முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குலசை தசரா 2009 - புகைப்படங்கள்

க்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அருமைத்தம்பி ஆதிக்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும் செல்வபிரகாஷ், ஜெய்சிங், நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா மாப்ள சீவியாரு, வினோத்து, கவுஜர் லக்ஸ் மற்றும் கோகுல். இவங்க ஒவ்வொருத்தருமே அவங்கவங்க ஸ்டைல்ல படமெடுக்கறதுல பெரிய வஸ்தாதுங்க. இவிங்ககூட சுத்தறப்பவெல்லாம் நான் 4 மாசம் நெட்டுல படிச்சு தெரிஞ்சுக்கறதை நாலே நாள்ல அனுபவப்பூர்வமாக கத்துக்கமுடியறதை சந்தோஷமா அனுபவிச்சதுண்டு. எனக்குன்னு ஒரு ஸ்டைலு இப்பவரைக்கும் இல்லாததாலும் நான் இன்னும் வளர்ற பையங்கறதாலயும் படமெல்லாம் கலந்து கட்டித்தான் இருக்கும். அதனால அப்படியப்படியே அனுபவிங்கப்பு! :)

இதுபோக எனக்கே தெரிஞ்சு எங்கிட்ட படமெட்டுக்கறதுல சில பல மாற்றங்கள். பார்த்தால் உங்களுக்கே தெரியும். அப்படி எதுவும் தெரிலன்னா அப்படியே லூசுல விட்டுருங்கப்பு! வெளில சொல்லி மானத்த வாங்கப்பிடாது ஆமா! :) புடிச்ச படம் பெருசாத்தெரிய மேல ஒரு க்ளிக் செஞ்சு பாருங்கப்பு.

ட்ரிப்பு ஆரம்பமே அமர்க்களமான ஆரம்பம்! தின்னவேலின காலைல 8 மணிக்கா எறங்கி டிபனெல்லாம் முடிச்சு அப்படியே தாமிரபரணி படித்துறைல எறங்கி செம குளியல்! அதாவது சென்னை செண்ட்ரல்ல எறங்கி அப்படியே எதுத்தாப்பல இருக்கற கூவத்துல குளிக்கறமாதிரி! 4 மணிநேரம் நட்டாத்துல ஊருனமேனிக்கு மெகாபொங்கல். ஓடறதண்ணீல உடம்பை அளந்தபடி பிடிச்ச படம் புத்தகம்னு பேசிக்கிட்டு கெடக்கறது எப்புட்டு சுகம்! :) எனக்கு எப்பவுமே இருக்கற தீராத ஆசையான மொத்தமுழுசா இயற்கையோடு ஐக்கியமாகும் ஆசை இங்கையும் எட்டிப்பார்த்தது. ஆனால் லக்குவணாருக்கு நியூட் போட்டோகிராபில விருப்பம்னு தெரியவந்ததுல கமுக்கமா என்னோட ஆசைய எப்டியாச்சும் ஆஸ்திரேலியா பீச்சுல வைச்சி தீர்த்துக்கலாம்னு ஒத்திப்போட்டுக்கினேன் :)

வரப்பு டூ வானம் எனதேன்னு குளிக்கறது நம்ப ராவணன். "வழி தவறிய மீன்கள் சந்தித்துக் கொண்டன மணல்வெளியில். இரண்டிடமும் கடல் பற்றிய கதையிருந்தது, கடல் இல்லை" என்ற புகழ்பெற்ற கவிதைக்கு சொந்தக்காரரான அதே லக்குவணார் தான். அவரு கெரகம்! எங்கூடவெல்லாம சுத்தவேண்டிய நெலமை! :)



ஆற்றங்கரையில் பிறந்ததே நாகரீகம்!



வாழ்க்கைல தேமேன்னு இருக்கறதுதான் இருக்கறதுலயே நெம்ப கஷ்டமான வேலைங்கப்போவ்! படித்துறை மண்டபத்துல நெல்லை மக்கள்ஸ்....



அம்புட்டுத்தான். அப்பறமா மத்தியானமா பஸ்புடிச்சு குலசைபோய் எறங்கியாச்சு. இதுக்கப்பறம் சாப்புட தூங்கன்னுதான் மக்கா பார்த்துக்கறது. மத்த நேரமெல்லாம் ரொம்ப சின்சியரா காமராவை எடுத்துக்கிட்டு அவிங்கவிங்களுக்கு புடிச்ச எடத்துக்கு ”மீ த எஸ்கேப்”புனு காணாமப் பூடூவாய்ங்க. நானும் அப்படியே விட்டேத்தியா கால்போன எடத்துக்கெல்லாம் எந்த குறிக்கோளும் இல்லாம காத்தாட கெளம்பிடறது. யாராவது கெடச்சா பேசியே அவங்களை ஓட ஓட வெரட்டறது. ஏதாச்சும் குலசை டான்ஸ் ட்ரூப்போட சேர்ந்துக்கிட்டு அவங்கபோற எடமெல்லாம் கூடவே அபீசியலு போட்டொகிராபரு மாதிரி சுத்தறதுன்னு வாழ்க்கை மூனுநாளைக்கு அப்படி போச்சுது. ஒன்னு மட்டும் நிச்சயங்க... வாழ்க்கை என்பது எப்பொழுதுமே நாம போட்டுக்கிட்டு இருக்கற சொகுசுவளையத்துக்கு வெளிலதான் இருக்கும்போல! ஆட்டம் பாட்டம் பக்தி துக்கம் சந்தோஷம்னு எல்லாத்தையும் வாழ்வோடு வாழ்வாக பிணைத்து வைத்து அனுபவிக்கும் மக்களுக்கு மத்தில எல்லாத்துக்கும் நாள் பிரிச்சு அனுபவிக்கற, உணர்வுகளையும் அனுபவங்களையும் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் தேடற நானெல்லாம் அம்மண ஊரில் கோவணம் கட்டுன கேசுமாதிரிதான் உணர்ந்தேன். உண்மைதாங்க... வீட்டை நாம் தாண்டாவிட்டால் வானமே இல்லை! இதுபோக என்பீல்ட் விளம்பரத்துல ஒரு வசனம் வரும் பார்த்திருக்கீங்களா? LEAVE HOME! இதுக்காச்சும் வருசம் பத்துநாள் எங்காச்சும் இப்படி அனாமத்தா கெளம்பிறனும். ம்ம்ம்.. எங்க தாத்தனும் அப்பனும் இயல்பா செஞ்சதெல்லாம் இப்ப நானே கண்டுபுடிச்சாப்படி பெனாத்திறதும் கூட ஒரு திறமையா போயிருச்சுங்கப்பு.


ஒரு போட்(டோ)டா போட்டி! :)



வர்ண ஜாலச்சிரிப்பு



வேசங்கட்டறதை பத்தி இந்தமுறை சிலதகவல்கள் கெடைச்சது. 41 நாள் விரதம். குழுவுக்கு ஒரு தலை. அவருகிட்ட பர்மிசன் வாங்கிட்டு என்ன வேசம் போடறீங்களோ அதைச் சொல்லிறனும். அப்பறம் கோவிலுக்குப்போய் திரும்பும் வரைக்கும் காப்புக்கட்டி விரதம். கோவிலுக்கு வந்துபோகும் ரெண்டு நாளைக்கு காளி,போலீஸ், பைத்தியம், பொம்பளை, கரடி, கொரங்குன்னு மாக்கா விதவிதமா வேசங்கட்டி அடிக்கறாங்க. காளி வேசக்காரவுக மட்டும் இன்னும் கொஞ்சம் சிவியரு. கடும்விரதத்துல சத்தில்லாத ஒத்துழைக்காத உடம்பை இழுத்தபடி அடிக்கிற டண்டணக்கரவும் குலவையொலியும் முறுக்கேற்ற சடாமுடி சுழன்றாட மொத்த உடம்பையும் உதறித் துள்ளியடி சாமியாடறதை பார்க்கறப்ப கடவுளை நம்பாத எனக்குள் ஒரு வெறுமை பரவுவது நிஜஞ்தான். இருந்தாலும் என்னுடைய இப்பத்தின வரைக்கும் கிடைத்த வாழ்வனுவத்தின் புரிதலான “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?! தேவைப்படுபவர்களுக்கு இருக்கிறார்” எனும் வைக்கம் முகம்மது பஷீரின் வரிகளில் ஆத்மார்த்தமான அர்த்தங்கள் இருப்பதாக நம்புவதால் எதன் மீதும் தீர்பெழுதாமல் ஒரு சாட்சியாக நின்று பார்ப்பதே நேர்மையெனப்படுகிறது.

அண்ணன் காளி!



கடவுளை உணரும் குழந்தைகள்


ம்ம்ம்.. எங்க ஒளிஞ்சிருப்பான் இந்த கள்ளப்பய?!



ஏக்கம்!

இத எடுத்தவுட இந்த பால் ஐசை அவருக்கு வாங்கிக் குடுத்தேன். அடடா! என்ன ஒரு சிரிப்பு! இரண்டு முகத்திலும்! :)

ஒரு லிட்டில் டான்ஸ் ஸ்டார். பொண்னு ஆடுட ஆட்டத்துக்கு கெமிஸ்ட்டி ஹிஸ்டரியெல்லாம் தேவையிருக்கவில்லை. அம்புட்டு இயல்பு!



வயசுப்புள்ளைங்க! :) பொம்பளை வேசம் கட்டற பசங்களுக்கு அவிங்க அம்மா தங்கச்சிங்க சேலை கட்டுறதுலயும் மேக்கப்பு போட்டு நகைநட்டு மாட்டறதுலயும் உதவறதைப் பாக்கறதே அம்புட்டு அழகு! :) எனக்கென்னமோ பொம்பளைகளோட கஷ்ட நஷ்டத்தப் புரிஞ்சுக்க ஆம்பளைங்க நீங்களும் ஒரு நாளு நாளைக்கு பொண்ணா இருந்து பாருங்கடான்னு யாரோ பெருசு பழங்காலத்துல கொளுத்திப்போட்ட வெடிதான் இந்த ஆன்மீக வழக்கத்தின் பின்னான ரகசியம்னு ஒரு அனுமானம்! :)



தீச்சட்டி நேர்த்திக்கடன்...



நேர்த்திக்கடன்கள் அனைத்தும் முடிவில் கடவுளுக்கு சமர்ப்பணம்




சூரசம்ஹாரம் முடிஞ்சதுக்கு அப்பறம்... இந்த வருச வேண்டுதல் முடிஞ்சாச்சு. வேஷம் கலைச்சாச்சு. அடுத்து மொட்டை, பீச்சுல குளியல், ஓரமே சமையல், முத்தாரம்மன் தரிசனம்.. பெறகு ஊருக்கு நடைதான்...



பனையும் பனைசார் வாழ்வும்...



ம்ஹீம்! நான் வர மாட்டேன்! அங்கன குளுரும்!!



ஆனந்தம் பொங்குதே!! ( இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் இளவஞ்சிகுமாரா?! ம்ம்ம்.. வளராமயே இருந்திருக்கலாம்! )



நாடி சோதிடம்...



வளையம் வெள்ளாட்டு...



குலசை பீச்...


அங்கன தூரத்துல ஒரு லைட்டவுசு தெரியுது பாருங்க. அதான் மணப்பாடு சர்ச். குலசைல இருந்து சாயங்காலமா அப்படியே நூல் புடிச்சாப்புல 4 கிலோமீட்டரு பீச்சோரமாவே நடந்து சர்ச்சுல மூன்றவரு உட்கார்ந்திருந்தோம். அடடா! என்னா கடற்கரை.. என்னா காத்து.. என்னா அமைதி!! மனுசன்னா இதை ஒரு தடவைக்குமாவது அனுபவிக்கனுமைய்யா! அதுவும் நமக்கு நெருக்கமான ஆத்மாவோடன்னா இன்னும் விசேஷம். இதுல முரண் என்னன்னா நான் அந்தக்காலத்துல காதல்கிறுக்கனாக இருந்தபொழுது மொதமொதலா தனியா தாஜ்மகாலைப் பார்த்து அஞ்சவரு கெறங்கிக் கிடந்துக்கு, இப்ப இந்த நிர்மலமான மனதுடன் மணப்பாடு மணல்வெளில சொக்கிக்கிடந்த அனுபவம் கிஞ்சித்தும் கொறஞ்சதில்லைங்கறதுதான்!

இத்தனை சொல்லி அப்பறம் நாங்க மூனுநாளா ஓயாம கேட்ட பார்த்த காளீங்க டான்ஸை போடலைன்னா எப்படி?! ( நன்றி: முருகன் வீடியோஸ், உடன்குடி )


அம்புட்டுத்தான் இந்த வருசம் நான் குலசை தசரா போய்வந்த கதை! :)

கருத்துகள்

  1. ஆசாதே அம்புட்டு படமும் அசத்தல்.. அதுலயும் போட்டி போட்டு வெரலால உங்கள படம் எடுத்த அந்த போட்டோ கண்ணுல நிக்குது :)

    பதிலளிநீக்கு
  2. அடடா .. இதுதான் அந்த தசராவா ... நானும் இதே சமயத்தில மணப்பாடு, உவரி் கோவிலுக்கு தரிசனம் பார்க்க போனோம்ல... இப்படி ஆளுங்க நிறைய வேஷம் போட்டுட்டு போனதைப் பார்த்து என்னன்னு தெரியாம இருந்திட்டோமே ..

    //கடவுளை நம்பாத எனக்குள் ஒரு வெறுமை பரவுவது நிஜஞ்தான்//
    என்னங்க இது .. இப்படி சொல்லிட்டீங்க .. எப்பவுமே இப்படிதானா?

    பதிலளிநீக்கு
  3. பாஸ் எல்லா போட்டோவுமே கலக்கலு! சில போட்டோக்களை கலர்ல பாக்குறதுக்கு விருப்பபடறோம்! :)

    அதுவும் அந்த போலீஸக்கா போட்டோ - டெரர் அட்டெம்ப்ட்தான் :)

    பதிலளிநீக்கு
  4. அண்ணே, கும்பக்காரிங்க போட்டாவேல்லாம் தனிமடலில் அனுப்பி வைக்கவும் :)

    பதிலளிநீக்கு
  5. ஆசானே படங்கள் எல்லாம் தூள் ;)

    ஒவ்வொரு படத்துக்கும் நீங்க சொல்லியிருப்பது அட்டகாசம் ;)

    \\வாழ்க்கை என்பது எப்பொழுதுமே நாம போட்டுக்கிட்டு இருக்கற சொகுசுவளையத்துக்கு வெளிலதான் இருக்கும்போல! \\

    ஆகா..ஆகா..ஆகா..ஆகா..;))

    ஆமா இம்புட்டு தான் படமா!?? மீதி எல்லாம் எங்கன வச்சியிருக்கிங்க?

    ;)

    பதிலளிநீக்கு
  6. ராயல், சென்ஷி, கானாஜி, திகழ்,

    ஊக்கங்களுக்கு வழக்கம்போல டாங்ஸ்! :)


    தருமிசார்,

    உங்களுக்கும் எனக்கும் சரியா டைம் ஒர்க்கவுட்டாக மாட்டேங்குது. அடிக்கடி மிஸ்சாகறோம்!

    // என்னங்க இது .. இப்படி சொல்லிட்டீங்க .. எப்பவுமே இப்படிதானா? //

    இந்த பொங்கல் போடலாம்னுதான் உங்க கிட்ட என்னோட பலநாள் ஆசை! :) இப்பத்திக்கு என் நிலை இப்படிதான் போல! அதாவது யாரையும் அண்டியிருக்காம எனக்குநானே ராசான்னு இருக்கறவரை. யாரையேனும் சார்ந்தே வாழவேண்டிய நிலையில் புத்தி எப்படி மாறுமோ தெரியலை! :)

    மணப்பாடு ஒரு அபூர்வமான இடம் தருமிசார். வேண்டிதலுக்காக விரதம் இருக்கறவங்க தங்கறதுக்கு அங்கயே ரூம் கட்டிவிட்டிருக்காங்க. ஒரு நாளைக்கு 100 ரூபாய் தானாம். அந்த சர்ச்சும், லைட்டவுசும், கடற்கரையும் காற்றும் அமைதியும் 5 ஸ்டார்ல கூட கிடைக்காது! அந்த ரம்மியமான இடத்துல ஒரு வாரம் டேரா போடலான்னு கூட ப்ளான் இருக்கு :)

    ஆயில்யன்,

    நன்றி! :)

    // கலர்ல பாக்குறதுக்கு //

    சிலதுகளை கருப்புவெள்ளைல பார்க்கறப்ப அழுத்தம் கூடுதுன்னு என் இப்பத்தின அனுமானம். அதனால இப்பத்திக்கு அப்டியப்டியே விட்ருங்க. சீக்கிரம் திருந்திருவேன்! :)

    பதிலளிநீக்கு
  7. செல்வு,

    வாங்கப்பு :)

    // ண்ணே, கும்பக்காரிங்க போட்டாவேல்லாம் தனிமடலில் அனுப்பி வைக்கவும் //

    சிறப்பாக எதுவும் இந்த வருசம் எடுக்கலை :( போன வருசம் நான் போட்ட இந்த படம் பார்த்தீங்களா?

    நடனம் ஆடிமுடிச்ச பின்னான களைப்பில் இருந்த அவங்ககிட்ட அவங்க நடன படங்களையே காட்டிய பொழுதில் கிடைத்த சந்தோச சிரிப்பு இது! இந்த சிரிப்பு கொடுக்கும் உணர்வுகளை விட அருமையான ஒரு சிரிப்பை நான் இதுவரை எடுக்கலை! :)

    http://farm4.static.flickr.com/3142/2942732972_397d08bbb3_o.jpg

    கோபிநாத்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    // ஆமா இம்புட்டு தான் படமா!?? //

    இதுக்கே உ.த வை மிச்சிருவேன்னு பாதிபயலுக திட்டறாய்ங்க! நீங்கவேற ஓட்டாதிங்கப்பு :)

    பதிலளிநீக்கு
  8. அருமையான படம் ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு ரொம்ப நன்றி

    பதிலளிநீக்கு
  9. PeeVee, நேசமித்திரன்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  10. கேமராவை உருப்படியா பாவிக்கறீங்க. ரங்க்ஸ் கிட்ட இது மாதிரி போட்டோ புடிக்க சொன்னா ஒன்ணும் நடக்கமாட்டேங்குது :)

    பதிலளிநீக்கு
  11. எல்லா படங்களும் வழக்கம் போல் அசத்தல் !
    ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ளாக் பாத்துட்டோமோ? னு தோணிச்சு!
    பழைய பதிவுகளையெல்லாம் அப்பப்ப படிச்சிட்டிருக்கேன் !

    பதிலளிநீக்கு
  12. சின்ன அம்மிணி,

    //ரங்க்ஸ் கிட்ட இது மாதிரி போட்டோ புடிக்க சொன்னா ஒன்ணும் நடக்கமாட்டேங்குது :) //

    அவரு எடுக்கறப்ப எடுக்கட்டும்! நீங்க தொபுக்கடீர்னு களத்துல குதிங்க! :)

    தேசாந்திரி ,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    // பழைய பதிவுகளையெல்லாம் அப்பப்ப படிச்சிட்டிருக்கேன் ! //

    ஆச்சரியமா இருக்குங்கப்பு! நாந்தான் சிலநேரம் என்னதையே படிச்சு சுயபுளங்காகிதம் அடைவதுண்டு! என்னைப்போல் ஒருவர்! :) நன்றி...

    பதிலளிநீக்கு
  13. en siru vayathu niyabangal etti parkinrana ungal photos parkkum pothu. kulasai yil irunthu 4 km thana manapadu? nangal siru vayathil athiga thooram irukkum entru pogamale vanthuvittom. nan innum parkka virumpum idangalil manapadum onru . thasara nattkal marakka mudiyathavai en palli paruvathil . intha varudam veettirukku vantha vesa karargalai parthathodu sari, appa anna mattume kovilukku selvargal en asaithani puriyamal .vayathu vantha piragu pala asigal nirasaigalthan nam ooril!

    பதிலளிநீக்கு
  14. அருமை இளவஞ்சி ....மீண்டும் குலசை நாட்களை நியாபகபடுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. எதிர்பாரா பதிவு புகைப்படங்களுடன். நன்றிகள் பல.

    வேடம் கட்டும் மரபுக்கு ஆன்மிக காரணம் உண்டு என்று கேள்வி. அதை நீங்கள் தேடி ஆராய்ந்து சொல்லவில்லை. கோயில் ஊழியர் யாரிடமாவது கேட்டிருந்திருக்க்லாம். மறுபடியும் குலசை செல்லும்போது கேட்கவும்.

    கட்வுள் நம்பிக்கை இல்லாவிடிலும்கூட இம்மாதிரி அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கால், காம ரசம் ததும்பும் எண்ணங்களை விட்டுவிடுவது நலலது. ‘கும்பக்காரிகளை’ ...போலிசுக்காரியை...! நன்றாகவில்லை.

    எனக்கு மணப்பாடு. ஒருவருடத்திற்கு முன்னர்தான் pilgrim centre கட்டப்பட்டது.

    Holy Cross Churchஐப் பற்றி நிறைய் எழுதலாம். நன்றாகச் சொன்னீர்கள். செப்டம்பர் 5ம் தேதி முதல் 10 நாட்கள் சர்ச் திருவிழா.

    மணப்பாடு ஒரு மணல் கவிதை. கட்லோடு சேர்ந்த ஒரு காவியம். மக்களில்லாமல் வாழ்க்கையில்லை. என்வே, காலை 9 மணியளவில் கட்டுமரங்கள் கரைசேர்ந்தவுடன் மீன்கள் வலையிலிருந்து கூடைக்கு வரும் காட்சி, ஏலமிடும் காட்சி - இன்னபிற - உங்களைப்போன்ற தமிழகத்தின் வேறெங்கோ ப்ட்டணங்களில் வாழ்வோருக்கு ஒரு வித்தியாசமான் விய்ப்பான பரிச்சயம். மறக்கமுடியாது.

    Visit:

    www.manavai.com

    சரி...குலசையில் 3 நாட்கள் எங்கே தங்கினீர்கள்?

    அது அங்கு செல்ல விழைவோருக்கு உதவியாக இருக்குமல்லவா?

    பதிலளிநீக்கு
  16. Mathar, ஊர்சுற்றி,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    // vayathu vantha piragu pala asigal nirasaigalthan nam ooril! //

    அதெல்லாம் நம்ம கைலதான் இருக்குன்னு நினைக்கறேன். நமக்கு நாமே பொறுப்புன்னு வந்ததுக்கப்பறம் நாம் விரும்புவதை செய்யறதுக்கு நன் மனத்தடைகளைத்தவிர வேறென்ன தடையாக இருக்கப்போகிறது?! சீக்கிரமே நீங்கள் குலசைகோவிலும் மணப்பாடும் காண வாழ்த்துகள் :)

    ஜோ,

    கருத்துக்களுக்கு நன்றி.

    // மறுபடியும் குலசை செல்லும்போது கேட்கவும். // கோவில் வரலாறு உள்ள சிடி வரைக்கும் பார்த்துட்டேன். சரியான காரணம் சொல்லப்படவில்லை. ஆண்கள் அம்மன்களாக உலவும் பக்திக்கு ஏதேனும் காரணம் கண்டிப்பாக இருக்கக்கூடும். அடுத்தமுறை தீர விசாரிக்கறேன்.


    // காம ரசம் ததும்பும் எண்ணங்களை விட்டுவிடுவது நலலது. ‘கும்பக்காரிகளை’ ...போலிசுக்காரியை...! நன்றாகவில்லை.//

    சரியாகப்படித்தீர்களானால் இவைகள் அந்த எண்ணத்தில் எழுதவில்லை என்பது புரியும். கடைசிநாள் இரவு முழுக்க 20ம் மேற்பட்ட மேடைகளில் நடப்பது காமரசம் ததும்பும் கூத்துக்கள் தான்! பாட்டியும் பெயர்த்தியும் வாய்நிறைய சிரிப்போடு கூத்துக்களை ரசித்ததை பார்க்கையில் நாம் தான் நாகரீகப்போர்வையில் ஆன்மீகத்தின் அருகில் காமம் அசிங்கமென்ற எண்ணம் வலுப்பெற இருக்கிறோமென தோன்றுகிறது. கிராமத்துல மக்கள் என்னவோ தெளிவாத்தான் இருக்காங்க! :)

    // சரி...குலசையில் 3 நாட்கள் எங்கே தங்கினீர்கள்? //

    குலசையை சொந்த ஊராகக்கொண்ட ஆதி வீட்டுலதான்! ஏற்கனவே 12பேரு வருசாவருவம் டேரா போடறோம். இதுல நான் அட்ரஸ் சொல்லப்போக... ஆதி என்னை பொளந்துறப் போறாரு :)

    பதிலளிநீக்கு
  17. படம் எல்லாம் அட்டகாசம்
    ஒவ்வொரு வருசமும் போயிட்டு வந்து படம் காட்டுரீங்களே
    ஒரு தடவையாவது போரப்ப சொல்லிட்டு போகலாம்ல தல
    நாங்களும் போயி ஒரு எட்டு பாத்துட்டு வ்ருவோம்ல :-))

    பதிலளிநீக்கு
  18. கல்லூரி நண்பனது சொந்த ஊர். ஒருமுறை விடியவிடிய அனுபவித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. flickrல் பார்த்திருந்தாலும், கதையுடன் படிப்பது சுவாரஸ்யம்.

    அம்சமான படங்கள்.

    இப்பதான் ஞாபகம் வருது, நீங்கதான, அந்த மீன்பிடி படகில் கூட்டிக்கினு போறேன்னு சொன்னவரு? இந்த தபா சென்னை வந்தப்போ, மறந்துட்டேன். அடுத்த தபா, ஞாபகமா அட்வான்ஸ்டா சொல்லிடறேன் :)

    பதிலளிநீக்கு
  20. தல.., தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

    :)

    தோழன்
    பாலா

    பதிலளிநீக்கு
  21. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி..

    பதிலளிநீக்கு
  22. மக்கள்ஸ்..

    வாழ்த்துகளுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  23. படங்கள் யாவும் அருமை. வெள்ளிப் பதக்கத்தை உங்களுடனேதான் பகிர்ந்து கொண்டிருக்கிறேனா:)? வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. உங்களுக்கு பரிசு கிடைக்கும்னு தெரியும். ஏனெனில் நான் வாக்கு போட்டு இருக்கிறேன்.

    :)

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி & கோவியார் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர