வெள்ளி, ஜூன் 15, 2007

சிவாஜி The BOSS - Coooooooooooool ! :)நானெல்லாம் இன்னும் பாபா, சந்திரமுகி பார்க்காத அளவுக்கு ரஜினியின் அதிதீவிர ரசிகன்! அதுபோக நான் ஏன் ரஜினி படங்களை ரசிக்கறேன்னும் ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருக்கறேன். அதனால இந்த பதிவை இவனும் மண்சோறு திங்கற கும்பல்ல இருப்பானோங்கற சந்தேகக் கண்ணோட பார்க்காம இதுவும் இன்னொரு சாதாரண ரசிகக் கண்மணியோடதே அப்படின்னாச்சும் நினைச்சுக்கிட்டு சும்மா ஜாலியா படிங்க! :)

படம் சும்மா சொல்லக் கூடாதுங்க! அடி! அதிரடி!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ரெண்டாம் வரிசை நாயகர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு அடிச்சுக்கிட்டது நினைவுல இருக்குங்களா?! அவங்களுக்கு எல்லாம் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான சேதி என்னன்னா... இன்னும் அடுத்த 10 வருசங்களுக்கு சூப்பர்ஸ்டாராக கனவுலகூட நெனைக்காதீங்கப்பேய்! :) அஞ்சுக்கப்பறம் ஆறு! சிவாஜிக்கப்பறம் யாரு?! உண்மைதானுங்...

ரஜினி மொத சீன்ல "மக்களுக்கு நல்லது செஞ்சேன்!"ங்கறதால ஜெயிலுக்கு உள்ளே வந்தேங்கறதுல இருந்து கடைசிசீன்ல மொட்டைத்தலைல தபேலா வாசிக்கறது வரைக்கும் நான்ஸ்டாப் அசத்தலுங்க. மனுசன் மனசை சும்மா அள்ளிக்கிட்டு போறாரு! அந்த துறுதுறு நடையும் சுறுசுறு டயலாக் டெலிவரியும் இருக்கறவரைக்கும் யாரும் அடிச்சுக்கவே முடியாது போல. நினைச்சுப்பாருங்க! 3 மணிநேர படத்தை கொஞ்சமும் சலிப்படையாம உட்கார்ந்து பார்க்க வைக்கனும்னா அது சாதனைதான்!


ரஜினியிடன் இன்னமும் இளமை இருக்குங்க! அட்டகாசமா லவ்வறாரு! அருமையான ரஜினி ட்ரெண்டு டான்ஸ்சு ஆடறாரு! பைட்டுல சும்மா பறந்து பறந்து அடிக்கறாரு! ஜாலியா அசால்டா காமெடி பண்ணாறாரு! இதைவிட வேற என்ன வேணும்? ஆனா குரல்ல மட்டும் கொஞ்சம் வயசு தெரியுது! விடுங்க... அடுத்த படத்துல அதையும் சரி செஞ்சிடுவாரு! :)


படத்துல ரஜினிக்கு ஜோடி ஸ்ரேயாவா விவேக்கான்னே சந்தேகம் வந்துருது. பாட்டுங்க தவிர மத்த அத்தனை சீன்லயும் கூடவே ஒட்டிக்கிட்டு வர்றாரு. ஆனா சிரிக்கத்தான் முடியலை. விவேக் பீரியடு முடிஞ்சிருச்சா?! பட்டிமன்றம் ராஜா, பாப்பையா அய்யா கூட நல்லா காமெடி செஞ்சிருக்காங்க. இவ்வளவு ஏன்? பல இடங்களில் ரஜினியே தூள் கெளப்பியிருக்காரு. ஆனா விவேக்கு இன்னமும் ட்ரேட்மார்க் பாடிலேங்வேஜ், வசனங்கன்னு ஓவர் டார்ச்சரு. சின்னக்கலைவாணரே... சீக்கிரம் டிராக்கை மாத்துங்க! இதுவரைக்கும் வந்ததுல ரஜினி-கவுண்டரு காம்பினேஷன் தான் டாப்புங்கறது என் எண்ணம். ரஜினிக்கு மட்டுமல்ல... சத்தியராஜ், விஜய், கார்த்திக்னு பலபேருக்கு கவுண்டருதான் அல்டிமேட் காம்பினேஷன்!


ஸ்ரேயா, அம்சமா இருக்காங்க. அழகா இருக்காங்க. அழுகிற காட்சிகளில் கூட அழாம நடிச்சிருக்காங்க. இதுபோக பல இடங்களில் அவர்களது உடுக்கை இடுப்பு மிகப்பிரமாதமாக நடித்திருந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்! ஹிஹி. அம்மணி, இனிமேல் கொஞ்சம் சூதனமா இருந்து அடுத்து இளவட்டப்பயலுகளோட சோடி போட்டு நடிங்க. இல்லாம அடுத்ததா சரத்குமாரு, விஜயகாந்துன்னு முன்னனி ஹீரோக்களோட மட்டும்தான் நடிப்பேன்னு ஏதாவது மார்க்கெட்டு வேல்யூ காட்டனீங்கன்னா, அப்பறம் அடுத்த "மீனா"வாக ஆகறதுக்கு பிரகாசமான வாய்ப்புகள் அதிகம்!


பாப்பையா பொண்ணுங்க அங்கவையும் சங்கவையும் என்ன மாதிரியான காமெடியோ? சங்கருக்கும் சுஜாதாவுக்குமே வெளிச்சம்! மெயின் வில்லன் சுமனுக்கு நல்ல தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சீக்கிரமே "காதல்" தண்டபாணியின் இடத்தை பிடிப்பார்! அவ்வளவு திறமை காட்டியிருக்கிறார்! சிறிது காலத்துக்கு முன் "அகில இந்திய ரசிகர் மன்றம்" கண்ட மெட்டிஒலி போஸ் வெங்கட் சுமனுக்கு அடியாளாக வருகிறார். அவ்வளவு வளர்ச்சி! :) அதேபோல, சைடு வில்லன் மாயாண்டி பேய்க்காமனின் திரைத்துறை வளர்ச்சி அவரது இடுப்பளவில் தெரிகிறது!

ரஜினிக்கு காமெடிங்கறது வெகு இயல்பா வருங்கறது பல இடங்களில் பளிச்! பேர்&லவ்லி போட்டுக்கிட்டு "நான் கமலஹாசன் மாதிரி ஆயிருவேன்"கறதும், "மாமா! என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலியே"ங்கறதும், ஸ்ரேயா வீட்டுக்காரங்க கூட "பழகிப் பழகி" வெளையாடறதும், வேண்டாங்க... விளக்க முடியாது. நீங்களே பார்த்து ரசிங்க! கமல் ரஜினி மாதிரி டான்ஸ் ஆடறது நடக்குதோ இல்லையோ ரஜினி கமல் மாதிரி ஆடறது நடந்திருச்சு! கூடவே கொசுறா சிவாஜி, எம்ஜியாரு டான்சும்!!! சென்னைல விசில் பறந்திருக்கும். இங்க நான் மட்டும் சிரிச்சுக்கிட்டேன்!

ரஹ்மான் பாட்டெல்லாம் மொதல்ல கேக்கறப்ப அவ்வளவா பிடிபடாது. ஆனா படத்தோட பார்க்கறப்ப ஒரு தூக்கு தூக்கிறும். ரஜினிக்கு கேக்கனுமா?! சன்லைட் பாட்டுலயும் அதிரடி பாட்டுலயும் சும்மா வெளுத்து வாங்கிட்டாய்ங்க! ஆனாலும் சங்கர் இந்த செட்டு போடறதையும் கிராபிக்ஸு வைக்கறதையும் என்னைக்குத்தான் நிறுத்தப் போறாரோ?! பல இடங்களில் அபத்தமா பல்லை இளிக்குது! இம்மாம் பெரிய டைரக்டருக்கு பாடல் காட்சிகளில் மட்டும் பயங்கறமா கற்பனை வறட்சி. மொத பாட்டுக்கு தொப்பைல ரஜினிபடம் வரைஞ்சுக்கிட்டு 50 பேரு ஆடறாங்க... சகிக்கலை! ( ஆனா அதே பாட்டுல நயன்தாரா... ஹிஹி... )


படத்துல எனக்கு பிடிக்காத ஒரே விசயம் அந்த பிரமாண்டம் தாங்க! வீட்டுல வடை சுட்டாலும் 50 ஐய்ட்டம் போடறாங்க. சண்டை போட்டலும் 100 கிட்டாரை ஒடைக்கறாங்க. பல இடங்களில் காசை வீணாக்கறது தெரியனும்னே வீணாக்கியிருக்காங்க. AVM சரவணன் சங்கரோட இந்த இம்சையை வழக்கம்போல கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்திருப்பாரு போல! நல்ல பாட்டுக்கு திராபையா ஒரு கண்ணாடி மாளிகை கட்டி அதுல நடனநங்கைகளுக்கு இறக்கைக மாட்டி விசிறிக்க வைக்கறாங்க. ரஜினிங்கற பிரமாண்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் பல இடங்களில் எடுபடவே இல்லை. "காதலின் தீபம் ஒன்று.." அப்படின்னு சிம்ப்பிளா அருமையா அழகா பாடி மக்க மனசுல இடம்பிடிச்சவருக்கு டூயட் பாட்டுக்கு 2 கோடி ரூபாய் கண்ணாடி செட்டுங்க அப்படிங்கறது எல்லாம் சந்தனக்கட்டைமேல பாடிஸ்பிரே அடிச்சா மாதிரி! ( படத்துல ரஜினி ஓட்டற கறுப்பு டொயொட்டா 4X4 சங்கரோடதாம். ஆனா கார் சேஸ் பைட்டு சீன்ல மட்டும் அதை வெவரமா கறுப்பு ஸ்கார்பியோவா மாத்திட்டாரு! இந்த வெவரம் ப்ரொடியூசரு காசை கரைக்கதுலயும் இருக்கனும்ல?! )


சங்கரு அடுத்த படத்துக்கு எப்படியும் 3 மாசத்துக்கு ரூம்போட்டு யோசிக்கனும். சமுதாய அவலங்களை தேடிக் கண்டுபுடிச்சு அதை கோடிகோடியா மார்க்கெட்டு பண்ணறதுன்னா சும்மாவா?! இதே ரேஞ்சுல போனா அடுத்தது சினிமாவால சீரழியற தமிழகத்தை ஹீரோ எப்படி பிரம்மாண்டமாய் போராடி காப்பாத்தறாருங்க சொ.செ.சூல போய் முடியக்கூடும்!

இவ்வளவு சொன்னயே? கதைய சொல்லலியேன்னா கேக்கறீங்க? போங்க சார்... சும்மா தமாசு பண்ணாதீங்க! லட்டு சாப்பிடறப்ப முந்திரிப்பருப்பு கிடைக்கலைனாலும் இனிக்காமயா போயிரும்? :)

அதனால,

ரஜினி ஒரு கன்னடர்... வட்டாள் நாகராஜோட கூட்டாளி... அவர் படங்களை புறக்கணிப்போம் என்பவர்களும்...

60 வயசு தாத்தாக்கு 20 வயசு ஹீரோயினா என வெள்ளித்திரையில் பெண்ணீயம் தேடியபடி உள்குத்து பதிவுகள் போடுபவர்களும்...

கட்டவுட்டுக்கு பால் ஊத்தற ரசிகர்களை கரித்துக்கொட்டும் சமுதாய அக்கறை கொண்ட சிந்தனையாளர்களும்...

ரஜினி எப்படி தமிழக பொருளாதாரத்தை அடியோடு சுரண்டி அதை அப்படியே கர்நாடகாவுக்கு கொண்டுபோய் அங்கே சொர்க்கபூமியாக மாற்றியிருக்கிறார் என வருத்தப்படும் பிராந்திய பொருளாதார நிபுணர்களும்...

இவரெல்லாம் என்னாத்த நடிக்கறாரு.. சும்மா பன்ச்சு டயலாக்கெல்லாம் ஒரு நடிப்பா.. இந்தாளுக்கு எதுக்கு இத்தனை சம்பளம்.. எதுக்கு இவருபின்னாடி இத்தனை ரசிகருக்கு என வருத்தப்படும் தமிழ்க்கலையுலகம் காக்கவந்த கலைத்தாயின் மூத்த புதல்வர்களும்...

ரசிகர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆசைகளை தூவி குளிர்காய்கிறார் என்று வருங்கால தமிழகத்தின் அரசியலை வழிநடத்தும் கவலைகளோடு இருப்பவர்களும்...

மேற்சொன்ன எல்லாத்தையும் ஒரு 3 மணிநேரம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு சும்மா ஜாலியா குடும்பத்தோட சிவாஜிக்கு போயிட்டு வாங்க மக்கா! எண்டெர்டெயின்மெண்ட்டு 110% கேரண்டி!!!

அதெல்லாம் முடியாது.. நாங்க கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம் அப்படின்னு உறுதியா இருந்தாலும்... ஒன்னும் நட்டமில்லை..

Coooooooooool !!! :)

செவ்வாய், ஜூன் 05, 2007

வென்றுவாடி என் மகளே!

ன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை! என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம கொசுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன்! அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா! ஹிம்! காலம் போற வேகத்துல...

இந்த இனியநாள் இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா? தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா? சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை! :( என்னால முடிஞ்சது அவளுக்கான இந்த பதிவுதான்!போய்வாடி என் மகளே!
நம்வாழ்வை மொக்கையாக்க
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

கூட இருக்கத்தான் ஆசப்பட்டோம்...

கள்ளநோட்டு கும்பலுக்கு
"வலைவீச" போனதால
எங்கப்பனுக்கு முடியல

துரைமாரு நாட்டுக்கு
ஆணிபிடுங்க வந்ததால
உங்கப்பனுக்கு முடியலவெற்றிச் சிரிப்போட
எங்கப்பாரு
தினத்தந்தில வந்தாக

வெட்டிப் பதிவராக
உங்கப்பாரு
பதிவுலகில் வந்திருக்கேன்

கவலைப்படாதேயெங் கண்ணு!

எங்கம்மாவோட அப்பாரு
எங்கூட வந்தாக
உங்கம்மாவோட அப்பாரு
உங்கூட வர்றாக

என்னைக்கும் இதே கததான்!
அப்பனுங்க கதையெல்லாம்
வெறும் வாயோடு
வெளையாட்டு!ஏபி சீடியும்
ஏப்ளஸ்பி ஹோல்ஸ்கொயரும்
இதமாத்தான் நீ படிக்க
எழுதி இருக்காக
என்பதுகிலோ புத்தகங்க

அத்தனையும் தெனம் சுமக்க
ஆசைப்படுறேன் இந்த அப்பா
படிச்சுக் கிழிக்க அல்ல
மூட்டை தூக்கியேனும்
நீ பெறவேண்டும்
உடலுறுதி
வாங்கித்தாரேன் ஹார்லிக்சு

வேற வழியில்ல கண்ணம்மா...

பப்பிஷேம் ஊருக்குள்ள
ஜட்டிபோட்டவன் லூசுப்பய
ஒம்பது டு அஞ்சுக்குள்ள
படிப்பையெல்லாம் முடிச்சுவிடு
அதன் பெறகும் படிச்சன்னா
அப்பாவுக்கு மூடவுட்டுதோள்மீது உனைத்தூக்கி
மெரீனாபீச்சு கூட்டிப்போறேன்
அடையாறு சிக்னலிலே
மொளகாபஜ்ஜி வாங்கித்தாரேன்

வாரத்துல நாலுமுறை
புதுகாமிக்சு உனக்குண்டு
டென்னிஸோ உதைபந்தோ
கைதட்ட நானிருக்கேன்
"ஒரு குடம் தண்ணியூத்தி"
வெளையாட்டு சொல்லித்தாரேன்
"ரிங்கா ரிங்கா ரோசஸு"
உங்கிட்ட கத்துக்கறேன்


பாடங்க அத்தனையும்
மண்டைக்குள் அனுப்பிக்க
மனுசங்க அனைவரையும்
மனசுக்குள் ஏத்திக்க

பாடங்க நீ படிக்க
உங்கம்மா
ஸ்கேலோட காத்திருக்கா
அவகிட்ட நான் படிச்ச
உலகம்னு ஒன்றுண்டு
கருத்தாக படிச்சுக்க
உங்கப்பா
உவப்போடு சொல்லித்தாரேன்காக்கா கடிபோட்டு
ஃப்ரெண்டுங்க புடிச்சுக்க
அல்லாவும் ஜீசசும்
எதிரியில்ல தெரிஞ்சுக்க

கீழே விழுகயில
சிரிச்ச மொகத்தோட
நீயாவே எழுந்துக்க
அடுத்தவனைக் கைகாட்டி
அழுது புலம்பறது
ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க

உலக உருண்டையிலே
ஒருபக்கம் நானிருக்கேன்
உன்னை
உருவாக்கும் உலகத்தின்
வாசப்படியில் நீயிருக்க

காலாண்டுப் பரிச்சைக்குள்ள
கலர்பென்சிலோட நான் வாரேன்
ரெண்டுபேரும் சோடிபோட்டு
உன் கனவுகளுக்கு
கலர் அடிப்போம்

போய்வாடி என் மகளே!
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

================
படங்கள் உதவி: http://www.pluk.org/FS1.html