முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எமிலி என்றொரு தோழி


Image hosted by Photobucket.com


தோழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க! கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா? இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா? ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி! தோழிங்கறவங்க யாராவேனா இருக்கல்லாம்! கிளாஸ்மேட்டு, ரயில்சினேகம், பக்கத்து வீட்டு பத்தாவது படிக்கற ரெட்டை ஜடை வாலு, ஆபீசுல கூட வேலை செய்யற மாமி... ஏன்? அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா? அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா? மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா? உரிமையோட கோவிச்சுக்க முடியுதா? ஆம்பளைங்கற ஈகோவ தூக்கி ஓரமா வச்சிட்டு(ரொம்ப செரமமான வேலையையா இது! ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா? அப்பன்னா அவங்க தோழிதான்!

எனக்கெல்லாம் இப்போதைக்கு இத்தனை நாள்ள நான் தேடிக்கண்டெடுத்த உன்னதமான தோழின்னா அது என் ஊட்டுக்காரம்மா தான்! (பிட்டை எப்படி போடறேன் பாருங்க! :) ) தேடல் எங்க ஆரம்பிச்சதுன்னு யோசிச்சுப்பார்த்தா அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச தூக்கு பல்லு சசிகலாவும் எலிவாலு ஜடை சுமதியும்தான்( அவங்க இதை படிக்க மாட்டாங்கன்ற தைரியம்தான்.. ஹிஹி..) மொதல்ல ஞாபகத்துக்கு வராங்க! வீட்டுப்பாடம் செய்யாததற்கு தண்டனையா ராமச்சந்திரன் வாத்தியாரு புள்ளைங்க நடுவுல உட்கார சொன்னப்ப தேம்பித்தேம்பி அழுதுகிட்டே( கொப்பரானை சத்தியமா.. நம்புங்க..) உட்கார்ந்திருந்தது ஞாபகமிருக்கு. அப்பறமா பலப்பம் கடன் வாங்கனது, எலந்தவடை பிடுங்கித்தின்னது, கமர்கட்டை சட்டைல வச்சு சுத்தி காக்காகடி போட்டதுன்னு நிறைய கொடுக்கல் வாங்கலுக்கு அப்பறம் பலமான நட்பா மாறிடுச்சி. இதை தெரிஞ்சுகிட்ட வாத்தியாரு அதுக்கப்பறம் வீட்டுப்பாடம் செய்யலைன்னா தண்டனைய மாத்தி கையை பழுக்கவைச்சது வேறகதை( பிஞ்சிலே பழுத்தவன்னு நெனச்சிருப்பாரோ? ) இதாவது பரவாயில்லைங்க. அவங்க பொம்பளைப்புள்ளைங்கன்ற ஒரு தகவல் தான் எங்களுக்குள்ள வித்தியாசம். இந்த பத்தாவதுல இருந்து பண்ணெண்டாவது முடியறவரைக்கும் இருக்கு பாருங்க. புள்ளைங்களை பார்த்துட்டா எதுக்கு நிக்கறோம்? எதுக்கு தலைய சரிபண்ணறோம்? எதுக்கு மூஞ்சில ஒரு சின்ன கலவரத்தை கொண்டு வரோம்? தாண்டி போனப்பறம் எதுக்கு கெக்கெபிக்கேன்னு இளிக்கறோம்னு ஒரு எழவும் புரியாது! இத்தனைக்கும் அதுங்க நம்பள ஏறெடுத்தும் பாக்காம ஏதோ இப்போதான் இந்த வழில கால்பவுனு மூக்குத்திய தொலைச்சுட்ட மாதிரி தலைய 90 டிகிரிக்கு கவுத்துகிட்டு போயிருக்கும்! வகுப்புக்குள்ள கொஞ்சம் தேவலாம். அவங்களையெல்லாம் இடப்பக்கமாவும் பசங்களையெல்லாம் வலப்பக்கமாவும்(ஏன்னு என்னை கேக்காதீங்க! ) ஒக்காரவச்சிருப்பாங்க. முன்னாடி இருந்து பார்த்தா டீச்சருக்கு ஏதோ ஒரு தனித்தனி தீவுக மாதிரிதான் தெரியும். ஆனா தகவல் பறிமாற்றங்களே பின்னாடி கடைசி வரைசைல தான் நடந்துகிட்டு இருக்கும்! டிபன்பாக்சை மாத்தி திங்கறது, ரெக்கார்டு நோட்டை எழுதி படம் போட்டு குடுக்க சொல்லறது(பாவம்.. ரெண்டுதடவை எழுதுவாளுங்க..) சும்மாவே பேசரதுக்காக பென்சில் பேனா கேக்கறது, வேணும்னே சத்தமா ஜோக்குக்கு பெனாத்தறதுன்னு ன்னு எப்பபாரு துருதுருன்னு இருப்போம். ஜிம்மிக்கு ஒரு வேலையுமில்ல... நிக்க நேரமுமில்லைன்ற மாதிரி தான்! எதைச்சொன்னாலும் சிரிப்பாளுங்க! நமக்கே சில சமயம் சந்தேகம் வந்துரும்! நெஜமாவே சிரிக்கறாங்களா இல்லை ஏத்திவிடறாங்களான்னு! சில சமயம் எவளாவது திடீர்ன்னு சில நாளு வரமாட்டாளுக.. குத்துமதிப்பா தெரிஞ்சாலும் சும்மா ஏன் லீவுன்னு கேட்டு வைப்போம். அதுக்கும் குசுகுசுன்னு சிரிப்பாங்களேதவிர பதில் வராது!

கல்லூரி ஒரு புதிய உலகம். ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்தாலும் போகப்போக சரியாகிடுச்சு. இன்னதுதான்னு இல்லாம அத்தனையும் கடலையா போட்டு போட்டு தயக்கம், கூச்சமெல்லாம் போய் தோழின்ற உறவுன்னா என்னன்னு அங்க இருந்துதான் தெரியவந்துச்சு. பெண்களுக்குன்னு ஒரு தனி உலகம் இருக்குன்னும், அவங்களோட சின்ன சின்ன ஆசைங்களும், அவங்ககூட எப்படி பழகனும்னும், ஆம்பளைங்களா நாம செய்யற தப்புகளும், கூத்தடிக்கறதே வாழ்க்கை இல்லைன்னும், கொஞ்சமாவது பொறுப்பா படிச்சு ஒரு வேலைக்கு போனாதான் ஒரு மதிப்புன்னும் ஒரு அரைவேக்காடா தெரியறதுக்குள்ள கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சி. இந்த காலத்து பயபுள்ளைங்க்களுக்கு பத்தாவது படிக்கறப்பவே இந்த அறிவு வந்துடுது! பார்த்தா பொகையாத்தான் இருக்கு!

நான் போட்சுவானால கொஞ்சகாலம் குப்பை கொட்டுனதைப்பத்தி சொன்னேன் இல்லைங்களா? அங்க ஒவ்வொரு அயல்நாட்டானை வேலைக்கு எடுத்தாலும் அதுக்கு சம்மா ஒரு உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்கறது அரசாங்க விதி. அங்க பள்ளிப்படிப்பை தாண்டுனாலே அரசாங்க வேலை கிடைச்சுடும். எப்படியாவது உள்ளூர் மக்களை படிக்கவச்சிடம்னுன்னு கல்வி கல்லூரி வரை இலவசம். வைரத்துலயும் மாட்டுக்கறிலையும் நிறையா காசு வந்தாலும் அந்த பூர்வகுடி மக்களுக்கு படிப்புமேல அவ்வளவு நாட்டமில்லை. விவசாயம் பெருசா ஒன்னுமில்லைன்னான்லும் மாட்டுப்பண்ணைதான் முக்கியதொழில் மக்களுக்கு. கல்யாணம்ற ஒரு கன்செப்டு ரொம்ப அரிது. யார் வேனா கூடி வாழலாம். 4 பெண்களுக்கு ஒரு ஆம்பளைக்கறது தான் அங்க ஜனத்தொகை கணக்குல தெரிஞ்ச விசயம்! இன்னொரு அதிர்சிகரமான தகவல் என்னன்னா அரசாங்க கணக்குபடியே அங்க 10துக்கு 3 பேருக்கு எய்ட்சு. பார்த்துகிட்டே இருப்போம். திடீர்னு இளைச்சு துரும்பா போயிருவாங்க. அப்பறம் சில மாசங்கள் ஆபீசுக்கு வரமாட்டாங்க. திடீர்னு ஒருநாள் உடம்பு சரியில்லாம காய்ச்சல்ல இறந்துபோயிட்டதா நியூசு வரும். எல்லா இறப்புச்சடங்குகளும் ஞாயித்துகிழமைதான் சர்ச்சுல நடக்கும். அந்த வாரத்துக்குள்ள எத்தனை பேரு இறந்தாங்களோ அத்தனை பேருக்கும் சேர்த்து.

இந்த உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்ற விதிப்படி பார்ட்டைம் டிகிரி படிச்சுகிட்டு வேலைக்குவந்தவதான் எமிலி. 22 வயசு இருக்கும் அவளுக்கு அப்ப. அவங்களுக்கே உரிய அடர்ந்த கருப்பு நிறத்துல இருந்து கொஞ்சம் மாறுபட்டு நம்ப ஊரு மாநிறத்துல இருப்பா. நல்ல வெடவெடன்னு உசரம். ஓங்கி ஒரு அப்பு விட்டான்னா அப்படியே சுருண்டு விழுந்துடுவோம். அப்படி ஒரு ஆகிருதி. நல்லா ஒரு ஜான் நீளத்துக்கு வாயின்னும், எப்போதும் சிரிக்கற கண்கள்னும், விடைத்த மூக்குன்னும் மொகமே ஒரு களையா இருக்கும்! தலைமுடிய திரிதிரியா சடைபோட்டு தென்னைமர உச்சி மாதிரியே நம்ப ஒலங்கோ ஸ்டைல்ல இருக்கும். (தலையப்பத்தியெல்லாம் நான் பேசவே கூடாதுங்க! போன வாரம் என் ஒரு வயசு பொண்ணு சீப்பை வச்சு விளையாடிக்கிட்டு இருக்க, என் சகதர்மினி "அப்பாவுக்கு சீவி விடும்மா"ன்னு சொல்ல, சீப்போட பக்கத்துல வந்து தலைய பார்த்து ஒரு செகண்டு யோசிச்சிட்டு அப்பறம் முடி இருக்கற இடமா என் கைல சீவ ஆரம்பிச்சுட்டா! தாங்க முடியாத சிரிப்பு என்னவளுக்கும் அதை பார்த்து என் புள்ளைக்கும்! ஹா! என்ன ஒரு ஆணவ சிரிப்பு? ஒரு நாளைக்கு வச்சுக்கறேன் அவங்களை! #@*# )

எமிலிய பார்த்தவுடனே ஒரு உற்சாகம் பத்திக்கும். காலைல ஆபீசுக்குள்ள வந்தவுடனே எல்லாத்துக்கும் ஒரு "துமேலாரா.."( அவங்க மொழில Good Morning..") அப்ப இருந்து சாயந்தரம் போற வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பா. எந்த வேலை சொன்னாலும் முகம் சுளிக்காம செய்வா. யாருக்கு பொறந்தநாளுன்னாலும் எல்லாத்துகிட்டயும் காசு கலெக்ட்பண்ணி கேக், பலூன், பாட்டுன்னு அன்னைக்கு சாயந்தரம் ஆபிசையே கலக்கிருவா... கவருமெண்டு ஆபீசுல மத்தியானம் எல்லாரும் ஒன்னா ஒக்காந்து சாப்படற பழக்கத்தையும் அவதான் ஆரம்பிச்சா.. கவருமெண்ட்டு ஆபீசுல எங்களுக்கு என்ன வேலை? நிறைய பேசுவோம்! அவங்க தினமும் மூனுவேளையும் மாட்டுக்கறி சாப்படறது, இசையும் நடனமும் ஏன் அவங்க ரத்ததுல ஊறிப்போயிருக்குது, ஏன் இப்படி நாட்டுல இருக்கற வளத்தையெல்லாம் வெளிநாட்டுக்கு எழுதிக்கொடுத்துட்டு வெள்ளந்தியா இருக்கறாங்க? ஏன் கல்யாணம் பண்ணிக்காமயே ஆம்பளைங்க ஒன்றுக்குமேற்பட்ட பெண்களோட வாழறாங்க? அதை எப்படி அங்க இருக்கற பொம்பளைங்க சகிச்சுக்கறாங்கன்னு நிறைய பேசுவோம். அவளுக்கும் நம்ப ஊரு கதைகளையெல்லாம் கேக்க கேக்க ஆச்சரியமா இருக்கும். அது எப்படி அப்பா அம்மா பாக்கறபெண்ணை கல்யாணம் பண்ணிக்கறோம்? எப்படி ஒருத்தருக்கு ஒருத்தரு பழகாமையே கல்யாணம் நடக்குதுனு ஆயிரம் கேள்வி கேப்பா! எவ்வளவு சொன்னாலும் அவளுக்கு புரியாது! ஆனா ஒரு விசயதுல அவ ரொம்ப உறுதியா இருந்தா! மத்தவங்களை போல இல்லாம கடைசிவரைக்கும் அவள் காதலன் கூடத்தான் வாழப்போறேன்னு சொல்லுவா. ரெண்டுபேரும் 4 வருசமா காதலிக்கறதாவும் 2 வருசமா ஒன்னா சேர்ந்து வாழறதாவும் இப்படி ஒரு அருமையான காதலன் கிடைச்சதுக்கு ரொம்ப அதிர்ஷ்டசாலின்னும் இன்னும் 1 வருசம் வேலை பார்த்துட்டு கொஞ்சம் காசு சம்பாதிச்சி வீடு வாங்குனதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் அப்பறம் குழந்தைகளை பெத்துகிட்டு அவங்களை கவனிச்சுகிட்டே அவன்கூட கடைசிவரை வாழப்போவதாவும் கண்களில் கனவுகளோட சொல்லும்போதே எனக்கு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தத்தோனும். அவள் காதலன் ஒரு பாரில் DJ வா வேளை பார்த்துக்கிட்டு இருந்தான். அதே தென்னைமரத்தலையோட தென்னைமர உசரத்துல பாதியா, கால்ல முட்டிக்கு தொங்கற லூசான ஜீன்சை போட்டுகிட்டு கழுத்துல சைக்கிள் செயின் சைசுக்கு ஒரு தங்க செயினை போட்டுகிட்டு சாயந்தரமா சில நாட்கள் அவளைகூட்டிகிட்டு போக வரும்போது எங்களை பார்த்து கை விரல்களை மடக்கி ரேப்பர் ஸ்டைல்ல "யோ மேன்" அப்படிம்பான்! நாங்களும் பயம் கலந்த ஒரு சிரிப்போட அவன் ஸ்டைல்லயே "யோ.." அப்படிம்போம். பார்க்க ஜோடிப்பொருத்தம் நல்லாத்தான் இருக்கும்.

