முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுய மதிப்பீடுகள்...

Source:http://www.graffiti.org/toro/respect.jpg
நீங்க என்னைக்காவது, பிடிக்காத ஒரு இடத்திற்கு கூப்பிட்டுட்டாங்களேன்னு தவிர்க்க முடியாம வேண்டா வெறுப்பா போயிட்டு, வந்துட்டமேன்னு மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு மத்தவங்களையும் உங்களையும் ஒரே நேரத்துல படுத்திக்கிட்டது உண்டா? இல்லைன்னா உங்க மனைவி நீங்க செய்யற ஒரு காரியத்தை தப்பா செய்யறதை கண்டுபிடிச்சிட்டாலோ இல்லை இதைவிட இன்னும் நல்லா இப்படி செய்யலாமேன்னு ஏதாவது அலோசனை தந்தாலோ உடனே குபுக்குன்னு ஒரு எரிச்சல் கிளம்பி வார்த்தைகளாக வெளிப்படுகிறாதா? இதுவும் இல்லைன்னா அலுவலத்திலோ இல்லை வெளியிலோ நீங்கள் அவசரத்தில் இருக்கும் பொழுது காவலாளி உங்கள் பையினை சோதனை செய்தாலோ அல்லது வண்டியினை சரியான இடத்தில் நிறுத்தும்படி கேட்டுக்கொண்டாலோ, "இவன் என்ன என்னை கேக்கறது" என கோவம் வந்ததுண்டா? அட இதுகூட வேண்டாங்க... நண்பன் சொன்னான் மாமா சொன்னாங்கன்னு வீடு வாங்கறதோ இல்லை பாண்டு வாங்கறதோ செஞ்சுட்டு பாதில ஏதாவது பிரச்சனை வந்தா நாளைக்கு நாலு முறை சொன்னவங்களை மனசுக்குள்ள திட்டு திட்டுன்னு திட்டி அவங்களுக்கு அடிக்கடி விக்கல் வரவைக்கற டைப்பா நீங்க? இதுவும் இல்லையா? அப்படின்னா அலுவலகத்தில் ஒரு சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதை திறமையின்மையினாலோ இல்லை முடியுமா என்ற பயத்தினாலோ இல்லை சோம்பேறித்தனத்தினாலோ செய்யாமல் அடுத்தவனுக்கு தள்ளி விட்டுவிட்டு அவன் முட்டிமோதி அதை செய்து முடித்து பாராட்டுகளை பெறும்போது, அதிலிருக்கும் சின்னச்சின்ன குறைகளை நொட்டைநொள்ளை சொல்லிக்கொண்டு "இதை விட நான் சூப்பரா செய்வேன்!" என்று டீ குடிக்கும்போதோ இல்லை தம்மடிக்க போகும்போதோ இயலாமையை வெற்று வார்த்தைகளால் நிரப்பி வெறுப்பை பரப்புபவரா?


என்ன? இன்னைக்கு இந்த கருத்து கந்தசாமி எலச்சன் பீவருல மைக்கு இல்லாமயே மோகனை மிஞ்சற அளவுக்கு பாடறானேன்னு யோசிக்காதிங்க! இந்த கேள்வியெல்லாம் உங்களை பார்த்து இல்லை! என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள. மேலே சொன்னது மாதிரி குறைந்தது 100 ஐட்டமாவது என்கிட்ட உண்டு! வாரத்துக்கு ரெண்டாவது அந்த ஃப்ளூ புக்குல இருந்து நான் என் வாழ்க்கைல கடைப்பிடிக்கலைன்னா எனக்கெல்லாம் திடீர்னு காந்தி ஆகிட்ட மாதிரியே ஒரு பயம் வந்துரும்! என்ன செய்யறதுங்க? அப்படியே வளந்துட்டேன் :) என்னைக்கேட்டா இதெல்லாம் சின்ன வயசுல இருந்தே சொல்லிக்குடுத்து வளர்க்கறதுல இருக்கிறது என்பேன்! முதலில் நம்மை, நம் உணர்வுகளை, நம் தேவைகளை, நம் சூழ்நிலைகளை சரியாகச் சொல்லித்தர பெரியவங்க வேணும். தெரிந்துகொண்ட பின்பு அவைகளை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட பின்பு அவைகளை நம் வாழ்க்கை முறைகளோடு ஒன்ற வைக்க வேண்டும். அதன்படி நடக்கும்போது நமக்கு கிடைக்கும் அதிகபட்ச நம்பிக்கைகளையும், மகிழ்ச்சியையும், தெளிவையும் உளப்பூர்வமாக உணர வேண்டும். இதற்கு பழகிய பின்பு அதே உரிமைகளையும் உணர்வுகளையும் மற்றவர்களிடத்து கொடுப்பதற்கும் மதிப்பதற்கும் யாரும் சொல்லித்தர தேவையில்லை! இந்த லெவலுக்கு வந்துட்டா நம்மை யாராவது கட்டாயப்படுத்தி அழைக்கும் போது மென்மையாக மறுக்க தெரிந்திருக்கும்! மனைவி சொல்லும் சரியான விசயங்களை ஈகோ இல்லாமல் கலந்துரையாடி ஏற்றுக்கொள்ள முடியும்! காவலாளி தன் கடமையைத்தானே செய்கிறார் என உணர்ந்து முகத்தில் கடுப்புக்கு பதிலாக புன்முறுவலோடு அவருக்கு ஒத்துழைக்க முடியும்! வந்த பிரச்சனையை நண்பனிடனே கலந்துபேசி அதற்கொரு தீர்வு காண முடியும்! அலுவலக கூட்டாளிகளோடு வெளிக்கு சிரிப்பும் உள்ளுக்குள் குரோதமும் பாராட்டாமல் தெரிந்தவற்றை முயன்று செய்யவும் தெரியாதவற்றை பூசி மெழுகாமல் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்! ஹ்ம்ம்.. இத்தனை நல்லது இருக்கு நம்ம லெவலையும் மதிப்பையும் நாம தெரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தா! இருந்தாலும் முடியுதா? சரி விடுங்க.. என்னையெல்லாம் இப்போதைக்கு மாத்த முடியாது! :)

எப்போதெல்லாம் நம் மதிப்பினை நாம் உணரத் தவறுகிறோமோ அப்போதெல்லாம் நாம் பிறர் நம் மீது வைக்கும் நம்பகத்தன்மையையும், அன்பையும், உரிமைகளையும் ஒருசேர இழக்கக்கூடும். இதனை விட பெரிய இழப்பு ஒன்று உண்டு. அது நம் மீதான நம்பகத்தன்மையையும், அன்பையும், உரிமைகளையும், மன உறுதியையும், முனைப்பையும் நாமே இழப்பது! முதல் இழப்பை மற்றவர்களுக்கு தெரியாமல் பணம், பகட்டு, வாய்ஜாலம், மாய்மாலம் என அனைத்து திறமைகளையும் செலுத்தி மறைக்க முடியும். அல்லது மறைத்து விட்டதாக மற்றவர்களையும் நம்மையுமே நம்பவைக்க முடியும்! ஆனால் இரண்டாவது இழப்புக்கு மற்றவர்களுக்கு அது தெரியவே தெரியாத போதும் நம்மிலிருந்து நமக்கே மறைக்க முடியுமா என்ன? முழு பூசணிக்காயை கூட சோத்துல மறைச்சிடலாம்! ஆனா தண்ணிக்குள்ள தண்ணியை ஒளிச்சு வைக்க முடியுமா? அடடா! இளவஞ்சி.. இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு! :)

அந்தக்காலத்துல... (ம்ம்ம்.. இதுவே வயசானதுக்கு ஒரு அறிகுறிங்க.. இன்னொரு வகையிலையும் இதை சிம்பிளா கண்டுபிடிக்கலாம்! "1982ல" அப்படின்னு என்னைக்கு வருசத்த ரெபர் பண்ணி பேச ஆரம்பிக்கறீங்களோ அன்னைல இருந்து நாமே மரியாதையா இளசுங்க வட்டத்துல இருந்து ஒதுங்கிர்றது நல்லது! :) ) அந்தக்காலத்துலனா நான் +2 முடிக்கற பருவங்க. அப்போ எல்லாம் கைல காசு கிடைச்சா எங்களுக்கு இருந்த ரெண்டே செலவு இதுதான். 5.50 காசு இருந்தா தம்ஸ்-அப் வாங்கி அதுல உப்பு போட்டு நுரை பொங்க ஒரே மூச்சுல குடிக்கறது! (எல்லாம் பிற்காலத்துல பீரு குடிக்கறதுக்கு பிராக்டீசு! ) 11.50 காசு இருந்தா விடு ஜீட்டு டூ காந்திபுரம் அப்ஸரா இல்லைன்னா ஹோப்ஸ் மணீஸ். எல்லாம் எங்க அறிவுக்கண்களை திறந்துவிட்ட சாமிபட கொட்டாய் ஒருகலைகழகங்கள்!(மன்மதக்கலை தான்!) அப்போ நாங்க காலேஜ் சேர்ந்த மொத வருசங்க! பெரிய பசங்களா ஆகறதுக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமுனைப்பா இருந்த நேரம்! அன்னைக்கு முரளி ஓப்சுல போஸ்டரை பார்த்துட்டு வந்து சொன்னதுல இருந்து கிளம்பிய அரிப்பு உடனே கிரிக்கெட்டை நிப்பாட்டிட்டு எங்க சங்கத்தை கலைச்சுட்டு டீம் காசுல 80 ரூவாய உருவிக்கிட்டு சைக்கிளை ஏறி மெறிச்சு மணீஸ் தியேட்டர்ல போய் மோதி நின்னு வரிசைல டிக்கெட்டுக்கு நிக்கற வரைக்கும் அடங்கலை!

இந்த சரக்குபட தியேட்டருங்க இருக்கு பாருங்க! சமத்துவபுரத்தையும் மிஞ்சின இடம். படம் பார்க்க வர்ற அனைவருக்கும் ஒரே குறிக்கோள்! கொடுத்த காசுக்கு பிட்ட பார்த்தமா போனமான்னு இருக்கனும்! கொரல் மாறாத ஒம்பதாப்பு பொடுசுகள்ல இருந்து எங்கள மாதிரி ரெண்டுங்கெட்டான்கள், டை கட்டுன சேல்ஸ் ரெப்ஸ், அழுக்கு ஜீன்சுல காலெஜு முடிச்சு வேலைக்கு போகாத கிடைக்காத வாலிபங்க, ஏதோ ஆழமான சிந்தனையோடவே படம் ஆரம்பிக்கற வரைக்கும் முகத்தை சொறிந்தபடியும் சூனியத்தை வெறித்தபடியும் இருக்கும் நாற்பதுங்க, தொலைத்த வயதை வாலிபத்தை இளமையை கனவுலகின் மூலம் மீண்டும் மூளையில் பதிய வைக்கும் முயற்சியில் இருக்கும் ரிடயர்டு ஆன பெருசுங்கன்னு அகதிகள் முகாம் மாதிரி ஒரு சுரத்தே இல்லாம இருக்கும்! எங்க டைப் கேசுங்க மட்டும் அடிக்கடி கிளுகிளுன்னும் கெக்கேபிகேன்னும் இளிச்சுக்கிட்டு இருப்போம்! பொடுசுங்க யாராவது பாத்துருவாங்களோன்ற பயத்துலையும், ரெப்புங்க அடுத்து வேலைக்கு போகனுமேன்னும், நாற்பதுங்க படம் முடிஞ்சா வீட்டுகவலைய சுமக்கனும்னும், பெருசுங்க படத்துக்கு அப்பறம் என்ன செய்யறதுன்னு தெரியாத நிலையிலையும் இருந்தாலும் எல்லாருக்கும் படத்துல ஒரு நல்ல பிட்டாவது போஸ்டருல பார்த்தபடி இருக்கனுமேன்ற கவலை ஓரமா வெளிய தெரியாதபடிக்கு ஒட்டிக்கிட்டு இருக்கும்!

அன்னைக்கும் தியேட்டருல ஒரே கூட்டங்க! படம் வந்த 2 நாளுதான் கூட்டம் இருக்கும்! அப்பறம் பார்த்தவங்களே மறுபடி வர்றதோ இல்லை புதுசா வர்றவங்களோ காட்டற பிட்டைப்பொறுத்தும் வெளியே பரவும் வாய்வழி விளம்பரமும் வச்சுத்தான்! ( அப்போ எங்க காலேஜில "சிராக்கோ அவார்டு"ன்னே ஒன்னு இருந்தது! பழனியப்பன் தான் அதை வாங்குனான்! சிராக்கோ வை 27 தடவை மணீஸ், சூலூர், பல்லடம், மேட்டுப்பாளையம்னு படப்பொட்டி எங்க போனாலும் அங்க தொரத்தி தொரத்தி பார்த்து வாங்குனான்!) எட்டரை மணி இட்டர்ஷோவுக்கு ஏழரைக்கெல்லாம் கூட்டம். எல்லாரும் ஒழுங்கா லைன் கட்டித்தான் நின்னோம்! ஒருத்தரை ஒருத்தரு முந்தறதோ முண்டறதோ தள்ளறதோ பெரும்பாலும் இருக்காது! யாருதான் சரக்கு பார்க்க அலையறதை வெளிப்படையா காட்டிக்குவாங்க! சொல்லப்போனா தனிமனித ஒழுக்கம் தமிழ்நாட்டுலயே இந்த மாதிரி தியேட்டர் வரிசைலதான் அதிகம் :) அன்னைக்கு கொஞ்சம் வரிசை கலைஞ்சுதாங்க இருந்தது. மேனேஜரு மாதிரி ஒருத்தன் வந்து எங்க லைனை அப்படியே மேலாக்கா பார்த்தான். டிக்கெட்டு குடுக்கற ரூமுக்குள்ளார போயி ஒரு நீளமான குச்சியை கொண்டுவந்தான். லைனை ஆரம்பத்துல இருந்து குச்சியை ஓங்கியபடி "ஒழுங்கா நேரா நில்லுங்கடா.. உள்ள தள்ளி நில்லுங்கடா"ன்னு அதட்டிய படியே இருந்தான். அவன் வாடா போடான்னு பேசுனது அங்க இருந்த யாருக்குமே பிடிக்கலை! இருந்தாலும் எல்லோரும் உள்ளுக்குள்ளயே மொனங்கிக்கிட்டு தள்ளி நின்னோம். அவன் அப்பறமும் அடங்கறமாதிரி இல்லை. சும்மாவே திரும்பவும் லைன் ஆரம்பத்துல இருந்து அதட்டியபடியே வர ஆரம்பித்தான்.

எங்களுக்குன்னா வெளிய காட்டமுடியாத சரியான கடுப்பு. இருந்தாலும் வாயத் தொறக்கலை! டிக்கெட்டு இல்லை போங்கடானுட்டா!? எங்களுக்குள்ள அவனை திட்டிக்கிட்டு அவனை முறைச்சுக்கிட்டே இருக்கறோம். எங்களை திட்டியபடியே தாண்டி பின்னால் போனான். ஒரு 10 பேரு தள்ளி குள்ளமா ஒல்லியா ஒரு ஆளு மிலிட்டரி கட்டிங் போட்டுக்கிட்டு நீட்டா டக் இன் செஞ்சு வேணும்னே லைனை விட்டு தள்ளி வெளில நிக்கறாப்புல நிட்டுக்கிட்டு இருந்தாரு! "சொல்லறனேலில்லடா.. அறிவில்ல??" என்று கேட்டபடியே நம்ப மாவீரர் குச்சியோட அவன்கிட்ட போனாரு! அவ்வளவுதான் தெரியும்! "ப்பளார்"னு பொறி கலங்கும் ஒரு அறை விழுந்தது! அப்புனதையும் அப்பிட்டு நம்ப மிலிட்டரி கட்டிங் "காசு குடுத்துதானே படம் பார்க்கறோம்! ஓசிலயா காட்டறீங்க? மரியாதையா பேசலைன்னா தொலைச்சிருவேன்!" அப்படின்னார்! பார்த்த அத்தனை பேரும் எதிர்பார்க்காத இந்த அதிர்ச்சில "ங்கே" ன்னு முழிக்கறோம்! அத்தனை நேரம் மெரட்டிக்கிட்டு இருந்த நம்மாளு கண்ணத்தை தடவிக்கிட்டே தலையைக் குத்திக்கிட்டு உள்ள போயிட்டாரு! சட்டென அங்கே ஒன்று நொறுங்கியது. அத்தனை பேர் முகத்திலும் மகிழ்ச்சி! அடடா.. நாம நினைச்சதை நம்ம நாள முடியாததை ஒருத்தரு செஞ்சு அதன் பலனை அனைவருக்கும் வழங்கிட்டாருன்னு! சரக்கு படம் பார்க்க வந்துட்டு கண்ணெதிரே நடக்கற அநியாயத்தை தட்டிக் கேட்கும் வாத்தியாரு படம் பார்த்த திருப்தி! (அன்னைக்கு படத்துல ஒன்னும் தேறலைங்கறது வேற மேட்டரு! ) இப்போ நினைச்சா அவன் திட்டுனதை அத்தனைபேரும் அமைதியா கேட்டுக்கிட்டு இருந்ததுக்கு காரணம் எங்களோட தப்பு செய்ய வந்திருக்கோமேன்ற குற்ற உணர்ச்சியும் அதனை உபயோகப்படுத்திக்க நினைச்சு ஆளுமையை காட்ட முயன்ற அவனது திமிரும்தான். என்ன படமா இருந்தா என்ன? பார்க்கறது எங்க விருப்பம்! காசு குடுத்துதானே பார்கறோம்னு எங்களுக்கும் தோணியிருந்தா நாங்களே கொரலு விட்டிருக்கலாம் :)

இதைமட்டும் படிச்சிட்டு அடடா இளவஞ்சி வாழ்க்கைல தன்னைத்தானே மதிக்கறதை பத்தி கத்துக்கிட்டாப்புலன்னு ப்திவை மூடீறாதீக! வாழ்க்கைல சிலதெல்லாம் சீக்கிரமாவும் ஈசியாவும் கத்துக்கிட்டா அப்பறம் ஆண்டவனுக்கு சீக்கிரமே வாலண்டியரி ரிடயருமெண்ட்டுதான்! :) மேல நடந்ததுகூட ரொம்ப நாளைக்கு எங்களுக்கு "செகுனில உட்டான் பாரு ஒரு அப்பு!" என்று எங்கள் இரவுநேர பொங்கலின்போது சிலாகித்து பேசதான் உபயோகப்பட்டதே தவிர வேறெதற்கும் இல்லை. அதுக்கப்பறம் படிச்சு முடிச்சு வேலைதேடி சென்னை வந்து நிழல்கள் ரவி மாதிரி ஒரு பைலோட ஊரைச்சுத்தி ஒரு வேலை வாங்குனது தான் என் வாழ்க்கைல சொல்லிக்கற மாதிரி நடந்த ஒரே விசயம்! சேப்பாக்கத்துலதான் ஒரு மேன்சனுல தங்கியிருந்தேன். வாரக்கடைசில பசங்களோட சனிக்கிழமை படத்துக்கும் ஞாயித்துகிழமை பீச்சுக்கு போறதும் தான் பொழுதுபோக்கு! இப்படித்தான் ஒரு வாரம் சென்னையிலே படித்து வேலையில் இருக்கும் என் மாமா பையன் போன் செய்து என்னடா செய்யறேன்னு கேட்டான். நானும் என் பிசி ஸெடியூலை டைரில பார்த்து மேற்கண்ட நிகழ்சிநிரலை சொல்ல அவன் "தூ"ன்னு சின்னதா துப்பிட்டு கெளம்பி அவன் வீட்டுக்கு வரச்சொன்னான். எங்க நாலுவிட்ட (அவ்ளோ தூரத்து சொந்தம் ) சொந்தக்காரப்பையன் ஒருத்தன் அப்போ படத்துல ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருந்தாப்புல. ரெண்டோ இல்லை மூணோதான் முடிச்சிருந்தாரு. இரண்டாம் வரிசை நாயகர்கள கடைசீன்னு சொல்லலாம். அன்னைக்கு நைட்டு அவரை பார்க்கபோகலாம்னு ப்ளான்.

எனக்கு சினிமா ஈர்ப்பான விசயம்னாலும் அன்னைக்கு வரைக்கும் சினிமாக்காரங்களை பார்த்து வாயைப் பிளக்கற புத்தி மட்டும் இருந்தது இல்லை! இருந்தாலும் அன்னைக்கு ஷூட்டிங்னா எப்படி இருக்கும் பார்க்கலாம்னு கெளம்பிட்டோம்! நாங்க அங்க போய் சேர்றதுக்குள்ள ஷூட்டிங் முடிஞ்சு நம்ம ஹீரோ புதுசா வந்த சில புரடியூசருங்ககூட டிஸ்கசனுக்கு நுங்கம்பாக்கத்துல இருக்கற ஒரு ஹோட்டலுக்கு போயிருக்கறதா தகவல் கிடைச்சது. ஹீரோக்கு போன்செஞ்சு கேட்டா நேரா அந்த ஹோட்டலுக்கே வரச்சொல்லிட்டாரு. வண்டிய திருப்பிக்கிட்டு கெளம்புனோம்! என் மாமாபையன் "இன்னைக்கு சரியான வேட்டைடா!" என்றான். எனக்கு ஓன்னும் புரியலை. கோயம்புத்தூருல இருந்து ரெண்டு தொழிலதிபருங்க படம் எடுக்கப்போறதா சொல்லிக்கிட்டு இங்க வந்திருக்கறதா சொன்னான். வருசத்துல சில நாள் இந்த மாதிரி சில லட்சங்களை தூக்கிக்கிட்டு கெளம்பி வருவாங்களாம்.படம் எடுக்கறேன்னு பயாஸ்கோப்பு காட்டறேன்னு ஹோட்டல் ரூம்லயே பழியா கெடந்து ஹீரோயின் புக் செய்யற வரைக்கும் பேசு பேசுன்னு பேசுவாங்களாம். அப்பறம் ஹீரோயின் கூட 'டிஸ்கசன்" முடிஞ்சதும் கெளம்பீருவாங்களாம். அதுக்குள்ள பணம் தண்ணியா இறையுமாம். கூட இருக்கற அள்ளக்கைக கறக்கற வரைக்கும் கறந்துருவாங்கன்னான். இதெல்லாம் ஹீரோக்கும் தெரியும்னாலும் அவனுங்க நெஜமாகவே படம் எடுத்தா வாய்ப்பை விட்டுடக்கூடாதுன்னு போயிருக்காப்புலன்னான். இதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்குள்ளாக எனக்குள் ஒரு மாய உலகம் உருவாகி அதில் எனது வலது காலை வைத்து நடக்க ஆரம்பித்திருந்தேன்! அது ஒரு ஸ்டார் ஹோட்டல் இல்லைன்னாலும் கொஞ்சம் டீசண்ட்டான பெரிய ஹோட்டல். வண்டிய நிறுத்திட்டு மேல போனா ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து ரூமுக்குள்ளார நம்ப ஹீரோ, அந்த நாற்பதை கடந்த இரண்டு தொழிலதிபருங்க, மற்றும் வேற 3 பேரு இருந்தாங்க. ஹீரோ நம்பளை பார்த்ததும் மாமாபையன் "இவனை ஞாபகமிருக்கா? அன்னைக்கு ஒரு கல்யாணத்துல பார்த்தோமே"ன்னு அறிமுகப்படுத்தினான். ஹீரோவும் "அதுக்கென்ன.. இவரைத்தெரியாமையா?" அப்படின்னு கையைப்பிடிச்சுக்கிட்டாரு.

சடார்னு ஒரு நெருக்கம் படர்ந்தது. திரைல பார்க்கற ஒருத்தரு நம்ப கையை பிடிச்சு தெரியும்கறாருன்னு ஒரு ஆச்சரியம்! அப்பறம் அவரு அந்த ரெண்டு கோவைமக்களையும் இன்னொருத்தரை 2 படம் டைரக்டு செய்த டைரக்டருன்னும் மத்த ரெண்டு பேரு அஸிஸ்டண்ட் டைரக்டருன்னும் அறிமுகப்படுத்தினாரு. அவ்வளவுதான். அப்படியே ஜமால ஐக்கியமாகிட்டேன்! பாட்டில்கள் திறக்கப்பட்டன. தீனிகள் வந்து இறங்கின. சிகரெட்டு பாக்கெட்டுகள் காலியாகின. (நீங்க ஹாட்டு சாப்பிடுங்க தம்பி...! வேணாங்க எனக்கு அல்சரு.. பீர் மட்டும் போதும்! ) பேச்சு மட்டும் நிக்காம போய்க்கிட்டே இருக்கு... அந்த டைரக்டரு.. இந்த புரடியூசரு.. அந்த நடிகை.. இந்த நடிகன்னு பலபேரோட தலைகள் உருளுது. பலரோட இரவு வாழ்க்கைகள், வேட்கைகள், தினவுகள் என நடந்தது, நடந்ததாக சொல்லப்ப்டுவது, கேட்டது, பார்த்தது என அந்தரங்களால் மூழ்கடிக்கப்பட்டது அந்த அறை! பத்திரிக்கைல கிசுகிசு படிச்சே கிளுகிளுப்படையற என்னைப் போன்றவனுக்கு அன்றைக்கு பெரிய கிசுகிசு கிடங்குல விழுந்தாப்புல இருந்தது. மாய உலகின் உள்ளிழுக்கும் சேற்றில் வேகமாக மூழ்கிக்கொண்டிருந்தேன். நடுவுல சரியா 10 மணிக்கு அந்த கோவைக்காரருல ஒருத்தரு வீட்டுக்கு போன் போட்டு மனைவி குழந்தைகளோட பேசுனாரு. உலகத்துல எங்க இருந்தாலும் கரக்ட்டா 10 மணிக்கு வீட்டுக்கு பேசிடுவாராம். கதை இப்படியே போச்சுங்க. கோவைக்காரங்க பேச்சு மெதுவா ஹீரோவோட இன்னிக்கு நடிச்ச படத்தோட ஹீரோயின் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. சரக்கு நிறைய இருந்தாலும் சைடுக்கு ஒன்னும் இல்லை 11 மணியோட ஹோட்டல் மெனு ஃக்ளோஸ். அந்த 12 மணிக்கு "தம்பி.. இங்க பக்கத்துல நுங்கம்பாக்கம் சிக்னல் பக்கத்துல மலையாளி ஹோட்டல்ல ஆம்லேட்டும் சில்லி சிக்கனும் சூப்பரா இருக்கும் வாங்க்கிட்டு வரையா?"னாரு. நான் யோசிக்கவே இல்லை. மாமாபையன் வண்டிய எடுத்துக்கிட்டு சரின்னு கெளம்பிட்டேன்.

அரை மணி நேரத்துல 10 ஆம்லெட்டும் 4 சில்லியும் பார்சல் வாங்கிட்டு நெறைய கதைங்க கேக்காம போயிருவோமேன்னு அவசர அவசரமா ரூமுக்கு ஓடியாந்தேன்! மீண்டும் ஜோதில ஐக்கியம். ரெண்டுமணி வரைக்கும் போச்சுங்க. ஒரு கோவைக்காரருக்கு மப்பு கொஞ்சம் அதிகமாக ஒரு மணிக்கு 2 ஆம்லேட்டு தின்னது ஒத்துக்காம அவசரமா பாத்ரூமுக்கு கொமட்டிக்கிட்டே ஓடுனார்! 5 நிமிசத்துல பாத்ரூம் மொத்தமும் வந்தியெடுத்து நாறடிச்சுட்டாரு. அங்க இருந்த அஸிஸ்ட்டண்டுல ஒருத்தரு ஆரம்பம் முதலே பயங்கரமா கோவைகாரருக்கு பிலிம் காட்டி எப்படியாவது நல்ல பேரு வாங்கி மொத்தமா கரந்துரனும்னு துடியா இருந்தாரு. கோவைக்காரங்க கிரங்கற அளவுக்கு கதைகளை அள்ளி வீசிக்கிட்டு இருந்தாரு. மேட்டரு இப்படி ஆனதும் ரிசப்சனுக்கு போன்போட்டு மேட்டரை சொல்லி ஒடனே ஆள் அனுப்பச்சொன்னாரு. அந்த ரூம் சர்வீஸ் பையன் வர்றதுக்கு 10 நிமிசத்துக்கு மேல ஆயிருச்சு. "சார்.. ரூம் சர்வீஸ்"னு வந்து நின்னான். இந்த அஸிஸ்ட்டெண்டு எடுத்த உடனே "ஏண்டா லேட்டு?"ன்னாரு. அவன் "நைட் டூட்டி நான் ஒருத்தன் தான் சார்" அப்படின்னான். இவரு "சொன்னவொடனே வராம என்னடா சர்வீஸ் பண்ணறீங்க? நாங்க யாரு தெரியுமா?"ன்னு கேட்டுக்கிட்டே அவனுக்கு "ப்பளார்"னு ஒரு அறை விட்டுட்டாரு. அந்த பையன் ரூம்ல நிலமை சரியில்லைன்னும், இதெல்லாம் இங்க சகஜம்னும் புரிஞ்சிக்கிட்டு "சாரி சார்.."னு சொல்லிட்டு அழுத மொகத்தோட பொங்கி வரும் அவமானத்தை மென்னு முழுங்கிக்கிட்டு பாத்ரூம் போய் கழுவ ஆரம்பித்தான். அஸிஸ்ட்டண்ட்டு அதோட நிறுத்தலை! மறுபடியும் ரிசப்சனுக்கு போன் போட்டு "என்னா சர்வீசு பண்ணறீங்க?"ன்னு சண்டை. எனக்குள் ஏதோ தெளிந்த மாதிரி இருந்தது.

அந்த ஹீரோவும், டைரக்டரும் அடுத்தபட வாய்ப்பு கிடைக்காதான்னு இங்க இருக்காங்க. அந்த அள்ளக்கை அஸிஸ்ட்டண்ட்டுங்க எப்படியாவது டைரக்டருகூட ஒட்டிக்கிடனும்னும் ஒரு மாச செலவுக்காவது காசை தேத்திடனும்னும் இங்க இருக்காங்க(அதுல ஒருத்தரு இப்போ பேரு வாங்குன டைரக்டர்...) அந்த கோவைக்காரங்க எப்படியோ செய்யற செலவுக்கு நடிகைகூட "டிஸ்கஷன்" முடியாம போறதில்லைன்னு இங்க இருக்காங்க. அந்த ரூம்-சர்வீஸ் பையன் கூட அவமானத்தை பார்த்தால் அடுத்தவேளை சோத்துக்கு என்ன செய்யறதுன்னு கூட இங்க இருக்கலாம்! நான் என்ன வேண்டி இங்கே இருக்கிறேன்? என் படிப்பு என்ன? என் குடும்பப்பின்னனி என்ன? என் குடும்பத்தாரின் என் மீதான எதிர்பார்ப்பு என்ன? என்ன எதிர்பார்த்து நடிகையுடன் படுப்பதற்காக லட்சங்களுடன் வந்திருக்கும் கனவான்களுக்கு ஆம்லேட்டு வாங்கிக் கொடுத்துக்கொண்டு இங்கே இருக்கிறேன்? வீம்புக்கு அடித்தவனது திமிரை கண்டிக்கவும், வீணாய் அடிபட்டவன் மீது பரிதாபப்படக்கூடவும் திராணியின்றி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனக்கு அந்த மணீஸ் தியேட்டரின் மிலிட்டரி கட்டிங் விட்ட அறை ஏனோ ஞாபகத்துக்கு வந்தது. யாருடமும் சொல்லிக்காம மெதுவா ரூமை விட்டு வெளியே வந்து அந்த நேரத்துக்கு ஆட்டோ கிடைக்குமான்னு தேடியபடியே இரண்டு கைகளையும் பாக்கெட்டுல விட்டுக்கொண்டு தலையை குனிந்தபடி என் மேன்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கருத்துகள்

  1. //நான் என்ன வேண்டி இங்கே இருக்கிறேன்? என் படிப்பு என்ன? என் குடும்பப்பின்னனி என்ன? என் குடும்பத்தாரின் என் மீதான எதிர்பார்ப்பு என்ன? .... யாருடமும் சொல்லிக்காம மெதுவா ரூமை விட்டு வெளியே வந்து என்னை நானே கேவலமாக நொந்தபடிந்த நேரத்துக்கு ஆட்டோ கிடைக்குமான்னு தேடியபடியே இரண்டு கைகளையும் பாக்கெட்டுல விட்டுக்கொண்டு தலையை குனிந்தபடி என் மேன்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்//

    இளவஞ்சி, அவ்வளவு துள்ளியமா இருக்கு நம்ம நடந்து வந்த பாதையில இருக்கும் சம்பவங்கள். இதே மாதிரியான உணர்ச்சிகளை சுமந்து தான், நானும், இது தான் உலகம்னு அலைஞ்ச காலங்கள்ல, முழிப்பு வந்து என் வாழ்க்கையின் பயணம் கண்டு மறுவழி நடக்க ஆரம்பிச்சேன். முடிஞ்சா, நம்ம 'எனை ஆண்ட அரிதாரம்' பதிவை படிச்சு பாருங்க, இது போன்ற சம்பவங்கள் என் வாழ்க்கையில் எப்படி பாதிப்பு உண்டாச்சுங்கிறதை எழுதி வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  2. "அந்தக்காலத்துல... (ம்ம்ம்.. இதுவே வயசானதுக்கு ஒரு அறிகுறிங்க.. இன்னொரு வகையிலையும் இதை சிம்பிளா கண்டுபிடிக்கலாம்! "1982ல" அப்படின்னு என்னைக்கு வருசத்த ரெபர் பண்ணி பேச ஆரம்பிக்கறீங்களோ அன்னைல இருந்து நாமே மரியாதையா இளசுங்க வட்டத்துல இருந்து ஒதுங்கிர்றது நல்லது! :) )"

    அப்படீங்கறீங்க? அந்தக் காலத்துலேன்னு சொல்லாம சமீபத்தில் 1952-ல் என்று நான் சாதாரணமாகக் கூறுவதைப் பற்றி உங்கள் கருத்து?

    ப்ளாக்கர் எண் மற்றும் போட்டோ ஆகிய இரண்டு ஷரத்துகளும் பூர்த்தியாகிறதா என்று பார்த்தே இந்தப் பின்னூட்டத்தை மட்டுறுத்தல் செய்யவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  3. //நான் என்ன வேண்டி இங்கே இருக்கிறேன்? //

    இது மிக முக்கியமான கேள்வி, பல நேரங்களில் பல தளங்களில் விரியக்கூடியது. அருமையான பதிவு இளவஞ்சி. நன்றி!

    பதிலளிநீக்கு
  4. Dear Ilavanji, this is a thought provocating post. "Naam anaivarum perumbaalum soolnizaik kaithigal than" aridhaga sila samayngalil mattume naam naamaaga irukka mudigirathu. btw i'm a great fan of your writings. this one is really superb. keep up this good work

    பதிலளிநீக்கு
  5. செய்ய நினைக்கிறதை, அதைச் செய்ய வேண்டிய சமயத்துலே செஞ்சுறணும், இல்லையா?
    அப்படிச் செஞ்சதுக்குப் பாராட்டுக்கள்.

    அது சரி, 'கொசுவர்த்தி' இப்ப எந்தக் கடையிலே வாங்கறீங்க? நான் ஒரு ஹோல்ஸேல் கடை வச்சுருக்கேன்.
    நினைவு இருக்கா? :-)

    பதிலளிநீக்கு
  6. வெளிகண்ட நாதர், உங்க அரிதாரம் பதிவுகளை தொடர்ச்சியா இல்லைன்னாலும் அப்பப்ப படிக்கறது உண்டு. பின்னூட்டமிடுவதில் சோம்பேறித்தனம் பிரசித்தம்! :) இப்போ தொடர்ச்சியா படிக்கறேன்.

    டோண்டு சார், உங்களுக்கு பிரம்மா மாதிரி ஒரு வருசம்கறது ஒர் நாளோ என்னவோ!? :) "இந்த பின்னூட்டத்தின் நகல் என் பதிவிலும் இடப்படும்"கற லைனை காணோம்! இது உங்களதுதானா??

    தங்கமணி, குரு, உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி!

    துளசியக்கா, கொசுவத்தியெல்லாம் எல்லாம் உங்க ஹோல்சேல்ல வாங்குனதுதான்! :) உங்க பின்னூட்டக்கலைக்கு வாரிசாக பலத்த போட்டி இங்க! அதனால போட்டி கம்மியா இருக்கற கொசுவத்தி சுத்தறதுல இறங்கிட்டேன்!

    வாழ்த்துங்க!! :)

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. "டோண்டு சார், உங்களுக்கு பிரம்மா மாதிரி ஒரு வருசம்கறது ஒர் நாளோ என்னவோ!? :) "இந்த பின்னூட்டத்தின் நகல் என் பதிவிலும் இடப்படும்"கற லைனை காணோம்! இது உங்களதுதானா??"

    நிச்சயமா என்னுடையதுதான். பரிசோதனை முயற்சியாக தனிப்பதிவு போடுவதை போட்டோ எனேபிள் செய்யப்பட்டப் பதிவுகளில் போட்டுள்ளேன். ப்ளாக்கர் எண் மற்றும் போட்டோ சோதனைகள் போதும் (இரண்டுமே சேர்ந்து பாசிடிவாக வர வேண்டும்) என்று நான் நினைக்கிறேன். மறுபடி யாராவது ஏமாந்து போலி டோண்டுவின் பின்னூட்டம் வந்தால் பிறகு பழைய முறைக்கே செல்ல வேண்டியிருக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  8. குரு, கடந்து வந்த பாதைகள் மாறியிருக்கலாம்.... ஆனால் இந்த குற்ற உணர்ச்சி, வெறுப்புணர்வு, தனிமை, கழிவிரக்கம்... எல்லாமே எதாவது ஒரு கட்டத்துல அனுபவிச்சதை என் மனசுலருந்து சட்டுனு இழுத்து போட்டுடீங்க...

    பதிவுக்கு மிகவும் பொருத்தமான க்ராபிட்டி படம்..


    இவை சொல்லிக்குடுத்து வளக்குறதைவிட.. அதை தாண்டி அடிபட்டு வரும்போது, தனியா உட்கார்ந்து யோசிக்குறோம் பாருங்க அதாங்க அடிமனசுல வரைக்கும் பதியுது..

    பதிலளிநீக்கு
  9. என்னங்க இது...தன்னத்தைத் தான் கண்டு....தரணியில் எல்லாங் கண்டு பிடிக்கிற முயற்சியா? வேண்டாங்க...வழக்கம் போலவே இருங்க....இளவஞ்சியப் பாக்கலாம். இளவஞ்சியானந்தாவைப் பார்க்க வேண்டாம்னு பாக்குறோம். :-)

    பதிலளிநீக்கு
  10. "நிச்சயமா என்னுடையதுதான். பரிசோதனை முயற்சியாக தனிப்பதிவு போடுவதை போட்டோ எனேபிள் செய்யப்பட்டப் பதிவுகளில் போட்டுள்ளேன்."

    மேலே பிழையாக வந்து விட்டது. நான் சொல்ல நினைத்தது இதோ:

    "நிச்சயமா என்னுடையதுதான். பரிசோதனை முயற்சியாக தனிப்பதிவு போடுவதை போட்டோ எனேபிள் செய்யப்பட்டப் பதிவுகளில் நிறுத்த்ஹிவைத்துள்ளேன்."

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  11. யாத்திரீகன்,

    //இவை சொல்லிக்குடுத்து வளக்குறதைவிட.. அதை தாண்டி அடிபட்டு வரும்போது, தனியா உட்கார்ந்து யோசிக்குறோம் பாருங்க அதாங்க அடிமனசுல வரைக்கும் பதியுது.. // சரியாச்சொன்னீங்க... ஆனா குழந்தைகளுக்கு இந்த ஆளுமைத்திறமையை உருவாக்கறதுல பெத்தவங்க வளர்தறதுலயும் பெரும்பங்கு இருக்கு...

    ராகவன்,

    "இளவஞ்சியானந்தா" வா? பேரே புல் அரிக்குதுங்க!! :)

    ஏதோ நீங்க பார்த்து நல்ல சிஷ்யைகளா ஆசிரமத்துல் சேர்த்து விட்டீங்கன்னா.. ஹிஹி.

    பதிலளிநீக்கு
  12. டச் பண்ணிட்டீங்களே இளவஞ்சி! யய்யா! உங்கள மாதிரி இன்னும் ஒரு மடங்கு அதிகமா யோசிச்சா அநியாயத்துக்கு வாழ்க்கல நல்ல புள்ளையா மாறிடலாம் போல. கொஞ்சம் யோசுக்கவும் வச்சிருக்கீங்க. நம் ஈகோவால் வரும் கோபம் நிறையவே. அவற்றை நீக்கினால் நிறையவே சந்தோசமான தருணங்கள் கிடைக்கும். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி கையாலாகாம நின்னுகிட்டு ஏதோ ஒன்னுக்காக வாழ்க்கைல மனசுக்கே புடிக்காம ஒரு வாழ்க்கை, நிறைய விஷயங்களில். ம்ம்ம்..

    நல்லா சொல்லிருக்கீங்க இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  13. பாரதி,

    //அந்த அஸிஸ்டெண்ட் கன்னத்தில் ஒரு அறை விட்டுவிட்டு வந்திருக்கலாம் இளவஞ்சி நீங்கள்//

    அது முடியாததால் தானே இந்த பொலம்பலே! அந்த சூழ்நிலையில் அவனை அறைவதற்கு எனக்கு எந்த தகுதியுமே இருக்கவில்லையே?!

    சிவா, பாரதி,

    கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  14. மற்றுமொரு இளவஞ்சி பதிவு. மனதின் எண்ணங்களை வார்த்தையில் வடிவமைப்பது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.
    //"1982ல" அப்படின்னு என்னைக்கு வருசத்த ரெபர் பண்ணி பேச ஆரம்பிக்கறீங்களோ அன்னைல இருந்து நாமே மரியாதையா இளசுங்க வட்டத்துல இருந்து ஒதுங்கிர்றது நல்லது! :) )//
    வயசானா எங்களை ஏங்க ஓரம் கட்டிடறீங்க ?

    பதிலளிநீக்கு
  15. மணியன், ஊக்கமளிக்கும் கருத்துக்களுக்கு நன்றி!

    //வயசானா எங்களை ஏங்க ஓரம் கட்டிடறீங்க ?// நீங்கவேற! என்னை இளசுங்க ஏன் ஓரம்கட்டினாங்கன்னு யோசிச்சதுல நான் கண்டுபிடிச்ச விசயம் இது! :)

    இந்த இளசாவும், பெருசாவும் இல்லாம நடுவுல இருக்கற என்னை மாதிரியான ஆட்களுக்குதான் ரொம்பக்கஷ்டம்!

    தீடீர்னு எவனாவது ஒரு பொடுசு "அங்க்கிள்" னு கூப்ட்டு வயத்துல புளியக்கரைப்பான்!

    ஆபீசுல யாராவது ஃபிரஷர் பிகருங்ககூட கடலைபோடலாம்னு போனா "சார்" ஒரே போடா போட்டுருவாங்க! இளசுங்க மாதிரி களத்துல இறங்கி ஆடவும் முடியாம, பெருசுங்க மாதிரி நடந்துக்கவும் நடிக்கவும் முடியாம கொடுமையையா இது!!

    சத்தியராஜ் சொல்லறமாதிரி.. நாங்கெல்லாம் "யூத் இல்லை! யூத் மாதிரி!" :)

    பதிலளிநீக்கு
  16. கலகலப்பா ஆரம்பிச்சாலும் இந்த மனுஷன் என்ன சொல்லப் போறாரோன்னு மனசு யோசிக்க ஆரம்பிச்சுடுது. அந்த வழக்கமான 'பன்ச்' இதிலும் உண்டு; என்னைக்கி நீங்க ஏமாத்தினீங்க.

    நம்ம மிலிட்டர் கட்டிங் மாதிரி அந்த அளவுக்கு இல்லாட்டாலும், சும்மா சவுண்டு கொடுத்த சமயங்களும், கொடுக்காமல் விட்ட சமயங்களும் நினைவுக்கு வந்தன நிறைய. ஆனால் நாம் ஏன் இளவஞ்சி மாதிரி எழுத நினைக்கலை அப்டின்னு எனக்குள் ஒரு கேள்வி; "அப்பு, அதுதான் இளவஞ்சி"ன்னு ஒரு அசரீரி கேட்டுச்சு :-)

    பதிலளிநீக்கு
  17. பெரிய பெரிய இலக்கியம்-ன்னு மத்தவங்க சொல்லி நான் படிச்சது பல ஒரு கருமாந்திரமும் புரிஞ்சதில்ல .மனசுல நிண்ணதும் இல்ல .உங்க பதிவுகள்ல அங்கே கிடைக்காத திருப்தி கிடைக்குது .மனச குடையுது .நிறைய எழுதுங்க ராசா!

    பதிலளிநீக்கு
  18. அப்பாடி, இந்த தடவையாவது ஜோவுக்கு முந்தியே பின்னூட்டம் இட்டாச்சு. இல்லைன்னா, எப்பவுமே ஜோவுக்கு 'டிட்டோ' போட்டுக்கிட்டே இருந்தாச்சுல்லா!

    ஆனாலும் இப்பவும் ஜோவுக்கு இன்னொரு டிட்டோ: "நிறைய எழுதுங்க ராசா!" டிட்டோ இதுக்குத்தான்...

    பதிலளிநீக்கு
  19. இளவஞ்சி,
    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து விரும்பிப் படிக்கும் நபர்களில் நானும் ஒருத்தி. ரொம்பநாளைக்குக் காணாமல் போகாமல் அவ்வப்போது எழுதிக்கொண்டேயிருங்கள்!

    ///நான் என்ன வேண்டி இங்கே இருக்கிறேன்? வீம்புக்கு அடித்தவனது திமிரை கண்டிக்கவும், வீணாய் அடிபட்டவன் மீது பரிதாபப்படக்கூடவும் திராணியின்றி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? /////
    இந்தவரிகள் அற்புதமானவை.

    பதிலளிநீக்கு
  20. இளவஞ்சி ஐயா. எங்கே ஐயா இப்படியெல்லாம் எழுத கத்துக்கிட்டீங்க? சூப்பரா இருந்ததையா. ரெண்டு தடவை படிச்சேன்.

    பதிலளிநீக்கு
  21. தருமி சார், ஜோ, செல்வநாயகி, குமரன்...

    உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  22. இதுவரைக்கும் ஒரு பத்து தடவை இந்த பதிவை படிச்சுட்டேங்க..
    //எப்போதெல்லாம் நம் மதிப்பினை நாம் உணரத் தவறுகிறோமோ அப்போதெல்லாம் நாம் பிறர் நம் மீது வைக்கும் நம்பகத்தன்மையையும், அன்பையும், உரிமைகளையும் ஒருசேர இழக்கக்கூடும். இதனை விட பெரிய இழப்பு ஒன்று உண்டு. அது நம் மீதான நம்பகத்தன்மையையும், அன்பையும், உரிமைகளையும், மன உறுதியையும், முனைப்பையும் நாமே இழப்பது!//

    என்ன சொல்றதுன்னு தெரியலை.. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..

    (காலேஜ் முடிச்சுட்டு சென்னையில சுத்தினப்போத்தான் நமக்கு இந்த ஞானம் எட்டுச்சு.. போதிச்சது 'மண்டை')

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு