முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...


ணக்கமுங்க!


இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி...

ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம் இருக்கறதால மேற்கொண்டு தொடருகிறேன்.

பாருங்க... மத்ததுல எல்லாம் கொசுவத்தி சுத்தியே சமாளிச்சுக்கலாம். ஆனா இப்போ "கேள்வியெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீ பதிலு மட்டும் சொல்லு மாப்ள" ன்னு இருக்கறத படிச்சா எனக்கு கலக்கமாத்தான் இருக்கும்னு நீங்க நினைக்கலாம்! அப்படியெல்லாம் இல்லைங்க! ஏன் சொல்லறேன்னா, எனக்கு அஞ்சாவது செமஸ்டர்ல "Electronic Instruments" அப்படின்னு ஒரு பேப்பரு இருந்தது. அதை கப்பு கப்பா வாங்கி கடைசி எட்டாவது செமஸ்டர் வரைக்கும் தள்ளிக்கிட்டு வந்தேன். அதுக்கு மேல வாழ்வா சாவா போராட்டம்! காலைல ஒரு பரிச்சை, மத்தியானம் இந்த இழவு. ஒரே நாள்ல ரெண்டு பரிச்சை எழுதறதை "Oneday Match" னு வேற செல்லமா சொல்லிக்குவோம். கடைசி செமஸ்டர்ல கோட்டை விட்டா அப்பறம் 2nd Class தான். எனக்கெல்லாம் பரிச்சைக்கு முந்துன நைட்டு 8 மணிநேரம் படிச்சு பார்டர்ல பாஸாகறது தான் வழக்கம். காலைல உயிரைக் குடுத்து 45 மார்க்குக்கு தேத்திட்டு மத்தியானம் இந்த கொஸ்டின் பேப்பரை வாங்குனா கண்ணுல பூச்சி என்ன? அனகோண்டாவே பறக்குது. நானும் அரை மணிநேரம் எல்லாக் கேள்விகளையும் நேரா, கோணையா, தலைகீழா, முற்போக்கு சிந்தனையா, பின்நவீனத்துவ பார்வையா எல்லாம் வைச்சு பார்த்தேன். ம்ஹீம்.. பார்க்கற என் பார்வைல தான் கோணல்னு தெளிவா தெரிஞ்சது! அப்பறம் என்ன செஞ்சேன்னா கேக்கறீங்க? கொஸ்டின் பேப்பரை மடிச்சு பாக்கெட்ல போட்டுக்கிட்டு 1. அப்படின்னு நம்பரை போட்டு எழுத ஆரம்பிச்சேன். சுயநினைவோட எழுதுனது டாப்புல போட்ட விநாயகரு சுழி மட்டும். மத்ததெல்லாம் எம்மேல வந்து ஏறிய ஆத்தா செஞ்ச வேலை! பேனா சும்மா பறக்குது. என்னத்த எழுதுனேன், என்னென்ன படங்க போட்டேன்னு அந்த பாரதியார் யுனிவர்சிட்டிக்கே வெளிச்சம். நான் ஆறாப்புல படிச்சதுல இருந்து 4 வருசம் டிகிரில படிச்சது வரை அத்தனையும் நினப்புக்கு வர்றதையெல்லாம் எழுதி தள்ளிட்டேன். மொத்தம் 11 அடிஷனல் ஷீட்டுன்னா பார்த்துக்கங்க! ரிசல்ட்டு என்னான்னு சொன்னா நம்ப மாட்டீங்க! 67 மார்க்கு போட்டிருந்தாங்க! இப்ப சொல்லுங்க விநாயகரை நம்பறதா வேண்டாமா? :)

அதனால அதே டெக்குனிக்கு மேல நம்பிக்கை வைச்சு இங்கையும் ஆரம்பிக்கறேன்! தருமிசார் கண்ணுல வெளக்கெண்ணை விட்டுக்கிட்டு இமைகளை நெத்தியோட சேர்த்துவைச்சி கிளிப்பு மாட்டிக்கிட்டு பேப்பரு திருத்துவாருன்னு தெரியும். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர/மாற முடியுமா என்ன?


1. காதல் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது; சின்னது பெரியது என்று எவ்வளவோ இருப்பதை நம் தமிழ் சினிமா டைரக்டர்கள் எப்போதாவது கண்டுபிடிப்பார்களா?

நான் காலேஜ் படிச்ச காலத்துல ஞாயித்துக்கிழமை மத்தியானத்துல தேசியவாரியா அவார்டு வாங்குன படமெல்லாம் போடுவாங்க. அடூர் கோபாலகிருஷ்ணன் படம் எல்லாம் வரும். ஒரு படத்துல வீட்டுல "தோ! ஞான் இப்ப திருச்சி வரு.." ன்னு சொல்லிட்டு ஒரு சேட்டன் சைக்கிளை எடுத்துக்கிட்டு மெதுவா மெதிக்க ஆரம்பிப்பார். அந்த சைக்கிள் போனது... போனது... போய்க்கிட்டே இருந்தது... எனக்கும் ஒரே ஆச்சரியம். பத்து நிமிசமா ஒரு சிங்கிள் வயலின் பின்னணில சைக்கிள் ரோட்டுல போய் புள்ளியா மறைவதை இயல்பா காட்டறேன்னு இப்படியும் காட்ட முடியுமான்னு! பாத்துக்கிட்டே இருக்கையில கரண்டு வேற போயிருச்சு. இன்னைக்கு வரைக்கும் சைக்கிள்ல போனவன் என்ன ஆனான்னு சஸ்பென்ஸ் தாங்க முடியலை! இன்னமும் நான் நம்பறது என்னன்னா, அந்த படம் எனக்கு சரியான புரிதலை கொடுத்திருந்தா இன்னேரம் அந்த சேட்டன் சைக்கிளை பொலீவியா பக்கம் மேட்டுல மூச்சுவாங்க மெறிச்சுக்கிட்டு இருக்கனும்!

சரிங்க! அவார்டு படங்க புரியாத அளவுக்கு நானெல்லாம் சராசரிதான்! ஆனா நாங்க தான் மெஜாரிட்டி! :) அவார்டு படங்களும் ஒரு அளவுக்கு தேவைதாங்க. அதெல்லாம் கலை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமா இல்லாம தேடி அலைய வேண்டிய கலைத்தாகமாகவும், கடைநிலை (அப்படின்னு அவங்களா முடிவு செஞ்சுக்கற ) மக்களின் வாழ்க்கைமுறையை பாடம் செய்யப்பட்ட செம்பருத்திப்பூவாக விவரித்து ஆராயும் அறிவுஜீவித்தனமாகவும் உள்ளவங்க எடுத்துக்க பார்த்துக்க வேண்டியது. தப்பே இல்லை. ஆனா பாருங்க... படம் பார்க்கப் போறவங்கள்ள 100க்கு 90 பேரு சராசரி குடும்பிங்க. 50 ரூவா குடுத்து டிக்கெட்டு வாங்கிட்டு உள்ள போனா அங்கயும் ஏழ்மையை இயல்பா காட்டறேன்னு தீஞ்சுபோன தோசைக்கல்லையும், ஓட்டை TVS50யும், கசங்கின காட்டன் நைட்டில ஹீரோயினையும் காட்டுனா வெறுப்படைவானா மாட்டானா? அதனாலதான் இயல்பு வாழ்க்கையை கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சுட்டு கிடைக்காத, கிடைக்க விரும்பற ஒரு ஜிகினா வாழ்க்கைய கைதட்டி ரசிக்கறான்/றோம். இதுபோல ரசிகருங்க இருக்கறதாலதான் படத்துல ஹீரோ மார்ச்சுவரில பொணத்துக்கு பாலீஷ் போடற வேலை செஞ்சாலும் பணக்கார வீட்டு பிகருன்ங்க தானா தேடி வந்து "உன்னை விட்டேனா பார்"னு துரத்தி துரத்திதான் லவ் செய்யறாங்க! பட்டரைல வெல்டிங் வைக்கறவனா இருந்தாலும் "மொதல்ல பொம்பளையா லச்சணமா பொடவை கட்டிட்டு வா"ன்னு ( இதுக்கு முன்னாடிதான் ஹீரோவோட கனவு பாட்டுல ஹீரோயின் LKG ட்ரஸ்ல கெட்ட ஆட்டம் போடிருப்பாங்க! ) சொன்ன உடனே, அதுவரைக்கும் தான் பொம்பளைன்னே தெரியாம இருந்தவ வெக்கப்பட்டு உடல் சுழிச்சு புடவை கட்டி காதல் எனும் கழனித்தொட்டிக்குள்ள தொபுக்கடீர்னு குடிக்க அப்பறம் அடுத்த பாட்டுல ஹீரோ வந்து தொட்டிக்குள்ள தலைய விட்டு சர்ரு புர்ருனு உரிஞ்சுத் தள்ளிருவாரு...அட கழனித்தண்ணியங்க...

இன்னைக்கெல்லாம் ஒரு படத்தோட வெற்றி போட்ட காசை எடுக்கறதுல தான் இருக்கு. அது ரிலீசான 10 நாளைக்குள்ள படம் பார்க்க வர்றவங்க கைலதான் இருக்கு. அவர்களில் பெரும்பாண்மை கல்லூரு இளவட்டங்களும் ரசிகர்களும்தான்! அவங்களுக்கு காதலையும் வீரத்தையும்(இது பத்தி பின்னாடி..) தவிர வேற ஏதாவது சொன்னா ஓடும்கறீங்க? அதுலையும் இந்த மசாலா கலவை சரியா இல்லைன்னா ரசிகர்களே படத்தை கவுத்துருவாங்க. அது 'பாபா'வாகவே இருந்தாலும் சரி! அதனால கவலைகளை மறந்து மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வர வாய்ப்பளிக்கற மசாலா படங்களுக்கே என் முதல் ஓட்டு. அதுவும் இந்த மசாலாவில் ஜனங்களை கவருவதற்கு மிக எளிதான காதல் என்ற கான்செப்டுக்கு என் முழு சப்போர்ட்டு! :) அன்னைக்கு ஒரு "உலகம் சுற்றும் வாலிபன்", அப்பறம் ஒரு "அண்ணாமலை", அப்பறம் "சாமி", "கில்லி" ன்னு அட்டகாசமான கலவைல இப்பவும் நல்ல படங்க வந்துகிட்டுதான் இருக்கு. இன்னைக்கு தேதில S.P. முத்துராமன் அவர்களை மசாலா பட டைரக்டருன்னு ஈசியா ஒதுக்கிடலாம். ஆனா தமிழ்நாட்டு மக்களை அதிகமா சந்தோசப்படுத்துனவங்க லிஸ்டுல அவருபேரு மொதல்ல இருந்தாலும் ஆச்சரியமில்லை!

ஆனா என் ஆதங்கமெல்லாம் இப்ப இந்த மசாலா படங்களையாவது ஒழுங்கா ரசிக்கற மாதிரி எடுக்கறாங்களாங்கறது தான்! :( காதல் வீரம் இந்த இரண்டும் தமிழர்களின் இரண்டு கண்களல்லவா! இதுநாள் வரைக்கும் நாக்கு அறுக்கறது உட்பட அனைத்து காதலையும் காமிச்சிட்டாங்க. தாங்கிக்கிட்டோம். வீரம் காமிக்கறேன்னு இவங்க விடற அழும்புதான் தாங்க முடிய மாட்டேங்குது. படம் பார்க்கறவங்களுக்கு எவன்னே தெரியாத ஹீரோக்கு மட்டுமே தெரிஞ்ச எதிரிக்கு "உன்னை அழிச்சிறுவேன்" "பூண்டோடு ஒழிச்சிருவேன்" "என் படைகள் உன்னை துவைக்கும்" காமிராவ பார்த்து சவடால் அடிக்சுக்கிட்டு பாடறதும் கைய சொடுக்கி வசனம் பேசறதும் மெகா இம்சையா இருக்கு! அதுவும் தமிழ்நாட்டை பாதியா பிரிச்சு சேரமாமன்னர் விஜய்க்கும், சோழப் பேரரசர் அஜீத்துக்கும் குடுத்துட்டதா நினைப்பு! படத்துக்கு படம் "பகைவனை அழிப்போம்"னு சொடுக்கி சொடுக்கி சவால் விட்டுக்கிட்டே இருக்காங்க. அவங்கதான் அப்படின்னா இந்த குறுநில மன்னருங்க "வெறுவாய் வேந்தன் வல்லவ வேங்கை" சிம்பு அவர்களும் "இரண்டாம் ஓமக்குச்சி ஒட்டடை புரூஸ்லி" தனுசு அவர்களும் பேசற பஞ்ச் டயலாக்குகளை கேட்டா... அடப்போங்க சார்... படம் முடிஞ்சு வெளில வர்றதுக்குள்ள முகமெல்லாம் வீங்கிருது!


2. அடுத்த ஒலிம்பிக்கில் சீனா அனேகமாக முதலிடம் பெற்று விடும். நமக்கு ஒரு தங்கமாவது கிடைக்குமா? ஏன் நாம் விளையாட்டரங்குகளில் இப்படி மங்குணிகளாக இருக்கிறோம்?

ஏன்? எதுக்கு தடகள விளையாட்டுல இந்தியருங்க முன்னேறனும்னு கேக்கறேன்? இந்தியாவுல தக்கிமுக்கி ஸ்டேட் லெவல்ல ஈட்டி வீசுனாலோ இல்லை உயரம் தாண்டுனாலோ ரயில்வேல கிளார்க்கு உத்தியோகம் கிடைக்கும். அதுதான் விதிக்கப்பட்டதுன்னு நிக்காம தேசிய உலக லெவல்ல ஏதாவது சாதிச்சிங்கன்னா அவங்க ஆம்பளையா பொம்பளையான்னு ஆராய்ச்சி செஞ்சு பதக்கத்த பறிக்கக்கூட வழியிருக்கு. தடகள வீரருங்க எல்லாம் என்ன கிரிக்கெட்டு வீரர்களா? ஒரு முறை தேசத்துக்கு விளையாண்டுட்டா ஆம்பிவிலில ஒரு கோடி வீடும் ஏதாவது கம்பெனில எக்குசிகூட்டிவ் போர்டு மெம்பெர் போஸ்டும் வாங்கறதுக்கு? மத்த ஊருல தடகள விளையாட்டுக எல்லாம் சாதனை செய்யறதுக்கு. நம்மூருல தக்கிமுக்கி ஒரு கவருமெண்டு வேலை வாங்கற பொழப்புக்கு. அதோட நிறுத்திக்காம சீனாவை தோற்கடிக்கனும், கொரியாவ மிஞ்சனும்னு 40 வயசு வரைக்கும் போராடி வாழ்க்கைல தோக்கறதுக்கு அவங்க மட்டும் என்ன இளிச்சவாயங்களா என்ன? பாதிவழில பொழப்பை பார்க்க போக வேண்டியதுதான்! நமக்கெல்லாம் இன்னைக்கு வெறும் கால்ல ஆசியா போட்டில ஓடி வெங்கலம் வாங்குனதுகூட பெருமைதான். ஆனா காலணி கூட இல்லாம ஓட வைச்ச ஒரு ஃப்ரொபெஷனலிச ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை எங்கேர்ந்து கண்டுபிடிச்சோம்ங்கறதை கேக்கதான் ஆளில்லை!


3. vicious circle என்று சொல்வார்களே – அதற்கு உங்கள் அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.
vicious circle என்பதை ஒரு பிரச்சனைக்கு கண்டுபிடிச்ச தீர்வு இன்னொரு பெரிய பிரச்சனைல முடியறதை சொல்லறீங்கன்னு நினைக்கறேன். இதோட ஓரளவு ஒத்துப்போற மாதிரி எனக்கு தோணறது எங்க IT வேலை தான்னு சொல்லலாம். இதை நான் பொதுமைப்படுத்தி கணினி துறைல இருக்கற எல்லாத்துக்கும் பொதுவாக சொல்ல வரவில்லை. 10 வருசமா நான் குப்பை கொட்டற ஒரு துறைங்கற ஒரு உரிமைல சொல்லறேன்! நான் BE முடிச்ச ஆரம்ப 90ல்ல எங்கயாவது அப்பரசண்டியா 2000 ரூபாய்க்கு வேலை கெடைச்சாவே அதிர்ஷ்டசாலி அவன். அப்படியே ஜீனியர் இஞ்சினியராகி, அப்படி இப்படி கன்பார்ம் ஆகி 6000 ரூபாய்ல செட்டில் ஆனா கல்யாணம் செஞ்சுக்கற லெவல்லதான் இருந்தது. சாப்டுவேர் ஃபீல்டெல்லாம் தலைய விரிச்சு ஆட ஆரம்பிக்கற அறிகுறியே இல்லாத காலம். கொஞ்சூண்டு மக்கா வெளில கோர்ஸ்செல்லாம் படிச்சி 5000 ரூபாய்க்கு TCS சேர்ந்ததையே வாயப்பொளந்து பார்த்த வயசு. நானெல்லாம் சர்வீஸ் இஞ்சினியரா ஒரு கம்பெனில 2500 ரூபா சம்பளத்துலயும் தென்னகமெல்லாம் டூரடிச்சு தேத்தற 3000 ரூவா டிராவல்ஸ் அலவன்ஸ்சுலயும் தலைகீழா ஆடிக்கிட்டிருந்த நேரம்.

பொறியியல் படிப்பையே தலைகீழா பொரட்டிப்போட வந்து சேந்ததுங்க Y2Kன்னு ஒரு அட்சய பாத்திரம். நல்லா படிச்ச, படிக்காம கப்புகளா அடுக்கிவைச்ச, சிவில் கெமிஸ்ட்ரி படிச்ச, வேலை கிடைச்ச, தேடிக்கிட்டு வீட்டுல திட்டு வாங்கிட்டு இருந்த அத்தன பேரையும் மொத்தமா அள்ளி சாப்ட்வேர் பீல்டுல போட்டுக்கிட்டு போயே போயிருச்சு. இவனுக்கு TCSல 8K அவனுக்கு Pentasoftல 12Kன்னு பேச்செல்லாம் கேக்க ஆரம்பிச்சது. அடுத்த ஒரு வருசத்துலயே இவனுக்கு பாஸ்டன்ல 47K அவனுக்கு நியூஜெர்சில 56K னு மாறிப்போச்சு. அப்ப ஸ்சேல்ஸ் வேலைய விட்டுட்டு கும்பலோட உள்ள வந்தவன் தான் நானும். இப்பவெல்லாம் படிச்சிட்டு கேம்பஸ்லயே 4 லட்சத்துக்கு குறையாம ஆபர் லெட்டரோடதான் மக்கா வெளில வராங்க. எனக்குத் தெரிஞ்சு உருப்படாத சுத்திக்கிட்டு இருந்த எங்க மொத்த கேங்குக்குமே அன்னைக்கு IT வாழ்வு கொடுக்கலைன்னா இன்னைக்கெல்லாம் நான் குஜராத் பக்கத்துல எதாவது மீட்டர்காஜ் கருவிய காலிபர் செஞ்சுக்கிட்டு இருந்திருப்பேன்.

இப்படி எங்க வாழ்க்கைல வெளக்கேத்துன அதே வேலைதான் இப்ப பிரச்சனைன்னு சொல்ல முடியாத பிரச்சனையா இருக்குன்னு நினைக்கறேன். மொத்தமா ஒரு தலைமுறையோட வாழ்க்கை முறையே மாறிடிச்சு.

எல்லாம் எங்க உடல் நலத்தை பற்றித்தான்! கடந்த இரண்டு மாதங்களில் நான் அறிய வந்த இரண்டாவது மாரடைப்பு மரணம் சேகரன். எனது தனிப்பட்ட சோகங்களையும் மீறி எஞ்சி நிற்கும் வருத்தம் 28 வயதில் வந்த மாரடைப்பு தான். மற்றொருவருக்கு 35 வயது. பன்னாட்டு கம்பெனியில் டெலிவரி மேனேஜர். 24 மணி நேரமும் ப்ராஜெக்டை கட்டிக்கொண்டு உழைத்தவர். ஒரே ஒரு அட்டாக் தான்! :( இதுபோக கழுத்தெழும்பு தேய்வு, கிட்னில கல்லு, நீரழிவு, அல்சர், கொலஸ்ட்ரால் கேசுங்க எல்லாம் எங்க அலுவலகத்தில் சர்வ சாதாரணமாக பார்க்க கிடைப்பாங்க. எங்களுக்கு மட்டும்தான் இப்படியான்னு யோசிக்க முற்பட்டால் ஏகப்பட்ட விடைகளும், விவாதங்களும் எழ வாய்ப்புள்ளதால் எனக்கு நானே சிந்திக்கிறதோட இப்போதைக்கு நிறுத்திக்கறேன்!

4. மத வேற்றுமைகள் ஒழியாது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், சாதி பேதங்களாவது என்றாவது நமது சமூகத்திலிருந்து ஒழியுமா?
தருமி சார்! என்னைப்பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்டிங்க? இதுக்கான தெளிவான கருத்தோ, உறுதியாக இதுதான் சரின்னு நம்புகிற ஆதாரங்களோ எங்கிட்ட இருந்தால் சாதி, இடஒதுக்கீடு பதிவுகளையெல்லாம் நான் ஏன் இன்னாள் வரைக்கும் சும்மா படிச்சுட்டு சத்தமில்லாம போய்க்கிட்டு இருக்கறேன்?!

சாதிகள் வேறுபாடுகள் மூலம் வரும் ஏற்றத்தாழ்வுகள் அழிய வேண்டும் என்ற என் ஆசைகள் வேறு! சாதிகளின்றி என் சாதியின் அனைத்து அடையாளங்களையும் நான் அழித்துவிட்டு வாழ என்னால் முடியுமா என்ற கேள்விக்கான விடைகள் வேறு! இங்கு நான் என் சாதியின் மூலமாக எனக்கு கிடைக்கும் உயர்வுகளையோ, மற்ற உயர்ந்த சாதியின் மூலமாக எனக்கு கிடைத்த தாழ்வுகளையோ சொல்லவில்லை! அதை விவாதிக்கும் தளம் நிச்சயமாக வேறு!

நான் சொல்ல வருவது என் சமூகத்தில் எனக்கு ஏற்புடையாத இருக்கும் மற்றவர்களை பாதிக்காத என் பழக்க வழக்கங்களை சாதிகளை வேரோடு அழிப்போம் என்று சொல்வதன்மூலம் இழப்பேனாயின் அதனால் எனக்கு கிடைக்க இருக்கும் வாழ்க்கைக்கும் இப்போது அதே குழு அடையாளத்துடன் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம். சாதி என்பதற்கான அர்த்தம் என் தாத்தாவின் காலத்தில் வேறு. என் தந்தையாரின் காலத்தில் வேறு. இப்போதய என் புரிதலில் சாதி என்பது ஒத்த பழக்க வழக்கள் உடைய மக்கள் இயைந்து வாழ்வதற்கான ஒரு குழு அடையாளம். அவ்வளவே. நாளைக்கு என் பெண்ணுக்கு என் சாதிப்பெயர் என்பதும், அவள் விரும்பும் பாலே நடன ஆர்வலர்கள் குழுஎன்பதும் சமதளத்தில் வைக்கப்படும் வகைப்பாடுகளாக இருக்கலாம்! 50 வருடங்களுக்கு முந்தய குலத்தொழில் வழக்கம் இன்றைக்கு செய்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. என் தாத்தாவும் என் அப்பாவுக்கும் சடங்கு செய்த சின்னசாமியின் மகன் தான் என் சாவுக்கும் பறையடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. அதை செய்வதற்காகவுமே அவர் மகன் இப்போது படித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் இதோடு ஒதுங்கிக்கொள்ளாமல், எனக்கு கீழே இருப்பவர்கள் முட்டிமோதி மேலே வரும் முயற்சிகளுக்கு தடைக்கல்லாக எனக்கு ஏற்படும் இழப்புகளை காரணம் சொல்லி முட்டுக்கட்டையாக இருப்பதை ஒரு சமூக ஒழுங்கீனமாகவே பார்க்கிறேன். ஒரு சராசரி மனிதனாக என்னளவில் எந்த வித தடைகளையும் ஏற்படுத்தாத வகையில்தான் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள விழைகிறேன். தயக்கமின்றி மாறியும் வருகிறேன்.

இன்றைக்கும் கீரிப்பட்டிகளும், அயோத்தியா மண்டபம் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மாற வேண்டிய மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மாற்றங்களை கொண்டுவரும் தலைவர்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் என்னைப்போன்ற பெரும்பான்மை சராசரிகளும் ஊருடன் ஒத்துதான் வாழ்கிறோம். என்னோடு 2 வருடங்கள் அறைத்தோழனாக இருந்த என் பிராமண நண்பன் நான் சிக்கன் லெக்பீசை கடிக்கும்போது "ஏண்டா! செத்த சவத்தை திங்கறயே. புலையனா நீ?" என்றோ அல்லது அவன் சந்தியாவந்தனம் சொல்லும்போது "சாயந்தரமானா உன்கூட இம்சைடா... சும்மா மொனமொனன்னுக்கிட்டு" என்றோ அடுத்தவர் பழக்கங்ககளை பழித்துக் கொண்டு சண்டைக்கு நின்றிருந்திருந்தோமென்றால் ஒரே வாரத்தில் வெட்டுக்குத்துல ஜெயிலுக்குதான் போயிருப்போம்! இத்தனைக்கும் மற்ற எல்லா விடயங்களிலும் ஒருத்தரை ஒருத்தர் க்ருணையே இல்லாம நாரசமாக கிழிச்சு காயப்போட்டுருவோம்! "சாதி என்பது ஒத்த பழக்க வழக்கங்கள் உடைய ஒரு சமூக குழு அடையாளம். அந்த அடையாளம் யாரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இல்லை" என்ற மாற்றங்கள் வரத்தான் போகின்றது. ஆனால் சாதி என்ற அடையாளங்களே இந்தியாவில் இல்லாமல் அழித்துவிடும் என்று நான் எண்ணவில்லை. ஒருவரை மற்றொருவர் இயைந்தே வாழ வேண்டிய காட்டாயமிருக்கும் சமூகத்தில் எந்தவித குழு அடையாளங்களுமின்றி வாழ்வது என்பது சாத்தியமா? இன்றைய தேதியில் என் மீதான குழு அடையாளங்களைப்பார்த்தால், எங்கள் அலுவலகத்தின் தமிழ் பேசும் கூட்டத்தில் நான் கோயமுத்தூர் குசும்பு புடிச்சவன், ஹிந்தி பேசும் மக்கள் நடுவில் நான் மதராசி, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நண்பர்கள் நடுவில் வார்த்தைகளை வளைத்து உருட்டி குழப்பியடிக்காத என் ஆங்கில உச்சரிப்பால் நான் ஒரு தமிழ்மீடியம். இப்போது இருக்குமிடத்தில் தேசி அல்லது பாக்கி. இதில் எத்தனை அடையாளங்கள் நான் உருவாக்கியது? எத்தனை என்மீது ஏற்றப்பட்டது? :)

ரொம்ப சின்ன வயசுல இந்தியால பகல்னா அமெரிக்கால இருட்டுன்னு கேள்விப்பட்டப்ப நடுராத்திரில எழுந்திருச்சா அமெரிக்கா வந்துரும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.அப்பறமா அது பூமிக்கு அந்தப்பக்கமா இருக்குன்னு தெரிஞ்ச பிறகு இருக்கற எடத்துல இருந்து குழி தோண்டிக்கிட்டே போய், அப்பறம் ஒரு பெரிய ஏணிய வைச்சு ஏறினா ஈசியா போயிரலாம்னு நினைப்பேன். அப்பறம் புவியீர்ப்பு விசைன்னு ஒன்னு படிச்சப்பறம் எப்படியாவது அந்தரத்துல போய் நின்னுக்கிட்டா பூமி சுத்துனதுக்கு அப்பறம் குனிஞ்சு பார்த்து அமெரிக்கா வந்ததும் இறங்கிக்கலாமேன்னு நினைச்சேன். இப்ப ஏரோப்ளேனெல்லாம் ஏறினதுக்கு அப்பறமாத்தான் IST, EST எல்லாம் தெரியுது. அந்தந்த வயசுல எனக்கு கிடைச்ச அனுபவங்களின் அடிப்படையில் எல்லாமே நான் மனப்பூர்வமா நம்பியவைகள்தான். ஆனா வயசாக வயசாக, நாலு அனுபவங்கள் கிடைக்கறப்ப, 20 வயசுல நான் ஆணித்தரமான அசைக்கமுடியாத உறுதிகளோடு மணிக்கணக்கா பொங்கல் போட்டு சண்டையிட்ட கருத்துக்களெல்லாம் 30களிளேயே பல்லிளிப்பதை காணும்போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் பயமாகவும் தான் இருக்கு, ஆகவே சாதி, மதம், வாழ்க்கை, காதல், பணம் மற்றும் எல்லாவற்றுக்குமான இன்றைய தேதிக்கான என் கருத்துக்களை யார்மேலும் திணிப்பதாக இல்லை! :)

தருமிசார் பார்த்தீங்களா? 11 அடிஷனல் ஷீட்டுக்கு இல்லைன்னாலும் நாலு ஸ்ரோலுக்கு அடிச்சுத்தள்ளிட்டேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம பாஸ் மார்க் போட்டு விட்டுடுங்க! 100 பேர்ல ஒரு மாணவனுக்கு தர்ம மார்க்கு போட்டால் ஆசிரியர் சமூகத்துக்கு ரொம்ப நல்லதுன்னு எங்க உருப்படாத மாணவர் சமூகத்துல அப்பவெல்லாம் அடிக்கடி பேசிக்குவோம்! :)

சரி..சரி... சுடர் எண்ணை வத்தி தீச்ச வாசம் அடிக்கறதுக்குள்ள வேற ஒரு ஆளுக்கு மாத்தி விட்டுடறேன்!

எந்த விதமான விளம்பரங்களும் அலப்பரைகளும் இல்லாமல் அருமையான பதிவுகளை எழுதும் MSV.முத்து அவர்கள் கையில சுடரை திணிச்சுட்டேன். இனி அவர் பாடு.... உங்க பாடு...

Dear MSV Muthu,

1. அருமையான தமிழில் பதிவிடும் உங்களுக்கு, பேச்சுத்தமிழில் எழுதும் என்னைப் போன்றவர்கள் பதிவையெல்லாம் படிக்கும் போது கோபமோ எரிச்சலோ வருமா? வராதா? எனில் ஏன்???

2. உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு குட்டிதீவு வாங்கி அங்கே ஒரு மாசத்துக்கு நீங்கள் தனியாக இருந்தே ஆகவேண்டுமென்று அனுப்பிவைத்தால் உங்கள் ஒரு மாத வாழ்க்கையை எப்படி திட்டமிடுவீர்கள்? ஏதேனும் 5 பொருள்கள் மட்டும் உங்களுடன் எடுத்துச்செல்ல அனுமதி! :)

3. தல அஜீத் அவர்களின் அடுத்த படத்துக்கு நீங்கதான் காதாசிரியர். 50 வரிகளுக்கு மிகாமல் ஒரு அடிபொலி கதை சொல்லுங்கப்பு!

4. ஒரு மனிதனது உணமையான குணாதிசியங்களை சூழ்நிலைகளே தீர்மாணிக்கின்றன ( Crash Movie ). உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த இதன் நேரடியான தாக்கம்/அனுபவம் ஏதாவது...

அவ்வளவு தாங்க! பின்னூட்டமெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் வெளியிடப்படும். ஆபீஸ்ல ப்ளாகர் கட்டு! அதனால் நெலமய புரிஞ்சுக்கப்பு! அது சரிடா... இந்த பதிவுக்கும் மேலே உள்ள படத்துக்கும் என்னடா லிங்க்குன்னு யாராவது கேட்டீங்கன்னா... மேலே உள்ள படத்தில் உள்ளதுபோலத்தான் என் இன்றைய வாழ்க்கை! ஆழ்ந்த தியானமும் அடர்ந்த சிந்தனையும்! :) ( பொச்சுக்கு கீழாக எரியும் தகதக தீ படத்தில் காட்டப்படவில்லை! என்னது? ஆபாச வார்த்தைன்னு தமிழ்மணத்துக்கு பெட்டிசன் போடுவீங்களா?! அப்படின்னா "My Ass is on Fire" அப்படின்னு நாகரீகமா இங்கிலீசுல மாத்தி படிங்கப்பு! :)

கருத்துகள்

  1. Neenga inamum ingathan irukreengela?? thamizmana mugapil kana naala unga pear a kanaleye nan!

    பதிலளிநீக்கு
  2. எங்க போய்ட்டீங்க இளவஞ்சி இவ்வளவுநாளா? சுடராவது உங்களைத் திரும்பக் கொண்டுவந்து சேர்த்திருக்கே:)) அவ்வப்போது எழுதிக்கொண்டிருங்கள். உங்கள் நடை தனித்துவமானது:))

    பதிலளிநீக்கு
  3. //"With Great Power, Comes Great Responsibility"

    //

    என்ன ப்ரமோஷனா?

    கலக்கலா சுடர் ஏற்றிவச்சிருக்கீங்க. இவ்வளவு நீளமா போட்டிருக்கீங்க்க.. சரியான சுடர் வட்டித் தடியந்தான்..
    :))

    பதிலளிநீக்கு
  4. நினைத்த மாதிரியே அசத்தலா எழுதிட்டீங்க, இளா!

    அதிலும் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது!

    //"சாதி என்பது ஒத்த பழக்க வழக்கங்கள் உடைய ஒரு சமூக குழு அடையாளம். அந்த அடையாளம் யாரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இல்லை" என்ற மாற்றங்கள் வரத்தான் போகின்றது. ஆனால் சாதி என்ற அடையாளங்களே இந்தியாவில் இல்லாமல் அழித்துவிடும் என்று நான் எண்ணவில்லை. //

    பிடிங்க 100/100.... என்னிடமிருந்து!

    பதிலளிநீக்கு
  5. ரசிகர்களை என்றும் ஏமாற்றாத சூப்பர்ஸ்டாரே!வாழ்க!

    //அப்பறம் புவியீர்ப்பு விசைன்னு ஒன்னு படிச்சப்பறம் எப்படியாவது அந்தரத்துல போய் நின்னுக்கிட்டா பூமி சுத்துனதுக்கு அப்பறம் குனிஞ்சு பார்த்து அமெரிக்கா வந்ததும் இறங்கிக்கலாமேன்னு நினைச்சேன். //

    இளவஞ்சி பஞ்ச்-ன்னா இது தான்!

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி, நான்காவது கேள்விக்கான உங்களது பதில் எனக்குப் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  7. மாங்கு மாங்குன்னு வரிஞ்சுகட்டி எழுதிட்டீங்க.

    சூப்பர்.

    அப்ப படம்?

    அதி சூப்பர்.:-)))))


    //ஏற்கனவே பிரேமலதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு//
    அய்யோ.......... ஞாபகப்படுத்தி இருக்கவேணாம் (-:
    அவுங்கதான் ஊருக்குப் போயிட்டாங்களேன்னு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  8. நல்லாயிருக்குங்கோவ்.

    தொடர்ந்து எழுதுங்கோவ்.

    பதிலளிநீக்கு
  9. மேம்போக்காவோ, பாசாங்காகவோ இல்லாமல் நீளமாகவும், ஆழமானதகவும் தங்கள் கருத்துக்கள் / பார்வையைத் தந்திருப்பது கலக்கல்.

    வஞ்சிக்காம நிறைய எழுதுங்க இளவஞ்சி.

    //நானெல்லாம் சர்வீஸ் இஞ்சினியரா ஒரு கம்பெனில 2500 ரூபா சம்பளத்துலயும் தென்னகமெல்லாம் டூரடிச்சு தேத்தற 3000 ரூவா டிராவல்ஸ் அலவன்ஸ்சுலயும் தலைகீழா ஆடிக்கிட்டிருந்த நேரம்//

    அடியேனும் இம்மாதிரி ஆடிய ஆட்டத்தை நினைவூட்டியது :-))

    பதிலளிநீக்கு
  10. சூப்பர்...அல்ட்டிமேட்டா இருக்கு...

    பதிலளிநீக்கு
  11. எல்லோரும் சிரிக்க வச்சு சிந்திக்க வைப்பாங்கன்னு சொன்னப்ப அது எப்படியிருக்கும்னு யோசிச்சதுண்டு. உங்க சுடர் பதிவை படிக்குறப்ப நல்லா புரியுது.

    ஆனாலும் அந்த vicious circle பதில் உண்மையெனினும் மனம் அதிர வைக்கிறது.

    என்னுடைய மதிப்பெண் - ஒரு சிறந்த படைப்பிற்கு மதிப்பெண் போடுமளவு நான் இன்னும் வளரவில்லை.

    சென்ஷி

    பதிலளிநீக்கு
  12. என்னை மாதிரி ததக்கா - புதக்கா பதிவு போடறவங்களுகு..2 - மணிரத்தினம் படம் இண்டர்வெல் இல்லாம பார்த்த அனுபவம்..
    சூப்பர்..

    பதிலளிநீக்கு
  13. மக்கா

    எங்கலே போயிட்ட? இப்பவாவது உன்னப்பார்க்க முடிஞ்சதே? நல்லா இருக்கியாளே? நல்லா இருடே!!

    சாத்தான்குளத்தான்

    பதிலளிநீக்கு
  14. இளவஞ்சி....நீங்க இவ்வளவு நாள் கழிச்சு வந்து சுடரேத்துனாலும் இப்பிடி ஜொஜ்ஜொலி ஜொலிஜொலின்னு ஏத்தீருக்கீங்களேய்யா! வாழ்க வளமுடன்.

    இன்னொரு விசயம். உ-ங்குறது பிள்ளையார் சுழின்னு சொல்லக் கூடாது.உ-க்கு ஒலி உண்டு. பிள்ளையார் சுழிக்கு ஒலி கிடையாது. உல இருக்குற சுழி பிள்ளையார்சுழியில வராது.

    ஒங்க கருத்துகள்ள பலதுதான் என்னதும். தெளிவாத்தான் சொல்லியிருக்கீங்கன்னு நம்புறேன்.

    அடுத்தாரு? எம்.எஸ்.வி.முத்துவா? வாங்க வாங்க அண்ணாத்தே
    அஞ்சாதீக அண்ணாத்தே
    அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே!

    பதிலளிநீக்கு
  15. அறிவார்ந்த யதார்த்தமான பதிவு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  16. //ரசிகர்களை என்றும் ஏமாற்றாத சூப்பர்ஸ்டாரே!வாழ்க!//
    வாழ்க! வாழ்க!!!

    // இருக்கற எடத்துல இருந்து குழி தோண்டிக்கிட்டே போய், அப்பறம் ஒரு பெரிய ஏணிய வைச்சு ஏறினா ஈசியா போயிரலாம்னு நினைப்பேன். //
    ஹி ஹி.. நான் கூட இப்படி நினைச்சதுண்டு..

    விசியஸ் சர்கிள் கேள்விக்கான பதிலைப் பார்த்து எனக்குக் கூட சென்ஷி மாதிரி கொஞ்சம் அதிர்ச்சியாத் தான் இருக்கு.. ம்ம்ம்..

    MSV முத்துவை அழைச்சதும் சூப்பர்! அதிகம் ஆர்ப்பாட்டமில்லாமல், அழகா எழுதறவர்.. அவருக்கு உங்க கேள்வி எல்லாமும் நல்லா இருக்கு :))

    //பின்னூட்டமெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் வெளியிடப்படும். ஆபீஸ்ல ப்ளாகர் கட்டு! அதனால் நெலமய புரிஞ்சுக்கப்பு! //
    ஐயகோ.. இரவெல்லாம் கண்விழித்திருந்து நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கெல்லாம் பின்னூட்டம் போடும் எங்க வாத்தியாருக்கா இந்த நிலைமை!!! :(((((

    அடுத்து புரியாத பாஷைல யாராவது வந்து சொல்றதுக்குள்ள நானே சொல்லிடறேன் : படமும் வழக்கம் போல சூப்பர்.. ;)

    பதிலளிநீக்கு
  17. இளா, நல்லாயிருங்க! [முத்து, மாட்னடா நீயி!] சுடர் நல்லா பிரகாசமா இருக்கு இளா. நல்லா ஜோவியலா நறுக்குன்னு கிள்ளியிருக்கீங்க. சாதி பத்தின கேள்விக்கான உங்கள் பதில் நச். எல்லாரோட சுடரையும் இப்போத்தானுங்க படிச்சு முடிச்சேன்..ஹம்..

    பதிலளிநீக்கு
  18. இளவஞ்சி,
    மிக்க நன்றி. ஏமாற்றவில்லை.

    நான்காவது கேள்விக்குரிய பதிலை இன்னும் ஓரிருமுறை வாசிக்க வேண்டும்.

    இப்படி எழுதற ஆளுங்க எல்லாம் அஞ்ஞாத வாச்ம் போய்ட்டா எப்படி? வந்த் போய் இருங்க. அதற்கு let you ass be cool அப்டின்னு வாழ்த்தறேன்.

    பதிலளிநீக்கு
  19. காணாமல் போனவரைக் கண்டுப்பிடித்து களத்தில் இறக்கிய தருமி ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி.

    //இன்னைக்கெல்லாம் நான் குஜராத் பக்கத்துல எதாவது மீட்டர்காஜ் கருவிய காலிபர் செஞ்சுக்கிட்டு இருந்திருப்பேன்//
    வஞ்சியாரே! இன்னொரு நட்டு போல்ட் மிஸஸ் எழுதிவது, சந்தோஷமாய் ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கிற நேரத்துல இப்படி
    சொல்லீட்டீங்களே :-) இன்று பல மல்டி நேஷனல் கம்பனிகள் இந்தியாவில் வந்துவிட்டதால், ஐ.டிக்கு இணையாய் அல்லது
    அதற்கு மேலாய் சம்பளம் கிடைக்கிறது. இதுக்கு மேல விவரம் வேண்டுபவர்கள் எனக்கு மெயில் அடிக்கவும்.
    -ramachandranusha

    பதிலளிநீக்கு
  20. இளவஞ்சி,

    உங்கள மறுபடி இழுத்துட்டு வந்ததுக்கு சுடருக்கும் தருமி சாருக்கும் தான் நன்றி சொல்லனும்...

    சுடர் பதிவு கலக்கலா வந்திருக்கு :-)

    பதிலளிநீக்கு
  21. இயல்பான பதிவு. நன்று. மறுபடி எப்போ தலை காட்டுவீங்க? :-)

    பதிலளிநீக்கு
  22. இளவஞ்சி. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த 'கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு'ன்னு சொல்றாங்களே. உண்மையிலேயே அப்படி விட்டுக்குவாங்களா? அப்படி விட்டுக்கிட்டா தூக்கம் வராதா? இல்லை கண்ணு பார்வை கூடிடுமா? கொஞ்சம் அந்த உண்மையை சொன்னீங்கன்னா நல்ல இருக்கும்.

    புள்ளையார் சுழிக்கப்புறம் படிக்கலை இன்னும். அதுக்குள்ள எங்க மொட்டை பாஸ் வந்துட்டார். அப்பால படிச்சுட்டு வர்றேன்.

    பதிலளிநீக்கு
  23. சிநேகிதி, செல்வநாயகி, SK, ஜோ, பிரகாஷ்ஜீ, தங்கவேல், துளசியக்கா, மோகன்தாஸ், ஹரிகரன், செந்தழல், சென்ஷி, தீபா,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்!

    சிறில்,

    ப்ரமோஷனா? நீங்க வேற! அந்த தப்பையெல்லாம் எங்க ஆபீஸ்ல செய்யமாட்டாங்க! :)

    இது நம்ப ஸ்பைடர்மேனுக்கு அவங்க மாமா சொன்னது. ரொம்ப பிடிச்சதால கீழ போட்டு வைச்சிருக்கேன்! :)

    ஆசீப் அண்ணாச்சி,

    நீங்க என்னை பார்க்கலைன்னாலும் நாங்க உங்க அதிரடிய (புஷ் ஜோக்கு உட்பட... )கண்டு களிக்கறமல்லா! தல நீங்க ரசிகனை தேடலாமா? :)

    பதிலளிநீக்கு
  24. ஜீரா,

    தகவலுக்கு நன்றி! அதெல்லாம் இதுக்கு முன்னாடி தெரியாது! இந்த உ சமாச்சாரமெல்லாம் கூட அடுத்தவங்களைப் பார்த்து காப்பியடிச்சதுதான்! :)

    சிவஞானம்ஜி, பாராட்டுகளுக்கு நன்றி!

    பொன்ஸ்,

    நன்றி! ஆனா இந்த முறை படம் என் சொந்த சரக்கு! :)

    முத்து, நீங்க அசத்துங்க! :)

    பதிலளிநீக்கு
  25. நல்லாருந்துது இளவஞ்சி.. குறிப்பா திரைப்படம் & 'நச்சுச் சுழற்சி'.

    நிறைய நாளாக் காணோமே?ன்னு கேக்கலே.. ஏற்கெனவே நிறையப்பேரு கேட்டுட்டாங்க.. இதுக்கு மேலயும் கேட்டா நீங்க அழுதுருவீங்க!! :O))

    அலுவலகத்திலே ப்ளொகருக்குத் தடையா? ஐயய்ய.. எழுத்து/கருத்து சுதந்திரத்தை மதிக்கிற நிறுவனமில்லைங்களா உங்களுது? என்ன அநியாயமா இருக்கு!(அப்பாடா.. கிளறியாச்சு!! ;O)))

    -'மழை' ஷ்ரேயா

    பதிலளிநீக்கு
  26. சன், ஓகை, உஷா, அருட்பெருங்கோ,

    கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி!

    உஷா, பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்! :)

    தருமி சார், உங்கள் வரம் பலிக்கக் கடவது! :)

    செல்வராஜ்.

    நன்றி!

    // மறுபடி எப்போ தலை காட்டுவீங்க? :-) // ஆனாலும் இது ஓவர் அநியாயம்! நான் கேக்கறதுக்கு முன்னால நீங்க முந்திக்கிட்டீங்களா?! :)

    குமரன்,

    படிங்கப்பு! ஏதாச்சும் தப்பா இருந்தா மண்டைல குட்டுங்க! ( எழுத்துப்பிழைகளுக்கு தவிர! அந்த விசயத்துல என்னை திருந்த முடியாது! :) )

    பதிலளிநீக்கு
  27. ஷ்ரேயா,

    வரணும்! :)))

    // எழுத்து/கருத்து சுதந்திரத்தை மதிக்கிற நிறுவனமில்லைங்களா உங்களுது? என்ன அநியாயமா இருக்கு! // அந்த விசயத்துல அங்க ஆபீசை அடிச்சுக்கவே முடியாது! ஆனா நான் இப்ப இருக்கறது க்ளையண்ட் ஆபீஸ்லங்க! வாடிக்கையாளர் சட்டங்களையாவது மதிக்கலாம்னு.. ஹிஹி..

    பதிலளிநீக்கு
  28. இளவஞ்சி
    நல்ல சுடர் பதிவு. தருமி உங்களை அழைப்பார் என்றூ நினைத்திருந்தேன். அவருடைய பதிவொன்றில் உங்கள் பின்னூட்டம் பார்த்த போது. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  29. தருமி சார், உங்கள் வரம் பலிக்கக் கடவது! :)

    ஆனா பாருங்க அதில your அப்டின்னு போடறதுக்குப் பதில் you அப்டின்னு போட்டுட்டேன். மன்னிச்சுங்க'பா !!:(

    பதிலளிநீக்கு
  30. அருமையா எழுதிறீங்க. இரண்டு வார்த்தைதான் அது. ஆனா முழுமையான உண்மை.

    ஏன் எழுதிறதில்ல இப்பல்லாம்?
    சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் எழுதவும்! :)

    இளவஞ்சியை எழுத வைத்த சுடர் வாழ்க வாழ்க! :)

    பதிலளிநீக்கு
  31. தீவட்டி தடியரே! சுடரை நல்லா ஏத்தியிருக்கீங்க. நல்லா இருக்கு. மூணாவது கேள்விக்கான பதிலைப் பாத்தா நீங்க என் வயசு இருப்பீங்க போல இருக்கே. நான் உங்களை அண்ணன்னு நெனச்சேனே.

    //ஆனா வயசாக வயசாக, நாலு அனுபவங்கள் கிடைக்கறப்ப, 20 வயசுல நான் ஆணித்தரமான அசைக்கமுடியாத உறுதிகளோடு மணிக்கணக்கா பொங்கல் போட்டு சண்டையிட்ட கருத்துக்களெல்லாம் 30களிளேயே பல்லிளிப்பதை காணும்போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் பயமாகவும் தான் இருக்கு//

    இது உண்மை. (அப்ப மத்ததெல்லாம் பொய்யான்னு கேக்கக்கூடாது பார்த்திபன் மாதிரி)

    போன பின்னூட்டத்துல நான் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் யாருமே பதில் சொல்லலை?

    பதிலளிநீக்கு
  32. நல்ல கருத்துக்களை, சுவைபட, படிக்க அலுக்காமல் அருமையாக எழுதுகிறீர்கள் அடிக்கடி வந்தாலென்ன. தருமி சார் ஒரு கேள்வியை குறைச்சுட்டாரே என்று வருத்தமாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. பத்மா அரவிந்த், மதுரா,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! அடிக்கடி வர முயற்சி செய்யறேங்க! :)

    குமரன்,

    // நான் உங்களை அண்ணன்னு நெனச்சேனே //

    இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா?! தமிழ்மணத்துல அஞ்சலிக்கு அப்பறம் இளமையான பதிவர் நாந்தாங்கறது உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு? :)

    சின்ன வயசுல எங்க பாட்டி உடம்புலையும் கண்ணுலயும் ஒரு லிட்டரு வெளக்கெண்ணை விட்டு சூடு பறக்க தேச்சுவிட்டு என்னை டார்ச்சரு செஞ்சது மட்டும் ஞாபகம் இருக்கு! ஆனா வாத்தியாருங்க கண்ணுல வெளக்கெண்ணை விட்டு திருத்துவாங்க அப்படிங்கறதெல்லாம் ஒரு எகனை மொகனைங்க! ஆனாலும், நீங்க வரவர அநியாயத்துக்கு ஆராய்ச்சி செய்யறீங்க! :)

    சுல்தான்,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  34. யாத்ரீகன்,

    எனக்கென்ன குறைச்சல்! நல்லாத்தேன் இருக்கேன்! அங்கன என்ன விசேசம்? :)

    பதிலளிநீக்கு
  35. //"With Great Power, Comes Great Responsibility"//

    நல்லா நச்சுன்னு இறக்கிருக்கீங்க. எனக்கும் புது ஆபீஸ்ல பிளாக் கட் :-(

    பதிலளிநீக்கு
  36. //இப்ப சொல்லுங்க விநாயகரை நம்பறதா வேண்டாமா? :)//

    பாரதியார் யுனிவர்சிட்டிய நம்புனா போதுங்க...ஏன்னா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் விடிய விடிய படிச்சு எழுதுனவன் எல்லாம் பெயில்...என்ன மாதிரி தூங்கிட்டு இருந்தவன போற வழில கூட்டிட்டு போய் நானும் முட்டை புரோட்டா எப்படி பண்ரதுனு எழுதி வெச்சேன்...52 மார்க் :-)

    பதிலளிநீக்கு
  37. உதய், வரணும்!

    // எனக்கும் புது ஆபீஸ்ல பிளாக் கட் :-( // செட்டில ஆயாச்சா!? சந்தோசம்!

    ஷ்யாம், எங்க ரொம்பநாளா ஆளைக்காணோம்?! (அப்பாடா! முந்திக்கிட்டேன்! :) )

    // பாரதியார் யுனிவர்சிட்டிய நம்புனா போதுங்க.. // என்ன அநியாயம் பாருங்க! எனக்கு இந்த ரகசியம் கடைசி செமஸ்டருல தான் தெரிஞ்சது! :(

    பதிலளிநீக்கு
  38. Very Impressive come back...Please write regularly..Don't forget us..U have lots of fans like me..

    பதிலளிநீக்கு
  39. Chinnasr,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்! :)

    பதிலளிநீக்கு
  40. சிறந்த பதிவு, யதார்த்தமான கருத்துக்கள் . சாதி பற்றிய உங்கள் கண்ணோட்டத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  41. chellam i love u...


    though one side all
    cry ,and bark at the sun
    superstar the movie has
    made records and records
    ..keeping shouting like
    frogs in wel.....thanks for
    speaking more about our
    boss than us....
    rajini veriyan

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு