முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜீவனே... ஜீவனே...





கானா பிரபா அவர்களின் மிகவும் டச்சிங்கான ”இளையராஜா எனக்கு இன்னொரு தாய்” என்ற பதிவினை படிக்க நேர்ந்தது. இளையராஜாவை பொறுத்தவரை மற்றவருக்கு தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் வழிகாட்டியாகவும் தெய்வமாகவும் பலபேருக்கு இருப்பது பெரிய விடயமல்ல. ஆனால் அந்த உணர்வினை பெற்றவருக்கே அது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிடிப்பையும் மாற்றத்தினையும் ஏற்படுத்துகிறது என்பது தெரியும். வலிகளை ராஜாவின் கரம்கொண்டு கடந்து வந்த கானா பிரபாவும் பொறாமைப்பட வைக்கும் ஒரு அதிர்ஷ்டசாலிதான்!






இசை என்பது எனக்கு இங்கிலீசு மீடியம் படிக்கும் மேட்டுக்குடி மக்களால் அறிமுகப்பட்டது. இதையுங்கூடி ஒருமுறை எழுதியிருக்கிறேன்! ( பீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்... ) பேயடி அடிக்கும் ட்ரம்ஸ்சும், கதறக்கதற இழுக்கப்படும் லீட் கிட்டாரும் தான் பிடித்த வாத்தியங்கள். மெட்டாலிகா போலவோ மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு வெறுங்கையில் கிடாரை காது கேக்கறதுக்கு தோதாக இழுத்தபடியே தலையை பரப்பிவிட்ட படி மாரியாத்தா ஆடவேண்டுமென்பது ஒரு அடையாளத்தேடல். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த கம்பிமுடிக்கு வைத்த ப்ஃங்க் ஸ்டைல் பிரபுதேவா இந்து படத்தில் வைத்திருந்த தேன்கூடாட்டம் வந்ததே தவிர மெட்டல் ஸ்டார்னு சொல்லிக்கறமாதிரி இல்லை :( அன்றைக்கெல்லாம் ப்லிப்ஸ் பவர்ஹவுஸ் தான் பயங்கற செட்டு! அதுலயும் சில ஸ்பீக்கர்களை கழட்டி பானைமேல கவுத்தி அக்வெஸ்டிக் இஞ்சினியரிங்க் வயரிங்கெல்லாம் பார்த்து Bass ஏத்தி பாட்டு கேட்டுக்கிட்டு இருந்த காலம்.






அப்பவும் சில விவரம் தெரிஞ்ச எதிர்கோஷ்டி மக்கள்ஸ் இளையராஜாவை கேட்டுக்கிட்டு இருப்பாங்க. அப்ப எனக்கு லவ்வு, பிரிவு, வேதனை, பெத்தவங்க பாசம், இறப்பு சோகம், பிறப்பு சந்தோசம்னு எதுவுமே மனதில தாக்காத பியூர் இம்மெச்சூரிட்டி பாய். அவனுங்க எங்களை “வாங்கடா பேயோட்டிகளா..”ன்னு கூப்பிடறப்ப நாங்க “போங்கடா தபலா தட்டிகளா..”ன்னு ஆரம்பிச்சு.. எப்ப பாரு ஒரு தபலாவ வைச்சுக்கிட்டு லொட்டு லொட்டுங்கறது தான் உங்காளு மூஜீக்காடான்னு வம்பிழுப்போம். அவனுங்க இந்த வயலின் தெரியுமா, இந்த கிடார் நோட்ஸ் புரியுமான்னு கொஞ்ச நேரம் பேசி ட்ரைசெஞ்சு பார்த்துட்டு தொலைங்கடா பீத்தரைகளானுட்டு ஆஃப்பாயுருவானுக.







ஆனா எனக்கும் மொட்டையை புரிந்துகொள்ளும் ஒரு காலம் வந்தது. ஒரு நல்ல நண்பி மேல லவ்வு கெளம்பி விநாயக சதுர்த்திக்கு கடலை பருப்பு வெல்லமெல்லாம் போட்டு நெருப்புல வாட்டற தேங்காயாட்டம் வெந்து வெதும்பி திரிஞ்சேன் சில காலம். அப்பறம் ஒர் நல்ல நாள் பார்த்து சொல்லி பெரிய பழமா வாங்கினது தனிக்கதை. கோவைல பழம் வாங்கறதுன்னு பொண்னு பன்னு குடுத்துருச்சுன்னு அர்த்தம். அப்பறம் என்ன?! அதுக்குன்னே இருக்கும் பழம் வாங்கியோர் மீட்பு சங்கத்துல சரண்டர். சங்க வேலைகள் பெருசா ஒன்னுமில்லைங்க. எல்லாம் லோக்கல் மக்காதான். கைக்காசையெல்லாம் கலெக்ட் செஞ்சு லம்ப்பா ஒரு அமவுண்ட் தேத்துவானுக. பாகுபாடெல்லாம் இல்லை. நம்ப ஷேரும் பெருசாத்தான் இருக்கும். நியுஸ் சும்மா தீமாதிரி பரவிரும். பத்திருவது மக்கள்ஸ் சேர்ந்து அன்னிக்கு நைட்டு ஹட்கோல பேச்சுலர்ஸ் தங்கியிருக்கற சேவல் பண்ணைல தான் ஜமா. 






என்னை நடுவுல ஒக்கார்த்தி வைச்சுட்டு எல்லா வேலையும் பரபரன்னு எப்பவும்போல நடந்தது. ரெண்டுபேரு பரோட்டா, சிக்கன் பிரியாணி, சில்லி ஐட்டங்கள்னு ராயப்பாஸ்ல இருந்து பார்சஸ்! சிலதுக பெரிய துணிப்பையா எடுத்துக்கிட்டு ஹோல்சேலா கூலிங் போகாம இருக்க பேப்பரெல்லாம் சுத்தி சில்பீரா ரொப்பிக்கிட்டு வருவானுவ. ரெண்டு பேரு வீட்டையெல்லாம் ஒழிச்சு நீட்டா ஹாலை ரெடிபண்ணி பாயைவிரிச்சு ஒக்கார்ந்தம்னா அது ஓடும் விடிய விடிய. அதாவது சங்கவிதி என்னன்னா பழம் வாங்குனவன் என்ன வேனா பேசலாம். கதறிக்கதறி அழலாம். திட்டலாம். மத்தவிங்க ஆறுதலா ஏதாச்சும் சொல்லலாம், காறிக்காறி துப்பலாம், அழறதுக்கு தோள்கொடுக்கலாம். இல்லைன்னா சும்மா ஊங்கொட்டலாம். இன்னும் அல்பையா சொல்லப்போனா எல்லாரும் கூடி கோழி ஆனவன கும்மியடிச்சுறனும். 






மத்தியானம் வாங்குன பன்னுக்கு சாயந்தரம் வரைக்கும் பஸ்ஸ்டேடுலயே முகமெல்லாம் வெளிறிப்போய்தான் உட்கார்ந்திருந்தேன். அப்பறம் சாயந்தரமா தேடிவந்த ஈஸ்வரன் கிட்ட விசயத்தை சொல்லப்போக அது இப்ப எல்லாங்கூடி கொண்டாடத்துல வந்து நின்னிருக்கு! இதே அடுத்தவனுக்கு நடக்கறப்ப நானெல்லாம் சும்மா பூந்து பூந்து வெள்ளாடுவேன். மத்தவிங்களை ஓட்டறது முடிவெடுத்துட்டா என் நாக்கெல்லாம் நொடிநேரத்துல நைக்கி ஷூவெல்லாம் போட்டு ரெடியாகி நாறடிச்சுடும். ஆனா அன்னைக்கு எனக்குன்னு வந்தப்ப வாயத்தொறக்க முடியலை! பசங்க எப்படி எப்படியோ பேசிப் பார்த்தானுவ...கேட்டுப் பார்த்தானுவ...கெஞ்சிப் பார்த்தானுவ... திட்டிப் பார்த்தானுவ... ம்ம்ஹீம்.. நான் வாயத் தொறக்கனுமே?! என்ன சொல்லறதுன்னு தெரியலைங்கறதை விட எப்படி சொல்லறதுன்னுதான் தெரியலை! சோகமாகவோ சீரியசாவோ எந்தக் காலத்துலயாவது பேசியிருந்தா அது தன்னால வந்திருக்காதா? எதுகேட்டாலும் உர்ருன்னு மூஞ்சை வைச்சுக்கிட்டு மோட்டுவளைய பார்க்கறதும் கீழா வெறிச்சு பாய நோண்டறதுமாவே போய்க்கிட்டு இருந்தது. ”ஒன்னுமில்ல.. விடுங்கடா...” இதைத்தான் 4 மணிநேரமா நான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கவேண்டும். நடுவுல பரோட்டாவும் சால்னவும் மட்டும் பிச்சிப்போட்டு சொரணையா தின்னுமுடிச்சது ஞாபகம் இருக்கு. அவனுங்கெல்லாம் ஆளாளுக்கு ரெண்டுமூணு கவுத்துக்கிட்டு தின்றும் தீர்த்துட்டு பழகேசட்டை மட்டும் வாக்மேன்ல போட்டுவிட்டுட்டு எப்படியாச்சும் சாவுடா நாயேன்னு கெடைச்ச மூலைல உருள ஆரம்பிச்சுட்டானுவ. 







பழகேசட்னா ஒன்னுமில்லைங்க.. லவ்பெயிலியரு பாட்டா இருவது புடிச்சு கேசட்டுல எழுதி சாமிபாட்டு கணக்கா போட்டுவிட்டு பழம்பெற்றானை காண்டாக்கும் வேலை! எல்லாம் தமிழ்தான் . நானும் மனசெல்லாம் எரிய அப்டியே சாஞ்சுக்கிட்டு ஒரு நாலு பாட்டு கேட்டிருப்பேன். நெஜமாலுமே இதுல ஏதாச்சும் பீலிங்கு கிடைக்குமானு ஒரு நப்பாசை. அஞ்சாவது பாட்டுன்னு நினைக்கறேன். “பாடிப்பறந்த கிளி... பாத மறந்ததடி..”ன்னு ஆரம்பிச்சது, முன்னாடி பலதடவை காதுல விழுந்த வரிகள்தான். ஆனா இந்தக்கணத்துல ஒவ்வொரு எழுத்தும் எனக்காகவே எழுதுனமாதிரி ஒரு தரிசனம். எப்பொழுதும் கிண்டலடிக்கும் அதே லொட்டு லொட்டு தாளகட்டு தான்... ஆனால் நான் அன்றைக்கு உணர்ந்தது வேறு மாதிரி... இழுக்கற வயலின் நேரா ஒரு காதுவழியா மண்டைக்குள்ள சொருவுது. ”ஒத்தையடிப்பாதையில நித்தமொரு கானமடி”ன்னா நான் எங்கோ ஆளவரமே இல்லாத தீவின் நடுவில் இருக்கறேன். ”கண்டகனவு அது கானாதாச்சு..”ன்னா மண்டை வெடிக்கற வலி! அதுக்கப்பறம் வந்துச்சுய்யா ஒரு வரி! ”வீணாசை தந்தவரு யாரு யாரு?” அப்படியே உள்ளுக்குள்ள நொறுங்கிட்டேன். அதுவரைக்கு உம்மனாங்கோட்டானா இருந்தவனுக்கு என்ன சொல்லி அழனும்னு தெளிவு வந்துருச்சு. வாய் கேவுது. கண்ணுல கரகரண்ணு கொட்டுது. ஒடம்பெல்லாம் நெகுநெகுன்னு ஆயிருச்சு... ”சொல்லில் அடிச்சா அது ஆறாது..”ங்கறப்பவெல்லாம் மொத்தமா சேதாரமாயிட்டேன். வாய்விட்டு கதறிக்கிட்டு ஒவ்வொருத்தனையே எழுப்புனேன். “மாப்ள.. தெரியாம ஆசைப்பட்டுடன்டா... எந்தப்புடா... எல்லாம் எந்தப்பு..” இதைத்தான் அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு கதறிக்கிட்டு இருந்தேன். சத்தங்கேட்டு எழுந்திருச்சதே நாலுபேருதான். அவனுங்களும் நெஞ்சையும் கக்கத்தையும் கொஞ்ச நேரம் சொறிஞ்சுக்கிட்டே விட்றா.. விட்றான்னு சொன்னவனுங்க கொஞ்சநேரத்துலயே போடா மயிருன்னு சாஞ்சிட்டானுவ. ஹேவர்ட்ஸ் 10000னா சும்மாவா?!







அன்னிக்கு நைட்டும் அதுக்கப்பறமும் அந்த ஒரு பாட்டையே தேயா தேச்சேன். வீணாசை வரிக்கு மட்டும் கேவிக்கேவி, அப்பறம் பொங்கி, அப்பறம் கண்ணுல நீர்மட்டும் முட்டி அப்பறமா ஒரு நிலைகுத்தும் பார்வைல முடிஞ்சு தெளியறதுக்கு ரெண்டு மாசம் ஆச்சு. ஆனா அந்தப்பாட்டு மட்டும் என்னிக்கும் எனக்குன்னு ஆயிப்போச்சு. இதுக்கப்பறம் பலதடவை பலபேரு பழத்துக்கு நானே தலைமையேத்து சங்கத்தை கூட்டி சிரிப்பா சிரிச்சும் ஆலோசனைகளும் ஆதரவுகளுமா அள்ளி விட்டிருக்கேன் ( அப்ப அதிதீவிர பாலகுமாரன் வாசகனல்லோ!! ) ஆனா தமிழ் பாட்டை நொட்டை சொல்லறதுங்கறது அத்தோட போச்சு.. இளையராசாவின் ஆதரவுக்கரங்கள் என்னைக்கும் என் தோளில்னு ஆயிருச்சு.






ரசனை வேறு ரசிகன் வேறு. இன்னிக்கும் தமிழ்ல கருத்தம்மால இருந்து கடல் வரைக்கும்னும் ARR ல இருந்து சந்தோஷ் நாராயணன் வரைக்கும்னும் எல்லாரு பாட்டுகளையும் ரசிக்க கொண்டாட முடியுது தான். ஆனா உணர்தல்னா அது இளையராஜாவுக்குன்னு மட்டுமே இருக்கு முடியும்னு தோணுது. அவரு பாட்டுக்கு எல்லாப் பாட்டுகளையும் அடிச்சு வைச்சுட்டாரு. வாழ்க்கையில் நமக்கான நிகழ்வுகளும் அனுபவங்களுமே அப்பாடல்களுடன் நம்மை பிணைத்து விடுகிறது. என் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு பாட்டு பிடிச்சு வைச்சிருக்கறேன். 






மாடவிளக்கை யாரோ ஏத்திவைச்சதில் இருந்து கொடியிலே மல்லிகைப்பூவைச்சு நீ பார்த்த பார்வைக்கு நன்றிசொல்லி பிச்சைப்பாத்திரம் ஏந்தவைத்தது வரை எனக்கே எனக்காக வயலின்களும் கிடார்களும் பியானோக்களும் போட்டியிடும் மாயத்தருணங்கள் . அவைகளை கேக்கும்போது அவற்றிக்கான அன்றைக்கான அந்த உலகத்திற்கு அப்படியே ஜம்ப்பிருவேன். 10 மணிநேரங்கள் சளைக்காமல் வண்டியோட்டுவேன். இரவுமுழுவதும் பஸ் ரயில் பயணங்களில் மாற்றிமாற்றி கேட்டுவிட்டு விடிந்தபின் வீடு வந்து நாள்பூராவும் தூங்குவேன். அந்த பாடல்கள் என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கின்றன என்பதில் இருக்கிறது என் வாழ்வின் சரடு. உன்னதம் என்றும் அப்பழுக்கற்றது என்றும் என் வாழ்வில் நான் கண்டடைந்த வெகு சிலதில் ராஜாவின் எனக்கான பாடல்களும் உண்டு. ரகுமானா யுவனான்னு கூட பாடல் கணக்கா படவாரியா ரெண்டு மணிநேரம் பேசிற முடியும். ஆனால் இளையாராஜாவா மத்தவங்களாங்கற பேச்சையெல்லாம் ஒரு சிறு புன்னகையால் புறந்தள்ளிப்போக மட்டுமே முடிகிறது. இத்தனைக்கும் கானாபிரபா மாதிரி ரகவாரியா ராகவரிசையா பிட்டுபிட்டா சிலாகிக்கும் உணரும் பாராட்டும் இசை நுண்ணறிவெல்லாம் எனக்கு இல்லை. ஆனா ராஜாவோட சிலது கேட்டு அதோடு என் வாழ்க்கையை பிணைச்சுக்க கூடிய உயிர்ப்புத்தன்மை இருக்கற வரையில் இன்னுமிருக்கும் 30 வருடங்களையும் அந்த 30 பாடல்களை கொண்டே எளிதில் தாண்டிருவேன்னு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குங்கப்பு! :)







இதோ இன்றைக்கு ராஜா எனக்குன்னு இன்னொன்று கொடுத்திருக்கப்ல. கேட்ககேட்க தான் புரியும்.. படத்தோட பார்த்தாதான் இன்னும் எபெக்ட் இருக்கும்... மோன நிலையில கேங்கனுங்கற பம்மாத்தெல்லாம் இல்லாம தொடங்கற நொடியில் இருந்து மண்டைல சரக்குன்னு இறங்கி நேரா நெஞ்சுல சிம்மாசம் போட்டு ஒக்கார்ந்துக்கிச்சு! கேட்கக் கேட்க இப்பவும் உள்ள இருந்து ஏதோ ஒன்னு குபுக்குன்னு பொங்குதுதான். ஆனா கதறி அழனுங்கறது தேவைப்படலை. ( இளவஞ்சி வாழ்க்கைல மெச்சூராய்ட்டாறாமாம்! :) ஜீவனே... ஜீவனே... திரும்பவும் ஒருமுறை ரிப்பீட் லூப்ல ஓடிக்கிட்டே....















கருத்துகள்

  1. //மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு//

    :)

    பதிலளிநீக்கு
  2. அப்படியே மலரும் நினைவுகளை இளையராசவுடன் சேர்த்து நெக்குருகி இசைச்சிருக்கீங்க.

    எல்லோருக்குமே இளையராசான்னா ஒரு தனி சுகம் தான்.

    பதிலளிநீக்கு
  3. ராஜா ரசிகர்ஸ் எல்லாமே ஒரே ஜீன்/ஜீவன் போல ரசித் தேன் ;-)

    பதிலளிநீக்கு
  4. ராஜா ரசிகர்S எல்லாமே ஒரே ஜீன்/ஜீவன் போல
    ரசித் தேன் ;-)

    பதிலளிநீக்கு
  5. அபாரமான பதிவு. மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி.

    //ஆனா உணர்தல்னா அது இளையராஜாவுக்குன்னு மட்டுமே இருக்கு முடியும்னு தோணுது.//
    //இளையாராஜாவா மத்தவங்களாங்கற பேச்சையெல்லாம் ஒரு சிறு புன்னகையால் புறந்தள்ளிப்போக மட்டுமே முடிகிறது.//
    Well said and true words.

    பதிலளிநீக்கு
  6. தாஸூ, சிரியும்யா... ஆனா நெசமாவே பங்ஃக் வைச்சிருந்தன்னா ஒரு பய நம்பமாட்டீங்கறீங்க!! :)

    மன்சூராஜா, நன்றி!

    கானாபிரபா, ஜீ.. மொதல்ல நான் உங்க பதிவுக்கு ஒரு நன்றி போட்டுட்டுதான் இதை ஆரம்பிச்சிருக்கனும். எழுதற முசுவுல விட்டுட்டேன்! ஊக்கங்களுக்கு நன்றி :)

    விஜய், வாங்க! :)


    பதிலளிநீக்கு
  7. Great post brother....daily i will hear ilayaraja songs...As you said his songs give some great feelings in our life..

    Megha songs are great...

    i am living with his music.....

    ----Annamalai murugan G-------

    பதிலளிநீக்கு
  8. இன்று தான் உங்கள் முழுப் பெயரைத் தெரிந்துக் கொண்டேன், பகுதி வாழ்க்கையையும் :-) இசை எப்படி ஓவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது! ராஜாவின் இசை ஒருவருக்குத் தாயாகவும், இன்னொருவருக்கு தோல்வியைத் தாங்கும் மருந்தாகவும், இன்னும் பலருக்கு வேறு வேறாகவும் இருக்கிறது. ஒருவரை இசை தொடாது போகாது, அம்மா எவ்வளவு மோசமானப் பாடகியாக இருந்தாலும் அவள் தாலாட்டில் ஆரம்பிக்கிறது நம் இசையின் உறவு.பின் வளரும் பொழுது இசையே தாய் மடியாகவும் காதலியின் தோளாகவும், வழிக்கு மருந்தாகவும் நம் உயிருக்குள் பாய்ந்து விடுகிறது. ஆனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்த சிலரால் மட்டுமே முடிகிறது. அதில் பிரபாவும் அடுத்து நீங்களும் ராஜாவின் இசையின் தாக்கத்தைப் பகிர்ந்து உங்கள் வாழ்க்கைக்குள் வாசகர்களாகிய எங்களையும் உள்ளே அனுமத்தித்து இருக்கிறீர்கள். அந்தரங்கத்தைப் பகிர்வது எளிதல்ல. ராஜாவின் இசை அந்த மன தைரியத்தையும் உங்களுக்கு அளிக்கிறது.
    வாழ்த்துகள் :-)

    amas32

    பதிலளிநீக்கு
  9. Annamalai, Amas32,

    கருத்துக்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு