முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..


Image hosted by Photobucket.com

ங்களுக்கு போபால் எங்கே இருக்கிறது என தெரியுமா? எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து போபால் என்ற ஊரின் பெயர் மூளையின் ஒரு மூலையில் தங்கி விட்டது. அதன் பிறகு விஷவாயுக்கசிவு விபத்தின்போது அந்த ஊரைப்பற்றி வந்த செய்திகள் சில பொதுஅறிவு விசயங்களாக மனதில் பதிந்தது. அவ்வளவே அந்த ஊருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு போன வருடம் வரை! என்றாவது ஒருநாள் போவோம் என்று நினைத்துக்கூட பார்த்திராத ஒரு ஊருடன் திடீரென்று ஒரு உன்னதமான உறவு மலரும்போது என்றென்றும் நினைத்து மகிழும்படியான ஒரு இனிமையான தருணங்களாக நிலைத்துவிடுகிறது!

போபாலுக்கு எல்லாம் போயிருக்கிறேன் என்பதால் எனக்கு இந்தி தெரியுமென்றா கேட்கிறீர்கள்? எனக்கு தெரிந்த இந்தியெல்லாம் "கயாமத் சே கயாமத் தக்", "தேசாப்", "கிலாடியோன் கா கிலாடி" மற்றும் " மே அமிதாப்பச்சன் போல் ரஹான்ஹூன்"!!! இதை விட்டால் தொலைக்காட்சி புண்ணியத்தில் "மட்லப், தில், ஜிந்தகி" ன்னு சில வார்த்தைகள். கல்லூரி முடித்தவுடம் சில நாட்கள் வேலை கிடக்காமல் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்தி கற்றுக்கொண்டால் மும்பையில் சுலபமாக வேலை கிடைக்கும் என்று சில நாட்கள் இந்தி வகுப்புக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் அங்கே நாங்கள் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாத எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பொடியனும் படித்துக்கொண்டிருந்தது எனக்கு தெரியாது! ஒரு வாரம் போக என்னை ஆசிரியர் சத்தம் போட்டு இந்தி வார்த்தைகளை படிக்கச்சொல்ல அந்த பொடியன் "அண்ணா, தப்பு தப்பா படிக்கறீங்க..!" என்று மானத்தை வாங்கியதில் அதோடு நின்றுபோனது எனது இந்தி பாண்டித்யம்.

சரி, போபால் விசயத்திற்கு வருவோம்! என் நண்பன் ஒருவன் தகவல்தொழில்நுட்பத்துறையில் புனேயில் வேலை பார்த்துவந்தான். வேலைப்பளு, ஓய்வின்மை, பொழுதுபோக்கு எதுவும் இன்றி உழைத்ததில் மன அழுத்த நோயால்பாதிக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் சண்டை போட்டு வேலையை உதறிவிட்டு சென்னை வருகிறேன் என வீட்டுக்கு போன் செய்து சொன்னவன் நான்கு நாட்களாகியும் ஒரு தகவலும் தராமல் மாயமாகிவிட்டான். காரில் கிளம்பியவன் என்ன ஆனானோ என்று பதறிப்போன அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்க சில நாட்கள் கழித்து தகவல் வந்தது. நேராக சென்னை வர வேண்டியவன் போபால் சென்றிருக்கிறான். கடவுளின் மீது மிக வெறுப்பில் இருந்த அவன் அங்கு இருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு இரவு 10 மணிக்கு சென்று சாமி சிலையை காலால் உதைத்திருக்கிறான். தடுக்க வந்த பூசாரியை அடித்து கீழே தள்ளிவிட்டு ஓடியிருக்கிறான். யாரோ ஒரு முஸ்லிம்தான் கலவரம் உண்டாக்கும் நோக்கத்துடன் இப்படி செய்கிறார்கள் என்று நினைத்த பூசாரி உடனே அருகில் இருந்த காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் இவனை ஜீப்பில் துரத்த, 10 நிமிட கார் துரத்தலுக்கு பிறகு இவன் ஒரு சுவறில் காரை இடித்து நிறுத்த, அப்படியே அள்ளிக்கொண்டுபோய் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இவனுக்கு இந்தி கொஞ்சம் தெரியும். ஆனால் பேசும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மூன்று நாட்களுக்கு பிறகு எப்படியோ தகவல் சென்னை வந்து சேர்ந்தது. அவனது நண்பன் ஒருவனுக்கு இந்த தகவல் கிடைத்து அங்கிருந்து மற்றுமொரு நண்பன் மூலமாக போபாலில் இருக்கும் ராஜேஷ் கெல்காருக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று நாட்களாக ராஜேஷ் அவன் அருகிலேயே காவல்நிலையத்தில் இருந்து சாப்பாடு வாங்கிக்கொடுத்து அதிகாரிகளுக்கு அவனது மனநிலையை புரியவைத்து அவன் தீவிரவாதி அல்ல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என உணர்த்த மிகவும் வருந்தி உழைத்திருக்கிறான். அவனது வீட்டிற்குகூட போகாமல் இவன் கூடவே இருந்திருக்கிறான். சில சமயம் இவன் ராஜேஸை நம்பாமல் அடிப்பதும் நடந்திருக்கிறது. அதனையும் பொறுத்துக்கொண்டு அவனுக்கு காவல்நிலைய செல்லில் பணிவிடைகள் செய்திருக்கிறான்.

எனது நண்பனை ஜாமீனில் எடுப்பதற்காகத்தான் நான் சென்னையில் இருந்து கிளம்பினேன். இரவு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து விடிகாலை விமானத்தை பிடித்து போபால் சென்று இறங்கிய போது 8 மணியாகிவிட்டது. விமான நிலையத்திற்கே வந்து விட்ட ராஜேஷ் என்னை அவனது பைக்கில் அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றான். அங்கே நான் பார்த்த காட்சி மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று. சட்டையும் ஜீனும் அழுக்கேறிப்போய் ஒரு கையில் விலங்கு பூட்டி மறுமுனையை சன்னலில் மாட்டி, காலுக்கு ஒரு வளையம் மாட்டி அதை இரும்பு கதவில் மாட்டியபடி வெறித்த பார்வையோடு என் நண்பன்! வாங்கிய அடியில் அவனது ஒரு கால் தூண் போல கன்றிப்போய் வீங்கியிருந்தது. என்னை பார்த்தும் பார்க்காதது போல எதனையோ முனங்கியபடி இருந்தான். அவனருகில் அமர்ந்து மெல்ல மெல்ல பேசி முதலில் என்னை நம்பவைத்து, இங்கிருந்து அவனை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வந்திருப்பதாக சொல்லி புரியவைத்தபின்தான் சொல்வதை கேட்க ஆரம்பித்தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்கு முன்பு சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். அதற்கும் ராஜேஷ் கூடவே வந்தான். நிலைமை என்னவெனில் எனக்கு மேலே சொன்ன இந்தியை தவிர வேறு ஒன்றும் தெரியாது. ராஜேஸுக்கு ஆங்கிலம் பேசினால் புரியுமே தவிர பேச தெரியாது. உடைந்த ஆங்கிலத்தில் சிறிது பேசுவான். அங்கே இருந்த காவல்துறை அதிகாரிக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. நாங்கள் மூவரும் அமர்ந்து புகார் மனு தயாரித்தோம்! நான் ஆங்கிலத்தில் சொல்ல ராஜேஷ் அதனை முடிந்த அளவு புரிந்து கொண்டு இந்தியில் அதிகாரியிடம் சொல்ல, அவர் கேட்டும் கேள்விகளை ராஜேஷ் எளிய இந்தியிலும் சைகையிலும் எனக்கு சொல்ல, நான் அதனை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதிலளிக்க, அந்த புகார் மனுவை அவர் இந்தியில் எழுதி முடிப்பதற்குள் 3 மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு முந்தைய நாளே ராஜேஷ் ஒரு வக்கீலையும் பேசி தயார் படுத்தியிருந்தான். 2 மணி அளவில் நீதிமன்றம் சென்று அங்கு வக்கீலுடன் அமர்ந்து தேவையான படிவங்களை தயாரித்து பின் ஒரு வழியாக 4 மணிக்கு நீதிமன்றத்தில் என் நண்பன் ஆஜர் படுத்தப்பட நான் கொண்டு போயிருந்த மருத்துவச்சான்றிதலையும் போபால் அரசாங்க மருத்துவரின் சான்றிதலையும் கணக்கில் கொண்டு ஜாமீன் அளிக்கப்பட்டது. முறையான மருத்துவம் அளித்த பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் வரவேண்டுமென நீதிபதி எழுதி கையெழுத்திட்டார். ம்ம்ம்.. சினிமா கோர்ட்டுக்கும் நிஜ கோர்ட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள்!

என் நண்பனது கை விலங்குகள் அகற்றப்பட்டது .மெல்ல மெல்ல அவனுடம் பழைய நினைவுகளை சொல்லி சொல்லி ஒரு மாதிரியாக இயல்பாக நடந்துகொள்ளும் நிலைக்கு நானும் ராஜேசும் தமிழிலும் இந்தியிலும் பேசிப்பேசி மாற்றினோம். போபாலில் இருந்து 7 மணிக்கு டெல்லிக்கு விமானம்! கார், உடைகள், வங்கி அட்டைகள், பாஸ்போர்ட் என அனைத்தும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வெறும்கையுடன் என் நண்பன். விமான நிலையத்திலேயே குளித்து நான் கொண்டு சென்ற உடைகளை அணிந்துகொண்டு எதனையோ நினைத்து வெறித்தபடி விமானநிலைய முகப்பறையில் அமர்ந்திருந்தான். எங்களை விமானநிலையத்தில் ஒரு ஆட்டோ பிடித்து இறக்கி விட்ட ராஜேஷ் சற்று நேரத்தில் வருவதாக கூறி சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு ஜோடி புது செருப்போடும் காலில் சுற்றும் பேண்டேஜுடனும் வந்தான் ராஜேஷ். அப்போதுதான் பார்த்தேன். என் நண்பன் காலில் செருப்பில்லாமல் இருப்பதும் ஒரு கால் வீங்கிப்போய் இருப்பதும்! இத்தனைக்கும் பிறகு தான் எனக்கு சுருக்கென மனதில் தைத்தது! யார் இந்த ராஜேஷ் கெல்கார்? இவனைப்பற்றி இங்கே வந்ததில் இருந்து ஒன்றுமே கேட்கவில்லையே!! 3 நாட்களாக யாரென்றே தெரியாத ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனோடு இருந்து கவனித்துக்கொண்டிருந்திருக்கிறான். உணவு உட்பட அதிகாரிகளிடம் பேசுவது தொடங்கி நீதிமன்ற வேலைகள் முடிய விமானபயணச்சீட்டு ஏற்பாடு செய்ததுவரை அனைத்தையும் ஒரு சகோதரனைப்போல பார்த்து செய்திருக்கிறான்! சில சமயங்களில் அடியும் வாங்கியிருக்கிறான்! ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய நண்பனது நண்பனின் நண்பனுக்காக காவல்நிலையத்தில் படுத்திருக்கிறான். சரியான சாப்பாடு தூக்கமின்றி 3 நாட்கள் சொந்தவேலைகளை விட்டுவிட்டு அலைந்திருக்கிறான்! எல்லாம் எதற்காக?

அவன் சொன்னது.. "ஹர்ரே பையா.. மேரா friend told me to take care.. டீக் ஹை.. You dont worry...!" எனக்கு அப்படியே உள்ளிருந்து பொங்கி விட்டது. ஒரு நண்பன் கேட்டுக்கொண்டான் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு ஒரு துளியும் முகம் சுளிக்காமல் இத்தனையும் செய்கிறானே... ஒரே ஒரு நாளில் அறிமுகமான எனக்கே இவன் நட்புக்கு இலக்கணமாக தோன்றுகிறானே! இத்தனை நாள் இவனுக்கு நண்பனாக இருப்பவன், இவனை ஒரு நண்பனாக அடைந்தவன் எத்தனை கொடுத்துவைத்தவனாக இருக்க வேண்டும்?!? என்னால் தாங்க முடியவில்லை... விமானநிலைய வாசலில் அவனை கட்டிக்கொண்டு "நீ ரொம்ப பெரிய மனுசன்யா..! You are a great friend" என்றெல்லாம் பிதற்றுகிறேன். அவனுடன் எங்களை வழியனுப்ப வந்த அவனது நண்பர்கள் சொல்கிறார்கள்.... "`Not only for you.. for all of us our Rajesh is a great Friend!". அவனை பெற்றவர்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டுமையா இப்படி உலகம் சொல்லி கேட்க!! அவனை கட்டிக்கொண்டு கதறி அழுகிறேன். அவனோ என்னை ஆதூரத்துடன் அணைத்தபடி தட்டிக்கொடுத்து வழியனுப்புகிறான். நான் ஏன் விமான பயணம் முழுக்க அடிக்கடி அழுதுகொண்டே வருகிறேன் என்று விமான பணிப்பெண்ணுக்கும் தெரியவில்லை! என் நண்பனும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை...

அதுவரை வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி என ஒவ்வொரு பிராந்திய மக்கள் பற்றியும் ஒரு முடிவான அபிப்பிராயங்கள் வைத்திருந்த நான் அவைகள் அனைத்தையும் என் மனதிலிருந்து உடைத்தெறிந்தேன். உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. எதனையும் எதிர்பாராமல் உதவிய ராஜேஸுக்கு இதன்மூலம் வாழ்க்கையில் என்ன கிடைத்தது என்று எனக்குத்தெரியாது. ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான்! இப்பொழுதும் ராஜேஷும் நானும் மாதத்திற்கு சிலமுறை 15 நிமிடங்களுக்கு குறையாமல் தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். அவன் அவனுக்குத்தெரிந்த இந்தியிலும், நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும்...


இன்றைக்கும் எனக்கு போபாலில் விமானநிலையத்தையும் காவல் நிலையத்தையும் நீதிமன்றத்தையும் தவிர வேறொன்றும் தெரியாது. ஆனாலும் எனக்கு போபால் என்ற ஊரின் பெயரைக்கேட்கும் போதெல்லாம் "கோயமுத்தூர்" எனக்கேட்டும்போது ஏற்படும் ஒரு அன்னியோனியமான உணர்வே ஏற்படுகிறது :)

கருத்துகள்

 1. //உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. //

  Super Post.. I ditto the above words..

  பதிலளிநீக்கு
 2. //உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை.//

  very true.

  -Mathy

  பதிலளிநீக்கு
 3. இளவஞ்சி,

  //நல்ல நெகிழ்ச்சியான பதிவு. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளனர், நாம்தான் கவனிப்பதில்லை.//

  தங்களின் நண்பர் நலமடைய வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. உருப்படியான பதிவு. நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. மனிதர்கள் இனிமையானவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பண்பு. தடுப்புச் சுவராய் எம் பார்வைகள் இருக்கும் வரை அவர்களின் மனதின் இனிமை எங்களை எட்டாது.

  நல்லதொரு பதிவு. ராஜேஸ் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் பதிவு. நல்ல மனத்துக்கு உலகில் பஞ்சமே இல்லை. தேடறதுதான் கஷ்டம்.

  நண்பர் இப்ப எப்படி இருக்கார்?
  ராஜேஷ் நல்லா இருக்கணுமுன்னு மனதார வாழ்த்துகின்றேன்.

  பதிலளிநீக்கு
 7. இளவஞ்சி அருமையான நெகிழ்வான ஒரு பதிவு. பாருங்க "ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான்!" நீங்க கொடுத்து வச்சவரு
  சாரே வாழ்த்துக்கள்

  அது சரி புது கைக்கணிணி வாங்கிட்டீங்களா இப்படி பதிவா போட்டு தாக்குறீங்க

  பதிலளிநீக்கு
 8. நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 9. என் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... "வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்"னா தான் அடிக்க வரான்! :)

  கணேஷ்.. நாம எங்க மடிக்கணினி வாங்கறது? எல்லாம் புது ஆபீசுல குடுத்ததுதான்!

  மற்றபடி, உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 10. அருமையான பதிவு இளவஞ்சி.
  'அவர்கள் இப்படித்தான்', 'இவர்கள் அப்படித்தான்..' என்ற பொதுப்படுத்தல் நம் தேசிய நோய்.
  நம் முன்முடிவுகளை புறந்தள்ளி சிந்தித்தால்தான் மனிதம் புலப்படும்.
  பதிவுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. "எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து..."

  பரவாயில்லையே நடேசன் வாத்தியார். பாஷ்யம் ஐயங்கார் மாதிரி மோசம் இல்லை. பார்க்க என் பதிவு:
  http://dondu.blogspot.com/2005/08/blog-post_25.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 12. பாண்டி, சுதர்சன், டோண்டு சார்...

  உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 13. இளவஞ்சி, உங்கள் பெரும்பாலான பதிவுகளை (கிட்டத்தட்ட அனைத்தும்) இன்று பார்த்தேன். இத்தனை நாட்கள் எப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று தெரியவில்லை.

  அருமையான நடையும், வேடிக்கை நிறைந்த ஆனால் ஆழமான உணர்ச்சிகள் நிறைந்த எழுத்து. மிகவும் ரசித்துப் படித்தேன். தொடருங்கள். நட்சத்திரவாரத்திற்கும் வாழ்த்துக்கள்.

  நட்பு பற்றிய உங்களின் இந்தப் பதிவும் மிகவும் அருமை. பலதரப்பட்ட அனுபவம் பெற்றவராய் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இருக்கும் நேர்மையும் கவர்கிறது.

  பதிலளிநீக்கு
 14. மிக நல்ல பதிவு.ராஜேஷ் போன்றவர்கள் யாராயிருந்தாலும் இப்படித்தான் உதவி செய்வார்கள்.அவர்களுக்கு தெரியுமுதவி தேவைப்படுவோருக்கு் செய்ய வேண்டியதுதானே தவிர தெரிந்தவருக்கு மட்டும் இல்லை என்று.ராஜேஷுக்கு என் வணக்கங்களை சொல்லுங்கள்் நன்றியும்கூட்.

  பதிலளிநீக்கு
 15. 'நம்க்கேன் வம்பு' என்று நினைக்கும் மனிதர்களிடையே ராஜேஷ் போன்றவர்கள் அரிது. உங்களுக்கு அவரை சந்தித்து, பழகும் சூழ்நிலையை மிக நன்றாக பதித்திருக்கிறீங்கள். அடுத்த பதிவுகளை எதிர்பார்த்தபடி,

  பதிலளிநீக்கு
 16. முதன்முதலாக உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். இப்படியும் தமிழ்மணத்தில் பதிவுகள் வருகின்றனவா? சந்தோஷமாக இருக்கிறது.நீங்கள் தொட்டுள்ள உயரம் மலைக்கவைக்கிறது. நல்ல ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்த தமிழ் மணத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. இளவஞ்சி,
  என்னை கண்ணீர் விட வைத்த பதிவு .இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களே என நினைக்கும் போது மனநிறைவாக இருக்கிறது ..தொடர்ந்து எழுதுங்கள்.

  அன்புடன்,
  ஜோ

  பதிலளிநீக்கு
 18. இளவஞ்சி,

  அருமையான பதிவு - நல்ல நடை. தொடரட்டும் தங்கள் பதிவுகள் மற்றும்
  நட்சத்திர வாரம்.

  - அலெக்ஸ்

  பதிலளிநீக்கு
 19. செல்வராஜ், பதமா அர்விந்த், தருமி, ஜோ, அலெக்ஸ்...

  ஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 20. அருமையான விசயம், அழகான நடை..
  வாழ்த்துக்கள் இளவஞ்சி.

  பதிலளிநீக்கு
 21. இளக்கமான பதிவென்பது ஒரு புறம். மறுபுறம் கோபம் வருகிறது: சந்தேகத்தின் பேரில், விசாரிக்கிற போர்வையில், ஒரு ஆளை இப்படியெல்லாம் துவைத்தெடுக்க போலீஸுக்கு என்ன உரிமை? ஒருவரது மனோநிலையிலும் உடல்நிலையிலும் பெரும் காயங்களை ஏற்படுத்திய போலீஸின் போக்கு கண்டிக்கத் தக்கது.

  பதிலளிநீக்கு
 22. இளவஞ்சி,
  மனதை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு தான், அதை நீங்கள் எடுத்துச் சொன்ன விதம் மனதைத் தொட்டதோடு, முக்கியமாக சிந்திக்கவும் தூண்டியது. அற்புதமான நடை உங்களுடையது, பாராட்டுக்கள் !!!

  //உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை.
  //
  உண்மையை மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள் ! ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை என்பதும் உண்மை. இந்தியாவில் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தாலும், நீங்கள் கூறியபடி "வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி" என்ற (என்னுள் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும்!) மனப்போக்கு முழுவதும் மாறுவதற்கு தொடக்கமாய் உங்கள் இந்த பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்!!!

  //என் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... "வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்"னா தான் அடிக்க வரான்! :)
  //
  உங்கள் நண்பன் நலம் பெற்று விட்டதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. போபால் ஆஞ்சனேயர் அவரை கைவிடவில்லை !!! ஒரு இளக்கமான நிகழ்வு குறித்து எழுதும்போது கூட, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களை விட்டு அகலாதது குறித்தும் மகிழ்ச்சியே :-)

  என்றென்றும் அன்புடன்
  பாலா

  பதிலளிநீக்கு
 23. அன்பின் இளவஞ்சி, ரொம்ப நல்ல பதிவு. கண்ணில் நீர் வரவழைத்துவிட்டீர்கள்.
  இது போல் வேலைப் பளுவால் மன அழுத்தம் ஏற்பட்டு.. வேலையை விட்டு சொந்த ஊருக்குச் சென்று .. 3 வருடங்களுக்குப் பிறகு தேறிய ஒரு நண்பன் எனக்கும் உண்டு..
  அவனை எனக்கு நினைவுப் படுத்தி விட்டீர்கள்.
  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு...

  பதிலளிநீக்கு
 24. Ilavanji,

  Arumaiyaana pathivu...
  U r very lucky to have a friend like Rajesh.

  Thanks for ur reply to my comments abt ut friend Kooraan. Happy to know that he has changed.

  SweetVoice.

  பதிலளிநீக்கு
 25. என்ன ஒரு பதிவு இது.சான்சே இல்லை சார்..மனிதன் இன்னும் வாழ்கிறான். நாமும் மனிதனாக வாழ்வோம்...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு