முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்!

Image hosted by Photobucket.com


"எங்க ரஜினி ஒரே நேரத்துல 5 பேர ஒரே கைல அடிச்சிடுவாரு!"

"போடா! எங்க கமலு 20 பேர ஒரே ஒதைல சாகடிச்சுடுவாரு!"

"போடா புழுகு! எங்க ரஜினி ஒரு ஒதை உட்டாருன்னா ஒரு செவுரே இடிஞ்சி உழுந்துடும்.."

"அய்ங்க்க்... எங்க கமலு கையவச்சி ஒரு தள்ளு தள்ளுனா இந்த பில்டிங்கே தூள் தூள் ஆகிடும்!"

இப்படியாகத்தான் எங்கள் 2ஆவதோ 3ஆவதோ படிக்கும் வயதில் எங்களது சினிமா ரசனை குழுமனப்பான்மையாக உருவெடுத்ததாக ஞாபகம். தெருவில் இருக்கும் எல்லா பசங்களும் கொதிக்கும் வெயிலில் மசபந்து, கில்லி, பம்பரம், கோலி ஆடிய நேரம்போக ஓய்ந்துபோய் எவன் வீட்டு வாயிற்படியிலாவது இடம் கிடைத்தால் உட்கார்ந்துகொண்டு ரஜினியும் கமலும் செய்ய இயலாத, செய்ய விரும்பாத, எங்கள் கற்பனைக்கு எட்டிய எல்லா பிரதாபங்களையும் செய்வார்கள் என நம்பிக்கொண்டு சண்டைபோட்டுக்கொள்வோம். (என்னது? இப்ப இருக்கற ரசிகர் மன்றகுஞ்சுகளும் இப்படித்தான் இருக்கறாங்களா? :) ). அப்பொழுதுகூட நான் கமல் கட்சிதான். ஒருவேளை என் க்ளோஸ் ஃபிரண்ட் மணி கமல் கட்சியாக இருந்ததால் இருக்கலாம். அல்லது எனது அண்ணன் ரஜினிபோல நடித்துக்காண்பிக்கிறேன் என்று சாக்பீசை வாயில்வைத்து ஸ்டைலாக சிகரெட் குடித்து என் அப்பாவிடம் முதுகு பழுக்க வாங்கிக்கட்டிக்கொண்டதாலும் இருக்கலாம். வாய்வலிக்க பேசிப்பேசி ஓய்ந்துபோய் அவரவர் வீட்டிலிருந்து "தெய்வத்தின் குரல்" (ஹிஹி.. அம்மாவோடதுங்க... ) கேட்கத்துவங்கியதும் கலைந்துபோவோம்.

கொஞ்ககாலம் கழித்து 13 வயதில் தெரு பசங்களெல்லாம் இரண்டாக பிரிந்து பேனர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டபோதும் நான் கமல் சைடு சேர்ந்துகொண்டேன். பெரிய அட்டைபெட்டிகளை மடக்கி பெரிய செவ்வகமாக மாற்றி அதன்மீது 2ரூபாய்க்கு வாங்கிய பால்பேப்பரை ஒட்டி வெள்ளைத்திரைபோல ஆக்கி அதில் இதுவரை சேர்த்து வைத்திருந்த கமல் படங்களையெல்லாம் வித்விதமாக வெட்டி ஒட்டி, சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் ஜிகினா பேப்பர்களை பொறுக்கி அதை அட்டையின் முனைகளில் தோரணம்போல ஒட்டி அலங்கரிப்போம். இதில் ரகசியமாக ஒரு ஒற்றனை ரெடி செய்து ரஜினி குரூப்பில் ஊடுருவச்செய்து அவர்களது பேனர் எங்களுடயதைவிட பெரிதாக சூப்பராக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துவரச்சொல்வோம். அதற்க்காக அவனுக்கு சாக்கலேட்டும், சேமியா குச்சிஐஸ்சும் வாங்கித்தவேண்டுமென்பது எழுதப்படாத விதி. திடீரென ஒருநாள் சொல்லிவைத்தாற்போல இரு பேனர்களும் தெருமுனையில் இருக்கும் போஸ்டாபீசை தாண்டிய ஒரு பழையவீட்டு சுவற்றில் எதிரெதிரே தொங்கவிடப்படும். அந்த பேனரை கொண்டுபோய் அங்கே சேர்ப்பதற்குள் விடும் அலப்பரையில் தெருவே அலரும். இரண்டு கும்பலும் ஒருவரையொருவர் முறைத்தபடி அவரவர் பேனரை அது சூப்பர்.. இது நொள்ளை எனபேசியபடி அன்றய மாலை விளையாட்டுகள் ஏதுமின்றி முடியும். எல்லோருக்கும் இப்படிதான் முடிந்தது. ஆனால் எனக்குவேறுமாதிரி! தெருமுனையிலேயே என்னை பார்த்துவிட்ட அப்பா அப்படியே அவரது புல்லட்டில் ஏறச்சொல்லி வீட்டுக்கு கூட்டிவந்து இந்தமுறை என் அண்ணன் சிரிக்க சிரிக்க "படிக்கற பையன் செய்யற வேலையா இது? " என முதுகை பழுக்கவைத்தார். அதோடு நின்றது என் ரசிகர்மன்ற வாழ்வு. இல்லையாயின் ஒரு மன்ற பொருளாளராகவாவது ஆயிருப்பேன். ம்ம்ம்... யோசித்துப்பார்க்கையில் நான் பேனர் செய்யும் வேலைக்கு சென்றது என் ஓவியக்கலை ஆர்வத்தினால் மட்டுமே என்பது தெரிகிறது. அப்போதும் கூட நான் ரஜினியை ஒரு ரசிகனாகக்கூட பார்க்க ஆரம்பிக்கவில்லை.

கல்லூரி ஆண்டுகளில் ஒரு கித்தாப்பாக தேய்த்து கழுவினால் போய்விடும் அரும்பு மீசையுடன் ஒரு அறிவுஜீவி என்ற எண்ணம் தலைதூக்கி ஒரு 20 அடி மேலே இருந்த திரிந்த காலங்களில், அறிவுத்தாகம், ஆழ்ந்த ரசனை, கலைத்தாக்கம்(வேற ஏதாவது இருக்கா...?) என மனநிலை பாதிக்கப்பட்டு(!?), வேண்டுமென்றே கமலை சப்போர்ட் செய்தும் ரஜினி படத்தில் உள்ள அத்தனை அபத்தங்களையும் கிண்டல் செய்தும் பேசிமாய்வோம். ரஜினி பைக்கை ரிவர்சில் ஓட்டுவதும், சிகரெட்டை துப்பாக்கியால் சுட்டு பற்றவைப்பதும், துப்பாக்கி தோட்டாவை கையாலேய தடுப்பதையும் சொல்லி சொல்லியே ரஜினி ரசிகர்களின் வாயை அடைப்போம். அப்போது முரளி என்ற என் நண்பன் ரஜினி பைத்தியமாகவே இருந்தான். ஒரு படத்தையும் விடமாட்டான். டிவியில் ரஜினி படமென்றால் அப்படியே கேமல் கம்மை தரையில் ஊற்றி அதில் ஒட்டியதுபோல எங்கயும் நகராமல் ஒன்றிவிடுவான். நாங்கள் அடிக்கும் இத்தனை கிண்டல்களுக்கும் சிரித்துகொண்டே போய்விடுவான். ஒருநாள் இந்த ரவுசு ஓவராகப்போக அவன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

"நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!"

இதன்பிறகுதான் ரஜினியை ஒரு இமேஜ் வட்டத்துக்குள் இருக்கும் நடிகராக அல்லாமல் ஒரு சக கூட்டாளியைப்போல நினைக்கத்தோன்றியது. இந்த நினைப்பே என்னை அதன் பிறகு மறுபடியும் பார்த்த பழைய ரஜினி படங்களை ரசிக்கவைத்தது. ஜானி, முள்ளும் மலரும், தில்லு முல்லு, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களை மறுபடியும் பார்த்த பொழுது அதில் அவரது ஆளுமை புலப்பட்டது. அந்த சின்னக்கண்களையும், தவறான அழுத்தமில்லாத தமிழ் உச்சரிப்பையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும். மனசில் அப்படியே ஒரு அமைதியான இனிய உணர்ச்சிகளை கிளரும். இந்த காலகட்டத்தில்தான் "அண்ணாமலை" என்று ஒரு அருமையான படம் ஒன்று வந்தது. ஒரு ரஜினி ரசிகனாக நான் முதன்முதலில் தியேட்டருக்கு சென்றுபார்த்த படம். அப்படியே சீனுக்கு சீன் ஒன்றிப்போய் பார்த்த படம் அது.

எப்படியோ எங்கள் வீட்டில் ஒருவராகிப்போனார் ரஜினி. அப்பா, அம்மா, அக்கா, அண்ணா என எப்படி எல்லோருக்குமே அவரை பிடித்திருந்தது என்பது இன்றுவரை ஆச்சரியம் தான். அவர் ஒரு நடிகர் என்பதனையும் மீறி ஒரு அன்னியோனியமான ஒரு உறவு எங்களுக்குள் இருந்தது. டிவியில் ரஜினி படம் போட்டால் அத்தனைபேரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்போம். ரஜினி நடித்த காமெடி சீன்கள் வந்தேலேயே ஏதோ எங்கள் சித்தப்பா தான் இப்படி விளையாட்டாக செய்கிறார் என்ற எண்ணம்தாம் இருக்கும். பார்க்கப்போனால் அவரது அப்பாவித்தனம் கலந்த காமெடிகளில் ஒன்றுமே பெரிதாக இருக்காது. ஆனால் அப்படி ஒரு சிரிப்பு வரும். முத்து படத்தில் டிராமா நடிகர்களை வில்லன் ஆட்கள் வந்து அடிக்கும் போது "அவன 2 போடுங்க.. பெரிய கமலஹாசன்னு நெனப்பு.." என்பதும், மாப்பிள்ளை படத்தில் நதியா தாயத்து கட்டி இனி யாருக்கும் பயப்படவேண்டாம்னு சொல்லும்போது "அப்ப நம்ப சுப்பரமணி..?" என்பதும் அடக்கமுடியாத சிரிப்பில் என்னைஆழ்த்தும்.

இப்படி ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருந்த ரஜினியை அவரை அறியாமலேயே அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு அவரது மனநிலைக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துவராத காரியங்களை செய்யவைத்து அவரது பெயரை அவராலேயே கெடவைத்து வேடிக்கை பார்க்கிறது ஒரு மாபெரும் கூட்டம். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை அனைவரும் இதில் அடக்கம்.

நான் அவரது வெறி பிடித்த ரசிகனல்ல... அவர் அரசியலுக்கு வந்து இந்த தமிழ்நாட்டை உயர்த்தவேண்டும் என நம்புபவனுமல்ல... அவரை ஒரு நல்ல நடிகன் என்பதையும், அவரது படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் என்பதையும் மட்டுமே உணர்ந்தவன். நான் அவரிடம் எதிர்பார்ப்பதும் அது மட்டுமே. என்னைபோலவே ரஜினியை ஒரு நல்ல மனிதனாக, ஒரு நல்ல நடிகராக, நம் வீட்டில் ஒருவராக நினைக்கக்கூடிய பெரும்பாலோர் இந்த நாட்டில் உண்டு. நாங்களெல்லாம் சேர்ந்து ரஜினிக்கு சொல்லுவது இதுதான். "உங்கள் படங்களில் மட்டுமே உங்களை ஹீரோவாக பார்க்க விரும்புகிறோம். உங்களிடம் எந்தவித ஆதாயத்தையும் நாடாமல், உங்களை தெய்வமாக நினைக்காமல், உங்களை இந்த நாட்டை கட்டிக்காக்க வந்த தலைவனாக எண்ணாமல் ஒரு சிறந்த நடிகராக ஒரு சிறந்த மனிதராக மட்டுமே எண்ணும் நாங்கள் உங்கள் நலம்விரும்பியாக மட்டுமே இருக்கவிரும்புகிறோம்!

ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்...!"

கருத்துகள்

  1. நான் இளவஞ்சி ரசிகனாயிடுவேன் போல இருக்கு!. நல்ல எழுத்து.

    பதிலளிநீக்கு
  2. அருமை இளவஞ்சி!
    உங்களுடையதை விட எனக்கு இன்னொரு விருப்பம் கூட இருக்கிறது. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல் இடைக்கிடை நல்ல, வித்தியாசமான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்பது தான் அது. அவரால் முடியாதது இல்லை. அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என்று வந்தவர் பிறகு காணாமலே போய் விட்டார்.

    பதிலளிநீக்கு
  3. காசி: உங்களைப்போல இன்னும் நாளுபேரு சொன்னால் அப்புறம் என் ரசிகர்மன்ற(!?) ஆதரவோடு நான் அரசியலில் இறங்குவதைப்பற்றி யோசிக்கவேண்டியிருக்கும் ஆமா!! :)

    வசந்த்தன்: நீங்க சொல்லறது சரிதான். ஆனா அவராகவே சென்று மாட்டிக்கொண்ட இமேஜ் வட்டத்துக்குள்ள இருந்து வெளியவருவாரா? வரவிடுவாங்களா என்பது கொஞ்சம் டவுட்டுதான்!

    உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  4. இளவஞ்சி அண்ணாத்தே! சூப்பரா எழுதியிருக்கீங்க.தீவிர ரசிகன் அல்ல நான். ஆனால் நல்ல ரஜினி ரசிகன். கமல் பெரிசா ரஜினி பெரிசா என்ற சண்டையை எல்லா தமிழ்நாட்டு குழந்தைகளும் ஒரு காலகட்டத்தில் போட்டிருக்குமென நினைக்கிறேன். நானும் விதிவிலக்கல்ல. ரஜினி என்ற ஆளுமை ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இன்றளவும் ரஜினி படம் டிவியில் போடுகிறார்கள் என்றால் குடும்பத்துடன் மொத்தமாக கலாய்த்துக் கொண்டே பார்க்கும் ஒற்றுமை எங்கிருந்து வருகிறது.இன்றளவும் ரஜினி அங்கிள் என்றால் திரும்பி பார்க்காத குழந்தைகள் உண்டா? குழந்தைக்கு என்ன தெரியும்? ஒரு நடிகனாக மட்டும் ரஜினி மேல் நல்ல அபிப்ராயம் எனக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  5. நல்ல எதார்த்தமான எழுத்துக்கள் இளவஞ்சி.

    நீங்க அரசியலுக்கு வந்தா கண்டிப்பா என் ஆதரவு உண்டு. ஆனா ஓட்டு மட்டும் விழாது? அதுதானே இந்த அயல்வாழ் இந்தியனோட பிரச்சனையே?

    இதேதான் ரஜினியின் பிரச்சனையும் கூட. படித்த மக்களுக்கு அவரின் படங்கள் பிடிக்கும் அவரையும் பிடிக்கும், ஆனால் படித்த மக்களில் பலர் ஓட்டு போடுவதில்லை (என்னைப்போல).

    அவர் ஒரு நடிகனாக மட்டும் இருந்துவிடுதல் நல்லதென்று பல முறை தோன்றுவதுண்டு, ஆனால் அது அவருக்கு தோன்றுமா? பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி... அருமையான பதிவுய்யா...

    நானும் உங்களைமாதிரிதான்.. நடிகர்களை நடிகர்களாகவே பார்க்கிறேன். அதிலும் ரஜினி பற்றிய உங்களின் கருத்தில் எனக்கு பரிபூரண சம்மதம் உண்டு. எனது கருத்தும் இதேதான்.

    பதிலளிநீக்கு
  7. //Kasi:நான் இளவஞ்சி ரசிகனாயிடுவேன் போல இருக்கு//

    Ditto here!

    பதிலளிநீக்கு
  8. Very eloquently written! I keep comparing the tracks of Rajini with that of MGR. I guess Rajini stopped short at one point by just focusing on his film career where as MGR took a larger risk. Besides, I see MGR having a lot of empathy for poor.

    பதிலளிநீக்கு
  9. இன்று வரை கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தாலும் ,நடிகராக ரஜினி காந்த் பெருமளவில் என்னை ஈர்க்கிறார் என்பது நிஜம்..குறிப்பாக 'தில்லு முல்லு' நான் பெரிதும் ரசித்த திரைப்படம்.

    பதிலளிநீக்கு
  10. இளவஞ்சி : நல்ல பதிவு. நான் கூட ஒங்க கேடகரிதான். முதலில் ரஜினி படம் பார்த்துவிட்டு, பின் கமலுக்கு மாறி, மீண்டும். ரஜினி பக்கம் சாய்ந்தவன். ரஜினிகாந்தின் அரசியல் எல்லாம் மீடியா செய்த மாயை. உண்மையான ரசிகர்கள், ரஜினிகாந்தின் சினிமாவை மட்டுமே ரசித்தார்கள். அவருக்கு கமல் மாதிரி நடிக்க வராது. விஜயகாந்த் மாதிரி சண்டை போட வராது. அரவிந்தசாமி மாதிரி அழகு கிடையாது. சரத்குமார் மாதிரி கட்டுமஸ்தான உடம்பு கிடையாது. திரையில் அவர் அழுதால் பார்க்கிறவர்களுக்கு சிரிப்பு வரும். வசனங்களில் இன்னும் கன்னட வாடை என்பது போல பல குறைபாடுகள் இருப்பினும், அதையும் மீறி, ஒரு முதல் தரமான entertainer ஆக இருக்கிறார். அவர் படங்களைப் பார்ப்பதற்கு எந்த முஸ்தீபும் தேவையில்லை. சும்மா போய் பாத்து ரசித்து கைதட்டி விசிலடித்து மகிழ்ந்து அந்த ராத்திரியே அதை மறந்து விட்டு வேற வேலையைப் பார்க்கப் போய்விடலாம். வேலைப் பளு, அடுத்த நாள் நிற்கவேண்டிய க்யூ, கல்விக்கூடங்களில் அட்மிஷனுக்கு பல்லாயிரக்கணக்கில் போட்டி, சேல்ஸ் டார்கெட், performance appraisal, golden handshake, ஸ்டாக் மார்க்கெட் சரிவு, வங்கி திவால் என்று சதா சர்வகாலமும், ஏதாவது ஒரு அழுத்தத்தில் இறுக்கமாக இருப்பவர்களை நெகிழ வைக்க கலைஞர்கள் தேவையாக இருக்கிறார்கள். சினிமா என்று இல்லை, மக்களுக்கானது என்று சொல்லக் கூடிய எந்தக் கலையின் நோக்கமாகவும் இது மட்டுமே இருக்க முடியும். இவ்வகைக் கலைஞர்கள் தான் மக்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரைப் போல, ரஜினிகாந்தைப் போல..

    மற்றபடி ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வலியுறுத்தும் மூடநம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், அவருடைய நடிப்புத் திறமை எல்லாம், மேற்சொன்ன கருத்துக்கு தொடர்பில்லாதவை. முற்றிலும் வேறு தளத்தில் வைத்து ஆராயவேண்டிய பிரச்சனைகள்.

    பதிலளிநீக்கு
  11. இளவஞ்சி,

    சாதாரண ரஜினி ரசிகனின் மனநிலையையும், ரஜினியின் திரையுலக வெற்றியின் இரகசியத்தையும் மிகச் சுருக்கமாக தெளிவாக சொல்லி விட்டீர்கள். ரஜினியைப் பற்றி ஒரு சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரையின் சாராம்சம் இது. இனி இதற்குப் போய் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமா எனத் தெரியவில்லை.

    கிட்டத்தட்ட நானும் உங்களைப் போலத்தான் கமலை தமிழ்த் திரையுலகில் ஒரு தீவிர முயற்சி செய்யும் திறமை வாய்ந்த கலைஞனாகவும், ரஜினியை ஒரு அனைத்து மக்களின் அபிமான நடிகராகவும் பார்க்கிறேன். அது மட்டுமல்லாமல் கமல், இரஜினி இருவர் மேலும் எனக்கு தனிப்பட்ட மனிதர்களாகவும் (அவர்களது சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்லவில்லை, அது எனக்குத் தேவையுமில்லை என்றும் நினைக்கிறேன்) நல்ல மதிப்பு உண்டு. அதாவது மற்ற பிரபல நடிகர்கள் போல அடாவடித்தனங்கள் கிடையாது. இரசிகர்களின் வாழ்க்கையை தன்னுடைய பிம்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வீணாக்காததாலும், இலக்கிய மற்றும் அரசியல் அறிவினாலும் கமலின் மேல் இன்னும் மதிப்பு அதிகம்.

    பாபா படத்தை முன்னிட்டு நடந்த விளம்பரங்களினால் அப்படம் முதல் இரஜினியின் புதுப்படங்களை பார்க்ககூடாது என முடிவு செய்து விட்டேன். இப்பவும் அது இரஜினி மேல் உள்ள கோபத்தால் அல்ல. அவரை பின்னிருந்து இயக்க நினைக்கும் சுயநலக் கூட்டத்தின் கைப்பாவையாக மாறி அவருடைய படங்களைக் கருவிகளாக மாற்றி விட்டார் என்பதனால். இன்னமும் ரஜினிக்கு அரசியல் சுயநலம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் அவருடைய மனைவிக்கும், அவரது குடும்பத்துக்கும் இருக்கிறது என்பதை பாபா படத்தையொட்டி அவர்கள் நடத்திய அருவருப்பான விளம்பரங்களை வைத்து சொல்கிறேன்.


    //இப்படி ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருந்த ரஜினியை அவரை அறியாமலேயே அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு அவரது மனநிலைக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துவராத காரியங்களை செய்யவைத்து அவரது பெயரை அவராலேயே கெடவைத்து வேடிக்கை பார்க்கிறது ஒரு மாபெரும் கூட்டம். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை அனைவரும் இதில் அடக்கம்.//

    சரியான கணிப்பு, ஆனால் யார் இதைச் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதில்தான் உங்கள் தடுமாற்றம். சொன்னால் டோண்டுவில் ஆரம்பித்து அல்வாசிட்டி அமைதித் திலகங்கள் வரை உங்களை ரோசா வசந்தோடு சேர்த்து விடுவார்கள் :-) இருந்தாலும் கெட்ட பெயரை வாங்கிக் கொள்ளத் தயாராகி நான் சொல்கிறேன். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை அனைவரும் இதில் அடக்கம் என்பது ஒரு சின்னப் பகுதிதான். ஆனால் அவரை தொடர்ந்து நச்சரித்து, தூண்டி விட்டு, இயக்கி வருவது முகமூடி தேடி அலையும் பார்ப்பனிய ஆதிக்கவாதிகள் - சோ தொடங்கி சுப்பிரமணிய சாமி வரை.

    மேலும் படிக்க:


    http://www.thinnai.com/pl0415043.html
    http://www.thinnai.com/pl0422046.html


    நன்றி - சொ. சங்கரபாண்டி

    பதிலளிநீக்கு
  12. ஆரம்பிச்சிட்டாங்கையா...

    இன்னாத்துக்கு இதுல அல்வாசிட்டியை இழுக்கிறீங்கன்னு தெரியல. அவ்வளவு பேர் பின்னூட்டம் இட்டிருந்தார்களே யாராவது அந்த கோணத்தில் யோசித்தார்களா? ரஜினி அரசியலுக்கு வரக்கூடாத ஒரு நடிகனாக தான் எல்லாரும் விரும்பினார்கள். எதற்கு உங்களால் ஜாதியால் திரிக்கப்படுகிறது?.ஒரு ரசிகனாக நடிகனை பற்றி சொல்லும் போது எங்கிருந்து ஜாதி இழுக்கப்படுகிறதோ தெரியவில்லை.யாரை என்ன வேண்டுமானலும் சொல்லிவிட்டு போங்கள். தேவையில்லாமல் அல்வாசிட்டியை உள்ளே இழுக்காமல் இருங்கள் அது போதும். எல்லாம் சுயநலமாக தான்.

    இளவஞ்சி, இணையத்தின் கோரமுகம் இதுவும். நீங்கள் எப்படி எழுதினாலும் திரிக்கப்பட்டு சாதிமுலாம் பூசப்பட்டு, முத்திரை குத்தப்படும். உஷாராக இருங்கள். அவ்ளோ தான் சொல்ல முடியும்.

    இனிமேல் ஒரு ஐடியா பண்ணலாம். ப்ளாக் ஆரம்பிக்கும் போது சாதி சான்றிதழை ஸ்கேன் பண்ணி போட்டு விட வேண்டியது தான். திருத்த முடியாது. :-(

    பதிலளிநீக்கு
  13. இவ்வளவுநாள் ரஜினி எங்களுக்கு எவ்வாறாக இருந்தாரோ அவ்வாறாகவே இருக்க வேண்டும் என விரும்பும் என்னைபோன்ற அவரது ரசிகர்களின் ஆதங்கம் மட்டுமே இந்த பதிவு.

    மற்றபடி மக்களின் மனதில் நடிகனாக ஒரு நல்ல இடத்தைப்பிடித்த அவரின் இன்றைய செயல்களுக்கான காரணங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதையெல்லாம் நான் இங்கே ஆராய முயலவில்லை. (அதை அவரல்லவா செய்ய வேண்டும்!?)

    உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. இளவஞ்சி, நீங்கள் காரணங்களைச் சொல்ல வில்லைதான். நானும் காரணங்களை விளக்க வில்லை. ஆனால் நீங்கள் காரணகர்த்தாக்களை சொல்லியிருந்தீர்கள், அதனால் நானும் நீங்கள் விட்டுவிட்ட காரணகர்த்தாக்களை எழுதியிருந்தேன். பரவாயில்லை விடுங்கள்.

    அல்வாசிட்டி விஜய், உங்களிடம் நான் இது எதிர் பார்த்ததுதான். யதார்த்தத்தை பார்க்க மறுத்து இமைகளை மூடி நீங்கள் சொப்பன வாழ்வில் இருக்கிறீர்கள். சிங்கப்பூர் ஆயிற்றே :-)

    சாதியையும், சாதியத்தையும் புரிந்து கொள்ள மறுக்கும் நீங்கள் என்னைத் திருத்த முடியாது என்று வருந்து முன் அருளின் கீழ்க்கண்ட பதிவில் என்னுடைய பின்னூட்டத்தைப் படித்து விட்டுச் சொல்லவும். திருந்த முயற்சிக்கிறேனா அல்லது திருந்த மறுக்கிறேனா என்று.

    http://aruls.blogspot.com/2005/04/blog-post_111253571156736199.html#comments

    நானும் அல்வா சிட்டிக் காரன் தான், அங்கு அல்வா மட்டும்தான் கிடைக்கிறது, சாதியில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்!

    நான் பதிவு ஆரம்பிக்கும் பொழுது அல்வாசிட்டியின் பழமைப் பித்தன்களைப் பற்றி உங்களுக்கு விளக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்!

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    பதிலளிநீக்கு
  15. //யதார்த்தத்தை பார்க்க மறுத்து இமைகளை மூடி நீங்கள் சொப்பன வாழ்வில் இருக்கிறீர்கள். சிங்கப்பூர் ஆயிற்றே :-)//

    உங்களை மாதிரி விழித்து இருப்பவர்களால் தான் இன்னும் அது விழித்திருக்கிறது.சொப்பனத்திலாவது அது ஒழிந்து போகட்டுமே அய்யா. யாரு இப்ப ஜாதி இல்லன்னு சொன்னா.போடும் பதிவுகளை கொஞ்சம் உருப்படியா படிங்கப்பா... திரிக்கும் மனோபவத்தை விட்டுவிட்டாலே போதும்...

    //நானும் அல்வா சிட்டிக் காரன் தான், அங்கு அல்வா மட்டும்தான் கிடைக்கிறது, சாதியில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்!//

    அதனே பார்த்தேன். ஜாதி சண்டையில் ஒரு காலத்தில் அல்வாசிட்டி கொழுந்து விட்டெறிந்ததை பெருமையுடன் பார்ப்பதை விட்டுவிட்டு ஆக வேண்டியதை பாருங்கள். நான் தான் சொப்பன வாழ்வில் திகழ்பவன். எனக்கு அக்கரை கிடையாது. நீங்களாவது பழமை பேசாமல் 'புதுமை' பித்தனாக இருக்கவேண்டியது தானே. வெட்டி பேச்சு தான் எல்லோரிடமும் (என்னையும் சேர்த்து தான்). என்னிடம் தர்க்கவாத திறமை கிடையாது. உங்களிடம் தர்க்கம் பண்ணக் கூடிய திறமையோ அவசியமோ எனக்கில்லை. ஸாரி.

    பதிலளிநீக்கு
  16. அல்வா சிட்டி விஜய், நான் உங்களிடம் தர்க்கம் பண்ண வரவில்லை. நான் உங்களைப் பற்றி சொல்லியதையும் நீங்கள் என்னைப் பற்றி சொல்லியதையும் ஒருகணம் திரும்பப் படித்துப் பாருங்கள். யார் சகிப்புத் தன்மையில்லாதவ்ர் என்று.

    சாதிப் பிரச்சினை பற்றி பேச வேண்டாம் என இரண்டு மூன்று பதிவுகளில் அல்வா சிட்டி என்ற பெயரில் பின்னூட்டங்களில் பார்த்தேன். யதார்த்ததை விவாதிக்காமல் எப்படி இருக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி, அதை ஒன்றைதான் நான் உங்களிடம் வெவ்வேறு வாக்கியங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் எரிச்சல் அடைந்து எழுதுவதென்ன - "ஜாதி சண்டையில் ஒரு காலத்தில் அல்வாசிட்டி கொழுந்து விட்டெறிந்ததை பெருமையுடன் பார்ப்பதை விட்டுவிட்டு ஆக வேண்டியதை பாருங்கள்."

    ஒரு சாதாரண விமர்சனத்துக்கே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதென்றால், சாதியின் பெயரால் அவமானப் படுத்தப் படுபவர்களின் கோபத்தைப் பற்றி பேச வேண்டாம் என்பது சரியா?

    இனி உங்களிடம் விவாதிக்க எதுவும் இல்லை - Good Bye

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. konja neram nigazhkalam marandhu en sinna vayasil ennai kondu sendratharku migavum nandri. niraya ezhudungal

    பதிலளிநீக்கு
  19. Anbar Ilavangi,
    En Muthal varavu Thamizh Manathirku... Nirka. Cinema vayum, nadirkalayum kavanithu kola anaithu pathirikaikulam, Channel kalum Ullana... ethuvum vithiyasama irukum endru parthaal.... ingayum Rajini. Pls vidungapa avaru pavam.

    Muthal Poni.... anavarukum vanakam.
    Viraivil varukiraen.

    Thamizh puthandu Vazthukal.

    பதிலளிநீக்கு
  20. Sankarapaandi...try to grow..!!

    பதிலளிநீக்கு
  21. சூப்பரா எழுதியிருக்கீங்க.தீவிர ரசிகன் அல்ல நான். ஆனால் நல்ல ரஜினி ரசிகன். கமல் பெரிசா ரஜினி பெரிசா என்ற சண்டையை எல்லா தமிழ்நாட்டு குழந்தைகளும் ஒரு காலகட்டத்தில் போட்டிருக்குமென நினைக்கிறேன். நானும் விதிவிலக்கல்ல.

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.. உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். ஆனா என் சின்ன வயசுல எங்க வீட்டுல என்ன தவிர எல்லாருமே கமல் கட்சி. நீங்க பண்ணத அப்ப எல்லாரும் எனக்கு பன்னுவாங்க.. அதனாலயே ரஜினி மேல ஈடுபாடு அதிகமா ஆகியிருக்குன்னு நினைக்கிறேன். அனால் போகப்பாக எல்லாருக்கும் ரஜினிய பிடிக்க ஆரம்பிச்சிட்டது :-)


    என் பதிவில் சொன்னது

    (கமல்)அவரின் நடிப்பும், நடனமும், தொழில்நுட்ப அறிவும், சினிமா சம்பந்த்ப்பட்ட எல்லா விஷயத்திலும் அவரில் ஆற்றல் என்னை பிரமிக்கவைப்பது. அவரின் பேட்டிகளையும் படங்களையும் விரும்பிப்பார்ப்பேன். அதே போல் ரஜினி மீது ஒருவித ஈர்ப்பு உள்ளது. அத்தகைய ஈர்ப்பினால்தான் அவர் ரசிகர்களை கவர்ந்தார். அவரின் ரசிகர்கள் அவரிடம் அவரின் படங்களை ரசிப்பதையும் தாண்டி அவர்மேல் ஒருவித அபிமானத்தையுன் அன்பையும் வைத்து விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  23. சரியான நேரத்தில்தான் பதிவு திரும்பி வந்துள்ளது. நான் இப்போதுதான் படித்தேன்.
    இளவ்ஞ்சி டச்!

    பதிலளிநீக்கு
  24. Gradually increased your attraction with RAJINI. Written superbly. Emm Good

    பதிலளிநீக்கு
  25. ரஜினியை பற்றி வரும் பதிவுகளில், (பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும்) பின்னூட்ட மோதல்கள் மிக சுவாரசியமாக இருக்கின்றன.

    இந்தப் பதிவையும் விரும்பிப் படித்தேன். காரணம் 1 -ரஜினி. காரணம் 2 -உங்கள் நடை!

    பதிலளிநீக்கு
  26. //மாப்பிள்ளை படத்தில் நதியா தாயத்து கட்டி இனி யாருக்கும் பயப்படவேண்டாம்னு சொல்லும்போது "

    அது ராஜதி ராஜா படம்ல. எத்தனை தடவை பார்த்திருப்போம்.

    சூப்பர் பிளாஷ்பேக். எல்லாரும் நம்மள மாதிரி தானா. சின்ன வயசுலயே கமல் ரஜினி சன்டை.

    பதிலளிநீக்கு
  27. உங்கள் கருத்து சரியே..

    ஆனால அவர் நடிப்பதை நிறுத்தி அல்லது நிறுத்தி வைக்கப்பட்டு ஆண்டு பலவாயிற்று.

    ஜானியில் எத்தனை இயலபான நடிப்பு.பத்து முறையேனும் பார்த்திருப்பேன்.

    பிரியாவில் அலட்டாத ஸ்டைல். எத்தனை அழகு.

    தில்லு முல்லுவில் வயிறு புண்ணாகும் நகைச்சுவை நடிப்பு. அந்த Interview சீனுக்காக எத்தனை முறை பார்த்தேன் என எண்ண முடியாது.

    கண்களாலேயே நடித்த முள்ளும் மலரும். கண்டிப்பாக அழுது விடுவேன்.

    உண்ர்ச்சிகளை கொட்டி வந்த எங்கேயோ கேட்ட குரல்.. அமைதியாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

    நெற்றிக்கண், ராகவேந்திரர் என Different dimmensions and Contradiction confront characters என நீளும் பட்டியல்.

    ஏன் இவையெல்லாம் யாராலும் மறக்க இயலவில்லை.??

    அத்தனை இயல்பான நடிப்பு திறமை உள்ளது அவரிடம். அதை வெளிகொணர்ந்த திறைமையான இயக்குநர்கள்.

    கை காலை அசைத்தால் சத்தம் வரும் ரஜினியே பார்க்க முடிகிறது.


    சிவாஜி படத்திலும் ஷங்கர் ஏதாவது செய்வார் என நினைத்து ஏமாற்றமே.
    அதைவிட சிவாஜியில் நகைச்சுவை என்ற பெயரில் கோமாளித்தனமாக சித்தரிக்கப்பட்டது கண்டு நொந்து போனேன்.

    இயக்குநர் பற்றாகுறையா..??? ஒரளவு இருக்கலாம். ஆனால் அவரை வைத்து பணம் பண்ணலாம் என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கிவிட்டது கண்கூடாக தெரிகிறது.

    தொடர்ந்து எழுதினால் 10 பக்கத்திற்கு ஒரு பதிவே போடலாம் அவரது அபார நடிப்பும் எனக்குள்ள ஆதங்கமும் பற்றி.


    இத்தனையும் அறிந்து அதனையும் இயல்பாக எடுத்து கொண்டு இறைவன் விட்ட வழி என அமைதியாக இருக்கிறாரோ ..?? என்னவோ..??

    அவர் வழி.. தனி வழி...

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...

வ ணக்கமுங்க! இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி... ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு