முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்!


Image hosted by Photobucket.com


ழைச்சேறின் கலவை தெறிக்கும் குழம்பிய சகதியில் சடுதியில் திருஷ்டியாகிப்பின் காற்றில் ததும்பிப்பிறந்து ஈர்ப்பின் விசையில் கீழாக ஓசையற்றுப் பயணத்துவங்கி மாசற்ற மாசுகளின் மீட்சியின் விளிம்பில் மரிக்கத்துவங்கும் துகள்களின் தெரிப்பில் ஜீவன் அடக்கும் பொங்கிய குமிழிகளின் ஆயுளின் நீளமாய் வாழ்வைக்கரைக்கும் ஒரு துளி சகதியின் பழுப்பு வர்ணமாய்... அடச்சே... இந்த கோணங்கி புஸ்தகத்த இனி தொடக்கூடாது! சரிங்க.. நேராவே சொல்லிடுறேன்! பழுப்பேறிப்போன ஒரு அட்டைப்பொட்டி வீட்டை சுத்தம் பண்ணும்போது கிடைச்சதுங்க! திறந்து பார்த்தால் ஒரு வீரத்தமிழனின் வாழ்வியல் காவியத்தினை படைக்க உறுதுணையளிக்கும் சான்றுகள் (மறுபடியும் பார்றா...! )

என்னோட கஜானா பொட்டிதாங்க அது! படிக்கற வயசுல ஏதேதோ சேர்த்துவச்சிருக்கேன்! ஒவ்வொன்னையும் எடுத்துப்பார்த்தா ஆனந்தக்கண்ணீரும், திகைப்பும், அதிர்ச்சியும், புன்முறுவலும் மாறிமாறி வருது! (ம்ம்ம்.. சிவாஜிக்கு அப்பறம் நவரசத்தையும் காட்ட நம்பள விட்டா வேறே யாரு இருக்கா? )

மொதமொதல்ல வாங்குன ஃபியூமா ஷூவோட சிம்பலும் சைசும் போட்ட சின்ன அட்டை!

ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத என் அண்ணன் ஒரு நாளு வீட்டுல யாரும் இல்லாதப்ப "வெளியே போகும்பொழுது சாவியை சன்னலுக்கு மேலே வைக்கவும்.. Your Brother" என எழுதிய சின்ன கடிதம்!

மராத்தான் போட்டி ஆரம்பிச்சபிறகு ஓடறதுக்கு ஒரு புள்ளைங்களும் வரலைன்னு தெரிஞ்சவுடன் சாவகாசமா டீக்கடைல தேங்காபன்னு தின்னுட்டு அப்பறம் டவுன்பஸ்ஸு புடிச்சு போய் இறங்கி வாங்கிவந்த "Participation" சர்டிபிகேட்டு!

"தங்கள் மகன் இன்றைய தினம் வகுப்புக்கு வரவில்லை" என அறிவிக்கும் வசந்தி மேடத்தின் கையெழுத்துப்போட்ட 52 அஞ்சலட்டைகள்!

நான்கு ஆண்டுகளுக்கான என பரிணாம வளர்ச்சியை படிப்படியாய் அறிவிக்கும் என் போட்டோ ஒட்டிய பரிச்சை
ஹால்டிக்கட்டுகள்!

ஒரு செமஸ்டர் முழுவதற்கும் ஒரே ஒரு பேப்பரில் மீண்டும் மீண்டும் எழுதி எழுதி இப்போது மசியில் மட்டுமே ஒட்டியிருக்கும் ஒரே ஒரு பக்க மைக்ரோப்ராசசர் நோட்ஸ்! (அப்பறம் மார்க்குசீட்டுல "004"ன்னு வராம வேற என்ன வரும்?)

மொதல்ல பேண்ட்டா வாங்கி 4 வருசம் ஓடாதேஞ்சு கிழிஞ்சு அதுக்கப்பறமும் டவுசரா மாறி உடல், பொருள், ஆவி என அனைத்தையும் என் உடம்புக்களித்த நான் முதன்முதலில் வாங்கிய Killer ஜீன்ஸோட செவ்விந்திய முகம் பதிந்த பொத்தான்!

கசங்கிய நிலையில் கரையான் அரித்த நிலையில் இப்பொழுது இருக்கும், பல ஆண்டுகளாக என் அறையின் சுவற்றில் எப்பொழுதும் என்னையே பார்த்துச்சிரித்தபடி இருந்த ஸ்டெப்பிகிராப் போஸ்டர்! இப்பொழுதும் அதே சிரிப்பு!

கல்லூரி டூருல வாங்கிய பிளாஸ்டிக் கவர் போட்ட பாண்டிச்சேரி அன்னையின் கையடக்க படம்... அதனுள் ஒரு ரோஜாப்பூவும், ஒரு நீண்ட தலைமுடியும் வெகுநாட்களாக வைத்திருந்து அகற்றிய தடம்!

ரெக்கார்டு நோட்டுக்குள் ரகசியமாய் வைத்திருக்கும் "அன்று ரோமில் நடந்த கதை.. புரூட்டஸ்! நீயுமா!? நேற்று நம்முள் நடந்த கதை... நண்பா! நீயுமா!?.." என ஆரம்பிக்கும் "துரோகத்தில் மலர்ந்த காதல்" என தலைப்பிட்ட நான்கு பக்க முதல்கவிதை! (இப்போ படிச்சா சிரிப்பு தாங்கலைங்க..)

அடடா... ஒவ்வொண்ணைப்பத்தியும் ஒரு பதிவு போடலாம் போல! வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு குட்டி அருங்காட்சியகம் அவசியம் வேணும்ங்க! வந்து வசமா மாட்டுனவனுங்க கிட்ட என்னமாதிரி பழங்கதை சொல்லி அறுக்கறதுக்கு இல்லைன்னாலும், என்னைக்காவது எடுத்துப்பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு சின்ன கிளுகிளுப்படையறதுக்கும் மொகத்துல ஒரு மந்தகாசமான புன்னகையோட கொஞ்சநேரம் மெதக்கறதுக்கும்!

கருத்துகள்

  1. வல்லவனுக்குப்
    புல்லும் ஆயுதமாம்.
    இளவஞ்சிக்கு
    பழங்குப்பையும் காவியமாகுமாம்.

    பதிலளிநீக்கு
  2. என் பழைய அட்டைப் பொட்டி எங்கேன்னு தெரியலையே?

    போட்டும், எல்லாம் மனசுக்குள்ளெயே இருக்குது!

    நல்ல பதிவு.
    கொசுவர்த்திச் சுருளை 'ஹோல்சேல்' கடையிலேதான் இனிமே வாங்கணும் போல.
    ஒண்ணொண்ணாய் வாங்குனா கட்டுப்படியாவரதில்லைப்பா.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு இளவஞ்சி. என் அட்டைப்பெட்டி அம்மா வீட்டிலே!

    //கொசுவர்த்திச் சுருளை 'ஹோல்சேல்' கடையிலேதான் இனிமே வாங்கணும் போல. ஒண்ணொண்ணாய் வாங்குனா கட்டுப்படியாவரதில்லைப்பா.//


    ஹஹ்ஹஹ்ஹா :O)

    பதிலளிநீக்கு
  4. அடப்போங்கங்க......
    சும்மா பழசையே கிளறி விடறீங்க.....

    நானும் போய் என் பழைய அட்டைப்பெட்டிய பாக்கணும்
    ஸ்கூலு படிக்கும் பொழுது எங்கப்பா பழைய பேப்பர்காரன் கிட்ட இதெல்லாம் போடாதடான்னு சொன்னாரு.
    ம்ம்ம்ம் எங்க வீட்லயும் ஒரு அருங்காட்சியகம் இருக்குதுல்ல

    பதிலளிநீக்கு
  5. இந்த அருங்காட்சியகம் எல்லாரோட வீட்டுலயும் இருக்கும் போல. நம்ம அருங்காட்சியாகத்தை ஒரு மரப் பொட்டில வைக்கப் போய் பாதிய கரையான் தின்னுடுச்சு.

    பதிலளிநீக்கு
  6. தருமி.. இது கொஞ்சம் ஓவரு! :)

    துளசியக்கா! "கொசுவர்த்திச் சுருளை 'ஹோல்சேல்' கடையிலேதான் "!!! வாழ்க உங்கள் நகைச்சுவை உணர்வு!

    ஷ்ரேயா! அங்க புதுசா ஒரு களஞ்சியத்தை ஆரம்பிச்சிருங்க!

    கணேசு.. அப்பா சொன்னது கரெக்ட்டு. அதெல்லாம் பொக்கிஷங்க.. எடைக்குகிடைக்கு போட்டுடாதிங்க!

    சுதர்சன், பொருளுகளை கரையான் அரிக்கலாம். ஆனா மனசிலிருக்கும் நினைவுகளை! (அடடா.. புதிய தத்துவம் 8734234! :)

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஹீம்.. (ஒரு பெருமூச்சுதேன் !!!) அழகி படம் திருப்பி பார்த்த உணர்வு.. :-D

    அந்த கவிதய போட்டா.. நாங்களும் ரசிப்போம்ல அண்ணாச்சி... ;-)

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் என்ர பழையபெட்டிகளக் கிளற ஆசைதான். அதெல்லாம் நடக்கிற காரியமா?

    பதிவு நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  9. //ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத என் அண்ணன் ஒரு நாளு வீட்டுல யாரும் இல்லாதப்ப "வெளியே போகும்பொழுது சாவியை சன்னலுக்கு மேலே வைக்கவும்.. Your Brother" என எழுதிய சின்ன கடிதம்// sweet anna eluthinathellam vachirukinga.

    பதிலளிநீக்கு
  10. //ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத என் அண்ணன் ஒரு நாளு வீட்டுல யாரும் இல்லாதப்ப "வெளியே போகும்பொழுது சாவியை சன்னலுக்கு மேலே வைக்கவும்.. Your Brother" என எழுதிய சின்ன கடிதம்//

    நானும் இது போல் ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். ஓரு சண்டைக்குப் பின் வந்த பிறந்தநாளுக்கு, என் தங்கை தன் கைப்பட செய்து கொடுத்த ஒரு வாழ்த்து அட்டை. ஒரு இதயம் போல் இருக்கும் அந்த அட்டையின் முதல் பக்கத்தைத் திறந்தால், "நீ உடைத்த என் இதயத்திலிருந்து, ஒரு வாழ்த்து" என்று. இப்போது படிக்கும் போது புன்னகை வரவழைக்கிறது. ஆனால், அப்போது அப்படி எழுதியதற்காவே நான் இரண்டு நாள் அவளிடம் சுமுகமாக பேசவில்லை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு