
“ஒரு நூறு ரூபா இருந்தா போயிட்டு வந்துரலாண்டா! ஆனா அது ஒரு மணி நேரத்துக்குதான்”
"ஏண்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகுற? யாரு சொன்னா உனக்கு?"
"நம்ப மெக்கானிக் கணேசன் தாண்டா... அவன் பிரண்டு போயிருக்கானாம்... ஆனா நைட்டு 9 மணிக்கு மேலதானாம்! வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம்!"
"டேய்... பார்த்த மாதிரி பேசாத.. இந்த வேலையை பண்ணறான்னா அப்பறம் எதுக்கு தெனமும் ரோடு ரோடா பூ வித்துக்கிட்டு அலையறா?"
"போடா சும்பை... அதெல்லாம் ஒரு செட்டப்புக்காகதான். அப்பதான் எவனும் கேக்கமாட்டான். போலீஸிம் புடிக்காது. புருசனும் இல்லை. அப்பறம் ஏன் கலர் பொடவை கட்டறா? பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும்?"
"அதுக்காக ஒடனே ரேட்டுன்னு சொல்லிடறதா? புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற? நீயும் போனதில்லை. அந்த கணேசனும் போனதில்லை. ஆனா நாலுதடவை போனமாதிரியே எதுக்குடா கதைவிடுற?"
"இங்க பாரு.. உனக்கு தெகிரியம் இல்லைன்னா சொல்லிட்டுபோ.. அதை விட்டுட்டு இப்படி பேத்தாத.. ஒரு நாளைக்கு இல்லைன்னா ஒரு நாளு நானும் கணேசும் போகத்தான் போறோம்!"
மேற்படி அலசல்கள் அனைத்தும் வெவ்வேறு விதமாக ஒவ்வொருமுறை புதூர் குஞ்சாளை பார்க்கும் போதும் எப்போதும் எங்களுக்குள் நடக்கும். இத்தனைக்கும் அப்ப நாங்க பதிணொன்னாவதுதான் படிச்சுக்கிட்டு இருந்தோம். தெனமும் அவ சாயந்திரமா "கனகம் மல்லீலீலீ..." ன்னு இழுத்துக்கிட்டு பூ வித்துக்கிட்டு வரப்ப நாங்க கிரவுண்டுல அவளை ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டு கிரிக்கெட்டுல ஊறிக்கிட்டு இருப்போம். அவ எல்லாத்தெருவையும் சுத்திட்டு இருட்டற நேரத்துல கிரவுண்டை தாண்டி போகறப்ப நாங்க வெளையாண்டு முடிச்சிட்டு வேர்வை கசகசப்போட மரத்தடில இருக்கற கல்லுங்கமேல ஜமா போட்டுகிட்டு டீம் காசுல வாங்கிக்கிட்டு வந்த தேங்காபன்னை தின்னுக்கிட்டு காலி கூடையோட போகும் புதூர் குஞ்சாளை வெறித்துப்பார்த்தபடி மேற்படி தகவல்களை அலசுவோம். திரைச்சித்ரா, மருதம்னு நாங்க திருட்டுத்தனமா படிச்ச கதைகள்ல வர "உருண்ட, திரண்ட, பருத்த, பெரிய" போன்ற அனைத்து வார்த்தைகளுக்கும் உருகவம் எங்களுக்கு அவள்தான்! 35 வயசுக்குள்ளதான் இருக்கும் அவளுக்கு. அது என்னவோ அவளைப்பத்தி பேசறது ஒரு கிளுகிளுப்பா இருந்தாலும் அவளை நினைச்சாலே உடம்பு பரபரன்னு ஆகறதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. சில நேரம் அவ வியாபாரம் முடிச்சிட்டு போகும்போது சுருட்டு புடிச்சுக்கிட்டு போகறதுதான்! அது என்னவோ அப்ப எங்க கும்பல்ல சிலபேரு திருட்டு தம்மு அடிக்கறது தெகிரியத்த காட்டறதுக்கு ஒரு வழின்னு நாங்க நெனைச்சாலும் ஒரு பொம்பள கண்ணுக்கு முன்னால சுருக்கு புடிச்சுக்கிட்டு புகை விட்டுக்கிட்டு போறது பார்க்கறப்பே ஜிவுஜிவுன்னு ஆயிரும். இத்தனைக்கும் கடைசிவரைக்கும் எவனும் நூறு ரூபாய எடுத்துக்கிட்டு போனதில்லை. மிஞ்சிபோனா சில நேரம் கிரவுண்டைதாண்டி இருக்கற ரெயில்வேடிராக்குக்கு அந்தப்பக்கமா பள்ளத்துல இருக்கற அவ வீட்டுவழியா நாலஞ்சுமுறை சைக்கிளை எடுத்துக்கிட்டு நெஞ்சு படபடங்க குறுக்கையும் நெடுக்கையும் ஒரக்கண்ணால அவவீட்டு கதவைப்பார்த்தபடியே போயிட்டு வந்திருக்கறோம். அவ்ளோதான்! அவ புருசன் நெஜமாவே இருக்கானா? இல்லையா? அவ வீட்டுக்கு வந்துபோறாங்களா? என மேற்படிதகவல்கள் ஒன்னும் உறுதியா தெரியாது! ஆனா இந்த பேச்சைமட்டும் நாங்க குறைக்கவேயில்லை! மனசுல குஞ்சாளை நினைச்சுக்கிறதையும் நிறுத்துனதில்லை..
காலம் அப்படியே நிக்குதா என்ன? அவனவன் +2 முடிச்சிட்டு அவனவன் தகுதிக்கு அங்கங்க சேர்ந்துட்டான். நம்ப மக்கா எல்லாம் நிறைய பேரு டாக்டருக்கு சீட்டு கிடைச்சி கோவையிலே சேர்ந்துட்டானுவ. சிலபேரு ஆர்ட்ஸு காலேஜி நம்ப கூரான் உட்பட. நான் மட்டும் இஞ்சினியரிங். அவனவன் வேறவேற பாதைல போனாலும் இந்த ஜமா சேர்ந்து பொங்கல் போடறது மட்டும் நிக்கலை. அதுக்கப்பறம் எங்களுக்கு புதூர் குஞ்சாளு போக பேசறதுக்கு நிறைய விசயங்க கிடைச்சது. அறிவும் வெளியுலக அனுபவமும் வளருது இல்லையா.. இந்த டாக்டரு பசங்கதான் அவனுங்க படிச்சது பார்த்தது கேட்டது கெட்டதுன்னு நிறைய சொல்லி எங்க நாலெட்ஜை வளர்த்தவனுங்க. பயக சும்மா வீட்டு கேட்டை புடிச்சு தொங்கிட்டும் தெருமுக்குல வண்டிய நிறுத்திக்கிட்டு பொங்கிக்கிட்டும் இருந்தா எந்த வீட்டுல சும்மா விடுவாங்க? அதனால கம்பைண்ட் ஸ்டடின்னு ஒன்னு கண்டுபிடிச்சோம். முன்னாடி நைட்டு 9 மணிவரை பேசுனவக இதுக்கப்பறம் விடிய விடிய பேசுனோம்! டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் கம்பைண்ட் ஸ்டடியாம்! எங்கத்த போயி சொல்ல? அனா நாங்க கையில புத்தகத்தை வைச்சிருக்கறதுக்காவது எங்களை பெத்தவங்க நம்பி விட்டுட்டாங்க. நாளாக ஆக அவனவன் இதுல பரிச்சை வைக்காமலேயே Phd வாங்கிட்டோம். பேசறதுல்ல முக்காவாசி புள்ளைங்க புள்ளைங்க புள்ளைங்க மேட்டருதான். அதை விட்டா காலேஜ் விழாவுல கூத்துகட்டறது எப்படின்னு ஆராய்ச்சி! ஆனா மத்த பயக உசாரு... பேசரதெல்லாம் பேசிட்டு படிக்கும்போது படிச்சிட்டு சலம்பும்போது அதுலையும் சேர்ந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பானுவ. நானும் அவனுககூட தொத்திக்கிட்டே பார்டரு கேசுல கரைசேர்ந்திருவேன்.
நான் நாலு வருசத்துல என் படிப்பை புடிச்சிட்டு வேலை தேடறப்ப டாக்டருங்க படிப்பை முடிச்சிட்டு 5ஆவது வருச படிப்பான ஹவுஸ்சர்ஜன்னு டூட்டிடாக்டரா ஒருவருசம் கோவை GHலயே இருந்தானுவ. பல நாள் வாரக்கடைசில வீட்டுல போரடிச்சா இந்த டாக்டருங்க பசங்க நைட்டூட்டி டாக்டரா GHல வேலைபார்க்கறப்ப நானும் அங்க போயிறது உண்டு. ஒரு மணிநேரம் அவனுங்க கூடவே எல்லா கேசுகளையும் பார்த்துட்டு 12 மணிவாக்குல வெளில வந்து ஒரு பன்பட்டர்ஜாமும் டீயும் தின்னுக்கிட்டு கூடவே தங்கராசா வடிப்பானையும் ஊதிக்கிட்டு 3 மணிவரை பேசிக்கிட்டு ஹாஸ்டல்லயே தூங்கிட்டு அடுத்தநாள் காலைல 10 மணிக்க எழுந்து வீடுவந்து சேருவோம்.
ஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்தன் நைட்டு 7 மணிக்கு போன்பண்ணி அவசரமா வரச்சொன்னான். அவனுக்கு அந்த வாரம்தான் நைட்டூட்டி. கெளம்பிப்போனபோது ஜெனரல் வார்டுல ரவுண்ட்ஸ்ல இருந்தான். அதை முடிச்சிட்டு ஆபரேசன் முடிஞ்சவங்களை அப்சர்வேஸன்ல வைச்சிருக்கற வார்டுக்கு கூட்டிக்கிட்டு போனான். ஒரு ரூம்ல 10 பெட்டுங்க. ஒரு பெட்டுல கெழங்கு மாதிரி ஒரு பொண்ணு கையை கோணலா மடக்கிக்கிட்டு கோணின வாயில எச்சில் ஒழுக படுத்துக்கிட்டு இருக்கு. அதுக்கு பக்கத்துல புதூர் குஞ்சாளு நின்னுக்கிட்டு இருக்கறா. அந்த பொண்ணுக்கு மூளை வளர்ச்சியில்லை. எழுந்துநிற்கக்கூட முடியாது. "ய்ய்யீயீயீயீயீயீ"னு காதை அடைக்கும் சத்தம் மட்டும் போடுது. 16 வயசு இருக்கும். தானா சோறு கூட திங்க முடியாது அதுனால. அவங்க கிட்ட நாலஞ்சு கேள்விமட்டும் கேட்டுட்டு அங்க குஞ்சாளை பார்த்த அதிர்ச்சியும் இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைனும் புரியாம திகைச்சுப்போயி நின்ன என்னை "வாடா போகலாம்"னு வெளில கூட்டிகிட்டி வந்துட்டான். வெளில வந்து டீக்கடைக்கு போலாம்னு ஆஸ்பத்திரி கேட்டை தாண்டி வெளில வந்து கடைபென்ச்சுல போயி ஒக்காரதுக்குள்ள அவன் என்னா மேட்டருன்னு சொல்லிக்கிட்டே வந்தான். அந்த பொண்ணுக்கு 10 நாளைக்கு முன்னால DC பண்ணியிருக்காங்க. வீட்டு பக்கத்துல இருந்த எவனோ ஒருத்தன் வாய் திறந்து பேசமுடியாத தனக்கு என்ன நடக்கிறதுன்னு உணரக்கூட முடியாத இந்த ஜடத்தை உபயோகப்படுத்திட்டானாம். எப்படியோ கண்டுபிடிச்சி இங்க கொண்டு வந்து கலைச்சிருக்காங்க. அதுபோக இனிமே மாதவிடாய் வராம இருக்கவும் கருவுறாம இருக்கவும் ஆபரேசனும் பண்ணிட்டாங்கன்னும் சொன்னான்! இதுதான் அந்த பொண்ணுக்கு இனிமே நல்லதாம்! மூளை வளர்ந்தாலும் இல்லைன்னாலும் இயற்கை சும்மாவா இருக்கு? வயசுக்கேத்த மாதிரி ஒடம்பு யாரோட கஸ்டத்தையும் பார்க்காம வளர்ந்துருது. அது எவனோ ஒரு மிருகத்துக்கு இந்த வளர்ச்சி உறுத்த உடலலவில் வளர்ந்த பெண்ணை அந்த மனதளவில் வளராதவன் குஞ்சாளு வேலைக்கு போனப்ப வேலையைக்காமிச்சிட்டான்.
ஆளுக்கு ஒரு டீ சொல்லிட்டு சிகரெட்டை பத்தவைச்சிட்டு பென்ச்சுல அமைதியா ஒக்கார்ந்திருந்தோம்.
"அந்த பொண்ணைபோய் எப்படிடா ஒருத்தன் மனசாட்சியே இல்லாம..." என கேக்க ஆரம்பித்தவன் அதற்குள் ஏதோ என் மண்டைக்குள் உறைக்க மீதி கேள்வி தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள அமைதியானேன்.
கொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி "என்ன யாரோ செருப்பால அடிச்சமாதிரி இருக்குடா..." என்றேன்.
அவன் "ம்.." என்றான்.
=======================
நிற்க: எனக்கு ரொம்பநாளா சந்தேகம். இந்த மாதிரி வாழ்க்கைல மனசைப்பாதிக்கற நிகழ்வுகளை அப்படியே எழுதறதா இல்லை சிறுகதையா எழுதறதான்னு. இதுவரைக்கும் நிகழ்வுகளாகத்தான் எழுதிவந்திருக்கிறேன். ஆனா சிலபேர் சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு இதுல எது உண்மை? நான் ஏன் அங்கே? எப்படி? எதுக்கு? என பலகேள்விகளை எழுப்பறாங்க! என்ன செய்ய? சுயபுராணம்னு எழுதுனா இதையெல்லாம் கேட்டுத்தான் ஆகனும். ஆனா சிறுகதைன்னு எழுதிட்டா இதை தவிர்க்கலாம்னு நினைக்கிறேன். உங்க கருத்தினையும் சொல்லுங்க. சிறுகதைன்னு முடிவுசெய்து எழுதும்போது பழையபதிவுகளோட வேகம் வரமாட்டேங்குது! :(
வழக்கம்போல பொறாமை...
பதிலளிநீக்கு"ஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்தன் நைட்டு 7 மணிக்கு போன்பண்ணி அவசரமா வரச்சொன்னான்....// - இந்த வரியைப் படித்ததுமே தயாராயிட்டேன்..இளவஞ்சி வழக்கம்போல மனச தொடுவார்னு தெரியும். அதே..
இளவஞ்சி,
நீங்க என்ன தலைப்பும் கொடுங்க..அது சிறுகதையோ, இல்லை உண்மைக்கதையோ இந்த style and form மட்டும் மாத்தாதீங்க (அப்படி ஒரு 'வாசகன்'/ரசிகன் சொல்றதுக்குத் தகுதியுண்டான்னு தெரியலை) உங்க (சொந்தக்)'கதை'கள் எல்லாமே எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, முடிக்கும்போது வாசகனின் மனசுக்குள்ளே கொண்டுபோய் முடிக்கிறீர்கள். எனக்கென்னவோ இந்த first person-ல் கதை சொல்லும் ஸ்டைல்தான் பிடிக்கிறது.
மீண்டும் மீண்டும் அதே வேண்டுகோள்: நிறைய எழுதுங்கள். நிறைய தூரம் நீங்கள் செல்ல வாழ்த்துக்கள்.
சிறுகதைனு சொல்லிட்ட உடனே, அதே விஷயம் நிஜத்துல நடந்திருந்தா முகத்தில உண்மை எப்படி பளிச்சினு அறைஞ்சிருக்குமோ அது அளவுக்கு பாதிப்ப ஏற்படுத்தாது..
பதிலளிநீக்குசிறுகதையில எது நிஜம்,எது கற்பனை.. இதெல்லாம் எப்படி நடக்கும்னு ஓரு ஊமை சமாதானம்னு மனசு ஒத்துக்காம இருக்க என்னலாம் பண்ணனுமோ, அதெல்லாம் பண்ணும்..
ஆக.. கதையவிட.. அத உங்க பார்வையில அல்லது, வேறயாரோட பார்வையில அத விவரிக்கு நடைக்கு என்னோட ஓட்டு..
>>டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் >>கம்பைண்ட் ஸ்டடியாம்! எங்கத்த >>போயி சொல்ல?
>> தங்கராசா வடிப்பானையும்
சோகத்தமட்டும் இல்லாம இயல்பா எல்லாத்தையும் சொல்றது தாங்க உங்க பதிவுகள்ல நான் ரசிக்கிறது..
இப்படிலாம் நடக்குதுனு படிக்கும்போது, இப்படிப்பட்ட எண்ணங்களை தூண்டிவிடுற ஊடகங்கள் மேல வெறுப்பு மேலும் அண்டத்தான் செய்யுது...
-
செந்தில்/Senthil
Hi Kovaithambi...Your writings are so good and i wouldn't recommend writing in the form of short stories.Because the subject would loose its weightage and will go in thin air.So-much happens in everybodies life,but very few can record,recollect and present it in a way everybody can enjoy and feel it.There is no offence in this,bcs its not a story,but a reality.TRUTH
பதிலளிநீக்குஇளவஞ்சி,
பதிலளிநீக்குஇந்த தருமி இப்படி முந்திக்கிட்டு நான் சொல்ல நினைச்சதையெல்லாம் சொல்லிட்டாரு.
அருமையா எழுதறீங்க நீங்க.
நல்லா இருங்க.
நல்ல பதிவு அன்பரே! சுய புராண எழுத்துக்கள் எப்பொழுதுமே இப்படி விமர்சன ஆளூமைக்க்குட்படுவதுண்டு, கவலை வேண்டாம். ஆனால் நிகழ்வுகளுக்கு கதை வடிவம் கொடுத்திட்ட பிறகு சில கோட்பாடுகளின் கீழ் அது இயற்கையாய் வரும் சம்பவ தன்மைகளை முலாம் பூசுவதால், அதன் அடித்தள தன்மை சமயங்களில் தூக்கலாகலாம், அல்ல இறக்கமடையலாம். ஆகையால், நிகழ்வுகள் என்றும் நிலைக்கட்டும்
பதிலளிநீக்கு//கொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி "என்ன யாரோ செருப்பால அடிச்சமாதிரி இருக்குடா..." என்றேன்.
பதிலளிநீக்கு//
எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்போதாவது ஏற்படும் அனுபவம்தான்!
தவறே செய்யாமல் இருக்க நாம் எல்லாம் கடவுளா என்ன?
மனிதர்தானே! தவற்றிலிருந்து கற்றுக் கொள்வோம் ( மற்றவர் தவற்றிலிருந்தும்)
எல்லோரோட வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒரு கால கட்டத்தைத் தாண்டித் தான் வந்திருப்போம்.
பதிலளிநீக்குLearning is a continous process.
ரொம்ப நாளைக்கிப் பிறகு கொஞ்சம் கண்ணு கலங்கிய ஒரு உணர்வு.தொடர்ந்து கலக்கவும்.
இளவஞ்சி,
பதிலளிநீக்குஉண்ர்வு ததும்ப இன்னொரு பதிவு, நன்றி.
உங்களுக்கு வர்றமாதிரியே எழுதுங்க... அதை எழுதி வெட்டி/ஒட்டினால் சுயம் இழக்கலாம். இருந்தாலும் நீங்கள் சிரமப்பட்டிருந்தாலும் - இந்தப் பதிவிலும் உங்கள் வழக்கமான எழுத்தைத்தான் பார்க்கிறேன் - நீங்கள் வடிவம் மாற்றியிருந்தாலும் கூட.
(அப்ப என்னடா சொல்ல வர்ற...?
எதவாது சொல்றதுதான்...:)
இளவஞ்சி. நல்ல சிறுகதை கவனிக்க "நல்ல" இதுக்கெல்லாம் இலக்கணம் கிடையாது. "செருப்பால அடிச்சா மாதிரி" இந்த வார்த்தைகள் போதும் இது நல்ல சிறுகதை என்று நிரூபிக்க! ரெண்டு நாளுல தனிமடல் போடுகிறேன். வேலை அதிகம். அதிகம் இணையத்துல வர முடியவில்லை. கதையைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஈமெயில் ஐடி சொல்லுங்க.
பதிலளிநீக்குதருமிசார், //'வாசகன்'/ரசிகன் சொல்றதுக்குத் தகுதியுண்டான்னு // என்ன விளையாட்டு இது?! உங்கள மாதிரி ஆளுகளுக்கு விசயம் தெரியும்னுதானே நானே கேக்கேன்! :)
பதிலளிநீக்குயாத்ரீகன், //இப்படிப்பட்ட எண்ணங்களை தூண்டிவிடுற ஊடகங்கள் மேல வெறுப்பு// பல நேரங்கள்ள நம்மீது கருத்துக்களை திணிக்கும் ஊடங்களை நாமதான் தேர்ந்தெடுக்கிறோம்..அனுமதிக்கிறோம்..
செந்தில், //Kovaithambi// இது நல்லா இருக்கு!
நடந்த சம்பவங்களா இருந்தாலும் எழுதும்போது என் வர்ணனைகள்தான் அந்த காட்சிகளையும் உணர்வுகளையும் படிக்கறவங்க மனசுல உருவாக்குது. அதுனால என் வர்ணனைகள் எவ்வளவு உண்மையோ அவ்வளவுதான் நான் சொல்ல வந்த உண்மைகள்னு ஆகிறுது! :) இந்த குழப்பத்துலதான சிறுகதைன்னு சொல்லிறலாமான்னு.. ஹிஹி..
இப்பவே பாருங்க.. கடைசில நான் சொல்லவந்தது என்னன்னா எவனோ ஒருத்தனை மிருகம்னு சொல்லமுடிஞ்ச என்னால புதூர் குஞ்சாளை அவளது சூழ்நிலைகளையும், வாழ்க்கைப்போராட்டங்களையும், இப்படி ஒரு பொண்ணை வளர்த்தற கஸ்டங்களையும், குறைத்தபட்சம் ஒரு சக உயிரினமா நினைக்கக்கூடத்தோணாம வெறும் காம இச்சைகளின் உருவகமாகவே பார்த்துவந்திருக்கிறேன்! அந்த நினைப்புதான் என்னை செருப்புல அடிச்சமாதிரி இருந்தது. இதை சிறுகதைக்காக சுருக்கப்போக இப்படியாகிடிச்சு!
சரி விடுங்க.. அருட்பெருங்கோ, சுதர்சன் கோபால் சொன்னதுபோல தவறே செய்யாமல் வாழ கடவுளா என்ன? இதுவும் நல்லாத்தான் இருக்கு...
மற்றும் துளசியக்கா, வெளிகண்ட நாதர், அருட்பெருங்கோ, சுதர்சன் கோபால், அன்பு.. உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
உஷா, கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! புது டெம்ப்லேட்ல இமெயில் ஐடியும் சேர்த்திருக்கேன்...
பதிலளிநீக்குilavanji@hotmail.com
அன்பு இளவஞ்சி,
பதிலளிநீக்குஎன்னத்தச் சொல்ல. மற்றுமொரு மனதை நெகிழ்த்தும் பதிவு. சிறுகதை என்று சொன்னாலும், உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி என்று தெளிவாகவே தெரிகிறது. அது சரி. இளவஞ்சி `கதை'யெல்லாம் எழுதுகிறாரா என்ன?
சிலபேர் சொல்லவந்த கருத்தை விட்டுட்டு கேள்விகள் கேக்குறாங்களா? ஹிஹி வலைப்பதிவு வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா. சொல்லவந்த புராணத்தை `சுய'புராணமாகவே சொல்லுங்க - உயரங்களை தொடுவதற்கு.
அன்புடன்,
செல்வராஜ், ஸ்காட்லாந்து.
நீயி ஒன்னுத்தியிம் கண்டுக்காதே ...
பதிலளிநீக்குநீயி நீயா எயிதிக்கினே இரு.
ஒலகம் பெர்ஸிபா.
செல்வராஜ், வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குஜக்கண்ணே! நீங்க சொன்னா சரிதான்! :)
இளவஞ்சி நெஞ்சை கனக்க வைக்கும் பதிவு, தருமி கூறியதை வழிமொழிகிறேன்.
பதிலளிநீக்கு||சிறுகதையோ, இல்லை உண்மைக்கதையோ இந்த style and form மட்டும் மாத்தாதீங்க ||
சங்கரய்யா,
பதிலளிநீக்குவருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
இளவஞ்சி உங்க பதிவுகளை ராம்கி பதிவுகளில் இருந்து புடிச்சேன். மனதை என்னவோ செய்யுது இளவஞ்சி. காமத்தை கடந்து மனசு எங்கேயோ போகத்துடிக்குது. டாக்டர் பதிவும் இதே போல் தான் மனதை என்னவோ செய்தது.
பதிலளிநீக்குமிக அருமையாக எழுதியிருக்கீர்கள். பாராட்டுக்கள். Firefox உபயோகிக்கும் பொழுது எழுத்துக்கள் சரியாக தெரிவதில்லை. இதை சரி செய்ய தமிழ்மணத்தில் / நந்தவனத்தில் குறிப்புகள் கொடுத்துள்ளனறே. அதனை நீங்கள் முயன்று பார்க்கலாமே.
பதிலளிநீக்குஅருள் நித்யா, வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குஇலவசக்கொத்தனார், தகவலுக்கு மிகவும் நன்றி! இத்தனைநாள் நேரம் கிடைக்காமையால் கவனிக்காமல் விட்டுவிட்டேன். Firefox fix செய்துள்ளேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்...