முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சவுண்டு சிஸ்டம்அது ஒரு காலம். வீட்டில் ரேடியோ இருந்தாலே வசதிக்காரவுக என இருந்தகாலம். ரெண்டாப்பு மூனாப்பு படிக்கையில எங்க லைன்வீட்டு ஓனரு ஒரு பெரிய மஞ்சாக்கலர் பொட்டிய பங்களா வீட்டு திண்ணைல வைச்சு கேட்டுக்கிட்டு இருப்பாரு. அப்பவே கேட்டுப்போட்ட வீடு. அவரு லாரிபில்டிங் பட்டறையும் வைச்சிருந்ததால அவருபேரு ரேடியோக்காரரா லாரிக்காரரான்னு காலனிமக்கா மாத்திமாத்தி குழப்பி சொல்லிக்குவாங்க. அது ரேடியோவா இல்ல ரிக்கார்டுதட்டு பெட்டியான்னுகூட சரியா தெரியல. வீட்டுகேட்டுக்கு வெளில நின்னு தூரத்துல இருந்து பார்த்தது மஞ்சாபொட்டியாத்தான் தெரிஞ்சது. ஏதாச்சும் பாடிக்கிட்டே இருக்கும். ஆனா அவருக்கு ரெண்டு சம்சாரம்னு மட்டும் இன்னும் நினைவிருக்கு.அதுக்கப்பறம் வேற ஊருக்கு போயிட்டாலும் பொழுதுபோக்கு எல்லாம் எங்க வீட்டுல எப்பவும் புத்தகங்க மட்டும்தான். வாசிக்கறதுக்குன்னு கோகுலம், பூந்தளிர், தமிழ் மொழிபெயர்ப்பு ரஸ்ய பத்தகங்கள்னு ஏதாச்சும் வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கும். அதுவரைக்கும் கோயில் கல்யாண கூம்பு ஸ்பீக்கரு பாட்டுக மற்றும் திருவிளையாடல் விதி கதைவசனம் சும்மா காது கிழிய கேட்ட நியாபகம் உண்டு. படம்பார்க்க அம்புட்டு கொள்ள ஆசை அன்னைக்கு இருந்தாலும் அதுக்குமேல பாட்டுக்கேக்க பெரிய பிரியமெல்லாம் இல்லை. அதாவது தெரியல. அதுவா காதுல ஏதாச்சும் அப்பப்ப விழுந்தாச்செரி.


மொதமொத தெருசனம் முழுக்க ஒரு ரேடியோவீட்டு முன்னாடி குவிஞ்சதினம் இந்திராகாந்தியை கொலைசெய்த தினம். திருப்பூர்ல கடையெல்லாம் அடைச்சுட்டாங்க. பள்ளிக்கூடத்துல இருந்து வழக்கம்போல நடந்து வீட்டுக்கு வந்தா எங்க தெருவுல ஒரு ஆளையும் காணோம். எங்கவீதி முக்கு வீட்டுல வீட்டுக்கு முன்னயே குடோனுபோட்டு தறியோட்டறவுக. அன்னைக்கு அவங்க ரேடியோவை எடுத்து வீட்டுமுன்னாடி புல்சவுண்டுல வைச்சுவிட்டாங்க. செய்தியும் சோக ஷெனாயும் ( அப்பயுங்கூடி அது பீப்பின்னே நினெச்சேன் ) மாத்திமாத்தி கும்பலோட கும்பலா கேட்ட நியாபகம்.


ஊர் பஞ்சாயத்தையெல்லாம் ஏறக்கட்டிட்டு வீட்டுக்கு வந்த எங்கப்பாரு கும்பல்ல நின்னு நியுசு கேக்கமுடியாத கடுப்புல காண்டாகி நாங்கெல்லாம் இந்திராம்மா போன சோகத்துல மூக்கையுறிஞ்சுக்கிட்டு வர்றயில ச்சே ஒரு ரேடியோ வேணும்டே வீட்டுக்குன்னார். அதுக்கப்பறமும் ரெண்டு வருசமாச்சு எங்க வீட்டுக்குன்னு ஒரு சேனியோ செட்டு வர. செட்டு என்ன பெரிய செட்டு? சேனியோ டப்பாதான். ஒரேயொரு சின்ன மோனோ ஸ்பீக்கரு. பக்கத்துல ஒரு காசெட்டு போட ஒரு இடம். சைடுல ரேடியோ மீட்டரு. அவரு வாங்கியாந்து வைச்ச புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே மொதக்கொண்டு எல்லா சாமிப்பாட்டும் அப்பப்ப தேயும் அதுல. சினிமாப்பாட்டு கேசட்டு அவரு வாங்கறது அபூர்வம். எல்லாம் ரேடியோல வந்தா உண்டு. அதும் காதல் பாட்டுகன்னா பம்பிப்பம்பி கேக்கனும். ஏன்... காதல் என்கிற வார்தையே சொல்லமாட்டோம். அம்புட்டு கட்டுபெட்டி ஆச்சாரம்! ஒரேயொரு வேடிக்கை கேசட்டு பாட்டுன்னா எம்புருசந்தான் எனக்குமட்டும்தாங்கற பாட்டு. அதைக்கேக்கயில நாங்க பயக எல்லாரும் பம்பிப்பம்பி சிரிப்போம். அம்மா கடுகடுன்னு அதை அணைச்சுத்தொலங்கடா எருமைகளாம்பாய்ங்க :))அதுக்கப்பறம் கோவைக்கு மாத்தலாகி வந்தபொறவுதாம் பயககூட சேர்ந்து பாட்டுக்கேக்க கத்துக்கிட்டதும் காசு சேர்த்து கேசட்டு வாங்குறதும். அப்பயுங்கூடி அதே சேனியோ சிங்கிள்ஸ்பீக்கரு டப்பாதான். ப்ரெண்டு மக்கா ஊட்டுல சோனி ஸ்டீரியோ பெரிய செட்டு இருந்தது. இளையராஜா அஞ்சலியெல்லாம் ஆயிரம்தடவை அவங்கூட்டுல தேய்ச்ச நியாபகம். அதுபோக அவரு முன்னாடி போட்ட பழைய ராசாபாலனை எல்லாம் "தபலாதட்டி ஆரம்பிச்சுட்டாருயா..." நக்கல் தான். ஏன்னா மைக்கேலு பேடும் மடோனா லைக்க பிரேயரும் கேட்டுப்பழகுன கெத்து இருக்காதா என்ன? அந்த பழங்கதையத்தான் பீட்டர் சாங்ஸ்சுன்னு ஒரு பதிவுல கொசுவத்தி சுத்தியிருந்தனே?ப்ரெண்டு வீட்டுல ஸ்டீரியோ பத்தாம ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பீக்கரு வயரு இழுத்து அதை காலி கொடத்துமேல கவுத்து அது பாஸ் ஸ்பீக்கரும்பானா... அதெல்லாம் யாரு கண்டா? ஆனா அந்த எக்ஸ்ட்ரா டும்டும்மு நல்லாத்தான் இருந்தது. இன்னொருத்தன் வீட்டுல பிலிப்ஸ் பவர்ஹவுஸ் பார்க்கறவரை!


அதிருந்தது அவிங்க வீட்டு டேபிள்மேல சும்மா பாலீஸ்போட்ட கருங்குதிரை கணக்கா! எங்கபாரு ஸ்விச்சுக. ரெண்டு காசெட்டு. ஈக்குவலைசரு. சைடுல சும்மா புல்லட்டுக்கு சைடுபொட்டி கணக்கா கும்முன்னு ரெண்டு பெரிய ஸ்பீக்கரு பெட்டிக. அதுக்குள்ள மூனு ஸ்பீக்கரு. வாயெல்லாம் பல்லாக அதை தொடக்கூட பயந்து அவம் போட்டுக்காட்டுன மேன்மெசின் டெக்னோ "அயாம் ஆன் ஆபரேட்டர் ஃபார் யுவர் கால்குலேட்ட"ரும் அப்பறம் நேயர் விருப்பம்னு எனிக்மாவின் "வாய்ஸ் ஆஃப் எனிக்மா"வும் கேட்டுட்டு அவங்கூட்டுல கொடுத்த டீய குடிச்சுட்டு அந்த டும்டும்ம பேசிப்பேசி மாய்ஞ்சபடிக்கு வந்தது இன்னமும் நினைவிருக்கு. என்வீட்டுல நுழையறப்ப மொதமொதலா ஒன்னு வாழ்க்கைல நாமளும் வாங்கனும்டேனுட்டு மனசுக்குள்ள கறுவி புதைச்சுவைச்ச ஆசைதான் ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம். அதுவரை எனக்கு அவையா எதுவும் கிடைச்சதுமட்டுமே வாழ்வு 

:)


அதன்பிறகு பலவருசம் கழிச்சு நானா சம்பாதிச்சு ஒரு நாலு சீடி கென்வுட் வாங்கி வைக்கயில ஏதும் பெரிசா சாதிச்சதா நினைச்ச நினைவில்லை. ஏன்னா அதுக்குள்ள நிறைய அடிவாங்கி அந்த மொட்டை தபலாத்தட்டி பாட்டுக எல்லாம் மனசுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பிச்ச காலம். பாடும் கருவிய விட பாட்டுக நெஞ்சுநிறைச்ச பருவம்.செரி அதெல்லாம் விடுங்க. பழங்கதை. கென்வுட்டுக்கு அப்பறம் சோனி ஹோம்தியேட்டரெல்லாம் பார்த்து இங்கவந்து மேலும் துல்லியமா ஒரு செட்டு புடிச்சு வீட்டுல மாட்டலாம்னு தேடித்தேடி வாங்குன கதைய சொல்லறேன்.இங்க வந்த புதுசுல ப்ளாட்டுல இருந்தோம். வயசாளிக நெறஞ்ச இடம். ச்சும்மா மாடிப்படி தடதடன்னாலே கம்ப்ளைண்ட் கொடுக்கறவங்க. அந்த எடத்துல வேலைப்பளுல இருந்து தப்பிக்க எங்க குடும்ப குலவழக்கமான சினிமா பார்த்து ஆத்திக்கலாம்னு தேடித்தேடி ஸ்பீக்கர்களை வாங்கிவந்து சர்ப்ரைஸா இறக்குனா எங்கூட்டம்மா "அட கூறுகெட்ட கூவை..."ன்னு தலைதலை அடிச்சுக்கிட்டிங். இதேபோலத்தான் அவங்கப்பாரு அங்க ஒரு காலனிக்கு தண்ணி போர் போட்டுக்கொடுத்த செலவுக்கு பள்ளிகரணைல ஒரு கிரவுண்டு வைச்சுக்கன்னு ( இன்னைக்குப்போகுது அம்பது லட்சம்... ) கொடுக்க அவரு அதெல்லாம் வேணாம்னு காசா வாங்கி இருவது ரூவாய்க்கு சோனி வாங்கிட்டுவந்து வாங்கிக்கட்டுன மனுசன்னு எல்லா ஆம்பளையாளுகளும் ஒரே மாதிரியான்னு செம டோஸ்விட்டிங். எல்லா ஸ்பீக்கரு பொட்டிங்களும் அஞ்சடிக்கு ஹாலை நிரப்பிக்கிட்டு நிக்க செம காண்டு. ஒரு வாரம் எடுத்து வீட்டுக்குள்ளயே பம்பிப்பம்பி ஒவ்வொன்னா மாட்டுனா சத்தமே வைக்கமுடியல. ச்சும்மா இருபது வைச்சாலே செவுரெல்லாம் அதிரும். பெர்சுங்க கம்ப்ளைண்ட் கொடுத்துருவாங்கனு பயந்துபயந்து ஊஃபரெல்லாம் அணைச்சு படம்பார்த்த கோராமை. அதுக்கே அப்பறம் ரிமோட்ல ஒரு தனிவீடு பார்த்து எத்தனை சத்தம் வைச்சாலும் அந்த காட்டுக்குள்ள பக்கத்துல ஒரு பயலுக்கும் கேக்காதுங்கறப்ப தான் ஒரு நிம்மதி. குடும்ப சகிதமா வாரம் ரெண்டுபடம் எப்படியாச்சும் ஃபுல் சவுண்டுல பார்த்துருவோம். அது ஒலகப்படமானாலும் செரி பீம்சிங் கருப்புவெள்ளியானாலும் செரி 10 எண்றதுக்குள்ள மெகாமொக்கைகளானாலும் செரி... பார்த்து தீர்க்கறதுதான். இன்னைக்கு போனி டெண்ட்டுகொட்டாயில் வீரபாண்டிய கட்டபொம்மு.:)


வீட்டுக்கு சவுண்டுசிஸ்டம் செய்யறதுல இதுவரைக்கும் நான் தேடி தெரிஞ்சுக்கிட்டதுல சிலது சொல்லறேன்.

* எல்லா எலக்ட்ரானிக் காட்ஜெட்ஸும் ஒரிஜினல் மதிப்பும் பிராண்டிங் ஹைப்பு என இன்னொரு மடங்கு விலையும் கொண்டவை. நமக்குத்தேவை 92% குவாலிடிதான் தான் எனில் அதைத்தேடி தோதானதை வாங்குவது நலம். அதற்கும் மேலே கொடுக்கும் விலையெல்லாம் நமக்கு தேவையில்லாத உபயோகமே செய்யாத வசதிகளுக்கும் ப்ராண்டுக்கும் கொடுக்கும் கைக்காசு. அதற்கென ஒரு 96% குவாலிடி கண்டிப்பாக இருக்கும் தான். ஆனால் நமக்கு அந்த எக்ஸ்ட்ரா 4% குவாலிட்டியை ஆராதிக்கும் மனநிலையோ தேவையோ இல்லையெனில் 92%ல் செட்டிலாவது உத்தமம். இல்லையெனில் வருசத்துக்கு ஒருக்கா வாங்கிய பொருளை சமூக அந்தஸ்த்துக்காவது மாற்றிக்கொண்டே இருக்கனும். "ஆல்வேஸ் டு த பெஸ்ட் அண்ட் லேட்டஸ்ட்"னு இருக்கறது ஒரு ஆட்டிடூட். அதை ரசிக்கும் பாவிக்கும் ஆட்டிடூட் நமக்கில்லை எனில் எவர் என்ன சொன்னாலும் நம்ப ரசனைக்கு மேலாக வாங்கி கைய சுட்டுக்கப்படாது.* ஒரு நல்ல ரிசீவர் பாதி ஹோம்தியேட்டர். ஒரு ரெகுலர் சைஸ் ஹாலுக்கோ சின்ன மீடியா ரூமுக்கோ 5.1 எதேஸ்டம். இல்லை நான் பக்காவா ஒரு மீடியா ரூம் போடறேனாக்கூட 7.2 மேக்சிமம். அதுக்கும் மேல 9.2 இல்ல ஆரோ 3டி போடறதெல்லாம் அந்த துறைசார் மக்கள் அல்லது நெம்ப பணக்காரவுக வேலை. அது எனக்கு தெரியாது. இப்பத்திக்கு எனது சின்ன ஆபீஸ் கம் மீடியா ரூம்கறதால 5.1ல் பரம திருப்தி :)

* சவுண்ட் என்பது காற்றின் நகர்வு அசைவில் கடத்தப்படுவது. அதை எவ்வளவுக்கு எவ்வளவு மெக்கானிகல் அசைவில் கொண்டுவருகிறோமோ அவ்வளவு சுகம். எலெக்ட்ரானிக் சிமுலேட்டெட் எல்லாம் கேக்க நல்லா இருக்கும். ஆனால் எனக்கென்னவோ ஃபுல்பீல் கிடைத்ததில்லை. ஆகவே எனக்கு பெரிய பெரிய ட்ரைவர்கள் கொண்ட டவர் ஸ்பீக்கர்கள்தான் பிடித்தமானவை. சின்னச்சின்ன பவர்புல் போர்ட்டபிள் போஸ் டைப் ஸ்பீக்கர்கள் எல்லாம் ஒரு நல்ல ரிசீவருக்கு துரோகம் செய்பவை! ஆகவே என் சாய்ஸ்னா அது முன்னாடிக்கு பெரிய டவர் ஸ்பீக்கர்ஸ், செண்டர் ஸ்பீக்கர், பின்னாடி இரண்டு மீடியம் பிக்செஃல்ப் ஸ்பீக்கர்ஸ் அப்பறம் 10 அல்லது 12 இன்ச் ஊஃபர். கேக்கற சவுண்டு ச்சும்மா கனமா இருக்கனும். காத்துல தகரத்தை இழுக்கறது துல்லியம்தான். அதன்கூட நல்ல பாஸ் சேரும்பொழுதுதான் நெசமாவே கனகதாரால இருக்கற பீல் கிட்டும் smile உணர்ச்சிலை 
மத்த சின்ன ஸ்பீக்கர்கள் எல்லாம் ஏனோ வீட்டுக்குன்னே செஞ்சமாதிரி ஒரு குறை லுக்கு. 

* சவுண்ட் ஹோம்தியேட்டர், மத்த ஃபீச்சர்லாம் ஆன்றாய்ட் வைபைல ஆன்லைன்லன்னு ஆகிட்டதால டீவிக்குனு தனியா ஃபீச்சர்லாம் தேடி காசைப்போடாதிங்க. எல்லா ஃபீச்சரும் இப்ப எக்ஸ்டர்னல் தான். இல்லைன்னா டீவிக்குன்னு கொடுக்கற காசு உபயோகப்படுத்தாமலேயே கிடக்கும். ஆகவே பார்க்கத்தோதான பெரியசைஸ் ஸ்கிரீன் ஹோம் தியேட்டருடன் சுகம். சில மக்கள்ஸ் வீட்டுல ப்ரொஜெக்டர் வாங்கி மாட்டியிருக்காங்க. ஆனால் நியூஸ் முதல் பாட்டுவரை எல்லாத்தையும் அதுல பார்க்கறது சிரமங்கறதால பெரிய டீவி திரை இப்பத்திக்கு நல்லது. 

* அவ்வளவுதான். எனக்குத்தெரிஞ்ச பெஸ்ட் அஃபோர்டபில் சவுண்ட் சிஸ்டத்தை http://newegg.comல் ஒரு விஷ்லிஸ்ட்டா போட்டிருக்கேன். எப்படி முயற்சித்தும் நான் சொன்ன 1Kக்கு பதிலா $1150 வந்துருச்சு 
திருட்டுப்பயக ப்ளாக் ப்ரைடேக்கு விலை ஏத்தி விக்கறானுங்க. இதே பொருளை வேற இடத்திலும் ஆன்லைனில் தேடிப்பாருங்க இன்னமும் குறைந்தவிலையில் முடியுதான்னு. ப்ளாக் கலரை விட ச்செர்ரி சிறப்பு, ஆனால் உங்கள் விருப்பம் 

http://secure.newegg.com/WishList/PublicWishDetail.aspx?WishListNumber=21985289 

* பனானா ப்ளக், நல்ல க்வாலிடி ஆக்டிவ் ஸ்பீக்கர் வயரெல்லாம் அத்தியாவசியம். ஆகவே அதிலெல்லாம் நல்ல குவாலிடியே தேடுங்க. கார்பெட் ப்ளோரெனில் எல்லா வயரையும் ஈசியாக நாமே கார்பெட் அடியில் தள்ளி வேலைய முடிச்சிடலாம். 


எல்லாம் வாங்கி மாட்டிட்டீங்களா? எல்லா மேனுவலையும் படிச்சுப்படிச்சு செட் செஞ்சுட்டீங்களா? அவ்வளவுதான். அதுக்கடுத்த ஒரு வாரத்துக்கு டெஸ்டிங்கோ டெஸ்டிங். கை சும்மா இல்லாம எல்லா செட்டிங்கையும் நோண்டிக்கொண்டே இருக்கும். எல்லாம் பழகி ஒரு நிலைக்கு வந்ததும் ரஹ்மான், ஹாரிஸ், சந்தோஷ்சிவன் அப்பறம் அநிருத் என பலப்பல அடிபொலி இசையமைப்பாளர்களை கேட்டு மெட்டு பீட்டுன்னு ரசியுங்கள். இது ஆரவாரம் கொண்டாட்டம் மற்றும் அனுபவித்தல்.


எல்லாம் ஓக்கேன்னு ஆனதுக்கு அப்பறம் யாருமில்லா தனிமைல இருக்கையில ரொம்பப்புடிச்ச மொட்டைபாட்டுக நாலைஞ்சு எடுத்துக்கங்க. கண்ணைமூடி லயுங்க லவ்வுங்க. அதுக்கும் மேல ஒன்றுண்டு. "பறவையே எங்கு இருக்கிறாய்?" போட்டுவிட்டு கண்ணைமூடி உங்க பழைய காதலியை தேடிக்கிளம்பி அலைகையில் பாட்டு நடுவில் மொட்டராசா "முதன்முறை வாழ்ப்பிடிக்குதே..."ன்னு நம்ப ஆன்மாவைத் தொடுகையில் அப்படியே உணர்ந்து கரைந்து கண்களில் நீர் மல்க காற்றோடு போனால் நம்ப ஸ்பீக்கர்செட்டு ப்ராஜெக்ட்டு சக்சஸு.இது வாழ்வை உணர்தல் :))


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர