சுயமழிந்த பொழுதுகள்

வெள்ளி, மார்ச் 04, 2005மாட்டிக்கொள்ளாத கள்ளத்தனத்தின்
ஒவ்வொரு முடிவிலும்
அவன் என் காதருகே
சிக்கிய நிலைகளில் அவனை அருகில்
அண்டவிட்டதே இல்லை
காப்பாற்ற இருக்கிறதென் நாக்கு

அமைதியின் வெண்மையில் அவன்
யுகங்களின் அழுக்குகளும் கறைகளும்
என் உடல்முழுவதும் திட்டுதிட்டாய்
அசிங்கங்களே அணிகலன்கள் என் கூட்டத்தில்
பாவம் அவன் பரிதாபமாய் அங்கே

ஒருவரையொருவர் சகித்தநிலையில்
மறைத்தவைகளையே ஆதாரங்களாய்
அமையுமென் உறவுகள்
என் உள்ளறிந்தும் அவன்
என்றுமே அன்னியமாய்

அடுத்தவர் அழுக்கையும் புழுநெளியும்
புண்களையும் நோண்டி முகர்கையில்
அனைவரும் ஆவரென் சத்ருகள்
அவனுடன் இருக்கையில் இதுவொரு பிரச்சனை

அவனே நானென அவனே நானென
ஓயாது பறையடிக்க
நம்பத்தொடங்கியது என் கூட்டம்
கூடவே நானும்

மெல்ல மெல்ல அவனை
அடித்து அமர்த்தி அழுக்குகள் பூசி
புரட்டுகள் துதித்து நரகல் படைத்து
நானே அவனென சொன்னபோது
அவமானம் தாங்காமல்
செத்துப்போனான்

நிம்மதியாய் வாழத்தொடங்கினேன்
நான்

விரும்பக்கூடியவை...

0 comments

Like us on Facebook

Flickr Images