வியாழன், டிசம்பர் 17, 2015

திருடன் போலீஸ்


வாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல!


கான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு!


அதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம இருக்க கூட்டத்துல மறைஞ்சு மறைஞ்சு வளையவரனும். தீபாவளிக்கு அண்ணந்தம்பிக எல்லோரும் ஒரே பிட்டுதுணில அடிச்ச ஒரே மாதிரி பேண்ட்டுசட்டை போடனும். பொழைக்கதெரியாதவங்கன்னு பிழைப்புவழி கண்டவங்க சொல்லக்கேட்கையில ப்ச்சுன்னு மொனவிகிட்டு அமைதியாய் தலைகுனிஞ்சுக்கனும். இதெல்லாம் அப்பப்ப சிரமமா இருந்தாலும் செய்யற ஆளுமேல ஒரு பாசமும் பிடிமானமும் இருந்தால் பெருசாதோணாது. ஆனால் அதுக்கு பதின்ம அழுத்தங்களை கடந்துவரவரைக்கும் காத்திருக்கனும்.

டைரக்டர் போலீஸ் காலனில வாழ்ந்திருப்பாரு போல. முடிஞ்சவரை திரைல கொண்டுவந்துட்டாப்ல. குச்சானுக என காவலர்களின் வாழ்க்கையை வெளில எந்தவித சமரத்துக்கும் லஞ்சலாவனியங்களுக்கும் இடம்கொடாத சீரியசிந்தனை காந்திமகான்கள் எவர் ஒருவரும் சிரிப்பாக அவமானகரமாக நக்கலாக உன்னத கருத்துக்களை உதிர்த்துவிட்டு செல்லலாம் தான். ஆனால் நாட்டில் போலீஸ் டாக்டர் வக்கீல் அரசியல்வாதிகள் எல்லோரும் நேர்மைத்திலகங்களாக இருக்கவேண்டும்னு கட்டாயப்படுத்தும் நாம்தான் இவர்கள் எல்லாம் நம்முள் நம்மிடம் இருந்து வருபவர்களே என்பதையும் நம்முடைய சமரச அளவுகோல்கள் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்வதில்லை. எப்பொழுதும் உயர்வாக பேசி நெஞ்சை நிமிர்த்திக்கனும்னு சொல்லலை. உள்ளது உள்ளபடிக்கு தெரிஞ்சுக்க என்ன தடை இருக்கமுடியும்?


மூக்கு நரேனின் சீன் யூடூபில் சிக்கலை. கிடைத்தால் பகிர்கிறேன். (மேல ) பகிர்ந்துட்டேன் :) ) அதுவரை "வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன்" முரளிகண்ணனின் காவலர்கள் பற்றிய அருமையான கட்டுரையை ( http://muralikkannan.blogspot.com/2013/04/blog-post.html ) படித்துவைங்க. அடுத்த முறை அவர்களை சுட்டெரிக்கும் வெயிலில் காய்வதை காணும்வேளையில் ஒரு கரும்புஜீஸ் வாங்கிக்கொடுத்து சினேகமாய் குடிங்கசார்னு கேட்டுக்கலைன்னாலும் அவங்க பெருசா ஒன்னும் நினைக்கப்போறதில்லை. ஆனால் நம்மைபோலவே எல்லா வாழ்க்கை அழுத்த மாய்மாலங்களும் கொண்ட சம சகஜீவி ஒருத்தர்னு நினைச்சுக்கறதில் ஒன்னும் பெருசா நமக்கு நட்டமில்லை. :)

நேர்மை என்பது ஒரு உண்மையில் எல்லா உயரிய உணர்வுகளையும் போலவே தோலுரித்துப்பார்த்தால் ஒரு நொய்மை. அவரவர் வரையரைக்குள் அளவும் வீச்சும் மாறும் ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. கட்டாயம், கவுரவம், மரியாதை, பழக்கவழக்கம் வளர்ப்பு, பிடிவாதம், பிடிமானம், கண்மூடித்தனமான நம்பிக்கை, சுயவருத்திக்கொளல் என எல்லாம் கலந்துகட்டிய ஒரு பிம்பம் அது. இயல்பாய் மூக்குநோண்டி சுண்டிவிடறாப்ல அது அந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு படு இயல்பான காரியம். இதை இயல்பாக செய்யாட்டித்தான் அவர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். மற்றவர் நினைப்போ கஷ்டமோ வருத்தமோ எதுவும் அவர்கள் இந்த நொய்மையில் இருப்பதை மாற்றாது.:)

நிம்போமேனியாக் ( Nymphomaniac )நிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை.ஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கருவிக்கு பெயர்தெரியுமா என வசனங்கள் வருகையில் அதிர்வுக்காட்சியில் கிடைத்த உலுக்கல் வெறும் மிகைமதிப்பாக பார்க்கவும் வாய்ப்புண்டு என போகும் படம். சுருங்கச்சொன்னால் சிறுபத்திரிக்கை எழுத்துமொழியில் நம் விமர்சகர்கள் பக்கம்பக்கமாக ஆயிரத்தெட்டு நேம்டிராபிக்கோடு பிரித்துமேய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் திரைக்காவியம். எனனசெய்ய... எல்லா அறிவாளி விமர்சகர்களுக்கும் மசாலாபடங்களை பிச்செரியத்தான் சமீபத்தில் ஆர்வம். பின்ன சுபா ராஜேஷ்குமாரெல்லாம் தொடர்ந்து திரைவாய்ப்பு பெறுகையில் எவ்வளவு காலம்தான் அம்பதுபேர்களுக்கு ஆராய்ச்சிகட்டுரைகளை படைத்துக்கொண்டிருப்பது?


சொல்லவந்த மேட்டரு அதுவல்ல. முதல் பாகத்தில் Mrs. H என்றொரு பகுதி வருகிறது. பலகாதலர்களோடு... சரிசரி.. பல கள்ளக்காதலர்களோடு வாழும் காலத்தில் ஒரு காதலன் காமத்தை தாண்டி உணர்வுவயப்பட்ட காதலில் இப்பெண்ணோடு விழுகிறான். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பன். பதின்மத்தில் எட்டாக்காதல் நாற்பதில் கிட்டியதில் தடம் புரளும் கட்டம். அவளோ உன்னோடு முழுக்க வாழமுடியாது. உன் குடும்பம் இருக்குன்னு துரத்தி விடுகிறாள். காதலை குடும்ப அமைப்பில் தொலைத்து மீட்டெடுக்க வழியில்லாமல் மூச்சுத்திணறலில் இருக்கும் அந்த அம்மாஞ்சி குடும்பத்தை பிரிந்து இவளோடு வாழலாம் என பெட்டியோடு கிளம்பி வருகிறான். அடுத்துவரும் பதினைந்து நிமிடங்கள் அதகளம். மெத்தர்ட் ஆக்டிங்னா இதுவான்னு தெரியலை. ஆனா உமா தர்மன் திறமையில் பேயாட்டம் ஆடியிருக்கும் காட்சி.
அந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள். மாடிப்படிக்கட்டின் சைடில் ஒளிந்துகொண்டு குசுகுசுப்பாய் உங்கப்பா உள்ளபோயிட்டாரா பாருன்னு ஆரம்பிக்கும் காட்சி. குழந்தைகளின் குரல்கேட்டு இவள் அவர்களை வீட்டினுள் அழைக்க அவள் வாழ்வில் ஏமாற்றப்பட்ட கணவனால் இல்வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கி வீட்டினுள் வந்து அமர்கிறாள். அறிமுகம் செய்துகொள்கிறாள். வீட்டினை பார்க்க விரும்புகிறாள். அவர்கள் வீட்டில் தோற்றுப்போன படுக்கையறையை இந்த வீட்டில் வெற்றிபெற்ற படுக்கையறையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறாள். இந்த அறையில் தான் உங்க அப்பாவை நாம் இழந்தோம்னு குழந்தைகளுக்கு சொல்கிறாள். இனிமே அப்பாவை பார்க்க முடியாது அப்பாவிடம் எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு தேற்றுகிறாள். அந்த நேரம் பார்த்து இவளின் இன்னொரு காதலன் பூங்கொத்தோடு வர நிலமை சூடுபிடிக்கிறது. எனக்கும் இதுமாதிரி தகுதியான ஆளை தேர்ந்தெடுக்கும் அறிவில்லாம போயொருச்சேன்னு குத்துகிறாள். அப்பான்னு அழுதுகொண்டு ஓடும் பையனை அடித்து பிரித்திழுக்கிறாள். கணவனை அறைந்துவிட்டு கார்சாவியை வீசிவிட்டு குழந்தைகளை இழுத்துக்கொண்டு ஆற்றாமையின் வலியின் அனைத்துக்குமாக சேர்ந்து வீட்டிவிட்டு பெரிய அகவலோடு போகிறாள்.


எனக்கு இதைக்கண்டு முடிக்கையில் ஈரக்குலையெல்லாம் அறுந்துவிட்டது. அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் சொல்லும் குடும்ப அரசியலை அல்லது குடும்ப அமைப்புக்கு தேவைப்படும் காய்நகர்த்தல்களை முன்னிருத்தும் செய்கைகள் தான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக குழந்தைகளுக்காக வாழ்வை அம்மா ஸ்தானத்தில் மட்டுமே வாழ்ந்து மனைவியின் ரோலை கைதவறவிட்ட பேதையாகத்தான் தன்னை காட்சிப்படுதுகிறாள். ஆனால் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதிலுமே சம்பந்தமில்லாமல் மலங்க மலங்க பாசமான அப்பாவை பிரிய இயலாமல் கதறும் குழந்தைகளைப்பார்க்கையில் வாழ்வில் ஒருகட்டத்தில் ஆண்கள் சுயத்தை முன்னிருத்தாமல் மனைவி அம்மாவானதைப்போல கணவனும் அப்பாவாக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவிடுதல் மிகநலம் என்று தோன்றியது. மிடில்க்ளாஸ் மோரானாக இருப்பதுதானே தவறு. மிடில்க்ளாஸ் மாதவனாக வாழ்ந்து தீர்வதில் நம்மைத்தவிர நம்மை நம்பிச்சாரும் எத்தனை உயிர்களுக்கு எத்தனை நன்மை?


பிரட்சனை அள்ள அள்ளத்தீராத குறையாத ஆண்களின் கடும்புனல் காமம்தானே? ஊரெல்லாம் சுற்றிவந்தாலும் தீர்ந்து தேய்ந்து அழிந்து தொலையாத அறுத்தெறிய இயலாத அந்த காமக்காதல் உடலுக்குள்ளேயே அப்பாவேடத்தின்கீழ் அமுங்கி நாறி சீப்பிடித்து மனமுள் வாழ்ந்து களித்துதீரும் வக்கிரம் ( உண்மையில் உக்கிரம் ) வாழ்வின் பகுதியாக மாறித்தொலையட்டுமே. குழந்தைகள் பாதிப்பின்றி வாழ்ந்து மலரட்டும்.


ஆகவே நாற்பதில் இல்லறத்திலும் பொருளாதாரத்திலும் "செட்டிலா"கிவிட்டதாய் வரும் நினைப்பில் கிடைக்கும் அதிகாரத்தில் மீண்டும் பதின்மத்தில் ஏமாந்த இழந்த காதல்களை செய்துபார்க்க வரும் துளிர்ப்பினை அறுத்தெறிந்து தன்கையே தனக்குதவின்னு மனதினுள் வாழ்ந்து கடத்தல் உத்தமம் என்கிற தெளிவினைக்கொடுத்த உமா தர்மனுக்கு நன்றி :)கீதப்ப்ரியனின் அருமையான பதிவு -


Aftershock - 2010"மாஸ்டர் டீச்மி குங்க்பூ"

"நோ மை சன்!"

"மாஸ்டர், ப்ளீஸ் டீச்மீ குங்பூ!!

"நோமைசன்... நோ..."

"வை மாஸ்டர் வை???"

"பிகாஸ் ஐ டோண்ட் நோ குங்பூ!!"


இந்தக்காமெடிக்கு தலைகீழா டைவடிச்சு சிரிக்கற அளவுக்குத்தான் எனக்கெல்லாம் சீனப்படங்களை பத்தி தெரியும். ஏன்னா பார்த்துவைச்ச படங்க எல்லாம் எண்டர்த டிராகன்ல இருந்து க்ரோச்சிங் டைகர் ஜெட்லி ஒன் தானே! ஜாக்கிபடங்கள் ஒருவகைன்னா இந்த பழங்கால அரசர் துரோகம் வெண்தாடி குரு மொட்டைல புள்ளிவைச்ச சிஷ்யனுங்க அப்பறம் பறந்துபறந்து அடிச்சும் வேலைக்காவாம கடைசில துணிய கத்தியாக்கி ஏமாந்த ஒருநொடில சொருவி வில்லனைக்கொல்லும் யாஹூசூ படங்கதானே.


அதனாலதான் ஆரம்பத்துல இது சீனப்படம்னு தெரிஞ்சதும் ஒரு அசூயையா பார்க்க ஆரம்பிச்சோம். ச்சோம்னா வீட்டுல பொண்டுபுள்ளைங்க எல்லாமும். பார்த்துமுடிக்கையில் எவ்வளவு மனக்கிளர்ச்சி மற்றும் மனஅமைதி ஆனோம்னு சுருக்க சொல்லிமுடியாது! சீனப்படங்கள் பற்றிய தவறான மாயையை சுத்தமா தொடைச்செடுத்தது நிச்சயம் பலன் தான்.


கதையை சொல்வதில் ஒன்னும் பாதகமில்லை. ஆண் பெண் குழந்தைகள் இருவர் என குடும்பமாக வாழும் தம்பதியர் ஒரு பெரும் நிலநடுக்கத்தில் சிதருண்டு போகின்றனர். கணவனைப்பறொகொடுத்த அந்த தாய்க்கு இடிபாடுகளைத்தோண்டி மக்களை தேடியெடுக்கும் நேரத்தில் ஒரு காங்கிரீட் தூணின் இருபக்கங்களில் அழுத்தப்பட்டிருக்கும் மகன் அல்லது மகள் இருவரில் ஒருவரை மட்டுமே விரைவாக முடிவெடுத்தால் காப்பாற்றமுடி நிர்ப்பந்தம். ஏற்கனவே கணவனை இழந்து ஊரே அழிவின் பிடியில் இருக்கும் நிலையில் அவசரத்தில் அவள் மகனை காப்பாற்றும் முடிவை எடுக்கிறாள். காங்க்ரீட்டுக்கு அடியில் மாட்டிக்கிடக்கும் மகள் இதைக்கேட்டுவிடுகிறாள். மீட்புக்குழுவின் கணிப்புத்தவறாக அவள் பாதிக்கப்படாமல் பிழைத்துக்கொள்கிறாள். மீட்கப்பட்ட மகனுடன் பாதி உயிராக தாய் ஒருபுறம் செல்ல பிழைத்துக்கொண்ட மகள் வேறொருபுறம் அழைக்கிழிக்கப்பட்டு பின்பு ஒரு தம்பதியரால் தத்தெடுக்கப்படுகிறாள்.


இந்த மூன்றுபேரும் அடுத்த முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதை. இதன்பிறகாக நடக்கும் நிகழ்வுகள் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு உணர்வுபூர்வமானவை. மகளை காவுகொடுத்துவிட்டேனே என மருகிமருகி வாழும் தாய் ஒருபக்கம். அம்மாவே தன்னை கைவிட்டு தம்பியை மட்டும் காப்பாற்றிசென்றாளே என அபலையுணர்வில் வாழ்வை குறுக்கி குறுகிக்கொள்ளும் மகள் ஒருபுறம். இந்த ஊசலாட்டத்துக்குள் நிச்சயம் நாலைந்துமுறையாவது பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறிவிட்டேன். விட்டோம். கண்களில் நீர் வழிந்தோட உணர்வுச்சுழியில் தத்தளித்தபடி ஒரு சீனை சொல்லியே ஆகமும்னுதான் இந்த பத்தி. அந்த டைரக்டரை நேரில் கண்டால் நிச்சயம் காலில் விழுந்துவிடுவேன். இழப்பை உணர்வதை நம் கட்டுக்குமீறி வெளிப்படுத்துகையில் எந்தவித புறகாரணிகளும் கருத்தில் கொள்ளாமல் காட்டாற்றுவெள்ளமென அதை கொட்டித்தீர்க்கும் வாய்ப்பு எத்தனைமுறை அமையும்? எதற்கு இந்த பில்டப்பு? நேராக்கேக்கறேன். கடைசியா எப்ப மனசுவிட்டு அழுதீங்கன்னு நினைவிருக்கா?


கனடாவில் மருத்துவ செவிலியாக கணவன் குழந்தைகளோடு வாழ்ந்துவரும் அந்தப்பெண் முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்து மீட்புக்குழுவில் சேர்ந்து உதவிபுரிய விரைகிறாள். பலவருடங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வில் தான் தன் தாயால் கைவிடப்பட்ட ஆறாக்கோபம் இன்னமும் இருக்கிறது. அந்த குழுவில் ஒருவன் முன்னர் நடந்த பழங்கதையை விளக்கிக்கொண்டிருக்கிறான். மெல்ல விசாரித்தறிகையில் அது ஊனமான அவன் தம்பி. அவளால் நம்ப முடியவில்லை. ஆனாலும் அவன்மேல் பெரிய ஒட்டுதல் வரவில்லை. அவனோ காணாமல்போன அக்கா கிடைத்ததில் உருகிப்போய் அவளை தொலைதூரத்தில் இருக்கும் அம்மா வீட்டுக்கு பிடிவாதமாக அழைத்துச்செல்கிறான். பிடிப்பின்றி ஆறாக்கோவத்தில் அவள். அந்த ஒரு சீன் முடிகையில் நெஞ்சைப்பிசைந்துவிட்ட வலியில் மனம்கரைந்த அழுகை.


இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்கிற பதைப்பு நமக்கு.


அம்மா வீட்டிற்கு வெளியே பாத்திரங்கள் துலக்கிக்கொண்டிருக்கிறாள். இவள் தம்பியோடு தயங்கித்தயங்கி வர அம்மாவோ பார்வையை மாற்றாமல் உள்ளே சென்று அமரும்படி வேண்டிக்கொள்கிறார். வீட்டினுள் சென்ற பெண் சுவறில் தன் சிறுவயது புகைப்படத்தை பார்க்கிறாள். அதன்முன் ஒரு நீர் நிரம்பிய ஒரு சிறு பாத்திரத்தில் தக்காளிகள். இது அவள் சிறியவளாக இருக்கும்பொழுது சமையலுக்கு வைத்திருக்கும் தக்காளியை ஆசையாகத்தின்ன தூக்கிக்கொண்டு ஓடும் தினப்படி செயலை நினைவுபடுத்துகிறது. பின்னாலிருந்து அம்மாவின் குரல். உன்னை பறிகொடுத்தநாளில் இருந்து தவறாமல் உன் நினைவாய் தினமும் உன் படத்தின்முன் தக்காளிகளை வைப்பதுவழக்கம் என. மகளுக்குள் சட்டென எதுவோ ஒன்று உடைகிறது. அம்மாவிம் குற்றவுணர்வை இதுவரையிலான அலைக்கழிப்பை ஒரு நிமிடத்தில் புரிந்துகொள்கிறாள். இதுவரை கரையவிடாமல் ஊதியூதி வளர்த்த கோவக்கணலும் நாளும் மறுகிமறுகி வளர்த்துவந்த குற்றவுணர்வும் இருவருக்கும் ஒரு நிமிடத்தில் உடைந்து நொறுங்குகிறது.


எவ்வளவு எளிய சீன். எந்தவித ஆரவார தம்பட்ட நடிப்பும் இன்றி மிக எளிய வசனங்களால் உடல்மொழியால் அழியாக்காட்சி ஆகிவிட்டது. நடிப்பு என்பது தோடா நாம் எப்படி தெறமையா நடிக்கறேன்னு நொடிக்குநொடி பார்வையாளனுக்கு காட்டிக்கொண்டே இருப்பதல்ல. எந்த நொடியில் அந்த நடிகர் காணாமல்போய் அந்த கதாபாத்திரம் நம்மை நம்மையறியாமல் அவர்கள் திரைக்குள்காட்டும் வாழ்க்கைக்குள் இழுத்துக்கொள்வது. இந்த ஒரு சீன் போதும். இனி ஜென்மத்துக்கும் சீனாப்படம்னா சடையனுங்க காத்துல கத்திக்கிட்டு சண்டைபோடற படம்னு சொல்லமாட்டேன்.


நானெல்லாம் சும்மா சிக்ப்ளிக்ஸ்குக்கே க்ளைமாக்ஸ்ல கண்ணுல தண்ணி வச்சுக்கறவந்தான். இந்த படத்தின் இயக்குனருகூட சீனாவின் சேரனாக இருக்கக்கூடும். ஆனால் உன்னதம் என்கிறவகையில் இந்தக்காட்சியை நம்பாளு யாரால செஞ்சிருக்க முடியும் யோசிச்சதுல அது ராதிகாவா ஊர்வசியான்னு இன்னமும் தெளிவா சொல்ல ஏலலை. எளியகாட்சிகளை எளிமைகெடாமல் செய்துகாட்டத்தான் இமாலயதிறமை இயல்பாய் தேவைப்படுகிறது.


முழுப்படம் யூடியூப்லயே நல்ல குவாலிடில இருக்கு. நீங்க சேரனின் தவமாய்த்தவமிருந்து படத்தை உணர்ந்துபார்த்தவரெனில் இப்படத்தை ஒருமுறை பார்த்து பொம்பள ராஜ்கிரனின் உணர்வுக்கடத்தல்களை அனுபவியுங்கள்.


டயட்டு அட்ராசிடிஸ்!


அடல்ட் வாழ்வில் உடம்புக்கு திருப்தியா செய்யவேண்டியது உணவும் உடலுறவும்.


இதில் இரண்டாவது ஏற்கனவே நம்ப நாட்டுல கடும் வறட்சில ஓடிக்கிட்டு இருக்கு. கிடைச்சதையெல்லாம் இல்வாழ்க்கை சமூகசூழல் ஒழுக்கவிதி பொருளாதாரம் சாதிமத கட்டுப்பாடுகள்னு ஆயிரத்தெட்டு கொடைச்சல்ல கிடைச்சும் கிடைக்காத குற்றவுணர்வுல பொதுப்புத்தி ( அதாங்... பெரும்பான்மை )வாழ்க்கைய ஏற்கனவே மருகலில் ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இதுல முதலாவது உணவையும் குற்றவுணர்ச்சி தூண்டப்பட்டேதான் செஞ்சு அழியனுமா? சாப்பாட்டை சந்தோசமா அனுபவிச்சு சாப்பிடறதுல அப்படி என்னய்யா குற்றம்? வீகன் பேலியோ ஆர்கானிக்குன்னு விதவிதமா கெளப்பிக்கெளப்பி சும்மா இருக்கறவங்களை மருகிமருகி சாப்பிடவைச்சு அய்யோ முடியலயே தப்புசெய்யறோமோன்னு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டு தவிக்கனுமாங்கறேன்?

நம்முடைய மனோபாவத்துக்கு ( Attitude ) பொருந்தாத தேவையில்லாத அவசியமில்லாத செயல்களை எல்லோரும் செய்யறாங்களேன்னு கடமையாய் செய்வது பின்பு செய்ய இயலாமல் போவது குற்றவுணர்வை மட்டுமே கொடுக்கும். ஸ்போர்ட்ஸ்மேனாக இருப்பதும் குறிப்பிட்ட டயட்டை கட்டுக்கோப்பாய் செய்வதும் அவரவர் தேர்வு. சுயதேர்வாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் பலன்கள் மகிழ்சியை அளிக்கும். இல்லைன்னா இருக்கறதையும் அழிக்கும்.


பருமனாக இருப்பது என் உடல்வாகு. உடலை பிட்டாக வைத்திருப்பது விருப்பம் எனில் அதற்கான சரியான முயற்சிகளே நன்மை தரும். ஒருவாரத்தில் 10கிலோ குறைப்போம், குகைமனுசனாட்டம் சாப்புடுவோம் இலைதழைய தின்னு இடுப்பை குமிட்டி அடுப்பாக்குவோங்கறதெல்லாம் நோவாம நோம்பிகும்பிட நினைக்கும் விருந்தும் மருந்தும் மூனுநாள் கேட்டகிரி. அதை சரியாகப்புரிந்துகொண்டு செய்பவருக்கு பலன் கிடைத்துவிட்டுப்போகட்டும். கோடிவீட்டு கோமலா செய்யறா எதுத்தூட்டு இஞ்சினியரு ஜிஎம் டையட்டறாரு மேனேஜர் ஆயிர்வேதிக்ல பாஞ்சேநாள்ள 20கிலோ கரைச்சாருன்னெல்லாம் கதகேட்டு அப்டியே செய்யப்போகி உடல்நலம் மனநலம் ரெண்டும் கெடுத்துக்காதிங்க.

வெற்றிக்கு குறுக்குவழி கிடையாது. அதேபோல் இன்றைய அவசர பொருளாதாரவழி வாழ்வியலில் ஓசிச்சோறு என்பது இல்லை எல்லாத்துக்கும் விலையுண்டு. நல்லதோ கெட்டதோ அதை மக்களிடம் விற்கவைக்கும் எளிய வியாபார தந்திரம் குற்றவுணர்ச்சியை தூண்டிவிடுதல்.


கருப்பா இருந்தா மாப்ள வேலை கிடைக்காது அந்த பீக்கீரீம் அப்பிக்கிட்டா ஒடனே கிடைக்கும், மண்டைல முடியில்லன்னா வாழ்வே போச்சு திங்க வாயிந்தொறக்காது குஞ்சுல மூச்சா பிரியாது அகவே அமேசான் காட்டில உம்ம மண்டைக்குன்னே ஆர்டர் செஞ்சு எடுத்தாந்த மருந்து, குண்டா இருந்தா இல்வாழ்க்கை உட்பட மொத்தவாழ்க்கையே நாசமாகிரும்னு பயமுறுத்தற விளம்பரங்கமேல மொதல்ல காறித்துப்புங்க. நம் உடல் பற்றி நம்மை நாமே கூனிக்குறுகச்செய்யும் எந்த கேடுகெட்ட வியாபாரதந்திரங்களுக்கும் அனுமதி அளிக்கல்கூடாது. எர்வாமாட்டின்ல முடிவந்துதான் அந்த முடியழகை பார்த்துத்தான் ஒரு பொண்ணு கட்டிக்குவான்னா அப்படியொரு மயிருகல்யாணம் எத்தனைநாளைக்கு நிலைக்கும்? நாளைக்கு குர்வாமாட்டின்ல இன்னும் நாளடி அதிகம் முளைக்கும்னா ஆளை மாத்திக்கனுமா? என் உடல் என் அளவு என் நிறம் என் மண்டை இதுல மசுரில்லன்னா மசுரே போச்சுன்னு இருக்கவானாமா? பத்தாயிரம் கட்டி யோகா போறேங்கறது நாப்பதாயிரம் கட்டி டிரெல்மில் வாங்கி துணிகாயப்போடறது குகைமனுசனாவறேன்னுட்டு வவுத்தை நாக்கை காயப்போட்டு வெம்பறது எல்லாம் ஏன் சொந்தக்காசுல சூனியங்கறேன்?

நமக்கு திருப்திதரும் வாழ்க்கைமுறைக்கு சிறப்புசேர்க்கும் அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேம்படுவோம். பேலியோவின் நன்மை நம் சர்க்கரைவியாதிக்கு நல்லதெனில் கார்போஹைறேட் அளவைக்குறைத்து காய்கறிகளை டபுளாக்குங்கள். அவ்வளவுதான் நான் எடுத்துக்கொள்ளவேண்டியது. அதைவிட்டு தடால்னு வாங்கய்யா எல்லாரும் குகைக்கு போவோம்னுட்டு இலைதலையும் கறியுமா ரெண்டுவாரம் தின்னு முடியாம பம்பிப்பம்பி இட்லிக்கு வரனுமாங்கறேன்? என் உணவு என் உரிமை. அதுல நீயென்ன என் குற்றவுணர்வைக்கெளப்பி கொழப்பறது? உம்முடைய ஆட்டிடூட் பேலியோவெனில் செஞ்சு சந்தோசமா இருங்கய்யா. ஆனால் இந்த தகுதி அடுத்தவங்களை தப்புத்தப்பா வாழறங்கன்னு சொல்லும் தகுதியா மாறிடக்கூடாதுங்கறேன். ருசியே வாழ்வல்ல. "ருசி"யும் வாழ்வு.


புடிச்சதை செஞ்சு சாப்டு மகிழ்வாக இருப்பம்யா. உணவு என்பது கலாச்சாரம் பழக்கம் மற்றும் வாழ்வுமுறை. அதுல வியாபார அரசியலெல்ல நுழைச்சு அடிபடாதிங்க.


உணவாயினும் செய்யும் செயலாயினும் நமக்கு பிடிச்சதை பிடித்தால் மட்டுமே செய்வோம். அடுத்தவரை ஒப்புநோக்கி குற்றவுணர்வடையாமல் நம் எல்லை அறிந்து சுயம் தெளிந்து மகிழ்வாய் வாழ்வோம். சாப்பாடும் சம்பாத்தியமும் நாம் வாழ்வதற்கு இருக்கனும். நம் "வாழ்வு" எதுவென்ற தெளிவு நம்மிடமே இருக்கட்டும். அதை விளம்பர உலகுக்கு போலி வாழ்க்கைக்கு அடுத்தவர் விழைவுக்கு அடகுவைச்சுறாம உயிர்த்தலே நம் முன் இருக்கும் சவால்.


ஆகவே எதுக்கும் மடங்கீறாதீக! நாளைக்கு ஞாயிற்றுகெழம கோழியடிச்சு பிரியாணி போடறோம். ஒரு கட்டு கட்டிட்டு குடும்பத்தோட டிவில மொக்கபடம் பார்க்கறோம் :)smile உணர்ச்சிலை

வண்ணத்திரை - வாசிப்பனுபவம்


ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தன் வாசகர்கள் யார்? அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும்? அவர்கள் எதிர்பார்ப்பு என்ன? என்கிற தெளிவு. இதில் தெளிவாக இல்லையெனில் பத்திரிக்கை அதுவாகவே பொல்லையாகிரும். சிறுபத்திரிக்கையாக இருந்தாலும். இலக்கியப்பத்திரிக்கையில் நடுப்பக்க கவர்ச்சிப்படம் போடுவதோ அல்லது சினிமா எக்ஸ்ப்ரெசில் சமூக அவலங்களை சாடுவதோ நேர்மையான செயலாக கருதலாம்தான். ஆனால் வாங்கிப்படிக்கும் வாசகனுக்கு அது நேர்மையாக விற்கப்பட்ட பொருளல்ல.

இந்த தெளிவு குழப்பதின் உச்சியில்தான் பெரிய பெரிய பத்திரிக்கைகளே இன்றைக்கு திணறிக்கொண்டு இருக்கின்றன. விகடனைப்படித்தால் சினிமா எக்ஸ்பிரஸ் படித்த கடுப்பு. குமுதத்தை புரட்டி முடிக்கையில் விளம்பர கேட்டலாக் படிக்கும் வெறுமை. இவையிரண்டுக்கும் நடுவில் இருக்கும் கேப்புல கல்லா கட்டிறமுடியுமான்னு ரெண்டுசைடு கண்டெட்டுகளை ஒப்பேத்தி இரண்டுங்கெட்டான் நகலாக நிற்கும் குங்குமம். பெரிய பத்திரிக்கைகளே இப்படி தனக்கென இருந்த அடையாளங்களை இழந்து தமக்கும் வாசகர்களுக்கும் இருந்த பிணைப்பை அலட்சியப்படுத்தி எப்படியாவது விற்பனை ஏத்தறதுக்கு சினிமா விட்டா கதியில்லைன்னு உங்க எல்லோருக்கும் தேவை சினிமாதானேன்னு கரைச்சுக்கரைச்சு எனிமா கணக்கா வாராவாரம் ஊத்திக்கிட்டே இருக்காங்க. இலக்கிய பத்திரிக்கைகளே தவறாமல் கோடம்பாக்க சினிமா ஆய்வுக்கட்டுரை வெளியிடும் காலம் இது.

ஒரு எடுத்துக்காட்டுக்கு கல்கண்டு இப்படித்தான் இருக்கும்னு யாரும் முதன்முதலில் முடிவெடுத்து வாங்கி படிச்சிருக்க மாட்டோம். ஆனால் வாராவாரம் படிக்கையில் அதில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் நமக்கு என்ன கிடைக்கும் அது தோதுப்படுமா என்கிற புரிதல் செட்டாகிரும். அதுகொண்டே தொடர்ந்து வாங்குவதா இல்லையாங்கற முடிவு. இப்படி முடிவெடுக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் அந்த பத்திரிக்கை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் குணநலன்களின் எல்லையை உயர்த்துவதிலேயே வெற்றி கிட்டக்கூடும். வேறொரு ஜானரில் நன்கு விற்கும் பத்திரிக்கை செய்யும் வேலையை காப்பியடித்து இங்கு திணிப்பது அல்ல. இன்னைக்கு நாலு பத்திரிக்கையை ஒரு வாரம் வாங்கிப்படித்தால் அந்த நாலுமே இந்த திணறலில் இருப்பதை எந்த எளிய வாசகனும் சிரமின்றி கண்டுபிடித்துவிட முடியும். அதுவே அந்த நாட்பட்ட வாசகனுக்கு திருப்தியின்மையை கொடுக்கிறது.

அன்றைக்கு வாசனுக்கும் எஸ்.ஏ.பிக்கும் தமிழ்வாணனுக்கும் எதற்காக யாருக்காக பத்திரிக்கை நடத்தனும் என்ற தெளிவு இருந்திருக்கும். அதில் கிடைத்த உறுதியில்தான் பத்திரிக்கை அதன் வாசகர்கள் இரண்டுபேருமே பலன் பெற்றார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டுமென்ற தெளிவு இருந்தது. வாசகர்களுக்கு என்ன கேட்கவேண்டும் எங்கு வாசிப்பு ரசனை லெவலை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு இருந்தது. அதனால்தான் இன்னமும் நினைவில் வைத்திருக்கும் தொடர்கதைகளையும் சித்திரங்களையும் ஓவியங்களையும் பேட்டிகளையும் சிறுகதைகளையும் நகைச்சுவை கட்டுரைகளையும் நாம் பெற்றோம்.

இன்றைக்கு அவசர வியாபார உலகில் பத்திரிக்கைக்கு படிக்கும் வாசகர் பற்றிய அக்கறையும் அவர்கள் வேண்டுவன சிறப்பாக கொடுக்கும் பொறுமையும் இல்லை. காசுகொடுத்து வாங்கும் நமக்கும் என்ன எதிர்பார்க்கிறோம் எங்கிற தெளிவில்லை. இதில் வாசகர்கள் என்றைக்குமே வழிநடத்தப்படும் ஆட்கள்தான். ஆகவே நான் பழியை அன்றைய ஜாம்பவான்களின் இன்றைய வாரிசு ஆசிரியர்கள் மீதுதான் போடுவேன். அவர்களுக்கு அவர்கள் முன்னோர் கட்டிவைத்த கோட்டையை எப்படியாவது விற்பனையில் கட்டிக்காத்தால் போதுங்கறதே உயரிய லட்சியமா இருக்கும்போல. முன்னோர் எந்த அளவுக்கு வாசிக்கும் அளவில் பழக்கத்தில் தாக்கத்தையும் உயர்வையும் ஏற்படுத்தினார்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டோ கவலையோ அல்ல. விற்பனை பிரதிநிதிகளும் ஆராய்ச்சி எம்பியே குழுவும் மார்க்கெட் அனாலிசிஸ் முடிவுகளுமே இன்றைக்கு ஒவ்வொரு பக்கத்தின் கண்டெண்ட்டை தீர்மானிக்கின்றன. ஆசிரியரின் நம்பிக்கையும் திறனும் அல்ல. அதனால்தான் எல்லா பத்திரிக்கைகளும் நடிகநடிகைகளின் கலர்ப்படங்களையும் பேத்தல் பேட்டி கட்டுரைகளையும் சினித்துணுக்குகளையும் பக்கம்பக்கமாக நிரப்பி சினிமா எக்ஸ்பிரஸ்களின் நகலாக தொங்கிக்கொண்டுள்ளன. அதற்குள் கழுகாரும் சுவாமியானந்தாவும் வாரம் இருமுறை கரைச்சதையே கழுவியூத்தி பல்லிளித்து உங்களுக்கு இதுபோதுண்டேன்னு கடுப்படிக்கிறார்கள்.இவ்வளவு ஏன், திருமாவேலனே அம்மாவுக்கு "சர்க்கரைசத்து"ன்னு பம்பி இதுவரை சுயமாக கொண்டுவந்த நம்பகத்தன்மையை ஒருவரியில் இழந்து பத்தோடு பதினொன்றாகிறார். நாம் வாசிப்பில் திருப்தியுறாத வெறுப்பாளியாகி அடுத்தவார பிரதிக்கு வழக்கம்போல காத்திருக்கிறோம். பத்திரிக்கைக்கு ஆசிரியர் என்பது ஒரு ஆளுமை. இப்பொழுது பெரும்பாண்மை வியாபார மேலாண்மையாளர்கள் மட்டுமே.

ஏன் இப்படி தலைப்புக்கு சம்பந்தமில்லாம பெனாத்துறேன்னா வண்ணத்திரையை எப்படி அனுகுகிறேன் என புரிந்துகொள்ளத்தான். வண்ணத்திரையில் எனக்கு என்ன வேண்டும் என்பதோ என் எதிர்பார்ப்புகள் என்ன என்பதோ மிக குழப்பத்திற்குரிய விடயமெல்லாம் இல்லை. ஜஸ்ட் அரைமணிநேர சினிசெய்திகள் மீதான இலகுவாசிப்பு மற்றும் கவர்ச்சிப்படங்கள். அதை எவ்வாறு சுவாரசியப்படுத்திக்கொடுக்கிறோம் என்பதில்தான் சினிமா எக்ஸ்பிரசும் வண்ணத்திரையும் சினிக்கூத்தும் விஜய்ரசிகனும் வேறுபடுகின்றன.

** சீசனுக்கான எம்மெஸ்வி நினைவுகூறல் கட்டுரை நன்றாக இருந்தது. விசயங்களில் முழுநிறைவுவில்லையெனினும்.

** பாகுபலியின் விமர்சனம் சரிவிகித கலவை. எந்த பில்டப்புமில்லா பத்தி. நன்று

** நெல்லைபாரதியின் பாட்டுச்சாலை மிக நிறைவான கட்டுரை. புத்தகத்தின் முக்கிய கண்டெண்ட்.

** லட்சுமிமேனனின் மூன்று புகைப்படங்களுடனான பேட்டி. கோடிரூவாய் கொடுத்தாலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என சொல்லியிருந்தார். செய்யும் தொழில் மீதான அவர் சுயகட்டுப்பாடுகள் வாழ்க. புகைப்படங்கள் ஹோம்லியாக இருந்தன. ஆனால் எடுக்கப்பட்ட கோணங்கள் அவர் சிறுபெண் என்பதையும் அவர் ப்ளஸ் பாயிண்ட்டுகளான கண்களின் சிறப்பையும் வெளிப்படுத்த தவறிவிட்டன. பெரியபெண் போல தோன்றுகிறார். புகைப்படக்காரர் கவனிக்கவேண்டும்

** நிறைய ஒருபக்க புகைப்படங்கள் மற்றும் அதுசார்ந்த துணுக்குகள். துணுக்குகளில் அவ்வளவு சாரமில்லையாதலால் பக்கத்தை நிரப்பும் முயற்சியாகவே தெரிகின்றன. புகைப்படங்கள் பெரிதாக இருப்பது அழகுதான். ஆனால் கூடச்சொல்லும் சேதிகளின் சுவாரசியம் மேலும் அழகூட்டும்

** கவர்ச்சி காப்ஷன்கள் கொண்ட ஒருபக்க வண்ணப்படங்கள். ப்ரிண்ட் துல்லியம் அழகு. ஆனால் படங்களில் கில்மா மிகக்குறைவு. ஏப்பைசாப்பையான படங்கள் காணும் சுவாரசியத்தைக்கூட குறைக்கின்றன. 'வெறி'த்து பகபகன்னு அடுப்பு இடுப்பெல்லாம் முழுசா எடுபடலை. நெட்டுக்குத்தல் மறைக்கும் நிலவு பேனைப்போடாதிங்க போன்ற காப்சன்கள் படங்களோடு இணையாக கவர்ச்சியை வெளிப்படுத்த திணறுகின்றன. புகைப்படத்தை மேம்படுத்தத்தான் காப்ஷன்கள். பெரும்பான்மை தலைகீழான வேலையை செய்வதால் கிடைக்கும் கில்மா கிடைக்கவில்லை. வருங்காலத்தில் நல்ல படங்களை தேர்வுசெய்து பார்த்து ஆவன செய்யவும்.

** சரோஜாதேவி பதில்கள் - மிகச்சிறப்பான பிராண்டிங் முயற்சி. ஆனால் ஒரு நுணுக்கம் மிஸ்சாவதாக சம்சயம். குருவியாரின் பதில்கள் பார்க்க மிக இலகுவான சொல்லிச்செல்வதாக இருப்பதாக இருப்பவை. ஆனால் கேள்வி கேட்டவருக்கு அவர் கற்பனைக்கான இடத்தை மறக்காமல் கொடுத்து பட்டும்படாமல் சொல்பவை. "என் உயரம் ஐந்தடிதான் நான் லட்சுமிமேனனை பெண் கேட்கலாமா குருவியாரே? சுரேஷ், கரம்பைப்பட்டி - எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதீர் கரம்பையாரே! " இந்த கேள்விபதிலில் இருக்கும் சுவாரசியமே படிக்கையில் சுரேஷை வெக்கப்படவைக்கும் முயற்சியில் வெற்றிதான். ஆனால் சரோஜாதேவி பச்சையாக போட்டுடைக்கிறார். சட்டென வாசகரின் ஒட்டாமை சரோஜாதேவியின் திறமையை மட்டுமே வெளிச்சத்தில் காட்டி நம்மை விலக்கிவைக்கிறது. அதுவும் ராமராஜன் ஷகிலா கேள்விக்கான பதில் வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டுசென்றது. அதில் வெளிப்பட்டது சரோஜாதேவியின் ஆபாசம் மட்டுமே. அதில் வேறெந்த சுவாரசியமும் கிட்டவில்லை. ஆரம்பகால அதிர்ச்சிமதிப்பீடு கவன ஈர்ப்பு முயற்சி. பலனுக்குப்பதில் தவறான முத்திரையை ஆரம்பத்திலேயே பெற்றுவிட்டதுதான் குறை. நாட்பட செம்மைப்பட்டால் நிச்சயம் அரசு குருவியார் ரேஞ்சில் பிராண்டாகும். கேள்விபதில் விளையாட்டு சமாச்சாரமில்லை. நுணுக்கங்கள் நிறைந்தது. வாத்தியாரே சோபிக்காத ஏரியா!

** வாசகர் கடிதம் ஒரு பிணைப்பு ஏரியா. சின்ன தவறுகளும் பெரிதான விலகல் கொடுக்கும். ரீடர்ஸ் க்ளாப்ஸ்சில் படப்பெயர் "நேற்று இன்று நாளை" என தவறாக வெளியாகியுள்ளது. திருப்பூர் சங்கரே தவறாக எழுதியிருந்தாலும் ஆசிரியர் சுட்டிக்காட்டியிருந்தால் சங்கர் வண்ணத்திரையோடு வாழ்நாளெல்லாம் பச்சக்கென ஒட்டியிருப்பாப்ல 
smile உணர்ச்சிலை


மற்றபடி, யுவகிருஷ்ணாவின் டச் ஆங்காங்கே தெரிகின்றன. ஆனால் லக்கிக்கு என ஒரு தொனி உண்டு. மிக எளிமையான சினேக நக்கல். வண்ணத்திரை ஜானர் பத்திரிக்கைகளுக்கு மிகத்தோதான குணம். அது முதன்மை ஆசிரியர் யுவகிருஷ்ணாவுக்கும் வாய்க்குமானால் வாசக நமக்கு லக்கு. ஆரம்ப நிர்வாக அழுத்தங்கள் சமனப்பட்டு சீக்கிரம் லக்கியின் முத்திரையை அழுத்தமாக வண்ணத்திரை பெறட்டும் :))

அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு.


கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு.


என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அமைதியாக பங்கேற்றது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஊர்நிறைய தன்னிச்சையாய் வைத்த தட்டிகள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள். கட்சிக்காரர்கள் வைத்ததுபோக பள்ளிகள் கல்லூரிகள் ரோட்டரிகள் மற்றும் சின்னச்சின்ன பழக்கடை முடிதிருத்தகம் உட்பட. அவர்கள் எல்லாம் இந்த விளம்பர உத்தியில் எத்தனை ஆட்களைபிடித்து வியாபாரம் பெருக்குவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.


எளிய கிராமத்து மாணவர்கள்தான். நேற்றுவரையும் நாளையிலிருந்தும் மீண்டும் தல தளபதி ரசிகர்மன்ற குஞ்சுகளாக ஆகிவிடுபவர்கள்தான். இருபக்கமும் தன்னிச்சையாக ஒருமித்து நின்றவர்களும் அதே இலவசத்தில் அடித்துவீழ்த்திய சோற்றாலடித்த பிண்டங்கள்தான். நாளைமுதல் ஏன் இன்றைக்கே டாஸ்மாக்கில் கவிழப்போகிறவர்கள்தான்.இவர்கள் அத்துணைபேரையும் தான் இத்தனைநாள் இந்த அப்துல்கலாம் வான்வெளி விஞ்ஞானி என ஏமாற்றியிருக்கிறார். பலவருடமாக அணுசக்தி நிபுணராக நடித்திருக்கிறார். இந்தியாவை வல்லரசாக்கும் சிந்தனையாளர் என புளுகியிருக்கிறார். எந்தவித உயரிய சிந்தனைக்கூறுகளும் இல்லாமல் ச்சும்மா கனவுகாணுங்கள் என்று எளிய அருள்வாக்கு சொல்லும் காலிப்பெருங்காய டப்பாவாக வாழ்ந்திருக்கிறார். தமிழருக்கு எந்தவித நலனும் செய்யாத கள்ள ஊமையாக வாழ்நாளெல்லாம் மக்களை ஏமாற்றியிருக்கிறார். நாடுமுழுவதும் உள்ள உயர்தர காண்வெண்ட் பள்ளிகளுக்கும் மேன்மக்கள் கல்லூரிகளுக்கும் மட்டும் தேடித்தேடி அவராகவே சென்று எதையாச்சும் அர்த்தமில்லாமல் பேசி ரிடையரானபின்பும் பணவெறியில் சம்பாதித்து இருக்கிறார். குண்டுவைக்கும் இஸ்லாமியர்களை அவர்கள் தீவிரவாதிகள் மட்டுமே என அழுத்திச்சொல்லும் ஒரு சில இஸ்லாமியர்கள் திடீரென இறந்த இந்தியர் கலாம் ஒரு இஸ்லாமியர் என கண்டுபிடிக்கும்படி தந்திரமாக நடந்துகொண்டிருக்கிறார். மொத்தத்தில் வாழ்நாளெல்லாம் எவ்வளவு கடின மனதுடன் அளவிளா திறமையுடன் அவர் நடித்திருந்தால் இத்தனை எளிய மக்களை அவர் வாழ்நாள் முழுதும் ஏமாற்றியிருக்கவேண்டும். நல்லவேளை! இன்றைக்கு இந்த நடிப்பையெல்லாம் அவர் இறந்த வேளையில் மிகச்சரியாக கண்டறிந்துசொன்ன நம் அறிவுசார் ஜேம்ஸ்பாண்டுகள் மட்டும் இல்லையெனில் நாமெல்லாம் கலாமின் அற்புத நடிப்பில் இன்னமும் ஏமாந்து வாழ்விழந்து ஊக்கம் சிதைந்து மொத்தமாய் சீரழிந்துபோயிருப்போம்!


அமைதியான பேரணிமுடிவில் இப்பவெல்லாம் எந்த தலைவருக்கும் இதுமாதிரி மக்களே இறங்கி செய்யமாட்டாங்க என்றேன். ஒரு பெருசு பதினைஞ்சுவருடம் முன்ன இதேபோல் நடந்திருக்கிறது என்றார். மருத்துவம் பார்க்க ரெண்டுரூபாயும் மூனுநாள்வைச்சு பிரசவம் பார்க்க பதிநாலு ரூவாயும் கட்டணமாக பெற்ற லட்சுமிநாராயணன் என்றொரு தேர்ந்த நடிகர் மருத்துவராக செம்மையாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அவர் மறைவுக்கு பாவம் இந்த மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார ஏமாளிமக்கள் முழுவதும் அவர்களாகவே ஒரு நாள் கடையடைத்து மவுன ஊர்வலம் சென்று அவருக்கு சிலையும் வைத்துவிட்டார்கள் என்றார்.
இன்றைக்கு இறப்பை இத்தனை ஆராய்ச்சி செய்யும் அறிவுசார் சுடர்களே, கடனேன்னு இரங்கல்செய்தி கொடுக்கும் மக்கள் தலைவர்களே, நீங்களும் உங்கள் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் உண்மைகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் இதே எளிய பொதுப்புத்தி மக்களிடம் தானே சேர்ப்பிக்க ஏற்றுக்கொள்ளவைக்க உணரச்செய்ய போராடுகிறீர்கள்? இந்த ஏமாளிமக்கள் இந்த சின்ன உணர்வுப்பிரட்டலில்தானே ஒருபக்கமாய் மாக்கள்போல சாய்கிறார்கள். இந்த சாய்வுதானே தேர்தலில் ஓட்டுகளாக மாறுகிறது? வாக்களிப்புமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்பிரதிநிதிகள் மட்டுமே அரசியல் அதிகாரம் பெறும் வழிமுறை கொண்ட நம் நாட்டில் மக்களை உங்களுக்கும் இப்படி உணர்வுபூர்வமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் உங்களுக்கு உங்கள் இலக்கை அடைவது எவ்வளவு எளிது? நீங்களெல்லாம் ஏன் கலாமின் ஏமாற்று நடிப்பை காப்பியடித்து அவர் இப்பொழுது பெற்றிருக்கும் பலனை பெறக்கூடாது? இதுவரை உங்களுக்கு கிடைக்கப்பெறாத எளிய ஏமாளிமக்களின் ஆதரவை மொத்தமாய் அள்ளிக்கொள்ள கலாம் இதுவரை செய்த ஏமாத்து சித்துவிளையாட்டு நடிப்பை கொஞ்சநாளைக்கு செய்துபார்க்கக்கூடாது? வாழ்நாளெல்லாம் அந்த ராமேஸ்வரத்து கிராமத்தானால் விஞ்ஞானியாக ஜனாதிபதியாக கல்வியாளராக மாணவர்களை விரும்பும் நேயராக வெற்றிகரமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் பலதளங்களில் அறிவுகொண்ட பல அரசியல்களம் கண்ட உங்களால் ஏன் இதேபோல் நடித்து நீங்கள் விரும்புவனவற்றை அடைய முடியாது? நாம்தான் இறப்பிலும் கூட ஆதாயம் தேடும் மேன்மக்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அந்த ஆளின் நடிப்பு இவ்வளவு பெரிய ஆதாயத்தை தருமெனில் ஏன் பாய்ந்து அந்த வித்தையை நீங்கள் கைப்பற்றக்கூடாது?


தமிழகம் மட்டுமல்ல... அறிவுசார் மேன்மக்களின் பார்வையில் தெரியும் பொதுப்புத்தி மக்களெல்லாம் வெள்ளிப்பாத்திரம் போன்றவர்கள். தினப்படி சூழலும் கிடைக்கும் வழிகாட்டிகளும் தலைவர்களும் ஊடகங்களும் அவர்கள்மீது கருமையை படரவிடுகின்றன. கார்கில் பூகம்பம் நிலநடுக்கம் மற்றும் கலாம் போன்றவர்கள் மறைவு விபூதிபோட்டு தேய்ச்சாப்படி வெள்ளிப்பாத்திரங்களை பளிச்சுன்னு ஆக்கிருது. அதுவும் கொஞ்சகாலத்துக்குதானே நிற்கும்? அப்பறம் அதே மாசுபட்ட வியாபார ஊடக அரசியல் சூழலில்தானே வாழ்கிறோம். 


நல்லதோ கெட்டதோ நம்மை கிளப்பிவிட அடுத்த விபூதிப்பூச்சுக்கு காத்திருக்கவேண்டியதுதான்.


அந்த விபூதிப்பூச்சு வித்தையையாவது இந்த வாய்ப்பில் கற்றுக்கொண்டு அடிக்கடி செயல்படுத்தி பொதுமக்களை வளைத்தெடுத்து உடனடி பலன்பெறுங்கள், இன்றைக்கு கலாம் பலதுறைகளில் ஒரு தேர்ந்த நடிகர் என கண்டறிந்து எங்களுக்கு அறிவித்த அறிவுசார் கண்திறப்பாளர்களே!

சவுண்டு சிஸ்டம்அது ஒரு காலம். வீட்டில் ரேடியோ இருந்தாலே வசதிக்காரவுக என இருந்தகாலம். ரெண்டாப்பு மூனாப்பு படிக்கையில எங்க லைன்வீட்டு ஓனரு ஒரு பெரிய மஞ்சாக்கலர் பொட்டிய பங்களா வீட்டு திண்ணைல வைச்சு கேட்டுக்கிட்டு இருப்பாரு. அப்பவே கேட்டுப்போட்ட வீடு. அவரு லாரிபில்டிங் பட்டறையும் வைச்சிருந்ததால அவருபேரு ரேடியோக்காரரா லாரிக்காரரான்னு காலனிமக்கா மாத்திமாத்தி குழப்பி சொல்லிக்குவாங்க. அது ரேடியோவா இல்ல ரிக்கார்டுதட்டு பெட்டியான்னுகூட சரியா தெரியல. வீட்டுகேட்டுக்கு வெளில நின்னு தூரத்துல இருந்து பார்த்தது மஞ்சாபொட்டியாத்தான் தெரிஞ்சது. ஏதாச்சும் பாடிக்கிட்டே இருக்கும். ஆனா அவருக்கு ரெண்டு சம்சாரம்னு மட்டும் இன்னும் நினைவிருக்கு.அதுக்கப்பறம் வேற ஊருக்கு போயிட்டாலும் பொழுதுபோக்கு எல்லாம் எங்க வீட்டுல எப்பவும் புத்தகங்க மட்டும்தான். வாசிக்கறதுக்குன்னு கோகுலம், பூந்தளிர், தமிழ் மொழிபெயர்ப்பு ரஸ்ய பத்தகங்கள்னு ஏதாச்சும் வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கும். அதுவரைக்கும் கோயில் கல்யாண கூம்பு ஸ்பீக்கரு பாட்டுக மற்றும் திருவிளையாடல் விதி கதைவசனம் சும்மா காது கிழிய கேட்ட நியாபகம் உண்டு. படம்பார்க்க அம்புட்டு கொள்ள ஆசை அன்னைக்கு இருந்தாலும் அதுக்குமேல பாட்டுக்கேக்க பெரிய பிரியமெல்லாம் இல்லை. அதாவது தெரியல. அதுவா காதுல ஏதாச்சும் அப்பப்ப விழுந்தாச்செரி.


மொதமொத தெருசனம் முழுக்க ஒரு ரேடியோவீட்டு முன்னாடி குவிஞ்சதினம் இந்திராகாந்தியை கொலைசெய்த தினம். திருப்பூர்ல கடையெல்லாம் அடைச்சுட்டாங்க. பள்ளிக்கூடத்துல இருந்து வழக்கம்போல நடந்து வீட்டுக்கு வந்தா எங்க தெருவுல ஒரு ஆளையும் காணோம். எங்கவீதி முக்கு வீட்டுல வீட்டுக்கு முன்னயே குடோனுபோட்டு தறியோட்டறவுக. அன்னைக்கு அவங்க ரேடியோவை எடுத்து வீட்டுமுன்னாடி புல்சவுண்டுல வைச்சுவிட்டாங்க. செய்தியும் சோக ஷெனாயும் ( அப்பயுங்கூடி அது பீப்பின்னே நினெச்சேன் ) மாத்திமாத்தி கும்பலோட கும்பலா கேட்ட நியாபகம்.


ஊர் பஞ்சாயத்தையெல்லாம் ஏறக்கட்டிட்டு வீட்டுக்கு வந்த எங்கப்பாரு கும்பல்ல நின்னு நியுசு கேக்கமுடியாத கடுப்புல காண்டாகி நாங்கெல்லாம் இந்திராம்மா போன சோகத்துல மூக்கையுறிஞ்சுக்கிட்டு வர்றயில ச்சே ஒரு ரேடியோ வேணும்டே வீட்டுக்குன்னார். அதுக்கப்பறமும் ரெண்டு வருசமாச்சு எங்க வீட்டுக்குன்னு ஒரு சேனியோ செட்டு வர. செட்டு என்ன பெரிய செட்டு? சேனியோ டப்பாதான். ஒரேயொரு சின்ன மோனோ ஸ்பீக்கரு. பக்கத்துல ஒரு காசெட்டு போட ஒரு இடம். சைடுல ரேடியோ மீட்டரு. அவரு வாங்கியாந்து வைச்ச புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே மொதக்கொண்டு எல்லா சாமிப்பாட்டும் அப்பப்ப தேயும் அதுல. சினிமாப்பாட்டு கேசட்டு அவரு வாங்கறது அபூர்வம். எல்லாம் ரேடியோல வந்தா உண்டு. அதும் காதல் பாட்டுகன்னா பம்பிப்பம்பி கேக்கனும். ஏன்... காதல் என்கிற வார்தையே சொல்லமாட்டோம். அம்புட்டு கட்டுபெட்டி ஆச்சாரம்! ஒரேயொரு வேடிக்கை கேசட்டு பாட்டுன்னா எம்புருசந்தான் எனக்குமட்டும்தாங்கற பாட்டு. அதைக்கேக்கயில நாங்க பயக எல்லாரும் பம்பிப்பம்பி சிரிப்போம். அம்மா கடுகடுன்னு அதை அணைச்சுத்தொலங்கடா எருமைகளாம்பாய்ங்க :))அதுக்கப்பறம் கோவைக்கு மாத்தலாகி வந்தபொறவுதாம் பயககூட சேர்ந்து பாட்டுக்கேக்க கத்துக்கிட்டதும் காசு சேர்த்து கேசட்டு வாங்குறதும். அப்பயுங்கூடி அதே சேனியோ சிங்கிள்ஸ்பீக்கரு டப்பாதான். ப்ரெண்டு மக்கா ஊட்டுல சோனி ஸ்டீரியோ பெரிய செட்டு இருந்தது. இளையராஜா அஞ்சலியெல்லாம் ஆயிரம்தடவை அவங்கூட்டுல தேய்ச்ச நியாபகம். அதுபோக அவரு முன்னாடி போட்ட பழைய ராசாபாலனை எல்லாம் "தபலாதட்டி ஆரம்பிச்சுட்டாருயா..." நக்கல் தான். ஏன்னா மைக்கேலு பேடும் மடோனா லைக்க பிரேயரும் கேட்டுப்பழகுன கெத்து இருக்காதா என்ன? அந்த பழங்கதையத்தான் பீட்டர் சாங்ஸ்சுன்னு ஒரு பதிவுல கொசுவத்தி சுத்தியிருந்தனே?ப்ரெண்டு வீட்டுல ஸ்டீரியோ பத்தாம ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பீக்கரு வயரு இழுத்து அதை காலி கொடத்துமேல கவுத்து அது பாஸ் ஸ்பீக்கரும்பானா... அதெல்லாம் யாரு கண்டா? ஆனா அந்த எக்ஸ்ட்ரா டும்டும்மு நல்லாத்தான் இருந்தது. இன்னொருத்தன் வீட்டுல பிலிப்ஸ் பவர்ஹவுஸ் பார்க்கறவரை!


அதிருந்தது அவிங்க வீட்டு டேபிள்மேல சும்மா பாலீஸ்போட்ட கருங்குதிரை கணக்கா! எங்கபாரு ஸ்விச்சுக. ரெண்டு காசெட்டு. ஈக்குவலைசரு. சைடுல சும்மா புல்லட்டுக்கு சைடுபொட்டி கணக்கா கும்முன்னு ரெண்டு பெரிய ஸ்பீக்கரு பெட்டிக. அதுக்குள்ள மூனு ஸ்பீக்கரு. வாயெல்லாம் பல்லாக அதை தொடக்கூட பயந்து அவம் போட்டுக்காட்டுன மேன்மெசின் டெக்னோ "அயாம் ஆன் ஆபரேட்டர் ஃபார் யுவர் கால்குலேட்ட"ரும் அப்பறம் நேயர் விருப்பம்னு எனிக்மாவின் "வாய்ஸ் ஆஃப் எனிக்மா"வும் கேட்டுட்டு அவங்கூட்டுல கொடுத்த டீய குடிச்சுட்டு அந்த டும்டும்ம பேசிப்பேசி மாய்ஞ்சபடிக்கு வந்தது இன்னமும் நினைவிருக்கு. என்வீட்டுல நுழையறப்ப மொதமொதலா ஒன்னு வாழ்க்கைல நாமளும் வாங்கனும்டேனுட்டு மனசுக்குள்ள கறுவி புதைச்சுவைச்ச ஆசைதான் ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம். அதுவரை எனக்கு அவையா எதுவும் கிடைச்சதுமட்டுமே வாழ்வு 

:)


அதன்பிறகு பலவருசம் கழிச்சு நானா சம்பாதிச்சு ஒரு நாலு சீடி கென்வுட் வாங்கி வைக்கயில ஏதும் பெரிசா சாதிச்சதா நினைச்ச நினைவில்லை. ஏன்னா அதுக்குள்ள நிறைய அடிவாங்கி அந்த மொட்டை தபலாத்தட்டி பாட்டுக எல்லாம் மனசுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பிச்ச காலம். பாடும் கருவிய விட பாட்டுக நெஞ்சுநிறைச்ச பருவம்.செரி அதெல்லாம் விடுங்க. பழங்கதை. கென்வுட்டுக்கு அப்பறம் சோனி ஹோம்தியேட்டரெல்லாம் பார்த்து இங்கவந்து மேலும் துல்லியமா ஒரு செட்டு புடிச்சு வீட்டுல மாட்டலாம்னு தேடித்தேடி வாங்குன கதைய சொல்லறேன்.இங்க வந்த புதுசுல ப்ளாட்டுல இருந்தோம். வயசாளிக நெறஞ்ச இடம். ச்சும்மா மாடிப்படி தடதடன்னாலே கம்ப்ளைண்ட் கொடுக்கறவங்க. அந்த எடத்துல வேலைப்பளுல இருந்து தப்பிக்க எங்க குடும்ப குலவழக்கமான சினிமா பார்த்து ஆத்திக்கலாம்னு தேடித்தேடி ஸ்பீக்கர்களை வாங்கிவந்து சர்ப்ரைஸா இறக்குனா எங்கூட்டம்மா "அட கூறுகெட்ட கூவை..."ன்னு தலைதலை அடிச்சுக்கிட்டிங். இதேபோலத்தான் அவங்கப்பாரு அங்க ஒரு காலனிக்கு தண்ணி போர் போட்டுக்கொடுத்த செலவுக்கு பள்ளிகரணைல ஒரு கிரவுண்டு வைச்சுக்கன்னு ( இன்னைக்குப்போகுது அம்பது லட்சம்... ) கொடுக்க அவரு அதெல்லாம் வேணாம்னு காசா வாங்கி இருவது ரூவாய்க்கு சோனி வாங்கிட்டுவந்து வாங்கிக்கட்டுன மனுசன்னு எல்லா ஆம்பளையாளுகளும் ஒரே மாதிரியான்னு செம டோஸ்விட்டிங். எல்லா ஸ்பீக்கரு பொட்டிங்களும் அஞ்சடிக்கு ஹாலை நிரப்பிக்கிட்டு நிக்க செம காண்டு. ஒரு வாரம் எடுத்து வீட்டுக்குள்ளயே பம்பிப்பம்பி ஒவ்வொன்னா மாட்டுனா சத்தமே வைக்கமுடியல. ச்சும்மா இருபது வைச்சாலே செவுரெல்லாம் அதிரும். பெர்சுங்க கம்ப்ளைண்ட் கொடுத்துருவாங்கனு பயந்துபயந்து ஊஃபரெல்லாம் அணைச்சு படம்பார்த்த கோராமை. அதுக்கே அப்பறம் ரிமோட்ல ஒரு தனிவீடு பார்த்து எத்தனை சத்தம் வைச்சாலும் அந்த காட்டுக்குள்ள பக்கத்துல ஒரு பயலுக்கும் கேக்காதுங்கறப்ப தான் ஒரு நிம்மதி. குடும்ப சகிதமா வாரம் ரெண்டுபடம் எப்படியாச்சும் ஃபுல் சவுண்டுல பார்த்துருவோம். அது ஒலகப்படமானாலும் செரி பீம்சிங் கருப்புவெள்ளியானாலும் செரி 10 எண்றதுக்குள்ள மெகாமொக்கைகளானாலும் செரி... பார்த்து தீர்க்கறதுதான். இன்னைக்கு போனி டெண்ட்டுகொட்டாயில் வீரபாண்டிய கட்டபொம்மு.:)


வீட்டுக்கு சவுண்டுசிஸ்டம் செய்யறதுல இதுவரைக்கும் நான் தேடி தெரிஞ்சுக்கிட்டதுல சிலது சொல்லறேன்.

* எல்லா எலக்ட்ரானிக் காட்ஜெட்ஸும் ஒரிஜினல் மதிப்பும் பிராண்டிங் ஹைப்பு என இன்னொரு மடங்கு விலையும் கொண்டவை. நமக்குத்தேவை 92% குவாலிடிதான் தான் எனில் அதைத்தேடி தோதானதை வாங்குவது நலம். அதற்கும் மேலே கொடுக்கும் விலையெல்லாம் நமக்கு தேவையில்லாத உபயோகமே செய்யாத வசதிகளுக்கும் ப்ராண்டுக்கும் கொடுக்கும் கைக்காசு. அதற்கென ஒரு 96% குவாலிடி கண்டிப்பாக இருக்கும் தான். ஆனால் நமக்கு அந்த எக்ஸ்ட்ரா 4% குவாலிட்டியை ஆராதிக்கும் மனநிலையோ தேவையோ இல்லையெனில் 92%ல் செட்டிலாவது உத்தமம். இல்லையெனில் வருசத்துக்கு ஒருக்கா வாங்கிய பொருளை சமூக அந்தஸ்த்துக்காவது மாற்றிக்கொண்டே இருக்கனும். "ஆல்வேஸ் டு த பெஸ்ட் அண்ட் லேட்டஸ்ட்"னு இருக்கறது ஒரு ஆட்டிடூட். அதை ரசிக்கும் பாவிக்கும் ஆட்டிடூட் நமக்கில்லை எனில் எவர் என்ன சொன்னாலும் நம்ப ரசனைக்கு மேலாக வாங்கி கைய சுட்டுக்கப்படாது.* ஒரு நல்ல ரிசீவர் பாதி ஹோம்தியேட்டர். ஒரு ரெகுலர் சைஸ் ஹாலுக்கோ சின்ன மீடியா ரூமுக்கோ 5.1 எதேஸ்டம். இல்லை நான் பக்காவா ஒரு மீடியா ரூம் போடறேனாக்கூட 7.2 மேக்சிமம். அதுக்கும் மேல 9.2 இல்ல ஆரோ 3டி போடறதெல்லாம் அந்த துறைசார் மக்கள் அல்லது நெம்ப பணக்காரவுக வேலை. அது எனக்கு தெரியாது. இப்பத்திக்கு எனது சின்ன ஆபீஸ் கம் மீடியா ரூம்கறதால 5.1ல் பரம திருப்தி :)

* சவுண்ட் என்பது காற்றின் நகர்வு அசைவில் கடத்தப்படுவது. அதை எவ்வளவுக்கு எவ்வளவு மெக்கானிகல் அசைவில் கொண்டுவருகிறோமோ அவ்வளவு சுகம். எலெக்ட்ரானிக் சிமுலேட்டெட் எல்லாம் கேக்க நல்லா இருக்கும். ஆனால் எனக்கென்னவோ ஃபுல்பீல் கிடைத்ததில்லை. ஆகவே எனக்கு பெரிய பெரிய ட்ரைவர்கள் கொண்ட டவர் ஸ்பீக்கர்கள்தான் பிடித்தமானவை. சின்னச்சின்ன பவர்புல் போர்ட்டபிள் போஸ் டைப் ஸ்பீக்கர்கள் எல்லாம் ஒரு நல்ல ரிசீவருக்கு துரோகம் செய்பவை! ஆகவே என் சாய்ஸ்னா அது முன்னாடிக்கு பெரிய டவர் ஸ்பீக்கர்ஸ், செண்டர் ஸ்பீக்கர், பின்னாடி இரண்டு மீடியம் பிக்செஃல்ப் ஸ்பீக்கர்ஸ் அப்பறம் 10 அல்லது 12 இன்ச் ஊஃபர். கேக்கற சவுண்டு ச்சும்மா கனமா இருக்கனும். காத்துல தகரத்தை இழுக்கறது துல்லியம்தான். அதன்கூட நல்ல பாஸ் சேரும்பொழுதுதான் நெசமாவே கனகதாரால இருக்கற பீல் கிட்டும் smile உணர்ச்சிலை 
மத்த சின்ன ஸ்பீக்கர்கள் எல்லாம் ஏனோ வீட்டுக்குன்னே செஞ்சமாதிரி ஒரு குறை லுக்கு. 

* சவுண்ட் ஹோம்தியேட்டர், மத்த ஃபீச்சர்லாம் ஆன்றாய்ட் வைபைல ஆன்லைன்லன்னு ஆகிட்டதால டீவிக்குனு தனியா ஃபீச்சர்லாம் தேடி காசைப்போடாதிங்க. எல்லா ஃபீச்சரும் இப்ப எக்ஸ்டர்னல் தான். இல்லைன்னா டீவிக்குன்னு கொடுக்கற காசு உபயோகப்படுத்தாமலேயே கிடக்கும். ஆகவே பார்க்கத்தோதான பெரியசைஸ் ஸ்கிரீன் ஹோம் தியேட்டருடன் சுகம். சில மக்கள்ஸ் வீட்டுல ப்ரொஜெக்டர் வாங்கி மாட்டியிருக்காங்க. ஆனால் நியூஸ் முதல் பாட்டுவரை எல்லாத்தையும் அதுல பார்க்கறது சிரமங்கறதால பெரிய டீவி திரை இப்பத்திக்கு நல்லது. 

* அவ்வளவுதான். எனக்குத்தெரிஞ்ச பெஸ்ட் அஃபோர்டபில் சவுண்ட் சிஸ்டத்தை http://newegg.comல் ஒரு விஷ்லிஸ்ட்டா போட்டிருக்கேன். எப்படி முயற்சித்தும் நான் சொன்ன 1Kக்கு பதிலா $1150 வந்துருச்சு 
திருட்டுப்பயக ப்ளாக் ப்ரைடேக்கு விலை ஏத்தி விக்கறானுங்க. இதே பொருளை வேற இடத்திலும் ஆன்லைனில் தேடிப்பாருங்க இன்னமும் குறைந்தவிலையில் முடியுதான்னு. ப்ளாக் கலரை விட ச்செர்ரி சிறப்பு, ஆனால் உங்கள் விருப்பம் 

http://secure.newegg.com/WishList/PublicWishDetail.aspx?WishListNumber=21985289 

* பனானா ப்ளக், நல்ல க்வாலிடி ஆக்டிவ் ஸ்பீக்கர் வயரெல்லாம் அத்தியாவசியம். ஆகவே அதிலெல்லாம் நல்ல குவாலிடியே தேடுங்க. கார்பெட் ப்ளோரெனில் எல்லா வயரையும் ஈசியாக நாமே கார்பெட் அடியில் தள்ளி வேலைய முடிச்சிடலாம். 


எல்லாம் வாங்கி மாட்டிட்டீங்களா? எல்லா மேனுவலையும் படிச்சுப்படிச்சு செட் செஞ்சுட்டீங்களா? அவ்வளவுதான். அதுக்கடுத்த ஒரு வாரத்துக்கு டெஸ்டிங்கோ டெஸ்டிங். கை சும்மா இல்லாம எல்லா செட்டிங்கையும் நோண்டிக்கொண்டே இருக்கும். எல்லாம் பழகி ஒரு நிலைக்கு வந்ததும் ரஹ்மான், ஹாரிஸ், சந்தோஷ்சிவன் அப்பறம் அநிருத் என பலப்பல அடிபொலி இசையமைப்பாளர்களை கேட்டு மெட்டு பீட்டுன்னு ரசியுங்கள். இது ஆரவாரம் கொண்டாட்டம் மற்றும் அனுபவித்தல்.


எல்லாம் ஓக்கேன்னு ஆனதுக்கு அப்பறம் யாருமில்லா தனிமைல இருக்கையில ரொம்பப்புடிச்ச மொட்டைபாட்டுக நாலைஞ்சு எடுத்துக்கங்க. கண்ணைமூடி லயுங்க லவ்வுங்க. அதுக்கும் மேல ஒன்றுண்டு. "பறவையே எங்கு இருக்கிறாய்?" போட்டுவிட்டு கண்ணைமூடி உங்க பழைய காதலியை தேடிக்கிளம்பி அலைகையில் பாட்டு நடுவில் மொட்டராசா "முதன்முறை வாழ்ப்பிடிக்குதே..."ன்னு நம்ப ஆன்மாவைத் தொடுகையில் அப்படியே உணர்ந்து கரைந்து கண்களில் நீர் மல்க காற்றோடு போனால் நம்ப ஸ்பீக்கர்செட்டு ப்ராஜெக்ட்டு சக்சஸு.இது வாழ்வை உணர்தல் :))