
கூரான் அப்படிங்கறதுதான் அவனோட பேருங்க. எனக்கு பத்தாவது படிக்கறதுல இருந்து பழக்கம். அவனுக்கு ஏன் கூரான்னு பட்டப்பேரு வந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது. எங்க காலனி கிரிக்கெட் டீம் பக்கத்து காலனி கிரிக்கெட் டீமோட ஒருமுறை கார்க்பால் பெட்மேட்ச் வைச்சபோது ஆன பழக்கம். அவன் படிச்சதும் எங்க பள்ளிக்கூடத்துலயேதான். நல்லா பேட்ஸ்மேன்னு சொல்ல முடியாதுன்னாலும் காட்டடி மன்னன். மிடில் ஆர்டர்ல இறக்கிவிட்டா குறைஞ்சபட்சம் 25 ரன்னு கேரண்ட்டி! நல்ல கீப்பிங்கும் செய்வான். ஆனா இதையெல்லாம் மிஞ்சி அவன்கிட்ட இருந்த திறமைன்னா ஸ்கோரு ஏத்தறதும், டீமு தோத்தே ஆகனும்ற நிலமைல எதயாவது சொல்லி சண்டை போட்டு மேட்சையே கலைக்கறதுதான். அவன் இருந்தானாவே மேட்சுக்கு 2 சண்டை உறுதி! மேட்சுல தோத்துட்டா ஒரு புது கார்க்பாலை தோத்த டீம் ஜெயிச்ச டீமுக்கு தரனும். அதை கூட சகிச்சுக்கலாம். ஆனா தோத்த டீம் கேப்டன் ஸ்கோர்கார்டுல கையெழுத்து போடனும். அதுதான் தாங்க முடியாத அவமானமா இருக்கும். ஜெயிச்சவனுங்க சுத்தி நிக்க தோத்தவனுங்க மொகத்துல கடுப்போட எதுனால தோத்தோம்னு ஒரு அனாலிசிஸ்ல இருக்க கேப்டன் போய் கையெழுத்து போடனும். போட்டுட்டு திரும்பறதுக்குள்ள ஜெயிச்ச பார்டிங்க ஹோன்னு சவுண்டு விடுவானுங்க. அவமானம் பிடுங்கித்தின்னும்!
அன்னைக்கு மேட்சுல கூரான் டீமுக்கு செம அடி. எங்க ஸ்கோருல பாதி எட்டறதுக்குள்ளயே அவனுங்க டீமுல பாதிபேரு அவுட். கூரான் காட்டடி அடிச்சு ஒரு 36 எடுத்து என்னோட பந்துல குச்சிய பறக்க விட்டுட்டு என்னை மொறச்சிகிட்டே போனான். அந்த காலத்துல எனக்கு அக்ரம்னு தான் பேரு! (யாருங்க அங்க..? இதெல்லாம் ஓவர் அக்கிரமம்னு மொனங்கறது?? ) எவனாவது என்னோட லொட்டாங்கை வேகப்பந்துவீச்சுல க்ளீன்போல்ட் ஆனா அந்த ஸ்டம்பு எவ்வளவு தூரம் போய் விழுந்ததுன்னு அளவெடுக்கறதுதான் பேட்ஸ்மேனை அவமானப்படுத்தறதுக்கான அளவு. கடுங்கோபத்துல வெளியபோன கூரான் நேரா போய் ஸ்கோரு குறிக்கறதுக்கு உட்கார்ந்தான். எப்படியும் தோத்துருவோம்னு தெரிஞ்சதும் ஒவ்வொரு பாலுக்கும் சண்டை! "அது வைடு.. இது நோபாலு.. அம்பயரு சரியில்லை... ஸ்கோரு கம்மியா சொல்லுறீங்க..." இப்படியே போனதுல எங்களுக்கும் கடுப்பாக சடார்னு இந்த மேட்ச் விளையாட மாட்டோம்னு ஸ்டம்பையெல்லாம் புடுங்கிபோட்டுட்டு ஒரே அதகளம்! மேச்சு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பெட்டு வச்ச பாலை அம்பயரு கிட்ட கொடுத்துடனும்கறதால எங்களுக்கு அதுமட்டும் தான் கிடைச்சது. கையெழுத்து போடாமையே மேச்சை கலைச்சுட்டான் பாவிப்பய...
இப்படியே கொஞ்சநாளைக்கு ஒரு நாலைஞ்சு மேட்சுன்னு போனது. தோக்கறதும் ஜெயிக்கறதும் சண்டைபோடறதும்னு அதுபாட்டுக்கு நடந்துகிட்டு இருந்தது. சிங்காநல்லுருல ஒரு டோரணமெண்ட்டு நடக்கதுன்னும் பெரிய பெரிய டீமெல்லாம் அதுல வெளையாடுதுன்னும் நியூசு வந்தப்ப எங்க ரெண்டு டீமையும் ஒன்னா சேர்த்து அந்த டோரணமெண்டுக்கு பேரு குடுத்தோம். திமுக அதிமுக இணைஞ்சா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அன்னைக்கு. அவ்வளவு பாலிடிக்சு. கடைசியா பெரிய டோரணமெண்டுக்கு மட்டும் இந்த டீமுன்னும் மத்தபடி லோக்கல் மேட்சுகளுக்கு பழைய டீமுன்னும் முடிவாச்சு. கூரான் என்னை கண்டிப்பா எடுத்தே ஆகனும்னு பயங்கரமா சப்போர்ட்டு! ரெண்டு பேரும் ஒரே டீமுக்கு வந்தப்புறம் பழைய பகையெல்லாம் "சூமந்திரகாளி"ன்னு காணாமப்போயிடிச்சு. என்ன? முன்னாடி அவன் கூட சண்டை போடுவோம். இப்போ அவனை அடக்கறதுக்கு ரொம்ப செரமப்பட்டோம். அவ்வளவுதான்!
இதுக்கு அப்பறம்தான் கூரான் எனக்கு ரொம்ப பழக்கமானான். அப்பவே வாயில எப்பப்பாரு பான்பராக் போட்டுகிட்டு இருப்பான். தெனமும் வாத்தியாருகிட்ட 2 தடவையாவது அடி வாங்குவான். எவ்வளவு அடி வாங்குனாலும் கைய தொடச்சுகிட்டு சிரிச்சுக்குவான். பள்ளிக்கூடத்துல அவன் பண்ணாத அழும்பு இல்லை! வகுப்புல பொம்பளபுள்ளைங்களை பயமுறுத்தறது, வாட்ச்மேனுக்கு கோட்டரு வாங்கிகுடுத்து நைட்டோட நைட்டா காலாண்டு அரையாண்டு பரிச்சை பேப்பரை உருவரது, மார்க்சீட்டுல கையெழுத்து போடறது, பிட்டு அடிக்கறதுன்னு +2 முடிக்கறவரைக்கும் ஆட்டமான ஆட்டம். ஒவ்வொரு முறை மாட்டும் போதும் அப்பா இல்லாதனால அவனோட அம்மாதான் வந்து ஹெட்மாஸ்டருகிட்ட அழுதுட்டு இவனையும் ரெண்டு மொத்திட்டு போவாங்க. எப்படியோ பிட்டு கிட்டு அடிச்சு +2 முடிச்சு ஆர்ட்சு காலெஜுலயும் சேர்ந்துட்டான். நாங்க கொஞ்சநஞ்சம் அவனுக்கு அப்பப்ப அட்வைசு குடுத்தாலும் எல்லாம் செவுடன் காதுல ஊதுன சங்குதான். அதுசரி. ஒரு லிமிட்டோட நாங்க கூத்து அடிக்கறதால மட்டும் அவனுக்கு அட்வைசு பண்ணற தகுதி எங்களுக்கு வந்துடுமா என்ன? ஆனா இந்த கூத்தடிக்கற விசயத்துல நாங்க எது சொன்னாலும் எண்ணையா வேலைய செஞ்சு முடிப்பான்! ஊட்டிக்கு போலாம்னு பேசுனா போதும். காசை தேத்தறதுல இருந்து, அங்க லாட்ஜ் புக்பண்ணி, சரக்கு வாங்கி, நொறுக்சுங்கள ஒரு பார்சலாவும், சாப்பாடு ஒரு பார்சலாவும் கட்டி சும்மா ஸீரோ டாலரன்ஸ் எரர் ப்ளானோட நிப்பான். நான் இஞ்சினியரிங் படிச்சாலும் வருசத்துல பாதி நாளு எல்லா காலேஜ் கல்சுரல்சுலதான் அட்டனென்சு போடுவேன். கூரானும் நமக்கு துணை. மேடையேறி கலாய்கிறது போக கீழ இருந்து ஆடுற ஆட்டம் இன்னும் அதிகமா இருக்கும். கல்ச்சுரல்ஸ் நடக்கற எல்லா நாளும் தண்ணில தான் இருப்பான். சொன்னாலும் கேக்க மாட்டான். நாங்க நைட்டுல மட்டும் லைட்டா போட்டுகிட்டு சலம்புனா இவன் புல்லா ஏத்திகிட்டு எங்கயாவது எவன்கூடையாவது சண்டைல மாட்டிகிட்டு இருப்பான். ஒரு கல்சுரல்ஸ் இல்லாம அவன் சட்டை கிழிஞ்சு அடிவாங்காம வெளிய வந்ததில்லை! நாங்க ஒன்னா அவன் அடிக்கற ரவுசுகளை பார்த்து கண்ணுல தண்ணிவர சிரிச்சுகிட்டு இருப்போம். இல்லைனா அவனுக்காக பஞ்சாயத்துபேசிக்கிட்டு இருப்போம்.
காலேஜு முடிஞ்சதும் ஒரு ரெண்டு வருசம் சும்மாவே வீட்டுல காசைவாங்கிட்டு தண்ணிய போடறதும் ஊருல எங்கயாவது சண்டை போடறதும்னு வாழ்கைய ஓட்டிகிட்டு இருந்தான். நான் அவன் வீட்டுக்கு போகும்போதெல்லாம் அவன் அம்மா இதையெல்லாம் சொல்லி அழுவாங்க. நாங்க ஏதாவது அவனுக்கு சொல்லப்போனாலே "விடுடா...மாப்ளா.. வாழ்க்கைல இதெல்லாம் ஒரு பிரச்சனையா..?" அப்படின்னு எங்களை அமுக்கிடுவான். நானும் வேளை தேடி சென்னை வந்துட்டதால ஊருக்கு போகும்போதுமட்டும் அவனை பார்த்து பேசற மாதிரி ஆகிடிச்சு. கொஞ்ச நாளு கழிச்சு அவன் ஊருக்கு வெளில ஹைவேஸ்ல குடில் குடிலா போட்டு ஒரு டாபா ஓட்டல் திறக்க பட்டுன்னு பத்திகிச்சு. ஆறே மாசத்துல நல்லா பிக்கப் ஆகிடிச்சு. எங்களுக்கும் இதைகேட்டு ஒரே சந்தோசம். பய உருப்பட்டுட்டான்னு மனசுல ஒரு நிம்மதி. ஆனா எல்லாம் ஒரு 2 வருசத்துக்குதான். கைல நிறைய பணம் புரள 25 வயசுலயே எப்போதும் தண்ணி. எப்பபாரு பான்பராக். எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடும்? கடை சுத்தமா படுத்துடுச்சு! நாங்க சொன்னா கேக்கற நிலைமையெல்லாம் தாண்டி போயிட்டான். எப்பபாரு வீட்டுல காசுகேட்டு சண்டை. தண்ணிய போட்டதும் மெண்டலு மாதிரி ரோட்டுல சண்டை! வயசான அவங்க அம்மா பொறுக்கமுடியாம 20,000 ரூபாய 4பேரு கிட்ட குடுத்து அவனை புல் மப்புல இருக்கறப்ப கூட்டிகிட்டுபோய் ஏர்வாடில ஒரு இடத்துல பைத்தியம்னு சொல்லி காசைக்கட்டி சங்கிலிபோட்டு கட்டி விட்டுட்டு வந்துட்டாங்க! ஒரே வாரம்தான்! பெத்தமனம் பித்துன்றமாதிரி இன்னொரு 20,000 ரூபாய் செலவுபண்ணி கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க... ஒரு வாரத்துக்குள்ள செம அடி அங்க... குடிக்க சரக்கு கேட்டு சண்டைபோட பின்னியெடுத்துட்டாங்க. பெத்த அம்மாவே கொண்டுவந்து அங்க சேர்த்துவிட்டது தெரிஞ்சு சுத்தமா ஆப் ஆகிட்டான்!
இப்பவும் அதே வீட்டுல தான் இருக்கறான். அழுக்கு லுக்கியும் பரட்டை தலையுமா காலைல எழுத்தவுடன் அன்றைய கோட்டா 100 ரூபாய வாங்கிகிட்டு காலைலயே சரக்க அடிச்சுட்டு வீட்டுல சாப்டுகிட்டு இருக்கறான். ஒரே வித்தியாசம் பழையபடி யாரோடவும் சண்டை போடறது இல்லை. யாரைபார்த்தாலும் போதைல "எங்க அம்மாவே என்னை ஏர்வாடில சேர்த்துடாங்க சார்"னு சொல்லி அழுவான். 30 வயசுலயே வாழ்க்கைய மொத்தமா தொலைச்சிட்டு நிக்கறவனை மனசு தாங்காம போன தடவை ஊருக்கு போகும்போது போய் பார்த்தேன். அவனோட அம்மா அழுததை தவிர வேற ஒன்னுமே பேசலை. பேச்சுத்துணைக்குகூட ஆளில்லாம இருந்தவன் என்னை பார்த்ததும் அப்படியே கைய பிடுச்சுகிட்டு அழுதான். ஏர்வாடி கதையெல்லாம் ஒரு வெறுப்போட சொன்னான். பழைய கிரிக்கெட்டு காலேஜு கதையெல்லாம் ஒரு அரைமணிநெரம் சொல்லி சிரிச்சான். என்னால பழையபடி சிரிக்கமுடியலை. அவன் முகத்தையே பார்த்தபடி மையமான அவஸ்தையான சிரிப்போட அவன் சொல்வதை கேட்டபடி இருக்கிறேன்.. "மாப்ள.. உன்னால கூட என்கூட பழையபடி பேசமுடியலை இல்ல...? நான் வாழ்க்கைல தப்புபண்ணி அழிஞ்சவந்தான்... தண்டப்பொறுக்கிதான்.. ஆனா உங்ககூட ஜாலியா இருந்ததெல்லாம் அப்படியே நெனைவிருக்குடா... ஆனா நீங்க மட்டும் உருப்படற வழில போனப்ப என்னைமட்டும் ஏண்டா விட்டுட்டீங்க? நீங்க எல்லாம் சேர்ந்து என்னை கொஞ்சம் அடக்கியிருந்தா நானும் இப்படி ஆகியிருக்க மாட்டேன்ல? " எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மனசு பாரமாகி கொஞ்ச நேரத்துல "ரயிலுக்கு நேரம் ஆயிடிச்சு.. அடுத்தமுறை பாக்கறேன்"னு கிளம்பிட்டேன்.
அன்னைக்கு ராத்திரி சென்னை போற ரயில்ல மனசு போட்டு கொடய தூக்கம் வராம படுத்திருக்கறேன். அவன் சொல்லறதுலையும் உண்மை இருக்குல்ல? என்ன தான் தன்னிரக்கத்துல அவன் சொன்னாலும், தப்புபண்ணி அழிஞ்சவன்னானும் ஒரு காலத்துல நண்பன்னு இருந்தப்ப சந்தோசமான நேரமெல்லாம் அவனோட சேர்ந்து ஆடியிருக்கோம். அவன் தப்பு பண்ணபோதெல்லாம் தள்ளிநின்னு வேடிக்கை பார்த்திருக்கோம். அட்வைசு பண்ணறோம்னு சில கருத்துக்களை சொல்லிட்டு கடமை முடிஞ்சதுன்னு விலகிட்டோம். 10 வருசங்களுக்கு முன்னால் நண்பனாக இருந்தவன் இன்று தூரத்தில் இருந்து எட்டிப்பார்த்து அக்கறை என்ற பெயரில் சில பரிதாபங்களை உதிர்த்துவிட்டு மறந்துவிடும் நிலையில். இதுவா நட்பு? ஒரு காலத்துல நெருங்கிய நண்பனா வாழ்க்கைல ஒருத்தனா இருந்தவன் காலப்போக்குல விலக்கிவிடப்பட வேண்டிய ஒருத்தனா மாறியதற்கு அவன்தான் காரணம்னாலும் அதுல நண்பனாக என்பங்கு எதுவுமே இல்லையா? வாழ்க்கையில் தேவையில்லாத உறவுகளை விலக்குவதற்கு வேலை, கல்யாணம், புள்ளகுட்டின்னு ஆயிரம் சமாதானம் வச்சிருக்கறோம். ஒவ்வொரு காலக்கட்டதிலும் இருக்கும் நிலையான உறவுகள் என்ற நம்பிக்கைகள் வயசாக ஆக கால ஒட்டத்தில் மெல்ல மெல்ல கரைந்து தேய்ந்து அர்த்தமிழந்துபோகிறது. இன்று சுற்றியிருக்கும் நட்புகளும் உறவுகளும் நாளை அதனதன் தேவைகளை பொறுத்து எப்படி மாறப்போகிறதோ? நாலாம் வகுப்பில் அவனில்லாமல் நானில்லை என இருத்த நண்பன் இப்போது இருக்குமிடம் தெரிந்தாலும் நட்பை புதுப்பிக்க தோன்றவில்லை! 5 வருடங்களுக்கு முன் சண்டை போட்டுச்சென்ற மாமாவின் வீட்டு விசேசத்திற்கு போகமுடிவதில்லை. 15 வயதில் பழகிய கூரான் 30 வயதில் முக்கியமில்லை. அந்தந்த வயதின் ஆர்வங்கள் காலப்போக்கில் மாறுவதால் மட்டுமே இப்படியாகிறதா? மனசுக்கு நேர்மையாய் சொல்ல முடியுமா? காலத்திற்கேற்ப மாறுவதுதான் என் சுயமா? இது அயோக்கியத்தனம் இல்லையா? இதுதான் வாழ்க்கையின் இயல்பா? மனசாட்சியின் குடைச்சலில் கண்ணோரம் நீர் கசிய தெரிந்தே தொலைத்த என் சுயங்களைப்பற்றி கவிதை மட்டுமே மனதில் எழுதி தூங்கிப்போகிறேன்.
ம். வாழ்க்கை போய்க்கொண்டுதான் இருக்கிறது. கூரானின் அம்மா நடைபிணமாகவும், அவன் பிணமாவதை நோக்கி நடையாகவும், எனக்கு உறவுகளின் மதிப்புகளும் அதற்கான கடமைகளும் புரியாத, தெரியாத, தெரிந்துகொண்டாலும் காலப்போக்கில் மறக்கவிரும்பும் விதமுமாய்...