முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழுத கணங்களே உன்னதமானவை


Image hosted by Photobucket.com


இப்போ வந்துபோன ஆடியோட எனக்கு 32 வயசு முடிஞ்சதுங்க... "ஆடாம வந்தாலும் அதேதான்... அதுக்கு என்னா இப்போ..?"ன்னு கொரலு உடாதிங்க... யோசிச்சுப்பார்த்தா இந்த 32 வருச வாழ்க்கைல நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து கெக்கே பிக்கேன்னு சிரித்து சிரித்தே 25 வருடங்களை ஓட்டியிருக்கிறேன்! சின்ன வயசுல அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம்னு நல்ல புத்தகங்கள் படிச்சிருந்தாலும் முத்து, லயன் காமிக்ஸ்ல் வந்த ஸ்பைடரும் லக்கி லுக்கும் தான் நம்ப ஸ்பெஷல்! ஒரே காமிக்சை 10 தடவைக்கும் மேல் படித்துவிட்டு அந்த கதையை அப்படியே பள்ளியில் சககூட்டாளிகளுக்கு சிரிக்க சிரிக்க சொல்லிமுடிப்பதற்குத்தான் என்னுடைய மதிய சப்பாட்டுநேரம் சரியாக இருக்கும். வீட்டிலும் அதே கதைதான். அப்பா மட்டும் வீட்டில் இல்லையென்றால் என் அண்ணன் அக்காவோடு சேர்ந்துகொண்டால் வீடு தூள் பரக்கும். வகுப்பில் நடந்தவை, வாத்தியார் செய்தவை என்றுசொல்லி சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்.


எல்லாம் அப்பாவினுடைய புல்லட் சத்தம் கேட்கும்வரைதான். அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீடு அப்படியே சென்னை கன்னிமரா நூலகம் மாதிரி அமைதியாகி ஆளுக்கு ஒரு புத்தகத்துடன் ஒவ்வொரு மூலைல ஐக்கியமாகி ஏதோ அடுத்தநாள் IPS பரிச்சைங்க்கறமாதிரி ஒரு போஸ் கொடுப்போம். இத்தனைக்கும் அவர் எங்களை அவ்வளவு சீக்கிரம் அடிக்கவோ கண்டிக்கவோ மாட்டார்! என்னதான் காவல்துறைல அதிகாரியா இருந்தாலும் எங்களை மட்டும் அவரால கண்டுபிடிக்கவே முடியவில்லை. இல்லை தெரிந்தும் கண்டுக்காமல் விட்டுவிட்டாரோ என்னவோ! எல்லாரும் தப்பிச்சிட்டாலும் நான் மட்டும் வருடத்துக்கு இருமுறை மாட்டுவேன்! பின்னே காலாண்டு, அரையாண்டு பரிச்சை மார்க்சீட்டுல அவரிடம்தானே கையெழுத்து வாங்கியாக வேண்டும்? "அதெப்படிடா.. பார்க்கும் போதெல்லாம் படிச்சுகிட்டே இருக்கற.. மார்க்கு மட்டும் வரமாட்டேங்குது?"ன்னு கேக்கறப்ப கொரமுழி முழிச்சிகிட்டு அம்மாவை பார்ப்பேன்... அம்மா ஒரே வார்த்தைதான்.. "விடுங்க.. பையன் பாவம்!?" அவ்வளவுதான்... "அடுத்ததடவை நல்ல மார்க்கு வாங்கனும் சரியா..?" என்பதோடு நின்றுவிடும் என் அப்பாவின் கண்டிப்பு... ஆனால் இந்த "அடுத்த தடவை.. நல்ல மார்க்கு.." என் கல்லூரி இறுதியாண்டுவரை தொடர்ந்தது வேறுகதை!


பள்ளிக்கூட நாட்களிலாவது பரவாயில்லை. கேட்ட, படித்த, பார்த்த விசயங்களுக்கு சிரித்து பிழைப்பை ஓட்டியிருக்கிறேன். இந்த கல்லூரில பாருங்க.. அடுத்தவனை கிண்டலடிச்சி ஓட்டறதுன்னு ஒரு கெட்ட பழக்கம் ஒட்டிகிச்சி. எவனாவது ஒருத்தன் மாட்டுனா போதும். அப்படியே கிழிச்சி காயப்போட்டாதான் அன்னைய பொழுதுக்கு கடமைய முடிச்ச திருப்தி. இதுல பாதிக்கப்பட்டவன் தவிர மத்த அத்தனைபேரும் விழுந்து பொரண்டு சிரிப்போம். இப்படித்தான் ஒருதடவை ஆங்கிலம் பேசவராத ஒருத்தன்( ஆமாமா.. அப்போ நானெல்லாம் ஆக்ஸ்போர்டு ரேஞ்சு.. நீங்க வேற...) தெரியாத்தனமா ஒருநாள் கடைல கமாய்(CAMAY) சோப்புன்னு கேட்டுவைக்க ஒரு 20 நாளைக்கு அவன் 1942-A love story ஆங்கிலபடத்துக்கு போலாம்னு கூப்பிட்டதாகவும், Double team ல உன் டும்மியும்(Van Dame) terminaterல ஆர்னால்ட் சிவனேசனனும் நடிச்சிருக்கறதா சொன்னதாகவும், கடலை போடும்போது "How long is your name? How many of your Father" னு கேட்டதாகவும் இல்லாதையெல்லாம் கெளப்பிவிட்டு சிரிக்க அவன் கடுப்பாகி என்னை புரட்டி எடுத்ததும் நடந்திருக்கிறது. ஆனால் அதற்கும் சிரிப்புத்தான் சிரித்திருக்கிறேன். அவன் என்னை அடிக்கும் போது "எனக்காடா இங்கிலீசு தெரியாது..? இத்தா வாங்கிக்க.. A for Appaththa... B for ballimittai" னு சொன்னதாக... இப்போது நினைத்துப்பார்த்தால் நிறைய நண்பர்களோட மனசை காயப்படுத்தியிருக்கேன்னு தெரியுது. இத்தனைக்கு பிறகும் என்னை நண்பனா மதிச்சு கூட இருந்திருக்காங்கன்னா அது என்னை ஒரு தவிர்க்க முடியாத இம்சைன்னு நினைச்சு பொறுத்துப்போனதால இருக்கலாம்! இத்தனை வருசம் சிரிச்சதுல வாய்கிழிய பேசறதுதவிர வேற ஒன்னுமே கத்துக்கலைன்னு தெளிவாக தெரிகிறது


வாழ்க்கைல நான் சில நாட்கள் மனசு விட்டு அழுத நேரங்களும் உண்டு. என் சொந்த சோகங்களுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் இல்லாமல் மனசு நெகிழ்ந்துபோய் உணர்வுபூர்வமாய் அழுத நேரங்களில்தான் நான் நிறைய தெரிந்துகொண்டிருக்கிறேன். அந்த அழுகையின் கண்ணீர் உலகம் பற்றிய எனது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. மனதிலிருந்த சோகங்களை கரைத்திருக்கிறது. கசடுகளை கழுவி சுத்தமாக்கியிருக்கிறது. பிறர் உணர்வுகளை மதிக்கும் பண்பை கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது. மனதிற்கு உறுதியையும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. அந்த சில நாட்களே வாழ்க்கையை சொல்லிக்கொடுத்திருக்கிறது.


என்னைக்கேட்டால் நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நான் அழுத கணங்களே உன்னதமானவை! அதைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்!

கருத்துகள்

 1. வாங்க நட்சத்திரமே!

  //இத்தனைக்கு பிறகும் என்னை நண்பனா மதிச்சு கூட இருந்திருக்காங்கன்னா அது என்னை ஒரு தவிர்க்க முடியாத இம்சைன்னு நினைச்சு பொறுத்துப்போனதால இருக்கலாம்!//

  நானும் என்னைப்பற்றிச் சிந்திக்கும்போது இதையே யோசிப்பதுண்டு.

  பதிலளிநீக்கு
 2. வாங்க வாங்க.

  நல்வாழ்த்துக்கள்!!!!

  என்றும் அன்புடன்,
  துளசி.

  பதிலளிநீக்கு
 3. //வாழ்க்கைல நான் சில நாட்கள் மனசு விட்டு அழுத நேரங்களும் உண்டு. என் சொந்த சோகங்களுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் இல்லாமல் மனசு நெகிழ்ந்துபோய் உணர்வுபூர்வமாய் அழுத நேரங்களில்தான் நான் நிறைய தெரிந்துகொண்டிருக்கிறேன். அந்த அழுகையின் கண்ணீர் உலகம் பற்றிய எனது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. மனதிலிருந்த சோகங்களை கரைத்திருக்கிறது. கசடுகளை கழுவி சுத்தமாக்கியிருக்கிறது. பிறர் உணர்வுகளை மதிக்கும் பண்பை கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது. மனதிற்கு உறுதியையும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. அந்த சில நாட்களே வாழ்க்கையை சொல்லிக்கொடுத்திருக்கிறது.
  //

  ARUMAI! ARUMAI!!

  -Mathy

  பதிலளிநீக்கு
 4. போன பதிவும் இந்த பதிவும் நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 5. இனியாவது தொடர்ச்சியா, அடிக்கடி எழுதுங்கோ.

  பதிலளிநீக்கு
 6. வசந்தன் - நட்சத்திரமா இருந்துகிட்டு ஒரு வாரத்துக்கு தொடர்ச்சியா எழுதலைன்னா மதியக்கா ஆளவிட்டு அடியப்போட்டுவாங்க.. அதுனால ஒரு வாரத்துக்கு கேரண்டி! :)

  'மழை' ஷ்ரேயா(பேரே ஜில்லுன்னு இருக்கு :) ) , துளசி, மதி, தங்கமணி, வசந்தன், நற்கீரன்...

  உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 7. இன்றைக்குத்தான் உங்கள் அறிமுகம். இரண்டு பதிவுகளே படித்திருக்கிறேன். மிகவும் பிடித்துவிட்டது

  விளையாட்டாக ஆரம்பிக்கிறீர்கள்; அழுத்தமாக முடிக்கிறீர்கள். இந்த style ரொம்பவே பிடிக்கிறது. மனமுவந்த (ஆனாலும் பொறாமையுடன் கூடிய) வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. எனக்கு ஒரு திருக்குறள் நினைவிற்கு வருகிறது இளவஞ்சி,

  அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
  புண்கண்ணீர் பூசல் தரும்

  கண்ணீர் அன்பைக் காட்டும் கண்ணாடி. உண்மையான அன்பால் அதை அடக்க முடியாது. வெடித்துக் கொண்டு வரும். ஆணானாலும் சரி. பெண்ணானாலும் சரி.

  நான் சிரித்து மகிழ்ந்த பொழுதுகளை விட அழுது பொழுதுகள் கற்றுத் தந்தவை ஏராளம். ஏராளம். நான் கண்ணீர் சிந்திய பல நிகழ்ச்சிகளை நீங்கள் நினைவு கூற வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு