முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நொந்தகுமாரன் வீடு திரும்புதல் (அ) நாற்பதின் நாய் குணங்கள் (அ) சீச்சீ இப்பழம் (அ) சூரமொக்கை (அ)...உயிப்புடன் இருப்பதற்கும் உழைத்துக்கொண்டே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்குங்கப்பு. உழைப்பது பிழைப்பை ஓட்டவே என்றாலும் அதுவே 24 மணிநேரங்களை திண்ணும் போது உயிர்ப்புடன் இருப்பது என்பது பெருங்கனவு. கொஞ்ச நாளைக்கு முன்னால எனக்கொரு குழப்பம் வந்தது. நம்ப பீல்டுல எல்லாரும் இந்த ஓட்டம் ஓடறாங்களே. யாராச்சும் யாரையாச்சும் ஏறி மிதிச்சு முந்திக்கிட்டே இருக்காங்களே.. நான் அந்த இயக்கத்துல தான் இருக்கனா? இல்ல தன்முனைப்பே இல்லாம இருப்பதைக் கொண்டு மகிழ்ந்து அரைவேக்காடாக பொங்கித் தின்று வாழ்க்கையை ஓட்டறனான்னு. சரி இந்த எலி ரேஸ்ல நாமும் ஒரு தடவை ஓடித்தான் பார்ப்போம். பிடித்தால் அது இயல்பு. இல்லைன்னா முயற்சி செய்யலைங்கற குற்ற உணர்வாவது இல்லாம இருக்குமேன்னு முடிவு செஞ்சு தலை தெறிக்க ஓடுனேன் பாருங்க


ஒரு ஓட்டம். சுத்தி என்ன நடக்குதுன்னு தெளியறதுக்குள்ள மூணு வருசம் முடிஞ்சுருச்சு! இப்ப கண்ணை முழிச்சு பார்த்தா பொருளா பதவியா சிலது கெடைச்சிருக்கு. ஆனா அதுல ஓடுனத்துக்கான அர்த்தம்னு சொல்லிக்கிட பர்சனலா ஒன்னுமே இல்லை. இருக்கும் திறமைக்கும் தண்டிக்கும் ஆன்மாவை கலந்தடிக்கற மாதிரி ஒன்னு செஞ்சுட்டோம்னு சொல்லிக்கற மாதிரி ஒரு இளையராஜா கிடார் நோட்ஸோ அல்லது ஒரு வண்ணதாசனின் கண்களில் நீர்தேக்கும் ஒரு சின்ன நிகழ்வை கதையாக்கும் வித்தையோ அல்லது தாமுவின் நாவூரும் ஒரு நளபாக பதார்தத்தினையோ போல ஒரு உன்னதத்தின் உச்சியை அடைய முடியாட்டாலும் அதை உணரும் முயற்சியாகவாவது இருந்திருக்கலாம். செய்தது எதுவுமே எனக்காகவோ அல்லது எனக்குள்ளாகவோ இல்லைங்கறது ஏமாற்றத்தினை மட்டுமே தருகிறது. செய்யும் தொழிலே தெய்வம்கறதுல மாற்று கருத்தில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே உயிர்ப்பும் வேலையும் ஒரே இடத்தில் கிடைக்கிறது போல.


பிழைப்புவாதத்திற்காகவும் இன்னும் பச்சையாக சொன்னால் கிடைக்கும் ஒரு எக்ஸ்ட்டா பூச்சியத்துக்காக மட்டுமே இன்னமும் இந்த துறையில் இருக்கிறேங்கறது தான் எனக்கு இப்போதைக்கு கிடைத்த தெளிவு. இதுல வருத்தப்படறதுக்கோ கேவலமாக நினைச்சுக்கறதுக்கோ ஒன்னும் இல்லைன்னாலும் நமக்கே நமக்கான வாழ்வின் சில கணங்களை எதற்கோ எங்கனையோ சிதறவிட்டுட்டு இருக்கறது உண்மைதான் போல. எலிகளுக்குள்ளான ஓட்டம் ஓடாமலேயே நமக்கான எல்லைகளையும் வாழ்க்கையும் வகுத்துக்கொள்ள முடியுங்கறதும் தெரியவந்த பொழுது வாழ்வில் எதற்கு முன்னுரிமை கொடுக்கனுங்கற லிஸ்டுல பயங்கர மாற்றம்! இழப்புகள் என்பது யாருக்காக என்பதைப் பொறுத்து அதன் மதிப்புகள் மாறித்தான் போகின்றன. மாறினால் தான் என்ன ஆகிவிடும்? குறைந்தபட்சம் எங்கப்பாரு வால்டரு வெங்கடசாமி போலவோ, நடேசன் வாத்தியாரைப் போலவோ, ஸ்டார் டைலரைப் போலவோ, சித்ரா ஸ்டோர்ஸ் ஓனரைப் போலவோ வேலையும் வாழ்க்கையும் இயைந்து வாழ்ந்து குடும்பத்தை நிமிர்த்திட முடியாதா என்ன? ஆகவே நான் ஓட ஓட ஓட ஓட்டம் என்னிக்கும் முடியாத ஓட்டப்போட்டியில் இருந்து நிதானிக்க போகிறேன்! ஆனால் எல்லா துறைகளையும் போலத்தான் எங்க பீல்டும்! கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு இருந்தம்னா கூட ஓடற வேகத்துல மக்கா நாலுபேருக்கு இங்கிட்டு ஒரு பொணம்னு ஒரு மெயில் தட்டி அதை நானூறு பேருக்கு பரப்பி ஓரமா ஒதுக்கி ஓய்ச்சிருவாய்ங்க. அதனால இனிமேலுங்காட்டி என் வாழ்வுக்கான மற்றும் குடும்பத்துக்கான நேரங்களிலும் தலைதெறிக்க ஓடாம ஆனா ஓடறமாதிரியே காலை மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்கப்போறேன். அதுபோக பிடிச்சதை செஞ்சு உயிப்புடன் வாழப்போறேன். என்னது பிடிக்குமா? அதைத்தான் தேடப்போறேன்! எங்கன தேடுவனா?! சரி விட்டுடுங்கப்பு. என்னாலயே இதுக்குமேல முடியலை! 

----

இந்தமுறை ஊருக்கு வந்தப்ப முத்திப்போன இளைஞர்கள் (அதாங்க.. அங்கிளுங்க...) 8 பேராக சத்தியமங்கலம் ரிமோட்ல 3 நாள் ஜாகை. இப்படி காட்டுக்குள்ளாக டேரா போட்டு தலைமறைவா இருக்கறது தினப்படி வாழ்க்கையில் இருந்து ஒரு எஸ்கேப்பிசத்துக்குதான்னு சொல்லிக்கலாம். ஆனா உண்மையில கிடைக்கும் இந்த சைக்கிள் கேப்புல அமுக்கி அடக்கிவைச்ச எல்லா எளவயசு கிறுக்குத்தனக்களையும் அவுதி அவுதியா செஞ்சிட்டு அப்பறம் சமுதாயத்துக்கான சட்டையை எடுத்து மறுபடியும் மடிப்புக்கலையாம மாட்டிக்கிட்டு மொகத்த அழுந்த தொடச்சிக்கிட்டு பேக் டு ஃபேமிலி கேம்னு கெளம்பிறனும்!


வெளங்காத எஞ்சினியரான என்னைத் தவிர மற்ற எல்லாரும் ஒருவாகா நல்லா படிச்சு மூளை இருதய டாக்டர்களாக வேலையாகி கண்ணாலம் முடிச்சு குட்டிகள் போட்டு கவுரவமா குடும்பம் நடத்தறோம்னு சமுதாயத்துல பிச்சரு வரைஞ்சவங்க. என்னதான் பழைய நண்பர்கள் என்றாலும் வேலையும் உறவுகளும் கொடுக்கும் அழுத்தங்கள் குணங்களையும் பண்புகளையும் திண்ண ஆரம்பித்திருக்கும் பருவம்றதால ஆரம்பத்துல யாரும் இயல்பா இல்லை. ஆரம்ப ஜோரான ஐபோன் மாடல், காரு டீடெல்ஸ்னு ஆம்பளைகளின் ஈகோக்களை எந்த அளவுக்கு நிவர்த்திக்கறோம்னு அலசி முடிச்சோம். அப்பறம் வேலைல அவனவன் எப்படி பகுமானமா பட்டைய கெளப்பிக்கறோம்னு பொய்பொய்யா அடுக்குனோம். அப்பறம் எப்படி அப்பாடக்கரா வாழ்க்கைல பிரச்சனைகளை ஹேண்டிலு செய்யறோம்னு வெளக்கிக்க இருக்கற இல்லாத சொந்தபந்த எதிரிகளையும், அவங்களுக்கான குணாதியங்களையும் ஏற்படுத்தி அதனால் ஏற்படும் குடும்ப சமூக பாதிப்புகளையெல்லாம் புட்டுப்புட்டு வைச்சு அவனவன் முதுகை அவனவனே கையை வாகாக வளைச்சு வளைச்சு சொறிஞ்சுக்கிட்டு இருந்த நேரம்.


நாந்தான் மொதல்ல விட்டிருக்க வேண்டும்! மசாலா ஆம்லெட்டுகளும், அரைவேக்காடு முட்டை கலக்கிகளும், கலர் கலராக பொறித்த சிக்கன் மட்டன்களும், இரத்தப்பொரியலும், மூளை வறுவலும், குடல்கறியும் வேகவைத்து தாளித்த கடலைகளும், மணப்பாறை முறுக்குகளுமாக சரக்குகளுக்கு நடுவால ஏத்திக்கிட்டே இருந்தா வயுறு என்னதான் செய்யும்? அதேதான். கொஞ்சம் பீல் லைக் ஹோமாக லெதார்ஜிக்கா இருந்த சமயத்துல சத்தமா டர்ர்ர்ருண்னுட்டேன். சடக்குன்னு அத்தனைபேரின் கண்களூம் நான் 20 வருடங்களுக்கும் முன்னால கண்ட கிண்டல் மின்னும் மின்மினிப் பூச்சிகளாயிற்று. ”அடக்கம் அமரருள் உய்க்கும். அடக்காமை அண்ட்ராயரை கிழித்துவிடும்” “பம்பம் பரிமளம் நாஸ்தி... பிப் பிப் மத்தியமம், கஸ் பிஸ் மஹா கோரம்... நிசப்தம் பிராண சங்கடம்”னு ஓட்ட ஆரம்பிச்சுட்டானுவ.நான் விடுவனா? ( அதான் ஏற்கனவே விட்டுட்ட்டேனே!? ) “போங்கடா போக்கத்தவனுங்களா! பார்க்கலாம் நீங்க எம்புட்டு நேரம் நாகரீக கனவானுக்களா அமுக்கி நசுக்கி நடிக்கறீங்கன்னு... இத்தன வயசுல இதுகூட உங்களால இயல்பா விட முடிலைன்னா அப்பறம் என்னத்த நீங்க உங்களுக்காக வாழ்வை இயல்பா வாழ்ந்துருவீங்க?”ன்னு ஒரு பெரிய தத்துவபிட்டா எடுத்து விட்டுட்டேன். பயக ஒரு நிமிசம் கண்ணாமுழி திருவிட்டானுவ.. அப்பறம் என்ன? மத்த ரெண்டு நாளும் அவனவன் மேஸ்ட்ரோதான்! செட்டியார் டைப், சேட்டு டைப், குண்டுமாமி டைப், சபை டைப், கடுகெண்ணை டைப், மசால்வடை டைப், யெஜ்டி டைப், வெஸ்ட்டர்ன் எக்கோ டைப், கரடி டைப்னு மொத்தமா பல ஆராய்சிகள் செஞ்சி நான்ஸ்டாப் சிம்பொனிதான். அதுக்கப்பறம் ரெண்டுநாளுக்கு எங்களுக்குள்ள எந்த மனத்தடையும் பம்பலும் இல்லை. வரும்போது ஒரு மொடைல வந்தவனுங்க போகும்போது சிரிப்பா சிரிச்சோம்.

ஸ்ஸப்பா! லஜ்ஜை இல்லாமல் காற்று பிரிப்பதற்கே நாற்பதாயிருச்சே. இனி எப்ப நான் சுகம், துக்கம், பிறப்பு, பிணைப்பு, பந்தம், பொருள், பற்று எல்லாம் விட்டு கையில கரும்போட வீடுபேறு தேடிக்கெளம்பறது :(

----


அப்பாரு கூட கல்லூரி முடிக்கறவரைக்கும் அம்புட்டு சிறப்பா கம்யூனிகேசன் அமையலை. அவரக்கு வேலைன்னும் எனக்கு உலக அமைதிக்கான போராட்டகள்னும் பிசியா இருந்துட்டோம்! ஆனா நான் காலேஜ் முடித்த காலகட்டமான சில வருடங்களுக்கு வேலைக்குபோகாம வெட்டியா இருந்ததால அவருக்கு சாரதியாக இருந்ததுண்டு. எனக்கு வண்டியோட்டறதுல ரொம்ப இஷ்டங்கறதால பல கிலோமீட்டர் சளைக்காம அம்பாசிட்டரை உருட்டுவேன்.

தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு அவருக்கும் அவரது குழாமுக்கும் காரோட்டியிருக்கிறேன். அவருக்கு ஒவ்வொரு ஊருக்கும் அளாவளாவ சில நண்பர்களும் ஊரைப்பற்றி சிலாகிக்க சில காரணங்களும் இருந்ததுண்டு. ஊருக்குள் நுழையுமுன்பே “அப்டியே காந்திநகர் ரெண்டாவது லெப்டுல அரை அவர்டா குட்டி.. சண்முகம் சாரை பார்த்துட்டு போகலாம்”, “கருப்பண்ணா அண்ணாச்சி இந்நேரத்துக்கு கடைலதான் இருப்பாப்ல. நேர கடைல ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்”, “72 பேட்ச் நாராயணன் இப்ப இங்கதான் போஸ்டிங். நம்பள பார்த்தா சந்தோசப்படுவாப்புல”, “அரைகிலோ பால்கோவா வாங்கிக்கலாண்டா குட்டி..கோபி சாருக்கு புடிக்கும்” ங்கற மாதிரியான பேச்செல்லாம் சாதாரணம். அதேபோல சந்திக்கற ஒவ்வொருவரும் முகம் கொள்ளாத சிரிப்போட கட்டிக்கறதும் பலகாரமா விருந்தோம்பறதும்னு பார்க்கவே ஆத்மார்த்தமா இருக்கும்.இவங்க சிரிச்சு சிரிச்சு பேசிக்கறத பரிமாறுன பலகாரமும் டீ தம்ளருமா ஒரமா இருந்து குசும்பனாட்டம் கவனிச்சுக்கிட்டே இருப்பேன். குடும்பத்துல அத்துணை பெயர்களையும் தனித்தனியா விசாரிச்சு தெரிஞ்சுக்குவாங்க. வேணுக்கற உதவியையோ தகவல்களையோ தயக்கமே இல்லாம கேட்டுப்பாங்க. செய்ய முடிஞ்ச உதவியை உறுதியாச் சொல்லி செஞ்சிருவாங்க. அதேபோல வருத்தமோ தயக்கமோ எதுவுமே இல்லாம சந்தோசமா விடைபெறுதல். தபால் கார்டுகளும் இன்லாண்டு லெட்டருகளும் எப்போதோ போட்டுப் பேசும் STD களும் எப்பொழுதும் அவர்களை விசாரித்ததாக சொல்லியனுப்பும் தகவல்களும் மட்டுமே எப்படி இந்த இணைப்புகளை பாராமரித்து உயிர்ப்புடன் வைத்திருக்கு முடியுங்கறது இன்னைக்கும் ஆச்சரியமா இருக்கு.


ஆனா அவங்க என்ன இழுத்தாலும் வாயத்திறந்து அவங்க போடற பொங்கல்ல கலந்துக்கவே முடிஞ்சதில்லை. பெரிசுங்க பேச்சுல பொடுசுக்கு எனக்கெதுமில்லைனாலும் “தம்பி, சரியாச் சாப்புடறீங்களா? இப்படி ஒடம்பு புடிக்காம இருந்தா எப்படி?” மாதிரியான சகஜமான கேள்விகளுக்கு கூட சிலுக்காட்டம் ஒக்கார்ந்த இடத்துலயே நெளிஞ்சுக்கிட்டு வாய்க்குள்ள மொணங்குவனே கண்டி போல்டா ஒரு வாக்கியம் பேசுனதில்லை. என்னமோ சின்ன வயசுல இருந்து கூச்ச சுபாவம் ஆட்டிப் படைக்குதுங்க. புதுசா ஒரு மனுசனை கண்டுபுடிச்சு பழகி செட்டவறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது. இதுல இழப்பு என்னவோ எனக்குதானாலும் நாமா முன்னாடி நின்னு பழக்கம் ஏற்படுத்திக்கறதுலயோ இல்லை தொடர்பை உயிரோட்டமா வைச்சுக்கறதிலையோ முனைப்பை விட தயக்கமும் கூச்சமுமே முன்னாடி நிக்குது. சின்ன வயசுல வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா கட்டிலுக்கு அடியில போய் ஒளிஞ்சுக்கிட்டன்னா வெளில வரவே மாட்டேன். அப்பறம் அவங்க போனப்புறந்தான் கொண்டுவந்த ஆரஞ்சையும் மில்க்பிக்கீசையும் பங்குகேட்டு வெளில வர்றது. 


வருத்தம் என்னன்னா இன்னமும் அப்படியே இருக்கறேன்னுட்டு தான் :( சில நாடுகள் பார்த்துட்டேன். பல ஊருகள் வாழ்ந்துட்டேன். உறவுகளும் நட்பும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா சொல்லிக்கற மாதிரி அதெல்லாம் சரியா எப்படி மெயிண்ட்டெயின் செய்யறதுன்னு தெரிய மாட்டேங்குது. தகவலும் தொடர்புமே வாழ்க்கையா இருக்கற இந்தகால ஒலகத்துல நூற்றுக்கணக்குல நண்பர்கள் லிஸ்டு ஆன்லைன்ல இருக்கறது மட்டும் ஒரு காலத்துக்கும் நம்மை வளப்படுத்தாதுங்க்ற உண்மை உறுத்துது. எங்கப்பாரு மாதிரி டைரி புல்லா நண்பர்களும் தொடர்புகளும் அவர்களுடனான ஆத்மார்த்தமான அளாவளாவலுக்கும் ஆசைப்படலனாலும் ஊருக்கு ரெண்டு பேருன்னு போய் நின்னு உரிமையோட பார்க்கறதுக்கு இருக்கனும்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. பழகத்தெரியாதுன்னு இல்லை.ஆனா ஆரம்ப ஐஸ்பிரேக் நடக்கறதுக்குள்ள ஜீன்ல ஒட்டிக்கிட்ட வெக்கமோ தயக்கமோ என்னைய மென்னு தின்னுருது.


இதும்போக இந்த ஐடில இருந்துக்கிட்டு யாரும் யாரையும் சார்ந்திருக்காம நமக்கான குறுகிய வட்டத்துல வாகா வாழ்க்கையை ஓட்டிற முடியுங்கறது இன்னும் கீழாக இழுத்துருச்சு போல. பார்க்கலாம் இந்த ரெண்டு கழுதை வயசுல இந்த தடைக்கல்லை எப்படி ஒடச்சு மேல வர்றேன்னு.


-----


கல்யாணம் கட்டி குழந்தைகள் பெற்று அவங்களும் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கும் பருவத்தில் இருக்கும் வீட்டு ஆம்பளைகளுக்கு சம்போகம் என்பதே மாசத்துல என்னிக்காவது சில தடவை திடீர்னு கிடைக்கற லாட்டரி தான்! அதுவும் சூழ்நிலைகளை சரியா கணிச்சு நமக்கு தோதா மாத்தி அமைச்சு, பாவமா மூச்சை வைச்சு, நாமுச்சூடும் சுத்திவந்து ஏகப்பட்டு குறிப்புகள் காட்டி காரியத்துக்கு தளம் அமைக்கனும். இது போக கோடானுகோடி வானாதி தேவர்கள் பசங்களை சீக்கிரமா தூங்கவைச்சும் வீட்டம்மாவுக்கு தூக்கம் வரவிடாமலும் வரம் கொடுத்து நம்மையும் செத்தநேரம் சந்தோசமா தொலைஞ்சு போங்கடானு ஆதீர்வதிச்சா கிடைக்கும் அபூர்வ நேரக்கூறு அது. 


இதெல்லாம் போக நமக்கே நமக்குன்னு கெடச்ச அந்த நல்ல நேரத்துலயும் நம்ம நாறவாய் ஏதாச்சும் தத்துப்பித்துக்கா பேசி மூடைக் கெடுக்காம இருந்தா நடந்தாலும் நடந்துறக் கூடிய சமாச்சாரம்! ( இதை நம்பாதவங்கள்ல 99% பேரு தமிழ்படங்கள் கரைச்சு கரைச்சு கழுவி கழுவி ஊத்தும் காதல் படங்களில் காலத்தை ஓட்டிக்கொண்டு கல்யாணக் கனவுகளுடன் கால்கட்டுக்கு காத்திருக்கும் பேச்சுலரு மக்கள்ஸ்! மிச்சம் 1% எங்கனயோ ஏகப்பட்ட மச்சம் இருக்கற மஹா மஹானுபாவ பாக்கியவான்கள்!! கவனிக்கவும்! நான் வீட்டு சோற்றை உண்டுவாழும் அப்புராணி குடும்பிகளை மட்டுமே கணக்கில் வைக்கிறேன்!! )என்ன இருந்தாலும் ஆம்பளைக உடம்பு இல்லையா? இயற்கையின் விதிப்படி நமக்கெல்லாம் மூடு வந்து சட்டுன்னு நட்டுவனார் ஆகறதுக்கு நேரங்காலமே தேவையில்லையல்லவா? அப்படியாப்பட்ட அசமஞ்ச நேரங்களில் தனிமைக்கு “கை” கொடுக்கறதுக்கு ஆயிரம் விசயங்கள் உள்ளங்கையில் உலகவலையென இருந்தாலும் அதெல்லாம் இப்பெல்லாம் சரியா தோதுப்படறதில்லை. சும்மா TAMIL HOMELY அப்படிங்கற கூளுளாண்டவர் தேடலில் கிடைக்கும் சில புகைப்படங்களே காரியமாற்ற ஏதுவானதாக இருக்கிறது. தன்மையும், வனப்பும், சிரிப்பும், நளினமும் பாந்தமுமே சரியான நியுரான்களை தூண்டிவிட போதுமானதாக இருக்கிறது. இந்த கிரியா ஊக்கிகள் கொண்டே கற்பனைக் குதிரைகள் பலகாதம் பாய்கின்றன. பலகாலமாக தேடியலைந்த பருத்த உருண்ட திரண்ட போன்றன வார்த்தைகளெல்லாம் சமீபகாலமாக எனக்கு அர்த்தமிழந்ததாக சொல்ல வரவில்லையெனினும் அதெல்லாம் அவ்வளவு கனகச்சிதமாக காரியமாற்ற உதவுவதில்லைங்கறேன். மிருகம், வெறி, தகிப்பு, அடங்காத்தாகம், ஆத்திரம் வரிசையிலிருந்த காமத்தை கனிவு, காதல், தன்மை, உயிப்பு வரிசையிலும் வைக்க இயலுமென மனம் எனக்கே தெரியாமல் நம்பி உணர ஆரம்பித்திருக்கிறது. வாலிப வயசுல தினத்தந்தியின் ஞாயிறு கவர்ச்சிபடம் படம் பார்க்கையில் இதெல்லாம் எந்தமூலைக்கு காணும்னு போடறாங்கன்னு சிரிச்ச காலத்துக்கான அசட்டுத்தனத்தினை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்! 


இதுல இன்னொரு மேட்டரு என்னன்னா கல்யாணத்துக்கு முன்னால கைய வைச்சுக்கிட்டு சும்மா இருங்கடான்னு சித்தவைத்திய சிவராஜ் குடும்பம் என்னதான் பயமுறுத்துனாலும் ஒரு பாதிப்பயலுவ மட்டுமே பயந்து AAA சூப்பர் ஸ்பெஷல் செட் VVP ல வாங்க வாய்ப்பிருக்கு. ஆனா கல்யாணத்துக்கப்பறம் கரமைத்துனம் ஒரு கயவாலித்தனம்னு நொந்ததைச் சொல்லி நோகடிச்சு வியாபாரமடிக்க வழியில்லாததால அப்டியாப்டியே விட்டுட்டாய்ங்க போல! எனவே, மயக்கமும் இல்லை. கலக்கமும் இல்லை. வாழ்விலே நடுக்கமும் இல்லை! ஆகவே பிரபு குரல்ல கையை உயர்த்தி கட்டைக்குரல்ல சொல்லறேன் கேளுங்கப்பு. ”இது என் குஞ்சாமணி! என் உரிமை!!” :)


------

மேல படிக்கையில நாறவாயின்னு ஒரு வார்த்தை சொன்னேனில்லையா? லாஜிக்கவும் பிராக்டிக்கலாகவும் எல்லாத்தையும் பார்த்தும், தீர்த்தும் வெள்ளாடற வெளிவாழ்க்கையில கெடக்கற வெற்றி தோல்விகளும், கிரீடங்களும், அடிகளும், படிப்பினைகளும் நம் மூளையில் ஏற்படுத்தும் மடங்கள்களும் திறப்புகளுக்குமான விளைவு இது!
அதே தர்க்க ரீதியிலான வாதப்பிரதிவாதங்களை அப்படியே வீட்டுக்கு லாரி லாரியா கொண்டாந்து மனையாள் மக்கள் கேக்கறாங்களோ இல்லையோ எல்லா சின்ன பெரிய விசயத்துலயும் நடுவால பூந்து சொம்பு சொம்பா அள்ளி அள்ளி இந்த பஞ்சாயத்து மஞ்சதண்ணிய ஊத்து ஊத்துண்ணு ஊத்தவேண்டிய தினவு நாவுக்கு வந்துடுதுங்கறேன். விசயம் என்னவோ சப்பை மேட்டராத்தான் இருக்கும். என்னதான் பேசற நமக்கு ஒரு வாயி கேக்கற அவங்களுக்கு ரெண்டுகாது இருக்குதுன்னாலும் எம்புட்டு நேரம்தான் இந்த உறுப்புக தாங்கும்? சில நேரம் நம்ப காதுகளே நாம அளவில்லாம பெனாத்துறத தாங்க முடியாம மூளைக்கு “நிறுத்தித்தொலைடா மூதேவி!”ங்கற மெசேஜ் கொடுக்கும். ஆனா சும்மாவா பழகியிருக்கு இந்த நாக்கு! அதுபாட்டுல வார்த்தைக்கு வார்த்தை ஊசிகள் சொருகி, பழையன தொட்டு, புரட்டுகள் பிரட்டி, ஈகோக்கள் சீண்டி, இமேஜ்ல வெடி வைச்சு அதுக்கு தன்னால திரியும் பத்த வைக்கிற வேலைய முசுவாச் செஞ்சே தீருது.


அதுவா ஆடி அடங்கற நேரத்துல வீட்டுல எல்லாமே எல்லாருமே ஸ்வாகாதான்! “நாலணா பெறாத விசயத்துக்கு எதுக்கு இப்படி ஊரெல்லாம் சுத்தி வளைச்சு உருப்படாத தகவலாக்கொட்டி நாயாட்டம்/பேயாட்டம் கத்தறீங்களோ போங்க!”ன்ற அங்கலாப்புல முடிஞ்சாலே அன்னிக்கு நாள் அடியில்லாம தப்பிச்ச நல்ல நாள் தான்..

ஹஹா... ஆனால் பலநேரம் பின்விளைவுக ஒன்னும் பெருசா வெளீல சொல்லிக்கறமாதிரி இருக்காதுங்கப்பு! சில நாளைக்கு சோறு சரியா கெடைக்காது. நம்ப ஒவ்வொரு மூவுக்கும் மூஞ்சிலயே முறைப்பாலேயே அடி வுழும். ஊட்டுகுள்ளயேயே ஏதுனா முகமூடியோ அல்லது முக்காடோ போட்டுக்கிட்டு சுத்தவேண்டி வரும். பசங்க பார்வையிலயே “நெஜமாவே லூசாப்பா நீ?”ன்னு கேக்கும்! அப்பாலிக்கு அந்த கொஞ்ச நாளைக்கு வாலை காலுக்கு நடுவால வைச்சுக்கிட்டு மொகத்தில் மெரட்சி தெரிஞ்சும் தெரியாம சுத்திசுத்தி வரணும். அப்பறம் அப்படியே ஏதும் நடக்காதாப்புல ஆஃப் ஆகிற வேண்டியதுதான். மறதி தானே நம்பளை வாழவைக்குது? அது போக ஆம்பளைக்கு எப்பவும் ஒரு வீடுதானே? கோச்சுக்கிட்டு அப்பனூட்டுக்கா வண்டிய உடமுடியும்?

இருந்தாலும் இந்த சின்னத்தனத்தை எப்படிடா தீக்கறதுன்னு பலநாள் யோசிச்சததுல மறுபடியும் உதவுனது நம்ப கவுண்டபெல் தான்! இப்பவெல்லாம் வீட்டுல எப்பவும் நல்ல ஒரப்பா நெறைய கடலை, மசாலா பொறி, கறிவேப்பிலை, பெரிய பூந்தி, பெருங்காயம் போட்டுச் செஞ்ச நாட்டு மிச்சரு அரைக்கிலோக்கு கொறையாம இருக்கறாப்புல வாங்கி வச்சுக்கறது. எப்பவெல்லாம் நாக்கு தேவையில்லாத மேட்டருக்கு நாட்டாமை சொம்மை தூக்கிக்கிட்டு அசால்ட்டா வாயில அஞ்சாஸ்பவரு மோட்டரை ஸ்டார்ட் பண்ண சுவிச்சு போடறதுக்கு ரெடியாகுதோ அப்பவெல்லாம் கபால்னு அடுப்படிக்கு பாய்ஞ்சு மிச்சரு டப்பாவை வாரியணைச்சு ஓடியாந்துறது. அப்பறம் ஹால் சோபாவுல ஒரு ஓரமா காலை மடக்கி குத்தவச்சு பகுமானமா கை ரொப்பா மிச்சரை அள்ளி உள்ளங்கையில் குவிச்சு வாய எம்புட்டு முடியுமோ அம்புட்டு அகலமா தெரிந்து அப்படியே கொட்டிக்கிடுறது. அப்பறம் இறுக்கமா மூடுன வாய்க்குள்ள 32ம் வைச்சு அரைச்சுக்கிட்டே முதல் 10 நிமிசத்த ஒரு வார்த்தை வாயிலிருந்து செதறாம சமாளிச்சுட்டம்னா அப்பறம் மிச்சத்த ஓட்டிடலாம்.

மொதல்ல இத செய்யறதுக்கு செரமாமாத்தான் இருந்தது. நாக்கு மிச்சரு ஒரப்புக்கு பழகினப்பறம் பேசற தெனவு கம்மியாயிருச்சு போங்க! இப்பவெல்லாம் அவிங்களே “என்னாங்க/என்னாப்பா, இங்க இவ்வளவு அட்டகாசம் நடக்குது.. எதப்பத்தியும் கண்டுக்காம இப்படி ஓரமா ஒக்கார்ந்து மிச்சரு மொசுக்கறீங்களே?!”ன்னு சொம்பை வாலண்டியறா கையில திணிக்கற அளவுக்கு முன்னேறியாச்சு.


என்ன? இதுனால கொலஸ்ட்ரால் ஏறினாலும் இன்னும் 2 கிலோமீட்டரு நடந்துக்கலாம்! ஆனா வாயைக்குடுத்து கிடைக்கும் பின்விளைவுகளுக்கு மிச்சரு பார்ட்டியா இருக்கறது எம்புட்டோ தேவலாங்கறேன்!கழிஞ்சது 40ஆ? இல்லை மிச்சமிருக்கறது 40ஆ? 

இதுதான் நடுசெண்டரா? இல்லை ரெண்டுல மூனு ஏற்கனவே போயிருச்சா?

இதுவரைக்கும் வளர்ந்தது அறிவா? இல்லை இதுக்குமேல வரப்போறதா?

இதுவரைக்கும் ஏதாச்சும் கிழிச்சமா? இல்லை இதுக்குமேலதான் ஏதாச்சும் புதுசா கிழிக்க கண்டுபுடிக்கனுமா?

அப்பாம்மா ரெண்டுபேருமே இல்லாதவங்க எல்லாம் அனாதைகளா? இல்லை அப்பான்னு ரெண்டு பசங்களும் கையப்புடிச்சு இழுத்துப்போக ஊட்டம்மாவும் இருக்கறவுங்க எல்லாம் பாத்தியப்பட்டவங்களா?

இன்னும் அப்பனின் நினைவுக்குடையில இருந்தே மீட்சி நடக்கலையே, எப்படி பசங்களுக்கு நல்ல அப்பனாட்டம் வேடங்கட்டறது? அப்பனா தேறிட்டனா? இல்லை இன்னும் அப்பனுக்கான அனுபவத்தை கத்துக்கவே ஆரம்பிக்கலையா?

நம்பியிருக்கற உசுருகளுக்கு ஏதாச்சும் உருப்படியா சேர்த்து வைக்கனுமா? இல்லை மீன்குஞ்சுகளுக்கு நீந்த கத்துக் குடுத்தாவே போதுமா? சள்ளப்பய நானே மூனுவேளை சோத்துக்கு நாளுபேருக்கு வழிபண்ண முடியும்னா பசங்களுக்கு இருக்கற மூளைக்கு தானா நல்லா வந்தற மாட்டாங்களா?

பசங்களுக்கு இல்லைன்னாலும் நாளைக்கு கடைசில எனக்கு இழுத்துக்கிட்டு இருந்தா பார்க்க பொருள் வேணாமா? இல்லை குடுத்துவைச்ச அப்பாம்மா மாதிரி ஒரு கணத்துல பட்டுன்னு கெளம்பிருவமா?

வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு அப்பங்கட்டுன ஊட்டுலயா நான் வாழறேன்? டேரா போட்ட ஊரெல்லாம் சொந்த ஊராப்போச்சே! அப்பறம் எந்த ஊருல நான் வாழறதுக்கு வீடு கட்டனும்?

இப்பத்திக்கு ஊருல வாழ்நாள் கனவாக கட்டிவச்ச வீடுகள்ல எல்லாம் பெருசுக தனிமைல காலத்தை கடத்தறதே கடமைன்னு இருக்காங்களே. நம்ப சோலியும் வாழ்க்கையும் ஒன்னுன்னு ஊரூக்கு செதறிக் கெடக்கமே. இதுல எந்தக் கனவின் மேல நாம நம்ப பசங்களுக்கும் சேர்த்து வீடு கட்டறது?

முற்பகல் செய்யின் இன்னும் 20 வருவத்துல பிற்பகல் விளையாதா?

ஊருல பெருசுங்க நெசம்மாவே பசங்க எங்கயோ நல்லா இருந்தா அதுவே சந்தோசம்னு இருக்கறாங்களா? இல்லை தனிமையின் துக்கத்த சொல்லி எங்கனயோ கஷ்டப்படற பசங்க நிம்மதிய சும்மா சின்னதா பொலம்பிக்கூட கெடுத்துறக்கூடாதுன்னு கேவல்களையெல்லாம் பேரப்பசங்களை தொலைபேசியில் கொஞ்சும் கெஞ்சுமொழியா மாத்திக்கறாங்களா?

“பாட்டிய சாப்புட்டையான்னு கேளுடா கண்ணூ”ன்ங்கறதுக்கு சரியான மொழிபெயர்ப்பு நமக்கு தெரிஞ்சிருக்கா? இல்லை ”பாட்டிக்கு சீக்கிரம் குட்நைட் சொல்லுடா குட்டி”ங்கற நம்ப பதில் அவங்களுக்கு தூங்கப்பண்னுமா?

கடைசிக் கட்டத்து தனிமைங்கறது கனவுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் நனவா?

வாழ்க்கைய முன்னால பட்டும் பார்த்து வண்டியோட்டுனா போதுமா? இல்லை பின்னாடி எதெல்லாம் கழட்டிவிடறோம்கற குற்றவுணர்சி மேல நுகர்வோர் இன்பத்தை ஜமுக்காளமா போர்த்தி கட்டி பெத்தவங்களும் பொழங்காத தாத்தாவின் ஓட்டு வீட்டு பரண்ல போட்டுடனுமா?

“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?”ங்கற கேள்வியை 1000பேரு தனித்தனியா கேட்டா அது தனிமனித கஷ்டமா? இல்லை சமுதாயப் பிரச்சனையா? இப்படியெல்லாம் முதுகுரொப்பா கேள்விகளை மூட்டை தூக்கிக்கிட்டு சேக்காளிக கூட வாட்டர்ஸ்போர்ட்ஸ்சின் போது ஏதாச்சும் பொங்கல் போட்டா ஒரு தெளிவு கெடைக்கும்னு நினைச்சா அவங்கவுங்க ரெண்டாவது கேள்விக்கே கண்ணு உள்வாங்கி நெகத்த நோண்டறாங்க. அதுசரி பதிலா முக்கியம்? கேள்விகள் கேள்விகளாகவே இருக்கறவரைக்கும் வண்டி எப்படியாச்சும் ஓடிரும்போல! பதில் தெரிஞ்சுட்டா பாதிப்பயக பாதிலயே ஒடைஞ்சுருவோம்னுதான் நினைக்கறேன்!


எனக்கெனமோ இப்பத்திக்கு ஒரு நல்ல ”செண்ட்டிமெண்டல் இடியட்” முகமூடி தான் வாழ்க்கைக்கு மிகப் பாதுகாப்பான ஒன்னுன்னு தோணுது. நம்பிக் கட்டுனா கஷ்டமோ நஷ்டமோ சிரிச்சும் அழுதுமே வண்டி ஓடிரும் போல. ஆனா இருக்கறதுலயே கஷ்டமானதும் இந்த வேசங்கட்டறதுதான்னு நினைக்கறேன்.


உண்மையா சொல்லனும்னா இத்தனைநாள் நானும் எனக்கான ~600 ப்ளாக் சுட்டிகளும்னு கூகுள் RSS Reader ல சந்தோசமா படிச்சுக்கிட்டுதான் இருந்தனுங்க. நான் எழுதாததைப் பற்றி எந்தவித சொனங்களும் இல்லைன்னாலும் அறிஞ்சவங்க பிடிச்சவங்க பதிவை ரெகுலரா படிச்சுடறதுதான். கூகுளுக்கு என்ன ஆச்சோ RSS Readerயையே திடீர்னு இழுத்து மூடிட்டாங்க! அதையெல்லாம் இப்ப XMLலா பேக்கப்பும் எடுக்க முடியல. எப்பவும் ப்லாகர் சைட்டுக்குத்தான் வந்து ஒவ்வொன்னா படிக்க முடியுங்கறதுல பயங்கற கடுப்பு.


அப்பறம் என்ன செஞ்சா கண்டினுசா நம்க மக்கா அக்கப்போரெல்லாம் படிக்கலாம்னு தேடுனா பாதிசனம் முகநூல்ல குழுமியிருக்கு. எனக்கென்னவோ ஒரு குறிப்பான மனநிலைல ஒரு முழு பதிவு படிக்கறது இன்னமும் திருப்தி தருவதாக இருப்பதால் எப்படி இழந்ததை மீக்கறதுன்னு தெரியாம முழிக்கறேன். ஹிட்லருக்கும் எனக்கும் ஒரே பிரச்சனைனு தெரிஞ்சதுல மட்டும் ஒரு அல்ப சந்தோசம்!
யாராச்சும் RSS dataவை எப்படி எக்ஸ்போர்ட் செஞ்சு ஏதாச்சும் readerல இம்போர்ட் செய்யறதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு! உங்களுக்கெல்லாம் புண்ணியமாப் போகும். தெனம் நாளு பதிவு படிக்க முடியாம ஒடம்பு கொளம்பிப் போய்க்கெடக்கு! 


”அவனவன் டுவீட்டு, பேஸ்புக்குன்னு பிட்டுப் போட்டுகிட்டு பறக்கற காலத்துல இப்படி பழைய பிளாகருன்னு வந்து இம்மாம் பெரிய பதிவ நீட்டி மொழக்கி போட்டுக்கிட்டு வெக்கமில்லாம நிக்கறீயே? உனக்கெல்லாம் நெசமாவே நாட்டுல என்னா நடக்குதுன்னு தெரியாதாட கூமுட்டை?”னு திட்டாதீகப்பு. நெசமாலுமே முகநூல், கூகுள்+, ட்வீட்டெரெல்லாம் ஒன்னியும் புடிபடலை. முன்னாடி ப்ளாகரு சண்டைல யாரு கையில யாரு சட்டை யாரோட கொட்டை மாட்டியிருக்குன்னு ஒரு மார்கமாவாவது தெரிஞ்சுக்க முடியும். ஆது இதுகல்ல சுத்தம். 5 நிமிசம் பார்த்தாலே கண்ணு மயமயங்குது. நான் எப்ப புரிஞ்சி எங்கன தெளியறது? இப்பத்திக்கி ப்ளாகரே ப்ராப்த்திரஸ்த்து!!


ஆகவே நின்னு பொறுமையா நாளைக்கு நாலு லைனுன்னு நாலு வருசத்துக்கு கூட படிச்சுக்கங்க. பொறவு எப்பத்திக்கி நான் மீண்டும் மீண்டு வந்து அடுத்தப் பதிவை போடுவனோ யாரு கண்டா?! ( போன முறை மாசத்துக்கு ஒன்னுன்னு வாயக் குடுத்து சொசெசூ வைச்சுக்கிட்டது இன்னும் வலிக்குதுங்கப்பு!! )

கருத்துகள்

 1. //யாராச்சும் RSS dataவை எப்படி எக்ஸ்போர்ட் செஞ்சு ஏதாச்சும் readerல இம்போர்ட் செய்யறதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு! உங்களுக்கெல்லாம் புண்ணியமாப் போகும். //


  feedly.com முயற்சிக்கவும். Google கணக்கு இருப்பின், chromeல் feedly யில் மிக எளிதாக உங்கள் readerஐ பிடித்துவிடலாம்.

  இவண்,
  பிளாக் படிக்க முடியாமல் பித்துப் பிடித்து திரிந்தவன் :)

  பதிலளிநீக்கு
 2. அதுதான் மீண்டு(ம்)வந்தாச்சுல்லெ!

  பதிவுலகத்துலே மக்கள் என்ன செய்யறாங்கன்னுரெண்டுநாள் விடாம தமிழ்மணத்தைப் பார்த்தா தெரிஞ்சுருமே.

  திங்கள் புதன் வெள்ளின்னு மூணுநாட்களை(மட்டும்) நினைவில் வச்சுக்குங்க.

  மத்தபடி வண்டி ஓடும்வரை ஓடட்டும்.

  குட் லக்:-)

  பதிலளிநீக்கு
 3. You can use feedly to configure rss feeds - hope this helps - http://blog.feedly.com/2013/07/10/importing-your-google-reader-takeout-into-feedly/

  பதிலளிநீக்கு
 4. வாங்க தலை. நாப்பதுதானே ஆகியிருக்கு. இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு. லைஃபை என்ஜாய் பண்ணுவோம்.

  பதிலளிநீக்கு
 5. இளவஞ்ஜி ,

  ஒலகம் உருண்டை :-))

  ஓரு மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் மீண்டும் சந்தித பொது பேச முடிவில்லையே,அவ்வ்வ்.

  வல்ல எழுத்து நடை, நல்வரவு,!

  பதிலளிநீக்கு
 6. அருமையான வரிகள்...அப்பட்டமான உண்மைகள்...

  பதிலளிநீக்கு
 7. அப்பட்டமான உண்மைகள்..அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 8. அழகான குருவிகளை ரசனையாக பார்த்த தருணம் போல. நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 9. வாங்க வாத்தி.. செளக்கியமா? கூப்புடுறது?

  பதிலளிநீக்கு
 10. நல்வரவு. நெறைய எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 11. என்னத்த சொல்ல ..நீரெல்லாம் இந்நேரம் 10 புக்-காவது வெளியிட்டிருக்கணும் ஓய்

  பதிலளிநீக்கு
 12. பதி/Cipher,

  உதவிக்கு நன்றி!

  // http://blog.feedly.com/2013/07/10/importing-your-google-reader-takeout-into-feedly/ //

  இதை ஆக்சுவலா ட்ரை செஞ்சேன். கூடுள் டேக் அவுட் சர்வீசுல இருந்து RSS list export செய்யற ஆப்சனை தூக்கிட்டாங்க. feedly ல இப்ப ஒவ்வொன்னாத்தாச் சேர்க்கனுமா இல்லை வேற வழி இருக்கான்னு தெரியலை :(

  துளசியக்கா,

  புதுசா எழுத வர்ற அத்தனை பேருக்கும் நீங்கதான் ஊக்கமளிக்கும் பின்னூட்ட நாயகி! நன்றி! கோபாலண்ணனுக்கு வந்தனம்! :)

  லக்கியாரே,

  நன்றி!

  அதானே... 40 தானே ஆச்சு. அதுக்கே இந்த பொலம்பல் ஓவர்தான். இருந்தாலும் சும்மா இருந்தா இந்த கேள்விங்க எல்லாம் மண்டைய.. ஹிஹி..

  வவ்வால்,

  வந்துட்டேன்! ஆடுங்கதான்! ஆனா பிரிஞ்சது நான் மட்டும் போல :)

  ஸ்ரீதரன், ஜோதிஜி, அனானி, பாராட்டுகளுக்கு நன்றி!


  இளா,

  வல்லிய சுகம்! உங்களைக் கூப்பிடாமலா? சீக்கிரம் :)

  ஜோ, குழலி பாலகுமார், நன்றி!

  10 புக்கா?! ஏங்க இந்த கொலைவெறி!? வலைப்பதிவர் எதுக்குங்க புத்தகம் போடணும்? :)

  பதிலளிநீக்கு
 13. //ஏங்க இந்த கொலைவெறி!? வலைப்பதிவர் எதுக்குங்க புத்தகம் போடணும்? :)//

  இதென்ன சின்னப்புள்ளத்தனமான கேள்வி????

  அப்புறம் எப்படி அடுத்த கட்டத்துக்கு போறதாம்?

  ஒரு புத்தகம் போட்டால் உடனே நாம் எழுத்தாளராகிருவோம். அப்ப பத்து புத்தகமுன்னா!!!!! ஹைய்யோ:-))))

  பதிலளிநீக்கு
 14. அட்டகாசம் இளா! எப்படித்தான் இத்தனைநாளு அடக்கி வச்சிருந்தீங்களோ? :-))

  இன்னும் நாலஞ்சு தடவை படிக்கலாம்போல இருக்கு.

  திரும்ப வந்ததுக்கு வாழ்த்துகள். அதான் எடுத்து விட்டாச்சுல்ல நாப்பது வயசுல. இனிமேயும் வெட்கப்படாம வர்றப்பல்லாம் எளுதிருங்க!

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. ஆஹா! வெல்கம் தோஸ்த்! வாசிச்சதுல சந்தோஷம்!

  Nirmala.

  பதிலளிநீக்கு
 16. ஆஹா! வெல்கம் தோஸ்த்! வாசிச்சதுல சந்தோஷம்!

  Nirmala.

  பதிலளிநீக்கு
 17. Feedlyயில் வைத்திருந்ததனால் பிழைத்தேன். மீள் வருகைக்கு வாழ்த்தும் நன்றியும். எல்லா துக்கடாக்களும் வழமைபோல இரசிக்க வைத்தன. நிறைய மாறித்தான் இருக்கின்றன இங்கும். ஆனாலும் எதுவும் மாறவில்லை இப்போதும்.

  பதிலளிநீக்கு
 18. அடேங்கப்பா எவ்வளவு பெரிய பதிவு? எல்லாத்துக்கும் சேத்து வச்சி எழுதிட்டீங்க போல? Welcome back :))

  பதிலளிநீக்கு
 19. உங்களோட பழைய புல்லெட் பதிவை திரும்ப இத்தனை வருடங்களுக்கு பிறகு படித்தேன்
  welcome back
  babu

  பதிலளிநீக்கு
 20. //நம்ப சோலியும் வாழ்க்கையும் ஒன்னுன்னு ஊரூக்கு செதறிக் கெடக்கமே//

  நிம்மதியா இருக்காங்களோ இல்லியோ ஆனா உள்ளூர்லயே இருக்கிறவங்களை நெனைக்கிறச்ச நமக்குள்ள உண்டாற ஏக்கமும் ஆதங்கமும் நாமளும் ஊருக்கே வந்து சேர்ந்துடலாமான்னு தோணுறச்சதான் வேலையும் வாழ்க்கையும் 1ன்னு கிறுக்குதனமா யோசிக்க தோணுது இப்பவும் :((( மீண்டு வர எம்புட்டு நாளாகும்ன்னு தெர்ல !

  பதிலளிநீக்கு
 21. வாங்க இளவஞ்சி

  நல்வரவு:)

  வலைப்பதிவில் மாஞ்சு மாஞ்சு வெளையாடுன நாட்களெல்லாம் எங்கேயோ போயிடுச்சு. மலரும் நினைவுகளாயிடுச்சு. நினைவு படுத்திட்டீங்கப்பூ :)


  எலி வாளுக! எழுதுங்க எழுதுங்க நாங்க வாசிக்கிறோம் :)

  பதிலளிநீக்கு
 22. //யாராச்சும் RSS dataவை எப்படி எக்ஸ்போர்ட் செஞ்சு ஏதாச்சும் readerல இம்போர்ட் செய்யறதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு! //

  Try www.theoldreader.com

  அப்பப்போ மட்டையானாலும் 90% google reader பீல் கிடைக்கும்.

  இடுகை இன்னும் பாதிதான் படிச்சிருக்கேன். படிக்கும்போதே same pinch என்றே தோன்றியது.
  Great come back. Keep going.

  பதிலளிநீக்கு
 23. அந்த காத்து மேட்டரு சூப்பர்.

  ஆள் அரவம் இல்லாத இடத்தில் சத்தமாக விட்டு ரசிக்கிறவக தானே நாம

  :)

  பதிலளிநீக்கு
 24. சுந்தர்,

  வாங்க! எத்தனைமுறை வேணாலும் படிங்கப்பு. ஏதாச்சும் புரிஞ்சா எனக்கும் சொல்லுங் ;)

  நிர்மலா, வரனும் தோஸ்த்! :)

  தங்கமணி, மீண்டும் உங்கள் ஊக்கங்களை பெற்றதில் கண்டதில் மகிழ்ச்சி. தாமரைக்குளம் கொடுத்த ஈர்ப்பை இன்னும் நான் மறந்தவனில்லை! எதுவும் மாறவில்லை இப்போதும் :)

  ஜோசப் சார், கல்ப் தமிழன், கணேஷ், பாபு,

  நன்றி!

  ஜெயகாந்தன், இன்னைக்கு இதை ட்ரை செய்யறேன். ஆனா சேலஞ்சே ப்ளாகர்ல இருக்கற சுட்டிகளை எப்படி மொத்தமா எக்ஸ்போர்ட் செய்யறதுதான். பார்க்கலாம்.

  வாங்க ஆயில்யன், பார்த்து நாளாச்சு :)

  மீட்பு கிடைக்குமான்னு எனக்கும் தெரியலை. ஆனா அகத்தை தொடற ஏதாச்சும் செஞ்சு உயிர்ப்புடன் இருந்துட்டம்னா கடந்துடலாம்னுதான் தோனுது.

  பதிலளிநீக்கு
 25. வரணும் மதுமிதா,

  அதானே, ஒரே ஒரு . வச்சு அதுக்கு கவுஜைன்னு ஒரு அட்டகாசம் ஞாபகம் இருக்கா? :)

  பார்க்கலாம் இது இன்னும் எத்தனைநாள் போகுதுன்னு!!

  இண்டியன், உதவிக்கு நன்றி! பார்க்கலாம் ஏதாச்சும் செட்டாவுதான்னு.

  கோவி,

  எப்படி இருக்கீங்க?

  கரெக்ட்டுதான். இப்படி தெரியாம சபைல விட்டுட்டாதான் இப்படி மத்தவங்களை கொழப்பி சமாளிக்கறது! :)


  பதிலளிநீக்கு


 26. //”செண்ட்டிமெண்டல் இடியட்”//
  ஆமா ... அதான் அந்தக் காலத்தில நண்பனுக்காகவும். பாத்து வச்ச பொண்ணுக்காகவும் ப்ளைட் புடிச்சி ஓடுன ஆளாச்சே. இது தெரியாதா எங்களுக்கு!

  //அதுபோக பிடிச்சதை செஞ்சு உயிப்புடன் வாழப்போறேன். //
  நாப்பதுல வர்ர ‘பிரசவ வைராக்கியம்’! ஆனாலும் வைராக்கியம் தொடருணும்னு ஆசை.

  //இத்தன வயசுல இதுகூட உங்களால இயல்பா விட முடிலைன்னா அப்பறம் என்னத்த நீங்க உங்களுக்காக வாழ்வை இயல்பா வாழ்ந்துருவீங்க?”ன்னு ஒரு பெரிய தத்துவபிட்டா எடுத்து விட்டுட்டேன்.//

  நாப்பதுல என்னங்க இந்தப் பிரச்சனை. 69-லும் இந்தப் பிரச்சனை பெரிய சத்தப் பிரச்சனையாக அல்லவா இருக்குது! தங்ஸிடம் அடிவாங்காத குறைதான். அட .. வீட்டுக்குள்ள கூட சுதந்திர ‘காத்துக்காரனாக’ இருக்க முடியலைன்னா ... என்னங்க சுதந்திரம்!

  //பழகத்தெரியாதுன்னு இல்லை.ஆனா ஆரம்ப ஐஸ்பிரேக் நடக்கறதுக்குள்ள ஜீன்ல ஒட்டிக்கிட்ட வெக்கமோ தயக்கமோ என்னைய மென்னு தின்னுருது.//
  உங்களைப் பார்த்தா அப்படியெல்லாம் தெரியலையே! சும்மா ‘பூந்து விளையாடுற’ டைப் மாதிரில்ல இருக்கு.

  //கடைசிக் கட்டத்து தனிமைங்கறது கனவுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் நனவா? //
  இல்லைங்க ... அது நனவுக்குள் ஒளிஞ்சிருக்கும் கனவு. அதோடு அந்த தனிமையெல்லாம் (இப்போதைக்கு) கசப்பில்லைங்க. நல்லா தான் இருக்கு. கை கால் இழுத்துக்கிட்டாதான் வம்பு. அது இல்லாம சட்டு புட்டுன்னு போனா நல்லது. மத்தபடி கடைசிக் கட்டத்து தனிமைங்கறது ஒண்ணும் சோகமான விஷயம் இல்லைங்க. ஒரு மாதிரி தனிக்காட்டு ராசா மாதிரி ஒரு வாழ்க்கை. அம்புட்டுதான்!

  //ஹிட்லருக்கும் எனக்கும் ஒரே பிரச்சனைனு தெரிஞ்சதுல மட்டும் ஒரு அல்ப சந்தோசம்!//
  ஆனால் இட்லர் செமையா கத்துறாரே ...


  //ஜோ/Joe10:43 AM, செப்டம்பர் 11, 2013
  என்னத்த சொல்ல ..நீரெல்லாம் இந்நேரம் 10 புக்-காவது வெளியிட்டிருக்கணும் ஓய் //

  நூத்துல ஒரு வார்த்தை, ஜோ! இந்த மனுசனுக்குத்தான் தன் பலம் தனக்கே தெரியாம இருந்துக்கிட்டு இருக்காரு. பாவம், இந்த மனுசன். இல்ல?

  பதிலளிநீக்கு
 27. ரெண்டு விஷயம்: : 1. rat race ரொம்ப நல்லா வந்திருக்கு. 2. எப்போ நன்மாறன் உங்க கூட சேர்ந்தாரு? கூகுள்+ வந்ததும் சேர்ந்துக்கிட்டாரோ?

  பதிலளிநீக்கு
 28. நன்றி தருமிசார்!

  கூகுள்காரர் தொல்லை தாங்கமுடியலை! ரெண்டாவது பேரு இருந்தே ஆகனும்னு அடம்!

  அதுபோக நன்மாறன் நல்லதம்பி அப்படின்னு எனக்கொரு சேக்காளி. ஆளு பேருக்கேத்த மாதிரியே குணநலன்கள் கொண்டவர். நமக்கு அதெல்லாம் அமையாததால பேரு மட்டும் சேர்த்துக்கலாம்னு...

  பதிலளிநீக்கு
 29. Hello Mr. Ilavanji
  இந்த 3 வருடத்தில் இந்த மோகனுதாசு இளங்கோவரு மட்டும் மாறலியேய்யா,ஆட்டம் நின்னபாடில்ல..

  என்னவோ போங்க, முகமூடியும் வந்தா நல்லாயிருக்கும். தமிழ்தாய அடுத்த கட்டத்துக்கு தள்ளிக்கிட்டு போறதுக்கு வசதியா !  பதிலளிநீக்கு
 30. அய்யா பெயரில்லா!

  யாரானும் நிங்கள்?! ஏன் இப்படி பெத்த பெத்த பெயரையெல்லாம் இப்படி அசால்ட்டா விட்டடிச்சு வயத்துல கிலிய கெளப்பறீங்க?! :)

  பதிலளிநீக்கு
 31. அப்பப்ப நீங்க ஏதாவது புதுசா எழுதிருக்கீங்களான்னு 3 வருசமா check பன்னுவேன், கடைசியா எழுத ஆரம்பிச்சிடீங்க. super. அதுவும் midlife crisis பத்தி. நானும் ITயில் வேலை பார்க்கும் நாற்பதை நெருங்கி கொண்டிருப்பவன், நீங்கள் எழுதியிருக்கும் பலதும் நானும் நினைப்பவை/அனுபவிப்பவை. அருமையான பதிவு, கேள்விகள்.

  பதிலளிநீக்கு
 32. நானும் நீங்க ஏதாவது எழுதிருக்கிறீங்களான்னு அப்பப்ப check பன்னுவேன், கடைசியா எழுத ஆரம்பிச்சிட்டீங்க. Super. அதுவும் midlife crisis பத்தி. நானும் நாற்பதை நெருங்கும் ITயில் குப்பை கொட்டிக்கொண்டிருப்பவன். நீங்கள் எழுதியுள்ள பலதும் நானும் அனுபவிப்பவை, நினைப்பவை. அருமையான பதிவு, கேள்விகள்.

  பதிலளிநீக்கு
 33. எப்படி உங்கள் பதிவுகளை நான் இத்தனை நாள் படிக்கவில்லை? அழ வச்சிட்டீங்க..

  பதிலளிநீக்கு
 34. அடாடாடா.... நானும் பிளாக்கிலிருந்து பேஸ்புக் பக்கம் போயிட்டேன். இருந்தாலும் முன்னாடி ஒருதடவைகூட உங்க பிளாக் பாத்ததே இல்லாம விட்டுப்போனது எப்படின்னு தெரியலே. சுவாரசியம். சமயத்துல உங்க மாதிரி 40லயும் நிக்கிறேன், சில சமயம் உங்களை காரோட்ட வச்ச உங்க அப்பா போல ஊர் ஊரா போயி எல்லா பிரண்ட்ஸையும் பாக்கறேன். எப்படியோ, நல்ல அறிமுகம் குடுத்த பேஸ்புக்குக்கு நன்றி. (இதுதான் ஐரனி இல்லே...)
  - ஷாஜஹான்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு