனா...ஆஹா... முன்னாடி பீர்பாட்டலு விழுந்த ஃபிரிஜ்ஜிக்குல்ல நானே விழுந்த மாதிரி ஆகிருச்சுங்கப்பு...

ஆனா எந்த நம்பிக்கைல நானும் ஒரு ஃப்ளாகரு ஆரம்பிச்சேன்னு இன்னிவரைக்கும் தோணலை! தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை! இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க! ஒன்னு பிரசுரமானது! குமுதத்துல "தமிழில் புதுவார்த்தைகள்" ஒரு பகுதிக்கு 10 வார்த்தைகளை எழுதிப்போட அதுல ஒண்ணே ஒண்ணு வந்தது. 'அலைஞன் - அழகிய இளம்பெண்களின் பின்னால் அலையும் இளைஞன்' அப்படின்னு!... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல! :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை! அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது! வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம்! (ஏஜெண்டுக்குவேற கமெண்ட்டு விட்டு பல நாளாச்சு...)

சொறிஞ்சவன் கைகூட சும்மா இருந்துரும்! ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா? அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே!' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா" ன்னு ஆரம்பிச்சேங்க! பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன்! நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா? அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது?! தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க! 'அக்கணம் இறைவன் எனைத்தொட்டகணம்'! அப்பறம் முதல் பின்னூட்டம், முதல் ஸ்டாரு, முதல் சண்டைன்னு கொஞ்சாநாளு போச்சு. அதுக்கப்பறம்தாங்க ரொம்ப யோசிச்சேன்! "நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை! அதுனால அது இங்க வேணாம்" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு! சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு "அப்பாவின் சட்டை"ன்னு ஒன்னு எழுதினேன்! பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு! கவிதைன்னு எழுதுனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது 'சுயமழியும் பொழுதுகள்" தான். நெம்ப மனசு பாரமான நிலைல எழுதுனதுங்க... அதுனாலயோ என்னவோ இப்ப படிச்சாலும் ஒருமாதிரி ஆக்கிவிட்டுரும். (ஹிஹி.. இந்த சுயபீத்தல்னு வந்துட்டா நம்ப அடிச்சுகறதுக்கு... ஹிஹி..)

அப்பறம் அப்படியும் இப்படியுமா கலந்துகட்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். மதி கிட்ட இருந்து ஒருநாளு நட்சத்திரமா இருங்கப்புன்னு ஒரு கடுதாசி வந்ததுங்க. வெளிரிட்டேன்! எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு! அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது! அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம்! நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது?! நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான்! நான் சொல்லறது என்னைமாதிரி புதுசா பேனா பிடிச்சவகளுக்கு...


அப்படியே ஓடுதுங்க என்றபதிவும்... பாருங்க... 50வது பதிவுன்னு சொல்லியே ஒரு பதிவ போட்டாச்சு! நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க! ஆனா இந்த இயந்திரவாழ்க்கைல தெனமும் திங்கவும் தூங்கவுமே சரியா இருக்கு... இதையும் மிஞ்சி மனசுக்கு பிடிச்ச ஒரு காரியம் பண்ணறேன்னா அது இங்கன மேயறதுதான்!

ரொம்ப நாளைக்கு முன்னால தருமிசார் பதிவுல பொலம்பலை போட்டனுங்க... அதுக்கு யாராச்சும் அனுபவசாலிங்க பதிலு போட்டீங்கன்னா இன்னைய நெலைல ஒரு உதவியா இருக்கும்! கொஞ்சம் அதிகமா பேசறாப்புல பட்டாலும் கோச்சுக்காதிங்கப்பு.. மனசுல பட்டது... இதையும் தாண்டிட்டன்னா இன்னும் கொஞ்சம் எழுதுவேன்னு நம்பறேன்!

"உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி தருமி! வேலைப்பளு உண்மைதான். ஆனா மேட்டரு என்னன்னா பல சமயம் எனக்கு பிடிச்சதை நான் எழுதுகிறேன். படிச்சவங்க பாராட்டுனா அதுல ஒரு திருப்தி. ஆனா பாராட்டு வேனும்னோ இல்லை எழுதியே ஆகனும்னு கட்டாயத்துலயோ ஆரம்பிச்சா முதல் எழுத்துக்கு மேல ஓடமாட்டேங்குது

இன்னொன்னு ஆயாசம்! கடந்த 30 நாளா பார்த்தீங்கன்னா, தங்கரையும் குஷ்புவையும்(இதைவிட்டா மததுவேஷம்…) போட்டு தாளிச்சு எடுத்ததுல ஒரே கமறல் இங்க! உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை! சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கே அதன் பொருந்தாமை பளிச்சென தெரிகிறது. சிலர் எடுத்துச்சொல்கிறார்கள். சிலர் அமைதியாய் சென்றுவிடுகிறார்கள் என்னைப்போல.

பத்திரிக்கையுலகிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. வியாபாரதந்திரங்களும் சர்க்குலேசனுமே அதன் குறிக்கோள். வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து! வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல! இது தனியொரு ஊடகம். அவரவர் தனித்தன்மையே அதன் முதுகெலும்பு என்பதும் என் கருத்து.

சித்திரமும் கைப்பழக்கம் தான்.. ஊக்கமது கைவிடேல் தான்.. இருந்தாலும் என்போன்ற ஆரம்பநிலையில் இருக்கும் எழுத்துக்கார(ரி)ர்களுக்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த ஆயாசத்தை எப்படி தாண்டிவருவது என சொன்னால் மிகுந்த உதவிகரமாக இருக்கும்! "வேற என்ன சொல்ல? அதேதான்! ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!

வியாழன், டிசம்பர் 15, 2005

புதூர் குஞ்சாளு - சிறுகதை


Source: www.sharanalayam.org/ meet_children.html


“ஒரு நூறு ரூபா இருந்தா போயிட்டு வந்துரலாண்டா! ஆனா அது ஒரு மணி நேரத்துக்குதான்”

"ஏண்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகுற? யாரு சொன்னா உனக்கு?"

"நம்ப மெக்கானிக் கணேசன் தாண்டா... அவன் பிரண்டு போயிருக்கானாம்... ஆனா நைட்டு 9 மணிக்கு மேலதானாம்! வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம்!"

"டேய்... பார்த்த மாதிரி பேசாத.. இந்த வேலையை பண்ணறான்னா அப்பறம் எதுக்கு தெனமும் ரோடு ரோடா பூ வித்துக்கிட்டு அலையறா?"

"போடா சும்பை... அதெல்லாம் ஒரு செட்டப்புக்காகதான். அப்பதான் எவனும் கேக்கமாட்டான். போலீஸிம் புடிக்காது. புருசனும் இல்லை. அப்பறம் ஏன் கலர் பொடவை கட்டறா? பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும்?"

"அதுக்காக ஒடனே ரேட்டுன்னு சொல்லிடறதா? புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற? நீயும் போனதில்லை. அந்த கணேசனும் போனதில்லை. ஆனா நாலுதடவை போனமாதிரியே எதுக்குடா கதைவிடுற?"

"இங்க பாரு.. உனக்கு தெகிரியம் இல்லைன்னா சொல்லிட்டுபோ.. அதை விட்டுட்டு இப்படி பேத்தாத.. ஒரு நாளைக்கு இல்லைன்னா ஒரு நாளு நானும் கணேசும் போகத்தான் போறோம்!"

மேற்படி அலசல்கள் அனைத்தும் வெவ்வேறு விதமாக ஒவ்வொருமுறை புதூர் குஞ்சாளை பார்க்கும் போதும் எப்போதும் எங்களுக்குள் நடக்கும். இத்தனைக்கும் அப்ப நாங்க பதிணொன்னாவதுதான் படிச்சுக்கிட்டு இருந்தோம். தெனமும் அவ சாயந்திரமா "கனகம் மல்லீலீலீ..." ன்னு இழுத்துக்கிட்டு பூ வித்துக்கிட்டு வரப்ப நாங்க கிரவுண்டுல அவளை ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டு கிரிக்கெட்டுல ஊறிக்கிட்டு இருப்போம். அவ எல்லாத்தெருவையும் சுத்திட்டு இருட்டற நேரத்துல கிரவுண்டை தாண்டி போகறப்ப நாங்க வெளையாண்டு முடிச்சிட்டு வேர்வை கசகசப்போட மரத்தடில இருக்கற கல்லுங்கமேல ஜமா போட்டுகிட்டு டீம் காசுல வாங்கிக்கிட்டு வந்த தேங்காபன்னை தின்னுக்கிட்டு காலி கூடையோட போகும் புதூர் குஞ்சாளை வெறித்துப்பார்த்தபடி மேற்படி தகவல்களை அலசுவோம். திரைச்சித்ரா, மருதம்னு நாங்க திருட்டுத்தனமா படிச்ச கதைகள்ல வர "உருண்ட, திரண்ட, பருத்த, பெரிய" போன்ற அனைத்து வார்த்தைகளுக்கும் உருகவம் எங்களுக்கு அவள்தான்! 35 வயசுக்குள்ளதான் இருக்கும் அவளுக்கு. அது என்னவோ அவளைப்பத்தி பேசறது ஒரு கிளுகிளுப்பா இருந்தாலும் அவளை நினைச்சாலே உடம்பு பரபரன்னு ஆகறதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. சில நேரம் அவ வியாபாரம் முடிச்சிட்டு போகும்போது சுருட்டு புடிச்சுக்கிட்டு போகறதுதான்! அது என்னவோ அப்ப எங்க கும்பல்ல சிலபேரு திருட்டு தம்மு அடிக்கறது தெகிரியத்த காட்டறதுக்கு ஒரு வழின்னு நாங்க நெனைச்சாலும் ஒரு பொம்பள கண்ணுக்கு முன்னால சுருக்கு புடிச்சுக்கிட்டு புகை விட்டுக்கிட்டு போறது பார்க்கறப்பே ஜிவுஜிவுன்னு ஆயிரும். இத்தனைக்கும் கடைசிவரைக்கும் எவனும் நூறு ரூபாய எடுத்துக்கிட்டு போனதில்லை. மிஞ்சிபோனா சில நேரம் கிரவுண்டைதாண்டி இருக்கற ரெயில்வேடிராக்குக்கு அந்தப்பக்கமா பள்ளத்துல இருக்கற அவ வீட்டுவழியா நாலஞ்சுமுறை சைக்கிளை எடுத்துக்கிட்டு நெஞ்சு படபடங்க குறுக்கையும் நெடுக்கையும் ஒரக்கண்ணால அவவீட்டு கதவைப்பார்த்தபடியே போயிட்டு வந்திருக்கறோம். அவ்ளோதான்! அவ புருசன் நெஜமாவே இருக்கானா? இல்லையா? அவ வீட்டுக்கு வந்துபோறாங்களா? என மேற்படிதகவல்கள் ஒன்னும் உறுதியா தெரியாது! ஆனா இந்த பேச்சைமட்டும் நாங்க குறைக்கவேயில்லை! மனசுல குஞ்சாளை நினைச்சுக்கிறதையும் நிறுத்துனதில்லை..

காலம் அப்படியே நிக்குதா என்ன? அவனவன் +2 முடிச்சிட்டு அவனவன் தகுதிக்கு அங்கங்க சேர்ந்துட்டான். நம்ப மக்கா எல்லாம் நிறைய பேரு டாக்டருக்கு சீட்டு கிடைச்சி கோவையிலே சேர்ந்துட்டானுவ. சிலபேரு ஆர்ட்ஸு காலேஜி நம்ப கூரான் உட்பட. நான் மட்டும் இஞ்சினியரிங். அவனவன் வேறவேற பாதைல போனாலும் இந்த ஜமா சேர்ந்து பொங்கல் போடறது மட்டும் நிக்கலை. அதுக்கப்பறம் எங்களுக்கு புதூர் குஞ்சாளு போக பேசறதுக்கு நிறைய விசயங்க கிடைச்சது. அறிவும் வெளியுலக அனுபவமும் வளருது இல்லையா.. இந்த டாக்டரு பசங்கதான் அவனுங்க படிச்சது பார்த்தது கேட்டது கெட்டதுன்னு நிறைய சொல்லி எங்க நாலெட்ஜை வளர்த்தவனுங்க. பயக சும்மா வீட்டு கேட்டை புடிச்சு தொங்கிட்டும் தெருமுக்குல வண்டிய நிறுத்திக்கிட்டு பொங்கிக்கிட்டும் இருந்தா எந்த வீட்டுல சும்மா விடுவாங்க? அதனால கம்பைண்ட் ஸ்டடின்னு ஒன்னு கண்டுபிடிச்சோம். முன்னாடி நைட்டு 9 மணிவரை பேசுனவக இதுக்கப்பறம் விடிய விடிய பேசுனோம்! டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் கம்பைண்ட் ஸ்டடியாம்! எங்கத்த போயி சொல்ல? அனா நாங்க கையில புத்தகத்தை வைச்சிருக்கறதுக்காவது எங்களை பெத்தவங்க நம்பி விட்டுட்டாங்க. நாளாக ஆக அவனவன் இதுல பரிச்சை வைக்காமலேயே Phd வாங்கிட்டோம். பேசறதுல்ல முக்காவாசி புள்ளைங்க புள்ளைங்க புள்ளைங்க மேட்டருதான். அதை விட்டா காலேஜ் விழாவுல கூத்துகட்டறது எப்படின்னு ஆராய்ச்சி! ஆனா மத்த பயக உசாரு... பேசரதெல்லாம் பேசிட்டு படிக்கும்போது படிச்சிட்டு சலம்பும்போது அதுலையும் சேர்ந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பானுவ. நானும் அவனுககூட தொத்திக்கிட்டே பார்டரு கேசுல கரைசேர்ந்திருவேன்.

நான் நாலு வருசத்துல என் படிப்பை புடிச்சிட்டு வேலை தேடறப்ப டாக்டருங்க படிப்பை முடிச்சிட்டு 5ஆவது வருச படிப்பான ஹவுஸ்சர்ஜன்னு டூட்டிடாக்டரா ஒருவருசம் கோவை GHலயே இருந்தானுவ. பல நாள் வாரக்கடைசில வீட்டுல போரடிச்சா இந்த டாக்டருங்க பசங்க நைட்டூட்டி டாக்டரா GHல வேலைபார்க்கறப்ப நானும் அங்க போயிறது உண்டு. ஒரு மணிநேரம் அவனுங்க கூடவே எல்லா கேசுகளையும் பார்த்துட்டு 12 மணிவாக்குல வெளில வந்து ஒரு பன்பட்டர்ஜாமும் டீயும் தின்னுக்கிட்டு கூடவே தங்கராசா வடிப்பானையும் ஊதிக்கிட்டு 3 மணிவரை பேசிக்கிட்டு ஹாஸ்டல்லயே தூங்கிட்டு அடுத்தநாள் காலைல 10 மணிக்க எழுந்து வீடுவந்து சேருவோம்.

ஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்தன் நைட்டு 7 மணிக்கு போன்பண்ணி அவசரமா வரச்சொன்னான். அவனுக்கு அந்த வாரம்தான் நைட்டூட்டி. கெளம்பிப்போனபோது ஜெனரல் வார்டுல ரவுண்ட்ஸ்ல இருந்தான். அதை முடிச்சிட்டு ஆபரேசன் முடிஞ்சவங்களை அப்சர்வேஸன்ல வைச்சிருக்கற வார்டுக்கு கூட்டிக்கிட்டு போனான். ஒரு ரூம்ல 10 பெட்டுங்க. ஒரு பெட்டுல கெழங்கு மாதிரி ஒரு பொண்ணு கையை கோணலா மடக்கிக்கிட்டு கோணின வாயில எச்சில் ஒழுக படுத்துக்கிட்டு இருக்கு. அதுக்கு பக்கத்துல புதூர் குஞ்சாளு நின்னுக்கிட்டு இருக்கறா. அந்த பொண்ணுக்கு மூளை வளர்ச்சியில்லை. எழுந்துநிற்கக்கூட முடியாது. "ய்ய்யீயீயீயீயீயீ"னு காதை அடைக்கும் சத்தம் மட்டும் போடுது. 16 வயசு இருக்கும். தானா சோறு கூட திங்க முடியாது அதுனால. அவங்க கிட்ட நாலஞ்சு கேள்விமட்டும் கேட்டுட்டு அங்க குஞ்சாளை பார்த்த அதிர்ச்சியும் இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைனும் புரியாம திகைச்சுப்போயி நின்ன என்னை "வாடா போகலாம்"னு வெளில கூட்டிகிட்டி வந்துட்டான். வெளில வந்து டீக்கடைக்கு போலாம்னு ஆஸ்பத்திரி கேட்டை தாண்டி வெளில வந்து கடைபென்ச்சுல போயி ஒக்காரதுக்குள்ள அவன் என்னா மேட்டருன்னு சொல்லிக்கிட்டே வந்தான். அந்த பொண்ணுக்கு 10 நாளைக்கு முன்னால DC பண்ணியிருக்காங்க. வீட்டு பக்கத்துல இருந்த எவனோ ஒருத்தன் வாய் திறந்து பேசமுடியாத தனக்கு என்ன நடக்கிறதுன்னு உணரக்கூட முடியாத இந்த ஜடத்தை உபயோகப்படுத்திட்டானாம். எப்படியோ கண்டுபிடிச்சி இங்க கொண்டு வந்து கலைச்சிருக்காங்க. அதுபோக இனிமே மாதவிடாய் வராம இருக்கவும் கருவுறாம இருக்கவும் ஆபரேசனும் பண்ணிட்டாங்கன்னும் சொன்னான்! இதுதான் அந்த பொண்ணுக்கு இனிமே நல்லதாம்! மூளை வளர்ந்தாலும் இல்லைன்னாலும் இயற்கை சும்மாவா இருக்கு? வயசுக்கேத்த மாதிரி ஒடம்பு யாரோட கஸ்டத்தையும் பார்க்காம வளர்ந்துருது. அது எவனோ ஒரு மிருகத்துக்கு இந்த வளர்ச்சி உறுத்த உடலலவில் வளர்ந்த பெண்ணை அந்த மனதளவில் வளராதவன் குஞ்சாளு வேலைக்கு போனப்ப வேலையைக்காமிச்சிட்டான்.

ஆளுக்கு ஒரு டீ சொல்லிட்டு சிகரெட்டை பத்தவைச்சிட்டு பென்ச்சுல அமைதியா ஒக்கார்ந்திருந்தோம்.

"அந்த பொண்ணைபோய் எப்படிடா ஒருத்தன் மனசாட்சியே இல்லாம..." என கேக்க ஆரம்பித்தவன் அதற்குள் ஏதோ என் மண்டைக்குள் உறைக்க மீதி கேள்வி தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள அமைதியானேன்.

கொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி "என்ன யாரோ செருப்பால அடிச்சமாதிரி இருக்குடா..." என்றேன்.

அவன் "ம்.." என்றான்.

=======================

நிற்க: எனக்கு ரொம்பநாளா சந்தேகம். இந்த மாதிரி வாழ்க்கைல மனசைப்பாதிக்கற நிகழ்வுகளை அப்படியே எழுதறதா இல்லை சிறுகதையா எழுதறதான்னு. இதுவரைக்கும் நிகழ்வுகளாகத்தான் எழுதிவந்திருக்கிறேன். ஆனா சிலபேர் சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு இதுல எது உண்மை? நான் ஏன் அங்கே? எப்படி? எதுக்கு? என பலகேள்விகளை எழுப்பறாங்க! என்ன செய்ய? சுயபுராணம்னு எழுதுனா இதையெல்லாம் கேட்டுத்தான் ஆகனும். ஆனா சிறுகதைன்னு எழுதிட்டா இதை தவிர்க்கலாம்னு நினைக்கிறேன். உங்க கருத்தினையும் சொல்லுங்க. சிறுகதைன்னு முடிவுசெய்து எழுதும்போது பழையபதிவுகளோட வேகம் வரமாட்டேங்குது! :(

சனி, நவம்பர் 19, 2005

தமிழ்ப்பதிவுகளில் நல்லதொரு மாற்றம்!


Source: http://www.joe-ks.com/archives_dec2004/FriendsUntil.jpg


கொஞ்சநாளாகவே பதிவுகளில் அடிதடி, வசவுகள், தனிமனிதத்தாக்குதல்கள் என்று படிச்சு படிச்சு ஓய்ஞ்சுபோய் இருக்கறப்ப இந்த இரண்டு பதிவுகளை படிக்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்குங்க!
வீரவன்னியன்:

கருத்துகளை எதிர்கருத்துகளுடன் மோதிக் கொள்வோம். அனைவரது பதிவுகளையும் மதிப்போம். ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருக்கத் தான் செய்கிறது.

ரஜினிராம்கி:
Veeravanniyan, I second your post. I think, we are sailing on the same boat. Let us continue to be a good friend. All the Best!


மலேசியா ராஜசேகரன் :


உங்களைப் போன்ற இளஞர்களின் முயற்சியும் துடிப்பும் பாரட்டப் பட வேண்டியவை. ஆதரிக்கப் பட வேண்டியவை. உங்களுக்கும் உங்கள் முனைப்பான நண்பர்களுக்கும் எதிர் புரத்தில் நின்று தர்க்கம் செய்ய எனக்கு மனமில்லை. அது என் முதிர்ச்சிக்கும் அழகில்லை.
ஆதலால், உங்கள் நண்பர்கள் பலரது மனதையும் புண்படுத்துமாறு அமைந்த என் எழுத்துக்களுக்காக நான் இங்கு நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

சிவபுராணம் சிவா:
அன்பு ஐயா ராஜசேகரன் அவர்களுக்கு,
தெரிந்தோ தெரியாமலோ நாம் இருவரும் சண்டை கோழிகளாகி விட்டோம். பொதுவில் மன்னிப்பு என்று ஒரு வார்த்தையை பயன் படுத்தவும் ஒரு மனம் வேண்டும். நீங்கள் அந்த குணத்தால் எங்கோ போய்விட்டீர்கள். உங்களை மன்னிப்பு கேட்க வைக்க நாங்கள் இதை செய்யவில்லை. என் அப்பா வயதில் இருக்கும் நீங்கள் (அடியேனின் வயது 29 ), எங்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டதற்கு நன்றி. நடா போன்ற நண்பர்களின் வட்டத்திற்குள் இருப்பதினாலேயே நாங்கள் உங்கள் 'தலைகீழாக' என்ற வார்த்தைக்கு உணர்ச்சிவசப்பட்டோம்.... எப்படியோ "நண்பர்களாக இருப்போம்" என்று சொல்லியபடி, நாம் நண்பர்களாக இருப்போம்.


இப்படியல்லவா இருக்கவேண்டும் நட்புவட்டம்! கருத்துக்களால் மட்டுமே இங்க இனி அடிச்சுக்கனும்னு ஏற்பட்டிருக்கற இந்த நல்ல மாற்றத்தை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்!

நல்லதொரு மாற்றத்தை ஆரம்பித்துவைத்த உங்கள் நால்வருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்!!!
கருத்துக்கலால அடிச்சிக்கலாம்.. அப்பால புடிச்சுக்கலாம்! :) (ம்ம்ம்.. அப்படியே இந்த ஆபாச/போலி அனானிகள் மேட்டரும் முடிஞ்சுட்டா எவ்வளவு நல்லா இருக்கும்?! )

எனக்கு எங்க தாத்தா(அதே துரைசாமி தாத்தாதான்...! ஆவியா இல்லைங்க.. நேர்ல சொன்னது..!) சொன்னதுதாங்க நியாபகத்துக்கு வருது.. "சண்டை போடறப்போ எவ்வளவு கொறைச்சு பேசறமோ அவ்வளவு நல்லது! ஏன்னா.. அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சேர்ந்துக்கறபோது ரொம்ப சுலுவா இருக்கும்ல...! "

நல்ல மாற்றம்னு சொல்லிட்டு நானும் அதுல பங்கெடுத்துக்கலைன்னா எப்படி? சைக்கிள் கேப்புல நானும் சொல்லிடறேன்!

மீனாக்ஸ்! ரொம்பநாளைக்கு முன்னால உங்ககூட ஒரு விவாதத்துல அர்த்தமில்லாத முறையில நான் பங்கெடுத்துக்கிட்டதுக்கு மிகவும் வருந்துகிறேன்! உங்கள் மனம் அன்று புண்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! (நீங்க எப்பவோ மறந்துபோயிருக்கலாம்! ஆனா எனக்கு இது ஒன்னுதான் இங்க ரொம்பநாளா உறுத்திக்கிட்டே இருக்கு! :( )

மன்னிக்கத்தெரிஞ்சவன் மனுசன்!
மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்!!
இந்த கருத்தைகூட கத்துக்கலைன்னா அப்பறம் எதுக்கையா நான் சினிமா பார்க்கனும்?! :)


நெஜமாவே இதயம் நெகிழ்வுடன்(ரசிகவ்.. இந்த ஒருதபா விட்டுடுங்க.. :) )

இளவஞ்சி...

நிற்க: இந்த மாற்றத்தை நீங்களும் வரவேற்கறீங்கன்னா ஒரு (+) குத்து விடுங்கப்பு!

உண்மையை...
உரக்கச்சொல்வோம் உலகுக்கு!

வெள்ளி, நவம்பர் 18, 2005

ஹாரிபாட்டரும் மாயத்தீக்கோப்பையும் என் மருவாதியும்!


Source: http://blog.pc-actual.com/blogpca/images/Harry%20Potter.jpg

மக்கு நேரமே சரியில்லைங்க! எந்த நேரத்துல பயத்தை பத்தி எழுதுனனோ தெரியலை வாழ்க்கைல எல்லாமே ஒரு மார்க்கமாவே நடக்குது! சொந்தக்கார பயக ஊருல இருந்து வந்திருக்காங்களே.. அவிங்களை பேங்களூரு சுத்திக்காட்டலாம்னு ஒரு நல்லெண்ணம் இருந்திருந்தா ஒழுங்கா MG Roadக்கு கூட்டிட்டுபோயி வண்ணக்கோலங்கள் காட்டிட்டு(இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற! ) அப்படியே ஒரு அஞ்சுநக்கி( அதாங்க 5 ரூபா கோன்ஐஸ்...) வாங்கிக்குடுத்து அப்படியே பஸ் ஏத்தி அனுப்பியிருக்கலாம்! அதை விட்டுட்டு புதுசா ஒரு கடைவீதி ஒன்னுல நிறைய தியேட்டரு எல்லாம் இருக்கு வாங்கப்பு காட்டறேன்னு PVRக்கு கூட்டிக்கிட்டு போனனுங்க. அங்க போயி வழக்கம் போல வாசப்படில கொஞ்சநேரம் ஒக்கார்ந்து தரிசனம் பார்தோமுங்களா( என்னண்ணே இது? எல்லா புள்ளைங்களும் பத்தாத துணியே போட்டிருக்காளுங்க..! ) அப்பறம் வழக்கம் போல BOSEக்கு போயி ஹோம்தியேட்டரு டெமோ பார்த்தோமுங்களா.. அதுக்கப்பறம் அப்பிடியே திரும்பாம இன்னும் ஒரு ஃப்ளோரு மேல போனதுதாங்க தப்பு! "அண்ணே கடையெல்லாம் நல்லாத்தான் இருக்கு! அப்பிடியே ஏதாவது படமும் பார்த்திறலாம்!"னானுவ! சிவகாசி இல்லை(எல்லாம் விதியப்போவ்!) ..மஜா இல்லை! சரி வந்தது வந்தோம்.. வாங்கப்பு.. புதுசா ஒரு இங்கிலீசு படம் வந்திருக்கு... போலாம்னேன்! அப்பவே ஒரு மாதிரிதான் பார்த்தானுவ!

வெள்ளிக்கிழமைன்னா ஒரு டிக்கெட்டு 150தாம்! நாலு பேருக்கு 600! எங்க ஊரு மஞ்சுநாதால எங்க பரம்பரையே இடைவேளை கடலை, பொவண்டோவோட சேர்த்து ஒருவாரம் வாத்தியாரு படமும் ஜகன்மோகினியுமா பார்த்துத்தள்ளியிருக்கலாம்! உள்ளார போறப்ப பாஜாஜ் பைக்க ஓட்டிக்கினு ஒருத்தரு உலகத்துல இருக்கற எல்லாத்தையும் மன்னிச்சுகினு இருந்தாரு! அப்படா! படம் ஆரம்பிக்கலை.. மொதல்ல இருந்து பார்த்தா கண்டிப்பா புரியும்னு நெனைச்சித்தான் பார்க்க ஆரம்பிச்சோம்! வார்னரு பிரதர்ஸ்சு புரடக்ஸனாம்! என் கண்ணே பட்டுடும் போல! எத்தனை காலமா அண்ணன் தம்பிங்க ஒத்துமையா படம் எடுக்கறாங்க...( இங்க AVMமே புட்டுக்கிச்சு! ) இதுவரைக்கும் கரைட்டா போச்சுங்க..

அப்பறம் அனாந்தரத்துல இருக்கற ஒரு வீட்டுல லைட்டு எரியிதுன்னு ஒரு வாச்சுமேனுதாத்தா பாக்க போறாருங்கலா.. அங்க கெட்டவங்க 3 பேரு தாத்தாவ போட்டுத்தள்ளற மாதிரி சீனு. என்னன்னு பார்த்தா அது பாட்டரோட கனவு! அப்பறம் பாட்டரு படிக்கற பள்ளிக்கூடத்துல ஒரு மாயமந்திர போட்டி வைக்கறாங்களா... அதுல கலந்துக்க பறக்கற ஜட்கா வண்டிலையும், நீர்மூழ்கி பாய்மரக்கப்பல்லையும் பக்கத்து பள்ளிக்கோடத்து பயபுள்ளைங்க வராங்களா! அவிங்கள்ள 4 பேர்த்த போட்டிக்கு தயாரு பண்ணறாங்களா! அதுல ஒருத்தனா பாட்டரை கெட்டவன் ஒருத்தன் கோல்மாலு செஞ்சி சேர்த்துவிட்டறானுங்களா... அப்பறம் மொத போட்டில பாட்டரு வெளக்குமாத்துமேல மிக்29 கணக்கா பறந்துகவுந்து ஒரு தங்கமுட்டைய புடிக்கறாருங்களா..அதுக்கப்பறம் ரொம்பப்பேரு பேசிக்கினே இருந்தாங்களா... அதுக்கப்பறம் ரெண்டாவது போட்டில தண்ணிக்குள்ளாற தம்கட்டி கூட்டளிங்களை காப்பாத்துறானா.. அப்பறம் சின்னப்புள்ளைங்க ஜோடி சேர்ந்து டான்சு கட்டறாங்களா! ( பாட்டாளிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் அடுத்தவேளை ரெடி! இந்த சீனுல பாட்டரும் அவன் கூட்டாளியும் இந்தியப்பெண்டுககூட டான்சு ஆடாம வேணும்னே உதாசீனப்படுத்தீருவாய்ங்க! ஜடை, தாவணியெல்லாம் போட்டு தமிழ்ப்பொண்டுக மாதிரியே இருப்பாங்க! என்னே நம் பெண்களுக்கு வந்த சோதனை...! ) அப்பறம் உள்ளுக்குள்ள 40 வாட்ஸ் பல்புபோட்ட ஒரு கண்ணாடிகோப்பைதான் பிரைசுன்னு காட்டறாங்களா... அப்பறம் ஒரு மாயப்பூங்கால உள்ளபூந்து வெளிய வரசொல்லறாங்களா.. அப்பறம் பாட்டரும் அவன் புதுக்கூட்டாளியும் வெளியவரச்சொல்ல கெட்டவங்க இருக்கற எடத்துல போயிமாட்டிக்கினு புதுக்கூட்டாளி வாயப்பொளந்துற்றானா.. அப்பறம் பாட்டரும் மெயினு கெட்டவனும் தீபாளி சாட்டைவெடி மாதிரி கையில வைச்சிக்கினு கொஞ்சநேரம் வெளிச்சம் காட்டறாங்களா.. அப்பறம் கெட்டவனை சாவடிக்காமயே பாட்டரு தப்பிச்சு வந்துடறானா...அப்பறம் பள்ளிக்கோடத்துல கூட இருந்த ஒத்தைக்கண்ணு வாத்தியாருக்குள்ள இருக்கறவன்தான் கெட்டவன்னு அவனை தலைமைவாத்தியரு கண்டுபுடிக்கறாரா.. அடடா.. எங்கப்பு ஓடறீங்க? சரி விடுங்க.. கழுதைக்கு தெரியுமா...? எனக்கு தெரிஞ்ச இங்கிலீசுக்கு இவ்வளவுதான் புரிஞ்சது!

படத்துக்கு குடும்பத்தோட வராங்க.. பேரு போடும்போது கைதட்டறாங்க.. பாட்டரு பறந்தா விசிலு அடிக்கறாங்க.. திடீர் திடீர்னு சிரிக்கறாங்க...! எல்லாம் சரிதான்... நாம சின்னவயசுல படிச்ச ஆறுகடல் ஏழுமலை தாண்டி ஒரு சின்ன குருவிக்குள்ள இருக்கற மந்திரவாதி கதைகள் இதைவிட எந்தவிதத்துலயும் கொறைஞ்சது இல்லைங்கறது என்னோட தாழ்மையான கருத்து! சரி விடுங்க.. ரெண்டுமே செருப்பு செய்யற கம்பெனினாலும் நாம அடிடாஸ் பனியன போடுவோம்! அது நாகரீகம்... ஆனா 500 ரூவா குடுத்தாலும் பாட்டா படம் போட்ட பனியன போடுவமா? அதுமாதிரிதான் இதுவும்னு எடுத்துக்க வேண்டியதுதான்!


இன்னொன்னும் பார்க்கனுங்க.... இந்தக்காலத்து குஞ்சுகுளுவனுக்களுக்கு பாட்டியா கூட இருக்கறாங்க இப்படி கதை சொல்லிவளர்த்தறதுக்கு? எப்படியோ பாட்டி மூலமா இல்லைன்னாலும் பாட்டரு மூலமாவது கற்பனைத்திறம் வளர்ந்தா சரி! என்ன நான் சொல்லறது?

நிற்க: ஏற்கனவே மீனாக்ஸு விமரிசம் படிச்சு புல்லரிச்சு நான் போய் மாட்டுனது சிவகாசி! இப்போ அவரும் ரெண்டாவது ஆட்டம் பாட்டரு வந்திருக்காரு போல! கண்ணுல பட்டிருந்தா 200ரூவா சிவகாசிக்கு நஷ்டஈடு கேட்டிருக்கலாம்! தப்பிச்சிட்டாரு! சரி விடுங்க... 'ஆதி'ல பார்த்துக்கலாம்!

மறுபடியும் நிற்க: சொந்தக்கர பயலுவ இதோ இப்ப வரைக்கும் எங்கூட சரியாப்பேசாம அந்தப்பக்கமா திருப்பிப்படுத்திருக்கனுவ!
"டவுனுக்குப்போயி நல்ல படம் காட்டுனானப்பா அண்ணன்"ன்னு டங்குவாரு டணால் ஆகப்போதுங்கறது உறுதி!

மறுபடியும் மறுபடியும் நிற்க: மூனு 'உம்' விகுதியெல்லாம் போட்டு தலைப்பு வைச்சிருக்கறதால ஏதோ அதிபயங்கர விமரிசனம்னு நினைச்சுடாதிங்க.. வழக்கம்போல நம்ப பொலம்பலு.. அவ்வளவே!

புதன், நவம்பர் 16, 2005

மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பூ...!!


Courtesy :http://ewancient.lysator.liu.se/pic/art/l/o/longg/scare_an_orc.jpg


ங்களுக்கு தைரியம்னா என்னன்னு தெரியுமா? பயப்படாததுமாதிரி நடிக்கறதுதான் அப்படின்னு நம்ப அண்ணாத்தே கமலு குருதிப்புனல்ல சொல்லுவாரு பார்த்திருக்கீங்களா? அது அப்படியே சரின்னு வச்சிப்போம். ஆனா பயம்னா என்னன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இந்த கேள்விக்கு ஆயிரம் விடைகள் இருக்குங்க! எல்லாத்தையும் எடுத்துப்போட்டு அலசி ஆராய்ந்து பிரிச்சி மேய்ந்து கடைசியா என்ன கிடைக்குதுன்னு பார்த்தா அதுவும் ஒரே வார்த்தைதாங்க. அறியாமை!! அதுதாங்க பயம்!

என்ன உதாரு ரொம்ப விடறானேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் ஒரு அனுபவம்தாங்க! மனசுக்குள்ள பெரிய பிஸ்த்துன்னு நினைப்பு இல்லைன்னாலும் தெரிஞ்சதை சொல்லறதுல்ல தப்பில்லைதானுங்களே? எனக்கு இந்த பேய் பிசாசெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க! நம்பிக்கையும் இல்லை. கல்யாணமாகி 2 வருடங்கள் ஆனதுக்கப்புறமும்! ஆனா கல்யாணத்துக்குப்பிறகு டார்வின் கொள்கைல முழுநம்பிக்கை உண்டு..("T.Nagar போத்தீஸ்க்கு போலாம்னா ஏன் கொரங்கு மாதிரி முழிக்கறீங்க...?!") அதுனால அதப்பத்தியெல்லாம் பயமே இல்லை. ஆனா பயப்படுறவங்களைப்பார்த்தாதான் நமக்கு கொஞ்சம் பேஜாருங்க! விசயம் ஒன்னுமே இருக்காது! ஆனா அவிங்க விடற அலப்பரைல நமக்கு ஜன்னிவந்துரும்! இப்படித்தான் பாருங்க காலேஜில இருந்தப்ப(படிக்கறப்பன்னு சொல்ல எனக்கே கூச்சமா இருக்கு! ) பலநாள் இரவு ஜாகையை ஹாஸ்டல்லயோ இல்லை வெளில பசங்க எடுத்திருக்கற வீட்டுலயோ போட்டுர்றது நம்ப நல்ல பழக்கவழக்கங்கள்ள ஒன்னு! பின்ன? நடுராத்திரில வீட்டுல போய் காலிங்பெல் அடிச்சு எங்க அண்ணன் முறைக்க, எங்க அப்பா துப்ப, அம்மா பொலம்பிக்கிட்டே சாப்பாடு எடுத்துவைக்கன்னு எல்லாத்தையும் எழுப்பிவிட்டு அவிங்க தூக்கத்தை கெடுக்கறது கெட்டபழக்கமா இல்லையா? அதனால SKP மெஸ்ஸுல ஃபிரண்டு அக்கவுண்டுல நாலு இட்லி, ஒரு முட்டைதோசை, ஒரு லூசு(அதாங்க முட்டைய முழுசா வேகாவிடாம பெப்பரு, உப்பு, கொஞ்சம் சின்னவெங்காயம், போட்டு கொழகொழன்னு கிளரி சின்ன கப்புல தருவாங்களே! அப்பிடியே வாயில கவுத்துக்கிட்டு ஒரு தபா கொதப்பிக்கிட்டு முழுங்குனா சும்மா நச்சுன்னு இருக்கும்! என்ன கொஞ்சநேரத்துக்கு ஒருபய பக்கத்துல வந்துபேசமாட்டான். கப்பு தூக்கும்ல! (இதுக்கெல்லாம் சேர்த்து இப்போ கொலஸ்ட்ரால் குறைக்கறதுக்காக பெங்களூரு அதிகாலை குளிருல மப்பளும் ஜெர்கினும் போட்டுக்கிட்டு தீவிரவாதி கணக்கா நடக்கறது தனிக்கதை! )

சரிங்க.. மேட்டருக்கு வரலாம். இந்த மனப்பிராந்தி இருக்கு பாருங்க! அதை மொத்தமா காய்ச்சி மனசுல ஊத்தி பயத்தை ஏத்திவிடுறதே கூட இருக்க புண்ணியவானுங்கதான்! எங்க கூட விஜயன்னு ஒருத்தன் நல்லா செவப்பா கொழுக்மொழுக்னு கரண்கபூர் கணக்கா படிச்சானுங்க. பய கொஞ்சம் பார்க்க ஸ்மார்ட்டா இருந்தாலும் எங்க பொகையெல்லாம் அவன் போடற கடலையை பார்த்தாதான் வரும். அவனவன் புள்ளைங்க வரபோற நேரமெல்லாம் பார்த்து இடம் பொருள் ஏவல்லெல்லாம் அலசி ஆரய்ஞ்சு பயங்கர சதித்திட்டமெல்லாம் தீட்டி கடலைபோட காத்துக்கிட்டு இருக்க இவன் just like that அப்பப்ப அங்கங்க அப்படி அப்படியே மானாவாரியா மகசூல் பார்த்துக்கிட்டு இருந்தா எவனுக்குத்தான் பொகை வராது? இத்தனைக்கும் அவன் என்ன பேசுவான்னு நினைக்கறீங்க? "ஏம்ப்பா.. ரெக்கார்டெல்லாம் முடிச்சிட்டையா? நேத்தைக்கு ஏன் பச்சை சுடிதார்ல வந்த? 5 புள்ளி கோலம் போடறது எப்படி? இதயத்தை திருடாதேல அந்த பொண்ணு பாவம்ல!" இப்படி சில கேள்விகளைக்கேட்டுட்டு அவிங்க பேசறதை கேட்டுக்கிட்டே இருப்பான். கடலை போடறதன் பிரம்மசூத்திரம் காதுகுடுத்து கேக்கறதுலதான் இருக்குன்றது அந்த பயலுக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கு. நமக்கு இன்னைக்கு வரைக்கும் வெளங்கலை! அவன் ஒரு விசயத்துல மட்டும் வீக்கு! ஒடம்புக்கு ஒன்னுன்னா அப்படியே அலறிடுவான்! ஹாஸ்டல்லா ரெகுலரா ஃபேசியல் செஞ்சி Fair&Lovly போடறவன் அவன் ஒருத்தன் தான்னா பார்த்துக்கங்க! எப்படிடா அவனை கவுக்கறதுன்னு நாங்க அலைஞ்சதுல இந்த ஒரு பாயிண்ட்டுதான் ஒர்க்அவுட் ஆகும்போல தோணுச்சு! வெய்யக்காலத்துல பயலுக்கு வேர்க்குரு வந்துருச்சு! அவன் வேற ரொம்ப கலரா? அடிச்சது எங்களுக்கு லக்கிபிரைஸ்! அன்னைக்கு நைட்டு "டேய்... முதுகுல என்னடா புள்ளி புள்ளியா?" அப்படின்னு ஆரம்பிக்க அவன் "வேர்க்குருடா.. நைசில் போட்டா சரியாகிடும்"னு சொல்ல ஒருத்தன் "எனக்கென்னவோ அம்மை மாதிரி தோனுதுடா..."ன்னு பத்தவச்சிட்டு வந்துட்டான்! அதுக்கப்பறம் 10 நிமிசத்துக்கு ஒருத்தனா அவன் ரூமுக்கு போய் "மாப்ள.. எங்க காட்டு.. எனக்கென்னவோ இது அம்மை மாதிரிதான் தோனுது. வேர்க்குரு இன்னும் சின்னதா இருக்கும்" ன்னு கலந்து அடிக்க 5 பேரு எங்க கடைமைய முடிக்கறதுக்குள்ள பய அரண்டுட்டான்! ஒரு பத்துபேரு குரூப்பா அவன் ரூமுக்கு போயிட்டோம். "இப்படித்தான் சின்ன வயசுல எங்க அண்ணனுக்கு அம்மை வந்து.." அப்படின்னு அவனவன் இல்லாத கதையெல்லாம் சொல்லிச்சொல்லி பய மொகத்தை பேஸ்த் அடிச்சாப்பல ஆக்கறதுக்கே மணி 11 ஆயிருச்சு. அம்மைக்கு என்னென்ன பண்ணனும்னு ஒரு லிஸ்ட்டு போட்டோம்! ஒருத்தனை ரூம் புல்லா தண்ணி ஊத்திக்கழுவி க்ளீன் பண்ணச்சொல்லி மத்தவங்க ரூம்ல இருந்த எல்லா சாமி படங்களையும் அவன் ரூம்க்கு கொண்டுவந்து ஒரு குட்டிகோவிலை ரெடி செஞ்சோம். கிடைச்ச விபூதி குங்குமம் எல்லாத்தையும் சாமி படங்க மேல தூவி ரூமையே பராசக்தி வழிபாடுமன்றம் ரேஞ்ச்சுல கொண்டுவர்றதுக்குள்ள மத்த ரெண்டுபேரு அவனை நடுராத்திரி 12 மணிக்கு பச்சைத்தண்ணில முக்கியெடுத்து இடுப்புல துண்டோட கிடுகிடுன்னு நடுங்க கூட்டிகிட்டு வந்தாங்க! அதுக்குல்ல ஒருத்தன் எங்கயோ போய் அம்மன் கேசட்டு ஒன்னை பிடிச்சுக்கிட்டு வர டேப் ரிக்கார்டர்ல அம்மன் பாட்டு அலறுது! புட்பால் கிரவுண்டை தாண்டி இருக்கற வேப்பமரத்து கிளையையே ஒருத்தன் உடைச்சுக்கிட்டு வர வேப்ப இலையை கொத்துக்கொத்தா பிரிச்சு அவன் கட்டில் பூரா பரப்பி ரூம் வாசப்படி ஜன்னல் எல்லாம் கட்டிவிட்டு அவனை படுக்க வைச்சோம்! அவன் ரூமுல இருக்கறப்ப சீரியசா முகத்தை வைச்சுக்கிட்டு இருப்போம். சிரிப்பை அடக்கமுடியலைன்னா 5 ரூம் தள்ளி ஓடிவந்து உருண்டுபொரண்டு சிரிச்சிட்டு திரும்பவும் அவன் ரூமுக்கு போய் அப்புராணி போல ஒக்கார்ந்துக்கிட்டு அம்மை பத்தின எங்க Phdய ஆரம்பிக்கறதுன்னு அன்னைக்கு நைக்கு முழுக்கு ஹாஸ்டல்ல ஒரே திருவிழாதான்! பய விடிய விடிய கொழம்பி கொழம்பி நெஜமாலுமே அம்மை வந்தாப்புல ஆகிட்டான்! காலைல 8 மணிவரைக்கும் இதை மெய்ன்டெய்ன் பண்ணறதுக்குல்ல எங்களுக்கே போதும்போதும் ஆகிடிச்சு! அதுக்கப்பறம் எல்லாரும் கூடி நின்னு உண்மையை சொல்லி சிரிச்சதுல அவன் முகத்தை பார்க்கணுமே! அப்படியும் நம்பாம அவன் டாக்டரை போய் பார்த்து அது வேர்க்குருன்னு சொன்னப்பறம்தான் அமைதியானான்! அதுக்கப்புறம் அவன் எங்களை துரத்தி துரத்தி அடிச்சது எங்க விழுப்புண் கதைகள்ல ஒன்னு. ஆனா இந்த சதிலயும் எங்களுக்கு தோல்விதான்! பரிதாபமா முகத்தை வச்சிக்கிட்டு இந்த கதையையே 50ம் மேல புள்ளைங்ககிட்ட சொல்லி( "How sad yar! ச்சே...ரொம்ம்ம்ப பாவம்பா நீ..") கடலையா வறுத்தெடுத்துட்டான்!

மனப்பிராந்தி இப்படி ஒரு வகைன்னா பெருசுங்க வழிவழியா சொல்லி வர்றதுல இருக்கற மூடநம்பிக்கை(ரொம்ப பெரிய வார்த்தையோ!? ) இன்னொன்னு. பேய், பிசாசு, ஆவிங்கறது இதுல ஒன்னு. இதெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க.. ஆனா செத்தவிங்க கூட பேசலாம். ஆவிங்களை மீடியம் வழியா கூப்பிடலாம்னு சொல்லறதைத்தான் என்ன சொல்லறதுன்னு தெரியலை! இப்படிதாங்க நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதுல எங்க கூடப்படிச்ச ஃபிரண்டு ஒருத்தன் ஆவிங்க கூட பேசலாம்னு ஒய்ஜா போர்டுன்னு ஒன்னு கொண்டுவந்தான். வெள்ளிக்கிழமை சாயங்காலமா 7 மணிக்கு மெரினா பீச்சுக்கு போறதை விட்டுட்டு இதுல உட்கார்ந்தோம். ஆரம்பத்துல இருந்தே இது டுபாக்கூருன்னு நான் அலப்பரை செஞ்சுக்கிட்டே இருந்தேன்! ஆன ஒரு பய நம்பலை! ரூம்ல இருந்த சாமி படத்தையெல்லாம் எடுத்து ஓரமா வச்சிட்டு(ஜோ கழுத்துல இருந்த சிழுவை உட்பட..) ரூம் புல்லா இருட்டாக்கிட்டு ஒரே ஒரு மெழுகுவத்திய பத்தவச்சிட்டு ஒய்ஜா போர்டு முன்னால 4 பேரு உட்கார்ந்தானுங்க! போர்டு சுத்தியும் ABCDயும்...123ம் நாலு பார்டர்ல எழுதியிருந்தது. ஆவிங்களுக்கு மொழிப்பிரச்சனையே இல்லை போல! Globalaization! எல்லா ஆவிங்களும் இங்கிலீசுலயே பதில் சொல்லுமாம். போர்டுக்கு நடுவுல 1 ரூபா நாணயம் ஒண்னை வச்சி அதுமேல ரெண்டுபேரு ஆட்காட்டி விரலை வச்சிட்டு மனசுக்குல்ல ஆவியக்கூப்பிட்டு வேண்ட ஆரம்பிச்சாங்க! 10 நிமிசம் ஆச்சு! காசு நகர்ற மாதிரி தெரியலை! விரலு வச்ச மீடியம் சரியில்லைன்னு இதுக்கு விளக்கம் வேற! இதுதான் சான்சுன்னு அதுல ஒருத்தனை கெளப்பிட்டு நான் மீடியமா உட்கார்ந்துக்கிட்டேன்! ரெண்டு பேரும் காசுமேல விரலை அழுத்தாம மென்மையா வைக்கனுமாம். காசு நகர ஆரம்பிச்சுட்டா,அது போற போக்குலயே நாமளும் விரலைக்கொண்டு போகனுமாம்! "வாங்கடி வாங்க" ன்னு மனசுல நெனச்சிக்கிட்டு நானும் ஒரு 5 நிமிசம் மனசுல வேண்டிக்கிட்டு மெதுவா காசை இப்படியும் அப்படியும் நகத்த ஆரம்பிச்சேன்! பசங்க "ஆவி வந்துருச்சு.. வந்துருச்சி"ன்னு பரபரன்னு குசுகுசுப்பா பேசிக்கறாங்க. நானும் முகத்தை சீரியசா மாத்திக்கிட்டு காசை நேரா Y கிட்ட கொண்டுபோனேன். ஆவி கன்பார்மா வந்துருச்சாம். எனக்கு எதுத்தாப்புல விரலை வைச்சுக்கிட்டு இருந்தவன் வேர்த்துப்போய் முழிக்கறான். நான் மெதுவா காசை நகர்த்துனா அதுபோன போக்குல அவனும் வெரலை கொண்டுவரான். அப்பறம் ஆவி மீடியம் எங்க ரெண்டுபேரு விரலு மூலமா காசை நகர்த்தாம வேற என்ன செய்யும்? அதுக்கப்பறம் அலப்பரைதான்! கேட்ட எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதில்கள்!

வந்திருக்கற பெரியவர் உங்க பேரு என்ன?
D-U-R-A-I-S-A-M-Y - (எங்க தாத்தா பேருங்க! )
நீங்கள் இறந்து எத்தனை வருடங்கள் ஆகுது?( மரியாதையோட கேக்கறாங்களாம்! )
20
உங்க கூட யாரெல்லாம் இருக்காங்க?
சுப்பு(யாருக்குத்தெரியும்?), காமராஜ், நேரு! (எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )
அவங்க கூப்பிட்டா வருவாங்களா?
வேகமா காசை நகர்த்தி "N-O "! (ஆவிக்கு கோவம் வந்திருச்சாம்!

இப்படியே கதை ஒரு 10 நிமிசத்துக்கு போச்சுங்க. அதுக்கப்பறம்தான் கூத்து! பர்சனல் கேல்விகளா வந்து விழுகுது! எனக்கு தெரியாதா இவனுங்க ஹிஸ்டரி! பூந்து விளையாடிட்டேன்!

"நான் டிகிரி எப்போது முடிப்பேன்?"
4 YEARS (23 அரியரை வேற எப்ப முடிக்கமுடியும்?)
"எனக்கு எப்ப கல்யாணம்?"
3 வருசம்
"பொண்ணு யாருன்னு தெரியுங்களா?"
Y-O-U K-N-O-W A-L-R-E-A-D-Y

ஒய்ஜா போர்டு கொண்டுவந்தவன் கேட்ட கேள்விதான் இது! விடுவனா?

"பொண்ணை நான் பார்த்திருக்கனுங்களா?"
"Y-E-S Y-O-U-R C-L-A-S-S-M-A-T-E"

பயங்கர அதிர்ச்சிங்க அவனுக்கு! இருக்காதா பின்ன?

"அவங்க பேரு சொல்ல முடியுங்களா?"
"G-E-E-T-H-A"

பய அதிர்ச்சில செத்துட்டான். இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவனே மேலோகம் போய் ஒய்ஜா போர்டு மூலமா பதில் சொல்ல வந்திருப்பான்! அந்த கீதா வேற யாரும் இல்லைங்க. இவனுக்கு பிடிக்கவே பிடிக்காத இவனை லவ் பண்ணலாம்னு பலமுறை தூது விட்டு இவன் தலைகீழா நின்னு தப்பிச்சி வந்த பொண்ணோட பேரு! இப்படிப்பட்ட தாங்க முடியாத அதிர்சிகரமான தகவல்களோட அன்னைக்கு எங்க ஆவிகளுடனான கலந்துரையாடல் முடிஞ்சது! அதுக்கப்பறம் ஒரு வாரம் கழிச்சு "நான் தாண்டா காசை வேணும்னே நகர்த்தினேன்" அப்படின்னு சொன்னாலும் ஒரு பய நம்பணுமே! "போடா சும்பை.. அன்னைக்கு நீ வெளிரிப்போய் உட்கார்ந்திருந்தது எங்களுக்குத்தான் தெரியும்"னனுங்க! இதுக்கு மேல என்ன சொல்ல? இன்னைக்கு அவனுக்கு ரம்யான்னு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் ஆனதுக்கப்பறமும் இதை சொன்னா திரும்பவும் யோசிக்கறானே தவிர நான் சொல்லறதை எவன் நம்பறான்? அன்னைக்கு எனக்கு ஒன்னும் ஆகலையான்னு கேக்கறீங்களா? அந்த அரையிருட்டுல அமைதியா ஒருமணிநேரம் இருந்ததுல எனக்கே ஒருமாதிரி ஆகி நைட்டு ஒன்னுக்கு போறதுக்குக்கூட பயந்துபோய் போகாம படுத்திருந்த்தேன்! ஒருவேளை ஆவிங்க பேரை வைச்சு விளையாண்டதுல நெஜமாவே ஆவிங்க இருந்து கோவமாகி என்னை அடிச்சிருச்சின்னா??? என்னதான் அது என் செல்லத்தாத்தா ஆவியா இருந்தாலும்!?

இந்த அறியாமை மேட்டரு இன்னொன்னு சொல்லறேன் கேளுங்க! போட வாரம் நைட்டு வழக்கம் போல என் வீட்டாரு "செல்வி"லயும் நான் என் மடிக்கணினிலையும் மூழ்கியிருக்க ஹால்ல விளையாண்டுக்கிட்டு இருந்த என் பொண்ணு சந்தோசமா "ஹீய்.. ஹீய்"னு கத்த ஆரம்பிச்சா! என்னடான்னு போய்பார்த்தா முதுகுத்தண்டு சில்லிட்டுப்போச்சுங்க! ரெண்டாவது மாடில இருக்கற எங்க வீட்டுக்குள்ள ஜன்னல் வழியா சும்மா ரெண்டடி நீளத்துக்கு கருகருன்னு ரெக்கையோட ஒரு வவ்வால்! உடம்பு ஒரு எலி சைசுக்கு இருக்கு. வயசான கிழட்டு வவ்வால் போல பறக்கப்பாக்குது முடியலை! அப்பறம் செல்வியாவது ஒண்னாவது? வீடே அலறுது! என் புள்ளையைத்தவிர! அவ ஏதோ புது விளையாட்டுசாமன் போலன்னு தாவித்தாவி புடிக்கறதுக்கு போறா! பேட்மேன் படம்னும் ஜியாஃரபி சேனல்னும் நிறைய வவ்வால் கதைகளை பார்த்திருந்தாலும் நேர்ல பாக்கறதுக்கு என்னன்னே புரியாத ஒரு பயம்! அருவருப்பு! லைட்டை எல்லாம் அணைச்சுட்டா வெளில பறந்துரும்னு அணைச்சா, அது நேரா கெளம்பி ஒரு ரவுண்டு பறந்துட்டு லைட்டு எரியற பாத்ரூமுக்குள்ள போயிருச்சுங்க! கொதிக்கற சட்டில இருந்து எரியற நெருப்புல விழுந்தாமாதிரி நெலமை எங்களுக்கும் அதுக்கும்! வீட்டுல ஒரே ஆம்பளை நாந்தான்! தப்பிக்க வழியே இல்லை! மெதுவா பாத்ரூம் கதவுல ஒளிஞ்சுக்கிட்டு எட்டிப்பார்த்தா நடுநாயகமா டைல்ஸ்மேல இறக்கையை விரிச்சி ரெண்டடிக்கு படுத்திருக்கு! எலி மாதிரியான மூஞ்சை இப்படியும் அப்படியும் திருப்பி பறக்கறதுக்கு பாக்குது! முடியலை! கையில பிடிச்சா வெளீல விடமுடியும்? பயங்கர ஐடியா யோசிச்சு கொஞ்சம் தண்ணியை தரைல ஊத்துனேன்! அது சடார்னு கெளம்பி லைட்டை சுத்தி ரெண்டு ரவுண்டு பறந்துட்டு முடியாம டாய்லெட்ல விழுந்துருச்சு! என்ன பண்ணறதுன்னு தெரியலை! ஒரே செகண்டுதான் யோசிச்சேன்! டபார்னு பாய்ஞ்சுபோய் டாய்லெட் லிவரை இழுத்துவிட்டுட்டேன். அவ்வளவுதான். 10 செகண்டுல காணாமப்போயிருச்சு! அதுக்கு அப்பறமும் சந்தேகமா ரெண்டு பக்கெட்டு தண்ணியை பிடிச்சு ஊத்தி மொத்தமா ஜலசமாதி ஆக்கியாச்சு!

வீட்டுல எல்லாரும் TVயை அணைச்சுட்டு அமைதியா இருந்தோம். என் மனைவிதான் மெதுவா கேட்டாங்க.. "ஏங்க... அதை கொல்லாம வெளிய துரத்தியிருக்க முடியாதா?" எனக்கும் வருத்தமா போச்சுங்க.. வழிதவறி உள்ள வந்ததுதான் அது பண்ண தப்பு. மத்தபடி அதை கொன்றதெல்லாம் வவ்வாலைப்பற்றிய எனது பயம் என்ற அறியாமையையே தவிற வேறென்ன? நாலைஞ்சு நாளைக்கு காலைல உள்ள போகும்போது மட்டும் கொஞ்சம் வருத்தமா இருந்தது. அப்பறம் சரியாயிருச்சு.

இந்த ஒரு வயசுல என் பொண்ணுக்கு தூங்கவைக்கறதுக்கான "கூர்க்கா மாமா.. பாப்பா தூங்கலைன்னா வந்து பிடிச்சுக்கிட்டு போ!" அப்படிங்கற நாங்க ஏற்படுத்தின பயத்தை தவிர வேற ஒரு பயமும் இல்லை! இப்பவும் செவுத்துல பல்லிய பார்த்தா "..ல்லீ,...ல்லீ" சந்தோசமா பிடிக்கறதுக்கு ஓடறாளே தவிர பல்லியைப்பற்றிய எங்களது பயம் அவகிட்ட சுத்தமா இல்லை! ம்.. யோசிச்சா இவளும் நாம வச்சிருக்கற அத்தனை பயமும் மூடநம்பிக்கைகளையும் சேர்த்துக்கிட்டு நம்மை மாதிரியே வளருவாளா இல்லை தெளிவான விசயங்களை இப்போதிருந்தே எடுத்துச்சொல்லி தெளிவா வளர்த்தப்போறமான்னு குழப்பமாவும் பயமாவும் தான் இருக்கு...

புதன், நவம்பர் 02, 2005

Appun, Give me a Rocket!

Source: www.peonqueen.com

உங்கள்ல எத்தனை பேரு கவருமெண்ட்டு ஆசுபத்திரிக்கு போயிருக்கீங்க? அட, நோயாளியா இல்லைங்க! கையில நாலு ஆப்பிளோ ஆரஞ்சுப்பழமோ இல்லை நீல்கிரிஸ் பேக்கரி பிரட்டையோ வாங்கிக்கிட்டு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னு படுத்திருக்கறவங்களை பாக்கறதுக்காவது?! ஒரு முறை போயிட்டுவந்திங்கன்னா இந்த ரெண்டுல ஒரு எண்ணம் நிச்சயமா மனசுல தோணலாம்! இடிஞ்சு விழுகறமாதிரியான பழய கட்டடத்துல 100 படுக்கைகளை நாலா பக்கமும் போட்டு மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க உள்ள போறதுக்கும் வெளில வர்றதுக்கும் தனித்தனியா அஞ்சோ பத்தோ ஆளுக்கேத்தபடி லஞ்சம் கொடுத்தபடியும் உள்ள வந்தாலே இருக்கற ஆரோக்கியமும் போயிரும்போல இருக்கற நெலைல படுத்திருக்கற பரிதாப ஜீவன்கள் எல்லாம் எப்படி பொழைக்குமோங்கற கவலை ஒன்னு.. இல்லை கொஞ்சம் அன்னாடங்காச்சிங்களோட எகானாமி வெவரம் தெரிஞ்சவங்களா இருந்தா அடுத்தவேளை சோத்துக்குமட்டும் வழியிருக்கற ஜனங்களுக்கு இருதயம் கிட்னி பெயிலியர்னு ஏதாவது பணக்காரவியாதி வந்தா அப்படியே செத்துபோயிராம அவிங்களும் நம்பிக்கையோட வந்து மருத்துவம் பாக்கறதுக்கு இந்த ஒலகத்துல இத்தனை டாக்டரு நர்சுகளோட ஒரு இடம் இருக்குன்றது ரெண்டாவது...

நாங்க 11 பேரு +2ல ஒரு செட்டுங்க! என்ன பெரிய செட்டு? சேவிங்செட்டுன்னு கவுண்டர்பாஷைல திட்டாதிங்க... நெஜமாவே பெரிய செட்டுதான்! அதுல பாருங்க... சொல்லிவச்சாப்படி 8 பேரு அப்படியே மெடிக்கல்சீட்டு கிடைச்சு கோவை மெடிக்கல் காலேஜுல சேர்ந்துட்டாங்க.. மத்த ரெண்டுபேரு PSG டெக்குல சீட்டை போட்டுட்டாங்க. மிச்சம் இருக்கற வெளங்காத ஒரு டிக்கெட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு படிக்காம ஏதோ அப்பவே வேலை கெடைச்சு செட்டிலு ஆனாப்படி திரிஞ்சதுல ஒரு ஆகாவளி காலேஜுல சீட்டுகெடச்சு படிச்சு(!?) முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சி இப்போ தமிழ் பிளாக்ல பதிவுக போடற நிலமைக்கு வந்திருக்கு!! பாதிநாளு அந்த டாக்டருமக்கள்கூட திரிஞ்சதுனாலயும் ஆஸ்பத்தில ஒக்காந்துகிட்டு நிறையநாள் பொங்கல்போட்ட (அதாங்க... கூடி உட்கார்ந்து விடிய விடிய வெட்டியா பேசிக்கிட்டு இருக்கறது! ) அனுபவம் இருக்கறதுனாலையும் கவருமெண்ட்டு ஆஸ்பத்திரி கொஞ்சம் அத்துப்படி.

இங்க பெங்களூர் வந்த புதுசுல கொஞ்சநாள் Watertank watchmanனா தங்கியிருந்தனுங்க.. அதாங்க.. வீடு 4 அடுக்குக்கு கட்டிட்டு மொட்டமாடில இருக்கற வாட்டர்டேங்குக்கு கீழயும் ஒரு ரூம் கட்டி அதை நாலாயிரத்துக்கு பேச்சிலருக்கு வாடகைக்கு விட்டிருப்பாங்க.. என்ன.. கேட்டு கிட்ட இருக்கற மத்த வாச்மேன் போல இல்லாம கொஞ்சம் ஒசரமான எடத்துல ஒனருக்கும் மேல தங்கிட்டு அதேவேலைய பாக்கறாப்படி இருக்கலாம்! ஒசூர் பக்கத்துல இருக்கற எங்க சித்தப்பா ஒருத்தருக்கு கழுத்துல சின்னகட்டிவந்து வலிதாங்க முடியாம பெங்களூர் NIMHANS ஆஸ்பத்திரிக்கு எழுதிக்குடுத்து அவரு இங்க வந்திருந்தப்ப அவருகூட துணைக்கு நானும் போயிருந்தேனுங்க. சும்மா சொல்லக்கூடாதுங்க.. அவ்வளவு நீட்டா சுத்தமா வச்சிருக்காங்க... நம்ப ஊரு ஆஸ்பிடலுக்கு இது 20 மடக்கு தேவலாம். கூடவே காலேஜும் மனநல ஆராய்ச்சி மையமும் இருக்கறதால நல்லா வச்சிருக்காங்க... லஞ்சமும் நான் பார்த்தவரை கிடையாது. வருமானவரி சர்டிபிகேட்டுக்கு தக்கபடி பீசுல தள்ளுபடி இல்லை இலவசம்! மனநல மருத்துவத்துக்கு இந்தியாவுல பல இடத்துல இருந்தும் இங்க வராங்க. எல்லா டெஸ்டும் முடிச்சு அட்மிஷன் கிடைக்காம எமெர்ஜென்சி வார்டுல ஒரு பெட்டு கிடைச்சதுங்க.. அப்ப நான் இங்க வீடு எடுக்காதனால தங்கற வசதி இல்லாததால வந்தவுங்க என்னை துணைக்கு வச்சிட்டு ஊருக்குபோயிட்டு நாளைக்குகாலைல வர்றதா கெளம்பிட்டாங்க. அந்த ரூமுல எங்களைத்தவிர மிச்சம் இருந்த மூனு பெட்டும் காலி. அதுக்கு பக்கத்து அறை ஹவுஸ்புல்! 20 பெட்டாவது இருக்கும். நானும் வாங்கிட்டு வந்திருந்த இட்லியை சாப்டுட்டு எங்க சித்தப்பு தூங்குனதுக்கப்புறம் அப்படியே உள்ள மேஞ்சிக்கிட்டு இருந்தேன். எமர்ஜென்சி வார்டுங்கறதால அப்பவும் சுறுசுறுப்பா இருந்தது. பாதிக்குப்பாதி மனநோயாளிங்க... ஒவ்வொரு பெட்டுகிட்டயும் ஒரு பெண்! அது அம்மாவோ, அக்காவோ, மனைவியோ... நோயாளி தூங்கிக்கிட்டும் மொனங்கிக்கிட்டும் இருக்க அதுக்கு பக்கத்துல எதேதோ கவலைகளையும் யோசனைகளையும் முகத்துல தேக்கியபடியும் கட்டிலுக்கு பக்கத்துல சுருண்டு படுத்தபடியும்! இவங்களையும் பெண்களா மதிச்சு "திருமணத்துக்குமுன் உடலுறவு" பற்றி கருத்துக்கேட்டா ஒருவேளை சரியான பதில் கிடைக்கலாம்.

ஒரு 11 மணி இருக்கும்க. பக்கத்துபெட்டு காலியா இருந்ததால நர்சம்மாகிட்ட கெஞ்சி பர்மிசன்வாங்கி அப்படியே அதுல சாஞ்சிட்டேன். திடீர்னு தடபுடன்னு ஒரே சவுண்டு. எழுந்துபார்த்தா மூனுபேரு ஒரு பையனை கையைப்புடிச்சு இழுத்துவந்துகிட்டு இருந்தாங்க. அவன் முகம், சட்டை, அரைடவுசரு எல்லாம் ரத்தம்... கூடவந்தவங்க சொல்லறதைக்கேக்காம "அப்புன்! கிவ் மி எ ராக்கெட்..." னு கத்திக்கிட்டே வந்தான். கொண்டுவந்தவங்க அவனை அப்படியே பெட்டுல போட்டு அமுக்க கூட வந்த ஒருத்தரு அவன்கிட்ட "அமைதியா இரு"ன்னு கன்னடத்துல சொல்லிக்கிட்டே இருக்காரு. அவன் அடங்கறமாதிரி தெரியலை! அஞ்சு நிமிசத்துல நர்சம்மா ஒரு ஊசிமருந்தோட வந்தாங்க. நாலுபேரும் அவனை அழுத்திப்பிடிக்க அவன் கைல ஊசியைப்போட்டாங்க... அதுக்கப்பறம் அவன் ஒரு நெலைக்கு வர்றதுகுள்ள அத்தனைபேரையும் பாடாய்படுத்திட்டான். போட்டது மயக்கமருந்துபோல.. கொஞ்சம் அமைதியாகி ஏதேதோ பேச ஆரம்பிச்சான். ஒரு டூட்டி டாக்டர் ஒருத்தரு வந்து அவனைப்பார்க்க ஆரம்பிச்சாரு. அவன் முகத்துலயும் நெஞ்சுலயும் இருந்த காயத்தை பார்த்துட்டு நர்சம்மா கிட்ட க்ளீன் பண்ணச்சொன்னாரு. பிளேடால தன்னைத்தானே கிழிச்சுக்கிட்டிருக்கான்! மறுபடியும் என்னோட சேர்த்து நாலுபேரு அழுத்திப்பிடிக்க நர்சம்மா அவன் சட்டையை கழற்றி மருந்துபோட்டு க்ளீன் பண்ணினாங்க. அப்போதைக்கு காயம்மேல ஏதோ மருந்துபோட அந்த எரிச்சல்ல அவன் போட்ட அலறல்ல ஆசுபத்திரியே ஆடிருச்சி. டாக்டரு அவன்கிட்ட பேச ஆரம்பிச்சாரு. டாக்டர், நர்சம்மா கூட வந்தவங்க எல்லாத்தையும் அவனுக்கு தெரியுது. ஆனா பேசரதுதான் ஒன்னுக்கொண்னு சம்பந்தமே இல்லாம! அவன் பேசுனதை முடிஞ்சவரைக்கும் ஞாபகப்படுத்தி அப்படியே எழுதறேன். அவன் என்ன மனநிலைல இருந்த்தான்னு உங்களுக்கும் தெரியுதா பாருங்க!

"Appun.. Apuuuuuun... give me a rocket man.. come on.. one.. only one.. one for now.. apuuuuuuuuun... lalala... what Dr? you want music? i paly music u give me cigarette.. ok.. lalalala.... i want it..... leave me alone.. Sister? sister.. atleast give me a cigarette. Dr.. one cigarette please.. i dont have any problem.. leave me.. let me go home..i play music.... lalalala... appuunn.. apuuun i need you.. one.. one rocket please....."

மருந்து மயக்கத்துல அவனால இப்போ திமிரமுடியலை. ஆனா பேசறான்.. பேசறான்.. பேசிக்கிட்டே இருக்கான். டாக்டரு கூடவந்தவங்க கிட்ட விசாரிச்சிட்டு பேடுல எதையோ எழுதிக்குடுத்துட்டு நர்சம்மா கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு. பார்க்க பார்க்க எனக்கு பயமே வந்துருச்சு. பெட்டுல இருந்து எழுத்து வீட்டுக்குபோறேன்னு சொல்லி அவன் எழுந்திருக்கும் போதெல்லாம் கூடவந்தவங்க "ஒழுங்கா படுடா.. சிகரெட் வாங்கித்தரேன்"னு அவனுக்கு அடியபோட்டு படுக்கவைப்பாங்க! 5 நிமிசம் கழிச்சு மறுபடியும் எழுந்துக்குவான். கூட வந்தவங்கள்ள 2 பேரு புதுசா ஒருத்தரு வந்ததும் போயிட்டாங்க. நர்சம்மா கிட்ட இன்னும் கொஞ்சம் மயக்கமருந்து குடுங்கன்னு சொன்னா அவங்க அதுக்குமேல குடுக்ககூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாருன்னுட்டாங்க. வேற வழி இல்லாம பேண்டேஜ் துணிய நாலாப்பிரிச்சு அவன் கை காலை நாங்க பிடிச்சுக்க நர்சம்மா கட்டிலோட சேர்த்து கட்டிட்டாங்க.. கையைக்காலை அசைக்கமுடியலை.. ஆனா பெனாத்திக்கிட்டே இருக்கான்! கூடவந்தவங்களும் அப்படியே இருக்கமுடியுமா என்ன? கட்டிப்போட்டதும் அங்கங்க ஒக்கார்ந்துட்டாங்க. நானும் இவ்வளவு நேரம் அங்கயே இருந்ததால சினேகமாகி என்கூட கன்னடத்துல பேசுனாங்க! நானும் புரிஞ்ச அளவுக்கு மண்டையை ஆட்டிகிட்டு தமிழ்ல பேசுனேன். அவங்க எல்லாம் பக்கத்துவீட்டுக்காரங்களாம். அவன் பசங்ளோட ஒரு வீட்டுல தங்கியிருக்கானாம். போதைமருந்து பார்ட்டியாம். நேத்தைக்கு பிளேடால ஒடம்பெல்லாம் கிழிச்சுகிட்டு ஒரே ஆட்டமாம். அமுத்திப்பிடிச்சி இங்க கொண்டுவந்துட்டாங்க.. மத்த பசங்க எல்லாம் எங்கன்னு தெரியலை. மிஞ்சிப்போனா 22 வயசுதான் இருக்கும் அவனுக்கு. ம்ம்.. யாரோ பெத்த பையனுக்கு இங்க யாரோ உதவிக்கிட்டு இருகாங்க. இது முடியவே மணி 3 ஆகிப்போச்சு. நானும் முன்ன படுத்திருந்த பெட்டுல சாஞ்சி அப்படியே தூங்கிட்டேன்.

மணி 6 இருக்கும்க. ஒரு பொம்பளை அழுகற சத்தம். முழிச்சுப்பார்த்தா ஒரு அம்மாவும் பொண்னும் அவன் பெட்டுகிட்டு நின்னுகிட்டு அழுதுகிட்டு இருக்காங்க. நைட்டு பஸ்சு புடிச்சு வந்திருப்பாங்க போல. அவன் கை காலெல்லாம் பேண்டேஜ் கட்டோட திமிரினதுல ஒரு வளையம் மாதிரி கன்னிப்போயிருச்சி. கண்ணு செருகிப்போயி அரைபிணம் மாதிரி படுத்திருக்கான். அந்தம்மா துணைக்குகூட அழ ஆளில்லாம சேலையை வாயில பொத்திக்கிட்டு நினைச்சி நினைச்சி அழுகறாங்க! பெத்தபாவத்துக்கு அவங்க அழுக, கூடப்பொறந்தது பாவமா இல்லையான்னு தெரியாம அந்தப்பொண்ணு கண்ணுல நீர்முட்டிகிட்டு இருக்க மிரட்சியோட மலங்க மலங்க சுத்திசுத்தி பார்க்குது. பத்தாவதுதான் படிக்கும் அது. என்னையும் சேர்த்து சுத்திநிக்க ஒரு பத்துபேரு முகத்துல ஒரு சலனமும் இல்லாம அங்க நடக்கறதை வேடிக்கை பார்க்க அப்பெண் கையைக்கட்டிக்கொண்டு கூனிக்குறுகி நிற்கிறது. என்னால அங்க நிக்கமுடியலை. மெதுவா வெளில வந்து வராண்டா பென்சுல ஒக்கார்ந்துக்கிட்டேன். அதை நினைச்சாத்தான் ரொம்ப பாவமா போச்சுங்க. பட்டாம்பூச்சியா பறக்கற வயசுல இப்படியொரு துக்கத்தை அது எந்தவிதமாக புரிந்துகொள்ளும்? என்ன மனஉறுதியோடு இந்த அவமானத்தை எதிர்கொள்ளும்? இப்படிப்பட்ட ஒரு அண்ணனுக்கு தன் மனதில் என்னவிதமான ஒரு அடையாளத்தையும் அன்பையும் வைத்திருக்கும்? வருங்காலத்தை விடுங்க. கருகிப்போன நிகழ்கால கனவுகள் அவள் மனவளர்ச்சியை என்னவிதமாக பாதிக்கும்? ஒன்னும் புரியலை!

இந்த போதைன்னா மட்டும் எனக்கு அப்படி ஒரு வெறுப்புங்க. எங்க காலேஜ்ல அவ்வளவா இல்லைன்னாலும் என் பிரண்டு ஒருத்தன் எவன்கூடவோ சேர்ந்து கஞ்சா அடிச்சுட்டு அன்னைக்கு பூரா வகுப்புல சிரிச்சிக்கிட்டு இருந்ததை கண்டுபிடிச்சு அவனை பின்னியெடுத்துட்டோம். தண்ணி, தம்மு அடிச்சவன் இதுக்கு மட்டும் ஒழுக்கமான்னு கேக்காதிங்க. அன்னைக்கு எனக்கு தெரிஞ்ச நியாயம் அதுதான். என்னோட பள்ளிப்பருவத்துல சிவசங்கரியோட ஒரு நாவலையும்(அவன்!?) ஒரு போதை ஒழிப்பு தொடர்பான ஒரு இந்தி சீரியலையும் பார்த்து மனசுல இது தப்புன்னு அப்படியே பதிஞ்சிருச்சி. நினைச்சுப்பார்த்தா நாங்கெல்லாம் ஒரு நூல் மேல நடக்கற பேலன்சுல தப்பிச்சு வந்தமாதிரிதான் தெரியுது!

அதுக்கப்பறம் எங்களுக்கு தனி ரூம் கிடைச்சு, எங்க சித்தப்பாவுக்கு ஆரம்பநிலை கேன்சர்னு கண்டுபிடிச்சு 700 ரூபாயில லேசர் ட்ரீட்மெண்ட் குடுத்து சரிபண்ணி மாசாமாசம் டெஸ்டுக்கு வரணும்னு சொல்லியனுப்பிச்சாங்க. இப்படி டெஸ்டுக்கு போனவாரம் போனப்பத்தான் மறுபடியும் அவனைப்பார்த்தேன். ஆசுபத்திரி எமர்ஜென்சி வார்டு கேட்டுல நிறுத்தியிருந்த ஆம்புலன்சுக்கும் கேட்டுக்கும் நடுவுல போட்டிருந்த சட்டைய சுத்தி கையில வச்சிக்கிட்டு "சிகரெட்.. சிகரெட்.."டுன்னு சொல்லிக்கிட்டு வெற்றுடம்போட குறுகி ஒட்கார்ந்திருந்தான். இந்ததடவையும் ஒரு நாலுபேரு கூட. சுத்தி ஒரு கும்பலா மக்கள் அவனை வேடிக்கைப்பார்த்தபடி...

பதின்மவயசு ஒரு பேஜாரான வயசா இருந்தாலும் அங்கதான் வாழ்க்கைல ஒவ்வொருத்தனும் தன்னைப்பற்றிய ஒரு சுய அடையாளத்தை தேடத்துவங்கறோம். பத்தோட பதிணொன்னா இல்லாம தன்கிட்ட இருக்கற தனித்தன்மை என்னன்னு தேடி அத்தனையும் முயற்சிசெஞ்சு பார்க்கறோம். விளையாட்டு, டான்சு, கிடார், மிமிக்ரி, கிழிஞ்ச ஜீன்சு, பரட்டைதலை, தம்மு, ஓடற பஸ்சுல ஏற்றது, பைக்குல பறக்கறதுன்னு ஏதாவது ஒன்னு பண்ணி நாலு பேரு கவனிக்கறதை வச்சி இதுதான் நம்ம அடையாளமான்னு ஒவ்வொன்னையும் பிரிச்சு ஆராயறோம்! மனசுக்குத்தோனற அத்தனையையும் அது தப்பா சரியான்னு ஆராஞ்சுபார்க்காம பின்விளைவுகளையும் சுத்தியிருக்கறாவங்களையும் பத்தி யோசிக்காம செஞ்சிப்பார்த்துடறோம். சரியான அடையாளத்தை சரியான நேரத்துல கண்டுபிடிக்கறவன் இந்த டிரையல் பீரியடு முடிஞ்சதும் அதையே அடித்தளமா வச்சி வாழ்க்கைல சரசரன்னு மேல போயிடறான். சரியான அடையாங்களை கண்டுபிடிச்சும் அதை அடிப்படைன்னு புரியாம கோட்டை விட்ட என்னைமாதிரியாம பெரும்பாலான கேசுங்க வாழ்க்கையோட ஓரத்துல அந்த அடையாளத்தை ஒட்டிக்கிட்டு கிடைச்சதை வச்சி ஓட்டறோம். இந்த அடையாளத்தேடல்ல தவறிவிழுத்த சிலர் அப்படியே அழுந்திடறாங்க. மீறி முயற்சிபண்ணி எழுந்திருச்சி ஓடறதுக்கு தயாரதுக்குல்ல தலைக்கு மேல ஓடிட்ட காலம் அவங்களைப்பார்த்து சிரிக்கத்தான் செய்யுது!

ம். சரியான நேரத்துல சரியான விசயங்கள் நமக்கு தெரிஞ்சிட்டா அப்பறம் அது வாழ்க்கையே இல்லைன்னு கடவுள் நினைக்கறாரோ என்னவோ?

ஞாயிறு, அக்டோபர் 23, 2005

கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே?

Source: www.cortada.com


அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே?

அறிவுப்பசி அண்ணாசாமி: சோக்கா கேட்ட அப்பாவி.. பாயிண்டு பாயிண்டா சொல்லறேன் கேட்டுக்க...

1. "அதுவா? எனக்கு பிடிச்ச கருத்தை சொல்லறதுக்கு உனக்கு முழுசுதந்திரம் இருக்குன்னு அர்த்தம்" அப்படின்னு எழுதிவச்சிகிட்டு, F9/11 படம் எடுத்தவரு அது அவரோட சொந்தபடத்துல சொன்ன சொந்த கருத்துக்கள் அப்படிங்கறதை விட்டுட்டு என்னமோ புஷ்சு வீட்டு வரவேற்பறைல கக்கா போயிட்டு சும்மா வந்துட்ட மாதிரி சொல்லறதுதான் கருத்துச்சுதந்திரம்னு நம்பவைக்கறது! நாம நகைச்சுவையா பத்தி பத்தியா எழுதினாலும் அது மத்தவங்களுக்கு நகைச்சுவைதான்னும் அதுக்கு மத்தவங்க யாராவது கருத்து சொன்னா ஒடனே நகைச்சுவை முகத்தை கலைச்சுட்டு சீரியசா அதுபத்தி விவாதிக்கனும்னு நம்பறது. அதையே ஒருத்தரு "இந்த நகைச்சுவை மூன்றாம் தரமா இருக்கு! " அப்படின்னு ஒரு கருத்தை சொன்னா "இதையெல்லாம் நகைச்சுவை இல்லைன்னு சொன்னா உனக்கு மூளைக்கோளாரு! " அப்படின்னு பின்னூட்டம் வந்தாலும் ஒன்னும் சொல்லாம அதை அப்படியே வச்சிருக்கறது!

2. சேரும்போது மட்டும் நாம எழுதறது நாலு பேரு கவனத்துக்கு போகனும்ற "தெளிவான" நோக்கத்தோட தமிழ்மணத்துல சேர்ந்துட்டு, அவங்க ஏதாவது சட்டதிட்டம்னு கொண்டுவந்து இந்த விதிகளின் படிதான் இங்க உனக்கு இடம்னு சொன்னா உடனே "ஐயையோ! என் எழுத்து சுதந்திரம் போச்சே! " அப்படின்னு என்னவோ weblog account டையே முடக்கி வைச்சாப்படி "தெளிவில்"லாம கூவறது.

3. இருக்கறவரைக்கும் சகட்டுமேனிக்கு எல்லா பதிவுகளையும் போட்டு தாக்கிட்டு அதுக்கு எப்பவும் போல வழக்கமான பின்னூட்டங்களான " அண்ணே.. கலக்கீட்டிங்க...", "பின் முதுகை சொரிஞ்சிட்டீங்க", "மூக்கை நோண்டிட்டீங்க"ன்னு வர்ற நாலஞ்சு பின்னூட்டங்களை வச்சிகிட்டு "பாருங்க.. நான் யாரும் வருத்தப்படறமாதிரி எங்கயும் எழுதலை"ன்னு தன்னிலை விளக்கமும் குடுத்துக்கிட்டு, விலக்கிவைச்சப்பறம் "அங்கதம்"னா என்ன அப்படின்னு விளக்கமா எல்லாருக்கும் சொல்லித்தர்றது...

4. அந்த " அண்ணே.. கலக்கீட்டிங்க..." பின்னூட்டத்தையும் அனானிமசா இவ்வளவு நாள் போட்டுட்டு, அங்க பொலம்பற பதிவுலயும் போய், "நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்கண்ணே! உங்களுக்காக நான் ஒரு திரட்டி ஆரம்பிக்கறேன்"னு அனானிமசாவே பின்னூட்டம் போட்டு அங்கதம் சொல்லித்தந்த அண்ணன் புண்ணுலயே அங்குசம் பாய்ச்சி தமாசு பன்னறது.

5. எழுதற வரைக்கும் எந்த வரைமுறையும் இல்லாம "அமெரிக்காவுல அப்பிடி சுதந்திரமா எழுதறாங்கோ.." "சப்பானுல இப்படி அளவுகோலே கிடையாது", "உகாண்டால பேனாவுக்கு தடையே கிடையாது"ன்னு கூவிட்டு "நாம எழுதறதுக்கு என்ன அளவுகோல்?" அப்படின்ற கேள்வியே நெனப்புல வராம அம்மா, அக்கா, சாதி, மதம்னு அத்தனையும் இழுத்துப்போட்டு நாறடிச்சுட்டு, "தயவு செய்து இந்தமாதிரி பண்ணறவங்க கவனிங்கன்னு" சொன்னா.. அதையும் உப்புமா பதிவுன்னு சொல்லிட்டு கடைசியா பச்சை வெளைக்க அணைச்சவுடனே "நீ விளக்கை அணைக்கறதுக்கு என்னா அளவுகோல் வச்சி இப்படி புடுங்குன?" அப்படின்னு திடீர்னு அளவுகோல் மேல கரிசனம் காட்டி அறிக்கை விடறது

6. எழுதுன அத்தனையும் மத்தவங்க பதிவுகளையே போட்டுத்தாக்கிட்டு, கடைசியா சொந்தமா ஒரே ஒரு பதிவை போடறபோது பச்ச பல்பு ஃபியூசு போனது தெரிஞ்சு மண்டை காய்ஞ்சபடி ஓய்ஞ்சுபோறது

7. "எதிர்மறை கருத்துக்களே இருக்க கூடாதா? அப்படின்னா இது என்ன எழுத்து சுதந்திரம்?" கேள்வி கேக்கற அதே நேரத்துல "அவங்க எடம்னு தெரிஞ்சு தானே வந்தோம்? அவங்க சொல்லறதையும் கொஞ்சம் கேக்கலாமே?" ன்னு யாராவது சொன்னா "ஜால்ராவ நிறுத்து பெருசு.."ன்னு இவ்வளவு நாள் மத்தவங்களுக்கு போட்ட ஜால்ராவ மறந்து சொல்லறது.

8. குஷ்பு சுந்தரை இல்லாம தலகாணிய கட்டிப்புடிச்சுட்டு தூங்கறதால தமிழ் பெண்களின் கற்புக்கு ஆபத்தா? திருமா கனடவுல வேலங்குச்சிவச்சி ஏன் பல்லு வெளக்கலை? புருசன் பொண்டாட்டி சண்டையோட குடும்பம் நடத்தறவங்க எல்லாம் எப்படி ஒரு விபச்சாரி எழுதுன புத்தகத்தை வச்சி குடும்பம் நடத்த பழகிக்கனும்? இணையத்துல செருப்பால அடிக்கறது எப்படி? ன்னு பலதரப்பட்ட இம்சைகளையும், கூச்சல்களையும் கேட்டுக்கேட்டு நொந்துபோய் "சரி, நம்ப வேலையையாவது நாம பார்ப்பம்"னு ஒதுங்கிப்போறவங்களைப்பார்த்து கருத்துச்சொல்லாத கோயிஞ்ச்சாமிகள்னு சொல்லறது

9. சாவுச்சேதிகளை கூட விடாம பத்தி பத்தியா அங்கதம் பண்ணிட்டு, அங்கதம் பத்தி விளக்கமா வகுப்பும் எடுத்துட்டு "கொடுக்கற தானியத்துல ரெண்டு கொறச்சிக்கங்க.. "ன்னு சொன்னா "அதெப்படி நிர்வாகியா இருந்துக்கிட்டு நீ அங்கதமா எழுதலாம்? இப்படி சொல்லறதுக்கு எவ்வளவு கொழுப்பு உனக்கு?"ன்னு கேக்கறது.

10. இணையதளம்கறது இந்த உலகத்துக்கே வாசல்கறதை மறந்துட்டு எழுதற எழுத்துமேல நம்பிக்கை வைக்காம தமிழ்மணம் மட்டும்தான் தமிழு இலக்கியத்துக்கே வாசல்னு நம்பறது. "இருக்கறவனுக்கு ஒரு எடம்.. இல்லாதவனுக்கு இந்த ஒலகமே மடம்"னு போய் அடுத்த வேலையை பார்க்காம அதையே புடிச்சுகிட்டு இந்த மாதிரி பதிவு போட்டு தொங்கறது.

இது போதுமா? இல்லை இன்னும் கோஞ்சம் சொல்லவா?? "

============

கடைசி பக்கத்தில் தாரள மார்புகளை காட்டும் நடிகையின் படத்தையும், முதல் பக்கத்தில் நாலு பெண்கள் ஒரு டீக்கடையில் சிங்கிள் சாயாவும் ஒரு வடையும் தின்னும் படத்தை அரை பக்கத்துக்கு போட்டு "சீர்குலையும் தமிழ்க்குடும்பங்கள்" னு கலாச்சார அதிர்ச்சி கட்டுரை வெளிவந்த தமிழ்முரசின் 7ம் பக்கத்து விளம்பரத்துக்கு அடியில் ஒரு செய்தி...

"கருத்துச்சுதந்திரம் பற்றி கருத்துச்சொல்லிய அண்ணாசாமியின் கை உடைப்பு! அப்பாவி கைது!!"

சனி, அக்டோபர் 08, 2005

நான் பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை!

Source: http://www.bigbrother.net/~heather/pictures/ButterflyArt1.gif

பேசுவதே புரியும் பொழுது
முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு

விடுமுறையில் தூதாக
பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா
எனக்கேட்டு அனுப்பிய
பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்

என்னைவிட மாநிறமா
எனக்கையோடு கையொற்றி
முதன்முதலில் தொட்டபொழுது
முன்உணராத பட்டாம்பூச்சிகள்
என் அடிவயிற்றில்

பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் பறக்கவிட்ட
விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
நீலம்தெளித்த பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான்
கலவிக்கொண்டே பறக்குமென
நீ சொன்னதை உணர்ந்ததினம்
நம் கலவியின் உச்சகணம்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
பட்டாம்பூச்சிகளுக்குள்
பிரிவுத்துயர் இல்லையென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி முத்தம்

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை

வெள்ளி, அக்டோபர் 07, 2005

எதுவரை...

Source: http://www.dlindamood.com/images/ToPublish/LateX/Fractures_T.jpg

தனித்திருக்கிறேன்
விழித்தும் தானிருக்கிறேன்
பசித்தும்கூட இருக்கிறேன்

நட்பென்ற உறவினை
காதலெனும் உணர்வுகளால்
அடித்தெழுத இயலவில்லையென
சொல்லிச் சென்றவள் நீ

உன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க
என் உணர்வுகளுக்கு நான்

தனித்திருக்கிறேன்!

வியாழன், அக்டோபர் 06, 2005

துருப்பிடிக்கற உடம்பு


Image hosted by Photobucket.com

ரு நாளைக்கு 10மணிநேரம் நாங்க உழைக்கற கடின உழைப்பை(!?) பாராட்டி ஊக்குவிக்கற(ம்ம்ம்.. இந்த பொழப்புக்கு ஊக்கு விக்கறதே மேல்..) வகையிலும் மனசுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கனும்கற நல்லெண்ண அடிப்படையிலும் எங்க ஆபீசுல எங்களையெல்லாம் ஒருநாள் இன்பச்சுற்றுலாவுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க போனவாரம்! ஒரே தமாசுதான் போங்க அன்னைக்கு முழுசும்! வருசம் முழுசும் ஒரே எடத்துல ஆடாம அசங்காம ஒக்கார்ந்து பென்ச்சு தேச்சிட்டு அது எப்படி ஒரே நாள்ள ஒடம்பும் மனசும் சீரான நெலைக்கு வரும்னு யாரும் கோயிஞ்சாமித்தனமா(அப்பாடா! நாமளும் சொல்லியாச்சு..! ) கேக்கப்படாது! HR ஏதாவது குடுத்தா அனுபவிக்கனும். ஆராய்ஞ்சா அப்பறம் வருத்தமாயிரும்! :)

நியாயமா பார்க்கப்போனா நாம இங்க தமிழ்மணத்துல ஆபீசு நேரத்துல கொட்டற உழைப்புக்கு காசி அண்ணன்தான் நம்பளை இப்படி எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுபோகனும். நாம அத்தனைபேரும் ஒன்னுசேர்ந்தா சார் தாங்குவாரான்னு தெரியலை... சரி பொழச்சுப்போறார் விடுங்க. ஆரம்பத்துல சென்னை ECRதான் இதுக்கெல்லாம் சரியான இடம். இங்க பெங்களூருல போய் என்னத்த ரிலாக்ஸ் ஆகறது அப்படின்னு ஒரு சங்கடமாத்தான் கெளம்புனேன். எல்லாரும் 4 காருல இப்போதான் காலேஜ் சேர்ந்த பசங்கமாதிரி சத்தமா இங்கிலீசு பாட்டை வச்சிகிட்டு(Freek-out டாமாம்...! ) ஊருக்கு வெளிய இருக்கற அந்த ரிசார்ட்டுக்கு போய் சேர்றவரைக்கும்கூட ஒன்னும் ஒட்டலை. ஆனா போய் இறங்குன ஒடனே குடுத்தாங்க பாருங்க ஒரு வெல்கம் டிரிங்க்கு! அங்க ஆரம்பிச்சது அலப்பரை! சுத்தமான அக்மார்க் பழரசம் அது. அதை ஆளுக்கு ரெண்டு டம்ளரு ஊத்திக்கிட்டு "மாப்ள.. மப்பு ஏறிடிச்சு.. என்ன புடிச்சிக்கடா.."ன்னு அவனவன் வரவேற்பரைல உருண்டுகிட்டு தொணத்த ஆரம்பிக்க, இந்த வானரங்களை இன்னைக்கு முழுசும் எப்படி தாட்டறதுன்னு அங்க இருந்த மேளாலருக்கு உள்ளுக்குள்ள கவலைன்னாலும் மேலால "உங்களை மாதிரி எத்தனை பேர பார்த்திருப்பேன்"னு ஒரு கெத்துலயே லுக்கு உட்டுகிட்டு இருந்தாரு... நாங்களும் இங்க வந்ததே "சிவியரு ரெஸ்ட்டு" எடுக்கத்தான்னு மனசுல நெனச்சிக்கிட்டு களத்துல இறங்கிட்டோம்!

நல்லா 4 ஏக்கரு சைசுல புல்லு வளர்ந்திருந்த இடத்துல கிரிக்கெட் வெளையாடலாம்னு சொன்னாங்களோ இல்லையோ ஸ்டம்பு அடிக்கறதுக்குள்ள டீம் பிரிச்சு டாஸ் போட்டச்சி. டென்னிஸ் பால்ல 3 மேட்ச்சு நடந்தது. பெட்டு மேச்சுதான். வேற என்ன? பீரு தான்! நானெல்லாம் ஒரு காலத்துல அதுல கரைகண்டவங்கறதால சரி சின்னப்பசங்க அனுபவிக்கட்டும்னு விட்டுட்டுட்டேன். (அப்பறம் தொட்டுட்டு வீட்டுக்கு போயிற முடியுமா என்ன!? நானெல்லாம் இந்த விசயத்துல நெம்ப கண்ட்ரோலுங்க.. ஹிஹி) ஒரு மேட்சுக்கு 10 ஓவரு. மூனு மேச்சுலையும் 10 வருசத்துக்கு முன்னாடி இருந்த நம்ப பேட்டிங் திறமை இப்பவும் அப்படியே இருந்ததுங்கறது எனக்கே ஒரு ஆச்சரியமான விசயம்(அதே தாங்க.. க்ளீன் போல்டு ஆவறது..! ) அன்னைக்கு 3, 4, 1 ன்னு மொத்தமா 8 ரன்னு எடுத்ததுல, என் ட்ராக் ரெக்கார்டை பார்த்து வந்த கான்பிடன்டுல உடனே சேப்பலுக்கு போன் போட்டு கங்கூலிக்கும் எனக்குன் ஒரே ரன் ரேட்டுங்கறதை எடுத்துச்சொல்லி காப்டன் பதவியைக்கேக்கலாமான்னு வந்த எண்ணத்தை பசங்கதான் தடுத்து நிறுத்து இந்திய அணியை காப்பாத்துனாங்க..

கிரவுண்டுக்கு பக்கத்துலயே தந்தூரி அடுப்பை வச்சு சிக்கனா சுட்டு தள்ளிக்கிட்டு இருந்தாங்க. நல்ல தோல், கொழுப்பு நீக்கிய சிக்கனை எழும்புகளை எடுத்துட்டு சின்ன சின்ன பீசா வெட்டி லைட்டா எண்ணையும் மஞ்சளும் போட்டு ஒரு அரை மணிநேரம் ஊறவச்சு அப்பறம் மசாலால ஒரு 2 மணி நேரம் புரட்டிப்போட்டு வச்சிருந்து அப்பறம் அதை ஒரு நீள கம்பில ஒவ்வொன்னா சொருகி தந்தூரி அடுப்பல 5 நிமிசம் தணல்ல வச்சி எடுத்தா லைட்டான செந்நிறத்துல வரும். அடடா... பார்த்தாலே பசி தீரும். அதுக்காக விட்டுட முடியுமா என்ன? நாங்களும் ஆளுக்கு அரை கிலோவான்னு உள்ள தள்ளிக்கிட்டே இருந்தோம். ஒரு கட்டத்துல "உங்களுக்கு இங்க லன்ச்சும் உண்டு"ன்னு சிக்கன் சுடறவரு சொல்லற அளவுக்கு ஆகிருச்சு.

சரி தின்ன வரைக்கும் போதும் மதியத்துக்கு கொஞ்சம் வயித்துல இடம் வேணும்னுட்டு கோல்ப் விளையாடற எடத்துக்கு போனோம். ஒரு சின்ன பந்தை ஒரு நீள இரும்புக்கம்பிய வச்சி அடிச்சு தள்ளி ஒரு குழில போடனுமாம்ல! அட.. இது எங்கனயோ கேள்விப்பட்டாப்புல இருக்கேன்னு பார்த்தா.. நம்ப கோலி, கில்லி கான்சப்டு! இது என்ன பிரமாதம்னு டிரை பண்ணதுல ரெண்டுதடவை புல்லு கத்தையா பேந்துகிட்டு பறந்துச்சு. மூணாவது தடவை கையில வச்சிருந்த குச்சி பறந்துபோயிருச்சு. அந்த துக்கிளியூண்டு பந்து என்ன பார்த்து கேவலமா இளிக்கற மாதிரி இருந்தது. போங்கடா நீங்களும் உங்க டுபாக்கூர் ஆட்டமும்னு அதோட விட்டுட்டேன்! எங்க ஆபீசுல எனக்கு அடுத்த லெவல்ல இருந்து கோல்ப் கட்டாய ட்ரெய்னிங் போகனும். ஏன்னா இந்த விளையாட்டு நிதானத்தையும், கவனக்குவிப்பையும், கட்டுப்பாட்டையும், ஆளுமைத்திறத்தையும் சொல்லித்தருதாம்! அதுபோக வெளிநாட்டு க்ளையண்டுககூட நெருங்கிப்பழக இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துமாம்!! அட போங்கப்பு! ஒரு நாளைக்கு அவங்கெல்லாம் இங்க வந்து இதே காரணத்துக்காக கில்லி தாண்டலு வெளையாடற காலம் வராமலா போயிரும்னு நினைச்சுக்கிட்டேன்!

கோல்ப்புல கிடைச்ச பல்ப்புல மத்தியான சோத்தை விட்டுறக்கூடாதுன்னு ஆற அமற இருந்த எல்லா ஐட்டங்க மேலயும் உருண்டு பொறண்டு கடைசியா நம்ப தேவாமிர்தமான தயிர்சாசத்துல முடிச்சு ஒரு கால் கிலோ ஐஸ்கிரீமோட ஒக்காரும்போதுதான் அடுத்து டென்னீசு வெளையாடலாம்னு பசங்க கூப்புட்டாங்க! சரி அதை மட்டும் ஏன் விட்டுவைக்கனும்னு அங்கயும் போயாச்சு! சும்மா பந்தை முன்னாடியும் பின்னாடியும் அடிக்கறதுதான.. நாம பார்க்காத டென்னிஸ் பாலா?! அப்படின்னு நினைச்சா.. நினைப்புல சுத்தமா மண்ணு! ஓடி ஓடி பந்து பொறுக்கறதுலயே பாதிநேரம் ஓடிப்போச்சு! ஒழுங்கா சர்வீசு போடறதுக்கே அரை மணி நேரம்! அதுக்கு அப்பறம் கேம் கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருந்தது. ரொம்பக்க்க்க்க்க்கேவலமா 2 மணி நேரம் ஆடி ஒரு செட்டு முடிச்சோம். அதுலயும் நாங்கதான் ஜெயிச்சோம்னு வச்சிக்கங்க. இந்த டென்னீசு கேவலத்தை மட்டும் படமா போட்டிருக்கேன்! இந்த நிக்கற ஸ்டைலை வச்சே சொல்லுங்க? நான் ஒரு ஃப்ரொபசனல் ப்ளேயரு மாதிரி இல்லை?? இது போதாதா என்ன? நான் சானியா கூட மிக்சட் டபுள்ஸ் ஆடறதுக்கு?! (கனவுலதாங்க... ஹிஹி..) அந்த காலத்துல ஸ்டெப்பிகிராப்பு மேல ஒரு தலைக்காதலா அஞ்சாரு வருசம் நூலு விட்டும் ஒன்னும் வேலைக்காகல! இத்தனை வருசத்துல நம்ப ஹேர்ஸ்டைலு அகாசி மாதிரி ஆனதுதான் மிச்சம்!! சரி... நம்ம அம்மணி அச்சு அசலா நம்மள மாதிரி இருக்கற ஒரு ஆளைத்தான் கல்யாணம் கட்டியிருக்குங்கற ஒரே ஒரு திருப்திதான் அந்த காதல் கதைல எனக்கு மிஞ்சுன எச்சம்!!

இதுக்கே நாலு மணி ஆகிடிச்சுங்க. இதுக்கு அப்பறம்தான் நீச்சலு! அங்க நாளு வெள்ளைக்கார ஜோடிங்க நீச்சல்குளத்துக்கு பக்கத்துல நீள பென்ச்சுல படுத்துக்கிட்டு எந்த சரக்கையோ அடிக்கடி உறிஞ்சிக்கிட்டு அப்பப்ப போய் ஒடம்ப நனைச்சுக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இதெல்லாம் ஆகுமா? நாமெல்லாம் சொரபுட்டை(சுரைக்காயை நல்லா 2 மாசம் வெயிலுல காயவச்சி எடுத்தா உள்ள காத்தை தவிர ஒன்னும் இல்லாம ஆயிரும். அதை ஒரு கயித்துல சுத்து முதுகோட கட்டிக்கிட்டா கிணத்துல ஆள முழுக விடாது! )யை முதுகுல கட்டிக்கிட்டு கிணத்துல கடப்பாரை நீச்சலு போட்டு பழகுன ஆளுக! அளுங்காம குளுங்காம பதவிசா குறுக்கையும் நெடுக்கையும் நீஞ்ச்சறதுக்கு பேரு நீச்சலா? நீச்சல்குளத்துக்கு போறதே குளிக்கத்தான்! ஆனா அதுக்கு முன்னாடி வெளீல குளிக்கனுமாம்! சரின்னு லைட்டா ஒடம்ப நனைச்சுட்டு ஓடிப்போய் தடால் தடால் குதிச்சதுல ஒரு வெள்ளைக்கார ஜோடி கடுப்பாகி எழுந்திருச்சு அந்தப்பக்கம் போயிருச்சு. அப்பவும் அந்த வெள்ளைகார பொண்னு எங்களைப்பார்த்து "You.. crazy guys.." னு ஒரு சினேகமா சிரிப்போடதான் போச்சு! நெட்டுக்குத்தல் டைவு, ரெவர்சு டைவு, கையைக்கால இறுக்கமா கட்டிக்கிட்டு பொதேர்னு விழுகற அணுகுண்டுன்னு அனைத்துவகை கொரங்கு சேஷ்டைகளையும் 2 மணி நேரம் பண்ணதுல அங்கன ஒரே களீபரம்! ரொம்ப நேரம் யாரு தண்ணிக்குள்ள மூச்சுப்புடிக்கறதுங்கற வெளையாட்டுலயும் நாந்தான் ஜெயிச்சேன்! என்னா நான் தம்ம நிறுத்தி 3 வருசம் ஆகுதுல்ல! அன்புமணி சொல்லியெல்லாம் இல்லைங்க! எல்லாம் என் அன்புமனைவி சொல்லித்தான்! :) ( நம்ப ஆளு இப்பெல்லாம் வலைப்பக்கம் அடிக்கடி வர்றாங்கன்ற உறுதிப்படுத்தப்படாத வதந்தியை அடுத்து அடிக்கடி இப்படியெல்லாம் எழுதவேண்டியிருக்குங்க...)

நெஜமாவே அன்னைக்கு ரொம்ப உற்சாகமா இருந்துச்சுங்க! HR பண்ணறதுலயும் ஒரு விசயம் இருக்கு போல. என்ன? அதுக்கு அடுத்த ரெண்டு நாளு ஒடம்பை இப்படி அப்படி அசைக்கமுடியலை! அங்கங்க புடிச்சுக்கிட்டு ஒரே வலி! இந்த IT வாழ்க்கைல ஓடியாடி ஏதாவது செய்யாம ஒடம்ப இப்படியே வச்சிருந்தா சீக்கிரம் துருப்பிடிச்சுரும்னு(அப்பாடா.. தலைப்பைப் பிடிச்சாச்சு...!) தோணுது. இனியாவது ஏதாவது உடற்பயிற்சிய கட்டாயமா தெனமும் செய்யனும்கற ஒரு உறுதிய மனசுக்குள்ள எடுத்துட்டு அதை இதுவரை நான் முடிவெடுத்து நிறைவேற்றாத மத்த 184 உறுதிகளோட சேர்த்துக்கிட்டேன்!

புதன், அக்டோபர் 05, 2005

இருவகை இந்தியா

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு தெரிந்த இந்தியா என்றால் அது கீழே உள்ளது தான். எந்த நாட்டிற்க்கும் இல்லாத அமைப்பாய் ஒரு அன்னையின் உருவகமாக இரு கைகளையும் நீட்டி வாரியணைக்க அழைக்கும் படியாய் இருக்கும்.


Source :http://www.indempan.org/image/india-map.jpg

ஒவ்வொரு நாட்டும் ஒவ்வொரு இந்தியா இப்போது. அன்னாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அரசியல் உறவுகளைப்பொறுத்து!


Source: http://www.infoplease.com/atlas/country/india.html

ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா?

ம்... என்னவாயிருந்தாலும் தலையில்லாத தாயைப்பார்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!

செவ்வாய், அக்டோபர் 04, 2005

தப்புன்னா திருத்திக்கனும்...

Image hosted by Photobucket.comஇத்தனைநாள் எழுதற பதிவுகளுக்கு வண்ணமா நல்ல நல்ல படங்களை கூகுளில் இருந்து உருவிப்போட்டபோது ஒன்னும் தெரியலை! ஆனா நேத்து ஆபீசுல Intelectual Property பத்தி ஒரு கூட்டத்துக்குபோன பிறகுதான் செய்யற தவறு புரிஞ்சது.


அதனால இனிமேல் பதிவுகளோட போடற படங்களுடன் நன்றி (அ) source எனப்போட்டு கூட சுட்டியைக்கொடுக்கறதுதான் சரியான வழின்னு தெரியுது. இதுக்கும் மேல ஏதாவது விசயம் இருந்தா தெரிஞ்சவங்க சொல்லுங்க. திருத்திக்கலாம்!


மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுசன்...
மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்... அதுனாலதான்... ஹிஹி...


அது சரி.. இந்த படம் எப்படி இருக்கு?


(Picture Source: www.msgr.ca/msgr-humour/penance%2011.htm)

வியாழன், செப்டம்பர் 08, 2005

ஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்!


Image hosted by Photobucket.com


ழைச்சேறின் கலவை தெறிக்கும் குழம்பிய சகதியில் சடுதியில் திருஷ்டியாகிப்பின் காற்றில் ததும்பிப்பிறந்து ஈர்ப்பின் விசையில் கீழாக ஓசையற்றுப் பயணத்துவங்கி மாசற்ற மாசுகளின் மீட்சியின் விளிம்பில் மரிக்கத்துவங்கும் துகள்களின் தெரிப்பில் ஜீவன் அடக்கும் பொங்கிய குமிழிகளின் ஆயுளின் நீளமாய் வாழ்வைக்கரைக்கும் ஒரு துளி சகதியின் பழுப்பு வர்ணமாய்... அடச்சே... இந்த கோணங்கி புஸ்தகத்த இனி தொடக்கூடாது! சரிங்க.. நேராவே சொல்லிடுறேன்! பழுப்பேறிப்போன ஒரு அட்டைப்பொட்டி வீட்டை சுத்தம் பண்ணும்போது கிடைச்சதுங்க! திறந்து பார்த்தால் ஒரு வீரத்தமிழனின் வாழ்வியல் காவியத்தினை படைக்க உறுதுணையளிக்கும் சான்றுகள் (மறுபடியும் பார்றா...! )

என்னோட கஜானா பொட்டிதாங்க அது! படிக்கற வயசுல ஏதேதோ சேர்த்துவச்சிருக்கேன்! ஒவ்வொன்னையும் எடுத்துப்பார்த்தா ஆனந்தக்கண்ணீரும், திகைப்பும், அதிர்ச்சியும், புன்முறுவலும் மாறிமாறி வருது! (ம்ம்ம்.. சிவாஜிக்கு அப்பறம் நவரசத்தையும் காட்ட நம்பள விட்டா வேறே யாரு இருக்கா? )

மொதமொதல்ல வாங்குன ஃபியூமா ஷூவோட சிம்பலும் சைசும் போட்ட சின்ன அட்டை!

ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத என் அண்ணன் ஒரு நாளு வீட்டுல யாரும் இல்லாதப்ப "வெளியே போகும்பொழுது சாவியை சன்னலுக்கு மேலே வைக்கவும்.. Your Brother" என எழுதிய சின்ன கடிதம்!

மராத்தான் போட்டி ஆரம்பிச்சபிறகு ஓடறதுக்கு ஒரு புள்ளைங்களும் வரலைன்னு தெரிஞ்சவுடன் சாவகாசமா டீக்கடைல தேங்காபன்னு தின்னுட்டு அப்பறம் டவுன்பஸ்ஸு புடிச்சு போய் இறங்கி வாங்கிவந்த "Participation" சர்டிபிகேட்டு!

"தங்கள் மகன் இன்றைய தினம் வகுப்புக்கு வரவில்லை" என அறிவிக்கும் வசந்தி மேடத்தின் கையெழுத்துப்போட்ட 52 அஞ்சலட்டைகள்!

நான்கு ஆண்டுகளுக்கான என பரிணாம வளர்ச்சியை படிப்படியாய் அறிவிக்கும் என் போட்டோ ஒட்டிய பரிச்சை
ஹால்டிக்கட்டுகள்!

ஒரு செமஸ்டர் முழுவதற்கும் ஒரே ஒரு பேப்பரில் மீண்டும் மீண்டும் எழுதி எழுதி இப்போது மசியில் மட்டுமே ஒட்டியிருக்கும் ஒரே ஒரு பக்க மைக்ரோப்ராசசர் நோட்ஸ்! (அப்பறம் மார்க்குசீட்டுல "004"ன்னு வராம வேற என்ன வரும்?)

மொதல்ல பேண்ட்டா வாங்கி 4 வருசம் ஓடாதேஞ்சு கிழிஞ்சு அதுக்கப்பறமும் டவுசரா மாறி உடல், பொருள், ஆவி என அனைத்தையும் என் உடம்புக்களித்த நான் முதன்முதலில் வாங்கிய Killer ஜீன்ஸோட செவ்விந்திய முகம் பதிந்த பொத்தான்!

கசங்கிய நிலையில் கரையான் அரித்த நிலையில் இப்பொழுது இருக்கும், பல ஆண்டுகளாக என் அறையின் சுவற்றில் எப்பொழுதும் என்னையே பார்த்துச்சிரித்தபடி இருந்த ஸ்டெப்பிகிராப் போஸ்டர்! இப்பொழுதும் அதே சிரிப்பு!

கல்லூரி டூருல வாங்கிய பிளாஸ்டிக் கவர் போட்ட பாண்டிச்சேரி அன்னையின் கையடக்க படம்... அதனுள் ஒரு ரோஜாப்பூவும், ஒரு நீண்ட தலைமுடியும் வெகுநாட்களாக வைத்திருந்து அகற்றிய தடம்!

ரெக்கார்டு நோட்டுக்குள் ரகசியமாய் வைத்திருக்கும் "அன்று ரோமில் நடந்த கதை.. புரூட்டஸ்! நீயுமா!? நேற்று நம்முள் நடந்த கதை... நண்பா! நீயுமா!?.." என ஆரம்பிக்கும் "துரோகத்தில் மலர்ந்த காதல்" என தலைப்பிட்ட நான்கு பக்க முதல்கவிதை! (இப்போ படிச்சா சிரிப்பு தாங்கலைங்க..)

அடடா... ஒவ்வொண்ணைப்பத்தியும் ஒரு பதிவு போடலாம் போல! வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு குட்டி அருங்காட்சியகம் அவசியம் வேணும்ங்க! வந்து வசமா மாட்டுனவனுங்க கிட்ட என்னமாதிரி பழங்கதை சொல்லி அறுக்கறதுக்கு இல்லைன்னாலும், என்னைக்காவது எடுத்துப்பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு சின்ன கிளுகிளுப்படையறதுக்கும் மொகத்துல ஒரு மந்தகாசமான புன்னகையோட கொஞ்சநேரம் மெதக்கறதுக்கும்!

ஞாயிறு, செப்டம்பர் 04, 2005

பொட்டிய கட்டறேனுங்க!


Image hosted by Photobucket.com

ஆஹா! ஒரு வாரம் ஓடிப்போச்சு!

உங்களோட உற்சாகமான பின்னூட்டங்களும் கருத்துக்களூம் நெஜமாவே ரெண்டு டம்ளர் ராகிக்கஞ்சிய மோருல கரைச்சு கல்லுப்பு போட்டு வெங்காயத்தை கடிச்சுக்கிட்டு குடிச்சப்புல ஜில்லுன்னுதான் இருக்கு!

இந்த வாரம் நாமன்னு ஆனதுக்கப்பறம் நல்ல விசயமா எழுதனுமேன்னு நினைச்சதுல வெளைஞ்ச மலரும் நினைவுகள் தாங்க இதெல்லாம்! சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை! அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு! இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது? ஆனாலும் ஒருவேளை இது என்னைக்கும் இலவசகல்வியா இருக்கறதால நாமதான் சரியா கருத்தா படிக்கறதில்லையோ என்னவோ?!

நட்சத்திரவிதிப்படி எல்லா நாளும் எழுதனும்னாலும் வெள்ளிக்கிழமை மட்டும் முடியலைங்க..( மதியக்கா.. மன்னிச்சிருங்க! ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிமிர்த்திட்டாங்க! அதேபோல நேரம் பத்தாதலால நிறைய எழுத்துப்பிழைகளோடவும் பதிவுகளை போட்டுட்டேன்! படிச்சு சகிச்சுகிட்டவங்க அப்படியே என்னையும் மன்னிச்சுருங்க! (தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்புதான்! இல்லைன்னா நானெல்லாம் எப்படி பொழப்பு நடத்தறது!? :) )

ஒருவாரமா மடிக்கணினியை கட்டிக்கிட்டு ஓரியாடுனதுல வீட்டுலயும் கொஞ்சம் கலவரம்தாங்க! இன்னும் ஒரு வாரத்துக்கு இதை வீட்டுல தொடக்கூடாதுன்னும் இல்லைன்னா இன்னொரு புதுக்கரண்டி வாங்கவேண்டியிருக்கும்னும் எனது இல்லாள் தாழ்மையாகவும் அன்போடவும் பரிவுடனும் வேண்டுகோள் வைத்திருப்பதால் போனாப்போதுன்னு(ஹிஹி...) நானும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்திருக்கிறேன்! ஆகவே அன்பர்களே! இத்தனை நாள் படிக்காமலும் பின்னூட்டமிடாமலும் விட்ட பதிவுகள் ஆபீசுல கவனிக்கப்படும்னு சொல்லிக்கறேன்! (இல்லைன்னா மட்டும்? )

மற்றபடி, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் என்றென்றும் நன்றி!

சனி, செப்டம்பர் 03, 2005

எமிலி என்றொரு தோழி


Image hosted by Photobucket.com


தோழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க! கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா? இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா? ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி! தோழிங்கறவங்க யாராவேனா இருக்கல்லாம்! கிளாஸ்மேட்டு, ரயில்சினேகம், பக்கத்து வீட்டு பத்தாவது படிக்கற ரெட்டை ஜடை வாலு, ஆபீசுல கூட வேலை செய்யற மாமி... ஏன்? அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா? அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா? மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா? உரிமையோட கோவிச்சுக்க முடியுதா? ஆம்பளைங்கற ஈகோவ தூக்கி ஓரமா வச்சிட்டு(ரொம்ப செரமமான வேலையையா இது! ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா? அப்பன்னா அவங்க தோழிதான்!

எனக்கெல்லாம் இப்போதைக்கு இத்தனை நாள்ள நான் தேடிக்கண்டெடுத்த உன்னதமான தோழின்னா அது என் ஊட்டுக்காரம்மா தான்! (பிட்டை எப்படி போடறேன் பாருங்க! :) ) தேடல் எங்க ஆரம்பிச்சதுன்னு யோசிச்சுப்பார்த்தா அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச தூக்கு பல்லு சசிகலாவும் எலிவாலு ஜடை சுமதியும்தான்( அவங்க இதை படிக்க மாட்டாங்கன்ற தைரியம்தான்.. ஹிஹி..) மொதல்ல ஞாபகத்துக்கு வராங்க! வீட்டுப்பாடம் செய்யாததற்கு தண்டனையா ராமச்சந்திரன் வாத்தியாரு புள்ளைங்க நடுவுல உட்கார சொன்னப்ப தேம்பித்தேம்பி அழுதுகிட்டே( கொப்பரானை சத்தியமா.. நம்புங்க..) உட்கார்ந்திருந்தது ஞாபகமிருக்கு. அப்பறமா பலப்பம் கடன் வாங்கனது, எலந்தவடை பிடுங்கித்தின்னது, கமர்கட்டை சட்டைல வச்சு சுத்தி காக்காகடி போட்டதுன்னு நிறைய கொடுக்கல் வாங்கலுக்கு அப்பறம் பலமான நட்பா மாறிடுச்சி. இதை தெரிஞ்சுகிட்ட வாத்தியாரு அதுக்கப்பறம் வீட்டுப்பாடம் செய்யலைன்னா தண்டனைய மாத்தி கையை பழுக்கவைச்சது வேறகதை( பிஞ்சிலே பழுத்தவன்னு நெனச்சிருப்பாரோ? ) இதாவது பரவாயில்லைங்க. அவங்க பொம்பளைப்புள்ளைங்கன்ற ஒரு தகவல் தான் எங்களுக்குள்ள வித்தியாசம். இந்த பத்தாவதுல இருந்து பண்ணெண்டாவது முடியறவரைக்கும் இருக்கு பாருங்க. புள்ளைங்களை பார்த்துட்டா எதுக்கு நிக்கறோம்? எதுக்கு தலைய சரிபண்ணறோம்? எதுக்கு மூஞ்சில ஒரு சின்ன கலவரத்தை கொண்டு வரோம்? தாண்டி போனப்பறம் எதுக்கு கெக்கெபிக்கேன்னு இளிக்கறோம்னு ஒரு எழவும் புரியாது! இத்தனைக்கும் அதுங்க நம்பள ஏறெடுத்தும் பாக்காம ஏதோ இப்போதான் இந்த வழில கால்பவுனு மூக்குத்திய தொலைச்சுட்ட மாதிரி தலைய 90 டிகிரிக்கு கவுத்துகிட்டு போயிருக்கும்! வகுப்புக்குள்ள கொஞ்சம் தேவலாம். அவங்களையெல்லாம் இடப்பக்கமாவும் பசங்களையெல்லாம் வலப்பக்கமாவும்(ஏன்னு என்னை கேக்காதீங்க! ) ஒக்காரவச்சிருப்பாங்க. முன்னாடி இருந்து பார்த்தா டீச்சருக்கு ஏதோ ஒரு தனித்தனி தீவுக மாதிரிதான் தெரியும். ஆனா தகவல் பறிமாற்றங்களே பின்னாடி கடைசி வரைசைல தான் நடந்துகிட்டு இருக்கும்! டிபன்பாக்சை மாத்தி திங்கறது, ரெக்கார்டு நோட்டை எழுதி படம் போட்டு குடுக்க சொல்லறது(பாவம்.. ரெண்டுதடவை எழுதுவாளுங்க..) சும்மாவே பேசரதுக்காக பென்சில் பேனா கேக்கறது, வேணும்னே சத்தமா ஜோக்குக்கு பெனாத்தறதுன்னு ன்னு எப்பபாரு துருதுருன்னு இருப்போம். ஜிம்மிக்கு ஒரு வேலையுமில்ல... நிக்க நேரமுமில்லைன்ற மாதிரி தான்! எதைச்சொன்னாலும் சிரிப்பாளுங்க! நமக்கே சில சமயம் சந்தேகம் வந்துரும்! நெஜமாவே சிரிக்கறாங்களா இல்லை ஏத்திவிடறாங்களான்னு! சில சமயம் எவளாவது திடீர்ன்னு சில நாளு வரமாட்டாளுக.. குத்துமதிப்பா தெரிஞ்சாலும் சும்மா ஏன் லீவுன்னு கேட்டு வைப்போம். அதுக்கும் குசுகுசுன்னு சிரிப்பாங்களேதவிர பதில் வராது!

கல்லூரி ஒரு புதிய உலகம். ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்தாலும் போகப்போக சரியாகிடுச்சு. இன்னதுதான்னு இல்லாம அத்தனையும் கடலையா போட்டு போட்டு தயக்கம், கூச்சமெல்லாம் போய் தோழின்ற உறவுன்னா என்னன்னு அங்க இருந்துதான் தெரியவந்துச்சு. பெண்களுக்குன்னு ஒரு தனி உலகம் இருக்குன்னும், அவங்களோட சின்ன சின்ன ஆசைங்களும், அவங்ககூட எப்படி பழகனும்னும், ஆம்பளைங்களா நாம செய்யற தப்புகளும், கூத்தடிக்கறதே வாழ்க்கை இல்லைன்னும், கொஞ்சமாவது பொறுப்பா படிச்சு ஒரு வேலைக்கு போனாதான் ஒரு மதிப்புன்னும் ஒரு அரைவேக்காடா தெரியறதுக்குள்ள கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சி. இந்த காலத்து பயபுள்ளைங்க்களுக்கு பத்தாவது படிக்கறப்பவே இந்த அறிவு வந்துடுது! பார்த்தா பொகையாத்தான் இருக்கு!

நான் போட்சுவானால கொஞ்சகாலம் குப்பை கொட்டுனதைப்பத்தி சொன்னேன் இல்லைங்களா? அங்க ஒவ்வொரு அயல்நாட்டானை வேலைக்கு எடுத்தாலும் அதுக்கு சம்மா ஒரு உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்கறது அரசாங்க விதி. அங்க பள்ளிப்படிப்பை தாண்டுனாலே அரசாங்க வேலை கிடைச்சுடும். எப்படியாவது உள்ளூர் மக்களை படிக்கவச்சிடம்னுன்னு கல்வி கல்லூரி வரை இலவசம். வைரத்துலயும் மாட்டுக்கறிலையும் நிறையா காசு வந்தாலும் அந்த பூர்வகுடி மக்களுக்கு படிப்புமேல அவ்வளவு நாட்டமில்லை. விவசாயம் பெருசா ஒன்னுமில்லைன்னான்லும் மாட்டுப்பண்ணைதான் முக்கியதொழில் மக்களுக்கு. கல்யாணம்ற ஒரு கன்செப்டு ரொம்ப அரிது. யார் வேனா கூடி வாழலாம். 4 பெண்களுக்கு ஒரு ஆம்பளைக்கறது தான் அங்க ஜனத்தொகை கணக்குல தெரிஞ்ச விசயம்! இன்னொரு அதிர்சிகரமான தகவல் என்னன்னா அரசாங்க கணக்குபடியே அங்க 10துக்கு 3 பேருக்கு எய்ட்சு. பார்த்துகிட்டே இருப்போம். திடீர்னு இளைச்சு துரும்பா போயிருவாங்க. அப்பறம் சில மாசங்கள் ஆபீசுக்கு வரமாட்டாங்க. திடீர்னு ஒருநாள் உடம்பு சரியில்லாம காய்ச்சல்ல இறந்துபோயிட்டதா நியூசு வரும். எல்லா இறப்புச்சடங்குகளும் ஞாயித்துகிழமைதான் சர்ச்சுல நடக்கும். அந்த வாரத்துக்குள்ள எத்தனை பேரு இறந்தாங்களோ அத்தனை பேருக்கும் சேர்த்து.

இந்த உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்ற விதிப்படி பார்ட்டைம் டிகிரி படிச்சுகிட்டு வேலைக்குவந்தவதான் எமிலி. 22 வயசு இருக்கும் அவளுக்கு அப்ப. அவங்களுக்கே உரிய அடர்ந்த கருப்பு நிறத்துல இருந்து கொஞ்சம் மாறுபட்டு நம்ப ஊரு மாநிறத்துல இருப்பா. நல்ல வெடவெடன்னு உசரம். ஓங்கி ஒரு அப்பு விட்டான்னா அப்படியே சுருண்டு விழுந்துடுவோம். அப்படி ஒரு ஆகிருதி. நல்லா ஒரு ஜான் நீளத்துக்கு வாயின்னும், எப்போதும் சிரிக்கற கண்கள்னும், விடைத்த மூக்குன்னும் மொகமே ஒரு களையா இருக்கும்! தலைமுடிய திரிதிரியா சடைபோட்டு தென்னைமர உச்சி மாதிரியே நம்ப ஒலங்கோ ஸ்டைல்ல இருக்கும். (தலையப்பத்தியெல்லாம் நான் பேசவே கூடாதுங்க! போன வாரம் என் ஒரு வயசு பொண்ணு சீப்பை வச்சு விளையாடிக்கிட்டு இருக்க, என் சகதர்மினி "அப்பாவுக்கு சீவி விடும்மா"ன்னு சொல்ல, சீப்போட பக்கத்துல வந்து தலைய பார்த்து ஒரு செகண்டு யோசிச்சிட்டு அப்பறம் முடி இருக்கற இடமா என் கைல சீவ ஆரம்பிச்சுட்டா! தாங்க முடியாத சிரிப்பு என்னவளுக்கும் அதை பார்த்து என் புள்ளைக்கும்! ஹா! என்ன ஒரு ஆணவ சிரிப்பு? ஒரு நாளைக்கு வச்சுக்கறேன் அவங்களை! #@*# )

எமிலிய பார்த்தவுடனே ஒரு உற்சாகம் பத்திக்கும். காலைல ஆபீசுக்குள்ள வந்தவுடனே எல்லாத்துக்கும் ஒரு "துமேலாரா.."( அவங்க மொழில Good Morning..") அப்ப இருந்து சாயந்தரம் போற வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பா. எந்த வேலை சொன்னாலும் முகம் சுளிக்காம செய்வா. யாருக்கு பொறந்தநாளுன்னாலும் எல்லாத்துகிட்டயும் காசு கலெக்ட்பண்ணி கேக், பலூன், பாட்டுன்னு அன்னைக்கு சாயந்தரம் ஆபிசையே கலக்கிருவா... கவருமெண்டு ஆபீசுல மத்தியானம் எல்லாரும் ஒன்னா ஒக்காந்து சாப்படற பழக்கத்தையும் அவதான் ஆரம்பிச்சா.. கவருமெண்ட்டு ஆபீசுல எங்களுக்கு என்ன வேலை? நிறைய பேசுவோம்! அவங்க தினமும் மூனுவேளையும் மாட்டுக்கறி சாப்படறது, இசையும் நடனமும் ஏன் அவங்க ரத்ததுல ஊறிப்போயிருக்குது, ஏன் இப்படி நாட்டுல இருக்கற வளத்தையெல்லாம் வெளிநாட்டுக்கு எழுதிக்கொடுத்துட்டு வெள்ளந்தியா இருக்கறாங்க? ஏன் கல்யாணம் பண்ணிக்காமயே ஆம்பளைங்க ஒன்றுக்குமேற்பட்ட பெண்களோட வாழறாங்க? அதை எப்படி அங்க இருக்கற பொம்பளைங்க சகிச்சுக்கறாங்கன்னு நிறைய பேசுவோம். அவளுக்கும் நம்ப ஊரு கதைகளையெல்லாம் கேக்க கேக்க ஆச்சரியமா இருக்கும். அது எப்படி அப்பா அம்மா பாக்கறபெண்ணை கல்யாணம் பண்ணிக்கறோம்? எப்படி ஒருத்தருக்கு ஒருத்தரு பழகாமையே கல்யாணம் நடக்குதுனு ஆயிரம் கேள்வி கேப்பா! எவ்வளவு சொன்னாலும் அவளுக்கு புரியாது! ஆனா ஒரு விசயதுல அவ ரொம்ப உறுதியா இருந்தா! மத்தவங்களை போல இல்லாம கடைசிவரைக்கும் அவள் காதலன் கூடத்தான் வாழப்போறேன்னு சொல்லுவா. ரெண்டுபேரும் 4 வருசமா காதலிக்கறதாவும் 2 வருசமா ஒன்னா சேர்ந்து வாழறதாவும் இப்படி ஒரு அருமையான காதலன் கிடைச்சதுக்கு ரொம்ப அதிர்ஷ்டசாலின்னும் இன்னும் 1 வருசம் வேலை பார்த்துட்டு கொஞ்சம் காசு சம்பாதிச்சி வீடு வாங்குனதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் அப்பறம் குழந்தைகளை பெத்துகிட்டு அவங்களை கவனிச்சுகிட்டே அவன்கூட கடைசிவரை வாழப்போவதாவும் கண்களில் கனவுகளோட சொல்லும்போதே எனக்கு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தத்தோனும். அவள் காதலன் ஒரு பாரில் DJ வா வேளை பார்த்துக்கிட்டு இருந்தான். அதே தென்னைமரத்தலையோட தென்னைமர உசரத்துல பாதியா, கால்ல முட்டிக்கு தொங்கற லூசான ஜீன்சை போட்டுகிட்டு கழுத்துல சைக்கிள் செயின் சைசுக்கு ஒரு தங்க செயினை போட்டுகிட்டு சாயந்தரமா சில நாட்கள் அவளைகூட்டிகிட்டு போக வரும்போது எங்களை பார்த்து கை விரல்களை மடக்கி ரேப்பர் ஸ்டைல்ல "யோ மேன்" அப்படிம்பான்! நாங்களும் பயம் கலந்த ஒரு சிரிப்போட அவன் ஸ்டைல்லயே "யோ.." அப்படிம்போம். பார்க்க ஜோடிப்பொருத்தம் நல்லாத்தான் இருக்கும்.

கொஞ்சநாள் கழிச்சு ரெண்டுபேரும் சேர்ந்து வீடு ஒன்னு வாங்கப்போறதாவும் இன்னும் 3 மாசத்துல கல்யாணம் பண்னிக்கப்போறதாவும் சந்தோசமா சொன்னா. அங்க அப்பப்ப ஊரை விட்டு போறவங்க வீட்டுப்பொருள்களை விக்கறதுக்கு ஹோம்சேல் போடுவாங்க. ஒரு நாள் அவளுக்கும் கூட வேளை செய்யற இன்னொரு ரெண்டு பெண்களுக்கும் ஒரு ஹோம்சேல்ல சிலது வாங்க வேண்டியிருக்குன்னு கார் இல்லாததால என்னை கூட்டிகிட்டு போக சொன்னா! மத்தியானமா சாப்டுட்டு நாலுபேரும் கிளம்பினோம். அங்க நாலு மடக்கற நாற்காலியும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வாங்குனா. மத்த ரெண்டுபேரும் பீங்கான் டின்னர் செட்டுவாங்குனாங்க. எமிலிகிட்ட பணம் பத்தலை. நான் ஒரு 100 பியூலா குடுத்தேன். எல்லாத்தையும் கார் டிக்கில போட்டுக்கிட்டு கிளம்பினோம். போற வழில வீட்டுல இறக்கிவைச்சுட்டு போலாம்னு சொன்னதால பேசிக்கிட்டே அவளோட வீட்டுக்கு போனோம். கல்யாணத்துக்குள்ள இன்னும் என்னென்ன வாங்கனும்னு பேசிக்கிட்டே வர்றா. நான் என்னோன கல்யாணப்பரிசா அந்த 100 பியூலாவ வைச்சுக்கன்னு சொல்லறேன். அவ அதை மறுத்துட்டு கடன் வாங்கினா திருப்பிக்கொடுக்கறதுதான் சரின்னும் நான் அவ கல்யாணத்துக்கு அவ சொந்த ஊருக்கு எப்படி வரனும்னும் அங்க சர்ச்சுல என்னென்ன நடக்கும்னும் கதைகதையா சொல்லிக்கிட்டே வர அவ வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு முன்னால ஒரு பென்ஸ் காரு நிக்க முகத்துல ஒரு ஆச்சரியக்குறியோட எங்களை உள்ளே வரச்சொல்லிட்டு இறங்கி உள்ளே போனாள். நான் வாங்குன நாற்காலிகளை இறக்கி வீட்டு முகப்புல வைச்சிட்டு மைக்ரோவேவ் ஓவனை எடுத்துகிட்டு போறேன். வீட்டுக்கு உள்ளே இருந்து சண்டை போடற சத்தம்! ஒரு பொண்ணு அவசர அவசரமா ஏதோ கத்திகிட்டே வெளீல ஓடிவந்து பென்ஸ் காருல ஏறி சல்லுன்னு கிளப்பிகிட்டு போறா. பின்னாடியே எமிலியோட காதலன் எமிலிகிட்ட ஏதோ சொல்லிகிட்டே வரான். மொத்தமா உடைஞ்சுபோய் எமிலி வந்து காருல ஏறிக்கிட்டா! ஒரு நிமிசத்துல மொத்த நிலைமையும் எனக்கு புரிஞ்சிருச்சி. இவ ஆபீசுல இருந்து இவ்வளவுதூரம் மத்தியானம் வீட்டுக்கு வர வாய்ப்பே இல்லைன்னு வேற எவளையோ கூட்டிகிட்டு வந்திருக்கிறான் எமிலியோட காதலன்! கேட் கிட்ட இருந்து அவங்க மொழியான செட்சுவானால ஏதேதோ கத்தறான்! எமிலி கிளம்பி போலாம்கறா.

வாழ்க்கையின் மொத்த கனவுகளும், நம்பிக்கைகளும் சிதைந்துபோய் இனம்புரியாத விரக்தி முகம் முழுதும் இருக்க அது வரை ஆசை ஆசையாய் பேசிவத்த அவள் கல்யாண கனவுகளின் நாயகன் அவளை ஏமாற்றிதன் வேதனை, இவனை நம்பியா கடைசிவரை வாழத்துணிந்தோம் என்ற ஏமாற்றம், ஒரு அன்னியனான எனக்கு முன்னால் அவளது கனவுகள் சிதறிப்போனதன் துயரம் எல்லாம் கலந்து பேச வார்த்தைகளற்று ரோட்டை வெறித்தபடி என் தோழி எமிலி. என்ன சொல்வதென்று தெரியாத குழம்பிய மனநிலையில் நான் காரை ஒரு ஓரமாக நிறுத்துகிறேன். பின்னாலிருத்த அவளது நண்பிகள் இருவரும் செட்சுவானாவில் கோபமாக ஏதோ சொல்கிறார்கள். அந்த நிலையிலும் எமிலி "தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்... மொழி தெரியாத ஒருவர் கூட இருக்கும் போது இப்படி பேசிவது நாகரீகமல்ல..." என்று கம்மிய குரலில் மென்மையாக சொல்லுகிறாள். எனக்குள் ஏதோ உடைந்துவிட்டது. வாழ்க்கையில் முதன்முதலாக துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு சினேகிதியின் கைகளை என்னையுமறியாமல் ஆதரவாக பற்றுகிறேன். அவள் இதைத்தான் எதிர்பார்த்தவள் போல என் தோளின்மீது சாய்ந்து கதறி அழுகிறாள். அவளது கண்ணீர் என் சட்டையை நனைக்க அப்போதும் பேச வார்த்தைகளின்றி சாலையை வெறித்தபடி நான். என்ன குறை எமிலிக்கு? பார்க்க நன்றாக இல்லையா? நாகரீகம் இல்லையா? அழகுடன் அன்பும் பண்பும் சேரும்போது பார்க்கும்போதே மனதில் ஒரு மரியாதை தரக்கூடிய தேஜஸுடையவள். இவளிடம் கிடைக்காத எதைத்தேடி அவன் இன்னொருவளிடம் சென்றான்? அதுவும் கல்யாணதேதி குறித்தபிறகு? அனைத்தும் நிறைந்த இவளை இழந்துவிட்டு அவன் வேறு எங்கு எப்படி நன்றாக வாழ்ந்துவிடப்போகிறான்? இந்த அன்பை ஏமாற்றிவிட்டு வேறு எங்கு அவன் மனநிம்மதியோடு இருந்துவிட முடியும்? மனதைத்தைக்கும் கேள்விகளுடன் ஒரு ஆணாக என்மீதே எனக்கு வெறுப்பாக மெதுவாக அலுவலகம் வந்துசேர்ந்தோம். சில நாட்கள் விடுமுறை வேண்டுமென கேட்டுச்சென்றாள் எமிலி.

ஒரே மாசம்தான்! இழந்தவைகளையும், துயரங்களையும் சுத்தமாக துடைத்துவைத்துவிட்டு மீண்டும் அதே எமிலி! அதே உற்சாகமான "துமேலாரா". அதே பண்பான செயல்கள்ன்னு திரும்பவும் எங்கள் எமிலி. அவள் கல்யாணத்தை நிறுத்திவிட்டதாகவும், இப்போது அவனிடன் சேர்ந்துவாழ்வதில்லையெனவும் அவள் நண்பிகளிடம் கேட்டறிந்தேன். அவளிடம் நேரடியாகக்கேட்டிருக்கலாம்தான். ஆனால் மீண்டும் பழய கதையைபேசி அவளே மீண்டு வந்த சோகத்தில் இருந்து மீண்டும் அவளைத்தள்ள எனக்கு திரானியில்லை. முகம் நிறைய சிரிப்புடன் பார்த்துப்பழகிய எமிலி அதே எமிலியாக இருக்கட்டும்.

எப்பொழுதாவது அவளிடமிருந்து இப்பொழுதும் e-Mail வருவதுண்டு. அதுக்கப்புறம் எமிலி டிகிரி முடித்துவிட்டு மேல படிக்க UK போய்விட்டாள். என் கல்யாண போட்டோக்களை பார்த்துவிட்டு ஒரே சந்தோசம் அவளுக்கு. நானும் அப்பா அம்மா பார்த்த பொண்ணையே கல்யாணம் கட்டிக்கிட்டேன்னு ஆச்சரியம்(இல்லைன்னா எனக்கு வேற வழி இல்லைனு அவளுக்கு எங்கே தெரிஞ்சிருக்கப்போகுது :) ). என் பொண்ணுக்கு ஒரு ஃபிராக்கும் குட்டி டெட்டியும் அனுப்பினாள். ஆனா அந்த 100 பியூலாவை மட்டும் என்னைக்கும் திருப்பித்தரமாட்டேன் அப்படின்னு உறுதியா எழுதிட்டாள்!

திங்கள், ஆகஸ்ட் 29, 2005

மனசுக்கு நேர்மையாய்...Image hosted by Photobucket.com

கூரான் அப்படிங்கறதுதான் அவனோட பேருங்க. எனக்கு பத்தாவது படிக்கறதுல இருந்து பழக்கம். அவனுக்கு ஏன் கூரான்னு பட்டப்பேரு வந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது. எங்க காலனி கிரிக்கெட் டீம் பக்கத்து காலனி கிரிக்கெட் டீமோட ஒருமுறை கார்க்பால் பெட்மேட்ச் வைச்சபோது ஆன பழக்கம். அவன் படிச்சதும் எங்க பள்ளிக்கூடத்துலயேதான். நல்லா பேட்ஸ்மேன்னு சொல்ல முடியாதுன்னாலும் காட்டடி மன்னன். மிடில் ஆர்டர்ல இறக்கிவிட்டா குறைஞ்சபட்சம் 25 ரன்னு கேரண்ட்டி! நல்ல கீப்பிங்கும் செய்வான். ஆனா இதையெல்லாம் மிஞ்சி அவன்கிட்ட இருந்த திறமைன்னா ஸ்கோரு ஏத்தறதும், டீமு தோத்தே ஆகனும்ற நிலமைல எதயாவது சொல்லி சண்டை போட்டு மேட்சையே கலைக்கறதுதான். அவன் இருந்தானாவே மேட்சுக்கு 2 சண்டை உறுதி! மேட்சுல தோத்துட்டா ஒரு புது கார்க்பாலை தோத்த டீம் ஜெயிச்ச டீமுக்கு தரனும். அதை கூட சகிச்சுக்கலாம். ஆனா தோத்த டீம் கேப்டன் ஸ்கோர்கார்டுல கையெழுத்து போடனும். அதுதான் தாங்க முடியாத அவமானமா இருக்கும். ஜெயிச்சவனுங்க சுத்தி நிக்க தோத்தவனுங்க மொகத்துல கடுப்போட எதுனால தோத்தோம்னு ஒரு அனாலிசிஸ்ல இருக்க கேப்டன் போய் கையெழுத்து போடனும். போட்டுட்டு திரும்பறதுக்குள்ள ஜெயிச்ச பார்டிங்க ஹோன்னு சவுண்டு விடுவானுங்க. அவமானம் பிடுங்கித்தின்னும்!

அன்னைக்கு மேட்சுல கூரான் டீமுக்கு செம அடி. எங்க ஸ்கோருல பாதி எட்டறதுக்குள்ளயே அவனுங்க டீமுல பாதிபேரு அவுட். கூரான் காட்டடி அடிச்சு ஒரு 36 எடுத்து என்னோட பந்துல குச்சிய பறக்க விட்டுட்டு என்னை மொறச்சிகிட்டே போனான். அந்த காலத்துல எனக்கு அக்ரம்னு தான் பேரு! (யாருங்க அங்க..? இதெல்லாம் ஓவர் அக்கிரமம்னு மொனங்கறது?? ) எவனாவது என்னோட லொட்டாங்கை வேகப்பந்துவீச்சுல க்ளீன்போல்ட் ஆனா அந்த ஸ்டம்பு எவ்வளவு தூரம் போய் விழுந்ததுன்னு அளவெடுக்கறதுதான் பேட்ஸ்மேனை அவமானப்படுத்தறதுக்கான அளவு. கடுங்கோபத்துல வெளியபோன கூரான் நேரா போய் ஸ்கோரு குறிக்கறதுக்கு உட்கார்ந்தான். எப்படியும் தோத்துருவோம்னு தெரிஞ்சதும் ஒவ்வொரு பாலுக்கும் சண்டை! "அது வைடு.. இது நோபாலு.. அம்பயரு சரியில்லை... ஸ்கோரு கம்மியா சொல்லுறீங்க..." இப்படியே போனதுல எங்களுக்கும் கடுப்பாக சடார்னு இந்த மேட்ச் விளையாட மாட்டோம்னு ஸ்டம்பையெல்லாம் புடுங்கிபோட்டுட்டு ஒரே அதகளம்! மேச்சு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பெட்டு வச்ச பாலை அம்பயரு கிட்ட கொடுத்துடனும்கறதால எங்களுக்கு அதுமட்டும் தான் கிடைச்சது. கையெழுத்து போடாமையே மேச்சை கலைச்சுட்டான் பாவிப்பய...

இப்படியே கொஞ்சநாளைக்கு ஒரு நாலைஞ்சு மேட்சுன்னு போனது. தோக்கறதும் ஜெயிக்கறதும் சண்டைபோடறதும்னு அதுபாட்டுக்கு நடந்துகிட்டு இருந்தது. சிங்காநல்லுருல ஒரு டோரணமெண்ட்டு நடக்கதுன்னும் பெரிய பெரிய டீமெல்லாம் அதுல வெளையாடுதுன்னும் நியூசு வந்தப்ப எங்க ரெண்டு டீமையும் ஒன்னா சேர்த்து அந்த டோரணமெண்டுக்கு பேரு குடுத்தோம். திமுக அதிமுக இணைஞ்சா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அன்னைக்கு. அவ்வளவு பாலிடிக்சு. கடைசியா பெரிய டோரணமெண்டுக்கு மட்டும் இந்த டீமுன்னும் மத்தபடி லோக்கல் மேட்சுகளுக்கு பழைய டீமுன்னும் முடிவாச்சு. கூரான் என்னை கண்டிப்பா எடுத்தே ஆகனும்னு பயங்கரமா சப்போர்ட்டு! ரெண்டு பேரும் ஒரே டீமுக்கு வந்தப்புறம் பழைய பகையெல்லாம் "சூமந்திரகாளி"ன்னு காணாமப்போயிடிச்சு. என்ன? முன்னாடி அவன் கூட சண்டை போடுவோம். இப்போ அவனை அடக்கறதுக்கு ரொம்ப செரமப்பட்டோம். அவ்வளவுதான்!

இதுக்கு அப்பறம்தான் கூரான் எனக்கு ரொம்ப பழக்கமானான். அப்பவே வாயில எப்பப்பாரு பான்பராக் போட்டுகிட்டு இருப்பான். தெனமும் வாத்தியாருகிட்ட 2 தடவையாவது அடி வாங்குவான். எவ்வளவு அடி வாங்குனாலும் கைய தொடச்சுகிட்டு சிரிச்சுக்குவான். பள்ளிக்கூடத்துல அவன் பண்ணாத அழும்பு இல்லை! வகுப்புல பொம்பளபுள்ளைங்களை பயமுறுத்தறது, வாட்ச்மேனுக்கு கோட்டரு வாங்கிகுடுத்து நைட்டோட நைட்டா காலாண்டு அரையாண்டு பரிச்சை பேப்பரை உருவரது, மார்க்சீட்டுல கையெழுத்து போடறது, பிட்டு அடிக்கறதுன்னு +2 முடிக்கறவரைக்கும் ஆட்டமான ஆட்டம். ஒவ்வொரு முறை மாட்டும் போதும் அப்பா இல்லாதனால அவனோட அம்மாதான் வந்து ஹெட்மாஸ்டருகிட்ட அழுதுட்டு இவனையும் ரெண்டு மொத்திட்டு போவாங்க. எப்படியோ பிட்டு கிட்டு அடிச்சு +2 முடிச்சு ஆர்ட்சு காலெஜுலயும் சேர்ந்துட்டான். நாங்க கொஞ்சநஞ்சம் அவனுக்கு அப்பப்ப அட்வைசு குடுத்தாலும் எல்லாம் செவுடன் காதுல ஊதுன சங்குதான். அதுசரி. ஒரு லிமிட்டோட நாங்க கூத்து அடிக்கறதால மட்டும் அவனுக்கு அட்வைசு பண்ணற தகுதி எங்களுக்கு வந்துடுமா என்ன? ஆனா இந்த கூத்தடிக்கற விசயத்துல நாங்க எது சொன்னாலும் எண்ணையா வேலைய செஞ்சு முடிப்பான்! ஊட்டிக்கு போலாம்னு பேசுனா போதும். காசை தேத்தறதுல இருந்து, அங்க லாட்ஜ் புக்பண்ணி, சரக்கு வாங்கி, நொறுக்சுங்கள ஒரு பார்சலாவும், சாப்பாடு ஒரு பார்சலாவும் கட்டி சும்மா ஸீரோ டாலரன்ஸ் எரர் ப்ளானோட நிப்பான். நான் இஞ்சினியரிங் படிச்சாலும் வருசத்துல பாதி நாளு எல்லா காலேஜ் கல்சுரல்சுலதான் அட்டனென்சு போடுவேன். கூரானும் நமக்கு துணை. மேடையேறி கலாய்கிறது போக கீழ இருந்து ஆடுற ஆட்டம் இன்னும் அதிகமா இருக்கும். கல்ச்சுரல்ஸ் நடக்கற எல்லா நாளும் தண்ணில தான் இருப்பான். சொன்னாலும் கேக்க மாட்டான். நாங்க நைட்டுல மட்டும் லைட்டா போட்டுகிட்டு சலம்புனா இவன் புல்லா ஏத்திகிட்டு எங்கயாவது எவன்கூடையாவது சண்டைல மாட்டிகிட்டு இருப்பான். ஒரு கல்சுரல்ஸ் இல்லாம அவன் சட்டை கிழிஞ்சு அடிவாங்காம வெளிய வந்ததில்லை! நாங்க ஒன்னா அவன் அடிக்கற ரவுசுகளை பார்த்து கண்ணுல தண்ணிவர சிரிச்சுகிட்டு இருப்போம். இல்லைனா அவனுக்காக பஞ்சாயத்துபேசிக்கிட்டு இருப்போம்.

காலேஜு முடிஞ்சதும் ஒரு ரெண்டு வருசம் சும்மாவே வீட்டுல காசைவாங்கிட்டு தண்ணிய போடறதும் ஊருல எங்கயாவது சண்டை போடறதும்னு வாழ்கைய ஓட்டிகிட்டு இருந்தான். நான் அவன் வீட்டுக்கு போகும்போதெல்லாம் அவன் அம்மா இதையெல்லாம் சொல்லி அழுவாங்க. நாங்க ஏதாவது அவனுக்கு சொல்லப்போனாலே "விடுடா...மாப்ளா.. வாழ்க்கைல இதெல்லாம் ஒரு பிரச்சனையா..?" அப்படின்னு எங்களை அமுக்கிடுவான். நானும் வேளை தேடி சென்னை வந்துட்டதால ஊருக்கு போகும்போதுமட்டும் அவனை பார்த்து பேசற மாதிரி ஆகிடிச்சு. கொஞ்ச நாளு கழிச்சு அவன் ஊருக்கு வெளில ஹைவேஸ்ல குடில் குடிலா போட்டு ஒரு டாபா ஓட்டல் திறக்க பட்டுன்னு பத்திகிச்சு. ஆறே மாசத்துல நல்லா பிக்கப் ஆகிடிச்சு. எங்களுக்கும் இதைகேட்டு ஒரே சந்தோசம். பய உருப்பட்டுட்டான்னு மனசுல ஒரு நிம்மதி. ஆனா எல்லாம் ஒரு 2 வருசத்துக்குதான். கைல நிறைய பணம் புரள 25 வயசுலயே எப்போதும் தண்ணி. எப்பபாரு பான்பராக். எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடும்? கடை சுத்தமா படுத்துடுச்சு! நாங்க சொன்னா கேக்கற நிலைமையெல்லாம் தாண்டி போயிட்டான். எப்பபாரு வீட்டுல காசுகேட்டு சண்டை. தண்ணிய போட்டதும் மெண்டலு மாதிரி ரோட்டுல சண்டை! வயசான அவங்க அம்மா பொறுக்கமுடியாம 20,000 ரூபாய 4பேரு கிட்ட குடுத்து அவனை புல் மப்புல இருக்கறப்ப கூட்டிகிட்டுபோய் ஏர்வாடில ஒரு இடத்துல பைத்தியம்னு சொல்லி காசைக்கட்டி சங்கிலிபோட்டு கட்டி விட்டுட்டு வந்துட்டாங்க! ஒரே வாரம்தான்! பெத்தமனம் பித்துன்றமாதிரி இன்னொரு 20,000 ரூபாய் செலவுபண்ணி கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க... ஒரு வாரத்துக்குள்ள செம அடி அங்க... குடிக்க சரக்கு கேட்டு சண்டைபோட பின்னியெடுத்துட்டாங்க. பெத்த அம்மாவே கொண்டுவந்து அங்க சேர்த்துவிட்டது தெரிஞ்சு சுத்தமா ஆப் ஆகிட்டான்!

இப்பவும் அதே வீட்டுல தான் இருக்கறான். அழுக்கு லுக்கியும் பரட்டை தலையுமா காலைல எழுத்தவுடன் அன்றைய கோட்டா 100 ரூபாய வாங்கிகிட்டு காலைலயே சரக்க அடிச்சுட்டு வீட்டுல சாப்டுகிட்டு இருக்கறான். ஒரே வித்தியாசம் பழையபடி யாரோடவும் சண்டை போடறது இல்லை. யாரைபார்த்தாலும் போதைல "எங்க அம்மாவே என்னை ஏர்வாடில சேர்த்துடாங்க சார்"னு சொல்லி அழுவான். 30 வயசுலயே வாழ்க்கைய மொத்தமா தொலைச்சிட்டு நிக்கறவனை மனசு தாங்காம போன தடவை ஊருக்கு போகும்போது போய் பார்த்தேன். அவனோட அம்மா அழுததை தவிர வேற ஒன்னுமே பேசலை. பேச்சுத்துணைக்குகூட ஆளில்லாம இருந்தவன் என்னை பார்த்ததும் அப்படியே கைய பிடுச்சுகிட்டு அழுதான். ஏர்வாடி கதையெல்லாம் ஒரு வெறுப்போட சொன்னான். பழைய கிரிக்கெட்டு காலேஜு கதையெல்லாம் ஒரு அரைமணிநெரம் சொல்லி சிரிச்சான். என்னால பழையபடி சிரிக்கமுடியலை. அவன் முகத்தையே பார்த்தபடி மையமான அவஸ்தையான சிரிப்போட அவன் சொல்வதை கேட்டபடி இருக்கிறேன்.. "மாப்ள.. உன்னால கூட என்கூட பழையபடி பேசமுடியலை இல்ல...? நான் வாழ்க்கைல தப்புபண்ணி அழிஞ்சவந்தான்... தண்டப்பொறுக்கிதான்.. ஆனா உங்ககூட ஜாலியா இருந்ததெல்லாம் அப்படியே நெனைவிருக்குடா... ஆனா நீங்க மட்டும் உருப்படற வழில போனப்ப என்னைமட்டும் ஏண்டா விட்டுட்டீங்க? நீங்க எல்லாம் சேர்ந்து என்னை கொஞ்சம் அடக்கியிருந்தா நானும் இப்படி ஆகியிருக்க மாட்டேன்ல? " எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மனசு பாரமாகி கொஞ்ச நேரத்துல "ரயிலுக்கு நேரம் ஆயிடிச்சு.. அடுத்தமுறை பாக்கறேன்"னு கிளம்பிட்டேன்.

அன்னைக்கு ராத்திரி சென்னை போற ரயில்ல மனசு போட்டு கொடய தூக்கம் வராம படுத்திருக்கறேன். அவன் சொல்லறதுலையும் உண்மை இருக்குல்ல? என்ன தான் தன்னிரக்கத்துல அவன் சொன்னாலும், தப்புபண்ணி அழிஞ்சவன்னானும் ஒரு காலத்துல நண்பன்னு இருந்தப்ப சந்தோசமான நேரமெல்லாம் அவனோட சேர்ந்து ஆடியிருக்கோம். அவன் தப்பு பண்ணபோதெல்லாம் தள்ளிநின்னு வேடிக்கை பார்த்திருக்கோம். அட்வைசு பண்ணறோம்னு சில கருத்துக்களை சொல்லிட்டு கடமை முடிஞ்சதுன்னு விலகிட்டோம். 10 வருசங்களுக்கு முன்னால் நண்பனாக இருந்தவன் இன்று தூரத்தில் இருந்து எட்டிப்பார்த்து அக்கறை என்ற பெயரில் சில பரிதாபங்களை உதிர்த்துவிட்டு மறந்துவிடும் நிலையில். இதுவா நட்பு? ஒரு காலத்துல நெருங்கிய நண்பனா வாழ்க்கைல ஒருத்தனா இருந்தவன் காலப்போக்குல விலக்கிவிடப்பட வேண்டிய ஒருத்தனா மாறியதற்கு அவன்தான் காரணம்னாலும் அதுல நண்பனாக என்பங்கு எதுவுமே இல்லையா? வாழ்க்கையில் தேவையில்லாத உறவுகளை விலக்குவதற்கு வேலை, கல்யாணம், புள்ளகுட்டின்னு ஆயிரம் சமாதானம் வச்சிருக்கறோம். ஒவ்வொரு காலக்கட்டதிலும் இருக்கும் நிலையான உறவுகள் என்ற நம்பிக்கைகள் வயசாக ஆக கால ஒட்டத்தில் மெல்ல மெல்ல கரைந்து தேய்ந்து அர்த்தமிழந்துபோகிறது. இன்று சுற்றியிருக்கும் நட்புகளும் உறவுகளும் நாளை அதனதன் தேவைகளை பொறுத்து எப்படி மாறப்போகிறதோ? நாலாம் வகுப்பில் அவனில்லாமல் நானில்லை என இருத்த நண்பன் இப்போது இருக்குமிடம் தெரிந்தாலும் நட்பை புதுப்பிக்க தோன்றவில்லை! 5 வருடங்களுக்கு முன் சண்டை போட்டுச்சென்ற மாமாவின் வீட்டு விசேசத்திற்கு போகமுடிவதில்லை. 15 வயதில் பழகிய கூரான் 30 வயதில் முக்கியமில்லை. அந்தந்த வயதின் ஆர்வங்கள் காலப்போக்கில் மாறுவதால் மட்டுமே இப்படியாகிறதா? மனசுக்கு நேர்மையாய் சொல்ல முடியுமா? காலத்திற்கேற்ப மாறுவதுதான் என் சுயமா? இது அயோக்கியத்தனம் இல்லையா? இதுதான் வாழ்க்கையின் இயல்பா? மனசாட்சியின் குடைச்சலில் கண்ணோரம் நீர் கசிய தெரிந்தே தொலைத்த என் சுயங்களைப்பற்றி கவிதை மட்டுமே மனதில் எழுதி தூங்கிப்போகிறேன்.

ம். வாழ்க்கை போய்க்கொண்டுதான் இருக்கிறது. கூரானின் அம்மா நடைபிணமாகவும், அவன் பிணமாவதை நோக்கி நடையாகவும், எனக்கு உறவுகளின் மதிப்புகளும் அதற்கான கடமைகளும் புரியாத, தெரியாத, தெரிந்துகொண்டாலும் காலப்போக்கில் மறக்கவிரும்பும் விதமுமாய்...