திங்கள், பிப்ரவரி 14, 2005

சொல்லைப்பற்றி சில சொற்கள்நீயும் நானும் எழுதியதாலேயே
அவைகள் மீது உரிமையில்லை
உன்னாலும் என்னாலும் அறியப்படாததாலேயே
அவைகள் ஒன்றும் அந்நியமில்லை

புதிதாய் ஒன்று புலப்படும்பொழுது
கிடைக்கும் ஒரு விட்டுப்போன உறவு
திடும்மெனத்தான் ஆகிறது
அவைகளுடன் அறிமுகங்களும்

காராபூந்தியும் வறுகடலையுமாய்
ஆறாம் ரவுண்டில் வாயிலெடுதாற்போல
சில அருவருப்பாய்...

நல்ல கலவியின் நடுவில்
கைக்கெட்டாத முதுகின்பரப்பில்
உணரும் கொசுக்கடியாய்
சிலது எரிச்சலாக...

நண்டூருது நரியூருதின் போது
குழந்தையின் உடம்பில்
பொங்கும் தொற்றுக்களிப்பின்
இனிமையை போல சிலது...

எதுவாய் இருப்பினும்
ஞாபகதிரட்டில் அவைகள்
சிலநாள் முன்வரிசையில்
முன்னாள் காதலிகளின்
பெயர்களைப்போல...

கபாலத்தை கசக்கி
இதயத்தை ஊடுருவி
அகத்தில் ஆழ்ந்தும்
கிடைக்காத ஒன்று
எங்கோ எதற்க்கோ
அலைந்த சோர்வின்
வெறுமையின் போதில்
பளீரென கண்முன்...
கொடுப்பினைதான் இது...

அல்பமாய் இருப்பினும்
நம்பாப்பாவை கொஞ்ச
கிடைத்தது நேற்றொன்று
நன்றாக இருக்கிறதா சொல்...
"ஜிஞ்ஜிக்குஜிக்கா ஜீ..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக