புதன், நவம்பர் 20, 2013

காமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு? நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா? நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல? ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…”


ஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது.


நாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாசி சாலையைத்தொடும். மறுமுனைகள் தொடும் இடம் நாலு ஏக்கராவுக்கு காலிநிலம். பெரும்பாலும் பார்த்தீனிய செடிகளால் நிறைந்திருக்கும். அதுக்கு ஆரம்பத்துல ஒரு சின்ன கால்வாய். அதைத்தாண்டுனா எங்க கிரிக்கெட் க்ரவுண்டு. அதன் கடைசில ஒரு ஃபவுண்டரிய ஓட்டிய சின்ன ஆஷ்பெட்டாஸ் ஷெட்டு. அதுதான் எங்களுக்கு கிரிக்கெட் காலரி, சட்டசபை, சங்க ஆபீஸ்னு எல்லாமே. காலனில ஏறக்குறைய என்வயசுல ஒரு டஜன் உருப்படிக தேறுவோம். அதை வைச்சே மெஜாரிட்டி போட்டு அந்த ஷெட்டை ஆக்கிரமித்திருந்தோம். எங்களைவிட சிறுசுங்க கிரிக்கெட்டு வெளையாடிட்டு போயிறனும். சங்க ஆபிஸ்குள்ள எல்லாம் வரப்படாது. எங்களை விட பெருசுங்க எப்பவேணா வந்துபோகலாம். ஆனா பட்டா போட்டுறப்படாது. பெரும்பாலும் பெருசுக திருட்டு தம்முக்கும் பீருக்கும் தான் வரும்க. கொஞ்ச நேரத்துலயே மேட்டரை முடிச்சுட்டு பொண்டாட்டி திட்டுவாங்கன்னு கெளம்பிருவாங்க. பெருசுகளும் தலைகாட்டறதால ஒருமாதிரி பொறுப்பாத்தான் ஓடுதுன்னு அப்பாம்மா யாரும் பெருசா கவலைப்படறதில்லை. நாங்களும் அ.கொ.தீ.க கழகம் அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ சின்னச்சின்னதா தப்புக செஞ்சுக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருந்தோம். வண்டின்னா எல்லா வண்டியும்தான். சைக்கிள்ல ஆரம்பிச்சு, பைக்குகள்ல போய் அப்பறம் இப்பக்கூட மக்கா கார்களை நிறுத்தி அங்கன பொங்கல் போட்டுட்டுதான் இருக்காங்க. நாந்தான் வேலைதேடி ஊரைவிட்டு வந்ததுல டச்சுவிட்டு சிலகாலமாச்சு.கோபிண்ணா இந்த பெருசுக கூட்டத்துல என்னைக்குமே சேர்ந்ததில்லை. அவருக்கான வயலும் வாழ்வும் வேறு. எங்களை விட ஏழெட்டு வயசு அதிகம். நாங்க ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடியே அவர் காலேஜெல்லாம் முடிச்சு வேலைக்கு போயிட்டாப்ல. வீட்டுக்கு ஒரே பையன். ஆறடி, தங்கநிறம், கருஞ்சுருட்டை முடி, சதுரமுகம், அதுல ஒரு பட்டைக்கண்ணாடி. சுருங்கச்சொன்னா மலையாளிக முகம். பின்ன அவங்கம்மா பாலக்காட்டு சைடுல்ல? இப்பக்கேட்டால் அவரு பார்க்கறதுக்கு உயரமாய் சிவப்பாய் மீசைவைச்சுக்காத ஆதவன் மாதிரி இருப்பாப்லன்னு பட்டுன்னு சொல்லிருவேன். அப்பக்கேட்டிருந்தா டி.ராஜேந்தர் படத்துல அவர் தங்கச்சிய காதல்செய்து ஏமாத்தி அப்பறம் சாவகாசமா அடிவாங்கி திருந்திக்கொள்ளும் மேன்லி ஸ்மார்ட் கேரக்டர்களுக்கான முகம். ஆனால் உண்மையில் கோபிண்ணா தப்பெல்லாம் செய்யமாட்டாரு. எங்களுக்கெல்லாம் ஒரு விதத்துல எதிரி. வீட்டுல எங்க யாருக்கு புத்தி சொல்லறதா இருந்தாலும் பெரும்பாலும் அவரு பேரை வைச்சுத்தான் பாட்டு ஆரம்பிக்கும். ஏனெனில் அவரது சொல்லும் செயலும் ஒழுக்கமும் அப்படி. கடமை கண்ணியம் கட்டுப்பாடுல எங்க காலனி தாய்மாரெல்லாம் அவரை உச்சிமுகர்ந்து கைவிரல்களால் கன்னத்துல சொடக்குப்போட்டு ஏறுகழிப்பாங்கன்னா பாருங்களேன்!என்ன அவரது வீடு இந்தப்பக்கம் கடைசி வீடுங்கறதால அங்கிருந்து பார்த்தா சங்க ஆபீஸ் கத்திக்கூப்பிடும் தூரம் தான். வீட்டுக்கு முன்னால் ஒரு வேப்பமரம். அதனை ஒட்டியே தெருவிளக்கு. இரவுநேரங்களில் அந்த தனித்த மஞ்சள்விளக்கின் ஒளி அவரது வீட்டை முழுதாக போர்த்திவிட்டது போலிருக்கும். கோபிண்ணா கடைசியாக வீட்டுக்குள் செல்வதற்குமுன் சங்கத்துல ஏதாவது வண்டிக தென்பட்டால் எட்டிப்பார்த்து மேற்கண்டபடி எங்களுக்கு லைட்டா ஒரு எத்து விட்டுட்டு போவாப்ல. எங்க காலனில அனேகமாக எல்லா வீடுகளும் 9 மணிக்கெல்லாம் கடை சாத்திரும். இளந்தாரிங்க நாங்க இப்படி கொஞ்சம்பேர் மட்டுமே நடமாட்டம். இதுவும்போக எங்களை நைட்டு சாப்பாட்டுக்கு அப்பறமும் வெளில சுந்த அனுமதிச்சதுக்கு ஒரு காரணம் இருந்தது. காலனியில் முளைத்த திருடர் பயம்! கொஞ்சம் ரிமோட்டான ஏரியாங்கறதாலயும் காலனிய தாண்டித்தான் சில பவுண்ட்ரிகளும் லேத்துபட்டறைகளும் ஓடிக்கொண்டிருந்ததால் காலனிவழியா யாரு வரப்போக இருக்காங்கன்றது தெளிவில்லை. அப்பப்ப ஏதாச்சும் சில்லரைத் திருட்டுகளாக சைக்கிளை கெளப்பிக்கிட்டு போறது, வீட்டுக்கு முன்னாடி இருக்கும் ஏதாச்சும் காணாமப்போகத்தான் இருந்தது. ஒரு நாள் பூட்டிக்கிடந்த வீட்டுக்கு பின்னாடி கதவை பெயர்த்துப்புகுந்து 20 பவுன் நகை திருட்டுப்போனதுக்கு அப்பறம்தான் எல்லாரும் பீதியாகி உசாரானாங்க. காலனி மீட்டிங்கைப்போட்டு வீட்டுக்கு மாசம் இவ்வளவுன்னு வசூலிச்சு செக்கூரிட்டிங்க ரெண்டுபேரு நைட்டு ரோந்துக்கு அப்பாயிண்டடு. அதுவும் திருப்தி ஆகாததால இளந்தாரிக மிட்நைட்டு வரைக்கும் ரோந்துபோறோம்னு முறைபோட்டு சுத்திவருவாங்க. நாங்க ஒரு ரவுண்டுக்கப்பறம் சங்க ஆபீஸ்ல பொங்கலுக்கு அடைக்கலம் ஆயிருவோம். கோபியண்ணா மட்டும் முடிகிற நாளெல்லாம் விரைப்பாக செக்கூரிட்டிகளுக்கும் மேலாக ரவுண்ட்ஸ் சுத்திட்டு திருப்தியானதுக்கப்பறம் தான் படுக்கப்போவார்.

நாங்களும் பலநேரம் பேசித்தீர்த்ததுண்டு. எப்படி கோபிண்ணா மட்டும் இப்படி நல்லபுள்ளையா இருக்காருன்னு. அதுக்கு காரணம் அவங்கப்பாதான் அப்படின்னு நாந்தான் அடிச்சுப்பேசுவேன். கோபியே இப்படின்னா அவங்கப்பா எப்படியாப்பட்ட கனவானாக இருக்கனும்தானே நினைக்கறீங்க? அப்படியே தலைகீழ். பயங்கர காசுபொழங்கற கவருமெண்டு துறைல கேடர் அதிகாரி. யாருக்கும் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணமெல்லாம் சேமிப்புதான். உழைத்து வராமல் கிடைச்சால்கூட லாட்டரி. ஆனால் கடமையை செய்ய மறுத்தோ அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியோ வாங்கும் லஞ்சப்பணம் என்பது பாவப்பணம். பாவம் செய்ய தூண்டுவதால். காலைல இருந்து ஏய்ச்சதுக்கு மாலைல கையில சிலபல ஆயிரங்கள் சுளையாக கிடைத்தால் அதை சேமிக்கத்தோணாது. சொத்து வாங்கி கணக்கு காட்ட முடியாது. பாக்கெட்டுலயும் ரொக்கமாவே வைச்சுக்கமுடியாது. மிகக்குறைந்த அளவுக்கு மான அவமான உணர்ச்சி இருந்தாலும்கூட அது குற்ற உணர்ச்சியாக உருவெடுத்து தலையை தின்னுரும். ஒரே வழி அன்னைக்கு நைட்டே அதை ஆட்டம்போட்டு அழிச்சிறதுதான். குடி குட்டி கும்மாளம். காலைல ட்ரிம்மா சபாரி சூட்ல கிளம்புனார்னா சாயந்திரம் வண்டி அப்படியே ஆபீசர்ஸ் க்ளப், க்ளவுட் 9 பார் இப்படி எல்லா இடமும் குடிச்சு முடிச்சு வீடு வந்துசேர 11 ஆகிரும். வண்டில இருந்து யாரையாவது திட்டியபடிக்கு உளரிக்கொண்டே இறங்கி உள்ள போவார்.60வதுல அவர் ரிடையர் ஆனதுக்கு பிறகும் இது தொடர்ந்தது. முழுநாள் வேலையாக. காலைல 11 மணிக்கே டிரைவர் போட்ட அம்பாசிடரை எடுத்துக்கொண்டு சீட்டாட கெளம்பிருவாப்ல. இதையெல்லாம் சின்ன வயசுல இருந்து பார்த்துப்பார்த்து வெறுத்துப்போய்தான் கோபிண்ணா மனசை ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்பாய் மாற்றியிருக்க வேண்டும். மிக இயல்பான காட்சி அது. எல்லா ஞாயிறுகளிலும் கோபிண்ணா வீடுமொத்தமும் சுத்தம் செஞ்சுக்கிட்டிருப்பார். போர்டிகோ கழுவுவார். ஜன்னல் கம்பிகளையெல்லாம் துடைச்சுக்கிட்டிருப்பார். பூச்செடிகள் அனைத்துக்கும் தண்ணி ஊத்திக்கிட்டிருப்பார். அம்பாசிடரை தூசிதும்பில்லாம அலசியெடுப்பார். அவங்கப்பா கையில்லாத பனியன் போட்டுக்கிட்டு நெஞ்சுக்கு கீழ தொப்பைக்கு மேல கட்டுன சிங்கப்பூர் லுங்கியோடு அவரது ஆறாவது விரலான சார்மினார் சிகரெட்டு புகைய தேமேன்னு ஈசிசேர்ல சாய்திருப்பார். ஒரு நாளைக்கு பத்து பாக்கெட்டு நிச்சயம் ஓடும். அப்பாருக்கு சிற்றின்பம். மகனுக்கும் ஒழுக்கம். அவங்கமாவுக்கு கோயில் கோயிலாக பக்திதேடல்னு அவங்க குடும்பமே ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலம் அது.


ஆனால் காலனி பெருசுகளுக்கு அவங்கப்பா மேல ஒரு வயித்தெரிச்சல் எப்பவும் இருந்தது. எல்லோரது வீட்டுலயும் ஒருத்தருக்காவது கொழுப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவுன்னு கவுரவமாக சொல்லிக்க ஒரு வியாதி இருந்தது. அது சந்திச்சு பேசும்பொழுது ஆளாளுக்கு காலைல வாக்கிங் போறதையும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ததை சொல்லி பெருமையடிச்சுக்கவும் உதவிக்கொண்டிருந்தது. ஆனால் கோபியண்ணா அப்பாக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா ஒழுக்கமா அடங்கிக்கிடக்கற உடம்புங்க எல்லாம் சீக்கிரமே உழுத்துப்போக ஆட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் இந்தாளுக்கு மட்டும் ஒன்னுமே வரலையான்னு ஆளாளுக்கு அங்கலாய்சுக்குவாங்க. அது நீருபூத்த நெருப்பாக மேலாக்க சாம்பல் தட்டிய பொறாமையாக உருவெடுத்திருந்தது ஒரு தருணத்தில் வெளிப்பட்டது.


ஒரு நாள் மத்தியானநேரத்தில் காசைக்காட்டி ஏதோவொரு வேலையாளு பொம்பளைய ஏற்பாடு செய்து முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்ட காலியாருக்கற வீட்டுல கோபிங்கப்பா காமத்தில் திளைத்துக்கொண்டிருந்த பொழுது யாரோ வயித்தெரிச்சல்ல அந்த அறைக்கு வெளில நல்ல பெரிய பூட்டு போட்டுக்கு போயிட்டாங்க. வெளில வரமுடியாம அவர் கத்த அந்த பொம்பளை மூலைல குறுகிக்கிட்டு கதற விசயம் மெல்லப்பரவி அத்தனை காலனி பெருசுகளும் அந்த பில்டிங்குல ஆஜர். ஆளாளுக்கு அறிஞ்ச தெரிஞ்ச புத்திமதியா அள்ளிவிடறாங்க. யாருக்கும் பூட்டை உடைக்க தோன்றவில்லை. ஆடின ஆட்டத்துக்கு அந்தாளு எவ்வளவு நேரம் உள்ள இருக்காப்லயோ அந்தளவுக்கு அசிங்கப்படனும்னு அல்ப ஆசை. கோபிண்ணாவுக்கு விசயம்போய் களத்துக்கு வந்து சேர்ந்தார். முகம் எந்த உணர்ச்சியும் இல்லாம இருகிப்போய் கிடந்தது. ரெண்டு நிமிசத்துல நிலைமைய புரிஞ்சுக்கிட்டு தலைய குனிஞ்சபடிக்கே “பூட்டை உடைச்சுக்கறேன்.…” என்று மட்டும் சொன்னார். அவர் சில நொடிகள் தாமத்தித்தது சபையோரின் அனுமதிக்கு காத்திருந்தது போலவே இருந்தது. ஆனால் சடக்குன்னு எங்கிருந்தோ ஒரு பெரிய இரும்பு ராடு கொண்டுவந்து ஒரே நெம்பு. பூட்டை தாழ்ப்பாளோட பெயர்த்து எடுத்துட்டு கதவை திறந்தார். தலைகுத்துனவாகுலயே அப்பாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு விறுவிறுன்னு போயிட்டார். வயசாளிகளுக்கு எப்படியோ இளவட்டங்க எங்களுக்கெல்லாம் முதல்ல சிரிப்பா இருந்தாலும் கடைசில கோபிண்ணா மேல பாவமா வந்துச்சு. இப்படியும் ஒரு ஆளா? அந்தாளுக்கு இப்படியும் ஒரு புள்ளையான்னு.கோபிண்ணா செஞ்சுக்கிட்டது லேட் மேரேஜ்னு சொல்லமுடியாது. ஆனா அவங்கப்பா எல்லாம் ரிடையர் ஆகி சுமாரா முப்பது ஆரம்பத்துல செஞ்சுக்கிட்டாரு. எங்க எப்படி பொண்ணெடுத்தாங்கனு யாருக்கும் தெரியாது. பாலக்காட்டுல கல்யாணம். கோவைல ரிஷெப்சன். அவர்மேல இருந்த மரியாதைக்கு மட்டுமே காலனில எல்லாரும் போயிருந்தோம். அண்ணி அப்படி ஒரு அழகு. ஆனால் கோபிண்ணாவை விட நிறம் கொஞ்சம் கம்மிதான். கேரளத்தின் வட்டமுகம். பெரிய கண்கள். பூரித்த உடல்வாகு. வாய்கொள்ளாச்சிரிப்பு. மலையாளமும் தமிழும் கலந்த பேச்சு. ரிஷப்சன் மேடைல அவங்க ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி சிரிக்க அவங்க கண்களும் சேர்ந்து சிரித்தன. சற்றே தலைசாய்த்த சிரிப்பு. ஒவ்வொரு தலைசாய்ப்புக்கும் அவங்க காதில் இருந்த சின்னச்சின்ன சிவப்பு கற்கள் பதித்த டாலடிக்கும் ஜிமிக்கி எத்தனைமுறை ஆடுகிறதுன்னு கணக்கு வைச்சபடியே கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு எங்க எல்லோருக்குமே சாப்பாட்டுடன் சக்கப்பிரதமன் ரெண்டு ரவுண்டு வாங்கி குடிச்சதவிட கடைசில கோபிண்ணாக்கு நல்ல அழகான மனைவி அமைச்சது பொறாமையை மிஞ்சிய இனிப்பான நிகழ்வாக இருந்தது. நல்ல பையனா இருந்தா அதுவா அமையும்னுகூட எங்கம்மாவும் நானும் பேசிக்கொண்டோம்.


கோபிண்ணா நடையிலயும் ஒரு ஜோரு வந்திருந்தது. சிரிச்சமேனிக்கு வேலைக்கு போய்வந்துகொண்டிருந்தார். வாரயிறுதியில் வண்டியெடுத்துட்டு பாலக்காட்டுக்கு மாமனார் வீட்டுக்கு பயணம். ஞாயிறு சாயந்தரம் திரும்பி வந்தவுடனே சிலமணிநேரம் வீடு பராமரிப்பு. மாமிகூட ஆண்டவன்கிட்ட அழுகறதுக்கு மட்டுமே கோயிலுக்கு வந்துக்கிட்டு இருந்தவங்க இப்பவெல்லாம் சந்தோசமாகத்தான் வழில பாக்கறவங்ககூட பேசிக்கிட்டிருப்பாங்க. வீட்டுக்கு மருமகளே வந்தாச்சுன்னு அடங்குனாரா இல்லை வீட்டாரால் அடக்கிவைக்கப்பட்டாரான்னு தெரியாது. கோபிங்கப்பா அதுக்கப்பறம் எந்த வில்லங்கத்துலயும் மாட்டலை. சிகரெட்டு மட்டும் அதே அளவுல ஓடிக்கிட்டிருந்தது. சிலசமயம் சிகரெட்டு தீர்ந்துட்டா என்னைப்பிடிச்சு கடைக்கு ஓடச்சொல்லுவார். நானும் சைக்கிளை அழுத்திக்கிட்டு போய் சடுதில ஒரு கட்டு சார்மினாரோட வரணும். தொலையுது பெருசுன்னு அப்பப்ப செய்யறதுதான். சார்மினார் குடுக்கற சாக்குல அண்ணி கண்ணுல பட்டா அகலச்சிரிப்போட ”நல்ல படிக்குன்னா?”னு கேட்கக்கிடைச்சால் ஒரு கூடுதல் சந்தோஷம்தான். அரியர் கோஷ்டியான எனக்கெல்லாம் யாராவது படிப்பைப்பத்தி பேசுனாங்கன்னாவே குபீர்னு கிளம்பும். ஆனால் நான் மிகமகிழ்ச்சியாக பதில்சொல்லும் ஒரே தருணம் அதுதான்.
சிலருக்கு சிலதுபடி வாழ்க்கை எழுதப்பட்டிருக்கும்போல. வாஸ்து, பில்லிசூனியம், விதி, கெட்டநேரம் என அவரவர் நம்பிக்கைபடி என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சிலரது வாழ்வில் சில நிகழ்வுகள் அவர்களை எங்கேயும் எப்பொழுதும் மேலே வரவிடாமல் அழுத்திப்போட்டுருது. கோபிண்ணாவும் அண்ணியும் எங்களுக்கு தெரிஞ்சு ஒருவருசத்துக்கு நல்லா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அண்ணி நடவடிக்கைகள்ல மாற்றங்கள். காலனில அரளிபுரளியான பேச்சுக்கள். அவங்களுக்கு கட்டுக்கடங்காத கோவம் வருது. வழில பாக்கறவங்களை மொறைச்சபடிக்கு மலையாளத்துல திட்டறாங்கன்னு. ஒருமுறை பால்காரர்மேல பாலோட பாத்திரத்தை தூக்கி எறிஞ்சுட்டாங்கன்னு பஞ்சாயத்து. நாளாக ஆக நைட்டானாவே கத்த ஆரம்பிச்சாங்க. வார்த்தைகளால் அல்ல. ஏதோவொரு கேவல் மாதிரி. தொண்டையை கிழித்துக்கொண்டு கிளம்பும் அலறல்கள். கத்திக்கத்தி ஓய்ந்து மெல்ல அழுகற சத்தமா மாறும். கொஞ்சம் தெம்பு வந்தவுடன் திரும்பவும் அந்த உச்சஸ்தாயில கேவல்.


மொதல்ல கொஞ்சநாளைக்கு பக்கத்து வீட்டுக்காராங்க எல்லாரும் ஏதோ குடும்ப பிரச்சனைன்னுதான் நினைச்சாங்க. ஆனால் அந்த கதறல் சகிக்கமுடியாத அளவுக்கு போனபொழுது என்ன செய்ய இயலும்? கோபிண்ணாவை கூப்பிட்டு சொல்லிவைக்க ஆரம்பிச்சாங்க. உண்மையில் அவரைப்பார்க்கவும் திகைப்பும் என்னஏதென்று புரியாத குழப்பமும் நிரம்பிய முகமுமாகத்தான் தெரிந்தார். பல மருத்துவர்கள், பல ஊர்கள் பல ஆஸ்பிடல்னு சுத்திச்சுத்தி வைத்தியம் பார்த்தார். கொஞ்சகாலம் பாலக்காட்டுல அவங்கப்பாம்மா வீட்டுல விட்டுட்டு வருவார். எல்லாம் தற்காலிக நிவாரணம்தான். போய்விட்டு வந்த சிலநாட்களுக்கு நல்லா இருப்பாங்க. ஆனால் கொஞ்சநாள்லயே அந்த ராத்திரி கேவல்கள் பீரிட்டுக்கிளம்பும். கையறுநிலையில்தான் கோபிண்ணா. இரண்டு வருசம்கூட அவர் நிம்மதியாக வாழ்ந்தமாதிரி எங்களுக்கு தெரியலை. பாலக்காட்டுலயும் எப்பவும் கொண்டு விடமுடியாத நிலமை. அண்ணிக்கு அடுத்து ஒரு தங்கை. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அண்ணியை கேரளால ஒரு ஹொம்ல கொண்டுவிட்டுட்டு வந்தாங்க. ஒரு வாரம்கூட முடியலை. மனைவியை இந்த நிலைமையில் விட்டுட்டு வாழத்தாங்காத கோபிண்ணா அவங்களை நானே பார்த்துக்குவேன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாப்ல. எங்கம்மா ஒருமுறைபோய் துக்கம் கேட்டதுல “விடுங்கம்மா… நம்பி வந்துட்டா… எத்தனை கஷ்டம்னாலும் நானே பார்த்துக்கறேன்…”னு சின்னச்சலனம்கூட இல்லாமல் சொன்னதை கண்ணுகலங்கியபடி வந்து சொன்னாங்க. எங்க பொங்கல்ல இதை கொஞ்சகாலத்துக்கு சொல்லிச்சொல்லி மாய்ஞ்சோம்.


வீடுகளுக்கு சுற்றுச்சுவர்கள் இருக்கின்றன அந்நியர் பிரவேசத்தை தடுக்க. கதவுகள் இருக்கின்றன பாதுகாப்புக்கு. சன்னல்கள் இருக்கின்றன காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும். உண்மையில் கதவுகளும் சன்னல்களும் வீட்டின் ரகசியங்களை பொத்திப்பொத்தி பாதுகாக்கவே பயன்படுகின்றன. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிலப்பல பகிரப்படாத சொல்லமுடியாத ரகசியங்கள். சில வீட்டோடு வீட்டாகவே புதைந்துபோகின்றன. சில மெள்ளக்கசிந்து திரிந்து பக்கத்துவீடுகளின் புறம்பேசலாக மாறுகின்றன. உண்மையில் குடும்ப ரகசியங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கே தெரிவதில்லை. தாளிட்ட வீட்டுக்குள் குடும்பரகசியம். அதனுள் கதவை ஒட்டிச்சாத்திய அறைக்குள் அவரவர் ரகசியம். இருகமூடிய மனசுக்குள் நமக்கே நமக்கான ரகசியங்கள். கோபியண்ணாவின் வீட்டில் அண்ணியின் அறைக்கதவுகள் எப்பொழுதுமே தாளிடப்பட்டிருந்தன. சன்னல்கள் திறக்கப்படவே இல்லை. ஐந்தாறு நைட்டிகள் மட்டுமே உடைகளாயிற்று. தலைமுடியை தானே பிடித்து இழுத்தபடிக்கு சுவரில் மோதிக்கொள்கிறார்கள் என்று கோபியண்ணாவே மாதமொருமுறை கத்தரியால் முடியை வெட்டிவிடுவார்.


நான்கைந்து வருடங்களில் ஒரு பெண்ணால் ஐம்பது வயதின் முதிர்ச்சியை எட்டமுடியுமென்பது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. கந்தலாக வெட்டிய கிராப்போடு ஒட்டிப்போன உடலுடன் விலா எலும்புகள் துருத்திய அண்ணியை சிலமுறை உக்கிரம் குறைந்த பொழுதுகளில் கோபிண்ணா வாசலில் அமர்த்திவைத்தபடி பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அவரும் எல்லா வகையான மருத்துவங்களும் மாந்திரீகங்களும் விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தார். என்றாவது எப்படியாவது சரியாகிவிடாதா என்ற நம்பிக்கை. அவரவருக்கு அவரவர் வேலைகள் கவலைகள் தேடல்கள் மற்றும் ஓட்டங்கள். காலனி மக்களுக்கு பின்னிரவில் ஊளையிடும் நாய்களின் சப்தமும் ரவுண்ட்ஸ் வரும் செக்கூரிட்டியின் விசிலும் அண்ணியின் விட்டுவிட்டு கேட்கும் கேவல்களும் இரவுக்கென்ற ஒலிக்கூறுகளாக இயல்பாகிப்போனது. வேலைநேரத்தையும் வெளியுலக வாழ்க்கையையும் சுருக்கிக்கொண்ட கோபிண்ணாவிடம் ஒரே ஒரு மாற்றம்தான் தெரிந்தது. சன்னல்கள் பூட்டிக்கிடந்த வீட்டினை அடிக்கடிக்கு வெறித்தனமாக கழுவிமெழுகி சுத்தப்படுத்தியபடிக்கு இருப்பார். மொட்டைமாடி முழுவதும் நீர்விட்டு அடித்துக்கழுவுவார். இரும்பு கேட்டின் ஒவ்வொரு கம்பியையும் எண்ணைவிட்டு துணிசுற்றி துருபோக இழுத்தபடிக்கு இருப்பார். வீட்டைச்சுற்றிலும் உள்ள தென்னைமரங்களின் விழுந்த ஓலைகளையும் குப்பைகளையும் அள்ளி தெருமுனை குப்பைத்தொட்டியில் நிறைத்து அதில் தீவைத்து எரிவதை பின்னால் கைகட்டி வேடிக்கை பார்த்தபடி இருப்பார்.


காலத்தின் ஓட்டத்தில் எங்கள் சங்கத்தில் ஆளாளுக்கு ஒருபுறம் சிதறிப்போயிருந்தோம். நல்லா படிச்சவன் படிக்காதவன் அனைவருக்கும் ஒரேஅழுத்தம்தான். எதையாவது செய்து சம்பாதிக்கனும். எனக்கான ஓட்டத்தில் சென்னையில் வந்து விழுந்திருந்தேன். அல்ட்ராசவுண்டு ஸ்கேனிங் மெசின்ஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ் இஞ்சினியர். தமிழ்நாடு ஆந்திரா கேரளான்னு மூன்று மாநிலங்களுக்கும் ஊடாக மருத்துவமனைக்கிடையே ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தேன். சம்பளத்தைவிட பயணப்படி மிக அதிகம். ஓரளவுக்கு தாராள காசுப்புழக்கம். மாதத்தின் பல இரவுகள் ரயில்களிலும் KPN பஸ்களிலும் கழியும். தூங்கப்பிடிக்காத வராதா பயண இரவுகள். நிலவொளியும் சாலைவிளக்குகளும் மாற்றிமாற்றி காலியான நெடுஞ்சாலைகளையும், வெறிச்சோடிய ஊரின் வீதிகளையும் இரவுநேர உலகத்தின் சலனங்களை சித்திரங்களாகவும் கதைகளாகவும் கண்கட்டு வித்தைகளாகவும் காட்டும் சன்னலோர பயணங்கள். கோவையின் வழியாக ஏதேனும் சேல்ஸ் விசிட் அமையும்போது மட்டுமே ஊருக்கு வந்துபோகும் வாழ்க்கை. அதை சாக்காக கொண்டே காலனில மீதம்கிடக்கிற நண்பர்களை சந்திக்கற நிலைமை. நானாவது பரவாயில்லை. தக்கிமுக்கி படிச்சதுக்கு கையில சில்லரையாவது புரண்டது. அஞ்சரை வருசமா தலையணை சைசுக்கு புத்தகங்களா படிச்சு மெடிக்கல் முடிச்ச முரளிக்கும் வெங்கிக்கும் ஒரு தனியார் மருத்துவமனைல அப்ரசண்டி டாக்டர் வேலைதான். அவங்களும் வெறும் MBBS போர்டுவைச்சா காலாம்பூராவும் 50ரூவாபீசு எண்ணியே ஓய்ஞ்சிருவோம்ற பயத்துல கிடைச்ச அப்ரசண்டி வேலைய மாசச்செலவுக்காச்சுன்னு ஒட்டிக்கொண்டு மருத்துவ மேல்படிப்புக்கான தகுதிப்பரிச்சைக்கு மாசக்கணக்கா படிச்சுக்கிட்டிருந்தானுங்க.


சென்னையில் இருந்து கொச்சினுக்கு வேலையாக சென்றுகொண்டிருந்த நான் மக்களைப்பார்த்து நாளாச்சு என்று கோவையில் இறங்கிவிட்டேன். ராத்திரி ஒன்பது மணிக்கும் மேலாகத்தான் முரளியும் வெங்கியும் டூட்டி முடிச்சுட்டு வந்தானுங்க. வீட்டில் சாப்பிடவேணாம்னு ஹோப்ஸ் SKP மெஸ்சுல முட்டைபரோட்டா அடிச்சோம். அங்கனயே நான் ஒரு வாழைப்பழமும் கிங்ஸ்சும். அது சேல்ஸ்மேன்களின் இரவுச்சாப்பாட்டு முடிவுரை. பேசிக்கொண்டே வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்குப்போக பிடிக்காம சங்க ஆபீஸ்ல பொங்கல் போடலாம்னு ஆஜர். போனவந்த கதைகளையும் போனவ வந்தவ சேதிகளையும் மாறிமாறி பேசிக்கொண்டிருந்தபொழுது அருகாமையில் கோபிண்ணாவின் குரல் கேட்டது.


“என்னடா இன்னேரத்துல அங்க செய்யறீங்க?”


“ஒன்னுமில்லண்ணே... ரொம்ப நாளாச்சு பேசிக்கிட்டிருக்கோம்”


கால்வாயைத்தாண்டி வண்டிகளின் தடத்தில் மட்டுமே உருவான ஒத்தப்பாதையில் பார்த்தீனியச்செடிகளின் ஊடாக அண்ணன் நடந்து அருகில் வந்தார்.


“நீ எங்கடா இங்க? சென்னைல இருக்கறதா சொன்னாங்க?“ஆமாண்ணே. சும்மா இன்னிக்கு ஊருக்கு வந்தேன்”


“நீங்க என்னடா.. டாக்டருக்கு முடிச்சு ___ ஆஸ்பிடலுக்கு வேலைக்கு போறிங்களாம்?”


”ஆமாண்ணே… இப்பத்தான் டூட்டிமுடிச்சு வந்தோம்”இதன்பிறகு என்னாச்சோ கோபிண்ணாவே வெடுக்கு வெடுக்குன்னு பேசிக்கிட்டே போனாப்ல“என்னடா உங்க ஆஸ்பிடல்ல ஒரே வகைவகையா கேரளா குட்டிங்கதான் நர்சுங்களாம்?”“எல்லாத்துக்கும் பெரிய பெரிய காய்ங்களாம்ல? கின்னுகின்னுன்னு இருப்பாளுங்களாம்ல? வேலை பாக்கறப்பவே தனியா தள்ளிட்டுப்போயி நல்லா மேல பெனைஞ்சுவிட்டாலும் ஒன்னுமே சொல்லமாட்டாங்களாம்ல?!””ஈசியா செட் பண்ணி போட்றலாமாம்… நீங்களே அங்கன வைச்சே ஏகமா போடுவீங்கலாம்ல?”


எல்லாம் ஒரே நிமிடம்தான். மங்கிய நிலவொளியின் வெளிச்சத்திலோ அல்லது சற்றுத்தள்ளி எரியும் ஃபவுண்டரி நேம்போர்டின் டியூப்லைட் வெளிச்சத்திலோ கோபிண்ணாவுக்கு எங்களின் அந்தக்காலத்திய கிரிக்கெட்டு விளையாடித்திரிந்த சிரார் முகங்கள் தெரிந்திருக்கக்கூடும். அந்த ஒரு கணத்தில்தான் நாங்களும் அவரது உள்ளுலகத்தில் இருந்து தவறி வெளிவிழுந்த ஒரு ரகசிய முகத்தினை கண்டிருக்கக்கூடும்.


சட்டென்று பேச்சை முடித்த கோபிண்ணா “நேரமாவுது… சீக்கிரம் போய்ப்படுங்கடா… வீட்டுல திட்டப்போறாங்க...” என்று சொல்லியபடியே திரும்பி விருவிருன்னு நடந்து வீட்டை அடைந்து கேட்டைத்திறந்து உள்ளேபோய் மறைந்தார்.நாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நிலவொளியில் வேப்பமரத்தின் நிழல் பிசிறுபிசிறாக விழுந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளிபோர்த்திய சன்னல்கள் சாத்தப்பட்ட அவரது வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தோம்.

வியாழன், நவம்பர் 14, 2013

காமம் தெளிதல் :- பிரிவுத்தணல்

டேய்… எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க… ஒரு ஸ்டாப் கிட்ட இப்படித்தான் பேசுவயா?

“சார் சும்மா ஜாலிக்கு க்ளாஸ்ல ஜோக்குக்கு சொன்னேன் சார். அதுக்குப்போய் உங்க கிட்ட பிராது செய்யறாங்க… இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி சார் எப்பவுமே சீரியசா க்ளாஸ்ல ஒக்கார்ந்திருக்க முடியும்?”

என்னா மயிரு எழவெடெடுத்த ஜோக்கு? தராதரம் இல்லாம? லேடிடா அவங்க… ஏதோ நேரம் இங்க வேலைக்குன்னு வர்றாங்க… நீயும் ஒரு வேலைக்கு போகனுன்னுதானே இங்க படிக்கற? சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா? லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப?”

மேட்டர் பெரிசா ஒன்னுமில்லைங்க. மேற்கண்ட இனியது கூறலில் முதலாவது எங்க பேராசிரியர். பதில் சொல்வது நான். எங்களுக்கு பகுதிநேரமாக வகுப்பெடுக்க வந்த அவருடைய சக பேராசிரியர் பொண்ணை லைட்டா கலாய்ச்சதுக்கு அவங்க ஓன்னு அழுதுக்கிட்டு வந்து இவராண்ட புகார் கொடுத்துட்டாங்க. அதுவும் சப்பை கலாய்ச்சல். என்னை விட அஞ்சு வயசுதான் அதிகமா இருக்கும். அவங்களை மேடம்னா கூப்பிட முடியும்? அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைனு தெரிஞ்சப்பறம் எல்லோருக்குமே ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவரது வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவங்களா ஏதாச்சும் ஒழுங்க படிச்சுட்டு வந்தாலும்  வகுப்பெடுக்க விடாம பேசியே ஓட்டிருவோம். தினமும் அவங்களோட ரெண்டுமணி நேரத்துல ஒரு தியரி அப்பறம் மத்தியானமா லேப். மிஸ்சு அக்காவாகி அப்பறம் யக்கால நின்ன அன்னியோன்யம். ஆனா நாங்க திடீர் திடீர்னு ஏதாச்சும் வெடிபோட்டு மெர்சலாக்குறதால ஒரு பயத்தோடவேதான் வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. இந்த கலாய்ச்சல் என்னதா? ரஜினி பாட்டுதான்!

“பந்தலிலே தொங்குகிற பொடலங்காய்க்கு கல்லை கட்டும் ஊரு இது…
யம்மா யம்மா ஊரு இது…
தொங்குகிற காய்க்கு எல்லாம் கல்லை கட்ட முடியுமா?
யக்கா.. யக்கா.. லெக்சரரு யக்கா யக்கா!!”

பாடினதுகூட தப்பில்லை. கையக் கொஞ்சம் எசகுபிசகான வடிவில் இடத்தில் வைத்து பாடினதுதான் தப்பாயிருச்சு, வகுப்பே பயங்கரமாச் சிரிக்க அவங்களுக்கு ஷேமாகி இப்படி என்னை ஷேப்பிலாம செஞ்சுட்டாங்க. வாங்குன திட்டுக்கு என் காதெல்லாம் ரத்தம்! இப்பவும் எனக்கு நல்லாத் தெரியும். என் பாட்டும் சைகைகளும் அவங்களுக்கு ஒன்னும் புரிஞ்சிருக்காதுன்னு. ஒன்னும் புரியாத கொழந்த மாதிரியே வளர்ந்துட்டு வயசுப்பயக நம்ம கழுத்தை இப்படி அறுக்கறதுங்க.

நான் என்னத்தை படிச்சேன்னு சொல்லலேல்ல? உங்களில் யாருக்கேனும் முதுகலை படிப்பு என்பது இளங்கலை முடிந்து போனதால் கல்லூரி வாழ்க்கையும் முடிஞ்சு போயிருமோங்கற பயத்தால் மட்டுமே அமைந்ததுண்டா? எனக்கு அப்படித்தாங்க. இளங்கலையில் இஞ்சியனிரிங்கில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம எல்லா பேப்பரையும் ஏறக்கட்டி நாலுவருசம் நீ வந்து போனதுக்கு இந்த பார்டர் மார்க்கு போதுண்டான்னு என் கல்லூரி என்னை வெளியே துரத்தியது. அப்போது எனக்கு வந்த முதல் கவலை “அடப்பாவிகளா… இனி நான் எங்க போய் பொங்கலும் கடலையும் போட்டு என் வாழ்வை வளமாக்கப்போறேன்?” அப்படிங்கறதுதான்.

நல்லாப்படிக்கற பயக எல்லாம் வேலைதேடல்னு சென்னைக்கு கிளம்பிட்டானுங்க. தக்கிமுக்கியும் முடியாம அரியர்களை சரம்சரமா வைச்சிருந்தவனுக கூட கோர்ஸ் முடிச்சதை மட்டுமே வைச்சு சேல்ஸ்க்கு போயிட்டானுங்க. நேத்து வரைக்கும் பக்கிரியாட்டம் தலையும் பான்பராக் கறை நாறவாய்ல தம்முமா சுத்துனவனுங்க திடீர்னு டக் இன் செஞ்ச சட்டையும் டையுமா தோள்ல பைய மாட்டிக்கிட்டு அதே ஊர்ல டீசண்டா சுத்தல். அவங்களைப் பார்த்து இதப்பார்றா தமாசுன்னு சிரிச்சுக்கிட்டு இருந்தப்பதான் என் கூடச்சிரிக்கற ஆளுங்க எண்ணிக்கை நாலு மூணாகி அப்பறம் ரெண்டு ஒன்னாகி அப்பறம் டபக்குன்னு ஸ்டில்ஸாட்ல எல்லாரும் காணாமப் போயிடானுங்க! பின்ன அவங்கவிங்க வீட்டுல படிச்சுமுடிச்சு என்னத்த புடுங்கப்போறன்னு ஏத்து விழுமா விழாதா? நானுங்கூடி ரெண்டுநாளு தனியாத்தான் சிரிச்சுப் பார்த்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே பார்த்து சிரிக்கற மாதிரியே பீலிங். முடியல! வாங்குன பார்டரு மார்க்கை வைச்சு நல்ல வேலைக்கும் போக முடியாது. சேல்ஸ்மேன் வேலைக்கு கூச்சநாச்சம் இருக்கக்கூடாது. அப்படின்னா எனக்கு வாழ்க்கைல அடுத்த கட்டம்னே ஒன்னும் இல்லையா ஆண்டவா அப்படின்னு நான் இறைஞ்சியதில் உதித்த ஐடியாதான் மேல படிக்கறது!

எப்படியோ நாலு வருசம் ஒழுங்க படிக்கலை. அதுக்காக ஒடனே திருந்திற முடியுமா? எங்கனயாவது ஏதாவது ஒரு PG கோர்ஸ்ல மறுபடி சேர்ந்துட்டா இன்னும் கொஞ்ச நாள் ஜாலிக்கு ஜாலி. கல்விக்கு கல்வி! இப்படி ஐடியா போட்டு எங்கப்பா கிட்ட இருந்து கொஞ்ச காசையும் பீராய்ந்து ஒரு காலேஜ்ல ஒரு ஆகாவலி கோர்ஸ்சையும் புடிச்சு சேர்ந்தும் ஆச்சு. நானும் மறுபடி காலேஜுக்கு போறேன் காலேஜுக்கு போறேன் செமபடமா கெளம்பி மொதநாள் வகுப்புக்கு போனா அங்கே பேரதிர்ச்சி! PGல எல்லாம் +2 முடிச்சிட்டு வந்த பயகளா இருப்பாங்க? எல்லாம் என்னை மாதிரியே வெந்ததும் வேகாததுமா பல வகைகள்ல ஆம்பளைங்க மற்றும் பெண்டீர் 25 பேர்! வேலைக்கு போயிட்டே மேற்தகுதிக்கு ஏதாச்சும் படிக்கலாம்னு சிலபேர். பிசினெஸ் செஞ்சுக்கிட்டே படிக்கவும் செய்யலாம்னு சிலபேர். MBA ME கிடைக்காம சைக்கிள் கேப்புல இதைப்படிச்சிட்டு அடுத்தவருசம் மீண்டும் முயற்சிக்கலாம்னு சில பெண்கள். ஆக என்னைத் தவிர மத்த எல்லோருமே மொசபுடிக்க வந்தவங்க தான். நான் மட்டும் காலேஜ் கூத்து தொடற மட்டுமே இங்க சேர்ந்தேனு சொன்னா ஒருத்தரும் நம்பலை! ரெண்டே நாள் தான். நான் அவுத்துவிட்ட உளரல்களும் ஜோக்கு பிட்டுகளும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக என்னை அறிமுகப்படுத்தி வைத்தது.

ஒரு பையன் தான் சொந்தக்காலில் நிக்கனுங்கற சிந்தனை வர்ற ஆரம்பிக்கும்போதே அவன் ஆம்பளையா மாற ஆரம்பிக்கறான். சில பேருக்கு நான் இதாத்தான் ஆகப்போறேன் இப்படித்தான் இருக்கப்போறேன்னு +2லயே தெளிவாயிருது. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் வெளில சோக்காளி கூட்டாளிக கூட பழகறதுக்குன்னு ஒரு முகம் வைச்சிருப்பாங்க. அவங்க பாதைல போறதுக்கு தோதான நட்புக்களும் உறவுகளும் மட்டும் கூட இருக்கும். உள்ளுக்குள்ள இருக்கற வெறி வாய்ப்புக்காக கனன்றுக்கொண்டே இருக்கும். பலபேருக்கு படிச்சு முடிச்சு வேலைக்குபோய் சுயமா சம்பளம் வாங்கிய பிறகும் கூட இந்த சிந்தனை வராது. இதுலயும் சிலது வேலை எதுக்கு? எதுக்கு சம்பாதிக்கனும்? ஒரு தொழிலை எதுக்கு அடிப்படைல இருந்து கத்துக்கனுக்கற தெளிவே இல்லாம சுத்திக்கிட்டிருக்குங்க. அதுல ஸ்டூடெண்ட் நம்பரு ஒன்னு நானு. ஆனா என் வகுப்பில் என்னைத்தவிர மத்த யாரும் அப்படி இல்லை. அனைவருக்கும் ஒரு கோல் இருந்தது. ஏதாச்சும் செய்யனும்னு துடிப்பாவது இருந்தது. இவங்களுக்கு நடுவால நான் என்னவா இருந்திருப்பேன்? அதேதான்! கலைக்கூத்தும் ஆட்டங்களுக்குமான வகுப்பு பிரதிநிதி. சினிமா டூருக்கு ஆர்கனைஸ் செய்யறது. வாட்டர் பொங்கல் போடறதுக்கு ரூம் தேத்தறது, யாருக்கு எங்க கல்யாணம் காதுகுத்துனாலும் கும்பலா கூட்டிக்கிட்டு போய் வர்றதுன்னு. அதாவது எல்லா க்ரூப்லயும் நானிருப்பேன். நான் இல்லாட்டியும் எல்லாமும் நல்லாத்தான் நடக்கும். நான் இல்லாத ஒரே நேரம் அவங்க சீரியசா படிக்கற நேரம். இப்படித்தான் ஓட்டிக்கிட்டிருந்தோம் ஒரு ஆறு மாசத்துக்கு.

அப்பத்தான் இந்த கோகிலா பார்ட்டைம் லெக்சரரா வகுப்பெடுக்க வந்தாங்க. வேலைக்கு வரனும்னு இல்லை. ஆனா குடும்ப பிரச்சனை. ஏதோ காரணத்துக்காக கணவன் பிரிந்து இருக்க இவங்க இன்னமும் அப்பா வீட்டில். அவங்க அப்பாவும் அதே கல்லூரில பேராசிரியர்கறதால இவங்களை ஈசியா பகுதிநேர வேலைக்கு சேர்த்து விட்டுட்டாரு. சும்மா பேருக்கு காலேஜ் மேனேஜ்மெண்ட்டோட ஒரு அரேஞ்மெண்ட். அவங்களும் ஏதோ டிகிரி படிச்சிருந்தாலும் ஸ்பெசலைஷேசன் ஏதும் இல்லை. கொஞ்ச நாள்லயே ஜாலியாகிட்டதால எங்க எல்லாருக்குமே அவங்க வகுப்புதான் ரிலாக்‌ஷேசன். வகுப்பெடுக்கவே விடாம ஓரியாட்டம். மத்த படிக்கற பயகளும் இந்த வகுப்புல கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைன்னு ஒன்னாச்சேர தெனமும் போங்காட்டம் தான்.

”யக்கா… தூக்கம் வருது.. சும்மா நடுநடுவால பேசாதீங்க…”, “யக்கா… ஏன் இப்படி மனப்பாடம் செஞ்சாப்படி ஒப்பிக்கறீங்க? பேன்சி ட்ரஸ் போட்டியா நடக்குது? இங்க கீழ வந்து ஒக்காருங்க… நேத்து ஜோடிப்பொருத்தம்ல ரெகோ என்ன கேட்டாப்ல தெரியுமா?”ன்னு வகுப்பு ஏதோ வீட்டு வரவேற்பரை மாதிரிதான் இருக்கும். அவங்க கோவம் வர்ற மாதிரி, திட்டற மாதிரி, மார்க்கை கொறைச்சுருவேங்கற மெரட்டல் மாதிரி என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. பப்பு வேகலை! கடைசியா தலைல கைவைச்சுக்கிட்டோ இல்ல ப்ரொபசருகிட்ட சொல்லீறாதிங்கப்பான்னு சிரிச்சுக்கிட்டோ அவங்களும் பொங்கல்ல ஐக்கியம்! அவங்க ஏன் பார்ட்டைமா வேலைக்கு வர்றாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுதான் இருந்தது. இருந்தாலும்  நாங்களே அப்படி இப்படி விசாரிச்சு குழந்தை இல்லை, இவங்களே குழந்தை மாதிரி வெகுளியா இருக்கறாங்க, வளரவேல்ல… இவங்களுக்கு மேட்டரே தெரியாது, இல்லாட்டி வரதட்சணையா இருக்கும், இல்ல ஊட்டுக்காரன் இவங்க சரிவரமாட்டாங்கன்னு வேறா ஏதாச்சும் லேடிமேட்டருல கேடியா இருப்பான்னு பலவகை ஊகங்களை அலசி புறம்பேசிக் கொண்டிருந்த காலம்.

எங்க வகுப்புல பாலாதான் சீனியர். அப்பவே பிசினஸ் பார்த்துக்கிட்டிருந்தாப்ல. கல்யாணம் வேற ஆனவரு. படிச்சா பிசினெசுக்கு உதவும்னு சேர்ந்திருந்தார். நாங்க என்னதான் பொடிப்பயகன்னாலும் எங்களுக்கு சரிசமமா ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன அலப்பரை ஓவரா போச்சுன்னா மட்டும் மனுசன் பெரியப்ஸ் அவதாரம் எடுத்துருவாப்ல. கெட்ட வார்த்தைலயே திட்டுவிழும். பலநேர மப்புகள் அவரால்தான் அளவுக்குள் மட்டுப்பட்டது. இல்லற ஆண் பெண் உறவில் ஏதாச்சும் டவுட்டுன்னாகூட வெளக்கமா சொல்லுவார். ஆனா நாங்க விரசமா ஏதாச்சும் விளையாட்டுன்னு செஞ்சா வண்டை வண்டையா திட்டு விழும்! அன்னைக்கும் பாலா என்னை தனியா கூட்டிக்கிட்டுபோய் பிரிச்சுட்டாப்ல. ”அண்ணே நான் நெஜமாவே அசிங்கமா பாடல. ஒரு ப்ளோல வந்துருச்சு”ன்னாலும் விடலை! நாளைக்கு மன்னிப்பு கேட்டு மனுசமா மாறுன்னு கடைசியா வார்னிங்! இதுக்கும் அப்பறம் மேற்கண்ட புரொபசர் பஜனை. எல்லாம் கேட்டு நெஜமாகவே செம காண்டாகியிருந்தேன்.

அடுத்தநாள் சரி போனாப்போகுதுன்னு மனசை தேத்திக்கிட்டு யக்கா உள்ள வர்றப்ப சாரின்னு சொல்ல வாயத் தொறந்தா அவங்க நேரா என் முன்னாடிதான் வந்து நின்னாங்க! அத்தனைபேர் முன்னாலும் “சாரிப்பா… சார் ரொம்ப திட்டிட்டேன்னு சொன்னாரு. நந்தான் உன்னை மாட்டி விட்டுட்டேன். இனிமே நீயும் அப்படி கிண்டல் செய்யாத.. நானும் கொஞ்சம் ஓவரா அழுதுடேன்ல?!” இதையெல்லாம் கேட்டா எப்படி இருக்கும்? இவங்க ஸ்டாப்பா இல்ல ஸ்டூடண்டான்னு நெஜமாகவே தலையில் அடித்துக் கொண்டேன்! இப்படி லூசு மாதிரி இருக்கறதாலதான் வீட்டுக்காரன் விட்டுட்டு யெஸ்சாகிட்டானோன்னு திரும்பவும் மனசுக்குள்ள தோணுச்சு.

ஆனா அதுக்கப்பறம் நான் என் வாலை சுருட்டிக் கொண்டேன். தோற்றத்திலும் செயல்களிலும் நிஜமாகவே குழந்தைபோல் இருப்பவரிடம் என்னத்தை லொல்லு செய்ய? மனதில் மரியாதை இல்லைன்னாலும் ஒரு கனிவு வந்ததுதான் காரணம். அதுக்கப்பறமும் வகுப்புகள் அப்படியேதான் சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்தது. ஆனால் சில்லரை சீண்டல்கள் இல்லை. ஏதோ சோகத்துல இருக்கும் ஒரு மனுசியை, இந்த வேலைக்கு வந்தாலாவது வேண்டாததை மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என வாழும் ஒருவரை எப்படியாவது மகிழ்ச்சியா வைச்சுக்கனுங்கறது யாரும் கூடிப்பேசி முடிவெடுக்காமலேயே செயல்படுத்த ஆரம்பித்திருந்தோம்.

“யக்கா… பேசிப்பேசி டயர்டாகாதீங்க.. காண்டீன் வடை நாலு இருக்கு. கீழ வந்தீங்கன்னா ஒன்னு தருவேன்!” “லேட்டா வந்தா வெளிய நிக்கனும்னு சொன்னீங்களாம்?! வெறுங்கையோட வந்தாத்தான? இந்தாப்பாருங்க செவ்வரளிப்பூ. உங்களுக்குன்னே லேபுக்கு பின்னாடி கஷ்டப்பட்டு நாத்தமெல்லாம் தாண்டி பறிச்சு வந்தது. வாங்கிக்கிட்டு என்னை திட்டாம விடுவீங்களாம்!!” இப்படியான செல்ல விளையாட்டுகளாய் யக்காவை முகமெல்லாம் பூரித்து சிரிக்க வைத்து களைகட்டிக் கிடக்கும் வகுப்பு! நட்புன்னு சொன்னமுடியாது. ஆனால் ஒருவித மதிப்போடு கோகிலாக்காவை அணுகத் தொடங்கியிருந்தோம்.

வகுப்புநேரம்தான் இப்படி. மத்தநேரமெல்லாம் ஏதாச்சும் மரத்தடில படிக்கற எழுதற சிலர் அதைச்செய்ய மத்தவங்க கூடிக்கூடி பேசியபடி. கூட படித்த ஏழெட்டு பெண்களும் ஜமாவில் ஐக்கியம். அது ஒரு வித்தியாசமான வயது.  தெரிந்தும் தெரியாமல் மலரத் தொடங்கும் மலர்ச்சிகூட மனதில் இல்லாமல் மலங்க மலங்க முழிக்கும் பதின்ம வயதல்ல. இல்லற அனுபவம் கிட்டிய ஆண்டு அனுபவித்த உடலில் கூச்சம் போன அலுப்பேறிய கல்யாணம் முடிந்த முப்பதுகளும் அல்ல. இருபத்தியிரண்டில் இருந்து இருபத்தைந்துக்குள்! பெண்களெல்லாம் திருமணத்திற்கு தயாராக இருக்கும் வயது. பசங்களெல்லாம் திருமணம் என்பது ஆண்பெண் உடல் எப்பொழுதும் சங்கமித்து பின்னிப்பிணைந்து கிடக்கும் சடங்கு என மூளையில் வெறியேறி உடலால் வறண்டு மனதால் ஏங்குயேங்கிச் சாகும் பருவம்! சில பயகளுக்கு அப்படியிப்படி காதலி கொண்டோ இல்லை ஓசிச்சாப்பாடோ அமைந்து பதட்டத்திலும் பரவச தடுமாறலிலும் சின்னதாய் ஏதோ செய்து அதை பயங்கரமாய் அனுபவித்ததாய் சொல்லிக் கொள்ளவும், வாயைப்பிளந்து கதை கேட்க என்னைப்போன்ற நாலு காய்ஞ்ச பயக இருந்தால்  சில பல ரீல்கள் சேர்த்து பீற்றிக் கொள்ளவுமான  வாழ்க்கைப் பொழுதுகள். தூரப்போகும் தெரியாத அறியாத பெண்களை கண்களால் வெறிக்கவும் மனதால் வரிக்கவும் செய்யும் உடல். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் பழகிய அறிமுகமான வகுப்புத்தோழியை அப்படி பார்க்கத் தோணாமல் செய்யும் குறைந்தபட்ச மனித நாகரீகம் எங்கிருந்தோ ஜீனில் ஒட்டிக்கொண்ட இது இப்படித்தானென தீர்மானித்துவிட இயலாத பருவம். 

பள்ளிமுடித்தவுடன் சேரும் கல்லூரி வாழ்க்கை ஆண் பெண் ஈர்ப்பினை அப்பட்டமான இயக்கமாகவும் பழக அடிநாதமாகவும் இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி நாம் நமக்காகவும் குடும்பத்துக்காகவும் ஏதாவது செய்யவேண்டுமென்கிற வேலை தேடும் வயதில் பாலினஈர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவும் ஏதாச்சும் செய்து செட்டிலாகனுங்கறது நெத்திக்கு முன்னால் தொங்கும் கத்தியாகவும் அமைந்து வயிற்றில் எப்பொழுதுமே ஒரு பயத்தினை உருட்டிக் கொண்டிருக்கும் காலகட்டம். ஆண்களும் பெண்களுமாய் கொஞ்சம் லஞ்சையில்லாமல் தான் பேசிக்கொள்வோம். ஆனால் ஆண்கள் மட்டுமே இருக்கும் டீக்கடை மீட்டிங்களும் கையில் யாருக்கேனும் காசுபுரண்டால் நடக்கும் வாட்டர்கேம்ஸ் நைட்டுகளும் பச்சை மஞ்சள் சிகப்பென வர்ணங்களால் நிறைக்கப்பட்டிருக்கும்! தமக்குத்தானே போட்டுக்கொண்ட உடல் மன வேலிகளோடும் வாழ்க்கையில் நிற்கவேணுங்கற அழுத்தங்களோடும்! பாலா மட்டும் அன்றைக்கு எங்களோடு இல்லையென்றால் காய்ந்த உடல்களின் உக்கிரப்பேச்சுக்கள் சொறி மீதான வரட்டுத் தேய்ப்புகள் கொடுக்கும் இன்பமாக மட்டுமே இருந்திருக்கும். அது அப்படியில்லடா… இது இப்படிடான்னு அவர் சொல்லும் ஆண்பெண் உறவுகள் பற்றிய பலதும் புரிந்து புரியாததும்போல இருந்தாலும் சும்மா கேட்டுவைத்துக் கொள்வோம். பெருசு ஏதோ தெரிஞ்சங்கறதை ஓவரா பெனாத்துன்னு வாய்பிளந்து கேட்ட கூச்சத்தை மறைக்க அவரையே ஓட்டிருவோம்.

அன்றைக்கு பாலாவுக்கு ஐந்தாவது திருமணநாள். காலைல வகுப்புலயே சொல்லிட்டு எல்லோரும் சாயந்தரம் வீட்டுக்கு விருந்துக்கு வந்துருங்கன்னு அழைச்சாப்ல. இன்னைக்கு வரைக்கும் மாறாத அந்த நல்ல பழக்கமான ஓசில விதவிதமா சாப்பாடு கெடைச்சா வண்டி கட்டிக்கொண்டு போய் இறங்கி பாத்தி கட்டும் பழக்கத்துக்கு ஏற்ப சாயந்தரம் நாலுமணிக்கே எல்லோரும் அவர் வீட்டுக்கு குறும்பயணம். அவர் என்னவோ நைட்டு பிரியாணிக்குத்தான் வரச்சொன்னாப்ல. ஆனா எங்களுக்கும் நாலு மணிக்கு மேல கல்லூரில செய்யறதுக்கு ஒன்னுமில்லைங்கறதால வந்து ஏதாச்சும் கூடமாட ஒதவறோம்னு நாலரைக்கே ஆஜர். ஆம்பளையும் பொண்டுகளுமா இருபது பேரு. யக்காவையும் சேர்த்துத்தான்! இப்பவெல்லாம் அவங்களை டீக்குடிக்க போனாக்கூட க்ளாஸ்மேட்டு மாதிரியே இழுத்துக்கிட்டு சுத்தறதுதான்.

பாலா வீடு பெருசுதான். அவரும் அவங்க வீட்டம்மாவும் பயங்கர சந்தோசமான வரவேற்பு கொடுத்தாங்க! அவங்க மனைவிக்கு அவங்க வயசுல நாங்கன்னும் அவரு வீட்டுக்காரருக்கு காலம்போன காலத்துல இத்தனை க்ளாஸ்மேட்டுகளான்னும் ஒரே மலர்ச்சி. என்ன இருந்தாலும் எத்தனை பேருதான் சமையலறைல உதவமுடியும்? கல்யாணத்துக்கு ரெடியா இருக்கற புள்ளைங்க மூணுபேரு நாந்தான் செய்வேன்னு அடம்புடிச்சு சாயந்தர தீனியா பஜ்ஜி கேசரி செய்வேனுட்டு உள்ள போயிட்டாங்க. மத்தவங்க டீ வர்ற வரைக்குமாவது  வீட்டை சுத்திப்பாக்கலாம்னு பாலா கூட உலாத்துனோம். அப்பறம் எல்லாரும் ஹால்ல டீவிய போட்டுவிட்டுட்டு அக்கடான்னு சாய்தல். அப்பதான் புதுசா கேபிள் டீவியெல்லாம் வர ஆரம்பித்த காலம். ஏதோ ஒரு மொக்கை சேனலில் பாட்டுகளா ஓடிக்கிட்டிருந்தது. கமெண்டு கருத்துன்னு ஹால் முழுக்க சிரிப்பலை. யக்காவை சுவரோரம் இருந்த சோபால மேல உக்கார வைச்சுட்டு நாங்க எல்லாம் கீழ கிடைச்ச இடத்தில் சாய்ந்துகொண்டும் உருண்டுகொண்டும் வாயில் வந்ததை பேசிக்கொண்டும். எதையோ எடுக்க வெளியே சென்ற நான் திரும்பிவந்து கீழே செட்டாக இடமில்லாததால் யக்காவின் சோபாவுக்கு பின்னால் சற்றுதள்ளி நின்றிருந்தேன்.

டீவியில் ஒரு சுவாரசியமில்லாத பாட்டு முடிந்து அடுத்தது ஒரு ரஜினி பாட்டு ஆரம்பித்தது. “மாசிமாசம் ஆளான்ன பொண்ணு மாமன் உனக்குத்தானே…” எல்லோரும் ஓன்னு சவுண்டு. பாலா தம்பதிக்கு இன்னைக்கு நைட்டுக்கு இப்பாட்டு சமர்ப்பணம்னு ரகளை. வீடே ஒருவித பூரிப்பில் இருந்த அந்த கணத்தில்தான் நான் எல்லோருக்கும் பின்னாலும் எனக்கு சைடாகவும் அமர்ந்திருந்த கோகிலாக்காவை பார்த்தேன். யக்கா இயல்பாக இல்லை. ஏதோ ஒரு இனிய இல்லற தருணம் அந்தப்பாடலோடு யக்காவின் வாழ்வை கோர்த்திருக்க வேண்டும். நடுங்கும் கைகள் சேலை நுனியை அவசர கதியில் சுற்றியபடி. டீவியில் எண்ணை தேய்த்த உடல்கள் உராய்ந்தபடி ”ஸ்ஸா…” என்று எழுப்பும் ஒலிகள் அவருக்கு நெருப்பள்ளி உடல் மேல் கொட்டியது போன்ற தாங்கவியலாத நிலைக்கொள்ளாமை. வியர்க்கும் முகத்தை அடிக்கடி துடைத்தபடி தலைகுத்தி உதடுகள் கடித்தபடி உள்வாங்கிய பார்வையில் அலையும் கண்கள். பாட்டு நகர நகர முந்தானையை உடலோடு போர்த்தி அதன் பந்தென உருட்டிய நுனியை இரு கைகளுக்குள் வைத்து கசக்கியபடி. அங்கே நாயகனும் நாயகியும் ஆலிங்கனமாய் காட்சிதர இவர் இரு கைகளின் விரல்களையும் இறுக்கி நெருக்கியபடியும் கால்களை ஒன்றின்மேலொன்று குறுக்கியபடியும். இடுப்பை அணைத்தபடி கட்டி உருளும் காட்சியில் அவர் முழுதாய் தன்னை எங்கோ இழந்திருந்தார். கண்களில் கோர்த்த நீருடனும் இருண்ட முகத்துடனும் அந்த நான்கு நிமிடங்களில் என் கண் முன்னால் அந்த சக உயிர் படும் நரகவேதனையை கண்டேன். கடவுள், அப்பா, மாமா, சகோதரன், நண்பன் என யாராலுமே தீர்த்துவிட முடியாத ஒரு தணல். ஒரே ஒருத்தனுக்கென வரிக்கப்பட்ட உடலில் அந்த ஒருவன் கிளப்பி விட்டுப்போன நெருப்பு அறிந்தும் அறியாமலும். அந்த ஒருவன் அவசரகதியிலும் ஆத்திரத்திலும் கை விட்டுப்போன திருமண பந்தத்தின் பெயரால் தீண்டப்பட்டு தயாரான உடல் தீண்டப்படாமலும் தீண்டப்பட வழியில்லாமலும். இத்தனை உறவுகள் இருந்தும் அறிந்த உடல்கள் இருந்தும் எதுவுமே உதவிட இயலாத முடியாத சமுதாய முடிச்சு மற்றும் அழுத்தம். வெறும் உடல்கள் மட்டுமே இயங்குமென வளர்த்தெடுத்த காமவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் என் மனதுக்கு இந்த நரகவேதனை எதுவெதுவோ சொல்லிக்காட்டியது. ஆனால் வாழ்க்கையில் சமூகக்கோடுகளை எல்லைக்கோடுகள் என வாழும் கோகிலாக்கா போன்ற சராசரிகள் இந்த வலிகளை ஏனைய உன்னத உணர்வுகள் கொண்டு வெகுஎளிதில் தாண்டித்தான் வாழ்கிறார்கள்.

எப்பொழுது அந்த பாட்டு முடிந்தது என்றும் எந்தக்கணத்தில் யக்கா அத்துயரத்தின் கண்ணீர் துளிகளை யாருமறியாமல் துடைத்தெடுத்தார்கள் என்றும் நான் அறியவில்லை. “ஏய்… என்னப்பா இது… எனக்கு குடுக்காம எல்லா பஜ்ஜியும் நீங்களே மொசுக்கறீங்க… எனக்கொன்னு வைங்கப்பா…” என சொல்லியபடி முகத்தில் மீட்ட சிரிப்புடன் அவர் கீழே சென்று அமர்ந்தார்.


எனக்கு அடிநெஞ்சில் இருந்து ஒரு துயரம் பந்தென உருண்டு கேவலாக வெளிக்கிளம்பியது.

செவ்வாய், அக்டோபர் 22, 2013

பெண்ணியமும் So called சராசரி பெண்களும்...சுரேஷ் கண்ணன் அவர்களது முகநூலில் ஒரு ஸ்டேடசுக்கு எழுதிய பதில். படித்தால் அது ஏறக்குறைய நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்திருந்தது. இங்கே சேமிக்க என்றெல்லாம் ஜல்லியடக்க மாட்டேன். பதிவாக போடவேண்டும் என ஆசை. அம்புட்டுத்தான். இது என் பார்வை மட்டுமே. அவர்பதில் கிடைத்தால் கோர்க்கிறேன்.


---------+++++----------வண்ட்டேன்... இங்கே அனைத்து சேனல்களும் yupptv.comல் காசுகட்டி காணக்கிடைக்கின்றன. நான் பார்ப்பது என்னவோ இரண்டே நிகழ்சிகள் தான். நீயா நானா & கொஞ்சம் நடிங்க பாஸு :)


// அறியாமையே பேரின்பம் ரீதியில் சில பெண்கள் பேசினார்கள் //


எப்படிங்க இப்படியெல்லாம் தீர்மானிக்கறீங்க!? அறியாமைக்கும் தெரியாமைக்கும் நிறைய வேறுபாடு இருக்குங்க. பெண்ணிய இயங்கங்களும் இலக்கியங்களும் களப்பணியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியவேண்டிய அவசியத்துக்கான வாழ்க்கை முறையிலும் அவர்கள் இல்லை. அதனால் அது அறியாமை ஆயிருமா?


so called சராசரி பெண்கள் - இனி இவர்களை உங்கள் வார்த்தையிலேயா சராசரிகள் என குறிப்பிடுகிறேன். :(


ஒரு சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. சிலர் குடும்ப அமைப்மை ஏற்றுக்கொண்டு புள்ள குட்டின்னு வாழ்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சிலர் மற்றவர்களுக்காக ஏதாவது செய்யனும்னு பெண்ணியத்திற்கு போராடுபவர்களாகவும் களப்பணியாளர்களாகவும் ஆகிறார்கள். அதது அவங்கவங்க குடும்ப சூழ்நிலை மற்றும் சுயசிந்தனைல வர்ற தேர்வுகள். பெண்ணியவாதிகள் உரிமைகளுக்காக போராடட்டும். சமூக சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கட்டும். சமூக புரிதல்கள் மீதான சிந்தனைகளை புரட்டிப்போடட்டும். உரையாடல்களை தொடரட்டும். இந்த செய்கைகளினால் போராட்டங்களினால் வர்ற பலன்களை அந்த சராசரிகள் அனுபவித்துவிட்டு போகட்டுமே. தலைவர்கள் போராடிக்கொண்டுவரும் மாற்றத்தை சராசரிகள் அனுபவித்து முன்னேறி வருவது தானே உலகத்தில் நடப்பது? வாழ்க்கையில் ஒருத்திக்கு மற்றவர்களுக்காக போராட வேண்டும் என்கிற தேர்வு எப்படி உன்னதமானதோ அதற்கு சற்றும் குறையாதது ஒரு பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது என்பது சரியில்லையா? குடும்பம் குட்டி என வாழ்ந்து ஒரு குடும்பத்தை உயர்த்துவது என்ற தேர்வு அவ்வளவு கேவலமானதா?! இருவருக்குமே அவரவர் அரசியல் எல்லைகள். சிறிதும் பெரிதுமாய். இதில் உயர்வென்ன? தாழ்வென்ன? சராசரிகளுக்கு தேவை பெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வே. இந்த விழிப்புணர்வுதான் மாற்றங்களை அவரவர் குடும்பத்தில் கொண்டுவருகிறது. சராசரிகள் அனைவரும் களத்தில் இறங்கிப்போராட வேண்டும் என்பதோ அவர்கள் இரண்டுபேர் இணைந்து வாழ முடிவெடுத்து குடும்ப அமைப்பை தேர்ந்தெடுத்து அமைக்கும் வீட்டுகுள்ளேயே புரட்சிகள் வெடிக்க வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது சரியான எதிர்பார்ப்பா? 


பெண்ணியம் என்றால் என்ன கேள்விக்கே நீங்க குறிப்பிடும் so called சராசரி பெண்கள் தெரிஞ்சதை மனப்பாடம் செஞ்சு சொல்லறாப்டி இருந்தாலும் குழப்பமே இல்லாம பட்டுன்னு சொன்னாங்க. அதுக்கு பெண்ணியவாதிகள் மத்தில ஒரு அலட்டலான சிரிப்பு. அய்யோ பாவம் இதுகளுக்கு ஒன்னுமே தெரியலையேன்னு. பெண்ணியம் பத்தி உரையாடலாம் அப்படிங்கற எண்ணம் இல்லாம யாராவது நாலுபேரு மாட்டுவாய்ங்க அவங்களுக்கு பெண்ணியத்தை கழுவி கழுவி ஊத்துவோம்னு நினைப்புல பேச்சை ஆரம்பிச்ச புத்திகேர்ல்ஸ் பாதிப்பேரு “பெண்ணியம்னா என்னன்னு ஒரு வரையறைக்குள்ள சொல்லமுடியாது.. ட்பைன் பண்ணமுடியாது..”ன்னு திக்கித்தெணறி முடிக்கறதுக்குள்ள நமக்கே வேர்க்குதுன்னா பாவம் நீங்க சொல்லற சராசரிகளுக்கு எப்படி இருந்திருக்கும்?! இதுல வெண்ணிலா நடுவால ஒரு சவால்வேறு.. சரியா பதில் சொல்லிட்டன்னா இப்பவே ஷோவை முடிச்சுக்கலாம்னு. என்னக் கொடுமை அய்யா. இதில் யாருக்கு சொல்லித்தருவதில் அறியாமை இங்கே அதிகம்? 


நல்லா படிச்சு வேலைவாங்கி மிலிட்டரிக்கு போகும் ஒருபெண். குடும்ப அமைப்பை ஏற்று கணவருடன் அன்யோனியமாக குடும்பம் நடத்தும் ஒரு பெண். தன் தந்தையும் நானும் எப்படி நட்பாக இருக்கிறோம்னு ஒரு பெண். இதையெல்லாம் அவர்கள் வெளிப்படையாக சொல்ல இந்த சைடுல இருந்து சரமாரியா கவுண்ட்டர் அட்டாக்ஸ்.. ”உங்க வீட்டுல மட்டும் இருந்துட்டா போதுமா? நீ மட்டும் உங்க வீட்டுல கன்வின்ஸ் பண்ணிட்டா போதுமா?” முடியல! “உனக்கு கிடைத்த பலன் மற்றவர்களுக்கும் கிடைக்கனும்...அந்த விழிப்புணர்வைத்தான் நாங்க ஏற்படுத்த போராடறோம்.. அதுக்கு உங்க உதவியும் தேவை.. வாங்க இங்க என்ன நடக்குதுன்னு சேர்ந்தே புரிஞ்சுக்கலாம்..”னு அக்கறையா இந்த கேள்விகள் வெளிப்பட்டிருந்தா எவ்வளவு சிறப்பா இருந்திருக்கும்?! கேட்டதெல்லாம்.. ”அடியே மக்கு... மக்கு... தெரிஞ்ச பெரிய நம்பர் என்னன்னு 100ன்னு சொல்லறையே மக்கு... 1000 100000 எல்லாம் உனக்கெங்க தெரியப்போது?”ங்கற தொணி! 


உண்மையில் இந்த சராசரிகள் எல்லாம் பெண்ணியவாதிகள் சொன்ன மாதிரி இவ்வளவுகாலம் பெண்ணியம் கண்ட போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள். ”பெண்ணியம் ஒன்றும் வெட்டிப்பேச்சில்லை. மாற்றம் நடந்தே தீரும். இது நடந்திருக்கிறது பாருங்க..”ன்னு சபையிலேயே கட்டியணைச்சு உச்சிமுகர்ந்திருக்க வேண்டிய முன்மாதிரிகள். பெண்ணியவாதிகள் இவர்களை அரவணைத்து அக்கறையோடு பெண்ணியத்தின் செயல்பாடுகள் என்னென்ன என விளக்க அமைந்த அற்புதமாக அமைந்த வாய்ப்பு அது. ”அடடா,,, நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... இந்த நல்ல வாழ்க்கையிலும் உங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தா இப்ப இருக்கற பெண்ணிய செயல்பாடுகள்ல இன்னின்ன நல்ல வழிகள் இருக்கு... இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க... நாம எல்லாரும் இன்னும் உயரலாம்...” அப்படின்னு அழகா மாறி இருக்க வேண்டிய உரையாடல் இது. ஆனால் இந்த சராசரிகள் நம்மில் ஒருத்தருங்கற அக்கறை இல்லாததால... நாம் பெண்ணியத்திற்காக போரடறோம், சராசரிகளுக்கு களம் காண்கிறோம்கற ”ஒரு படி மேல” சிந்தனைதான் பேசுன பெண்ணியவாதிகளுக்கு இருந்ததே தவிர அவர்களும் நம்மில் ஒருத்தர் அவர்களுக்கு தெரியாததை கனிவுடன் அறியச் செய்வோம்ங்கறது சுத்தமா இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்து நக்கலாக சிரிச்சுகிட்டதுதான் இதற்கு சாட்சி. 


நான் உணர்ந்த வரையில் ஓவியா ஒருவரின் பேச்சில் தான் இந்த கனிவையும் ஆதூரத்தையும் அக்கறையையும் காண முடிந்தது. 


இதையெல்லாம் விட ஒரு வலிகூட்டும் சொல்லை கேட்கமுடிந்தது. சராசரிகளை நீங்க எப்படி இப்ப பார்க்கறீங்கன்னு கேட்டபோது பரிதாபப்படுகிறேன் அப்படின்னு ஒரு பெண்ணியவாதி சொன்னார். அவர் யாருன்னா உங்க பெண்ணிய விடுதலையை எப்படி உணர்கிறீர்கள் எனக்கேட்டதுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியாம ”வார்த்தையே இல்ல சொல்ல முடியல...”ன்னு முடிச்ச குட்டிரேவதி. அவர் யாரைப்பார்த்து பரிதாபப்படுகிறார் என்றால் எப்படி கணவனும் மனைவியுமா இயந்து காதல் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்னு உணர்வுபூர்வமாக எவ்வித தடங்கல்களும் இன்றி உணர்ந்ததை வார்த்தைகளில் கோலம்போட்டுக் காட்டிய (நாடக பாவங்களாம்!! ) பெண்களையும் , எப்படி பல தலைமுறையாக பெண்கள் எங்க வீட்டுல லீடரா இருக்காங்கன்னு சொன்ன பெண்களையும், ராணுவ சீருடை அணிந்து உற்சாகமாக பணிக்கு கிளம்பும் பெண்களையும், அயர்ன் செய்துகொடுத்த அப்பாவின் சட்டைக்கு கிடைக்கும் ஆதுரத்துடன் கூடிய சிரிப்பை பரிசாகப்பெருன் பெண்களையும் பார்த்து!!! :( மகா கொடுமை அய்யா இது. இவங்க எல்லாம் அப்ப யாருக்காக எந்த வாழ்க்கைக்காக போராடறாங்க அப்படிங்கறதே ஒரு நிமிடம் மறந்துருச்சு! இதை விட கொடுமை பெண்ணியவாதிகள் பலபேரு பலதடவை எங்களுக்கும் ஆண் உறவுகள் இருக்கு... ஆண் நண்பர்கள் இருக்காங்கன்னு திரும்ப திரும்ப சொன்னாங்களே தவிர ஒருத்தராவது ஒரு பெண்ணியவாதியாக நான் இப்படி என் ஆண் உறவுகளை பேணுகிறேன்னு ஒரு வரி கூட சொல்லவில்லை! அப்படி என்னங்க அவங்களை சபைல இயல்பா பேசறதை தடுக்குது?! இந்த “ஒரு படி மேல” எண்ணம் தான் போல! சொல்லிட்டா அப்பறம் அடடா இவங்களும் சராசரிதானானு சராசரிகள் கண்டுபுடிச்சுட்டா?!


சல்மாவின் கூற்று... ”சமையல் நல்லா இருக்கு.. நீ நல்லா இருக்க... வீட்டை அருமையா வைச்சிருக்க...” அப்படிங்கற பாராட்டுகள் எதையும் ஏத்துக்க கூடாதாம்! அதெல்லாம் பின்னால பெண்களுக்கெ கெடுதல்ல முடியுமாம்! இதையெல்லாம் எங்க போய் சொல்ல?! உனக்கும் எனக்கும் குடும்ப அமைப்பு எனும் வாழ்க்கைமுறை சரின்னு நினைத்து திருமணம் செய்து கொள்கிறோம்... அதில் வரும் சிக்கல்களை பேசித்தீர்த்து விட்டுக்கொடுத்து வாழ்வோம்... என்ற எண்ணத்தில் இணையும் இருவர் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் அடிமையாயிருவாய்! :( இன்னொருத்தரு சொல்றாங்க ஒருத்தர்க்கொருத்தர் தியாகம் செய்யக்கூடாது! :( இவர்கள் சொல்வது அனைத்தும் திருமணமே ஒரு அடிமைசாசனம் அப்படின்னு படிச்சு வந்த தெளிவு. ஆனா திருமணமே ஒரு அடிமைத்தன விலங்கு... குழந்தை பெறுதல் ஆணாதிக்கத்தின் அழுத்தம்னு ஒருத்தருகூட தெளிவா ஒருவரி சொல்லல. பூசிப்பூசி மெழுகறாங்க... பாவம் பேசவந்த பெண்ணியவாதிகள்ல எத்தனை பேர் திருமணமானவங்களோ!! எளிமை மட்டும் இயல்பு என்பது ஒரு படி மேல போயிட்டா அவ்வளவு சிரமமான குணாதியங்களா மாறிடுமா என்ன? இத்தனைக்கும் இவங்களையெல்லாம் சிறப்புநடுவர்களா கூப்பிடலை. ஒரு சைடுல உட்கார்ந்து சரிக்கு சமமா கலந்துரையாட அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் தான், சராசரிகளை போலவே!


நான் கவனித்த வரையில் பெண்ணியவாதிகள் அனைவரும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்துவந்திருந்தனர். குட்டிரேவதியின் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த உடையும் அவர் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த கம்பீரமும் அருமையாக இருந்தது. சல்மாவின் வெள்ளை உடைகூட பார்க்க சிறப்பு. கவிதா அவரின் கழுத்து டகோடாக்களை தேடித்தான் மேட்சிங்காக அணிந்து வந்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன்? ஓவியாவே மடிப்பு கலையாத கஞ்சிபோட்ட காட்டன் புடவையில் பாந்தமாகத்தார் இருந்தார். ”சராசரிகளே.. ஆண்பெண் சமத்துவம் கொண்டுவரத்தான் போராடுகிறோம்.. ஆனால் ஒருவருக்கொருவர் பாராட்டிவிடக்கூடாது” எனச்சொல்லும் இவர்களிடம் போய் “சல்மா.. இந்த வெள்ளை உடையில் நீங்கள் இருக்கும் சூழலே அழகாகத்தெரிகிறது... ரேவதி...உங்கள் பேச்சில் வெளிப்படும் கம்பீரம் அழகு... கவிதா உங்கள் காதணிகள் உங்கள் உடைக்கு சரியா மேட்சாகுது” அப்படினெல்லாம் பாராட்டினா என்னென்ன வார்த்தைகளில் திட்டுவாங்களோன்னு பயம்மா இருக்கு!!! “ஆணாதிக்கம் கொண்ட காமகொடூரா..”ன்னு தட்டையா மட்டும் திட்டமாட்டங்கன்னு நம்பறேன்! :) அவரே பார்த்துப்பார்த்து தேடித்தேடி வாங்கி அவரவரே அணிந்து அவரவரே மகிழ்ச்சி அடையவா உடை? மற்றவர் முன்னால் ஒரு தோற்றப்பொழிவோடு இருக்கவேண்டும் என்ற அடிப்படை அவாவின் வெளிப்பாடு அல்லவா அன்றைக்கு அனைவரிடமும் இருந்திருக்கும்.


இத்தனைக்கு பிறகும் ஒரு விசயம் சொல்லனும்னா குடும்ப அமைப்பில் இருக்கும் சராசரி பெண்கள் தான் தங்கள் எண்ண ஓட்டங்களை தங்குதடையின்றி பேசுனாங்க... தனக்கு தெரியாத சில விசயங்களை உடனே தலையாட்டி ஒத்துக்கிட்டாங்க... உண்மையில் உணர்ந்ததையும் வாழ்க்கையில் செயல்படுத்தறதையும் மட்டுமே சொன்னாங்க... சொல்லிக்கொடுக்க வந்தவங்க இதுல எல்லாம் இதுல ஏதாவது ஒன்னு கத்துக்கிட்டும் போயிருந்தா மகிழ்ச்சியே! :)


இதுபோக ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும்! தப்பித்தவறியும் ஒரு ஆண் பங்கேற்பாளர் இல்லாமல் நடத்தியதற்கு. இல்லையெனில் சராசரிகளின் தெளிவும் உணர்வுகளும் அறிவுபூர்வமான வாதங்களால் சிதறடிக்கப்பட்டிருக்கும்!


வெள்ளி, அக்டோபர் 18, 2013

அன்னயும் ரசூலும்

Related imageங்களுடைய சொந்த ஊர் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? திருச்சி மலைக்கோட்டை கோவிலின் உச்சியில் படிகளில் அமர்ந்து திருச்சியை பார்க்குமிடம் உங்களுடன் ரகசியமாய் கைகோர்த்து வந்தவரால் பிடித்திருக்கக்கூடும். கோவை கிராஸ்கட் ரோடு சேட்டுக்கடை பானிபூரியின் சுவை ஜமா சேர்ந்த நண்பர்களால் சிறப்புற்றிருக்க கூடும். ஸ்ரீரங்கம் கூட வாத்தியாரும் நீங்களும் பிறந்த ஊர் என்பதற்காகவே ஒட்டிப்போக வாய்ப்புண்டு. ரசூலுகுக்கு கொச்சின் ஏன் பிடிக்கும் என்பதற்கு நட்பு தவிர வேறு காரணியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு வழியும் இருந்திருக்காது போல. இரண்டாம் திருமணம் முடித்த அப்பா பெண்டு பிள்ளைகளோடு வேறு ஊரில் ஜாகையாயிருக்க கொச்சினில் ரசூலும் அவன் அண்ணனும் மட்டுமே திரைச்சீலைகள் பிரிக்கும் ஒரே அறை வீட்டில் பொங்கித்தின்று வாழும் வாழ்க்கை. வயதுக்கு வந்த பிரமச்சாரி அண்ணன் தம்பிகள் இரண்டுபேர் ஒரே வீட்டில் இருக்கையில் பழகும் முறையை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் நீர்முட்டி வலியினை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சந்தோசமாக இருக்கும் பொழுதில் கட்டிப்பிடித்து உச்சிமுகர தேவையில்லை. பிரச்சனைகளை மணிக்கணக்கில் பேசிப்பேசி மாய வேண்டியதில்லை. ‘ப்ச்’, ‘என்னடா?’, ‘இந்தா..’ என்று எல்லாம் ஒரு வார்த்தை பேச்சுக்கள்தான். அவைகள் ஆயிரம் விளக்கங்ளையும் புரிதல்களையும் கொடுக்க வல்லவை. 60 வருட தாம்பத்தியத்தின் பேச்சுகளற்ற வாழ்வைப்போல. அண்ணனுக்கு அயல்நாடு போக வேண்டி பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்கிற கனவுகளுடன் பெர்ரியில் தண்ணீர் மேல் வேலை. தம்பிக்கோ எவ்வித கனவுகளுமற்று கிடைத்த சவாரிக்கு டாக்ஸி ஓட்டிக்கொண்டு சாலை மேல் வேலை.
Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#4 of 10)இருவருக்குமே உறையுள் பற்றிய பெருங்கவலைகள் ஏதுமில்லைதான். ஏமாற்றங்களும் ஏகாந்தமும் சேரும்பொழுது ஒருவித விட்டேத்தியான மனநிலை வருமல்லவா? அதைக்கொண்டு இருவருக்கும் வாழ்க்கை கட்டஞ்சாயாவும், மீன்கறி சோறும், நண்பர் சந்திப்பும், தெருமுக்கு கால்பந்தாட்டமுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் அனுக்கமாய் சொல்ல வேண்டுமெனில் கொச்சினுக்கும் வைபினுக்கும் இடையே ஓடும் ஃபெர்ரியைப் போல ஆசூசையாகவும் அத்தியாவசியமானதாகவும்.


Image result for annayum rasoolumரசூலைப்பற்றி சிலாகித்துச் சொல்ல சிலதுண்டு. ரசூலுக்கு நிர்ச்சலமான கண்கள். அவைகளோடு அந்த கருத்த தாடிக்குள் ஒளிந்து விளையாடும் வெள்ளந்திச் சிரிப்பும் சேரும்போது அவனை யாருக்கும் உடனே நம்பவும் பிடிக்கவும் வைத்துவிடுகிறது. குழந்தைகளின் கண்களை அவதானித்திருக்கிறீர்கள் தானே? மனதில் சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் குடியேறாத வரையில் கண்கள் ஒருவித ஈர்ப்பாகத்தான் இருக்கின்றன. குழம்பியும் கலங்கியும் அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களைக்கொண்ட நமக்கு இயல்பான கண்களே ஈர்ப்பாக இருப்பது அதிசயமில்லைதான். அவனுடையது ஓஷோவின் கண்களைப்போல. ஆண்களில் வெகு அபூர்வம் இவ்வகை முகவமைப்பு. இவ்வகை ஈர்ப்பே அவனுக்கு கார்திருட்டு, சில்லரை அடிதடி என சிற்சில சமுதாயக்குற்றங்கள் புரியும் நண்பர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக வைத்திருக்கிறது. பிடிக்காமலேயே பிடித்த நண்பர்களுக்காக உடன்போகவேண்டிய சூழல். கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது.

Image result for annayum rasoolumவாழ்க்கை என்ன குளித்தலை ஊத்துக்குளி வெண்ணையா? அப்படியே வழுக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதற்கு? அது யாரையாவது நகர்த்திக்கொண்டு போய் யார் அருகிலாவது வைத்துவிட்டு சிரிக்கிறது. ஒரு முறை வைபினில் புதிதாய் சேர்ந்த கிருத்துவ நண்பனது நாட்டு விசேசத்திற்காக சென்ற இடத்தில் கூட வந்த நண்பர்களின் அலப்பரை அதிகமாய்ப் போக சடுதியில் ஆரம்பித்த அடிதடிக்கு பயந்து ஒளிந்துகொண்ட இடத்தில்தான் ரசூல் அன்னவை பார்த்தான்.

நான் முதன்முதலில் அன்னவைக் கண்ட இடம் உண்மையில் அவளை முதன்முதலில் பார்த்த இடமல்ல! அவளை இதற்கு முன்பு ஒருமுறை நண்பர்களுக்காக கார் திருடிக் கொண்டு வந்த வழியில் கண்டிருக்கிறேன். பயத்திலும் பதட்டத்திலும் கோவத்தின் விளிம்பிலும் இருந்த கணம். சரியாக முகம் மனதில் பதியவில்லை எனினும் நினைவில் நிழல் என விழுந்துபோன ஒரு உருவமாய் அவள். நிலவொளி சிதறும் கலங்கிய நீரின்மீது அகல்விளக்கு மிதக்க விடும் பெண்ணின் பிம்பம் பிரதிபளித்தது போல கண்கள் விரும்பிக் கண்டும் காணாததுமாய்.  ஆனால் அன்றைக்கு அவளுக்கு நானொரு பொறுப்பற்ற சல்லிப்பயல் என மனதில் விழுந்திருக்க வேண்டும்.

Image result for annayum rasoolum movie stillsஇன்று வந்த வம்புசண்டையின் விளைவாக வாங்கப்போகும் அடிகளுக்கு பயந்து நான் அவசரத்திற்கு ஒளிந்துகொள்ள கிடைத்த இடம் கடவுளின் பிரார்த்தனைகளுக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றும் மேடையின் அடியில். நண்பர்கள் தப்பிவிட்டார்களா என எட்டிப்பார்க்கும் வேளையில் தான் அவள் கையில் ஒரு மெழுகுடனும் தலையைச்சுற்றி முக்காடிட்ட துப்பட்டாவுமாக மேடையின் அருகில் வந்தாள். இரவில் சிதறி மிளிரும் சரவிளக்கொளிகளின் பின்னணியில் கைகளில் இருக்கும் ஒற்றை மெழுகின் வெளிச்சத்தில் அவள் ஒரு தேவதை வானில் இருந்து இறங்கி வருவதைப்போலத்தான் யாருக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கென்னவோ அவள் ஒரு சாமானியனான எனக்கென படைக்கப்பட்ட ஒரு இயல்பான பெண் நான் பார்ப்பதற்கெனவே அந்த நேரத்தில் விளக்கேற்ற அந்த கணத்தில் அவளது ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்டதாக மட்டுமே தோன்றிற்று.

Related imageஅழகாய் இருப்பதனால் மட்டும் ஒரு பெண் மனதிற்கு பிடித்துப்போவதில்லை. மனதிற்கு பிடித்துப்போவதால் தான் ஒருத்தி அழகாகிறாள். அன்னவுக்கு ஒல்லி உடம்பு. ஒடுக்கு முகம். ஒன்றாம் வகுப்பு பையன் க்ரையானில் வரைந்துவிட்ட பறவையைப்போல புருவம். நீட்டித்த கூரான விடைத்த மூக்கு. சதைப்பற்றில்லாத கன்னங்களில் சிறுசிறு சிவப்பு புள்ளிகளாக பருக்கள். மேலுதட்டை வலிந்து மெலிதாய்க் காட்டும் திரட்சியான கீழுதடு. அவை முழுக்க நேர்கீழாய் பாயும் வரிகள்மீது படியும் எச்சிலின் ஈரத்தை மினுமினுப்பாக மாற்றும் ஒளியின் விளையாட்டு. உதடுகள் இணையும் விளிம்பின் சிறுகுழியில் ஒளிந்திருக்கும் அந்த ஒரு துளி ரசவாதம் மட்டுமே வெளிக்காட்டுகிறது அவளது மகிழ்ச்சியோ துக்கத்தையோ. அன்னவின் கண்கள் பெரியன. ஆனால் அவைகள் எதுவும் பேசுவதில்லை. மனதின் கவலைகளை வெளித் தெரியாவண்ணம் மறைத்து அவைகள் எப்பொழுதும் எங்கோ வெறித்தபடியோ உள்வாங்கியோ இருக்கும். அந்த கண்களில் எதுவும் எவனும் எளிதில் படித்துவிட இயலாது, அவளது தந்தை உட்பட.

அன்னவுடனான அறிமுகமும் நட்பும் எந்த ஊரில் எந்த கிறித்துவ நண்பனை பார்க்கச் சென்று அடிகள் வாங்க இருந்தோமோ அந்த நண்பனிம் மூலமே ஏற்பட்டது. அவனது வீடு அன்னவின் எதிர்வீடாய் அமைந்தது இறைவன் எங்களுக்கு ஏற்கனவே இப்படித்தான் என எழுதி வைத்துவிட்டதனால் இருந்தாலும் அவனது அறையின் சன்னல் எப்படி எனது அகத்தின் வாசலாய் மாறி அன்னவின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தது என்பதுதான் ஆச்சரியமாய் மாறிற்று. அந்த சன்னலும் நானும் அன்னவின் ஒரு நொடி தரிசனத்திற்காக காத்திருந்த பொழுதுகள் சொல்லில் சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியும் ஏக்கமும் நிரம்பியவை. ஆனால் என்ன? ஏக்கங்கள் வாழ்வினை வளப்படுத்தாவிடினும் நினைவிலாவது நினைத்ததை உணரவைக்க இயலுமெனில் இருந்துவிட்டு போகட்டுமே? தூரத்து நெருப்பின் ஒளியில் குளிர்காயும் வறியவனைப்போல.

Image result for annayum rasoolumஅன்னவை பார்க்கப்பார்க்க மிகவும் பிடித்துப்போயிற்று. காலையும் மாலையும் அவளுடன் ஃபெர்ரியில் பயணிப்பது அவளுக்காக மட்டுமே என்பது அவளும் அறிந்திருக்கத்தான் வேண்டும். உதட்டின் விளிம்பில் அவள் காட்டும் ஒரு துளி ரசவாத மந்திர புன்னகைக்காக எத்தனைமுறை வேண்டுமென்றாலும் அவள் பின்னே அலைந்துவிட உடலும் மனதும் துடிக்கத்தான் செய்கிறது. ஒரு பெண் நாம் அவள் பின்னால் சுற்றுவதை அறிந்துவிட்ட அந்த கணத்தில் இருந்து அவள் அவள் மட்டுமே அல்ல! அவளுள் ஒருத்தி நமக்காக விழிக்கிறாள். பார்வையால் தேடுகிறாள். உடைகளை அடிக்கடி திருத்தி கவனயீர்ப்பு தீர்மானம் போடுகிறாள். முகம் திருப்பாமலேயே முதுகின் வழி நம் பார்வையை உணர்கிறாள். வெளிப்படும் பரவசத்தினை அவளது உச்சிமுதல் பாதம்வரை அனைத்து அனுக்களும் மறைக்கத்தான் முயல்கிறது. முடிகிறதா என்ன?  இரண்டு பேருக்குமான இந்த விளையாட்டு மக்கள் நிறைந்த சந்தைக்கு நடுவில் நின்று கதறிக் கொள்வதுபோல. சத்தத்துக்கு பதிலாக சத்தமே. எல்லோருக்கும் கேட்டாலும் யாருக்கும் கேட்காத மிகையொலி அவை. உணர்பவர்களுக்கே அதில் சேதியுண்டு.

அம்மா இல்லாத ஆண்கள் உண்மையில் அம்மாக்களை தேடுவதில்லை. அம்மாவின் அரவணைப்பும் கதகதப்பும் எங்கேனும் கிட்டிவிடாதா என்ற தேடலே எல்லாப் பெண்களின்  முகங்களையும் ஆழப்பார்க்கச் செய்கிறது. பார்க்கும் முகங்களில் ஒரு சிலவே நட்பாகவோ கூடப்பிறந்தவளாகவோ உணரச்சொல்கிறது. ஒரு நிமிடம் மட்டுமே கண்டதாயினும் ஒரே ஒரு முகமே பட்டென மனதில் விழுந்து இவள் எனக்கானவள் என்ற இணைப்புக்கு பதியம் போடுகிறது. அன்னவின் விலா எழும்புகள் ஒரு புதிர்தேசம்! சட்டென பார்க்கையில் அவைகள் கழுத்தினை தாங்கிப்பிடிக்கும் பீடமாகத்தான் தெரியும். ஆனால் உண்மையில் அவை மெலிந்து கீழ்நோக்கிக் குவிந்த அவளது சிறுமுலைகளை ஏற்கும் கேடய விளிம்பின் முனைகளெனவோ அல்லது எடைகளற்ற அச்சிறு பஞ்சுப்பொதிகள் நிரவிய மேடிட்ட பகுதிகள் சிறுநீரலைகள் தளும்பும் ஏரிக்கரையினையோ ஒத்திருக்கும். இருந்தும் இல்லாமலும் புடவையின் முந்தானைக்கடியில் விளையாட்டுக் காட்டும் அவையிரண்டும் புதிரின் விடையறிய ஏங்கித் திணறும் என்மேல் என்றைக்கும் இரக்கம் காட்டியதில்லை.


Image result for annayum rasoolum actressபுடவைக்கடையில் வேலை செய்யும் அவளுக்கு சேலைகட்ட யாரும் வகுப்பெடுக்க வேண்டியதில்லைதான். மடிப்புகள் சிறிதும் கலையாத கொசுவமும் பிரித்துவைத்த புத்தகத்தின் பக்கங்கள் போன்ற நேர்க்கோடுகளாக படிந்த முந்தானையும் அணிந்த துணைக்கடை சிலைகள் எல்லோரையும் ஈர்த்துவிடுகிறதா என்ன? அதற்கு நம் உணர்வுகளுக்கு உயிர்ப்பளிக்கும் ஒருத்தி அணிந்து வர வேண்டாமா?  அன்ன அப்படி நடந்துவருகையில் அடித்துப்பிடித்து முன்னால் வந்து அமர்ந்துவிடும் அமைதி எனும் பேரழகு. ஆனால் அன்னவை எனக்கு அழகாக காட்டுவது இவையெல்லாம் இல்லை. அளவாய் வெட்டி அலையாய் தோளில் பரவி அலையும் அவளது கூந்தல். மொத்த கூந்தலும் ஒற்றைமுடிச்சில் பின்னந்தலையில் குவிந்து நின்றாலும் காதோரம் எப்பொழுதும் தெரித்து தனித்து விழும் ஒரு கற்றை முடிகள். அவைகளுக்கு இருக்கும் சுதந்திரம் உண்மையில் அன்னவுக்கு இல்லை. அவைகள் எப்பொழுது எப்படி எந்தக்கணத்தில் காதுக்குபின் ஒளியுமோ இல்லை கன்னத்தை தொட்டு விளையாடுமோ படைத்த இறைக்கே வெளிச்சம்.

அன்னவிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் சில வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது ஏற்படுத்திக்கொண்டேன். அவளது செல்போனுக்கு சில குறுஞ்செய்திகளும் அனுப்பிவிட்டு பதில் வந்துவிடாதா என தேவுடு காத்த காலங்கள் அவை. அவள் வேலை செய்யும் புடவைக் கடைக்கே சென்று அவளை பார்த்துக்கொண்டிருப்பதும் அவளுடன் பேசவிழைவதும் அவளுக்கே பிடிக்கவில்லைதான். தொல்லை தாங்காமல் ஒருமுறை அழைத்து உனக்கும் எனக்கும் ஆகாது நம் மதங்கள் வேறு என பல காரணங்களை அடுக்கினாள் ஒருநாள். வரட்டுக் காய்ச்சலின் பிடியில் இருக்கும் ஒருவனுக்கு சூடான டீயும் தொட்டுத்திங்க ஒரு பன்னுமே உடனடித் தேவை. அவளோ நாம் ஏன் பிரியாணி இப்பொழுது சாப்பிட இயலாது என விளக்கிக்கொண்டிருந்தது எனக்கு அசூசையாகவும் கோவத்தையும் வரவழைத்தது. மூளையால் அல்ல, மனதால் ஒன்றை நம்ப ஆரம்பித்துவிட்டால் அதற்கு தர்க்கரீதியிலான பதில்களோ தகவல்களோ தேவையே இல்லை. நம்பிக்கை ஒன்றே எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிட வழி நடத்துக்கிறது. அது என் மீது அன்னவின் விருப்பம் கனியும் காலத்திற்கு என்னை கைப்பிடித்து கூட்டிச் சென்றது.

Related imageகம்பீரக் குதிரையில் ராஜகுமாரன் வந்து கைத்தலம் பற்றி அரசவாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் கனவுகள்  உண்மையில் ராஜகுமாரிகளுக்கே வருகின்றன. வேலையில்லாத பொறுப்புகளற்ற தந்தையும் சகோதரனும் கொண்டு முழுநாள் உடலுழைப்பை கோரும் குறைச்சம்பள வேலையில் குடும்பம் நடத்தும் அன்ன போன்ற பெண்களுக்கு கனவில் எவனாவது ஒருத்தன் வந்து நரகத்தில் இருந்து கைதூக்கி விடமாட்டானா என்பதே கனவாக வரும்போல. கைநீட்டினவர்களுக்கெல்லாம் உழைக்கும் பெண்கள் தூக்கிவிட கைநீட்டிவிடுவதும் விடுவதில்லை. வாழ்வோ சாவோ இவன் நம்முடன் கடைசிவரை வருவான் என்ற ஒரு நம்பிக்கை காதலை பிறக்க வைக்க தேவைப்படுகிறது. அன்னவிற்கும் என்மீது அந்த உறுதியால் மட்டுமே காதல் வந்திருக்க வேண்டும். அது ஆயிரம் நட்சத்திரங்கள் சூழ தேவர்கள் ஆசிர்வதிக்க தேவதைகள் சுற்றி வந்து வாழ்த்துப்பா பாட  வெளிப்படவில்லை. கையில் விரல் சூப்பி அப்பாவின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தை அம்மாவைக் கண்டவுடன் சட்டென கண்ணீர் வழியச் சிரிக்கையில்  வெளிப்படுத்தும்  பளீர்ப்புன்னகை போல அவள் தன் காதலைச் சொன்னாள். என் காதலை ஏற்றுக்கொண்டாள். நான் அவளை விட்டு எப்பொழுதிலும் விலகுவதில்லை என்பதை என் உயிரினில் எழுதிக்கொண்டேன்.

Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#6 of 10)அன்னவுடனான காதல் அவளையும் அவளது வாழ்வையும் புரியவைப்பதில் மிக முனைப்புடன் இருந்தது. அவள் கூட்டிச்சென்ற சர்ச்சில் வைத்து அவளது தோழி நீ மதம்மாற தயாரா எனக்கேட்ட பொழுது எனக்கு உண்மையில் என்ன சொல்வதென தெரியவில்லை. என் மதமோ அவள் மதமோ எவ்வகையிலும் எங்கள் காதல் உருவாக தடையாக இல்லாதபொழுது திருமணம் என்ற அமைப்பிற்குள் வர மட்டும் எப்படி யாருக்கு அது தேவையாக இருக்கும் என எவ்வளவு யோசித்தும் புரியவேயில்லை. மதம் என்பது என் பிறப்பு என்மீது சுமத்தியது. அதனை யார் கண்ணையும் குத்தவோ யாருக்கும் தீங்கு விளைவிக்கவோ இல்லாமல் ஏன் எனக்கே நான் பாதுகாப்பு கவசமாககூட  நினைத்துக் கொள்ளாத பொழுது மாறப்போகும் மதம் மட்டும் எப்படி எனக்கு வாழ்வின் நெறிகளை கொடுத்துவிடும்? என்மதம் தான் பெரிது என்ற உணர்வுக்கூட எனக்கு இல்லாதபொழுது எப்படி உன் மதத்திற்கு மாறிய பின்தான் திருமணம் என்பது அவசியமானதாகப்படும்? என் மதமோ உன் சாமியோ அது ஏற்றுக்கொள்வது என்பதை விட உணரக்கூடியதல்லவா? அவ்வாறில்லையெனில் யாரையோ ஏமாற்ற வேண்டி நாமே ஏமாந்துபோக வேண்டியா இதைச்செய்ய இயலும்? அன்ன என்னை இவ்விடயத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டேன்.

Related imageஅன்னவுக்கு இதைவிட ஒரு பெரிய பயம் இருந்தது. சண்டை சச்சரவென வெட்டியாய் திரிந்துகொண்டிருக்கும் தம்பியை பார்த்துப்பார்த்து வீரம்தான் ஆண்மையென காட்டித்திரியும் ஆண்களை அவள் வெறுக்க தொடங்கியிருக்கவேண்டும். இயல்பிலேயே பேடியான நான் தப்பிக்க வழியில்லாத நிலையிலோ அல்லது குட்டக்குட்ட குனியமுடியாத நிலையிலோ திருப்பி அடிக்க ஆரம்பித்தால் சாது மிரண்ட கதை தான். பழைய பகையை வைத்து மீண்டும் வம்பிழுத்தபொழுது அவளது தம்பியையும் அவனது நண்பர்களையும் நான் கொச்சின் ரோட்டில் வைத்து செங்கலால் அடித்து மண்டை பிளக்கவைத்த காட்சியை கண்ட பிறகு அவளுக்கு என்மீதும் வெறுப்பு வந்திருக்கும். தேடிக் கண்டடைந்தவனும் பொறுக்கித்தனமாய் நடுரோட்டில் வீரம் காட்டியதை அவளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. அவள் தம்பி அடிவாங்கியதை விட நான் சண்டைக்கு நின்றதே அவளுக்கு அதிக வலியை கொடுத்திருக்கக்கூடும்.  அந்த கிருத்துவ நண்பனது வீட்டில் அன்னவை வலியப்போய் சந்தித்து அவளது வலியை உணர்ந்துகொண்ட வேளையில் எனக்குள் இருந்த அந்த சாது மிரண்டால் வெளிப்படும் மிருகமும் கூட அன்னவுக்காய் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அன்றைக்கு பழிக்குப்பழியாய் அவன் தம்பிடம் நான் மாட்டிய நேரத்தில் அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து என்னை பிரித்தெடுத்துவிட்டார்கள். அன்னவுக்காக மரித்துப்போன அந்த மிருகத்தை நான் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கவில்லை. அது என்னால் இந்த ஜென்மத்தில் முடியாது என தெரிந்த கணத்தில் நான் குற்றுயிராய் ஆக்கப்பட்டிருந்தேன். அந்த ஒற்றை நண்பன் மட்டும் என்னை தடுத்தணைத்து ஆட்கொண்டிருக்காவிட்டால் நான் அன்னவின் வீட்டு தெருவிலேயே பிணமாக்கப்பட்டிருப்பேன். அன்றைக்கு எங்கள் காதல் நடுத்தெருவில் யார்யாராலோ மிதித்து சிதறடிக்கப்பட்டது.

ஆண்களுக்கு வீட்டில் இருக்கும் பெண் என்பவள் ஒரு அடையாளச்சின்னம். அம்மா என்றால் அன்பாய் மட்டுமே இருக்கவேண்டும். அக்கா என்றால் அவள் பாசத்தை மட்டுமே காட்டவேண்டும். அவர்களுக்கு வேறு உணர்வுகளோ உறவுகளோ வீட்டு ஆண்கள்  பார்த்து வைத்ததை மீறி நிகழ்ந்து விடக்கூடாது. இந்த பிம்பத்தில் இருந்து சிறிது விலகினாலும் ஆண்களுக்கு அவர்கள் உரிமையின் மேல் அடி விழுகிறது. எனக்கு பத்து பெண்நண்பிகள் என பொதுவெளியில் பீற்றிக்கொள்ளும் ஒருவனால் அவன் தங்கையோ அக்காவோ எனக்கு ஒரு ஆண்நண்பன் எனச் சொல்வதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் வீட்டுக்கு சம்பாதித்துப் போடுபவளாக இருந்தாலும்கூட.

அன்னவுக்கும் வீட்டுச்சிறை கிடைத்தது. அவன் தம்பிக்கு நான் வேறுமதம் என்பதைவிட அவனை அடித்ததுதான் ஆற்றவியலாத வெறி. அவள் அப்பாவுக்கு பெண் வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாற்றுபவள் என்பதைவிட சுயபுத்தியாய் காதலித்துவிட்டாள் என்பது பெருத்த அவமானம். எவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிவைத்து குடும்பமானத்தை காக்கிறோமோ அவ்வளவிற்கு ஊரார் வாயில் விழவேண்டாம் என்கிற நிம்மதி. அன்னவை விட்டு பிரியவேண்டும் என்பது என் விருப்பமோ அவளது விருப்பமோ அல்ல. ஆனால் ஒருவரை ஒருவர் வருத்திக்கொண்டு வரவைப்பதா காதல்? அவளுக்கு வேரொரு ஆளுடன் நிச்சயம் ஆனது. நான் என் அப்பாவுடம் அவரது ஊருக்கு மீன்பிடி தொழிலுக்காக அழைத்து வரப்பட்டேன். இரண்டு குடும்பமும் நினைத்திருக்க வேண்டும் இந்த மாற்றங்கள் நிச்சயமாய் எங்கள் காயங்களை ஆற்றிவிடவேண்டுமென.

வாழ்க்கை எல்லோரையும் எப்பொழுதும் கைவிட்டுவிடுவதில்லை. அது காட்டும் நல்வழியெல்லாம் நண்பன் என்ற உருவிலேயே வருகிறது. அந்த கிருத்துவ நண்பன் என் அப்பாவின் ஊருக்கே வந்து எனைக்கண்டான். அன்னவின் திருமணத் தேதியை சொன்னான். கடைசிவரையில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மருகி கருகிப்போன அவனது காதல் கதையை கேட்டபொழுது எனக்கு அன்னவுடன் ஏன் சேர்ந்து வாழ்ந்துவிட முடியாது எனத்தோன்றிற்று. மனதுக்குள் மருகி தினந்தினம் சாவதைவிட ஒருநாளாவது அவளுடன் வாழ்ந்துவிடுவது உத்தமம் எனப்பட்டது. இப்பொழுதும் எனக்குள் இருந்த மிருகம் செத்துத்தான் கிடந்தது. ஆனால் நம்மை நம்பி இருக்கும் ஒரு உயிரை கைவிடல் ஆண்மையில்லை என்பது தெளிந்தது. நேரே கிளம்பி அன்னவை அவளது சர்ச்சிலேயே கண்டு உண்மையான ஆண்மகனாய் அவள் கைப்பிடித்து நடத்தி அழைத்து வந்த வேளையில் கட்டமைக்கப்பட்ட ஆண்மை எனப்படும் பொய்மைகள் எதனாலும் எங்களை தடுத்து நிறுத்திவிட இயலவில்லை. அன்னவுக்கு என் செயல் பெருத்த ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தாலும் இம்முறை அவள் என்னுடன் வந்துவிட துளியளவும் தயங்கவில்லை. இம்முறை அன்னவை அழைத்துக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன். நண்பனது வீட்டில் தங்கி டிரைவராக ஒரு வேலையைத்தேடிக்கொண்டு அன்னவுடனான திருமணத்திற்கும் தயாரானேன். அவரவர் மதம் அவரவருக்கு என்றபடியே.

Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#5 of 10)ஒரு பெண் எப்பொழுது தன்னை ஒருவனுக்கு கொடுக்க விரும்புகிறாள்? காதல் மட்டுமே இருவரை காமத்தில் சென்று சேர்ப்பதில்லை. தனக்காக உயிரையும் ஒருவன் கொடுக்க துணிந்துவிட்டான் என்ற நிலையில் அன்பினால் மட்டுமே படைக்கப்பட்ட ஒரு பெண் பதிலுக்கு என்ன கொடுத்துவிட இயலும்? தன்னையே கொடுப்பது என்பதும் அவளை அவளாகவே வைத்திருக்கும் ஒருவனுக்கு கொடுத்து ஈடு செய்ய முடியாத செயல் தான். இருப்பினும் தனக்கே தனக்கென ஒருவன் தன் வாழ்வில் இருக்கிறான் என அவள் உணரும் அக்கணம் தன்னையே கொடுத்தல் என்பதையே ஒன்றுமில்லாதாக ஆக்கிவிடுகிறது. கொடுக்கப்பட்ட பொருளைவிட கொடுத்த விதத்தில் வெளிப்படும் அளவில்லாத பிரியமும் வாஞ்சையுமே அப்பிணைப்பை பந்தமாக்குகிறது. அன்றொரு இரவில் அன்ன அவளை எனக்குக்கொடுத்தாள். நான் என்னைக்கொடுத்தேன். கொடுக்கும் முத்தத்தை விட பெறப்பட்ட முத்தத்திற்கு சுவை அதிகம். அன்றைக்கு ஒருவர் உடலில் ஒருவர் தேடித்திளைத்தோம். பாதுகாப்பும் எதிர்கால வாழ்க்கையும் கேள்விகுறியாக இருந்த எங்களுக்கு அத்தேடல் மிகத்தேவையானதாக இருந்தது. தேடிக் கண்டடைந்தவைகள் நாங்கள் முன்னேரே கண்ட உன்னதங்களுக்கு சற்றும் குறைந்தவைகளல்ல. அம்மாவிற்குப் பிறகு யாராலும் எனக்கு கொடுக்கவியலாத என்றாகிலும் கிடைத்துவிடும் என ஏங்கித்தவித்து தேடிக்கொண்டிருந்த அரவணைப்பும் கதகதப்பும் அவள் அன்றைக்கு எனக்களித்தாள்.  அந்தக்கணத்தில் நான் உலகத்திலேயே மிகப்பாதுகாப்பான இடத்தில் இருப்பதென உணர்ந்தேன். அவள் அணைப்பிலேயே உறங்கிப்போனேன்.

கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது. கார்திருடும் கும்பலில் இருந்த நண்பர்களில் ஒருவன் பெரியகுற்றங்களாக செய்யபோய் ஒரு நிகழ்வில் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டான். சந்தேகத்தின் பேரில் போலிஸ் என்னைப்பிடித்து சிறைச்சாலைக்கு அனுப்பியது. நிர்க்கதியாய் நின்ன அன்ன அவளது குடும்பத்தாரால் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வலுக்கட்டாயமாக அவளுக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. நான் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட படங்கள் கொண்ட செய்தித்தாள் அவளுக்கு காட்டப்பட்டது. அவள் எங்கிருந்தாலும் எந்தநிலையிருந்தாலும் என்றைக்காவது வந்தழைத்துச்செல்வேன் என்ற நம்பிக்கை அவளை வாழத்தூண்டியிருக்க வேண்டும். ஆனால் நான் மீண்டும் அடிதடி குற்றச்செயல்கள்தான் ஆண்மை என்ற நிலையில் மாட்டியிருக்கும் இந்த சூழல் அவளை நம்பிக்கையிழக்க செய்திருக்க வேண்டும். என்மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டதைவிட அவள் அவள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கவேண்டும்.  எதை நம்பி என்னை விரும்பினாளோ எப்படி நான் இருக்கக்கூடாது என்பதால் என்னுடன் வரத் துணிந்தாலோ அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட அந்த இரவில் அவள் தற்கொலை செய்துகொண்டாள்.

போலீஸின் பிடியில் இருந்து தப்பி ஓடி அவள் வீட்டை அடைந்த கணத்தில் தான் அவளைக் கண்டேன். சடலமாய் வீட்டின்முன் கிடத்தப்பட்டிருந்தாள். இப்பொழுது அந்த வீட்டில் என்னை யாரும் தடுக்கவோ அடிக்கவோ இல்லை. அவளை கட்டியணத்து அழுதேன். அதே ஒல்லியான விரைத்த உடல். கூர்ந்த நாசி, சதைப்பற்றற்ற கன்னங்கள். சிவப்பு பருக்கள். புதிருக்கு விடைதெரிந்த தளும்பாத மார்புகள். கலையாத உடை. பச்சை நரம்புகள் ஓடும் நீளமான விரல்கள். மூடிக்கிடக்கும் பெரிய கண்கள். அசைவற்ற உடல். உதடுகள் இணையும் ரசவாதக்குழியில் இன்றைக்கு எனக்கான எந்த சேதியும் இல்லை. காதோரம் வழியும் அந்த ஒரு கற்றை முடிகள் மட்டும் அவள் முகத்தில் எப்பொழுதும் போல சுதந்திரமாக காற்றில் உருண்டு அலைந்து கொண்டிருந்தது.

வாழ்வில் ஒருமுறை உணரப்பட்ட உன்னதங்கள் எதுவும் நினைவில் இருந்து அழிந்து விடுவதில்லை. அவைகள் நம்முள் ஒன்றாக கலந்துபோய் விடுகின்றன. அந்த உன்னதங்கள் நம் வாழ்வு செல்லும் பாதையை சீரமைக்கின்றன. பிடிவழுவாது மிச்சத்தினை நடந்து கடக்க உதவுகின்றன. அன்ன இப்பொழுது என்னுடன் இல்லைதான். ஆனால் அவள் காதல் எனும் உன்னதம் என்னை இன்னமும் வழிநடத்திக் கொண்டுதான் இருந்தது. அர்த்தமுள்ளதோ இல்லையோ ஒரு சிறு நம்பிக்கை நம்வாழ்க்கையை நாம் பிடித்தபடி வாழவைக்கிறது. அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும். ஆனால் அது நம்மளவில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருப்பதால் அதன் பலன் அளப்பறியது. ஆற்றில் தண்ணீருக்கு அடியில் முங்கி கண் திறந்து பார்த்தால் மனசுக்கு பிடித்தவர்கள் நமக்காக தெரிவார்கள் என்பது சிறுகுழந்தையின் விளையாட்டுதான். ஆனால் நான் அதனை மனப்பூர்வமாக நம்பினேன். எப்பொழுதெல்லாம் அன்னவை காண விரும்பினேனோ அப்பொழுதெல்லாம் ஒரு முங்கு நீச்சலில் அவளைக்கண்டேன். எனக்கு இப்பொழுது அன்ன என்னைவிட்டு எங்கும் போய்விட இயலாதென்பதில் ஏக மகிழ்ச்சி.

Image result for annayum rasoolum
இப்பொழுது அன்ன உடலாக என்னுடனில்லை. அவள் இல்லாமல் வாழ பழகிக் கொண்டிருக்கிறேன். அன்னவை போல என்னால் மனதில் இருப்பதை கண்களில் சொல்லாமல் மறைத்து வாழ தெரியவில்லை. என் மனதில் திணிக்கப்பட்ட சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் கொடுத்த குழம்பமும் கலங்கமும் நிறைந்து அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களை மறைக்க கருப்புக்கண்ணாடி அணிந்து கொள்கிறேன். உள்ளிருக்கும் மிருகம் இப்பொழுதும் செத்துத்தான் கிடக்கிறது. அன்னவை பார்க்க வேண்டுமெனில் இன்னமும் ஒரு முங்கு நீச்சல் மட்டுமே எனக்கு போதுமானதாக இருக்கிறது.


சில நம்பிக்கைகள் எப்பொழுதும் பிறருக்கு சிறுபிள்ளைத்தனமானவைகள் தான். ஆனால் அவைகளே நம்பியவனின் வாழ்க்கையை  உன்னதங்களுடன் இணைக்கின்றன. வழி நடத்துகின்றன. கைப்பற்றி அழைத்துச்செல்கின்றன.

நான் நடந்துகொண்டிருக்கிறேன்.

annayum rasoolum - 2013 

வியாழன், அக்டோபர் 03, 2013

ப்ரே பண்ணுவேன்! நானும் ப்ரே பண்ணுவேன்!!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் ப்ரேயர் சாங் கேட்டேன்!

லவ் பண்ணி விட்டுட்டு போன பெண்ணை வாழ்த்தி ப்ரே பண்ணனுமாம்ல ப்ரே! ஆண்களின் காதல் தோல்வியின் வலி அவ்வளவு எளிதில் கடந்துவரக் கூடியதா என்ன? அப்பறம் இவ்வளவு நாள் வசந்தமாளிகை சிவாஜி ரத்தம் கக்கியதற்கும், நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் உயிரையே விட்டதுக்கும், வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் கோவில் மண்டபத்துல ஊமையாகி குடியேறியதற்கும், மூன்றாம் பிறை கமல் அடிவாங்கி ப்ளாட்பாரம் முழுக்க உருண்டத்துக்கும், மைக் மோகன் படத்துக்கு படம் பன்னு சாங்ஸ்சா பாடித் தள்ளினதுக்கும், காதலிக்கு கல்யாணமே செய்துவைக்கும் பூவே உனக்காக விஜய்யின் தியாகத்துக்கும், சுப்ரமணியபுரம் ஜெய் குத்து வாங்கி செத்ததுக்கும் அர்த்தமே இல்லையா என்ன?!

உண்மையில் சொல்லப்போனால் இப்படி தன்னையும் வருத்திக்கொண்டு வாழ்வையும் கெடுத்துக்கிட்டு எல்லோரையும் சிரமப்படுத்தறதுக்கு பதிலா இப்படி வெகு இலகுவாக இந்த வலியை கடந்து வருவது சாலச்சிறந்ததுன்னு தோணுது. எப்படியும் பின்னாடி எவளையாவது கண்ணாலம் கட்டி புள்ள குட்டியோட சந்தோசமாத்தான் இருக்கப் போறோம். இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பின்னாடி நமக்கே நமக்குன்னு கமுக்கமா சிரிச்சுக்கற தமாசாத்தான் ஆகப்போகுது.

இதாச்சும் அவனவன் உணர்வுகள் அவனவன் அளவில். ஆனா ஒருதலைக் காதலி முகத்துல ஆசிட் வீசறதும், நமக்கு கிடைக்காதவ வேற எவனுக்கும் கிடைக்கக் கூடாதுன்னு கழுத்தை அறுத்து கொலை செய்யறதும், அவ எங்கனையும் வாழ்ந்துறக் கூடாதுன்னு அந்தரங்கத்தை எல்லாம் வலைல ஏத்தறதும்னு வன்மமும் பழிவாங்கலுமாக நடந்து கொண்டிருக்கும் சமூகவியாதிகளை அறவே ஒழித்துக் கட்டவாவது இப்படி காதல் தோல்வியை ஜஸ்ட் லைக் தட் தட்டி விட்டுட்டு ஒரு வித செல்லக் கோபமும், கால் இடி எரிச்சலும், ப்ரெண்ட்லி பொறாமையும் கொண்டு “உங்கப்பா பேண்ட்டு டர்ர்ர்ரு...”ங்கற மாதிரியான சின்னப்பசங்க சண்டையின் பஞ்சாயத்து தீர்ப்புகளாக முடித்துக் கொள்வது உண்மையில் அருமையா இருக்கு!பாடல் முழுக்க ஒரு சின்ன குழந்தைத்தனத்தின் வீம்பு விரவியிருக்கும் இந்த ப்ரேயர் பாட்டை மனதார வரவேற்கிறேன்.

ஆகவே,

உங்கப்பா வெஸ்பா உன் காலேஜ் கேட்டில் பஞ்சராகனும்!

வெள்ளரி ஃபேசியலுக்கு பிறகு உம்மூஞ்சி வெளிரிப் போகனும்!

ரிசப்சன் போட்டோஸ்ல உன் தலைக்குமேல நானே கொம்பு வைக்கனும்!

கொடியில காயப்போட்ட உன் ஜட்டிமேல காக்கா கக்கா போகனும்!

உன் மாமியாரும் நீயும் ஒன்னா மருமக கொடும சீரியல் பார்க்கனும்!

உன் கல்யாண பொடவைல உன் புருசனே காஃபியை தவறி கொட்டனும்!

சீயக்கா குளியல் நடுவால பாத்ரூம்ல தண்ணி நிக்கனும்!

உம்புருசனின் முன்னால் லவ்வரு உன்னைவிட வெகு அழகா இருக்கனும்!

ஹனிமூன் மொதநாளே அவனுக்கு பரோட்டா தின்னு நைட்டுபுல்லா பேதியாகனும்!

பாத்ரூமே இல்லாத இடத்துல உனக்கு அர்ஜெண்ட்டா மூச்சா வரணும்னும்


ப்ரே பண்ணுவேன்!  நானும் ப்ரே பண்ணுவேன்!!

உங்க ப்ரேயர் என்னங்கப்பு? :)