முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பூ...!!


Courtesy :http://ewancient.lysator.liu.se/pic/art/l/o/longg/scare_an_orc.jpg


ங்களுக்கு தைரியம்னா என்னன்னு தெரியுமா? பயப்படாததுமாதிரி நடிக்கறதுதான் அப்படின்னு நம்ப அண்ணாத்தே கமலு குருதிப்புனல்ல சொல்லுவாரு பார்த்திருக்கீங்களா? அது அப்படியே சரின்னு வச்சிப்போம். ஆனா பயம்னா என்னன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இந்த கேள்விக்கு ஆயிரம் விடைகள் இருக்குங்க! எல்லாத்தையும் எடுத்துப்போட்டு அலசி ஆராய்ந்து பிரிச்சி மேய்ந்து கடைசியா என்ன கிடைக்குதுன்னு பார்த்தா அதுவும் ஒரே வார்த்தைதாங்க. அறியாமை!! அதுதாங்க பயம்!

என்ன உதாரு ரொம்ப விடறானேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் ஒரு அனுபவம்தாங்க! மனசுக்குள்ள பெரிய பிஸ்த்துன்னு நினைப்பு இல்லைன்னாலும் தெரிஞ்சதை சொல்லறதுல்ல தப்பில்லைதானுங்களே? எனக்கு இந்த பேய் பிசாசெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க! நம்பிக்கையும் இல்லை. கல்யாணமாகி 2 வருடங்கள் ஆனதுக்கப்புறமும்! ஆனா கல்யாணத்துக்குப்பிறகு டார்வின் கொள்கைல முழுநம்பிக்கை உண்டு..("T.Nagar போத்தீஸ்க்கு போலாம்னா ஏன் கொரங்கு மாதிரி முழிக்கறீங்க...?!") அதுனால அதப்பத்தியெல்லாம் பயமே இல்லை. ஆனா பயப்படுறவங்களைப்பார்த்தாதான் நமக்கு கொஞ்சம் பேஜாருங்க! விசயம் ஒன்னுமே இருக்காது! ஆனா அவிங்க விடற அலப்பரைல நமக்கு ஜன்னிவந்துரும்! இப்படித்தான் பாருங்க காலேஜில இருந்தப்ப(படிக்கறப்பன்னு சொல்ல எனக்கே கூச்சமா இருக்கு! ) பலநாள் இரவு ஜாகையை ஹாஸ்டல்லயோ இல்லை வெளில பசங்க எடுத்திருக்கற வீட்டுலயோ போட்டுர்றது நம்ப நல்ல பழக்கவழக்கங்கள்ள ஒன்னு! பின்ன? நடுராத்திரில வீட்டுல போய் காலிங்பெல் அடிச்சு எங்க அண்ணன் முறைக்க, எங்க அப்பா துப்ப, அம்மா பொலம்பிக்கிட்டே சாப்பாடு எடுத்துவைக்கன்னு எல்லாத்தையும் எழுப்பிவிட்டு அவிங்க தூக்கத்தை கெடுக்கறது கெட்டபழக்கமா இல்லையா? அதனால SKP மெஸ்ஸுல ஃபிரண்டு அக்கவுண்டுல நாலு இட்லி, ஒரு முட்டைதோசை, ஒரு லூசு(அதாங்க முட்டைய முழுசா வேகாவிடாம பெப்பரு, உப்பு, கொஞ்சம் சின்னவெங்காயம், போட்டு கொழகொழன்னு கிளரி சின்ன கப்புல தருவாங்களே! அப்பிடியே வாயில கவுத்துக்கிட்டு ஒரு தபா கொதப்பிக்கிட்டு முழுங்குனா சும்மா நச்சுன்னு இருக்கும்! என்ன கொஞ்சநேரத்துக்கு ஒருபய பக்கத்துல வந்துபேசமாட்டான். கப்பு தூக்கும்ல! (இதுக்கெல்லாம் சேர்த்து இப்போ கொலஸ்ட்ரால் குறைக்கறதுக்காக பெங்களூரு அதிகாலை குளிருல மப்பளும் ஜெர்கினும் போட்டுக்கிட்டு தீவிரவாதி கணக்கா நடக்கறது தனிக்கதை! )

சரிங்க.. மேட்டருக்கு வரலாம். இந்த மனப்பிராந்தி இருக்கு பாருங்க! அதை மொத்தமா காய்ச்சி மனசுல ஊத்தி பயத்தை ஏத்திவிடுறதே கூட இருக்க புண்ணியவானுங்கதான்! எங்க கூட விஜயன்னு ஒருத்தன் நல்லா செவப்பா கொழுக்மொழுக்னு கரண்கபூர் கணக்கா படிச்சானுங்க. பய கொஞ்சம் பார்க்க ஸ்மார்ட்டா இருந்தாலும் எங்க பொகையெல்லாம் அவன் போடற கடலையை பார்த்தாதான் வரும். அவனவன் புள்ளைங்க வரபோற நேரமெல்லாம் பார்த்து இடம் பொருள் ஏவல்லெல்லாம் அலசி ஆரய்ஞ்சு பயங்கர சதித்திட்டமெல்லாம் தீட்டி கடலைபோட காத்துக்கிட்டு இருக்க இவன் just like that அப்பப்ப அங்கங்க அப்படி அப்படியே மானாவாரியா மகசூல் பார்த்துக்கிட்டு இருந்தா எவனுக்குத்தான் பொகை வராது? இத்தனைக்கும் அவன் என்ன பேசுவான்னு நினைக்கறீங்க? "ஏம்ப்பா.. ரெக்கார்டெல்லாம் முடிச்சிட்டையா? நேத்தைக்கு ஏன் பச்சை சுடிதார்ல வந்த? 5 புள்ளி கோலம் போடறது எப்படி? இதயத்தை திருடாதேல அந்த பொண்ணு பாவம்ல!" இப்படி சில கேள்விகளைக்கேட்டுட்டு அவிங்க பேசறதை கேட்டுக்கிட்டே இருப்பான். கடலை போடறதன் பிரம்மசூத்திரம் காதுகுடுத்து கேக்கறதுலதான் இருக்குன்றது அந்த பயலுக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கு. நமக்கு இன்னைக்கு வரைக்கும் வெளங்கலை! அவன் ஒரு விசயத்துல மட்டும் வீக்கு! ஒடம்புக்கு ஒன்னுன்னா அப்படியே அலறிடுவான்! ஹாஸ்டல்லா ரெகுலரா ஃபேசியல் செஞ்சி Fair&Lovly போடறவன் அவன் ஒருத்தன் தான்னா பார்த்துக்கங்க! எப்படிடா அவனை கவுக்கறதுன்னு நாங்க அலைஞ்சதுல இந்த ஒரு பாயிண்ட்டுதான் ஒர்க்அவுட் ஆகும்போல தோணுச்சு! வெய்யக்காலத்துல பயலுக்கு வேர்க்குரு வந்துருச்சு! அவன் வேற ரொம்ப கலரா? அடிச்சது எங்களுக்கு லக்கிபிரைஸ்! அன்னைக்கு நைட்டு "டேய்... முதுகுல என்னடா புள்ளி புள்ளியா?" அப்படின்னு ஆரம்பிக்க அவன் "வேர்க்குருடா.. நைசில் போட்டா சரியாகிடும்"னு சொல்ல ஒருத்தன் "எனக்கென்னவோ அம்மை மாதிரி தோனுதுடா..."ன்னு பத்தவச்சிட்டு வந்துட்டான்! அதுக்கப்பறம் 10 நிமிசத்துக்கு ஒருத்தனா அவன் ரூமுக்கு போய் "மாப்ள.. எங்க காட்டு.. எனக்கென்னவோ இது அம்மை மாதிரிதான் தோனுது. வேர்க்குரு இன்னும் சின்னதா இருக்கும்" ன்னு கலந்து அடிக்க 5 பேரு எங்க கடைமைய முடிக்கறதுக்குள்ள பய அரண்டுட்டான்! ஒரு பத்துபேரு குரூப்பா அவன் ரூமுக்கு போயிட்டோம். "இப்படித்தான் சின்ன வயசுல எங்க அண்ணனுக்கு அம்மை வந்து.." அப்படின்னு அவனவன் இல்லாத கதையெல்லாம் சொல்லிச்சொல்லி பய மொகத்தை பேஸ்த் அடிச்சாப்பல ஆக்கறதுக்கே மணி 11 ஆயிருச்சு. அம்மைக்கு என்னென்ன பண்ணனும்னு ஒரு லிஸ்ட்டு போட்டோம்! ஒருத்தனை ரூம் புல்லா தண்ணி ஊத்திக்கழுவி க்ளீன் பண்ணச்சொல்லி மத்தவங்க ரூம்ல இருந்த எல்லா சாமி படங்களையும் அவன் ரூம்க்கு கொண்டுவந்து ஒரு குட்டிகோவிலை ரெடி செஞ்சோம். கிடைச்ச விபூதி குங்குமம் எல்லாத்தையும் சாமி படங்க மேல தூவி ரூமையே பராசக்தி வழிபாடுமன்றம் ரேஞ்ச்சுல கொண்டுவர்றதுக்குள்ள மத்த ரெண்டுபேரு அவனை நடுராத்திரி 12 மணிக்கு பச்சைத்தண்ணில முக்கியெடுத்து இடுப்புல துண்டோட கிடுகிடுன்னு நடுங்க கூட்டிகிட்டு வந்தாங்க! அதுக்குல்ல ஒருத்தன் எங்கயோ போய் அம்மன் கேசட்டு ஒன்னை பிடிச்சுக்கிட்டு வர டேப் ரிக்கார்டர்ல அம்மன் பாட்டு அலறுது! புட்பால் கிரவுண்டை தாண்டி இருக்கற வேப்பமரத்து கிளையையே ஒருத்தன் உடைச்சுக்கிட்டு வர வேப்ப இலையை கொத்துக்கொத்தா பிரிச்சு அவன் கட்டில் பூரா பரப்பி ரூம் வாசப்படி ஜன்னல் எல்லாம் கட்டிவிட்டு அவனை படுக்க வைச்சோம்! அவன் ரூமுல இருக்கறப்ப சீரியசா முகத்தை வைச்சுக்கிட்டு இருப்போம். சிரிப்பை அடக்கமுடியலைன்னா 5 ரூம் தள்ளி ஓடிவந்து உருண்டுபொரண்டு சிரிச்சிட்டு திரும்பவும் அவன் ரூமுக்கு போய் அப்புராணி போல ஒக்கார்ந்துக்கிட்டு அம்மை பத்தின எங்க Phdய ஆரம்பிக்கறதுன்னு அன்னைக்கு நைக்கு முழுக்கு ஹாஸ்டல்ல ஒரே திருவிழாதான்! பய விடிய விடிய கொழம்பி கொழம்பி நெஜமாலுமே அம்மை வந்தாப்புல ஆகிட்டான்! காலைல 8 மணிவரைக்கும் இதை மெய்ன்டெய்ன் பண்ணறதுக்குல்ல எங்களுக்கே போதும்போதும் ஆகிடிச்சு! அதுக்கப்பறம் எல்லாரும் கூடி நின்னு உண்மையை சொல்லி சிரிச்சதுல அவன் முகத்தை பார்க்கணுமே! அப்படியும் நம்பாம அவன் டாக்டரை போய் பார்த்து அது வேர்க்குருன்னு சொன்னப்பறம்தான் அமைதியானான்! அதுக்கப்புறம் அவன் எங்களை துரத்தி துரத்தி அடிச்சது எங்க விழுப்புண் கதைகள்ல ஒன்னு. ஆனா இந்த சதிலயும் எங்களுக்கு தோல்விதான்! பரிதாபமா முகத்தை வச்சிக்கிட்டு இந்த கதையையே 50ம் மேல புள்ளைங்ககிட்ட சொல்லி( "How sad yar! ச்சே...ரொம்ம்ம்ப பாவம்பா நீ..") கடலையா வறுத்தெடுத்துட்டான்!

