முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெரகம் முடிஞ்சது! அடுத்தது க.க தான்... :)


ண்பர்களுக்கு,


என் நலன் மீது அக்கறை கொண்டு "எதற்காக அப்படியொரு பதிவு எழுதினீர்கள்? இளவஞ்சியா இப்படி?" என அக்கறையோடு விசாரித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்! உங்கள் தனிப்பட்ட மடல்களுக்கு என்னுடைய பதிலாக இதனை வைத்துக் கொள்ளுங்கள்.

குசும்பன் அவர்களுடைய பதிவில் அதற்கான விளக்கங்களை அளித்து விட்டேன்! "இதெல்லாம் உங்களுக்கு தேவையா? நீயும் இப்படியா?!" என்பது முதற்கொண்டு இடித்துரைத்த நண்பர்களுக்கும், உங்கள் மீது தவறான அபிப்பிராயம் கொண்ட நண்பர்களுக்கு உங்கள் நிலைப்பாடு புரியவேண்டும் என கேட்டுக் கொண்டதற்காகவும் அவர்களுக்கு இட்ட பதிலினை இங்கேயும் இடுகிறேன்! "இளவஞ்சி சரியாகத்தான் செய்திருக்கிறான்" அல்லது "ச்சே..இவனும் இவ்வளவுதானா?!" என்ற எந்த நிலைப்பாட்டை படிக்கும் நீங்கள் எடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சி! அவ்வளவே! இதற்குப் பிறகு என்னிடம் இதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை! சொல்லவும் மாட்டேன்! ஆகவே... அடுத்தது க.க தான்! பயப்படாதீகப்பு! :)

****

"குசும்பனுக்கும் PKSக்கும் சில விளக்கங்கள்...

குசும்பன் /PKS,

முதலில் ஒரு நாய் வண்டியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக திரிந்து நாய்களைப்பிடித்து வந்து நாய்க் கண்காட்சி வைக்காமல் பெயரைச் சொல்லி முகத்தில் குத்திய உங்கள் நேர்மைக்கு என் வந்தனங்கள்!

இதை எழுதுவதற்கான ஒரே காரணம் "பாஸ்டன் பாலாஜி, இகாரஸ் ப்ரகாஷ், பத்ரி சேஷாத்ரி, உஷாஜி போன்றோர் இளவஞ்சியிடம் கேட்டுச் சொன்னால் நல்லதுதான்" என்ற வரிகள்தான்! அவர்கள் என்னை கேட்கப்போவதில்லை. ஆனாலும் சிலவற்றை சொல்லவதன் மூலம் அவர்களுக்காவது என் அயோக்கியத்தனமான அங்கதத்தில் சொல்ல வந்த உணர்வுகள் புரியுமென்ற நம்பிக்கைதான்!

எனக்கும் இளவஞ்சிக்கும் என்ன தொடர்பு? எதற்காக என்னைத்தாக்கி பதிவிடுகிறார்? நான் என்றைக்காவது அவரைத் தாக்கியதற்கான சுட்டிகளை கொடுக்கமுடியுமா? என்ற கேள்விகளுக்கான பதில்களை தேடும்முன் உங்களுக்கு அதே கேள்விகளை இங்கே வைக்கிறேன்! இத்தனை நாட்கள் நீங்கள் அங்கதம் என்ற பெயரில் அனைவரையும் போட்டுத்தாக்கும் பதிவுகளைப் போட்டதில் எத்தனை பேர் உங்களோடு தொடர்புடையவர்கள்? எத்தனை பேர் உங்கள் மீது கொண்ட வன்மம் காரணமாக உங்களை அவதூறாக தாக்கி பதிவிட்டிடுக்கிறார்கள் என்பதற்கான சுட்டிகளை என் பார்வைக்கு அளிக்க முடியுமா? உங்களைப்பற்றி அங்கதம் என்ற பெயரில் அவதூறாக பதிவிடுவதற்கு உங்களையும் உங்கள் கருத்துக்களையும் பிடிக்காமல் இருந்தாலே போதும்! இதுபோல போட்டுத் தாக்கிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்! நாமெல்லாம் செய்து கொண்டிருப்பதைப்போல. போட்டுத்தாக்கிய ஒரே ஒரு பதிவின்மூலம் உங்கள் தரமெல்லாம் இறங்கி என்னை கிழிகிழியென கிழித்து பதிவுகள் இடும் அளவுக்கு உங்களுக்கு கோபம் வருகிறதே? உங்கள் அங்கதத்தின் மூலம் பாதிப்பான மற்றவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என்று என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்களைப்போல பதிலுக்கு வார்த்தைகளின் மூலம் விளையாட வக்கில்லாமல் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் அவர்களது இயலாமைதான் உங்கள் பலமா?

அதெல்லாம் அங்கதம்.. அதனால் பாதிக்கப்பட்டதாக யாரும் எனக்கு சொன்னதில்லை. ஆனால் நீ செய்தது அவதூறு என்பீர்களேயானால் உங்களது அங்கதம் பற்றிய அளவுகோலை இங்கே அனுப்பி வைப்பீர்களானால் நன்றியுடையவனாக இருப்பேன்! நானும் அடுத்தவர் வாயைத்திறந்து சொல்லக்கூட முடியாத அளவுக்கு, என் நரகல் நடையை மாற்றிக்கொண்டு நாசூக்காக பிடிக்காதவர்களை குத்திக்கொண்டே இருப்பேன்! நிர்வாகியாக இருந்துகொண்டே வலைப்பதிவாளன் என்று எழுதியது என பல்டி அடிக்கிறாயே என்றால் என்ன சொல்வது? உங்களுக்கு எப்படி நீங்கள் மகிழ்சியாக இல்லமலேயே அந்த பதிவுகளை எழுத முடிந்தது!? அதுபோலத்தான் இதுவும்!

மேலும் சிலவற்றை சொல்வதற்கு முன்பாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்...

1. "இந்த பதிவு யாரையாவது குறிப்பிட்டால் அது தற்செயல்தான்..." என்ற ஒரு வரியை கடைசியில் போட்டுவிட்டால் யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?

2. "நையாண்டியை இன்சல்ட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்பதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன? "இது எனக்கும் நகைச்சுவைதான்" என்று யாரைக்குறித்து எழுதப்பட்டதோ அவன் சொல்ல வேண்டுமா? இல்லை எழுதறவனே "நான் உன்னைப்பற்றி கேவலமாக எழுதுனதுக்கெல்லாம் இன்சல்ட் ஆகாத மகனே! நகைச்சுவை உணர்வை வளர்த்துக்க" அப்படின்னு எழுதறவன் சொல்லனுமா?!

3. பேரை கொஞ்சம் மாத்தி என்ன வேணா எழுதலாம்! அது தனிமனித தாக்குதலாகாது என்பதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?

கடைசியில் கண்ட டிஸ்க்ளெய்மரை பார்த்தீர்களா? "இது யாரையாவது குறிப்பிட்டால் தற்செயல்தான்" என தெளிவாக சொல்லிய பிறகும் ஏன் நீங்கள் உங்களை குறிப்பதாக எடுத்துக்கொள்கிறீர்கள்? உங்களை பாதிப்பதாலா? உங்களைப்போல நேரடியாக முகத்தில் குத்தாமல் ஒரு நாய் வண்டியை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக நாய்பிடிக்க அலையவைத்தது இந்த டிஸ்க்ளெய்மரில் உள்ள அயோக்கியத்தனத்தை உணர்ந்திருப்பதால் தானே?! ஒருவன் கவிஞன் ஆக ஆசைப்படுகிறேன் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவனை காத்துவாயன் என்று கண்டுபிடிக்கிற அளவுக்கு அவன் மீது உங்களுக்கு என்ன காண்டு? ஒருவர் நான் எழுத்தாளராக வரவிரும்புகிறேன் என்று சொன்னால் "3000 பேரு படிச்சா நீயெல்லாம் எழுத்தாளனா?" என்று ஷகிலா போஸ்டரை பார்த்த கணக்கோடு வருவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? இவர்களை விட அதிகமாக 90000 பேர் பார்த்ததன்மூலம் இப்படி மற்றவரை தூற்ற உங்களுக்கு உரிமையும் தகுதியிருக்கிறது என்றா? ஒருவரை அவ்ரது உருவத்தை வைத்து காயப்படுத்துவதற்கு வேண்டிய தினவை உங்களுக்கு கொடுப்பது எது? நீங்கள் உங்கள் முகத்தை மறைத்திருக்கும் தைரியம்தானே? எங்கே உங்கள் படத்தையும் போடுங்களேன் பார்ப்போம்? மற்றவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் அறியலாம்!

தேன்கூடு பற்றி சொல்லியதெல்லாம் நீங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் "முதுகு சொறிதல்" என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டை சொல்வதற்காகதான்! உச்சகட்டம் மற்றும் உங்கள் கதையைப்பற்றி சொன்னதெல்லாம் போகிற போக்கில் போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான்! அங்கதம் என்று எழுத ஆரம்பித்த பிறகு சொல்லும் கருத்தில் லாஜிக் எல்லாம் பார்க்க முடியுமா என்ன? எதைச் சொன்னால் எதிராளி மனதளவில் காயப்படுவான், கோபம் பீரிட்டுக் கிளம்பும் என குறிபார்த்து அடிப்பதுதான்! இத்தனை நாள் அங்கதம் எழுதும் உங்களுக்கு இது புரியவில்லை என விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வது? இரண்டாவதான நாய்ப்பதிவு கண்டிப்பாக, சத்தியமாக, உண்மையாக உங்களைப்பற்றியது இல்லை! ரெண்டு ரூவா இருந்தா கொடுங்க(என் குடும்பத்துக்கே ப்ளைட் டிக்கெட் வாங்கித்தறவுக நீங்க..ரெண்டுரூவா கொடுக்கமாட்டீங்களா என்ன? :) ) கற்பூரம் வாங்கி வந்துகூட சத்தியம் செய்கிறேன்! ஊரெல்லாம் தேடித்தேடி பார்த்தாலும் நாய்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பார்வைக்குறைபாடுள்ள ஒருவருக்கு அவரது நிலையை விளக்கும் பதிவு அது!

அந்த இரண்டு பதிவுகளையும் எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாயிற்று? 30 நிமிடங்கள்?! எனக்கு 40 நிமிடங்கள்! அவ்வளவே! இதுபோன்ற அயோக்கியத்தனமான அங்கதங்கள் எழுதுவதற்கு அறிவுஜீவித்தனமோ இல்லை புத்திசாலித்தனமோ தேவையில்லை! மூளையில் கொஞ்சம் மடங்கல் இருந்தால் போதும்! போகிற போக்கில் போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்! இப்பகூட ஒன்று சொல்கிறேன் பாருங்க! "வழிப்போக்கன்: போகிற வழியெல்லாம் வயித்தால போறவன்!" அவ்வளவுதான் இதற்கு என்ன திறமை வேண்டும் என நினைக்கிறீர்கள்? இப்படியும் அப்படியும் மடக்கியும் மாற்றியும் திரித்தும் எழுதப்படும் சொற்களை வைத்து மற்றவர்களது சின்னச்சின்ன குறைகளை பெரியதாக மாற்றி அடுத்தவன் உணர்வுகளை மதியாமல் அவர்களை அலங்கார, அதீத, அங்கத சொற்களால் அடித்து வீழ்த்தி அவர்களை வாய்திறவாமல் செய்வதில் இல்லை திறமை! இவ்வளவு இருந்தும் தெரிந்தும் அவைகளை பிடிக்காதவர்கள் மீது ஏவாமல் அவர்கள் கருத்தையும் மதிப்பதில் உள்ளது நமது திறமைகளின் மீதான நமது நம்பிக்கை!

"இத்தனை பேர் கருத்துச்சொல்லியும் என்னை மட்டும் அவதூறு செய்தது ஏன்?" எனக்கேட்டும் PKSக்கு.. அது அங்கே இருந்த மண்ணாந்தைகளில் உங்களை மட்டும் ஆந்தையாக பார்த்தால்கூட இருக்கலாம்! நையாண்டியை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உங்களது கருத்து நிஜமாகவே புல்லரிக்க வைத்தது! அப்படிப் பார்த்தால் எனது பதிவுகூட ஒரு வைகையான Black Humour தான்! இதுமட்டும் ஏன் உங்களுக்கு நகைச்சுவையாக தெரியவில்லை? உங்களைப் பாதித்ததாலா? அங்கு படித்ததில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என எனக்கு தெரியாது. அதைத்தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று சொல்வீர்களானால் ஏன் என் பதிவில் உள்ள ஆழமான நகைச்சுவையை உங்களால் உணரமுடியவில்லை! உங்கள் உணர்வுகள் காயப்பட்ட ஒரே காரணத்தாலா? காத்துவாயன், பொறுக்கிகள் என குறிப்பிட்ட ஒரு ஆட்களை மட்டும் தாக்கப்பட்டபோது நீங்கள் ரசித்து சிலாகிக்கும் அளவுக்கு உயர்ந்து இருந்த அந்த நகைச்சுவை உணர்வு ஏன் என் பதிவினை படிக்கும் போது இல்லை? நம்மை பற்றிச்சொல்லும்போது நமது நகைச்சுவை உணர்வுகளை இழுத்துப்பூட்டி வைத்துவிட வேண்டுமா என்ன? "அடுத்தவனை கேவலப்படுத்தும்போது கைதட்டி சிரிக்கறயா.. இரு.. இரு.. உன்னை சொல்லும்போது என்ன செய்யற பார்க்கறேன்" என்ற சிறுபிள்ளைத்தனமான கோபத்தின் வெளிப்பாடே உங்களைப்பற்றி சொல்லியது! பார்க்கப்போனால் அந்த பதிவே ஆத்திரம் கண்களை மறைக்க இவனுங்களை எப்படியும் காயப்படுத்தி விடவேண்டும் என்ற வெறியுடன் எழுதப்பட்டதுதான்!

பலியாடு, பலியாடு என்று என்னவோ என் தலைவெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிப்பதுமாதிரியான பில்ட்டபுடன் என்ன நிறுவ முயல்கிறீர்கள்? நீங்களெல்லாம் சுயசுந்தனையுடைய பிரம்மாக்கள் என்றும் உங்களை தாக்கி ஒரே ஒரு பதிவிட்டதால் என்னையெல்லாம் உலகெங்கிலும் இருந்து தூண்டிவிடுகிறார்கள், சதி செய்கிறார்கள், அடியாளாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றா? ஒரு பதிவுக்கே நீங்கள் இத்தனை கற்பிதங்கள் கொடுக்கமுடியும் எனில் இத்தனை நாள் நீங்களெல்லாம் போட்டுத்தாக்கிய பதிவுகளுக்கு எத்தனை பேர், எத்தனை நாடுகளில் இருந்து எத்தனை நாட்கள் உங்களை தூண்டி, மூளைச்சலவை செய்து அடியாளாக உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது!

உங்களது தவறுகளை எடுத்துச்சொல்ல உங்களுக்கு இருக்கும் நண்பர்களை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது! அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இதுபோல அங்கதம் என்ற பெயரில் அடுத்தவரை போட்டுப்பார்க்கும் பதிவுகளை படிக்கும்போது தலையில் குட்டி கண்டிக்கவில்லையெனினும், படித்து விட்டு அன்னப்பறவைபோல அதிலிருக்கும் நகைச்சுவையை மட்டும் மனதார பாராட்டிவிட்டு நடையைக் கட்டாமல் நண்பன் என்ற உரிமையிலாவது "இது தவறு" என்று ஒரு முறை சொன்னீர்களானால், அடுத்தமுறை இதுபோன்ற கருத்துக்களால் மோதிக்கொள்ள முடியாமல் அங்கதம் என்ற பெயரில் மறைந்து அடுத்தவரை அடித்து வீழ்த்தும் அயோக்கியத்தனமான பதிவுகளை எழுதும் முன், சக வலைப்பதிவாளர்கள் மீது மரியாதை இல்லையெனினும் உங்கள் மீதுள்ள மரியாதைக்காகவது இதுபோல எழுதுவதற்கு முன்பு ஒரு முறை யோசிப்போமல்லவா?! தயவு செய்து இனி இதனை செய்யுங்கள்!

நீங்கள் மதிக்கும் நண்பர்களின் மீது எனக்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது! அவர்களையும் என் நண்பர்களாகத்தான் நினைக்கிறேன்! ஆகவே என் பதிவிலிருக்கும் ஆத்திரம் கண்களை மறைக்க தாக்கியே ஆகவேண்டும் என எழுதிய பகுதிகளை மகிழ்சியுடன் எடுத்துவிடுகிறேன். அப்ப மிச்சமிருக்கிறது என்ன எங்கிறீர்களா! எப்படி உங்கள் பதிவுகளை நீங்கள் அங்கதம் என்று நம்புகிறீர்களோ அது போல நிஜமாகவே எனக்கு அது அங்கதம் தாங்க! :) அதில் ஏதேனும் வருத்தமிருப்பினும் சொல்லுங்கள்! நீக்கிவிடுகிறேன்!

இந்த பதிலையும் நீங்கள் வரிக்கு வரி ஆராயலாம்! சொல்லுக்கு சொல் திருப்பிப்போட்டு அடிக்கலாம்! அதைப்பற்றி எனக்கு வருத்தமில்லை! இதனை ஒரு தனிப்பதிவாக் போட்டு நாலுபேர் குழாயடிச்சண்டை என சொல்வதிலும் விருப்பமில்லை! எனவே பின்னூட்டமாக அளிக்கிறேன்! மேலும் ஏதேனும் கேள்விகள் இருப்பினும் கேளுங்கள்! பதிலிருந்தால் தருகிறேன்! இலக்கிய இணைய அரசியல்களின் மீதான எனது அறிவு எனது ஏதேனும் ஒரு பதிவைப் படித்தாலே உங்களுக்கு விளங்கிவிடும்! பொய்சொல்வதற்கோ, புரட்டு பேசுவதற்கோ, இமேஜ் பில்டப்புக்கோ நான் என் பதிவுகளை பயன்படுத்துவதில்லை! ஆகவே, இங்கே சொன்னவற்றை எப்படி எடுத்துக்கொள்வது என்பது உங்களுடைய விருப்பம்! திராவிட கலரின்மீது 5 நிமிடம் கால் போட்டதையே மறைக்காமல் எழுதுகிறவனுக்கு இதெல்லாம் மறைக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் மகிழ்வேன்!"

கருத்துகள்

 1. இளவஞ்சி,
  தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் .தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு அடுத்தவரை கேலியும் கிண்டலும் செய்வதிலேயே பேரானந்தம் பெறும் கூட்டம் கொஞ்சமாவது உணர்ந்தால் நல்லது . "நீ எந்த அளவையால் அளக்கிறாயோ ,அதே அளவையால் உனக்கும் அளக்கப்படும் ' என்ற பைபிள் வரிகளை இந்த மேதாவிகள் உணரட்டும் .அங்கதமோ ,என்ன கர்மமோ அளவுக்கு மீறினால் நஞ்சு தான் என்பது இப்போதாவது சிலரின் மூளைக்கு எட்டும் என நினைக்கிறேன் .தான் எழுதுகிற மொழியையே கூட 'மயிர்' என்றெழுதி அதையும் அங்கதமாக நிறுவ வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் .தாய் மீது கொண்ட பற்றைக்கூட அங்கதம் செய்து சுகம் காணும் அற்ப சிந்தனை .திருந்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை .கொஞ்சம் உறைத்தாலே போதும்..உங்கள் பாணியிலிருந்து வேறுபட்டு அதிருப்தியை சம்பாதிக்கும் என அறிந்தும் நியாய உணர்வோடு தட்டிக்கேட்ட உங்களுக்கு கோடி வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 2. //திராவிட கலரின்மீது 5 நிமிடம் கால் போட்டதையே// இந்த மேட்டரு எவத்த வருதுன்னு ஒரு சுட்டிய போட்டு காட்டகூடாதா.. தேட சலிப்பா இருக்குது அதான்.. எப்படியோ நம்ம கண்ணுல இருந்து தப்பிச்சிருச்சு :)

  பதிலளிநீக்கு
 3. இதை ஜால்ரா என்று சொன்னாலும் சரி,இளவஞ்சி உங்களுடைய கேள்விகள் மிகச்சரியானது, அதற்கு பதில் எதிர்பார்க்க முடியாது அவர்களிடமிருந்து என்றாலும் சுற்றி சுற்றி நீளமாக எழுதி குழப்புவார்கள் என்பதைத்தவிர நேரடி பதில் கிடைக்காது.

  //போட்டுத்தாக்கிய ஒரே ஒரு பதிவின்மூலம் உங்கள் தரமெல்லாம் இறங்கி என்னை கிழிகிழியென கிழித்து பதிவுகள் இடும் அளவுக்கு உங்களுக்கு கோபம் வருகிறதே? உங்கள் அங்கததின் மூலம் பாதிப்பான மற்றவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என்று என்றைக்காவது நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்களைப்போல பதிலுக்கு வார்த்தைகளின் மூலம் விளையாட வக்கில்லாமல் மனதுக்குள் குமைந்துகொண்டிருக்கும் அவர்களது இயலாமைதான் உங்கள் பலமா?
  //
  அவர்களின் நேர்மை, பொறுமை, கருத்துசுதந்திரம்,அங்கதம், எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களின் தரம் சந்திக்கு வந்துவிட்டது, இவர்கள் பேசுகிறார்கள் வேறு யாரோ அசிங்கமாக எழுதுகிறார்கள் என்று.

  பதிலளிநீக்கு
 4. காத்து கருப்பு பத்தி அறிவுரை கொடுக்கும் போதே நான் யோசிச்சிருக்கணும். விடுங்க தல...

  பதிலளிநீக்கு
 5. Hi Ilavanji,

  Well said....
  But, ithukku appurammum avanga ellam therunthinaal thaan undu...

  But...good move...atleast ur blog would have made them to think...

  SweetVoice.

  பதிலளிநீக்கு
 6. இவ்வளவு பெரிய விளக்கம் தேவையான்னு தெரியலை.. விளக்கத்திற்கு ஏதாச்சும் பலன் இருந்ததா?/இருக்குமா?

  "இளவஞ்சி சரியாகத்தான் செய்திருக்கிறான்" /"ச்சே..இவனும் இவ்வளவுதானா?!" ரெண்டுமே சொல்லத் தோணலை.. "இதெல்லாம் தேவையா? இதனால ஏதாவது மாறப்போகுதா?!!" - இது தான் இப்போவும் என் நிலைப்பாடு...

  பதிலளிநீக்கு
 7. இளவஞ்சி....மிகச் சரியாகக் கேட்டிருக்கிறீர்கள். சரியான முறையான வாதங்கள்.

  உங்களுக்கு ஒரு + போடத்தான் வந்தேன். ஆனா என்னோட ஓட்டை யாரோ ஏற்கனவே போட்டு விட்டார்கள். :-(

  யாராய் இருந்தால் என்ன...இந்தப் பதிவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. Make war when you have to. -இது என் பத்துக் கட்டளைகளில் ஒன்று.

  உங்கள் ரெளத்திரம் ...மிகவும் அழகு.

  "ஒருவரை அவ்ரது உருவத்தை வைத்து காயப்படுத்துவதற்கு வேண்டிய தினவை உங்களுக்கு கொடுப்பது எது? நீங்கள் உங்கள் முகத்தை மறைத்திருக்கும் தைரியம்தானே? " - ரொம்ப பிடிச்சிருக்கு.

  பதிலளிநீக்கு
 9. இளவஞ்சி சம்பந்தமில்லாமல் ஒன்று. உங்கள் சமீபகால பதிவுகளை கவனித்தவரையில், தற்சமயம் எழுத்தும் சிந்தனையும் நல்ல கோர்வையாக வருகிறது. நல்ல ஆக்கம் ஒன்றை செய்ய விருப்பப்படலாமே? கல்யாண கலாட்டாவையே ஏன் ஒரு குறு நாவல் வடிவில் விரித்து சம்பவங்களை சேர்த்து எழுதக்கூடாது?

  பதிலளிநீக்கு
 10. இளவஞ்சி,
  எனக்கு என்னவோ என்னதான் நீங்கள் விளக்கி சொன்னாலும் அவர்கள் மிகத்தெளிவாகவே இருப்பதாக தோன்றுகிறது.
  ///
  எனவே இதை பதில் கவிதை என்றெல்லாம் எண்ணாமல், கவிதையை பற்றிய உங்களின் விமர்சனங்களை வைப்பீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சர்ச்சைக்கு அப்பாற்பட்ட பார்வையிலும் இது தரம் குறைந்த கவிதையாக உங்களுக்கு தோன்றின், அப்படி நினைக்கவும் அதை வெளிப்படுத்தவும் உங்களுக்கு சகல உரிமையும் உண்டு... இக்கவிதையில் வரும் சில வார்த்தைகள் அப்பட்டமாயும் அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருப்பின், அது மூலத்தின் காரணமாயும் இக்கவிதைக்கு பொருந்தி வருவதாலுமே இருப்பதாய் நினைக்கிறேன். எதிர்காலத்தில் வேறு நளினமான வார்த்தைகள் கிடைத்து அது பொருத்தமாகவும் இருப்பின் அவற்றை பிரயோகப்படுத்துவதில் ஆட்சேபம் இல்லை

  ///
  எவ்வளவு அயோக்கியமானவன், நயவஞ்சகன் என்பதற்கு மேலே உள்ள பதிலைப் பாருங்கள். நம்மையெல்லாம் நாய்ன்னு திட்டுவானாம். ஆனால் அதை எத்தேச்சையாக நேர்ந்தது என்று எடுத்துக்கொண்டு அவன் கவிதையில் திருத்தங்கள் சொல்லனுமாம். இதைவிட அயோக்கியத்தனம் வேறு இருப்பதாக தெரியவில்லை.

  இப்படிபட்டவர்களிடம் நீங்கள் என்னதான் விளக்கிசொன்னாலும் அதை திரிப்பார்களே ஒழிய வேறு எதைப்பற்றியும் யோசிக்கமுடியாத அளவிற்கு விஷம் தலைகேறியிருக்கிறது. அதற்காக இதையெல்லாம் விட்டுவிட சொல்லவில்லை. அவ்வப்போது யாராவது ஒருவர் வேஷத்தை கலைக்க வேண்டியிருக்கிறது.

  சரி சரி சீக்கிரம் க.க 5 ஐப் போடுங்கள்.:-)

  பதிலளிநீக்கு
 11. இளவஞ்சி,

  நிறைய விஷயங்களைச் சுற்றி வளைக்காமல் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். (இதுவே அவர்களைப் பொறுத்தமட்டில் "திறமைக் குறைப்பாடுதான்!" மரத்துக்குப் பின்னால் இருந்து குறிபார்த்து அம்பு விடும் அவதார புருஷர்களல்லவா!)

  Restrain cannot be a one-way path; it has to be mutual and concilatory என்று வேறு ஒரு இடத்திலும் எழுதினேன் என்று நினைவு.

  எதிர்வினைகளை மேட்டிமைத்தனம் இல்லாமல் செய்வதற்கு யாராவது இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் தேவலை.

  பதிலளிநீக்கு
 12. பதிவுக்குத் தொடர்பில்லாத சந்தேகம்:
  சரியா நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தப் பதிவு "அண்மையில் மறுமொழியிட்ட இடுகைகளில்" தோன்றுவதற்கு என்ன காரணம்? அதுவும் அதே 8 பின்னூட்டங்களுடன்.. - அதாவது, நீங்க தூங்கும் நேரத்திலும்!!!

  பதிலளிநீக்கு
 13. //சரியா நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தப் பதிவு "அண்மையில் மறுமொழியிட்ட இடுகைகளில்" தோன்றுவதற்கு என்ன காரணம்? //

  பொன்ஸ்

  இது உங்களுக்கு கண்டிப்பா தெரியணுமா?

  பதிலளிநீக்கு
 14. //கெரகம் முடிஞ்சது! அடுத்தது க.க தான்... :) //

  எனக்கு பிடித்ததே இந்த தலைப்புதான் :-) எவனோ எப்படியோ நாசமா போனா என்ன, என் "கலர் கனவுகளை" 4 பேர் படிச்சா சந்தோஷம்ன்னு இருந்துட்டேன்...

  பொன்ஸக்கா, எனக்கும் அதே சந்தேகம்தான்... யாருமே பின்னுட்டமிடாத என் டுபுக்கு பதிவுகூட "அண்மையில் மறுமொழியிட்ட இடுகைகளில்" வரும் போது வாத்தியார் பதிவு வரலாம், தப்பில்லை... இதை வச்சு பிரச்சினை பண்ணி விட்டராதீங்க...

  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு, எதோ கோளாறு இருக்கு, என்னன்னு பாருங்க...

  பதிலளிநீக்கு
 15. இளவஞ்சி,

  நேர்மையான முறையில் கருத்துகளுக்கு விளக்கம் சொல்லி இருக்கின்றீர்கள்.

  உண்மையிலேயே இப்போதுதான் இங்கே என்ன நடந்தது என்று புரிகிறது.

  கொஞ்சம் ட்யூப் லைட்டா இருந்துட்டேனோ?

  பதிலளிநீக்கு
 16. ஆஹா,

  எனக்கு உண்மையிலே மேல் மாடி காலிதான் போலிருக்கு. இப்பதான் matter புரியுது.

  பதிலளிநீக்கு
 17. ilavanji,


  http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_26.html

  இது தொடர்பான விவாதங்களில் என் பெயரை ஒரு பதிவில் பார்த்ததால்

  பதிலளிநீக்கு
 18. இளவஞ்சி,

  தங்களுடைய முந்தைய சில பதிவுகளையும் பார்த்தேன். உங்களுக்கு ஆதரவாக தமிழினி வெளியிட்டுள்ள பதிவையும் பார்த்தேன். ஓரளவு விஷயம் புரிந்தாலும் வலைப்பூக்களின் வரலாறு மற்றும் பதிவர்களின் வரலாறு அதிகமாக அறியாதவன் என்ற காரணத்தினால் கொஞ்சம் குழம்பிப் போய் விட்டேன். அதே அளவுகோலின் படி எவ்விதக் கருத்தும் சொல்லத் தகுதி எனக்கு இல்லாமல் இருக்கலாம். அதையும் தாண்டி 'இங்கும் இப்படியா?' என மனது கனக்கிறது. மற்றபடி எந்த ஒரு தனி நபருக்கும்(பதிவருக்கும்) எதிரான பின்னூட்டமல்ல இது.

  பி.கு: இந்த மறுமொழியை நீங்கள் அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், எனக்குத் தோன்றியதை உங்களுக்குச் சொல்லவே எழுதப்பட்டது இது.

  - குப்புசாமி செல்லமுத்து

  பதிலளிநீக்கு
 19. //பொன்ஸ்
  இது உங்களுக்கு கண்டிப்பா தெரியணுமா? //
  முத்து, தமிழ்மண இணை நிர்வாகிங்கிற முறையில் இளவஞ்சி கிட்ட கேட்ட கேள்வி அது.. இந்தப் பதிவுல வேண்டாம்னா விட்ருங்க..

  பதிலளிநீக்கு
 20. இளவஞ்சி,

  உங்களது கேள்விகள் நியாயமானது! கேட்கப்படும் நபர்கள் கேள்விகளை கண்ணியமாக அணுகும் மனம் கொண்டவர்களா? வேடம்கட்டி ஆடும் கூட்டம் வெளியே வந்து பதில் சொல்லுமா? நரகல் நடையில் எழுதும் இதுகளை (எழுத்துப்பிழையல்ல) திருத்த முடியுமா இந்த கேள்விகளால்?

  பதிலளிநீக்கு
 21. இளவஞ்சி.,

  காயப்பட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது, இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள்... என நாசூக்காக சொல்லி விட்டு நடையக் கட்டலாம்தான்... ஆனால் முடியவில்லை . நம் உருவத்தை, நாம் எழுதுவதை... தமிழில் நாலு வரி நல்லா எழுதினோம் என்றாலே பொருள் புரிந்து கொள்ள தெரியாத கூட்டம் ஏளனம் செய்யும்., மேட்டிமை என கூறிவிட்டு நாம் ஒதுங்கிச் செல்ல வேண்டும். அறிவில், ஆற்றலில், நல்ல எண்ணத்தில் மேதமை கொண்டவர்கள்தான் மேட்டிமையாக இருக்க வேண்டும். ஒன்றுமில்லாத வக்கிர மனங்கள் மேதமையாக தம்மை நினைத்தால்., துப்ப நம் தரம் இடங்கொடா விட்டாலும்., வாய்விட்டு சிரிக்கவாவது செய்யுங்களப்பா...

  இந்தக் குசும்பன்., புண்படுத்திய மனங்கள் அதிகம். அதையெல்லாம் இங்கு காட்டினால் சம்மந்தப்பட்டவர்களே வந்து அதை நான் இரசித்தேன் என எழுதி விடக் கூடிய வாய்ப்புண்டு என்பதால்., என் சம்மந்தப்பட்ட ஒன்றை மட்டும் காட்டுகிறேன்.,

  **********பா: அப்டிப்போடு மோடி வித்தை காட்றாங்களா? சரி இந்த ரெட்டை ஐபீ முறை பத்தி தெரியுமா?
  வடி: (ஆஹா ரெட்டை டம்ளர் வெவகாரத்தை கெளர்றானே) என்னாது?
  பா: அட ஸ்டேடிக் ஐபீ வெச்சிக்க முடியல்லேன்னா அவனவன் டைனமிக் ஐபீ வெச்சிக்கணும். புரியுதா?
  வடி: அப்பாடி. இம்புட்டுதானா?
  பா: என்ன இம்புட்டுதானா? டைனமிக் தெரியாத டான்ஸர் ஸ்டேடியம் கோணல்ன்னு சொன்னாளாம்.
  வடி: டான்ஸரா? எங்க ஊர்ல வேற மாதிரியில்ல சொல்வாய்ங்க.
  பா: வேண்டாம் என் வாயைக் கிளறாதே. அப்புறம் போலியா ஏதாவது பேசிடப் போறேன்*********

  ///நீங்கள் அங்கதம் என்ற பெயரில் அனைவரையும் போட்டுத்தாக்கும் பதிவுகளைப் போட்டதில் எத்தனை பேர் உங்களோடு தொடர்புடையவர்கள்?//

  எனக்கும்., கும்புக்கும் 100 வருட தொடர்பு போல.... அந்த உரிமையில் அங்கதம் பண்ணியிருக்கிறது.... நம்மிடமிருந்து மறைந்து போன எழுத்தை மீண்டும் எழுதிப் பார்க்கலாம் என வந்தால், கண்டவன்களும்., நமக்கு பட்டமளிப்பு விழா நடத்துறாய்ங்க ... இது இவர்களின் வளர்ப்பை காட்டுவதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். நேரடியாக அருவருப்பான வார்த்தைகள் எழுதுபவர்களை எளிதாக ஒதுக்கி விடலாம். ஆனால் இத்தகைய வக்கிர மனங்கள்... ஆபத்தானவை (என்னைக் குறிப்பிட்டதற்காக சொல்லவில்லை... தயவு செய்து அனைவரும் புரிந்து கொள்ளவும்... மீண்டும் திருப்பித் தாக்கி பதிவெழுதிவிட்டு போக அரை மணி நேரம் ஆகாது... ). அருவருப்பான வார்த்தையை எழுதுபவர்களை பின்பற்றி அதுபோல் எழுத யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் இம்மாதிரி அற்ப சொறிதல், தன் எரிச்சலின் மீது எழுத்தை ஊற்றுதல்... தரும் சுகம் நிறைய பேரைப் பாதிக்கும்., அவ்வெழுத்து நோக்கி இழுத்துச் செல்லும்., சமூக நன்மைக்காக கருத்துக்களை எதிர்ப்பவர்களைக் கூட எளிதாக முக்காடு போட்டுத் தாக்க வைக்கும்., என்பதில் இங்கு உள்ள யாருக்கும் மற்று கருத்து இருக்க முடியாது.

  //ஒருவரை அவரது உருவத்தை வைத்து காயப்படுத்துவதற்கு வேண்டிய தினவை உங்களுக்கு கொடுப்பது எது? நீங்கள் உங்கள் முகத்தை மறைத்திருக்கும் தைரியம்தானே? " - //

  இது ஒன்றுமட்டுமல்ல...!!!. பின்னால் கூட்டமிருக்கும் துணிவு. கேட்க ஆளில்லாத துணிவு. அப்பப்ப இரண்டு பர்ஸ்னாலிட்டில ஒண்ணு விழித்துக்கொண்டு இலங்கை, மலேஷ்யான்னு ஓநாய் கண்ணீர் பதிவெழுதும்... ஆனால் இவைகளின் நிரந்தர பெர்ஸ்னாலிட்டி இதுதான். 10 வருடம் இணையத்துல வாந்தி எடுத்துகிட்டு இருந்தா... எதிர் வருபவர்கள் மேல் எல்லாம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் போல் உள்ளது.

  //அல்லது உங்களைப்போல பதிலுக்கு வார்த்தைகளின் மூலம் விளையாட வக்கில்லாமல் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் அவர்களது இயலாமைதான் உங்கள் பலமா?//

  அற்பமாக எழுத ஒரு வக்கு தேவையா?. தரம் தாழ விரும்பாமல் பேசாமல் இருப்பவர்கள்தான் அதிகம்.

  //அந்த இரண்டு பதிவுகளையும் எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாயிற்று? 30 நிமிடங்கள்?! எனக்கு 40 நிமிடங்கள்! அவ்வளவே! இதுபோன்ற அயோக்கியத்தனமான அங்கதங்கள் எழுதுவதற்கு அறிவுஜீவித்தனமோ இல்லை புத்திசாலித்தனமோ தேவையில்லை! மூளையில் கொஞ்சம் மடங்கல் இருந்தால் போதும்! போகிற போக்கில் போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்! // //இப்படியும் அப்படியும் மடக்கியும் மாற்றியும் திரித்தும் எழுதப்படும் சொற்களை வைத்து மற்றவர்களது சின்னச்சின்ன குறைகளை பெரியதாக மாற்றி அடுத்தவன் உணர்வுகளை மதியாமல் அவர்களை அலங்கார, அதீத, அங்கத சொற்களால் அடித்து வீழ்த்தி அவர்களை வாய்திறவாமல் செய்வதில் இல்லை திறமை! இவ்வளவு இருந்தும் தெரிந்தும் அவைகளை பிடிக்காதவர்கள் மீது ஏவாமல் அவர்கள் கருத்தையும் மதிப்பதில் உள்ளது நமது திறமைகளின் மீதான நமது நம்பிக்கை!//

  இவையெல்லாம் சுரணை இருப்பவர்களுக்கு மட்டுமே போதிக்கப் பட வேண்டியவை. மீண்டும் எதையாவது அங்கதம் செய்து., இப்படி எழுதிய உங்களைத் தாக்கி இன்னும் 10 பதிவு வரவில்லையென்றால் நீங்கள் 'புண்ண்ண்ணியம் :) :)' செய்திருக்கிறிர்கள் என அர்த்தம்.

  இந்தக் கெரகங்களெல்லாம்... முடியவே முடியாது சாமி....!!. நேரத்துக்காக காத்திருக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 22. //உங்கள் சமீபகால பதிவுகளை கவனித்தவரையில், தற்சமயம் எழுத்தும் சிந்தனையும் நல்ல கோர்வையாக வருகிறது. நல்ல ஆக்கம் ஒன்றை செய்ய விருப்பப்படலாமே? கல்யாண கலாட்டாவையே ஏன் ஒரு குறு நாவல் வடிவில் விரித்து சம்பவங்களை சேர்த்து எழுதக்கூடாது? //

  கார்த்திக் சொன்னதை நானும் வழிமொழிகிறேன் :)).

  பதிலளிநீக்கு
 23. அப்டிப்போடு அவர்களின் ஆதங்கம் நியாயமானது. ஒரு கட்டத்தில் நீங்கள் போட்டுத் தாக்கிய கூட்டத்தினரைத் தவிர 'கேன்ஸ்' அல்லது 'கேனபீடம்' என்று பெயருள்ளவரும் 'நீ காற்று நான் மரம்' என்று ஒரு போஸ்ட் போட்டு தான் யார் என்று நிரூபித்தார்.

  இம்முறை கவனமாக ஆரிய திராவிட உதடு என்றும் ஆரியா-திராவிட் பேட்டி என்றும் திறமையாகத் திசை திருப்பினார். அதையும் தாண்டி கேவலமான ஒரு திமிசுக்கட்டைப் பாட்டையும் போட்டு தன்னாலான விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்.

  அதன்பின்னர் வந்ததைய்யா ஒரு பதிவு ஜெய்ஹிந்த் என்று. இதைத்தான் அப்டிப்போடு அவர்கள் சரியாக இனம் காட்டினார்கள்....

  //இது ஒன்றுமட்டுமல்ல...!!!. பின்னால் கூட்டமிருக்கும் துணிவு. கேட்க ஆளில்லாத துணிவு. அப்பப்ப இரண்டு பர்ஸ்னாலிட்டில ஒண்ணு விழித்துக்கொண்டு இலங்கை, மலேஷ்யான்னு ஓநாய் கண்ணீர் பதிவெழுதும்... ஆனால் இவைகளின் நிரந்தர பெர்ஸ்னாலிட்டி இதுதான். 10 வருடம் இணையத்துல வாந்தி எடுத்துகிட்டு இருந்தா... எதிர் வருபவர்கள் மேல் எல்லாம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் போல் உள்ளது. //

  இளவஞ்சி இதனை நீங்கள் அனுமதித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, என் மனதில் பட்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியதால் எழுதி விட்டேன்.

  சிரமத்திற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 24. அப்டிப்போடு,

  உங்களைப் பற்றிய 'அங்கதம்' என்ற போர்வையில் செய்யப்பட்டது அப்பட்டமான பொறுக்கித்தனமே.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு