முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறந்துபோன அப்பாவுடன் ஒருநாள்

Image hosted by Photobucket.com

எங்கள் தாத்தாவுக்கும் முந்தய காலத்தில் செய்யப்பட்ட, எண்ணைப்பிசுக்கின் பளபளப்போடு மங்கிய கருஞ்சிவப்பில் இருக்கும் தேக்குமர நாற்காலியில் புது வெள்ளத்துணியை விரித்து அதில் விரைத்துவிட்ட உடலை சற்றே வளைத்து முதுகிற்கு கீழாக இரு தலையணைகளை வைத்து அமர்த்திவைக்கப்பட்டிருக்கிறது என் அப்பாவின் உடல். எங்கள் குடும்பத்தில் தவறிய ஆண்கள் அனைவரும் இதுவரை அமர்ந்த அதே நாற்காலியில் அதே திண்ணையின் நடுவில் இப்போது என் அப்பாவும்! அவர் தலைக்கு நேர்மேலாக அப்பாவின் அப்பா இறந்தபோது இதேநிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் தலை தொங்காமல் இருக்க விலாஎழும்பிலிருந்து தாடைக்கு முட்டுக்கொடுக்கப்பட்ட குச்சி தெளிவாய் தெரியும் செல்லரித்த பகுதிகளையும் தாண்டி. அப்பாவின் உடலை கொண்டுவருவதற்கு முன்பே ஊரிலிருக்கும் பெரியப்பா திண்ணைக்கு முன்னால் ஒரு பத்து அடி இடைவெளிவிட்டு முப்பதுக்கு நாற்பது அடியில் சாமியானா போட்டு அதை மடக்கு நாற்காலிகளால் நிரப்பியிருந்தார். என் அப்பாவுக்கு ஒரு நாலுவயதுதான் அதிகம் இந்த பெரியப்பாவுக்கு. படித்தகாரணத்தால் வெளியூருக்கு வேலைக்கு அப்பா வந்துவிட விவசாயத்தை கவனிக்க ஊரோடு இருந்துவிட்ட 7 சகோதரர்களுள் இவரும் ஒருவர். ஒரே ஒரு அத்தை எனக்கு. கடைக்குட்டியான அப்பா படிப்பதற்காக இந்த அண்ணன்மார் 7 பேரும் ரொம்ப சிரமப்பட்டதாக அம்மா சொல்வார்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை அப்போது தாத்தா வைத்திருந்த 80 ஏக்கர் நிலமும் இப்போது பாகம் பிரித்ததும் விற்றுத்தின்றதும் போக ஆளாளுக்கு வைத்திருக்கும் 5 ஏக்கர் நிலமும் சான்றோடு நிரூபிக்கும். எப்பவும் அணையா அடுப்புதான் எங்க தாத்தா வீட்டில். நியாயமாய் பார்க்கப்போனால் எங்கள் பாட்டி பிள்ளைகள் பெறுவதிலும் சமைத்துப்போடுவதிலுமே ஓய்ந்து தேய்ந்திருக்க வேண்டும்! ஆனால் 95 வயது வரை வாழ்ந்து கொள்ளுப்பேத்திவரைக்கும் பார்த்துவிட்டுத்தான் போய்ச்சேர்ந்தார். ரேடியோவில் கோவை வானொலி நிலையத்தை வைத்துவிட்டால் அதில் என் அப்பா பேசுவதாக நினைத்துக்கொண்டு அடிக்கடி பார்க்கவராத மகனை நினைத்து அழுவார். தாத்தாவின் புகைப்படத்திற்கு அருகிலேயே உயிரோடு இருக்கும் போது எடுத்த பாட்டியின் புகைப்படமும் இருக்கும் புன்னகையின்றி.

கழற்றிய மோதிரத்தின் அச்சான வெண்ணிறம் தவிர லேசாக கருக்க ஆரம்பித்து விட்டன அப்பாவின் கைகள். நல்ல நிறம்தான் அப்பா. அம்மாவையும் விட சற்று சிவப்பு. 9 உருப்படிகள் இருந்த ஒரு வீட்டில் கடைக்குட்டியாய் வளர்வது என்பது கொடுப்பினையா அல்லது கொடுமையா என்பது அவருக்கே வெளிச்சம். மற்றவர்கள் எல்லாம் கஞ்சியும் களியும் தின்றுவிட்டு வயலுக்கு போக அப்பா மட்டும் சுடுசோற்றில் குழம்பூற்றி சாப்பிட்டு சம்புடத்தில் கரைத்த எருமைத்தயிர்சாதத்துடனும், தொட்டுகொள்ள மாவடு ஊறுகாயுமாக ஒரு பழய ரேலி சைக்கிளில் பள்ளிக்கு போவாராம். ஊரிலிருக்கும் மற்ற நால்வரோடு பேசிக்கொண்டே மிதித்தால் 12கிமி என்பதை அரைமணியில் தாண்டிவிடலாம் என்பார். இரு முழங்கைகளிலும் இருக்கும் பெரிய வட்டமான தழும்பைபற்றி ஒரு பெரிய கதையே சொல்வார். வெள்ளைக்காரன் ஒருமுறை காரில் வர அதன் பின்புறத்தை பற்றியபடியே ஓடும்போது சகதிவர, பற்றிய கைகளை எடுக்காமல் ஓடுவதை நிறுத்த, சாலையில் தேய்த்து இழுத்துசெல்லப்பட்டு ஆன விழுப்புண் அது என்பார். அந்த தழும்புகள் விரைத்துவிட்ட தோலின்மீது ஒரு தேசப்படத்தின் எல்லைகளைப்போல இருகிக்கிடக்கிறது.

அழுது அரற்றி ஒப்பாரி வைக்கும் பெண்கள் கூட்டத்தை தாண்டி ஒரு மடக்கு நாற்காலியில் அப்பாவைப்பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன். ஏனோ எனக்கு அழுகையே வரமாட்டேனென்கிறது. இரவு தாண்டி விடியப்போகிறது. அழுதழுது ஒய்ந்துவிட்டனர் அனைவரும். யாரேனும் புதிதாக வரும்போது "என் ராசாவே..." என்ற என் அம்மாவின் அழுகைக்குரல் ஏனையோரின் குரலோடு சேர்ந்து கதறும். சுற்றியிருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சேதி சொல்ல நேற்று மதியமே ஆட்களை அனுப்பியாகிவிட்டது. இன்று காலையில் இருந்துதான் தூரத்து உறவுகள் வர ஆரம்பிக்கும். வருபவர்களுக்கு காப்பித்தண்ணி கொடுக்கப்பட, குடித்துவிட்டு அப்பாவைப்பற்றி அவரவருக்கு தெரிந்ததை பேச ஆரம்பிக்கின்றனர். காலை பத்துமணிக்குள் கூட்டமான கூட்டம் நிரம்பிவிட்டது. என் அப்பாவிற்கு தெரிந்தவர்கள் இத்தனைபேரா? நான் இதுவரை பார்த்திராத அப்பாவின் வயதையொத்த ஆண்கள் அவருக்கு முன் நின்று கொண்டுவந்த மாலையை உடல்மீது போட்டு பழைய நினைவுகளைச்சொல்லி அழுவதைப்பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவரை என் கண்டிப்பான பாசமுள்ள அப்பாவாக மட்டுமே இதுவரை பார்த்திருந்த என்னால், அவர் எங்கள்மீது செலுத்தும் அன்பை மட்டுமே இதுவரை உணர்ந்திருந்த என்னால், அவர் பலருக்கு தம்பியாகவும், சினேகிதனாகவும், பள்ளிக்கூட தோழனாகவும், கல்லூரி நண்பனாகவும் இருந்துவந்ததன் அடையாளமாக அவர்கள் சொல்லியழும் நிகழ்வுகளை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. என் தகப்பனை என்னால் என் தகப்பனாகத்தவிர மற்றபடி நினைத்துப்பார்த்ததுகூட இல்லை. இப்போது அந்த கட்டுக்களை உடைத்து பிரமிக்கும் வகையில் உயருகிறது அப்பாவைபற்றிய என் கண்ணோட்டம்.

விழும் மாலைகளை எல்லாம் ஒரு டிராக்டர் வண்டியில் ஏற்றச்சொல்லியாகிவிட்டது. பாடை கட்டும் ஆட்கள் பச்சிளம் தென்னைமட்டைகளை வெட்டியிறக்கி வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்து டவுனிலிருந்து வாங்கிவந்த ரோஜாக்களாலும், சாமந்திகளாலும் பாடை அலங்கரிக்கப்படுகிறது. ஊர் நாவிதரும் வண்ணாரும் வீட்டின்முன் செய்யவேண்டிய முதல் சடங்குகளை ஆரம்பிக்க, ஊற்றிக்கொண்ட அழுகிய பழவாடை தூக்கும் சாரயத்தின் வீரியம் இறங்காமல் தாரை தப்பட்டைகள் மாறாத தாளகதியுடன் ஒலிக்கின்றன. மாலையுடன் வரும் ஒவ்வொருவரின் முன்னும் சுழன்று ஆடியபடி மரியாதைசெய்து அவர்கள் ஐந்தோ பத்தோ கொடுக்கும் வரை விடாது ஆடி பின் பணம் கிடைத்தவுடன் அதற்கும் ஒரு குத்தாட்டம் போடுகின்றனர். உடலில் ஒரு காலணாவுக்கு சதையில்லாமல் துருத்திய எழும்பிகளின்மீது சுருங்கிய தோல் போர்த்தி உலர்ந்த இலந்த்தைப்பழத்தையொத்த உடலுடன் அவர்களைக்காணும்போது நாம் வாழும் சமுதாயத்தில்தான் இவர்களும் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்பது எவ்வளவுபெரிய பொய்யென மனதை உறுத்துகிறது. வீட்டு விசேசத்துக்கும் இழவுக்கும் இவர்கள் தான் வந்து முதல் சடங்கை ஆரம்பிக்கவேண்டும் என்பது இந்த சமுதாயத்தில் எந்தவிதமான முரண் என்பதும் புரிய முடியாது போகிறது. சாதாரண நாட்களில் வீட்டின் ஓரத்தில் மூட்டைகள் அடுக்கிவைக்க பயன்படும் நீள பெஞ்ச்சில் படுக்கவைத்து நான்கு ஆண்கள் வெள்ளை கோட்டித்துணியை சுற்றிப்பிடிக்க பெண்கள் சுற்றி குமிறியழ அப்பாவின் உடல் கழுவப்பட்டு மஞ்சள் சந்தனம் தேய்த்து கழுவப்படுகிறது. மஞ்சளில் கலந்த அரிசியில் சில்லரைக்காசுகள் போடப்பட்டு சொந்தங்கள் ஒவ்வொருவராக ஒரு கைப்பிடியளவு எடுத்து உடலைச்சுற்றிவந்து முன்வைத்த நாவிதரின் முறத்தில் இடுகிறார்கள். உடலுக்கு புதிய வேட்டி ஒன்று போர்த்தப்பட்டு மாலைகள் இடப்பட்டு அலங்காரம் முடித்த பாடையில் படுக்கவைக்கப்படுகிறது உடல். அவர் சிறுவயதில் ஓடியாடிய தோட்டத்தின் ஒரு மூலையில் தாத்தாவின் சமாதியை ஒட்டி வெட்டப்பட்ட குழியைநோக்கி போகிறது அப்பாவின் இறுதி ஊர்வலம்.

"வாழ்க்கைனா ஒரு ரசனையோடு வாழனும்டா" என ஒவ்வொரு மகிழ்வான நிகழ்வின்போதும் சொல்லிச்சிரித்த அப்பா, தனிப்பாற்றிரட்டு முதல் புனித குர்-ஆன் வரை புத்தகவாசம் கலையாமல் படித்து பிடித்த பகுதிகளில் அடிக்கோடிட்டு தனது குறிப்புகளை எழுதிவைத்த அப்பா, அம்புலிமாமாவில் ஆரம்பித்து விடுதலைப்போரில் தமிழகம் வரை எங்களுக்கு வாங்கித்தந்து நாங்கள் படித்து சிலவேளை அர்த்தங்களோடும் பலவேளைகளில் அர்த்தங்களில்லாமலும் விவாதிப்பதை பார்த்து மகிழ்ந்த அப்பா, பாடப்புத்தகங்களுக்கு அட்டையிட்டு லேபில் ஒட்டி அதில் எங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை முதல் பக்கத்தில் எழுதவைத்து மகிழ்ந்த அப்பா, ஒரு திரைப்படத்தையோ அல்லது நாடகத்தையோ பார்க்கும்பொழுது எப்படி அதன் திரைக்கதை, சம்பவக்கோப்புகள், கட்டமைப்பு என புரிந்து உணர்ந்து பார்த்து ரசிக்கவேண்டுமென சொல்லிக்கொடுத்த அப்பா, சிறுவயதில் அம்மாவின் அம்மா இறந்துபோனபோது செய்து கொடுத்த சத்தியத்திற்காக உடன்படித்த ஒரு கிறித்துவமாணவியின் காதலை தவிர்த்து குடும்பத்திற்காக படிக்காத அம்மாவை மணந்துகொண்ட அப்பா, சில ஆண்டுகளுக்கு முன்பு விதவையாகிவிட்ட அந்த பெண்மணியின் வீட்டிற்கு அம்மாவுடன் சென்று அவருக்கு ஆறுதல் கூறிய அப்பா, காவல்துறையில் குற்றவாளிகளை அடிக்காமல் அவர்களிடம் பேசியே அவர்களின் மனதினை கரைக்கும் திறன் பெற்ற ஆய்வாளர் என பெயரெடுத்த அப்பா, எங்கள் திருமணங்கள் வரதட்சினை வாங்காமல்தான் நடைபெறவேண்டுமென உறுதியுடன் இருந்த அப்பா, ஒரு மனிதனை மதிப்பதன் அளவுகோள் பணமாக மட்டும் இருக்கக்கூடாது என சொல்லிக்கொடுத்த அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன் கையில் ஒரு மண்குடம் நிறைய நீருடன். நான்கு மூட்டை உப்பை குழிக்குள் கொட்டி அதில் அப்பாவின் உடலை இறக்கி சொந்தங்கள் கடைசிக்கைமண் போட எல்லோரையும் ஒருமுறை கடைசியாக முகம் பார்க்க வெட்டியான் அழைக்க உடல் முழுதும் மண் சிதறியபடி கண்கள் மூடியபடி நெறித்த புருவங்களோடு தெரியும் என் அப்பாவின் இருகிப்போன முகம் என் மனதை அறுக்கிறது. பேச மறந்த ஆயிரமாயிரம் வார்த்தைகள் பொங்கி நெஞ்சை அடைக்கின்றன. குழியைமூடி சடங்குகள் முடித்து கிணற்றில் குளித்து தென்னைமரத்தோப்பில் கயிற்றுக்கட்டிலில் கைகளை தலைக்குப்பின் கட்டி வானம் பார்த்துப்படுக்க இழந்துவிட்ட ஒரு உறவின் வலி மெல்ல அழுகையாக உருவெடுக்கிறது.

பதின்மவயதுகளில் அவருக்கும் எனக்கும் இடையே விழுந்த திரை எதனால் என்பது இன்னமும் தெரியவில்லை. அந்த வயதுகளில் பெற்றவர்கள் என்ன, வேறு எவர் சொல்லும் அறிவுரைகளும் நம் சுயத்திற்கு விட்ட சவால்களாகவே தெரிகின்றன. காரணங்களின்றி வரும் எரிச்சல்களும் கோபங்களும் அவர்கள் சொல்வதற்கு எதிராகவே செயல்படத்தூண்டுகின்றன. தோலுக்கு மீறி வளர்ந்த என்னை தோழனாகவே அவர் நடத்தினார் எனினும் நான் அவரை என் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் போடும் ஒரு மேய்பராகவே மனதில் வரித்திருந்திருக்கிறேன். நான் ஒன்றும் மிகமோசமான தறுதலையாக சமுதாயவிரோதிபோல திரியவில்லை என்றாலும் வீட்டுக்கடங்காத பெற்றவர்களுக்கு நிம்மதியளிக்காத இளஞனாகவே இருந்திருப்பது எங்களுக்குள்ளான உறவின் இடையில் ஒரு மாயத்திரையாக விரிந்திருக்கக்கூடும். அவர் ஒன்றும் குறைகளே இல்லாத மனிதர் எனச்சொல்லமுடியதெனினும் ஒரு நல்ல தகப்பனாக அவர் எங்களுக்கு செய்தவைகள் என்பவை அவரது கனவுகளையும் ஆசைகளையும் புறந்தள்ளி அந்த இடத்தில் எங்கள் நலன் மற்றும் வளர்ச்சியை ஒரு சிறு செடியாக நட்டு மரமாக வளர்த்ததே தவிர வேறல்ல. நேற்றோடு அவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இன்று நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என நினைக்கும்போது அந்த ஸ்தானமே ஏனோ ஒரு இனம் புரியாத பயமாக மனதில் பரவுகிறது.

அந்த வயதில் நான் நிராகரித்த, தவறவிட்ட, இனி கிடைக்கப்பெறாத என் அப்பாவின் நட்பு என் வாழ்க்கையை ஒரு முற்றுப்பெறாத ஓவியம் போலவே என்றும் வைத்திருக்கபோகிறது!

கருத்துகள்

  1. சம்மி,


    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    ஏனோ எனக்கு இங்கே இறக்கிவைக்கவேண்டுமென தோன்றியது. அவ்வளவுதான். நீங்கள் சொல்லியதுபோல இது நிழலின் அருமை வெயிலில் தெரியும் கதைதான்.

    பதிலளிநீக்கு
  2. இளவஞ்சி தங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
    ஏனோ தாயிடம் மகனுக்கு ஏற்படும் பரிவு தந்தையிடம் ஏற்படுவதில்லை. ஆனால் தாயை விட தந்தைதான் அவனை மிகவும் பாதிக்கிறார். என்னால் இதை உணர முடிகிறது ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  3. A touching write up. U have a good art of writing the heart. keep going.

    பதிலளிநீக்கு
  4. Ilavanji,

    You made me relive those moments... The loss was never realisable at that moment. Very very touching. Absorbing narration. vAzka!

    பதிலளிநீக்கு
  5. மூணு வருசம் என்ன, முப்பது வருசமானாலும் பெத்தவங்களை நினைக்கறப்ப துக்கம்தான்.நாம் அவுங்களுக்கு நிம்மதியை கொடுக்கலையேன்னு நினைச்சு வர்ற சுயப் பச்சாதாபம் எல்லோருக்குமே இருக்கு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு