வியாழன், பிப்ரவரி 03, 2005

ஊடலும் பிறகு ஊடலும்...அறை முழுவதும் இரைந்து கிடக்கின்றன
வெறுப்பில் தோய்ந்த வார்த்தைகளும்
அர்த்தமற்ற வசவுகளும்

முழுதாய் விலக்கமுடியா பிணைப்பில்
எங்களுக்குள் விலகியிருக்க
எப்போதும் போர்பரணி

ஒவ்வொரு முறையும் கேவலப்படுகின்றன
பழையகாதலும் அதன் சாட்சிகளும்
கூடவே சுற்றாரும்

இன்றும் அதேபோல் எங்கள் குழந்தை
புரியா மிரட்சியும் பொங்கும் அழுகையும்
உடலில் நடுக்கமும்

இம்முறையும் தவறாமல் சிரிக்கின்றன
கிப்ரானும் தம்மபதமும்
நொறுக்கப்பட்ட சுயங்களும் மாண்புகளும்
காட்சிப்பொருளாய்

ஒருவரையொருவர் ஈர்த்துக்கொள்ள
தவமாய் தவமிருந்தோம்
இப்போது புரிந்துகொள்ள மட்டும்
நேரம் இருப்பதேயில்லை

படுக்கைகள் பிரியும் ஒவ்வொரு இரவும்
அவளுக்கு எப்படியோ
கரமைதுனத்தில் கரையுமென் காமம்
எவளையோ நினைத்தபடி

2 கருத்துகள்: