செவ்வாய், அக்டோபர் 27, 2009

மதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்

ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு ஆசைங்க! அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா?”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற! இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது?! அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க? எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான்! :)

அதனால இந்தமுறை வெவரமா குலசைல தசரா முடிஞ்சதும் நெல்லைல எறங்கி அரைக்கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி தின்னுக்கிட்டே மதுரைக்கு வந்து தனியா எறங்கிட்டேன்! என்னமாதிரி வயசுப்பையன் மதுரலை தனியா சுத்தறது டேஞ்சருன்னாலும் அழகிரி நாட்டுல ஒன்னும் நடந்துறாதுங்கற நம்பிக்கைல துணிஞ்சு என்னோட வலதுகாலை வைச்சாச்சு. அப்படியே காலேஜ் ஹவுஸ் தாண்டுன ரெண்டாவது ரெட்டுல ஒரு ச்ச்ச்சின்ன கடைல நாலு இட்லி, ஒரு முட்டைதோசை, கல்தோசை, ஒரு ஆம்லேட் வித் நாலு சட்னி, அரைலிட்டரு கொழம்போட கொழப்பியடிச்சுட்டு ரூமெடுத்து செட்டில். அப்பறம் ஒருநாள் பூரா மேலே சொன்ன பரதேசி வாழ்வுதான் :)

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குணநலன் இருக்குங்க! சென்னைய தவிர்த்து வேற எங்க சுத்துனாலும் 100 கிலோமீட்டருல நடையுடைல இருந்து பேச்சுவழக்கு வரைக்கும் வித்தியாசம் பார்த்துறலாம். அதென்னவோ மதுரை ரொம்ப புடிச்சுப்போனதுக்கு காரணம் இதுவரைக்கும் எல்லா வேளையும் வஞ்சனையில்லாம சாப்பிட்ட ஒரு காரணத்துக்காகவே இருக்கலாம் :)

கோவில்லயும், கடைத்தெருவுலயும் எங்கனா ஓரமா ஒக்கார்ந்துக்கிட்ட போற வர்றவங்களைப்பார்க்கறதே பெருஞ்சுகம். சாயந்தரம் வரைக்கும் பொழுதை ஓட்டிட்டு அப்பறம் ஒருநாளைக்கும் மேல யாருகூடவும் பேசாமா இருந்தா எனக்கு பைத்தியம் தெளிஞ்சிரும்னு பயந்துக்கினு மணப்பாறைக்கு எஸ்கேப்பிக்கினேன். மக்களைப் படமெடுக்க மிகச்சிறந்த இடம் மீனாட்சி கோவிலுங்க. அப்படியே கோவிலுக்குள்ளயே சுத்திக்கிட்டே இருந்தா கண்டிப்பா பல நல்ல படங்கள் எடுக்க வாய்ப்புண்டு. அதுல சிலதுக இங்கே! ( அதாவது இதெல்லாம் நல்ல படங்களாம்! எப்பூடி?! :) )

வழக்கம்போலவே, பிடித்தவைகளை பெரிதாகப் பார்க்க படத்து மேல ஒரு க்ளிக்கு போடுங்கப்பு!

மேற்கு வாயிலில் இருந்து வடக்கு கோபுரம். கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!

வடக்கு கோபுரம்


தெய்வீகப் பயணம் - Zoom Burst முறையில் எடுத்தது. செம எபெக்ட்டுங்க!
திருவள்ளுவரும் திருக்குறளும்தெய்வத்துக்கும் எனக்குமிடையேயான வழக்கு!நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள்குரூப்பு போட்டோகிராபி! மதுர மண்ணுக்கு வந்துட்டா மட்டுந்தேன் இது முடியும் போல! :)

பார்வையற்ற பிரார்த்தனைகள்
ஆஞ்சநேயரின் அருள்பாலிப்பு

மதுரை நாயக்கர் மாகால்


ஞாயிறு, அக்டோபர் 25, 2009

குலசை தசரா 2009 - புகைப்படங்கள்

க்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அருமைத்தம்பி ஆதிக்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும் செல்வபிரகாஷ், ஜெய்சிங், நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா மாப்ள சீவியாரு, வினோத்து, கவுஜர் லக்ஸ் மற்றும் கோகுல். இவங்க ஒவ்வொருத்தருமே அவங்கவங்க ஸ்டைல்ல படமெடுக்கறதுல பெரிய வஸ்தாதுங்க. இவிங்ககூட சுத்தறப்பவெல்லாம் நான் 4 மாசம் நெட்டுல படிச்சு தெரிஞ்சுக்கறதை நாலே நாள்ல அனுபவப்பூர்வமாக கத்துக்கமுடியறதை சந்தோஷமா அனுபவிச்சதுண்டு. எனக்குன்னு ஒரு ஸ்டைலு இப்பவரைக்கும் இல்லாததாலும் நான் இன்னும் வளர்ற பையங்கறதாலயும் படமெல்லாம் கலந்து கட்டித்தான் இருக்கும். அதனால அப்படியப்படியே அனுபவிங்கப்பு! :)

இதுபோக எனக்கே தெரிஞ்சு எங்கிட்ட படமெட்டுக்கறதுல சில பல மாற்றங்கள். பார்த்தால் உங்களுக்கே தெரியும். அப்படி எதுவும் தெரிலன்னா அப்படியே லூசுல விட்டுருங்கப்பு! வெளில சொல்லி மானத்த வாங்கப்பிடாது ஆமா! :) புடிச்ச படம் பெருசாத்தெரிய மேல ஒரு க்ளிக் செஞ்சு பாருங்கப்பு.

