
கை சற்றே நீளமாயிருப்பினும்
எனக்கு சரியாகத்தான் இருக்கிறது
மொடமொடப்பான மடிப்புகள் விரைத்த
அப்பாவின் கதர்சட்டை
படியவாரிய ஈரத்தலையுடன்
கற்பூரம் கண்ணிலொற்றி
வெண்ணிற பட்டையிட்டு
ஒருமுறை முகர்ந்து மெதுவாய் உதறி
தலைவழியே அணிவார் இதை
நிறைவாகத்தானிருக்கும் பார்க்க
சாமிபடத்துக்கு சட்டமிட்டதைப்போல
கழுத்துப்பட்டை சற்றே பழுப்பேறி
தையல் பிரிந்திருந்தாலும்
வானத்தின் வெளுப்பாய்
லேசான நீலத்தில்
பாக்கெட்டின் மைகசிவு
துவைத்தும் போகாமல்
அவரின் பின்குறிப்பாய்
நாப்தலின் மணத்தையும் கடந்து
மெல்லியதாக பரவுகிறது
பெட்டி போட்ட வாசம்
உணரமுடிகிறது இருப்பை
ஏனென்று புரியவில்லை
முதலில் நன்றாயிருக்கிறதென்ற அம்மா
பிறகு விசித்து அழுதது
நன்றாக இருக்கிறது!
பதிலளிநீக்கு-முரசு
எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.....எனக்கும் அம்மாவுக்கும் நேர்ந்த அதே உணர்வுகள்....சில சோகங்கள் தரும் வலிகள் ஒன்றுதான் போலும்.
பதிலளிநீக்குஅன்புடன் அருணா