முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் பேச்சுமொழியும் பிழைப்புமொ(வ)ழியும்
 • என் தாய்மொழி தமிழ். அதாவது என் நினைவுதெரிந்த நாளில் இருந்து எங்கள் வீட்டில் அனைவரும் பேசும் மொழி. 
 • பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ்வழிக்கல்வி. அதிலும் ஒன்பதாம் வகுப்புவரைக்கும் அரசுப்பள்ளிதான்.
 • ஆங்கிலம் கல்லூரி முடியும் வரைக்குமே கோர்வையாக பேசவராது. தக்கிமுக்கி முதல் ஆண்டு எழுதிப்பழகினாலும் கடைசிவருடம் முடிக்கையில் 35 மதிப்பெண்கள் வாங்கி தேறும் அளவுக்காவது கோர்வையாக வந்திருந்தது. 
 • முதல்வகுப்பில் தேறினாலும் முதலில் கிடைத்தது விற்பனை பிரதிநிதியாக மருத்துவ உபகரணங்கள் விற்கும் வேலைதான். கூச்சமும் பிரத்தியாரிடம் பழகுவதற்கும் கூச்சம் சிறிதளவுக்கேனும் நீக்கியது இந்த வேலைதான். 
 • இந்த வேலையில் நான்கு மாநிலங்களுக்குள் இரண்டுவருடங்கள் இரவுபகலாக அலைந்திருக்கிறேன். நெல்லூர் மங்களூர் திருநெல்வேலி கொச்சின் நகரங்களில் நான் தமிழும் உடைந்த ஆங்கிலமும் கொண்டுதான் நிறைய உபகரணங்களை பலமாநில மருத்துவர்களிடம் விற்றிருக்கிறேன். எந்த இடத்திலும் மொழிப்பிரச்சனையால் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை. சில வேடிக்கையான குழப்பங்கள் மட்டுமே நடந்ததுண்டு ( கேரளாவில் எடப்பால் செல்வதற்கு பதிலாக எடப்பள்ளி சென்று ஒரு ஆட்டோபிடித்து இல்லாத முகவரி தேடி அரைநாள் அலைந்ததுண்டு. கடைசியில் கண்டுபிடித்தது எடப்பள்ளி எடப்பாலில் இருந்து 5 மணி நேர பயணம்! ) 
 • உடைந்த ஆங்கிலம் ஆரம்பகாலங்களில் சிலநேரங்களில் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தியதுண்டு. வேலையில் முன்னேற்றங்கள் தடைப்பட்டதற்கு காரணம் என் உள்ளொடுங்கித்தனமும் தாழ்வுமனப்பான்மையும் தானே தவிர ஆங்கிலமல்ல என புரிய சிலவருடங்கள் ஆனது.
 • இடையறாத (!?) அலைச்சலின் விளைவாக பெற்ற அல்சரை காரணமாகக்கொண்டு ஒரு மொக்கை கம்பியூட்டர் கோர்ஸ்படித்து ஐடிவேலையில் சேர்ந்து 16 ஆண்டுகள் ஆகின்றது. 
 • நான் தொழில்முனைவோன் இல்லை. ஐடியில் இருப்பதும் நல்ல சம்பளத்திற்காகத்தான். 16 ஆண்டுகளில் மஸ்கட், தென்னாப்ரிக்கா, போட்ஸ்வானா, ஸ்காட்லாந்து, அமேரிக்கா ஆகிய நாடுகளில் கோபால் பல்பொடிபோல வேலைபார்த்திருக்கிறேன். கை நீட்டி சம்பளம் வாங்கும்வரைக்கும் என் வேலை என் பிழைப்புக்குத்தான். என் பிழைப்புவாதத்திற்கு இதுவரைக்கும் உதவிக்கொண்டிருப்பதால் ஆங்கிலம் என் பிழைப்பு மொழி 
 • ஆங்கிலப்புத்தகங்களை படிக்கும் திறனையோ ஆர்வத்தையோ வளர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அலுவலகரீதியாக மணிக்கணக்காக பேசவும் பக்கம்பக்கமாக எழுதவும் முடியும். இத்தனை ஆண்டுகளில் என் ஆங்கிலம் பிழைப்புக்கு ஏற்றபடி சீர்பட்டிருக்கின்றதே தவிர நாட்டுக்கேற்றபடி உச்சரிப்பு மாறியதில்லை. தெரிந்துகொண்டது, பலவகை உச்சரிப்பை அலுவலக ரீதியாக எந்த நாட்டினரும் திறமைக்குறைவாக கண்டதில்லை. நிறுத்தி நிதானமாக சிறுசிறு வாக்கியங்களாக பதற்றமின்றி பேசுவது என்பது மிக அதிகமான புரிதலையும் தகவல் பரிமாற்றத்தினையும் அளிக்கிறது என்பது உணர்ந்தது.
 • ஐடி துறையில் என் வளர்ச்சி சீரானதல்ல. அவ்வப்போது தடைப்பட்டதுண்டு. முன்னேற்ற வாய்ப்புகளை இழந்ததுண்டு. ஆனால் இதற்கு காரணம் என் தன்னார்வமும் அர்பணிப்பும் இன்மையே அன்றி என் ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியாமை அல்ல. 
 • உலகமயமாக்கலில் பலநாட்டு மக்களுடன் வேலை செய்ததில் உணர்ந்தது அவர்கள் உச்சரிப்பு நம் உச்சரிப்புக்கு மேலோ கீழோ அல்ல. உச்சரிப்பில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை யாரும் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. பன்னாட்டு ப்ராஜெக்ட் ஒன்றில் "I don't understand your English, WTF you are blabbering?" என கருத்துரைத்த அமெரிக்க மேலாளார் ஒரேநாளில் பன்னாட்டு ப்ராஜெக்ட் நடத்தும் திறமையில்லை என மாற்றப்பட்ட நிகழ்வை கண்டதுண்டு. 
 • ஆனால் பலமாநில இந்திய மக்களுடன் சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்பு எப்போதும் இருந்ததுண்டு. அலுவலக சந்திப்புகளிலும்கூட பலநேரங்களில் பேச்சு வெகு எளிமையாக ஹிந்திக்கு தாவுவதுண்டு. ”மன்னிக்கவும், எனக்கு ஹிந்திதெரியாது. திரும்பவும் ஆங்கிலத்தில் சொல்கிறீர்களா?” எனக்கேட்கும் முதல் தருணத்திலேயே பெரும்பாலோர் ஆங்கிலத்துக்கு மாறிவிடுவர். மிகச்சிலரே வேண்டுமென்றே ஹிந்தியில் விடாப்பிடியாக தொடர்வதும் அவகளுடன் பேச்சுகள் தவிர்க்கப்பட்டதும் நடந்ததுண்டு. பதிலுக்கு தொடர்ச்சியாக தமிழில் பேசி கடுப்பேற்றும் விளையாட்டும் செய்ததுண்டு ஆனால் வேலையை பாதிக்கும் அளவுக்கு இந்த ஹிந்தி விளையாட்டுகள் நடந்ததில்லை. கடைசியில் பிழைப்புமொழி ஆங்கிலம் மட்டுமே வெற்றிபெறும். 
 • இப்பவும் மிகநெருங்கிய நண்பர்களாக மலையாளி தெலுங்கு இந்தி நண்பர்களே அதிகம். ஒத்த அலைவரிசையிலும் புரிந்துணர்விலும் மட்டுமே வளர்ந்த வளர்த்த நட்புகள் இவை. வேடிக்கையான மொழித்தகராறு கிண்டல் சீண்டல்களை தவிர வேறெந்த சண்டையும் தடங்கல்களும் மனப்பிணக்குகளும் வந்ததில்லை. சிரிப்பும் கும்மாளமுமாய்த்தான் உடைந்த ஆங்கிலத்தில் பிணைந்துகொள்கிறோம். ( ”டேய் கொல்ட்டிகளா.. ஏண்டா இப்படி அமெரிக்கா வந்தும் ஃபேக் ரெஸ்யூம் போடும் அல்பையா இருக்கீங்க?” ”போடே.. நாங்க அல்பைன்னாலும் ஒருத்தரையொருத்தர் தூக்கிவிட்டுக்கறோம். நீங்க ரொம்ப டீசெண்ட்டா இருந்து ஒருத்தரையொருத்தர் காலை வாரிக்கங்க!” ) 
 • என் மகனுக்கு இங்கே வரும்வயதில் Yes No மட்டுமே சொல்லத்தெரியும். வீட்டில் எப்பொழுதுமே தமிழ்தான். பள்ளியில் சேர்த்த பொழுதும் அவர்கள் அறிவுருத்தியது வீட்டில் தாய்மொழியையே தொடருங்கள் என்பதும் ஆங்கிலம் சமூகமொழி மிக எளிதாக வசப்படும் என்பதும். இப்பொழுதெல்லாம் என் மகனும் மகளும் ஆளுக்கேற்றபடி மொழியை மாற்றியே பேசுகிறார்கள். வீட்டில் தமிழ், என் நண்பர்களுடன் இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம். அவர்கள் பள்ளி நண்பர்களுடன் அமெரிக்க உச்சரிப்பு ஆங்கிலம் என. தமிழ் எழுதப்படிக்கவும் பயிற்சி. 
 • ஒரு தொழில்முனைவோனாக தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அதற்கு ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்திருந்தால் எப்படி வேலைக்காக ஆங்கிலம் சரளாமாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டேனோ அதுபோல் தயக்கமின்றி ஹிந்தியையும் கற்றுக்கொண்டிருப்பேன். அந்த தேவையும் அவசியமும் ஏற்படவில்லை. கற்றுக்கொள்ளவும் இல்லை. இழப்பு என்றும் ஏதுமில்லை. எப்படி தெலுங்கும் கன்னடமும் கற்றுக்கொள்ள அவசியம் ஏற்படவில்லையோ அதுபோலவே! 
 • என் சமூக வாழ்வுக்கு என் தமிழும் இந்திய உச்சரிப்பு ஆங்கிலமும் போதும். என் பிழைப்புக்காக வேறெந்த மொழியையும் கற்றுக்கொள்ளும் அவசியமோ தேவையோ இல்லை. யாரேனும் கட்டாயப்படுத்தினால் அதை புறக்கணிக்கும் திறமும் விருப்பமும் உண்டு. எந்த அரசியல் ஒருமுகத்தன்மை திணிப்புக்காகவும் பன்முகத்தன்மையில் என் ஒருமுகத்தை இழக்கத்தயாரில்லை. விருப்பமும் இல்லை. 
 • தமிழ்நாட்டைத்தவிர அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை ஏற்றுக்கொள்கிறார்கள் பேசுகிறார்கள் படிக்கிறார்கள், நீங்கள் மட்டும்தான் அடாவடி என்றால் இருந்துவிட்டு போகட்டுமே. மும்பை உட்பட பல மாநிலங்களில் பொருட்கள் விற்பதற்கு ஹிந்தி தெரியாமை தடையாக இருந்ததில்லை. துணியோ துவரம்பருப்போ விற்று வாங்குபவர்களுக்கு ஹிந்தி தேவையெனில் அவர் பிழைப்புக்கும் வாழ்வுக்கும் உதவுமெனில் அதை கேலிபேசவும் தடுக்கவும் எனக்கு விருப்பமில்லை. உரிமையும் இல்லை. கொள்கைபேசி முழங்குவதை காட்டிலும் ஒரு பிழைப்புவாதியாக மற்றவர் பிழைப்பை இழிவாகப்பேசுவதை தவிர்ப்பதை உயர்வானதாக கருதுகிறேன். 
 • ஹிந்தியை தேசியமொழியாக்க மாநிலங்கள் அளவில் கட்டாயப்படுத்துவது தேவையற்றது. என் வாழ்வுக்கும் பிழைப்புக்கும் தேவைப்படாத வரையில் நான் அதை கற்றுக்கொள்ள மாட்டேன். திணிப்பை என்னளவில் புறக்கணிக்கிறேன். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு