திங்கள், ஆகஸ்ட் 29, 2005

மனசுக்கு நேர்மையாய்...Image hosted by Photobucket.com

கூரான் அப்படிங்கறதுதான் அவனோட பேருங்க. எனக்கு பத்தாவது படிக்கறதுல இருந்து பழக்கம். அவனுக்கு ஏன் கூரான்னு பட்டப்பேரு வந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது. எங்க காலனி கிரிக்கெட் டீம் பக்கத்து காலனி கிரிக்கெட் டீமோட ஒருமுறை கார்க்பால் பெட்மேட்ச் வைச்சபோது ஆன பழக்கம். அவன் படிச்சதும் எங்க பள்ளிக்கூடத்துலயேதான். நல்லா பேட்ஸ்மேன்னு சொல்ல முடியாதுன்னாலும் காட்டடி மன்னன். மிடில் ஆர்டர்ல இறக்கிவிட்டா குறைஞ்சபட்சம் 25 ரன்னு கேரண்ட்டி! நல்ல கீப்பிங்கும் செய்வான். ஆனா இதையெல்லாம் மிஞ்சி அவன்கிட்ட இருந்த திறமைன்னா ஸ்கோரு ஏத்தறதும், டீமு தோத்தே ஆகனும்ற நிலமைல எதயாவது சொல்லி சண்டை போட்டு மேட்சையே கலைக்கறதுதான். அவன் இருந்தானாவே மேட்சுக்கு 2 சண்டை உறுதி! மேட்சுல தோத்துட்டா ஒரு புது கார்க்பாலை தோத்த டீம் ஜெயிச்ச டீமுக்கு தரனும். அதை கூட சகிச்சுக்கலாம். ஆனா தோத்த டீம் கேப்டன் ஸ்கோர்கார்டுல கையெழுத்து போடனும். அதுதான் தாங்க முடியாத அவமானமா இருக்கும். ஜெயிச்சவனுங்க சுத்தி நிக்க தோத்தவனுங்க மொகத்துல கடுப்போட எதுனால தோத்தோம்னு ஒரு அனாலிசிஸ்ல இருக்க கேப்டன் போய் கையெழுத்து போடனும். போட்டுட்டு திரும்பறதுக்குள்ள ஜெயிச்ச பார்டிங்க ஹோன்னு சவுண்டு விடுவானுங்க. அவமானம் பிடுங்கித்தின்னும்!

அன்னைக்கு மேட்சுல கூரான் டீமுக்கு செம அடி. எங்க ஸ்கோருல பாதி எட்டறதுக்குள்ளயே அவனுங்க டீமுல பாதிபேரு அவுட். கூரான் காட்டடி அடிச்சு ஒரு 36 எடுத்து என்னோட பந்துல குச்சிய பறக்க விட்டுட்டு என்னை மொறச்சிகிட்டே போனான். அந்த காலத்துல எனக்கு அக்ரம்னு தான் பேரு! (யாருங்க அங்க..? இதெல்லாம் ஓவர் அக்கிரமம்னு மொனங்கறது?? ) எவனாவது என்னோட லொட்டாங்கை வேகப்பந்துவீச்சுல க்ளீன்போல்ட் ஆனா அந்த ஸ்டம்பு எவ்வளவு தூரம் போய் விழுந்ததுன்னு அளவெடுக்கறதுதான் பேட்ஸ்மேனை அவமானப்படுத்தறதுக்கான அளவு. கடுங்கோபத்துல வெளியபோன கூரான் நேரா போய் ஸ்கோரு குறிக்கறதுக்கு உட்கார்ந்தான். எப்படியும் தோத்துருவோம்னு தெரிஞ்சதும் ஒவ்வொரு பாலுக்கும் சண்டை! "அது வைடு.. இது நோபாலு.. அம்பயரு சரியில்லை... ஸ்கோரு கம்மியா சொல்லுறீங்க..." இப்படியே போனதுல எங்களுக்கும் கடுப்பாக சடார்னு இந்த மேட்ச் விளையாட மாட்டோம்னு ஸ்டம்பையெல்லாம் புடுங்கிபோட்டுட்டு ஒரே அதகளம்! மேச்சு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பெட்டு வச்ச பாலை அம்பயரு கிட்ட கொடுத்துடனும்கறதால எங்களுக்கு அதுமட்டும் தான் கிடைச்சது. கையெழுத்து போடாமையே மேச்சை கலைச்சுட்டான் பாவிப்பய...

இப்படியே கொஞ்சநாளைக்கு ஒரு நாலைஞ்சு மேட்சுன்னு போனது. தோக்கறதும் ஜெயிக்கறதும் சண்டைபோடறதும்னு அதுபாட்டுக்கு நடந்துகிட்டு இருந்தது. சிங்காநல்லுருல ஒரு டோரணமெண்ட்டு நடக்கதுன்னும் பெரிய பெரிய டீமெல்லாம் அதுல வெளையாடுதுன்னும் நியூசு வந்தப்ப எங்க ரெண்டு டீமையும் ஒன்னா சேர்த்து அந்த டோரணமெண்டுக்கு பேரு குடுத்தோம். திமுக அதிமுக இணைஞ்சா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அன்னைக்கு. அவ்வளவு பாலிடிக்சு. கடைசியா பெரிய டோரணமெண்டுக்கு மட்டும் இந்த டீமுன்னும் மத்தபடி லோக்கல் மேட்சுகளுக்கு பழைய டீமுன்னும் முடிவாச்சு. கூரான் என்னை கண்டிப்பா எடுத்தே ஆகனும்னு பயங்கரமா சப்போர்ட்டு! ரெண்டு பேரும் ஒரே டீமுக்கு வந்தப்புறம் பழைய பகையெல்லாம் "சூமந்திரகாளி"ன்னு காணாமப்போயிடிச்சு. என்ன? முன்னாடி அவன் கூட சண்டை போடுவோம். இப்போ அவனை அடக்கறதுக்கு ரொம்ப செரமப்பட்டோம். அவ்வளவுதான்!

இதுக்கு அப்பறம்தான் கூரான் எனக்கு ரொம்ப பழக்கமானான். அப்பவே வாயில எப்பப்பாரு பான்பராக் போட்டுகிட்டு இருப்பான். தெனமும் வாத்தியாருகிட்ட 2 தடவையாவது அடி வாங்குவான். எவ்வளவு அடி வாங்குனாலும் கைய தொடச்சுகிட்டு சிரிச்சுக்குவான். பள்ளிக்கூடத்துல அவன் பண்ணாத அழும்பு இல்லை! வகுப்புல பொம்பளபுள்ளைங்களை பயமுறுத்தறது, வாட்ச்மேனுக்கு கோட்டரு வாங்கிகுடுத்து நைட்டோட நைட்டா காலாண்டு அரையாண்டு பரிச்சை பேப்பரை உருவரது, மார்க்சீட்டுல கையெழுத்து போடறது, பிட்டு அடிக்கறதுன்னு +2 முடிக்கறவரைக்கும் ஆட்டமான ஆட்டம். ஒவ்வொரு முறை மாட்டும் போதும் அப்பா இல்லாதனால அவனோட அம்மாதான் வந்து ஹெட்மாஸ்டருகிட்ட அழுதுட்டு இவனையும் ரெண்டு மொத்திட்டு போவாங்க. எப்படியோ பிட்டு கிட்டு அடிச்சு +2 முடிச்சு ஆர்ட்சு காலெஜுலயும் சேர்ந்துட்டான். நாங்க கொஞ்சநஞ்சம் அவனுக்கு அப்பப்ப அட்வைசு குடுத்தாலும் எல்லாம் செவுடன் காதுல ஊதுன சங்குதான். அதுசரி. ஒரு லிமிட்டோட நாங்க கூத்து அடிக்கறதால மட்டும் அவனுக்கு அட்வைசு பண்ணற தகுதி எங்களுக்கு வந்துடுமா என்ன? ஆனா இந்த கூத்தடிக்கற விசயத்துல நாங்க எது சொன்னாலும் எண்ணையா வேலைய செஞ்சு முடிப்பான்! ஊட்டிக்கு போலாம்னு பேசுனா போதும். காசை தேத்தறதுல இருந்து, அங்க லாட்ஜ் புக்பண்ணி, சரக்கு வாங்கி, நொறுக்சுங்கள ஒரு பார்சலாவும், சாப்பாடு ஒரு பார்சலாவும் கட்டி சும்மா ஸீரோ டாலரன்ஸ் எரர் ப்ளானோட நிப்பான். நான் இஞ்சினியரிங் படிச்சாலும் வருசத்துல பாதி நாளு எல்லா காலேஜ் கல்சுரல்சுலதான் அட்டனென்சு போடுவேன். கூரானும் நமக்கு துணை. மேடையேறி கலாய்கிறது போக கீழ இருந்து ஆடுற ஆட்டம் இன்னும் அதிகமா இருக்கும். கல்ச்சுரல்ஸ் நடக்கற எல்லா நாளும் தண்ணில தான் இருப்பான். சொன்னாலும் கேக்க மாட்டான். நாங்க நைட்டுல மட்டும் லைட்டா போட்டுகிட்டு சலம்புனா இவன் புல்லா ஏத்திகிட்டு எங்கயாவது எவன்கூடையாவது சண்டைல மாட்டிகிட்டு இருப்பான். ஒரு கல்சுரல்ஸ் இல்லாம அவன் சட்டை கிழிஞ்சு அடிவாங்காம வெளிய வந்ததில்லை! நாங்க ஒன்னா அவன் அடிக்கற ரவுசுகளை பார்த்து கண்ணுல தண்ணிவர சிரிச்சுகிட்டு இருப்போம். இல்லைனா அவனுக்காக பஞ்சாயத்துபேசிக்கிட்டு இருப்போம்.

காலேஜு முடிஞ்சதும் ஒரு ரெண்டு வருசம் சும்மாவே வீட்டுல காசைவாங்கிட்டு தண்ணிய போடறதும் ஊருல எங்கயாவது சண்டை போடறதும்னு வாழ்கைய ஓட்டிகிட்டு இருந்தான். நான் அவன் வீட்டுக்கு போகும்போதெல்லாம் அவன் அம்மா இதையெல்லாம் சொல்லி அழுவாங்க. நாங்க ஏதாவது அவனுக்கு சொல்லப்போனாலே "விடுடா...மாப்ளா.. வாழ்க்கைல இதெல்லாம் ஒரு பிரச்சனையா..?" அப்படின்னு எங்களை அமுக்கிடுவான். நானும் வேளை தேடி சென்னை வந்துட்டதால ஊருக்கு போகும்போதுமட்டும் அவனை பார்த்து பேசற மாதிரி ஆகிடிச்சு. கொஞ்ச நாளு கழிச்சு அவன் ஊருக்கு வெளில ஹைவேஸ்ல குடில் குடிலா போட்டு ஒரு டாபா ஓட்டல் திறக்க பட்டுன்னு பத்திகிச்சு. ஆறே மாசத்துல நல்லா பிக்கப் ஆகிடிச்சு. எங்களுக்கும் இதைகேட்டு ஒரே சந்தோசம். பய உருப்பட்டுட்டான்னு மனசுல ஒரு நிம்மதி. ஆனா எல்லாம் ஒரு 2 வருசத்துக்குதான். கைல நிறைய பணம் புரள 25 வயசுலயே எப்போதும் தண்ணி. எப்பபாரு பான்பராக். எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடும்? கடை சுத்தமா படுத்துடுச்சு! நாங்க சொன்னா கேக்கற நிலைமையெல்லாம் தாண்டி போயிட்டான். எப்பபாரு வீட்டுல காசுகேட்டு சண்டை. தண்ணிய போட்டதும் மெண்டலு மாதிரி ரோட்டுல சண்டை! வயசான அவங்க அம்மா பொறுக்கமுடியாம 20,000 ரூபாய 4பேரு கிட்ட குடுத்து அவனை புல் மப்புல இருக்கறப்ப கூட்டிகிட்டுபோய் ஏர்வாடில ஒரு இடத்துல பைத்தியம்னு சொல்லி காசைக்கட்டி சங்கிலிபோட்டு கட்டி விட்டுட்டு வந்துட்டாங்க! ஒரே வாரம்தான்! பெத்தமனம் பித்துன்றமாதிரி இன்னொரு 20,000 ரூபாய் செலவுபண்ணி கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க... ஒரு வாரத்துக்குள்ள செம அடி அங்க... குடிக்க சரக்கு கேட்டு சண்டைபோட பின்னியெடுத்துட்டாங்க. பெத்த அம்மாவே கொண்டுவந்து அங்க சேர்த்துவிட்டது தெரிஞ்சு சுத்தமா ஆப் ஆகிட்டான்!

இப்பவும் அதே வீட்டுல தான் இருக்கறான். அழுக்கு லுக்கியும் பரட்டை தலையுமா காலைல எழுத்தவுடன் அன்றைய கோட்டா 100 ரூபாய வாங்கிகிட்டு காலைலயே சரக்க அடிச்சுட்டு வீட்டுல சாப்டுகிட்டு இருக்கறான். ஒரே வித்தியாசம் பழையபடி யாரோடவும் சண்டை போடறது இல்லை. யாரைபார்த்தாலும் போதைல "எங்க அம்மாவே என்னை ஏர்வாடில சேர்த்துடாங்க சார்"னு சொல்லி அழுவான். 30 வயசுலயே வாழ்க்கைய மொத்தமா தொலைச்சிட்டு நிக்கறவனை மனசு தாங்காம போன தடவை ஊருக்கு போகும்போது போய் பார்த்தேன். அவனோட அம்மா அழுததை தவிர வேற ஒன்னுமே பேசலை. பேச்சுத்துணைக்குகூட ஆளில்லாம இருந்தவன் என்னை பார்த்ததும் அப்படியே கைய பிடுச்சுகிட்டு அழுதான். ஏர்வாடி கதையெல்லாம் ஒரு வெறுப்போட சொன்னான். பழைய கிரிக்கெட்டு காலேஜு கதையெல்லாம் ஒரு அரைமணிநெரம் சொல்லி சிரிச்சான். என்னால பழையபடி சிரிக்கமுடியலை. அவன் முகத்தையே பார்த்தபடி மையமான அவஸ்தையான சிரிப்போட அவன் சொல்வதை கேட்டபடி இருக்கிறேன்.. "மாப்ள.. உன்னால கூட என்கூட பழையபடி பேசமுடியலை இல்ல...? நான் வாழ்க்கைல தப்புபண்ணி அழிஞ்சவந்தான்... தண்டப்பொறுக்கிதான்.. ஆனா உங்ககூட ஜாலியா இருந்ததெல்லாம் அப்படியே நெனைவிருக்குடா... ஆனா நீங்க மட்டும் உருப்படற வழில போனப்ப என்னைமட்டும் ஏண்டா விட்டுட்டீங்க? நீங்க எல்லாம் சேர்ந்து என்னை கொஞ்சம் அடக்கியிருந்தா நானும் இப்படி ஆகியிருக்க மாட்டேன்ல? " எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மனசு பாரமாகி கொஞ்ச நேரத்துல "ரயிலுக்கு நேரம் ஆயிடிச்சு.. அடுத்தமுறை பாக்கறேன்"னு கிளம்பிட்டேன்.

அன்னைக்கு ராத்திரி சென்னை போற ரயில்ல மனசு போட்டு கொடய தூக்கம் வராம படுத்திருக்கறேன். அவன் சொல்லறதுலையும் உண்மை இருக்குல்ல? என்ன தான் தன்னிரக்கத்துல அவன் சொன்னாலும், தப்புபண்ணி அழிஞ்சவன்னானும் ஒரு காலத்துல நண்பன்னு இருந்தப்ப சந்தோசமான நேரமெல்லாம் அவனோட சேர்ந்து ஆடியிருக்கோம். அவன் தப்பு பண்ணபோதெல்லாம் தள்ளிநின்னு வேடிக்கை பார்த்திருக்கோம். அட்வைசு பண்ணறோம்னு சில கருத்துக்களை சொல்லிட்டு கடமை முடிஞ்சதுன்னு விலகிட்டோம். 10 வருசங்களுக்கு முன்னால் நண்பனாக இருந்தவன் இன்று தூரத்தில் இருந்து எட்டிப்பார்த்து அக்கறை என்ற பெயரில் சில பரிதாபங்களை உதிர்த்துவிட்டு மறந்துவிடும் நிலையில். இதுவா நட்பு? ஒரு காலத்துல நெருங்கிய நண்பனா வாழ்க்கைல ஒருத்தனா இருந்தவன் காலப்போக்குல விலக்கிவிடப்பட வேண்டிய ஒருத்தனா மாறியதற்கு அவன்தான் காரணம்னாலும் அதுல நண்பனாக என்பங்கு எதுவுமே இல்லையா? வாழ்க்கையில் தேவையில்லாத உறவுகளை விலக்குவதற்கு வேலை, கல்யாணம், புள்ளகுட்டின்னு ஆயிரம் சமாதானம் வச்சிருக்கறோம். ஒவ்வொரு காலக்கட்டதிலும் இருக்கும் நிலையான உறவுகள் என்ற நம்பிக்கைகள் வயசாக ஆக கால ஒட்டத்தில் மெல்ல மெல்ல கரைந்து தேய்ந்து அர்த்தமிழந்துபோகிறது. இன்று சுற்றியிருக்கும் நட்புகளும் உறவுகளும் நாளை அதனதன் தேவைகளை பொறுத்து எப்படி மாறப்போகிறதோ? நாலாம் வகுப்பில் அவனில்லாமல் நானில்லை என இருத்த நண்பன் இப்போது இருக்குமிடம் தெரிந்தாலும் நட்பை புதுப்பிக்க தோன்றவில்லை! 5 வருடங்களுக்கு முன் சண்டை போட்டுச்சென்ற மாமாவின் வீட்டு விசேசத்திற்கு போகமுடிவதில்லை. 15 வயதில் பழகிய கூரான் 30 வயதில் முக்கியமில்லை. அந்தந்த வயதின் ஆர்வங்கள் காலப்போக்கில் மாறுவதால் மட்டுமே இப்படியாகிறதா? மனசுக்கு நேர்மையாய் சொல்ல முடியுமா? காலத்திற்கேற்ப மாறுவதுதான் என் சுயமா? இது அயோக்கியத்தனம் இல்லையா? இதுதான் வாழ்க்கையின் இயல்பா? மனசாட்சியின் குடைச்சலில் கண்ணோரம் நீர் கசிய தெரிந்தே தொலைத்த என் சுயங்களைப்பற்றி கவிதை மட்டுமே மனதில் எழுதி தூங்கிப்போகிறேன்.

ம். வாழ்க்கை போய்க்கொண்டுதான் இருக்கிறது. கூரானின் அம்மா நடைபிணமாகவும், அவன் பிணமாவதை நோக்கி நடையாகவும், எனக்கு உறவுகளின் மதிப்புகளும் அதற்கான கடமைகளும் புரியாத, தெரியாத, தெரிந்துகொண்டாலும் காலப்போக்கில் மறக்கவிரும்பும் விதமுமாய்...

ஒரு வேளை உணவுImage hosted by Photobucket.com


கவல் தொழில்நுட்பத்துறையில் எல்லோரும் எங்கே போவார்கள்? அமெரிக்கா? இங்கிலாந்து? சிங்கப்பூர்? எனக்கு முதன்முதலில் வாய்த்தது போட்சுவானா!! என்னது? உங்களை திட்டறேனா?! இல்லைங்க... தென்னாப்ரிக்காவின் மேல்பகுதியில் நிஜமாகவே இப்படி ஒரு நாடு இருக்குதுங்க... எனக்கு இந்த வேலை கிடைத்ததும் முதலில் செய்தது அட்லசை எடுத்து போட்சுவானா எங்கே இருக்கிறது என தேடியதுதான். நமக்கும் ஒரு வீராப்புங்க.. அதென்ன.. எல்லோரும் போற ஊருக்கே நாமும் போறது? புதுசா ஒரு நாட்டுக்குத்தான் போவமேன்னு கெளம்பிட்டேனுங்க... நாட்டோட மொத்த சனத்தொகைல 90% ஆப்ரிக்க இன மக்கள். மத்தவங்க எல்லாம் பக்கத்து நாட்டிலிருந்து வந்தேரிகள்! முக்கிய தொழில் மாட்டிறைச்சி மற்றும் வைரச்சுரங்கம். மொத்த வைரச்சுரங்கங்களையும் ஏமாந்து போய் பிரிட்டீஷ் கிட்ட மொத்தமா குத்தகைக்கு விட்டதில் அவர்கள் வெட்டியது போக தரும் கொஞ்ச பணத்திலேயே நாட்டோட பட்ஜெட்டு சர்பிளஸ்ல ஓடுதுன்னா பார்த்துக்கங்க. இன்னும் தோண்டப்படாத சுரங்கங்கள் மட்டுமே 70% க்கு மேல். சமீபத்தில்கூட சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரை அவர்கள் ஊரை விட்டு துரத்திய பிரச்சனையை செய்தியாக படிச்சிருப்பீங்க.. இத்தனை தகவல்களையும் திரட்டிகிட்டு "சரி.. நம்ப கூட துணைக்கு இருந்து கெடுக்க அங்க ஒரு பயலும் இருக்க மாட்டான்! இனிமே நிஜமாவே வாழ்க்கையில திருந்தியாகனும்.." என்றெல்லாம் மனசுக்குள்ள நினைச்சுகிட்டு துணிமணிகளையும் சமையல் செய்யறதுக்கு(!?) ஒரு குக்கரையும் வாங்கிகிட்டு அங்க போய் இறங்குனா ஒரே ஆச்சரியம்!! போட்சுவானா தலைநகர் கபரோனில் எங்கெங்கு பார்க்கினும் தமிழர்களும் மலையாளிகளும் இலங்கைத்தமிழர்களும்... நம்ப ஆளுங்க எந்த நாட்டைத்தான் விட்டு வைச்சாங்க? சந்தோசத்திற்கு கேக்கவா வேணும்? சரி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி வாழ்க்கைல திருந்திக்கலாம்னு முடிவுசெஞ்சு கும்பலோட கும்பலா ஐக்கியமாகிட்டனுங்க.


அங்க இருக்கற கருப்பருங்ககூட நம்ப ஆளுங்க ஒட்டவே மாட்டாங்க.. நம்பள அங்க இருக்கற லோக்கல் தென்னாப்ரிக்க வெள்ளைக்காரங்க மதிக்கவே மாட்டாங்க.. இவங்களை பிரிட்டீஷ் வெள்ளைக்காரங்க சுத்தமா கண்டுக்கமாட்டாங்க... ஒலகம் பூரா ஒரே கதைதான்! :) நான் வேலை பார்த்தது போட்சுவானா அரசாங்க ப்ராஜெட்டுக்குங்க. 5 நாள் வேலை போக வார இறுதில முழுசா ஓய்வுதான். நம்மாளுங்க அங்கனயும் ஒரு கோவில கட்டி கும்பாபிசேகம் செஞ்சி பூஜையெல்லாம் நாள் தவறாம செஞ்சு தீபாவளி, நவராத்திரின்னு அத்தனை பண்டிகைகளையும் கொண்டாடி பட்டைய கெளப்பிருவாங்க. நாங்களும் என்னைக்கெல்லாம் அன்னதானம் பண்ணறாங்களோ அன்னைக்கெல்லம் தவறாம பக்திப்பழமா ஆஜராகிடுவோம்.. நாங்கன்னா நான், சுனில், பானின்னு ஒரு பெரிய பட்டாளம்! அங்கயும் ஒரு தமிழ்மன்றம் வெற்றிகரமா நடந்துகிட்டு இருந்ததுங்க.. பண்டிகை போதெல்லாம் நடனம், நாடகம்னு நிறைய பேரு கலந்துகிட்டு தமிழ் கலாச்சாரத்துக்கு நெஜமாவே ஏதாவது செய்வாங்க.. இங்க விழாவுல சினிமா பாட்டுக்கு மட்டும் டான்சாடர குழந்தைங்கள வளர்க்கற பெத்தவங்க வெளிநாட்டுல மட்டும் எப்படி பாரதியார் பாட்டும் பரதநாட்டியமும் சொல்லித்தந்து வளர்க்கறாங்கன்றது புரியாத புதிர்!

வருசாவருசம் நாடகம் போடறது புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழருங்க தான். சத்யன் என்பவன்தான் இதில் முன்னோடி அங்க. எங்க வயசுதான் அவனுக்கும். இந்தவருசத்துக்கும் நாடகம் போடறதுன்னு முடிவாச்சுங்க.. நாங்க இந்தியாவில இருந்தப்பவே ஒரு அக்மார்க் கலைகூத்தாடிங்கன்றதை எங்க முகத்தைவச்சே கண்டுபிடிச்சிட்டவங்க எங்களையும் நாடகம் போடறதுக்கு சேர்த்துகிட்டாங்க! அப்போ வந்தது அவங்களுக்கு வினை! எப்பவும் சீரியஸ் நாடகமா போட்டுகிட்டு இருந்தவங்க இந்த வருசமும் ஒரு விதவைப்பெண் சமுகத்துல எப்படியெல்லாம் அழைக்கழிக்கப்படுகிறாள் அப்படின்னு சீரியாசான தீமோட நாடகம் எழுத உங்கார்ந்தாங்க! எங்களுக்கு பகீருன்னு ஆயிடுச்சுங்க...நாங்க என்னைக்கு சீரியசா ஒரு வேலைய செஞ்சிருக்கோம்? போட்டா தமாசு நாடகம்தான் போடனும்னு ஒரு முடிவா நின்னு அவங்க மண்டையைக்கழுவி ஒப்புக்கவச்சோம். நாடகம் போட 20 நாள் இருந்தது. தினமும் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா யாராவது ஒரு வீட்டுல கூட்டம்போட்டு ரெகர்சல் நடக்கும். என்ன கூத்துன்னா தினமும் ஒரு காட்சி ஒரு வசனம் இருக்கும்.. அடுத்தநாளே அதை மனம் போன போக்கிலே மாத்தி நடிப்போம். தினமும் அதை சத்யன் மெனக்கெட்டு எழுதிவைப்பான். இப்படியே 10 நாளைக்கப்புறம் சத்யன் வெறுத்துப்போய் என்னமோ நடிச்சுத்தொலைங்கன்னு விட்டுட்டான். எல்லாம் எங்க ரிகர்சலை பார்த்து அவனுக்கு சிரிப்புவந்த நம்பிக்கைதான். சரியான கேசு கெடைக்காத ஒரு வக்கீலு ஒரு போலி டாக்டரா மாறி எப்படி மத்தவங்க உயிரை வாங்கறான்றதுதான் கரு. தினமும் ஒரு சீனை போட்டு சிறீலங்கன், மலையாளி, தமிழன், ஆப்ரிக்கன்னு அத்தனைபேரையும் ஒருத்தர் விடாம நக்கல் தோரணமாக்கி ஒரு வழியா நாடகம் ரெடியாச்சு.

இந்த 20 நாள்ல நிறைய இலங்கைத்தமிழருங்ககூட பழக்கமாச்சுங்க.. அவங்க பேசற தமிழை கேக்கறதே ஒரு அம்சமா இருக்கும். நாளாக நாளாக நிறைய கதைச்சோம். சத்யன் அவன் அம்மாவோடு இந்த நாட்டுக்கு வந்தது எப்படி? அவன் அண்ணன் கனடாவிலும் அக்கா குடும்பத்தோட ஆஸ்திரிரேலியாவிலும் ஏன் இருக்காங்க? அவன் அப்பா இலங்கையில் இறந்தது எப்படின்னு நிறைய பேசுனோம். அவங்க சோகமா அந்த நிகழ்சிகளை சொல்லும் போதும் எங்களுக்கு சில நிமிடத்துக்குமேல முகத்தை சீரியசா வச்சி கேட்க முடியாம மறுபடியும் நாடக சீனுக்கு வந்துடுவோம். சில சமயம் LTTE காசெட்டுகள் சிலதும் கொடுத்து பார்க்கச்சொல்லுவாங்க. அப்பவும் கூட எங்களுக்கு பெருசா ஒன்னும் உரைக்கலை. "நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு on-site வரோம்.. அனா இவங்களை பாருடா மாப்ள.. குடும்பத்டோட ஆளாளுக்கு ஒரு நாட்டுக்கு சும்மாவே வந்து செட்டிலாயிருக்காங்க.."ன்னு ஜோக்கடிச்சிருக்கோம். அந்த கேசட்டுகளை வேண்டாவெறுப்பா பார்த்துட்டு "நம்ப நாட்டுக்குல்ல வந்து ராஜீவ்காந்திய கொன்னுட்டு பெரிய நியாயம் பேசறாங்கன்னு.." எங்களுக்குள்ள வாதமும் செஞ்சிருக்கோம். ஆனா ஒவ்வொரு நாளும் காணாமல் போன அப்பாவை பிணமா கண்டெடுத்தது, சகோதரிங்களை தொலைத்துவிட்டு ஒவ்வொரு பிணவறையா தேடியது, ஓடியாடி வளர்ந்த ஊரைவிட்டு கையில் கிடைத்தவைகளுடன் அனுமதி கிடைத்த நாடுகளுக்கு அகதிகளாக போனது, படித்த பள்ளி, பக்கத்து வீட்டு நண்பர்கள், வளர்த்த ஜிம்மிக்கள், கட்டிய வீடுகள், வசித்த ஊர்கள் என அனைத்து அடையாளங்களையும் இழந்தது என ஒவ்வொரு கதைகளையும் கேக்கும் போதும் மெல்ல எங்கள் மனதில் எங்களையும் அறியாம ஒரு துக்கம் கூடுகட்டினாலும் அதை வெளிக்காட்டாம தமாசு பேசியே கடைசிவரை ஒப்பேத்திட்டோம்.

தமிழ்புத்தாண்டு தினமும் வந்தது. காலைல இருந்தே தமிழ் மன்றம் களைகட்டிருச்சி. சும்மா ஒரு 1500 பேரு குடும்பம் குட்டிகளோடு வந்து இறங்கிட்டாங்க.. அடப்பாவிகளா.. இந்த ஊருல நம்ப ஆளுங்க இத்தனைபேரான்னு ஷாக்காயிருச்சு. அப்பறம் தான் எங்க நாடகம் பத்தின பயம் மெல்ல தலையெடுத்தது. சரி.. கூட்டத்தை பார்த்து பயப்படக்கூடாதுன்னு மனசைதேத்திக்கிட்டு, என்ன ஆனாலும் பரவாயில்லை... நாம நினைச்சதை மேடையேத்தியே தீரதுன்னு ஒரு முடிவுக்கு வந்தோம். காலைல பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டின்னு குழந்தைங்களுக்கே நேரம் சரியாப்போச்சுங்க.. சாயந்தரமா பெரியவங்க பாடரது, வீணை வாசிக்கறது, கும்மிப்பாட்டுன்னு முடிஞ்சி கடைசியா எங்க நாடகம் வந்தது. ஒரு மணி நேரம் நாங்க அப்ப மனசுல என்னென்ன தோணுதோ அதையெல்லாம் கலந்துகட்டி அடிச்சுவிடறோம். ரிகர்சல் பண்ணதுக்கும் மேடைல நடக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை! கூட்டம் அதையும் கைதட்டி ரசிக்குது! சத்யன் முதல்ல மண்டைய பிச்சுக்கிட்டாலும் ஜனங்க கைதட்டலை பார்த்து அமைதியாகி ஒரு ஓரமா உட்கார்ந்து என்னதான் நடக்குதுன்னு பார்ப்பமேன்னு குந்திட்டான். சில சீன்ல நாங்க பண்றத பார்த்து எங்களுக்கே சிரிப்பு தாங்கல.. வந்தவங்க நாங்க பக்காவா நாடகம் எழுதி திறமையா நடிக்கறோம்ன்னு அப்படி ஒரு பாராட்டு!! குரங்கு சும்மாவே ஆடும்.. கள்ளையும் ஊத்துனா? அந்த நெலைல தான் இருந்தோம் அன்னைக்கு நாங்க... வரவங்க போறவங்க எல்லாம் கைய புடிச்சு பாராட்டுனா வேற எப்படி இருப்போம்? சத்யனுக்கும் ஒரே சந்தோசம்.

எல்லாம் முடிஞ்சு அடுத்த நாள் சத்யன் எங்களையெல்லாம் அவன் வீட்டுக்கு விருந்து தரேன்னு சாப்பிட கூட்டிகிட்டு போனான். நான், சுனில், பானி மூணு பேரும் கைய வீசிக்கிட்டு போனோம்...வாசலிலேயே அவன் அம்மா வந்து வரவேற்று கூட்டிகிட்டு போனாங்க.. எங்கள பத்தி அத்தனையும் சத்யன் அவங்கம்மா கிட்ட சொல்லியிருக்கான் போல. எங்க ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லி கூப்பிட்டு எங்க வீட்டுல நாட்டுல பத்தியெல்லாம் கேட்டாங்க.. ரொம்ப நல்லா சமைப்பாங்க போல... எங்களுக்காகவேன்னு நம்ப ஊரு ஸ்டைல்ல மிளகு ரசமும், பாயாசமும் செஞ்சிருந்தாங்க... இலங்கை முறைல ஆப்பமும் கோழிக்குழம்பும்... நல்லா ஒரு புடி புடிச்சோம். நேத்து நாடகம் ரொம்ப அருமையா இருந்ததுன்னும் ரொம்ப நாள் கழிச்சி மனம்விட்டு சிரிச்சதாவும் சொன்னாங்க... சுனிலோட அப்பாவுக்கு பைபாஸ் ஆபரேசன் ஆனதைப்பத்தி ரொம்ப அக்கறையா விசாரிச்சு முழு குணமடைய கதிர்காமம் முருகன் கிட்ட வேண்டிக்கிட்டதா சொன்னாங்க... என்னோட அக்காவுக்கு கல்யாணம் பாக்கறதையும் கேட்டு சீக்கிரம் அமையும்னாங்க.. என்னவோ தெரியலை.. மனசு ரொம்ப பாரமாகிடிச்சுங்க...

ச்சே.. என்ன மனுசங்க நாங்க? சொந்த நாட்டில் கணவனை தொலைத்துவிட்டு ஒரு மகனை கனடாவிலும், பெண்ணை ஆஸ்திரேலியாவிலும் விட்டுவிட்டு நாட்டோடு, இனத்தோடு இருந்த அனைத்து பிணைப்புகளையும் தொலைத்துவிட்டு எவ்வித எதிர்கால திட்டமும் உறுதியாக இல்லாம அகதியாக இருக்கும் நிலையிலேயே சுகங்களை மட்டுமே அனுபவிக்கும் எங்கள் மீது இத்தனை அக்கறையாவும் அன்போடவும் பரிவோடவும் பழகறாங்களே.. அவங்களுக்கு நாங்க எத்தனை அனுசரனையா இருந்திருக்கனும்? ஒவ்வொரு முறையும் நாங்க எங்க வீட்டைபத்தி பேசும் போதும் சத்யன் குடும்பத்தைப்பத்தி அக்கறையோட விசாரிச்சிருக்கனும்? எங்க சொந்த ஊரு புராணங்களைப்பத்தி கதைக்கும் போதெல்லாம் சத்யனின் கண்ணுல தெரிஞ்ச சோகத்தை உணர்ந்திருக்கனும்? துக்கத்தின் மீது குடியிருக்கும் ஒரு சகமனுசனுக்கு தோள்கொடுத்து ஒரு அன்பான வார்த்தைகூட பேசாம மண்ணு மாதிரி இருந்திருக்கோம்! எங்களை நினைக்கறப்போ ஒரே அவமானமா இருந்தாலும் அவங்க துக்கம் ஒவ்வொன்னா மனசுல மறுபடி வர அதை பத்தி பேசிக்கிட்டே இறுகிப்போன முகத்தோட வீடுவந்து சேர்ந்தோம்!

ஒருவேளை சோறு நம்மை உணர்வுபூர்வமாக ஒரு குடும்பத்துடன் ஒட்டவச்சிருதுங்க. ஒரு உண்மையான விருந்தோம்பல் ஒரு இறுக்கமான பிணைப்பையே உண்டாக்குதுபோல. ஒரு வீட்டுல கையநனைக்கறதுக்கு நம்ப ஊருல ஏன் எத்தனை முக்கியத்துவம் குடுக்கறாங்கன்னு அப்போது தான் தெரிந்தது. மனசு முழுக்க சோகமும், வெட்கமும், இனம் புரியாத விரக்தியும்னு ஒரு கலவையான மனநிலைல வீடுவந்து சேர்ந்தோம். ஆளுக்கு ஒரு பீர்கேனை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மூலையில் சாஞ்சோம்.. சுனில் தான் முதல்ல ஆரம்பிச்சான்.. "மாப்ள... இப்போ அவங்களுக்கு சொந்த ஊருன்னே ஒன்னும் கிடையாதுடா...!!" ன்னு தொடங்கி என்னென்னவோ சொல்லி அழ ஆரம்பித்தோம்... அன்னைக்கு லைட்டா மப்புல இருந்ததும் நெஜம்! மனசு விட்டு அழுததும் நெஜம்!!

இப்பவும் சத்யன் அங்கே தான் இருக்கிறான். நான் அங்கிருந்து வந்து 4 வருசத்துக்குமேல ஆகிட்டாலும் இன்னைக்கும் சத்யனோட அம்மாவை மறக்கமுடியலை. போன வருசம் அவன் அண்ணா கனடாவில் இருந்து வந்திருந்ததாவும் அம்மாவை கனடாவில் இருக்க கூட்டிக்கொண்டு போனதாகவும் சொன்னான். என்னைக்காவது ஒருநாள் எல்லாரும் பிரச்சனையில்லாத இலங்கைல கண்டிப்பா செட்டிலாவோம்னு சொன்னது மனசுக்கு நெகிழ்சியாதான் இருந்தது...

ம்ம்ம்... அந்த என்னைக்காவது ஒரு நாள் நானும் கண்டிப்பா குடும்பத்தோட இலங்கை போய் சத்யன் வீட்டுல மறுபடியும் அவங்க அம்மா கையால செஞ்ச ஆப்பமும் கோழிக்கறியும் ஒரு புடி புடிக்கனும்...

ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..


Image hosted by Photobucket.com

ங்களுக்கு போபால் எங்கே இருக்கிறது என தெரியுமா? எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து போபால் என்ற ஊரின் பெயர் மூளையின் ஒரு மூலையில் தங்கி விட்டது. அதன் பிறகு விஷவாயுக்கசிவு விபத்தின்போது அந்த ஊரைப்பற்றி வந்த செய்திகள் சில பொதுஅறிவு விசயங்களாக மனதில் பதிந்தது. அவ்வளவே அந்த ஊருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு போன வருடம் வரை! என்றாவது ஒருநாள் போவோம் என்று நினைத்துக்கூட பார்த்திராத ஒரு ஊருடன் திடீரென்று ஒரு உன்னதமான உறவு மலரும்போது என்றென்றும் நினைத்து மகிழும்படியான ஒரு இனிமையான தருணங்களாக நிலைத்துவிடுகிறது!

போபாலுக்கு எல்லாம் போயிருக்கிறேன் என்பதால் எனக்கு இந்தி தெரியுமென்றா கேட்கிறீர்கள்? எனக்கு தெரிந்த இந்தியெல்லாம் "கயாமத் சே கயாமத் தக்", "தேசாப்", "கிலாடியோன் கா கிலாடி" மற்றும் " மே அமிதாப்பச்சன் போல் ரஹான்ஹூன்"!!! இதை விட்டால் தொலைக்காட்சி புண்ணியத்தில் "மட்லப், தில், ஜிந்தகி" ன்னு சில வார்த்தைகள். கல்லூரி முடித்தவுடம் சில நாட்கள் வேலை கிடக்காமல் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்தி கற்றுக்கொண்டால் மும்பையில் சுலபமாக வேலை கிடைக்கும் என்று சில நாட்கள் இந்தி வகுப்புக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் அங்கே நாங்கள் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாத எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பொடியனும் படித்துக்கொண்டிருந்தது எனக்கு தெரியாது! ஒரு வாரம் போக என்னை ஆசிரியர் சத்தம் போட்டு இந்தி வார்த்தைகளை படிக்கச்சொல்ல அந்த பொடியன் "அண்ணா, தப்பு தப்பா படிக்கறீங்க..!" என்று மானத்தை வாங்கியதில் அதோடு நின்றுபோனது எனது இந்தி பாண்டித்யம்.

சரி, போபால் விசயத்திற்கு வருவோம்! என் நண்பன் ஒருவன் தகவல்தொழில்நுட்பத்துறையில் புனேயில் வேலை பார்த்துவந்தான். வேலைப்பளு, ஓய்வின்மை, பொழுதுபோக்கு எதுவும் இன்றி உழைத்ததில் மன அழுத்த நோயால்பாதிக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் சண்டை போட்டு வேலையை உதறிவிட்டு சென்னை வருகிறேன் என வீட்டுக்கு போன் செய்து சொன்னவன் நான்கு நாட்களாகியும் ஒரு தகவலும் தராமல் மாயமாகிவிட்டான். காரில் கிளம்பியவன் என்ன ஆனானோ என்று பதறிப்போன அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்க சில நாட்கள் கழித்து தகவல் வந்தது. நேராக சென்னை வர வேண்டியவன் போபால் சென்றிருக்கிறான். கடவுளின் மீது மிக வெறுப்பில் இருந்த அவன் அங்கு இருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு இரவு 10 மணிக்கு சென்று சாமி சிலையை காலால் உதைத்திருக்கிறான். தடுக்க வந்த பூசாரியை அடித்து கீழே தள்ளிவிட்டு ஓடியிருக்கிறான். யாரோ ஒரு முஸ்லிம்தான் கலவரம் உண்டாக்கும் நோக்கத்துடன் இப்படி செய்கிறார்கள் என்று நினைத்த பூசாரி உடனே அருகில் இருந்த காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் இவனை ஜீப்பில் துரத்த, 10 நிமிட கார் துரத்தலுக்கு பிறகு இவன் ஒரு சுவறில் காரை இடித்து நிறுத்த, அப்படியே அள்ளிக்கொண்டுபோய் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இவனுக்கு இந்தி கொஞ்சம் தெரியும். ஆனால் பேசும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மூன்று நாட்களுக்கு பிறகு எப்படியோ தகவல் சென்னை வந்து சேர்ந்தது. அவனது நண்பன் ஒருவனுக்கு இந்த தகவல் கிடைத்து அங்கிருந்து மற்றுமொரு நண்பன் மூலமாக போபாலில் இருக்கும் ராஜேஷ் கெல்காருக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று நாட்களாக ராஜேஷ் அவன் அருகிலேயே காவல்நிலையத்தில் இருந்து சாப்பாடு வாங்கிக்கொடுத்து அதிகாரிகளுக்கு அவனது மனநிலையை புரியவைத்து அவன் தீவிரவாதி அல்ல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என உணர்த்த மிகவும் வருந்தி உழைத்திருக்கிறான். அவனது வீட்டிற்குகூட போகாமல் இவன் கூடவே இருந்திருக்கிறான். சில சமயம் இவன் ராஜேஸை நம்பாமல் அடிப்பதும் நடந்திருக்கிறது. அதனையும் பொறுத்துக்கொண்டு அவனுக்கு காவல்நிலைய செல்லில் பணிவிடைகள் செய்திருக்கிறான்.

எனது நண்பனை ஜாமீனில் எடுப்பதற்காகத்தான் நான் சென்னையில் இருந்து கிளம்பினேன். இரவு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து விடிகாலை விமானத்தை பிடித்து போபால் சென்று இறங்கிய போது 8 மணியாகிவிட்டது. விமான நிலையத்திற்கே வந்து விட்ட ராஜேஷ் என்னை அவனது பைக்கில் அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றான். அங்கே நான் பார்த்த காட்சி மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று. சட்டையும் ஜீனும் அழுக்கேறிப்போய் ஒரு கையில் விலங்கு பூட்டி மறுமுனையை சன்னலில் மாட்டி, காலுக்கு ஒரு வளையம் மாட்டி அதை இரும்பு கதவில் மாட்டியபடி வெறித்த பார்வையோடு என் நண்பன்! வாங்கிய அடியில் அவனது ஒரு கால் தூண் போல கன்றிப்போய் வீங்கியிருந்தது. என்னை பார்த்தும் பார்க்காதது போல எதனையோ முனங்கியபடி இருந்தான். அவனருகில் அமர்ந்து மெல்ல மெல்ல பேசி முதலில் என்னை நம்பவைத்து, இங்கிருந்து அவனை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வந்திருப்பதாக சொல்லி புரியவைத்தபின்தான் சொல்வதை கேட்க ஆரம்பித்தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்கு முன்பு சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். அதற்கும் ராஜேஷ் கூடவே வந்தான். நிலைமை என்னவெனில் எனக்கு மேலே சொன்ன இந்தியை தவிர வேறு ஒன்றும் தெரியாது. ராஜேஸுக்கு ஆங்கிலம் பேசினால் புரியுமே தவிர பேச தெரியாது. உடைந்த ஆங்கிலத்தில் சிறிது பேசுவான். அங்கே இருந்த காவல்துறை அதிகாரிக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. நாங்கள் மூவரும் அமர்ந்து புகார் மனு தயாரித்தோம்! நான் ஆங்கிலத்தில் சொல்ல ராஜேஷ் அதனை முடிந்த அளவு புரிந்து கொண்டு இந்தியில் அதிகாரியிடம் சொல்ல, அவர் கேட்டும் கேள்விகளை ராஜேஷ் எளிய இந்தியிலும் சைகையிலும் எனக்கு சொல்ல, நான் அதனை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதிலளிக்க, அந்த புகார் மனுவை அவர் இந்தியில் எழுதி முடிப்பதற்குள் 3 மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு முந்தைய நாளே ராஜேஷ் ஒரு வக்கீலையும் பேசி தயார் படுத்தியிருந்தான். 2 மணி அளவில் நீதிமன்றம் சென்று அங்கு வக்கீலுடன் அமர்ந்து தேவையான படிவங்களை தயாரித்து பின் ஒரு வழியாக 4 மணிக்கு நீதிமன்றத்தில் என் நண்பன் ஆஜர் படுத்தப்பட நான் கொண்டு போயிருந்த மருத்துவச்சான்றிதலையும் போபால் அரசாங்க மருத்துவரின் சான்றிதலையும் கணக்கில் கொண்டு ஜாமீன் அளிக்கப்பட்டது. முறையான மருத்துவம் அளித்த பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் வரவேண்டுமென நீதிபதி எழுதி கையெழுத்திட்டார். ம்ம்ம்.. சினிமா கோர்ட்டுக்கும் நிஜ கோர்ட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள்!

என் நண்பனது கை விலங்குகள் அகற்றப்பட்டது .மெல்ல மெல்ல அவனுடம் பழைய நினைவுகளை சொல்லி சொல்லி ஒரு மாதிரியாக இயல்பாக நடந்துகொள்ளும் நிலைக்கு நானும் ராஜேசும் தமிழிலும் இந்தியிலும் பேசிப்பேசி மாற்றினோம். போபாலில் இருந்து 7 மணிக்கு டெல்லிக்கு விமானம்! கார், உடைகள், வங்கி அட்டைகள், பாஸ்போர்ட் என அனைத்தும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வெறும்கையுடன் என் நண்பன். விமான நிலையத்திலேயே குளித்து நான் கொண்டு சென்ற உடைகளை அணிந்துகொண்டு எதனையோ நினைத்து வெறித்தபடி விமானநிலைய முகப்பறையில் அமர்ந்திருந்தான். எங்களை விமானநிலையத்தில் ஒரு ஆட்டோ பிடித்து இறக்கி விட்ட ராஜேஷ் சற்று நேரத்தில் வருவதாக கூறி சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு ஜோடி புது செருப்போடும் காலில் சுற்றும் பேண்டேஜுடனும் வந்தான் ராஜேஷ். அப்போதுதான் பார்த்தேன். என் நண்பன் காலில் செருப்பில்லாமல் இருப்பதும் ஒரு கால் வீங்கிப்போய் இருப்பதும்! இத்தனைக்கும் பிறகு தான் எனக்கு சுருக்கென மனதில் தைத்தது! யார் இந்த ராஜேஷ் கெல்கார்? இவனைப்பற்றி இங்கே வந்ததில் இருந்து ஒன்றுமே கேட்கவில்லையே!! 3 நாட்களாக யாரென்றே தெரியாத ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனோடு இருந்து கவனித்துக்கொண்டிருந்திருக்கிறான். உணவு உட்பட அதிகாரிகளிடம் பேசுவது தொடங்கி நீதிமன்ற வேலைகள் முடிய விமானபயணச்சீட்டு ஏற்பாடு செய்ததுவரை அனைத்தையும் ஒரு சகோதரனைப்போல பார்த்து செய்திருக்கிறான்! சில சமயங்களில் அடியும் வாங்கியிருக்கிறான்! ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய நண்பனது நண்பனின் நண்பனுக்காக காவல்நிலையத்தில் படுத்திருக்கிறான். சரியான சாப்பாடு தூக்கமின்றி 3 நாட்கள் சொந்தவேலைகளை விட்டுவிட்டு அலைந்திருக்கிறான்! எல்லாம் எதற்காக?

அவன் சொன்னது.. "ஹர்ரே பையா.. மேரா friend told me to take care.. டீக் ஹை.. You dont worry...!" எனக்கு அப்படியே உள்ளிருந்து பொங்கி விட்டது. ஒரு நண்பன் கேட்டுக்கொண்டான் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு ஒரு துளியும் முகம் சுளிக்காமல் இத்தனையும் செய்கிறானே... ஒரே ஒரு நாளில் அறிமுகமான எனக்கே இவன் நட்புக்கு இலக்கணமாக தோன்றுகிறானே! இத்தனை நாள் இவனுக்கு நண்பனாக இருப்பவன், இவனை ஒரு நண்பனாக அடைந்தவன் எத்தனை கொடுத்துவைத்தவனாக இருக்க வேண்டும்?!? என்னால் தாங்க முடியவில்லை... விமானநிலைய வாசலில் அவனை கட்டிக்கொண்டு "நீ ரொம்ப பெரிய மனுசன்யா..! You are a great friend" என்றெல்லாம் பிதற்றுகிறேன். அவனுடன் எங்களை வழியனுப்ப வந்த அவனது நண்பர்கள் சொல்கிறார்கள்.... "`Not only for you.. for all of us our Rajesh is a great Friend!". அவனை பெற்றவர்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டுமையா இப்படி உலகம் சொல்லி கேட்க!! அவனை கட்டிக்கொண்டு கதறி அழுகிறேன். அவனோ என்னை ஆதூரத்துடன் அணைத்தபடி தட்டிக்கொடுத்து வழியனுப்புகிறான். நான் ஏன் விமான பயணம் முழுக்க அடிக்கடி அழுதுகொண்டே வருகிறேன் என்று விமான பணிப்பெண்ணுக்கும் தெரியவில்லை! என் நண்பனும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை...

அதுவரை வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி என ஒவ்வொரு பிராந்திய மக்கள் பற்றியும் ஒரு முடிவான அபிப்பிராயங்கள் வைத்திருந்த நான் அவைகள் அனைத்தையும் என் மனதிலிருந்து உடைத்தெறிந்தேன். உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. எதனையும் எதிர்பாராமல் உதவிய ராஜேஸுக்கு இதன்மூலம் வாழ்க்கையில் என்ன கிடைத்தது என்று எனக்குத்தெரியாது. ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான்! இப்பொழுதும் ராஜேஷும் நானும் மாதத்திற்கு சிலமுறை 15 நிமிடங்களுக்கு குறையாமல் தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். அவன் அவனுக்குத்தெரிந்த இந்தியிலும், நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும்...


இன்றைக்கும் எனக்கு போபாலில் விமானநிலையத்தையும் காவல் நிலையத்தையும் நீதிமன்றத்தையும் தவிர வேறொன்றும் தெரியாது. ஆனாலும் எனக்கு போபால் என்ற ஊரின் பெயரைக்கேட்கும் போதெல்லாம் "கோயமுத்தூர்" எனக்கேட்டும்போது ஏற்படும் ஒரு அன்னியோனியமான உணர்வே ஏற்படுகிறது :)

அழுத கணங்களே உன்னதமானவை


Image hosted by Photobucket.com


இப்போ வந்துபோன ஆடியோட எனக்கு 32 வயசு முடிஞ்சதுங்க... "ஆடாம வந்தாலும் அதேதான்... அதுக்கு என்னா இப்போ..?"ன்னு கொரலு உடாதிங்க... யோசிச்சுப்பார்த்தா இந்த 32 வருச வாழ்க்கைல நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து கெக்கே பிக்கேன்னு சிரித்து சிரித்தே 25 வருடங்களை ஓட்டியிருக்கிறேன்! சின்ன வயசுல அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம்னு நல்ல புத்தகங்கள் படிச்சிருந்தாலும் முத்து, லயன் காமிக்ஸ்ல் வந்த ஸ்பைடரும் லக்கி லுக்கும் தான் நம்ப ஸ்பெஷல்! ஒரே காமிக்சை 10 தடவைக்கும் மேல் படித்துவிட்டு அந்த கதையை அப்படியே பள்ளியில் சககூட்டாளிகளுக்கு சிரிக்க சிரிக்க சொல்லிமுடிப்பதற்குத்தான் என்னுடைய மதிய சப்பாட்டுநேரம் சரியாக இருக்கும். வீட்டிலும் அதே கதைதான். அப்பா மட்டும் வீட்டில் இல்லையென்றால் என் அண்ணன் அக்காவோடு சேர்ந்துகொண்டால் வீடு தூள் பரக்கும். வகுப்பில் நடந்தவை, வாத்தியார் செய்தவை என்றுசொல்லி சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்.


எல்லாம் அப்பாவினுடைய புல்லட் சத்தம் கேட்கும்வரைதான். அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீடு அப்படியே சென்னை கன்னிமரா நூலகம் மாதிரி அமைதியாகி ஆளுக்கு ஒரு புத்தகத்துடன் ஒவ்வொரு மூலைல ஐக்கியமாகி ஏதோ அடுத்தநாள் IPS பரிச்சைங்க்கறமாதிரி ஒரு போஸ் கொடுப்போம். இத்தனைக்கும் அவர் எங்களை அவ்வளவு சீக்கிரம் அடிக்கவோ கண்டிக்கவோ மாட்டார்! என்னதான் காவல்துறைல அதிகாரியா இருந்தாலும் எங்களை மட்டும் அவரால கண்டுபிடிக்கவே முடியவில்லை. இல்லை தெரிந்தும் கண்டுக்காமல் விட்டுவிட்டாரோ என்னவோ! எல்லாரும் தப்பிச்சிட்டாலும் நான் மட்டும் வருடத்துக்கு இருமுறை மாட்டுவேன்! பின்னே காலாண்டு, அரையாண்டு பரிச்சை மார்க்சீட்டுல அவரிடம்தானே கையெழுத்து வாங்கியாக வேண்டும்? "அதெப்படிடா.. பார்க்கும் போதெல்லாம் படிச்சுகிட்டே இருக்கற.. மார்க்கு மட்டும் வரமாட்டேங்குது?"ன்னு கேக்கறப்ப கொரமுழி முழிச்சிகிட்டு அம்மாவை பார்ப்பேன்... அம்மா ஒரே வார்த்தைதான்.. "விடுங்க.. பையன் பாவம்!?" அவ்வளவுதான்... "அடுத்ததடவை நல்ல மார்க்கு வாங்கனும் சரியா..?" என்பதோடு நின்றுவிடும் என் அப்பாவின் கண்டிப்பு... ஆனால் இந்த "அடுத்த தடவை.. நல்ல மார்க்கு.." என் கல்லூரி இறுதியாண்டுவரை தொடர்ந்தது வேறுகதை!


பள்ளிக்கூட நாட்களிலாவது பரவாயில்லை. கேட்ட, படித்த, பார்த்த விசயங்களுக்கு சிரித்து பிழைப்பை ஓட்டியிருக்கிறேன். இந்த கல்லூரில பாருங்க.. அடுத்தவனை கிண்டலடிச்சி ஓட்டறதுன்னு ஒரு கெட்ட பழக்கம் ஒட்டிகிச்சி. எவனாவது ஒருத்தன் மாட்டுனா போதும். அப்படியே கிழிச்சி காயப்போட்டாதான் அன்னைய பொழுதுக்கு கடமைய முடிச்ச திருப்தி. இதுல பாதிக்கப்பட்டவன் தவிர மத்த அத்தனைபேரும் விழுந்து பொரண்டு சிரிப்போம். இப்படித்தான் ஒருதடவை ஆங்கிலம் பேசவராத ஒருத்தன்( ஆமாமா.. அப்போ நானெல்லாம் ஆக்ஸ்போர்டு ரேஞ்சு.. நீங்க வேற...) தெரியாத்தனமா ஒருநாள் கடைல கமாய்(CAMAY) சோப்புன்னு கேட்டுவைக்க ஒரு 20 நாளைக்கு அவன் 1942-A love story ஆங்கிலபடத்துக்கு போலாம்னு கூப்பிட்டதாகவும், Double team ல உன் டும்மியும்(Van Dame) terminaterல ஆர்னால்ட் சிவனேசனனும் நடிச்சிருக்கறதா சொன்னதாகவும், கடலை போடும்போது "How long is your name? How many of your Father" னு கேட்டதாகவும் இல்லாதையெல்லாம் கெளப்பிவிட்டு சிரிக்க அவன் கடுப்பாகி என்னை புரட்டி எடுத்ததும் நடந்திருக்கிறது. ஆனால் அதற்கும் சிரிப்புத்தான் சிரித்திருக்கிறேன். அவன் என்னை அடிக்கும் போது "எனக்காடா இங்கிலீசு தெரியாது..? இத்தா வாங்கிக்க.. A for Appaththa... B for ballimittai" னு சொன்னதாக... இப்போது நினைத்துப்பார்த்தால் நிறைய நண்பர்களோட மனசை காயப்படுத்தியிருக்கேன்னு தெரியுது. இத்தனைக்கு பிறகும் என்னை நண்பனா மதிச்சு கூட இருந்திருக்காங்கன்னா அது என்னை ஒரு தவிர்க்க முடியாத இம்சைன்னு நினைச்சு பொறுத்துப்போனதால இருக்கலாம்! இத்தனை வருசம் சிரிச்சதுல வாய்கிழிய பேசறதுதவிர வேற ஒன்னுமே கத்துக்கலைன்னு தெளிவாக தெரிகிறது


வாழ்க்கைல நான் சில நாட்கள் மனசு விட்டு அழுத நேரங்களும் உண்டு. என் சொந்த சோகங்களுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் இல்லாமல் மனசு நெகிழ்ந்துபோய் உணர்வுபூர்வமாய் அழுத நேரங்களில்தான் நான் நிறைய தெரிந்துகொண்டிருக்கிறேன். அந்த அழுகையின் கண்ணீர் உலகம் பற்றிய எனது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. மனதிலிருந்த சோகங்களை கரைத்திருக்கிறது. கசடுகளை கழுவி சுத்தமாக்கியிருக்கிறது. பிறர் உணர்வுகளை மதிக்கும் பண்பை கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது. மனதிற்கு உறுதியையும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. அந்த சில நாட்களே வாழ்க்கையை சொல்லிக்கொடுத்திருக்கிறது.


என்னைக்கேட்டால் நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நான் அழுத கணங்களே உன்னதமானவை! அதைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்!