செவ்வாய், ஜனவரி 22, 2008

அடுத்தது புடிச்ச பதிவொன்னும் போடனுமாமில்ல?!


பதிவுலக நண்பர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்லறதுன்னு தெரியலை! என்னத்த எழுதறதுன்னு தெரியாம கோட்டி புடிச்சபடி நம்ம மக்கா எல்லாம் பேரரசு கிட்ட மாட்டுன பரத் குத்துப்பாட்டுக்கு ஆடுற கணக்கா கணக்கு வழக்கில்லாம வகைதொகையில்லாம அடிச்சாடுறதை காதுகளில் பொகையோடு படிச்சபடி இருக்கற என்னைய கூப்புட்டு புடிச்ச படம் போடுங்க.. புடிச்ச பதிவு ஒன்னு சொல்லுங்கன்னு சொல்லி என் வயத்துல பாலை வார்க்கறாக. அதை சாக்கா வைச்சே இந்த வருசம் ரெண்டு பதிவு தேத்திட்டேன்! :) இருந்தாலும் இந்த தொடர் வெளாட்டுக்குன்னு எழுதறது நெசமாவே தாவு தீருது!

அழைப்பு வைத்த தருமிசாருக்கு நன்றிகள்! போனவருசம் நான் எழுதுனதுல எனக்குப்பிடிச்சது எதுன்னு சொல்லனுமாம்.

எனது மூன்றாண்டு கால பதிவுலக வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் என் எழுத்துப் பணிக்கான (ஹிஹி.. ) கடின உழைப்பு என்பது கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன... வேணாம் ரொம்ப பழசு... புரட்சித் திருமா தேய்ஞ்சு நடிகர் திருமா ஆன... வேணாம் வெவகார மேட்டரு... என்னாத்துக்கு எதுக மொகன? நேராவே சொல்லிடறேன்... 2005ல 50 பதிவுக... 2006ல 32 பதிவுக.. 2007ல 21 பதிவுக.. என்னா ஒரு வேகம்.. முன்னேத்தம் பாருங்க... இதுல இந்த வெளங்காத பதிவையும் ஞாபகம் வைச்சுக்கூப்பிட்ட வலைஞர்களுக்கு நன்றி!

எழுதுனதே 21! அதுல பாதி புகைப்பட பதிவுகள். இதுல எது எனக்குப்புடிச்ச பதிவுங்கறதெல்லாம் கொஞ்சம் ஓவரான கேள்விதான். இருந்தாலும் சுயபீத்தலுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சதை விட்டுட முடியுமா?

போன வருசம் மே மாசம் எழுதுன ரிசர்வேஷன் கதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஏன்னு சொல்லத் தெரியலை. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை அதை ஒரே ஃப்ளோல ஒரே சிட்டிங்கல மத்த எல்லாப் பதிவுக மாதிரிதான் அதையும் எழுதுனேன். இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தை குழப்பமில்லாம தெளிவா சொல்லமுடிஞ்சதுதான் அதில் எனக்கு கிடைச்ச சந்தோசம்னு நினைக்கறேன். :)

இக்குளியூண்டு பதிவு போடறதுக்கு எனக்கே ஒரு மாதிரி இருக்கு! அதனால எயித சரக்கில்லாத நேரத்தில் கைகொடுக்கும் புகைப்படத்தில் ஒன்றையும் மேல போட்டுகிறேன். இவிங்கெல்லாம் என்னோட மணப்பாறை சகாக்கள். ஜிம்மி உட்பட... "ஐஸ்பாய் வெள்ளாடலாம் வாங்கண்ணே"ன்னு கூப்டுகினு போயி முதுக பலுக்கிட்டானுவ...


அடுத்து கூப்பிட விரும்பும் 5 பேரு:

1. சுதர்சன் கோபால் - தம்பி இப்போல்லாம் இங்கிலீசு பிளாகு மட்டுந்தேன் எயிதுவேன்னு விடற பன்னாட்டு தாங்கலை! விட்டுருவமா?

2. ஜீரா - ஆளு ஸ்விஸ் போயி கொளுக்மொளுக்னு அம்சமா ஆயிட்டாப்புல.. சும்மாவே இந்தாளோட ஆட்டம் பெங்களூரூ தாங்காது!

3. ராமச்சந்திரன் உஷா - யக்கோவ்.... இப்ப நீங்க இருக்கறது துபையா.. மஸ்கிட்டா? அபிதாபியா?

4. துளசியக்கா - நீங்க எழுதறது எல்லாமே புடிச்ச பதிவுதான்.. இருந்தாலும் இதச்சொல்லி ஜகா வாங்காதீங்க...

5. இகொ - இன்னேரத்துக்கு இவரை பலபேரு கூப்பிட்டிருப்பாய்ங்க.. இருந்தாலும் என் சார்புல நானும்...


அவ்ளவ்தான் மேட்டரு!

வெள்ளி, ஜனவரி 11, 2008

புடிச்ச படமொன்னு போடனுமாமில்ல!?

என் நெஞ்சில் நிறைந்த அன்பு மருத்துவர் தம்பி இராமனாதனும், நச் கதையில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்த காதல்கோ அருட்பெருங்கோ அவர்களின் மனமுவந்த அழைப்பினை எனக்கு கொடுக்கப்பட்ட ராமனது காலடிகளாய் மகிழ்வோடு ஏற்று இந்த பதிவு. ( ஆஹா! என்னே ஒரு மேடைப்பேச்சு நாகரீகம்! குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )

When was the last time you did something for the first time?நேரமில்லாததாலும் பல டேக்குகளை சொதப்பி பல பதிவர்களிடம் துப்பு வாங்கியது படி இதனை செய்ய மனமில்லாததாலும் படம் மட்டும் போட்டுட்டேன். ஏன் பிடிச்சதுங்கற விளக்கம் சொல்லனுமாமில்ல?! அப்பாலிக்கா பின்னாடி வர்றேன். இப்பாலிக்கா சென்னை வண்டிக்கு ஓடறேன்!

====

இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்...

படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும்.

அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகளையும் நியாயமாய் பிரதிபலிப்பதில்லை தான். அதற்காக குழந்தைகளாக நாம் மாறமுடியுமா என்ன?

ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன? :)

ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)

=====


TAG விதிகள்:


1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.

3 பேரை கூப்பிடனுமாம்ல?

1. கைப்புள்ள
2. தீபா
3. திலகபாமா


அப்பீட்டேய்!!!!