மீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப
ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா! வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா! ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க
நாதன்,
ராம்கோ வினோத்,
பிரமிட் வினோத், கோகுல்,
கவுஜர் லக்குவனார்,
நம்ப சிவியாரு மற்றும்
PeeVee ன்னு பெர்ரீய கும்பல்.
லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போயிருமோன்னு பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் இந்தமாதிரி அருமையான மக்காகூட ஜமாபோட்டு ஊரு சுத்தவாவது கொஞ்சநாளைக்கு இத்துல ஒட்டிக்கனும்னு இருக்கேன் :)
அடடா! எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மனிதசக்தி கொப்பளித்து பிரவகிக்கும் கூட்டங்களைக் கண்டு? ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத(?!) ”டண்டணக்கர டண்டணக்கர...”. கலக்கறாங்கைய்யா. 10 நாளைக்கு குலசை முத்தாம்மனுக்கு வேண்டிகிட்டு விரதம். விதவிதமான வேடத்துல ஊர்மக்களிடம் கையேந்துதல். 10வது நாளைக்கு குழுகுழுவா கூடி குலசைக்கு ஆட்டத்துடன் பயணம். கையேந்திக்கிடைத்த காணிக்கையை கோயிலில் செழுத்திவிட்டு கடல்ல குளியல். அங்கயே சமைச்சு சாப்டுட்டு ராத்திரி நடக்கற சூரசம்காரத்தில் பக்திப்பரவசத்துடன் கலந்துக்கிட்டு வேசம் கலைச்சு ஊருக்கு போய்ச்சேர்றது. இதேன் அவங்க ப்ளானு. சும்மா சொல்லக்கூடாது. வருசமெல்லாம் பொழ்ப்பு எப்படியோ... ஆனா இந்த 10 நாளுக்கு வாழ்க்கைய அனுபவிக்கறாங்கய்யா அனுபவிக்கறாய்ங்க!
புயலுக்கு முன் அமைதி. முத்தாரம்மன் கோவிலின் முதன்மைத்தெரு... இதுவழியாத்தான் 5 லட்சம் மக்கா போனாங்கன்னா நம்புவீகளா?!
நல்லநாளும் அதுவுமா சீக்கிரம் எந்திரிச்சு குளிக்காம தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி? முழிச்சுக்கடி என் புஜ்ஜிக்குட்டி...
குறத்தி மகள்கள்
ச்சே! ஒருத்தன் தனித்துவமா இருந்தா விடமாட்டீங்களே! என்னையும் திரு(ப்பி/த்தி)த் தொலைங்கப்பு!
செய்வன திருந்தச் செய்!
இந்த வருசக்குளியல் முடிஞ்சதுங்கப்பேய்...
மொதல்ல Sea Bath... பெறகு Sand Bath அப்புறந்தேன் Sun Bath... கலராயிடுவம்ல!
மணப்பாடு கோவில்
வேண்டுதல்னு வந்துட்டா எம்புட்டு கஷ்டம்னாலும் தாங்குவம்ல!
கண்ணேறு காக்கப்போகும் கரும்புள்ளி
அடடா! ஊருக்குள்ள வந்ததுல இருந்து இவனுங்க இம்சை தாங்கல. அவனவனுக்கு ஒளிஓவியனுங்கனு நெனப்பு. ஒரு திருகாணி மாட்ட விடுதாய்ங்களா?!
ஆட்டத்தை ரசிக்கவில்லே... ஆளேத்தான் பார்க்குது...
தில்லானாவும் மோகனாம்பாளும்
Its payback time! ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும்
PeeVeeயின் கேமரா
வருசத்துக்கு ஒருக்கா ச்சான்சு.. அம்புட்டையும் ஒரேராத்திரில வித்துப்புடனும்...
வேண்டுதலுக்குன்னு சில வேசங்க. ஆழ்மன ஆசைகளை நிவர்த்திக்கன்னு சில வேசங்க. பத்ரகாளி, குறவன், ராப்பிச்சை, பைத்தியம், போலீஸ், கெழவி, அனுமாருன்னு ஆயிரக்கணக்கா வேசங்க.
அகந்தை அழியவேண்டி பைத்தியக்கார வேடம்.
இன்னொரு ஆச்சரியமான மேட்டரு பொம்பள வேசம்! புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு! :) அந்தக்காலத்துலதான் மனுசன் யோசிச்சிருக்கான்யா!
”நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றாகவில்லை என்றால் , நாம் இறைவனை உணர முடியாது. ஒருமைதான் ஒருமையை அறியும்” - இ.சி.நே - கவிக்கோ.
குழந்தைகள் பெண்கள் மற்றும் பெண்கள்
எலே.. ராஜா உத்தரவாகவே இருக்கட்டும். அதுக்காக பத்தவைக்காத தம்முக்கு எப்படில பைன் போடுவ?
சேர்ப்பித்த தீச்சட்டிகளும் சீர்செய்யும் சிறுவனும்
கடற்கரை சூரசம்ஹார திடலில் ஆடி சாமிகும்பிட்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் மக்கள் கடலின் நடுவில் ஒரு இ.ம.மு பிரமுகர் பேச்சு. பறையர் பள்ளர் வரலாற்றுச்சிறப்புகளை எடுத்துச்சொல்லி “சாதிபார்த்தா நாம் இம்புட்டுபேரும் குழுமியிருக்கோம்?”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான்! கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல! நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா?! சரியாத்தான் தொழில் செய்யறாங்க. ஆனாலும் ஒரு சந்தோஷம். ஒரு விசிலோ கைத்தட்டலோ இல்லாம மக்கள் மகா அமைதியா இருந்தாங்க. கவனமெல்லாம் நைட்டு சரியா 12 மணிக்கு நடக்கப்போகும் சூரசம்ஹரத்துக்காக வெயிட்டிங். 15 நிமிசம் இத்த பேசியும் எடுபடலைன்ன ஒடனே அப்படியே ட்ராக் மாறி “நாம் இங்கே மற்ற மதத்தினை விமர்சனம் செய்ய வரவில்லை.. இந்து மதத்தின் பெருமையை... “
ம்ம்ம்... இந்த வருசம் மக்கா அமைதியா கேக்காக. அடுத்தவருசம் கைத்தட்டுவாங்க. அதுக்கடுத்த வருசம் கொரளு விடுவாங்க. அடுத்தது... இந்துமதம் காக்க என்னே ஒரு லட்சியப்பாதை! விநாயகரு சதுர்த்திக்கு ஆன நிலைமை குலசை தசராவுக்குமான்னு மனசு கருக்குங்குது!
சரி விடுங்கப்பு. மனம் கவரும் குலசை முத்தாரம்மன் கண்டு மனம் குளிருங்க :)