முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விட்டில் பூச்சிகள்


"அய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..."


இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம்.

"வேற ஏதாவது பிரச்சனை இதுல இருக்கா?" ன்னு கேட்கறார் அப்பா.

"இல்லங்கய்யா.. FIR கூட போடலை. பிரின்ஸ்பாலே சும்மா மெரட்டி மட்டும் விட்டுடுங்கன்னு சொன்னாதால கூட்டிக்கிட்டு வந்தோம். தம்பி எதுவும் வாயத்தொறந்து சொல்லாததால ஏட்டையா லைட்டா தட்டிட்டாரு... தயவு செஞ்சு மன்னிச்சுக்கங்கய்யா!" ங்கறாரு இன்ஸ்பெக்டரு. இவ்வளவு நேரம் என்னைப்போட்டு மெதிச்சவரு இப்போ மொகமெல்லாம் வெளிறிப்போய் கெஞ்சறாரு. ம்ம்ம்.. ஆளுக்கேத்த அதிகாரம். இவனுங்க செஞ்சா சரி! நாம செஞ்சா தப்பு!

சடசடன்னு ஏட்டையா முன்னாடி ஓடி வராரு. "அய்யா.. மன்னிச்சிருங்கய்யா. தம்பி யாருன்னு தெரியாததால செஞ்சுட்டேன்.. நைட்டுக்கு டிபன் டீயெல்லாம் வாங்கிக் குடுத்தனுங்க. நல்லா சாப்டாப்புல..." இது ஏட்டு! லத்தில போட்டுப் பின்னிட்டு ரெண்டு பரோட்டா வாங்கிக் கொடுத்ததை சொல்லி தப்பிச்சிக்கறாராம்! ஆனா காலைல சாப்புட்டது. ஏட்டு புண்ணியத்துல புரோட்டா அமிர்தமாத்தான் இருந்தது.

"தேவசகாயம்.. அவனை கூட்டிக்கிட்டு போங்க.. நான் பேசிட்டு வரேன்..." ங்கறாரு அப்பா! என்னத்த பேசறாங்களோ!? சகாயம் அண்ணன்தான் அப்பாவுக்கு புதுசா வந்த போலீஸு டிரைவரு. ரெண்டு மாசம்தான் ஆச்சு! 45 வயசுலயே மூஞ்சில இருக்கற கொத்துமீசையும் நரைச்சுப்போய், பெரிய லாடுலபக்குதாசு மாதிரி அதை நீவிக்கிட்டே இருப்பாரு! ஆனா, நொடிக்கு நூறுதரம் "அய்யா.. அய்யா.. " பாட்டுதான். ஐஜி ல இருந்து ஆர்டர்லி வரைக்கும் படிப்படியா இந்த "அய்யா..." த்வனி ஏறிக்கிட்டே போகும். மதுரக்கார ஆளு. "என்னய்யா இப்பிடி பண்ணீட்டீக.."ன்னு பொலம்பிக்கிட்டே என்னயத் தூக்கிப்பிடிச்சி நிக்கவைச்சு வண்டிக்கு கூட்டிக்கிட்டுப் போனாரு. பாரா நிக்கற போலீஸுக்கு ஒரே ஆச்சரியம்! நாயி மாதிரி பொடனியில அடி வாங்கிக்கிட்டே போலீஸ் வேன்ல மத்தியானம் வந்தவன் இப்போ மரியாதையா ஜிப்ஸி ஜீப்புல போறானேன்னு! அப்பாவை பார்த்ததும் அவருக்கும் புரிஞ்சிருக்கனும். ஆனா பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வர்றப்ப இருந்த கேவலமான பார்வை இப்போ ஆச்சரியம் கலந்த எள்ளலான பார்வையா மாறியிருந்தது. அவ்வளவுதான்.

ஜட்டியோடு நிக்கவைச்சி அடிவாங்குன அவமானம் உள்ளுக்குள்ள புடிங்கித்திங்குது. ரெண்டு அடிக்கு ஒன்னும் தெரியல... அதுக்கப்பறம் ஒவ்வொரு அடிக்கும் புட்டம் தோலோடுப் புடுங்கறமாதிரி வலிக்க "அய்யோ.. அம்மா..."ன்னு வாய்விட்டு கதறுனதை நினைச்சா, அந்த அசிங்கம் வேற அழுகையா முட்டிக்கிட்டு நிக்குது. சகாயம் கைத்தாங்கலா கொண்டுபோய் ஜீப்பு பின்சீட்டுல படுக்க வைச்சாரு. சண்டைல கிழிஞ்சுபோன சட்டைய ஒரு போலீஸ்காரரு ஓடிவந்து கொடுத்துட்டு போனாரு. கணேசும், தங்கராசும் 10 மணிக்கே போயிட்டானுங்க. அவங்க அப்பாம்மா தலதலையா அடிச்சுக்கிட்டு வந்து அழுது மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. நெனைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு. மத்தியானம் வரைக்கும் இருந்த கெத்து என்ன? இப்போ இருக்கற கேவலம் என்ன? சங்கரு குரூப்பை கெமிஸ்ட்ரி லேபுல இருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் தொரத்தி தொரச்சி அடிக்கறப்ப வலின்னா என்னன்னு தெரியலை! இப்போ இவனுங்க ரவுண்டு கட்டி அடிக்கறப்ப வலில அவனுங்களைப் பத்தி நினைக்கக்கூட முடியலை! என்னது? எதுக்கு அடிச்சமா? ஒம்மாள.. அவனுங்களுக்கு இருக்கற திமிருக்கு போட்டுத் தள்ளியிருனும். ஒதடு கிழிஞ்சதோட தப்பிச்சிட்டானுங்க. எல்லாம் அந்த ஓடுகாலி அனிதாவால வந்தது. இத்தன நாள் எங்கூட சுத்திட்டு, இப்போ திடீர்னு வந்து என்ன விட்டுடுன்னா?! நான் என்ன கேனயனா? லவ் பண்ண ஆரம்பிக்கறப்ப நான் கேவலங்கறதெல்லாம் தெரியலையா? 14 அரியரு வைச்சிருந்தா அவனெல்லாம் கிரிமினலா? அந்த நாயி சங்கரு கூட சேர்ந்தவொடனே நானெல்லாம் உருப்படாத பொறுக்கின்னு கண்டு புடிச்சிட்டா அந்த மேரிக்யூரி! சொல்லும்போதே பளார்னு ஒன்னு அப்பியிருக்கனும். கேண்டீன்ல அத்தனபேரு முன்னாடியும் செய்யமுடியல...

இதெல்லாங்கூட சரிங்க.. போன வருசம் வீட்டுல இம்சை தாங்காம 10 ரூவாய தூக்கிட்டுக் கெளம்பிப்போக, இந்த வெளங்காத வால்டரு.. அதாங்க எங்க அப்பா... சேலத்துல வைச்சு அமுக்கி ஒரே நாள்ல வீட்டுக்கு கொண்டு வந்துட்டாரு. இந்த கதை வேற அவனுங்க குரூப்புக்கு தெரியும். ரெண்டு தடவை ஒதை வாங்கியும் கும்பல் சேர்ந்துக்கிட்டு போறப்ப வர்றப்ப எல்லாம் அவன் "விட்டில் பூச்சியின் வாழ்வுக்காலம் எவ்வளவு?"ன்னு கொரல் கொடுக்க, கூட இருக்கற அள்ளக்கைங்க "ஒரு நாள்"ன்னு சவுண்டு விடுங்க. இருங்கடா ஒருநாள் உங்களுக்கெல்லாம் பூஜைன்னு நெனைச்சுக்கே இருப்பேன். இன்னைக்கும் அந்த அனிதா என்னை கழட்டி விட்டுட்டு அவனுங்ககூட சேர்ந்தப்புறம், காலைல இதையே சொல்லி என்னைக் கிண்டுனப்ப முடிவு செஞ்சுட்டேன். அவனுங்களுக்கு இன்னைக்கு வைக்கறதுன்னு... நாங்க 12 பேரு. அவனுங்க 8 பேரு. அந்தப் பொட்டநாயி பார்க்கப்பார்க்க இந்தச் சொறிநாயி எங்கையால அடிவாங்கனும்னுதான் மத்தியானமா அவ லேப் முடிச்சதும் இவனுங்க வழியறதுக்குப் போவானுங்கன்னு கணக்குப்பண்ணி வளைச்சது! ஸ்டம்பை என் கையிலப் பார்த்ததுமே மக்கா தப்பிச்சி ஓடுனானுங்க. லேபுல இருந்து தொரத்துனதுல வாகாக் கெடைச்சான் பஸ்ஸ்டாப்புல. அப்படியே சட்டையப் புடிச்சிக் கவுத்து ரெண்டு மிதி நெஞ்சுல! ஸ்டம்புல மூஞ்சிலயே ரெண்டு போடு. அதுக்குள்ளத் தகவல் போய் வேனோட வந்துட்டானுங்க நம்ம கடமை வீரனுங்க... அவனவன் தப்பிச்சு ஓடிட்டதுல மாட்டுனது நாங்க மூனுபேருதான். காலேஜ்ல இருந்து 2 கிலோமீட்டருதான் போலீஸ் ஸ்டேசன். அடிக்கடி NH47னை ப்ளாக் செஞ்சு ஸ்ட்ரைக் செய்வோங்கறதால பசங்க எங்க ஓடுனா எங்க மடக்கலாம்னு அத்துப்படி அவனுங்களுக்கு. போன தடவை "போலீஸ் மாமா ஒழிக!"ன்னு சவுண்டு உட்டதெல்லாம் மனசுல வைச்சிருந்திருக்கனும்! இந்தமுறை அடிதடிங்கறதால சென்னியப்பன் கோயிலை தாண்டி ஓடறப்பவே அமுக்கி இழுத்துக்கிட்டு வந்துட்டானுங்க! ம்ம்ம்.. மாட்டுனது நாங்க மூனே பேரு! விடுவானுங்களா? தொவைச்சுட்டானுங்க.

ஏன்னே தெரியல! இந்த அப்பாவை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது.
அந்தாளு மூஞ்சியவே பார்க்கப் பிடிக்கலை. தொட்டது அத்தனைக்கும் ஒரு கேள்வி! இல்லைன்னா அறிவுரை! ஏதோ நாமெல்லாம் இன்னும் பால்குடிக்கற பப்பா மாதிரி. அரியரு வைச்சா லைப்பே அவ்வளவுதானா? அடுத்தமுறை ஒண்டே விளையாண்டா முடிஞ்சது. இதுக்கெல்லாம் திட்டு. எல்லாத்தையும் தாங்கிக்கலாம். ஆனா எப்பப்பாரு "நீ இப்போ என்ன செஞ்சிட்டு வர்றங்கறது எனக்கு தெரியும்!"ங்கற அந்த பார்வையைத்தான் தாங்கவே முடியாது. பேச்சுவார்த்தை நின்னுபோய் 2 வருசத்துக்கு மேல ஆகுது. இன்ஸ்பெக்டரு ரூம்ல பெரிய தேவரகசியங்களை எல்லாம் பேசி முடிச்சிட்டு, இப்பவும் அந்த இறுகிப்போன மொகத்தோட ஜீப்புல வந்து முன்னாடி ஏறிக்கிட்டாரு. முன்னாடி இருக்கற வயர்லெஸ்சை எடுக்கும் போதுதான் பார்த்தேன். கைகள் நடுங்குது அவருக்கு. இதுக்கு முன்னாடி ஒரு தடவை வீட்டுல அவரு எதையோ தேடப்போய், என் கப்போர்டுல இருந்து அந்த வீடியோ கேசட்டை எடுத்தபோதும் இதே மாதிரி எதுவும் கேக்கமுடியாம உணர்ச்சிகளற்ற முகத்துடன் கைகள் நடுங்க என்னை பார்த்தது நெனைவுக்கு வருது. அவருக்கும் அவமானமாய்த்தான் இருந்திருக்க வேண்டும். தனக்குக்கீழே உள்ள அதிகாரியிடம் தலைகுனிந்து பெத்த மகனுக்காக நிக்கனும்னா எந்த அப்பனுக்கும் அவமானமாய்த்தான் இருக்கும். இவரு என்ன பெரிய ஸ்பெஷலா?!

"சகாயம்... வண்டிய வீட்டுக்கு விடுங்க"ன்றாரு அப்பா! எனக்குக் கோபம் தலைக்கேறிடுச்சு. இவ்வளவு நேரம் விழுந்த அடிகளால் பயந்துபோய் அடக்கிவைக்கப்பட்டிருந்த என் கோவம், எதிர்ப்புகள் வராத தகுந்த இடம் கிடைத்ததும் குபுக்குன்னு கெளம்புது. "அந்த நாசமாப்போன வீட்டுக்கெல்லாம் வரமுடியாது! வண்டி அங்க போறதா இருந்தா இப்பவே குதிச்சிடுவேன்"ன்னு கத்தறேன்! அடிபட்டவராக சடாரெனத் திரும்பி என்னை பார்க்கிறார் அப்பா. நான் பார்த்துவிட்ட ஒரு செகண்டில் முகத்தினைத் திருப்பி ரோட்டைப் பார்க்க்கிறார். சகாயம் அண்ணனுக்கு புரிந்திருக்க வேண்டும். எதுவும் சொல்லாமல் ஏறக்கட்டியப் பார்வையில் என்னை ரியர்வியூ கண்ணாடியில் பார்க்கிறார்.

வண்டி மெல்லத் திரும்பி ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்தது. டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆபீசுக்கு முன்னாடி வழக்கமாக ரோந்துக்கு 10 நிமிடம் நிறுத்தும் இடத்தில் நிற்கிறது. அப்பா வயர்லெஸ்சில் ஏதோ அழைப்பு வர சுரத்தற்ற குரலில் என்னவோ சொல்கிறார். சகாயம் அண்ணன் "தம்பி, இறங்கி வாங்க.. அப்படி போய் கொஞ்ச நேரம் காத்தாட ஒக்காருவோம்"ங்கறாரு... அப்பா சரின்னு தலையாட்ட அண்ணன் என்னை கைத்தாங்கலாப் பிடிச்சு இறக்கிவிடறாரு. எனக்கும் அவரு இருக்கற இடத்துல இருக்கப் பிடிக்காததால சகாயத்துடன் இறங்கி நொண்டிக்கொண்டே, கிழிந்த சட்டையை தடவிக்கொண்டே நடக்கிறேன். ரேஸ்கோர்ஸ் நடைபாதை ஓரமா ஒரு சிமெண்ட்டு பெஞ்சுல அப்பா திரும்பிப் பார்த்தா முதுகுமட்டும் தெரியறமாதிரி உக்கார்ந்தோம். நான் பேசற ஒவ்வொரு பேச்சுக்கும் திட்டலோ இல்லை வெறுத்து ஒதுக்கற பதிலோ கிடைச்சுத்தான் எனக்குப் பழக்கம். ஆனா இந்த டிரைவரு அண்ணன் நான் செஞ்சதுக்குக் கோவிச்சுக்காம பதமா பேசறதே இப்போதைக்கு என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. முன்னயெல்லாம் அம்மா கிட்ட போனாலும் இதே மாதிரி பேசுவாங்க. ஆனா இப்பவெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னா அந்த ஒப்பாரி தாங்கமுடியலை. இந்த பொம்பளைங்க ஒப்பாரி வைச்சா நல்லா வாயோட சேர்த்து ஒன்னு இழுத்து விடனும்.

பெஞ்ச்சுக்கு முன்னாடி ஒரு லைட்டுக்கம்பம். அந்த ட்யூப்லைட்டைச் சுத்தி ஒரே பூச்சிங்க. வாழ்கிற வாழ்க்கையின் ஆதாரம் அந்த லைட்டு கொடுக்கற வெளிச்சத்தைக் குடிச்சு முடிக்கறதுதான்னு ஓயாம சுத்திச்சுத்தி வருதுங்க! விடியற வரைக்கும் அந்த லைட்டை முட்டிமுட்டி பைசாவுக்கு பிரயோஜனமில்லாம சாகறதுதான் ஒரே குறிக்கோள் போல! இதுங்க பேரும் விட்டில் பூச்சிங்கதான் நினனக்கறபோது அந்த பண்ணாடை சங்கரு முகம் நினைவுல வந்து வெறுப்படிக்குது. சகாயம் திரும்பி ஜீப்பை பார்த்தாப்புல. அப்பா அங்கிருந்து பார்த்தா தெரியாதுன்னு தெரிஞ்சதும் சிகரெட்டு பாக்கெட்டை எடுத்தாரு. ஒன்னை பத்தவைச்சிக்கிட்டு "எடுத்துக்குங்க தம்பி.."ன்னு நீட்டுனாரு. எனக்கு இன்னும் அடங்கலை. எப்ப வேணா அழுகறதுக்குன்னு ரெடியா இருக்கறேன். இந்த நிலைல வார்த்தைக எல்லாம் கட்டுக்குள்ளயா இருக்கும்? "ஒரு மசுரும் வேணாம்"ங்கறேன். "சும்மா எடுங்க... நீங்க தம்மடிப்பீங்கன்றது எனக்குத் தெரியும்"கறாரு. "எனக்கு சார்மினார் புடிக்காது" மறுபடியும் வேகமா கத்தறேன். "அடடா! அதான் மேட்டரா"ன்னு சிரிச்சுக்கிட்டாரு.

நான் யாருமில்லாத ரோட்டை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கறேன். அவரு அனுபவிச்சு தம்மை இழுத்து முடிச்சாரு. அதுக்கப்பறமும் 10 நிமிசம் எதுவும் பேசாமலேயே போகுது. என்னோட மூச்சு இழுத்து விடுகிற சத்தத்தோட மெல்ல மெல்ல ஒரு கேவலும் சேர்ந்துக்கொண்டிருப்பதை அவரும் கேட்டிருக்கனும்போல. ஆதரவா என் கைகளைப் பிடிச்சுக்கிட்டு "ஏந்தம்பி.. ரொம்ப வலிக்குதா?"ங்கறாரு. நான் தலையை மட்டும் அசைத்து "ம்ம்ம்" என்கிறேன். கெண்டைக்காலில் வலி பின்னியெடுக்கிறது. மெல்ல அதை தொடுகிறேன். சகாயம் அதைப்பார்த்துட்டு சட்டுன்னு குனிந்து என் பேண்ட்டை மடிச்சு மேல தூக்கறாரு. பட்டை பட்டையா அழுத்தமில்லாத வரிகள். இப்போத்தான் வீங்க ஆரம்பிச்சிருக்கு.

"அடடா.. பலமாத்தான் போட்டிருக்கானுங்க"ன்றாரு. சலனமே இல்லாம அவரைப் பார்க்கறேன்.

"ஏந்தம்பி. ஒரு பொண்ணுக்காக இந்த அடி வாங்கறீங்களே.. அவளைத்தான் கட்டிக்கிடப் போறிங்களா?"ங்கறரு. இந்தாளுக்கு யாருக்கு சொன்னா அப்படின்னு எனக்கு சுருக்குங்குது.

"எந்த நாய்க்காகவும் இல்லை. இது வேற மேட்டரு!" என்கிறேன் எரிச்சலாக.

"தம்பி.. என்ன இருந்தாலும் அவங்க உங்ககூட படிக்கறவங்க.. தப்பா பேசக்கூடாது.. இன்ஸ்பெக்டரு சொன்னதுன்னு அங்க அரசல் புரசலா ஸ்டேசன்ல பேசிக்கிட்டாங்க"ன்னு சொல்லிக்கிட்டு மீசைய நீவிக்கிட்டாரு.

எனக்கு மனசுக்குள்ள என்னவோ செய்யுது. ம்ம்ம் யோசிச்சா அவளுக்குத்தான் அடி வாங்கியிருக்கேன். அவ வேணுங்கறதுக்குத்தான் இந்த வேலைய செஞ்சிருக்கறேன். அவ என்னை திரும்பிப்பார்க்கனும்னுதான் சங்கரை போட்டுப்பார்த்திருக்கேன்.

"பொண்னுகளை மெரட்டி மடக்க முடியாது தம்பி... நம்மளை கொடுத்து அவங்களை வாங்கனும்"னு சொல்லிட்டு சிரிக்கறாரு சகாயம். அவரு என்ன சொல்லறாருன்னு புரியலை! அவரு பேண்ட்டை மேலே தூக்கி காலைக் காட்டுனாரு. முட்டிக்குக் கீழே ஒரு ஜானுக்கு குதறிய தழும்பு. பார்க்கவே அருவருப்பா இருக்கு. சதை இருக்க வேண்டிய எடத்துல ஒரு பள்ளம் மாதிரி இருக்கு. அந்த குரூரம் தாங்க முடியாம பட்டுன்னு கண்ணை மூடிக்கிட்டேன்!

"பயப்படாதீங்க தம்பி.. நானும் உங்களை மாதிரிதான்.. இது எம்பொண்டாட்டிக்காக வாங்குனது. ஒரே ஊருதான். அவ வேற கேஸ்ட்டு. ஓடிப்போன ரெண்டாவது நாளே மாட்டிக்கிட்டோம். இழுத்துட்டு போய் பிரிச்சுட்டானுவ. கட்டிவைச்சி குஞ்சுக்குழுவானுல இருந்து பெருசுக வரைக்கும் என்னை சாதிய சொல்லிச்சொல்லி அடிச்சானுவ. ஊரே சாணியக் கரைச்சு மேல ஊத்துச்சு. இந்தக் காலுலயாடா எங்க பொண்ணை கூட்டிக்கிட்டு ஓடுனன்னு கடப்பாரைல ஒரு குத்து என் கால்ல.. சதைய தோண்டிட்டானுங்க.. ஆறுமாசம் ஆச்சு ஒடம்பு தேற்றதுக்கு மட்டும்!" ரோட்டை வெறிச்சபடி சொல்லிட்டு மீசைய தடவிக்கறாரு ஒரு தடவை. எனக்கு ஒரு நிமிசம் என் வலியெல்லாம் மறந்துட்டது.

"அடி வாங்கனும் தம்பி! வாழ்க்கைல அடிவாங்கித்தான் மனசுக்கு ஒரம்போட முடியும். அத்தன அடி வாங்கனதுக்கப்பறமும் அவளை மறுபடியும் கட்டிக்கிட்டே தீரனும்னு ஒரு உறுதியா ஊரை விட்டு ஓடிவந்து எங்க மாமா ஹெல்ப்புல போலீஸுக்கு விண்ணப்பிச்சு இன்னைக்கு 20 வருச சர்வீசு போட்டுட்டேன். வேலை கெடைச்சு ட்ரெய்னிங் முடிஞ்சு போஸ்டிங் கெடைச்ச அடுத்த மாசமே அப்பத்தின எங்க அய்யாக்கிட்டக் கெஞ்சி ஜீப்பை எடுத்துக்கினு அவரையும் கூட்டிக்கிட்டு ஊருக்குப்போய் கெத்தா அந்த புள்ளையக் கூப்பிட்டு விசாரிக்க வைச்சேன். அவ திரும்பவும் என்னைப் பார்த்ததும் கதறிக்கிட்டு வர, வயசுக்கு வந்தவங்களை விருப்பத்துக்கு மாறா கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு மெரட்டி எங்காளு கிட்ட ஒப்புமை வாங்கிட்டு, ஸ்டேசன்லயே அய்யா முன்னாடி தாலி கட்டுனேன்" பேசிக்கிட்டே இன்னொரு சார்மினாரை எடுத்து பத்தவைக்கறாரு.

"எதப்புடிச்சா எதை அடையலாங்கறதெல்லாம் ஒரு கணக்கு தம்பி... என்னை சாதிப் பார்த்து தொரத்துனவுங்க என் யூனிபாரத்தைப் பார்த்து வாயத் தொறக்கலை. அதுக்குத்தான் போராடுனேன். இன்னைக்கு 3 புள்ளைங்க பொறந்ததுக்கு அப்பறம் ஊட்டுக்காரிய ஊடு சேர்த்துனானுங்களே தவிர என்னைச் சேர்க்கறதுமில்லை. வெலக்க முடியறதுமில்லை. போங்கடா மசுராச்சுன்னு நானும் கண்டுக்கறதில்லை. ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்.. அது எட்டுக்கு எட்டா இருந்தாலும் சரி... 1000 ஏக்கரா இருந்தாலும் சரி.." சகாயம் பேசிக்கிட்டே போறாரு. பில்டரு வரைக்கும் இழுத்துட்டு பெஞ்சு கைப்பிடில நசுக்கித் தூக்கி வீசறாரு. எனக்கு ஒன்னும் புரியலை. நாமளே நொந்துகெடந்தா இந்த ஆளு வெந்து கெடக்கறாரோன்னு மனசுல ஓரமா தோணுது.

"நா முன்னாடி இருந்த அய்யா வீட்டுல கேட்டுள்ளயே சேர்த்த மாட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க டீ குடிக்கறதுக்குன்னே தனியா ஒரு டம்ளரு தட்டு கார்ஷெட்டு மாட்டுல இருக்கும். இது புடிக்காமயே நான் டீகாபி குடிக்கற வழக்கமில்லைன்னு சொல்லி கடைசிவரைக்கும் அங்க வாய் நனைச்சதில்லை. ஆனா உங்கப்பாரு எல்லாம் நல்ல மனுசங்க தம்பி. உங்க வீடு மாதிரி உள்ள கூப்பிட்டு வைச்சு சாப்பாடு போடறதெல்லாம் நான் என் சர்வீசுல பார்த்ததேயில்ல.."ங்கறாரு. எங்கப்பா பேச்சு வந்ததும் எனக்கு சுர்ருங்குது...

"ஆமா! ஊருக்கெல்லாம் நல்லது செய்வாரு.. பெத்தவனுக்குன்னா மட்டும் செய்ய வராது! எல்லாம் ஊருல நல்ல மனுசன்னு பேரு வாங்கறதுக்கு செய்யற வேலை"ன்னு வெறுப்பைக் கொட்டறேன்.

கடகடன்னு வாய்விட்டு சகாயம் சிரிச்சதைப் பார்த்ததும் எனக்கு திரும்பவும் கோவம் வருது. எரிச்சலா அவரைப் பார்க்கறேன். "உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா தம்பி? காந்தியோட பையனுக்கும் இதே பிரச்சனை இருந்ததாம். அவருக்கு அவங்கப்பா எதுவுமே செய்யலைன்னு.." சொல்லிட்டு மறுபடியும் சிரிக்கறாரு.. எனக்கு பொசுக்குன்னு போயிருச்சு.

"புள்ளைங்களைப் பெத்துட்டா வளர்த்தறது அவ்வளவு சுலபமில்ல தம்பி.. நம்ப ஆசை, கனவுக எல்லாத்தையும் ஒதுக்கி வைச்சுட்டு எதைச் செஞ்சா புள்ளைங்க நல்லா வளரும்.. குடும்பம் தெம்பா நிக்கும்னு தேடிப்போகற பாதை! மனசார இந்த பாதைல போறப்ப அவங்க கனவு, ஆசை இதையெல்லாம் தெரிஞ்சே தொலைக்கறதை கண்டும் காணாம இருக்கறதுக்காக நெருப்புகோழி மண்னுல தலைய விட்டுக்கிட்டாப்புல வேல வேலைன்னு அலைஞ்சு திருப்தியடையறதுதான் தகப்பனுங்க புத்தி... உங்க அப்பாருக்கு என்ன கனவுகன்னு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா" ன்னு கேக்கறாரு! அவரு பேசப்பேச எனக்கு வாயடைச்சுப் போகுது.

வீட்டுக்கு சம்பாதிச்சுப்போடறதை விட அவருக்கு வேற கனவுக எதாவது இருக்குமா என்ன? காலேஜ் படிக்கறப்ப நீச்சல் சாம்பியன்! நாடகம் நடிச்சி வருசத்துக்கு நாலைஞ்சி மெடலு, ஷீல்டெல்லாம் கூட வாங்கியிருக்காரு! ஒருவேளை... இதெல்லாம் கூட அவரது லட்சியக்கனவாக இருந்திருக்குமோ?! இப்போ கால்வலியோட தலைவலியும் சேருது. இந்த ஆளுகூட பேசுனா மொத்தமா கவுத்துருவாருன்னு மனசுக்குள்ள ஒரு எச்சரிக்கை உணர்வும் வருது!

"தம்பி.. உங்க வயசுக்கெல்லாம் ஆடணும்... பாடணும்.. சந்தோசமா இருக்கனும்.. அதப்பார்த்து பெத்தவங்க உட்பட மத்தவங்களும் சந்தோசமா இருக்கனும்.. உங்க சந்தோசத்துக்கு நாலுபேர்த்த அழவைக்கக்கூடாது. அடி வாங்கறது பெரிசில்லை! வாங்கற ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கனும். அப்பத்தான் அதை நாளைக்கு நீங்க நல்ல நெலமைக்கு வந்தா நெனைச்சுப் பெருமைப்பட்டுக்க முடியும்... இல்லைன்னா அது என்னைக்கும் உறுத்திக்கிட்டே இருக்கும். அன்னைக்கு நான் வாங்குன அடில பொடம்போட்டு இன்னைக்கு எங்க ஊருல நான் தலைநிமிர்ந்து நிக்கறேன். அந்த மரியாதியும் பயமும் எனக்கில்ல... என் யூனிபாரத்துக்குன்னும் எனக்கு நல்லா தெரியும். உங்களுக்கெல்லாம் உங்கப்பாரு இத்தன வசதி குடுத்திருக்காரு தம்பி. எங்கப்பாரு எனக்கு கொடுத்த ஒரே வசதி என் சாதி மட்டுந்தான்.. அதைக் காட்டிதான் சாப்பாடு, படிப்புன்னு உபகாரமா கெடைச்சே PUC தாண்டுனேன். உங்களுக்கு கெடைச்சிருக்கதுக்கெல்லாம் நீங்க எங்கயோ போகனும்... தடம் பொறண்டுறாதீக தம்பி..." ன்னு சொல்லும்போதே அவருக்கு கண்ணுல தண்ணி பொங்க ஆரம்பிச்சிட்டது. அங்கதான் மொத்தமா கவுந்துட்டேன். வெறித்த கண்களோடு தன் வலிகளை வென்ற வெற்றிகளுக்கு பரிசாகக்கிடைத்த நிதர்சனக்களை ஏற்றுக்கொண்ட மனத்தோடு சகாயம் சொல்லிய அந்த வார்த்தைகள் என் வலிகளோடு சேர்த்து என் மனக்கசடுகளையும் அடித்துக் கழுவுகிறது.

அதற்குப்பிறகு நிறைய நேரம் நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை. அதிகாலையில் நடைப் பயில்பவர்கள் மெல்ல வர ஆரம்பிக்கிறார்கள். கையையும் காலையும் வீசியபடி விடிவிடுவென வயதானவர்களும், கான்வாஸோடு ஓடும் பசங்களும்னு இவ்வளவு நேரம் சலமற்று இருந்த இடம் தன் மவுனம் கலைக்கத் தொடங்குகிறது. "வாங்கண்ணே வீட்டுக்குப் போகலாம்"னு அவரைக் கெளப்பறேன். வண்டியின் பின்சீட்டில் பூட்சுகளை கழற்றி வைத்து, கால்களை மடக்கி, உடலைக் குறுக்கி மெல்லிய குறட்டையோடு தூங்கிக்கொண்டிருக்கிறார் என் அப்பா!

"வேண்டாண்ணே! எழுப்பாதீங்க... பாவம் தூங்கட்டும்.. வண்டிய மெதுவா எடுங்க"ன்னு சொல்கிறேன் நான். வண்டி நகரும்போதே முழிச்சுக்கிட்டாரு... "அப்பா, வீட்டுக்கு போகலாம்பா" ங்கறேன் நான், அவர் முகம் பார்க்கத் திராணியற்று ரோட்டைப் பார்த்தபடி. இப்போதும் அவர் ஒன்றும் பேசவில்லை.

அதிகாலைக் காற்று முகத்தில் மோதி என் உடல் சிலிர்க்க, இரு கைகளையும் இறுக்கிக் கட்டியபடி விடியும் பொழுதை ரசிக்க ஆரம்பிக்கிறேன் நான்.


****

June 06 Thenkoodu TamilOviam Contest First Prize Winner

தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்) போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை

கருத்துகள்

  1. நல்லாருக்குங்க கதை.ரேஸ்கோர்ஸ், NH 47 எல்லாமே கோவை பேக்ரவுண்ட் வேற.அந்த ரேஸ்கோர்ஸ் திண்டுல எத்தனை லவ் ஸ்டோரி நடந்திருக்கு,முடிஞ்சிருக்கு...

    பதிலளிநீக்கு
  2. முதல் பரிசு பெற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இளவஞ்சி,

    எப்ப்டிய்யா.... எப்படிய்யா இப்படி எழுதறீரு?

    சூப்பர்ன்னு சொல்லிட்டுப் போக முடியலையே......

    தூள் கிளப்பிட்டீரு.

    வாழ்த்து(க்)கள்

    பதிலளிநீக்கு
  4. Superb work...

    Congrads.. This will be definetly the winner.

    பதிலளிநீக்கு
  5. இருக்கமான அமைதியோடும், கனத்த இதயத்தோடும்...வடுக்களை சுரண்டியது என் கைகள்...அப்டின்னு எழுதலாமா?

    கதை?! நல்லாயிருக்கு :-)

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி.. வாத்தியார்.. கலக்கிட்டீங்க..
    இப்படி ரெண்டு வாத்தியாரும் ரவுண்டு கட்டி அடிச்சா, ஒத்த ஓட்டை யாருக்கு குத்துறது?!!! எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும்!!

    //நாமளே நொந்துகெடந்தா இந்த ஆளு வெந்து கெடக்கறாரோன்னு //

    இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது

    பதிலளிநீக்கு
  7. நல்லாருக்கு கதை. பரிசு பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. போட்டி சூடு பிடிச்சிருச்சுன்னு உஷா சொன்னாங்க....இப்பத்தான் அது என்னன்னு தெளிவாப் புரியுது.

    இளவஞ்சி, கலக்கிடீங்க போங்க. (நாளைக்கு நான் பெங்களூர் ஆபீஸ்ல இருப்பேன்.)

    பதிலளிநீக்கு
  9. அருமையா எழுதி இருக்கீங்க! என்னோட பழய கால நாடகங்கள் எழுதும் போது இருந்த ஒரு வெறியை தூண்டி விட்டுறிக்கீங்க! இந்த சில சினிமாக்கள் பார்த்துட்டு, ஒரு சில்லுன்னு நினைப்பு வருமே, ச்சே.. நம்ம அப்படி பண்ணக்கூடாது, அதாவது அப்படி படைக்கப்பட்ட பாத்திரப்படைப்பை பார்த்துட்டு, அதுக்குள்ளே நம்மலை திணிச்சிக்கிட்டு, நம்மலை நாமே, அந்த கதாபாத்திரங்கள் செய்யக்கூடிய தவறை, இல்லை நட்ந்துக்கிற விதத்தை வேறு விதமா செஞ்சு பார்க்குணும்னு தோணுமே, அப்படி இருந்தது, இந்த கதை படிச்சோன்ன!

    நீங்க எழுதி கொடுத்தா நான் நடிக்க தயார், புறவு பிரகாஷ்ராஜ்ஜை கவுத்திடலாம்-:)

    பதிலளிநீக்கு
  10. Oh...Such a haunting piece.

    இன்னைக்குப் பூராவும் என்னால வேலை செய்ய முடியாதுன்னு தோணுது.

    ட்ரீட் எங்கே தரப்போறீங்க?

    பதிலளிநீக்கு
  11. அய்யா.. இங்க வேலை நிறையா இருக்கு.. இன்னைக்கு பார்த்தா இப்படி ஒரு பதிவு போடனும்.. இன்னைக்கு வேலை ஓடினாப்புல தான்..

    //தலைகுனிந்து பெத்த மகனுக்காக நிக்கனும்னா எந்த அப்பனுக்கும் அவமானமாய்த்தான் இருக்கும். இவரு என்ன பெரிய ஸ்பெஷலா?!//
    //ஆனா எப்பப்பாரு "நீ இப்போ என்ன செஞ்சிட்டு வர்றங்கறது எனக்கு தெரியும்!"ங்கற அந்த பார்வையைத்தான் தாங்கவே முடியாது//
    //உங்க அப்பாருக்கு என்ன கனவுகன்னு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா" //
    //ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்.//

    ம்ம்.. நல்லாயிருங்க..

    பதிலளிநீக்கு
  12. எல்லோரும் ஓட்டுப்போடுங்க ஓட்டுப்போடுங்கனு சொல்றீங்க..
    எங்க தல ஓட்டப்போடுறது.... !!

    பதிலளிநீக்கு
  13. ஒண்ணா ரெண்டா ஆயிரம் பொற்காசுகள்! எனக்கில்லே எனக்கு இல்..லே. சொக்கா சொக்கா!

    பதிலளிநீக்கு
  14. மிகவும் அருமை.. ஏதேதோ ஞாபகம் வருகிறது...பழைய நாட்களை அசை போட வைத்த பதிவு...
    போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நெகிழ்ச்சியானப் பதிவு. சகாயம் பெயரில் மட்டுமல்ல செய்கையிலும் தான்.

    பதிலளிநீக்கு
  16. கலக்கிட்டிங்க மக்கா.

    கொஞ்சம் ஃபார்மெட்ல கவனம் செலுத்தி இருக்கலாம். வசனங்கள வரிக்கு வரியா பிரிச்சுப் போட்டு எழுதி இருந்தா படிக்க இன்னும் வசதியா இருக்கும். என்னமோ பத்தி பத்தியா இருக்கிற மாதிரி இருக்கு.

    வெற்றிபெற வாழ்த்துகள். இந்த முறை போட்டி பலமா இருக்கும் போல இருக்கே!!!

    பதிலளிநீக்கு
  17. இளவஞ்சி

    உங்களுக்குப் பெரிய ப்ளஸ் பாயின்டே படு யதார்த்தமான கதைப்பின்னல்... காட்சிகளை நேரில் பார்க்கிறார் போல் அமைக்கிற நேர்த்தி... வெல்டன்..

    அந்தப் பையனின் பாத்திரப்படைப்பும் அவன் சார்ந்த நிகழ்வுகளும் அருமை...

    சகாயத்தின் பாத்திரம்தான அவ்வளவாய் ஒட்டவில்லை - அதிகப்படியாய் திணித்தாற்போன்ற வசனங்கள். கதைக்குள் கதை, சற்றே நீளமான அறிவுரைகள் - இவைதான் இந்தப் படைப்பின் பலவீனம்.

    ஆனாலும் முதல் பரிசுக்கான போட்டியில் கண்டிப்பாக இருக்கும் என்றுதான் எண்ணுகிறேன்.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. செல்வன்,

    //எத்தனை லவ் ஸ்டோரி நடந்திருக்கு,முடிஞ்சிருக்கு... //

    அடடா! உம்ம வாயைக் கெளருனா நிறைய மேட்டரு வரும்போல! :)

    ****
    லதா, மதி, துளசியக்கா, அனானி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ****
    பொட்'டீ'கடை,

    // கதை?! நல்லாயிருக்கு :-) //

    பாருங்க இதெல்லாம் நல்லால்ல! ஆமாம்! இது கதைன்னு சொன்னா நம்பனும்! சொல்லிட்டேன்!! :)

    பதிலளிநீக்கு
  19. பொன்ஸ்,

    // ரவுண்டு கட்டி அடிச்சா, ஒத்த ஓட்டை யாருக்கு குத்துறது?!!! //

    எனக்கும் இந்த கொழப்பம் இருந்தது! அதுல இருந்து தப்பிக்கனும்னா நீங்களும் டமார்னு களத்துல குதிங்க! இன்னும் நாளிருக்கு! :)

    ****
    D The Dreamer,

    உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி!

    ****
    தங்கமணி,

    உங்களுடைய பாராட்டே எனக்கு ஜெயிச்சிட்ட சந்தோசத்தைத் தருகிறது! :)

    பதிலளிநீக்கு
  20. பெத்த ராயுடு,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    ****
    ஜீரா,

    வாங்கய்யா வாங்க! பொங்கிருவோம்! :)

    ****
    வெளிகண்ட நாதர்,

    உங்க உளப்பூர்வமான பாராட்டுகளுக்கு நன்றிகள்!

    // நீங்க எழுதி கொடுத்தா நான் நடிக்க தயார் // இருந்தாலும் என்னை நீங்க இந்த அளவுக்கு நம்பக்கூடாது! :)))

    ****
    அனானி, பாராட்டுகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. மனதின் ஓசை, தேவ், ஜலா,

    வருகைக்கும் பாராட்டுகளுக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்!

    ****
    கேவிஆர்,

    // என்னமோ பத்தி பத்தியா இருக்கிற மாதிரி இருக்கு // கரெக்ட்! அதேதான்! இப்பத்தான் பத்தி பிரிக்க பழகியிருக்கேன்! இந்த வரி பிரிக்கறது எப்படிங்கறதுதான்.. ஹிஹி...

    ****
    நிலா,

    உங்கள் வெளிப்படையான கருத்துக்களுக்கு என் நன்றிகள்!

    இப்படித்தான் இருக்கனும்னு வைச்சு எழுதலை! எனவே ஒரு கட்டுக்குள்ள கதை வரலை! சொல்லவந்ததை சொல்லிட்ட திருப்தி மட்டும் இருக்கு... :)

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  22. காலையிலேயே படித்துவிட்டேன் படித்து முடித்தபின் மனசு கனத்தது, சரியாக புரிந்து கொள்ளப்படாமல், சரியாக வழிநடத்தப்படாமல் வீணான சிலரின் வாழ்க்கையும் கண் முன் வந்தது, வாழ்த்துகள்

    நன்றி

    பதிலளிநீக்கு
  23. சுதர்சன்.கோபால், ராசா,

    // என்னால வேலை செய்ய முடியாதுன்னு தோணுது //
    // இன்னைக்கு வேலை ஓடினாப்புல தான்.. //

    என்னா விளையாட்டு இது?! உங்க மேனேசரு என் சட்டைய புடிக்கறதுக்கா?! டெட்லைனை பாருங்கப்பு! :)

    பாராட்டுகளுக்கு நன்றி! நம்மள்ள யாருக்கு கெடைச்சாலும் பெங்களூர்ல பேரணி போட்டுறலாம்! :)

    ****
    யாத்திரீகன்,

    From Thenkoodu:

    "மாதத்தின் 21-ம் தேதி முதல் 25ம் தேதி வரை வாக்கெடுப்பு நடைபெறும். போட்டிக்கான பதிவுகளை http://www.thenkoodu.com/contestants.php என்ற முகவரியிலிருந்து படிக்கலாம்"

    ****
    உஷா,

    நம்ப மக்களை அவ்வளவு சீக்கிரம் எடைபோட முடியாது! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை! ஆகவே... :)))

    பதிலளிநீக்கு
  24. குழலி,

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  25. Seems like a real life story and the flow is also very good. Advance Best wishes for winning in the contest.

    பதிலளிநீக்கு
  26. இளவஞ்சி, அருமையாகக் கதை சொல்லியிருக்கிறீர்கள். மேலே நிலா சொன்னது போலில்லாமல் ஆரம்பத்தில் சற்று இழுவையாயிருந்ததைப் பிறகு சகாயம் வந்து தான் தூக்கி நிறுத்தினாற்போன்று எனக்குத் தோன்றியது. இரசனைகள் பலவிதம்...

    இரசித்தது:
    >>
    ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்..

    அடி வாங்கறது பெரிசில்லை! வாங்கற ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கனும்.
    >>

    இன்னும் கொஞ்சம் வார்த்தைகளில் சிக்கனமாயிருந்தால் மெருகூறும். கடைசிப் பத்தி தேவையில்லை (என் கருத்து). இருப்பினும் மொத்தத்தில் நல்ல கதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. பண்பட்ட நடை, கொளுத்தீட்டீங்க..சகாயம் தேன்கூட்டில் நல் சகாயம் உங்களுக்கு கிடைக்க அருள்வாராக!

    பதிலளிநீக்கு
  28. ezhil,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    ****
    செல்வராஜ்,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    //கொஞ்சம் வார்த்தைகளில் சிக்கனமாயிருந்தால் மெருகூறும். கடைசிப் பத்தி தேவையில்லை //

    சற்றே தள்ளி நின்று படித்தால் நீங்கள் சொல்வது உட்பட சில குறைகள் எனக்கும் புலப்படுகின்றன. போட்டி விதிப்படி அளித்தவுடன் மாற்றம் எதுவும் செய்யக்கூடாதாகையால் அப்படியே விட்டுட்டேன்! :)

    ****
    சிங்கை நாதன், நெல்லை சிவா,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  29. Hi Ilavanji,

    Itz really nice...Manasa rumba yosikka and kashtap pada veikkuthu. Good flow....

    Advance wishes...

    Rgds,
    SweetVoice.

    பதிலளிநீக்கு
  30. இந்தக் கதையைப் பத்தி சில விஷயம் சொல்லணும். நிறைகளும், குறைகளும். ஆனால், அது போட்டியின் முடிவுகளை influence செய்யும் என்பதால், போட்டி முடிஞ்சப்பறம் சொல்றேன் :-)

    பதிலளிநீக்கு
  31. இளவஞ்சி,

    தூக்கம் வராமல் இரவு 2 மணிக்கு போட்டிக்கான கதைகளை வரிசையாய் படித்துக்கொண்டிருக்கையில் பதிவுக்கு வந்தேன். உண்மையிலே மனம் கனத்து விட்டது. (கொஞ்சம் செல்வராகவன் படம் பார்த்த எபெக்ட்)

    வசனங்களின் மூலம் அப்படியே நிகழ்வுகளை கண்முன் திரையிட்டுவிட்டீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    -- விக்னேஷ்

    பதிலளிநீக்கு
  32. SweetVoice, விக்னேஷ்,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    ****

    பிரகாஷ்ஜீ,

    போட்டி ஒரு பக்கம் இருக்கட்டும்!

    என்னதான் தள்ளிநின்னு படிச்சாலும் என்னால வேறுபட்ட வாசகர் கோணத்தில் இருந்து சிந்திக்க முடியாது என்றே நினைக்கிறேன்!

    உங்களைப்போன்றவர்கள் எடுத்துச்சொன்னால் இன்னும் நல்லதுங்க! நீங்க உங்கள் கருத்துக்களை, முக்கியமாக குறைகளைச் சொல்லுங்க! :)))

    பதிலளிநீக்கு
  33. hmmm... solavae illai. Kalaku mamu kaluku.

    Renga

    பதிலளிநீக்கு
  34. uirottam ulla nalla katahi , thodarnthu eluthungal

    பதிலளிநீக்கு
  35. இளவஞ்சி.. பெயருக்காக 'நல்ல கதை. அருமையான பதிவு' ன்னு சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டுப் பாராட்டிட முடியாது. முடிக்கும் போது ஏதோ ஒரு பாதிப்பை உண்டாக்குகிறது. சொல்லோட்டம் சிறப்போ சிறப்பு.

    கேஜி காம்ப்ளெக்ஸ்ல செகண்ட் ஷோ பாத்துட்டு போதைல கொஞ்சம் நடந்து ரேஸ் கோர்ஸ் ரோட்டுல பரதேசி மாதிரி உக்காந்திருந்த நாள் கொசுவர்த்திச் சுருள் மாதிரி பிளாஸ் பேக்ல வருது.

    பதிலளிநீக்கு
  36. அற்புதமான கதை அப்படியே என்னுடைய வாழ்க்கைய திரும்பி பார்த்த மாதிரி இருந்தது....இது கலக்கல்க்கும் மேல...ஆமா நீங்க TCE ல படிச்சீங்களா....

    பதிலளிநீக்கு
  37. எந்த ஒரு செயற்கையான வார்த்தைகளும் இல்லாமல அழகாக கூற வந்த கருத்துகளை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கூறி உள்ளீர்க்கள்.
    என் கல்லூரி காலங்கள் நினைவுக்கு வருகின்றது. அது தான் இந்த கதையின் வெற்றி.

    பதிலளிநீக்கு
  38. அருமை! பரிசு பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  39. நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

    உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

    அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

    பதிலளிநீக்கு
  40. Renga,

    // hmmm... solavae illai // ஹிஹி...

    என்ன பிரதர்.. ரொம்ப நாளா ஆளைக்காணோம்?! திருச்சில மழைங்க்.. :)

    ****
    சுதர்சன், அனானி,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    ****
    Kuppusamy Chellamuthu,

    // கொஞ்சம் நடந்து ரேஸ் கோர்ஸ் ரோட்டுல பரதேசி மாதிரி உக்காந்திருந்த நாள் கொசுவர்த்திச் சுருள் மாதிரி பிளாஸ் பேக்ல வருது. //

    அடடா! அடடா!! வாழ்க்கையில் உய்ய அனைவரும் அனுகவேண்டிய முகவரி "ரேஸ் கோர்ஸ் ரோடு" :)))

    பதிலளிநீக்கு
  41. ஷ்யாம்,

    // ஆமா நீங்க TCE ல படிச்சீங்களா....
    //

    நீங்கள் ஆம் எனில் நானும் ஆம்!!! :)))

    நம் கல்லூரி மாந்தர்கள் எல்லாம் இல்லையெனில் இந்தமாதிரி கதையெல்லாம் எப்படி எழுதறது?!

    ****
    நாகை சிவா, ஜோ(போட்டோ க்யூட்டுங்ணா!),

    ஊக்கங்களுக்கு நன்றி!

    ****
    tamilatamila,

    // ஓட்டப்போட்டுறலானு தோணுது. //

    நமக்கு மட்டுமில்லை! மல்ட்டிபிள் ஆப்ஷன். பிடிச்ச, ரசிச்ச அனைத்து ஆக்கங்களுக்கும் போட்டுத் தள்ளிருங்கப்பு! :)

    ****
    யாத்திரீகன்,

    உம்ம சைடு என்னைக்கு வராம இருந்திருக்கேன்... வந்திருவோம்!

    பதிலளிநீக்கு
  42. >> நீங்கள் ஆம் எனில் நானும் ஆம்!!! <<

    அட... நானும் ஆமாங்க.. :-D

    >>உம்ம சைடு என்னைக்கு வராம இருந்திருக்கேன்... வந்திருவோம்! <<

    ரொம்ப டாங்ஸ் தல !!! :-D

    பதிலளிநீக்கு
  43. ட்யூப்லைட்டைச் சுத்தி ஒரே பூச்சிங்க. வாழ்கிற வாழ்க்கையின் ஆதாரம் அந்த லைட்டு கொடுக்கற வெளிச்சத்தைக் குடிச்சு முடிக்கறதுதான்னு ஓயாம சுத்திச்சுத்தி வருதுங்க! விடியற வரைக்கும் அந்த லைட்டை முட்டிமுட்டி பைசாவுக்கு பிரயோஜனமில்லாம சாகறதுதான் ஒரே குறிக்கோள் போல//

    அழகா சொல்லியிருக்கீங்க..

    ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்.. அது எட்டுக்கு எட்டா இருந்தாலும் சரி... 1000 ஏக்கரா இருந்தாலும் சரி.."

    ரொம்ப கரெக்ட்..

    ஆனா இறுதியில நிதர்சனத்த தாண்டிட்டீங்களோன்னு ஒரு ஆதங்கம்..

    ஆனாலும் இது சிறுகதையாயிற்றே..

    இப்படியொரு முடிவைத்தவிர வேறொன்றை நினைத்துப்பார்க்க முடியவில்லை..

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  44. //நமக்கு மட்டுமில்லை! மல்ட்டிபிள் ஆப்ஷன். பிடிச்ச, ரசிச்ச அனைத்து ஆக்கங்களுக்கும் போட்டுத் தள்ளிருங்கப்பு! :)//
    ஆமாம் வாத்தியார்.. உம்ம பேச்சைக் கேட்டுக் கஷ்டப் பட்டு மூளைய சுரண்டி கதை எழுதிருக்கவே வேண்டாம்!!! ஆளுக்கொரு குத்துன்னு சுலபமா முடிஞ்சிருக்கும்!!! :)

    பதிலளிநீக்கு
  45. நானும் ஆம் தான், யாத்ரீகனும் ஆம் சொல்றாரு...அட எங்க சுத்தி இங்க வந்து சந்திச்சு இருக்கோம் பாருங்க சந்தோசம்...

    ஒரு நாலு அஞ்சு பேருக்கு ஓட்டு போட்டேன் உங்களையும் சேர்த்து...செல்லாத ஓட்டா போகாம இருந்தா சரி....

    பதிலளிநீக்கு
  46. ஜோசப் சார்,

    // ஆனா இறுதியில நிதர்சனத்த தாண்டிட்டீங்களோன்னு ஒரு ஆதங்கம்.. // எனக்கும் வேறமாதிரி யோசிக்கத்தோணலைங்க..

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    ****
    பொன்ஸ்,

    // கஷ்டப் பட்டு மூளைய சுரண்டி //

    அதுசரி! :)))

    பதிலளிநீக்கு
  47. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!

    அன்புடன்
    ஆசாத்

    பதிலளிநீக்கு
  48. எல்லோரும் எதிர்பார்த்த மாத்ரியே மொதப் ப்ரைஸ் கெலிச்சுட்டீங்க.

    வாழ்த்துகள்!!!

    இப்போவாவது சொல்லுங்க ட்ரீட் எங்கே??

    பதிலளிநீக்கு
  49. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  50. போட்டியில் வெற்றி பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  51. முதல் பரிசினை வென்றதற்க்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  52. நிறைய பேர் சொல்லிதான் நீங்க கதை எழுதினது தெரியும். என்ன சொல்ல இளவஞ்சி... ஹ்ம் இது ஒரு குறிஞ்சிப் பூமாதிரியான கதை.

    பதிலளிநீக்கு
  53. வாழ்த்துக்கள் இளவஞ்சி !

    //ரேஸ்கோர்ஸ் திண்டுல எத்தனை லவ் ஸ்டோரி நடந்திருக்கு,முடிஞ்சிருக்கு...//

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  54. நெல்லை சிவா said...
    பண்பட்ட நடை, கொளுத்தீட்டீங்க..சகாயம் தேன்கூட்டில் நல் சகாயம் உங்களுக்கு கிடைக்க அருள்வாராக!

    11:50 AM, June 16, 2006
    ---------------

    சகாயம் நல்சகாயம் கிடைக்கச் செய்துவிட்டார்! :)

    வாழ்த்துக்கள், இளவஞ்சி!

    பதிலளிநீக்கு
  55. வாழ்த்துக்கள் ஐயா!
    நேற்று தான் 'விட்டில் பூச்சிகள்' படித்தேன். கண்டிப்பாக உங்களுக்குத்தான் முதல்பரிசு என்று மனசுக்குள் 'பட்சி' சொன்னது. இன்று நிஜமாகிவிட்டது. 'நாலரை'யிலிருந்து தொடங்கி மென்மேலும் பரிசுகளில் திளைக்க நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  56. கதைக்கும் , பரிசுக்கும் சேர்த்து ஒரே வாழ்த்து! :))

    அன்புடன்,
    அருள்.

    பதிலளிநீக்கு
  57. வெற்றிக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி :)

    treat எப்போ தரப்போறீங்க ?

    பதிலளிநீக்கு
  58. அன்பு இளவஞ்சி, முடிவை ஓரளவு யூகிக்க முடிந்தது என்றாலும் கதையின் ஓட்டம் மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் இருந்தது.
    எப்பவும் முதல் பரிசை வாங்க முடியவில்லை என்னும் உங்களுடைய ஏக்கம் இந்த முதல் பரிசால் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் ஏராளமான பரிசுகளை பெற வாழ்த்துகிறேன்.
    மஞ்சூர் ராசா
    http://manjoorraja.blogspot.com/
    http://muththamiz.blogspot.com/
    குழுமம்:http://groups.google.com/group/muththamiz

    பதிலளிநீக்கு
  59. முத்தான கதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு, முத்தமிழில் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  60. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!!!

    அதுவும் முதலாய் தகவல் தந்து என்னை சந்தோசத்தில் ஆழ்த்திய ஆசாத் அண்ணாச்சிக்கு என் ஸ்பெசல் டாங்ஸ்!! :)))

    பதிலளிநீக்கு
  61. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். சகாயம் தந்த கஷாயம் அருமை. பிரச்சார சுழலுக்குள் சிக்காமல் எழுதும் வரை (விளிம்பு வரை வந்து விட்டு வேண்டாம் என ஒதுங்கி விட்டீர்கள் போலத்தெரிகிறது) நல்ல கதைகளை மென்மேலும் உங்களால் தர முடியும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  62. //ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்.. அது எட்டுக்கு எட்டா இருந்தாலும் சரி... 1000 ஏக்கரா இருந்தாலும் சரி..//


    அனுபவிச்சு எழுதியிருக்க மக்கா...

    பதிலளிநீக்கு
  63. illavanji

    naan unga yeluthugali romba virubi padipen..ungala kathai arumai.melum yelutha vaalthugal..

    nirya yeluthungal...

    paul

    பதிலளிநீக்கு
  64. அய்யா இளவஞ்சியாரே,
    மனதை நெகிழ வைத்துவிட்டீர். உங்கள் எழுத்துக்கு நான் அடிமை :)
    வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  65. ரொம்ப நாள் கழிச்சி எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டுமே தெரிஞ்ச ஒரு ராத்திரிய நெனவு படுத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
  66. Hi Ilavanji
    Indha post 6avadhu thadavai padikiren. Ippovum kannula thanni. Really a good one.
    Ippo ellam en neenga ezhuduradhu illae? Are you writing in some other blog?
    Irundha sollunga.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு