இது விமரிசனம் இல்லைங்க.. வயித்தெரிச்சலு...
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். TVல தான் சீரியல் எல்லாத்துலயும் ஆம்பளையும் பொம்பளையும் கூடிக்கூடி அழுவறாங்கன்னு நொந்துபோயி ஒரு படத்துக்கு போலாம்னு நெனைச்சு நம்ப இளயதளபதி படமாச்சே அப்படின்னு எனக்கும் பொண்டாட்டிக்கும் சேர்த்து 120 ரூபாயிக்கு டிக்கெட்டு எடுத்து போனா... நம்ப பொழப்பு நாறப்பொழப்பு ஆகிடுச்சுங்க!
கடைசி வரைக்கும் ஒரு 80 பக்க நோட்டகூட காட்டாம ஒரு காலேஜ் கதை. அதுவும் எங்க? இத்தனை நாள் நம்ப ஹீரோங்க எல்லாம் ஆடிப்பாடறதுக்கு மட்டும் போன ஊட்டில. விஜயும் ஜிலினியா டிசோசாவும்(பேர எழுதறதுக்குள்ள ஜன்னி வந்துடும் போல) படம் முழுக்க ஒரு ஜோல்னாப்பைய தோல்ல தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க. அதுக்குள்ள என்ன வச்சிருக்காங்களோ அவங்களுக்கே வெளிச்சம். நாயகி மழைல நனையற அழகைப்பார்த்து ஹீரோக்கும், ஹீரோ குடை மடக்கற வீரத்தைப்பார்த்து ஹீரோயினுக்கும் புடிச்சுபோயிடுதாம். இந்த காலத்து காலேஜ் பசங்க பார்த்தா பின்னாடி சிரிச்சிட்டு போவாங்க!
படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி சீன்ல கோவை ஏர்போர்ட் வரை பின்புலத்துல பைப்புல பொகை பொகையா உடறாங்க... அதை நாம பனிமூட்டம்னு நினைச்சுக்கனுமாம். டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறியிருக்கற இப்பத்த சினிபீல்டுல இதகூட கவனிக்காம ஒரு ஒளிப்பதிவாளரு! பாவம் சம்பளம் குடுக்காத கடுப்புல இப்படி கவுத்துட்டாரா என்னன்னு தெரியலை.
அம்பதை தாண்டுன பெருசுங்க எல்லாம் இளவட்டமா நடிக்கறப்ப வடிவேலு காலேஜ் பையனா நடிக்கறது தப்பில்லைதான். அதுக்காக லாஜிக்கே இல்லாம ஒரு வெளக்கம் குடுக்கறாங்க பாருங்க. வர்ற எரிச்சல்ல முன்னாடி உக்காந்த்திருக்கறவன் முதுகை பெராண்டலாம்னா மொத்தமே ஒரு 40 பேருதான் தியேட்டருல.
அந்த காலத்துல அனுராதா, ஜெயமாலினி எல்லாம் திடீர்னு ஒரு டான்சுக்கு வருவாங்களே.. அதுபோல பிபாசா பாசு. சச்சினை கட்டிபுடிச்சி உச்சிமோந்து பொரண்டு உருண்டு காதலோட மேன்மைய ஹீரோயினுக்கு சொல்லறாங்க... இதுக்கு மேலசொன்ன கவர்ச்சி டான்சு லாஜிக்கே 100 மடங்கு தேவலாம்.
என் கேள்வியெல்லாம் இதுதாங்க.
இந்த படத்துல நடிக்கறதுக்கு கில்லி கொடுத்த விஜய் தேவையா?
ஆனா ஒன்னு மறுக்க முடியாதுங்க. விஜய்க்கு நல்ல ட்ரெசிங்சென்ஸ்
நிற்க:(ஹிஹி.. இது எழுதாம என்னால முடியாதுங்க. படம் முழுக்க ஒரு சீன்ல கூட ஒழுங்கா நின்னு நடிக்காம இப்படியும் அப்படியும் ஆடிக்கிட்டே இருக்கற சச்சினை பார்த்தா லூசுப்பயன்னுதான் தோணுது. ஆனா இதுக்கு டைரக்டரோட விளக்கம் என்ன தெரியுங்களா. ஹீரோ எப்பவும் உற்சாகம் கொப்பளிக்க திரியற ஒரு பார்ட்டியாம்!)
போடாங் கோ!!!