முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னயும் ரசூலும்

Related imageங்களுடைய சொந்த ஊர் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? திருச்சி மலைக்கோட்டை கோவிலின் உச்சியில் படிகளில் அமர்ந்து திருச்சியை பார்க்குமிடம் உங்களுடன் ரகசியமாய் கைகோர்த்து வந்தவரால் பிடித்திருக்கக்கூடும். கோவை கிராஸ்கட் ரோடு சேட்டுக்கடை பானிபூரியின் சுவை ஜமா சேர்ந்த நண்பர்களால் சிறப்புற்றிருக்க கூடும். ஸ்ரீரங்கம் கூட வாத்தியாரும் நீங்களும் பிறந்த ஊர் என்பதற்காகவே ஒட்டிப்போக வாய்ப்புண்டு. ரசூலுகுக்கு கொச்சின் ஏன் பிடிக்கும் என்பதற்கு நட்பு தவிர வேறு காரணியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு வழியும் இருந்திருக்காது போல. இரண்டாம் திருமணம் முடித்த அப்பா பெண்டு பிள்ளைகளோடு வேறு ஊரில் ஜாகையாயிருக்க கொச்சினில் ரசூலும் அவன் அண்ணனும் மட்டுமே திரைச்சீலைகள் பிரிக்கும் ஒரே அறை வீட்டில் பொங்கித்தின்று வாழும் வாழ்க்கை. வயதுக்கு வந்த பிரமச்சாரி அண்ணன் தம்பிகள் இரண்டுபேர் ஒரே வீட்டில் இருக்கையில் பழகும் முறையை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் நீர்முட்டி வலியினை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சந்தோசமாக இருக்கும் பொழுதில் கட்டிப்பிடித்து உச்சிமுகர தேவையில்லை. பிரச்சனைகளை மணிக்கணக்கில் பேசிப்பேசி மாய வேண்டியதில்லை. ‘ப்ச்’, ‘என்னடா?’, ‘இந்தா..’ என்று எல்லாம் ஒரு வார்த்தை பேச்சுக்கள்தான். அவைகள் ஆயிரம் விளக்கங்ளையும் புரிதல்களையும் கொடுக்க வல்லவை. 60 வருட தாம்பத்தியத்தின் பேச்சுகளற்ற வாழ்வைப்போல. அண்ணனுக்கு அயல்நாடு போக வேண்டி பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்கிற கனவுகளுடன் பெர்ரியில் தண்ணீர் மேல் வேலை. தம்பிக்கோ எவ்வித கனவுகளுமற்று கிடைத்த சவாரிக்கு டாக்ஸி ஓட்டிக்கொண்டு சாலை மேல் வேலை.
Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#4 of 10)இருவருக்குமே உறையுள் பற்றிய பெருங்கவலைகள் ஏதுமில்லைதான். ஏமாற்றங்களும் ஏகாந்தமும் சேரும்பொழுது ஒருவித விட்டேத்தியான மனநிலை வருமல்லவா? அதைக்கொண்டு இருவருக்கும் வாழ்க்கை கட்டஞ்சாயாவும், மீன்கறி சோறும், நண்பர் சந்திப்பும், தெருமுக்கு கால்பந்தாட்டமுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் அனுக்கமாய் சொல்ல வேண்டுமெனில் கொச்சினுக்கும் வைபினுக்கும் இடையே ஓடும் ஃபெர்ரியைப் போல ஆசூசையாகவும் அத்தியாவசியமானதாகவும்.


Image result for annayum rasoolumரசூலைப்பற்றி சிலாகித்துச் சொல்ல சிலதுண்டு. ரசூலுக்கு நிர்ச்சலமான கண்கள். அவைகளோடு அந்த கருத்த தாடிக்குள் ஒளிந்து விளையாடும் வெள்ளந்திச் சிரிப்பும் சேரும்போது அவனை யாருக்கும் உடனே நம்பவும் பிடிக்கவும் வைத்துவிடுகிறது. குழந்தைகளின் கண்களை அவதானித்திருக்கிறீர்கள் தானே? மனதில் சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் குடியேறாத வரையில் கண்கள் ஒருவித ஈர்ப்பாகத்தான் இருக்கின்றன. குழம்பியும் கலங்கியும் அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களைக்கொண்ட நமக்கு இயல்பான கண்களே ஈர்ப்பாக இருப்பது அதிசயமில்லைதான். அவனுடையது ஓஷோவின் கண்களைப்போல. ஆண்களில் வெகு அபூர்வம் இவ்வகை முகவமைப்பு. இவ்வகை ஈர்ப்பே அவனுக்கு கார்திருட்டு, சில்லரை அடிதடி என சிற்சில சமுதாயக்குற்றங்கள் புரியும் நண்பர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக வைத்திருக்கிறது. பிடிக்காமலேயே பிடித்த நண்பர்களுக்காக உடன்போகவேண்டிய சூழல். கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது.

Image result for annayum rasoolumவாழ்க்கை என்ன குளித்தலை ஊத்துக்குளி வெண்ணையா? அப்படியே வழுக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதற்கு? அது யாரையாவது நகர்த்திக்கொண்டு போய் யார் அருகிலாவது வைத்துவிட்டு சிரிக்கிறது. ஒரு முறை வைபினில் புதிதாய் சேர்ந்த கிருத்துவ நண்பனது நாட்டு விசேசத்திற்காக சென்ற இடத்தில் கூட வந்த நண்பர்களின் அலப்பரை அதிகமாய்ப் போக சடுதியில் ஆரம்பித்த அடிதடிக்கு பயந்து ஒளிந்துகொண்ட இடத்தில்தான் ரசூல் அன்னவை பார்த்தான்.

நான் முதன்முதலில் அன்னவைக் கண்ட இடம் உண்மையில் அவளை முதன்முதலில் பார்த்த இடமல்ல! அவளை இதற்கு முன்பு ஒருமுறை நண்பர்களுக்காக கார் திருடிக் கொண்டு வந்த வழியில் கண்டிருக்கிறேன். பயத்திலும் பதட்டத்திலும் கோவத்தின் விளிம்பிலும் இருந்த கணம். சரியாக முகம் மனதில் பதியவில்லை எனினும் நினைவில் நிழல் என விழுந்துபோன ஒரு உருவமாய் அவள். நிலவொளி சிதறும் கலங்கிய நீரின்மீது அகல்விளக்கு மிதக்க விடும் பெண்ணின் பிம்பம் பிரதிபளித்தது போல கண்கள் விரும்பிக் கண்டும் காணாததுமாய்.  ஆனால் அன்றைக்கு அவளுக்கு நானொரு பொறுப்பற்ற சல்லிப்பயல் என மனதில் விழுந்திருக்க வேண்டும்.

Image result for annayum rasoolum movie stillsஇன்று வந்த வம்புசண்டையின் விளைவாக வாங்கப்போகும் அடிகளுக்கு பயந்து நான் அவசரத்திற்கு ஒளிந்துகொள்ள கிடைத்த இடம் கடவுளின் பிரார்த்தனைகளுக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றும் மேடையின் அடியில். நண்பர்கள் தப்பிவிட்டார்களா என எட்டிப்பார்க்கும் வேளையில் தான் அவள் கையில் ஒரு மெழுகுடனும் தலையைச்சுற்றி முக்காடிட்ட துப்பட்டாவுமாக மேடையின் அருகில் வந்தாள். இரவில் சிதறி மிளிரும் சரவிளக்கொளிகளின் பின்னணியில் கைகளில் இருக்கும் ஒற்றை மெழுகின் வெளிச்சத்தில் அவள் ஒரு தேவதை வானில் இருந்து இறங்கி வருவதைப்போலத்தான் யாருக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கென்னவோ அவள் ஒரு சாமானியனான எனக்கென படைக்கப்பட்ட ஒரு இயல்பான பெண் நான் பார்ப்பதற்கெனவே அந்த நேரத்தில் விளக்கேற்ற அந்த கணத்தில் அவளது ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்டதாக மட்டுமே தோன்றிற்று.

Related imageஅழகாய் இருப்பதனால் மட்டும் ஒரு பெண் மனதிற்கு பிடித்துப்போவதில்லை. மனதிற்கு பிடித்துப்போவதால் தான் ஒருத்தி அழகாகிறாள். அன்னவுக்கு ஒல்லி உடம்பு. ஒடுக்கு முகம். ஒன்றாம் வகுப்பு பையன் க்ரையானில் வரைந்துவிட்ட பறவையைப்போல புருவம். நீட்டித்த கூரான விடைத்த மூக்கு. சதைப்பற்றில்லாத கன்னங்களில் சிறுசிறு சிவப்பு புள்ளிகளாக பருக்கள். மேலுதட்டை வலிந்து மெலிதாய்க் காட்டும் திரட்சியான கீழுதடு. அவை முழுக்க நேர்கீழாய் பாயும் வரிகள்மீது படியும் எச்சிலின் ஈரத்தை மினுமினுப்பாக மாற்றும் ஒளியின் விளையாட்டு. உதடுகள் இணையும் விளிம்பின் சிறுகுழியில் ஒளிந்திருக்கும் அந்த ஒரு துளி ரசவாதம் மட்டுமே வெளிக்காட்டுகிறது அவளது மகிழ்ச்சியோ துக்கத்தையோ. அன்னவின் கண்கள் பெரியன. ஆனால் அவைகள் எதுவும் பேசுவதில்லை. மனதின் கவலைகளை வெளித் தெரியாவண்ணம் மறைத்து அவைகள் எப்பொழுதும் எங்கோ வெறித்தபடியோ உள்வாங்கியோ இருக்கும். அந்த கண்களில் எதுவும் எவனும் எளிதில் படித்துவிட இயலாது, அவளது தந்தை உட்பட.

அன்னவுடனான அறிமுகமும் நட்பும் எந்த ஊரில் எந்த கிறித்துவ நண்பனை பார்க்கச் சென்று அடிகள் வாங்க இருந்தோமோ அந்த நண்பனிம் மூலமே ஏற்பட்டது. அவனது வீடு அன்னவின் எதிர்வீடாய் அமைந்தது இறைவன் எங்களுக்கு ஏற்கனவே இப்படித்தான் என எழுதி வைத்துவிட்டதனால் இருந்தாலும் அவனது அறையின் சன்னல் எப்படி எனது அகத்தின் வாசலாய் மாறி அன்னவின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தது என்பதுதான் ஆச்சரியமாய் மாறிற்று. அந்த சன்னலும் நானும் அன்னவின் ஒரு நொடி தரிசனத்திற்காக காத்திருந்த பொழுதுகள் சொல்லில் சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியும் ஏக்கமும் நிரம்பியவை. ஆனால் என்ன? ஏக்கங்கள் வாழ்வினை வளப்படுத்தாவிடினும் நினைவிலாவது நினைத்ததை உணரவைக்க இயலுமெனில் இருந்துவிட்டு போகட்டுமே? தூரத்து நெருப்பின் ஒளியில் குளிர்காயும் வறியவனைப்போல.

Image result for annayum rasoolumஅன்னவை பார்க்கப்பார்க்க மிகவும் பிடித்துப்போயிற்று. காலையும் மாலையும் அவளுடன் ஃபெர்ரியில் பயணிப்பது அவளுக்காக மட்டுமே என்பது அவளும் அறிந்திருக்கத்தான் வேண்டும். உதட்டின் விளிம்பில் அவள் காட்டும் ஒரு துளி ரசவாத மந்திர புன்னகைக்காக எத்தனைமுறை வேண்டுமென்றாலும் அவள் பின்னே அலைந்துவிட உடலும் மனதும் துடிக்கத்தான் செய்கிறது. ஒரு பெண் நாம் அவள் பின்னால் சுற்றுவதை அறிந்துவிட்ட அந்த கணத்தில் இருந்து அவள் அவள் மட்டுமே அல்ல! அவளுள் ஒருத்தி நமக்காக விழிக்கிறாள். பார்வையால் தேடுகிறாள். உடைகளை அடிக்கடி திருத்தி கவனயீர்ப்பு தீர்மானம் போடுகிறாள். முகம் திருப்பாமலேயே முதுகின் வழி நம் பார்வையை உணர்கிறாள். வெளிப்படும் பரவசத்தினை அவளது உச்சிமுதல் பாதம்வரை அனைத்து அனுக்களும் மறைக்கத்தான் முயல்கிறது. முடிகிறதா என்ன?  இரண்டு பேருக்குமான இந்த விளையாட்டு மக்கள் நிறைந்த சந்தைக்கு நடுவில் நின்று கதறிக் கொள்வதுபோல. சத்தத்துக்கு பதிலாக சத்தமே. எல்லோருக்கும் கேட்டாலும் யாருக்கும் கேட்காத மிகையொலி அவை. உணர்பவர்களுக்கே அதில் சேதியுண்டு.

அம்மா இல்லாத ஆண்கள் உண்மையில் அம்மாக்களை தேடுவதில்லை. அம்மாவின் அரவணைப்பும் கதகதப்பும் எங்கேனும் கிட்டிவிடாதா என்ற தேடலே எல்லாப் பெண்களின்  முகங்களையும் ஆழப்பார்க்கச் செய்கிறது. பார்க்கும் முகங்களில் ஒரு சிலவே நட்பாகவோ கூடப்பிறந்தவளாகவோ உணரச்சொல்கிறது. ஒரு நிமிடம் மட்டுமே கண்டதாயினும் ஒரே ஒரு முகமே பட்டென மனதில் விழுந்து இவள் எனக்கானவள் என்ற இணைப்புக்கு பதியம் போடுகிறது. அன்னவின் விலா எழும்புகள் ஒரு புதிர்தேசம்! சட்டென பார்க்கையில் அவைகள் கழுத்தினை தாங்கிப்பிடிக்கும் பீடமாகத்தான் தெரியும். ஆனால் உண்மையில் அவை மெலிந்து கீழ்நோக்கிக் குவிந்த அவளது சிறுமுலைகளை ஏற்கும் கேடய விளிம்பின் முனைகளெனவோ அல்லது எடைகளற்ற அச்சிறு பஞ்சுப்பொதிகள் நிரவிய மேடிட்ட பகுதிகள் சிறுநீரலைகள் தளும்பும் ஏரிக்கரையினையோ ஒத்திருக்கும். இருந்தும் இல்லாமலும் புடவையின் முந்தானைக்கடியில் விளையாட்டுக் காட்டும் அவையிரண்டும் புதிரின் விடையறிய ஏங்கித் திணறும் என்மேல் என்றைக்கும் இரக்கம் காட்டியதில்லை.


Image result for annayum rasoolum actressபுடவைக்கடையில் வேலை செய்யும் அவளுக்கு சேலைகட்ட யாரும் வகுப்பெடுக்க வேண்டியதில்லைதான். மடிப்புகள் சிறிதும் கலையாத கொசுவமும் பிரித்துவைத்த புத்தகத்தின் பக்கங்கள் போன்ற நேர்க்கோடுகளாக படிந்த முந்தானையும் அணிந்த துணைக்கடை சிலைகள் எல்லோரையும் ஈர்த்துவிடுகிறதா என்ன? அதற்கு நம் உணர்வுகளுக்கு உயிர்ப்பளிக்கும் ஒருத்தி அணிந்து வர வேண்டாமா?  அன்ன அப்படி நடந்துவருகையில் அடித்துப்பிடித்து முன்னால் வந்து அமர்ந்துவிடும் அமைதி எனும் பேரழகு. ஆனால் அன்னவை எனக்கு அழகாக காட்டுவது இவையெல்லாம் இல்லை. அளவாய் வெட்டி அலையாய் தோளில் பரவி அலையும் அவளது கூந்தல். மொத்த கூந்தலும் ஒற்றைமுடிச்சில் பின்னந்தலையில் குவிந்து நின்றாலும் காதோரம் எப்பொழுதும் தெரித்து தனித்து விழும் ஒரு கற்றை முடிகள். அவைகளுக்கு இருக்கும் சுதந்திரம் உண்மையில் அன்னவுக்கு இல்லை. அவைகள் எப்பொழுது எப்படி எந்தக்கணத்தில் காதுக்குபின் ஒளியுமோ இல்லை கன்னத்தை தொட்டு விளையாடுமோ படைத்த இறைக்கே வெளிச்சம்.

அன்னவிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் சில வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது ஏற்படுத்திக்கொண்டேன். அவளது செல்போனுக்கு சில குறுஞ்செய்திகளும் அனுப்பிவிட்டு பதில் வந்துவிடாதா என தேவுடு காத்த காலங்கள் அவை. அவள் வேலை செய்யும் புடவைக் கடைக்கே சென்று அவளை பார்த்துக்கொண்டிருப்பதும் அவளுடன் பேசவிழைவதும் அவளுக்கே பிடிக்கவில்லைதான். தொல்லை தாங்காமல் ஒருமுறை அழைத்து உனக்கும் எனக்கும் ஆகாது நம் மதங்கள் வேறு என பல காரணங்களை அடுக்கினாள் ஒருநாள். வரட்டுக் காய்ச்சலின் பிடியில் இருக்கும் ஒருவனுக்கு சூடான டீயும் தொட்டுத்திங்க ஒரு பன்னுமே உடனடித் தேவை. அவளோ நாம் ஏன் பிரியாணி இப்பொழுது சாப்பிட இயலாது என விளக்கிக்கொண்டிருந்தது எனக்கு அசூசையாகவும் கோவத்தையும் வரவழைத்தது. மூளையால் அல்ல, மனதால் ஒன்றை நம்ப ஆரம்பித்துவிட்டால் அதற்கு தர்க்கரீதியிலான பதில்களோ தகவல்களோ தேவையே இல்லை. நம்பிக்கை ஒன்றே எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிட வழி நடத்துக்கிறது. அது என் மீது அன்னவின் விருப்பம் கனியும் காலத்திற்கு என்னை கைப்பிடித்து கூட்டிச் சென்றது.

Related imageகம்பீரக் குதிரையில் ராஜகுமாரன் வந்து கைத்தலம் பற்றி அரசவாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் கனவுகள்  உண்மையில் ராஜகுமாரிகளுக்கே வருகின்றன. வேலையில்லாத பொறுப்புகளற்ற தந்தையும் சகோதரனும் கொண்டு முழுநாள் உடலுழைப்பை கோரும் குறைச்சம்பள வேலையில் குடும்பம் நடத்தும் அன்ன போன்ற பெண்களுக்கு கனவில் எவனாவது ஒருத்தன் வந்து நரகத்தில் இருந்து கைதூக்கி விடமாட்டானா என்பதே கனவாக வரும்போல. கைநீட்டினவர்களுக்கெல்லாம் உழைக்கும் பெண்கள் தூக்கிவிட கைநீட்டிவிடுவதும் விடுவதில்லை. வாழ்வோ சாவோ இவன் நம்முடன் கடைசிவரை வருவான் என்ற ஒரு நம்பிக்கை காதலை பிறக்க வைக்க தேவைப்படுகிறது. அன்னவிற்கும் என்மீது அந்த உறுதியால் மட்டுமே காதல் வந்திருக்க வேண்டும். அது ஆயிரம் நட்சத்திரங்கள் சூழ தேவர்கள் ஆசிர்வதிக்க தேவதைகள் சுற்றி வந்து வாழ்த்துப்பா பாட  வெளிப்படவில்லை. கையில் விரல் சூப்பி அப்பாவின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தை அம்மாவைக் கண்டவுடன் சட்டென கண்ணீர் வழியச் சிரிக்கையில்  வெளிப்படுத்தும்  பளீர்ப்புன்னகை போல அவள் தன் காதலைச் சொன்னாள். என் காதலை ஏற்றுக்கொண்டாள். நான் அவளை விட்டு எப்பொழுதிலும் விலகுவதில்லை என்பதை என் உயிரினில் எழுதிக்கொண்டேன்.

Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#6 of 10)அன்னவுடனான காதல் அவளையும் அவளது வாழ்வையும் புரியவைப்பதில் மிக முனைப்புடன் இருந்தது. அவள் கூட்டிச்சென்ற சர்ச்சில் வைத்து அவளது தோழி நீ மதம்மாற தயாரா எனக்கேட்ட பொழுது எனக்கு உண்மையில் என்ன சொல்வதென தெரியவில்லை. என் மதமோ அவள் மதமோ எவ்வகையிலும் எங்கள் காதல் உருவாக தடையாக இல்லாதபொழுது திருமணம் என்ற அமைப்பிற்குள் வர மட்டும் எப்படி யாருக்கு அது தேவையாக இருக்கும் என எவ்வளவு யோசித்தும் புரியவேயில்லை. மதம் என்பது என் பிறப்பு என்மீது சுமத்தியது. அதனை யார் கண்ணையும் குத்தவோ யாருக்கும் தீங்கு விளைவிக்கவோ இல்லாமல் ஏன் எனக்கே நான் பாதுகாப்பு கவசமாககூட  நினைத்துக் கொள்ளாத பொழுது மாறப்போகும் மதம் மட்டும் எப்படி எனக்கு வாழ்வின் நெறிகளை கொடுத்துவிடும்? என்மதம் தான் பெரிது என்ற உணர்வுக்கூட எனக்கு இல்லாதபொழுது எப்படி உன் மதத்திற்கு மாறிய பின்தான் திருமணம் என்பது அவசியமானதாகப்படும்? என் மதமோ உன் சாமியோ அது ஏற்றுக்கொள்வது என்பதை விட உணரக்கூடியதல்லவா? அவ்வாறில்லையெனில் யாரையோ ஏமாற்ற வேண்டி நாமே ஏமாந்துபோக வேண்டியா இதைச்செய்ய இயலும்? அன்ன என்னை இவ்விடயத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டேன்.

Related imageஅன்னவுக்கு இதைவிட ஒரு பெரிய பயம் இருந்தது. சண்டை சச்சரவென வெட்டியாய் திரிந்துகொண்டிருக்கும் தம்பியை பார்த்துப்பார்த்து வீரம்தான் ஆண்மையென காட்டித்திரியும் ஆண்களை அவள் வெறுக்க தொடங்கியிருக்கவேண்டும். இயல்பிலேயே பேடியான நான் தப்பிக்க வழியில்லாத நிலையிலோ அல்லது குட்டக்குட்ட குனியமுடியாத நிலையிலோ திருப்பி அடிக்க ஆரம்பித்தால் சாது மிரண்ட கதை தான். பழைய பகையை வைத்து மீண்டும் வம்பிழுத்தபொழுது அவளது தம்பியையும் அவனது நண்பர்களையும் நான் கொச்சின் ரோட்டில் வைத்து செங்கலால் அடித்து மண்டை பிளக்கவைத்த காட்சியை கண்ட பிறகு அவளுக்கு என்மீதும் வெறுப்பு வந்திருக்கும். தேடிக் கண்டடைந்தவனும் பொறுக்கித்தனமாய் நடுரோட்டில் வீரம் காட்டியதை அவளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. அவள் தம்பி அடிவாங்கியதை விட நான் சண்டைக்கு நின்றதே அவளுக்கு அதிக வலியை கொடுத்திருக்கக்கூடும்.  அந்த கிருத்துவ நண்பனது வீட்டில் அன்னவை வலியப்போய் சந்தித்து அவளது வலியை உணர்ந்துகொண்ட வேளையில் எனக்குள் இருந்த அந்த சாது மிரண்டால் வெளிப்படும் மிருகமும் கூட அன்னவுக்காய் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அன்றைக்கு பழிக்குப்பழியாய் அவன் தம்பிடம் நான் மாட்டிய நேரத்தில் அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து என்னை பிரித்தெடுத்துவிட்டார்கள். அன்னவுக்காக மரித்துப்போன அந்த மிருகத்தை நான் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கவில்லை. அது என்னால் இந்த ஜென்மத்தில் முடியாது என தெரிந்த கணத்தில் நான் குற்றுயிராய் ஆக்கப்பட்டிருந்தேன். அந்த ஒற்றை நண்பன் மட்டும் என்னை தடுத்தணைத்து ஆட்கொண்டிருக்காவிட்டால் நான் அன்னவின் வீட்டு தெருவிலேயே பிணமாக்கப்பட்டிருப்பேன். அன்றைக்கு எங்கள் காதல் நடுத்தெருவில் யார்யாராலோ மிதித்து சிதறடிக்கப்பட்டது.

ஆண்களுக்கு வீட்டில் இருக்கும் பெண் என்பவள் ஒரு அடையாளச்சின்னம். அம்மா என்றால் அன்பாய் மட்டுமே இருக்கவேண்டும். அக்கா என்றால் அவள் பாசத்தை மட்டுமே காட்டவேண்டும். அவர்களுக்கு வேறு உணர்வுகளோ உறவுகளோ வீட்டு ஆண்கள்  பார்த்து வைத்ததை மீறி நிகழ்ந்து விடக்கூடாது. இந்த பிம்பத்தில் இருந்து சிறிது விலகினாலும் ஆண்களுக்கு அவர்கள் உரிமையின் மேல் அடி விழுகிறது. எனக்கு பத்து பெண்நண்பிகள் என பொதுவெளியில் பீற்றிக்கொள்ளும் ஒருவனால் அவன் தங்கையோ அக்காவோ எனக்கு ஒரு ஆண்நண்பன் எனச் சொல்வதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் வீட்டுக்கு சம்பாதித்துப் போடுபவளாக இருந்தாலும்கூட.

அன்னவுக்கும் வீட்டுச்சிறை கிடைத்தது. அவன் தம்பிக்கு நான் வேறுமதம் என்பதைவிட அவனை அடித்ததுதான் ஆற்றவியலாத வெறி. அவள் அப்பாவுக்கு பெண் வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாற்றுபவள் என்பதைவிட சுயபுத்தியாய் காதலித்துவிட்டாள் என்பது பெருத்த அவமானம். எவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிவைத்து குடும்பமானத்தை காக்கிறோமோ அவ்வளவிற்கு ஊரார் வாயில் விழவேண்டாம் என்கிற நிம்மதி. அன்னவை விட்டு பிரியவேண்டும் என்பது என் விருப்பமோ அவளது விருப்பமோ அல்ல. ஆனால் ஒருவரை ஒருவர் வருத்திக்கொண்டு வரவைப்பதா காதல்? அவளுக்கு வேரொரு ஆளுடன் நிச்சயம் ஆனது. நான் என் அப்பாவுடம் அவரது ஊருக்கு மீன்பிடி தொழிலுக்காக அழைத்து வரப்பட்டேன். இரண்டு குடும்பமும் நினைத்திருக்க வேண்டும் இந்த மாற்றங்கள் நிச்சயமாய் எங்கள் காயங்களை ஆற்றிவிடவேண்டுமென.

வாழ்க்கை எல்லோரையும் எப்பொழுதும் கைவிட்டுவிடுவதில்லை. அது காட்டும் நல்வழியெல்லாம் நண்பன் என்ற உருவிலேயே வருகிறது. அந்த கிருத்துவ நண்பன் என் அப்பாவின் ஊருக்கே வந்து எனைக்கண்டான். அன்னவின் திருமணத் தேதியை சொன்னான். கடைசிவரையில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மருகி கருகிப்போன அவனது காதல் கதையை கேட்டபொழுது எனக்கு அன்னவுடன் ஏன் சேர்ந்து வாழ்ந்துவிட முடியாது எனத்தோன்றிற்று. மனதுக்குள் மருகி தினந்தினம் சாவதைவிட ஒருநாளாவது அவளுடன் வாழ்ந்துவிடுவது உத்தமம் எனப்பட்டது. இப்பொழுதும் எனக்குள் இருந்த மிருகம் செத்துத்தான் கிடந்தது. ஆனால் நம்மை நம்பி இருக்கும் ஒரு உயிரை கைவிடல் ஆண்மையில்லை என்பது தெளிந்தது. நேரே கிளம்பி அன்னவை அவளது சர்ச்சிலேயே கண்டு உண்மையான ஆண்மகனாய் அவள் கைப்பிடித்து நடத்தி அழைத்து வந்த வேளையில் கட்டமைக்கப்பட்ட ஆண்மை எனப்படும் பொய்மைகள் எதனாலும் எங்களை தடுத்து நிறுத்திவிட இயலவில்லை. அன்னவுக்கு என் செயல் பெருத்த ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தாலும் இம்முறை அவள் என்னுடன் வந்துவிட துளியளவும் தயங்கவில்லை. இம்முறை அன்னவை அழைத்துக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன். நண்பனது வீட்டில் தங்கி டிரைவராக ஒரு வேலையைத்தேடிக்கொண்டு அன்னவுடனான திருமணத்திற்கும் தயாரானேன். அவரவர் மதம் அவரவருக்கு என்றபடியே.

Extra Large Movie Poster Image for Annayum Rasoolum (#5 of 10)ஒரு பெண் எப்பொழுது தன்னை ஒருவனுக்கு கொடுக்க விரும்புகிறாள்? காதல் மட்டுமே இருவரை காமத்தில் சென்று சேர்ப்பதில்லை. தனக்காக உயிரையும் ஒருவன் கொடுக்க துணிந்துவிட்டான் என்ற நிலையில் அன்பினால் மட்டுமே படைக்கப்பட்ட ஒரு பெண் பதிலுக்கு என்ன கொடுத்துவிட இயலும்? தன்னையே கொடுப்பது என்பதும் அவளை அவளாகவே வைத்திருக்கும் ஒருவனுக்கு கொடுத்து ஈடு செய்ய முடியாத செயல் தான். இருப்பினும் தனக்கே தனக்கென ஒருவன் தன் வாழ்வில் இருக்கிறான் என அவள் உணரும் அக்கணம் தன்னையே கொடுத்தல் என்பதையே ஒன்றுமில்லாதாக ஆக்கிவிடுகிறது. கொடுக்கப்பட்ட பொருளைவிட கொடுத்த விதத்தில் வெளிப்படும் அளவில்லாத பிரியமும் வாஞ்சையுமே அப்பிணைப்பை பந்தமாக்குகிறது. அன்றொரு இரவில் அன்ன அவளை எனக்குக்கொடுத்தாள். நான் என்னைக்கொடுத்தேன். கொடுக்கும் முத்தத்தை விட பெறப்பட்ட முத்தத்திற்கு சுவை அதிகம். அன்றைக்கு ஒருவர் உடலில் ஒருவர் தேடித்திளைத்தோம். பாதுகாப்பும் எதிர்கால வாழ்க்கையும் கேள்விகுறியாக இருந்த எங்களுக்கு அத்தேடல் மிகத்தேவையானதாக இருந்தது. தேடிக் கண்டடைந்தவைகள் நாங்கள் முன்னேரே கண்ட உன்னதங்களுக்கு சற்றும் குறைந்தவைகளல்ல. அம்மாவிற்குப் பிறகு யாராலும் எனக்கு கொடுக்கவியலாத என்றாகிலும் கிடைத்துவிடும் என ஏங்கித்தவித்து தேடிக்கொண்டிருந்த அரவணைப்பும் கதகதப்பும் அவள் அன்றைக்கு எனக்களித்தாள்.  அந்தக்கணத்தில் நான் உலகத்திலேயே மிகப்பாதுகாப்பான இடத்தில் இருப்பதென உணர்ந்தேன். அவள் அணைப்பிலேயே உறங்கிப்போனேன்.

கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது. கார்திருடும் கும்பலில் இருந்த நண்பர்களில் ஒருவன் பெரியகுற்றங்களாக செய்யபோய் ஒரு நிகழ்வில் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டான். சந்தேகத்தின் பேரில் போலிஸ் என்னைப்பிடித்து சிறைச்சாலைக்கு அனுப்பியது. நிர்க்கதியாய் நின்ன அன்ன அவளது குடும்பத்தாரால் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வலுக்கட்டாயமாக அவளுக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. நான் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட படங்கள் கொண்ட செய்தித்தாள் அவளுக்கு காட்டப்பட்டது. அவள் எங்கிருந்தாலும் எந்தநிலையிருந்தாலும் என்றைக்காவது வந்தழைத்துச்செல்வேன் என்ற நம்பிக்கை அவளை வாழத்தூண்டியிருக்க வேண்டும். ஆனால் நான் மீண்டும் அடிதடி குற்றச்செயல்கள்தான் ஆண்மை என்ற நிலையில் மாட்டியிருக்கும் இந்த சூழல் அவளை நம்பிக்கையிழக்க செய்திருக்க வேண்டும். என்மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டதைவிட அவள் அவள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கவேண்டும்.  எதை நம்பி என்னை விரும்பினாளோ எப்படி நான் இருக்கக்கூடாது என்பதால் என்னுடன் வரத் துணிந்தாலோ அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட அந்த இரவில் அவள் தற்கொலை செய்துகொண்டாள்.

போலீஸின் பிடியில் இருந்து தப்பி ஓடி அவள் வீட்டை அடைந்த கணத்தில் தான் அவளைக் கண்டேன். சடலமாய் வீட்டின்முன் கிடத்தப்பட்டிருந்தாள். இப்பொழுது அந்த வீட்டில் என்னை யாரும் தடுக்கவோ அடிக்கவோ இல்லை. அவளை கட்டியணத்து அழுதேன். அதே ஒல்லியான விரைத்த உடல். கூர்ந்த நாசி, சதைப்பற்றற்ற கன்னங்கள். சிவப்பு பருக்கள். புதிருக்கு விடைதெரிந்த தளும்பாத மார்புகள். கலையாத உடை. பச்சை நரம்புகள் ஓடும் நீளமான விரல்கள். மூடிக்கிடக்கும் பெரிய கண்கள். அசைவற்ற உடல். உதடுகள் இணையும் ரசவாதக்குழியில் இன்றைக்கு எனக்கான எந்த சேதியும் இல்லை. காதோரம் வழியும் அந்த ஒரு கற்றை முடிகள் மட்டும் அவள் முகத்தில் எப்பொழுதும் போல சுதந்திரமாக காற்றில் உருண்டு அலைந்து கொண்டிருந்தது.

வாழ்வில் ஒருமுறை உணரப்பட்ட உன்னதங்கள் எதுவும் நினைவில் இருந்து அழிந்து விடுவதில்லை. அவைகள் நம்முள் ஒன்றாக கலந்துபோய் விடுகின்றன. அந்த உன்னதங்கள் நம் வாழ்வு செல்லும் பாதையை சீரமைக்கின்றன. பிடிவழுவாது மிச்சத்தினை நடந்து கடக்க உதவுகின்றன. அன்ன இப்பொழுது என்னுடன் இல்லைதான். ஆனால் அவள் காதல் எனும் உன்னதம் என்னை இன்னமும் வழிநடத்திக் கொண்டுதான் இருந்தது. அர்த்தமுள்ளதோ இல்லையோ ஒரு சிறு நம்பிக்கை நம்வாழ்க்கையை நாம் பிடித்தபடி வாழவைக்கிறது. அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும். ஆனால் அது நம்மளவில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருப்பதால் அதன் பலன் அளப்பறியது. ஆற்றில் தண்ணீருக்கு அடியில் முங்கி கண் திறந்து பார்த்தால் மனசுக்கு பிடித்தவர்கள் நமக்காக தெரிவார்கள் என்பது சிறுகுழந்தையின் விளையாட்டுதான். ஆனால் நான் அதனை மனப்பூர்வமாக நம்பினேன். எப்பொழுதெல்லாம் அன்னவை காண விரும்பினேனோ அப்பொழுதெல்லாம் ஒரு முங்கு நீச்சலில் அவளைக்கண்டேன். எனக்கு இப்பொழுது அன்ன என்னைவிட்டு எங்கும் போய்விட இயலாதென்பதில் ஏக மகிழ்ச்சி.

Image result for annayum rasoolum
இப்பொழுது அன்ன உடலாக என்னுடனில்லை. அவள் இல்லாமல் வாழ பழகிக் கொண்டிருக்கிறேன். அன்னவை போல என்னால் மனதில் இருப்பதை கண்களில் சொல்லாமல் மறைத்து வாழ தெரியவில்லை. என் மனதில் திணிக்கப்பட்ட சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் கொடுத்த குழம்பமும் கலங்கமும் நிறைந்து அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களை மறைக்க கருப்புக்கண்ணாடி அணிந்து கொள்கிறேன். உள்ளிருக்கும் மிருகம் இப்பொழுதும் செத்துத்தான் கிடக்கிறது. அன்னவை பார்க்க வேண்டுமெனில் இன்னமும் ஒரு முங்கு நீச்சல் மட்டுமே எனக்கு போதுமானதாக இருக்கிறது.


சில நம்பிக்கைகள் எப்பொழுதும் பிறருக்கு சிறுபிள்ளைத்தனமானவைகள் தான். ஆனால் அவைகளே நம்பியவனின் வாழ்க்கையை  உன்னதங்களுடன் இணைக்கின்றன. வழி நடத்துகின்றன. கைப்பற்றி அழைத்துச்செல்கின்றன.

நான் நடந்துகொண்டிருக்கிறேன்.

annayum rasoolum - 2013 

கருத்துகள்

 1. ட்விட்டர்ல புழங்கி.. ஸ்க்ரோல் இழுத்து மெதுவா படிக்கவே வரமாட்டேங்கிது இப்பெல்லாம்..
  அண்ணன் தம்பி ஒரே ரூம் சிக்கல் வரைக்கும் படிச்சேன்.. அதுக்கு மேலயும் நல்லாத்தான் எழுதியிருப்பீஙன்னு, குறிச்சு வச்சுட்டு போறேன்.. அப்புறம் விலாவரியா படிச்சுகிடுறேன். ;)

  படமும் நமக்கு புடிச்சது தான்.

  பதிலளிநீக்கு
 2. ரசூலைப்பற்றி சிலாகித்துச் சொல்ல ... இந்தப் பத்தி அப்படி பிடிச்சிப் போனது. அப்படியே படத்தைப் பார்த்தால் வரும் உணர்வுகள் பொங்கி வழிந்தன.

  உங்களை ‘விரட்டி’ எழுத வைத்த படத்திற்கு என் நன்றி.

  வித்தியாசமான நடையில் ஒரு திறனாய்வு ... இல்லை .. இது ஒரு திறனாய்வில்லை. படம் உங்களை எழுத வைத்துள்ளது.

  பதிலளிநீக்கு
 3. "வாழ்க்கை என்ன குளித்தலை வெண்ணையா?" ஊத்துக்குளி வெண்ணெய் கேள்விப்பட்டிருக்கிறேன் அது என்ன குளித்தலை யில் ஸ்பெஷல்?
  "அழகாய் இருப்பதனால் மட்டும் ஒரு பெண் மனதிற்கு பிடித்துப்போவதில்லை. மனதிற்கு பிடித்துப்போவதால் தான் ஒருத்தி அழகாகிறாள்". மிக அருமையான வாசகம்

  பதிலளிநீக்கு
 4. ஆஹா...


  அருமையான பதிவுங்க தல”

  உங்க “புல்லட்” போட்டோவுக்கு அப்புறம் இன்னைகுத்தான் இந்தப்பக்கம் வர வாய்ச்சது.

  பதிலளிநீக்கு
 5. வாங்க ராசா...

  என்னைக்கின்னாலும் படிங்க.. ஒருநாள்ல முடியாது இது :)

  தருமி சார்,

  ஆமாங்க... நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட சாதாரண காதல் கதைதான். ஆனால் சொன்னவிதத்திலும் தரத்திலும் உணர்வுக்குவியல் :)

  டைரக்டரான காமெராமேன் யாரும் சோபித்ததாக என் அறிவுக்கு தெரிந்து இல்லை. ஆனால் காமெராமேனான ராஜீவ்ரவிக்கு இயக்குனராக இதுதான் முதல் படம்! அட்டகாசம். படத்தை பத்தி பாராட்டிசொல்ல வார்த்தைகள் கிடைக்காததால் உணர்ந்ததை அப்படியே கொட்டிட்டேன்! :)

  வையாபதி,

  அது ஊத்துக்குளி தாங்க.. அன்னவை பார்க்கப்போகிற பரவசத்தில் உளரிட்டேன். திருத்திவிடறேன். நன்றி :)

  கும்க்கி,

  வாங்க.. ஒன்னும் பழுதில்லை.

  நானே அதுகப்பறம் இப்பதான் இங்க வாரேன்! ஹிஹி :)

  பதிலளிநீக்கு
 6. படம் பார்க்கவே தேவையில்லை..நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 7. படத்தை பார்த்து ரசித்து அனுபவித்ததை விட உங்களின் இந்த நீண்ட ஆழமான பதிவு மிகவும் நெகிழவும் ரசிக்கவும் வைத்தது. மீண்டும் இன்றோ அல்லது நாளையோ பார்க்க போகிறேன்.

  அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. செம..செம

  அப்படியே இழுத்துக்கிட்டு போயிடுச்சுய்யா
  இதுக்குத்தானே உம்ம வாசிச்சு தொலைய வேண்டியிருக்கு.

  பம்மாத்து இல்லாத இப்படி இயல்பான வரிகளில் ஒரு படத்தைப் பற்றிய சிலாகிப்புகள் கேட்டு ”காலம் கொறயாயி மோனே!” :-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு