சறுக்குமிடம் காமம் எனில்...

புதன், நவம்பர் 30, 2005


Source: http://www.ocregister.com/newsimages/news/2005/07/14pedophile.cuffs.jpg

ஒரு மனிதனுக்கு காமம் எப்போது ஆரம்பிக்கிறது? அவ்வுயிர் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே என்கிறது விஞ்ஞானம். தாயிடம் பாலருந்தும்போதே என்பது ஃபிராய்டின் கருத்து. (ஆதாரம் கேக்காதிங்கப்பு... அப்பப்ப படிச்சதுதான்! ) நம்ப லெவலுக்கு ஏன் அதுவரைக்கும் போவானேன்? குத்துமதிப்பா சொன்னா பயக வயசுக்கு வரும்போது என்பது எனக்குத் தெரிஞ்சது. புள்ளைங்களை பத்தி நான் எதுவுஞ்சொல்லலைங்க.. ஆண்டாண்டு காலமாய் அவங்களுக்கு இப்படி அப்படின்னு ஆம்பளைக நாமளே நம்ப ஆசைக.. நிராசைக எல்லாத்தையும் கலந்துகட்டி ஒரு சார்பா பேசுனது போதும். இனியாவது அதை அவங்க வாயாலேயே சொல்லவிட்டு நாம தெரிஞ்சிக்கறதுதான் யோக்கியமான முடிவுங்கறது என் எண்ணம் (இன்னும் மிஞ்சிப்போனா ஒரு 15 வருசத்துக்கு பாத்வாவும், வெளக்குமாரும் பேசுமா?! அதுக்கப்பறம்? )

பசங்க வயசுக்கு வரதா? அதெப்படிங்கறீங்களா? அதுதாங்க ஒடைஞ்ச குரலும் அரும்பு விடும் மீசையுமே காட்டிக்கொடுத்துருமே! அப்ப ஒரு 13 இல்லை 14 வயசு இருக்குமா? சரி. அந்த வயசுல காமம்னா என்னன்னு நெஜமாவே தெரியுமா? அடிக்கடி உம்மணாம்மூஞ்சியா மாற்றதும், மொகத்துல எட்டிப்பார்க்கற பருக்களும் ஹார்மோன் செய்யற வேலையாகவே இருக்கட்டும். அந்த ஹார்மோன் பசிக்கு தீனி என்னவாயிருந்ததுன்னு யோசிச்சா புள்ளைங்களை முழுங்கற மாதிரி பார்க்கறதும், அவங்க அறியாம அவங்களை ரசிக்கறதும்தான்! அதுவரைக்கும் சோட்டாளிகளா இருக்கறவுக இந்த பார்வை வந்ததுக்கப்பறம் ஒரு வித்தியாசமான என்னன்னே தெரியாத அதை தெரிஞ்சிக்கறதுதான் வாழ்க்கைல மொதவேலைங்கற அளவுக்கு அந்த ஈர்ப்பு கெளம்பி பேயாட்டம் ஆடிருது. அவங்க நடக்கறது, பேசறது, சிரிக்கறது எல்லாமே "புதுசு, கண்ணா புதுசு" தான். ஆனா அப்பவும் காமம்னா என்னன்னு தெரியும்னு சொல்லிற முடியுமா என்ன?

அப்பறம் வயசு ஆக ஆக கண்ணால் காண்பதும் மெய், காதால் கேட்பதும் மெய்யென்று படம், புத்தகம்னு மாட்டிகிட்டும், மாட்டாமலும், நம்பளையே சில நேரம் நொந்துக்கிட்டும், பல நேரம் நாமளா இப்படிங்கற அதிர்ச்சியோடவும், அரைகுறை விசயங்களையும் கற்பனைகளையும் கலந்த கூட்டாளிகளோட பண்டமாற்றமும்னு விழுந்து பொரண்டு மொகரை பேர்ந்து முட்டிசில்லு தேய அலைஞ்சு நம்ப ஜெனரல்நாலெட்ஜை வளர்த்தறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருது. இப்படி கஷ்டப்பட்டு தேடிச்சேர்த்த பட்டறிவுங்கறதாலயே(நன்றி: தருமி) இது ஏதோ வாழ்க்கைல அபூர்வமா கிடைக்கக்கூடிய ஒரு பொக்கிஷமாத்தான் தோணுது! அஞ்சு வயசு வரைக்கும் சேர்ந்து இருக்கற ஒரு சகஜீவனை அதுக்கப்பறம் 20 வருசத்துக்கு ஒரு அன்னியஜீவனாகவே அடையாளம் காட்டப்பட்டு பிறகு திடீரென "இருவரும் ஒரே மனுச இனம்தான் ஆகவே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இல்லறத்தை நல்லறமாய்.."ன்னு பொழிப்புரை கேக்கறப்ப தள்ளியிருந்து பார்க்கற விடலைங்களுக்கு கேனத்தனமாய் உளருவதாகத்தான் படும்! வாழ்க்கையின் அடிநாதம்னா தோணும்?!

நம்ப சமூகம் இருக்கு பாருங்க! அதுவாகவும் பாலுணர்வுன்னா என்னன்னு சொல்லித்தராது! நீங்களா தெரிஞ்சிக்க முற்பட்டு முட்டில ரத்தம் வர நின்னாலும் போட்டு தாளிச்சிரும்! அதுக்காக மனுசப்பயக சும்மாவா இருக்கறோம்? இல்லை சமூகத்தை விட்டு ஓடிற முடியுமா? ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பெத்தவுக, கூடப்பொறந்ததுக, பங்காளிகளை ஒதுக்கிவைச்சிட்டு வாழ்ந்துற முடியுமா? வேரோடு புலம் பெயரும் சிறுசுகளுக்குக்கூட இது சிரமமான காரியம்னாலும் ஒட்டுமாங்கனி மாதிரி ஒட்டிக்கிச்சுன்னா கவலையே இல்லை. ஒட்டாம போகவும் வாய்ப்பு ரொம்ப கம்மி. பச்சை களிமண்னுக இல்லையா! ஆனா ஒரு சமூகத்தோட ஒட்டி வளர்ந்துட்ட நம்பள மாதிரி வளர்ந்த மரங்கள வேரோட வேற எடத்துல நட்டா வளர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி. சுட்ட பானைக மாதிரிதான். வளைச்சா ஒடைஞ்சிருமே தவிர வளையுமா என்ன? போற எடத்துல எல்லாம் தமிழ் சங்கங்களும், மன்றங்களும், இந்த வலைப்பதிவுகளும் எல்லாம் ஏதோ ஒரு விதத்துல நம்ப சமூகத்தோட ஒட்டிக்கிறதுக்கான அடையாளங்களே அன்றி வேறென்ன?

நமக்குப்பிடிக்காத கருத்துக்களையும் வறட்டுபிடிவாதங்களையும் வைத்திருந்தாலும்கூட இந்த சமூகத்தை எட்டி ஒதைச்சிட்டு ஓடிற முடியுமா சொல்லுங்க? இங்கனயே இருந்து மாற்றங்களுக்காக குரல் கொடுக்கறதும் கொடுக்கற குரலுக்கு வலிவு இருந்துச்சுன்னா அதுக்கேற்ப வளைஞ்சுகொடுக்கறதும்தான் நம்ப.. நம்ப என்ன.. எந்த சமூகத்துக்கும் வரலாறு. இங்கன இருக்கறவுகளையெல்லாம் கேனப்பயகன்னு சொல்லிட்டு ஃபிரெஞ்சு, லத்தீன் இலக்கியம் வாழ்க்கைதான் ஒலகத்துல பெருசு.. இது உங்க தயிர்சாத வாழ்க்கைக்கு எங்க புரியப்போகுதுன்னு கூவிக்கிட்டி இருந்தாலும் திங்கறதும், கால் கழுவறதும் இங்கதானே? எழுதறதும் அதே நம்ப முட்டாப்பயகளுக்குத்தானே? சொல்ல வந்தது சமூகத்தை திட்டிக்கிட்டு இருந்தாலும் விட்டுட்டு ஓடிறமுடியாதுங்கறது தான்!

அறுத்தெரியமுடியாத பிணைப்புகள் உள்ள இந்த சமூகத்துல இருந்துக்கிட்டு என்ன தப்பு செஞ்சாலும் அது காலப்போக்குல நீர்த்துத்தான் போகுது. காமத்தில் தவறுதல் தவிர! 1000 கோடி சுருட்டுன ஹர்சத்மேத்தாவையும் நாலுபேரு பொருளாதார மேதைன்னுதான் சொல்லறாங்க. கோடி கோடியா சுருட்டி படங்களோட சேதி வந்தாலும் அடுத்த தேர்தல்ல ஜெயிக்கத்தான் செய்யறாங்க! அட இவ்வளவு ஏங்க? அடுத்த நாடுமேல குண்டு போட்டு அழிச்சாலுமே அவங்களை பத்தி பேப்பரும் மக்களும் பேசிப்பேசி மாஞ்சுட்டு அடுத்தவேலைய பார்க்கப்போயிறது இல்லையா? ஆனா பாருங்க. முறையற்ற காமம்கற எடத்துல ஒருத்தன் இடறி விழுந்துட்டான்னா ஊரே அவனைப்போட்டு மிதிச்சிக்கொண்டாடிறுது. அது கிளிண்டனா இருந்தாலுஞ்சரி.. சரவணபவன் அண்ணாச்சியா இருந்தாலுஞ்சரி... என்னவோ ஒலகத்துல அத்தனை மக்களும் ஒழுக்கம் மாதிரி! பார்க்கப்போனா ஒவ்வொரு மனுசமனமும் ஒரு ரகசியகிடங்கு! அதுக்குள்ள இருக்கற அழுக்குகளும் தவறுகளும் பிறழ்வுகளும் சமூகக்கட்டுப்பாடுங்கற ஒரு உறையைப்போட்டு மூடி மறைக்கப்பட்டிருக்கு. அதை மீறி விகாரங்களை வெளிக்கட்டறவங்க காமுகன்னு பெயர் வாங்கிடுறான். உறையை இறுக்கிக்கட்டிக்கிட்டு உலாத்தறாவங்க எல்லாம் நல்லவங்கன்னு பேரு வாங்கிடுறோம்! அது விருப்பப்பட்டு இறுக்கிக்கட்டுனாலும் சரி. கட்டாயத்துல கட்டுனாலும் சரி!

பாருங்க... ஆரம்பிச்சதுல இருந்து கருத்து கந்தசாமி மாதிரியே பேசிக்கிட்டு இருக்கேன்! 'அவன்' என் கல்லூரி கூட்டாளிங்க. படிக்கற விசயத்துல அவன் புலிங்கறதால அந்த விசயத்துல மட்டும் அவங்கூட சேர்றதில்லை. அவனும் என்னை சேர்த்துக்கிட்டது இல்லை. (பின்ன?! என் ஸ்பீடுக்கு அவனால ஈடுகொடுக்கமுடியுமா என்ன?! ) மத்தபடி ஆட்டம், பாட்டம்னா சோடி போட்டுக்கிட்டு அலம்பரதுதான். அவனுக்கு இல்லாத திறமையே இல்லைங்க. காலேஜ் டீம்ல ஓபனிங் பேட்ஸ்மேன்! கல்சுரல்ஸ்ல ஃபேஷன்பெரேட் மாடல். பார்க்க கொஞ்சம் பழம் மாதிரி இருக்கறதால எப்பவும் அவனுக்கு ஸ்டேஜ்ல குர்தாதான்! பய படிப்புல சொல்லவே வேணாம். அவனோட அப்பா ஊருல பெரிய டாக்டர். பரம்பரையா பாரம்பரியம் மிக்க பெரிய குடும்பம். அவன் வீட்டுக்கு நாங்க போறதே தீனி திங்கதான். அவங்கமா அப்படி அருமையா சமைப்பாங்க! வீடு முழுக்க அவங்க கைவண்ணத்துல செஞ்ச கலைப்பொருள்களா இருக்கும்! அம்சமா பாடுவாங்க. வீணை வாசிப்பாங்க. ஒரு நிமிசம் சும்மா இருக்க மாட்டாங்க. அவங்களை பார்த்தாலே எனக்கெல்லாம் ஒரு குற்றஉணர்ச்சி மனசுல வந்துரும். இந்த இளவயசுல இப்படி தத்தியா திரியறமேன்னு! அவனை எனக்கு ஒரு ரோல்மாடல்னு சொல்லமாட்டேன். ஆனா அவனோட வளர்ச்சிய பார்க்கப்பார்க்க மலைப்பா இருக்கும். நான் டிகிரி வாங்கிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு ஆழ்ந்த சிந்தனைல இருந்தப்ப அவன் விசா வாங்கிட்டு அமெரிக்காவுக்கு படிக்க போயிட்டான்! நான் ஒரு வேலை கிடைச்சு அதுல சேரும் போது அவன் புகழ்பெற்ற ஒரு கம்பெனில விஞ்ஞானியா சேர்ந்திருந்தான்! நான் டவுன்பேமெண்ட் கட்டி லோன் போட்டு வாழ்க்கைல என் முதல் இலக்கான யமாஹா 135 வாங்கும்போது அவன் BMW 5series முன்னால நின்னு சிரிச்சுக்கிட்டு இருக்கற போட்டோ அனுப்பியிருந்தான். நான் நல்ல வேலைல செட்டிலானதுக்கப்பறம்தான் கல்யாணம்னு ஒரு முடிவுல இருந்தப்ப அவன் கூடப்படித்த ஒருத்தியையே காதலித்து கல்யாணம் பண்ணியிருந்தான்! எனக்கு கல்யாணம் ஆனபோது அவன் 2 வயது பெண்குழந்தைக்கு அப்பனாகி 4 பெட்ரூம் கொண்ட பெரிய வீட்டுக்கு சொந்தக்காரனாகியிருந்தான். அப்பவே அவன் பேரை யாஹூல போட்டு தேடுனா அஞ்சாரு சுட்டிகள் வரும். அவன் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை தகவல்களை உள்ளடக்கி. எனக்கு இந்த ஒரு விசயத்துலதான் ஆசையா இருக்கும். நம்ப பேரும் என்னைக்கு இணையதளத்துல வரும்னு? ( ப்ளாகர் புண்ணியத்துல இப்ப வரவைச்சுட்டேன்னு வைங்க.. :) ) ஊருல அவன பெத்தவங்களை பார்க்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்கும்!

இப்போ அவன் அமெரிக்காவுல ஜெயில்ல இருக்காங்க! செஞ்ச தப்பு இதுதான்... வலைல ச்சேட் (Chat ) பண்ணும்போது ஒருத்திகூட பேசியிருக்கறான். அவளுக்கு வயசு 13ம்னு சொல்லியிருக்கறா. பேசப்பேச பேச்சு வேறவகையில போயிருச்சி. இவன் பேச்சுல செக்ஸ் Interest காட்ட மறுமுனையிலிருந்தும் சிக்னல் வந்திருக்கு. எங்க சந்திக்கலாம்னு முடிவுசெஞ்சு ஒரு இடத்துக்கு அவ வரச்சொல்ல இவன் அங்க குறிப்பிட்ட இடத்துக்கு அதே நேரத்துக்கு தேடிப்போக வசமா மாட்டிக்கிட்டான். அதுவரை chatல பேசுனது 13 வயசு பெண்ணே இல்லை! காவல்துறை அதிகாரி! இந்த மாதிரி சிறார்களுடன் பாலியல் தொடர்பு வைக்கறவங்களை பொறிவைத்து பிடிக்கறதுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காவல்துறை அமைப்பு. எல்லாம் ஒரே வாரத்தில நடந்து முடிஞ்சிருச்சு! வழக்கும் நடந்தது. கோர்ட்டுல கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் இவன் chat செய்த அனைத்தும் மற்றும் 2 மணிநேரம் இந்த சந்திப்பிற்காக கார் ஓட்டிக்கொண்டு 80 மைல் தூரத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு சென்றதும்! அவன் இருக்கும் மாகானத்தில் சிறார்களுடன் பாலியல்தொடர்புக்கான Intention இருந்தாலே போதுமாம். தண்டனையளிக்க! 5 வருடங்கள் சிறைதண்டனை தீர்ப்பானது. இவனைபோலவே அதே வாரத்தில் சிக்கிய இன்னொருவனுக்கு 25 வருடங்கள் தண்டனை. இரண்டாவது முறையாக மாட்டுகிறானாம். இவனது வழக்கு நடந்த 1 வருடத்தையும் சேர்த்து இதுவரை 3 வருடங்கள் ஓடிவிட்டது. அவன் மனைவி 6 மாதத்தில் பெண்குழந்தை இருக்கும் காரணம் காட்டி விவாகரத்து பெற்றுக்கொண்டு பெயரையும் மாற்றிக்கொண்டு வேறு மாகானத்துக்கு சென்றுவிட்டாள். நண்பர்கள் அவனுடன் பேச முயன்றும் அவன் யாருடனும் பேச மறுத்துவிட்டான்!

நீங்கள் இதற்கு 'Pedophilia" என மருத்துவபெயர் கொண்டு இதற்கான காரணங்களை ஆராய முற்படுங்கள். அல்லது இவன் போன்றவர்களை கழுவிலேற்ற வேண்டும் என தீர்ப்பெழுதுங்கள். அல்லது யோனியின் வழியே ராக்கெட் விடும் கதைகளை எழுதும் பின்நவீனத்துவ காலத்தில் இது ஒரு பிற்போக்கான தயிர்சாதவகை எழுத்தென இலக்கியநோக்கில் பாருங்கள். அல்லது உள்மனவிகாரங்களை உளவியல் ரீதியாக பிரித்தாராயுங்கள். எனக்குத்தெரிவதெல்லாம் அவன் செய்த இந்த காரியத்தினால் அவனைச்சார்ந்திருப்போருக்கு ஏற்பட்ட பாதிப்புதான். அவனது தந்தை மருத்துவவேவையை நிறுத்தி சில வருடங்களாயிற்று. அவனது அம்மாவிற்கு இப்போது கோவிலே கதி! எப்பொழுதும் உற்சாகம் கொப்பளிக்கும் அவனது வீடு இன்னும் இயல்பு நிலைக்கு மீண்டபாடில்லை! எங்கோ ஒரு நாட்டில் சிறையில் இருக்கும் மகனைப்பற்றிய அந்த அம்மாவின் மனநிலை என்னவாக இருக்கும்? அதுவும் வெளியில் சொல்லமுடியாத ஒரு குற்றப்பிண்ணனியை கொண்டு?! இப்பொழுது 5 வயதில் ஒரு பெண்குழந்தையை வைத்திருக்கும் அவன் முன்னால் மணைவி இதனை எவ்வாறு எதிர்கொண்டு சாமளித்து மீண்டுவந்திருப்பாள்? இல்லை அவன் தான் என்ன மனநிலையில் 5 வருடங்களை கழிக்கப்போகிறான். விடுதலையானபின்னும் அமெரிக்காவில் அவன் எப்படி வாழப்போகிறான்? ஒரு வாடகை வீடு எடுக்கும்போதுகூட அதற்குமுன் அவனது History அவன் இருக்கும் பகுதியும் காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அவன் இருப்பை பற்றிய தகவலகள் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்படும் நிலையில்!

இந்த உலகம் காதல், கடன், பகை, துரோகம் என அனைத்து தோல்விகளுக்கும் அவமானங்களுக்கும் காலம் என்ற மருந்தை வைத்திருக்கிறது. ஆனால் முறையற்ற காமம் என்ற குற்றத்தினை மட்டும் அது அவ்வளவு எளிதில் மன்னிப்பதே இல்லை. வாழ்க்கை முழுதும் வாழ்க்கைக்கு பின்னும் நிலைத்துதான் விடுகிறது. இப்பொழுதும் அவனது பெயரை கூகுளில் இட்டு தேடினால் 97 சுட்டிகள் கிடைக்கின்றன. அவன் கண்டுபிடிப்பிகளுக்கான காப்புரிமை சுட்டிகள் 6 போக மற்றவை அவன் கைது மற்றும் வழக்கு பற்றிய செய்திகளுடன்!

விரும்பக்கூடியவை...

31 comments

 1. படிச்சி முடிச்சப்போ சோகமாத்தான் இருக்கு. அதான் விதிங்கறது.

  அதுசரி, இதுக்கு என்ன அர்த்தம் இளவஞ்சி

  ''நீங்களா தெரிஞ்சிக்க முற்பட்டு முட்டில ரத்தம் வர நின்னாலும் போட்டு தாளிச்சிரும்!"

  முட்டியில ரத்தம் வர நின்னு என்னத்த கத்துக்கிட்டீங்க? புரியலையே.

  பதிலளிநீக்கு
 2. இளவஞ்சி,
  இதுக்கு என்ன பின்னூட்டம் இடுறதுன்னு தெரியலை. சில சறுக்கல்கள் சிலரை எவ்வளவு பாதாளத்திற்குக் கொண்டு போயிடுது?

  வழக்கம்போல மனசை கனமாக்கிட்டுது உங்க இந்தப் பதிவும்..

  பதிலளிநீக்கு
 3. இளவஞ்சி.. என்ன சொல்றதுன்னு தெரியல.

  13 வயதுன்னு தெரிஞ்சப்புறமும் தொடர்ந்து அந்த மாதிரி சாட் பண்ணி, இரண்டு மணிநேரம் பயணமும் செஞ்சிருக்கார்னா.. இது முதல்முறை மாட்டிக்கிட்ட சம்பவமா இருக்குமோன்னு நினக்கத் தோணுது.. சட்டமும் போலீஸும் அதிவேகமாக பாயும் அமெரிக்க, ஐரோப்பாவிலேயே இவ்வளவு நடக்கிறதென்றால், நம்மூரில் எத்தனை எத்தனை என்று எண்ணிப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. பெங்களூர்ல கூட இது நிறைய நடப்பதா இராகவன் சொல்லிருந்தார்.

  60 வயது கிழவர் 18 வயது மங்கையை திருமணம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. ஆனால், God Forbid, 17 வயது 350 நாளாக இருக்கக்கூடாது. என்ன லாஜிக்கோ தெரியவில்லை.

  என்னவோ, இத்தன வருஷம் உழைச்சு சம்பாதிச்ச தன்னோட பேரோட குடும்ப பேரும் போச்சே. அவரோட பெற்றோர்கள நினைச்சா கஷ்டமா இருக்கு. என் உறவினர் ஒருவரும் sexual harassment கேஸில் வெளிநாட்டில் மாட்டிக்கொண்டார். அதற்கு உறவினர்களுக்கிடையேயும், சமூகத்திலும் இங்கே பெற்றோர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

  பதிலளிநீக்கு
 4. இளவஞ்சி,
  நான்,ப்ளாகு க்கு புதுசு, தருமி'தை முடிச்சிட்டு உங்களோடது, கலக்கல் :-)

  பதிலளிநீக்கு
 5. தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி. ரொம்ப கஷ்டமாயும், பயமாயும் இருக்கிறது!
  நண்பர் அதிலிருந்து விரைவில் மீண்டு வரட்டும். அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை...

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு.

  ஃபிராய்டின் கருத்தை ஆதாரம் இல்லை என விட்டுவிட்டீர்கள். நான் சொல்கிறேன்.

  சந்திரமுகி படத்தில், ஃபிராட்லியின் சிஷ்யர் என்று ரஜினிகாந்த் சொல்லப்படுவார். அவரது முழுப்பெயர் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud). ஆஸ்திரிய நாட்டு டாக்டர். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர், மனிதனின் நடைமுறை வாழ்க்கையின் தாக்கங்கள்தான் கனவுகள் என்று சொன்னதன்மூலம் மனோதத்துவம் என்ற புதிய துறைக்கு அடிக்கோழிட்டார். பின் மனோதத்துவத்தின் தந்தை எனவும் போற்றப்பட்டார்.

  சரி உங்கள் விஷயத்திற்கு வருவோம். கிரேக்கப் புராணத்தில் ஒடிபஸ் என்ற மன்னன், ஒரு பெண்ணின்மேல் இச்சை கொண்டு, அவளை அடைவதற்காக அவளின் கணவனைக் கொன்றுவிட்டு, அவளை மணந்து கொள்வான். பிறகுதான் தெரிந்தது, அவள் அவனது தாய் என்று!

  "அந்த ஒடிபஸைப் போலவே ஒவ்வொரு ஆணுக்குள்ளும், தன் தந்தையைத் துறத்திவிட்டு, தன் தாயுடன் உறவு கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தன் தாயைத் துறத்திவிட்டு, தன் தகப்பனுடன் உறவு கொள்ள வேண்டும் எனவும் ஒரு இச்சை இருக்கும்" என ஒடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus Complex) என்ற புதிய கொள்கையை முன்வைத்தார். எலெக்ட்ரா காம்ப்ளக்ஸ் (Electra Complex) என்ற இன்னொன்றும் உண்டு. அப்பொது உலகம் ச்சீ என்றது. இப்போது உண்மைத்தான் என ஃப்ராய்ட்டைப் போற்றுகிறது.

  ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் தாய்ப்பால் கூடாது எனவும், தாயருகில் படுக்கக் கூடாது எனவும் ஆண்குழந்தைகளுக்கு மனோதத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பது இதனால்தான். பிள்ளைகளுடன் படுப்பதே பாசம் என பல பெற்றோர்கள் தவறாக நினைக்கின்றனர். பெண்குழந்தைகளைக் குறிப்பிட்ட வயதுக்குமேல் தகப்பன் அடிக்கக் கூடாது என்று எங்கோ சட்டம் இருப்பதாகவும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

  -ஞானசேகர்

  பதிலளிநீக்கு
 7. இளவஞ்சி,

  பால்ய வயதில் இருந்த இது போன்ற எண்ணங்கள் வயது ஆக ஆக மாறவேண்டும்.
  13 வயது பையன்கள் தனது ஆசிரியருக்கு ரோசாப்பூ கொடுத்ததாக எங்கோ படித்தேன். இது கூட மன்னிக்கப்படாலாம். ஏனென்றால் அது அப்படிப்பட்ட பருவம்.
  ஆனால் அதுவே பெரியவர்கள் சிறியவர்களை நோக்கிச் செல்வது மிகவும் தவறு. இவர்கள் எல்லாம் தெரிந்தே செய்கிறார்கள்.
  அதுவே காவலராக இல்லாமல் உண்மையில் ஒரு 13 வயது பெண்ணாக இருந்திருந்தால்? அந்த இளம் பெண்ணுக்கு வரும் பாதிப்பு எப்படி இருக்கும்.

  இங்கு இதுபோல் பல வழக்குகள் உள்ளது. இங்கு உள்ள வால் மார்ட் போன்ற இடங்களில் காணாமற்போன சிறுவர்/சிறுமியரின் புகைப்படங்களைக் காணலாம். பல குழந்தைகள் இம்மாதிரி பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றன.

  கிளிண்டனின் செய்ததும் தவறுதான் (அதுவும் மனைவிக்குத் துரோகம், அலுவலகத்தில் அது போன்ற செயலில் ஈடுபடுவது என்ற வகையில் மட்டுமே) என்றாலும் அது இரண்டு Adult களுக்கு இடையே, இருவரின் ஒப்புதலோடு நடந்ததால் இதனோடு ஒப்பிடமுடியாது.13 வயது பெண் சரி என்றாலும் உனக்கு எங்கடா போச்சு புத்தி? என்றே கேட்கப்படும்.அனைவரும் தவறு செய்கிறோம். செய்தது பிறருக்குத் தெரியவரும்போது வெட்கப்படுகிறோம்.

  //இங்கன இருக்கறவுகளையெல்லாம் கேனப்பயகன்னு சொல்லிட்டு ஃபிரெஞ்சு, லத்தீன் இலக்கியம் வாழ்க்கைதான் ஒலகத்துல பெருசு.. இது உங்க தயிர்சாத வாழ்க்கைக்கு எங்க புரியப்போகுதுன்னு கூவிக்கிட்டி இருந்தாலும் திங்கறதும், கால் கழுவறதும் இங்கதானே? எழுதறதும் அதே நம்ப முட்டாப்பயகளுக்குத்தானே? சொல்ல வந்தது சமூகத்தை திட்டிக்கிட்டு இருந்தாலும் விட்டுட்டு ஓடிறமுடியாதுங்கறது தான்!//

  எது எப்படியோ நம்மூருக்கு பாலியல் கல்வி அவசியம். அதுக்காக எல்லாம் தெரிஞ்ச ஃபிரான்சு என்ன நல்லாவா இருக்கு, அங்கு குற்றமே கிடையாதா என்று கேட்கக்கூடாது. :-))))

  உங்கள் நண்பர் வெளியில் வந்து, தான் செய்ததை நினைத்து வருந்தி, இது போன்ற செயல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்தால் அவரின் குற்றஉணர்வு மறையலாம்.

  மேலும்,ஹர்சத் மேத்தா போன்றோரின் குற்றங்கள் பொருளாதாரக் குற்றங்களாக பெரிய அள்வில் "வியந்து" பார்க்கப்படுவதும், சாதாரண காவல் அதிகாரி வாங்கும் கையூட்டு கேவலாமாப் பார்க்கப்படுவதும் அதே மக்களால்தான். இரண்டும் குற்றமே ஆனால் ஒன்று கேவலம் மற்றொன்று பெரிய இடத்துச் சமாச்சாரம்.

  பதிலளிநீக்கு
 8. சரவணபவன் அண்ணாச்சி மாட்டியது, ஏதோ பேரம் படியவில்லை என்பது காரணம் என்று பேசப்பட்டது. சின்னவீடு
  கலாசாரம், சமுகத்தில் பெரிய மனிதர்களுக்கு அந்தஸ்தைக் கூட்டும் விஷயம்தானே? ஆணின் காமம், நம் ஊரில் அவனின் "ஆண்மையை எடுத்துக்காட்டும் செயல்" அல்லவா.

  பதிலளிநீக்கு
 9. அந்த பதின்ம வயசில ஒருமுறை என்னோட வகுப்புத் தோழி ஒருத்தியை என் வீட்டிற்கு கூட்டிச் சென்று அப்பா அம்மாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவளிடம் நன்றாக பேசினார்கள். அவள் சென்ற பிறகு எங்கப்பா எனக்கு சொன்ன விஷயம் இதுதான் "டேய் நீ கொலை செஞ்சாலும் இந்த உலகம் ஏத்துகிடும் ஆனா ஒரு பொம்பள விவகாரத்தில் மாட்டினால் உண்டு இல்லைன்னு ஆக்கிரும்".

  அப்போவெல்லாம் அப்பா சொன்னா கேட்கவா போறோம் நண்பன் ஒருவனிடம் இது பற்றி பேசினேன் அவன் சொன்னது "டேய் நாலு பேரை அடிச்சிட்டு வீட்டுல போய் சொல்லு உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... நீ திருடிட்டுப் போனாலும் உங்கம்மாவுக்கு தான் பையன் தப்பு பண்ணலைன்னு தான் தோணும் ஆனா பொண்ணு விஷயத்தில மாட்டினே... வீட்டில உள்ளவங்களும் தலை குனியனும் உன்னையும் நம்ப மாட்டாங்க... பாத்து புரிஞ்சு நடந்துக்கோ". எப்போதுமே என் வயதொத்த நண்பர்கள் எனக்கு கிடையாது. இந்த நண்பனும் அப்படித்தான். நான் எட்டாப்பு படிக்கும் போது அவன் பண்ணண்டாப்பு. ஆனா பாருங்க மூத்தவங்க சகவாசம் எத்தனை நல்ல விஷயங்களல்ல போய் முடியுது.

  அன்னைக்கு விட்டது தான் இந்த பொண்ணுங்க சகவாசம். தெருவில் வசிக்கும் ஒரு ரெட்டை ஜடை லவ்லெட்டர் கொடுத்த போது கூட அதோட அண்ணன்கிட்ட கொடுத்துட்டு வந்திட்டேன். அவ்வளவு நேர்மை. ஆனாலும் மனசில நீங்க சொல்ற அழுக்கு இன்னும் இருக்கு. என்னால் அதை வெற்றிக் கொள்ள முடியவில்லை. ஒரு வேளை எனக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை பிறக்கும் பொழுது தான் போகும்னு நினைக்கிறேன்.

  இளவஞ்சி நீங்க சொல்றது முற்றிலும் உண்மை. காலத்தால் வெல்ல முடியாதது காமம். இன்னொன்னு யோசிச்சு பாருங்க. திருடினவன் மறுபடி திருடக்கூடாதுன்னு நினைச்சா நல்லபடியா வாழ்ந்திடலாம். ஆனா ஒருமுறை இந்த காமம் என்னும் அழுக்கு மனசுக்குள் வந்திட்டால் அதுக்கப்புறம் அந்த ஜென்மத்துக்கும் அவனால அதை வெற்றிக் கொள்ள முடிவதில்லை.

  பதிலளிநீக்கு
 10. நிதானமாய் யோசிக்கவைக்கின்ற பதிவு. மற்றது உங்களது எழுத்து நடை பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 11. இளவஞ்சி,

  மீண்டும் ஒரு கணமான பதிவு.

  கனேஷ்,
  ((ஒருமுறை இந்த காமம் என்னும் அழுக்கு மனசுக்குள் வந்திட்டால் அதுக்கப்புறம் அந்த ஜென்மத்துக்கும் அவனால அதை வெற்றிக் கொள்ள முடிவதில்லை)) ஆமோதிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 12. நண்பர் குழலிகிட்ட பேசிகிட்டு இருக்கும் போது
  இளவஞ்சி பத்தி பேசி கிட்டு இருந்தார். சரி நாமும் வலை பக்கம் போய் பார்போமே அப்ப்டீன்னு வந்தா, இவ்லோ நாள் இவரோட பதிவுகளை பார்க்கலையேன்னு ஒரு சின்ன வருத்தம் இளமையை அழகா நகர்த்தி போனவர் திடீர்னு நண்பரோட கதையை சொல்லி நல்ல செய்திகளை அவருக்கே உரித்தான தனி நடையில் அசத்திட்டீங்க மாமு.
  இன்னொன்னும் சொல்லலாம்னு நெனைக்கிறேன்
  நீங்க சொன்ன அன்னாச்சி காதலி நான் பள்ளி போகும் காலங்களில்(அவங்க வேறு பள்ளி) கனவு கன்னி .சமீபத்துல
  அந்த பொன்னுக்காக முதலமைச்சர் 9 போலிஸ் பாதுகப்பு 3 ஸிப்ட் போட்டு பாது காப்பு
  ஊர்ல தான்! ஜு . வி நண்பரோட பேட்டிக்காக நானும் கூட போயிருந்தேன் நெனச்சா சிரிப்பா இருக்கு!

  பதிலளிநீக்கு
 13. இளவஞ்சி: அருமையான பதிவு. எப்படித்தான் பிடிக்கிறீங்களோ தெரியல.

  இந்த விசயத்திலயும் (தெகல்கா போல) குற்றத்திற்கு தூண்டப்பட்டதாகவே தெரியுது. ஆனாலும் நண்பர் செய்ததும் தவறு தான். சிங்கப்பூரிலும் இப்படி ஒரு விசயம் நடந்தது. ஒரு 15 வயது பெண் தன் பாய்பிரண்டிடம் அவனது நண்பர்களை அறிமுகப்படுத்துமாறு கூறி அவர்களுடன் உடலுறவு கொண்டு, பணம் பெற்று அதைவைத்து விலையுயர்ந்த ஒரு பொருளை வாங்கி கொண்டாளாம். அதன் பின்னர் ரொம்ப நேர்மையா தனது பாய்பிரண்ட் மற்றும் அவனது நண்பர்களையும் போலீசிடம் புகார் செய்து உள்ளே தள்ளி விட்டாள்.
  என்னத்த சொல்றது???

  பதிலளிநீக்கு
 14. ஜோசப் சார், //முட்டியில ரத்தம் வர நின்னு என்னத்த கத்துக்கிட்டீங்க? // :) ஒன்னா ரெண்டா? சைக்கிளை மிதிச்சுக்கிட்டு மணீஸ் தியேட்டர் inter-show போனதுல இருந்து திரைச்சித்ரா, மருதம் வாசகனாகி, இரெவெல்லாம் கண்விழிச்சு சாமிபடம் பார்த்தது வரை... வேணாங்க .. இந்த தகவலை ரொம்ப சொல்லபோக அப்பறம் யாராவது பச்சை விளக்கை அணைக்கறதுக்கு லெட்டர் போட்டுற போறாங்க... :)

  தருமி சார், இந்த விசயத்துல பாதாளத்துக்கு போயிட்டா அப்பறம் எழுந்திருக்கறது சிரமம்தான்! அப்படியே எழுந்து நின்னாலும் உலகம் அவ்வளவு சீக்கிரம் நம்பறதும் இல்லை! :(

  ராம்ஸ், //அதற்கு உறவினர்களுக்கிடையேயும், சமூகத்திலும் இங்கே பெற்றோர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.// அதேதான் :( ராகவன் கருத்தை அறியக்கொடுத்தமைக்கு நன்றி...

  ரவிக்குமார், அன்பு: அடிக்கடி வாங்க...

  ஞானசேகர், தகவல்களுக்கு நன்றி...

  கல்வெட்டு, //இருவரின் ஒப்புதலோடு நடந்ததால் இதனோடு ஒப்பிடமுடியாது// நான் ஒப்பிடவில்லை.. ஆனால் அதுவும் முறையற்ற காமம்தானே? அவர் வாழ்நாள் முழுவதும் இது அவருக்கு கரும்புள்ளிதானே?

  அனானிமஸ், அண்ணாச்சி செஞ்சது.. பிறன்மனை நோக்குதல்.. சின்ன வீடு கூட நீங்க சொன்ன மாதிரி "ஆண்மையை எடுத்துக்காட்டும் செயல்" தான். ஒரு அற்புதமான கடின உழைப்பாளி அண்ணாச்சி. தனியொரு ஆளாக அடிமட்டத்தில் இருந்து உயரே உயரே உழைப்பின் மூலம் போனவர்.. ஆனா இப்போ அண்ணாச்சின்னா அதுவா முதல்ல ஞாபகம் வருது? :(

  கணேஷ், முறையற்ற காமம் தாங்க தப்பு. அதை கட்டுப்படுத்தி வெற்றிகொள்ளவும் வேண்டியதில்லை. முறைப்படுத்தி வாழ்வின் ஒருபகுதியாக அனுபவிக்க வேண்டும்.. ஏதோ எனக்குத்தெரிஞ்சது...

  டிசே தமிழன், சங்கரய்யா, சிங். செயகுமார், D ராஜ் மற்றும் அனைவருக்கும்...

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 15. சில காரணங்கள் எனக்குத் தோணுது.

  ஒன்னு, மேற்குலகில் சிறார் தொடர்புடைய பாலியல் குற்றங்களுக்குத் தரப்படும் மிகக் கடுமையான தண்டனை பற்றி இந்தியர்கள் அறியாதது. இதைக் குறிப்பிடக் காரணம், இவ்வார ஜூனியர் விகடனைப் பார்த்தால் தெரியும். கணவனை விட்டு மாமாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணை பற்றிய கட்டுரை. அப்பெண்ணிற்கு வயது பதினேழுதான். ஊர் பஞ்சாயத்து அப்பெண்ணை 'அத்து விட்டுட்டு' மாமாவுடன் ரெண்டாந்தாரமாக 'வாழ' வழிவிட்டுவிட்டது.

  ரெண்டு, மேலை நாடுகளில் கிடைக்கும் மிக எளிதாகக் கிடைக்கும் பாலியல் சேவைகள். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என நம்மவர்களைத் தூண்டிவிடும். காஞ்ச மாடு கம்புல பூந்த கதைதான்.
  காமத்-தீக்குள் விரலை விட்டால்.....

  ஃப்ராய்டின் கூற்று உண்மையென்றால், மேலைநாட்டுக் காவலர்கள் செய்யும் 'ச்டிங் ஒபெரடிஒன்ச்' ஒரு விதத்தில் தூண்டிவிடுவதுதானே?. ஏதோ 'அழித்தொழிப்பு' பணி போல் உள்ளது.

  பதிமூன்று, பதினாலு வயதில் பாலியல் கல்வி கற்றுத்தரும், பாலியல் காட்சிகளை திரையில் காண அனுமதிக்கும் ஒரு சமூகம், அவர்கள் 18 வயது வரை சும்மா இருக்கணும் என்பது விந்தையே.

  பதிலளிநீக்கு
 16. மேலை நாடுகளில் அதிகாரமிக்க பதவிகளில் வருபவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் அவசியம். ஆனால் சாதாரண மனிதர்கள் என்ன செய்தாலும் அதிகம் பாராட்ட மாட்டார்கள். நம் நாட்டில் இது தலை கீழ். மணவிலக்கு பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் நம் நாட்டில் அனைத்து குற்றங்களும் பெரிய மனிதர்கள் செய்தால் அதைப் பற்றி பேச மாட்டார்கள். நீங்களும், நானும் செய்யும் குற்றங்கள் சமூகத்தில் பேசி கிழிக்கப்படும். பல தாரமும், சட்டப்படி கல்யாணம் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்தலும் குற்றம் என்றாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்தால் அதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். இதே குற்றம் இங்கு நடந்தால் மறைக்கவே முயற்சி எடுக்கப்படும். ஜாமீன் என்று ஒன்று உள்ளது. இரண்டு நாளோ, இருபது நாளோ அதிகமாய் போனால் இரண்டு மாதமோ சிறையில் இருந்து வந்துவிட்டால் போதும், வழக்கு நீர்த்துவிடும். பெரிய மனுஷன் விவகாரம் அப்படித்தான் இருக்கும், கிளறக்கூடாது என்று நியாயம் பேசப்படும்.

  பதிலளிநீக்கு
 17. There is a small correction...

  ஃப்ராய்டின் கூற்று உண்மையென்றால், மேலைநாட்டுக் காவலர்கள் செய்யும் 'sting operations' ஒரு விதத்தில் தூண்டிவிடுவதுதானே?. ஏதோ 'அழித்தொழிப்பு' பணி போல் உள்ளது.

  பதிலளிநீக்கு
 18. நல்ல கருத்துக்கள் அனானிஸ்!..'அழித்தொழிப்பு' என சொல்லமுடியுமா தெரியலை! இவங்க interest காட்டும்போதுதான் அவங்க மாட்டவைக்கறாங்க...

  இவங்க எல்லாம் இப்படி மாட்டும்போது MJacson மட்டும் எப்படி படுக்கையறை வரை கூட்டிக்கொண்டு போய் மது அருந்தவைத்தும் ஜெயில்ல போடலை?! அங்கயும் நல்ல வக்கீலும் பணமும் இருந்தா தப்பிச்சிறலாமா என்ன?! நீங்க சொன்னமாதிரி //பெரிய மனுஷன் விவகாரம்//மா?! ஒன்னும் புரியலை...

  பதிலளிநீக்கு
 19. Is this guy really your friend? I read about this guy last year. He was a college student. He didn't have family. Where this happened?

  பதிலளிநீக்கு
 20. அனானி, போட்டோ கூகுளின் உபயம்! அவனுடையதல்ல...

  இது நடந்து சில வருடங்களாகிறது! ஒரே வாரத்தில் இவனைப்போல பிடிபட்டவர்கள் 23 பேர்!

  மேலும் தனிப்பட்ட தகவல்களை தவிர்த்திருக்கிறேன்! வேண்டாமே!

  பதிலளிநீக்கு
 21. ஐயோ நெஞ்சம் கனக்குதுங்க.

  பதிமூனு வயசுன்னு தெரிஞ்சும் இவர் ஏன் சாட்டிங் கண்டினியூ பண்ணினார். இப்ப நாம் எதுவும் சொல்லலாம். ஆனால் அந்தச் சூழ்நிலையில் அவர் என்ன நினைச்சு செஞ்சாரோ........தெய்வமே....

  இன்னொரு விஷயம். ஒருத்தர் தப்பு பண்ணாத பொழுதே தப்புப் பண்றதுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து தப்பு செய்ய வெச்சு தண்டனை கொடுக்குறது எப்படிச் சரியாகும்? பங்காரு லக்ஷ்மண், ஷக்தி கபூர் விஷயங்கள் போல.

  மேலும் நான் இராமநாதனிடம் முன்பே சொன்னது போல, இந்தியாவில் இதைச் செய்த பலர் சுதந்திரமாக சத்தியமாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் நிம்மதியாக இருக்கின்றார்கள். தெய்வத்தின் பிடியில் கண்டிப்பாகச் சிக்குவார்கள் என நம்புவோம்.

  நீங்கள் எழுத்தில் வடித்து விட்டீர்கள். நான் கேட்ட கதைகளை எழுத்தில் வடிக்கின்ற துணிவு எனக்கில்லை.

  பதிலளிநீக்கு
 22. எல்லா நாடுகளிலும் யாரும் யாருடனும் எப்போதும் உறவு கொள்ளலாம், சட்டத்தில் இடம் இருக்கிறது, அதனால்தான் குஸ்பு சொன்னார், அதனால்தான் சுகாசினி சொன்னார், நாங்கள் மிருகம்போல் உறவு கொள்வதை விரும்புகிறோம் என எல்லா பிராமண வலை எழுத்தாளர்களும் சொல்கிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து என்ன இளவஞ்சி?

  பதிலளிநீக்கு
 23. 'அம்மாஞ்சி' ன்னு பேரு வைச்சுக்கிட்டு இப்படி வில்லங்கமாவா கேள்வி கேக்கறது? நான் இந்த விளையாடுக்கு என்னைக்குமே வந்ததில்லை.. என்னை விட்டிடுங்கப்பு...

  என்னோட கருத்தைதான் சொல்லியிருக்கேனே!
  //மாற்றங்களுக்காக குரல் கொடுக்கறதும் கொடுக்கற குரலுக்கு வலிவு இருந்துச்சுன்னா அதுக்கேற்ப வளைஞ்சுகொடுக்கறதும்தான் நம்ப.. நம்ப என்ன.. எந்த சமூகத்துக்கும் வரலாறு//
  //பார்க்கப்போனா ஒவ்வொரு மனுசமனமும் ஒரு ரகசியகிடங்கு! அதுக்குள்ள இருக்கற அழுக்குகளும் தவறுகளும் பிறழ்வுகளும் சமூகக்கட்டுப்பாடுங்கற ஒரு உறையைப்போட்டு மூடி மறைக்கப்பட்டிருக்கு. அதை மீறி விகாரங்களை வெளிக்கட்டறவங்க காமுகன்னு பெயர் வாங்கிடுறான். உறையை இறுக்கிக்கட்டிக்கிட்டு உலாத்தறாவங்க எல்லாம் நல்லவங்கன்னு பேரு வாங்கிடுறோம்! அது விருப்பப்பட்டு இறுக்கிக்கட்டுனாலும் சரி. கட்டாயத்துல கட்டுனாலும் சரி!//

  அம்புட்டுத்தேன் நமக்குத்தெரிஞ்சது...

  பதிலளிநீக்கு
 24. ராகவன்,

  //ஒருத்தர் தப்பு பண்ணாத பொழுதே தப்புப் பண்றதுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து தப்பு செய்ய வெச்சு தண்டனை கொடுக்குறது எப்படிச் சரியாகும்? //

  அங்கே ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனி சட்டம்..அவன் இருக்கும் மாகானத்தில் சிறார்களுடன் பாலியல்தொடர்புக்கான Intention இருந்தாலே போதுமாம். தண்டனையளிக்க!


  உங்க கேள்விக்கு கல்வெட்டினுடைய கருத்தே பதிலாக இருக்கும் என நம்புகிறேன்..
  //அதுவே காவலராக இல்லாமல் உண்மையில் ஒரு 13 வயது பெண்ணாக இருந்திருந்தால்? அந்த இளம் பெண்ணுக்கு வரும் பாதிப்பு எப்படி இருக்கும்.? //

  வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 25. ILavanji,
  One more excellent write up.Feel very sorry for this guy.

  (sorry!Unable to type in tamil)

  பதிலளிநீக்கு
 26. // சரி நாமும் வலை பக்கம் போய் பார்போமே அப்ப்டீன்னு வந்தா, இவ்லோ நாள் இவரோட பதிவுகளை பார்க்கலையேன்னு ஒரு சின்ன வருத்தம் //

  SAME COMMENT

  பதிலளிநீக்கு
 27. காமத்தைப் பற்றிய நிறைய வேறுபட்ட பார்வைகள் தேவைப்படுகிறது. அடிப்படையில் ஒவ்வொரு செயலும் வெவ்வேறு கோணத்தில், அதாவது வெவ்வேறு மனநிலையில் பார்க்கப்பட்டு வருவது காமம் நிறைய மேம்பட்ட பார்வையைக் கொண்டிருக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், ஓசோ போன்றவர்கள் கொஞ்சமாக காமத்தை விளக்கி இருக்கிறார்கள் என்று கேள்விபட்டேன்.

  பதிலளிநீக்கு
 28. 1) police இவரோடு சற் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

  மேற்கத்தேய நாடுகளில் உயர் பதவியில் இருப்பவர்களை எப்போதும் கண்காணிப்பது வழக்கம்.

  இவர் ஒரு விஞ்ஞானி என வேறு சொல்கிறீர்கள்.

  அவரின் நடத்தை அவரை பிறிம்பாக காட்டி இருக்கலாம்.

  அல்லது வேலைத்தளத்திலிருந்து சற் செய்பவராக இருந்திருக்கலாம்.

  அதனால் கண்காணிக்கப்பட்டிருக்கலாம்.

  13 வயசு என சொன்னதை நம்பாமல் அவர் இருந்திருக்கலாம்.
  வயசை குறைத்த சொல்வதாக நினைத்திருக்கலாம்.
  பேசப்பேசத்தான் அவர்களில் ஓர் ஈர்ப்பு வரும். அNது ஈர்ப்புத்தான் செக்சுக்கான உந்துதல்.
  ஒருவரோடு திடீரென செக்ஸ்பற்றி பேசுவதென்பது சாத்தியமில்லை.

  உடலையும் உணர்வையும் பகிர்தல் என்பது அதிகாதலின் முடிவாகத்தானிருக்கும்.

  13 வயசுப்பிள்ளையின் பெற்றோர் கண்டு பிடித்து பொலிசிற்கு தெரிவித்திருக்கலாமோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

  ஆனாலும் அந்தப்பெற்றோர் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம் எனவும் எண்ணத்தோன்றுகிறது.

  சாத்தானின் சதிவலைப்பின்னல் யாரைத்தான் விட்டுது.

  காமம் என்ற சொல்லே ஒரு தூசணவார்த்தையாகத்தான் எமது சமூகத்தில் பார்க்கப்படுவதோடு மறைந்தும் வாழ்கிறது. அதனை பேசுபொருளாக எடுத்தால் மட்டுமே அதன் அழகு புரியும்.

  2000 ஆம் ஆண்டு நான் எழுதிய கட்டுரை ஒன்று. திண்ணையில்.
  http://www.thinnai.com/?module=displaystory&story_id=20412024&format=html

  பதிலளிநீக்கு
 29. //
  படிச்சி முடிச்சப்போ சோகமாத்தான் இருக்கு. அதான் விதிங்கறது.
  //

  பதிலளிநீக்கு
 30. http://timesnow.tv/Newsdtls.aspx?NewsID=12870

  Indian jailed in US on paedophilia charges

  8/5/2008 6:31:06 PM

  Indian techie- 28 years -old Naveen Ningappa
  An Indian techie- 28 years -old Naveen Ningappa was arrested in the US on paedophilia charges and has been serving his prison sentence in a Pennsylvania jail for the past 9 months.

  Naveen is an associate consultant of HCL, a multinational software company. He had been tried on multiple charges- including solicitation to commit rape and indecent assault and attempted rape.

  Prosecutors alleged that the Indian techie hired a chauffeur to drive him to East Norriton in New Jersey to meet who he believed was a 12-year-old girl whom he met over the Internet. Ningappa- the police say was unaware that he was communicating online with an undercover detective.

  However, the Indian techie's family says he is being framed- R Ningappa- Naveen's father told TIMES NOW that the family has received four letters from Naveen over the past 9 months. In all the letters, they claim, Naveen says he is innocent and is being framed.

  Naveen clarifies that he only chatted with the girl who claimed she was 12 years and did not meet her. He also claimed that he would be released from court only if he could pay up a fine of $500,000- an amount the family says it is no condition to cough up.

  பதிலளிநீக்கு

Like us on Facebook

Flickr Images