செவ்வாய், அக்டோபர் 22, 2013

பெண்ணியமும் So called சராசரி பெண்களும்...சுரேஷ் கண்ணன் அவர்களது முகநூலில் ஒரு ஸ்டேடசுக்கு எழுதிய பதில். படித்தால் அது ஏறக்குறைய நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்திருந்தது. இங்கே சேமிக்க என்றெல்லாம் ஜல்லியடக்க மாட்டேன். பதிவாக போடவேண்டும் என ஆசை. அம்புட்டுத்தான். இது என் பார்வை மட்டுமே. அவர்பதில் கிடைத்தால் கோர்க்கிறேன்.


---------+++++----------வண்ட்டேன்... இங்கே அனைத்து சேனல்களும் yupptv.comல் காசுகட்டி காணக்கிடைக்கின்றன. நான் பார்ப்பது என்னவோ இரண்டே நிகழ்சிகள் தான். நீயா நானா & கொஞ்சம் நடிங்க பாஸு :)


// அறியாமையே பேரின்பம் ரீதியில் சில பெண்கள் பேசினார்கள் //


எப்படிங்க இப்படியெல்லாம் தீர்மானிக்கறீங்க!? அறியாமைக்கும் தெரியாமைக்கும் நிறைய வேறுபாடு இருக்குங்க. பெண்ணிய இயங்கங்களும் இலக்கியங்களும் களப்பணியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியவேண்டிய அவசியத்துக்கான வாழ்க்கை முறையிலும் அவர்கள் இல்லை. அதனால் அது அறியாமை ஆயிருமா?


so called சராசரி பெண்கள் - இனி இவர்களை உங்கள் வார்த்தையிலேயா சராசரிகள் என குறிப்பிடுகிறேன். :(


ஒரு சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. சிலர் குடும்ப அமைப்மை ஏற்றுக்கொண்டு புள்ள குட்டின்னு வாழ்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சிலர் மற்றவர்களுக்காக ஏதாவது செய்யனும்னு பெண்ணியத்திற்கு போராடுபவர்களாகவும் களப்பணியாளர்களாகவும் ஆகிறார்கள். அதது அவங்கவங்க குடும்ப சூழ்நிலை மற்றும் சுயசிந்தனைல வர்ற தேர்வுகள். பெண்ணியவாதிகள் உரிமைகளுக்காக போராடட்டும். சமூக சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கட்டும். சமூக புரிதல்கள் மீதான சிந்தனைகளை புரட்டிப்போடட்டும். உரையாடல்களை தொடரட்டும். இந்த செய்கைகளினால் போராட்டங்களினால் வர்ற பலன்களை அந்த சராசரிகள் அனுபவித்துவிட்டு போகட்டுமே. தலைவர்கள் போராடிக்கொண்டுவரும் மாற்றத்தை சராசரிகள் அனுபவித்து முன்னேறி வருவது தானே உலகத்தில் நடப்பது? வாழ்க்கையில் ஒருத்திக்கு மற்றவர்களுக்காக போராட வேண்டும் என்கிற தேர்வு எப்படி உன்னதமானதோ அதற்கு சற்றும் குறையாதது ஒரு பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது என்பது சரியில்லையா? குடும்பம் குட்டி என வாழ்ந்து ஒரு குடும்பத்தை உயர்த்துவது என்ற தேர்வு அவ்வளவு கேவலமானதா?! இருவருக்குமே அவரவர் அரசியல் எல்லைகள். சிறிதும் பெரிதுமாய். இதில் உயர்வென்ன? தாழ்வென்ன? சராசரிகளுக்கு தேவை பெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வே. இந்த விழிப்புணர்வுதான் மாற்றங்களை அவரவர் குடும்பத்தில் கொண்டுவருகிறது. சராசரிகள் அனைவரும் களத்தில் இறங்கிப்போராட வேண்டும் என்பதோ அவர்கள் இரண்டுபேர் இணைந்து வாழ முடிவெடுத்து குடும்ப அமைப்பை தேர்ந்தெடுத்து அமைக்கும் வீட்டுகுள்ளேயே புரட்சிகள் வெடிக்க வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது சரியான எதிர்பார்ப்பா? 


பெண்ணியம் என்றால் என்ன கேள்விக்கே நீங்க குறிப்பிடும் so called சராசரி பெண்கள் தெரிஞ்சதை மனப்பாடம் செஞ்சு சொல்லறாப்டி இருந்தாலும் குழப்பமே இல்லாம பட்டுன்னு சொன்னாங்க. அதுக்கு பெண்ணியவாதிகள் மத்தில ஒரு அலட்டலான சிரிப்பு. அய்யோ பாவம் இதுகளுக்கு ஒன்னுமே தெரியலையேன்னு. பெண்ணியம் பத்தி உரையாடலாம் அப்படிங்கற எண்ணம் இல்லாம யாராவது நாலுபேரு மாட்டுவாய்ங்க அவங்களுக்கு பெண்ணியத்தை கழுவி கழுவி ஊத்துவோம்னு நினைப்புல பேச்சை ஆரம்பிச்ச புத்திகேர்ல்ஸ் பாதிப்பேரு “பெண்ணியம்னா என்னன்னு ஒரு வரையறைக்குள்ள சொல்லமுடியாது.. ட்பைன் பண்ணமுடியாது..”ன்னு திக்கித்தெணறி முடிக்கறதுக்குள்ள நமக்கே வேர்க்குதுன்னா பாவம் நீங்க சொல்லற சராசரிகளுக்கு எப்படி இருந்திருக்கும்?! இதுல வெண்ணிலா நடுவால ஒரு சவால்வேறு.. சரியா பதில் சொல்லிட்டன்னா இப்பவே ஷோவை முடிச்சுக்கலாம்னு. என்னக் கொடுமை அய்யா. இதில் யாருக்கு சொல்லித்தருவதில் அறியாமை இங்கே அதிகம்? 


நல்லா படிச்சு வேலைவாங்கி மிலிட்டரிக்கு போகும் ஒருபெண். குடும்ப அமைப்பை ஏற்று கணவருடன் அன்யோனியமாக குடும்பம் நடத்தும் ஒரு பெண். தன் தந்தையும் நானும் எப்படி நட்பாக இருக்கிறோம்னு ஒரு பெண். இதையெல்லாம் அவர்கள் வெளிப்படையாக சொல்ல இந்த சைடுல இருந்து சரமாரியா கவுண்ட்டர் அட்டாக்ஸ்.. ”உங்க வீட்டுல மட்டும் இருந்துட்டா போதுமா? நீ மட்டும் உங்க வீட்டுல கன்வின்ஸ் பண்ணிட்டா போதுமா?” முடியல! “உனக்கு கிடைத்த பலன் மற்றவர்களுக்கும் கிடைக்கனும்...அந்த விழிப்புணர்வைத்தான் நாங்க ஏற்படுத்த போராடறோம்.. அதுக்கு உங்க உதவியும் தேவை.. வாங்க இங்க என்ன நடக்குதுன்னு சேர்ந்தே புரிஞ்சுக்கலாம்..”னு அக்கறையா இந்த கேள்விகள் வெளிப்பட்டிருந்தா எவ்வளவு சிறப்பா இருந்திருக்கும்?! கேட்டதெல்லாம்.. ”அடியே மக்கு... மக்கு... தெரிஞ்ச பெரிய நம்பர் என்னன்னு 100ன்னு சொல்லறையே மக்கு... 1000 100000 எல்லாம் உனக்கெங்க தெரியப்போது?”ங்கற தொணி! 


உண்மையில் இந்த சராசரிகள் எல்லாம் பெண்ணியவாதிகள் சொன்ன மாதிரி இவ்வளவுகாலம் பெண்ணியம் கண்ட போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள். ”பெண்ணியம் ஒன்றும் வெட்டிப்பேச்சில்லை. மாற்றம் நடந்தே தீரும். இது நடந்திருக்கிறது பாருங்க..”ன்னு சபையிலேயே கட்டியணைச்சு உச்சிமுகர்ந்திருக்க வேண்டிய முன்மாதிரிகள். பெண்ணியவாதிகள் இவர்களை அரவணைத்து அக்கறையோடு பெண்ணியத்தின் செயல்பாடுகள் என்னென்ன என விளக்க அமைந்த அற்புதமாக அமைந்த வாய்ப்பு அது. ”அடடா,,, நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... இந்த நல்ல வாழ்க்கையிலும் உங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தா இப்ப இருக்கற பெண்ணிய செயல்பாடுகள்ல இன்னின்ன நல்ல வழிகள் இருக்கு... இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க... நாம எல்லாரும் இன்னும் உயரலாம்...” அப்படின்னு அழகா மாறி இருக்க வேண்டிய உரையாடல் இது. ஆனால் இந்த சராசரிகள் நம்மில் ஒருத்தருங்கற அக்கறை இல்லாததால... நாம் பெண்ணியத்திற்காக போரடறோம், சராசரிகளுக்கு களம் காண்கிறோம்கற ”ஒரு படி மேல” சிந்தனைதான் பேசுன பெண்ணியவாதிகளுக்கு இருந்ததே தவிர அவர்களும் நம்மில் ஒருத்தர் அவர்களுக்கு தெரியாததை கனிவுடன் அறியச் செய்வோம்ங்கறது சுத்தமா இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்து நக்கலாக சிரிச்சுகிட்டதுதான் இதற்கு சாட்சி. 


நான் உணர்ந்த வரையில் ஓவியா ஒருவரின் பேச்சில் தான் இந்த கனிவையும் ஆதூரத்தையும் அக்கறையையும் காண முடிந்தது. 


இதையெல்லாம் விட ஒரு வலிகூட்டும் சொல்லை கேட்கமுடிந்தது. சராசரிகளை நீங்க எப்படி இப்ப பார்க்கறீங்கன்னு கேட்டபோது பரிதாபப்படுகிறேன் அப்படின்னு ஒரு பெண்ணியவாதி சொன்னார். அவர் யாருன்னா உங்க பெண்ணிய விடுதலையை எப்படி உணர்கிறீர்கள் எனக்கேட்டதுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியாம ”வார்த்தையே இல்ல சொல்ல முடியல...”ன்னு முடிச்ச குட்டிரேவதி. அவர் யாரைப்பார்த்து பரிதாபப்படுகிறார் என்றால் எப்படி கணவனும் மனைவியுமா இயந்து காதல் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்னு உணர்வுபூர்வமாக எவ்வித தடங்கல்களும் இன்றி உணர்ந்ததை வார்த்தைகளில் கோலம்போட்டுக் காட்டிய (நாடக பாவங்களாம்!! ) பெண்களையும் , எப்படி பல தலைமுறையாக பெண்கள் எங்க வீட்டுல லீடரா இருக்காங்கன்னு சொன்ன பெண்களையும், ராணுவ சீருடை அணிந்து உற்சாகமாக பணிக்கு கிளம்பும் பெண்களையும், அயர்ன் செய்துகொடுத்த அப்பாவின் சட்டைக்கு கிடைக்கும் ஆதுரத்துடன் கூடிய சிரிப்பை பரிசாகப்பெருன் பெண்களையும் பார்த்து!!! :( மகா கொடுமை அய்யா இது. இவங்க எல்லாம் அப்ப யாருக்காக எந்த வாழ்க்கைக்காக போராடறாங்க அப்படிங்கறதே ஒரு நிமிடம் மறந்துருச்சு! இதை விட கொடுமை பெண்ணியவாதிகள் பலபேரு பலதடவை எங்களுக்கும் ஆண் உறவுகள் இருக்கு... ஆண் நண்பர்கள் இருக்காங்கன்னு திரும்ப திரும்ப சொன்னாங்களே தவிர ஒருத்தராவது ஒரு பெண்ணியவாதியாக நான் இப்படி என் ஆண் உறவுகளை பேணுகிறேன்னு ஒரு வரி கூட சொல்லவில்லை! அப்படி என்னங்க அவங்களை சபைல இயல்பா பேசறதை தடுக்குது?! இந்த “ஒரு படி மேல” எண்ணம் தான் போல! சொல்லிட்டா அப்பறம் அடடா இவங்களும் சராசரிதானானு சராசரிகள் கண்டுபுடிச்சுட்டா?!


சல்மாவின் கூற்று... ”சமையல் நல்லா இருக்கு.. நீ நல்லா இருக்க... வீட்டை அருமையா வைச்சிருக்க...” அப்படிங்கற பாராட்டுகள் எதையும் ஏத்துக்க கூடாதாம்! அதெல்லாம் பின்னால பெண்களுக்கெ கெடுதல்ல முடியுமாம்! இதையெல்லாம் எங்க போய் சொல்ல?! உனக்கும் எனக்கும் குடும்ப அமைப்பு எனும் வாழ்க்கைமுறை சரின்னு நினைத்து திருமணம் செய்து கொள்கிறோம்... அதில் வரும் சிக்கல்களை பேசித்தீர்த்து விட்டுக்கொடுத்து வாழ்வோம்... என்ற எண்ணத்தில் இணையும் இருவர் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் அடிமையாயிருவாய்! :( இன்னொருத்தரு சொல்றாங்க ஒருத்தர்க்கொருத்தர் தியாகம் செய்யக்கூடாது! :( இவர்கள் சொல்வது அனைத்தும் திருமணமே ஒரு அடிமைசாசனம் அப்படின்னு படிச்சு வந்த தெளிவு. ஆனா திருமணமே ஒரு அடிமைத்தன விலங்கு... குழந்தை பெறுதல் ஆணாதிக்கத்தின் அழுத்தம்னு ஒருத்தருகூட தெளிவா ஒருவரி சொல்லல. பூசிப்பூசி மெழுகறாங்க... பாவம் பேசவந்த பெண்ணியவாதிகள்ல எத்தனை பேர் திருமணமானவங்களோ!! எளிமை மட்டும் இயல்பு என்பது ஒரு படி மேல போயிட்டா அவ்வளவு சிரமமான குணாதியங்களா மாறிடுமா என்ன? இத்தனைக்கும் இவங்களையெல்லாம் சிறப்புநடுவர்களா கூப்பிடலை. ஒரு சைடுல உட்கார்ந்து சரிக்கு சமமா கலந்துரையாட அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் தான், சராசரிகளை போலவே!


நான் கவனித்த வரையில் பெண்ணியவாதிகள் அனைவரும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்துவந்திருந்தனர். குட்டிரேவதியின் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த உடையும் அவர் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த கம்பீரமும் அருமையாக இருந்தது. சல்மாவின் வெள்ளை உடைகூட பார்க்க சிறப்பு. கவிதா அவரின் கழுத்து டகோடாக்களை தேடித்தான் மேட்சிங்காக அணிந்து வந்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன்? ஓவியாவே மடிப்பு கலையாத கஞ்சிபோட்ட காட்டன் புடவையில் பாந்தமாகத்தார் இருந்தார். ”சராசரிகளே.. ஆண்பெண் சமத்துவம் கொண்டுவரத்தான் போராடுகிறோம்.. ஆனால் ஒருவருக்கொருவர் பாராட்டிவிடக்கூடாது” எனச்சொல்லும் இவர்களிடம் போய் “சல்மா.. இந்த வெள்ளை உடையில் நீங்கள் இருக்கும் சூழலே அழகாகத்தெரிகிறது... ரேவதி...உங்கள் பேச்சில் வெளிப்படும் கம்பீரம் அழகு... கவிதா உங்கள் காதணிகள் உங்கள் உடைக்கு சரியா மேட்சாகுது” அப்படினெல்லாம் பாராட்டினா என்னென்ன வார்த்தைகளில் திட்டுவாங்களோன்னு பயம்மா இருக்கு!!! “ஆணாதிக்கம் கொண்ட காமகொடூரா..”ன்னு தட்டையா மட்டும் திட்டமாட்டங்கன்னு நம்பறேன்! :) அவரே பார்த்துப்பார்த்து தேடித்தேடி வாங்கி அவரவரே அணிந்து அவரவரே மகிழ்ச்சி அடையவா உடை? மற்றவர் முன்னால் ஒரு தோற்றப்பொழிவோடு இருக்கவேண்டும் என்ற அடிப்படை அவாவின் வெளிப்பாடு அல்லவா அன்றைக்கு அனைவரிடமும் இருந்திருக்கும்.


இத்தனைக்கு பிறகும் ஒரு விசயம் சொல்லனும்னா குடும்ப அமைப்பில் இருக்கும் சராசரி பெண்கள் தான் தங்கள் எண்ண ஓட்டங்களை தங்குதடையின்றி பேசுனாங்க... தனக்கு தெரியாத சில விசயங்களை உடனே தலையாட்டி ஒத்துக்கிட்டாங்க... உண்மையில் உணர்ந்ததையும் வாழ்க்கையில் செயல்படுத்தறதையும் மட்டுமே சொன்னாங்க... சொல்லிக்கொடுக்க வந்தவங்க இதுல எல்லாம் இதுல ஏதாவது ஒன்னு கத்துக்கிட்டும் போயிருந்தா மகிழ்ச்சியே! :)


இதுபோக ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும்! தப்பித்தவறியும் ஒரு ஆண் பங்கேற்பாளர் இல்லாமல் நடத்தியதற்கு. இல்லையெனில் சராசரிகளின் தெளிவும் உணர்வுகளும் அறிவுபூர்வமான வாதங்களால் சிதறடிக்கப்பட்டிருக்கும்!


வெள்ளி, அக்டோபர் 18, 2013

அன்னயும் ரசூலும்

Related imageங்களுடைய சொந்த ஊர் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? திருச்சி மலைக்கோட்டை கோவிலின் உச்சியில் படிகளில் அமர்ந்து திருச்சியை பார்க்குமிடம் உங்களுடன் ரகசியமாய் கைகோர்த்து வந்தவரால் பிடித்திருக்கக்கூடும். கோவை கிராஸ்கட் ரோடு சேட்டுக்கடை பானிபூரியின் சுவை ஜமா சேர்ந்த நண்பர்களால் சிறப்புற்றிருக்க கூடும். ஸ்ரீரங்கம் கூட வாத்தியாரும் நீங்களும் பிறந்த ஊர் என்பதற்காகவே ஒட்டிப்போக வாய்ப்புண்டு. ரசூலுகுக்கு கொச்சின் ஏன் பிடிக்கும் என்பதற்கு நட்பு தவிர வேறு காரணியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு வழியும் இருந்திருக்காது போல. இரண்டாம் திருமணம் முடித்த அப்பா பெண்டு பிள்ளைகளோடு வேறு ஊரில் ஜாகையாயிருக்க கொச்சினில் ரசூலும் அவன் அண்ணனும் மட்டுமே திரைச்சீலைகள் பிரிக்கும் ஒரே அறை வீட்டில் பொங்கித்தின்று வாழும் வாழ்க்கை. வயதுக்கு வந்த பிரமச்சாரி அண்ணன் தம்பிகள் இரண்டுபேர் ஒரே வீட்டில் இருக்கையில் பழகும் முறையை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் நீர்முட்டி வலியினை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சந்தோசமாக இருக்கும் பொழுதில் கட்டிப்பிடித்து உச்சிமுகர தேவையில்லை. பிரச்சனைகளை மணிக்கணக்கில் பேசிப்பேசி மாய வேண்டியதில்லை. ‘ப்ச்’, ‘என்னடா?’, ‘இந்தா..’ என்று எல்லாம் ஒரு வார்த்தை பேச்சுக்கள்தான். அவைகள் ஆயிரம் விளக்கங்ளையும் புரிதல்களையும் கொடுக்க வல்லவை. 60 வருட தாம்பத்தியத்தின் பேச்சுகளற்ற வாழ்வைப்போல. அண்ணனுக்கு அயல்நாடு போக வேண்டி பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்கிற கனவுகளுடன் பெர்ரியில் தண்ணீர் மேல் வேலை. தம்பிக்கோ எவ்வித கனவுகளுமற்று கிடைத்த சவாரிக்கு டாக்ஸி ஓட்டிக்கொண்டு சாலை மேல் வேலை.
Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#4 of 10)இருவருக்குமே உறையுள் பற்றிய பெருங்கவலைகள் ஏதுமில்லைதான். ஏமாற்றங்களும் ஏகாந்தமும் சேரும்பொழுது ஒருவித விட்டேத்தியான மனநிலை வருமல்லவா? அதைக்கொண்டு இருவருக்கும் வாழ்க்கை கட்டஞ்சாயாவும், மீன்கறி சோறும், நண்பர் சந்திப்பும், தெருமுக்கு கால்பந்தாட்டமுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் அனுக்கமாய் சொல்ல வேண்டுமெனில் கொச்சினுக்கும் வைபினுக்கும் இடையே ஓடும் ஃபெர்ரியைப் போல ஆசூசையாகவும் அத்தியாவசியமானதாகவும்.


Image result for annayum rasoolumரசூலைப்பற்றி சிலாகித்துச் சொல்ல சிலதுண்டு. ரசூலுக்கு நிர்ச்சலமான கண்கள். அவைகளோடு அந்த கருத்த தாடிக்குள் ஒளிந்து விளையாடும் வெள்ளந்திச் சிரிப்பும் சேரும்போது அவனை யாருக்கும் உடனே நம்பவும் பிடிக்கவும் வைத்துவிடுகிறது. குழந்தைகளின் கண்களை அவதானித்திருக்கிறீர்கள் தானே? மனதில் சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் குடியேறாத வரையில் கண்கள் ஒருவித ஈர்ப்பாகத்தான் இருக்கின்றன. குழம்பியும் கலங்கியும் அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களைக்கொண்ட நமக்கு இயல்பான கண்களே ஈர்ப்பாக இருப்பது அதிசயமில்லைதான். அவனுடையது ஓஷோவின் கண்களைப்போல. ஆண்களில் வெகு அபூர்வம் இவ்வகை முகவமைப்பு. இவ்வகை ஈர்ப்பே அவனுக்கு கார்திருட்டு, சில்லரை அடிதடி என சிற்சில சமுதாயக்குற்றங்கள் புரியும் நண்பர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக வைத்திருக்கிறது. பிடிக்காமலேயே பிடித்த நண்பர்களுக்காக உடன்போகவேண்டிய சூழல். கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது.

Image result for annayum rasoolumவாழ்க்கை என்ன குளித்தலை ஊத்துக்குளி வெண்ணையா? அப்படியே வழுக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதற்கு? அது யாரையாவது நகர்த்திக்கொண்டு போய் யார் அருகிலாவது வைத்துவிட்டு சிரிக்கிறது. ஒரு முறை வைபினில் புதிதாய் சேர்ந்த கிருத்துவ நண்பனது நாட்டு விசேசத்திற்காக சென்ற இடத்தில் கூட வந்த நண்பர்களின் அலப்பரை அதிகமாய்ப் போக சடுதியில் ஆரம்பித்த அடிதடிக்கு பயந்து ஒளிந்துகொண்ட இடத்தில்தான் ரசூல் அன்னவை பார்த்தான்.

நான் முதன்முதலில் அன்னவைக் கண்ட இடம் உண்மையில் அவளை முதன்முதலில் பார்த்த இடமல்ல! அவளை இதற்கு முன்பு ஒருமுறை நண்பர்களுக்காக கார் திருடிக் கொண்டு வந்த வழியில் கண்டிருக்கிறேன். பயத்திலும் பதட்டத்திலும் கோவத்தின் விளிம்பிலும் இருந்த கணம். சரியாக முகம் மனதில் பதியவில்லை எனினும் நினைவில் நிழல் என விழுந்துபோன ஒரு உருவமாய் அவள். நிலவொளி சிதறும் கலங்கிய நீரின்மீது அகல்விளக்கு மிதக்க விடும் பெண்ணின் பிம்பம் பிரதிபளித்தது போல கண்கள் விரும்பிக் கண்டும் காணாததுமாய்.  ஆனால் அன்றைக்கு அவளுக்கு நானொரு பொறுப்பற்ற சல்லிப்பயல் என மனதில் விழுந்திருக்க வேண்டும்.

Image result for annayum rasoolum movie stillsஇன்று வந்த வம்புசண்டையின் விளைவாக வாங்கப்போகும் அடிகளுக்கு பயந்து நான் அவசரத்திற்கு ஒளிந்துகொள்ள கிடைத்த இடம் கடவுளின் பிரார்த்தனைகளுக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றும் மேடையின் அடியில். நண்பர்கள் தப்பிவிட்டார்களா என எட்டிப்பார்க்கும் வேளையில் தான் அவள் கையில் ஒரு மெழுகுடனும் தலையைச்சுற்றி முக்காடிட்ட துப்பட்டாவுமாக மேடையின் அருகில் வந்தாள். இரவில் சிதறி மிளிரும் சரவிளக்கொளிகளின் பின்னணியில் கைகளில் இருக்கும் ஒற்றை மெழுகின் வெளிச்சத்தில் அவள் ஒரு தேவதை வானில் இருந்து இறங்கி வருவதைப்போலத்தான் யாருக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கென்னவோ அவள் ஒரு சாமானியனான எனக்கென படைக்கப்பட்ட ஒரு இயல்பான பெண் நான் பார்ப்பதற்கெனவே அந்த நேரத்தில் விளக்கேற்ற அந்த கணத்தில் அவளது ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்டதாக மட்டுமே தோன்றிற்று.

Related imageஅழகாய் இருப்பதனால் மட்டும் ஒரு பெண் மனதிற்கு பிடித்துப்போவதில்லை. மனதிற்கு பிடித்துப்போவதால் தான் ஒருத்தி அழகாகிறாள். அன்னவுக்கு ஒல்லி உடம்பு. ஒடுக்கு முகம். ஒன்றாம் வகுப்பு பையன் க்ரையானில் வரைந்துவிட்ட பறவையைப்போல புருவம். நீட்டித்த கூரான விடைத்த மூக்கு. சதைப்பற்றில்லாத கன்னங்களில் சிறுசிறு சிவப்பு புள்ளிகளாக பருக்கள். மேலுதட்டை வலிந்து மெலிதாய்க் காட்டும் திரட்சியான கீழுதடு. அவை முழுக்க நேர்கீழாய் பாயும் வரிகள்மீது படியும் எச்சிலின் ஈரத்தை மினுமினுப்பாக மாற்றும் ஒளியின் விளையாட்டு. உதடுகள் இணையும் விளிம்பின் சிறுகுழியில் ஒளிந்திருக்கும் அந்த ஒரு துளி ரசவாதம் மட்டுமே வெளிக்காட்டுகிறது அவளது மகிழ்ச்சியோ துக்கத்தையோ. அன்னவின் கண்கள் பெரியன. ஆனால் அவைகள் எதுவும் பேசுவதில்லை. மனதின் கவலைகளை வெளித் தெரியாவண்ணம் மறைத்து அவைகள் எப்பொழுதும் எங்கோ வெறித்தபடியோ உள்வாங்கியோ இருக்கும். அந்த கண்களில் எதுவும் எவனும் எளிதில் படித்துவிட இயலாது, அவளது தந்தை உட்பட.

அன்னவுடனான அறிமுகமும் நட்பும் எந்த ஊரில் எந்த கிறித்துவ நண்பனை பார்க்கச் சென்று அடிகள் வாங்க இருந்தோமோ அந்த நண்பனிம் மூலமே ஏற்பட்டது. அவனது வீடு அன்னவின் எதிர்வீடாய் அமைந்தது இறைவன் எங்களுக்கு ஏற்கனவே இப்படித்தான் என எழுதி வைத்துவிட்டதனால் இருந்தாலும் அவனது அறையின் சன்னல் எப்படி எனது அகத்தின் வாசலாய் மாறி அன்னவின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தது என்பதுதான் ஆச்சரியமாய் மாறிற்று. அந்த சன்னலும் நானும் அன்னவின் ஒரு நொடி தரிசனத்திற்காக காத்திருந்த பொழுதுகள் சொல்லில் சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியும் ஏக்கமும் நிரம்பியவை. ஆனால் என்ன? ஏக்கங்கள் வாழ்வினை வளப்படுத்தாவிடினும் நினைவிலாவது நினைத்ததை உணரவைக்க இயலுமெனில் இருந்துவிட்டு போகட்டுமே? தூரத்து நெருப்பின் ஒளியில் குளிர்காயும் வறியவனைப்போல.

Image result for annayum rasoolumஅன்னவை பார்க்கப்பார்க்க மிகவும் பிடித்துப்போயிற்று. காலையும் மாலையும் அவளுடன் ஃபெர்ரியில் பயணிப்பது அவளுக்காக மட்டுமே என்பது அவளும் அறிந்திருக்கத்தான் வேண்டும். உதட்டின் விளிம்பில் அவள் காட்டும் ஒரு துளி ரசவாத மந்திர புன்னகைக்காக எத்தனைமுறை வேண்டுமென்றாலும் அவள் பின்னே அலைந்துவிட உடலும் மனதும் துடிக்கத்தான் செய்கிறது. ஒரு பெண் நாம் அவள் பின்னால் சுற்றுவதை அறிந்துவிட்ட அந்த கணத்தில் இருந்து அவள் அவள் மட்டுமே அல்ல! அவளுள் ஒருத்தி நமக்காக விழிக்கிறாள். பார்வையால் தேடுகிறாள். உடைகளை அடிக்கடி திருத்தி கவனயீர்ப்பு தீர்மானம் போடுகிறாள். முகம் திருப்பாமலேயே முதுகின் வழி நம் பார்வையை உணர்கிறாள். வெளிப்படும் பரவசத்தினை அவளது உச்சிமுதல் பாதம்வரை அனைத்து அனுக்களும் மறைக்கத்தான் முயல்கிறது. முடிகிறதா என்ன?  இரண்டு பேருக்குமான இந்த விளையாட்டு மக்கள் நிறைந்த சந்தைக்கு நடுவில் நின்று கதறிக் கொள்வதுபோல. சத்தத்துக்கு பதிலாக சத்தமே. எல்லோருக்கும் கேட்டாலும் யாருக்கும் கேட்காத மிகையொலி அவை. உணர்பவர்களுக்கே அதில் சேதியுண்டு.

அம்மா இல்லாத ஆண்கள் உண்மையில் அம்மாக்களை தேடுவதில்லை. அம்மாவின் அரவணைப்பும் கதகதப்பும் எங்கேனும் கிட்டிவிடாதா என்ற தேடலே எல்லாப் பெண்களின்  முகங்களையும் ஆழப்பார்க்கச் செய்கிறது. பார்க்கும் முகங்களில் ஒரு சிலவே நட்பாகவோ கூடப்பிறந்தவளாகவோ உணரச்சொல்கிறது. ஒரு நிமிடம் மட்டுமே கண்டதாயினும் ஒரே ஒரு முகமே பட்டென மனதில் விழுந்து இவள் எனக்கானவள் என்ற இணைப்புக்கு பதியம் போடுகிறது. அன்னவின் விலா எழும்புகள் ஒரு புதிர்தேசம்! சட்டென பார்க்கையில் அவைகள் கழுத்தினை தாங்கிப்பிடிக்கும் பீடமாகத்தான் தெரியும். ஆனால் உண்மையில் அவை மெலிந்து கீழ்நோக்கிக் குவிந்த அவளது சிறுமுலைகளை ஏற்கும் கேடய விளிம்பின் முனைகளெனவோ அல்லது எடைகளற்ற அச்சிறு பஞ்சுப்பொதிகள் நிரவிய மேடிட்ட பகுதிகள் சிறுநீரலைகள் தளும்பும் ஏரிக்கரையினையோ ஒத்திருக்கும். இருந்தும் இல்லாமலும் புடவையின் முந்தானைக்கடியில் விளையாட்டுக் காட்டும் அவையிரண்டும் புதிரின் விடையறிய ஏங்கித் திணறும் என்மேல் என்றைக்கும் இரக்கம் காட்டியதில்லை.


Image result for annayum rasoolum actressபுடவைக்கடையில் வேலை செய்யும் அவளுக்கு சேலைகட்ட யாரும் வகுப்பெடுக்க வேண்டியதில்லைதான். மடிப்புகள் சிறிதும் கலையாத கொசுவமும் பிரித்துவைத்த புத்தகத்தின் பக்கங்கள் போன்ற நேர்க்கோடுகளாக படிந்த முந்தானையும் அணிந்த துணைக்கடை சிலைகள் எல்லோரையும் ஈர்த்துவிடுகிறதா என்ன? அதற்கு நம் உணர்வுகளுக்கு உயிர்ப்பளிக்கும் ஒருத்தி அணிந்து வர வேண்டாமா?  அன்ன அப்படி நடந்துவருகையில் அடித்துப்பிடித்து முன்னால் வந்து அமர்ந்துவிடும் அமைதி எனும் பேரழகு. ஆனால் அன்னவை எனக்கு அழகாக காட்டுவது இவையெல்லாம் இல்லை. அளவாய் வெட்டி அலையாய் தோளில் பரவி அலையும் அவளது கூந்தல். மொத்த கூந்தலும் ஒற்றைமுடிச்சில் பின்னந்தலையில் குவிந்து நின்றாலும் காதோரம் எப்பொழுதும் தெரித்து தனித்து விழும் ஒரு கற்றை முடிகள். அவைகளுக்கு இருக்கும் சுதந்திரம் உண்மையில் அன்னவுக்கு இல்லை. அவைகள் எப்பொழுது எப்படி எந்தக்கணத்தில் காதுக்குபின் ஒளியுமோ இல்லை கன்னத்தை தொட்டு விளையாடுமோ படைத்த இறைக்கே வெளிச்சம்.

அன்னவிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் சில வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது ஏற்படுத்திக்கொண்டேன். அவளது செல்போனுக்கு சில குறுஞ்செய்திகளும் அனுப்பிவிட்டு பதில் வந்துவிடாதா என தேவுடு காத்த காலங்கள் அவை. அவள் வேலை செய்யும் புடவைக் கடைக்கே சென்று அவளை பார்த்துக்கொண்டிருப்பதும் அவளுடன் பேசவிழைவதும் அவளுக்கே பிடிக்கவில்லைதான். தொல்லை தாங்காமல் ஒருமுறை அழைத்து உனக்கும் எனக்கும் ஆகாது நம் மதங்கள் வேறு என பல காரணங்களை அடுக்கினாள் ஒருநாள். வரட்டுக் காய்ச்சலின் பிடியில் இருக்கும் ஒருவனுக்கு சூடான டீயும் தொட்டுத்திங்க ஒரு பன்னுமே உடனடித் தேவை. அவளோ நாம் ஏன் பிரியாணி இப்பொழுது சாப்பிட இயலாது என விளக்கிக்கொண்டிருந்தது எனக்கு அசூசையாகவும் கோவத்தையும் வரவழைத்தது. மூளையால் அல்ல, மனதால் ஒன்றை நம்ப ஆரம்பித்துவிட்டால் அதற்கு தர்க்கரீதியிலான பதில்களோ தகவல்களோ தேவையே இல்லை. நம்பிக்கை ஒன்றே எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிட வழி நடத்துக்கிறது. அது என் மீது அன்னவின் விருப்பம் கனியும் காலத்திற்கு என்னை கைப்பிடித்து கூட்டிச் சென்றது.

Related imageகம்பீரக் குதிரையில் ராஜகுமாரன் வந்து கைத்தலம் பற்றி அரசவாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் கனவுகள்  உண்மையில் ராஜகுமாரிகளுக்கே வருகின்றன. வேலையில்லாத பொறுப்புகளற்ற தந்தையும் சகோதரனும் கொண்டு முழுநாள் உடலுழைப்பை கோரும் குறைச்சம்பள வேலையில் குடும்பம் நடத்தும் அன்ன போன்ற பெண்களுக்கு கனவில் எவனாவது ஒருத்தன் வந்து நரகத்தில் இருந்து கைதூக்கி விடமாட்டானா என்பதே கனவாக வரும்போல. கைநீட்டினவர்களுக்கெல்லாம் உழைக்கும் பெண்கள் தூக்கிவிட கைநீட்டிவிடுவதும் விடுவதில்லை. வாழ்வோ சாவோ இவன் நம்முடன் கடைசிவரை வருவான் என்ற ஒரு நம்பிக்கை காதலை பிறக்க வைக்க தேவைப்படுகிறது. அன்னவிற்கும் என்மீது அந்த உறுதியால் மட்டுமே காதல் வந்திருக்க வேண்டும். அது ஆயிரம் நட்சத்திரங்கள் சூழ தேவர்கள் ஆசிர்வதிக்க தேவதைகள் சுற்றி வந்து வாழ்த்துப்பா பாட  வெளிப்படவில்லை. கையில் விரல் சூப்பி அப்பாவின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தை அம்மாவைக் கண்டவுடன் சட்டென கண்ணீர் வழியச் சிரிக்கையில்  வெளிப்படுத்தும்  பளீர்ப்புன்னகை போல அவள் தன் காதலைச் சொன்னாள். என் காதலை ஏற்றுக்கொண்டாள். நான் அவளை விட்டு எப்பொழுதிலும் விலகுவதில்லை என்பதை என் உயிரினில் எழுதிக்கொண்டேன்.

Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#6 of 10)அன்னவுடனான காதல் அவளையும் அவளது வாழ்வையும் புரியவைப்பதில் மிக முனைப்புடன் இருந்தது. அவள் கூட்டிச்சென்ற சர்ச்சில் வைத்து அவளது தோழி நீ மதம்மாற தயாரா எனக்கேட்ட பொழுது எனக்கு உண்மையில் என்ன சொல்வதென தெரியவில்லை. என் மதமோ அவள் மதமோ எவ்வகையிலும் எங்கள் காதல் உருவாக தடையாக இல்லாதபொழுது திருமணம் என்ற அமைப்பிற்குள் வர மட்டும் எப்படி யாருக்கு அது தேவையாக இருக்கும் என எவ்வளவு யோசித்தும் புரியவேயில்லை. மதம் என்பது என் பிறப்பு என்மீது சுமத்தியது. அதனை யார் கண்ணையும் குத்தவோ யாருக்கும் தீங்கு விளைவிக்கவோ இல்லாமல் ஏன் எனக்கே நான் பாதுகாப்பு கவசமாககூட  நினைத்துக் கொள்ளாத பொழுது மாறப்போகும் மதம் மட்டும் எப்படி எனக்கு வாழ்வின் நெறிகளை கொடுத்துவிடும்? என்மதம் தான் பெரிது என்ற உணர்வுக்கூட எனக்கு இல்லாதபொழுது எப்படி உன் மதத்திற்கு மாறிய பின்தான் திருமணம் என்பது அவசியமானதாகப்படும்? என் மதமோ உன் சாமியோ அது ஏற்றுக்கொள்வது என்பதை விட உணரக்கூடியதல்லவா? அவ்வாறில்லையெனில் யாரையோ ஏமாற்ற வேண்டி நாமே ஏமாந்துபோக வேண்டியா இதைச்செய்ய இயலும்? அன்ன என்னை இவ்விடயத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டேன்.

Related imageஅன்னவுக்கு இதைவிட ஒரு பெரிய பயம் இருந்தது. சண்டை சச்சரவென வெட்டியாய் திரிந்துகொண்டிருக்கும் தம்பியை பார்த்துப்பார்த்து வீரம்தான் ஆண்மையென காட்டித்திரியும் ஆண்களை அவள் வெறுக்க தொடங்கியிருக்கவேண்டும். இயல்பிலேயே பேடியான நான் தப்பிக்க வழியில்லாத நிலையிலோ அல்லது குட்டக்குட்ட குனியமுடியாத நிலையிலோ திருப்பி அடிக்க ஆரம்பித்தால் சாது மிரண்ட கதை தான். பழைய பகையை வைத்து மீண்டும் வம்பிழுத்தபொழுது அவளது தம்பியையும் அவனது நண்பர்களையும் நான் கொச்சின் ரோட்டில் வைத்து செங்கலால் அடித்து மண்டை பிளக்கவைத்த காட்சியை கண்ட பிறகு அவளுக்கு என்மீதும் வெறுப்பு வந்திருக்கும். தேடிக் கண்டடைந்தவனும் பொறுக்கித்தனமாய் நடுரோட்டில் வீரம் காட்டியதை அவளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. அவள் தம்பி அடிவாங்கியதை விட நான் சண்டைக்கு நின்றதே அவளுக்கு அதிக வலியை கொடுத்திருக்கக்கூடும்.  அந்த கிருத்துவ நண்பனது வீட்டில் அன்னவை வலியப்போய் சந்தித்து அவளது வலியை உணர்ந்துகொண்ட வேளையில் எனக்குள் இருந்த அந்த சாது மிரண்டால் வெளிப்படும் மிருகமும் கூட அன்னவுக்காய் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அன்றைக்கு பழிக்குப்பழியாய் அவன் தம்பிடம் நான் மாட்டிய நேரத்தில் அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து என்னை பிரித்தெடுத்துவிட்டார்கள். அன்னவுக்காக மரித்துப்போன அந்த மிருகத்தை நான் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கவில்லை. அது என்னால் இந்த ஜென்மத்தில் முடியாது என தெரிந்த கணத்தில் நான் குற்றுயிராய் ஆக்கப்பட்டிருந்தேன். அந்த ஒற்றை நண்பன் மட்டும் என்னை தடுத்தணைத்து ஆட்கொண்டிருக்காவிட்டால் நான் அன்னவின் வீட்டு தெருவிலேயே பிணமாக்கப்பட்டிருப்பேன். அன்றைக்கு எங்கள் காதல் நடுத்தெருவில் யார்யாராலோ மிதித்து சிதறடிக்கப்பட்டது.

ஆண்களுக்கு வீட்டில் இருக்கும் பெண் என்பவள் ஒரு அடையாளச்சின்னம். அம்மா என்றால் அன்பாய் மட்டுமே இருக்கவேண்டும். அக்கா என்றால் அவள் பாசத்தை மட்டுமே காட்டவேண்டும். அவர்களுக்கு வேறு உணர்வுகளோ உறவுகளோ வீட்டு ஆண்கள்  பார்த்து வைத்ததை மீறி நிகழ்ந்து விடக்கூடாது. இந்த பிம்பத்தில் இருந்து சிறிது விலகினாலும் ஆண்களுக்கு அவர்கள் உரிமையின் மேல் அடி விழுகிறது. எனக்கு பத்து பெண்நண்பிகள் என பொதுவெளியில் பீற்றிக்கொள்ளும் ஒருவனால் அவன் தங்கையோ அக்காவோ எனக்கு ஒரு ஆண்நண்பன் எனச் சொல்வதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் வீட்டுக்கு சம்பாதித்துப் போடுபவளாக இருந்தாலும்கூட.

அன்னவுக்கும் வீட்டுச்சிறை கிடைத்தது. அவன் தம்பிக்கு நான் வேறுமதம் என்பதைவிட அவனை அடித்ததுதான் ஆற்றவியலாத வெறி. அவள் அப்பாவுக்கு பெண் வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாற்றுபவள் என்பதைவிட சுயபுத்தியாய் காதலித்துவிட்டாள் என்பது பெருத்த அவமானம். எவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிவைத்து குடும்பமானத்தை காக்கிறோமோ அவ்வளவிற்கு ஊரார் வாயில் விழவேண்டாம் என்கிற நிம்மதி. அன்னவை விட்டு பிரியவேண்டும் என்பது என் விருப்பமோ அவளது விருப்பமோ அல்ல. ஆனால் ஒருவரை ஒருவர் வருத்திக்கொண்டு வரவைப்பதா காதல்? அவளுக்கு வேரொரு ஆளுடன் நிச்சயம் ஆனது. நான் என் அப்பாவுடம் அவரது ஊருக்கு மீன்பிடி தொழிலுக்காக அழைத்து வரப்பட்டேன். இரண்டு குடும்பமும் நினைத்திருக்க வேண்டும் இந்த மாற்றங்கள் நிச்சயமாய் எங்கள் காயங்களை ஆற்றிவிடவேண்டுமென.

வாழ்க்கை எல்லோரையும் எப்பொழுதும் கைவிட்டுவிடுவதில்லை. அது காட்டும் நல்வழியெல்லாம் நண்பன் என்ற உருவிலேயே வருகிறது. அந்த கிருத்துவ நண்பன் என் அப்பாவின் ஊருக்கே வந்து எனைக்கண்டான். அன்னவின் திருமணத் தேதியை சொன்னான். கடைசிவரையில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மருகி கருகிப்போன அவனது காதல் கதையை கேட்டபொழுது எனக்கு அன்னவுடன் ஏன் சேர்ந்து வாழ்ந்துவிட முடியாது எனத்தோன்றிற்று. மனதுக்குள் மருகி தினந்தினம் சாவதைவிட ஒருநாளாவது அவளுடன் வாழ்ந்துவிடுவது உத்தமம் எனப்பட்டது. இப்பொழுதும் எனக்குள் இருந்த மிருகம் செத்துத்தான் கிடந்தது. ஆனால் நம்மை நம்பி இருக்கும் ஒரு உயிரை கைவிடல் ஆண்மையில்லை என்பது தெளிந்தது. நேரே கிளம்பி அன்னவை அவளது சர்ச்சிலேயே கண்டு உண்மையான ஆண்மகனாய் அவள் கைப்பிடித்து நடத்தி அழைத்து வந்த வேளையில் கட்டமைக்கப்பட்ட ஆண்மை எனப்படும் பொய்மைகள் எதனாலும் எங்களை தடுத்து நிறுத்திவிட இயலவில்லை. அன்னவுக்கு என் செயல் பெருத்த ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தாலும் இம்முறை அவள் என்னுடன் வந்துவிட துளியளவும் தயங்கவில்லை. இம்முறை அன்னவை அழைத்துக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன். நண்பனது வீட்டில் தங்கி டிரைவராக ஒரு வேலையைத்தேடிக்கொண்டு அன்னவுடனான திருமணத்திற்கும் தயாரானேன். அவரவர் மதம் அவரவருக்கு என்றபடியே.

Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#5 of 10)ஒரு பெண் எப்பொழுது தன்னை ஒருவனுக்கு கொடுக்க விரும்புகிறாள்? காதல் மட்டுமே இருவரை காமத்தில் சென்று சேர்ப்பதில்லை. தனக்காக உயிரையும் ஒருவன் கொடுக்க துணிந்துவிட்டான் என்ற நிலையில் அன்பினால் மட்டுமே படைக்கப்பட்ட ஒரு பெண் பதிலுக்கு என்ன கொடுத்துவிட இயலும்? தன்னையே கொடுப்பது என்பதும் அவளை அவளாகவே வைத்திருக்கும் ஒருவனுக்கு கொடுத்து ஈடு செய்ய முடியாத செயல் தான். இருப்பினும் தனக்கே தனக்கென ஒருவன் தன் வாழ்வில் இருக்கிறான் என அவள் உணரும் அக்கணம் தன்னையே கொடுத்தல் என்பதையே ஒன்றுமில்லாதாக ஆக்கிவிடுகிறது. கொடுக்கப்பட்ட பொருளைவிட கொடுத்த விதத்தில் வெளிப்படும் அளவில்லாத பிரியமும் வாஞ்சையுமே அப்பிணைப்பை பந்தமாக்குகிறது. அன்றொரு இரவில் அன்ன அவளை எனக்குக்கொடுத்தாள். நான் என்னைக்கொடுத்தேன். கொடுக்கும் முத்தத்தை விட பெறப்பட்ட முத்தத்திற்கு சுவை அதிகம். அன்றைக்கு ஒருவர் உடலில் ஒருவர் தேடித்திளைத்தோம். பாதுகாப்பும் எதிர்கால வாழ்க்கையும் கேள்விகுறியாக இருந்த எங்களுக்கு அத்தேடல் மிகத்தேவையானதாக இருந்தது. தேடிக் கண்டடைந்தவைகள் நாங்கள் முன்னேரே கண்ட உன்னதங்களுக்கு சற்றும் குறைந்தவைகளல்ல. அம்மாவிற்குப் பிறகு யாராலும் எனக்கு கொடுக்கவியலாத என்றாகிலும் கிடைத்துவிடும் என ஏங்கித்தவித்து தேடிக்கொண்டிருந்த அரவணைப்பும் கதகதப்பும் அவள் அன்றைக்கு எனக்களித்தாள்.  அந்தக்கணத்தில் நான் உலகத்திலேயே மிகப்பாதுகாப்பான இடத்தில் இருப்பதென உணர்ந்தேன். அவள் அணைப்பிலேயே உறங்கிப்போனேன்.

கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது. கார்திருடும் கும்பலில் இருந்த நண்பர்களில் ஒருவன் பெரியகுற்றங்களாக செய்யபோய் ஒரு நிகழ்வில் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டான். சந்தேகத்தின் பேரில் போலிஸ் என்னைப்பிடித்து சிறைச்சாலைக்கு அனுப்பியது. நிர்க்கதியாய் நின்ன அன்ன அவளது குடும்பத்தாரால் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வலுக்கட்டாயமாக அவளுக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. நான் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட படங்கள் கொண்ட செய்தித்தாள் அவளுக்கு காட்டப்பட்டது. அவள் எங்கிருந்தாலும் எந்தநிலையிருந்தாலும் என்றைக்காவது வந்தழைத்துச்செல்வேன் என்ற நம்பிக்கை அவளை வாழத்தூண்டியிருக்க வேண்டும். ஆனால் நான் மீண்டும் அடிதடி குற்றச்செயல்கள்தான் ஆண்மை என்ற நிலையில் மாட்டியிருக்கும் இந்த சூழல் அவளை நம்பிக்கையிழக்க செய்திருக்க வேண்டும். என்மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டதைவிட அவள் அவள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கவேண்டும்.  எதை நம்பி என்னை விரும்பினாளோ எப்படி நான் இருக்கக்கூடாது என்பதால் என்னுடன் வரத் துணிந்தாலோ அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட அந்த இரவில் அவள் தற்கொலை செய்துகொண்டாள்.

போலீஸின் பிடியில் இருந்து தப்பி ஓடி அவள் வீட்டை அடைந்த கணத்தில் தான் அவளைக் கண்டேன். சடலமாய் வீட்டின்முன் கிடத்தப்பட்டிருந்தாள். இப்பொழுது அந்த வீட்டில் என்னை யாரும் தடுக்கவோ அடிக்கவோ இல்லை. அவளை கட்டியணத்து அழுதேன். அதே ஒல்லியான விரைத்த உடல். கூர்ந்த நாசி, சதைப்பற்றற்ற கன்னங்கள். சிவப்பு பருக்கள். புதிருக்கு விடைதெரிந்த தளும்பாத மார்புகள். கலையாத உடை. பச்சை நரம்புகள் ஓடும் நீளமான விரல்கள். மூடிக்கிடக்கும் பெரிய கண்கள். அசைவற்ற உடல். உதடுகள் இணையும் ரசவாதக்குழியில் இன்றைக்கு எனக்கான எந்த சேதியும் இல்லை. காதோரம் வழியும் அந்த ஒரு கற்றை முடிகள் மட்டும் அவள் முகத்தில் எப்பொழுதும் போல சுதந்திரமாக காற்றில் உருண்டு அலைந்து கொண்டிருந்தது.

வாழ்வில் ஒருமுறை உணரப்பட்ட உன்னதங்கள் எதுவும் நினைவில் இருந்து அழிந்து விடுவதில்லை. அவைகள் நம்முள் ஒன்றாக கலந்துபோய் விடுகின்றன. அந்த உன்னதங்கள் நம் வாழ்வு செல்லும் பாதையை சீரமைக்கின்றன. பிடிவழுவாது மிச்சத்தினை நடந்து கடக்க உதவுகின்றன. அன்ன இப்பொழுது என்னுடன் இல்லைதான். ஆனால் அவள் காதல் எனும் உன்னதம் என்னை இன்னமும் வழிநடத்திக் கொண்டுதான் இருந்தது. அர்த்தமுள்ளதோ இல்லையோ ஒரு சிறு நம்பிக்கை நம்வாழ்க்கையை நாம் பிடித்தபடி வாழவைக்கிறது. அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும். ஆனால் அது நம்மளவில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருப்பதால் அதன் பலன் அளப்பறியது. ஆற்றில் தண்ணீருக்கு அடியில் முங்கி கண் திறந்து பார்த்தால் மனசுக்கு பிடித்தவர்கள் நமக்காக தெரிவார்கள் என்பது சிறுகுழந்தையின் விளையாட்டுதான். ஆனால் நான் அதனை மனப்பூர்வமாக நம்பினேன். எப்பொழுதெல்லாம் அன்னவை காண விரும்பினேனோ அப்பொழுதெல்லாம் ஒரு முங்கு நீச்சலில் அவளைக்கண்டேன். எனக்கு இப்பொழுது அன்ன என்னைவிட்டு எங்கும் போய்விட இயலாதென்பதில் ஏக மகிழ்ச்சி.

Image result for annayum rasoolum
இப்பொழுது அன்ன உடலாக என்னுடனில்லை. அவள் இல்லாமல் வாழ பழகிக் கொண்டிருக்கிறேன். அன்னவை போல என்னால் மனதில் இருப்பதை கண்களில் சொல்லாமல் மறைத்து வாழ தெரியவில்லை. என் மனதில் திணிக்கப்பட்ட சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் கொடுத்த குழம்பமும் கலங்கமும் நிறைந்து அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களை மறைக்க கருப்புக்கண்ணாடி அணிந்து கொள்கிறேன். உள்ளிருக்கும் மிருகம் இப்பொழுதும் செத்துத்தான் கிடக்கிறது. அன்னவை பார்க்க வேண்டுமெனில் இன்னமும் ஒரு முங்கு நீச்சல் மட்டுமே எனக்கு போதுமானதாக இருக்கிறது.


சில நம்பிக்கைகள் எப்பொழுதும் பிறருக்கு சிறுபிள்ளைத்தனமானவைகள் தான். ஆனால் அவைகளே நம்பியவனின் வாழ்க்கையை  உன்னதங்களுடன் இணைக்கின்றன. வழி நடத்துகின்றன. கைப்பற்றி அழைத்துச்செல்கின்றன.

நான் நடந்துகொண்டிருக்கிறேன்.

annayum rasoolum - 2013 

வியாழன், அக்டோபர் 03, 2013

ப்ரே பண்ணுவேன்! நானும் ப்ரே பண்ணுவேன்!!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் ப்ரேயர் சாங் கேட்டேன்!

லவ் பண்ணி விட்டுட்டு போன பெண்ணை வாழ்த்தி ப்ரே பண்ணனுமாம்ல ப்ரே! ஆண்களின் காதல் தோல்வியின் வலி அவ்வளவு எளிதில் கடந்துவரக் கூடியதா என்ன? அப்பறம் இவ்வளவு நாள் வசந்தமாளிகை சிவாஜி ரத்தம் கக்கியதற்கும், நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் உயிரையே விட்டதுக்கும், வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் கோவில் மண்டபத்துல ஊமையாகி குடியேறியதற்கும், மூன்றாம் பிறை கமல் அடிவாங்கி ப்ளாட்பாரம் முழுக்க உருண்டத்துக்கும், மைக் மோகன் படத்துக்கு படம் பன்னு சாங்ஸ்சா பாடித் தள்ளினதுக்கும், காதலிக்கு கல்யாணமே செய்துவைக்கும் பூவே உனக்காக விஜய்யின் தியாகத்துக்கும், சுப்ரமணியபுரம் ஜெய் குத்து வாங்கி செத்ததுக்கும் அர்த்தமே இல்லையா என்ன?!

உண்மையில் சொல்லப்போனால் இப்படி தன்னையும் வருத்திக்கொண்டு வாழ்வையும் கெடுத்துக்கிட்டு எல்லோரையும் சிரமப்படுத்தறதுக்கு பதிலா இப்படி வெகு இலகுவாக இந்த வலியை கடந்து வருவது சாலச்சிறந்ததுன்னு தோணுது. எப்படியும் பின்னாடி எவளையாவது கண்ணாலம் கட்டி புள்ள குட்டியோட சந்தோசமாத்தான் இருக்கப் போறோம். இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பின்னாடி நமக்கே நமக்குன்னு கமுக்கமா சிரிச்சுக்கற தமாசாத்தான் ஆகப்போகுது.

இதாச்சும் அவனவன் உணர்வுகள் அவனவன் அளவில். ஆனா ஒருதலைக் காதலி முகத்துல ஆசிட் வீசறதும், நமக்கு கிடைக்காதவ வேற எவனுக்கும் கிடைக்கக் கூடாதுன்னு கழுத்தை அறுத்து கொலை செய்யறதும், அவ எங்கனையும் வாழ்ந்துறக் கூடாதுன்னு அந்தரங்கத்தை எல்லாம் வலைல ஏத்தறதும்னு வன்மமும் பழிவாங்கலுமாக நடந்து கொண்டிருக்கும் சமூகவியாதிகளை அறவே ஒழித்துக் கட்டவாவது இப்படி காதல் தோல்வியை ஜஸ்ட் லைக் தட் தட்டி விட்டுட்டு ஒரு வித செல்லக் கோபமும், கால் இடி எரிச்சலும், ப்ரெண்ட்லி பொறாமையும் கொண்டு “உங்கப்பா பேண்ட்டு டர்ர்ர்ரு...”ங்கற மாதிரியான சின்னப்பசங்க சண்டையின் பஞ்சாயத்து தீர்ப்புகளாக முடித்துக் கொள்வது உண்மையில் அருமையா இருக்கு!பாடல் முழுக்க ஒரு சின்ன குழந்தைத்தனத்தின் வீம்பு விரவியிருக்கும் இந்த ப்ரேயர் பாட்டை மனதார வரவேற்கிறேன்.

ஆகவே,

உங்கப்பா வெஸ்பா உன் காலேஜ் கேட்டில் பஞ்சராகனும்!

வெள்ளரி ஃபேசியலுக்கு பிறகு உம்மூஞ்சி வெளிரிப் போகனும்!

ரிசப்சன் போட்டோஸ்ல உன் தலைக்குமேல நானே கொம்பு வைக்கனும்!

கொடியில காயப்போட்ட உன் ஜட்டிமேல காக்கா கக்கா போகனும்!

உன் மாமியாரும் நீயும் ஒன்னா மருமக கொடும சீரியல் பார்க்கனும்!

உன் கல்யாண பொடவைல உன் புருசனே காஃபியை தவறி கொட்டனும்!

சீயக்கா குளியல் நடுவால பாத்ரூம்ல தண்ணி நிக்கனும்!

உம்புருசனின் முன்னால் லவ்வரு உன்னைவிட வெகு அழகா இருக்கனும்!

ஹனிமூன் மொதநாளே அவனுக்கு பரோட்டா தின்னு நைட்டுபுல்லா பேதியாகனும்!

பாத்ரூமே இல்லாத இடத்துல உனக்கு அர்ஜெண்ட்டா மூச்சா வரணும்னும்


ப்ரே பண்ணுவேன்!  நானும் ப்ரே பண்ணுவேன்!!

உங்க ப்ரேயர் என்னங்கப்பு? :)


செவ்வாய், அக்டோபர் 01, 2013

ஜீவனே... ஜீவனே...

கானா பிரபா அவர்களின் மிகவும் டச்சிங்கான ”இளையராஜா எனக்கு இன்னொரு தாய்” என்ற பதிவினை படிக்க நேர்ந்தது. இளையராஜாவை பொறுத்தவரை மற்றவருக்கு தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் வழிகாட்டியாகவும் தெய்வமாகவும் பலபேருக்கு இருப்பது பெரிய விடயமல்ல. ஆனால் அந்த உணர்வினை பெற்றவருக்கே அது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிடிப்பையும் மாற்றத்தினையும் ஏற்படுத்துகிறது என்பது தெரியும். வலிகளை ராஜாவின் கரம்கொண்டு கடந்து வந்த கானா பிரபாவும் பொறாமைப்பட வைக்கும் ஒரு அதிர்ஷ்டசாலிதான்!


இசை என்பது எனக்கு இங்கிலீசு மீடியம் படிக்கும் மேட்டுக்குடி மக்களால் அறிமுகப்பட்டது. இதையுங்கூடி ஒருமுறை எழுதியிருக்கிறேன்! ( பீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்... ) பேயடி அடிக்கும் ட்ரம்ஸ்சும், கதறக்கதற இழுக்கப்படும் லீட் கிட்டாரும் தான் பிடித்த வாத்தியங்கள். மெட்டாலிகா போலவோ மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு வெறுங்கையில் கிடாரை காது கேக்கறதுக்கு தோதாக இழுத்தபடியே தலையை பரப்பிவிட்ட படி மாரியாத்தா ஆடவேண்டுமென்பது ஒரு அடையாளத்தேடல். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த கம்பிமுடிக்கு வைத்த ப்ஃங்க் ஸ்டைல் பிரபுதேவா இந்து படத்தில் வைத்திருந்த தேன்கூடாட்டம் வந்ததே தவிர மெட்டல் ஸ்டார்னு சொல்லிக்கறமாதிரி இல்லை :( அன்றைக்கெல்லாம் ப்லிப்ஸ் பவர்ஹவுஸ் தான் பயங்கற செட்டு! அதுலயும் சில ஸ்பீக்கர்களை கழட்டி பானைமேல கவுத்தி அக்வெஸ்டிக் இஞ்சினியரிங்க் வயரிங்கெல்லாம் பார்த்து Bass ஏத்தி பாட்டு கேட்டுக்கிட்டு இருந்த காலம்.


அப்பவும் சில விவரம் தெரிஞ்ச எதிர்கோஷ்டி மக்கள்ஸ் இளையராஜாவை கேட்டுக்கிட்டு இருப்பாங்க. அப்ப எனக்கு லவ்வு, பிரிவு, வேதனை, பெத்தவங்க பாசம், இறப்பு சோகம், பிறப்பு சந்தோசம்னு எதுவுமே மனதில தாக்காத பியூர் இம்மெச்சூரிட்டி பாய். அவனுங்க எங்களை “வாங்கடா பேயோட்டிகளா..”ன்னு கூப்பிடறப்ப நாங்க “போங்கடா தபலா தட்டிகளா..”ன்னு ஆரம்பிச்சு.. எப்ப பாரு ஒரு தபலாவ வைச்சுக்கிட்டு லொட்டு லொட்டுங்கறது தான் உங்காளு மூஜீக்காடான்னு வம்பிழுப்போம். அவனுங்க இந்த வயலின் தெரியுமா, இந்த கிடார் நோட்ஸ் புரியுமான்னு கொஞ்ச நேரம் பேசி ட்ரைசெஞ்சு பார்த்துட்டு தொலைங்கடா பீத்தரைகளானுட்டு ஆஃப்பாயுருவானுக.ஆனா எனக்கும் மொட்டையை புரிந்துகொள்ளும் ஒரு காலம் வந்தது. ஒரு நல்ல நண்பி மேல லவ்வு கெளம்பி விநாயக சதுர்த்திக்கு கடலை பருப்பு வெல்லமெல்லாம் போட்டு நெருப்புல வாட்டற தேங்காயாட்டம் வெந்து வெதும்பி திரிஞ்சேன் சில காலம். அப்பறம் ஒர் நல்ல நாள் பார்த்து சொல்லி பெரிய பழமா வாங்கினது தனிக்கதை. கோவைல பழம் வாங்கறதுன்னு பொண்னு பன்னு குடுத்துருச்சுன்னு அர்த்தம். அப்பறம் என்ன?! அதுக்குன்னே இருக்கும் பழம் வாங்கியோர் மீட்பு சங்கத்துல சரண்டர். சங்க வேலைகள் பெருசா ஒன்னுமில்லைங்க. எல்லாம் லோக்கல் மக்காதான். கைக்காசையெல்லாம் கலெக்ட் செஞ்சு லம்ப்பா ஒரு அமவுண்ட் தேத்துவானுக. பாகுபாடெல்லாம் இல்லை. நம்ப ஷேரும் பெருசாத்தான் இருக்கும். நியுஸ் சும்மா தீமாதிரி பரவிரும். பத்திருவது மக்கள்ஸ் சேர்ந்து அன்னிக்கு நைட்டு ஹட்கோல பேச்சுலர்ஸ் தங்கியிருக்கற சேவல் பண்ணைல தான் ஜமா. 


என்னை நடுவுல ஒக்கார்த்தி வைச்சுட்டு எல்லா வேலையும் பரபரன்னு எப்பவும்போல நடந்தது. ரெண்டுபேரு பரோட்டா, சிக்கன் பிரியாணி, சில்லி ஐட்டங்கள்னு ராயப்பாஸ்ல இருந்து பார்சஸ்! சிலதுக பெரிய துணிப்பையா எடுத்துக்கிட்டு ஹோல்சேலா கூலிங் போகாம இருக்க பேப்பரெல்லாம் சுத்தி சில்பீரா ரொப்பிக்கிட்டு வருவானுவ. ரெண்டு பேரு வீட்டையெல்லாம் ஒழிச்சு நீட்டா ஹாலை ரெடிபண்ணி பாயைவிரிச்சு ஒக்கார்ந்தம்னா அது ஓடும் விடிய விடிய. அதாவது சங்கவிதி என்னன்னா பழம் வாங்குனவன் என்ன வேனா பேசலாம். கதறிக்கதறி அழலாம். திட்டலாம். மத்தவிங்க ஆறுதலா ஏதாச்சும் சொல்லலாம், காறிக்காறி துப்பலாம், அழறதுக்கு தோள்கொடுக்கலாம். இல்லைன்னா சும்மா ஊங்கொட்டலாம். இன்னும் அல்பையா சொல்லப்போனா எல்லாரும் கூடி கோழி ஆனவன கும்மியடிச்சுறனும். 


மத்தியானம் வாங்குன பன்னுக்கு சாயந்தரம் வரைக்கும் பஸ்ஸ்டேடுலயே முகமெல்லாம் வெளிறிப்போய்தான் உட்கார்ந்திருந்தேன். அப்பறம் சாயந்தரமா தேடிவந்த ஈஸ்வரன் கிட்ட விசயத்தை சொல்லப்போக அது இப்ப எல்லாங்கூடி கொண்டாடத்துல வந்து நின்னிருக்கு! இதே அடுத்தவனுக்கு நடக்கறப்ப நானெல்லாம் சும்மா பூந்து பூந்து வெள்ளாடுவேன். மத்தவிங்களை ஓட்டறது முடிவெடுத்துட்டா என் நாக்கெல்லாம் நொடிநேரத்துல நைக்கி ஷூவெல்லாம் போட்டு ரெடியாகி நாறடிச்சுடும். ஆனா அன்னைக்கு எனக்குன்னு வந்தப்ப வாயத்தொறக்க முடியலை! பசங்க எப்படி எப்படியோ பேசிப் பார்த்தானுவ...கேட்டுப் பார்த்தானுவ...கெஞ்சிப் பார்த்தானுவ... திட்டிப் பார்த்தானுவ... ம்ம்ஹீம்.. நான் வாயத் தொறக்கனுமே?! என்ன சொல்லறதுன்னு தெரியலைங்கறதை விட எப்படி சொல்லறதுன்னுதான் தெரியலை! சோகமாகவோ சீரியசாவோ எந்தக் காலத்துலயாவது பேசியிருந்தா அது தன்னால வந்திருக்காதா? எதுகேட்டாலும் உர்ருன்னு மூஞ்சை வைச்சுக்கிட்டு மோட்டுவளைய பார்க்கறதும் கீழா வெறிச்சு பாய நோண்டறதுமாவே போய்க்கிட்டு இருந்தது. ”ஒன்னுமில்ல.. விடுங்கடா...” இதைத்தான் 4 மணிநேரமா நான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கவேண்டும். நடுவுல பரோட்டாவும் சால்னவும் மட்டும் பிச்சிப்போட்டு சொரணையா தின்னுமுடிச்சது ஞாபகம் இருக்கு. அவனுங்கெல்லாம் ஆளாளுக்கு ரெண்டுமூணு கவுத்துக்கிட்டு தின்றும் தீர்த்துட்டு பழகேசட்டை மட்டும் வாக்மேன்ல போட்டுவிட்டுட்டு எப்படியாச்சும் சாவுடா நாயேன்னு கெடைச்ச மூலைல உருள ஆரம்பிச்சுட்டானுவ. பழகேசட்னா ஒன்னுமில்லைங்க.. லவ்பெயிலியரு பாட்டா இருவது புடிச்சு கேசட்டுல எழுதி சாமிபாட்டு கணக்கா போட்டுவிட்டு பழம்பெற்றானை காண்டாக்கும் வேலை! எல்லாம் தமிழ்தான் . நானும் மனசெல்லாம் எரிய அப்டியே சாஞ்சுக்கிட்டு ஒரு நாலு பாட்டு கேட்டிருப்பேன். நெஜமாலுமே இதுல ஏதாச்சும் பீலிங்கு கிடைக்குமானு ஒரு நப்பாசை. அஞ்சாவது பாட்டுன்னு நினைக்கறேன். “பாடிப்பறந்த கிளி... பாத மறந்ததடி..”ன்னு ஆரம்பிச்சது, முன்னாடி பலதடவை காதுல விழுந்த வரிகள்தான். ஆனா இந்தக்கணத்துல ஒவ்வொரு எழுத்தும் எனக்காகவே எழுதுனமாதிரி ஒரு தரிசனம். எப்பொழுதும் கிண்டலடிக்கும் அதே லொட்டு லொட்டு தாளகட்டு தான்... ஆனால் நான் அன்றைக்கு உணர்ந்தது வேறு மாதிரி... இழுக்கற வயலின் நேரா ஒரு காதுவழியா மண்டைக்குள்ள சொருவுது. ”ஒத்தையடிப்பாதையில நித்தமொரு கானமடி”ன்னா நான் எங்கோ ஆளவரமே இல்லாத தீவின் நடுவில் இருக்கறேன். ”கண்டகனவு அது கானாதாச்சு..”ன்னா மண்டை வெடிக்கற வலி! அதுக்கப்பறம் வந்துச்சுய்யா ஒரு வரி! ”வீணாசை தந்தவரு யாரு யாரு?” அப்படியே உள்ளுக்குள்ள நொறுங்கிட்டேன். அதுவரைக்கு உம்மனாங்கோட்டானா இருந்தவனுக்கு என்ன சொல்லி அழனும்னு தெளிவு வந்துருச்சு. வாய் கேவுது. கண்ணுல கரகரண்ணு கொட்டுது. ஒடம்பெல்லாம் நெகுநெகுன்னு ஆயிருச்சு... ”சொல்லில் அடிச்சா அது ஆறாது..”ங்கறப்பவெல்லாம் மொத்தமா சேதாரமாயிட்டேன். வாய்விட்டு கதறிக்கிட்டு ஒவ்வொருத்தனையே எழுப்புனேன். “மாப்ள.. தெரியாம ஆசைப்பட்டுடன்டா... எந்தப்புடா... எல்லாம் எந்தப்பு..” இதைத்தான் அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு கதறிக்கிட்டு இருந்தேன். சத்தங்கேட்டு எழுந்திருச்சதே நாலுபேருதான். அவனுங்களும் நெஞ்சையும் கக்கத்தையும் கொஞ்ச நேரம் சொறிஞ்சுக்கிட்டே விட்றா.. விட்றான்னு சொன்னவனுங்க கொஞ்சநேரத்துலயே போடா மயிருன்னு சாஞ்சிட்டானுவ. ஹேவர்ட்ஸ் 10000னா சும்மாவா?!அன்னிக்கு நைட்டும் அதுக்கப்பறமும் அந்த ஒரு பாட்டையே தேயா தேச்சேன். வீணாசை வரிக்கு மட்டும் கேவிக்கேவி, அப்பறம் பொங்கி, அப்பறம் கண்ணுல நீர்மட்டும் முட்டி அப்பறமா ஒரு நிலைகுத்தும் பார்வைல முடிஞ்சு தெளியறதுக்கு ரெண்டு மாசம் ஆச்சு. ஆனா அந்தப்பாட்டு மட்டும் என்னிக்கும் எனக்குன்னு ஆயிப்போச்சு. இதுக்கப்பறம் பலதடவை பலபேரு பழத்துக்கு நானே தலைமையேத்து சங்கத்தை கூட்டி சிரிப்பா சிரிச்சும் ஆலோசனைகளும் ஆதரவுகளுமா அள்ளி விட்டிருக்கேன் ( அப்ப அதிதீவிர பாலகுமாரன் வாசகனல்லோ!! ) ஆனா தமிழ் பாட்டை நொட்டை சொல்லறதுங்கறது அத்தோட போச்சு.. இளையராசாவின் ஆதரவுக்கரங்கள் என்னைக்கும் என் தோளில்னு ஆயிருச்சு.


ரசனை வேறு ரசிகன் வேறு. இன்னிக்கும் தமிழ்ல கருத்தம்மால இருந்து கடல் வரைக்கும்னும் ARR ல இருந்து சந்தோஷ் நாராயணன் வரைக்கும்னும் எல்லாரு பாட்டுகளையும் ரசிக்க கொண்டாட முடியுது தான். ஆனா உணர்தல்னா அது இளையராஜாவுக்குன்னு மட்டுமே இருக்கு முடியும்னு தோணுது. அவரு பாட்டுக்கு எல்லாப் பாட்டுகளையும் அடிச்சு வைச்சுட்டாரு. வாழ்க்கையில் நமக்கான நிகழ்வுகளும் அனுபவங்களுமே அப்பாடல்களுடன் நம்மை பிணைத்து விடுகிறது. என் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு பாட்டு பிடிச்சு வைச்சிருக்கறேன். 


மாடவிளக்கை யாரோ ஏத்திவைச்சதில் இருந்து கொடியிலே மல்லிகைப்பூவைச்சு நீ பார்த்த பார்வைக்கு நன்றிசொல்லி பிச்சைப்பாத்திரம் ஏந்தவைத்தது வரை எனக்கே எனக்காக வயலின்களும் கிடார்களும் பியானோக்களும் போட்டியிடும் மாயத்தருணங்கள் . அவைகளை கேக்கும்போது அவற்றிக்கான அன்றைக்கான அந்த உலகத்திற்கு அப்படியே ஜம்ப்பிருவேன். 10 மணிநேரங்கள் சளைக்காமல் வண்டியோட்டுவேன். இரவுமுழுவதும் பஸ் ரயில் பயணங்களில் மாற்றிமாற்றி கேட்டுவிட்டு விடிந்தபின் வீடு வந்து நாள்பூராவும் தூங்குவேன். அந்த பாடல்கள் என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கின்றன என்பதில் இருக்கிறது என் வாழ்வின் சரடு. உன்னதம் என்றும் அப்பழுக்கற்றது என்றும் என் வாழ்வில் நான் கண்டடைந்த வெகு சிலதில் ராஜாவின் எனக்கான பாடல்களும் உண்டு. ரகுமானா யுவனான்னு கூட பாடல் கணக்கா படவாரியா ரெண்டு மணிநேரம் பேசிற முடியும். ஆனால் இளையாராஜாவா மத்தவங்களாங்கற பேச்சையெல்லாம் ஒரு சிறு புன்னகையால் புறந்தள்ளிப்போக மட்டுமே முடிகிறது. இத்தனைக்கும் கானாபிரபா மாதிரி ரகவாரியா ராகவரிசையா பிட்டுபிட்டா சிலாகிக்கும் உணரும் பாராட்டும் இசை நுண்ணறிவெல்லாம் எனக்கு இல்லை. ஆனா ராஜாவோட சிலது கேட்டு அதோடு என் வாழ்க்கையை பிணைச்சுக்க கூடிய உயிர்ப்புத்தன்மை இருக்கற வரையில் இன்னுமிருக்கும் 30 வருடங்களையும் அந்த 30 பாடல்களை கொண்டே எளிதில் தாண்டிருவேன்னு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குங்கப்பு! :)இதோ இன்றைக்கு ராஜா எனக்குன்னு இன்னொன்று கொடுத்திருக்கப்ல. கேட்ககேட்க தான் புரியும்.. படத்தோட பார்த்தாதான் இன்னும் எபெக்ட் இருக்கும்... மோன நிலையில கேங்கனுங்கற பம்மாத்தெல்லாம் இல்லாம தொடங்கற நொடியில் இருந்து மண்டைல சரக்குன்னு இறங்கி நேரா நெஞ்சுல சிம்மாசம் போட்டு ஒக்கார்ந்துக்கிச்சு! கேட்கக் கேட்க இப்பவும் உள்ள இருந்து ஏதோ ஒன்னு குபுக்குன்னு பொங்குதுதான். ஆனா கதறி அழனுங்கறது தேவைப்படலை. ( இளவஞ்சி வாழ்க்கைல மெச்சூராய்ட்டாறாமாம்! :) ஜீவனே... ஜீவனே... திரும்பவும் ஒருமுறை ரிப்பீட் லூப்ல ஓடிக்கிட்டே....