கொஞ்சநாள் கழிச்சு ரெண்டுபேரும் சேர்ந்து வீடு ஒன்னு வாங்கப்போறதாவும் இன்னும் 3 மாசத்துல கல்யாணம் பண்னிக்கப்போறதாவும் சந்தோசமா சொன்னா. அங்க அப்பப்ப ஊரை விட்டு போறவங்க வீட்டுப்பொருள்களை விக்கறதுக்கு ஹோம்சேல் போடுவாங்க. ஒரு நாள் அவளுக்கும் கூட வேளை செய்யற இன்னொரு ரெண்டு பெண்களுக்கும் ஒரு ஹோம்சேல்ல சிலது வாங்க வேண்டியிருக்குன்னு கார் இல்லாததால என்னை கூட்டிகிட்டு போக சொன்னா! மத்தியானமா சாப்டுட்டு நாலுபேரும் கிளம்பினோம். அங்க நாலு மடக்கற நாற்காலியும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வாங்குனா. மத்த ரெண்டுபேரும் பீங்கான் டின்னர் செட்டுவாங்குனாங்க. எமிலிகிட்ட பணம் பத்தலை. நான் ஒரு 100 பியூலா குடுத்தேன். எல்லாத்தையும் கார் டிக்கில போட்டுக்கிட்டு கிளம்பினோம். போற வழில வீட்டுல இறக்கிவைச்சுட்டு போலாம்னு சொன்னதால பேசிக்கிட்டே அவளோட வீட்டுக்கு போனோம். கல்யாணத்துக்குள்ள இன்னும் என்னென்ன வாங்கனும்னு பேசிக்கிட்டே வர்றா. நான் என்னோன கல்யாணப்பரிசா அந்த 100 பியூலாவ வைச்சுக்கன்னு சொல்லறேன். அவ அதை மறுத்துட்டு கடன் வாங்கினா திருப்பிக்கொடுக்கறதுதான் சரின்னும் நான் அவ கல்யாணத்துக்கு அவ சொந்த ஊருக்கு எப்படி வரனும்னும் அங்க சர்ச்சுல என்னென்ன நடக்கும்னும் கதைகதையா சொல்லிக்கிட்டே வர அவ வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு முன்னால ஒரு பென்ஸ் காரு நிக்க முகத்துல ஒரு ஆச்சரியக்குறியோட எங்களை உள்ளே வரச்சொல்லிட்டு இறங்கி உள்ளே போனாள். நான் வாங்குன நாற்காலிகளை இறக்கி வீட்டு முகப்புல வைச்சிட்டு மைக்ரோவேவ் ஓவனை எடுத்துகிட்டு போறேன். வீட்டுக்கு உள்ளே இருந்து சண்டை போடற சத்தம்! ஒரு பொண்ணு அவசர அவசரமா ஏதோ கத்திகிட்டே வெளீல ஓடிவந்து பென்ஸ் காருல ஏறி சல்லுன்னு கிளப்பிகிட்டு போறா. பின்னாடியே எமிலியோட காதலன் எமிலிகிட்ட ஏதோ சொல்லிகிட்டே வரான். மொத்தமா உடைஞ்சுபோய் எமிலி வந்து காருல ஏறிக்கிட்டா! ஒரு நிமிசத்துல மொத்த நிலைமையும் எனக்கு புரிஞ்சிருச்சி. இவ ஆபீசுல இருந்து இவ்வளவுதூரம் மத்தியானம் வீட்டுக்கு வர வாய்ப்பே இல்லைன்னு வேற எவளையோ கூட்டிகிட்டு வந்திருக்கிறான் எமிலியோட காதலன்! கேட் கிட்ட இருந்து அவங்க மொழியான செட்சுவானால ஏதேதோ கத்தறான்! எமிலி கிளம்பி போலாம்கறா.

வாழ்க்கையின் மொத்த கனவுகளும், நம்பிக்கைகளும் சிதைந்துபோய் இனம்புரியாத விரக்தி முகம் முழுதும் இருக்க அது வரை ஆசை ஆசையாய் பேசிவத்த அவள் கல்யாண கனவுகளின் நாயகன் அவளை ஏமாற்றிதன் வேதனை, இவனை நம்பியா கடைசிவரை வாழத்துணிந்தோம் என்ற ஏமாற்றம், ஒரு அன்னியனான எனக்கு முன்னால் அவளது கனவுகள் சிதறிப்போனதன் துயரம் எல்லாம் கலந்து பேச வார்த்தைகளற்று ரோட்டை வெறித்தபடி என் தோழி எமிலி. என்ன சொல்வதென்று தெரியாத குழம்பிய மனநிலையில் நான் காரை ஒரு ஓரமாக நிறுத்துகிறேன். பின்னாலிருத்த அவளது நண்பிகள் இருவரும் செட்சுவானாவில் கோபமாக ஏதோ சொல்கிறார்கள். அந்த நிலையிலும் எமிலி "தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்... மொழி தெரியாத ஒருவர் கூட இருக்கும் போது இப்படி பேசிவது நாகரீகமல்ல..." என்று கம்மிய குரலில் மென்மையாக சொல்லுகிறாள். எனக்குள் ஏதோ உடைந்துவிட்டது. வாழ்க்கையில் முதன்முதலாக துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு சினேகிதியின் கைகளை என்னையுமறியாமல் ஆதரவாக பற்றுகிறேன். அவள் இதைத்தான் எதிர்பார்த்தவள் போல என் தோளின்மீது சாய்ந்து கதறி அழுகிறாள். அவளது கண்ணீர் என் சட்டையை நனைக்க அப்போதும் பேச வார்த்தைகளின்றி சாலையை வெறித்தபடி நான். என்ன குறை எமிலிக்கு? பார்க்க நன்றாக இல்லையா? நாகரீகம் இல்லையா? அழகுடன் அன்பும் பண்பும் சேரும்போது பார்க்கும்போதே மனதில் ஒரு மரியாதை தரக்கூடிய தேஜஸுடையவள். இவளிடம் கிடைக்காத எதைத்தேடி அவன் இன்னொருவளிடம் சென்றான்? அதுவும் கல்யாணதேதி குறித்தபிறகு? அனைத்தும் நிறைந்த இவளை இழந்துவிட்டு அவன் வேறு எங்கு எப்படி நன்றாக வாழ்ந்துவிடப்போகிறான்? இந்த அன்பை ஏமாற்றிவிட்டு வேறு எங்கு அவன் மனநிம்மதியோடு இருந்துவிட முடியும்? மனதைத்தைக்கும் கேள்விகளுடன் ஒரு ஆணாக என்மீதே எனக்கு வெறுப்பாக மெதுவாக அலுவலகம் வந்துசேர்ந்தோம். சில நாட்கள் விடுமுறை வேண்டுமென கேட்டுச்சென்றாள் எமிலி.

ஒரே மாசம்தான்! இழந்தவைகளையும், துயரங்களையும் சுத்தமாக துடைத்துவைத்துவிட்டு மீண்டும் அதே எமிலி! அதே உற்சாகமான "துமேலாரா". அதே பண்பான செயல்கள்ன்னு திரும்பவும் எங்கள் எமிலி. அவள் கல்யாணத்தை நிறுத்திவிட்டதாகவும், இப்போது அவனிடன் சேர்ந்துவாழ்வதில்லையெனவும் அவள் நண்பிகளிடம் கேட்டறிந்தேன். அவளிடம் நேரடியாகக்கேட்டிருக்கலாம்தான். ஆனால் மீண்டும் பழய கதையைபேசி அவளே மீண்டு வந்த சோகத்தில் இருந்து மீண்டும் அவளைத்தள்ள எனக்கு திரானியில்லை. முகம் நிறைய சிரிப்புடன் பார்த்துப்பழகிய எமிலி அதே எமிலியாக இருக்கட்டும்.

எப்பொழுதாவது அவளிடமிருந்து இப்பொழுதும் e-Mail வருவதுண்டு. அதுக்கப்புறம் எமிலி டிகிரி முடித்துவிட்டு மேல படிக்க UK போய்விட்டாள். என் கல்யாண போட்டோக்களை பார்த்துவிட்டு ஒரே சந்தோசம் அவளுக்கு. நானும் அப்பா அம்மா பார்த்த பொண்ணையே கல்யாணம் கட்டிக்கிட்டேன்னு ஆச்சரியம்(இல்லைன்னா எனக்கு வேற வழி இல்லைனு அவளுக்கு எங்கே தெரிஞ்சிருக்கப்போகுது :) ). என் பொண்ணுக்கு ஒரு ஃபிராக்கும் குட்டி டெட்டியும் அனுப்பினாள். ஆனா அந்த 100 பியூலாவை மட்டும் என்னைக்கும் திருப்பித்தரமாட்டேன் அப்படின்னு உறுதியா எழுதிட்டாள்!

கருத்துகள்

 1. இளவஞ்சி,
  நீங்க இன்னும் கொஞ்சம் எழுத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு நிறைய எழுதணும்னு ஆசையா இருக்கு. ரொம்ப இயல்பா இருக்கு உங்க எழுத்து. அது உங்களை இன்னும் மேலே மேலே உயர்த்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அதெப்படி எல்லா பதிவையும் இவ்வளவு சுவாரஸ்யமாவும், நகைச்சுவையோடும் ஆனா கனம் குறையாமல் எழுதறீங்க? வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. நல்ல இடம் உங்களுக்காக தமிழ் வட்டத்தில் காத்திருக்கிறது.தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. சாராலூ என்ற என் தோழியை நினைவுபடுத்தி விட்டீர்கள். நன்றாக எழுதுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஏம்பா சாயந்தரம் ஒரு பின்னூட்டம் போட்டேனே?! சரி... அதுக்காக சொல்லாம போயிடலாமா? இன்னொரு தரம் போடறேன்.

  எமிலி தொடங்கி உங்கள் எல்லா நட்சத்திர பதிவுகளையும் வாசித்தேன். இவ்வளவு நாள் உங்கள் பதிவுகளை வாசிக்காமலே கடந்தது தெரிந்தது. ரசனையான பதிவுகள்.

  நிர்மலா.

  பி.கு: நமக்கு காந்திபுரத்தில காட்டூருங்கோ.

  பதிலளிநீக்கு
 6. நல்ல இடம் உங்களுக்காக தமிழ் வட்டத்தில் காத்திருக்கிறது.தொடருங்கள்

  very nice

  பதிலளிநீக்கு
 7. இளவஞ்சி,

  நான் சொல்ல நினைச்சதை மேலே எல்லாருமா சேர்ந்து சொல்லிட்டாங்க.

  வாழ்த்துக்கள்!!!

  நல்லா இருங்க.

  என்றும் அன்புடன்,
  துளசி.

  பதிலளிநீக்கு
 8. நல்ல பதிவு, இளவஞ்சி!

  --00--

  தனிய மடல் போடலாமா பொதுவில் எழுதலாமா என்று யோசித்துவிட்டு, பொதுவிலேயே எழுதுகிறேன்.

  வலைப்பூவில் ஆசிரியர் என்று தொடங்கியபோது நான் எதிர்பார்த்தது இந்த வாரம் முழுமையாக நிறைவேறி இருக்கிறது.

  வலைபதிவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை பலரது கவனத்துக்கு கொண்டு செல்வது ஒரு முக்கிய நோக்கம்.

  நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படும் பலர், பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள் என்றாலும், உங்களளவு யாரும் ஈர்க்கவில்லை! இந்த வாரம் முழுக்கவும், இங்கே வரும் பின்னூட்டங்களைப்பார்க்க பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நடுவில் அவ்வப்போது வந்துபோகும் சோர்வை இது துரத்தியடிக்கும்.

  தொடர்ந்து எழுதுங்கள் இளவஞ்சி!

  நல்லதொரு வாரத்தைத் தந்திருக்கிறீர்கள். நன்றி!

  -மதி

  பதிலளிநீக்கு
 9. பட்டைய கிளப்பிட்டீங்க..
  தருமி சொன்னதே..

  பதிலளிநீக்கு
 10. தருமி & பாலாஜி-பாரி சொன்னதே.. ;o)

  very nice Ilavanji.

  பதிலளிநீக்கு
 11. என்னை உயரத்தில் வைத்துப்பார்க்கவிரும்பும் அண்ணம் தருமி அவர்களே! சிங்கையில் இருந்து வாழ்த்தும் வழக்குரைஞர் ரம்யா அவர்களே! ஹைதராபாத்து அரசகவி மணிகண்டன் அவர்களே! நமக்கு நாமளிக்கும் அங்கீகாரமே மிகப்பெரிது என அவரது போனபதிவில் அழுத்தம்திருத்தமாக கூறிய தேந்துளி அவர்களே! எங்க ஊரு மறப்பெண் நிர்மலா அவர்களே! தனிச்சுட்டி இல்லாத ஆன்டனி அவர்களே! பாசமிகு அக்கா துளசி அவர்களே! வாய்ப்பளித்த மதியக்கா அவர்களே! தருமியை வழிமொழிந்த பாலாஜி-பாரி அவர்களே! பாலாஜி-பாரியை வழிமொழிந்த ஜில்லு ஷ்ரேயா அவர்களே! (யாராவது சோடாவை ஒடச்சு இவன் வாயில ஊத்துங்கப்பா.. இம்சை தாங்கல..!)

  ரொம்ப மகிழ்ச்சியா இருக்குதுங்க உங்க ஒவ்வொரு பின்னூட்டங்களை பார்க்கும்போதும்!

  வேறென்ன சொல்லறதுன்னு தெரியலை!

  உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. இளவஞ்சி நாட்குறிப்பெடுக்கும் பழக்கம் இருக்கிறதா? அழகான வார்த்தைகள் அறிவான நிகழ்வுகள் என கலக்குறீங்க. மனித உள்ளங்களைப் பார்க்கும் உங்கள் பண்பு என்னை வெகுவாக கவர்கிறது. வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 13. படமும் நினைவுகளும் நல்லா இருக்கு. கிழக்கே பார்த்தால் விடியலாய் இருக்க ஒவ்வொருவருக்கும் இருக்கணும் ஓர் அன்புத்தோழி..எனக்கும் இருக்கா..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு