திங்கள், ஜனவரி 31, 2005

ஓர் இரவுச்சுயம்வரம்
கூட்டிவந்த விலைமகளை
நண்பன் கூடிக்களித்திருக்க
எம் முறை வருமென்று
நாங்கள்

உள்ளிருக்கும் உக்கிரம் தாங்காது,
அக்குளிள் உணரும் வியர்வையின்
கசகசப்பாய் எங்கள்
மனசு

"உன்னோடு ஐவரானோம்!"
நண்பனின் கூற்றின்
இலக்கியத்தரம் உணராது
"அப்போமேல ஐநூறு ஆகும்!"
என்றதில் வெளிப்படுகிறது
அவள் வாழ்வின்
விலை

"இன்னைக்குநா போடுரபோடுல
இனி ஃப்ரீயாவே வருவாபாரு...!"
குடையும் புண் எருதுக்கும் இன்பம்
என்கிறது ஒரு
காக்கை

"பாவம்டா இவ... இவபுருசனே
கஜாக்கா கிட்ட வித்துட்டானாம்..."
உள்ளிருக்கும் காமத்தை
கழிவிரக்கத் தோலால்
போர்த்தியபடி இன்னொருவனின்
இரங்கற்ப்பா

வீட்டைக் கரையேற்ற
இளமையை விலைகொடுத்த
ஆறாறு வயது முதிர்கண்ணனுக்கு
ஓயமறுக்கும் தவிப்பை ஆள
தேடிவந்த விடமுறிவாய்
இவள்

அவர்களாவது தேவலாம்!
காரியத்தில் கண்ணாய்
நானோ அவர்களையிங்கே
கடையனாய் காட்டிக்
கொடுத்தபடி

உணர்ச்சிகளின் வெறியென்
உள்ளுணர்வை மிதித்துநசுக்க
கையறு நிலையில்
கவிதை செய்தபடி
மனது

விரைத்தவைகள் துவண்டபின்னாவது
அவள் கைப்பையிலிருக்கும்
ரெஜஸ்ட்ரோன் மாத்திரையும்
ஆறாம்வகுப்பு சமூகஅறிவியலும்
எதற்கென அறிய
முயலுமா எங்கள்
பகுத்தறிவு?

புதன், ஜனவரி 26, 2005

காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்..


உங்களுக்கு உங்கள் வாழ்க்கைநிரலை எவ்வளவு தூரம் பின்னோக்கி பார்க்க முடியும் என்றால் எங்கே இருந்து தொடங்குவீர்கள்? அம்மாவின் தாலாட்டு? முதல் பிறந்தநாள்? முடியிரக்கும் போது வெகு அருகில் பார்த்த தாய்மாமனின் முகம்? என் மூளையின் ஞாபககுவியலை எவ்வளவுதான் தோண்டினாலும், எனக்கு ஏனோ நான் முதன்முதலில் பள்ளிக்கு சென்ற (அலங்)கோலம் தான் நினைவுக்கு வருகிறது. இதற்கு காரணம், ஒருவேளை அதற்குமுன் ஒரு ஞானகுழந்தையின் முகத்தை புகைப்படம் எடுக்கும் அரிய வாய்ப்பை என்னை தவமிருந்து பெற்றவர்கள் தவறவிட்டதால் இருக்கலாம். அல்லது அன்றையநாள் கவருமெண்ட்டு பள்ளியில் சேர்ந்த நான் அந்த ஒன்னாப்பு வாத்தியாரின் சாம, தான, பேத மற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்த வெற்றித்திருநாள் என்பதாகவும் இருக்கலாம். புத்தம்புது காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும் மொடமொடக்க, மரச்சட்ட சிலேட்டும் பலப்பமும் மஞ்சள் பையில் பத்திரமாய் தோளில் தொங்க, நெற்றியில் திருநீரும் கையில் பிஸ்கேட்டுமாய்(இல்லை ஜவ்வு மிட்டாயா..?) என் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டு என் மூளையை துளக்கி புடம் போட அந்த அறிவுக்கடலின் கரையை தொட்டதாக நினைவு...!

வகுப்பறை வரை தீனியின் மீதே இருந்த முழுக்கவனமும் ஒரு நொடியில் காணாமல் போனது உள்ளே நான் கண்ட காட்சியை பார்த்து...! வேட்டியும் சட்டையும் கையில் ஒரு அடிக்கோலுமாய்(அதாங்க ஸ்கேலு...!) நின்றுகொண்டிருந்தார் ஒருத்தர்.. அவருக்கு முன் வரட்டிக்கு உருட்டி வைத்த சாணி உருண்டைகளை போல ஒரு இருபது உருப்படிகள்...! அவ்வளவு தான்... இத்தனை தலைகளை ஒன்றாய் பார்த்த அதிர்ச்சியோ அல்லது இதுதான் என் அடுத்த 12 ஆண்டுகால அடிமைசாசனத்தின் முதல் பத்தி என்ற என் அறிவின் முதிர்ச்சியோ, என் தற்காப்புக்கலையின் முழுதிறனையும் அங்கே அரங்கேற்ற செய்தது. தாத்தாவின் கைகளை திமிரிக்கொண்டு ஓட, தாத்தா என்னை துரத்திப்பிடித்து அமுக்க, நான் கதறியபடி மூக்கை இழந்த மண்டோதரி போல தரையில் விளுந்து புரள, அந்த வாத்தியார் என்னை அலேக்காக தூக்கி அந்த கும்பலில் போட, நான் கண்களில் நயாகரா அருவியும் மூக்கில் கார்பரேசன் பைப்புமாய்(அதுல தாங்க தண்ணீர் விட்டு விட்டு வரும்..) நாக்கு வரள தொண்டை கிழிய ஒரு தாடியில்லா தேவதாசாக சங்கீதமும்மூர்த்திகள் கண்டறியாத ஒரு சாகித்யத்தை தொடர்ச்சியாக அரங்கேற்ற, அதை கண்டு மிரள மிரள உட்கார்ந்திருந்த ஏனைய சக வித்வான்கள் அவரவர் பக்கவாத்தியத்தை தொடங்க, தாத்தா என்னை தூக்கிக்கொண்டு வெளியே வந்து கெஞ்சியதில் மனமிரங்கி அழுகையை நிறுத்த, அதை நம்பிய தாத்தா மீண்டும் உள்ளே கொண்டு போக, என் அபாயமணி மீண்டும் தொடங்க...தாத்தா வெறுத்துப்போய் வீட்டை நோக்கி நடையை கட்ட, என் கல்விச்சரித்திரத்தின் முதல்நாள் இப்படி அழிரப்பர் இல்லாமலேயே பாதியில் அழிந்தது போயிற்று...

என் வீட்டாரின் ஒருவார விக்கிரமாதித்திய தொடர்முயற்ச்சிகலாலும் தினமும் கிடைத்த முட்டாய்கலாலும் எனக்கு பிறகு "ஸ்கூலு" பிடித்துப்போனாலும், நான் பயந்ததற்கான காரணத்தை இன்றுவரை கண்டறிய முடியவில்லை. அந்த ராமச்சந்திரன் சார் தான் எனக்கு ஒன்னாப்பு முதல் அஞ்சாங்க்ளாஸ் வரை அறிவுக்கலவையை கலக்கி குலுக்கி என் மூளையெனும் குடுவையில் ஊற்றியவர். தமிழ், கணக்கு, வரலாறு என அனைத்து துறைகளையும் எடுத்தாளும் அஷ்டாவதனியாக அவர் இருந்தாலும் நாங்கள் பயப்பட்டது என்னவோ அவரது கூமாச்சி மீசையையும் மிரட்டும் கண்களையும் பார்த்து தான். சேகரு, குமாரவேலு, கணேசு, சங்கரு என பல பெயர்கள் நினைவில் இருந்தாலும் "தூக்குபல்லு" சசிகலாவும், "எலிவாலு" சுமதியும் மட்டும் கல்யாண வேட்டியில் பட்ட காப்பி கரை போல பளிச்சென்று கண்முன்னால் வருகிறார்கள். பின்னே..? அஞ்சாம் வகுப்பு கடைசி வரை சசிகலா முதல் ரேங்க்கும், சுமதி ரெண்டாம் ரேங்க்கும், நான் மூணாம் ரேங்க்கும் என்றால் மறக்க முடியுமா என்ன? நான் முதல் இரண்டு இடங்களை பெருமையுடன் அவர்களுக்கு விட்டுக்கொடுத்ததற்கு என் அழியாப்புகழ் ஆங்கில அறிவு மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியும்... Nature -ய் "நெட்டுரே"வாகவும் Discover-கு spelling -ய் "Tisskavor" என்றும் எழுதினால் பிறகு சரஸ்வதிதேவி என்பக்கம் எப்படி வருவாள்? எல்லா பாடங்களும் புரிந்துகொள்ளும் தமிழ் வகுப்பு மாணவர்களுக்கு "இங்கிலீசு" மட்டும் ஏன் பின்புலம் சிரிப்பொலி சேர்த்த இந்தி நாடகம் போல ஒட்டாமல் போகிறது என்று கல்வியாளர்கள் யாராவது ஆராய்ந்தால் தேவலை...!

விடுமுறைநாள் ஒன்றில் தெரிந்தவர் வீட்டுக்கு போவதாய், என் பாட்டி என்னை கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே கொடுத்த பிஸ்கெட்டை தின்றுகொண்டு அப்படியே தூங்கிவிட, ஆரம்பித்தது என் மொத்த நீர் பாசனம்... அந்நாளில் தூக்கத்தில் ஒன்றுக்கு போவது என்பது எனக்கு இன்னாளில் அனிச்சையாய் பெண்களை பார்ப்பது போல அத்தனை இயல்பு.. சிரிப்பொலி கேட்டு எழுந்து சுற்றிலும் பார்த்தால், எதிரில் ஒரு சேரில் சசிகலா!! அது அவள் வீடு தானாம். "அம்மா... இவன் என் க்ளாஸ்மேட்டுமா.." என்று அவள் சொல்ல, "இங்க வாடா கண்ணா.." என்று அவர் என்னை கூப்பிட்டு மடியில் வைத்துக்கொண்டார். அன்று நான் நெளிந்த நெளி கம்பளிபூச்சி தோற்றது! ஒரு பெண்ணை பார்த்து நான் பட்ட முதல் வெட்கம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். பிறகு இந்த மூத்திரகதை என் வகுப்பு முழுவதும் பரவி சாகாவரமாய் மோட்சம் பெற்றது தனி கதை.

நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும்? கல்வி உபகரணங்களை சாமிக்கு படைக்க வேண்டும்! சேகரு குடுத்த மாபெரும் ஐடியா இது. புறப்பட்டது எங்கள் ஆறு பேர் கொண்ட புரட்சிப்படை! மைதானத்தின் ஓரமாக இருந்த திறந்தவெளி கழிவறைகழகமான முள்ளுச்செடிகளை விலக்கி இரண்டடிக்கு இரண்டடியில் ஒரு குழியை தோண்டி அதில் பழய சிலேட்டு, துக்கிளியூண்டு பலப்பங்கள், அட்டை கிழிந்த நோட்டுப்புத்தகங்கள் எல்லாம் போட்டு நிரப்பினோம். சேகரு ஒரு புத்தம்புதிய கருப்பு கலர் அசோகா பேனாவையும் உள்ளே போட்ட போதுதான் என் மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் தலைதூக்கியது. "எல்லாரும் வேண்டிக்கங்க... பரிச்சை முடியும் வரை யாரும் இந்த பக்கம் வரக்கூடாது... வந்தா பெயிலு ஆயிருவீங்க... எல்லாரும் சத்தியம் பண்ணுங்க..." - மண்ணை போட்டு மூடி அதன்மீது ஒரு பெருக்கல் குறியயும் போட்டுவிட்டு சாமியர் சேகரு சொன்ன அருள்வாக்கு இது...! அந்த காலத்தில் அசோகா பேனா வைத்திருப்பவன் ஸ்டாரு...! கொண்டை மூடியும் பெரிய தங்க கலர் நிப்புமாய் பிரில் இங்க் ஊற்றினால் பேனாவின் உடம்பின் பாதி கண்ணாடியின் வழியாக நிரம்புவது தெரியும்... அப்பொழுதே மூனேமுக்கால் ரூபாய் விலை! என் கையெழுத்து என் தலையெழுத்தை விட மிக மோசமாக இருந்தாலும் அப்படி ஒரு பேனாவுக்காக நான் நீண்டநாள் ஏங்கியது உண்டு. அடிக்கடி தொலைத்துவிடுவதால் என்னிடம் எப்பொழுதும் ஒரு முக்கு உடைந்த பென்சிலு மட்டுமே இருக்கும். அன்றையதினமே சாயங்காலமாய் யாருக்கும் தெரியாமல் அந்த இடத்துக்கு சென்று, நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொள்ள அந்த பேனாவை மட்டும் கிளப்பிவந்துவிட்டேன். என் வாழ்வில் நான் அறிந்து செய்த முதல் திருட்டு...! பயல்கள் யாருக்கும் தெரியாமல் அந்த பேனாவை மறைத்த படியும், பரிச்சைல பெயிலு ஆகிருவமோ என்ற பயத்திலும் நான் வளைய வந்த நாட்கள் தற்போதய பின்லேடனின் வாழ்வியலுக்கு ஒப்பானது. அப்போதே செய்த சத்தியத்தை காப்பாற்றியதாலோ(!?) அல்லது நான் அந்த வருடம் பாஸாகி விட்டதாலோ, அதன்பிறகு நான் சத்தியம் செய்ய தயங்கியதே இல்லை...! ஒரு அறியாச்சிறுவன் அல்ப ஆசையில் செய்த தவறை கடவுள் மன்னித்துவிட்டதாகவே என் மனதை தேற்றிக்கொண்டேன்...!

நீங்கள் வகுப்புதலைவனாக இருந்திருக்கிறீர்களா? வகுப்பில் பேசுபவர்கள் பெயர்களை எழுதிவைப்பதும், பானையில் தண்ணீர் பிடித்துவைப்பதும், ப்ரேயரின் போது அனைவரையும் வரிசையில் அழைத்துப்போவதும் தவிர மிக சுவாரசியமான வேலை ஒன்று உண்டு! ரவிவர்மா எப்படி ஓவியம் வரைந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கரும்பலகைக்கு கரிச்சாயம் பூசியதை அவரைவிட நாங்கள் மிக அதிகமான கலைநயத்தோடு செய்ததை ராமச்சந்திரன் சாராலும் மறுக்க முடியாது! எங்கள் விழுப்புண்களுக்கு சர்வரோக நிவாரணியான எருக்கம்பால் தரும் எருக்கன்செடிகளை தேடி கிளம்பினால் சந்தனவீரப்பர்(மரியாதையை குடுத்துடுவோம்.. எதுக்கு வம்பு..? அப்புறம் அந்த சாதி தலைவரை நம்மால சமாளிக்க முடியாது!!) இருந்த காட்டை தவிர மற்ற அனைத்து பீக்காட்டிலும் எங்கள் கால்தடம் பதியும். பை நிறைய இலைகளுடன் வரும் வழியில் கரிக்கடையில் கெஞ்சி தூளு கரிகளை பொருக்கிக்கொண்டு தட்டையான பெரிய கல்லாக பார்த்து அதில் மொத்த மூலப்பொருள்களையும் கொட்டி, ஆளுக்கு ஒரு சொட்டாங்கல்லுடன் நான்குபேர் சுற்றியமர்ந்து தேய்க்க ஆரம்பித்தால் ஒருமணி நேரத்துக்கு சூடு பறக்கும். சங்கரின் நிறத்தியும் மிஞ்சும் கருமை வந்தவுடன் அதை வழித்தெடுத்து, மற்ற சகாக்கள் காதில் புகையுடன் பார்க்க, வாத்தியாரின் பென்ச்சில் ஏரி பூச ஆரம்பித்தால், கடைசிமணி அடிப்பதற்குள் எங்கள் "மாஸ்டருபீசு" முழுமை அடைந்துவிடும். சுவரின்றி சித்திரம் வரைய முடியாது. ஆனால் அந்த சுவரையே சித்திரமாக வரைந்த கலைமாமணிகள் நாங்கள்..! இதற்காக பணமுடிப்பு என்றும் எங்களுக்கு கிடைத்ததில்லையானாலும், கையில் கரி ஒரு வாரமாகியும் போகாததற்காக வீட்டில் முதுகை பழுக்கவைத்துவிடுவார்கள்.

வீட்டுப்பாடம் செய்யாததற்கான தண்டனையாக "பொம்பளபுள்ளை"ங்களின் நடுவே உக்கார வைத்ததற்க்காக தேம்பி தேம்பி அழுததும், செல்லாத ஓட்டை பத்து பைசாவை கண்தெரியாத கிழவிகடையில் கொடுத்து இலந்தவடை வாங்கி திண்றதும், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் நமக்கும் அப்பம் தருவார்கள் என்று சென்று ஏமாந்து அதன் மூலம் நான் "இந்து" என்ற உண்மையை அறிந்துகொண்டதும், தீபாவளியன்று வெடிக்காத லெச்சுமிவெடிகளை பொறுக்கி அதிலிருந்து சொந்த வெடிகுண்டு தயாரித்த நிபுணத்துவத்தையும், வினாயகசதுர்த்திக்கு தேங்காயினுள் பருப்பு வெல்ல கலவையை போட்டு தீயினில் சுட்டுதின்ற சுவையையும், எப்பொழுதும் மற்ற பிஸ்த்துகளிடம் குத்து வாங்கியே உடைந்த என் பம்பரங்களையும், பிரித்தவுடன் முகர்ந்து பார்க்கும் புத்தம்புது லயன், முத்து காமிக்ஸின் மணத்தையும் இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.

என்றாலும் நினைத்துப்பார்க்கும்பொழுது அந்த வயதில் எந்த எதிர்வினையும் இன்றி ஏற்றுக்கொண்ட இந்த நிகழ்வுகள் எல்லாம் இனிப்பாகவே இருக்கிறது. இந்த வயதில் நம் எதிர்வினைகளால் வரும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும்பொழுது அன்றுகிடைத்த நிறைவுகளை இப்படி அசை போடுவதால் மட்டுமே நினைவுகளில் மட்டும் கொண்டுவரமுடிகிறது..

ம்.. என்ன சொல்லி என்ன?


தெரிந்தே தொலைக்கிறோம்
வாழ்க்கையை...
வாழ்க்கையை தேடுவதாக
எண்ணிக்கொண்டு...!

புதன், ஜனவரி 19, 2005

நமக்கு மட்டும் தெரிந்தது...!?

அம்மாவின் புலம்பல் அப்பாவிடம்..
"நம்ம பயலுக்கு கோட்டி புடிச்சிருக்கு போல!
தன்னப்போல இளிக்கான்...
வெள்ளென பெரண்டு பெரண்டு படுக்கான்...
காப்பிதண்ணீல கைய நனைக்கான்...
நடுச்சாமத்துல மீசமயித்த ஒதுக்குரான்...
வயசுப்பய மாதிரியா திங்கான்?
அரை களி உருண்டய
நா முச்சூடும் உருட்டறான்...
ஒரு எழவும் வெளங்கல!
காத்து கருப்பு கீது அடிச்சிருச்சா?
நம்ப ஆத்தா கோயிலு கோடாங்கிய கூப்டுவுட்டு
ஒத்த ரூவா முடிஞ்சி வச்சி
ஒரு தாயத்து கட்டணும் போல...!"

பாவம்..
அம்மாவுக்கு தெரியாது...
உன் சிரிப்புக்கு முன்னால்
கோடாங்கியின் தாயத்து
எம்மாத்திரம் என்று...!

புதன், ஜனவரி 12, 2005

அம்மா இங்கே வா வா!!

அம்மா இங்கே வா வா!
Arrest Warrant தா தா!
வேலூர் ஜெயிலில் போட்டு
கண்ணுல தண்ணியும் காட்டு!

அப்புவும் ரவியும் கூட்டு
சின்ன 'சாமி'க்கும் வேட்டு
குடுத்தாங்க மாமீங்க பேட்டி
சாயம் போச்சுது காவி வேட்டி

பெருசுங்க பொருளுங்க குட்தாங்க
கூடவே போட்டாவும் புட்ச்சாங்க
எதிராளிய குத்தம் சொன்னாங்க
மீதிய அமுக்கினு போனாங்க

போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க
கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க
அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க
பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க

அபலைங்க சோகமும் பார்த்தாச்சி
அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி
பழய துணிமணி கொடுத்தாச்சி
சுனாமி சோகமும் போயாச்சி

மிருனாள் சென் -ஆ! யாருங்க?
ஜெயலச்சுமி செரினா தெரியுங்க
ஐயோ! 'ரவி'-க்கு கை காலு போயிருச்சி
அப்புறம் அண்ணாமலையும் தொடங்கிருச்சி

பொங்கலு பண்டிகை வந்தாச்சி
TV-ல பிகருங்க பேத்தலு ஸ்டார்ட்டாச்சி
தலை-ங்க வாழ்த்து கொடுத்தாச்சி
வாழ்க்க மாமுலுக்கு திரும்பிடிச்சி

சமுதாய சிந்தன போதுங்க
ஊட்டுல சீனி கேட்டாங்க
முக்கு கடைல ச்சீப்புங்க
வாங்கிகினு வெரசா போறனுங்க