மரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06

வெள்ளி, ஜூலை 21, 2006

Photobucket - Video and Image Hosting


'மரணம்'னு தலைப்பு கொடுக்கலாம்னு நினைச்சப்ப நம்ப மக்கா கிட்ட எனக்கு நல்ல மண்டகப்படி உண்டுன்னு நினைச்சேன். ஆனா நீங்க மானாவாரியா பதிவுகளப் போட்டு புல்லரிக்க வைச்சிட்டீங்க!

வாங்கய்யா வாங்க! வந்து புடிச்ச படைப்புகளுக்கு உங்க பொன்னான ஓட்டுக்களை அள்ளி விடுங்க!

வாக்குப்பதிவுக்கு முன்னாடி போஸ்டரு, கொடி கட்டுன ஜீப்புல மின்னல் வேக ரவுண்டப்பு போறாப்புலையும், பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் இருக்கட்டும்னுதான் இத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க 80 பதிவுக...

ஒவ்வொன்னுலையும் மிகச்சிறந்த, கதைக்கு அழுத்தம் கொடுக்கற, ஒரு திருப்பம் வைச்சிருக்கற, சொல்ல வந்த உணர்வுகளை அழுத்தமாச் சொன்ன, கண்ணுல தண்ணி வரவைச்ச, வாய்விட்டு சிரிக்க வைச்ச, கொஞ்ச நேரம் "ங்கே" ன்னு விட்டேத்தியா யோசிக்க வைச்ச, எனக்குப் பிடிச்ச வரிகளை மட்டும் இங்க கொடுத்திருக்கறேன்! எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு பிடிச்ச அத்தனை ஆக்கங்களுக்கும் குத்தித் தள்ளிருங்க!

படைப்பாளிகளுக்கு, வாக்களிக்கற இடத்துல மறக்காம உங்க பதிவுக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு(பின்ன? அந்த தன்னம்பிக்கை கூட இல்லைன்னா எப்படி? ) பிடிச்ச, ரசிச்ச மத்த படைப்புகளுக்கும் உங்க பொன்னான ஓட்டுக்களை போடுங்கப்பு(பின்ன? ஒரு படைப்பாளியா சக படைப்பாளியை அங்கீகரிக்கும் கர்வம் கூட இல்லைன்னா எப்படி?)

இந்த பதிவு எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சி! 16, 34 ஆகி இப்ப 80ல நிக்குது! நினைச்சா சிரிப்பாத்தான் வருது! தனக்கு ஆப்படிக்க முலாம்பழத்தோட வந்தவன்கிட்ட, அடுத்தவனுக்காக ஒருத்தன் பலாப்பழத்தோட நிற்கறதைப் பார்த்து சிரிச்ச கதையாத்தான் இருக்கு இப்போ என் நிலைமை! அடுத்த வின்னரு கோச்சுக்காதிங்கப்பு! :)

படிக்கற மக்கா இதுபோக இந்த பதிவுல விட்டுப்போன உங்களுக்கு மிகப்பிடித்த வைரவரிகளை இங்க சுட்டிகளோட போட்டிங்கன்னா, ஜொலிஜொலிக்கற ஆரமா மாத்திடலாம்! வாக்கெடுப்பு முடியற வரைக்கும் நாலு பேரு வாறப்போக நல்ல வெளம்பரமாவும் அமையும் தானே!

மேல உள்ள போட்டாவைப் பார்த்தீங்களா? எல்லாம் விட்டில் பூச்சிகளுக்கு கிடைத்த புதையல்! இதுக்காகவாவது இனி வர்றப் போட்டில போட்டுத்தாக்குங்க! :) புத்தகப்பட்டியல் கீழே...


போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்! வாக்களிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்!!

========================================


போட்டியில் வாக்களிக்க இங்கே சொல்லுங்க.


போட்டியில் பங்கேற்கும் படைப்புகள்:========================================


மரணம் - நாமக்கல் சிபி

"என்ன கற்றுக் கொண்டாய்?இதுவரை? " - என்றது.மரணம்"நான் முடிவு செய்வதல்ல"என்றேன்.

"வாழ்க்கையைக் கற்றுக்கொண்டாய்!வந்த வேலை
முடிந்தது!புறப்படு"என்றது!"நீங்க இல்லைனா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பான் சார்...ரொம்ப தாஙக்ஸ் சார் அன்னைக்கு அவனை பத்திரமா டாக்டர்ட்ட சேர்த்து விட்டதுக்கு"
நண்பன் - நிர்மல்

மறந்து போனதாய்
நினைக்கையில்
நள்ளிரவின் திரைசிலை அசைவுகளில்
அவன் பேச்சுகேட்கிறது.
வலிக்கிறது -நிர்மல்

உனக்கெல்லாம் சாவு வலி தெரியல.அதான் இப்படி பேசற.எந்த பிரச்சனைக்கும் 4 பொணத்தை வச்சி தீர்ப்பு சொல்ல முடியாது.
ரத்தமும் சதையும் - chameleon - பச்சோந்தி

முழுமைக்கு இரண்டு பக்கங்கள். பிறப்பு - இறப்பு, இறந்த காலம் - நிகழ்காலம். என்னால் ஏதாவது ஒன்றில் தான் நிலைக்க முடிகிறது. நான் என்பது இந்த நான்கில் ஏதோ ஒரு இரண்டு - வேறுவேறு விகிதங்களில்.


"இன்னைக்கி புத்தகம் இல்லாதவங்க எல்லோரையும் டீச்சர் கை தூக்கச் சொன்னாங்கமா""அப்படியா? உனக்குத்தான் புத்தகம் இருக்குதே""ஆனா ராம் கை தூக்குனாம்மா. அப்புறம் டீச்சர் என்னுடைய புத்தகத்தை ராமையும் சேர்ந்து வாசிக்கச் சொன்னாங்கம்மா."

எப்பொதும் நன்றியுணர்ச்சிக்காக தன் வாலை மெதுவாக ஆட்டும் நாய்.... அப்போது ஏனோ கொஞ்சம் கோபமாக வாலை ஆட்டிக் கொண்டிருந்தது... சரியாக 10.00 மணிக்கு தெருநாய் என்ற
பாகுபாடெல்லாம் பார்க்காமல் தனக்கு உணவு வைக்கும் கிருஷ்ணா அன்று ஏனோ காணவில்லை..... வரட்டும்... அவனைப் பார்த்து நாலு குரை குரைக்கலாம்....
உயிர் நண்பன் -தேசிகன்

ராஜாராமன் பதில் சொல்லவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமா, குற்ற உணர்ச்சியா?. யாரிடம் கேட்பது, என்ன செய்வது. உளவியல் ரீதியாக ஒரு பெரும்
மனச்சிக்கல் ஏற்பட்டது. அருவருப்பா, பயமா, வெட்கமா?. இந்த நினைப்பு வரும்போது எல்லாம் வேர்த்து கொட்டியது. .........

ராஜாராமன் கண்சிமிட்டாமல்
ஜெயராமனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஏற்றத் தாழ்வு என்னிடம் இல்லை என்று உறக்க கேட்கும் படி மணியடித்திருக்கிறேன். தூங்குவது போல் நடிப்பவர்களே, கேட்காதது போலவும் நடிக்கின்றனர். எங்கே சென்று விடுவார்கள் ?பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் !


மாலையில் அடக்கம் முடிந்து சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது தான் நிறைமாத மனைவி நினைவுக்கு வந்தாள். மணிக்கு பறையை கையில்
எடுத்துவிட்டால் வீடு, உறவு, பசி எல்லாமே மறந்துபோகும். காசும் சாராயமும் வந்துகொண்டு இருந்தால் போதும், ஓயாமல் கொட்டுச்சத்தம் கேட்கும். மனைவியின் நினைவு
வந்ததும் வழியில் இருந்த பூக்கடையில் கொஞ்சம் கதம்பம்(3) வாங்கலாம் என்று சென்றான்.
சுயநினைவு வந்ததும் என்னை விளித்து "டேய் நான் சாக போறேன். பொழைக்க வைக்க பாக்குறியா" என்று சிரித்தபடி மீண்டும் சுயநினைவிழந்தான். இப்போது அவன் உடல் அசாதாரணமாய் முறுக்கேறி என் முதுகை பிடித்து அழுத்த நான் வண்டியின் மேல்
கிட்டதட்ட படுத்து விட்டேன். அந்த நாட்களில் நான் அவனை விட கொஞ்சம் பலமானவன்தான். சாதாரணமாக அப்படி அழுத்தினால் என்னால் தாக்குபிடிக்க முடியும். ஆனால் இப்போதைய பிடி அசுர பலத்தில் இருந்தது.
இங்குவந்தபோது இல்லாதவேதனை இப்போது

ஒரு உயிர் நன்றாக வாழ, மற்றொரு உயிரை அழிப்பதாக பேரம் பேசியிருக்கிறார்கள் முப்பாத்தம்மனிடம், அதுவும் சம்மந்தப் பட்ட என் அனுமதி யின்றி! என் உலகமே இவர் கள்தான் என்று என்னை நம்பவைத்தது இப்படிக் கழுத்தறுக்கத்தானா? மனம்; வெதும்பியது...
சீட்டு மாளிகை - பினாத்தல் சுரேஷ்

200 பயணிகளின் விதி அறிய 500 பேராவது கூடியிருந்தார்கள். அழுகைச்சத்தம் இடக்கரடக்கி விசும்பல்களாய். ஒரு பிணம்கூட இல்லாத இந்தச்சூழலில் இழவு வீட்டைவிட அதிக மரணவாடை
அடித்தது.
மரணம் உதவும் - யேழிசை நரஹரி

இவ்வளவுக்கும் நடுவில் அவன் அலுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை.இந்த ஒரு சமயத்தில் தான் அவன் வருந்தி நான் பார்த்தேன்.அழுதும் விட்டான். அம்மா என்னை விட்டுப் போய் விடுவாளா என்று.
காலதேவனை வேண்டியபடி - இளா
தோற்ற என்னை
சில நேரங்களில்
எள்ளி நகையாண்டாலும், என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில் நீ விட்ட கண்ணீர்.

ஆன்மா சாந்தியடையுமா? - RamachandranUsha
"சிரிக்கிறதா அளுவுறதான்னு தெரியலே. ஆத்துமான்னு இருந்தா ரெண்டுக்கும் திருப்தி இருக்காது இல்லே?"
மரணம் - SenthilK

மரணம் நீக்கினால்இறையைத் தேடியிருப்பானா
மரண கதைகள்- 1 - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்

யோசித்துப் பாருங்கள்? நாம் எதைச்செய்தாலும், காரண காரியங்களை ஆராய்ந்து, நல்லது கெட்டது பார்த்து செய்கிறோமா?நம் பிள்ளையும், நம்மை நசிகேதன் தன் தந்தையைப் பார்த்த
அதே, கண்களோடுதான், அதே கேள்விகளோடுதான் பார்ப்பான்/ள்.அதனால் பொறுமையாய் பதில் சொல்லுங்கள், குழந்தைகள் கேள்வி கேட்டால்; நம்பும்படியாக, அவர்களுக்குப்
புரியும்படியாக!
கி.பி. 2106: மரணத்தை வெல்லும் மருந்து - வெங்கட்ரமணி
'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் "வரலாற்றில்"
ஹாஜியார் - அபுல் கலாம் ஆசாத்
இன்னமும் சேர வேண்டிய இலக்கு வெகுதொலைவில் இருக்கின்றது. பயணத்தின் முதல் அடியைத் துவங்கிவிட்டேன்.

சந்திரா அத்தை - பொன்ஸ்
அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.
மரணத்தின் மரணம் - புதுமை விரும்பி
எல்லார் சாவிற்கும் தவறாமல்சென்றுவந்தாலும் அனாதையாய்அது கிடந்தது..

கருவறையே கல்லறையாக - விழியன்
என்ன அம்மா செய்ய உங்களுக்கு பக்குவம் இருக்கும் அழாமல் இருப்பீர்கள், எனக்கு ஏது பக்குவம் கருவறையில் இருந்து இன்னும் மனிதர்கள் எவரையும் பார்க்கவில்லையே.
மரணம் - கட்டுரை - அஹமது சுபைர்
தர வேண்டிய பலனை தராததால், மாடு இறந்த அன்று துக்கம் கொண்டோமோ?பலன் தந்தால் மட்டுமே வாழ்க்கையா?

இரட்டை மரணங்கள்! - நயனி
இந்த மனிதர்களின் வாய்கள் பிடிப்பின்றிக் கிடக்கின்றன. அதற்கொரு பற்றில்லை. பிடிப்பும் பற்றும் இல்லாததால் வாய்கள் ஊஞ்சலாடுகின்றன.வேளைக்கொன்று கிளக்கின்றன.
பெரும்பாலும் உளறல்கள்.இவர்களின் வாய்களில் துர்நாற்றம்
வீசுகின்றதாம். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனெனில்,இவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்களே
எபப்டி?

மரணமில்லாப் பெருவாழ்வு! - SK
மரணமென்பது மாண்டுபோவதா?இல்லை, இல்லை, இல்லவே இல்லை!மனிதத்தை மறப்பதே மரணம்!

ஜனனம் - நிலா
ஏந்தாயி, இம்புட்டுக்காணம் இருந்துக்கிட்டு எம்புட்டுத் தெகிரியம் வச்சிருக்க நீயி... அதுல இந்தா இம்புட்டூண்டு குடேன் ஆத்தாளுக்கு" நரம்பாக் கெடக்க கையைக் குமிச்சு புள்ள கண்ணு முன்னால ஆட்டுதா ஆத்தா.

மரணம்- குட்டிக் கவிதைகள்! - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
அடக்கம், அமரருள் உய்க்கும்!- அந்தஅமரரும், அமரராய் அடக்கம்!அடக்கம் செய்யப்பட்டார்,அமைதியாய் அமரரானார்!

சாமியாண்டி - Dubukku
"ஏழப் பொழப்பு…பாவப்பட்ட பொழப்பு...மவ மாசமா கிடக்கா, மூத்தது பொட்டப் புள்ள...தாயில்லா புள்ளையா ஆகிடக்கூடாதுங்க...சாமீ பாவத்துக்கு நாங்க ஆளாகக் கூடாதுங்க..." அவன் எதிர்பார்க்காத தருணத்தில் கம்பிகளுக்கு வெளியே தலைக்கு மேல்
கைகளைத் நீட்டித் தூக்கி கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் சாமியாண்டி.
மாண்டவன் கதை - செல்வராஜ்
ஈரப்பஞ்சின் நீரைப் பிழிந்தது போல் நினைவுகள் விடுபட்டுக் கொண்டே இருக்கின்றன.

பந்தல் போட்டுப் பாடை கட்டிக் கொண்டிருக்கையில் இன்னும் சற்றுத் தொலைவை
உணர்கிறேன்.

மரணம் இனிக்கிறது - தெக்கிக்காட்டான்
யாருக்குமே சுமையா இல்லாம, சத்தமில்லாமலே வந்து, சத்தமில்லாமலே வாழ்ந்து போயிருக்குது, நெனச்சுப்பார்த்தா மரணத்தை இந்த கிழவியை விட யாருமே அனுபவிச்சு
தழுவியிருக்க முடியாதோ அப்படின்னு தோணுது.

மரணமே நான் தயார் - தியாகராஜன்
"அவளால் தரப்பட்ட புன்னகையும்
தரப்படாத சம்மதமும்
சேர்த்துபுதைப்பதெனில்"
மரணம் - தியாகராஜன
செத்தபின் சொர்க்கமே நரகமோவேண்டுமுன் பிராத்தனைகள் சரியேவாழ்வில் பிடிசோறுதான் பெரிதுதெனும்பேரிகை கொட்டி நீ ஆரம்பி!
'மரணக் கதைகள் - 2 காதல் : சாதல் 50:50 !! - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
அக்கணமே இறந்து போனாள்! இறப்பிலும், அவள் பார்க்க அழகாகவே இருந்தாள்!

மரணம் ‍ - தமிழ்ப்பிரியன்
நினைவுகளில் நீ நிறைந்து வாழும் பொழுது,மறிப்பதெல்லாம் மரணமாகுமா??

தொடரும் கேள்விகள்...(சிறுகதை) - மதுமிதா
நாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடி விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டது. இரவிலிருந்தே சாப்பிடவில்லையாம்.

எல்லாமே சமமாச்சு... - மதுமிதா
எல்லாமே சமமாச்சு
எல்லாம் கடந்த பின்பு

மரணத்தின் வலி - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"இப்ப உங்க பாஷையில ஒரு கவிதை சொல்லப்போகிறேன்"."ம், சொல்லு".
"என் கண்கள் மேயும் வழியில்
Z_CHINT(-) 50 ல் குத்திட்டு நிற்கிறது
X Y எல்லாம் ஏதோ இருக்கட்டும்
அடுத்த SP, SP max தான்".

மரணம் - சில எண்ணங்கள். - இப்னு ஹம்துன் (பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்)
மனிதர்கள் மரணத்தை விரும்புவதாயில்லை. பின்னங்கால் பிடறியில் பட மரணத்திலிருந்து தப்ப முடிகிற வழிகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் வாழ்நாள்
முழுதும். துருப்புச்சீட்டாக சக மனிதர்களைத் தரவும் அவர்கள் தயங்குவதில்லை.

அசைவு - சிறுகதை - பினாத்தல் சுரேஷ்
ஒரு வேளை இந்தச்சிறையிலிருந்து தப்பித்தாலும் என் வாழ்நாளில் எனக்கு அழுகை வரப்போவதில்லை.
இப்போது நான் செய்யும் பொம்மைகளுக்கும் அவற்றின் மூலங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மரணம் பற்றிய என் கோர்வையில்லா சிந்தனைகள்... - SenthilK
மத்தவங்க உடலளவிலும் மனசளவிலும் கஷ்டப் படுத்தாம இருக்குறான்தான் அவனோட வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்தான்னு சொல்லலாம்.
மரணம் என்பது என்ன - ஜெயபால்
பிறக்கும் போது கூடவே பிறக்கும் பிறழாக் கணக்கு மரண வழக்கு
மரணம் தண்டனையா - ஜெயபால்
மரணம் தண்டனையா யாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்கா அவனைச் சார்ந்தோர்க்கா அளிக்குஞ் சான்றோர்க்கா சாகடிக்குஞ் சேவகர்க்கா
மரணம் - செந்தழல் ரவி
ஆக்சிடென்ட் - பாடி - சீக்கிறம் எடுத்திடனும் - இல்லைன்னா வீச்சம் வந்திடும் என்று நான் பேசுவதை அதிர்ச்சியோடு கலங்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கிறான் பிரபா...

மரணம் - ஒலிவடிவில் ஒரு கானா - அபுல் கலாம் ஆசாத்
பேறுக்குன்னு பொருளு தொட்டதில்ல!பாசத்துல முல்ல! - இப்போ படுத்துக்கினான் இன்னாத்த சொல்ல!கானாவும் வல்ல!

மரணம் லிவிங் ஸ்மைல்
செருப்புக்கடியில் தன்மானத்தை
ஒரு மலமென்றே மிதித்தபடி

மரணப் போட்டி ஜெஸிலா
நிறுவனம் நிரப்பியிருந்தது
என் இடத்தை
குடும்பத்தில் ஈடுகட்டமுடியுமா
என் இடத்தை?

கண்ணுக்குள் நீ... - மதுமிதா
மரணத்தின் பாஷை உணர்ந்தஇருவரின் கண்ணீரும் இருவரின் கரங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன

எதிர்நீச்சல் - முத்து(தமிழினி)
நான் எதுவும் பேசவில்லை.புத்தியை மனசு வெல்லும் தருணங்கள் நுணுக்கமானவை. வாழ்வின் அர்த்தம் புரியும் அந்த தருணங்களை, அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எந்த அளவுகோலில் அளப்பது?

ஆம்புலன்ஸ் - பட்டணத்து ராசா
முழுசா உள்ள போனவர் வரும்போது ஒரு சின்ன பொட்டலமா என் கையில் எனக்கு நிஜமாகவே அழுகை வந்தது.
'நானேநானா' - ஜி கௌதம்
அந்த ஹால்தான் எங்களுக்கு எல்லாமுமே! ஒரு மூலையில் அப்பாவும் அவரது கட்டிலும் நிரந்தரமாக வாசம். எஞ்சியிருக்கும் சொச்ச இடம் எங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது பச்சோந்தியாக மாறிப் பயன் தரும்.

மரணம் - சில சந்திப்புகள் - சித்தார்த்
இக்கணம் பொங்கியெழும் என் வன்மமெல்லாம் இயலாமையின் புள்ளியை சென்று முட்டி, இரயில் கம்பத்தில் உறைந்திருந்த குருதியை கொண்டு, இனி வரப்போகும் என் கனவுகளுக்கு நிறம்
கொடுக்கக் காத்திருக்கிறது.

இதுவும் அதுவும் - சனியன்
இதுஇல்லாதிருந்தபோதுஇல்லாதிருந்ததைவிட,இருந்த போதுஇருந்ததைவிட,இருந்து விட்டுஇல்லாமல் போனபோதுவருந்தும் மனம்.
அசட்டு மனிதர்கள் - சிறுகதை - msvmuthu
இவர்களுக்கு இதே வேளையாகப் போய்விட்டது. அசட்டு மனிதர்கள்.

மரணம் தொட்ட தருணம்! - வெளிகண்ட நாதர்
ஆகா இன்று நம் கதை முடிந்து விட்டது எனக் கூனிக்குறுகி அத்தனை ரயில் பெட்டிகளும் தன்னை கடந்து செல்லும் அந்த தருணம் தான் மரணத்தை தொட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு
பிரம்மை!

மரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக் - டி.பி.ஆர்.ஜோசஃப்
அந்தப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்...

மரணக் குறியேடு! - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
உன்னுள் தேடு; உன்-உள் தேடு

மரணம் என்றொரு நிகழ்வு - அருள் குமார்
எவ்வளவு பெரிய துயரத்தையும், 'இது எனக்கு ஒரு விஷயமே இல்லை' என்பதாய்ப் புறந்தள்ளி நடக்கிற காலத்தை வியந்தபடி...

மரணத்தில் ??? - விபாகை
எண்ணங்களின் மரணத்தில்
தெளிவு

மரணக் குறி - U.P.Tharsan
மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த
மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்
அம்மா வருவா - Murali Daran
நான் மட்டும் போகும்பொழுது என்னை உலுக்கிவிட்டுச் சென்ற அம்மாவை நினைத்துமனதிற்குள் சிரித்துக்கொண்டேன்

நேற்று இது நடந்திருந்தால்…. - அயன்
ஒருவன் மட்டும் அழுகிற நேரங்களில் கூட இவள் மேல் விடுத்த வக்கிரப் பார்வையை இவள் கவனிக்கத் தவற வில்லை.
மரணம் - thott4u
போர் களக்
குருதிக் குளங்களில்
எப்போதும்
சின்னஞ்சிறு
மொட்டுக்கள்...

ஓடிப்போனவளது வீட்டின் மரணம் - குந்தவை வந்தியத்தேவன்
அவர்களுக்கு மரணம் வேண்டும், தங்களை அவர்களாக பாவித்து ஒரு தலைமுறை வாழ்ந்து மடிவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம், அவர்களின் சோகங்களுக்கு அழுது, சந்தோஷத்தில் சிரித்து, மரணத்தில் தங்கள் நினைவுகளை அழித்து மீண்டும் நினைவில்லாமல் பிறப்பதில் சுகம் காண்பவர்கள்.

மரணத்தை நாளை ஏற்பேன் - அபுல் கலாம் ஆசாத்
சா!என்று விண்ணவனும் கூறும் வேளை..
சற்றேயென் தலைதூக்கி மடியில் வைத்து,
தாயென்று மனையாளே தாங்கிக் கொண்டால்...

மரணம் - அனந்த கிருஷ்ணன்
பூக்கசக்கும் பூவுலகோர்

மரணம் - Vaik
"இப்ப நெசமாவே பறக்க போறியா""ஆமாம் அப்படியே அமெரிக்கா போகப் போறேன், பறவைக்கென்ன விசாவா வேனும்"

மரணம் - SenthilK
உன் விதி எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லையா இறைக்கு?

மகிழ்வாய் ஒரு மரணம் - நெல்லை சிவா
'ம்..பண்ணுங்க..பண்ணுங்க...எங்க டெக்னாலஜி வளர்ச்சி உங்களுக்கும் உதவுதா, அப்படியே இந்த போலிகள் நடமாட்டத்துகுக்கும் ஏதாவது பண்ணுங்களேன்' என்றேன்.
ஒரு மரணித்தவனின் டைரி … - Vignesh
எனக்கொன்றும் அவளைப்பார்த்தவுடன் காதலெல்லாம் வரவில்லை. ஆனால் கூட இருந்த நண்பர்கள் அவள் எனக்கு சரியான ஜோடியாயிருப்பாளென்று திருப்பி திருப்பி சொல்ல நானும் அவளை நோக்கி திரும்பாலானேன்.

காத்தான் - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
அதனாலதான் நான் அவர் வாக்கைக் காப்பாத்த வேலையச் செஞ்சு முடிச்சேன். அங்க பாருங்க, இப்பதான் அவருக்கு வெச்ச நெருப்பு நல்லா பத்திகிட்டு எறியுது!

தெரியாத பெண்ணின் மரணம் - மதுரா
அவர்கள் பார்க்கவே இல்லை நான் அந்த தோழியிடம் பார்த்த மனித்ததன்மையின் ஒரு புதிரான வெளிப்பாட்டை.

கருப்பய்யா - 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன
எனக்கு நஷ்டக் கணக்க ஈடுகட்டவாச்சும் நீ கொஞ்ச நாள் உயிரோட இருந்து வேல செய்யணும். நான் இங்கதான் எங்காச்சும் தொங்கிகிட்டு இருப்பேன்; முடிஞ்சா என் பணத்தக் குடு

தாய்ப்பாசம் - டி.பி.ஆர்.ஜோசஃப்
ஆனால் யாருக்குமே அவனுடைய மனைவிக்கு தகவலளிக்க வேண்டுமென்று தோன்றவில்லையே என்று நினைத்துப் பார்க்கிறேன்..
இறந்தால் வா - யோசிப்பவர்
போறதுக்கு முன்னாடி இங்க இருக்கற ஹையர் அதாரிடீஸ் எல்லாரையும் ஒரு தடவை நேர்ல போய் பாத்துரு.

இதுவும் மரணம் தான்.... - நாகை சிவா
டிஸ்கி: இத தேன்கூடு போட்டிக்கு அனுப்ப போறேன்

உயிரே போச்சு - ஜி கௌதம்
"டேய்...செத்து ஒரு கழுதையும் ஆகப் போறதில்ல. உன்னை நேர்ல பார்த்து நாலு சாத்து சாத்தணும் அதுக்காகவாச்சும் உயிரோட இருக்கப் போறேன்டா படுபாவி ராஸ்கல்...''
காற்றுக் குமிழி - முத்துகுமரன்
நிச்சயம் எல்லாம் நடக்கவிருக்கிறது. எல்லோருக்கும் நடந்தது என் அப்பாக்கும் அம்மாவுக்கும் நடந்தது எனக்கும் நடக்கப்போகிறது.

கண்ணாலதான் சொல்லனும். ஆனால் கண்ணீர்த்திரை தாண்டி அது போகுமா?
பிணங்களின் மரணங்கள் - ஜி கௌதம்
அடச்சீ செத்த பொணத்த எத்தன வாட்டிடா கொல்லுவீங்க. எம் புள்ளை மேல கையவச்சிங்க... அவ வாழ்க்கயயும் கெடுக்க நினச்சீங்க... வக்காலி, அம்புட்டு பேரயும் வெட்டிச் சாச்சுருவேன்... தைரியம் இருந்தா வாங்கடா..

விரும்பக்கூடியவை...

43 comments

 1. எப்பா என்னா ஒரு பதிவு, 80 பதிவையும் படிச்சு புடிச்சத போட்டதுக்கே வாத்தியாரு ஒரு பெரிய "ஓ" போடலாம்.

  நம்ம கவிதையையும் படிச்சு வாழ்த்தினதுக்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு
 2. புத்தகப்பட்டியல் எல்லாம் சரிதான்.. ஆனா அதோட கூட அடுத்த போட்டியில் செய்யவேண்டிய இன்னொரு கடமையின் பட்டியலையும் கொடுத்திருக்கீங்களே.. அங்க தான் கொஞ்சம் பயமா இருக்கு.. என் ஓட்டைக் கூட போடணுமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்.. ;)

  பதிலளிநீக்கு
 3. //தனக்கு ஆப்படிக்க முலாம்பழத்தோட வந்தவன்கிட்ட, அடுத்தவனுக்கு பலாப்பழத்தோட நிற்கறதைப் பார்த்து சிரிச்ச கதையாத்தான் இருக்கு என் நிலைமை!//

  :-))))

  பதிலளிநீக்கு
 4. அடேங்கப்பா, இம்புட்டு பதிவையையும் படிச்சீங்கள? எப்பிடிங்க உங்களால முடிஞ்சுது... ரொம்ப டச்சிங். நன்றி!

  பதிலளிநீக்கு
 5. // தனக்கு ஆப்படிக்க முலாம்பழத்தோட வந்தவன்கிட்ட, அடுத்தவனுக்கு பலாப்பழத்தோட நிற்கறதைப் பார்த்து சிரிச்ச கதையாத்தான் இருக்கு என் நிலைமை!

  சத்தியமா அது நானில்லை அது நானில்லை ;)-

  உண்மையிலேயே 80+ பதிவுகளையும் படித்து அதன் சிறந்த வரிகளை திரட்டியிருக்கும் இந்த முயற்சிக்காகவே உங்களுக்கு 1 month extension கொடுக்க போட்டியாளர்களின் சார்பில் நான் வழிமொழிகிறேன்

  பதிலளிநீக்கு
 6. உங்க கண்ணைக் காட்டுங்க (கண்ணைக் காலா நெனச்சுக்கலாம் ;-)
  கலக்கிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 7. எனக்குப் பிடிச்ச வரி!!

  //பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் இருக்கட்டும்னுதான் இத ஆரம்பிச்சேன். //

  :))

  பதிலளிநீக்கு
 8. பொதுவாக சில வலைப்பதிவுகள் பதிந்தவருக்கு பெரிய மன பாதிப்பையும், படிப்பவருக்கு எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் போகும் நிலை ஏற்படுவதுண்டு.

  வலைப்பதிவின் வெற்றி தனக்குப் பிடித்த சம்பவங்கள், கருத்தை வெளிப்படுத்திய சொற்கள் சரியாக படிப்பவரையும் பாதிப்பது.

  அந்த வகையில் இந்த வலைப்பதிவுகளில் (எண்பது என்பது அதிகம் தான்) நீங்கள் வெளிச்சமிட்ட வரிகள் பதிந்தவரின் எண்ண ஓட்டங்களைச் சரியாக வெளிப்படுத்திவிட்டதாக எண்ணுகிறேன்.

  என் பார்வையில் நீங்கள் அனைத்துப் பதிவையுமே அழகாக வெற்றிபெற வைத்துவிட்டீர்கள்.

  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.

  :)

  நன்றியுடன்
  பச்சோந்தி

  பதிலளிநீக்கு
 9. இந்த மாசம் ஆபீஸ் ல வேல கம்மியோ? -:))))))))))))

  பதிலளிநீக்கு
 10. என் கதையைப் படித்ததற்கு ரொம்ப நன்றி. நீங்க படிக்கலயோங்கிற சந்தேகத்துல ஒரு பதிவு வேற போட்டுட்டேன்.
  கொவிச்சுக்காதிங்க.

  பதிலளிநீக்கு
 11. கலக்கீட்டீங்க! தனித்துவமானவர்..உங்களைப்போலவே :))

  பதிலளிநீக்கு
 12. வாத்தி, உங்க தலைப்பை வைத்து ஜல்லியடித்தற்கு கோவிக்க வேண்டாம்.
  ஆனா இருந்தாலும் 80 பதிவை படிச்சு இருக்கீங்க பாருங்க. அதுக்கே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுக்கனும்.

  பதிலளிநீக்கு
 13. from JAZEELA BANU :

  மறுமொழியிடுகையில் page not found என்றே வருவதால். மறுமொழியை தனிமடலில் அனுப்பிவிட்டேன். மன்னிக்க.

  ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமைதான். உங்கள மாதிரி எல்லோரும், எல்லாவற்றையும்
  படித்துவிட்டா ஓட்டு போடுறாங்க? ஒருவருக்கு ஒருமுறைதான் வாக்களிப்பு என்ற நியதி தெரியாமல் என்னை போன்ற எத்தனைபேர்கள் இன்னும்
  இருக்கிறார்கள். ஒன்றை படித்து விட்டு வாக்கு அளித்து விட்டு. வேறு ஒன்றை படித்து, வாக்களிக்க வந்தால் வாய்ப்பு முடிந்து விட்டது என்று காட்டுகிறது

  :-(

  இப்படி வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் ஒரு தேர்வு குழு அமைத்து தேர்ந்தெடுத்தால். இன்னார் தேர்வில் வெற்றி பெற்றது என் படைப்பு என்று சொல்வதே போதுமானதே.

  தேன்கூடு நிர்வாகிகள் இது குறித்து யோசிப்பார்களா?

  பதிலளிநீக்கு
 14. வாத்தியாரே.
  அசாத்திய உழைப்பய்யா. என் எண்ண ஓட்டத்தை ஒட்டிய வரிகளை சுட்டிகாட்டியமைக்கு நன்றி.

  போட்டி பரிசை பார்த்திட்டு வருமுன் காப்போம் திட்டத்திலே என்னோட ஓட்டை எனக்கு பிடிச்ச வேறொரு படைப்புக்கு போட்டுட்டேன்.

  யாராச்சும் சொந்த செலவுல சூன்யம் வச்சுப்பாங்களா என்ன:-))

  பதிலளிநீக்கு
 15. பதிவிட்டதுக்கு நன்றி.
  எண்டாலும் உங்களுக்குப் பயங்கரப் பொறுமைதான்.

  பதிலளிநீக்கு
 16. இளா,

  உம்ம கவிதையை படிக்காமலா?! :)

  ****
  பொன்ஸ்,

  கடமையை அனுபவித்துச் செய்யும்போது கஷ்டம் தெரியாது என்பது ஆன்றோர் மொழி! ஹிஹி...

  ****
  சிபியாரே,

  சிரிங்க... வ.வ. சங்கத்துல இருந்துக்கிட்டு அடுத்தவன் கஷ்டத்துக்கு சிரிக்கலைன்னா எப்படி? :)

  ****
  தெகா,

  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 17. விக்னேஷ்,

  // இந்த முயற்சிக்காகவே உங்களுக்கு 1 month extension கொடுக்க //

  அய்யா, நானில்லை!!!! :)

  ****
  பாலா,

  // கலக்கிட்டீங்க! //

  கலக்கறதுக்கு பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்! இந்தமாதிரி வேலைக்காகவே சீக்கிரம் ஒரு நல்ல HTML editor புடிக்கனும். Coffeecup 30 நாளைக்குத்தான் ஃப்ரீயாம் :(

  (அடேடே... உங்களுக்கு ! இல்லாம ஒரு பதில் :) )

  ****
  SK,

  அது சரி! உண்மையச்சொல்லனும்னா எனக்கு பிட்டு காப்பி அடிக்கறதுல பெரிய விருப்பம் இருந்ததில்லைங்க. பெயிலா ஆனாலும் பரவாயில்லைன்னு வெளிய வந்திருவேன். ( அந்த மாதிரி எடுத்ததுதான் 004 ! :) )

  ****
  Chameleon ,

  வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 18. மனசு,

  // இந்த மாசம் ஆபீஸ் ல வேல கம்மியோ? //

  நான் பெஞ்சுல இருக்கறது உமக்கு எப்படியய்யா தெரியும்? :)))

  ****
  ஓகை,

  உண்மையாகவே பின்னூட்டங்கள் வலைப்பதிவருக்கு முக்கியமான ஊக்கமளிக்கும் காரணிதான்!

  ஆனா பாருங்க... படிக்கறவங்க அத்தனை பேரும் பின்னூட்டங்கள் போடுவதில்லை! என்னைமாதிரி சோம்பேறிங்க பலபேரு இருப்பாங்க போல! பதிவு நல்லா இருந்தா ஒரு + குத்திட்டு அப்படியே ஓடிருவோம். வம்புக்கு இழுக்க ஏதாவது இருந்ததுன்னா கண்டிப்பா பின்னூட்டம் உண்டு.

  ஃப்ரீயா விடுங்கப்பு! :)

  ****
  நெல்லை / நாகை சிவா,

  வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  // அதுக்கே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுக்கனும் //

  அடுத்த போட்டில ஏதாவது எழுதுனா கொஞ்சம் கவனிச்சுக்கங்க! :)))

  ****
  JAZEELA BANU ,

  தேன்கூடு வாக்களிக்கும் பக்கத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கறாங்க...

  "பிடித்த அனைத்து ஆக்கங்களையும் தேர்ந்தெடுக்கலாம்

  ஒருவர் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க இயலும்

  வாக்களிக்க இறுதி நாள்: 27-07-2006 "

  போட்டியின் நோக்கம் நம்மையெல்லாம் எழுதத் தூண்டுவதும், அதில் பெரும்பாண்மையோருக்குப் பிடித்த ஆக்கங்களை வாசகர்களே தேர்ந்தெடுப்பதுவுமாக இருக்கலாம்.

  நாளாக ஆக வாக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்காது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. //பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் //

  :))

  பதிலளிநீக்கு
 20. முத்துகுமரன்,

  // யாராச்சும் சொந்த செலவுல சூன்யம் வச்சுப்பாங்களா என்ன:-)) //

  வைச்சுக்கிட்டேனே! :)

  பரிசெல்லாம் என்னோட தேர்வுதான்! இவற்றில் சில ஏற்கனவே படித்ததாக இருந்தாலும் திரும்பவும் ஒருமுறை புதிய புத்தக வாசத்துடன் படிக்கலாம்னு விரும்பி வாங்கியவை! :)

  ****
  வசந்தன்,

  // எண்டாலும் உங்களுக்குப் பயங்கரப் பொறுமைதான். //

  எழுத சரக்கில்லைன்னா... ஹிஹி...

  அதுசரி... நம்ப ஜிம்மிய வைச்சு மோகன் தாஸ் ஒரு கதை போட்டிருக்காரே! படிச்சீரா?

  பதிலளிநீக்கு
 21. இளவஞ்சி,

  மொதல்லே வாழப்பழம் சாப்பிட்டு உங்களுக்கு அன்னாசிப்பழம்னவுடனே சிரிச்சது நான் தான்:-))) மோசமான முன்னுதாரணமோ:;-))

  என் கதைகள் இரண்டிலும், எனக்கு மிகவும் பிடித்த வரிகளையே நீங்களும் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் எனக்கு ஓட்டு போட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை;-))

  பதிலளிநீக்கு
 22. நகுலன் கவிதைகள்! ம்ம்.. ஒரு இடுகை போடுங்களேன்?

  -மதி

  pi.ku: சுசிலாவை விட்டுர மாட்டீங்கதானே? :)

  பதிலளிநீக்கு
 23. // மோசமான முன்னுதாரணமோ:;-)) //

  விடுங்க.. இனி வரப்போறவுக பாடு! :)))

  ****
  மதி,

  // ஒரு இடுகை போடுங்களேன்? //

  இந்த தப்பை மட்டும் செய்யக்கூடாதுன்னு இருக்கறேன்! ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதலை தருகின்றன என்பதில் உறுதியாக இருக்கிறேன்! (கணக்கு புத்தகத்தை தவிர! :) ) அதுபோக என் அவதானிப்புகளையெல்லாம் எழுதி புத்தக விமரிசனத்தை கீழே இறக்க வேண்டாம்னு.. ஹிஹி...

  ரொம்ப நாளாக மனதில் இருக்கும் கேள்வி!

  "அவதானிப்பு" என்பது தமிழ் வார்த்தையா? எனக்கு ஏனோ இதை படிக்கும்போதெல்லாம் வெகு அன்னியமான செயற்கையான வார்த்தையாகவே உணர்கிறேன்! பேசாமம் இராம.கி அய்யாவிடம் கேட்டுவிட வேண்டியதுதான்! :)

  பதிலளிநீக்கு
 24. உங்கள் அசாத்திய பொறுமைக்கும், உழைப்புக்கும் தலை வணங்குகிறேன். எனது அத்தனை பதிவுகளிலிருந்தும் உங்களுக்கு சில வரிகள் பிடித்துபோனதே, ஒரு நல்ல பரிசுதான், நன்றி!

  பதிலளிநீக்கு
 25. //இப்படி வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் ஒரு தேர்வு குழு அமைத்து தேர்ந்தெடுத்தால். இன்னார் தேர்வில் வெற்றி பெற்றது என் படைப்பு என்று சொல்வதே போதுமானதே. //

  நீங்க சொல்றது கண்டிப்பா தேன்கூடு நிர்வாகிகள் கவனிக்கனுங்க. ஏன்னா ஓட்டு போடு வெற்றி நிர்ணயம் செய்யறது அப்படி ஒன்றும் சரியாத்தோணலைங்க. மக்கள் செல்வாக்கு இருக்கிறவங்க வெற்றி பெறுவார்கள், நல்ல படைப்புக்கு கிடைக்காது. இந்த நிலைமை நீடிச்சுதுன்னா பின்னூட்டம் அதிகம் பெறுகிறவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும். ஏற்கனவே ஓட்டு பெற தனிமடல் தொலைபேசின்னு மக்கள் வோட்டு கேட்க ஆரம்பிச்சிட்டதா எனக்கு ஒரு செய்தி வந்தது. என்ன ஒரு மக்கள். படைப்பை நம்பாமல் மடலிலும், பேசியிலும் ஓட்டு சேகரிந்து, சே..

  பதிலளிநீக்கு
 26. //மக்கள் செல்வாக்கு இருக்கிறவங்க வெற்றி பெறுவார்கள், நல்ல படைப்புக்கு கிடைக்காது.//

  இளா, இது மிக உண்மை. இந்த போட்டி மாடல் ஐடியல் கிடையாது. ஆனால் போட்டி அமைப்பாளர்களின் நோக்கத்தில் உள்ள நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாராவது ஒருவரை மட்டும் நடுவராக நியமித்தால் எத்தனை பேர் படைப்புகளைப் படிப்பார்கள்? எத்தனை பேர் தேன்கூட்டில் உறுப்பினராவார்கள்?
  வலைபதிவில் சாதாரணமாக ஒரு கவிதையோ கதையோ எழுதும்போது கிடைக்கும் கவனத்தைவிட இந்த மாடலில் அதிகம் வெளிச்சம் கிடைக்கிறதென்பது உண்மை. ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும்

  எனினும், முழுமையாக வாக்குகளுக்கு மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் உரிமை தராமல், முந்தைய போட்டியின் வெற்றியாளர்களையோ வேறு ஒரு பிரபலத்தையோ ஈடுபடுத்தி அவர்களது மதிப்பீட்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் தரலாம்

  //ஏற்கனவே ஓட்டு பெற தனிமடல் தொலைபேசின்னு மக்கள் வோட்டு கேட்க ஆரம்பிச்சிட்டதா எனக்கு ஒரு செய்தி வந்தது. என்ன ஒரு மக்கள். படைப்பை நம்பாமல் மடலிலும், பேசியிலும் ஓட்டு சேகரிந்து, சே.. //

  இப்படி போட்டியாளர்களைக் குறை சொல்வதிலும் பயனில்லை. 80 ஆக்கங்களை இளவஞ்சி தவிர ஒரு வாசகர் கூட படித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பல காரணங்களால் நல்ல படைப்புகள் கூட வாசகரைச் சென்றடைய வாய்ப்பில்லாமல் போகலாம். அப்படி இருக்க, போட்டியாளர்கள் தம் படைப்பு போட்டியில் இருப்பதாக நினைவு படுத்துவதிலோ (நீங்கள் கூட உங்கள் வலைபதிவின் மூலம் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்) அல்லது போட்டி பற்றி தெரியாத நண்பர்களுக்கு அதனை அறிமுகப்படுத்துவதிலோ இந்த மாடலைப் பொறுத்தவரை தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் போட்டி அமைப்பாளர்களும் எதிர்பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.

  அப்படி நடக்கவில்லை என்றால் சென்ற முறை 36 படைப்புகள் இருந்த இடத்தில் இந்த மாதம் 80 படைப்புகள் இருக்காது.

  என்னைப் பொறுத்தவரை, தேன்கூடு போட்டி ஒரு படைப்புக்கான உரைகல் அல்ல... இது ஒரு பயிற்சிக்களம்

  வெற்றி பெற்ற படைப்புகள்தான் சிறந்தவை என்றோ மற்றவை தேறாதவை என்றோ இந்த மாடலில் சொல்ல முடியாது. மிகப்பெரிய வாக்காளர் வங்கி உருவாகும் போது இது மாற வாய்ப்புண்டு

  பதிலளிநீக்கு
 27. நல்ல முயற்சி இளவஞ்சி.
  80 படைப்புகளையும் படித்து ஒரு
  பதிவிட்டிருப்பதே பெரிய விஷயம்.

  மரணத்தோடு ..அநேகமான பேருக்கு
  தனிப்பட்ட அனுபவமுள்ளதால் பெரும்பாலான படைப்புகள் இயல்பாக வந்துள்ளன.

  பங்குபெற்றோர்க்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. ஜெய. சந்திரன், இளா, கார்த்திக்வேலு,

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

  நிலா,

  அருமையான விரிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி!

  பதிலளிநீக்கு
 29. பொறுமைத்திலகமே! வாழிய உம் தொண்டு. நிறையபேர் இந்த இடுகையை மட்டும் படிச்சுட்டு ஓட்டளிக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன். ;0)

  பதிலளிநீக்கு
 30. இளவஞ்சி
  சும்மா சொல்லக்கூடாதுங்க.
  கவனமும்,கவனிப்பும்,கடுமையான உழைப்பும்,தேர்ந்த சொல்லாட்சியும், எடுத்துக் கொண்ட பொறுப்பை சரியாக நிர்வகிக்கும் திறனும் கொண்ட நீங்க தனித்துவமானவர் தாங்க.

  நிலா சொன்ன பிறகே போட்டிக்குப் படைப்பினை அனுப்பினேன்.

  முதலில் தொடரும் கேள்விகள்.

  ///
  தொடரும் கேள்விகள்...(சிறுகதை) - மதுமிதா நாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடி விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டது. இரவிலிருந்தே சாப்பிடவில்லையாம்.///


  பிறகு இந்த எல்லாமே சமமாச்சு.

  ///எல்லாமே சமமாச்சு... - மதுமிதா எல்லாமே சமமாச்சு
  எல்லாம் கடந்த பின்பு
  ///

  இந்தப் பதிவு இடுகையில் போட்டி குறித்த எந்த விபரமும் தெரியவில்லை.
  'தொடரும் கேள்விகள்' போட்டிக்குச் சேர்த்தபிறகு
  இந்தப் பதிவையும் போட்டியில் சேர்த்தேன்.

  ///
  கண்ணுக்குள் நீ... - மதுமிதா மரணத்தின் பாஷை உணர்ந்தஇருவரின் கண்ணீரும் இருவரின் கரங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன///

  உங்களுக்கு பிடிச்ச வரிகளைப் பார்த்து உண்மையிலேயே கண்கலங்கிடுச்சிங்க.

  80 படைப்புகள் சேர்ந்த விபரம், முழுமையாய் பார்த்து அதைக்குறித்த உங்கள் இந்தப் பதிவு.
  ரியலி க்ரேட்
  மனமார்ந்த நன்றிங்க இளவஞ்சி.

  பதிலளிநீக்கு
 31. அருமையான + பொறுமையான வேலை செஞ்சிருக்கீங்க!
  என் படைப்புகளில் இருந்து நான் ரசிக்கும் வரிகளை தெர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். மற்றவர்களது படைப்புகளுக்கும் இதுவே நடந்திருக்கும் என யூகிக்கிறேன்.
  vignesh முன் மொழிந்த one month extension ஐ நானும் வழி மொழிகிறேனுங்க!!!

  பதிலளிநீக்கு
 32. இளவஞ்சி,
  அருமையானத் தொகுப்பு. தனித்துவமான பதிவு என்பதில் ஐயமேயில்லை.
  இந்த போட்டியின் நிரந்தர தொகுப்பாளராக பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறம் தெரிகிறது:)

  பங்கு பெற்றோருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்! அனைத்துமே முத்துக்கள்தான்.

  பதிலளிநீக்கு
 33. ennamenathu, மதுமிதா, கௌதம், மணியன்சார்,

  வருகைக்கும், ஊக்கங்களுக்கும் நன்றி!

  ****
  வெங்கட்ரமணி,

  // 'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் "வரலாற்றில்" //

  மரணமே இல்லாத ஒரு உலகில் வரலாறு என்ற ஒன்று இருக்குமா?

  சிந்திக்க வைச்சிட்டீரய்யா! :)))

  பதிலளிநீக்கு
 34. மணியன் சார்,

  // இந்த போட்டியின் நிரந்தர தொகுப்பாளராக பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறம் தெரிகிறது:) //

  நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்!? :)))

  இதிலிருந்து எஸ்கேப் ஆக ஒரு வழி இருக்கிறது! போட்டில கலந்துக்கறதுதான்! :)

  பதிலளிநீக்கு
 35. //நிறையபேர் இந்த இடுகையை மட்டும் படிச்சுட்டு ஓட்டளிக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன்//

  எல்லாம் ஒரு தேர்வுத்துணைவன் மாதிரிதான்!

  பதிலளிநீக்கு
 36. பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறன் இவரை விட்டால் வேறு யாருக்கு உள்ளது.

  இவரு நல்லவரு. வல்லவரு தலைப்பு கொடுக்குறதுல! நேர்மையானவரு!
  நம்பிக்கையானவரு!

  பதிலளிநீக்கு
 37. iLavanjsi, ennamO pOddiyil pangkeduththukkiddu ingka pathil pOdaathathu naan maddum thaan enpathu maathiri oru pIling thOnRuvathaal inththa pinnUddam.

  enakku ungkaLaiyellaam paarththaal vEthanaiyaa yirukkunnu vadivEl solRathu maathiri, en pathivaip padiththu ungkaLukku pidiththa varikaLai pOddiruppathai ninaiththaalum athE sirippuththaan vanththathu.

  ungkaLukku puriyumEnRu ninaikkiREn.

  maRRapadikku ithai oru pazakkamaakkuvathai ethirkkiREn. ungkaLidamirunththu ippadiyonRu varaathenRuthaan ninaiththEn. enna seyvathu. anththak kathaiyai innumoRumuRai mElE, kIzE appadiyE maiyamaakavum thaddum eNNam uNdu paarkkalaam.

  பதிலளிநீக்கு
 38. மோகன் தாஸ்,

  // ungkaLukku puriyumEnRu ninaikkiREn. //

  சத்தியமா புரியலைங்க!

  // maRRapadikku ithai oru pazakkamaakkuvathai ethirkkiREn. //

  இந்த பதிவு என்பது போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகளைப் பற்றிய ஒரு முன்னோட்டம். போட்டியை பரவலாக்கவும், வாக்குகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குமான ஒரு முயற்சி! அவ்வளவே! உங்களுக்கு போட்டி பற்றிய வரையறை, கருத்து, ஏதேனும் இருக்கலாம் என நினைக்கிறேன்.

  ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். தவறெனில் திருத்திக்கொள்வோம்! :)

  பதிலளிநீக்கு
 39. சிபியாரே!

  // இவரு நல்லவரு. வல்லவரு தலைப்பு கொடுக்குறதுல! நேர்மையானவரு!
  நம்பிக்கையானவரு! //

  இந்த பின்னூட்டம் என்ன "கலாய்த்தல்" திணையின் கீழ் வருகிறதா?! :)))

  பதிலளிநீக்கு
 40. அனைத்து கதைகளையும் படித்துவிட்டீர்களா? வாழ்க நின் தொண்டு. வளர்க உமது கலைப் பணி.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் இளா...
  உண்மையில் பிரமிக்க வைத்த பொறுப்பு, பொறுமை....
  நானும் கதை எழுதி பின்னூட்டம் வராததால்... யாரும் படிக்கலையோன்னு நினைச்சேன்... பரவயில்லை.. கதையின் உயிர் நாடியை... நாடி மேற்கோள் காட்டி இருக்கீங்க... இப்படிப்பட்ட சம்பவங்கள்தான் என்னைப் போன்ற புதுசா பேனா பிடிக்கிறவஙகளுக்கு உணவா இருக்கும். நிற்க
  போட்டி நடத்துறது பத்தி நிலா சொல்லி இருக்கிற கருத்து வரவேற்கத் தக்கது. இதையேதான் நானும் எழுதனும்னு இருந்தேன்.ஏன்னா எனக்கே ஓட்டுப் போடப்போகும்போது ஒரு குற்ற உணர்வு..எல்லா கதையும் படிக்காம நாம என்ன ஓட்டுப் போடுவோம்னு...
  சில மாற்றங்கள் போட்டியில செய்தா நீங்க நீதி வழங்கலாம்....

  பதிலளிநீக்கு
 42. தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

  தமிழ் ஒலி ஒளி நாடா
  தமிழ் படப்பாடல்
  தமிழ் நகைச்சுவை
  தமிழ் படம்
  தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

  மற்றும் அன்பு......
  தமிழ்.ஹப்லாக்.காம்
  (Tamil.Haplog.com)

  பதிலளிநீக்கு

Like us on Facebook

Flickr Images