ஞாயிறு, ஏப்ரல் 24, 2005

சிலுசிலுக்குற சிலுக்கு ஜிப்பா

கும்பல்ல கலாய்க்கறதுக்கு ஒரு பிட்டு இங்க!

சிலுசிலுக்குற சிலுக்கு ஜிப்பா
பளபளன்னு மின்னுதப்பா!
வெள்ளைவெளேர் விஃக்சு டப்பா
குபுகுபுன்னு பொகையுதப்பா!

கருகருன்னு எம்ஜியார் டோப்பா
காத்தடிச்சா பறக்குதப்பா!
துருதுருன்னு சின்னபாப்பா
கலகலன்னு சிரிக்கிறாப்பா

S8ட்டு ஃபிகருங்கப்பா
சென்னைல டாப்புங்கப்பா!
அதுல நாளு அட்டுங்கப்பா
அது நம்ம ஏரியா பொண்ணுங்கப்பா!

ஒவ்வொரு வரிக்கும் நடுவுல கோரசு "ஊஊஊஆஆஆ... ஊஊஊஆஆஆ..."ன்னு வரணும். கடைசி பாராவுல உங்க ஏரியாவுக்கு தக்கபடி மாத்திக்கங்க... எங்கயாவது கும்பலா கலாய்க்கறப்ப இந்த பாட்ட(கானான்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்!) எடுத்து விடுங்க... உங்க ஜாலிக்கு நான் கேரண்ட்டி! (யாருப்பா அது "அப்போ கண்டிப்பா ஊத்தி மூடிரும்னு மொனங்கறது? )

இதுபோக வயசு வந்த பசங்களுக்கு மட்டும்னு "லோக்கலோக்க லோக்கோ"ன்னு ஒரு சரக்கு இருக்குதுங்க. அதை எழுதுனா அப்பறம் காசிக்கும் உங்களுக்கும் சண்டை வந்துரும்! (என்னை எப்படி இங்க எழுதவிட்டீங்கன்னு அவர பிலுபிலுக்க மாட்டீங்களா என்ன? :)

சனி, ஏப்ரல் 23, 2005

எனக்கு வராத காதல் கடிதம்

Image hosted by Photobucket.com

உங்களுக்கு ரெட்டைஜடை குமுதாவை தெரியுமா? என்னது தெரியாதா? அதானே! அதெப்படி உங்களுக்கு தெரிந்திருக்கமுடியும்? அவதான் என்னோடு +1 படிச்சவளாச்சே! (நறநறப்பவர்களுக்கு, எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாததால இப்படி.. ஹிஹி ). ஒல்லியா, முகம் மட்டும் பூசின்னாப்படி, கொஞ்சம் மாநிறத்துக்கும் மேல, நடுவகிடு எடுத்து எப்பவும் ரெட்டை ஜடையோடவும், அதோட முனைல சிவப்புலயோ பச்சைலயோ ஒரு ரிப்பனோடவும், ஒரு சைடுல இருந்து பார்த்தா கோபிகா சாயல்ல இருப்பான்னு வச்சிக்கங்களேன்! இப்படி இல்லைனா நான் ஏன் இவளை பார்த்திருக்கபோறேன்?! எங்க 11C தமிழ்மீடியம் வகுப்புலயே இவதான் கொஞ்சம் பாக்கறமாதிரி இருப்பா! அவபேரு R.குமுதான்னாலும் நாங்க அவளை ரெட்டைஜடை குமுதான்னுதான் சொல்லுவோம். அந்த காலத்துல சைட் அடிக்கறதுன்னா ஒரு பொண்ணைபார்த்து ஓரு கண்ணைமட்டும் மூடிக்காட்டறதுன்னு நம்பிய அரைவேக்காட்டுப்பய நான். அதுனால இதுக்குமேல அவளை வர்ணிக்கற அளவுக்கு அன்றைக்கு அவளை கலைநோக்கோடு பார்த்ததில்லை. ஆனா ஒரு ஈர்ப்பான கவர்ச்சி அவமேல இருந்ததுங்க. இந்த வயசுல பொண்ணுங்க ஒரு மாதிரி தினுசா புரிந்தும் புரியாத அழகோடத்தான் இருப்பாங்க போல. பருவம் வந்தா பன்னிகுட்டியும் பத்துபைசா பெறும் சும்மாவா சொன்னாங்க? ஆனா இந்த விடலைபருவத்துல பசங்களை பார்க்கசகியாது. நொள்ளையும் நோஞ்சானுமா மொகமெல்லாம் ஒருமாதிரி ஒடுங்கி திருதிருனு அலையற கண்களோட, பருக்கள் எட்டிப்பார்க்கும் கன்னங்களோட, மொசைக் தரைல கரித்துணிய தேய்ச்சாப்புல அரைப்பரவலா மீசையோட கன்றாவியா இருக்கும். சந்தேகம் இருந்தா உங்க பழய போட்டோவ எடுத்துப்பாருங்களேன்!


வகுப்புல நாந்தான் லீடர்னாலும் அதையும் மிஞ்சி ஒரு கெத்து எனக்கு இருந்ததென்றால் அது குமுதா எங்க வீட்டுல இருந்து 6 வீடு தள்ளி இருந்ததாலதான். எனக்கு இருக்கற ஆளுமைத்திறனுக்கும் உடம்புக்கும் வாங்குன மார்க்குக்கும் நான் எப்படி லீடர் ஆனேன்னுதானே கேக்கறீங்க? அது ஒரு விபத்துங்க. எப்பவும் நான் 10வதுல லீடரா இருந்த செந்தில்குமார் கிட்டதான் உட்காருவேன். கறி தின்னே வளத்த உடம்பு அவனுது. வாரத்துல 4 நாளைக்கு அவன் டிபன்பாக்சுல கோழிவருவல் இருக்கும். மேலே நான் சொன்ன பசங்களோட சமுத்திரிகாலச்சணங்களில் இருந்து அவன் ரொம்பவும் மாறுபட்டவனில்லைனாலும் ஆளு சும்மா கருப்பு தேக்கு கட்டைல செஞ்ச அலமாரி மாதிரி இருப்பான். எனக்குத்தான் படம்போட ஒரு திறமையும் இல்லாததால ஒரு அள்ளக்கைமாதிரியே அவனோடதிரிவேன். +1 வந்தப்பறம் வாத்தியார் இந்த வருசத்துக்கு யாரு புதுலீடர்னு கேட்டப்ப என்சட்டைய கொத்தாபுடிச்சி தூக்கிவிட்டுட்டான். வாத்தியார் உட்பட எல்லார் முகத்துலயும் லயன்கிங் ரோல்ல ஒரு கொரங்கு நடிக்க வந்தாப்புல ஒரு அதிர்ச்சி! வாத்தியார் நெஜமாவே நீயாடா லீடரா இருக்கப்போறன்னு கேக்க நான் பயத்துல பேந்த பேந்த முழிக்க, அவர் ஒரு நிமிசம் யோசிச்சிட்டு சரி இந்த வேலையாவது ஒழுங்காபாருன்னு விட்டுட்டார். மொத்த வகுப்புக்கும் குசுகுசுன்னு சிரிப்புதாங்கல. என் லீடர் பொழப்பும் அவங்க சிரிக்கரமாதிரிதான் இருந்ததுன்னுவைங்களேன். ஒருத்தருக்கும் என்னைகண்டா பயம் கிடையாது. அந்த காலத்துல "பதவிய வச்சி ஏதாவது வித்தை காட்டுன... வெட்டிடுவேன்!" அப்படின்னு ஒரு ஃபேமசான மக்கள் என் பக்கம் படத்துல சத்தியராஜ் சொல்லற வசனம் இருந்தது. வகுப்புல வாத்தியார் இல்லாதபோது பேசறவங்க பேர எழுதிவச்சாலும் இந்த வசனத்தை சொல்லியே மெரட்டுவாங்க. ஏதோ செந்தில் துணைலதான் ஒப்பேத்தி போய்கிட்டு இருந்தது.

படிச்சது என்னவோ +1 ன்னாலும் அந்தகாலத்துல இப்ப இருக்கற பசங்க மாதிரி 24மணி நேரமும் படிப்பு படிப்புன்னு சுத்துனது கிடையாது. முடியலைங்கறது வேறவிசயம்!. லீவுநாள்ள கிரிக்கெட்தான் தூள்பரக்கும். காலைல 9 மணிக்கு ரப்பர்பால் பெட்மேட்ச் போட்டா சயந்தரம் 7 மணி வரைக்கும் 3 மேச்சாவது நடக்கும். செந்தில் வேற ஏரியான்னாலும் மேட்ச் நடக்கும் போதெல்லாம் எங்க ஏரியால தான் இருப்பான். மத்தியானம் எங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு திரும்பவும் வெளையாட போயிடுவோம். எங்க தெரு தள்ளி ரயில்வே ட்ராக்கை ஒட்டினாப்புல இருந்த பீக்காடுதான் எங்க கிரவுண்டு. இந்த கிரவுண்டை ஒட்டினாப்புல போற ரோடுலதான் எங்க கணக்கு வாத்தியார் வீடு இருந்தது. எங்க தெருவுல இருந்து வாத்தியார் வீட்டுக்கு டியுசன் படிக்க போகனும்னா இந்த கிரவுண்டை ஒட்டிய ரோட்டுலதான் போகனும். நம்ப குமுதா வகுப்புல முதல் 5 ரேங்க்குக்குள்ள எடுத்தாலும் கணக்குக்கு மட்டும் டியூசன் போனா. எனக்குத்தான் வகுப்புலயே எல்லா பாடங்களும் படிச்சி கிழிச்சுறதுனால டியூசன் எல்லாம் போனதில்லை. எல்லாம் +2ல போய்க்கிலாம்னு வீட்டுலயும் சொல்லீட்டாங்க. தினமும் சாயந்தரம் நாங்க விளைய்யடும்போது குமுதா அந்த ரோட்டுல ஒரு ஆறு மணிக்கா டியூசன் போவா. பசங்கெல்லாம் ஒருமாதிரி அமைதியாகி யாரும் பாக்காதமாதிரி அவளை பார்த்தபடி அவள் வீதிமுனையை தாண்டறவரைக்கும் ஒரு நாடகம் நடிப்பானுங்க. அடுத்தவன் பாக்கறது தெரிஞ்சிட்டா ஒரு மாதிரி வழிவானுங்க. சிலநாள் பேச்சுவாக்குல அவளைபத்தி என்கிட்ட விசாரிப்பானுங்க. அப்பெல்லாம் ஒரு பொண்ணைப்பத்தி பேசறதே ஒரு இனம் புரியாத கிக்கா இருக்கும். நானும் அவளைப்பத்தி எனக்கு தெரிஞ்சதையெல்லாம் ஒரே பீலாவா விட்டு என் இமேஜை ஏத்திக்குவேன்.

இப்பதான் பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒண்னுமண்னா பழகறாங்க. எங்க காலத்துல சும்மா ரெண்டு வார்த்தை பேசுனாலே பெரிய விசயம். அந்த ரெண்டு வார்த்தை பேசரதுக்குள்ளயே பசங்களுக்கு நாக்கு தட்டிடும். அதுக்கே புள்ளைங்க கெக்கேபிக்கேன்னு சிரிப்பாளுங்க. இந்த மேட்டரும் வாத்தியாருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவருக்கு அடிச்சும் நமக்கு அடிவாங்கியுமே கை பழுத்துரும். இந்த நேரத்துலதான் செந்தில் அந்த வேலைய ஆரம்பிச்சான். வகுப்புல அப்பப்ப யாரும் பாக்காதப்ப குமுதாவ பார்த்துக்கிட்டே இருப்பான். இண்டர்வெல்ல தண்ணி குடிக்க போகும்போதும், மத்தியானம் டிபன்பாக்ஸ் கழுவும்போதும் அவ பின்னாடியே போய் சிரிக்க ஆரம்பிச்சான். இதை கூட இருந்து பாக்க ஒரே வயித்தெரிச்சலா இருந்தது எனக்கு. அவ இவனை பாத்தாளா இல்லை சிரிச்சாளானேன்னே எனக்கு புரியலை. ஆனா அவ இவனை கண்டுக்காதமாதிரிதான் இருந்தது. இருந்தாலும் செந்தில் இப்படி செய்ய ஆரம்பிச்சதை என்னால தாங்கிக்க முடியலை. இவன் இப்படி செய்யறதனால பசங்க முன்னைப்போல அவளைப்பத்தி என்கிட்ட கேக்கறதுகொறைஞ்சதும் என் பொறாமைக்கு காரணமா இருந்திருக்கலாம். தினமும் சாயந்தரம் கிரிக்கெட் விளையாடும்போதும் அவ டியூசன் போகும்போது பின்னாலேயே போயிட்டு திரும்ப வருவான். டியூசன் முடிஞ்சி வர்றவரைக்கும் இருட்டுல கிரவுண்டுல இருப்பான். அப்படியே அவகூடவே பின்னால எங்க வீட்டுவரைக்கும் வந்துட்டு அவன் வீட்டுக்கு போயிடுவான். இதைப்பாத்து காதெல்லாம் பொகையா சுத்திகிட்டு இருந்த நான் மெல்ல அவங்க அப்பா பத்தி அவன்கிட்ட சொல்லி அவனை பயமுறுத்த ஆரம்பிச்சேன். ஆனா அவன் அதுக்கெல்லாம் மசியறமாதிரி தெரியலை.

ஒருநாள் இப்படிதாங்க நாங்க விளையாட்டு முடிச்சு வீட்டுக்கு வரவும் செந்தில் குமுதா பின்னாடியே டியூசன்மாஸ்டர் வீட்டு வரைக்கும் போகவும் இருக்க எதிர்தாப்புல குமுதாவோட அப்பா வந்துகிட்டு இருந்தார். எனக்கு என்ன தோணுச்சோ படக்குன்னு அவரை நிறுத்தி, "சார், குமுதாவ யாரோ ஒருபையன் தெனமும் டியூசன்வரைக்கும் பாலோ பன்னறான்"னு பத்தவச்சிட்டேன்! அவர் முகமெல்லாம் மாறி ஒடனே ஸ்கூட்டற திருப்பிகிட்டு அந்தவழியா போனார். எனக்கு உடம்பெல்லாம் படபடங்குது. நெஞ்சு அடிச்சுக்குது. என்ன நடக்குமோன்ற அந்த பயத்துலயும் அவனை மாட்டிவிட்டுட்டமேன்ற இனம்புரியாத ஒரு இன்பம் எனக்குள்ள. தாங்கமுடியாம ஒரு 5 நிமிசம் கழிச்சி என்சைக்கிளை எடுத்துகிட்டு அங்க போனா கிரவுண்டை ஒட்டிபோற ரோட்டுமுக்குல சின்ன கூட்டம். குமுதா ஒரு ஓரமா தலையகுனிஞ்சிகிட்டு பயத்தோட தேம்பி தேம்பி அழுதுகிட்டு நிக்கறா. அவங்கப்பா கைல ஒரு பேப்பர வச்சிகிட்டு செந்தில் சட்டைய புடிச்சு வச்சி கன்னத்துலயும் முதுகுலயும் அறைஞ்சிக்கிட்டு இருந்தார். சுத்திநிக்கறவங்க "இந்த வயசுல லெட்டர் குடுக்கறான் பாருங்க.. நல்லா போடுங்க சார்"னு ஏத்திவிடுறாங்க. செந்தில பாக்கவே பாவமா இருந்தது. நான் ஒன்னும் பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன். விசயம் எங்க வீட்டு வரைக்கும் வந்து எனக்கும் இந்த மாதிரி பையன்கூடவா சேருவேன்னு ரெண்டு விழுந்தது. அன்னைக்கு நைட்டு எனக்கு தூக்கமே இல்லை. அதுக்கு அடுத்தநாள் அவனை ஸ்கூல்ல அவன் அப்பாவோட பார்த்ததுதான் கடைசி. குமுதாவோட அப்பா ஸ்கூலுக்கு வந்து ஹெட்மாஸ்டர் வரைக்கும் விசயத்தை கொண்டுபோய் கையபுடிச்சி இழுத்ததா ஊதி பெருசுபண்ணி அவனுக்கு TC குடுத்து அனுப்பிச்சிட்டாங்க. பிரேயர்ல வேற இதை சொல்லி அத்தனைபேருக்கும் எச்சரிக்கை விட்டாரு HM. அதுக்கு அப்பறம் அவன் திருப்பூர்ல Polytechnic Civil சேர்ந்துட்டதா தெரியவந்துச்சி.

ஒரு அஞ்சாறு வருவம் போயிருக்குங்க. BE படிச்சிட்டு வேலைதேடி சென்னை வந்து கேம்பஸ்ல TCSல சேர்ந்த ஃபிரண்டு கூட திருவல்லிக்கேணி மேன்சன்ல இருந்தேன். ஞாயித்துகிழமை மதியம் 4 மணிக்கா காலேஜ்ல படிச்சவனுங்க எல்லாம் மெரீனா பீச்சுல பாத்துக்கறது வழக்கம். Walkin interview, apptitude testனு கெடச்ச தகவல்களை பீச்சுல ஃபிகர் பார்த்த நேரம்போக பரிமாறிக்குவோம். திடீர்னு முதுகுல பளார்னு ஒரு அடி விழுந்தது. பயந்துபோய் திரும்பி பார்த்தா ஓங்குதாங்க கருவேல மரம் மாதிரி அதே வெள்ளைப்பற்கள் ஈறுவரைக்கும் தெரிய சிரித்தபடி செந்தில்! எனக்கு ஒரு நிமிசம் அப்படியே ஆடிப்போயிட்டது. அப்பறமா அவன்கூட போய் பீச்சுலயே உக்கார்ந்து என்கதைய சொல்லி அவன் கதைய கேட்டதுல அவன் Civil diploma முடிச்சி L&Tல சைட் இஞ்சினியரா இருக்கறதும், SK மேன்சன்ல இருக்கறதும் தெரிஞ்சது. அம்மா அப்பா பத்தியெல்லாம் ரொம்ப விசாரிச்சான். எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சுடும்னும் நம்பிக்கையா சொன்னான். கற்பகம் மெஸ்சுல டோக்கன் மீல்ஸ் சாப்டுட்டு முக்கு கடைல பாதாம் பால் குடிச்சிட்டு அவன் ரூமுக்கு போனோம். வாச்மேன் கிட்ட கெஸ்ட் என்ட்ரி போட்டுட்டு அன்னைக்கு அவன்கூடவே இருக்கனும்னு கூட்டிகிட்டு வந்துட்டான். எதையெதையோ பேசி கடைசில நான் இதுவரைக்கும் பேசக்கூடாதுன்னு நினைச்ச அந்த விசயம் வந்தது. அன்னைக்கு அடிவாங்குனதுக்கு அப்பறம் நான் அவன்கூட பேசாம போயிட்டத பத்தி வருத்ததோட சிரிச்சிகிட்டே சொன்னான். குமுதா டாக்டருக்கு படிக்கறதையும் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டான். "உன்கிட்ட ஒன்னு காட்டனும்டா மாப்ள"ன்னு கட்டிலுக்கு அடியில இருந்து ஒரு சூட்கேச இழுத்து அதுல இருந்து ஒரு பெரிய காக்கி கவர எடுத்தான். அது புல்லா அவன் சேர்த்து வச்சிருந்த ஆட்டோகிராப் புக்கும், வாழ்த்து அட்டைகளும் சின்ன சின்ன கிப்ட்களுமா இருந்துச்சு. அதுல இருந்து ஒரு மஞ்சள் கலர் பேப்பர்ல எழுதுன லெட்டரை தேடி எடுத்து சிரிச்சிக்கிட்டே படிக்க சொன்னான்.

"Love is GOD. God is Love.

Dear செந்தில்,

Many more kisses. காலையில் உன்னை ப்ரேயரில் பார்த்துபோது நீ என்னை பார்த்தும் பார்க்காததுமாதிரி போனது மனசுக்கு மிகவும் வருத்தமாகஇருந்தது. ஆனால் நீ சயின்ஸ் க்ளாஸ்போது திரும்பி என்னைபாத்து சிரிச்சது மிகவும் சந்தோசமாக இருந்தது, நன்றிகள் பல. எப்பவும் நீ இதேபோல் சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் உன்னை என் உயிரினும் மேலாக காதலிக்கிறேன். நீயும் என்னை உன் உயிர் உள்ளவரை என்னை மட்டுமே காதலிக்கவேண்டும். எனக்காக நீ டியூசன்மாஸ்டர் வீட்டுவரைக்கும் வருவது எனக்கு ஒரு God's gift. உனக்கு கஸ்டம்தான் என்றாலும் I'm very very happy. இருந்தாலும் யாராவது பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்கு. இனிமேல் நீ வரவேண்டாம். நாம் ஸ்கூலிலேயே மதியம் வகுப்பில் letter கொடுத்துக்கொள்ளளாம். மற்றவை நாளை கடிதத்தில். Tons of Kisses.

Ever yours,

S. Kumutha"

ஏனோ எனக்கு கண்ணுல தண்ணி தழும்பிருச்சுங்க. அவனுக்கு தெரியாம தொடச்சுக்கிட்டேன். ஒரு ரெண்டு நிமிசம் அந்த லெட்டரையே பார்த்துகிட்டிருந்தவன் என்னநினைச்சானோ சிரிச்சுகிட்டே கிழிச்சு கசக்கி மூலைல எறிஞ்சிட்டான். அன்னைக்கு நைட்டும் எனக்கு தூக்கமே வரலைங்க.

சனி, ஏப்ரல் 16, 2005

வெறுமை

Image hosted by Photobucket.com

பொசுக்கும் வெயிலில்
ஆளரவமற்ற தெருவில்
பொங்கும் வியர்வையுடன்
மெல்ல கூவியபடிசெல்லும்
பழைய பேப்பர்காரனின்
குரலில்

சாலையோர நெரிசலில்
கடந்துசெல்லும் வாகனங்களை
சலனமின்றிப் பார்க்கும்
குருட்டுப் பிச்சைக்காரனின்
முகத்தில்

இருசக்கர வாகனத்தில்
கணவனை பிடித்தபடி
குழந்தையை அணைத்தபடி
எங்கோ வெறிக்கும்
இளம் மனைவியின்
பார்வையில்

பாதாளச் சாக்கடையில்
மனசை இரும்பாக்கி
உடம்பையே கருவியாக்கி
அடைப்பை நீக்குபவன்
அசைவுகளில்

கையில் மஞ்சள்பையுடன்
நெற்றியில் யோசனையுடன்
முன்பதிவு வரிசையில்
களைத்த முதியவரின்
முகத்தில்

உணர்வுகள் செத்துப்போய்
பேச்சையே உணர்வாக்கி
எப்போது முடிப்பானென
படுத்துக்கிடக்கும் விலைமகளின்
தேகத்தில்

வெறுமைகளால் என்றும்
வெறுமைகளைமட்டுமே
உணர்த்தமுடிவதில்லை

வெள்ளி, ஏப்ரல் 15, 2005

சில ஆண்குறிகள்!

******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
The Hindu ல வாசகர் வட்டத்தை அதிகரிப்பதற்காக ஒரு வெள்ளைக்காரதுரைய வச்சி ஆராய்ச்சி செய்து Font, Headings, Colourனு நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்காங்க! ஒரு தமிழனா இருந்து இதைப்பார்த்து எனக்கு ஒரே பேஜாராப்போச்சுங்க! நம்பநாள இதைசாதிக்கமுடியாதாங்கற ஆதங்கத்துல என்னோட ஆராய்சிக்கு Heading a மட்டும் எடுத்துகிட்டேங்க! நீங்களே சொல்லுங்க? பலன் இருக்கா இல்லையா?

ஹலோ! எனக்கு அடியப்போடறதுன்னு நீங்க முடிவுபண்ணி தேடறது தெரியுது. இதோ இப்பவே நான் ஜூட்டு! :)

சனி, ஏப்ரல் 02, 2005

ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்!

Image hosted by Photobucket.com


"எங்க ரஜினி ஒரே நேரத்துல 5 பேர ஒரே கைல அடிச்சிடுவாரு!"

"போடா! எங்க கமலு 20 பேர ஒரே ஒதைல சாகடிச்சுடுவாரு!"

"போடா புழுகு! எங்க ரஜினி ஒரு ஒதை உட்டாருன்னா ஒரு செவுரே இடிஞ்சி உழுந்துடும்.."

"அய்ங்க்க்... எங்க கமலு கையவச்சி ஒரு தள்ளு தள்ளுனா இந்த பில்டிங்கே தூள் தூள் ஆகிடும்!"

இப்படியாகத்தான் எங்கள் 2ஆவதோ 3ஆவதோ படிக்கும் வயதில் எங்களது சினிமா ரசனை குழுமனப்பான்மையாக உருவெடுத்ததாக ஞாபகம். தெருவில் இருக்கும் எல்லா பசங்களும் கொதிக்கும் வெயிலில் மசபந்து, கில்லி, பம்பரம், கோலி ஆடிய நேரம்போக ஓய்ந்துபோய் எவன் வீட்டு வாயிற்படியிலாவது இடம் கிடைத்தால் உட்கார்ந்துகொண்டு ரஜினியும் கமலும் செய்ய இயலாத, செய்ய விரும்பாத, எங்கள் கற்பனைக்கு எட்டிய எல்லா பிரதாபங்களையும் செய்வார்கள் என நம்பிக்கொண்டு சண்டைபோட்டுக்கொள்வோம். (என்னது? இப்ப இருக்கற ரசிகர் மன்றகுஞ்சுகளும் இப்படித்தான் இருக்கறாங்களா? :) ). அப்பொழுதுகூட நான் கமல் கட்சிதான். ஒருவேளை என் க்ளோஸ் ஃபிரண்ட் மணி கமல் கட்சியாக இருந்ததால் இருக்கலாம். அல்லது எனது அண்ணன் ரஜினிபோல நடித்துக்காண்பிக்கிறேன் என்று சாக்பீசை வாயில்வைத்து ஸ்டைலாக சிகரெட் குடித்து என் அப்பாவிடம் முதுகு பழுக்க வாங்கிக்கட்டிக்கொண்டதாலும் இருக்கலாம். வாய்வலிக்க பேசிப்பேசி ஓய்ந்துபோய் அவரவர் வீட்டிலிருந்து "தெய்வத்தின் குரல்" (ஹிஹி.. அம்மாவோடதுங்க... ) கேட்கத்துவங்கியதும் கலைந்துபோவோம்.

கொஞ்ககாலம் கழித்து 13 வயதில் தெரு பசங்களெல்லாம் இரண்டாக பிரிந்து பேனர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டபோதும் நான் கமல் சைடு சேர்ந்துகொண்டேன். பெரிய அட்டைபெட்டிகளை மடக்கி பெரிய செவ்வகமாக மாற்றி அதன்மீது 2ரூபாய்க்கு வாங்கிய பால்பேப்பரை ஒட்டி வெள்ளைத்திரைபோல ஆக்கி அதில் இதுவரை சேர்த்து வைத்திருந்த கமல் படங்களையெல்லாம் வித்விதமாக வெட்டி ஒட்டி, சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் ஜிகினா பேப்பர்களை பொறுக்கி அதை அட்டையின் முனைகளில் தோரணம்போல ஒட்டி அலங்கரிப்போம். இதில் ரகசியமாக ஒரு ஒற்றனை ரெடி செய்து ரஜினி குரூப்பில் ஊடுருவச்செய்து அவர்களது பேனர் எங்களுடயதைவிட பெரிதாக சூப்பராக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துவரச்சொல்வோம். அதற்க்காக அவனுக்கு சாக்கலேட்டும், சேமியா குச்சிஐஸ்சும் வாங்கித்தவேண்டுமென்பது எழுதப்படாத விதி. திடீரென ஒருநாள் சொல்லிவைத்தாற்போல இரு பேனர்களும் தெருமுனையில் இருக்கும் போஸ்டாபீசை தாண்டிய ஒரு பழையவீட்டு சுவற்றில் எதிரெதிரே தொங்கவிடப்படும். அந்த பேனரை கொண்டுபோய் அங்கே சேர்ப்பதற்குள் விடும் அலப்பரையில் தெருவே அலரும். இரண்டு கும்பலும் ஒருவரையொருவர் முறைத்தபடி அவரவர் பேனரை அது சூப்பர்.. இது நொள்ளை எனபேசியபடி அன்றய மாலை விளையாட்டுகள் ஏதுமின்றி முடியும். எல்லோருக்கும் இப்படிதான் முடிந்தது. ஆனால் எனக்குவேறுமாதிரி! தெருமுனையிலேயே என்னை பார்த்துவிட்ட அப்பா அப்படியே அவரது புல்லட்டில் ஏறச்சொல்லி வீட்டுக்கு கூட்டிவந்து இந்தமுறை என் அண்ணன் சிரிக்க சிரிக்க "படிக்கற பையன் செய்யற வேலையா இது? " என முதுகை பழுக்கவைத்தார். அதோடு நின்றது என் ரசிகர்மன்ற வாழ்வு. இல்லையாயின் ஒரு மன்ற பொருளாளராகவாவது ஆயிருப்பேன். ம்ம்ம்... யோசித்துப்பார்க்கையில் நான் பேனர் செய்யும் வேலைக்கு சென்றது என் ஓவியக்கலை ஆர்வத்தினால் மட்டுமே என்பது தெரிகிறது. அப்போதும் கூட நான் ரஜினியை ஒரு ரசிகனாகக்கூட பார்க்க ஆரம்பிக்கவில்லை.

கல்லூரி ஆண்டுகளில் ஒரு கித்தாப்பாக தேய்த்து கழுவினால் போய்விடும் அரும்பு மீசையுடன் ஒரு அறிவுஜீவி என்ற எண்ணம் தலைதூக்கி ஒரு 20 அடி மேலே இருந்த திரிந்த காலங்களில், அறிவுத்தாகம், ஆழ்ந்த ரசனை, கலைத்தாக்கம்(வேற ஏதாவது இருக்கா...?) என மனநிலை பாதிக்கப்பட்டு(!?), வேண்டுமென்றே கமலை சப்போர்ட் செய்தும் ரஜினி படத்தில் உள்ள அத்தனை அபத்தங்களையும் கிண்டல் செய்தும் பேசிமாய்வோம். ரஜினி பைக்கை ரிவர்சில் ஓட்டுவதும், சிகரெட்டை துப்பாக்கியால் சுட்டு பற்றவைப்பதும், துப்பாக்கி தோட்டாவை கையாலேய தடுப்பதையும் சொல்லி சொல்லியே ரஜினி ரசிகர்களின் வாயை அடைப்போம். அப்போது முரளி என்ற என் நண்பன் ரஜினி பைத்தியமாகவே இருந்தான். ஒரு படத்தையும் விடமாட்டான். டிவியில் ரஜினி படமென்றால் அப்படியே கேமல் கம்மை தரையில் ஊற்றி அதில் ஒட்டியதுபோல எங்கயும் நகராமல் ஒன்றிவிடுவான். நாங்கள் அடிக்கும் இத்தனை கிண்டல்களுக்கும் சிரித்துகொண்டே போய்விடுவான். ஒருநாள் இந்த ரவுசு ஓவராகப்போக அவன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

"நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!"

இதன்பிறகுதான் ரஜினியை ஒரு இமேஜ் வட்டத்துக்குள் இருக்கும் நடிகராக அல்லாமல் ஒரு சக கூட்டாளியைப்போல நினைக்கத்தோன்றியது. இந்த நினைப்பே என்னை அதன் பிறகு மறுபடியும் பார்த்த பழைய ரஜினி படங்களை ரசிக்கவைத்தது. ஜானி, முள்ளும் மலரும், தில்லு முல்லு, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களை மறுபடியும் பார்த்த பொழுது அதில் அவரது ஆளுமை புலப்பட்டது. அந்த சின்னக்கண்களையும், தவறான அழுத்தமில்லாத தமிழ் உச்சரிப்பையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும். மனசில் அப்படியே ஒரு அமைதியான இனிய உணர்ச்சிகளை கிளரும். இந்த காலகட்டத்தில்தான் "அண்ணாமலை" என்று ஒரு அருமையான படம் ஒன்று வந்தது. ஒரு ரஜினி ரசிகனாக நான் முதன்முதலில் தியேட்டருக்கு சென்றுபார்த்த படம். அப்படியே சீனுக்கு சீன் ஒன்றிப்போய் பார்த்த படம் அது.

எப்படியோ எங்கள் வீட்டில் ஒருவராகிப்போனார் ரஜினி. அப்பா, அம்மா, அக்கா, அண்ணா என எப்படி எல்லோருக்குமே அவரை பிடித்திருந்தது என்பது இன்றுவரை ஆச்சரியம் தான். அவர் ஒரு நடிகர் என்பதனையும் மீறி ஒரு அன்னியோனியமான ஒரு உறவு எங்களுக்குள் இருந்தது. டிவியில் ரஜினி படம் போட்டால் அத்தனைபேரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்போம். ரஜினி நடித்த காமெடி சீன்கள் வந்தேலேயே ஏதோ எங்கள் சித்தப்பா தான் இப்படி விளையாட்டாக செய்கிறார் என்ற எண்ணம்தாம் இருக்கும். பார்க்கப்போனால் அவரது அப்பாவித்தனம் கலந்த காமெடிகளில் ஒன்றுமே பெரிதாக இருக்காது. ஆனால் அப்படி ஒரு சிரிப்பு வரும். முத்து படத்தில் டிராமா நடிகர்களை வில்லன் ஆட்கள் வந்து அடிக்கும் போது "அவன 2 போடுங்க.. பெரிய கமலஹாசன்னு நெனப்பு.." என்பதும், மாப்பிள்ளை படத்தில் நதியா தாயத்து கட்டி இனி யாருக்கும் பயப்படவேண்டாம்னு சொல்லும்போது "அப்ப நம்ப சுப்பரமணி..?" என்பதும் அடக்கமுடியாத சிரிப்பில் என்னைஆழ்த்தும்.

இப்படி ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருந்த ரஜினியை அவரை அறியாமலேயே அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு அவரது மனநிலைக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துவராத காரியங்களை செய்யவைத்து அவரது பெயரை அவராலேயே கெடவைத்து வேடிக்கை பார்க்கிறது ஒரு மாபெரும் கூட்டம். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை அனைவரும் இதில் அடக்கம்.

நான் அவரது வெறி பிடித்த ரசிகனல்ல... அவர் அரசியலுக்கு வந்து இந்த தமிழ்நாட்டை உயர்த்தவேண்டும் என நம்புபவனுமல்ல... அவரை ஒரு நல்ல நடிகன் என்பதையும், அவரது படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் என்பதையும் மட்டுமே உணர்ந்தவன். நான் அவரிடம் எதிர்பார்ப்பதும் அது மட்டுமே. என்னைபோலவே ரஜினியை ஒரு நல்ல மனிதனாக, ஒரு நல்ல நடிகராக, நம் வீட்டில் ஒருவராக நினைக்கக்கூடிய பெரும்பாலோர் இந்த நாட்டில் உண்டு. நாங்களெல்லாம் சேர்ந்து ரஜினிக்கு சொல்லுவது இதுதான். "உங்கள் படங்களில் மட்டுமே உங்களை ஹீரோவாக பார்க்க விரும்புகிறோம். உங்களிடம் எந்தவித ஆதாயத்தையும் நாடாமல், உங்களை தெய்வமாக நினைக்காமல், உங்களை இந்த நாட்டை கட்டிக்காக்க வந்த தலைவனாக எண்ணாமல் ஒரு சிறந்த நடிகராக ஒரு சிறந்த மனிதராக மட்டுமே எண்ணும் நாங்கள் உங்கள் நலம்விரும்பியாக மட்டுமே இருக்கவிரும்புகிறோம்!

ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்...!"

வெள்ளி, ஏப்ரல் 01, 2005

அவனும் அவளும் பின்னெ நானும்!!
என் முதல் சிறுகதை முயற்சி இது. நான் முன்பே இட்ட பதிவு தான் என்றாலும் ஏனோ தமிழ்மணத்தில் list ஆகமாட்டேன் என்கிறது. இலக்கிய உலகம் ஒரு உன்னதமான படைப்பை கவனிக்காமல் தவறவிட்ட பாவம் வரக்கூடாது என்பதற்காக மறுபடி இங்கே.. ஹிஹி..

(இப்படி காதை கொடுங்க... கைல வேற சரக்கு இல்லை !)

------------------------------------------------------------

அவன்: "எனக்கு தெரியுண்டி.. நீ இந்த பஸ்ஸில தான் ஏறி இருப்பன்னு.. ராத்திரி 11 மணிக்கு வீட்ட விட்டுட்டு இப்பிடி ஓடறியே.. நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா?"

அவள்: "அய்யோ.. கடவுளே.. என்ன வுட்டுடு... இதுக்கு மேலயும் உன் கொடுமைய தாங்க முடியாது,,, இதுக்கு மெல எனக்கு சாவு தான் நிம்மதி... என்ன வுட்டுடு... நான் எங்கயோ போறேன்... இங்கயும் கத்தி மானத்த வாங்காத"

நான்: "ஆஹா... நைட்டு பஸ்சுல ஏதாவது பிகரு மடியும்னு பார்த்தா... இப்பிடி ஊட்டு சண்டைய இங்க வந்து போடறாங்க..!!.. இவளும் நல்ல ஆன்ட்டி தான்... ஆன ரொம்ப முத்தலு!"

அவன்: "யாரு? நானாடி கொடுமை பன்னறேன்? எச்சகல நாயே.. இப்பொ என்ன மசுருக்கு நீ சேலம் போற? உன் பழய லவ்வர பாக்க தானே?"

அவள்: "ஏன்யா இப்பிடி கத்தற? இப்பிடி பேசி பேசித்தான என்ன உசுரோட கொல்லுற... எல்லாம் தெரிஞ்சி தான கல்யாணம் பண்ணிகிட்ட... அப்பறம் எதுக்குயா பழசயே பேசி பேசி என்ன நாசம் பன்னற... இங்க பாருடா... நீ வச்ச சிகரெட்டு சூடுங்க... நீ எல்லாம் மனுசனா மிருகமா...?..."

நான்: "அட... கதை இப்பிடி வேற போகுதா... இவன் மூஞ்சிக்கு இவ ரொம்ப அதிகந்தான்...வச்சி அனுபவிக்கறத விட்டுட்டு... ஆஹா...இடுப்பு தெரியுது... இந்த கட்டய மேய்க்க தெரியாத இவனெல்லாம் ஒரு டொங்ஸ்ஸு... தூ... எங்கிட்ட மட்டும் கெடச்சா..ம்ம்ம்!"

அவன்: "காட்டுறி... அப்படியே மொத்த ஒடம்பயும் எல்லாருக்கும் அவுத்து காட்டு.. தேவடியா நாயே... ரெண்டு புள்ள பெத்த அப்பறமும் உனக்கு என்னாடி இந்த தெனவு..? எனக்கு புடிக்கலைன்னு தெரிஞ்சும் அவனுக்கு எதுக்கு போன் பேசுற? இப்படி ஊரு மேயறதுக்கா என்ன கல்யாணம் பண்ண? நீ எங்கயோ போயி சாவு... புள்ளைங்கள எதுக்குடி தூக்கிகிட்டு போற?"

நான்: "ஐயோ பாவம்... எல்லாரும் பாக்கறாங்க... இந்த கத்து கத்தறான்... அந்த பசங்கள பார்த்தா பாவமாத்தான் இருக்கு... அது யாரு பக்கத்துல... இவங்க கூட வந்த மாதிரி தெரியலயே..? நல்ல தெரச்சியா கும்னுதான் இருக்கா... சூப்பர் தித்திங்க... ஒரு 15 வயசு இருக்குமா? இவ எங்க இந்த நேரத்துல போறா? கைல என்ன அது ஸ்கூல் பேக்கா? கெடச்சா இன்னைக்கி மஜாதான்!"


அவள்: "உனக்கு சந்தேகத்துல பைத்தியம் கீய்த்தியம் புடிச்சிகிச்சா? பெத்த அப்பனுக்கு போன் பண்ணலும் உனக்கு அவன் தான்னு நெனப்பா? உன் கூட தெனமும் சாவறதுக்கு அந்த ஓடுகாலி நாயே மேலு... உன்ன நம்பி வந்ததுக்கு நல்லா குடுத்தையா வாழ்க்க"

அவன்: "இத என்ன நம்ப சொல்லுறியா? நான் என்ன கேனயனா? மனுசன் ட்டார்ச்சடு ஆவறான்னு தெரிஞ்சும் எதுக்குடி திரும்ப திரும்ப அதையே பண்ணற? என்ன நல்லா வச்சிகிட்டனா நான் ஏண்டி உன்ன அடிக்கறேன்? எறங்கி வா.. வீட்டுக்கு போலாம்... கண்டக்டர்... அவள மொதல்ல எறக்கி விடுங்க"

அவள்: "நான் வரல்லையா.. செத்தாலும் உன்னோட வர மாட்டேன்.. எத்தன வாட்டி இதயே சொல்லுவ.. நீ மாற மாட்ட...என்ன வுட்டுடு"

நான்: "எறங்கி போம்மா... போய் ஒரு தடவ படுத்தியான அப்பிடியே சரி ஆகிடுவான்.. அத வுட்டுட்டு... இவ கெளம்பினா அந்த குட்டி கிட்ட சீட்டு போட்டுடலாம்...மெரட்ச்சியாதான் பாக்குறா.. கைய்ய வச்சாலும் பயத்துல வாய தொறக்க மாட்டா போல...!."

அவன்: "சொல்லுறத கேளு.. ப்ளீஸ்.. இந்த ஒரு வாட்டி நான் சொல்லுறத கேளு... இதோட எல்லாத்தயும் மறந்துரு... வீட்டுக்கு போலாம் வா..."

அவள்: "என்னால முடியலயா... முடியல... கூட்டிகிட்டு போனவனும் என்ன உட்டுட்டான்... நம்பி கட்டுன நீயும் என்ன மனுசியா மதிக்கல... செத்து தொலையலாம்னா புள்ளெங்க வேற"

அவன்: "சரி... வா.. போலாம்...உனக்கு என்ன வுட்டா ஏது நாதி? இன்னும் டிக்கெட்டு வாங்கல இல்ல? எறெங்கி தொலைடி... போலாம்... ஆட்டோக்கு வேற நூறு ரூபா அழுவனும்"

அவள்: "இந்தாங்க.. பெரியவள தூக்கிக்கங்க... நாம்ப பொழைக்கற பொழப்புக்கு நாண்டுகிட்டு சாவலாம்... என்னத்த பண்ண? பொம்பளயா பொறந்து ஒருத்தன நம்பி வாழறதும் ஒன்னு... சேரில பன்னிங்களோட பொறளுரதும் ஒன்னு... ம்ம்ம்... நீ எங்க பாப்பா போற... இந்த நேரத்துல தனியா..? பாத்து போயிடுவயா?"

நான்: "ஆஹா.. கெளம்பிட்டா... இன்னைக்கி மச்சம்டா உனக்கு... சீக்கிரம் போடா.. போய் எடத்த போடு... பக்கத்துல உக்கார்ந்த்....!!!"

அவள்: "எழுந்துருடா எச்சகல நாயே... உன் வயசு என்னா..? அவ வயசு என்னா...? இங்க எதுக்குடா வந்து உக்கார்ற...? ஏண்டா இப்பிடி எல்லாம் கெடந்து அலயறீங்க...? அப்படி என்னடா எப்பபாரு அரிப்பு உங்களுக்கு... எழுந்துருடானா என்னடா மொறைக்கற...??

ப்பளார்....!!!"