மக்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின
குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.
அருமைத்தம்பி ஆதிக்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும்
செல்வபிரகாஷ்,
ஜெய்சிங்,
நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா
மாப்ள சீவியாரு,
வினோத்து,
கவுஜர் லக்ஸ் மற்றும்
கோகுல். இவங்க ஒவ்வொருத்தருமே அவங்கவங்க ஸ்டைல்ல படமெடுக்கறதுல பெரிய வஸ்தாதுங்க. இவிங்ககூட சுத்தறப்பவெல்லாம் நான் 4 மாசம் நெட்டுல படிச்சு தெரிஞ்சுக்கறதை நாலே நாள்ல அனுபவப்பூர்வமாக கத்துக்கமுடியறதை சந்தோஷமா அனுபவிச்சதுண்டு. எனக்குன்னு ஒரு ஸ்டைலு இப்பவரைக்கும் இல்லாததாலும் நான் இன்னும் வளர்ற பையங்கறதாலயும் படமெல்லாம் கலந்து கட்டித்தான் இருக்கும். அதனால அப்படியப்படியே அனுபவிங்கப்பு! :)
இதுபோக எனக்கே தெரிஞ்சு எங்கிட்ட படமெட்டுக்கறதுல சில பல மாற்றங்கள். பார்த்தால் உங்களுக்கே தெரியும். அப்படி எதுவும் தெரிலன்னா அப்படியே லூசுல விட்டுருங்கப்பு! வெளில சொல்லி மானத்த வாங்கப்பிடாது ஆமா! :) புடிச்ச படம் பெருசாத்தெரிய மேல ஒரு க்ளிக் செஞ்சு பாருங்கப்பு.
ட்ரிப்பு ஆரம்பமே அமர்க்களமான ஆரம்பம்! தின்னவேலின காலைல 8 மணிக்கா எறங்கி டிபனெல்லாம் முடிச்சு அப்படியே தாமிரபரணி படித்துறைல எறங்கி செம குளியல்! அதாவது சென்னை செண்ட்ரல்ல எறங்கி அப்படியே எதுத்தாப்பல இருக்கற கூவத்துல குளிக்கறமாதிரி! 4 மணிநேரம் நட்டாத்துல ஊருனமேனிக்கு மெகாபொங்கல். ஓடறதண்ணீல உடம்பை அளந்தபடி பிடிச்ச படம் புத்தகம்னு பேசிக்கிட்டு கெடக்கறது எப்புட்டு சுகம்! :) எனக்கு எப்பவுமே இருக்கற தீராத ஆசையான மொத்தமுழுசா இயற்கையோடு ஐக்கியமாகும் ஆசை இங்கையும் எட்டிப்பார்த்தது. ஆனால் லக்குவணாருக்கு நியூட் போட்டோகிராபில விருப்பம்னு தெரியவந்ததுல கமுக்கமா என்னோட ஆசைய எப்டியாச்சும் ஆஸ்திரேலியா பீச்சுல வைச்சி தீர்த்துக்கலாம்னு ஒத்திப்போட்டுக்கினேன் :)
வரப்பு டூ வானம் எனதேன்னு குளிக்கறது நம்ப ராவணன்.
"வழி தவறிய மீன்கள் சந்தித்துக் கொண்டன மணல்வெளியில். இரண்டிடமும் கடல் பற்றிய கதையிருந்தது, கடல் இல்லை" என்ற புகழ்பெற்ற
கவிதைக்கு சொந்தக்காரரான அதே லக்குவணார் தான். அவரு கெரகம்! எங்கூடவெல்லாம சுத்தவேண்டிய நெலமை! :)
ஆற்றங்கரையில் பிறந்ததே நாகரீகம்!
வாழ்க்கைல தேமேன்னு இருக்கறதுதான் இருக்கறதுலயே நெம்ப கஷ்டமான வேலைங்கப்போவ்! படித்துறை மண்டபத்துல நெல்லை மக்கள்ஸ்....
அம்புட்டுத்தான். அப்பறமா மத்தியானமா பஸ்புடிச்சு குலசைபோய் எறங்கியாச்சு. இதுக்கப்பறம் சாப்புட தூங்கன்னுதான் மக்கா பார்த்துக்கறது. மத்த நேரமெல்லாம் ரொம்ப சின்சியரா காமராவை எடுத்துக்கிட்டு அவிங்கவிங்களுக்கு புடிச்ச எடத்துக்கு ”மீ த எஸ்கேப்”புனு காணாமப் பூடூவாய்ங்க. நானும் அப்படியே விட்டேத்தியா கால்போன எடத்துக்கெல்லாம் எந்த குறிக்கோளும் இல்லாம காத்தாட கெளம்பிடறது. யாராவது கெடச்சா பேசியே அவங்களை ஓட ஓட வெரட்டறது. ஏதாச்சும் குலசை டான்ஸ் ட்ரூப்போட சேர்ந்துக்கிட்டு அவங்கபோற எடமெல்லாம் கூடவே அபீசியலு போட்டொகிராபரு மாதிரி சுத்தறதுன்னு வாழ்க்கை மூனுநாளைக்கு அப்படி போச்சுது. ஒன்னு மட்டும் நிச்சயங்க... வாழ்க்கை என்பது எப்பொழுதுமே நாம போட்டுக்கிட்டு இருக்கற சொகுசுவளையத்துக்கு வெளிலதான் இருக்கும்போல! ஆட்டம் பாட்டம் பக்தி துக்கம் சந்தோஷம்னு எல்லாத்தையும் வாழ்வோடு வாழ்வாக பிணைத்து வைத்து அனுபவிக்கும் மக்களுக்கு மத்தில எல்லாத்துக்கும் நாள் பிரிச்சு அனுபவிக்கற, உணர்வுகளையும் அனுபவங்களையும் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் தேடற நானெல்லாம் அம்மண ஊரில் கோவணம் கட்டுன கேசுமாதிரிதான் உணர்ந்தேன். உண்மைதாங்க... வீட்டை நாம் தாண்டாவிட்டால் வானமே இல்லை! இதுபோக என்பீல்ட் விளம்பரத்துல ஒரு வசனம் வரும் பார்த்திருக்கீங்களா?
LEAVE HOME! இதுக்காச்சும் வருசம் பத்துநாள் எங்காச்சும் இப்படி அனாமத்தா கெளம்பிறனும். ம்ம்ம்.. எங்க தாத்தனும் அப்பனும் இயல்பா செஞ்சதெல்லாம் இப்ப நானே கண்டுபுடிச்சாப்படி பெனாத்திறதும் கூட ஒரு திறமையா போயிருச்சுங்கப்பு.
ஒரு போட்(டோ)டா போட்டி! :)
வர்ண ஜாலச்சிரிப்பு
வேசங்கட்டறதை பத்தி இந்தமுறை சிலதகவல்கள் கெடைச்சது. 41 நாள் விரதம். குழுவுக்கு ஒரு தலை. அவருகிட்ட பர்மிசன் வாங்கிட்டு என்ன வேசம் போடறீங்களோ அதைச் சொல்லிறனும். அப்பறம் கோவிலுக்குப்போய் திரும்பும் வரைக்கும் காப்புக்கட்டி விரதம். கோவிலுக்கு வந்துபோகும் ரெண்டு நாளைக்கு காளி,போலீஸ், பைத்தியம், பொம்பளை, கரடி, கொரங்குன்னு மாக்கா விதவிதமா வேசங்கட்டி அடிக்கறாங்க. காளி வேசக்காரவுக மட்டும் இன்னும் கொஞ்சம் சிவியரு. கடும்விரதத்துல சத்தில்லாத ஒத்துழைக்காத உடம்பை இழுத்தபடி அடிக்கிற டண்டணக்கரவும் குலவையொலியும் முறுக்கேற்ற சடாமுடி சுழன்றாட மொத்த உடம்பையும் உதறித் துள்ளியடி சாமியாடறதை பார்க்கறப்ப கடவுளை நம்பாத எனக்குள் ஒரு வெறுமை பரவுவது நிஜஞ்தான். இருந்தாலும் என்னுடைய இப்பத்தின வரைக்கும் கிடைத்த வாழ்வனுவத்தின் புரிதலான “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?! தேவைப்படுபவர்களுக்கு இருக்கிறார்” எனும் வைக்கம் முகம்மது பஷீரின் வரிகளில் ஆத்மார்த்தமான அர்த்தங்கள் இருப்பதாக நம்புவதால் எதன் மீதும் தீர்பெழுதாமல் ஒரு சாட்சியாக நின்று பார்ப்பதே நேர்மையெனப்படுகிறது.
அண்ணன் காளி!
கடவுளை உணரும் குழந்தைகள்
ம்ம்ம்.. எங்க ஒளிஞ்சிருப்பான் இந்த கள்ளப்பய?!
ஏக்கம்!
இத எடுத்தவுட இந்த பால் ஐசை அவருக்கு வாங்கிக் குடுத்தேன். அடடா! என்ன ஒரு சிரிப்பு! இரண்டு முகத்திலும்! :)
ஒரு லிட்டில் டான்ஸ் ஸ்டார். பொண்னு ஆடுட ஆட்டத்துக்கு கெமிஸ்ட்டி ஹிஸ்டரியெல்லாம் தேவையிருக்கவில்லை. அம்புட்டு இயல்பு!
வயசுப்புள்ளைங்க! :) பொம்பளை வேசம் கட்டற பசங்களுக்கு அவிங்க அம்மா தங்கச்சிங்க சேலை கட்டுறதுலயும் மேக்கப்பு போட்டு நகைநட்டு மாட்டறதுலயும் உதவறதைப் பாக்கறதே அம்புட்டு அழகு! :) எனக்கென்னமோ பொம்பளைகளோட கஷ்ட நஷ்டத்தப் புரிஞ்சுக்க ஆம்பளைங்க நீங்களும் ஒரு நாளு நாளைக்கு பொண்ணா இருந்து பாருங்கடான்னு யாரோ பெருசு பழங்காலத்துல கொளுத்திப்போட்ட வெடிதான் இந்த ஆன்மீக வழக்கத்தின் பின்னான ரகசியம்னு ஒரு அனுமானம்! :)
தீச்சட்டி நேர்த்திக்கடன்...
நேர்த்திக்கடன்கள் அனைத்தும் முடிவில் கடவுளுக்கு
சமர்ப்பணம்
சூரசம்ஹாரம் முடிஞ்சதுக்கு அப்பறம்... இந்த வருச வேண்டுதல் முடிஞ்சாச்சு. வேஷம் கலைச்சாச்சு. அடுத்து மொட்டை, பீச்சுல குளியல், ஓரமே சமையல், முத்தாரம்மன் தரிசனம்.. பெறகு ஊருக்கு நடைதான்...
பனையும் பனைசார் வாழ்வும்...
ம்ஹீம்! நான் வர மாட்டேன்! அங்கன குளுரும்!!
ஆனந்தம் பொங்குதே!! ( இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் இளவஞ்சிகுமாரா?! ம்ம்ம்.. வளராமயே இருந்திருக்கலாம்! )
நாடி சோதிடம்...
வளையம் வெள்ளாட்டு...
குலசை பீச்...

அங்கன தூரத்துல ஒரு லைட்டவுசு தெரியுது பாருங்க. அதான் மணப்பாடு சர்ச். குலசைல இருந்து சாயங்காலமா அப்படியே நூல் புடிச்சாப்புல 4 கிலோமீட்டரு பீச்சோரமாவே நடந்து சர்ச்சுல மூன்றவரு உட்கார்ந்திருந்தோம். அடடா! என்னா கடற்கரை.. என்னா காத்து.. என்னா அமைதி!! மனுசன்னா இதை ஒரு தடவைக்குமாவது அனுபவிக்கனுமைய்யா! அதுவும் நமக்கு நெருக்கமான ஆத்மாவோடன்னா இன்னும் விசேஷம். இதுல முரண் என்னன்னா நான் அந்தக்காலத்துல காதல்கிறுக்கனாக இருந்தபொழுது மொதமொதலா தனியா தாஜ்மகாலைப் பார்த்து அஞ்சவரு கெறங்கிக் கிடந்துக்கு, இப்ப இந்த நிர்மலமான மனதுடன் மணப்பாடு மணல்வெளில சொக்கிக்கிடந்த அனுபவம் கிஞ்சித்தும் கொறஞ்சதில்லைங்கறதுதான்!
இத்தனை சொல்லி அப்பறம் நாங்க மூனுநாளா ஓயாம கேட்ட பார்த்த காளீங்க டான்ஸை போடலைன்னா எப்படி?! ( நன்றி: முருகன் வீடியோஸ், உடன்குடி )
அம்புட்டுத்தான் இந்த வருசம் நான் குலசை தசரா போய்வந்த கதை! :)