மனப்பிராந்தி இப்படி ஒரு வகைன்னா பெருசுங்க வழிவழியா சொல்லி வர்றதுல இருக்கற மூடநம்பிக்கை(ரொம்ப பெரிய வார்த்தையோ!? ) இன்னொன்னு. பேய், பிசாசு, ஆவிங்கறது இதுல ஒன்னு. இதெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க.. ஆனா செத்தவிங்க கூட பேசலாம். ஆவிங்களை மீடியம் வழியா கூப்பிடலாம்னு சொல்லறதைத்தான் என்ன சொல்லறதுன்னு தெரியலை! இப்படிதாங்க நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதுல எங்க கூடப்படிச்ச ஃபிரண்டு ஒருத்தன் ஆவிங்க கூட பேசலாம்னு ஒய்ஜா போர்டுன்னு ஒன்னு கொண்டுவந்தான். வெள்ளிக்கிழமை சாயங்காலமா 7 மணிக்கு மெரினா பீச்சுக்கு போறதை விட்டுட்டு இதுல உட்கார்ந்தோம். ஆரம்பத்துல இருந்தே இது டுபாக்கூருன்னு நான் அலப்பரை செஞ்சுக்கிட்டே இருந்தேன்! ஆன ஒரு பய நம்பலை! ரூம்ல இருந்த சாமி படத்தையெல்லாம் எடுத்து ஓரமா வச்சிட்டு(ஜோ கழுத்துல இருந்த சிழுவை உட்பட..) ரூம் புல்லா இருட்டாக்கிட்டு ஒரே ஒரு மெழுகுவத்திய பத்தவச்சிட்டு ஒய்ஜா போர்டு முன்னால 4 பேரு உட்கார்ந்தானுங்க! போர்டு சுத்தியும் ABCDயும்...123ம் நாலு பார்டர்ல எழுதியிருந்தது. ஆவிங்களுக்கு மொழிப்பிரச்சனையே இல்லை போல! Globalaization! எல்லா ஆவிங்களும் இங்கிலீசுலயே பதில் சொல்லுமாம். போர்டுக்கு நடுவுல 1 ரூபா நாணயம் ஒண்னை வச்சி அதுமேல ரெண்டுபேரு ஆட்காட்டி விரலை வச்சிட்டு மனசுக்குல்ல ஆவியக்கூப்பிட்டு வேண்ட ஆரம்பிச்சாங்க! 10 நிமிசம் ஆச்சு! காசு நகர்ற மாதிரி தெரியலை! விரலு வச்ச மீடியம் சரியில்லைன்னு இதுக்கு விளக்கம் வேற! இதுதான் சான்சுன்னு அதுல ஒருத்தனை கெளப்பிட்டு நான் மீடியமா உட்கார்ந்துக்கிட்டேன்! ரெண்டு பேரும் காசுமேல விரலை அழுத்தாம மென்மையா வைக்கனுமாம். காசு நகர ஆரம்பிச்சுட்டா,அது போற போக்குலயே நாமளும் விரலைக்கொண்டு போகனுமாம்! "வாங்கடி வாங்க" ன்னு மனசுல நெனச்சிக்கிட்டு நானும் ஒரு 5 நிமிசம் மனசுல வேண்டிக்கிட்டு மெதுவா காசை இப்படியும் அப்படியும் நகத்த ஆரம்பிச்சேன்! பசங்க "ஆவி வந்துருச்சு.. வந்துருச்சி"ன்னு பரபரன்னு குசுகுசுப்பா பேசிக்கறாங்க. நானும் முகத்தை சீரியசா மாத்திக்கிட்டு காசை நேரா Y கிட்ட கொண்டுபோனேன். ஆவி கன்பார்மா வந்துருச்சாம். எனக்கு எதுத்தாப்புல விரலை வைச்சுக்கிட்டு இருந்தவன் வேர்த்துப்போய் முழிக்கறான். நான் மெதுவா காசை நகர்த்துனா அதுபோன போக்குல அவனும் வெரலை கொண்டுவரான். அப்பறம் ஆவி மீடியம் எங்க ரெண்டுபேரு விரலு மூலமா காசை நகர்த்தாம வேற என்ன செய்யும்? அதுக்கப்பறம் அலப்பரைதான்! கேட்ட எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதில்கள்!

வந்திருக்கற பெரியவர் உங்க பேரு என்ன?
D-U-R-A-I-S-A-M-Y - (எங்க தாத்தா பேருங்க! )
நீங்கள் இறந்து எத்தனை வருடங்கள் ஆகுது?( மரியாதையோட கேக்கறாங்களாம்! )
20
உங்க கூட யாரெல்லாம் இருக்காங்க?
சுப்பு(யாருக்குத்தெரியும்?), காமராஜ், நேரு! (எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )
அவங்க கூப்பிட்டா வருவாங்களா?
வேகமா காசை நகர்த்தி "N-O "! (ஆவிக்கு கோவம் வந்திருச்சாம்!

இப்படியே கதை ஒரு 10 நிமிசத்துக்கு போச்சுங்க. அதுக்கப்பறம்தான் கூத்து! பர்சனல் கேல்விகளா வந்து விழுகுது! எனக்கு தெரியாதா இவனுங்க ஹிஸ்டரி! பூந்து விளையாடிட்டேன்!

"நான் டிகிரி எப்போது முடிப்பேன்?"
4 YEARS (23 அரியரை வேற எப்ப முடிக்கமுடியும்?)
"எனக்கு எப்ப கல்யாணம்?"
3 வருசம்
"பொண்ணு யாருன்னு தெரியுங்களா?"
Y-O-U K-N-O-W A-L-R-E-A-D-Y

ஒய்ஜா போர்டு கொண்டுவந்தவன் கேட்ட கேள்விதான் இது! விடுவனா?

"பொண்ணை நான் பார்த்திருக்கனுங்களா?"
"Y-E-S Y-O-U-R C-L-A-S-S-M-A-T-E"

பயங்கர அதிர்ச்சிங்க அவனுக்கு! இருக்காதா பின்ன?

"அவங்க பேரு சொல்ல முடியுங்களா?"
"G-E-E-T-H-A"

பய அதிர்ச்சில செத்துட்டான். இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவனே மேலோகம் போய் ஒய்ஜா போர்டு மூலமா பதில் சொல்ல வந்திருப்பான்! அந்த கீதா வேற யாரும் இல்லைங்க. இவனுக்கு பிடிக்கவே பிடிக்காத இவனை லவ் பண்ணலாம்னு பலமுறை தூது விட்டு இவன் தலைகீழா நின்னு தப்பிச்சி வந்த பொண்ணோட பேரு! இப்படிப்பட்ட தாங்க முடியாத அதிர்சிகரமான தகவல்களோட அன்னைக்கு எங்க ஆவிகளுடனான கலந்துரையாடல் முடிஞ்சது! அதுக்கப்பறம் ஒரு வாரம் கழிச்சு "நான் தாண்டா காசை வேணும்னே நகர்த்தினேன்" அப்படின்னு சொன்னாலும் ஒரு பய நம்பணுமே! "போடா சும்பை.. அன்னைக்கு நீ வெளிரிப்போய் உட்கார்ந்திருந்தது எங்களுக்குத்தான் தெரியும்"னனுங்க! இதுக்கு மேல என்ன சொல்ல? இன்னைக்கு அவனுக்கு ரம்யான்னு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் ஆனதுக்கப்பறமும் இதை சொன்னா திரும்பவும் யோசிக்கறானே தவிர நான் சொல்லறதை எவன் நம்பறான்? அன்னைக்கு எனக்கு ஒன்னும் ஆகலையான்னு கேக்கறீங்களா? அந்த அரையிருட்டுல அமைதியா ஒருமணிநேரம் இருந்ததுல எனக்கே ஒருமாதிரி ஆகி நைட்டு ஒன்னுக்கு போறதுக்குக்கூட பயந்துபோய் போகாம படுத்திருந்த்தேன்! ஒருவேளை ஆவிங்க பேரை வைச்சு விளையாண்டதுல நெஜமாவே ஆவிங்க இருந்து கோவமாகி என்னை அடிச்சிருச்சின்னா??? என்னதான் அது என் செல்லத்தாத்தா ஆவியா இருந்தாலும்!?

இந்த அறியாமை மேட்டரு இன்னொன்னு சொல்லறேன் கேளுங்க! போட வாரம் நைட்டு வழக்கம் போல என் வீட்டாரு "செல்வி"லயும் நான் என் மடிக்கணினிலையும் மூழ்கியிருக்க ஹால்ல விளையாண்டுக்கிட்டு இருந்த என் பொண்ணு சந்தோசமா "ஹீய்.. ஹீய்"னு கத்த ஆரம்பிச்சா! என்னடான்னு போய்பார்த்தா முதுகுத்தண்டு சில்லிட்டுப்போச்சுங்க! ரெண்டாவது மாடில இருக்கற எங்க வீட்டுக்குள்ள ஜன்னல் வழியா சும்மா ரெண்டடி நீளத்துக்கு கருகருன்னு ரெக்கையோட ஒரு வவ்வால்! உடம்பு ஒரு எலி சைசுக்கு இருக்கு. வயசான கிழட்டு வவ்வால் போல பறக்கப்பாக்குது முடியலை! அப்பறம் செல்வியாவது ஒண்னாவது? வீடே அலறுது! என் புள்ளையைத்தவிர! அவ ஏதோ புது விளையாட்டுசாமன் போலன்னு தாவித்தாவி புடிக்கறதுக்கு போறா! பேட்மேன் படம்னும் ஜியாஃரபி சேனல்னும் நிறைய வவ்வால் கதைகளை பார்த்திருந்தாலும் நேர்ல பாக்கறதுக்கு என்னன்னே புரியாத ஒரு பயம்! அருவருப்பு! லைட்டை எல்லாம் அணைச்சுட்டா வெளில பறந்துரும்னு அணைச்சா, அது நேரா கெளம்பி ஒரு ரவுண்டு பறந்துட்டு லைட்டு எரியற பாத்ரூமுக்குள்ள போயிருச்சுங்க! கொதிக்கற சட்டில இருந்து எரியற நெருப்புல விழுந்தாமாதிரி நெலமை எங்களுக்கும் அதுக்கும்! வீட்டுல ஒரே ஆம்பளை நாந்தான்! தப்பிக்க வழியே இல்லை! மெதுவா பாத்ரூம் கதவுல ஒளிஞ்சுக்கிட்டு எட்டிப்பார்த்தா நடுநாயகமா டைல்ஸ்மேல இறக்கையை விரிச்சி ரெண்டடிக்கு படுத்திருக்கு! எலி மாதிரியான மூஞ்சை இப்படியும் அப்படியும் திருப்பி பறக்கறதுக்கு பாக்குது! முடியலை! கையில பிடிச்சா வெளீல விடமுடியும்? பயங்கர ஐடியா யோசிச்சு கொஞ்சம் தண்ணியை தரைல ஊத்துனேன்! அது சடார்னு கெளம்பி லைட்டை சுத்தி ரெண்டு ரவுண்டு பறந்துட்டு முடியாம டாய்லெட்ல விழுந்துருச்சு! என்ன பண்ணறதுன்னு தெரியலை! ஒரே செகண்டுதான் யோசிச்சேன்! டபார்னு பாய்ஞ்சுபோய் டாய்லெட் லிவரை இழுத்துவிட்டுட்டேன். அவ்வளவுதான். 10 செகண்டுல காணாமப்போயிருச்சு! அதுக்கு அப்பறமும் சந்தேகமா ரெண்டு பக்கெட்டு தண்ணியை பிடிச்சு ஊத்தி மொத்தமா ஜலசமாதி ஆக்கியாச்சு!

வீட்டுல எல்லாரும் TVயை அணைச்சுட்டு அமைதியா இருந்தோம். என் மனைவிதான் மெதுவா கேட்டாங்க.. "ஏங்க... அதை கொல்லாம வெளிய துரத்தியிருக்க முடியாதா?" எனக்கும் வருத்தமா போச்சுங்க.. வழிதவறி உள்ள வந்ததுதான் அது பண்ண தப்பு. மத்தபடி அதை கொன்றதெல்லாம் வவ்வாலைப்பற்றிய எனது பயம் என்ற அறியாமையையே தவிற வேறென்ன? நாலைஞ்சு நாளைக்கு காலைல உள்ள போகும்போது மட்டும் கொஞ்சம் வருத்தமா இருந்தது. அப்பறம் சரியாயிருச்சு.

இந்த ஒரு வயசுல என் பொண்ணுக்கு தூங்கவைக்கறதுக்கான "கூர்க்கா மாமா.. பாப்பா தூங்கலைன்னா வந்து பிடிச்சுக்கிட்டு போ!" அப்படிங்கற நாங்க ஏற்படுத்தின பயத்தை தவிர வேற ஒரு பயமும் இல்லை! இப்பவும் செவுத்துல பல்லிய பார்த்தா "..ல்லீ,...ல்லீ" சந்தோசமா பிடிக்கறதுக்கு ஓடறாளே தவிர பல்லியைப்பற்றிய எங்களது பயம் அவகிட்ட சுத்தமா இல்லை! ம்.. யோசிச்சா இவளும் நாம வச்சிருக்கற அத்தனை பயமும் மூடநம்பிக்கைகளையும் சேர்த்துக்கிட்டு நம்மை மாதிரியே வளருவாளா இல்லை தெளிவான விசயங்களை இப்போதிருந்தே எடுத்துச்சொல்லி தெளிவா வளர்த்தப்போறமான்னு குழப்பமாவும் பயமாவும் தான் இருக்கு...

கருத்துகள்

  1. இளவஞ்சி, ஒரு விஷயம் கவனிச்சீங்களா........மொத்தம் பத்து பரிந்துரைகள். ஆனா யாருமே பின்னூட்டம் போடலை. பயந்துட்டாங்கன்னு நெனைக்கிறேன். ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  2. இங்க ஒரு பயம் பாருங்க http://tamilkudumbam.blogspot.com/2005/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. செம அலும்பலுங்க :-)))))

    இந்த அம்மை மாதிரி நாங்க, எங்க நண்பன் ஒருவன் பார்க்குற பொண்ணு ஒருத்தியின் அண்ணன்னு போன் செஞ்சு செம கலாசலு ;-)

    இதே ஒய்ஜா போர்டு,எங்க விடுதிலயும் நடந்து இருக்கு , நல்ல ஞாபகப்படுத்தீட்டீங்க போங்க :-)

    பதிலளிநீக்கு
  4. பதிவுக்கான படத்த நீங்களே போட்டீங்களா... ?

    இல்லை............ இந்த படத்துக்கு காப்பிரைட்
    இன்பொர்மேசன் காணோமேனு பாத்தேன் ;-)
    (சும்மா டமாசு .. இப்போத்தான் உங்க அந்த பழைய பதிவப்பாத்தேன்)

    பதிலளிநீக்கு
  5. ராகவன்! அதுதானே! ஒருவேளை இதுக்கெல்லாம் பின்னூட்டம் எதிர்பார்க்கறது என் அறியாமைன்னு நினைக்கறாங்களா? :) இல்லை திடீர்னு என்கூட எல்லோரும் "கா" விட்டுட்டாங்களா!? :(

    அப்டிப்போடு! உங்க பதிவுகளை நான் படிக்காம விட்டதே இல்லை! எதுக்கும் ஒருதடவை போய் பார்த்துடறேன்! சுட்டிக்கு நன்றி..

    யாத்தீகன்! படத்துமேல எலிக்குட்டிய வைச்சா படத்தோட தகவல் கிடைக்கும்.. பாருங்க... எல்லாம் முகமூடி சொல்லிக்குடுத்தது!

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கலக்கல் பதிவு..

    //ஜலசமாதி//

    பாத்துங்க, இப்படித்தான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நியு யார்க்ல டாய்லட் போலுக்குள்ளேர்ந்து முதலையெல்லாம் வந்து கடிச்சுட்டு போகுதுன்னு வதந்தி சுத்திகிட்டுருந்துச்சு.. :)

    --
    என்ன ஒரு அரைமணி நேரமா, தமிழ்மணம் userpanel மற்றும் readers பக்கங்கள் வேலை செய்யலே.. ஏதோ ஜெர்மன்ல திட்டறாங்க. முத்தமிழ்மன்ற திரட்டி மூலமாத்தான் வந்தேன். எனக்கு மட்டும்தானா? இல்ல எல்லாருக்குமா? :(

    பதிலளிநீக்கு
  7. ராம்ஸ்! என்னது முதலையா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! :)

    எனக்கும் அதே கதைதான்! இப்போ தெரிஞ்சிரும்! நாமெல்லாம் தமிழ்மணத்துக்கு எவ்வளவு அடிக்ட் ஆகியிருகோம்னு! :)

    பதிலளிநீக்கு
  8. enakku bayamE illE ... olagam perSu maaplEy.

    பதிலளிநீக்கு
  9. //olagam perSu maaplEy// அனானிமசு.. எனக்கேவா?? :)

    பதிலளிநீக்கு
  10. இளவஞ்சி, ஆரம்பத்துல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துவிட்டாலும், கடைசியில் யோசிக்க வைத்துவிட்டீர்கள். ஸ்கூல் பயம்,
    இருட்டு என்றால் பயம் இதெல்லாம் பெற்றோர்கள் கற்பிப்பதுதான். குழந்தைகள் (சென்னையில்) கரண்டு கட்டானாலும் சுற்றிக்
    கொண்டு இருப்பதைப் பார்த்து பலரும் ஆச்சரியமாய் கேட்டு இருக்கிறார்கள். ஏன் என்றால் இருட்டு-பயம் என்ற வார்த்தையை
    நாங்கள் உபயோகிக்காததால்தான்.
    வெவ்வாலை பிளஷ் செய்தது யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  11. ஐயோ ஈஸ்வர்....வெளையாட்டுக்குச் சொன்னேன். சீரியசா எடுத்துக்காதீங்க.

    இப்படித்தான் சின்னப்புள்ளைல தூத்துக்குடியில ஒருவாட்டி ஒரே பொரளி. ஸ்பிக்குல இருந்து ரசாயனக் கசிவு வருதுன்னு. இன்னொரு போபாலாக தூத்துக்குடி மாறப்போகுதுன்னு. இன்னும் நெறையா....ஸ்பிக் நிறுவனம் இல்லைன்னு சாதிக்குது. ஆனாலும் நாளொரு வதந்தியும் பொழுதொரு வாந்தியுமா போச்சு. என்ன ஆனாலும் ஸ்பிக் கசிவோன்னு மக்கள் கொஞ்சம் திரிஞ்சாங்க. அப்ப ராஜேந்திரன்னு ஒருத்தர் எங்க மாமாவைப் பாக்க வருவாரு. "வக்கீல் சார். ஒங்களுக்கு விவரந் தெரியுமா! நேத்து ராத்திரி முழுக்க தூத்துக்குடில விஷவாயு இருந்ததாம். அப்படியே ஒரே மூட்டாமா தெரிஞ்சதாம். ராத்திரில வெளிய வந்தவங்களுக்கு அந்த மூட்டம் நல்லா தெரிஞ்சதாம். விடியக்காலைல நான் எந்திரிச்சேன் சார். என்னவோ நெஞ்சடைக்குற மாதிரி இருந்தது. தண்ணி குடிக்கனும் போல இருந்தது.......அப்புறம் பாத்தா இப்படிச் சொல்றாங்க. இப்படி காத்துலயும் வெசத்தக் கலக்காங்களே சார்." இப்படிப் போச்சு பேச்சு. ஆனா உண்மையிலேயே ஒன்னும் ஆகலை.

    பதிலளிநீக்கு
  12. //எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )//

    // இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவனே மேலோகம் போய் ஒய்ஜா போர்டு மூலமா பதில் சொல்ல வந்திருப்பான்!//

    :)) வழக்கம் போல செம கலக்கல் பதிவு

    பதிலளிநீக்கு
  13. எல்லாருமே இது மாதிரி கலாட்டா ஏதாவது பண்ணியிருப்போம்தான். ஆனா இளவஞ்சி மாதிரி சொல்லத் தெரியணுமே..

    என் ஓஜா போடு பட்டறிவு (சும்மாதான், experience-க்குத் தமிழ்ச் சொல் போட்டுப் பார்த்தேன்!) கொஞ்சம் வித்தியாசமாய், sentiment-ஆகிப் போச்சு!

    பதிலளிநீக்கு
  14. உஷா, //இதெல்லாம் பெற்றோர்கள் கற்பிப்பதுதான்// நீங்க சொல்லறது சரிதான். எங்களையே எடுத்துக்கங்க.. நைட்டு 2 மணிக்கு எழுந்து ஆட்டம் போடறளவளை "கூர்க்கா வர்ரார்"ன்னு சொல்லித்தான் தூங்கவைக்கமுடியுது.. தப்புன்னு தெரிஞ்சாலும் வேறவழி?

    ஈஸ்வர், குத்துக்கு நன்றி.. //இதுக்கெல்லாம் பின்னூட்டம் எதிர்பார்க்கறது என் அறியாமைன்னு // நான் சொன்னது ரைட்டுங்கறீங்க?? :) தமிழ்லயும் நிறைய எழுதுங்க...

    ராகவன்.. இதேபோல கோவைல குண்டுவெடிச்சப்பவும்! நெஜமாலுமே குண்டு வெடிச்சிருந்தாலும் நாங்களா பேசிமாய்ஞ்சது இருக்கே..!

    சுதர்சன், ஊங்களுக்கு நன்றி...

    தருமி சார்.. அது என்னது sentiment!? உங்களுடைய தனிப்பட்டதா இல்லைன்னா சொல்லலாமே!

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப நல்லா இருந்தது. ரசித்துச் சிரித்தேன். :-)

    பதிலளிநீக்கு
  16. //இவன் just like that அப்பப்ப அங்கங்க அப்படி அப்படியே மானாவாரியா மகசூல் பார்த்துக்கிட்டு இருந்தா //

    //அந்த பயலுக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கு. நமக்கு இன்னைக்கு வரைக்கும் வெளங்கலை! //

    //(எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )//


    ரொம்ப நல்லா பேஷா(பேயா) இருந்தது உங்களின் எழுத்து

    பதிலளிநீக்கு
  17. இளவஞ்சி,
    "வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுண்ணு"..வாத்தியார் பாட்டு தான் ஞாபகம் வருது ...கலக்கலோ கலக்கல் பதிவு .தருமி சொன்ன மாதிரி என்ன தான் நமக்கும் அனுபவம் இருந்தாலும் இளவஞ்சி சொல்லுற மாதிரி வருமா?.பொறாமையா இருக்கு .போய் சுத்திப் போடுங்க.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப நல்லா இருந்தது. ரசிச்சு படிச்சேன். இங்க ஒரு வயசான பாட்டி வீட்டுல வவ்வால் வந்து அவங்க சத்தம் போட்டிருங்காக்க. அவங்க பையன் வந்து பார்த்த போ தெரியல். உன்னோட மருந்துல வந்த பிரமை அப்படீன்னு சொல்லி ஒரு இரண்டு நாளுக்கப்புறமா எங்க ஆபீஸ்லேர்ந்து போய் புடிச்சுட்டு வந்தாங்க.

    பதிலளிநீக்கு
  19. குமரன், கல்வெட்டு.. நன்றி...

    ஜோ, //போய் சுத்திப் போடுங்க.
    // அதிசரி! :)

    தேன்துளி..//உன்னோட மருந்துல வந்த பிரமை அப்படீன்னு // உங்களுக்கேவா? consumer court போகாம விட்டாங்களே! :)

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப நல்லா இருந்தது. ரசித்துச் சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  21. தருமி சார்.. அது என்னது sentiment!? உங்களுடைய தனிப்பட்டதா இல்லைன்னா சொல்லலாமே!//
    ஒண்ணும் பெருசா இல்ல, இளவஞ்சி. just, இப்பத்தான் ஒரு 32 வருஷத்துக்கு முந்தி, கல்யாணம் ஆன புதுசு. வீட்டுக்காரம்மாவும், அவுங்க தங்கச்சியும் சேந்த்துக்கிட்டு நமக்கு ஒரு டெமோ கொடுத்தாங்க. நான் நம்ப மாட்டேன்னு சொன்னதும், வீட்டுக்காரம்மா என்ன ஜோடி சேத்துக்கிட்டு அத prove பண்றேன்னு சொல்ல, களத்தில இறங்குனோமா...முதல்ல எல்லாமே தாத்தா, பாட்டின்னு கூப்பிட்டாங்க. வச்சிருந்த பத்து பைசாவுக்கு அவங்க மசிய மாட்டேன்னுட்டாங்க. எட்டணா வச்சோம். அவுங்க நான் இருக்கி அமிக்கிக்கிட்டதாகச் சொன்னாங்க. நான், அவுங்க இழுக்கிறதா சொன்னேன். திடீர்னு எங்க வீட்டுக்காரம்மாவுக்கு இல்லாம போன - ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் - மாமியார் ஞாபகம் வர அவங்கள கூப்பிடறேன்னு கூப்பிட்டாங்க. எப்பவுமே அம்மான்னா நம்ம சதை கொஞ்சம் ஆடிடுமா? ரொம்ப senti-ஆகி, ஓ'ன்னு...விடுங்க...என்ன மனசோ, என்ன மண்ணோ...

    பதிலளிநீக்கு
  22. தாஸு.. ஊக்கங்களுக்கு நன்றி!

    தருமி சார்! பகிர்தலுக்கு நன்றி! //விடுங்க...என்ன மனசோ, என்ன மண்ணோ... // ஒரு விசயத்தை அழகா முடிக்கறதுல உங்களை அடிச்சுக்க முடியாது! :)

    பதிலளிநீக்கு
  23. இளவஞ்சி, கலக்கி எடுத்துருக்கீங்க.. கடைசில செண்டிமெண்டா முடிச்சுருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  24. தியேட்டரில் படம் பார்க்கின்ற திரில்லை கொடுத்துட்டேள்.........

    பதிலளிநீக்கு
  25. காலேஜில நிறைய கலாய்ச்சிருக்கீங்க போலிருக்கு. கொஞ்சம் பாரா பிரிச்சு விடக்கூடாதா.. படிக்கும்போது தெரியாம கண்சிமிட்டிட்டா எந்த வரி படிச்சிட்டு இருந்தோம்னு கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆகுது!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு