முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமம் தெளிதல் :- பிரிவுத்தணல்

டேய்… எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க… ஒரு ஸ்டாப் கிட்ட இப்படித்தான் பேசுவயா?

“சார் சும்மா ஜாலிக்கு க்ளாஸ்ல ஜோக்குக்கு சொன்னேன் சார். அதுக்குப்போய் உங்க கிட்ட பிராது செய்யறாங்க… இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி சார் எப்பவுமே சீரியசா க்ளாஸ்ல ஒக்கார்ந்திருக்க முடியும்?”

என்னா மயிரு எழவெடெடுத்த ஜோக்கு? தராதரம் இல்லாம? லேடிடா அவங்க… ஏதோ நேரம் இங்க வேலைக்குன்னு வர்றாங்க… நீயும் ஒரு வேலைக்கு போகனுன்னுதானே இங்க படிக்கற? சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா? லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப?”

மேட்டர் பெரிசா ஒன்னுமில்லைங்க. மேற்கண்ட இனியது கூறலில் முதலாவது எங்க பேராசிரியர். பதில் சொல்வது நான். எங்களுக்கு பகுதிநேரமாக வகுப்பெடுக்க வந்த அவருடைய சக பேராசிரியர் பொண்ணை லைட்டா கலாய்ச்சதுக்கு அவங்க ஓன்னு அழுதுக்கிட்டு வந்து இவராண்ட புகார் கொடுத்துட்டாங்க. அதுவும் சப்பை கலாய்ச்சல். என்னை விட அஞ்சு வயசுதான் அதிகமா இருக்கும். அவங்களை மேடம்னா கூப்பிட முடியும்? அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைனு தெரிஞ்சப்பறம் எல்லோருக்குமே ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவரது வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவங்களா ஏதாச்சும் ஒழுங்க படிச்சுட்டு வந்தாலும்  வகுப்பெடுக்க விடாம பேசியே ஓட்டிருவோம். தினமும் அவங்களோட ரெண்டுமணி நேரத்துல ஒரு தியரி அப்பறம் மத்தியானமா லேப். மிஸ்சு அக்காவாகி அப்பறம் யக்கால நின்ன அன்னியோன்யம். ஆனா நாங்க திடீர் திடீர்னு ஏதாச்சும் வெடிபோட்டு மெர்சலாக்குறதால ஒரு பயத்தோடவேதான் வளைய வந்துக்கிட்டிருந்தாங்க. இந்த கலாய்ச்சல் என்னதா? ரஜினி பாட்டுதான்!

“பந்தலிலே தொங்குகிற பொடலங்காய்க்கு கல்லை கட்டும் ஊரு இது…
யம்மா யம்மா ஊரு இது…
தொங்குகிற காய்க்கு எல்லாம் கல்லை கட்ட முடியுமா?
யக்கா.. யக்கா.. லெக்சரரு யக்கா யக்கா!!”

பாடினதுகூட தப்பில்லை. கையக் கொஞ்சம் எசகுபிசகான வடிவில் இடத்தில் வைத்து பாடினதுதான் தப்பாயிருச்சு, வகுப்பே பயங்கரமாச் சிரிக்க அவங்களுக்கு ஷேமாகி இப்படி என்னை ஷேப்பிலாம செஞ்சுட்டாங்க. வாங்குன திட்டுக்கு என் காதெல்லாம் ரத்தம்! இப்பவும் எனக்கு நல்லாத் தெரியும். என் பாட்டும் சைகைகளும் அவங்களுக்கு ஒன்னும் புரிஞ்சிருக்காதுன்னு. ஒன்னும் புரியாத கொழந்த மாதிரியே வளர்ந்துட்டு வயசுப்பயக நம்ம கழுத்தை இப்படி அறுக்கறதுங்க.

நான் என்னத்தை படிச்சேன்னு சொல்லலேல்ல? உங்களில் யாருக்கேனும் முதுகலை படிப்பு என்பது இளங்கலை முடிந்து போனதால் கல்லூரி வாழ்க்கையும் முடிஞ்சு போயிருமோங்கற பயத்தால் மட்டுமே அமைந்ததுண்டா? எனக்கு அப்படித்தாங்க. இளங்கலையில் இஞ்சியனிரிங்கில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம எல்லா பேப்பரையும் ஏறக்கட்டி நாலுவருசம் நீ வந்து போனதுக்கு இந்த பார்டர் மார்க்கு போதுண்டான்னு என் கல்லூரி என்னை வெளியே துரத்தியது. அப்போது எனக்கு வந்த முதல் கவலை “அடப்பாவிகளா… இனி நான் எங்க போய் பொங்கலும் கடலையும் போட்டு என் வாழ்வை வளமாக்கப்போறேன்?” அப்படிங்கறதுதான்.

நல்லாப்படிக்கற பயக எல்லாம் வேலைதேடல்னு சென்னைக்கு கிளம்பிட்டானுங்க. தக்கிமுக்கியும் முடியாம அரியர்களை சரம்சரமா வைச்சிருந்தவனுக கூட கோர்ஸ் முடிச்சதை மட்டுமே வைச்சு சேல்ஸ்க்கு போயிட்டானுங்க. நேத்து வரைக்கும் பக்கிரியாட்டம் தலையும் பான்பராக் கறை நாறவாய்ல தம்முமா சுத்துனவனுங்க திடீர்னு டக் இன் செஞ்ச சட்டையும் டையுமா தோள்ல பைய மாட்டிக்கிட்டு அதே ஊர்ல டீசண்டா சுத்தல். அவங்களைப் பார்த்து இதப்பார்றா தமாசுன்னு சிரிச்சுக்கிட்டு இருந்தப்பதான் என் கூடச்சிரிக்கற ஆளுங்க எண்ணிக்கை நாலு மூணாகி அப்பறம் ரெண்டு ஒன்னாகி அப்பறம் டபக்குன்னு ஸ்டில்ஸாட்ல எல்லாரும் காணாமப் போயிடானுங்க! பின்ன அவங்கவிங்க வீட்டுல படிச்சுமுடிச்சு என்னத்த புடுங்கப்போறன்னு ஏத்து விழுமா விழாதா? நானுங்கூடி ரெண்டுநாளு தனியாத்தான் சிரிச்சுப் பார்த்தேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே பார்த்து சிரிக்கற மாதிரியே பீலிங். முடியல! வாங்குன பார்டரு மார்க்கை வைச்சு நல்ல வேலைக்கும் போக முடியாது. சேல்ஸ்மேன் வேலைக்கு கூச்சநாச்சம் இருக்கக்கூடாது. அப்படின்னா எனக்கு வாழ்க்கைல அடுத்த கட்டம்னே ஒன்னும் இல்லையா ஆண்டவா அப்படின்னு நான் இறைஞ்சியதில் உதித்த ஐடியாதான் மேல படிக்கறது!

எப்படியோ நாலு வருசம் ஒழுங்க படிக்கலை. அதுக்காக ஒடனே திருந்திற முடியுமா? எங்கனயாவது ஏதாவது ஒரு PG கோர்ஸ்ல மறுபடி சேர்ந்துட்டா இன்னும் கொஞ்ச நாள் ஜாலிக்கு ஜாலி. கல்விக்கு கல்வி! இப்படி ஐடியா போட்டு எங்கப்பா கிட்ட இருந்து கொஞ்ச காசையும் பீராய்ந்து ஒரு காலேஜ்ல ஒரு ஆகாவலி கோர்ஸ்சையும் புடிச்சு சேர்ந்தும் ஆச்சு. நானும் மறுபடி காலேஜுக்கு போறேன் காலேஜுக்கு போறேன் செமபடமா கெளம்பி மொதநாள் வகுப்புக்கு போனா அங்கே பேரதிர்ச்சி! PGல எல்லாம் +2 முடிச்சிட்டு வந்த பயகளா இருப்பாங்க? எல்லாம் என்னை மாதிரியே வெந்ததும் வேகாததுமா பல வகைகள்ல ஆம்பளைங்க மற்றும் பெண்டீர் 25 பேர்! வேலைக்கு போயிட்டே மேற்தகுதிக்கு ஏதாச்சும் படிக்கலாம்னு சிலபேர். பிசினெஸ் செஞ்சுக்கிட்டே படிக்கவும் செய்யலாம்னு சிலபேர். MBA ME கிடைக்காம சைக்கிள் கேப்புல இதைப்படிச்சிட்டு அடுத்தவருசம் மீண்டும் முயற்சிக்கலாம்னு சில பெண்கள். ஆக என்னைத் தவிர மத்த எல்லோருமே மொசபுடிக்க வந்தவங்க தான். நான் மட்டும் காலேஜ் கூத்து தொடற மட்டுமே இங்க சேர்ந்தேனு சொன்னா ஒருத்தரும் நம்பலை! ரெண்டே நாள் தான். நான் அவுத்துவிட்ட உளரல்களும் ஜோக்கு பிட்டுகளும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக என்னை அறிமுகப்படுத்தி வைத்தது.

ஒரு பையன் தான் சொந்தக்காலில் நிக்கனுங்கற சிந்தனை வர்ற ஆரம்பிக்கும்போதே அவன் ஆம்பளையா மாற ஆரம்பிக்கறான். சில பேருக்கு நான் இதாத்தான் ஆகப்போறேன் இப்படித்தான் இருக்கப்போறேன்னு +2லயே தெளிவாயிருது. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் வெளில சோக்காளி கூட்டாளிக கூட பழகறதுக்குன்னு ஒரு முகம் வைச்சிருப்பாங்க. அவங்க பாதைல போறதுக்கு தோதான நட்புக்களும் உறவுகளும் மட்டும் கூட இருக்கும். உள்ளுக்குள்ள இருக்கற வெறி வாய்ப்புக்காக கனன்றுக்கொண்டே இருக்கும். பலபேருக்கு படிச்சு முடிச்சு வேலைக்குபோய் சுயமா சம்பளம் வாங்கிய பிறகும் கூட இந்த சிந்தனை வராது. இதுலயும் சிலது வேலை எதுக்கு? எதுக்கு சம்பாதிக்கனும்? ஒரு தொழிலை எதுக்கு அடிப்படைல இருந்து கத்துக்கனுக்கற தெளிவே இல்லாம சுத்திக்கிட்டிருக்குங்க. அதுல ஸ்டூடெண்ட் நம்பரு ஒன்னு நானு. ஆனா என் வகுப்பில் என்னைத்தவிர மத்த யாரும் அப்படி இல்லை. அனைவருக்கும் ஒரு கோல் இருந்தது. ஏதாச்சும் செய்யனும்னு துடிப்பாவது இருந்தது. இவங்களுக்கு நடுவால நான் என்னவா இருந்திருப்பேன்? அதேதான்! கலைக்கூத்தும் ஆட்டங்களுக்குமான வகுப்பு பிரதிநிதி. சினிமா டூருக்கு ஆர்கனைஸ் செய்யறது. வாட்டர் பொங்கல் போடறதுக்கு ரூம் தேத்தறது, யாருக்கு எங்க கல்யாணம் காதுகுத்துனாலும் கும்பலா கூட்டிக்கிட்டு போய் வர்றதுன்னு. அதாவது எல்லா க்ரூப்லயும் நானிருப்பேன். நான் இல்லாட்டியும் எல்லாமும் நல்லாத்தான் நடக்கும். நான் இல்லாத ஒரே நேரம் அவங்க சீரியசா படிக்கற நேரம். இப்படித்தான் ஓட்டிக்கிட்டிருந்தோம் ஒரு ஆறு மாசத்துக்கு.

அப்பத்தான் இந்த கோகிலா பார்ட்டைம் லெக்சரரா வகுப்பெடுக்க வந்தாங்க. வேலைக்கு வரனும்னு இல்லை. ஆனா குடும்ப பிரச்சனை. ஏதோ காரணத்துக்காக கணவன் பிரிந்து இருக்க இவங்க இன்னமும் அப்பா வீட்டில். அவங்க அப்பாவும் அதே கல்லூரில பேராசிரியர்கறதால இவங்களை ஈசியா பகுதிநேர வேலைக்கு சேர்த்து விட்டுட்டாரு. சும்மா பேருக்கு காலேஜ் மேனேஜ்மெண்ட்டோட ஒரு அரேஞ்மெண்ட். அவங்களும் ஏதோ டிகிரி படிச்சிருந்தாலும் ஸ்பெசலைஷேசன் ஏதும் இல்லை. கொஞ்ச நாள்லயே ஜாலியாகிட்டதால எங்க எல்லாருக்குமே அவங்க வகுப்புதான் ரிலாக்‌ஷேசன். வகுப்பெடுக்கவே விடாம ஓரியாட்டம். மத்த படிக்கற பயகளும் இந்த வகுப்புல கத்துக்கறதுக்கு ஒன்னுமில்லைன்னு ஒன்னாச்சேர தெனமும் போங்காட்டம் தான்.

”யக்கா… தூக்கம் வருது.. சும்மா நடுநடுவால பேசாதீங்க…”, “யக்கா… ஏன் இப்படி மனப்பாடம் செஞ்சாப்படி ஒப்பிக்கறீங்க? பேன்சி ட்ரஸ் போட்டியா நடக்குது? இங்க கீழ வந்து ஒக்காருங்க… நேத்து ஜோடிப்பொருத்தம்ல ரெகோ என்ன கேட்டாப்ல தெரியுமா?”ன்னு வகுப்பு ஏதோ வீட்டு வரவேற்பரை மாதிரிதான் இருக்கும். அவங்க கோவம் வர்ற மாதிரி, திட்டற மாதிரி, மார்க்கை கொறைச்சுருவேங்கற மெரட்டல் மாதிரி என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க. பப்பு வேகலை! கடைசியா தலைல கைவைச்சுக்கிட்டோ இல்ல ப்ரொபசருகிட்ட சொல்லீறாதிங்கப்பான்னு சிரிச்சுக்கிட்டோ அவங்களும் பொங்கல்ல ஐக்கியம்! அவங்க ஏன் பார்ட்டைமா வேலைக்கு வர்றாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுதான் இருந்தது. இருந்தாலும்  நாங்களே அப்படி இப்படி விசாரிச்சு குழந்தை இல்லை, இவங்களே குழந்தை மாதிரி வெகுளியா இருக்கறாங்க, வளரவேல்ல… இவங்களுக்கு மேட்டரே தெரியாது, இல்லாட்டி வரதட்சணையா இருக்கும், இல்ல ஊட்டுக்காரன் இவங்க சரிவரமாட்டாங்கன்னு வேறா ஏதாச்சும் லேடிமேட்டருல கேடியா இருப்பான்னு பலவகை ஊகங்களை அலசி புறம்பேசிக் கொண்டிருந்த காலம்.

எங்க வகுப்புல பாலாதான் சீனியர். அப்பவே பிசினஸ் பார்த்துக்கிட்டிருந்தாப்ல. கல்யாணம் வேற ஆனவரு. படிச்சா பிசினெசுக்கு உதவும்னு சேர்ந்திருந்தார். நாங்க என்னதான் பொடிப்பயகன்னாலும் எங்களுக்கு சரிசமமா ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன அலப்பரை ஓவரா போச்சுன்னா மட்டும் மனுசன் பெரியப்ஸ் அவதாரம் எடுத்துருவாப்ல. கெட்ட வார்த்தைலயே திட்டுவிழும். பலநேர மப்புகள் அவரால்தான் அளவுக்குள் மட்டுப்பட்டது. இல்லற ஆண் பெண் உறவில் ஏதாச்சும் டவுட்டுன்னாகூட வெளக்கமா சொல்லுவார். ஆனா நாங்க விரசமா ஏதாச்சும் விளையாட்டுன்னு செஞ்சா வண்டை வண்டையா திட்டு விழும்! அன்னைக்கும் பாலா என்னை தனியா கூட்டிக்கிட்டுபோய் பிரிச்சுட்டாப்ல. ”அண்ணே நான் நெஜமாவே அசிங்கமா பாடல. ஒரு ப்ளோல வந்துருச்சு”ன்னாலும் விடலை! நாளைக்கு மன்னிப்பு கேட்டு மனுசமா மாறுன்னு கடைசியா வார்னிங்! இதுக்கும் அப்பறம் மேற்கண்ட புரொபசர் பஜனை. எல்லாம் கேட்டு நெஜமாகவே செம காண்டாகியிருந்தேன்.

அடுத்தநாள் சரி போனாப்போகுதுன்னு மனசை தேத்திக்கிட்டு யக்கா உள்ள வர்றப்ப சாரின்னு சொல்ல வாயத் தொறந்தா அவங்க நேரா என் முன்னாடிதான் வந்து நின்னாங்க! அத்தனைபேர் முன்னாலும் “சாரிப்பா… சார் ரொம்ப திட்டிட்டேன்னு சொன்னாரு. நந்தான் உன்னை மாட்டி விட்டுட்டேன். இனிமே நீயும் அப்படி கிண்டல் செய்யாத.. நானும் கொஞ்சம் ஓவரா அழுதுடேன்ல?!” இதையெல்லாம் கேட்டா எப்படி இருக்கும்? இவங்க ஸ்டாப்பா இல்ல ஸ்டூடண்டான்னு நெஜமாகவே தலையில் அடித்துக் கொண்டேன்! இப்படி லூசு மாதிரி இருக்கறதாலதான் வீட்டுக்காரன் விட்டுட்டு யெஸ்சாகிட்டானோன்னு திரும்பவும் மனசுக்குள்ள தோணுச்சு.

ஆனா அதுக்கப்பறம் நான் என் வாலை சுருட்டிக் கொண்டேன். தோற்றத்திலும் செயல்களிலும் நிஜமாகவே குழந்தைபோல் இருப்பவரிடம் என்னத்தை லொல்லு செய்ய? மனதில் மரியாதை இல்லைன்னாலும் ஒரு கனிவு வந்ததுதான் காரணம். அதுக்கப்பறமும் வகுப்புகள் அப்படியேதான் சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்தது. ஆனால் சில்லரை சீண்டல்கள் இல்லை. ஏதோ சோகத்துல இருக்கும் ஒரு மனுசியை, இந்த வேலைக்கு வந்தாலாவது வேண்டாததை மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என வாழும் ஒருவரை எப்படியாவது மகிழ்ச்சியா வைச்சுக்கனுங்கறது யாரும் கூடிப்பேசி முடிவெடுக்காமலேயே செயல்படுத்த ஆரம்பித்திருந்தோம்.

“யக்கா… பேசிப்பேசி டயர்டாகாதீங்க.. காண்டீன் வடை நாலு இருக்கு. கீழ வந்தீங்கன்னா ஒன்னு தருவேன்!” “லேட்டா வந்தா வெளிய நிக்கனும்னு சொன்னீங்களாம்?! வெறுங்கையோட வந்தாத்தான? இந்தாப்பாருங்க செவ்வரளிப்பூ. உங்களுக்குன்னே லேபுக்கு பின்னாடி கஷ்டப்பட்டு நாத்தமெல்லாம் தாண்டி பறிச்சு வந்தது. வாங்கிக்கிட்டு என்னை திட்டாம விடுவீங்களாம்!!” இப்படியான செல்ல விளையாட்டுகளாய் யக்காவை முகமெல்லாம் பூரித்து சிரிக்க வைத்து களைகட்டிக் கிடக்கும் வகுப்பு! நட்புன்னு சொன்னமுடியாது. ஆனால் ஒருவித மதிப்போடு கோகிலாக்காவை அணுகத் தொடங்கியிருந்தோம்.

வகுப்புநேரம்தான் இப்படி. மத்தநேரமெல்லாம் ஏதாச்சும் மரத்தடில படிக்கற எழுதற சிலர் அதைச்செய்ய மத்தவங்க கூடிக்கூடி பேசியபடி. கூட படித்த ஏழெட்டு பெண்களும் ஜமாவில் ஐக்கியம். அது ஒரு வித்தியாசமான வயது.  தெரிந்தும் தெரியாமல் மலரத் தொடங்கும் மலர்ச்சிகூட மனதில் இல்லாமல் மலங்க மலங்க முழிக்கும் பதின்ம வயதல்ல. இல்லற அனுபவம் கிட்டிய ஆண்டு அனுபவித்த உடலில் கூச்சம் போன அலுப்பேறிய கல்யாணம் முடிந்த முப்பதுகளும் அல்ல. இருபத்தியிரண்டில் இருந்து இருபத்தைந்துக்குள்! பெண்களெல்லாம் திருமணத்திற்கு தயாராக இருக்கும் வயது. பசங்களெல்லாம் திருமணம் என்பது ஆண்பெண் உடல் எப்பொழுதும் சங்கமித்து பின்னிப்பிணைந்து கிடக்கும் சடங்கு என மூளையில் வெறியேறி உடலால் வறண்டு மனதால் ஏங்குயேங்கிச் சாகும் பருவம்! சில பயகளுக்கு அப்படியிப்படி காதலி கொண்டோ இல்லை ஓசிச்சாப்பாடோ அமைந்து பதட்டத்திலும் பரவச தடுமாறலிலும் சின்னதாய் ஏதோ செய்து அதை பயங்கரமாய் அனுபவித்ததாய் சொல்லிக் கொள்ளவும், வாயைப்பிளந்து கதை கேட்க என்னைப்போன்ற நாலு காய்ஞ்ச பயக இருந்தால்  சில பல ரீல்கள் சேர்த்து பீற்றிக் கொள்ளவுமான  வாழ்க்கைப் பொழுதுகள். தூரப்போகும் தெரியாத அறியாத பெண்களை கண்களால் வெறிக்கவும் மனதால் வரிக்கவும் செய்யும் உடல். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் பழகிய அறிமுகமான வகுப்புத்தோழியை அப்படி பார்க்கத் தோணாமல் செய்யும் குறைந்தபட்ச மனித நாகரீகம் எங்கிருந்தோ ஜீனில் ஒட்டிக்கொண்ட இது இப்படித்தானென தீர்மானித்துவிட இயலாத பருவம். 

பள்ளிமுடித்தவுடன் சேரும் கல்லூரி வாழ்க்கை ஆண் பெண் ஈர்ப்பினை அப்பட்டமான இயக்கமாகவும் பழக அடிநாதமாகவும் இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி நாம் நமக்காகவும் குடும்பத்துக்காகவும் ஏதாவது செய்யவேண்டுமென்கிற வேலை தேடும் வயதில் பாலினஈர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவும் ஏதாச்சும் செய்து செட்டிலாகனுங்கறது நெத்திக்கு முன்னால் தொங்கும் கத்தியாகவும் அமைந்து வயிற்றில் எப்பொழுதுமே ஒரு பயத்தினை உருட்டிக் கொண்டிருக்கும் காலகட்டம். ஆண்களும் பெண்களுமாய் கொஞ்சம் லஞ்சையில்லாமல் தான் பேசிக்கொள்வோம். ஆனால் ஆண்கள் மட்டுமே இருக்கும் டீக்கடை மீட்டிங்களும் கையில் யாருக்கேனும் காசுபுரண்டால் நடக்கும் வாட்டர்கேம்ஸ் நைட்டுகளும் பச்சை மஞ்சள் சிகப்பென வர்ணங்களால் நிறைக்கப்பட்டிருக்கும்! தமக்குத்தானே போட்டுக்கொண்ட உடல் மன வேலிகளோடும் வாழ்க்கையில் நிற்கவேணுங்கற அழுத்தங்களோடும்! பாலா மட்டும் அன்றைக்கு எங்களோடு இல்லையென்றால் காய்ந்த உடல்களின் உக்கிரப்பேச்சுக்கள் சொறி மீதான வரட்டுத் தேய்ப்புகள் கொடுக்கும் இன்பமாக மட்டுமே இருந்திருக்கும். அது அப்படியில்லடா… இது இப்படிடான்னு அவர் சொல்லும் ஆண்பெண் உறவுகள் பற்றிய பலதும் புரிந்து புரியாததும்போல இருந்தாலும் சும்மா கேட்டுவைத்துக் கொள்வோம். பெருசு ஏதோ தெரிஞ்சங்கறதை ஓவரா பெனாத்துன்னு வாய்பிளந்து கேட்ட கூச்சத்தை மறைக்க அவரையே ஓட்டிருவோம்.

அன்றைக்கு பாலாவுக்கு ஐந்தாவது திருமணநாள். காலைல வகுப்புலயே சொல்லிட்டு எல்லோரும் சாயந்தரம் வீட்டுக்கு விருந்துக்கு வந்துருங்கன்னு அழைச்சாப்ல. இன்னைக்கு வரைக்கும் மாறாத அந்த நல்ல பழக்கமான ஓசில விதவிதமா சாப்பாடு கெடைச்சா வண்டி கட்டிக்கொண்டு போய் இறங்கி பாத்தி கட்டும் பழக்கத்துக்கு ஏற்ப சாயந்தரம் நாலுமணிக்கே எல்லோரும் அவர் வீட்டுக்கு குறும்பயணம். அவர் என்னவோ நைட்டு பிரியாணிக்குத்தான் வரச்சொன்னாப்ல. ஆனா எங்களுக்கும் நாலு மணிக்கு மேல கல்லூரில செய்யறதுக்கு ஒன்னுமில்லைங்கறதால வந்து ஏதாச்சும் கூடமாட ஒதவறோம்னு நாலரைக்கே ஆஜர். ஆம்பளையும் பொண்டுகளுமா இருபது பேரு. யக்காவையும் சேர்த்துத்தான்! இப்பவெல்லாம் அவங்களை டீக்குடிக்க போனாக்கூட க்ளாஸ்மேட்டு மாதிரியே இழுத்துக்கிட்டு சுத்தறதுதான்.

பாலா வீடு பெருசுதான். அவரும் அவங்க வீட்டம்மாவும் பயங்கர சந்தோசமான வரவேற்பு கொடுத்தாங்க! அவங்க மனைவிக்கு அவங்க வயசுல நாங்கன்னும் அவரு வீட்டுக்காரருக்கு காலம்போன காலத்துல இத்தனை க்ளாஸ்மேட்டுகளான்னும் ஒரே மலர்ச்சி. என்ன இருந்தாலும் எத்தனை பேருதான் சமையலறைல உதவமுடியும்? கல்யாணத்துக்கு ரெடியா இருக்கற புள்ளைங்க மூணுபேரு நாந்தான் செய்வேன்னு அடம்புடிச்சு சாயந்தர தீனியா பஜ்ஜி கேசரி செய்வேனுட்டு உள்ள போயிட்டாங்க. மத்தவங்க டீ வர்ற வரைக்குமாவது  வீட்டை சுத்திப்பாக்கலாம்னு பாலா கூட உலாத்துனோம். அப்பறம் எல்லாரும் ஹால்ல டீவிய போட்டுவிட்டுட்டு அக்கடான்னு சாய்தல். அப்பதான் புதுசா கேபிள் டீவியெல்லாம் வர ஆரம்பித்த காலம். ஏதோ ஒரு மொக்கை சேனலில் பாட்டுகளா ஓடிக்கிட்டிருந்தது. கமெண்டு கருத்துன்னு ஹால் முழுக்க சிரிப்பலை. யக்காவை சுவரோரம் இருந்த சோபால மேல உக்கார வைச்சுட்டு நாங்க எல்லாம் கீழ கிடைச்ச இடத்தில் சாய்ந்துகொண்டும் உருண்டுகொண்டும் வாயில் வந்ததை பேசிக்கொண்டும். எதையோ எடுக்க வெளியே சென்ற நான் திரும்பிவந்து கீழே செட்டாக இடமில்லாததால் யக்காவின் சோபாவுக்கு பின்னால் சற்றுதள்ளி நின்றிருந்தேன்.

டீவியில் ஒரு சுவாரசியமில்லாத பாட்டு முடிந்து அடுத்தது ஒரு ரஜினி பாட்டு ஆரம்பித்தது. “மாசிமாசம் ஆளான்ன பொண்ணு மாமன் உனக்குத்தானே…” எல்லோரும் ஓன்னு சவுண்டு. பாலா தம்பதிக்கு இன்னைக்கு நைட்டுக்கு இப்பாட்டு சமர்ப்பணம்னு ரகளை. வீடே ஒருவித பூரிப்பில் இருந்த அந்த கணத்தில்தான் நான் எல்லோருக்கும் பின்னாலும் எனக்கு சைடாகவும் அமர்ந்திருந்த கோகிலாக்காவை பார்த்தேன். யக்கா இயல்பாக இல்லை. ஏதோ ஒரு இனிய இல்லற தருணம் அந்தப்பாடலோடு யக்காவின் வாழ்வை கோர்த்திருக்க வேண்டும். நடுங்கும் கைகள் சேலை நுனியை அவசர கதியில் சுற்றியபடி. டீவியில் எண்ணை தேய்த்த உடல்கள் உராய்ந்தபடி ”ஸ்ஸா…” என்று எழுப்பும் ஒலிகள் அவருக்கு நெருப்பள்ளி உடல் மேல் கொட்டியது போன்ற தாங்கவியலாத நிலைக்கொள்ளாமை. வியர்க்கும் முகத்தை அடிக்கடி துடைத்தபடி தலைகுத்தி உதடுகள் கடித்தபடி உள்வாங்கிய பார்வையில் அலையும் கண்கள். பாட்டு நகர நகர முந்தானையை உடலோடு போர்த்தி அதன் பந்தென உருட்டிய நுனியை இரு கைகளுக்குள் வைத்து கசக்கியபடி. அங்கே நாயகனும் நாயகியும் ஆலிங்கனமாய் காட்சிதர இவர் இரு கைகளின் விரல்களையும் இறுக்கி நெருக்கியபடியும் கால்களை ஒன்றின்மேலொன்று குறுக்கியபடியும். இடுப்பை அணைத்தபடி கட்டி உருளும் காட்சியில் அவர் முழுதாய் தன்னை எங்கோ இழந்திருந்தார். கண்களில் கோர்த்த நீருடனும் இருண்ட முகத்துடனும் அந்த நான்கு நிமிடங்களில் என் கண் முன்னால் அந்த சக உயிர் படும் நரகவேதனையை கண்டேன். கடவுள், அப்பா, மாமா, சகோதரன், நண்பன் என யாராலுமே தீர்த்துவிட முடியாத ஒரு தணல். ஒரே ஒருத்தனுக்கென வரிக்கப்பட்ட உடலில் அந்த ஒருவன் கிளப்பி விட்டுப்போன நெருப்பு அறிந்தும் அறியாமலும். அந்த ஒருவன் அவசரகதியிலும் ஆத்திரத்திலும் கை விட்டுப்போன திருமண பந்தத்தின் பெயரால் தீண்டப்பட்டு தயாரான உடல் தீண்டப்படாமலும் தீண்டப்பட வழியில்லாமலும். இத்தனை உறவுகள் இருந்தும் அறிந்த உடல்கள் இருந்தும் எதுவுமே உதவிட இயலாத முடியாத சமுதாய முடிச்சு மற்றும் அழுத்தம். வெறும் உடல்கள் மட்டுமே இயங்குமென வளர்த்தெடுத்த காமவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் என் மனதுக்கு இந்த நரகவேதனை எதுவெதுவோ சொல்லிக்காட்டியது. ஆனால் வாழ்க்கையில் சமூகக்கோடுகளை எல்லைக்கோடுகள் என வாழும் கோகிலாக்கா போன்ற சராசரிகள் இந்த வலிகளை ஏனைய உன்னத உணர்வுகள் கொண்டு வெகுஎளிதில் தாண்டித்தான் வாழ்கிறார்கள்.

எப்பொழுது அந்த பாட்டு முடிந்தது என்றும் எந்தக்கணத்தில் யக்கா அத்துயரத்தின் கண்ணீர் துளிகளை யாருமறியாமல் துடைத்தெடுத்தார்கள் என்றும் நான் அறியவில்லை. “ஏய்… என்னப்பா இது… எனக்கு குடுக்காம எல்லா பஜ்ஜியும் நீங்களே மொசுக்கறீங்க… எனக்கொன்னு வைங்கப்பா…” என சொல்லியபடி முகத்தில் மீட்ட சிரிப்புடன் அவர் கீழே சென்று அமர்ந்தார்.


எனக்கு அடிநெஞ்சில் இருந்து ஒரு துயரம் பந்தென உருண்டு கேவலாக வெளிக்கிளம்பியது.

கருத்துகள்

  1. அது எப்படி கண்முன்னே அப்படியே காட்சிகளை கொண்டு வந்து கொட்டறீங்க? கடைசியில் கொகிலாக்காவின் முகமே மனதில் வந்து அமர்ந்து கொண்டது. காலையில் எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை கொண்டுவந்து விட்டீர்கள், இப்படி எழுத முடியுமா என்று! நன்றாக இருங்கள்!

    பதிலளிநீக்கு
  2. // இளங்கலையில் நாப்பத்தஞ்சும் அம்பது மார்க்குகளாக பரிச்சைக்கு முந்தின நாளு ஜெராக்ஸ் பேப்பருகளை படிச்சு தேத்தியே கடைசி வரைக்கும் ஓட்டி நாலாவது வருசமும் ஒரு கப்பும் இல்லாம//

    இளங்கலை = engineering or

    நாலாவது = மூணாவது?

    பதிலளிநீக்கு
  3. நண்பர்களுக்கு நன்றி :)

    அனானி, தவறு தான். BEக்கு சரியான தமிழ்ப்பதம் கிடைத்தவுடன் மாற்றிவிடுகிறேன். தெரிஞ்சா சொல்லுங்கப்பு.

    பதிலளிநீக்கு
  4. தல, இதனை கேட்பது நன்றாயிராதுதென்றுதான் கேளாமலே இருந்தேன். ஆனால், கல்வெட்டிற்கு; plus-ல் வட்டத்த்துக்குள் மட்டுமே இருக்கும் வரையில் சதுரம்னு ஒன்னு இருக்கும்கறது தெரியவராது! :) வாசகர் நாமத்தான் வட்டத்துக்குள் கவுந்தடிச்சு விழாம நம் தனிவழியையும் குருவையும் தேடிக்கனும் :)– என்று எழுதியிருந்ததனை பார்த்தவுடன் நீங்கள் தவறாய் நினைக்க மாட்டீர்களென்று கேட்டு விடுகின்றேன். [கல்வெட்டு, நீங்கள் அதனை தொடர்ந்து மீசையினை தொடைத்துவிட்டுகொண்டதனையும் நான் பார்க்கவேயில்லை; என் மேல் விழுந்து பாய்ந்து விடாதீர்கள்]

    கையக் கொஞ்சம் எசகுபிசகான வடிவில் @@
    வகுப்பே பயங்கரமாச் சிரிக்க@@ இந்த அளவிளான maturity மட்டுமே உள்ள ஒரு மாணவன் அடுத்த 6 மாதத்தில் ? (என் கண் முன்னால் அந்த சக உயிர் படும் நரகவேதனையை கண்டேன் @@ என் மனதுக்கு இந்த நரகவேதனை எதுவெதுவோ சொல்லிக்காட்டியது)
    இப்படி யோசிக்கும் அளவு மாறமுடியுமா என்ன, நமது சூழலில்.

    அல்லது, இவ்வார்த்தைகள் எல்லாம் என் குருவை நான் தேர்ந்து எடுத்துக் கொள்கின்றேன் – அளவிற்கு சென்ற பிறகு வந்த யோசனைகளா.

    மனதில் மரியாதை இல்லைன்னாலும் ஒரு கனிவு வந்ததுதான் காரணம்@@ - இது மாதிரி எழுதியதால், 6 மாதத்திலேயே மேலே எழுதியது போலவே தாங்கள் மாறீயிருப்பீர்களேயானால், ஒருவேளை உங்க வெற்றிக்கான (England stay – வெற்றியாக கருதும் பட்சத்தில் – எத்தனை disclaimer) சூட்சுமம் அங்கேயே ஆரம்பமாகிவிட்டாதாக நினைக்கின்றேன்.
    Any further clarification?

    பதிலளிநீக்கு
  5. அய்யன்மீர்,

    நீங்கள் அனானி என்றே கருத்தை வெளியிட்டிருப்பதால் அதை மதிக்கிறேன். பின்னூட்டத்தை வெளியிட்டதிலும் தவறில்லையென நினைக்கிறேன்.

    8 வருடமாய் பதிவுலகில் குப்பை கொட்டுகிறோம். நீங்கள் எழுதியிருப்பதை வைத்து உங்களுக்கும் பதிவுலகம் பரிச்சயம் என்றே நினைக்கிறேன். இதில் எத்தனை நட்புகள், பகைகள், வாதங்கள், விவாதங்கள், சண்டைகள், உள்குத்துகள் பார்த்திருப்போம்! இதனைப்போய் கேட்பதற்கு நான் தவறாக நினைக்கவேண்டும் என்றால் என்ன சொல்ல? :( எங்கோ எப்படியோ நானும் ஏதோ இமேஜ் வளர்த்தறேனோன்னு பயமாயிருக்கிறது. இல்லையெனில் நான் சகஜமாய் பழகத்தெரியாமல் தள்ளி நிக்கறனோ?! :(

    பசங்க வளர்ச்சியை கவனித்திருக்கிறீர்களா? நல்லவனும், வீம்புக்காரனும், கோவக்காரனும், அமைதியானவனும் எப்படியோ பெற்றோர் வளர்ப்பில் மோல்ட்டாகி விடுகிறோம். விடலை வாலிப பருவம் நம் தனித்தன்மையை கண்டுபிடிக்கவும் மற்றவருக்கு நிலைநாட்டவும் எதுவெல்லாம் மற்றோருக்கு கவன ஈர்ப்போ அதையெல்லாம் செய்துபார்க்க தூண்டுகிறது. கிடைக்கும் பாராட்டுகளும், வசைகளும், அடிகளும் மேற்கொண்டுபோகும் வழியை தேர்வுசெய்ய உதவுகிறது. கெட்டவனாகவே இருக்கவேண்டும் என முடிவெடுத்து அதன்படி வாழ்பவன்தான் மாறுதலுக்கும் மாறுவதற்கும் நிறைய சிந்திக்கவேண்டும். நிறைய படவேண்டும். ச்சும்மா என்னைப்போல மற்றோருக்காக சில்லுண்டித்தனம் செய்யறவனெல்லாம் ச்சும்மா ஒரு தட்டுல ஒரு ஆட்டத்துல கதிகலங்கிருவானுவ. நானெல்லாம் கல்லூரி இரண்டாம் ஆண்டுவரை நாம் கெட்டவார்த்தை எனநினைக்கும் எதையும் தவறியும் சொன்னதில்லை. குடித்ததில்லை. புகை பிடித்ததில்லை. ஒழுக்கசீல காவலதிகாரி பெத்த ஒழுக்கசீல மகனாகத்தான் இருந்தேன். பதின்மனத்தின் வழியில் திடீர்னு ஒரு நாள் நான் ஏன் இப்படி இருக்கனும்? யாருக்காக இருக்கனும்? ஏன் இப்படியெல்லாம் இருக்ககூடாதுன்னு குழம்பியதன் விளைவு அனைத்தும் ஒரே நாளில் அரங்கேற்றம். குடிக்கதெரியாமல் குடித்து ரோட்டுக்கெல்லாம் சோறுபோட்டு நண்பர்களின் அறைகளில் காலங்கழித்து எப்படியோ தாண்டிவந்ததுதான். எப்படியோ ஓடி இன்னைக்கு மாசசம்பளத்துக்கு கெட்டிங்கறதுனால (அதுவும் ITல! ) வெற்றின்னு சொல்லமுடியுமா? :)

    கெட்டவனாக இருக்கக்கூட என்ன செய்யவேண்டும் என்கிற தெளிவுவேண்டும். என்ன செய்யறதுன்னே தெரியாமல் திணறிக்கொண்டு எல்லாத்தையும் செய்துபார்க்கும் ஒருவனுக்கு மனதில் ஆணிபோல இறங்கும் ஒரு சில நிகழ்வுகள்போதும். மீண்டும் அல்லன தவிர்த்து நல்லன தேடிப்போக. இந்த நிகழ்வும் அப்படித்தான். வலி உணர்ந்தது உண்மை. பொங்கிய அழுகையை அடக்கமுடியாமல் திணறியது உண்மை. ஆனால் அப்பொழுது இருந்த தெளிவுக்கு இப்படி கோர்வையாக இப்படி உணர்ந்ததை எழுதியிருக்க இயலாது என்பதும் உண்மை. நீங்கள் சொல்வதுபோல இந்த வார்த்தைகள் எல்லாம் அப்பொழுது உணர்ந்ததை இப்பொழுது எழுதிப்பார்க்க வருவதுதான். அன்றைக்கான பொங்கலில் இதை “ச்சே.. உள்ள அப்படியே கலக்கிருச்சிடா... யக்கா புருசன்மட்டும் கையில கெடைச்சான்...” என்பதுபோல முடித்த நியாபகம்.

    கல்வெட்டினை பற்றி சொன்னது புரியவில்லை. எனக்குப்பிடித்தவரை வலையுலகில் விவாதங்களை படித்தவரை தேவையான கருத்துக்களை தேவைப்பட்ட அளவோடும், எதிராளியை சீண்டாமலும் சொல்லும் கருத்தில் மட்டுமே கவனமாகவும் சொல்வதில் வல்லவர் இருவர்! ஒரு ஆள் பலூன்மாமா.. இப்ப கல்வெட்டு. இன்னொருவர் மருத்துவர் புருனோ. சொல்லும் எல்லாக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லாவிட்டாலும் சொல்லும் முறையிலும் தன்மையிலும் மனம் கவர்ந்தவர்கள். அதிலும் கல்வெட்டின் சொற்களில் இருக்கும் நகைச்சுவை நான் மிகவும் ரசிப்பது. அவர் கருத்தில் ஏதேனும் வருத்தமிருப்பின் அவரையே கேட்கலாம். கண்டிப்பாக கோவிச்சுக்கமாட்டாப்ல :)

    பதிலளிநீக்கு
  6. தல, நன்றியோ நன்றி உங்க தகவலுக்கு. எனக்கென்னவோ உங்க வெற்றியெல்லாம் ஏற்கனவே 10 வயசுக்கு முன்பாகவே முடிவாயிருச்சு.

    கெட்டவனாக இருக்கக்கூட என்ன செய்யவேண்டும் என்கிற தெளிவுவேண்டும் @@ இது யாருக்கெல்லாம் கிட்டுமோ அவனெல்லாம் தப்பிச்சான் அவன்மட்டும்தான்.

    கல்வெட்டு: 8 வருடம் பார்க்கிறதில் அப்படியே நீங்க சொன்னதை ஒத்துக்கொள்கின்றேன். ஆனால், கடந்த 6 மாதத்தில் கொஞ்சமாக, ‘தமிழ் நாட்டில் அறமா? போடங் கோத்தா ..’ ந்னு கேட்டு போடுவாரோன்னு பயமாயிருக்கு. நகைச்சுவை ஒரு சிட்டிகை கூட்டுங்ன்னு சொன்னால் - என் கவிதைய நான் எழுதிக்கிறேன்,நி உன் வேலையைப் பாருன்னு சொல்லிப் போடுவாரோன்னு பயம்.வேறொன்றுமில்லை. மற்றபடி 8 வருசத்தில் விடாது கருப்பு - விட்டது சிகப்பு (not added for rhyming) எல்லாம் நலமே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு