வியாழன், அக்டோபர் 30, 2008

காரைக்குடியில் இருந்து சில படங்கள்

போனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா!”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை! ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை! :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு...சுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை.

”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர்

இன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி இளையராஜா “சுவாமி”கள்
"Pongal" after Deepavali


”வீடுகளில் தங்குகிறோமோ இல்லையோ, சில வீடுகள் நம்முள் தங்கிவிடுகின்றன” - தனது வீடு பற்றிய கவிதை பற்றி மாலன்

நண்பனின் வீடு
"Pongal" after Deepavali


“வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள் காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள்?” - குண்டலகேசி

இதான் ஆயிரம் ஜன்னல் வீடுன்னு நினைக்கறேன்! ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல.
"Pongal" after Deepavali


“இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்” -வைரமுத்து

கருவியப்பட்டி கோவில்
"Pongal" after Deepavali


”வார்த்தையின் பள்ளத்தில்
அர்த்த கடல் விழுந்து
வீணாகிறது.
மிச்சமாய் நிற்பவை
வார்த்தைக்கான அர்த்தங்கள்!
எங்கே தேடுவேன்
அர்த்தங்களுக்கான வார்த்தைகளை?

வாழக்கை படிகளில்
சறுக்கி விழுந்தாலும் ஒரு படி
மேலே தான் விழுவோம்
விழுதலில் தவறில்லை! ” - இலக்குவனார்.

குன்றக்குடி கோவில்
"Pongal" after Deepavali


”புத்தகங்கள்
காசுக்கு வாங்கிய தண்ணீர்
அரைகுறை ஆடை அழகி
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
புத்தரின் கண்
எப்போதும் என்னைப் பார்த்திருக்க
இரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக
கிடக்கிறது என் உடல்” - மேன்ஷன் கவிதைகள், பவுத்த அய்யனார்.

பிள்ளையார்பட்டி கோவில்
"Pongal" after Deepavali


”எத்தனை பேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்.” - செ. ஆடலரசன்.

தேரும் குளமும்
"Pongal" after Deepavali


”நாடகம் போலிருக்கிறது. உள்ளே போனாள். முகம் கழுவினாள். பூத்த மலர் போலும் எப்படி வேறு கோலம் பூண்டுவிட்டாள்! பெண்கள் கனவு-தேவதைகள்தான்! குட்டிப் பெண்ணாய்ச் சுட்டிப் பெண்ணாய் மின்னல்போலும் நுழைந்தவள். பெண்ணின் குழைவுகளும் நளினங்களும் மேல்மட்டம் வந்திருந்தன. சுடிதார் களைந்து இப்போது, பட்டுப்புடவை. கூந்தலில் பொங்கிச் சிரித்துக் கிடந்தது மல்லிகை. செடி இடம் மாறிவிட்டாப் போல.” - மோகனம் - எஸ். ஷங்கரநாராயணன்

மொட்டும் மலரும்
"Pongal" after Deepavali

”வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் வாழ்ந்து பார்க்கும் மனிதர்களைப் படம் பிடிக்கப் போகிறோம், இந்தப் புகைப்படத்தில். - ராஜேஷ்லிங்கம், இயக்குனர்-புகைப்படம்

சம்பிரதாயமாக புகைப்படமெடுப்பது எப்படி? :)
"Pongal" after Deepavali

செவ்வாய், அக்டோபர் 28, 2008

தீபாவளியின் பின்னிரவில் ’பொங்கல்’

தெருவோர திருப்பத்தில் ஒத்தை விளக்கு. சூழும் பனியில் மோதி உருகிவழியும் வெளிச்சம். 10 மணிக்கு மேலாக வெளிச்சமும் இருட்டும் முயங்கும் இப்படியாப்பட்ட இடத்தில் பைக்குகளை நிறுத்தி டாங்குமேல படுத்துக்கிட்டோ சீட்டுல சாஞ்சுக்கிட்டோ ஒலக நிகழ்வுகளையெல்லாம் எங்கள் அறிவுமுதிர்ச்சியெனும் எல்லை வகுத்துத்தந்த அவரவர் அளவுகோள்களோடு பொங்கித்தீர்த்த வயசு! தாவணிகளின் சிக்னல்களுக்கு அர்த்தங்களும் அப்பன்களின் அன்புஇம்சைகளுக்கு ஆறுதலும் அரியர்களை தண்டிவர கம்புசுத்தும் பார்முலாக்களுமாக மணித்துளிகள் கரைந்த பொழுதுகள். அதாச்சு 15 வருசம்!

நேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள். அங்கேயே தேங்கிவிடாமல் தாண்டிவந்த தெம்பு கொடுக்கும் தெகிரியத்தில் அன்றைய இத்துப்போன செயல்களெல்லாம் இன்று பெருமையாக சொல்லிக்கிறபடி மாறி நிற்கும் மேஜிக். பிரம்மச்சாரிகளின் கும்பலில் இருந்து ஒவ்வொருவராக கல்யாணமாகி குடும்பிகளாகி புள்ளைக்குட்டிகளோடு இருக்கும் மாறிப்போன ஒரு மனநிலையில் ஒரு பிரம்மச்சாரிகளின் கும்பலைக் காணு நேரும் பாலகுமாரனின் பெயர் மறந்துபோன சிறுகதையொன்று மனதில் ஓடவிட்ட ஒரு தருணம். சராசரிகளின் வாழ்க்கையும் ரசமானதுதான் போல. அந்தந்த கட்டத்தில் அப்படியப்படி இருந்துவிட்டால்! :)

Flickr:

"Pongal" after Deepavali

Google Pages:

"Pongal" after Deepavali

செவ்வாய், அக்டோபர் 14, 2008

குலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி

மீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா! வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா! ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன், ராம்கோ வினோத், பிரமிட் வினோத், கோகுல், கவுஜர் லக்குவனார், நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போயிருமோன்னு பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் இந்தமாதிரி அருமையான மக்காகூட ஜமாபோட்டு ஊரு சுத்தவாவது கொஞ்சநாளைக்கு இத்துல ஒட்டிக்கனும்னு இருக்கேன் :)

அடடா! எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மனிதசக்தி கொப்பளித்து பிரவகிக்கும் கூட்டங்களைக் கண்டு? ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத(?!) ”டண்டணக்கர டண்டணக்கர...”. கலக்கறாங்கைய்யா. 10 நாளைக்கு குலசை முத்தாம்மனுக்கு வேண்டிகிட்டு விரதம். விதவிதமான வேடத்துல ஊர்மக்களிடம் கையேந்துதல். 10வது நாளைக்கு குழுகுழுவா கூடி குலசைக்கு ஆட்டத்துடன் பயணம். கையேந்திக்கிடைத்த காணிக்கையை கோயிலில் செழுத்திவிட்டு கடல்ல குளியல். அங்கயே சமைச்சு சாப்டுட்டு ராத்திரி நடக்கற சூரசம்காரத்தில் பக்திப்பரவசத்துடன் கலந்துக்கிட்டு வேசம் கலைச்சு ஊருக்கு போய்ச்சேர்றது. இதேன் அவங்க ப்ளானு. சும்மா சொல்லக்கூடாது. வருசமெல்லாம் பொழ்ப்பு எப்படியோ... ஆனா இந்த 10 நாளுக்கு வாழ்க்கைய அனுபவிக்கறாங்கய்யா அனுபவிக்கறாய்ங்க!
புயலுக்கு முன் அமைதி. முத்தாரம்மன் கோவிலின் முதன்மைத்தெரு... இதுவழியாத்தான் 5 லட்சம் மக்கா போனாங்கன்னா நம்புவீகளா?!

Koil_Street


நல்லநாளும் அதுவுமா சீக்கிரம் எந்திரிச்சு குளிக்காம தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி? முழிச்சுக்கடி என் புஜ்ஜிக்குட்டி...

Kid_Cat


குறத்தி மகள்கள்

Kurathi_Magal


ச்சே! ஒருத்தன் தனித்துவமா இருந்தா விடமாட்டீங்களே! என்னையும் திரு(ப்பி/த்தி)த் தொலைங்கப்பு!

Thanithuvamanavan


செய்வன திருந்தச் செய்!

Perfection


இந்த வருசக்குளியல் முடிஞ்சதுங்கப்பேய்...
After_Bath


மொதல்ல Sea Bath... பெறகு Sand Bath அப்புறந்தேன் Sun Bath... கலராயிடுவம்ல!

Sand_Bath


மணப்பாடு கோவில்

Manappadu Church


வேண்டுதல்னு வந்துட்டா எம்புட்டு கஷ்டம்னாலும் தாங்குவம்ல!
16Feet_Vel


கண்ணேறு காக்கப்போகும் கரும்புள்ளி

Tirushti_Pottu


அடடா! ஊருக்குள்ள வந்ததுல இருந்து இவனுங்க இம்சை தாங்கல. அவனவனுக்கு ஒளிஓவியனுங்கனு நெனப்பு. ஒரு திருகாணி மாட்ட விடுதாய்ங்களா?!
Model_Cameramen


ஆட்டத்தை ரசிக்கவில்லே... ஆளேத்தான் பார்க்குது...

Hide_See


தில்லானாவும் மோகனாம்பாளும்

ThillanaIts payback time! ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா

Payback_Time


வருசத்துக்கு ஒருக்கா ச்சான்சு.. அம்புட்டையும் ஒரேராத்திரில வித்துப்புடனும்...

Kadalai_VAndi


வேண்டுதலுக்குன்னு சில வேசங்க. ஆழ்மன ஆசைகளை நிவர்த்திக்கன்னு சில வேசங்க. பத்ரகாளி, குறவன், ராப்பிச்சை, பைத்தியம், போலீஸ், கெழவி, அனுமாருன்னு ஆயிரக்கணக்கா வேசங்க.

அகந்தை அழியவேண்டி பைத்தியக்கார வேடம்.

Rappichai


இன்னொரு ஆச்சரியமான மேட்டரு பொம்பள வேசம்! புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு! :) அந்தக்காலத்துலதான் மனுசன் யோசிச்சிருக்கான்யா!

”நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றாகவில்லை என்றால் , நாம் இறைவனை உணர முடியாது. ஒருமைதான் ஒருமையை அறியும்” - இ.சி.நே - கவிக்கோ.

குழந்தைகள் பெண்கள் மற்றும் பெண்கள்

Cross_Dressingஎலே.. ராஜா உத்தரவாகவே இருக்கட்டும். அதுக்காக பத்தவைக்காத தம்முக்கு எப்படில பைன் போடுவ?

King_Thum


சேர்ப்பித்த தீச்சட்டிகளும் சீர்செய்யும் சிறுவனும்

Theechati_Boy


கடற்கரை சூரசம்ஹார திடலில் ஆடி சாமிகும்பிட்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் மக்கள் கடலின் நடுவில் ஒரு இ.ம.மு பிரமுகர் பேச்சு. பறையர் பள்ளர் வரலாற்றுச்சிறப்புகளை எடுத்துச்சொல்லி “சாதிபார்த்தா நாம் இம்புட்டுபேரும் குழுமியிருக்கோம்?”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான்! கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல! நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா?! சரியாத்தான் தொழில் செய்யறாங்க. ஆனாலும் ஒரு சந்தோஷம். ஒரு விசிலோ கைத்தட்டலோ இல்லாம மக்கள் மகா அமைதியா இருந்தாங்க. கவனமெல்லாம் நைட்டு சரியா 12 மணிக்கு நடக்கப்போகும் சூரசம்ஹரத்துக்காக வெயிட்டிங். 15 நிமிசம் இத்த பேசியும் எடுபடலைன்ன ஒடனே அப்படியே ட்ராக் மாறி “நாம் இங்கே மற்ற மதத்தினை விமர்சனம் செய்ய வரவில்லை.. இந்து மதத்தின் பெருமையை... “

ம்ம்ம்... இந்த வருசம் மக்கா அமைதியா கேக்காக. அடுத்தவருசம் கைத்தட்டுவாங்க. அதுக்கடுத்த வருசம் கொரளு விடுவாங்க. அடுத்தது... இந்துமதம் காக்க என்னே ஒரு லட்சியப்பாதை! விநாயகரு சதுர்த்திக்கு ஆன நிலைமை குலசை தசராவுக்குமான்னு மனசு கருக்குங்குது!

சரி விடுங்கப்பு. மனம் கவரும் குலசை முத்தாரம்மன் கண்டு மனம் குளிருங்க :)

Mutharamman