ட்ரிப்பு ஆரம்பமே அமர்க்களமான ஆரம்பம்! தின்னவேலின காலைல 8 மணிக்கா எறங்கி டிபனெல்லாம் முடிச்சு அப்படியே தாமிரபரணி படித்துறைல எறங்கி செம குளியல்! அதாவது சென்னை செண்ட்ரல்ல எறங்கி அப்படியே எதுத்தாப்பல இருக்கற கூவத்துல குளிக்கறமாதிரி! 4 மணிநேரம் நட்டாத்துல ஊருனமேனிக்கு மெகாபொங்கல். ஓடறதண்ணீல உடம்பை அளந்தபடி பிடிச்ச படம் புத்தகம்னு பேசிக்கிட்டு கெடக்கறது எப்புட்டு சுகம்! :) எனக்கு எப்பவுமே இருக்கற தீராத ஆசையான மொத்தமுழுசா இயற்கையோடு ஐக்கியமாகும் ஆசை இங்கையும் எட்டிப்பார்த்தது. ஆனால் லக்குவணாருக்கு நியூட் போட்டோகிராபில விருப்பம்னு தெரியவந்ததுல கமுக்கமா என்னோட ஆசைய எப்டியாச்சும் ஆஸ்திரேலியா பீச்சுல வைச்சி தீர்த்துக்கலாம்னு ஒத்திப்போட்டுக்கினேன் :)

வரப்பு டூ வானம் எனதேன்னு குளிக்கறது நம்ப ராவணன். "வழி தவறிய மீன்கள் சந்தித்துக் கொண்டன மணல்வெளியில். இரண்டிடமும் கடல் பற்றிய கதையிருந்தது, கடல் இல்லை" என்ற புகழ்பெற்ற கவிதைக்கு சொந்தக்காரரான அதே லக்குவணார் தான். அவரு கெரகம்! எங்கூடவெல்லாம சுத்தவேண்டிய நெலமை! :)ஆற்றங்கரையில் பிறந்ததே நாகரீகம்!வாழ்க்கைல தேமேன்னு இருக்கறதுதான் இருக்கறதுலயே நெம்ப கஷ்டமான வேலைங்கப்போவ்! படித்துறை மண்டபத்துல நெல்லை மக்கள்ஸ்....அம்புட்டுத்தான். அப்பறமா மத்தியானமா பஸ்புடிச்சு குலசைபோய் எறங்கியாச்சு. இதுக்கப்பறம் சாப்புட தூங்கன்னுதான் மக்கா பார்த்துக்கறது. மத்த நேரமெல்லாம் ரொம்ப சின்சியரா காமராவை எடுத்துக்கிட்டு அவிங்கவிங்களுக்கு புடிச்ச எடத்துக்கு ”மீ த எஸ்கேப்”புனு காணாமப் பூடூவாய்ங்க. நானும் அப்படியே விட்டேத்தியா கால்போன எடத்துக்கெல்லாம் எந்த குறிக்கோளும் இல்லாம காத்தாட கெளம்பிடறது. யாராவது கெடச்சா பேசியே அவங்களை ஓட ஓட வெரட்டறது. ஏதாச்சும் குலசை டான்ஸ் ட்ரூப்போட சேர்ந்துக்கிட்டு அவங்கபோற எடமெல்லாம் கூடவே அபீசியலு போட்டொகிராபரு மாதிரி சுத்தறதுன்னு வாழ்க்கை மூனுநாளைக்கு அப்படி போச்சுது. ஒன்னு மட்டும் நிச்சயங்க... வாழ்க்கை என்பது எப்பொழுதுமே நாம போட்டுக்கிட்டு இருக்கற சொகுசுவளையத்துக்கு வெளிலதான் இருக்கும்போல! ஆட்டம் பாட்டம் பக்தி துக்கம் சந்தோஷம்னு எல்லாத்தையும் வாழ்வோடு வாழ்வாக பிணைத்து வைத்து அனுபவிக்கும் மக்களுக்கு மத்தில எல்லாத்துக்கும் நாள் பிரிச்சு அனுபவிக்கற, உணர்வுகளையும் அனுபவங்களையும் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் தேடற நானெல்லாம் அம்மண ஊரில் கோவணம் கட்டுன கேசுமாதிரிதான் உணர்ந்தேன். உண்மைதாங்க... வீட்டை நாம் தாண்டாவிட்டால் வானமே இல்லை! இதுபோக என்பீல்ட் விளம்பரத்துல ஒரு வசனம் வரும் பார்த்திருக்கீங்களா? LEAVE HOME! இதுக்காச்சும் வருசம் பத்துநாள் எங்காச்சும் இப்படி அனாமத்தா கெளம்பிறனும். ம்ம்ம்.. எங்க தாத்தனும் அப்பனும் இயல்பா செஞ்சதெல்லாம் இப்ப நானே கண்டுபுடிச்சாப்படி பெனாத்திறதும் கூட ஒரு திறமையா போயிருச்சுங்கப்பு.


ஒரு போட்(டோ)டா போட்டி! :)வர்ண ஜாலச்சிரிப்புவேசங்கட்டறதை பத்தி இந்தமுறை சிலதகவல்கள் கெடைச்சது. 41 நாள் விரதம். குழுவுக்கு ஒரு தலை. அவருகிட்ட பர்மிசன் வாங்கிட்டு என்ன வேசம் போடறீங்களோ அதைச் சொல்லிறனும். அப்பறம் கோவிலுக்குப்போய் திரும்பும் வரைக்கும் காப்புக்கட்டி விரதம். கோவிலுக்கு வந்துபோகும் ரெண்டு நாளைக்கு காளி,போலீஸ், பைத்தியம், பொம்பளை, கரடி, கொரங்குன்னு மாக்கா விதவிதமா வேசங்கட்டி அடிக்கறாங்க. காளி வேசக்காரவுக மட்டும் இன்னும் கொஞ்சம் சிவியரு. கடும்விரதத்துல சத்தில்லாத ஒத்துழைக்காத உடம்பை இழுத்தபடி அடிக்கிற டண்டணக்கரவும் குலவையொலியும் முறுக்கேற்ற சடாமுடி சுழன்றாட மொத்த உடம்பையும் உதறித் துள்ளியடி சாமியாடறதை பார்க்கறப்ப கடவுளை நம்பாத எனக்குள் ஒரு வெறுமை பரவுவது நிஜஞ்தான். இருந்தாலும் என்னுடைய இப்பத்தின வரைக்கும் கிடைத்த வாழ்வனுவத்தின் புரிதலான “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?! தேவைப்படுபவர்களுக்கு இருக்கிறார்” எனும் வைக்கம் முகம்மது பஷீரின் வரிகளில் ஆத்மார்த்தமான அர்த்தங்கள் இருப்பதாக நம்புவதால் எதன் மீதும் தீர்பெழுதாமல் ஒரு சாட்சியாக நின்று பார்ப்பதே நேர்மையெனப்படுகிறது.

அண்ணன் காளி!கடவுளை உணரும் குழந்தைகள்


ம்ம்ம்.. எங்க ஒளிஞ்சிருப்பான் இந்த கள்ளப்பய?!ஏக்கம்!

இத எடுத்தவுட இந்த பால் ஐசை அவருக்கு வாங்கிக் குடுத்தேன். அடடா! என்ன ஒரு சிரிப்பு! இரண்டு முகத்திலும்! :)

ஒரு லிட்டில் டான்ஸ் ஸ்டார். பொண்னு ஆடுட ஆட்டத்துக்கு கெமிஸ்ட்டி ஹிஸ்டரியெல்லாம் தேவையிருக்கவில்லை. அம்புட்டு இயல்பு!வயசுப்புள்ளைங்க! :) பொம்பளை வேசம் கட்டற பசங்களுக்கு அவிங்க அம்மா தங்கச்சிங்க சேலை கட்டுறதுலயும் மேக்கப்பு போட்டு நகைநட்டு மாட்டறதுலயும் உதவறதைப் பாக்கறதே அம்புட்டு அழகு! :) எனக்கென்னமோ பொம்பளைகளோட கஷ்ட நஷ்டத்தப் புரிஞ்சுக்க ஆம்பளைங்க நீங்களும் ஒரு நாளு நாளைக்கு பொண்ணா இருந்து பாருங்கடான்னு யாரோ பெருசு பழங்காலத்துல கொளுத்திப்போட்ட வெடிதான் இந்த ஆன்மீக வழக்கத்தின் பின்னான ரகசியம்னு ஒரு அனுமானம்! :)தீச்சட்டி நேர்த்திக்கடன்...நேர்த்திக்கடன்கள் அனைத்தும் முடிவில் கடவுளுக்கு சமர்ப்பணம்
சூரசம்ஹாரம் முடிஞ்சதுக்கு அப்பறம்... இந்த வருச வேண்டுதல் முடிஞ்சாச்சு. வேஷம் கலைச்சாச்சு. அடுத்து மொட்டை, பீச்சுல குளியல், ஓரமே சமையல், முத்தாரம்மன் தரிசனம்.. பெறகு ஊருக்கு நடைதான்...பனையும் பனைசார் வாழ்வும்...ம்ஹீம்! நான் வர மாட்டேன்! அங்கன குளுரும்!!ஆனந்தம் பொங்குதே!! ( இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் இளவஞ்சிகுமாரா?! ம்ம்ம்.. வளராமயே இருந்திருக்கலாம்! )நாடி சோதிடம்...வளையம் வெள்ளாட்டு...குலசை பீச்...


அங்கன தூரத்துல ஒரு லைட்டவுசு தெரியுது பாருங்க. அதான் மணப்பாடு சர்ச். குலசைல இருந்து சாயங்காலமா அப்படியே நூல் புடிச்சாப்புல 4 கிலோமீட்டரு பீச்சோரமாவே நடந்து சர்ச்சுல மூன்றவரு உட்கார்ந்திருந்தோம். அடடா! என்னா கடற்கரை.. என்னா காத்து.. என்னா அமைதி!! மனுசன்னா இதை ஒரு தடவைக்குமாவது அனுபவிக்கனுமைய்யா! அதுவும் நமக்கு நெருக்கமான ஆத்மாவோடன்னா இன்னும் விசேஷம். இதுல முரண் என்னன்னா நான் அந்தக்காலத்துல காதல்கிறுக்கனாக இருந்தபொழுது மொதமொதலா தனியா தாஜ்மகாலைப் பார்த்து அஞ்சவரு கெறங்கிக் கிடந்துக்கு, இப்ப இந்த நிர்மலமான மனதுடன் மணப்பாடு மணல்வெளில சொக்கிக்கிடந்த அனுபவம் கிஞ்சித்தும் கொறஞ்சதில்லைங்கறதுதான்!

இத்தனை சொல்லி அப்பறம் நாங்க மூனுநாளா ஓயாம கேட்ட பார்த்த காளீங்க டான்ஸை போடலைன்னா எப்படி?! ( நன்றி: முருகன் வீடியோஸ், உடன்குடி )


அம்புட்டுத்தான் இந்த வருசம் நான் குலசை தசரா போய்வந்த கதை! :)

புதன், ஆகஸ்ட் 26, 2009

காசியண்ணன் புண்ணியத்தில் ஒரு பதிவு!

அண்ணன் காசியின் ஐடியா படி இந்த உருப்படி இங்கே...

பெரியவங்க பலபேரு டீடெயில்லா ஆராய்ஞ்ச உணர்ந்த தெளிந்த தகவல்களை போட்டிருக்காங்க. இராம. கி அய்யா எல்லாம் படிச்சா மலைப்பா இருக்கு! நான் என் வழக்கப்படி (அதாங்க... தான்தோன்றித்தனமா... )அடிச்சு விட்டிருக்கறேன். காசியண்ணன் கும்பலோடு கும்பலா என்னுதையும் போட்டிருந்தா எம்மானம் நின்னிருக்கும். இப்ப தனியாப்போட்டு என் அறிவையெண்ணி மக்கா நீங்க தலைதலையா அடிச்சுக்கப் போறீங்க!

தெரியுதில்ல அப்பறம் என்னத்துக்குலே எழுதனன்னு ஆசிப்பு அண்ணாச்சி மாதிரி ஆளுங்க வருவாய்ங்க! அதுக்கெல்லாம் வெட்கம் மானம் ரோசம் பார்த்தா அப்பறம் நான் எப்பத்தான் புதுப்பதிவு போடறது?! எனவே, படிச்சு களிங்க :)

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இல்லை என்றே நினைக்கிறேன். சங்கத்தமிழில் இருந்து நவீன இலக்கியம் வரைக்கும் இவ்வளவு இருக்கு இல்லை என்பதான தரவுகளை விடுங்கள்! பழந்தமிழ் வார்த்தைகளை தேடித்தெரிந்துகொள்ள ஒரு இணையப்பக்கம் உள்ளதா என்றால் இல்லை. தற்காலத்தில் புழங்கும் ஒரு 1000 சொற்களுக்கு அர்த்தம் தேடி கண்டுபிடித்து விடலாம்தான். ஆனால் எனக்கு பசலை, துணிபு போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமும் அச்சொல்லைச் சுற்றின கதைகளும் வரலாறுகளும் தெரிய வேண்டுமெனில் எங்கே போவது? எனக்கிருக்கற எண்ணம் என்னன்னா நாம அபிதானசிந்தாமணியை மட்டுமாவது ஆன்லைன்ல கொண்டுவந்தா இந்த பெருங்குறையை தீர்க்கலாம் என்பதுதான். முடிந்தால் அதை அப்படியே கொண்டுபோய் பக்கம் பக்கமா சுட்டிகளோடு தமிழ் விக்கிபீடியாவோட சேர்த்துட்டம்னா
அப்பறம் மக்கா அப்பப்ப அப்டேட் செய்யச்செய்ய தாழில திரண்ட வெண்ணை மாதிரி பின்னால வரும் வருங்கால சந்ததிகள் நோகாம நோம்பி கும்பிட்டுக்க வேண்டியதுதான்...( அதாவது அவங்களுக்கு எல்லாம் தமிழ் எழுதப்படிக்கத் தெரிஞ்சா! ஹிஹி.. )2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

ஒரு குத்துமதிப்பா ஆமான்னுதாங்க சொல்லனும்! அரசாங்க அலுவலக செயல்களில் தகவல் பெறுவதில் ஓக்கே! தகவல் அளிப்பதில் இன்னனும் ஆங்கிலம்தான். போனமாசம் ஆன்லைன்ல கரண்டுபில்லு கட்டுனேன். எல்லாம் ஆங்கிலத்துலதான் இருக்கு. அதுவும் வர்த்தக ரீதியான வெரிசோன் மாதிரியான உலக அளவில் ஒரே முறையில் இயங்கும் கொடுக்கல் வாங்கல் நடக்கும் பரிவர்த்தனைகளில் தமிழ் போன்ற வட்டார மொழிகள் எப்படி பங்களிக்கும்னு குழப்பமாகத்தான் இருக்கு. இணையத்தில் மொழிக்கான முக்கியத்துவம் பயனர்களை பொறுத்தே அமைகிறது. இப்பத்திக்கு இணையம் படிச்சவுக கையில இருக்கறதால மொழி ஒரு பிரச்சனையில்லன்னுதான் நினைக்கறேன்.


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

தனித்தனி ஃபாண்ட்டுகளில் அவரவர் தனியாவர்தனம் நடத்திய காலத்தில் இருந்து இப்பொழுது கமுக்கமாய் அனைவரும் ஒருங்குறியில் பட்டையை கிளப்புவது வரையில் அனைத்து முயற்சிகளுமே முக்கியமானவைதான். இதில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன்.

இணையவெட்டுகளாக காலாகாலத்துக்கும் அழியாமல் நிற்கப்போகும் இம்முயற்சிகள் தனிமனித குழும அடையாளங்களை காலப்போக்கில் உதிர்த்துக்கொண்டே செல்லப்போகின்றன. இன்றைக்கு 50 வருடங்கள் கழித்து நம்ப மக்காக்களின் அலப்பறை பதிவுகளான இன்றைய கும்மிகளை படிக்கும் ஒருவன் ”2009ல் கணினி உபயோகித்த தமிழ்மேல் ஆர்வம்கொண்ட ஒரு கும்பலின் நகைச்சுவை உணர்வு எவ்வாறு இருந்தது?” என ஆராய்ச்சிசெய்ய ஏதுவான தரவுகளாக இருக்கலாம்! உள்குத்து என்பது என்ன? என்பது ஆறாங்கிளாஸ் 2 மார்க்கு கேள்வியாகக்கூட இருக்கலாம்! ”மீ த பர்ஸ்ட்டு” என்பது ”ஹவ் ஆர் யூ?” என்பதற்கு மாற்றாக அமையலாம்! அல்லது கலிகால இலக்கியத்தில் தமிழின் மிகச்சிறந்த போர்னோகிராபியா காமலோகம்.காம் நிலைக்கலாம்! யார் கண்டது?! :)

மிக முக்கியமானது என நான் நினைப்பது தமிழ் விக்கிபீடியாவைத்தான். தமிழில் ஒரு குறிப்பிட்ட தேடலுடையவரது தேவையை உத்தேசமாகவாவது இது காலாகாலத்துக்கும் தீர்க்கும் என்பதில் ஐயமேயில்லை! ஆனால் தமிழ்விக்கி இன்னும் போகவேண்டிய தொலைவு எவ்வளவோ இருக்கிறது. தேடினால் எளிதாக கிடைத்தே தீரக்கூடிய ஆங்கிலத்தில் சல்லீசாக கிடைக்கக்கூடிய தகவல்கள் போக தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளக்கூடிய தெரிந்தாக வேண்டிய தகவல்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தினால் பரவலானதாக இல்லாமல் ஆழமானதாக இருக்கும். உதாரணத்துக்கு நாளைக்கு நான் கமலம் எனத்தேடினால் அது LOTUS பற்றின ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடிய தகவல்களை மட்டுமே கொண்டிறாமல் “தோள்கண்டார் தோளே கண்டார்” என்பதனையும் இழுத்து வந்து அதற்கு விளக்கமும் கொடுத்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்?!


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களை தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

ஒரு 1000 பேர் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு டீம். அதனை மேய்க்க 100 பேர் கொண்ட தமிழ் MAக்கள். ஒரு 10 தமிழ் மூதறிஞர்கள். அவர்கள் சுட்டிகாட்டுவது அனைத்தையும் இணையத்தில் ஏற்றுவதும், தொகுப்பதும் மட்டுமே 5 வருச என் பதவிக்காலத்தில் வேலையாக இருக்க வேண்டும். போதாதா? இதுபோக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு தகவல் மையம். அதுல அரசு தகவல்மையத்துடன் இணைந்த ஒரு கணினி. அதைப்பார்த்துக்கறதுக்கு ஊருலயே நல்லாப்படிச்ச ஊர்வளர்ச்சியில் அக்கறையுள்ள பயபுள்ள ஒன்னு ரெண்டு பேரு. அவங்க வேலையே ஊருக்குத் தேவையான தகவல்களான வைகாசில கடலை போடலாமாங்கறதுல இருந்து, ஜப்பானுல இயற்கை விவசாயம் செய்யற ஊருக்கு தலைக்கு 10000 ரூபா லோன் குடுக்கறாங்கறதுல இருந்து, அவுட்டேட்டனாட விவசாய பண்ணை டெக்குனிக்குகளை அப்டுடேட்டா இந்தியாவுக்கு இறக்குமதி செய்யற தவறுகளை முன்கூட்டியே அறிஞ்சு சொல்லறதாத்தான் இருக்கனும். இதை ஒழுங்கா அமைச்சுப்புட்டாலே இப்ப இருக்கற உழவர்சந்தையை இணைய சந்தையா மாத்திற முடியாதா?! நினைச்சுப்பாருங்க. கோயம்புத்தூர்ல எங்கூட்டு கல்யாணத்துல சில்லிகோபி போடறதுக்கு தேவையான 5 மூட்டை காலிபிளவரை நான் பஞ்சாயத்து சந்தை சைட்டுல தேடி அது பொள்ளாச்சி ராமசாமி அய்யா கழனில சல்லீசா கிடைக்குதுன்னா ஒரு எட்டுபோய் மொத்த கொள்முதல் விலையையும் விவசாயி கையில் குடுத்துட்டு வாங்கியாந்துற மாட்டனா? அதான் எல்லாருக்கும் டீவி கொடுத்து முடிச்சாச்சே? அப்பறம் ஊருக்கு ஒரு கணினி கொடுத்தா என்னாங்கறேன்?!

இதுபோக இந்திய விவசாயம் பொழைக்க தண்ணிக்குத் தவிக்கற டெல்டா விவசாயிகளின் ஒரு கிராமத்துக்கு தண்ணி குடுக்கற ஒரு கர்நாடகா விவசாய கிராமத்தை மொத்தமா ஒரு சிறப்பு ரயில் விட்டு விருந்துக்கு வரச்சொல்லி ஒரு வாரம் திருவிழாவாகவே கொண்டாடலாம்! இந்த வருசம் அவிங்கன்னா அடுத்த வருசம் இவிங்க அங்குட்டு! இப்படி செஞ்சா விவசாயிக்க்கு விவசாயி பேசிப்புரிஞ்சி கஸ்டநட்டம் தெரிஞ்சு ஏதாச்சும் நல்லது நடக்க நல்ல மக்களை டெவலப் செஞ்சாப்புலயும் இருக்கும். நடுவால இருந்து ரெண்டுபக்கமும் ஊதிஊதி பெருசாக்கற கரைவேட்டிகள கழட்டி உட்டாப்புலயும் இருக்கும்.

இந்த ஐடியாவெல்லாம் நான் விஜயகாந்து மாதிரு யாருக்கும் சொல்லாம நானே வைச்சுக்கறது. ஹிஹி...


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

ரெண்டுக்கும் சின்னதா சுருக்கமா சொல்லிடுதேன். தமிழ் வலைப்பதிவுகள் இன்னும் அச்சு உடகத்தின் பிரதிபலிப்பாத்தான் இருக்கறதா நான் நினைக்கறேன். தமிழ் வலைப்பதிவுகளுகென்று ஒரு தனித்தன்மை இன்னும் வரணும்.

வலைப்பதிவர்களுக்கான யோசனைகளா? சரி.. எனக்குத்தெரிஞ்ச ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்.... எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க... ஆனா எழுதியே ஆகவேணுங்கற கட்டாயத்துல மட்டும் எழுதாதீங்க! அந்த கட்டாயப் பதிவுல இருந்து உங்க இணையபக்கத்தின் தனித்தன்மை காணாமப்பூடும்ங்கறது என் தனிப்பட்ட எண்ணம்!


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து அண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

வாழ்த்துகள் :)

தமிழ்மணம் கூட நானும் 4 வருசம் இருந்திருக்கேங்கறது சந்தோசமா இருக்கு! கல்லூரி முடிச்சு வேலைக்கு சேர்ந்து கண்ணாலம் செஞ்சு புள்ளைபெத்து குதுரைக்கு கடிவாளம் கட்டுனாப்புல ஓடிக்கிட்டு இருந்து வாழ்க்கைல என்னத்தையோ தொலைக்கறோமோன்னு இருந்த எனக்கு தமிழ்மணம் மூலம் கிடைச்சது ஒரு மிகப்பெரிய இன்பவெளி. இயந்திர வாழ்வில் இருந்து ஒரு தப்பிச்சலாகத்தான் ஆரம்பிச்சது அப்படியே ஒரு ஆர்வக்கோளாறா மாறி மீண்டும் தமிழ்ல தொடர்ச்சியா படிக்கறதும் (அப்பப்ப ) எழுதறதும்னு ஒரு இயல்பான நிலைக்கு வந்து நிக்குது. இதுக்கு நிச்சயம் தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லிறனும். இந்தமாதிரி ஒரு இணையவெளி கிடைச்சிருக்கலன்னா நான் தமிழ்ல ஒரு கடுதாசி கூட எழுதியிருக்க மாட்டேன்!
படத்துல இருக்கற பயபுள்ளைங்களை பாருங்க. அவங்க எப்படி ஒன்னா இருக்கயில ஃபீலாவுறாங்களோ அதே ஃபீலிங்சுதான் எனக்கும் தமிழ்மணத்தில் கிடைப்பது! நன்றின்னேன்!!

வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் என்ன செய்யவா?! நீங்க பாட்டுக்கு போய்க்கினே இருக்கப்பு. நாங்க பாட்டுக்கு பின்னால வந்துக்கினே இருக்கறோம்.

அவ்ளவ்தான் மேட்டரு! :)

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

நியதிகளும் வாழ்வும்...

மீண்டும் ஒரு காதல் கதை...

அடையார் பஸ் டிப்போவின் எதிரில் இருக்கும் பஸ்ஸ்டேண்டை கடக்கும்போது ஒரு ஆட்டோவினைச் சுற்றி கொஞ்சம் மக்கள்ஸ். அருகில் போய் எட்டிப்பார்த்தால் ஓங்குதாங்கான ஆறடியில் இருந்த ஒரு விரைத்தவனைப் பிடித்து ஐந்தடியில் பூஞ்சையான ஒரு மனுசர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக அடித்துக் கொண்டிருத்தார். உடம்பெல்லாம் வெறுப்பாக ஒரு அம்மாள் அழுதுகொண்டும் திட்டிக்கொண்டும் பக்கத்தில்! ஆட்டோவினுல் ஒரு பெண் சிறுவயசு குழந்தையோடு! அந்த அம்மாள் ”உனக்கெல்லாம் சூடுசொரனையே கிடையாதா? இந்த அநியாயமெல்லாம் அடுக்குமா? உங்குடும்பம் வெளங்குமா? நீயெல்லாம் புழுத்துப்போய்தான் சாவப்போற...”ன்னு சரமாரியாக காறித் துப்பிகொண்டிருதார். ஆறடி மனுசன் அடிகளையும் மகாகேவலமான வசவுகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி வாங்கிக்கொண்டு ஆட்டோவினுள் இருந்த பெண்ணையே விட்டேத்தியாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்பெண்ணோ எந்தவித படபடப்புமின்றி “அப்படித்தான்னு சொல்லுங்க! இவங்க என்னத்த செஞ்சுருவாங்கனு பாக்கலாம்”னு ஒருகையில் குழந்தையையும் மறுகையில் ஆறடியின் கையையும் பிடித்துகொண்டு முகம் நிறைய வீம்புடன் சொல்லிக்கொண்டிருந்தாள். நேரமாக ஆக அந்த வயதான அம்மாள் சப்போர்ட்டுக்கு ஆள் கிடக்காதாவென சுற்றியிருந்த எங்களைப்பார்த்து “என்ன அநியாயம் பாருங்க! கண்ணாலம் ஆகி பெத்தவளைபோய் இப்படி இழுத்துக்கிட்டு திரியறான். இதெல்லாம் அடுக்குமா?”ன்னு கண்ணீரோடு பொலம்பல்ஸ்...

இத்தனை பலமான இந்த ஆளு எதுக்கு இம்புட்டு அடிவாங்கிக்கிட்டு தேமேன்னு நிக்கறான்?

குழந்தையோடு இருக்கும் அப்பெண்ணின் வூட்டுகாரரு எங்கே?

என்னதான் இருந்தாலும் இப்படி நடுரோட்டுல குடும்ப சண்டைய போடலாமா?

இதுக்குப் பேருதான் பொருந்தாக் காதால்னா அந்தப்பெண் எப்படி அப்படி உறுதியோடு சலமற்று இதை எதிர்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்?

தேமேன்னு வெறித்தபடியிருக்கும் அந்தக்குழந்தைக்கு இதெல்லாம் எந்த அளவுக்கு புரியும்?


இப்படி அலையலையாக கேள்விகள் மனதினுள் புரண்டாலும் எதனையுமே கேட்காமல் பின்புறமாய் கையைக்கட்டிக்கொண்டு பத்தோடு பதினொன்றாய் வேடிக்கை பார்த்தபடி இருப்பதில் ஒரு குறுகுறுப்பும் சுகமும் இருக்கத்தான் செய்கிறது!

*****

ஆங்காங்கே அவசரத்துக்கு உச்சா போவதில் இருக்கும் என் திறமையை முன்னமே பறைசாற்றியிருக்கிறேன். இருந்தாலும் போனமுறை பர்மா பஜாருக்கு ஒலகப்பட திருட்டுவட்டுகள் வாங்கப்போகையில் நெம்ப சிரமமாயிடுச்சு. இந்தியன் வங்கியை ஒட்டியிருக்கற சந்துலதான் வழக்கமா ஊரிண்டாங்கை ஓப்பன் செய்வேன். இந்தமுறை செவுத்துல ”இங்கு சிறுநீர் கழிப்பவன் மிருகம்! நீ மிருகமா?”ங்கற கேள்வி இருந்தது என் ஈகோவை ரொம்பப்பாதிச்சதில் அதென்ன கண்டவன் கேள்விக்கெல்லாம் நாம பதில் சொல்லறதுன்னு கடுப்புல அப்படியே நடந்து துறைமுகம் ரயில்வே ஸ்டேசனுக்குள்ளாற இருக்கற ஒத்த ரூபா கட்டண கழிப்பிடத்தை கண்டுபிடிச்சு போனேன். உள்ள போகையிலயே அங்க வேலை பார்த்தவரு ”ரெண்டு ரூவா குடு சார்”ன்னாப்புல. அவசரத்துக்கு நானும் கொடுத்துட்டு உச்சா போய்க்கிட்டிருக்கயிலயே அவருகிட்ட வாயக்கொடுத்து வம்பை ஆரம்பிச்சேன்!

”ஏங்க வெளில ஒர்ரூவா போட்டிருக்கு. நீங்க ரெண்டு ரூவா வாங்கறீங்க?”

”ஆங்! அதெல்லாம் க்ளீனா கழுவி வைச்சுக்கறமல்ல சார்? அதுக்குத்தான்.”

”அப்பன்னா ரெண்டு ரூவான்னே எழுதலாமே? என்னத்துக்கு ஒர்ரூவான்னு போட்டு ஒர்ரூவாய ஏமாத்தறீங்க?”

”ஆமா சார்! உன்னோட ஒத்தைரூவாலதான் நான் கோட்டை கட்டப்போறேன். இதெல்லாம் மெயிண்டேன் பண்ண ரெண்டுரூவா ஆவாதா? இதுக்கு என்னமோ ரொம்பத்தான் பேசுற?”

”என்னத்த பேசுறாங்க? அநியாயமா இப்படி ஆளுக்கு ஒருரூவா ஏமாத்தறயே? இதைக்கேட்டா பேசுறமா? நீ அவ்வளவு ஒழுக்கம்னா வெளிலயே ரெண்டு ரூவான்னு எழுதறது தானே?!”

”இப்ப என்னான்ற சார்? இந்தக்காலத்துல பிச்சைக்காரனே ஒர்ருவா வாங்கறதில்லை. நீ என்னாமோ உஞ்சொத்தப்புடுங்கனாப்புல கூவற?”

”பிச்சைக்காரன் என்ன உன்னமாதிரி ஏமாத்தியா வாங்கறான்? தேவைன்னா போடறோம். இல்லைன்னா இல்லை.. சரி போ! அந்த ஒர்ருவாய நான் ஒனக்கு பிச்சைபோட்டதா வைச்சுக்க...”

சொல்லிவிட்டு நான் எம்பாட்டுக்கு நடக்க பின்னால இருந்து குரல் கேட்டது...

”த்த... வாயாங்க.. இந்தா உன் ரெண்டுரூவா.. ஓசில ஒன்னுக்கடிச்சதா வைச்சுக்க... உம் மூஞ்சிகிட்டயெல்லாம் பிச்ச வாங்கற அளவுக்கு எம்பொழப்பு போகலை.. வைச்சுத் துன்னு!”

நான்.... “அது! ரொம்ப டாங்க்ஸ்!”

வெற்றி யாருக்கு? ( அ ) கெலிச்சது எது?


*****

சமீபத்தில் ( ங்கொய்யால! ) அண்ணா யுனிவர்சிட்டிக்கு எம்மாமன் பையன் பொறியியல் படிப்பு கவுன்சிலிங்காக போக நேர்ந்தது. பலகாலம் கழிச்சு ஒரு காலேஜிக்குள்ள போறதுனால என் ஒடம்வெல்லாம் புல்லரிப்பாக கேம்பஸ்க்குள்ள சுத்திக்கிட்டிருந்தேன். கையில் பச்சை கலர் செவுப்புக்கலர் பைல்களோடு கண்களில் மிரட்சியும், கல்லூரி பற்றிய கனவுகளும், எந்தக்காலேஜில சீட்டுக்கெடைக்குமோங்கற கவலைகளுமாய் வலம் வந்துகொண்டிருந்த 17 வயது சிட்டுக்களின் ( பசங்களை எவங்கண்டான்? ) நடவடிக்கைகளை அவதானித்தபடியே சுற்றிக்கொண்டிருந்த வேளையில் அந்த உண்மை பளீரென மண்டையில் உறைத்தது!

கூட வந்திருக்கும் இந்த மடந்தைகளின் அம்மாக்களான பேரிளம் பெண்களெல்லாம் சற்றேறக் குறைய என் வயது என்பது தான் அது. ஆகவே நானும் பேரிளங்காளையாக என் மனதை அப்பனுங்க ஸ்தானத்துக்கு மாற்றிக்கொண்டு கவுன்சிலிங்குக்கு மாமனையும் அவரு மவனையும் அனுப்பிவிட்டு கவுன்சிலிங் பில்டிங் வாசலில் நின்றிருந்தேன்.

மாணவன் கூடவே கட்டாயம் ஒருத்தர் செல்ல வேணுங்கறது விதிபோல! தன் தம்பிக்காக கைக்குழந்தையோடு வந்திருந்த ஒரு பெண்ணை உள்ளே விட மறுத்து விதிமுறைகளை சொல்லிக்கிட்டிருந்தாரு ஒரு அலுவலர். “வூட்டுக்காரரு வெளியூரு சார்! கொழந்தைய பாத்துக்கறதுக்கும் வேற யாரும் இல்லை. அதான் நானே வந்துட்டேன். தயவு செஞ்சு விடுங்க சார். தம்பி படிப்பு மேட்டரு!”ன்னு அந்தப்பெண் ரொம்பவே படபடப்பில் கெஞ்சிக்கொண்டிருந்தாலும் அந்த அலுவலர் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அப்படி ஓரமா நில்லுங்க. ஏதாச்சும் செய்யறேன்னு சொல்லிட்டு போக அந்தப்பெண் என்ன செய்வதெனெ தெரியாமல் தம்பி படிப்பு என்னாகுமோங்கற பயத்தில் மலங்க மலங்க விழித்தபடி நின்றது.

சடார்னு எனக்குப் பின்னாடி இருந்த ஒரு இருவது வயசு விடலைப்பையன் ஒருந்தன் “அக்கா! கொழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டு போங்க... ஒன்னவரு தானே.. நாம்பாத்துக்கறேன்”னான். சுத்தி நின்ன ஆம்பளையாளுங்க எங்க நாலுபேருக்கு அதிர்ச்சி கலந்த சிரிப்பு. “அதெப்படிப்பா கைக்கொழந்தைய யாருன்னே தெரியாத ஒங்கிட்ட கொடுப்பாங்க? கைக்கொழந்தைய நீ என்னான்னு பார்த்துப்ப? இப்படியெல்லாம் ஒரு பொண்ணுகிட்ட கேக்கலாமா? அப்படியே நீ வைச்சிருந்து கொழந்தைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா யாரு பதில்சொல்லறது?”ன்னு லாஜிக்கான கேள்விகளையெல்லாம் அவனை மாறிமாறிக் கேட்டு இச்சமூகத்தில் ஆம்பளைத்தனம் என்பது என்னவென்பதென்று அவங்காதுல கரைச்சு ஊத்தி அவங்கேட்டதன் பின்னான அசட்டு அறியாமையினை வெளக்கு வெளக்குன்னு வெளைக்கி அவனை கூச்சத்தில் சுருட்டிக்கொண்டிருந்த பொழுது...

அப்பெண் அருகில் வந்து கண்களில் நீர் மல்க “கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ் தம்பி”ன்னு சொல்லிவிட்டு மீண்டும் சென்று காத்திருக்க ஆரம்பித்தாள்.

*****

ஒரு படம்!
*****

”ஓத்தா! கையக் காட்ட காட்ட போறாம்பாரு!”

பெருங்குடி டோல்கேட்டில் ஒரு காலை நெரிசலில் லேட்டாகும் எரிச்சலில் சிக்கியிருந்த வேளையில் கூட்டத்தை கட்டுப்படுத்த லேன் மாற்றுவதற்காக கைகாட்டிய கேட்கீப்பரின் சிக்னலையும் மீறி வண்டியை ஓட்டிச்சென்றதில் அவரு கடுப்பாகி சென்னதுதான் மேலே இருக்கற வசவு. எனக்கு வந்துச்சே ஒரு கோவம்! காரை அப்படியே நிறுத்திவிட்டு எறங்கிச்சென்று ஆரம்பித்தேன்.

”என்னய்யா சொன்ன? நீ சொன்ன வார்த்தையோட அர்த்தம் தெரியுமா?”

”பின்ன என்ன சார்? கை காட்டகாட்டநீங்க பாட்டுக்கு போறீங்க? நாங்காட்டுனதுக்கு என்ன அர்த்தம்?”

”அதுக்காக? நீ என்ன வேனா சொல்லுவயா? உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னைப்பார்த்து கெட்டவார்த்தை பேசறதுக்கு? இதுக்குத்தான் ஒனக்கு சம்பளம் கொடுக்கறாங்களா?”

”சொல்லச்சொல்ல போனீங்க சார். அதான் கடுப்புல...”

”என்ன கடுப்பு? நீ சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? உனக்கும் ஒரு அம்மா இருக்காங்க இல்லை? உன்னப் பார்த்து நாஞ்சொன்னா நீ சும்மா இருப்பயா?”

”சார் ஒரு கோவத்துல சொல்லிட்டேன் சார். இருந்தாலும் நீங்க செஞ்சது தப்புத்தான?”

”நாஞ்செஞ்சது தப்புன்னே இருக்கட்டும். அதுக்காக நீ என்ன வேணா பேசலாம? எங்க உன் சூப்பர்வைசர்? அவரு வராம வண்டி நகராது. பாத்துரலாம்”

அப்பறம் அவருவந்து இன்னோரு 5 நிமிசம் சொன்னதையே சொல்லிச்சொல்லி அவரு வார்த்தை பேசுனது தப்புத்தான்னு ஒத்துக்கவைச்சு மன்னிப்புக்கேட்டபறம் தான் வண்டிய எடுத்தேன்.

பாவம்! அன்றைய தினம் அவரு பாக்கறதுக்கு படிச்சவன் மாதிரியிருக்கற என்னய மாதிரி ஆளெல்லாம் நாளைக்கு 100முறை கலோக்கியலாக சொல்லும் ”ஓத்தா”ங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சனாலதான் சொல்லாம இருக்கறோம்னு நம்பியிருக்கக்கூடும்!

*****

சமீபத்தில் நண்பரை சந்திப்பதற்க்காக அவரது அலுவலகம் சென்றிருந்தேன். அலுவலக வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் அவரது வேலையில் சுறுசுறுப்பென்றாலும் அவரது மேனேஜர் மாகா முசுடாம். தினமும் நாலுமுறையாவது இவரை திட்டவில்லையென்றால் அவரக்கு தூக்கம் வராதாம்! இருந்தாலும் நண்பர் மகிழ்சியாகவே வேலை செய்வதாக கூறினார். டென்சன் ஆகாமல் இந்த ஃபிரசரை எப்படி சாமாளிக்கிறார் எனக் கேட்டதற்கு “அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது காளிங்ஸ் தத்துவம்!” என்றார். நான் புரியாமல் பார்க்க அவர் ”மேனேஜர் இப்ப திட்டிட்டு போனாரே. அது என்னையல்ல. இந்த சீட்டுல இருக்கற ஹெட்க்ளார்க்கை....” அப்படின்னு சொல்லிக்குவேன். அதனால திட்டெல்லாம் என்னை பர்சனல்லா பாதிக்கதில்லை என்றார். கேட்டபொழுது எனக்கு சரியெனவும் நானும் இதே காளிங்ஸ் தத்துவத்தை பயன்படுத்தி என் டென்சனையும் முற்றிலுமாக குறைக்கலாமென பட்டது. நீங்களும் இதை உபயோகப்படுத்தலாமே?

(பொ.ஆ: இதுபோல் இன்னொரு வாசகர் உறவுகளின் சச்சரவுகளை சமாளிக்க ஒத்தக்கை சித்தப்பா டெக்னிக்கை கையாள்வதாக எழுதியுள்ளார். அது அடுத்தவார வா.மலரில் )

*****மேற்கண்ட படத்தில் பார்த்தவுடன் சரியாக எது ஆண் குறியீடு எது பெண் குறியீடென கண்டுபிடித்திருந்தால் எப்படி கண்டுகொண்டீர்கள்? உங்கள் நினைவில் எப்படி அடையாளப்படுத்தியுள்ளீர்கள்?

என்னது ஆபாசக்கேள்வியா? போயாங்...

*****

நன்றி: சென்ஷி & கோபிநாத் :)

திங்கள், மார்ச் 23, 2009

உதிரிப் (புகைப்)படங்கள்தலைகீழாகத்தான் இருக்கு உலகம்
காதலில் இருக்கையில்.

In Love, World is upside down!

மாட்டுக்கும் மனுசனுகும்
மவுசும் பவுசும்.

Chennai Sangamam 2009


எதிர்காலம் விற்பனைக்கு
நிகழ்காலம் கட்டணம்

Fortunately Unfortunate!

பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.
மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை!

Those Early days... mmm...

மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...

Batchelors meet


ஹேங் ஓவர்..
கூழானாலும் குளித்துக் குடி
குவாட்டரானாலும் அளவாய் அடி

Hangover!!!


அடையார் இரட்சகர்...

Ghandinagar Church, Adyar


ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?

Close-Up or Ray-Ban ?!


மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...

Madurai Temple Pool - A Google view :)


கட உள்...

Madurai Temple Statue

தனிமையில் தனி மயில்...

Loneliness in the Crowd

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

சனி, மார்ச் 07, 2009

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.
தூரிகைகளின்_துயரப்பதிவுகள்ம.செ, மதன் மற்றும் மாருதி...

Maa Se, Madhan & Maaruthi

1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”

1000 Dead... War... All just NEWS!!!

ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?

Painting Completed... Will the Message reach?!

துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...

Colors of Emotions...


பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...

This time not just for Marks...

அழிவினைப் பற்றிய உருவாக்கம்...

Creativity on Genocide...

நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”!

Faded Black, Red & White...

அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு...

I can reflect Daddy's feelings..

தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...

தூரிகைகளின் துயரப்பதிவுகள்...