முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளியின் பின்னிரவில் ’பொங்கல்’

தெருவோர திருப்பத்தில் ஒத்தை விளக்கு. சூழும் பனியில் மோதி உருகிவழியும் வெளிச்சம். 10 மணிக்கு மேலாக வெளிச்சமும் இருட்டும் முயங்கும் இப்படியாப்பட்ட இடத்தில் பைக்குகளை நிறுத்தி டாங்குமேல படுத்துக்கிட்டோ சீட்டுல சாஞ்சுக்கிட்டோ ஒலக நிகழ்வுகளையெல்லாம் எங்கள் அறிவுமுதிர்ச்சியெனும் எல்லை வகுத்துத்தந்த அவரவர் அளவுகோள்களோடு பொங்கித்தீர்த்த வயசு! தாவணிகளின் சிக்னல்களுக்கு அர்த்தங்களும் அப்பன்களின் அன்புஇம்சைகளுக்கு ஆறுதலும் அரியர்களை தண்டிவர கம்புசுத்தும் பார்முலாக்களுமாக மணித்துளிகள் கரைந்த பொழுதுகள். அதாச்சு 15 வருசம்!

நேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள். அங்கேயே தேங்கிவிடாமல் தாண்டிவந்த தெம்பு கொடுக்கும் தெகிரியத்தில் அன்றைய இத்துப்போன செயல்களெல்லாம் இன்று பெருமையாக சொல்லிக்கிறபடி மாறி நிற்கும் மேஜிக். பிரம்மச்சாரிகளின் கும்பலில் இருந்து ஒவ்வொருவராக கல்யாணமாகி குடும்பிகளாகி புள்ளைக்குட்டிகளோடு இருக்கும் மாறிப்போன ஒரு மனநிலையில் ஒரு பிரம்மச்சாரிகளின் கும்பலைக் காணு நேரும் பாலகுமாரனின் பெயர் மறந்துபோன சிறுகதையொன்று மனதில் ஓடவிட்ட ஒரு தருணம். சராசரிகளின் வாழ்க்கையும் ரசமானதுதான் போல. அந்தந்த கட்டத்தில் அப்படியப்படி இருந்துவிட்டால்! :)

Flickr:

"Pongal" after Deepavali

Google Pages:

"Pongal" after Deepavali

கருத்துகள்

 1. மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்,அந்த பாலகுமாரன் கதை எனக்கும் மிகவும் பிடிக்கும்.
  கொஞ்சம் நேரம் கழித்து எப்படியும் ஞாபகம் வரும் சொல்கிறேன்
  photo சூப்பர்

  பதிலளிநீக்கு
 2. எதிர்ப்பக்கம் என்று நினைக்கிறேன் சரியா??

  பதிலளிநீக்கு
 3. சூப்பர். சூப்பர். எப்படியோ யூத்தாக இருப்பதால் நீங்கள் சொல்லும் விஷயங்களை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்க முடிகிறது. நாளைக்கு எனக்கும் கண்ணாலம் காட்சி ஆகிவிட்டால் உங்களை போல தான் புலம்பிக் கொண்டிருப்பேனோ என்னவோ? :-(

  பதிவின் லேபிள் TRAVEL PHOTOGRAPHY என்றிருக்கிறது. சீக்கிரமாக TRAVEL PORNOGRAPHY என்றொரு லேபிளிட்டு பதிவிடுவீர்கள் என்று ஆவலோடும், வெறியோடும், தாகத்தோடும் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. பாபு,

  // எதிர்ப்பக்கம் என்று நினைக்கிறேன் சரியா??//

  அந்தக்கதையின் பெயர் இன்னும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால் கதை அப்படியே நியாபகம் இருக்கிறது :) தகவலுக்கு நன்றி.

  லக்கியாரே,

  // நாளைக்கு எனக்கும் கண்ணாலம் காட்சி ஆகிவிட்டால் //

  இன்னுமா உங்களை ஊரு நம்புது?! :)
  மேற்கண்ட ’இந்தச்’செய்தி வெளிவருமுன் ’அந்தச்’செய்தி வெளிவந்துவிட்டால் உம்ம பாடு என்னாவது? :)

  // சீக்கிரமாக TRAVEL PORNOGRAPHY என்றொரு லேபிளிட்டு பதிவிடுவீர்கள் என்று ஆவலோடும், வெறியோடும், தாகத்தோடும் காத்திருக்கிறேன். //

  அதாகப்பட்டது என்னைய உள்ள போடறதுக்கு எவிடென்ஸ் கேக்கறீங்க! நல்லாருங்கப்பு :) ஆமாம். ஜோதி தியேட்டருக்கு செல்வதெல்லாம் பயணங்களின் கீழ் வராதா?!

  பதிலளிநீக்கு
 5. மிகவும் ஆச்சரியமான மனிதர் நிங்கள்...மனதில் தோன்றியதை மிகவும் எளிதாக வார்தையாக வடிவமைப்பது உமக்கு மிக அருமையாக வருகிறது...நிறைய எழுத முயற்சிக்கவும்...நேரம் கிடைக்கும் பட்சத்தில்...

  பதிலளிநீக்கு
 6. //// சீக்கிரமாக TRAVEL PORNOGRAPHY என்றொரு லேபிளிட்டு பதிவிடுவீர்கள் என்று ஆவலோடும், வெறியோடும், தாகத்தோடும் காத்திருக்கிறேன். //

  நாங்களும் அவ்வண்ணமே கோரும்,
  ஏழைகள்!

  பதிலளிநீக்கு
 7. அருமையான கதையொன்றை நினைவூட்டி விட்டீர்கள் இளவஞ்சி! நானும் மனசுக்குள்ளேயே அந்த'க் கதையை ஓட்டிப்பார்த்தேன்!

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 8. சான்ஸே இல்லை இளவஞ்சி.. அருமையான படம். இதையெல்லாம் பார்க்கும்போது கேமிராவை கையில் எடுக்கவே கூச்சமாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 9. ஆயில்யன், சிரிதரன், சிபியாரே,

  டாங்ஸ்! :)

  ஏ,சி,

  நீர் ஒருத்தருதான் பாக்கி! :)


  வெண்பூ,

  இதெல்லாம் ஓவரு ஆமா! :) நானெல்லாம் பட்டைய கெளப்பற PIT கூட கத்துக்கற ஆளுதான்.

  பதிலளிநீக்கு
 10. இன்னும் உங்க கும்பலில் சேரவில்லை என்றாலும் பதிவு கலக்கல் ஆசானே ;))

  படம் வழக்கம் போல் நச்னு இருக்கு ;))

  பதிலளிநீக்கு
 11. கோபி,

  ஊக்கங்களுக்கு நன்றி! :)

  தெய்வா,

  // antha kathai "seval pannai" thane? // சேவல் பண்ணை ஒரு குறுநாவல். நாஞ்சொல்லறது ஒரு சிறுகதை. கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கும் நண்பனுடனான செல்லச்சண்டையில் ஆரம்பிக்கும் கதை. உறுதியாத்தெரியும் வரைக்கும் இப்போதைக்கு அது பாபு சொன்ன எதிர்ப்பக்கம் தான்! :)

  பதிலளிநீக்கு
 12. //நேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்று ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள்//

  சான்ஸே இல்லை வாத்தியாரே...என்னமா எழுதிருக்கீங்க? படமும் கலக்கல்ஸ் ஆஃப் தி வர்ல்டு. அழகா ரசிச்சு படம் புடிச்சிருக்கறதை நானும் ரசிச்சேன்.

  பதிலளிநீக்கு
 13. படம் வரைஞ்சு பாகம் குறிப்பாங்க. நீங்க மட்டும்தான் படம் போட்டு கதைச் சொல்றீங்க..

  பதிலளிநீக்கு
 14. பாலைவனச்சோலை படம் பார்த்திருக்கிறியளா?(1981)

  இப்படி ஒரு காட்சியுடன்தான் படம் முடிவடையும்.

  - தீவு -

  பதிலளிநீக்கு
 15. //ஒரு பிரம்மச்சாரிகளின் கும்பலைக் காணு நேரும் பாலகுமாரனின் பெயர் மறந்துபோன சிறுகதையொன்று //

  mylapore luz corner pillaiyar koilil aarambikkum balakumaranin kadhai ondru ninaivukku varukiradhu. adhu sirukadhai alla.

  பதிலளிநீக்கு
 16. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள்.” :)

  தீபாவளிக்கு முதநா ராத்திரி ஒரு சகாவோட ஊர்ல உலா போனப்போ ஒரு கும்பல் மாட்டிகிச்சு.. உங்களுக்கு கிடைக்காத சான்ஸு எனக்கு கிடைச்சு.. பொங்கி தள்ளிட்டமல்லா.. (இனிமேல் நம்மள கண்டாலே பயலுக எஸ் தான்)

  பதிலளிநீக்கு
 17. கைப்ஸ் , இளா,

  டாங்ஸ்னேன்.

  தீவு,

  // இப்படி ஒரு காட்சியுடன்தான் படம் முடிவடையும். // அடடா.. என்னை இப்படி திரைப்பட ஒளிப்பதிவாளர் ரேஞ்சுக்கு வைச்சு.. போங்கன்னே! வெக்கமா இருக்கு! :)

  லக்கி,

  அதேதான். திரும்பவும் யோசிச்சா கதை கொஞ்சம் நீளமா படிச்சமாதிரிதான் இருக்கு! குறுநாவலா இருக்குமோ?! :)

  ராசா,

  // பொங்கி தள்ளிட்டமல்லா.. (இனிமேல் நம்மள கண்டாலே பயலுக எஸ் தான்) // உமக்கென்னைய்யா?! என்றும் பதினாறு! உம்ம கூட பொங்கறதுக்கு கொடுத்து வைச்சிருக்கனுமே! :)

  பதிலளிநீக்கு
 18. ஆளாளுக்கு கதை கதைன்னுறீங்க... யாராச்சும் தேடி எடுத்துப் போடுங்க மக்கா! படமும் கருத்தும் அருமை தொழர்... வாழ்த்துகள்...
  எங்க செட்டில் கேபி-யும், ஆரெக்ஸ்-உம் இல்லை என்றாலும்,, அவற்றை எங்கள் தந்தைகள் தந்த மிதிவண்டிகள் நிரப்பி இருந்தன. இப்போதான் அந்தப் பருவத்தைக் கடந்து வந்திருக்கிறேன். மறக்காத உணர்வுகள்... என்ன பயலுக நாளைக்கு போன் போடும் போது பேசுவதற்கு மேட்டர் கிடைச்சாச்சு...

  பதிலளிநீக்கு
 19. பிரின்ஸஸ்,

  // என்ன பயலுக நாளைக்கு போன் போடும் போது பேசுவதற்கு மேட்டர் கிடைச்சாச்சு...// போட்டுப்பொங்குங்க! :)

  தேடிட்டேன். அருள்குமாரும் இது எதிர்ப்பக்கம் குறுநாவல்னு எழுதியிருக்காப்புல! மேட்டரு ஓவரு!


  பாலகுமாரனின் 'எதிர்ப்பக்கம்' குறுநாவல் தான் நினைவுக்கு வந்தது எனக்கு. மயிலாப்பூர் லஸ் பிள்ளையார் கோயில் பக்கத்தில் நான்கு நண்பர்கள் தங்கியிருப்பார்கள். நாளொரு கடலையும் பொழுதொரு சைட்டுமாக இனிதே சென்றுகொண்டிருக்கும் அவர்களின் பேச்சுலர் வாழ்க்கை, ஒருவனின் திருமணத்தில் முடியும். நண்பனின் மனைவியால்(அவள் பக்கம் நியாயம்தான் என்றாலும்) எழும் சில பிரச்சனைகளால் பிரிகிறார்கள். கதையின் ஒரு கேரக்டர், தங்களின் கடந்தகால வாழ்க்கையை நினைத்தபடி லஸ் சிக்னல் கடக்கையில், அவர்கள் தினமும் அமர்ந்து அரட்டையடிக்கும் மதில் சுவரில் புதிதாக நான்கு நண்பர்கள் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதாக கதை முடியும். எங்களுக்கு அந்தக் கதையில் வருவது போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லாவிட்டாலும், எங்கள் பேச்சுலர் வாழ்க்கை முடிந்துபோனது அந்தக் கதையை நினைவுபடுத்தியது!

  பதிலளிநீக்கு
 20. //வெண்பூ said...
  சான்ஸே இல்லை இளவஞ்சி.. அருமையான படம். இதையெல்லாம் பார்க்கும்போது கேமிராவை கையில் எடுக்கவே கூச்சமாக இருக்கிறது..//

  அட ... நம்ம கேசு அச்சு அசலா இன்னொண்ணு பார்க்கிறப்போ சந்தோஷம்தான்

  அது சரிங்க அந்த வெளிச்சம் எப்படி அப்படி ஒரு தலைகீழான 'V' வடிவத்தில கிடைக்கிது உங்களுக்கு மட்டும். போஸ்ட் புரடெக்ஷன் வேலைங்களா??

  பதிலளிநீக்கு
 21. தருமிசார்,

  ஒளிஓவியரே... கரெக்கிட்டாத்தான் புடிக்கறீங்க! :)

  // வெளிச்சம் எப்படி அப்படி ஒரு தலைகீழான 'V' வடிவத்தில //

  அன்னிக்கு முன்னாடி நிக்கற ஆளே தெரியாத அளவுக்கு பனி அதிகம். பாக்கறப்ப அச்சு அசலா இப்படித்தான் இருந்தது. இருந்தாலும் ஷட்டர் 1/20 க்கு பதிலா 1/5 வைச்சுட்டதால வெளிச்சம் கொஞ்சம் கூடிப்போச்சு. அதனால பிக்காசால கொஞ்சமே கொஞ்சம் ஷேடோ சேர்த்தேன். இதான் ரகசியம்.

  பதிலளிநீக்கு
 22. wow..wonderful pictures...especially the evening time youth boys....It took me somewhere...its my wallpaper now...

  Gopi

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு