முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொங்கலைப்பற்றி ஒரு பொங்கல்!

பொங்கச்சொல்லி பிரகாசரும் சோழன் எம்.எல்.ஏவும் கேட்டுக்கொண்டதாலும் மேட்டரு கொசுவத்திதுறையின்கீழ் வருவதால் என்னால் வாயை அடக்கமுடியாதென்பதாலும் இங்கே!


அப்பாவின் காவல்துறை வேலையாக தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு வருடாவருடம் பெட்டிதூக்கி கடைசியாக கோவையில் கூடாரம் அடித்திருந்தாலும் என் சொந்த ஊர் தருமபுரி மாரண்டாஹள்ளியை சுற்றியிருக்கும் பலகிராமங்கள். அதெப்படி பலகிராமங்கள் சொந்த ஊராக இருக்கமுடியும்? எங்க தாத்தாபாட்டி பெற்ற 13ல் 2 தவற தக்குன மீதி 11ல் ஒரே ஒரு பெண் எங்க அத்தை! 10 பயகள்ல எங்கப்பாருதான் கடைக்குட்டி. இந்த ஆலமரத்துல பலவிழுதுகள் பலதிசைகளில் வேர்பரப்பினால் நான் எந்த ஊரை சொந்த ஊருன்னு சொல்லிக்க? கடைக்குட்டிங்கற ஒரே தகுதியால் வயக்காட்டுக்கு களிதூக்கிக்கொண்டு வேலைக்கு போகாமல் கவருமெண்டு ஸ்கூலுக்கு அரிசிச்சோறு கட்டிக்கொண்டு படிக்கப்போய் வேலையாகி டவுனுக்கு வந்துவிட்டவர் அப்பா. அப்போதெல்லாம் தீவாளி ஃபேமசாகாமல் பொங்கபண்டிகை முன்நின்ற காலகட்டம். சிறுவயதில் பொங்கல் பண்டிகை எனக்கு எங்கள் கிராமங்களில் வாய்த்திருக்கிறது. பண்டிகை 3 நாட்கள் எப்படியும் நடக்கும். 7நாள், 10நாள் வகை பண்டிகையெல்லாம் ஊரார் ஒவ்வொருவரும் நல்ல விளைச்சலும் நாலுகாசும் கையில் கண்ட காலத்தில் மட்டுமே அமையும். பெருசும் சிறுசுமாய் கூடிக்கூடிப்பேசி வீட்டுக்குவீடு முடிஞ்ச காசை வாங்கி 10 நாளைக்கு பண்டிகை சாமிகும்பிடு வழங்கங்களை வரிசைகட்டி சாயந்தர நிகழ்வுகளுக்கு லிஸ்ட்டெடுத்து அந்தந்த குரூப்புகளுக்கு காசைக்கட்டி ரெடியாவாங்க. கொஞ்சம் காசுமிஞ்சுனா ஆரஞ்சு மஞ்சள் துண்டுத்தாள்களில் நிரல் அச்சடித்த பிட்நோட்டீசும் உண்டு! இதுபோக மாட்டுவண்டில மைக்குசெட்டு ஸ்பீக்கரைக்கட்டி ஏழூருக்கும் தெருத்தெருவா வண்டியோட்டி அறிவிப்புச்சொல்லி கூட்டம் சேரும். உள்ளூரு பயககூட டவுஜரை இழுத்துப்பிடுச்சிக்கிட்டு இந்த வண்டிபின்னாடியே அறிவிப்புச்செஞ்சு சுத்துன காலம் பொற்காலம். எந்த ஊருலயும் பாக்கறவுங்க ”இஞ்சுபெட்டரு மவனாடா நீயி? இப்புடி வளந்துட்ட..” என சொந்தம் கொண்டாடுகையில் யாராரு எந்தமுறைன்னெல்லாம் ஒன்னியும் மண்டைல வெளங்காது. குத்துமதிப்பா மாமா பெரியப்பா சித்தின்னு அடிச்சுவிட்டு அப்பறம் ஒரு செல்லதட்டலோடு உறவுமுறையில் திருத்தம்வாங்கி பண்டிககாசுன்னு நாலணாவோ எட்டணாவோ ஆட்டையபோட்டு ஜோபில இட்டுக்கினு போயிக்கிட்டே இருக்கறதுதான். டவுன்ல இருந்து வருசத்துக்கொருக்கா வர்றதால சில்லரை அமோகமாகத்தேரும். அதுபோக கூடவர்ற பயக இவங்க மாமாடா அத்தைடான்னு பத்திவிட்டு காசுதேத்தவைப்பானுங்க. அந்த சில்லரையெல்லாம் காலி வெட்டுப்புலி தீப்பெட்டிக்குள்ளோ பான்ஸ் டப்பாவுக்குள்ளோ நிரம்பும். செட்டாபோய் கலரு, கொடலு, தேன்மிட்டாய் என தீனிகளாக வாங்கித்தீர்த்ததுபோக மிச்சமிருக்கும் காசுகளை ஊருக்குள் புதிதாய் முளைக்கும் வியாபாரிகளிடம் விட்டு அதை ஜவ்வுமுட்டாய் கடிகாரமாகவோ பயாஸ்கோப்பாகவோ அஞ்சுபைசா சீட்டுகிழிச்சு கடைசிவரை ப்ரேய்சுவிழாம கடசியா ஒரு லெச்சுமியோ எம்ஜாரோ போட்ட அட்டை மட்டும் கிட்டி மொனவிக்கிட்டு வர்றதாகவோ முடியும்.நாங்கெல்லாம் பண்டிகைக்கு ரெண்டுநாள் முன்னாடியே ஊரில் போய் இறங்கிட்டாலும் அவனவனுக்கு செய்யறதுக்கு வேலை ஆயிரம் இருக்கும். பெண்களெல்லாம் வீட்டுக்குவீடு மாத்திமாத்தி மாவிடிக்கறது பலகாரம் சுடறதுன்னு வேலையாயிருவாங்க. பசங்களுக்கு பகல்ல மேயறதைத்தவிர என்னவேலை இருக்கமுடியும்? தெனம் கிணறுகிணறாக காலைல முழுக்க நீச்சல். கடப்பாறை டைவு, தண்ணிக்குள்ள முங்கு ஒளிஞ்சுவெளையாட்டுன்னு அதகளமாகும். நானெல்லாம் சுரபுட்டைய முதுகுல கட்டிக்கிட்டு நீச்சல் பழகுனவந்தான். தண்ணில ஊறிஊறி வெள்ளெலிமாதிரி ஆகிட்டு ஏதாச்சும் ஒரு வீட்டுல பூந்து போடறதை சாப்டுட்டு வயக்காட்டுல கோலியோ கில்லிதாண்டலோ ஓடும். கோலி காசுவைச்செல்லாம் ஆடறதாலும் அடிக்கடி சண்டை வரும்கறதாலும் அது கொஞ்சம் பெரியபயக வெளையாட்டு. இரும்புகோலி ஒர்ரூவா. அதைவைச்சிருக்கற பிஸ்துக மத்த கண்ணாடிகோலிகளையெல்லாம் ஒடைச்செறிஞ்சிருவானுக. கில்லிதாண்டலில் அப்பவே நாங்கெல்லாம் அணுவை அளந்தவனுக. எத்தனைமுறை கில்லியை கிளப்பி அதை காற்றிலே தாண்டல்கொண்டு அடித்துக்கொண்டே இருக்கீங்களோ அதைப்பொறுத்து எதிராளு அளந்துவந்து தாண்டலை தொடும் கணக்கு அது. முழுதாண்டல், அரைதாண்டல், கால்தாண்டல், கில்லி, அரைகில்லி, கால்கில்லி நெல்லிக்காய், கிலாக்காய், விரற்கடை, தீக்குச்சிமண்டை, கடுகு, தூசு, காத்து.... பத்துமுறைக்குமேல் அடித்துவிட்டால் அவங்கேக்கறதுதான் அளவுக்கணக்கு. லெட்சம்பான்! எவன் காத்தைவைச்சு அதை அளந்து அவுட்டாக்கறது? 

பண்டிகைநாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரு எட்டுவைத்துவிட்டால் ஏதாச்சும் திங்காமலோ ஜோபியில ரொப்பிக்காமலோ வரமுடியாது. ஒப்போட்டு, நிப்போட்டலு, மிச்சரு, முறுக்கு, கச்சாயம்னு ஏதாச்சும் கிடைச்சுக்கிட்டே இருக்கும். சொந்தக்களின் வீடுகளில் காலைல இட்லிக்கு முன்னாடி இலைல சூடா ரெண்டு ஒப்போட்டுமேல நெய்யவிட்டு பழத்தைப்போட்டு பெசைஞ்சு விரல்கள் பிசுபிசுத்து நக்க சாப்டம்னா பண்டிகைக்குல்ல எண்டராகிட்டோம்னு அர்த்தம்! அப்பறம் கொத்துக்கறி கொழம்பும் இட்டிலியும். மத்தியானத்துக்கு கறிக்கொழம்பும் சோறும், ராத்திரிக்கு ராகிக்களியும் மொச்சக்கொட்டை கொழம்பும். சாயந்தரத்துக்கு வடையோ போண்டாவோ எங்கிட்டாச்சும் தேறும்! இதுபோக வெள்ளாடற நேரத்துக்கு வேனும்னு டவுஜருல எப்பவும் மாங்காயோ, எளந்தவடையோ, நெல்லியோ, எளநிக்கீத்தோ நிச்சயம். உப்பும் மொளகாப்பொடியுங்கூடி எவம்பாக்கெட்டுலயாவது இருக்கும். திம்முக்கா இத்தனை அடைச்சுக்கினு தின்னா வவுரு என்னாவும்? எங்காச்சும் பாறைமேலயோ வயக்காட்டுலயோ தின்னதையெல்லாம் மறுக்கா வடையாவோ ஜிலேபியாவோ கதபேசிக்கிட்டே எறக்கிவைச்சுட்டு கல்லுல தொடைச்சுக்கிட்டு டவுஜரை அரைக்குண்டிக்கா புடிச்சபடி காவாயநோக்கி நடக்கறதுதான். அளவுக்கதிகமா மாம்பழம் தின்னும் நாட்களில் மட்டுமே கொஞ்சம் மேலும் செரமம். அவசரனும்! 

பண்டிகைக்கு மட்டுமே புதுத்துணி. எங்கண்ணந்தம்பிக எல்லோரும் ஒரே கலர்ல டவுஜரும் சட்டையும். ஊர்ல பலபேரு புதுசா காக்கிடவுஜரும் வெள்ளைசட்டையுமே பண்டிகைக்கு எடுத்திருப்பாங்க. உடைகளின் வர்ணங்கள் வேறுபட்டாலும் வர்க்கவேறுபாடு பேச்சிலோ விளையாட்டிலோ வந்ததில்லை. ஆனால் விளையாட்டில் ஏமாத்தவோ தோத்தாங்கோளியோ ஆகையில் எப்படியோ வந்துவிடும் சண்டையில் அனைத்து உறவுகளையும் சிதைக்கும் வார்த்தை இறைப்புகள் உண்டு! அர்த்தமாவது ஒன்னாவது! எந்த உறவின்மேலாவது எந்த உடலுறுப்பையாவது ஏத்தி எகனைமொகனையா அடிச்சுவிடறதுதான். நான் டவுனுப்பையங்கறதால என்வாயில கொஞ்சம் சுழுவா இதெல்லாம் ஆரம்பத்துல வரலை. அப்பறம் கத்துக்கொண்டு எடுத்துவிடுகையில் நெஜமாலுமே உடம்புல ஒரு உதாரு வந்துரும். 


இதெல்லாம் பண்டிகை ஆரம்பிக்கறவரைக்கும். போகிக்கு ஏதும் பெருசா செஞ்சதா நினைவில்லை. பழைசை எரிக்கனும்னாலும் எல்லோரிடமும் பழசுமட்டுமே இருந்தா? தென்னை ஓலையையோ பழைய டயரையோ எரித்து புகைகிளப்பிக்கொண்டு பெரியபயக சலம்புகையில் கூடவே வீதில ஓடுனதுண்டு. பண்டிகை அன்னிக்கு குளிச்சு சாமிகும்பிட்டு பொங்கவைச்ச பானை பொங்கையில பொங்கலோபொங்கல்னு சிரிச்சுக்கிட்டே கத்துவோம். ஆனா பெருசுக இடுப்புல வேட்டிமட்டும்னும் தலைல துண்டும்னும் கட்டிக்கொண்டு பயபக்தியாய் கூவுவார்கள். காலைல பொங்குன பொங்கலுடன் கலந்த பருப்பு பழம் சக்கரைச்சோறு கிடைக்கும். மத்தியானத்துக்குதான் பெரிய இலைல சோறு, குழம்பு, ரசம், நாலுவகை காய் (பொதுவாய் மொச்சை, பூசணி, அவரை, வெண்டை... ) உளுந்தவடை, அப்பளம், பாயசம்னு அளவில்லாம கிடைக்கும். நைட்டுக்கு பசங்களுக்கு வயிறு உப்பிருங்கறதால பெரும்பாலும் ரசஞ்சோறும் மோருஞ்சாதமும். பெருசுக அப்பவும் களியுருண்டைய விடமாட்டாய்ங்க! ஊர்ப்பண்டிகையின் கடைசிநாள் மாட்டுப்பொங்கலாக இருக்கும். கம்பிகட்டுன வரிசைல பின்னாடி எங்கயோ பாதுகாப்பா ஒக்கார்ந்திருக்க மைக்குசெட்டு அலற ஓடற மாட்டு கொம்புல முடிஞ்ச துண்டுத்துட்டை அவுத்தெடுக்க நடக்கும் கூத்தை நீங்க பலபடங்கள்ல பார்த்திருக்கக்கூடுமாகையால் நான் புதுசாச்சொல்ல ஒன்னுமில்லை! 

அப்ப குடிப்பது என்பது மிகக்கேவலமான அடாத செயலாகவும் சம்சாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் அது ஆகாத செயலாகவும் இருந்தது. ஊருக்கடங்காத விடலைகளும் பெருசுகளும் ஊருக்கு மறைவாய் குடிப்பதுண்டு. சாராயக்கடைதான். பெரும்பாலும் இருட்டுனப்பறமும் மறைவாயும் வாங்கிக்கொண்டு ஊருக்கு வெளில குடிச்சுட்டு மெதுவா வரும்க. வாழ்ந்துகெட்ட பெருசுக மட்டும் மனசுஆறாம இரவில் வீட்டின்முன்னால் வசையுடன்கூடிய புலம்பலோ சண்டையோ போடும். அதுக்குள்ள படுக்கப்போயிருக்கும் எங்களை ஏதாச்சும் பெரிம்மா “காதை மூடிக்கங்கடா.. இதெல்லாம் கேக்கப்படாது. சாமி கண்ணக்குத்திரும்”னு மெரட்டி விடுவாங்க.

அதன்பிறகு வருசம் வளர வாழ்க்கை தேய பொங்கல் சிலநாள் பண்டிகையாகிருச்சு. பெரியபையனாகி திருப்பூரிலும் ஈரோட்டிலும் கோவையிலும்கூட அந்தந்த ஊர்களின் சிறப்புடன் பொங்கல் கொண்டாடியிருக்கிறேன். காப்புகட்டுதல் தொடங்கி மஞ்சத்தண்ணி வெளையாட்டுல இருந்து தினம் சாயந்தரம் ஏதாச்சும் பாட்டு நடனநிகழ்ச்சின்னு நடந்திருக்கு. போகப்போக பொங்கலின் சிறப்பம்சம் என்பதை கமல்-ரஜினி சினிமா தட்டிவைக்க வைபவசண்டைகளாகவும், பொங்கல் சிறப்பு கிரிக்கெட்டு மேச்சுகளாகவும், முதல்நாள் முதல்காட்சி வாழ்க்கை லட்சியங்களாகவும், சிறந்தது இதுவா அதுவா பட்டிமன்றங்களாகவும், நடிகைகள் கையில் கடிக்கமுடியாத கரும்புடன் பொங்காத பானையை கிண்டும் தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சிகளாகவும் மாற்றி வாழ்க்கையின் தரத்தை முன்னேற்றிக்கொண்டோம். ஆனால் இந்தனை வருடங்களிலும் மாறாமல் இருந்தது எந்த ஊரிலிருந்தாலும் எங்கம்மா காலையில் புதிடுதுத்தி பானையில் பொங்கலிட்டு தனிக்குரலில் பொங்கலோபொங்கல்னு கத்திச்சொல்லி படையலிட்டதுதான். திரும்பி எங்களைப்பார்த்து “சொல்லுங்கடா எருமைகளா..”ம்பாங்க. ஆனால் வளர்ப்பில் உடம்பில் ஏறியிருக்கும் நாகரீகம் எனும் கூச்சம் அம்மாவைப்பார்த்து கிண்டலுடன் சிரிக்கமட்டுமே வைக்கும்.


அந்தக்காலத்துல எல்லாஞ்சூப்பருன்னும் இப்ப என்னத்த வாழ்றோம்னு சலிச்சுக்கறதும் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு க்ளிஷேவான செயல்தான். இருந்தாலும் சுவைத்ததுமட்டுமே நெஞ்சிலிருப்பதாலும் அதுமீண்டும் கிடைக்காதாங்கற ஏக்கமும் மட்டுமே அந்தக்கால பொங்கலை உயர்த்திச்சொல்லவைக்கிறது. இன்றைய புரிதலிலும் வாழ்க்கை முறையிலும் என்னால் என் பால்யப்பொங்கலை மீட்டெடுக்கமுடியாதுதான். ஆனால் தீபாவளியின் முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு பொங்கலை முடிந்த அளவுக்கு வெகுசிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாகிக்கொண்டேன். தமிழன் என உரக்கச் சொல்லிக்கொள்வது இனவெறியல்ல. அது கிடைத்துவிட்ட அடையாளத்தின்மீதாக மிஞ்சியிருக்கும் ஆதூரம் மட்டுமே! பண்டிகைகள் ஒரு உந்துசத்தி. மனித உறவுகளுக்குள்ளான பிணைப்பின் தூண்டுதல். எல்லாம் இருந்துவிட்டாலும் இன்றைய வாழ்வில் மட்டும் கவலைகளுக்கா பஞ்சம்? நல்லதோ கெட்டதோ மகிழ்வோ துயரமோ கிட்டியதோ எட்டாததோ எதுவாயினும் வாழ்ந்துதான் தீரவேண்டும். பால்யத்தில் பண்டிகைகள் கொண்டாடி ஓய்ந்த ஒரு முன்னிரவில் கிராமத்து வீட்டின் முன்னால் திண்ணையிலும் கயிற்றுக்கட்டிலும் பாயிலும் சொந்தங்களாக படுத்து உறங்கமுயற்சிக்கும் வேளைகளில் எங்களுக்குள் விடுகதைகள் போட்டு விளையாடுவதுண்டு. மொட்டத்தாத்தா குட்டையில விழுந்து ரெண்டுகாலு பதிணெட்டு ஊசியென சொல்லி விளையாடிக்கொண்டிருந்த பொழுதில் பையனை போலியோவுக்கும் பெரியம்மாவை கிணத்துக்கும் காவுகொடுத்த மொட்டப்பெரியப்பா “இறைக்க இறைக்க தீராதது. அது எது?”ன்னு விடுகதை போட்டாரு. பெரியாளுக சிரிப்பை சுருக்கிக்கொண்டார்கள். பதில் தெரிந்த பெரியம்மாக்கள் எதுவும் சொல்லவில்லை. எவ்வளவோ யோசிச்சும் பொடுசுக எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரையிருட்டின் அமைதியில் பெரியப்பாவே மெதுவாக ஒற்றை வார்த்தையில் சொன்னார். ’கவலை’. அன்றைக்கு விடைகிடைத்தபிறகும் அதன் அர்த்தம் புரியவில்லை. இன்றைக்கு அதன் அர்த்தம் தெரியும். ஆனால் ரத்தமும் சதையுமாய் சுற்றி மனிதர்கள் இருந்தாலும் சொல்லிக்கொள்ள மனதின் அருகாமை உணரும் உறவுகள்தான் இல்லை. 


சில விடுகதைகளுக்கு விடைகள் மாறுவதேயில்லை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...

வ ணக்கமுங்க! இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி... ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு